இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்கால அறிவியல் ஆய்வுகளும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
36 நிமிட வாசிப்பு

இலங்கையின் மகாவம்ச வரலாற்றைப் புரட்டிப்போட்ட கந்தரோடைத் தொல்லியலும் ஆதி இரும்புக்கால அறிவியல் ஆய்வுகளும் – பகுதி 2

June 11, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

திருப்புமுனை நான்கு

கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன: இலங்கையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் தொல்லியல்

Sudharshan Seneviratne (1984): The Archaeology of the Black and Red Ware in Sri Lanka, Ancient Ceylon, No. 5, Journal of the Archaeological Survey Department, Sri Lanka.

—————————————————————————————————————
கலாநிதி சுதர்ஷன் செனெவிரத்ன ஆசியாவில் முதனிலை பெற்றிருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலே பயின்று தத்துவக் கலாநிதி பட்டம் பெற்றவர். பாரபட்சமின்றி நடுநிலை பேணி வரலாற்றை உரைத்த ரோமிலா தாப்பர் போன்ற மேதைகளிடம் கல்வி பயின்றவர். இலங்கைக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆதாரமற்ற, புனைகதை போன்ற இலங்கை வரலாற்றைக் கற்க வேண்டிய அனுபவம் அவருக்கு ஏற்படவில்லை. 1984 ஆம் ஆண்டில் அவரது ஆய்வான ‘இலங்கையில் பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மண்பாண்டத் தொகுதியின் தொல்லியல்’ (The Archaeology of the Megalithic Black and Red Ware Complex in Sri Lanka) என்ற ஆய்வறிக்கை இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தின் சஞ்சிகையான ‘Ancient Ceylon No. 5’ இல் 1984 இல் வெளியானது.

—————————————————————————————————————

இலங்கையின் வரலாற்றாய்வில் இடைக்கற்காலத்திற்கும், ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குமிடையிலான கால இடைவெளி பாளி இலக்கியங்களில் காணப்படும் மரபுவழிக் கதைகளைக் கொண்டே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆய்வுகள் கடைப்பிடித்த ஆய்வு நெறிமுறைகள் தொல்லியல் கற்கையைப் புறக்கணித்தே வந்திருக்கின்றன. ஆனால் சமீபகால தொல்லியல் ஆய்வுகள் இலங்கையின் நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலங்களையும், உருவாக்க காலங்களையும் பற்றிய பிரச்சினைக்குரிய கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இந்தக் கற்கையில் முன்வைக்கப்படும் முதன்மையான தொல்லியல் சான்றுகள் (Primary Archaeological Evidence), முக்கியமாக ஆதி இரும்புக் காலத்தைய பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல்கள் எனக் கூறப்படும் நினைவுச் சின்னங்களிலிருந்தும், பண்டைய பெருங்கற் பண்பாட்டுக் குடியிருப்புகளிலிருந்தும் பெறப்பட்ட கலைப்பொருட்கள், குறிப்பாக சிறப்பியல்பு கொண்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களாகும். இந்த மட்பாண்டப் பொருட்கள் ஈமப் புதையல்களுக்கும், இலங்கையின் ஆதிகாலக் குடியேற்றங்களுக்குமிடையே காணப்படும் முக்கியமான தொடர்புகளை நிலைநாட்டுகின்றன. ஆகவே ஆதி வரலாற்றுக் காலத் தெக்காணத்தினதும், இலங்கையினதும் பரந்த பண்பாட்டுக் கட்டமைப்பைக் கொண்ட இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டு கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் கற்கை மிக முக்கியமாகிறது.

சுற்றுச்சூழல் பின்னணி

வட இலங்கையில் பெருங்கற் பண்பாட்டுக் கறுப்பு-வெள்ளை மட்பாண்டங்கள் காணப்படும் இடங்கள் விவசாயம், மந்தை வளர்ப்பு, மீன்பிடிப்பு, வேட்டையாடல் ஆகிய உணவு தேடும் நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடங்களாகக் காணப்படுகின்றன. ஆதிக் குடியேற்றங்கள் காணப்படும் கடலோர நிலப்பகுதிக்கு அருகாமையில் ஒரு விவசாயப் பின்னிலமும் காணப்படுவது ஒரு பொதுவான பரவல் பாங்கு.

வட இலங்கையின் பெருநிலப்பரப்பில் ஓடிவரும் ஆறுகள் மூலம் நீரைப் பெற முடிந்தது. இந்த ஆறுகள் தகவல் தொடர்பு இணைப்புகளாகவும் விளங்கின. இலங்கையின் ஆரம்பகாலப் பிராமி எழுத்துப்பதிவுகள் இக்குடியேற்றப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. வட இலங்கையில் 3-10 அடி ஆழத்தில் சுலபமாக நிலத்தடி நீரைப் பெற முடிகிறது. கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அதிகமாகக் காணப்படும் பகுதியை இக்குடியிருப்புகளின் நடுவப்பகுதியாகக் (Core Area) கொள்ளலாம். இவ்வகையான மட்பாண்டங்கள் குளங்களின், நீர்த்தேக்கங்களின் அருகாமையிலும் அதிகமாகக் காணப்படுகின்றன.

மேற்கூறிய நடுவப்பகுதிக்குச் சமீபமாக உலர்ந்த – ஈரமான பயிர்ச் செய்கைகளுக்கேற்ற விவசாயத்திற்கான வயல்கள் காணப்படுகின்றன. செழிப்பு மிகுந்த சிவந்த மண் விவசாயத்திற்குச் சிறந்த மண். இந்த மண்ணின் தன்மை ஆரம்பகால மக்களின் குடியேற்றப் பரவலைத் தீர்மானித்த ஒரு காரணி ஆகும். வட யாழ்ப்பாணத்தில் மக்கள் பரவலாகக் குடியேறியிருப்பதற்கும், வட மேற்கில் மக்கள் நேரியலாக (நேர் கோட்டில்) குடியேறியிருப்பதற்கும், வட மத்திய இலங்கையில் குடியேற்றங்கள் சில இடங்களில் குவிந்தும் சில இடங்களில் வெற்றுக் காடாகவும் இருப்பதற்கும் மண்ணின் தன்மையே காரணமாகும்.

வட இலங்கையில் பெருங்கற் பண்பாட்டுக் கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்துடன் தொடர்புடைய ஆரம்பகால இடங்கள் முதலில் பருவகாலக் காடுகளாகவும், முட்புதர்க் காடுகளாகவும் இருந்தன. வடமேற்கு இலங்கையின் பருவகாலக் காடுகளை நீக்க மேம்பட்ட உலோகக் கருவிகள் வேண்டியதில்லை. நெருப்பை வைத்தே இவற்றை அழித்து விடலாம். முட்புதர்க் காடுகள் அடர்ந்த செறிவான அடிமரங்களைக் கொண்டிருக்கும். இவற்றை மேம்பட்ட இரும்புக் கருவிகளைக் கொண்டு நிரந்தரமாக அகற்றி, வதிவிடங்களுக்கும் வயல் காணிகளுக்கும் ஏற்ற நிலங்களாக அமைத்துக்கொள்ள முடியும். 

மேலே கூறப்பட்ட சுற்றுச்சூழல் பின்னணி சமூக அசைவியக்கத்தையும், மக்களின் குடியேற்றத்தையும், வாழ்வாதார முறைகளையும், தொழில்நுட்பப் பரிமாணத்தையும் தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன.

பெருங்கற் பண்பாட்டு மையங்கள்

இலங்கையில் இதுவரை (1984) கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற் பண்பாட்டு மையங்கள் இவை.

