மலையக வாய்மொழி இலக்கியத்தில் கொண்டாட்டப் பாடல்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

மலையக வாய்மொழி இலக்கியத்தில் கொண்டாட்டப் பாடல்கள்

May 29, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

ஒரு பூரண வரலாற்றுப் பண்பாட்டைக் கொண்ட மக்கள், அப்பண்பாட்டில் பல்வேறு வகையான வாழ்க்கை முறையினையும் வழக்காறுகளையும் தம்மகத்தே கொண்டிருப்பார்கள். இத்தகைய மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக தம் வாழ்விடத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்கின்ற போது, அவர்களது உணர்வோடும் உயிரோடும் அத்தகைய வாழ்க்கை வரலாறுகள் சென்று விடுவதும் வழக்கம். இவ்வாறுதான் மலையக மக்கள் 200 வருடங்களுக்கு முன்னர் தென்னிந்தியாவிலிருந்து இந்நாட்டுக்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட போது, அவர்களது விவசாயப் பண்பாட்டின் வழக்காறுகளையும் வாழ்வியல் முறைகளையும் தம்மோடு கொண்டு வந்து இந்தப் புதிய சூழலில் அவற்றைப் பயன்படுத்த முற்பட்டனர். இப்புதிய சூழலில் அம்மக்கள் மேற்கொண்ட தொழில்கள், அவர்கள் உட்கொண்ட புதிய உணவுகள், அமைத்துக் கொண்ட வசிப்பிடங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் யாவும் அவர்களின் பழைய பண்பாட்டு விழுமியங்களையும் வழக்காறுகளையும் ஒன்றிணைத்தன. இந்த ஒருங்கிணைப்பானது மற்றொரு புதிய வழக்காற்றினை வழங்கியது.

சான்றாக, மலையகப் பகுதிகளில் புதிதாகக் குடியேறி தேயிலை மற்றும் கோப்பித் தோட்டத் தொழில்களில் ஈடுபட்ட மக்கள் பாடிய பாடல்களைக் கவனித்தால், லயம், கொங்காணி, தேயிலை, கோப்பி, கங்காணி, கணக்கப்பிள்ளை, மலைகள், கூடை, பிரம்பு போன்ற புதிய சூழல் சார்ந்த சொல்லாடல்கள் இடம்பெறுவதைக் காணலாம். இவற்றுடன், அவர்களிடையே ஏற்கனவே முக்கியத்துவம் பெற்ற சிறுதெய்வ வழிபாட்டுக் கூறுகளும் அம்மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஆழமாகப் பின்னிப்பிணைந்து வெளிப்படுகின்றன. கூட்டாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் உடல் வலிமையையும் உழைப்பையும் வெளிப்படுத்துவதற்கு கத்தி, கோடரி, மண்வெட்டி, முள்ளு, சுரண்டி மற்றும் ரோத போன்ற கருவிகள் இன்றியமையாத சாதனங்களாகத் திகழ்ந்தன. தமது உழைப்புத் திறனைச் செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த அந்தப் பணிச்சூழலையே அவர்கள் பாடல்களாக வடித்தெடுத்தனர். உழைப்பவர்களின் உள்ளத்திற்குப் பேரின்பத்தை நல்கும் இவ்வகையான பாடல்களையே நாம் கொண்டாட்டப் பாடல்கள் என அழைக்கின்றோம்.

இம்மக்களிடையே கொண்டாட்டங்கள் இரண்டு வகையில் நடைபெறுகின்றன. குடும்பத்துக்குள்ளேயே நடைபெறுகின்ற திருமணம், குழந்தைப் பிறப்பு, சடங்கு போன்ற மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் ஒருபுறமாகவும், தெய்வீகக் கொண்டாட்டங்களாகக் கருதப்படுகின்ற அம்மன் திருவிழா, கரகம் பாலித்தல், கும்மியடித்தல், மாவிளக்கு ஊர்வலம், பஜனை ஊர்வலம், அம்மனுக்குக் குலவைப் பாடல், கோலாட்டப் பாடல்கள் என்பன இன்னொரு புறமாகவும் அமைந்துள்ளன. அவைதான் இம்மக்களின் வரலாற்று ஆவணங்களாகவும் அமைந்து விடுகின்றன.

