மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

மலையகத்தில் மாடன் வழிபாட்டுச் சடங்குகளும், மாடன் திருவிழாவும் 

May 7, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

வழிபாடுகள் ஒவ்வொரு சமூகக் குழுக்களுக்குமான அடையாளங்களாகவும், அவற்றின் பண்பாட்டின் மிக முக்கிய கூறுகளாகவும் காணப்படுகின்றன. இவ்வாறான வழிபாடுகள் காலம் காலமாக அச்சமூகத்தின் வாழ்வியலோடு நீண்டு நிலைபெற்று வாழுவனவாகவும் உள்ளன. இவற்றின் நீட்சி என்பது இலகுவானதல்ல; அது அச்சமூகம் கட்டமைத்துக் கொண்டுள்ள பொறிமுறையின் விளைவாகும். இவை வெறுமனே வழிபாடுகளாக மட்டும் அமையாமல், அவ்வழிபாடுகளை ஆற்றுகைகளோடு இணைத்து நிகழ்த்தும் முறையாகவும் பல்வேறு இனக்குழுக்களிடையே உள்ளன.

அந்த வகையில், மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் அநேகமான கிராமிய வழிபாடுகள் ஆற்றுகைகளுடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான மாரியம்மன் ஆலயங்களின் திருவிழாக்களில் உடுக்கடிப்பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். அத்தோடு, அண்ணன்மார் கோவில்களில் பொன்னர்-சங்கர் கூத்துகள், மேலும் பொதுவாக ஆலய வழிபாடுகளோடு பின்னிப்பிணைந்தவையான காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு, லவகுசா நாடகம், காட்டேரியம்மன் திருவிழா, கும்மி, கரகம் என்பனவும் இங்கு இடம்பெறுகின்றன.

மலையகத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கிராமிய வழிபாட்டு தெய்வங்களில் மாடன் மிக முக்கியமானவர். இந்தியாவின் தமிழகத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் மாடன் வழிபாடுகள் இன்றளவும் பிரசித்திபெற்றுக் காணப்படுகின்றன; அதன் தொடர்ச்சியே மலையகத்திலும் காணப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் மாடன் வரலாறு மற்றும் வழிபாடுகள் பற்றி அறிந்துகொள்வது அவசியமானதாகும்.

தமிழகத்தின் வழிபாடுகள் ஆகம வழிபாட்டிற்கும், மண்ணின் மணத்தோடும் மக்களின் வாழ்வியலோடும் பின்னிப்பிணைந்த நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாட்டு முறைகளுக்கும் இடையிலான ஒரு செழுமையான ஊடாட்டமாக உள்ளன. இந்த நாட்டுப்புறத் தெய்வங்களுள் மிக முக்கியமானவராகவும், குறிப்பாக தென் தமிழகத்தின் காவல் தெய்வமாகவும் விளங்குபவர் சுடலை மாடன் ஆவார். மாடன் வழிபாடு என்பது வெறும் மதச் சடங்கு மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் வரலாறு, தியாகம், ஒடுக்குமுறைக்கு எதிரான குரல், பயம் மற்றும் பாதுகாப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத் திகழ்கிறது.

சுடலை மாடன் வழிபாடானது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிகத் தீவிரமாகப் பரவியுள்ளதுடன், அண்டை மாநிலமான கேரளாவின் தென்பகுதிகளிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

சுடலை மாடனின் தோற்றம் குறித்த வாய்மொழிக் கதைகளும் புராணக் கதைகளும் அவரைச் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வராகச் சித்திரிக்கின்றன. இருப்பினும், இந்தக் கதைகளுக்குப் பின்னால் ஓர் ஆழமான தத்துவார்த்தப் பின்னணியும், கிராமிய வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியும் மறைந்துள்ளன. நாட்டுப்புற மரபின்படி, பார்வதி தேவி ஒரு குழந்தையை வேண்டிச் சிவபெருமானிடம் தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைலாயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பார்வதி தவம் இருந்தபோது, சிவபெருமான் தனது தலையிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி எரியச் செய்தார். அந்த நெருப்புச் சுடர் பார்வதியின் முந்தானையில் பரவி, அதிலிருந்து ஒரு குழந்தை உருவானது. நெருப்பிலிருந்து, அதாவது சுடரிலிருந்து பிறந்ததாலும், சுடுகாட்டை (சுடலை) தனது இருப்பிடமாகக் கொண்டதாலும் அவர் சுடலை மாடன் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் அந்தக் குழந்தைக்கு அமிர்தத்தை ஊட்டச் சொன்னார். ஆனால், அமிர்தத்தால் தனது பசியைத் தீர்த்துக்கொள்ள முடியாத குழந்தை திட உணவை விரும்பியது. ஒருநாள் நள்ளிரவில் கைலாயத்தில் உள்ள சுடுகாட்டிற்குச் சென்ற குழந்தை, அங்கு எரிந்துகொண்டிருந்த பிணங்களைத் தின்னத் தொடங்கியது. இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த தேவர்களும், பார்வதியும் குழந்தையைக் கண்டு அஞ்சினர். சிவபெருமான் அந்தக் குழந்தையின் பசியையும் ஆவேசத்தையும் கண்டு, அவனைப் பூமிக்குச் சென்று மனிதர்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரு “காவல் தெய்வமாக” நியமித்தார். இந்தப் புராணக் கதை, ஓர் ஆதி தெய்வத்தைச் சைவ சமயச் சங்கிலிக்குள் இணைக்கும் (Syncretism) முயற்சியாக இருப்பதனை காணலாம்.

