தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகளின் நம்பகத்தன்மையும் நிலவியல், சமுத்திரவியல் சான்றுகளும் – பகுதி 1

July 20, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

புராதன தமிழகத்தின் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சேர்ந்து நடனமாடும் காட்சி பாறை ஓவியமாக ஆண்டிப்பட்டி மலைக்குன்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களோடு பழக்கப்பட்ட (Domesticated) ஆடும் காணப்படுகிறது. இந்த ஓவியத்தின் காலம் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்படுகிறது. நன்றி – Indian Express, March 4, 2013.

தமிழர் தோற்றம் பற்றிய சில கோட்பாடுகள்

தமிழ் மொழியைப் பாரம்பரியமாகப் பேசும் மக்கள் ‘தமிழர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். இந்தத் தமிழ் மொழி பேசப்பட்ட – பேசப்படுகிற – நிலம் ‘தமிழகம்’ (Home of the Tamils) என அழைக்கப்படுகிறது. இங்கே நாங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை:

  1. தமிழகம் என நாங்கள் அழைக்கும் தென்னாசிய மண்ணில் வாழும் மக்களின் முன்னோர்கள் இந்த நிலத்திற்கு வருகை தந்த காலம் வேறு.
  2. தமிழ் என்றொரு மொழி உருவாகி அம்மொழியை இம்மக்கள் கடைப்பிடித்த காலம் வேறு.

இத்தென்னாசிய மக்கள் தமிழ் மொழியைப் பேச ஆரம்பித்த பின்னரே இவர்களை நாம் தமிழர்கள் என அழைக்க முடியும். ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் என்றொரு மொழி வழக்கத்திற்கு வருவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களது ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் பிற்காலத் திராவிட மொழிகளின் தோற்றத்திற்கு முக்கிய பங்களித்தமையால் (இது பற்றி பின்னர் விரிவாகப் பேசப்படும்) இவர்களை இன்று நாம் திராவிட முன்னோடிகள் என்ற பெயரால் அழைக்கலாம்.

தமிழர்களின் தோற்றம் பற்றி பல வகையான கோட்பாடுகள் தமிழக வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில:

  1. தமிழர் தோன்றியது ‘குமரிக்கண்டம்’ என்று அழைக்கப்பட்ட ஒரு பெரும் நிலப்பரப்பில். அதற்கு ‘லெமூரியா’ என்ற மாற்றுப் பெயர் உண்டு. ஒரு காலத்தில் கன்னியாகுமரிக்குத் தெற்கே ஆபிரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலிருந்த கண்டம் இது. இக்கண்டம் கடல்கோள்களினால் அழிந்துவிட்டது. இந்த லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்திலிருந்தே தமிழர்கள் இன்றைய தமிழகத்தை வந்தடைந்தார்கள். இங்கிருந்து அவர்கள் மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தார்கள்.
  2. தமிழர் ஓர் இன மக்கள். அவர்கள் தமிழ்நாட்டின் தொல்குடிகள். அவர்கள் தோன்றியது இந்த மண்ணில்தான்.
  3. தமிழர்கள் மொசப்பத்தேமியாவிலுள்ள சுமேரியாவிலிருந்து சிந்து சமவெளி (மொகஞ்சதாரோ, ஹரப்பா) வழியாக தமிழகத்திற்கு வந்தவர்கள்.

இக்கோட்பாடுகளின் உண்மைத்தனத்தை முடிவு செய்வதற்கு கீழ்க்காணும் கற்கைத்துறைகள் துணை நிற்கின்றன. அவை: 1. குடிசன மரபணுவியல் (Population Genetics), 2. மானிடவியல் (Anthropology), 3. தொல்லியல் (Archaeology), 4. மொழியியல் (Linguistics), 5. நிலவியல் (Geology) என்பன.

குமரிக்கண்டம் என்ற பெயரில் ஒரு கண்டம் இருந்ததா? லெமூரியா என்பது குமரிக்கண்டமா?