இன்றைய ஆய்வாளர்கள் ஒரு மக்கள் இனத்தின் வரலாற்றை ஆராய்கின்ற போது கல்வெட்டுகள், சாசனங்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டே வரலாற்றை நிரூபிக்க முற்படுகின்றனர். ஆனால், புலம்பெயர்ந்து வருகை தந்து ஒரு மண்ணிலே புதிதாகக் குடியேறிய மக்களின் வரலாற்றைக் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ தேட முடியாது. மலையக மக்கள் தங்களுடைய இன்பங்கள் துன்பங்கள் அனைத்தையும் வாய்மொழிப் பாடல்களின் ஊடாகவே வெளிப்படுத்தி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே காணப்படுகின்ற பின்வரும் பாடல்கள் அவர்களுடைய மனமகிழ்வினை எடுத்துக்காட்டக் கூடியதாக இருக்கின்றன.

“மாரி மகமாயி மணி மந்திர சேகரியே

ஆயி உமையாளே ஆதி சிவன்

தேவியரே

மாறித்தாயி வள்ளியே மகராசி

காருமம்மா

மாயவன் சகோதரியே மாரிமுத்தே

வாருமம்மா…

ஆயன் சகோதரியே மாரிமுத்தே

தாயே துரந்தரியே ஆஸ்தானம்”

“மாரிமுத்து திக்கெல்லாம் போற்றும் எக்காலத் தேவியரே 

எக்காலத் தேவியரே திக்கெல்லாம் 

நின்ற சக்தி 

கண்ணை புரத்தாளே காரண சௌந்தரியே 

காரண சௌந்தரியே நாரணார் தங்கையரே

உனக்கு ஐந்து கரகம் அம்மா அசைந்தாடும் பூங்கரகம் 

உனக்கு ஏழு கரகம் அம்மா எடுத்தாலும் பூங்கரகம்

உனக்கு பத்துக் கரகம் அம்மா பதிந்தாலும் பொற்கரகம் 

ஆயிரம் கண்ணுடையாள் 

பராசக்தி வாருமம்மா 

எமனுடன் வாதாடும் எக்காலத் தேவியரே 

தேவருடன் வாதாடும் தேவி கண்ணூராளே

கண்ணை புரத்தாளே காரண சௌந்தரியே 

இன்னமும் தாமதமா நான் வருந்தலையோ 

படிக்க வச்ச என் குருவே அம்மா நான்

பல நாளும் உனை மறவேன் 

ஓதிவச்ச என் குரவே ஒரு நாளும் 

நான் மறவேன்

உடுக்கடிக்கும் என் கையாலே 

உன்னை உருகி அழைக்கின்றேன் 

எட்டுக் கலந்து நின்னு அம்மா 

எட்டப் போய் நிற்க வேண்டாம் 

திட்டிக் கலந்து நின்னு ஆயா

தூரப்போய் நிற்க வேண்டாம் – ஆயா

ஆயி உமையவளே ஆத்தா மாரியம்மா”

“சத்தி மாடா சித்தமாடா…

ஆகாச மாடா உச்சிமாடா…

உரும மாடா….