1. காரைநகர் – நீளக்கிடத்திய புதையல்

இந்த மையம் 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினரால் அகழப்பெற்றது. நிலத்திலிருந்து ஒரு அடி கீழே ஈமப்புதையல் காணப்பட்டது. அதனோடு கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், குறியீட்டு எழுத்துகள், இரும்புக் கசடு (Iron Slag), சுறா எலும்புகள் காணப்பட்டன.

இலங்கையின் பெருங்கற்காலக் குடியிருப்புகளும் ஈமப்புதையல் மையங்களும். உரையில் குறிப்பிடப்படும் இலக்கங்கள் படத்தில் இலக்கமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

2. ஆனைக்கோட்டை – நீளக்கிடத்திய புதையல்

இந்தக் கடற்கரையை அண்டிய ஈமக்காடு 1980 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவினரால் அகழப்பெற்றது. 2 அடி ஆழத்தில் மேற்குக் கிழக்காக நீளக்கிடத்திய இரு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு எலும்புக்கூட்டின் தலைப்பக்கத்திலிருந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்தில் கோவேத என ஆதிப் பிராமி எழுத்துப் பொறித்த ஒரு முத்திரை மோதிரம் காணப்பட்டது. மற்றும் சுறா, கால்நடை எலும்புகள், சில்லில் செய்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு மட்கலன்கள், இரும்புக் கருவிகள், செம்புப் பொருட்கள், லக்ஷ்மி பட்டயம் என்பன கிடைத்தன.

3. கந்தரோடை – குடியிருப்பு உறைவிடம்

சுன்னாகம் பகுதியில் கடற்கரையிலிருந்து 6 மைல் தூரத்தில் அமைந்த இந்த நடுவம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து அறிஞர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இக்குடியிருப்பிற்குச் சமீபமாக உள்ள கந்தரோடைக்குளம் அப்பகுதியின் ஊடாக ஓடும் வழுக்கை ஆற்றுடன் யாழ்ப்பாணப் பரவைக்கடலை இணைக்கிறது. ஆரம்பத்தில் இவ்விடத்தில் அகழ்வுகளை மேற்கொண்ட போல் பீரிஸ் மெருகூட்டப்பட்ட ஓடுகள், முத்திரை நாணயங்கள், ஆரம்பகாலப் பாண்டிய நாணயங்கள், உரோம நாணயங்கள், லக்ஷ்மி பட்டயங்கள், இரும்பு, செம்பு, தங்க உலோக எச்சங்களைக் கண்டெடுத்தார். பின்னர் இவ்விடத்தில் பௌத்த நிறுவனங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

விமலா பெக்லியால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் இன்றைய நிலமட்டத்திலிருந்து 12 அடி ஆழத்திற்கு குடியிருப்பு எச்சங்கள் காணப்பட்டன. பெக்லி கந்தரோடையின் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களுக்கும், தென்னிந்தியப் பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்களுக்கும், கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்ட அநுராதபுர கெடிகே பகுதியில் காணப்பட்ட மட்பாண்டங்களுக்குமிடையிலான நெருங்கிய ஒற்றுமை குறிப்பிடத்தக்கதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மேற்கே இருக்கும் தீவுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட மேலாய்வுகளில் பல கறுப்பு-சிவப்பு மட்பாண்ட மையங்களைக் கண்டுபிடித்திருப்பதாக தனிப்பட்ட தகவல் தொடர்புகளில் சி.க. சிற்றம்பலம், பொ. இரகுபதி ஆகிய இருவரும் என்னிடம் கூறியுள்ளார்கள் – 1982 (Seneviratne 1984: p. 244).

4. மாந்தை (திருக்கேதீஸ்வரம்) – குடியிருப்பு – நீளக்கிடத்திய புதையல்

பண்டைய கோட்டைப் பட்டினமான மாந்தை அருவி ஆற்றின் கழிமுக நிலத்தில் அமைந்திருக்கிறது. இந்த முக்கியமான குடியிருப்பு மையம் அநுராதபுர கெடிகே பகுதியைப் போன்ற ஒரு கலாசார வரிசையை வெளிக்காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகால ஆய்வுகள் (Prickett, 1980:21) இந்த நகரின் குடியிருப்புச் சிதைவுகள் 30 அடி ஆழத்திற்கு ஆழ்ந்திருப்பதாக அறியத் தருகின்றன.

1950இன் அகழ்வுகளின் போது நகர மதில்களுக்கு வெளியே 4 அடி, 8 அங். ஆழத்தில் ஒரு நீளக்கிடத்திய எலும்புக்கூட்டை சண்முகநாதன் அகழ்ந்தெடுத்தார். இதுவும் ஆனைக்கோட்டைப் புதையலைப் போல மேற்குக் கிழக்காகப் புதைக்கப்பட்டிருந்தது.

1980 இல் ஜோன் கார்ஸ்வெல் மேற்கொண்ட அகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவு ஆரம்ப வரலாற்றுக்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களையும், றூலெற்றெட் கலன்களையும் கொடுத்திருந்தன. 4 அடி ஆழத்தில் நீர் மட்டத்தின் கீழ் கண்டெடுத்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பெருங்கற் பண்பாட்டிற்குரிய கலன்களாகக் கருதப்படுகின்றன (Prickett, 1980).

5. தேக்கம் – தாழிப்புதையல்

வில்பத்து வனவிலங்கு புகலிடப் பகுதிக்குள் பொம்பரிப்பைப் போன்று தாழிப்புதையல்களைக் கொண்ட ஒரு பகுதி தேக்கம். இது மோதரகம் ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கிறது. இந்த நடுவம் 1977 ஆம் ஆண்டில் சரத் வத்தள என்ற ஆய்வாளரால் அகழப்பெற்றது. மோதரகம் ஆற்றின் முகத்துவாரத்திலுள்ள பூக்குளம் என்ற இடத்தில் சிப்பி ஓடுகளோடு கறுப்பு-சிவப்பு மட்பாண்டக் கலவோடுகள் காணப்படுகின்றன.

6. பொம்பரிப்பு – தாழிப்புதையல்

இலங்கையில் மிகவும் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட நடுவம் பொம்பரிப்பு. வில்பத்து வனவிலங்கு புகலிடப் பகுதிக்குள் புத்தளம்-மன்னார் வீதியில் 21 ஆவது மைல்கல் இருக்கும் இடத்திற்குச் சமீபமாக, கடற்கரையிலிருந்து 4 மைல் தூரத்தில் இந்த இடம் இருக்கிறது. இந்த நடுவத்திற்குத் தெற்கே வற்றாத கலாஓயா நதி ஓடுகிறது.

விமலா பெக்லியின் மதிப்பீட்டின்படி இந்த நடுவத்தில் 8,000 தாழிகளில் 10,000-12,000 மக்கள் வரை புதைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கே புதையுண்டிருக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதி இவ்விடத்திலிருந்து கிழக்கே அமைந்திருக்கலாம் என பெக்லி கருதுகிறார். இவ்விடத்தில் பலதரப்பட்ட தாழிகள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், கீறல் எழுத்துகள் கொண்ட ஓடுகள், இரும்புப் பொருட்கள், செம்பு, வெண்கலம், மணிகள், விலங்கு எலும்புகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன (Begley, V. 1981: 49-95).

இந்தப் பகுதியிலுள்ள கொல்லன் கனத்தவில் 1971 இல் அகழாய்வுகளை மேற்கொண்ட சிரான் தெரணியகல, அநுராதபுரம் கெடிகே பகுதியில் கண்டது போன்ற ‘பெருங்கற் பண்பாட்டு வகை’ கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களை இங்கே கண்டதாகத் தெரிவித்திருக்கிறார் (Deraniyagala, S. 1972a: 1-17).