குமரிக்கண்டமாக்கப்பட்ட குமரி நாடு

சங்ககால இலக்கியங்களில் உள்ள சில நூல்களிலும், பின்னர் சங்கம் மருவிய காலத்தில் வெளிவந்த சிலப்பதிகாரத்திலும் கடல் கொண்ட குமரி நாடு பற்றிக் கூறப்படுகிறது.

புறநானூறு 9ஆம் செய்யுள் 9-11ஆம் வரிகளில்:

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,

முந்நீர் விழவின், நெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!”

“கடல் தெய்வத்திற்கு முந்நீர் விழா எடுத்து, அதனுள் கூத்தர்க்குப் பசும் பொன் வழங்கிய நெடியோனால் ஆக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலிலும் பல ஆண்டுகள் நீ புகழுடன் வாழ்வாயாக!”  

கலித்தொகை 104ஆம் செய்யுள் 1-4ஆம் வரிகளில்:

“மலித்திரை ஒருங்க தன்மண் கடல் வவ்வின்

மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட

புலியொடு வில்நீக்கி புகழ் பொரித்த கிளர் கெண்டை

வலியினால் வனக்கிய வாடாசீர்த் தென்னவன்” 

“தனது நிலத்தைக் கடல் கொண்டதனால் பாண்டிய மன்னன், சேர – சோழர்களை வென்று அவர்களது நிலங்களைத் தனதாக்கிக் கொண்டான்.”

சிலப்பதிகாரம் 11ஆம் செய்யுள் 18-20ஆம் வரிகளில்:

“வடிவேலெறிந்த வன்பகை பொறாது

பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”

“(பாண்டிய மன்னன்) தனது கூர்மையான வேலெறிந்த பெரும் பகையைப் பொறுக்க மாட்டாது பொங்கி எழுந்த சமுத்திரம், பஃறுளி ஆற்றுடன் கூடிய மலைகளையும், குமரிக் கோட்டையையும் விழுங்கிக் கொண்டது.”

இதில் எந்தப் பாடலிலும் குமரிக்கண்டம் என்றொரு கண்டம் கூறப்படவில்லை. பாண்டிய நாட்டின் நிலங்களைக் கடல் கொண்டதாகவும், அந்த நிலத்தில் பஃறுளி என்றொரு ஆறும், மலைகளும், குமரி மலையும் இருந்ததையும் மட்டுமே இப்பாடல்கள் கூறுகின்றன. இவற்றிலிருந்து பஃறுளி ஆற்றையும், குமரிக்கோட்டையையும் கொண்ட ஒரு குமரி நாடு இருந்ததை மட்டுமே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும், ‘கண்டம்’ என்ற சொற்பதம் ‘நாடு’ என்பதைக் குறிக்கும் மாற்றுச் சொற்களில் ஒன்றென பிங்கல நிகண்டின் 457ஆவது செய்யுள் குறிப்பிடுகிறது:

“பைதிர மண்டிலம் பாடி தேயந் 

தண்ணடை நீவரங் கோட்டாஞ் சனபதஞ் 

சும்மை யகலுள் கண்டமேணி யென்றின்ன

விராச்சிய முலகு நாடென்ப”

இதன்படி ‘கண்டம்’ என்ற சொற்பதம் ஒரு நாட்டைக் குறிப்பிடப் பாவிக்கப்பட்டிருக்கலாம். இப்பதம் ஒரு பெரும் நிலப்பரப்பைக் குறிப்பிடுகிறது என நிச்சயமாகக் கொள்ள முடியாது.

சங்ககாலத்தின் பின் ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகள் கழித்து, பொ.யு எட்டாம் நூற்றாண்டுக் காலத்தில் இறையனார் அகப்பொருளுரை என்றொரு நூல் வெளிவந்தது. இதற்கு இறையனார் களவியல் உரை என்ற மாற்றுப் பெயரும் உண்டு. இந்நூலின் செய்யுட்பகுதியை இறையனாரே – அதாவது கடவுளே – எழுதியதாகக் கூறப்பட்டது. இந்நூலின் செய்யுட்பகுதி 60 சூத்திரங்களைக் கொண்ட பொருளிலக்கணப் பாடல்களைக் கொண்டது (இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரை, 2006 பதிப்பு).