திலக மாடா எத்துறையே 

மலை இறங்கி வாரும் ஐயா”

கடந்த 200 ஆண்டுகாலமாக மலையக மக்கள் தோட்டப்பகுதிகளில் மாரியம்மன் திருவிழாவினை மிகவும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். முறையான ஆலயங்கள் அமைப்பதற்கு முன்பாகவே, நடுகற்களை நட்டுத் தங்கள் இஷ்ட தெய்வங்களை அவர்கள் வழிபட்டு வந்தனர். பெருந்தெய்வ வழிபாட்டிலிருந்து மாறுபட்ட சிறுதெய்வ அல்லது குலதெய்வ வழிபாடே இவர்களிடம் நீண்டகாலமாகப் பிரதானமாக இருந்துள்ளது. அந்த வகையில் மாரியம்மா, காளி, மதுரை வீரன், மாடசாமி, முனி போன்ற தெய்வங்கள் இம்மக்களின் வாழ்வில் உணர்ச்சிபூர்வமான வழிபாட்டுக்குரியவர்களாகத் திகழ்கின்றனர். தெய்வங்களைக் கொண்டாடும் போது அவர்களின் உள்ளத்திலிருந்து இயல்பாக வெளிப்படும் உணர்வுகள் பாடல்களாக உருவெடுக்கின்றன. இத்தகைய மாரியம்மன் பாடல்கள் மலையகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும், இடத்திற்கு இடம் மாறுபட்ட தன்மையுடனும் பரந்து காணப்படுகின்றன. அவற்றுள் ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாக்களில் ‘கரகம் பாலித்தல்’ மற்றும் ‘குறிப்பு எடுத்தல்’ என்பன மிக முக்கியமான, பக்திபூர்வமான நிகழ்வுகளாகும். மாரியம்மனுக்குக் காப்புக் கட்டி, ஆற்றங்கரையில் கரகம் பாலிக்கும் போது, ஆலயத்தின் தர்மகர்த்தா அல்லது நிர்வாகப் பொறுப்பாளர் ஒரு குறியை (இரகசியத்தை) மனதில் வைத்து, சாமி ஆடுபவர்களிடம் அதனைச் சொல்லுமாறு கேட்பார். அந்தப் புதிரை அல்லது குறியைச் சரியாகச் சொல்பவர்களே ‘சக்தி கரகத்தை’த் தூக்கி ஊர்வலம் வரும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.

ஆரம்ப காலத்தில் இந்த நடைமுறை குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், பிற்காலத்தில் இளைஞர்கள் இதனைச் சரியாகக் கையாண்டு, குறி சொல்பவர் யாராக இருந்தாலும் கரகத்தை ஏந்தும் நிலையை உருவாக்கினர். இவ்வாறு கரகத்தை எடுப்பவர்கள் ஆலயத்தினுள் சென்று அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும் உரிமையையும், ஊர் மக்கள் மத்தியில் தனிப்பட்ட மதிப்பையும் மரியாதையையும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறி சொல்லுதல் தொடர்பாக பினவரும் பாடலை அவதானிக்கலாம்.

“ஆயி மகமாயி ஆனந்த சேகரியே

மாரி உமையவளே மாரித்தாய் வள்ளியே

ஆயி மகமாயி நான் ஆத்தங் கரையிலே

ஆத்தங் கரையினிலே அன்னம் போல்

நான் இருந்தேன்

குளத்தங்கரையினிலே

கொக்குப் போல் நான் இருந்தேன்

யாரும் செய்யும் குற்றம்

எவரும் செய்யும் தீவினை – என்று

என்னை மடி பிடித்து கேட்க வந்து

நீதம் விளங்கணுமோ

நிச்சயம் சொல்லும்

சொல்லுகிறேன்

பஞ்சாயத்து துவங்குகிறேன்

கம்பையிலே…

யாரு செய்த குற்றம்

எவரு செய்த தீவினைகள்

நச்சுவலியும் நம் வீட்டில் நையாண்டி

கூத்துகளும்

ஆனால் அருங்கூத்து

பெண்ணால் பெருங்கூத்து

ஒருவர்

சொல்லும் வார்த்தை

ஒருவருக்கு ஏறாது….

நீ யாரு நான் யாரு மீனாரு….