7. மாமடுவ – கல்லறை, கல்வட்டம்

வவுனியா-மாமடுவ வீதியில் வவுனியாவிலிருந்து 5 மைல் தூரத்தில் தேக்கு மரக் காடுகளினிடையே கடல் மட்டத்திலிருந்து 250-300 அடி உயரத்தில் இவை காணப்படுகின்றன. இதன் கிழக்கே பிராமி எழுத்துப் பொறித்த பாறைகள் (பெரிய புளியங்குளம்) காணப்படுகின்றன. இதன் சமீபத்தில் மாமடுவ குளம் காணப்படுகிறது.

இந்த மையம் 1976 இல் எம்.எச். சிறிசோம என்ற உதவி தொல்லியல் ஆணையாளரால் ஆய்வு செய்யப்பெற்றது. இரு வகையான புதையல்கள் காணப்பட்டன. பெரிய அளவிலான 6 அடி × 4 அடி கொண்ட பல கல்லறைகள் காணப்பட்டன. இவற்றை மூடிய கல்மேசைகள் காணப்பட்டன. இக்கல்லறைகள் மிக நெருக்கமாகக் கணிசமான அளவு நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தன.

இரண்டாவது வகைப் புதையல்கள் மரக்காட்டிற்கு வெளியே இருந்த கூட்டுப் பண்ணையில் கல்லறைகளிலிருந்து வேறாக அமைந்திருந்தன. புதையல்களைச் சுற்றிவர வட்ட வடிவில் பெரிய கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. சில கல்வட்டங்கள் தாழிப்புதையல்களைச் சுற்றிவர அடுக்கப்பட்டிருந்தன. இவை தென்னிந்திய தாமிரபரணி நதிக்கரைக் கல்வட்டங்கள் கொண்ட தாழிப்புதையல்களை ஞாபகப்படுத்தின. இவ்விடத்தின் மேலாய்விலே பல கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளைக் காணக்கூடியதாக இருந்தது. இவ்விடத்தில் வாழும் கிராம மக்கள் கிணறு தோண்டும் பொழுதில் எலும்புகளும், சாம்பலும் கொண்ட பெரிய குடங்கள் வெளிவருவதாகக் கூறியுள்ளார்கள்.

1978-79 ஆண்டுகளின் பின்னர் இக் கல்வட்டங்களைக் காண முடியவில்லை. அதிகாரத்துவ அலட்சியம் காரணமாக அவை முழுதாக மறைந்து போயின (Completely disappeared due to bureaucratic negligence).

8. அளுத்பொம்புவ – கல்லறைப் புதையல்

1982 ஆம் ஆண்டில் வில்பத்து காட்டுவிலங்கு புகலிடப் பகுதிக்குள் காணப்பட்ட கல்லறை வகைப் புதையல் இது (சிரான் தெரணியகலவுடனான தனிப்பட்ட தொடர்பு மூலம் பெறப்பட்ட தகவல்). இப்புதையல் பகுதி ஆலடிமுறிப்புக் குளத்தினருகே காணப்படுகிறது.

9. கரம்பன் குளம் – தாழிப்புதையல்

வில்பத்து வனவிலங்கு புகலிடப் பகுதிக்குள் காணப்படும் இன்னொரு தாழிப்புதையல் நடுவம் இது. இப்பகுதிக்கு கலாஓயாவின் ஒரு கிளை நதியான எல்பத்து ஆற்றினால் நீர் வழங்கப்படுகிறது. பொம்பரிப்பிற்கு அருகாமையில் இருப்பதனால் இது கலாஓயாவின் பெருங்கற் பண்பாட்டுக் குழுவிற்குள் வருகிறது.

10. தம்மென்ன-கொடெல்ல – கல்லறைப் புதையல்

மதவாச்சி-ஹொரவப்பொத்தான வீதியில் 16 ஆவது மைல்கல்லுக்கு வடக்காக தம்மென்ன-கொடெல்ல குளத்திற்கும் கிழக்கேயுள்ள பாறைகளுக்கும் இடையிலுள்ள கல்நிலத்தில் 125 கல்லறைகள் வரை காணப்படுகின்றன.

11. குருகல்-ஹின்ன – கல்லறைப் புதையல்

அநுராதபுரம்-திருகோணமலை வீதியில் 73 ஆவது மைல்கல்லுக்கு அப்பாலுள்ள மேட்டு நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லறை நிலப்பகுதி காணப்படுகிறது. இதை முதலில் 1885-86 ஆம் ஆண்டில் R.W. லீவர்ஸ் என்ற ஆங்கிலேயர் கண்டுபிடித்தார். 1970 இல் அகழ்ந்த ராஜா டி சில்வா இக்கல்லறைகளில் ஈமக் குடங்களையும், வெண்கலப் பொருட்களையும் கண்டெடுத்தார் (Silva, R. de. 1970).

12. வடிகவேவா – கல்லறைப் புதையல்

குருகல்-ஹின்ன புதையல் மையத்திலிருந்து கிழக்கே இரு மைல் தொலைவில் காணப்படும் இக்கல்லறைப் புதையல் மையம் 1981 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் 15 புதையல்கள் வரை காணப்பட்டன. இவற்றில் சிலவற்றை 1981 இல் ராஜா டி சில்வா அகழ்ந்திருந்தார்.

13. கொக்கெபே – கல்லறைப் புதையல்

கொக்கெபே கல்லறைகள் பகுதியும் அதைத் தொடர்ந்த ‘வடகஹகல்-ஹின்ன’ என்ற கல்மேடும் குருகல்-ஹின்னவிலிருந்து சில மைல் தூரம் தென்கிழக்கே அமைந்திருக்கிறது. இதற்கு மேற்கே ஒரு மைல் தொலைவில் யான்ஓயா ஓடிக்கொண்டிருக்கிறது. ஆதி வரலாற்றுக்காலத்தில் இந்த ஆறு இம்மையத்திற்குச் சமீபமாக ஓடியதாக நம்பப்படுகிறது. இவ்விடத்தில் 15 ஏக்கர் பரப்பில் 200 வரையான கல்லறைப் புதையல்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில கல்லறைகள் ராஜா டி சில்வா, சி.க. சிற்றம்பலம் ஆகியவர்களால் அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கின்றன.

14. திவுல்வேவா – கல்லறைப் புதையல்

கோன் வேவ சந்திக்கடுத்து 27 ஆவது மைல்கல்லில் மேற்கே திரும்பி இரண்டரை மைல் தூரத்தில் திவுல்வேவா கல்லறைகள் நடுவம் வருகிறது. 15 ஏக்கர் பரப்பில் பரந்து கிடக்கும் இந்த மையத்தில் 100 கல்லறைகள் வரை கண்ணுக்குத் தெரிகின்றன. ஒரு புதையல் குழியிலிருந்து இரும்பினாலான ஓர் ஏர்க்கொழு பெறப்பட்டது (சி.க. சிற்றம்பலத்திடமிருந்து தனிப்பட்ட தொடர்பு மூலம் பெறப்பட்ட தகவல்).

திவுல்வேவாவில் கண்ட கல்லறை. Picture source: Lanka Excursions.

15. றொபெவ – கல்லறைப் புதையல்

யான்ஓயா ஆற்றுப்படுகை நிலங்களில் மற்றுமொரு கல்லறைப் புதையல் பகுதி ஜனவரி 1982 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மையம் திவுல்வேவாவிலிருந்து தெற்காக இரு மைல் தூரத்தில் உள்ளது. வருங்காலத்தில் இலங்கையின் வரலாற்று உதயகால, ஆதி வரலாற்றுக்காலக் கற்கைகளுக்கு ‘யான்ஓயா கல்லறைப்புதையல் வளாகம்’ (The Yan Oya Burial Complex) மிக முக்கியமான ஒரு தலமாக அமையும்.