இதற்கு நக்கீரர் உரை கூறியதாகக் கூறப்படுகிறது. இன்றிருக்கும் உரை நக்கீரர் உரை என வழங்கப்பட்டாலும், நக்கீரர் உரை வாய்மொழியாகப் பல தலைமுறைகளுக்கு வழங்கப்பட்டு வந்து பின்னர் ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்த முசிறி ஆசிரியர் நீலகண்டனார் என்பவரால் கேட்கப்பட்டது என்ற குறிப்பும் இந்த நூலின் முன்னுரையில் காணப்படுகிறது. நீலகண்டனாரின் காலத்தில் இது ஏட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கலாம்.

இந்நூலின் முக்கியத்துவம் என்னவெனில், இப்பாடல்களின் உரைக்குத் தொடர்பேதும் இல்லாத இதன் நீண்ட முன்னுரையில் பண்டைய தமிழகத்தின் பாண்டிய நாட்டில் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாகவும், இவை முறையே 4440, 3700, 1850 ஆண்டுகள் செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“இந்த முதற்சங்கம் குமரிக்கண்டத்தில் அங்கே ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் முதல் தலைநகரமான தென் மதுரையில் நடைபெற்றது. தென் மதுரை தலைநகராக இருந்த குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியை ‘கடற்கோள்’ கொண்டபின், மிகுதியிருந்த குமரிக்கண்டத்தின் கபாடபுரத்தில் தலைநகர் அமைக்கப்பட்டு, அங்கே இடைச்சங்கம் நடைபெற்றது. இந்தப் பகுதியும் மீண்டும் கடற்கோளினால் அழிந்துபோக, பாண்டியர்கள் வடக்கே வந்து இன்றைய மதுரையைத் தலைநகராக்கி அங்கே மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்தார்கள்” என இந்நூலில் கூறப்படுகிறது (இறையனார் அகப்பொருள் நக்கீரர் உரை).

இறையனார் அகப்பொருள் உரை நூலைத் தொடர்ந்து வெளிவந்த தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியரும், தொல்காப்பிய உரை நூலில் பேராசிரியரும், சிலப்பதிகார உரை நூலில் அடியார்க்கு நல்லாரும், இறையனார் அகப்பொருள் கூறிய தமிழ்ச் சங்கம் பற்றிய விவரங்களையும், குமரிநாட்டின் அழிவைப் பற்றியும், அத்தோடு பல புதிய தகவல்களையும் சேர்த்து திரும்பவும் உரைத்தார்கள்.

இந்த வரலாற்றில் பின்வரும் அம்சங்கள் சர்ச்சைக்கு உரியவை:

1. சங்ககால இலக்கியங்கள் ‘குமரி நாடு’ என்ற பெயரால் ஒரு நாடு இருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றனவே ஒழிய, குமரிக்கண்டம் பற்றியோ, கபாடபுரம் குமரிக்கண்டத்தில் இருந்தது பற்றியோ, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்கள் பற்றியோ எதுவுமே குறிப்பிடவில்லை. மேலும், சங்கம் மருவிய காலத்திற்கும் இறையனார் அகப்பொருளுரை நூல் வெளிவந்த எட்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட 500 ஆண்டுக் காலத்தில் வெளிவந்த எந்தத் தமிழ் நூலிலும் இம்மூன்று சங்கங்கள் பற்றிக் கூறப்படவே இல்லை.

2. முதற் கடற்கோளில் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதி அழிந்துபோக, எஞ்சிய குமரிக்கண்டத்தின் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்ட இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தொல்காப்பியம், இச்சங்கங்கள் பற்றியோ, குமரிக்கண்டம் பற்றியோ, கபாடபுரம் பற்றியோ எதுவுமே கூறவில்லை. தமிழ் நாட்டின் எல்லைகளை, “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்து” என்ற வரிகளுடன் ஆரம்பிக்கும் தொல்காப்பியம், இன்று இருப்பதைப்போல தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமுனையையே குறிப்பிடுகிறது.