கொக்காரு என்று போர்க்கோலம்

பெத்தவுன்னே

போர்க்கோலம் பெத்தவுன்னே

ஆண்டவா போகாதே போகாதே

எல்லைக்கதிகாரி

எஜமானை தஞ்சமென்னேன்

உனக்கு

தெற்கே விழுந்த சடை தென்கடலில்

பூசையின்னே உனக்கு வடக்கே

விழுந்த சடை வடகடலில்

பூசையின்னு அண்ணா கிண்டி

சாமுண்டி கிடந்தருளும் சப்பாணி

சப்பாணி பூடம் அண்ணா சமத்தா

எழுந்திருடா கேளப்பா

சொல்லுகிறேன்

தூங்குகிறேன் நீதங்களும்

நீதங்களும் காணும் கரையும்

கண்டேன் கல்பாறை மேடை கண்டேன்

நஞ்சு தின்னு நெஞ்சுக்கும்

நடுச்சாம வேளையிலே உண்டு

தின்னு உண்டு கக்கம் 

ஒரு சாமவேளையிலே

நம்ம மட்டம் கிறுக்க நம்

மதலையும் கண்ணுறும்

ஒரு சாம வேளை விட்டு மறு சாம வேளையிலே

நம்ம அண்ணன் முனியன் நம்

அடங்கா புலி எருது வேட்டைக்கு

போயி விரும்பும் அந்த வேளையிலே

பட்ட மரம் குச்சி மடக்குனு

ஒடிந்ததப்பா… கன்னி பயந்த

மங்கை கண்டு பயந்தாளே அவள்

கண்டு பயந்தாளே போட்டது ஒரு வம்பு

யூனியன் பின்வாங்க மாட்டான் போ

அப்போ இது ஒரே குத்தம் இல்லை

மங்கை செய்த குற்றம்

மாரளவு இருக்குதின்னேன்

பொறுக்க முடியாது

பொறுக்க முடியாது

பூமி இடம் கொள்ளாது

பூமி இடம் கொள்ளாது……..

சித்திர புத்திரர் சிவனார்

பெருங்கடக்கர் உன் பேரைச் சொல்லி

அள்ளிவிட்டேன் சாம்பல் நம்ம நாட்டுக்

கணக்கர் நமனார் பெருங்கடக்கர்

மண்டையிலே எழுதி மயிரால்

மறைந்த ஐயாவும் ஆண்டவா உன்னை

கூப்பிட்டேன் இந்நேரம் இந்நேரம்”

மலையக மக்களின் வாழ்வியலோடு ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ள ஒரு முக்கிய அம்சம் உடுக்கை இசைக்கருவியாகும். இந்தக் கருவி இருவேறு பிரதான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது: முதலாவதாக, மாரியம்மன் திருவிழாக்களின் போது வழிபாட்டுக்குரிய முக்கிய கருவியாக இது அமைகிறது; குறிப்பாக, சாமி ஆடுபவர்களை இனங்காண்பதற்கும் அவர்களின் வருகையை உறுதிப்படுத்துவதற்கும் இந்த உடுக்காட்டம் பெரும் பங்கு வகிக்கிறது. இரண்டாவதாக, பில்லி சூனியம் மற்றும் நோய்களிலிருந்து விடுபட அருள் அழைப்பதற்கும், சாமியை வரவழைப்பதற்கும் உடுக்கு அடித்துப் பாடல்கள் பாடப்படுகின்றன. மலையக மக்களின் நம்பிக்கையில் முக்கிய இடம்பிடித்துள்ள பேய் ஓட்டுதல் போன்ற சடங்குகளின் போது, நோய்க்குக் காரணமான தீய சக்திகளை அகற்றவும், உடம்பிலிருந்து பேயை வெளியேற்றவும் ‘கோடங்கி பார்த்தல்’ எனும் நிகழ்வு உடுக்குப் பாடல்களின் ஊடாகவே நிகழ்த்தப்படுகிறது. இந்தக் ‘கோடங்கி பாடல்’களில் மாடசாமி, கௌதமுனி, மகாமுனி, மாரி மற்றும் காளி போன்ற சிறுதெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. மக்களின் மொழி ஆளுமை, கவிதை நயம், உள்ளத்தில் புதைந்துள்ள வேதனைகள் மற்றும் துக்கங்கள் ஆகியவற்றை இறைநம்பிக்கையுடன் கலந்து வெளிப்படுத்தும் துல்லியமான படைப்பாக இப்பாடல்கள் அமைகின்றன.