இச்சந்தர்ப்பத்தில், குச்சவெளியிலிருந்து 4 மைல் தொலைவிலுள்ள திரியாயிக்குச் சமீபமாக உள்ள புதுவக்காட்டில் ஒரு கிணறு தோண்டியபோது நிலத்திலிருந்து 10 அடி ஆழத்தில் எலும்புகளையும், சாம்பலையும் கொண்ட ஒரு ஈமத்தாழி கண்டுபிடிக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும். யான்ஓயா நதியின் கழிமுகப் பகுதியில் திரியாய் தொல்லியல் மையத்திற்குச் சமீபமாக இது காணப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது. திரியாய் பாறையில் பழைய பிராமிக் கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

16. மச்சகம – கல்லறைப் புதையல்

மிகப் பரந்த அளவினதான இந்த கல்லறைப் புதையல்களைக் கொண்ட மையம் 1979 ஆம் ஆண்டில் உதவி தொல்லியல் ஆணையாளராகவிருந்த P.M. ரத்னாயக்காவினால் அறிவிக்கப்பட்டது. கலாஓயா பெருங்கற் பண்பாட்டு வளாகத்தின் ஒரு பகுதியான மச்சகம, மரதன்கடவல-அநுராதபுர வீதியில் 66 ஆவது மைல்கல்லுக்கு மேற்கே மாநாவ-மரதன்கடவல வீதியில் 4 மைல் தொலைவில் உள்ளது. இங்கே புதையல்கள் மேடான நிலத்தில் காணப்படுகின்றன. இடுகாட்டைச் சுற்றிவர அரை வட்டமானதொரு இயற்கை மேடு கிழக்குப் பக்கத்தில் வடக்குத் தெற்காக ஓடுகிறது. இம்மேட்டுக்கு அப்பால் மச்சகம குளமும், நெல் வயல்களும் காணப்படுகின்றன. இடுகாட்டில் 100 கல்லறைப் புதையல்கள் வரை காணப்படுகின்றன. திறந்து கிடந்த ஒரு கல்லறையினுள்ளே கறுப்பு-சிவப்பு மட்பாண்ட ஓடுகளும், நிலத்தில் படிந்த எலும்புகளும், அதன் முன்னால் இரண்டு வரிசையாக அடுக்கப்பட்ட சிறு மட்குடங்களும் காணப்பட்டன.

17. அநுராதபுரம் கெடிகே – குடியிருப்புப் பகுதி

மல்வத்து ஓயாவின் கரையில் அமைந்துள்ள அநுராதபுரம் நகரை, அந்த நதி வடமேற்குக் கரையோடு இணைக்கிறது. 1972 ஆம் ஆண்டில் கலாநிதி சிரான் தெரணியகல அநுராதபுரம் கெடிகே பகுதியில் முன்னெடுத்த தொல்லியல் அகழ்வாய்வுகளின் போது, ஆகப்பழமையான ஆதி இரும்புக்காலக் குடியிருப்பு அடுக்கு (Stratum 3A) கண்டறியப்பட்டது. இந்த அடுக்கில் பெருங்கற்காலத்திற்கே உரிய தனித்துவமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அதற்கு உடனடி மேலிருந்த மட்பாண்டங்களில் குறியீட்டு எழுத்துகளும் (Graffiti Symbols), சிலவற்றில் பிராமி எழுத்துகளும் காணப்பட்டன. அதே மட்டத்தில் நெல் உமிகளும், விலங்குகளின் எலும்புகளும் (உணவிற்காக உட்கொள்ளப்பட்டவை) காணப்பட்டன (Deraniyagala, S. 1972b: 48-169).

18. கதிரவெளி – கல்லறைப் புதையல்

கதிரவெளி – குழம்பிய கல்லறையின் பக்கக்கற்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுப் பிரிவில், மகாவலி கங்கையின் கழிமுகக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள இப்பகுதி ‘குரங்கு படையெடுத்த வேம்பு’ என அழைக்கப்படுகின்றது. சிறு மரங்களைக் கொண்ட மணற்தரையான இப்பிரதேசம் மழைக்காலங்களில் சதுப்பு நிலமாகக் காணப்படும். இதற்குச் சமீபமாக சிறிய குளங்களும், நெல்வயல்களும் காணப்படுகின்றன. இவ்விடத்தைச் சூழ மூன்றரை அடி உயரமான வெட்டாத கற்கள் காணப்படுகின்றன. இங்கே காணப்படும் குழம்பிய கல்லறையில் மேல் மூடி காணப்படவில்லை.

19. இப்பன்கட்டுவ – கல்லறைப் புதையல்

குருநாகல்-திருகோணமலை வீதியில் 90 ஆவது மைல்கல்லுக்குச் சமீபமாக தம்புல்லவிலிருந்து இரு மைல் தொலைவில் இப்பன்கட்டுவ இடுகாட்டுப் பிரதேசம் காணப்படுகிறது. இந்த மையத்திற்கு அருகாமையில் வடக்கு-மேற்காக ஓடும் மல்ஓயா, கலாஓயாவுடன் இணைகிறது. 550 அடி உயரத்திலிருக்கும் இப்பிரதேசத்தில் இரு குளங்களும் நெல்வயல்களும் காணப்படுகின்றன. வீதியின் இடது பக்கத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவான தனியார் நிலத்தில் வரலாற்று உதயகாலக் கட்டத்திற்கு உரியதாகக் கருதப்படும் இடுகாட்டில் பலகைகளாக வெட்டிய பெரிய கற்களைக் கொண்டு பெட்டி வடிவில் நிர்மாணிக்கப்பட்ட சமாதிகள் 1970 ஆம் ஆண்டில் தொல்பொருள் திணைக்களத்தினரால் இனங்காணப்பட்டன. அதே ஆண்டில் ராஜா டி சில்வா 20 கல்லறைகளை வெளிக்கொணர்ந்தார். 1980 ஆம், 1982 ஆம் ஆண்டுகளின் மேலாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட கல்லறைகளில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் மற்றும் சிவப்பு மட்பாண்டங்களை நாம் கவனித்தோம்.

20. பின்-வேவா – கல்லறைப் புதையல்

பின்-வேவாவில் வெளிப்படுத்தப்பட்ட கல்லறை. Image Source: Tharaka Dias.

குருநாகல் மாவட்டத்தில் மாகோவிலிருந்து தென்கிழக்காக, புராதன நகரமான யாப்பகுவாவிலிருந்து ஒரு மைல் தொலைவில் இந்தக் கல்லறை இடுகாடு காணப்படுகிறது. உயர்ந்த மேடான நிலத்தில் 15 ஏக்கர் பரப்பில் இது அமைந்திருக்கிறது. இங்கே காணப்படும் கல்லறைகள் அளவில் பெரியவை. ஒரு கல்லறை மூடிக்கல் 6 அடி 4 அங். × 3 அடி 3 அங். அளவைக் கொண்டிருந்தது. இங்கே 1965-66, 1966-67 ஆம் ஆண்டுகளில் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தைச் சேர்ந்த ராஜா டி சில்வா அகழ்வுகளை மேற்கொண்டிருந்தார். இங்கே சில கல்லறைகளினுள்ளே தாழிப்புதையல்கள் காணப்பட்டன. அவற்றினுள் எலும்புகள், மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருட்கள் காணப்பட்டன. இங்கு காணப்பட்ட கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பொம்பரிப்புத் தாழிகளை ஒத்திருந்தன (Archaeology Dept Reports, 1965-66: 104; 1966-67: 78).