3. ‘சங்கம்’ என்பது ஒரு பிராகிருத-சமஸ்கிருத மொழிப்பதம். அது இன்றுவரை நிலைபெற்று நின்றுவிட்டது. தமிழ்மொழி வளர்க்கப் புறப்பட்ட பாண்டிய மன்னனும், தமிழ் அறிஞர்-புலவர்களும் தங்கள் அவைக்கு ஏன் ஒரு சமஸ்கிருத மொழிப்பதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? அழகிய தமிழில் ‘கூடல்’ என்றல்லவா அழைத்திருப்பார்கள்? மதுரையை ‘கூடல்’, ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயர்களாலும் சங்ககால இலக்கியங்கள் அறியத் தருகின்றன.

இறையனார் அகப்பொருள் உரை எழுதப்பட்ட மத்திய காலத்தில் சமஸ்கிருதம் தமிழகத்தின் சில அறிஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. சமஸ்கிருதப் பதங்களை அவர்கள் எழுதும் தமிழ் நூல்களில் தாராளமாக உபயோகிப்பது கௌரவமாகக் கருதப்பட்டது. எனவே, அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலில் நக்கீரனார் ‘சங்கம்’ என்ற பதத்தை உபயோகித்திருப்பதைப் பெரும் தவறாகக் கொள்ள முடியாது. ஆனால், குமரிக்கண்டத்தில் முதற்சங்கம் இருந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஆரியர்கள் இந்திய உபகண்டத்திற்குள் நுழையவே இல்லை. சமஸ்கிருத மொழி அன்று வழக்கில் இல்லை. வழக்கில் இல்லாத ஒரு மொழிப்பதத்தைப் புலவர்களாலோ, பாண்டிய மன்னனாலோ, மற்றெவராலுமோ அக்காலத்தில் உபயோகித்திருக்க முடியாது.

4. தமிழகத்தில் பாண்டிய மன்னர்கள் மதுரையைக் கைப்பற்றி அங்கே தலைநகரை அமைக்க முன்னர், கொற்கையில் தமது தலைநகரை அமைத்திருந்தார்கள். இந்தக் கொற்கை நகரின் கடற்கரைத் துறையை சில சமஸ்கிருத இலக்கியங்கள் ‘பாண்டிய கபாடக’ எனக் குறிப்பிடுகின்றன. சமஸ்கிருதத்தில் ‘பாண்டிய கபாடக’ என்றால் பாண்டியநாட்டின் நுழைவாயில் என்றும் பொருள்படும் (தமிழிலும் இப்பதம் ‘வாயில்’ என்பதைக் குறிக்க உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணம்: ‘இதயக் கபாடம் திறமினோ?’).

வால்மீகி இராமாயணத்தில் (கி.மு. 300–200), கிஷ்கிந்தா காண்டத்தில் தாமிரபரணி நதி பாண்டியர்களின் தலைநகரான கபாடபுரத்தினூடாகச் சென்று கடலை அடைகிறது என்ற செய்யுள்வரி காணப்படுகிறது (Valmiki Ramayana: Kishkinta Khanda: 41:17–19).

அர்த்தசாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் (சாணக்கியர், கி.மு. 350–270) கொற்கைப் பாண்டிய முத்துகளை ‘பாண்டிய கபாடக’ எனக் குறிப்பிடுகிறார் (Arthashastra, Chapter 2:32). இங்கே ‘கபாடக’ என்ற பதம் முத்துகளைக் குறிப்பிட உபயோகிக்கப்பட்டிருக்கிறது. ‘கபாடபுரம்’ என்ற பதத்தை முத்துகள் பெறப்படும் நகரம் என்றும் பொருள் கொள்ளலாம்.