இதேபோல், மலையக வாய்மொழி இலக்கியத்தில் மற்றொரு முக்கியமான கொண்டாட்ட அம்சமாக ‘குலவைப் பாடல்’ திகழ்கிறது. மாரியம்மன் திருவிழாவின் போது அம்மனை ஊர்வலமாக அழைத்து வரும் வேளைகளில் பெண்களால் இப்பாடல்கள் பாடப்படுகின்றன; இவை தமிழ்நாட்டின் வாழ்வியல் பண்பாட்டுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவைப் பறைசாற்றுகின்றன

“வெள்ளை கொடை பிடித்து நம்ம

முத்துமாரிக்கு விரலால் பொட்டுமிட்டு

வெள்ளாள பெண்களோட

நம்ம முத்து மாரி…

விளையாண்டு வாராளாம்…

போடுங்கடி மாதர்களே நம்ம

முத்துமாரிக்கு பொன்னால

திருகுலவ…..

கரும்பு கூட புடிச்சு நம்ம

முத்துமாரிக்கு கையால பொட்டுமிட்டு

கல்லால பெண்களோட நம்ம

முத்துமாரிக்கு கரகம் ஆடிவாராளாம்

போடுங்கடி மாதர்களே நம்ம முத்துமாரிக்கு 

பொன்னால திருகுலவ

வடக்கே மழை பொழியும்

முத்துமாரிக்கு வடநாட்டுத் தண்ணி வரும் 

வடநாட்டுத் தண்ணியிலே நம்ம

முத்துமாரிக்கு வர்ணிச்சோம்

பூங்கரகம்……

பூங்கரகம் கையிலெடுத்து நம்ம

முத்துமாரிக்கு

பொன்னால திருகுலவ…”

ஆலய வழிபாட்டுடன் இணைந்த இத்தகைய கொண்டாட்டப் பாடல்கள், மக்கள் அனைவரும் ஒருமித்து உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்வதற்கு வழிகோலுகின்றன. இதன் காரணமாகவே, மலையக மக்கள் மத்தியில் இப்பாடல்கள் இன்றும் மிகுந்த முக்கியத்துவத்துடனும் செல்வாக்குடனும் திகழ்கின்றன.

கொண்டாட்டப் பாடல்களின் மற்றுமொரு பிரதான வடிவமாக “கும்மிப் பாடல்கள்” விளங்குகின்றன. பொதுவாகப் பெண்கள் தங்களின் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்கிற்காகக் கும்மியடித்துப் பாடி மகிழ்வது வழக்கம். குறிப்பாக, தைப்பொங்கல் திருநாளுக்கு அடுத்ததாக வரும் “கரி நாள்” நிகழ்வுகளை மையப்படுத்தியே இப்பாடல்கள் பெரும்பாலும் அமைகின்றன.

மலையகத்தில் நிலவும் கும்மிப் பாடல் மரபுகள் குறித்துப் பின்வரும் கூறுகளைக் கவனிக்கலாம்:

  • சில விசேட தருணங்களில் ஆண்களும் பெண்களும் இணைந்து கும்மியடித்துப் பாடும் வழக்கமும் காணப்படுகிறது.
  • பெண்கள் பூப்படைதல் தொடர்பான சடங்கு விழாக்களிலும் இத்தகைய கும்மிப் பாடல்கள் பாடப்படுவது மரபாகும்.
  • பல்வேறு கும்மி வகைகள் நடைமுறையில் இருந்தாலும், அம்மன் ஆலயங்களில் நிகழ்த்தப்படும் கும்மிப் பாடல்கள் மிகவும் சுவாரசியமானவையாகவும் ரசிக்கத்தக்கவையாகவும் அமைகின்றன.