சுடலை மாடனின் பிறப்புக் குறித்த மற்றொரு பதிவு, அவரை சிவபெருமானின் யாகத்திலிருந்து உருவான இருபதுக்கும் மேற்பட்ட மாடன்களுள் ஒருவராகக் குறிப்பிடுகிறது. இவ்வாறு பல்வேறு கதைகள் இருந்தாலும், சுடலை மாடன் தீமையைத் தடுக்கும், நீதியை நிலைநாட்டும் மற்றும் ஆன்மிக உலகிற்கும் லௌகீக உலகிற்கும் இடையே சமநிலையைப் பேணும் ஒரு வலிமைமிக்க சக்தியாகவே மக்களால் வழிபடப்படுகிறார். “சுடலை மாடன்” என்ற பெயரிலுள்ள இரண்டு சொற்களுமே ஆழமான பொருள்களைக் கொண்டவை. “சுடலை” என்பது சுடுகாட்டைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். “சுடு” என்பது எரித்தல் என்ற வினையடியிலிருந்து பிறந்தது. சுடுகாடு என்பது மரணத்திற்குப் பிந்தைய இடமாகவும், பேய்கள் மற்றும் எதிர்மறை சக்திகள் உலவும் இடமாகவும் நம்பப்படுகிறது. அந்த இடத்தின் தலைவனாக இருந்து, அங்கிருந்து ஊருக்குள் நுழைய முனையும் தீய சக்திகளைத் தடுப்பவர் என்பதால் அவர் “சுடலை” என்று அழைக்கப்படுகிறார். “மாடன்” என்ற சொல்லுக்குப் பாதுகாப்பவர் அல்லது காப்பவர் என்று பொருள் கொள்ளலாம். சில ஆய்வாளர்கள் “மாடு” (செல்வம் அல்லது ஆநிரை) என்பதிலிருந்தும் இச்சொல் பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் ஆநிரைகளைக் காப்பதற்காக உயிர் நீத்த வீரர்கள் “மாடன்” என்று அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. மேலும், மாடன் என்பது சுடுகாட்டில் உறைவதால் ஏற்பட்ட ஒரு வடிவம் என்றும், அவனது உருவமைப்பு மற்றும் குணாதிசயங்கள் பண்டைய கிராமிய வழிபாட்டு மரபின் தொடர்ச்சி என்றும் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மாடன் வழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் மட்டும் அடங்கிவிடாமல், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப பல்வேறு கிளைகளாகப் பிரிந்துள்ளது. ஒவ்வொரு மாடன் பெயருக்குப் பின்னாலும் ஒரு தியாகத்தின் வரலாறு அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பாதுகாப்புத் தேவை ஒளிந்துள்ளது. பல மாடன் வடிவங்கள் மனிதர்களாகப் பிறந்து, சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடி அல்லது காதலுக்காக உயிர்த் தியாகம் செய்து, பின்னாளில் தெய்வங்களாக மாறியவையாகக் கருதப்படுகின்றன.

உதாரணமாக, வண்ணார மாடனின் கதையை நோக்கும் போது, ஒரு அரசனின் மகளுக்கும் முண்டுசாமி என்ற இளைஞனுக்கும் இடையிலான காதலை மையமாகக் கொண்டதாக அவரது கதை அமைந்துள்ளது. சாதியக் கட்டுப்பாடுகளால் முண்டுசாமி கொல்லப்பட, அவர் பின்னாளில் வண்ணார மாடனாக வழிபடத் தொடங்கப்பட்டார். நொண்டி மாடன் வழிபாடு, நெல்லை மாவட்டம் கரிச்சொல்ல மங்கலம் பகுதியில் காணப்படுகிறது. ஓர் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்ததற்காக ஒன்பது கிராமங்களால் துரத்திக் கொல்லப்பட்ட ஒரு நெசவாளர் பின்னாளில் தெய்வமாக்கப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முன்பு தாக்கப்பட்டதில் கால் ஊனமுற்றதால் “நொண்டி மாடன்” என்று அழைக்கப்படுகிறார். தளவாய் மாடன், ஆநிரைகளை (மாடுகளை) எதிரிகளிடமிருந்து காக்கும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தெய்வ வடிவமாக வணங்கப்படுகிறார். புலமாடன் வனப்பகுதிகளைக் காப்பவராகவும், புலமாடி என்ற தனது சகோதரியுடன் இணைந்து வழிபடப்படுபவராகவும் திகழ்கிறார்.

அது மட்டுமல்லாது, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் வீற்றிருக்கும் சுடலை மாடன் “ஐகோர்ட் மகாராஜா” என்று அழைக்கப்படுவது வியப்பிற்குரிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். சுமார் 2000–3000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், ஒரு கொலை வழக்கிற்குச் சாட்சி சொல்ல முடியாமல் தடுக்கப்பட்ட ஒரு சிறுவனுக்குப் பதிலாக மாடனே நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சி சொன்னதாக நம்பப்படுகிறது. சட்டமும் நீதிமன்றமும் எளிய மக்களுக்கு எட்டாத நிலையில், அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் ஓர் உயர் நீதிமன்றமாகவே மக்கள் இத்தெய்வத்தைக் கருதுகின்றனர்.