வடமொழி இலக்கியங்கள் குறிப்பிடும் ‘கபாடபுரம்’ கொற்கை நகரமே. இந்த உண்மையை உணராமல் கபாடபுரம் குமரிக்கண்டத்தில் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

5. இறையனார் அகப்பொருள் உரை, முதற்சங்கம் 4440 ஆண்டுகளும், இடைச்சங்கம் 3700 ஆண்டுகளும், கடைச்சங்கம் 1850 ஆண்டுகளும் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் ஆண்டுக் கணக்குகள் இயற்கையாக இல்லை. ஏனெனில், இவை யாவும் 37 இன் 120ஆம், 100ஆம், 50ஆம் இலக்கப் பெருக்கங்கள்:

120 × 37 = 4440
100 × 37 = 3700
50 × 37 = 1850

இவையெல்லாம் இக்கணக்கை வகுத்தவரின் கற்பனையில் உதித்த காலங்களோ என நம்மை ஐயுறவைக்கின்றன.

இறையனார் அகப்பொருளுரை குறிப்பிடும் மொத்த தமிழ்ச்சங்கங்களின் காலம் 9990 ஆண்டுகள். பேச்சு வன்மை வந்த இன்றைய மனித இனம் (Homo Sapiens Sapiens) தோற்றம் பெற்று 300,000 ஆண்டுகள் ஆகின்றன. இதில் மிக நீண்ட காலம் இவர்கள் காடுகளிலும், கடற்கரைகளிலும் சிறு சிறு குழுக்களாக வேட்டையாடியும், உணவு சேகரித்தும் (Hunter-Gatherers) நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பிற்கு விவசாயம் அறிமுகமான பின்னரே அவர்கள் காடுகளை விட்டு வெளியே வந்து, ஆற்றங்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் வேளாண்மையை (Agriculture) மேற்கொண்டார்கள். அதன் பின்னரே ஊர்களும், சமூகங்களும், நகரங்களும், நாடுகளும் உருவாயின. அவர்கள் வெவ்வேறு குழுக்களாக, காடுகளில் வேட்டையாடி வந்த காலங்களில் பேசிய பேச்சுவழக்குகள் (Dialects) ஒன்றோடொன்று கலந்து ஒரு பொதுவான மொழி (Common Unified Language) உருவாக பல நூற்றாண்டுகள் பிடித்தது.

இன்றைய அறிவியல் ரீதியான காலக்கணிப்புகளின்படி (Radiometric Dating) வேளாண்மை தமிழகத்திற்கு இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே (இ.மு. 5,000) அறிமுகமாயிற்று. அதன் பின்னரே ஊர்கள் தோன்றின. அங்கே வாழ்ந்த மக்கள் பேசிய பேச்சு வழக்குகள் இணைந்து, பின்னர் தமிழ் ‘மொழி-வடிவம்’ பெற்றது. அதற்குரிய எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே தமிழ்மொழி தரப்படுத்தப்பட்டு (Standardization) பலராலும் எழுதி, வாசிக்கக்கூடிய மொழியாயிற்று.

இன்றுவரை இ.மு. 2,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்மொழி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, 9990 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் காடுகளில், வெவ்வேறு குழுக்களாக, வெவ்வேறு பேச்சு வழக்குகளுடன், வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்த மக்கள் மத்தியில் தமிழ் ஒரு பொது மொழியாக உருவாகியிருக்க முடியாது. ஆனால், அக்காலகட்டத்தில் திராவிட முன்னோடிப் பேச்சு வழக்குகள் (Archaic Proto-Dravidian Dialects) வழக்கில் இருந்தன என்பது உண்மை. இவற்றை இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்.