21. கல்-அத்தர – கல்லறைப் புதையல்

இலங்கையின் ஈரமான தாழ்வான மலைப்பகுதியில் உள்ள இக்கல்லறை இடுகாடு கேகாலை மாவட்டத்தில் அஸ்மதால மலைப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தினுள்ளே கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் உள்ளது. இந்த நடுவம் 1967 இல் கலாநிதி கொடகும்புரவினால் அகழ்வாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் குடங்கள், எலும்புகள், இரும்பு ஆயுதங்கள், உலோக அணிகலன்கள் என்பன காணப்பட்டன. பெரிய குடங்களினுள்ளே பல சிறிய குடங்கள் வைக்கப்பட்டிருந்தன (Archaeology Dept Reports, 1966-67: 64). 1977 ஆம் ஆண்டில் இந்த நடுவத்தில் நமது மேலாய்வில் 16 கல்லறைப் புதையல்களை இனங்காணக்கூடியதாக இருந்தது.

22. மக்கேவித்த – குழி அடக்கம்

இலங்கையின் தாழ்நில ஈரமண்டலத்தில் காணப்பட்ட இக் குழி அடக்கம் கொழும்பிலிருந்து 20 மைல் தூரத்திலுள்ள மக்கேவித்த கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு கிராமவாசி வாழைமரம் நடுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது இக் குழி அடக்கம் காணப்பட்டது. இதிலிருந்த கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் பொம்பரிப்பு மட்பாண்டங்களை ஒத்திருந்தன.

தொகுப்புரை 

அடக்கம் செய்யும் நடைமுறைகள்

இலங்கையில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முக்கியமான மூன்று வகைகள்: நீளக்கிடத்திய குழி அடக்கம், தாழிப் புதையல், கல்லறை அடக்கம் என்பன. இவற்றில் இலங்கையின் வடக்கு முனையில் நீளக்கிடத்திய அடக்கம் அதிகமாக நடைமுறையில் உள்ளது. புதிய கற்காலத்தில் இந்தியத் தீபகற்பமெங்கும் நீளக்கிடத்திய புதையல்முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் பெருங்கற்காலத்தில் தென்னிந்தியாவைக் காட்டிலும் தென்-தெக்காணத்தில் இந்தப் புதையல்முறை அதிகம் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கான காரணம் அங்கிருந்த வலுவான புதிய கற்கால-வெண்கலக்காலப் பாரம்பரியமாக இருக்கலாம். இலங்கையில் நீளக்கிடத்திப் புதைக்கப்பட்டவர்கள் மேற்கு-கிழக்கு திசை நோக்கி (காரைநகர், ஆனைக்கோட்டை, மாந்தை) அடக்கம் செய்யப்பட்டார்கள்.

தூய்மையான தாழிப்புதையல் வகை முக்கியமாக இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பொம்பரிப்பில் காணப்படுகிறது. ஒரே குழியில் ஒன்று அல்லது பல தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மாமடுவவில் தாழிப் புதையலைச் சுற்றிவர ஒரு கல்வட்டம் காணப்படுகிறது. புதையல் தாழியை மூடிய நிலையில் ‘மூடிக்கல்’ காணப்படுகிறது. இவ்வகையான மூடிக்கற்கள் சித்தாறு-தாமிரபரணித் தாழ்நிலங்கள் வழியாக குற்றாலம், காயல், கொற்கை, வலியங்கோட்டை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

பொம்பரிப்பு, மக்கேவித்த ஆகிய இடங்களில் நிலத்தில் தோண்டிய குழிகளினுள்ளே தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. பின்-வேவா, கில்-அதற ஆகிய கல்லறைகளினுள்ளே தாழிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்லறைகள் பெரும்பாலும் ஒரு கல் மேசையால் மூடப்பட்டிருக்கும்.

நான்கு கல்தட்டுகளை ஒரு பெட்டி வடிவில் நிலத்தில் புதைத்து அதை ஒரு கல் மேசையால் மூடிவிடுவார்கள். மேல் மூடி நில மட்டத்தில் இருக்கும். இலங்கையில் இவ்வகையான கல்லறைகள் வடமத்திய சமதரைகளில் அதிகம் காணப்படுகின்றன. சில இடங்களில் இந்தக் கற்கட்டுமானம் நிலத்தின் மேலே ஒரு சிறிய வீடுபோல நிற்கும். இவ்வகையான கட்டுமானம் ‘முனியறை’ (Dolmenoid Cist) என அழைக்கப்படுகிறது.

பெருங்கற் பண்பாட்டின் பரவல்

தென்தெக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் பெருங்கற் பண்பாட்டுக் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களின் பரவல் பாங்கு பிற்காணும் அம்சங்களைக் காட்டுகிறது.

இரும்பை உபயோகிக்கும் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு பண்பாடு ஊடுருவும் தன்மை கொண்டது. கர்நாடகத்தில் இப்பண்பாடு ஹல்லூரில் கி.மு. 945ஆம் ஆண்டில் புதியகற்கால-வெண்கலக்காலங்களை ஊடுருவி வெற்றி கண்டது. அந்தக் காலம் கி.மு. 1200 ஆகவும் இருக்கலாம் (Nagaraju Rao, 1979:324).* அந்த மையத்திலிருந்து இப்பண்பாடு ஆந்திரம், கேரளம், தமிழ்நாடுகளின் கீழ்வளமான வண்டல் படிந்த சமவெளிகளுக்குப் பரவியது.

கர்நாடகத்திலிருந்து இப்பண்பாட்டுப் பரவல் தெற்கே இரு வழிகளில் பரவியிருக்கிறது. ஒரு வழி தென்னிந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளினூடாக கேரள, தமிழ்நாடுகளின் வளமான சமவெளிகளுக்குப் பரவியமை. இவற்றில் முக்கியமானவை தூர தெற்குவரை வைகை ஆற்று நிலக்கரை வழியாகவும் (மதுரை மாவட்டம்), சித்தாறு-தாமிரபரணியின் வளமான பாதைகள் வழியாகவும் ஓடிச்சென்ற (திருநெல்வேலி மாவட்டம்) தாழியடக்க ஓடைகள் ஆகும். அகச்சுற்றுச் சான்றுகளின்படி தென்தமிழ்நாட்டின் தாழிப்புதையல்கள் வடகிழக்குத் தமிழ்நாட்டின் தாழிப் புதையல்களைக் காட்டிலும் ஒப்பீட்டில் பழமையானவை.

கர்நாடகத்திலிருந்து வந்த மற்றுமொரு பெருங்கற் பண்பாட்டுப் பரவல் பாதை வடக்குத் தமிழ்நாட்டின் – தர்மபுரி, சேலம், வடஆர்க்காடு போன்ற புறப்பகுதிகளுக்குப் பரவியது. அங்கிருந்து இப் பெருங்கற் பண்பாடு கிழக்கே கடற்கரைச் சமநிலங்களுக்குப் பரவியது.

I

மேலே கூறப்பட்டுள்ள கர்நாடகத்தின் பெருங்கற்காலப் பண்பாட்டின் ஆரம்ப காலங்கள் சமீபகாலங்களில் கதிரியக்கக் கரிம ஆய்வுகளைக் கொண்டு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் ஹல்லூர், குமரனஹல்லி, தடஹனகல்லி, மாஸ்கி ஆகிய பல மையங்களிலிருந்து இப்பண்பாடு தென்னிந்திய நாடுகளுக்கு, கி.மு. 1900-1500 ஆண்டுக் காலங்களில் பரவியிருக்கிறது (Moorti, U.S. 1994; Possehl, G.L. 1994;  Possehl & Guntupalli 1999).