கிராமிய வழிபாட்டு மரபில் “இருபத்தியொன்று மாடன்கள்” என்ற வகைப்பாடு உள்ளது. இவை மாடனின் வெவ்வேறு ஆற்றல்களையும் குணங்களையும் குறிக்கின்றன. கருப்பசாமி வழிபாட்டிலும் இத்தகைய இருபத்தியொன்று வடிவங்கள் இருந்தாலும், மாடன் வழிபாட்டில் சுடலை மாடனே தலைமைப் பீடத்தில் இருக்கிறார்.

மாடன் வழிபாடு என்பது மிகுந்த ஆவேசமும் தீவிரமும் கொண்ட சடங்குகளை உள்ளடக்கியது. இது வைதீகச் சடங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மண்ணின் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நேரடியாகப் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை நடைபெறும் “கொடை விழா”, சுடலை மாடன் வழிபாட்டின் உச்சக்கட்டமாகும். இது ஒரு சமூக நிகழ்வாகவும், குடும்பங்களின் ஒன்றுகூடலாகவும் திகழ்கிறது. கொடை விழா பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும். இதன்போது ஊரே பந்தல் அமைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். சுடலை மாடனுக்கு உகந்த நேரம் நள்ளிரவாகும். அர்த்த ஜாம பூஜை அல்லது நள்ளிரவு வழிபாட்டில் ஊன் கலந்த சோறு (அசைவ உணவு) படைக்கப்படும். கொடை விழாவின் ஒரு பகுதியாக, சாமியாடி எனப்படும் பூசாரி, மாடனின் அருள் வந்து மயானத்திற்குச் செல்வார். இதனை “சுடலை வேட்டை” அல்லது “மயான வேட்டை” என்பார்கள். தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு, தப்பட்டை மேள முழக்கங்களுடன் மயானத்திற்குச் சென்று, அங்கிருக்கும் தீய ஆவிகளை வேட்டையாடி ஊரைக் காப்பதாகச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

மாடன் வழிபாட்டில் இரத்தப் பலி என்பது ஒரு முக்கிய அங்கமாகும். ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவை பலியிடப்படுகின்றன. “உதிரம் சாப்பிடுதல்” என்ற சடங்கில், பலியிடப்படும் ஆட்டின் கழுத்திலிருந்து நேரடியாக இரத்தத்தைக் குடிக்கும் வழக்கம் சில இடங்களில் உள்ளது. இது தெய்வத்தின் ஆவேசத்தையும் பசியையும் தணிப்பதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சி சமைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது ஒரு சமூக விருந்தாகவும், பாகுபாடற்ற பிணைப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அமைகிறது.

மேலும், சாமியாடுபவர் மீது தெய்வம் இறங்குவதாக நம்பப்படும் போது, அவர் ஒரு மாற்று உணர்வு நிலைக்கு (Trance) செல்கிறார். அந்த நிலையில் அவர் ஆடும் ஆட்டம் “சாமியாட்டம்” எனப்படுகிறது. அப்போது மக்கள் அவரிடம் தங்களது குறைகளைச் சொல்லியும், நோய்களைத் தீர்க்க வேண்டியும் முறையிடுவர். சாமியாடி கூறும் அருள்வாக்குகள் இறைவனின் வாக்காகவே கருதப்படுகின்றன. குடும்பப் பிரச்சினைகள், சொத்துத் தகராறுகள் முதல் கிராமத்தின் பொதுவான பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் இந்த அருள்வாக்குகள் மூலம் தீர்வு தேடப்படுகிறது.

மாடன் வழிபாடு என்பது கலைகளால் வழிபடப்படும் ஒரு பண்பாடாகும். இசைக்கருவிகளின் முழக்கமும், கதைப் பாடல்களும் இன்றி மாடன் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. தமிழகத்தில் கணியான் கூத்து மிகப் பிரபல்யமானது. “மகுடச்சத்தம் கேட்டாலொழிய மாடன் பூசை கொள்வானோ” என்ற பழமொழி, மாடன் வழிபாட்டிற்கும் கணியான் கூத்திற்கும் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை உணர்த்துகிறது. இது தென் தமிழகத்தின் கிராமப்புறக் கோவில் கொடைகளில் மட்டுமே நிகழ்த்தப்படும் ஒரு சடங்குக் கலையாகும்.

ஒரு குழுவில் தலைமைப் பாடகர், இரண்டு மகுடம் வாசிப்போர், பெண் வேடமிட்ட இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பின்பாட்டுக்காரர் என ஆறு பேர் இருப்பார்கள். மகுடம் என்பது வேப்ப மரத்தால் செய்யப்பட்டு, கன்றுக்குட்டியின் தோலால் கட்டப்பட்ட இசைக்கருவியாகும்; இதுவே இக்கலையின் ஆன்மாவாகும். கணியான் கூத்தின் ஒரு பகுதியில், “கைவெட்டு” அல்லது “நாக்குவெட்டு” என்ற சடங்குகள் மூலம் கணியான் தனது இரத்தத்தையே பலியாகத் தருவார். இது மாடனுக்கு மிகவும் உகந்த சடங்காகக் கருதப்படுகிறது.