லெமூரியாக் கண்டம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு சார்ள்ஸ் டார்வினின் படிநிலை வளர்ச்சிக் கொள்கை (Theory of Evolution). இந்தக் கோட்பாடு வெளியானதும் விலங்கியல் துறை புத்துணர்ச்சி பெற்றது. பல ஆய்வாளர்கள் இத்துறையில் ஆர்வம் காட்டினார்கள். பிரித்தானிய விலங்கியல் ஆய்வாளரான பிலிப் ஸ்கிளேட்டர் (Philip Sclater) ஒரு விநோதமான உறவைக் கண்டுபிடித்தார். தொல்காலத்தில் ஆபிரிக்காவிற்கு அருகாமையிலுள்ள மடகஸ்கார் தீவில் வாழ்ந்து அழிந்துபோன லெமூர் (Lemur) வகையைச் சேர்ந்த ஒருவகை ஆதி விலங்கின் படிமங்கள் (Fossils) மடகஸ்கார் தீவிலும், தமிழ்நாட்டின் உதகை மலைச்சாரலிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அச்சமயம் இவை ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்படவில்லை (பின்னாட்களில் இவை ஆபிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டன).

இதைப்பற்றி 1864ஆம் ஆண்டில் ‘மடகஸ்காரின் பாலூட்டிகள்’ (The Mammals of Madagascar) என்ற தலைப்பில் ‘The Quarterly Journal of Science’ என்ற அறிவியல் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதிய ஸ்கிளேட்டர், மடகஸ்கார் தீவுக்கு 100 மைல் தொலைவில் உள்ள ஆபிரிக்காவில் காணப்படாத இந்த லெமூர்களின் எச்சங்கள் தென்னிந்திய மலைகளில் காணப்படுவதற்கான காரணம், முன்னொரு காலத்தில் மடகஸ்காரும் இந்தியாவும் இணைக்கப்பட்டிருந்தமையே ஆகும் எனக் கருதினார். இந்த இரு நாடுகளையும் இணைத்திருந்ததாக அவர் கற்பனை செய்த நிலத்திற்கு அந்த லெமூர் விலங்கின் பெயரால் ‘லெமூரியா’ என்ற பெயரையும் கொடுத்தார் (Sclater, Philip, 1864: pp. 215–219).

(ஸ்கிளேட்டர் 1864இல் இந்தக் கருத்தியலை முன்வைத்த காலத்தில், இந்தியாவும் மடகஸ்காரும் ஒரு காலப்பகுதியில் ஒன்றாக இணைந்திருந்ததை அறிந்திருக்கவில்லை. அந்தப் புவியியல் கண்டுபிடிப்பும், கோட்பாடும் 1915ஆம் ஆண்டில்தான் முன்வைக்கப்பட்டது.)

இதைத் தொடர்ந்து 1896ஆம், 1904ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயரான வில்லியம் ஸ்காட் எலியட் (William Scott-Elliot) எழுதிய இரு நூல்களை இணைத்து 1925ஆம் ஆண்டில் ‘அட்லாண்டிஸினதும் இழந்த லெமூரியாவினதும் கதை’ (The Story of Atlantis and the Lost Lemuria) என்ற நூல் வெளியிடப்பட்டது. ஸ்காட் எலியட் ஒரு விஞ்ஞானியோ, புவியியல் ஆய்வாளரோ, தொல்லியல் ஆய்வாளரோ அல்ல. அவர் ஒரு பிரம்மஞானி (Theosophist). அவரது நூல் இலண்டனிலும், அடையாறு தியோசொபிக்கல் சொசைட்டியால் சென்னையிலும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்களிடையே இந்நூல் பிரபலமடைந்தது.

இந்த நூலில் அவர் மனித இனத்தின் ஐந்து மில்லியன் ஆண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்திருந்தார். அவர் இந்த வரலாற்றை ஆய்வுகள் மூலம் பெறவில்லை; தனது உள்ளுணர்வுகள் மூலமாகப் பெற்றதாகக் கூறியிருந்தார். அவர், மனித இனம் தோற்றம் பெற்றது இந்த லெமூரியாவில்தான் என்ற கருத்தை முன்வைத்தார். இந்த மனிதர்கள் 4–5 மீட்டர் உயரமானவர்கள். இவர்களுக்கு மூன்றாவதாக ஒரு கண் தலையின் பின்பக்கத்தில் இருந்தது என்றும், இவர்களால் ஒரே சமயத்தில் முன்னாலும் பின்னாலும் பார்க்க முடியும் என்றும், அவர்களது கால்களின் அமைப்பினால் முன்னால் எவ்வளவு சுலபமாக நடக்க முடியுமோ, அவ்வளவு சுலபமாகப் பின்பக்கமாகவும் நடக்க முடியும் என்றும், விலங்கியல் பரிணாமத்திற்கு ஒவ்வாத அபத்தமான கருத்துகளைக் கூறியிருந்தார்.