“தன்னன்னனாதினம் தன்னானே 

தன தன்னனனாதினம் தன்னானே 

தன்னன்னனாதினம் தன்னன்னனாதினம் தன்னானே…….

திண்ணைய திண்ணைய கூட்டுங்கடி 

அந்த தெருவு திண்ணைய கூட்டுங்கடி 

நம்மையா கங்காணி சாஞ்சி இருக்குற 

சருகத்திண்ணைய கூட்டுங்கடி…..”

“சுரை படர்ந்ததை பாருங்கடி அது 

சுத்திப் படர்ந்ததை பாருங்கடி

சுரை விதை போல நம்மை கங்காணி

சொல்லு வரிசைய பாருங்கடி..

முருங்கை இலை போல கோலமிட்டு 

அவர் முன்னெஞ்சு பின்னெஞ்சு கூத்தியாறாம் 

சரிகை துப்பட்டி மேல் போட்டு

அவர் தங்க பல்லாக்கு மேல் வாராராம்”

மலையக வாய்மொழி இலக்கிய மரபில் கல்யாண வாழ்த்துப் பாடல்கள் மற்றுமொரு குறிப்பிடத்தக்க அங்கமாகும். மானிடப் பண்பாட்டில் ஆணும் பெண்ணும் இணைந்து புதிய வாழ்வைத் தொடங்கும் திருமண விழா, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு முன்னின்று நடத்தப்படும் மிக முக்கியமான நிகழ்வாகும். இத்திருமணங்களின் போது பல்வேறு சாஸ்திர முறைகளும் சம்பிரதாயங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆரம்பக் காலத்தில், மலையகத் திருமணங்கள் பெரும்பாலும் ஊருக்குள்ளேயே அல்லது வீடுகளிலேயே மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. வீட்டு முற்றத்தில் பந்தல் அமைக்கப்பட்டு, இரண்டு விதமான முறைகளில் இவை நிகழ்த்தப்பட்டன: ஒன்று, ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருமணத்தை நடத்தி வைப்பார்கள்; அல்லது, உள்ளூர் கோவிலில் பணிபுரியும் பண்டாரங்கள் இப்பொறுப்பை ஏற்பார்கள். 1950, 60கள் வரை மலையகப் பகுதிகளில் பிரம்மாண்டமான கோவில்களோ அல்லது ஐயர்மார்கள் திருமணங்களை நடத்தும் மண்டபங்களோ மிகவும் அரிதாகவே (ஒன்று அல்லது இரண்டு மட்டுமே) இருந்தன. இதனால், உறவினர்கள் புடைசூழ வீட்டு முற்றத்தில் திருமணங்கள் நடைபெறுவதே அக்கால வழக்கமாக இருந்தது. அத்தகைய தருணங்களில், மணமக்களை வாழ்த்தி மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரால் பாடப்படும் பாடல்களே ‘கல்யாண வாழ்த்துப் பாடல்கள்’ எனப்படுகின்றன. தட்டில் வெற்றிலைகளை அடுக்கி வைத்து, அவற்றை மென்றபடி இப்பாடல்களைப் பாடுவது பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை நையாண்டி செய்து பாடுவதும், பெரியோர்கள் மணமக்களை ஆசீர்வதித்துப் பாடுவதும் மரபாகும். அதேபோல், பெண் வீட்டு உறவினர்கள் மாப்பிள்ளையைக் கேலி செய்து பாடும் வழக்கம் இன்றுவரை மலையக சமூகத்தில் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது.

மூத்தோர் பாடுவது:

“கல்யாணம் கல்யாணம் 

இன்னைக்கு கல்யாணம் 

எங்க இல்லம் கொடிக்கு 

கல்யாணம் கல்யாணம் 

சித்திரை மாதத்திலே 

சிவன் பிறந்த மலையினிலே 

பங்குனி மாதத்திலே 

பவள கல்யாணம் கல்யாணம்…..”