மேலும், வில்லுப்பாட்டு என்பது ஒரு வில்லையே இசைக்கருவியாகக் கொண்டு கதை சொல்லும் கலை வடிவமாகும். மாடனின் வீரதீரச் செயல்களையும், அவரது பிறப்புப் பின்னணியையும் மக்களுக்குக் கொண்டு செல்வதில் வில்லுப்பாட்டு பெரும்பங்கு வகிக்கிறது. “ஆறுமுகமங்கலம் ஐகோர்ட் மகாராஜா கதை”, “பிணமாலை சூடும் பெருமாள் கதை” போன்றவை வில்லுப்பாட்டில் மிகவும் புகழ்பெற்றவை.

தமிழகத்தைத் தாண்டி, சிங்கப்பூர், மலேசியா, ரீயூனியன் மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள தமிழர்களிடையே மாடன் வழிபாடு இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. பிஜி மற்றும் மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழர்கள் குடியேறியபோது, அவர்கள் தங்களது காவல் தெய்வமான மாடனையும் அங்கே கொண்டு சென்றனர். இதனுடைய தொடர்ச்சியையே மலையகத்தில் குடியேறிய மக்களிடமும் காண முடிகின்றது.

மலையகத்திலும் ஆகம வழிபாடு, கிராமிய வழிபாடு என்கின்ற பிரிவுகள் சில இடங்களில் தற்போது காணப்படுகின்ற போதும், கிராமிய வழிபாடே பிரதானமானதாகக் காணப்படுகின்றது. இக்கிராமிய தெய்வ வழிபாடே நாட்டார் தெய்வ வழிபாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது. ஆகம முறைப்படி அமையாத கோவில்கள் கிராமிய தெய்வங்களுக்கு உரியவையாகும். உதாரணமாக மாடன், கருப்பசாமி, முனி, ரோத முனி, மதுரைவீரன், நொண்டிச்சி, அப்புச்சி, செண்டாக்கட்டி, வண்ணாத்திகோட்டை, மாரி, கமலக்கன்னி, நாகக்கன்னி, பெரியகாண்டியம்மன், பொன்னர் சங்கர் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடலாம். இதில் முத்துமாரியம்மன் ஆலயங்கள் அதிகமாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வணிகத்தில் ஈடுபடும் நகரங்களில் வாழ்வோர் பிள்ளையார் கோவில்களை ஆகம முறைப்படி அமைத்து வழிபடுவதையும் காண முடிகின்றது.

எவ்வாறாயினும், சிறுதெய்வ வழிபாடே மலையக மக்களின் மூச்சோடு கலந்துபோன ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனோடு குலதெய்வ வழிபாடுகளையும் சொந்தங்கள் சேர்ந்து கொண்டாடும் மரபும் உண்டு. அந்தக் குலதெய்வத்தின் பெயரை குடும்பத்தின் தலைவர் அல்லது வயதானவர்கள் மாத்திரமே அறிந்திருப்பர். ஏனையோருக்குச் சொன்னால் தம் குலத்திற்கு ஆபத்து வரும் எனக் கருதி சொல்லாமல் விடுகின்றனர் என்பது மக்களிடையே காணப்படும் பொதுவான கருத்தாகும். அதேவேளை, சாதிக்கு ஒரு தெய்வம் இருக்கிறது என்பதாலும், சாதியை வெளிப்படுத்த விரும்பாதவர்கள் குலதெய்வத்தின் பெயரையும் சொல்லத் தயங்குகின்றனர் என்பதும் அவதானிக்கப்படும் பொது நிலைப்பாடாகும்.

கிராமிய தெய்வங்களுக்கான கோவில்கள் பெரிதாக அமைக்கப்பட்டிருக்காது; சிலைகள் அமைக்கப்பட்டிருக்க மாட்டாது. மாறாக, பெரிய மரத்தின் அடியில் முக்கோண வடிவில் அமைந்த கற்களை வைத்து அதனை வழிபடும் மரபே இன்றளவிலும் காணப்படுகின்றது. ஆய்விற்காக ஆய்வாளர் சென்ற தவசிமலை எனும் ஊரில், இவ்வாறான ஒரு மரத்தடியில் பெரியகாண்டியம்மன் கோவில் முக்கோண வடிவில் அமைந்த சிறிய சிலையுடன் அவர்களது வழக்கத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆலயங்களில் பலிகொடுத்தல், அருளாடிக் கட்டுச்சொல்லுதல் — இது மலையகத்தில் “சாமி கேள்வி சொல்லுதல்” என்று சொல்லப்படும் — கத்தி மீது நின்று கேள்வி சொல்லுதல் போன்ற முறைகளும் காணப்படுகின்றன.

சமகாலத்தில் ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் இன்னும் உயிர்ப்புள்ள அம்சமாக இருந்து வருகின்றன. நம்பிக்கையோடு வணங்கப்படும் கிராமிய தெய்வங்களும், சடங்குகளினூடான வழிபாடுகளும் இன்றளவும் இடம்பெற்று வருவது குறிப்பிட வேண்டிய அம்சமாகும். இவ்வாறான மலையக நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு முறைகளில் இசையும், பாடலும், ஆடலும் இணைந்தே காணப்படுவதும் சிறப்பம்சமாகும். இவ்வாறு கலையம்சம் பொருந்திய வழிபாட்டு முறைகளை மலையக மக்கள் தம்மகத்தே கொண்டு, தம் வாழ்வியலோடு அவ்வழிபாட்டு முறைகளை இணைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.