“A curious fact to note is that when the race first attained the power of standing and moving in an upright position, they could walk backwards with almost as great ease as forwards. This may be accounted for not only by the capacity for vision possessed by the third eye, but doubtless also by the curious projection at the heels which will presently be referred to.”

— Scott-Elliot, W. (1925), The Story of Atlantis and the Lost Lemuria, “The Lost Lemuria” section, p. 23.

‘லெமூரியா’ என்ற கற்பனைக் கண்டத்தின் பெயருக்குக் காரணமான லெமூர் விலங்கு. இந்தச் சிறு விலங்கு தமிழர்களின் வரலாற்றை எத்தனை பெரும்பாடு படுத்தியிருக்கிறது!

லெமூரியா ஆதரவாளர்கள் இந்த அபத்தங்கள் எதையும் குறிப்பிடாது, ‘ஸ்காட் எலியட்’ என்ற ஆங்கில ஆய்வாளரது கருத்துப்படி, இந்தியாவுக்குத் தெற்கில் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்ததாக எழுதினார்கள். இந்த எழுத்துகள் அறிவியல் பதங்களைப் பயன்படுத்திய ஆய்வுக் கட்டுரைகள் போன்று தோற்றமளிக்கும். ஆனால், அறிவியல் ஆதாரமற்ற கருதுகோள்களை உருவாக்கும் மரபு இவ்வாறுதான் தோன்றியது எனலாம் (ஜெயகரன், சு.கி. 2002: 45–46).

1880களில் லெமூரியா பற்றி ஐரோப்பாவில் உருவான மரபு, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. அவ்வாறு புகுந்தபோது அப்போதிருந்த சிலர் இக்கருதுகோளை திராவிடர்களின் தாயகம் பற்றி விளக்கப் பயன்படுத்தினர். ஆரியர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள். ஆனால், அதற்கு முன்னரே திராவிடர்கள் தெற்கிலிருந்த லெமூரியாக் கண்டத்திலிருந்து புலம்பெயர்ந்து வடக்கே வந்து குடியேறினர் என விளக்கம் தரப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்த சில வரலாற்றாசிரியர்களும், இலக்கியவாதிகளும், கட்டுரையாளர்களும் இந்த மரபையே அறிவியல் ஆதாரம் கொண்ட கொள்கைபோலப் பாவித்தனர். லெமூரியாதான் ஆதிமனித இனத்தின் தாயகம், நாகரிகத்தின் தொட்டில் எனவும், ஆதி மனித இனம் பேசிய முதல் மொழி தமிழே எனவும் கூற முற்பட்டனர். அன்று தழைத்திருந்த அவர்களது நாகரிகம் பின்னர் ஏற்பட்ட பிரளயங்களால் அழிந்துபட்டது என்றனர். இந்த மரபுக்கு ஓர் அறிவியல் படிநிலை (Academic Status) கொடுக்கவும் முயன்றனர். ஆதி மனித இனம் தோன்றிய பகுதிகளைப் பிரளயம் அழித்துவிட, தமிழ் மொழி பேசிய இந்த இனம் வடக்கில் குடியேறி சிந்து–கங்கைச் சமவெளி நாகரிகம் மட்டுமின்றி, மொசப்பத்தேமியா, எகிப்து, சீனா, தென் அமெரிக்கா ஆகியவற்றிலும் நாகரிகத்தை உருவாக்கியது, பரப்பியது என்ற கருத்துகளும் இந்த மரபின் வளர்ச்சியில் உருவாக்கப்பட்டன (ஜெயகரன், சு.கி. 2002: 46).

