பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கோரும் ‘மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்’ (CHRD) மகஜர் (2002)
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
5 நிமிட வாசிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் கோரும் ‘மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்தின்’ (CHRD) மகஜர் (2002)

September 14, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

மகஜர்

மேலே குறிப்பிட்டுள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA (தற்காலிக ஏற்பாடுகள்) குறித்தும், நாட்டில் மனித உரிமைகள், நல்லாட்சி நெறிமுறைகள் மீறப்படுதல் போன்றவை தொடர்பாக இச்சட்டம் வகிக்கும் நேரடியான பாத்திரம் குறித்தும், அவை தொடர்பாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் காட்டிவரும் அலட்சியம் குறித்தும், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், அக்கறையுள்ள குடிமக்கள் என்று அனைவருமே கவலைக்குள்ளாகி வருகின்றனர்.

‘பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வைக் காண்பது’ என்ற முடிவின் காரணமாக, அமைதி நிலவுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கின்ற இந்தத் தருணத்தில், இந்தச் சட்டத்தின் காரணமாக மனித உரிமைகள், நல்-ஆட்சிக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் போன்ற விடயங்கள் பற்றிய கவனக்குவிப்புகள் அனைத்தும் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

  • பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், அது அரசின் மேற்பார்வையிலுள்ள தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை, எந்தவித விசாரணையோ அல்லது விடுதலையோ இன்றி, நீண்ட காலம் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கிறது என்பதுதான்.

‘பயங்கரவாதம்’ என்றால் என்ன என்பதை (சட்டம் தெளிவாக) வரையறுக்கத் தவறியுள்ளதால், பலதரப்பட்ட குற்றங்களையும் – அவற்றில் சில அற்பமானவையாக இருப்பினும் கூட – இச்சட்டம் தண்டனைக்கு உரியவையாக்குகிறது; பிற நாடுகளில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களுடன் ஒப்பிடுகையில் அவற்றுக்கு முரணான ஒன்றாகவே இது உள்ளது.

  • இது, பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளினால், கைதிகள் மீது மேற்கொள்ளப்படும் மிரட்டல்களின் மூலம் பெறப்படுகின்ற வாக்குமூலங்களை, ‘அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள்’ என்ற பெயரில் நம்பகமான நீதிமன்றச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது; மேலும், இந்தச் சட்டம் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எவரையும் தடுத்து வைக்கவும், அவரது எந்தவொரு சொத்தையும் பறிமுதல் செய்யவும், எந்தவொரு இடத்தைச் சோதனையிடவும் காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் அனுமதி வழங்குகிறது.
  • மேலும், ஒரே வாக்குமூலத்தின் அடிப்படையில், வெவ்வேறு குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது பல நீதிமன்றங்களில், பல வழக்குகளைத் தொடரவும் இது வழிவகுக்கிறது. இது அரச தரப்பு வழக்கறிஞர்களது (சட்டமா அதிபரது திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள்) கோரிக்கைகளின் அடிப்படையில், வழக்கு விசாரணையின் திகதிகளை வழங்கி, விசாரணையை நீட்டிக்கவும் அனுமதிக்கிறது.
  • தடுப்புக்காவலின் போது காவல்துறை, இராணுவம், சிறைச்சாலை அதிகாரிகள் போன்ற அரச அதிகாரிகளின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கைதிகள், அதிகார துஷ்பிரயோகம், தாக்குதல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு உள்ளாகும் நிலையையும் இது ஏற்படுத்துகிறது.

தங்கள் பணிகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) சார்ந்திருக்கும் காவல்துறையினரின் புலனாய்வுத் திறனையும் கூட இது பலவீனப்படுத்துகிறது.

அந்த வகையில், நாம் முன்வைக்கும் பின்வரும் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திடம் கீழ்வரும் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கிறோம்:

அ) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஆ) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் உடனடியாகப் பொது மன்னிப்பு அளித்து, அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

  1. வணக்கத்திற்குரிய பத்தேகம சமித்த, நாடாளுமன்ற உறுப்பினர், காலி மாவட்டம்.
  2. திரு. என். ரவிராஜ், நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாண மாவட்டம்.
  3. திரு. ஏ. விநாயகமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாண மாவட்டம்.
  4. திரு. டி. சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர், வன்னி மாவட்டம்.
  5. திரு. மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர், கொழும்பு மாவட்டம் (பொதுச் செயலாளர், DWC).
  6. திரு. டி.டபிள்யூ. அபயகோன் PC (தலைவர், CHRD).
  7. திரு. என். கந்தசாமி (செயலாளர், CHRD).
  8. திரு. கே.எஸ். ரத்னவேல், சட்டத்தரணி (பொருளாளர், CHRD).
  9. திரு. ஏ. ராஜகேசரி, சட்டத்தரணி (CHRD).
  10. திரு. எம். ரெமாடியஸ், சட்டத்தரணி (CHRD).
  11. திரு. சாம் சமரசிங்க (CHRD).
  12. திரு. கே. பிரேமச்சந்திரன் (பொதுச் செயலாளர், EPRLF).
  13. திரு. நல்லையா குமரகுருபரன் (பொதுச் செயலாளர், ACTC).
  14. திரு. என். அருள்பிரகாசம்.
  15. திரு. ராஜீ சங்கர் (EROS).
  16. திரு. ஏ. ஸ்ரீஸ்கந்தராஜா (பீட்டர்) (PLOTE).
  17. திரு. பி. சூரியமூர்த்தி (முன்னாள் தலைவர், திருகோணமலை நகர சபை).
  18. திரு. எஸ். பி. நாதன் (மக்கள் அமைதி முன்னணி/ People’s Peace Front).
  19. திரு. டி.ஏ.டி.என்.இ. விமலரத்ன (மக்கள் அமைதி முன்னணி/ People’s Peace Front).
  20. திரு. எஸ். சிவகுருநாதன் (நிறைவேற்றுச் செயலாளர் – DDR).
  21. திரு. வி.எஸ். வீரசிங்கம் (R.C.D.C).
  22. திரு. சி.டி. ஜானஸ் (F.R.C).
  23. திரு. எஸ்.ஆர். யோகசுந்தரம் (F.R.C).
  24. திருமதி. ஜே. இயேசுதாசன் (சட்ட அதிகாரி, F.R.C).
  25. திரு. சி. வத்தவெல (SEDEC).
  26. திரு. வி.எஸ். கணேசலிங்கம், சட்டத்தரணி.
  27. திரு. என். சிறீகாந்தா (TELO), சட்டத்தரணி.
  28. திரு. கே. சண்முகலிங்கம், சட்டத்தரணி.
  29. திருமதி. பிரியதர்ஷினி டயஸ், சட்டத்தரணி.
  30. திரு. எஸ். கதிரவேலு.
  31. திரு. ஆர். மஹரூஃப்.
  32. திரு. மனோகரன் ராஜசிங்கம்.
  33. திருமதி. சாந்தி சச்சிதானந்தன்.
  34. கலாநிதி எஸ்.பி. விக்னராஜா.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA): ஒரு விமர்சனப் பகுப்பாய்வு

இந்த மகஜர், 

என். கந்தசாமி (செயலாளர் – CHRD),

அவர்களால் 12 ஜூன் 2002 சமர்ப்பிக்கப்படுகிறது.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்