இவ்வாறான வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் பாடல்களும், அதற்குப் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளும் ஏனைய சமூக அமைப்புகளை விட வேறுபட்டதாகவும் தனித்துவத்தைக் கொண்டதாகவும் மலையகத்தில் காணப்படுகின்றன. இசையின் தன்மையும் முற்றாக மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. ஒவ்வொரு வழிபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான இசையும், வெவ்வேறு இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் அடிப்படையில் மலையகத்தில் இடம்பெறும் மாடன் திருவிழா மற்றும் வில்லிசை முக்கியமாக நோக்கப்பட வேண்டியதாகும்.

மலையகத்தில் நக்கிள்ஸ் மலைத்தொடருக்கு அருகில், கண்டியில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில், உழுகங்கை என்ற நகரத்தைத் தாண்டி “மெல்கட” எனும் பிரதேசத்தில் நடைபெறும் மிக முக்கியமான வழிபாடாக மாடன் திருவிழா கொள்ளப்படுகின்றது. மலையகத்தில் பல்வேறு இடங்களில் மாடன் வழிபாடுகள் காணப்பட்டாலும், “மெல்கட” பிரதேசத்தில் இடம்பெறும் மாடன் வழிபாடு அதன் வழிபாட்டு முறையிலும் ஆற்றுகையிலும் மரபார்ந்த தன்மையைக் கொண்டுள்ளது. இம்மாடன் திருவிழாவை அடிப்படையாகக் கொண்ட வழிபாடுகளையும், அதில் இடம்பெறும் வில்லிசை ஆற்றுகையையும், அவ்வாற்றுகையானது வழிபாட்டோடு எவ்வாறு இணைந்து ஒரு மாடன் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது என்பதனையும் நோக்குவது, மலையகத்தில் சடங்குகள் நிகழ்த்துகைப் பண்போடு கட்டமைக்கப்பட்ட முறைமையினைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களில் மாடன் வழிபாடுகள் காணப்பட்டாலும், அவை வில்லிசை ஆற்றுகையோடு நிகழ்த்தப்படுவதில்லை. மாறாக, வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை ஆடு, கோழி என்பன பலிகொடுத்து பூசைகள் நடைபெறும். இது மலையகத்தின் பல பிரதேசங்களில் நடைபெறும் வழிபாட்டு முறையாக அமைகின்றது. அவ்வாறு இருக்கும்போது, அந்த ஊரே விழாக்கோலம் பூண்டு காணப்படும். அனைவரும் மாடன் கோவிலுக்குச் சென்று வணங்கி, உண்டு, களித்து, மகிழ்ந்து வருவது வழக்கமாகும்.

பொதுவாக எல்லா மலையகப் பிரதேசங்களிலும் உடுக்கை அடித்து மாடனை உருவேறச் செய்து, அருளாடி, ஆடு மற்றும் கோழிகளை பலியிடச் செய்யும் முறையே காணப்படுகின்றது. இங்கு மாடனை அழைக்கும், அதாவது உருவேறச் செய்யும் மிக முக்கியமான அம்சங்கள் உடுக்கையும் மாடன் பற்றிய பாடல்களுமாகும். அதுவே வழிபாடுகளில் சிறப்பானதாகக் காணப்படுகிறது. பாடல்களைப் பாடும் போது ஏற்படும் உணர்வுநிலை வித்தியாசமானது. அதன் இசை ஒரு துள்ளல் ஓசையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. அதோடு, அப்பாடல்களில் வரும் சொற்கள் மாடன் என்ற ஓர் உருவத்தினை மனதில் பதியச் செய்வதுபோல அமைகின்றன. மேலும், அதற்கு உயிர் கொடுப்பது போல உடுக்கையின் இசை வேறொரு உலகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் காணப்படுகின்றது என மக்கள் கூறுகின்றனர். அதிலிருந்து எழும் ஓசை மனதில் ஏதோ ஓர் உணர்வுநிலை மாற்றத்தையும், உடல் சிலிர்க்கும் வகையிலான உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.

ஆரம்ப காலத்தோடு ஒப்பிட்டு நோக்குகின்ற போது, சமகாலத்தில் பல பிரதேசங்களில் பெரிய ஆகமம் சார்ந்த ஆலயங்கள் தோன்றிவிட்டதால் மாடன் வழிபாடு ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டது. இருப்பினும், சில பிரதேசங்கள் மரபு மாறாமல் மாடன் வழிபாட்டைச் செய்து வருவதும் சிறப்பம்சமாகும்.

இதனடிப்படையில், “மெல்கட” பிரதேசத்தில் நடத்தப்படும் மாடன் திருவிழாவினை நோக்கலாம். இங்கு ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமான முறையில் மாடன் திருவிழா நடத்தப்படுகின்றது. அதில் வில்லிசை மிக முக்கியமானதாகும். வருடத்தில் வைகாசி மாதத்தில் இடம்பெறும் மாடன் திருவிழா, அந்தக் குறிப்பிட்ட சமூகத்தின் பெருவிழாவாகக் கருதப்படுகிறது. திருவிழா என்பது “மாடன்” என்ற தெய்வத்தை வேண்டிச் செய்யப்படும் விழாவாகும். மாடன் தெய்வம் பற்றி பல்வேறு வரலாறுகள் வாய்மொழியாகக் கூறப்படுகின்றன. மாடன் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகன் என்று ஒரு வாய்மொழிக் கதை உண்டு. இவ்வாறு இருக்க, மாடனின் வரலாற்றை கதைப்பாடலாக அமைத்து அங்கு மாடன் திருவிழா வில்லிசை நடத்தப்படுகின்றது.