1920களில் தமிழகத்தில் தமிழ் உணர்வு தலைதூக்க ஆரம்பித்தது. தமிழ் ஆர்வலர்களும், இலக்கியக் கல்விமான்களும், வரலாற்று அறிஞர்களும் லெமூரியாதான் கடல்கொண்ட குமரிக்கண்டம் என்ற கருத்தை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டார்கள். தேவநேயப் பாவாணர் இக்கருத்தை ஏற்று, இந்தக் குமரிக்கண்டத்தில்தான் தமிழ் மொழி தோன்றியது என தனது தமிழர் வரலாறு என்ற நூலில் கூறினார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு என்ற நூலை எழுதினார். வடக்கே இந்தியாவையும், மேற்கே மடகஸ்காரையும், கிழக்கே ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் முக்கோண வடிவிலான லெமூரியா அல்லது குமரிக்கண்ட நிலப்படங்கள் வெளியிடப்பட்டன.

சிறுவர்களுக்காக எழுதப்பட்டு வெளிவந்த ‘நமது நாடு’ என்ற வரலாற்று நூலில் லெமூரியா பற்றிய இந்தக் குறிப்பு காணப்படுகிறது:

“இந்தியாவின் வரைபடத்தைப் பார்க்கவும். இந்நாட்டின் தென்முனைக்குப் பெயர் கன்யாகுமரி. இதற்குத் தெற்கே பரந்த கடல் உள்ளது. இக்கடலின் பெயர் இந்துமகாக் கடல். நமது பூமி எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் அது பல மாற்றங்களை அடைந்துள்ளது. இப்போது இந்துமகாக் கடல் இருந்த பகுதியில் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இதற்கு நாவலந்தீவு என்று பெயர். இந்நிலப்பரப்பை ஐரோப்பியர்கள் லெமூரியா என்றனர். கொண்டவானா என்பது அதற்குக் கொடுக்கப்பட்ட மற்றொரு பெயர். அதன் நடுவில் இருந்த மேரு மலையின் சிகரமே இலங்கைத் தீவு. இன்று எப்படி ஆசியக் கண்டம் உள்ளதோ, அதுபோலவே நாவலந்தீவு அல்லது லெமூரியா வடக்கில் (தெற்கில்?) வியாபித்திருந்தது. நாவலந்தீவில் பல எரிமலைகள் இருந்தன. இந்த எரிமலைகளின் வெடிப்பால் பல பகுதிகள் அழிந்துபட்டன. அப்போது கன்யாகுமரியை அடுத்து ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இங்கு வாழ்ந்தவர்கள் கன்னி அல்லது குமரித் தெய்வத்தை வழிபட்டதால் இப்பகுதி குமரிநாடு என அழைக்கப்பட்டது” (கந்தையா பிள்ளை, ந.சி. 1945: பக். 2–3).

1981ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் ஆய்வியல் மாநாட்டில் ‘இழந்துவிட்ட குமரிக் கண்டம்’ (Kumari Kandam – The Lost Continent) என்ற தலைப்பிட்ட கட்டுரையை வாசித்த டாக்டர் மு. மகாலிங்கம், கி.மு. 16000, 14058, 9565 ஆகிய ஆண்டுகளில் இக்கடற்பெருக்குகள் (சுனாமி) ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். ஒரு கடற்பெருக்கு எப்படி ஒரு பிரம்மாண்டமான கண்டத்தை மூழ்கடிக்கும் என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தை அவர் தரவில்லை. எந்த விஞ்ஞானி இந்த ஆய்வைச் செய்தார் என்பதையோ, எவ்வாறு இந்த ஆண்டுக் கணக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்பதையோ அவர் குறிப்பிடவில்லை.

வடக்கே இந்தியாவையும், மேற்கே மடகஸ்காரையும், கிழக்கே அவுஸ்திரேலியாவையும் இணைக்கும் முக்கோண வடிவிலான, தமிழறிஞர்கள் கற்பனையில் உருவான, லெமூரிய – தமிழக நிலப்பரப்பு.  

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்