RADIOCARBON DATES FROM MEGALITHIC BURIALS, MASKI, KARNATAKA  – 2015

—————————————————————————————————————-

Lab code             Provenance                14C age (BP)             Calibrated date

—————————————————————————————————————-

ISGS A2282        MARP-79-B no. 1        2955 ± 15                 1222–1117 cal BC

ISGS A2283        MARP-79-B no. 1        3070 ± 20                 1407–1276 cal BC

ISGS A3229        MARP-79-B no. 6        3040 ± 20                 1389–1225 cal BC

ISGS A3230        MARP-79-B no. 7        3510 ± 20                 1895–1756 cal BC

—————————————————————————————————————-

  Reproduced from RadiocarbonVol. 56, 2015, Page 800, University of Arizona.

—————————————————————————————————————

ஆந்திராவின் மையப்பகுதியில் இப்பெருங்கற் பண்பாட்டுப் பாரம்பரியம் விரைவில் வழக்கிழந்து போய்விட்டது போலத் தெரிகிறது. அகழ்வுகளில் அமராவதி ஸ்தூபத்தின் 7 அடிக்கும் கீழே தாழிப்புதையல் காணப்பட்டது. அதுபோல யேலேஷ்வரம் ஸ்தூபங்களின் கீழே கல்லறைப் புதையல்கள் காணப்பட்டன (Khan, 1963: 5-6). இவற்றை ஆதாரமாகக் கொண்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிருஷ்ணா நதி தாழ்நிலப் பகுதிகளில் பெருங்கற் புதையல் பழக்கம் முடிவிற்கு வந்துவிட்டது என எண்ண வேண்டியுள்ளது.

பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடைய சில குறிப்பிட்ட அம்சங்கள்: இரும்பின் தொழில்நுட்பம், வனையும் சில்லு, இரும்புநுனி பொருத்திய ஏர் (ஏர்க்கொழு), நெல் பயிரீடு, குள நீர்ப்பாசனம், ஆரம்பகால கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் என்பன. கி.பி. முதலாம் நூற்றாண்டில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டம் பிரபலம் இழந்து அதற்குப் பதிலாக உரோம மட்பாண்டங்கள் இப்பிராந்தியங்களில் பிரபலமாயின.

II

இலங்கையின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஈமப்புதையல் கலாசாரம் (தாழி – கல்வட்டம்) பாண்டிய நாட்டின் வைகை – தாமிரபரணிப் பகுதிகளிலிருந்து வந்திருக்கிறது என்பது நிச்சயமாகிறது. ‘தம்பபண்ணி’ என்ற பெயர் திருநெல்வேலியிலுள்ள முக்கியமான நதிக்கும், வடமேற்கு இலங்கையில் தெதுறு ஓயா, கலா ஓயா நதிகள் பாயும் பிரதேசத்திற்கும் கொடுக்கப்பட்ட பெயர். இலங்கையின் பாளி இலக்கியங்களின்படி ‘தம்பபண்ணி’ இலங்கையில் வடஇந்தியர்கள் வந்து குடியேறிய முதல் உறைவிடமாகும். இந்த வடஇந்தியர்கள் மதுரையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் (Dipavamsa; Mahavamsa, vii: 49-50, 72-73).

திருநெல்வேலியிலிருந்து முதலில் வடமேற்கு இலங்கைக்கு வந்தவர்கள் அவ்வப்போது வந்த பருவகால முகாம் மக்களாக இருக்கலாம். இவ்வாறு அடிக்கடி வந்தவர்கள் பொருத்தமான நுண்ணிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் நிரந்தரமான குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். கடற்கரைக்குச் சமீபமாகக் காணப்படும் ஆதி ஈமத்தாழிப் புதையல்கள், ஆரம்பகால குடியேற்றங்களின் சுற்றுச்சூழல் கவனிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. கடலிலிருந்து பெற்ற முத்து, சங்கு ஆகிய கடல்வளங்கள் அப்பகுதியில் அவர்களைக் குடியேறச் செய்திருக்கலாம்.

ஆதிகால இலங்கையில் ஆற்றங்கரைகளே மக்கள் நாட்டின் உட்பகுதிக்குச் செல்லக்கூடிய வழிகளாக அமைந்தன. ஈமப்புதையல் மையங்களும், பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டக் குடியிருப்புகளும் ஆற்றங்கரையிலேயே காணப்படுவது அநுராதபுரம் கெடிகே மற்றும் ஏனைய அகழ்வுகளில் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. இலங்கையின் ஆரம்பகால குடியிருப்புகளில் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுகின்றன. இலங்கையின் பாளி இலக்கியங்களான தீபவம்சம், மகாவம்சம் என்பன நாகர்களோடும், வடஇந்தியக் குடியிருப்பாளர்களோடும் தொடர்புபடுத்தும் நாகதீப, கல்யாணி, தம்பபண்ணி, மகாதீர்த்த, அநுராதகம, உபதிஸகம, உருவெல, விஜிதபுர, கொனகம ஆகிய இடங்களிலெல்லாம் பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் காணப்படுவது தற்செயலாக ஏற்பட்ட நிகழ்வுகளல்ல.

III

இலங்கையின் வடமத்திய, வடகிழக்குப் பகுதிகளில் காணப்படும் கல்லறை அடக்கங்கள் வடகிழக்கு வழியாகப் பரவியது எனக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வரை பரந்து காணப்படும் கிழக்குக்கரைப் பகுதியில் கல்லறை அடக்கங்களே பரவலாகக் காணப்படுகின்றன. இக்கல்லறை அடக்கப் பண்பாடு அங்கிருந்தே இலங்கையின் கிழக்கு வழியாக வடமத்திய பகுதிக்குப் பரவியுள்ளது.

தமிழ்நாட்டின் கிழக்குக்கரையை அண்டிய காவேரி நதி வளப்படுத்திய நிலத்தில் கல்லறை அடக்கங்கள் காணப்படுகின்றன. அங்கிருந்து இப்பண்பாடு வடகிழக்கு இலங்கையை அடைந்து யான் ஓயா நதிக்கரை வழியாக வடமத்திய இலங்கை வரை பரவியிருக்கிறது. முதலில் கூறியது போல முக்கியமான கல்லறை அடக்கங்கள் தமென்ன-கொடெல்ல, குருஹல்-ஹின்ன, வடிகவேவா, கொக்கெபெ, திவுல்வேவ, றொபெவ ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

IV

இந்தச் சந்தர்ப்பத்தில் நமக்கெழும் கேள்வி என்னவெனில் இந்தியத் தீபகற்பத்திலிருந்து இரும்பு உபயோகிக்கும் மக்களின் திரளான சனவரத்து இங்கே ஊடுருவியதா அல்லது இங்கிருந்த கற்கால மக்களில் ஒரு பகுதியினர் மேம்பட்ட கலாசாரக் கூறுகளைக் கொண்ட பெருங்கற்கால கறுப்பு-சிவப்பு மட்பாண்டப் பண்பாட்டை மேற்கொண்டார்களா? என்பதுதான். மானிடவியலாளர்களையும் இந்தக் கேள்வி எழுப்பியுள்ளது: இலங்கையின் இரும்புக்கால குடியிருப்பாளர்கள் உள்நாட்டவர்களா? அல்லது இந்திய நாட்டிலிருந்து வந்த இரும்பு உபயோகிக்கும் மக்களா?