இங்கு மாடன் ஆலயம் கிராமத்துக்கு மத்தியில் பெரிய ஆலமரத்தின் அடியில், முக்கோண வடிவிலான சிலையுடன் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் திறந்த வெளி போன்று, கூரை ஏதும் வேயப்படாத ஆலயமாக, அதாவது கிராமிய தெய்வ வழிபாட்டிற்கு உரிய வகையில் அது அமைந்திருக்கிறது. திருவிழாவிற்கு முதல்நாள் ஆலயம் சாணம் போட்டு மெழுகி, கோலமிட்டு, தோரணங்களால் அலங்கரிக்கப்படும். வரும் வழிகளில் வாழைமரங்கள் கட்டி மிகவும் அழகாக அலங்கரிக்கப்படும். ஆலயத்திலிருந்து எதிர்ப்புறமாக, அதாவது மாடன் சிலையின் எதிர்ப்புறமாக, மாடன் வில்லிசை நிகழ்விற்குரிய வில் அலங்கரிக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்படும். அந்த வில் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, சிறிய சலங்கைகளும் மணிகளும் தொங்கவிடப்பட்டுக் காணப்படும்.

வில்லிசை ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பிட்ட இடத்தில் வில்லுக்கான பூசை இடம்பெறும். பூசைகள் முடிந்ததன் பின்னர், வில்லிசை நிகழ்த்துபவர், அதாவது அவ்வில்லிசைக்குக் குருவாகத் தலைமை வகிப்பவர், பூசையில் பிரதானமாகக் கவனிக்கப்படுவார். பின்னணி இசைக்கான இசைக்கருவிகள் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்படும். ஆரம்ப காலத்தில் உடுக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும், பிற்பட்ட காலமாற்றத்தில் தேவைக்கு ஏற்ப தாளம், தபேலா, டேலக்கு போன்ற இசைக்கருவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் வில்லிசையில் தலைமை வகிப்பவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில், சமகாலத்தில் வில்லிசையில் பல்வேறு இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விசைக்கருவிகள் வில்லிசைக்கு மேலும் அழகூட்டுவதாக அமைகின்றன.

மாடன் திருவிழாவில் அடுத்து வில்லிசை ஆரம்ப நிகழ்வு நடைபெறுகின்றது. வில்லிசையில் ஒரே வகையான மெட்டில் பாடல்கள் பாடப்படுகின்றன. உடுக்கையின் ஓசையோடு பாடல்கள் மேலெழுந்து வருகின்றன. இது அனைவரின் உணர்விலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

மாடனுக்கு வேடம் தரிப்பவர் மக்களோடு மக்களாக வில்லிசை இடம்பெறும் இடத்தில் அமர்ந்திருப்பார். பின்னர் அவர் இசையால் உணர்வு மாற்றம் பெற்று, உருக்கொண்டு மாடன் வந்து ஆடுவது போல ஆடுவார். சாதாரண உடையில் இருக்கும் அவர் மாடனாக வேடம் தரிக்கின்றார். அவர் மாடனாகவே மாறிவிடுகின்றார். மாடன் ஆலயத்தில் இருக்கும் பல்வேறு மணிகள் தொங்கவிடப்பட்ட தடியை எடுத்து அதனை வைத்து ஆடலைச் செய்கின்றார். அதுவும் இசைக்கு ஏற்ற வகையில் அமைகின்றது.

வில்லிசையானது தொடர்ந்து நடைபெறுகின்றது. மாடனின் வரலாறு புகழ்ப்பாடலாக அமைகின்றது. மாடன் வேடம் தரித்தவர் மாத்திரமல்லாமல், திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களும் வில்லிசையில் மூழ்கியிருக்க, அதில் சிலர் உருக்கொண்டு ஆடுகின்றனர். பாடலின் வேகம் அதிகரிக்க, மாடன் ஆக்ரோஷமான ஆட்டமுடையவராக மாறி, ஆலயத்தின் பக்கத்தில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கோழியைப் பிடித்து கடித்து, அதன் இரத்தத்தைக் குடித்து, அதன் குடலை எடுத்து கழுத்தில் மாலையாக மாட்டிக்கொண்டு ஆடுகின்றார். இதனைப் பார்க்கும் போது அனைவருக்கும் பயத்தோடு சேர்ந்த பக்தி உணர்வு தோன்றுகின்றது.

இவ்வழிபாட்டின் இசை, “மாடன்” என்ற ஒரு தெய்வத்தை, மாடன் வேடம் தாங்கியவரின் உடலில் உருவேற்றுவது போல் அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அப்பாடல்களும் உடுக்கை இசையும் உணர்வுநிலையைக் கட்டிப்போட்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் மற்றுமொரு சிறப்பம்சமாக வெந்நீரில் நீராடல் இடம்பெறுகின்றது. மாடனாகவும் ஏனைய தெய்வங்களாகவும் உருவேறியவர்கள், ஆலயத்தின் முன்றலில் வைக்கப்பட்டிருக்கும் அடுப்பில், பெரிய பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் ஆடிச்சென்று நீராடுவார்கள். பின்னர் அந்த நாள் இரவு ஆடு பலிகொடுத்தல் மற்றும் பூஜைகள் நடைபெறும்.