“மங்களம் மணமங்களம் மங்களம் 

சுப மங்களம் அரிச்சந்திர ராமருக்கு சுபமங்களம் 

அழகுள்ள சீதைக்கு சுப மங்களம் 

மாலையிட்ட மன்னனோடு ஜெய மங்களம் 

நீ மாண்புடன் வாழ வேண்டும் சுப மங்களம் 

ஆசையுடன் மன்னனோடு சுப மங்களம் 

நீ அன்புடன் வாழ வேண்டும் ஜெயமங்கலம்”

மாப்பிள்ளை வீட்டார் கல்யாணப் பெண்ணை நையாண்டி செய்து பாடுவது:

“நெய்க் கிணறு வெட்டி 

நிழல் பார்க்கப் போகும்போது 

என் அண்ணன் அழகைக் கண்டு 

பின்னால் சரணம் என்றாள்….

பாலு கிணறு வெட்டி 

பல் விளக்கப் போகும்போது 

என் அண்ணன் அழகைக் கண்டு 

பின்னால் சரணம் என்றாள்” 

இப்பாடல்கள், மணப்பெண்ணை மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் கேலி செய்து பாடுவதற்காக அமைந்தவை. இத்தகைய தருணங்களில் மணப்பெண்ணின் முகம் வாடி வதங்குவதை அவதானிக்க முடியும்; அந்தளவுக்குப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நையாண்டிப் பாடல்களைப் பாடுவது திருமண விழாக்களில் மிகவும் சுவாரசியமான அம்சமாகத் திகழ்கிறது. அதேபோல், பெண் வீட்டார் மாப்பிள்ளையைக் கேலி செய்து பாடும் பாடல்கள் இன்னும் சுவாரசியமானவை:

“பாக்கு வெட்டி போல படர்ந்த

முகரைக்கு இந்தப் பாப்பார வம்சம்

எங்கிருந்து வந்துச்சோ…

சுண்ணாம்பு போல சுட்ட முகரைக்கு இந்த

சூரிய வம்சம் எங்கிருந்து வந்துச்சோ…

சோளத்தட்ட தூக்கி தோள் உடைந்த

மாப்பிள்ளைக்கு ஆரியனார் வம்சம்

எங்கிருந்து வந்துச்சோ 

கம்பன் தட்ட தூக்கி கழுத்தொடைஞ்ச

மாப்பிள்ளைக்கு கண்ணகி வம்சம்

எங்கிருந்து வந்துச்சோ”

இம்மக்களின் வாழ்வில் அங்கமாகத் திகழும் இக்கொண்டாட்டப் பாடல்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. இவை வெறும் சடங்கு சார்ந்த வெளிப்பாடுகளாக மட்டுமல்லாது, மலையக மக்களிடையே நிலவும் கூட்டு வாழ்க்கை முறையையும் சமூகப் பிணைப்பையும் உறுதிப்படுத்தும் முக்கிய கண்ணிகளாகவும் திகழ்கின்றன.

மலையக மக்களின் வாய்மொழி இலக்கிய மரபானது, ஒரு சமூகத்தின் தனித்துவமான கலாசார விழுமியங்களை வெளிப்படுத்தும் இனக்குழுவியல் ஆய்வுகளுக்கு மிகச்சிறந்த களமாக அமைகிறது. 

சான்றாதாரங்கள்

1. வேலுப்பிள்ளை சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள், மகாவலி பிரசுரம், கொழும்பு.

2. சிவலிங்கம் மு. (2007). மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள், ரெக்னோ பிரிண்டர்ஸ்.

3. சாரல் நாடன் (1993). மலையக வாய்மொழி இலக்கியம், சவுத் ஆசியன் புக்ஸ், சென்னை.

4. கந்தையா மு.சி. (2002). சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.

5. காதர் பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், சமூக இயல் பதிப்பகம், லண்டன்.

6. பக்தவத்சல பாரதி (1990). பண்பாட்டு மானிடவியல், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.



About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்