இதற்குச் சரியான விடையை ஊகிக்கவே இயலும். இலங்கையில் இந்த இரு நிலைமைகளும் இருந்திருக்கின்றன எனக் கொள்ளுவதே சரியான விடையாக இருக்கும். தீபகற்ப இந்தியாவிலிருந்து வந்து பெருங்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்து வந்த மக்கள் தங்களது இரும்புக் கருவிகளுடன் குள நீர்ப்பாசன விவசாயத்தில் ஈடுபடுவதைக் கண்ட உள்நாட்டுக் கற்கால மக்கள், தாங்களும் அந்தப் பண்பாட்டைக் கடைப்பிடித்தார்கள் எனக் கொள்ளுவதே பொருத்தம்.

V

இலங்கையின் பாளி இலக்கியங்கள் பதிவு செய்திருக்கும் இயக்கர், நாகர், புலிந்தர், விஜயன்-குவேனி கதைகள், பாண்டுகாபயனுக்கும் இயக்கருக்கும் இடையிலான தொடர்புகள் என்பன இரும்புக்கால மக்களுக்கும், கற்கால மக்களுக்கும் முன்னொரு காலத்திலிருந்த தொடர்புகளின் மரபு ஞாபகங்கள் ஆகும். இவை பின்னர் நாட்டுப்புற மரபுக் கதைகளாகத் தொடரப்பட்டிருக்கலாம். பாண்டுகாபயனின் கதை வேறு வழியாக வந்த சம்பிரதாயம். இது சிங்கள பௌத்தர் அல்லாத ஒரு மக்கள் கூட்டத்தினரிடமிருந்து உருவாகியிருக்க வேண்டும் (Perera, 1974: 145).

திருப்புமுனை ஐந்து

கலாநிதி கென்னெத் கென்னெடி: இலங்கையின் பெருங்கற்-கட்டடக் கலைஞர்களின் உடல்சார் மானிடவியல்

The Physical Anthropology of the Megalithic-builders of Sri Lanka

KENNEDY, K.A.R. & DERANIYAGALA, S.U. (1989): Fossil Remains of 28,000 Year Old Hominids from Sri Lanka, Current Anthropology, Vol. 30, No. 3: 394-399.

LUKACS, J.R. &  KENNEDY, K.A.R. (1981): ‘Biological Anthropology of Human Remains from Pomparippu’ in Excavations of Iron Age Burials at Pomparippu 1970, Ancient Ceylon 4: 97-142.

KENNEDY, K.A.R (1975): The Physical Anthropology of the Megalithic-builders of South India and Sri Lanka, ANU Press, Canberra.

KENNEDY, K.A.R. (1965): Human Skeletal material from Ceylon with an analysis of the island’s prehistoric and contemporary populations, Bulletin of British Museum, No. II: 135-213.            

—————————————————————————————————————

கலாநிதி கென்னெத் கென்னெடி அமெரிக்காவில் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் உயிரின மானிடவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர் தென் ஆசிய மக்களின் மானிடவியல் கற்கைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். பல தடவைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வருகை தந்து வரலாற்றிற்கு முற்பட்ட கால மக்களினதும், பெருங்கற்கால மக்களினதும் உடல்சார் மானிடவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர். மத்திய இந்தியாவில் நர்மதாவில் கண்டெடுக்கப்பட்ட கபாலத்தை ஆராய்ந்து, அது ஹோமோ இரக்டஸிற்கும் ஹோமோ சேப்பியன்ஸிற்கும் இடைப்பட்ட ஒரு மனிதனின் கபாலம் என அறிவித்தவர். 1970 ஆம் ஆண்டில் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தினர் பொம்பரிப்பில் அகழ்வாய்வுகளை நிகழ்த்தியபோது அங்கே கண்டெடுத்த எலும்புகளை ஆராய்ந்து தனது முடிவுகளைத் தந்தவர். உயிரின மானிடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற மேதை இவர்.

————————————————————————————————————–

தென் ஆசியாவில் உடற்கூறியல் ரீதியாக நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் மிகப் பழமையான புதைப்படிவ எலும்புகள் காணப்படுவது இலங்கையில் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பட்டதொம்ப லென குகையில்தான். இந்தக் குகையில் நீண்ட காலமாக மனிதர்கள் வசித்த சான்றுகள் காணப்படுகின்றன. இதைத்தவிர கித்துல்கலவில் உள்ள பெலி லென குகை, பாகியன் லென குகை மற்றும் பெல்லன்பாந்தி பலஸ்ஸ ஆகிய இடங்களிலிருந்தும் பண்டைய மனிதர்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

1982ஆம் ஆண்டில் தொல்லியலாளர் சிரான் தெரணியகல பட்டதொம்ப லென குகையில் ஆழமாக அகழ்ந்தபோது அடியில் 7C மட்டத்தில் மனித எலும்புகளையும், 17 நுண்கல் ஆயுதங்களையும், எரிந்த கரித்துண்டுகளையும் கண்டெடுத்தார். இவைகள் கதிரியக்கக் கரிம ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் பழமையானவை இ.மு. 28,500 ஆண்டுகளுக்கு (இற்றைக்கு முன்னர்) உரியனவாகக் கணிக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டில் பேராசிரியர் கென்னெடி இந்தக் குகையைச் சென்று பார்வையிட்டு, அங்கிருந்து பெறப்பட்ட குவார்ட்ஸ், சேட் கற்களினாலான நுண்கல் ஆயுதங்களையும் ஆய்வு செய்து எலும்புகளையும் பரிசோதனை செய்தார். இவற்றில் ஏழு பெரியவர்களினதும், ஒரு குழந்தையினதும் எலும்புகள் அடையாளம் காணப்பட்டன. இது அக்காலத்தில் இடம்பெற்ற பகுதியளவு மற்றும் இரண்டாம் நிலை அடக்கம் செய்யும் நடைமுறைகளை (Fractional and Secondary Burial Practices) எடுத்துக்காட்டின (Kennedy & Deraniyagala, 1989: 394-399).

இலங்கையிலிருந்து பெறப்பட்ட மனிதப் பேரினப் படிமங்கள் தென் ஆசியாவின் தொல்மானிடவியல் ஆய்விற்கும், மேல் பிளைஸ்டோசீன் காலத்தைய நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் புவியியல் பரவலைக் கணிப்பிடவும் உதவுகின்றன. பட்டதொம்ப லெனவிலிருந்து பெறப்பட்ட 28,500–28,000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புகளும், அதன் அகழ்வில் சற்று மேல் மட்டத்திலிருந்து பெறப்பட்ட 16,000 ஆண்டுகள் பழமையான எலும்புகளும், கித்துல்கல பெலி லெனவிலிருந்து பெறப்பட்ட 12,000 ஆண்டுகள் பழமையான எலும்புகளும் பழைய கற்காலத்தின் பின்னர் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் இடம்பெற்ற உயிரியல் மாற்றங்கள் பற்றிய தரவுகளை அறிந்துகொள்ள உதவுகின்றன (Kennedy & Deraniyagala, 1989: 394-399).

இலங்கையில் பண்டைய மனிதர்களின் புதைபடிவ எலும்புகள் காணப்படும் குகைகள்.

புவியமைப்பியல் ரீதியாக இலங்கை இந்தியக் கண்டத் தகட்டிலேயே அமைந்திருக்கிறது. இந்தியப் பெருநிலத்தின் தென் முனையிலிருந்து இலங்கை இருபது மைல் நீளமான ஓர் ஆழம் குறைந்த கடலினால் பிரிக்கப்பட்டிருக்கிறது. இப்பெருநிலத்தின் பிந்திய கற்காலக் கலாசாரங்களுடன் இலங்கை நெருங்கிய தொடர்பு வைத்திருந்திருக்கிறது. இந்த நெருங்கிய கலாசாரத் தொடர்பு இரும்புக்காலத்திலும் தொடர்ந்ததைக் காணமுடிகிறது. தென்னிந்தியாவில் காண்பது போன்ற இரும்புக்காலப் பெருங்கல் நினைவுச் சின்னங்களும், கல்வட்டங்களும் இலங்கையின் அநுராதபுரம், பதவிகம்பொல, கதிரவெளி போன்ற இடங்களில் காணப்படுகின்றன (Kennedy, 1975: 24).