சுடலை மாடன் வில்லுப்பாட்டு மற்றும் அதனைச் சூழ்ந்த சடங்குகள், மலையகத் தமிழர்களின் ஆழமான நம்பிக்கை, பண்பாட்டு தொடர்ச்சி மற்றும் புராதன வழிபாட்டு மரபுகளின் உயிர்ப்பான வெளிப்பாடாகக் காணப்படுகின்றன. இதில் தெய்வ உருவேற்றம், மடைப்பலி மற்றும் வில்லிசை வழிபாடு போன்ற அம்சங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, மனிதச் சமூகவியல் வரலாறு, சடங்கு மாற்றங்கள் மற்றும் பக்தி சார்ந்த அனுபவங்களின் பல அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், இவ்வகை மரபுகள் கால மாற்றத்திற்கேற்ப மாற்றமடைந்தாலும், சமூகத்தின் அடையாளமாகவும் ஆன்மிக வெளிப்பாடாகவும் தொடர்ந்து நிலைத்து நிற்கின்றன.

மேலும் சில பிரதேசங்களில் பூசைகள் மாத்திரம் நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது. அடிப்படையில் மாடன் பூசை என்று குறிப்பிடும் போது, ஊர் பூசாரி அல்லது தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரே பூசாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் பாரம்பரியமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது தெய்வத்தால் அழைக்கப்பட்டவராகவோ இருப்பார். விழாவின் போது உடுக்கை அடிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்படும் போது, பூசாரியின் உடலில் மாடன் இறங்குவதாக நம்பப்படுகிறது. இந்த நிலையை “சாமியாடுதல்” என்று அழைக்கின்றனர். சாமியாடுபவர் அந்த நிலையில் அனல் கக்கும் கண்களுடன், கையில் அரிவாளை ஏந்தி ஆடுவார். அப்போது அவர் சொல்லும் “வாக்கு” அல்லது “குறி” மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய்களுக்கான தீர்வு, குடும்பப் பிரச்சினைகள் அல்லது தோட்ட நிர்வாகத்துடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு இத்தெய்வத்திடம் தீர்வு வேண்டப்படுகிறது. மேலும், மாடன் ஓர் உக்கிரமான தெய்வம் என்பதால், அவருக்குப் பலியிடுதல் என்பது கட்டாயமான சடங்காகும். ஆடு, கோழி போன்ற விலங்குகள் பலியிடப்படுகின்றன. இந்தப் பலியின் இரத்தம் பூமியில் சிந்தப்படுவது, தெய்வத்தைச் சாந்தப்படுத்துவதாகவும், மண்ணுக்குச் செழிப்பைக் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.

படையலில் அசைவ உணவுகளுடன் கள்ளு அல்லது ‘அதி விஷேச சாராயம்’ வைப்பதும் வழக்கத்தில் உள்ளது. இது இந்து மதத்தின் சைவ உணவுக் கோட்பாட்டிற்கு முரணானது என்றாலும், உழைக்கும் மக்களின் வழிபாட்டில் இதுவே மரபாக உள்ளது. மலையகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட தோட்டச் சூழலில் முறையான மருத்துவ வசதிகள் அருகில் இல்லாத நிலை காணப்பட்டது. இதனால், உடல் மற்றும் மனப் பிணிகளுக்குத் தெய்வமே மருந்தாகக் கருதப்பட்டது. மாடன் வழிபாட்டில் நோய் தீர்த்தல் என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். ஒருவருக்குத் தீய ஆவியின் பிடி ஏற்பட்டாலோ அல்லது செய்வினைப் பாதிப்பு இருந்தாலோ, கழிப்புச் சடங்கு செய்யப்படுகிறது. மாடனின் உருவேறிய பூசாரி, எலுமிச்சை அல்லது முட்டையால் பாதிக்கப்பட்டவரைச் சுற்றியபின், அதனைப் பல திசைகளில் வீசுவார். இது எதிர்மறை சக்திகளை அகற்றும் செயற்பாடாக மாடனை முன்னிறுத்திச் செய்யப்படுகின்றது.

மலையகத்தில் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இருக்கவில்லை; அவை அதிகார மையங்களாகவும் செயற்பட்டன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தோட்டக் கங்காணிமார்களுக்கு தங்களின் இடங்களில் கோயில்களைக் கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு பெரிய கங்காணியும் தனது ஆளுமையைக் காட்டிக்கொள்ளத் திருவிழாக்களைப் பயன்படுத்தினர். கோயிலுக்கான செலவுகளை தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கித் திரட்டினர். திருவிழாவின் போது ஊர்வலங்கள் நடத்தப்பட்டு, கங்காணியின் முக்கியத்துவம் பறைசாற்றப்பட்டது. இது ஒருபுறம் வழிபாட்டை வளர்த்தாலும், மறுபுறம் தொழிலாளர்கள் மீது கங்காணிகளின் பிடியை இறுக்கவும் உதவியது. திருவிழாக்களின் போது படையல் வைத்துச் சாமியை வரவழைக்கும் முறையும் கங்காணிகளின் மேற்பார்வையிலேயே நடைபெற்றது. பின்னர், பல்வேறு சிறிய கோயில்கள் இணைந்து ஒரு பெரிய விழாவை எடுக்கும் வழக்கமும் உருவானது.