இந்தியாவில் காணப்படும் பெருங்கற் பண்பாட்டு ஈமப்புதையல்களில் 99 சதவிகிதமானவை தென்னிந்தியாவிலேயே காணப்படுகின்றன. இக்காலத் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் முன்னோடிகளே இவற்றின் கர்த்தாக்கள் என்ற கருத்து ஆதிகாலத்திலிருந்தே உணரப்படுகிறது. ஆரம்பகால ஆய்வாளரான பிலிப்ஸ், சேலம் மாவட்டத்தில் உள்ள புதைகுழி மேடுகளில் இறந்தவர்களைப் புதைத்தவர்கள் இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் மக்களுக்கு முற்பட்டவர்களாவர் எனக் கூறியுள்ளார். இந்தோ-ஆரியர்கள் இறந்தவர்களை எரித்தவர்களே ஒழிய புதைத்தவர்கள் அல்ல எனவும் குறிப்பிடுகிறார் (Phillips, 1873: 226, 228).

1915ஆம் ஆண்டில் ரிஸ்லியின் ‘இந்திய மக்கள்’ என்ற மானிடவியல் பகுப்பாய்வில் திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியாவின் ஆரம்பகாலக் குடிமக்களின் நேரடி வம்சாவளியினர் என்றும், இவர்களே பெருங்கற் பண்பாட்டின் கர்த்தாக்கள் என்றும் கூறப்படுகிறது (Risley 1915).

ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த இரு கபாலங்களை ஆராய்ந்த எலியட் சிமித், ஒன்றை முது-ஆஸ்திரலோயிட் எனவும், மற்றதை திராவிட மக்களின் முன்னோடிகளான மத்தியதரை மக்கள் எனவும் இனங்காண்கிறார் (Smith 1927: 130, 136).

ஆதிச்சநல்லூர் அகழ்வுகளில் கண்ட இரு கபாலங்களை ஆராய்ந்த இலண்டன் பல்கலைக்கழக உடற்கூற்றியலாளர் ஸக்கர்மன் (S. Zuckerman, Anatomist, University College, London) தரும் தகவல் இது:

“ஆதிச்சநல்லூரில் கண்ட முதலாம் இலக்கக் கபாலம் (Adichanallur No. 1) இன்றைய ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களை நிகர்த்த தென்னிந்தியாவின் பழங்குடியினரின் கபாலம். இது ஹக்ஸ்லியின் ஆஸ்திரேலிய-திராவிட உறவுக் கருத்தை ஆதரிக்கிறது. இந்தியாவின் திராவிடருக்கு முந்திய இன மக்கள் ஆஸ்திரேலியர், வேடர் மற்றும் தென்னிந்தியக் காட்டுப் பழங்குடியினராவர். ஆதிச்சநல்லூர் இரண்டாம் இலக்கக் கபாலம் (Adichanallur No. 2) திராவிடக் கபாலம். ஆகவே ஆதிச்சநல்லூர் புதையல்கள் திராவிட மக்களின் வருகையின் பின்னரே நடைபெற்றிருக்கின்றன. ஆதிகால மனிதன் இந்தியா வழியாகவே ஆஸ்திரேலியாவை அடைந்தான் என்பதற்கு ஆதிச்சநல்லூர் கபாலங்கள் சான்றாகின்றன (Zuckerman, S. 2000: 19-20).”

ஒரு மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் மானிடவியல் ரீதியாக ஒரே வகையான உடற்கூறுகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டியதில்லை. மனிதர்களின் கபால அளவை மானிடவியலாளர்கள் 1. நீளவடுவ மண்டை (Dolichocranic), 2. அகன்ற மண்டை (Brachycranic), 3. நடுத்தர மண்டை (Mesocranic) என மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு இன மக்களும் ஒவ்வொரு வகையான கபால அளவுகளைக் கொண்டிருக்கிறார்கள் என முன்னர் கூறப்பட்டது. திராவிட மக்கள் நீளவடுவத் தலையைக் கொண்டவர்கள் எனக் கூறப்பட்டது. சமீபகாலங்களில் தலை அளவை மட்டும் கொண்டு ஒரு மொழி சார்பான இனத்தை அடையாளம் காண இயலாது என மேனாட்டு மானிடவியலாளர்கள் கருதுகிறார்கள் (Kennedy, K.A.R. 1975: 69).

தென்னாசியாவில் பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களை எழுப்பியவர்கள் அவற்றை தொலைதூரத் தொன்மையில் எழுப்பவில்லை. வரலாற்று உதயகாலத்திற்குச் சற்று முன்னதாகவே அமைத்திருக்கிறார்கள். திராவிட மொழிகளின் தோற்றம் இப்பெருங்கற் சின்னங்களின் தோற்றத்துடன் இணைந்து தோன்றியிருக்கிறது என்பது ஒரு பாதுகாப்பான மற்றும் நியாயமான அனுமானமாகத் தெரிகிறது (Kennedy, K.A.R. 1975: 69).

பொம்பரிப்பு எலும்பு ஆய்வு முடிவுகள்

‘பொம்பரிப்பில் நாம் கண்ட எலும்புத் தொடர் ஒரு சிறிய கல்லறை மக்கள் தொகையை மட்டுமே காட்டுகிறது. இதன் பெரும்பகுதி இன்னும் அகழ்வாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. பண்டைய சனத்தொகையின் உயிரின மானிடவியல் (Biological Anthropology) அம்சங்கள் அனைத்தையும் பரந்த அளவிலான அகழ்வாய்வுகள் மூலமே வெளிக்கொணர முடியும்’ (Lukacs & Kennedy, 1981: 106).

1. மத்திய கற்கால பெல்லன்பாந்தி-பலஸ்ஸவில் வாழ்ந்த மக்களுக்கும் பொம்பரிப்பு இரும்புக்கால மக்களுக்கும் ஓரளவான உயிரியல் தொடர்புநிலை (Some Level of Biological Affinity) காணப்படுகிறது (Lukacs & Kennedy, 1981: 107).

2. ‘இரும்புக்காலத்தில் இந்தப் பிரதேசத்தில், குறிப்பாக இலங்கையின் மேற்குக் கரைப்பகுதிகளில் புதிய, வியத்தகு வகையில் வேறுபட்ட உடற்கூறியல் பண்புகள் கொண்ட மக்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை.’ (‘There is no evidence of an introduction of new and strikingly different anatomical traits into this part of the world nor, for that matter, into the western coastal region of Sri Lanka’) (Lukacs & Kennedy, 1981: 107).

3. பொம்பரிப்பில் கண்ட மக்களின் பற்கள் இலங்கையின் வேடர்களின் பற்களை ஓரளவு ஒத்திருக்கின்றன (Lukacs & Kennedy, 1981: 107). கி.மு. 1000 ஆண்டுக் காலம்வரை மாமிசம் புசித்து வந்த மக்களின் பற்கள் வேடர்களின் பற்களை ஒத்திருப்பதில் ஆச்சரியமில்லை. மக்கள் தாவர உணவு புசிப்பவர்களாக மாறிய பின்னரே பற்களின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

தொடரும்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) B.Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph.D. பட்டத்தையும் பெற்றவராவார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Kantarodai Civilization of Ancient Jaffna 500 BCE-800CE, The Tamils of Lanka – A Timeless Heritage, Archaeological Excavations at the Jaffna Fort, பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகியவை அவற்றுள் சிலவாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்