சமகாலத்தில் இவ்வாறான அம்சங்கள் முழுமையாக மறைந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று பல கோயில்கள் ஆகம முறைப்படி புனரமைக்கப்படுகின்றன. மண் பீடங்கள் மறைந்து, கிரானைட் சிலைகள் இடம்பெறுகின்றன. பூசாரிகளுக்குப் பதிலாகப் பிராமண அர்ச்சகர்களைக் கொண்டு பூசை செய்யும் முறை சில இடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. விலங்குப் பலிகளுக்கு எதிரான சட்டங்களும் சமூக விழிப்புணர்வும் பல இடங்களில் அசைவப் படையல்களைக் குறைத்துவிட்டன. இது வழிபாட்டைத் தூய்மைப்படுத்துவதாகக் கருதப்பட்டாலும், மக்களின் வாழ்வியல் சார்ந்த வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது.

இலங்கை மலையகத்தில் மாடன் வழிபாடு என்பது வெறும் மதச் சடங்கல்ல; அது ஓர் இனத்தின் இருப்புக்கான சாட்சியமாகும். காடுகளுக்கு நடுவே தனித்து விடப்பட்ட ஒரு சமூகம், தனது பயங்களைப் போக்கவும், பிணிகளைத் தீர்க்கவும், தங்களுக்குள்ளே இருந்த வழிவந்த பாதுகாப்புக் கடவுள்களை மீள்நினைத்துக் கொண்டது. அவற்றில் மாடன், அவர்களுக்கு ஒரு நீதி தேவனாகவும், பாதுகாவலனாகவும், உற்ற நண்பனாகவும் விளங்குகிறான். இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் இந்த வழிபாடு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம், அது மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளுடனும் உணர்ச்சிகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளமையேயாகும். இந்து மதத்தின் சட்டதிட்டங்களுக்குள் அடங்காத இந்தத் தெய்வம், எளிய மக்களின் துயரங்களுக்குச் செவிசாய்க்கும் ஒரு சக்தியாக இன்றும் மலைநாட்டின் மூலை முடுக்குகளில் குடிகொண்டுள்ளது.

மலையகத் தமிழர்களின் பண்பாட்டுத் தேசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர்களின் உழைப்பையும், அந்த உழைப்பைத் தாங்கி நிற்கும் மாடன் போன்ற சிறுதெய்வ வழிபாட்டு முறைகளையும் ஆழமாகப் பயில வேண்டியது அவசியமாகும். அத்தோடு, கிராமிய வழிபாடுகளும் அதனோடு இணைந்த ஆற்றுகை வடிவங்களும் சிதைந்து, சமகால உலகமயமாக்கல் சூழலில் மாற்றமடைந்து வருகின்ற ஒரு பாதகமான நிலையில், இவ்வழிபாட்டு முறைகளையும் அதனோடு இணைந்த ஆற்றுகைகளின் நிகழ்த்துகை முறைகளையும் பாதுகாப்பது மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது.

உசாத்துணைப் பட்டியல்

இன்பமோகன், வ. (2012). கிழக்கிலங்கைச் சடங்குகள். சென்னை, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.

இராமசாமி, எஸ். (2015). சுடலை மாடன் வழிபாடு: ஒரு மக்கள் ஆய்வு. திருநெல்வேலி: உள்ளூர் பதிப்பகம்.

கண்ணன், பி. (2018). தமிழக கிராமத் தெய்வ வழிபாடுகள். சென்னை: கிழக்கு பதிப்பகம்.

சாரல்நாடன். (1993). மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை: சூர்யா அச்சகம்.

சுந்தரம்பிள்ளை, காரை செ. (2005). ஈழத்து மலையகக் கூத்துகள். கொழும்பு: பாரதிப் பதிப்பகம்.

தருமராஜன், டி. (2006). சனங்களின் சாமிகள். தமிழ்நாடு, இந்தியா: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.

தில்லைநாதன், வே. மலையக இந்துக்களின் தெய்வங்களும் வழிபாடுகளும். இந்து தர்மம்.

நாகசாமி, ரா. (1995). தமிழக மக்கள் வழிபாட்டு மரபுகள். சென்னை: தமிழ் பல்கலைக்கழகம்.

நித்தியாநந்தன், மு. (2014). கூலித்தமிழ். சென்னை: க்ரியா வெளியீடு.

பக்தவத்சல பாரதி. (2012). மானிடவியல் கோட்பாடுகள். சென்னை: அடையாளம் வெளியீடு.

பரமசிவன், தொ. (2008). நாட்டுப்புற மதமும் மரபும். சென்னை: காலச்சுவடு பதிப்பகம்.

பிரபாகரன், பொன். (2015). காமன் கூத்து. ஹட்டன்: புதிய பண்பாட்டு அமைப்பு வெளியீடு.

மௌனகுரு, சி. (1988). சடங்கிலிருந்து நாடகம் வரை. கொழும்பு: நாகலிங்கம் நூலாலயம்.

வடிவேலன், பெ. (1997). மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும். சென்னை: யுனி ஆட்ஸ் பிரைவெட் லிமிடெட்.

வேல்முருகு, செ. (1993). மலையக மக்களின் சமயங்களும் சடங்குமுறைகளும்.

வேலுசாமி, ம. (2006). மக்கள் சமயம் மற்றும் சடங்குகள். கோயம்புத்தூர்: பாரதி பதிப்பகம்.

ஹரீஸ், மீரா. எஸ். (2014). இலங்கையின் இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரியக் கூத்துகள். கண்டி: நிர்தய கலாலயம் வெளியீடு.

சஞ்சிகைகள்

குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை–செப்டம்பர் 1993.

குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி–மார்ச் 1994.

நட்புறவு பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987.

நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993.பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்