எம்.எஸ். மாரிமுத்துவும் சோமு பெரீ. இருளப்பாவும்: கம்பளை – கண்டியின் இரு வீதிப்பாடலாசிரியர்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
23 நிமிட வாசிப்பு

எம்.எஸ். மாரிமுத்துவும் சோமு பெரீ. இருளப்பாவும்: கம்பளை – கண்டியின் இரு வீதிப்பாடலாசிரியர்கள்

August 12, 2026 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் பரவல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையங்களாகக் கம்பளையும் கண்டியும் விளங்குகின்றன. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையின் முழுமையான நிர்வாகமும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் பெருந்தோட்டப் பொருளாதார முறையின் அறிமுகத்திலும் வளர்ச்சியிலும் கண்டி மாவட்டமும், குறிப்பாகக் கம்பளைப் பிரதேசமும் முக்கியத்துவம் பெற்றன. கம்பளை, சிங்கபிட்டியப் பிரதேசத்திலேயே 1823ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் கோப்பிப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கண்டி நகருக்கு அருகிலுள்ள லூல்கந்துர தோட்டத்தில் தேயிலைப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முன்னெடுப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், நாட்டின் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டது. அதேவேளை, இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் வரலாறு, குடியேற்றம், சமூக உருவாக்கம் மற்றும் வாழ்வியல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற தளங்களாகவும், அவை உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இடங்களாகவும் கம்பளையும் கண்டியும் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, இந்திய வம்சாவளி மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் புரிந்துகொள்வதில் இவ்விரு பிரதேசங்களும் குறிப்பிடத்தக்க வரலாற்று மற்றும் சமூகக் கேந்திரங்களாகக் கருதப்படுகின்றன.

“கம்பளையாம் கம்பளையாம் – கங்காணி 

கூட்டி வந்த கம்பளையாம்

தேயிலைத் தோட்டத்திலே – எங்களை 

தேய்த்தழிக்கும் கங்காணி!”

“காடு வெட்டிச் சாலை பண்ணி – நாங்க

கண்டி தேசம் வந்தோமடி 

ஈனமுற்ற கொசுக்கடியும் அட்டைக்கடியும்

தாங்கி நின்னோமடி!”

“மன்னார் கடலிறங்கி – நாங்கள் 

மாத்தளை வீதியிலே வாரோம்

கண்டி நகர பார்க்கையிலே – எங்கள்

கண்ணீரும் உதிரமும் பெருகுதடி!”

“கம்பளைத் தோட்டத்திலே

எங்களை காடு கொத்தி வேலை வச்சான் 

வம்பன் கங்காணிப் பயலோ – எங்களை 

மாடாய் அடித்து வதைத்தானடி!

கண்டி நகர் காடுகொத்தி – நீங்கள்

கம்பளையில் தேயிலை நட்டீங்க – நட்ட

தேயிலை செழிக்கையிலே – என் 

ராசா நீங்கள் மடிஞ்சிங்களே!”

போன்ற மலையக நாட்டார் பாடல்கள் இந்திய வம்சாவளி மக்களுடன் கண்டி, கம்பளை ஆகிய பிரதேசங்கள் கொண்டிருந்த தொடர்பிற்குத் தக்க சான்றுகளாக அமைகின்றன.

கம்பளை மண்ணின் வீதிப்பாடல் கலைஞர் எம்.எஸ். மாரிமுத்து

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் பெருந்தோட்ட அரசுடமையாக்கல் திட்டமும் தொடர்புபட்டதாக அமைந்தது. 1972ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட காணிச் சீர்திருத்தச் சட்டங்கள் பெருந்தோட்டங்களின் சிதைவுக்கு பெரிதும் வழிவகுத்தன. பிரித்தானிய நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் அரசாங்கத்தின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இதனால், பெருந்தோட்டத் தொழில்துறையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்த மலையக மக்களின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படத் தொடங்கின. இலங்கைப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஆகிய அரச நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, அவற்றின் ஊடாக பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. பெருந்தோட்டங்களில் இருந்து மலையக மக்களை அப்புறப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பெருந்தோட்டங்கள் திட்டமிட்ட வகையில் நட்டநிலை நோக்கி இட்டுச் செல்லப்பட்டன. 1990களுக்குப் பின்னர் பெருந்தோட்டங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தன. தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலையில், இலாபத்தை முதன்மை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகள் பெருந்தோட்டத் தொழில்துறையிலும் அதன் மீது தங்கியிருந்த மக்களின் வாழ்வியலிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தின. ஸ்ரீமா–சாஸ்திரி ஒப்பந்தம் இந்திய வம்சாவளி மக்களின் ஒரு பகுதியினரைத் தென்னிந்தியாவுக்கு புலம்பெயர்வதற்குக் கட்டாயப்படுத்தியது. காணிச் சட்டங்கள் பஞ்சம், பட்டினி போன்ற நிலைமைகளுக்கு வழிகோலியதுடன், இலங்கையின் ஏனைய பிராந்தியங்களுக்கான புலம்பெயர்வுக்கும் காரணமாக அமைந்தன. அவ்வப்போது இந்திய வம்சாவளி மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் பெருந்தோட்டங்களின் சிதைவுக்கு பெரிதும் துணைநின்றன. பின்னர், அபிவிருத்தித் திட்டங்கள், குடியேற்றத் திட்டங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட பெருந்தோட்டச் சிதைவு நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டமை கவனத்திற்குரியது. தொகுதி ரீதியாகச் செயற்பட்ட பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் மலையக மக்களுக்கான தொழிற்சங்கங்களை ஸ்தாபித்து அவற்றின் ஊடாக மேற்கொண்ட செயற்பாடுகளும் இந்நிலைக்குப் பெரிதும் காரணமாக அமைந்தன. இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட தலங்கள் என்ற வகையில் கண்டி மற்றும் கம்பளைப் பிரதேசங்கள் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன.

இந்திய வம்சாவளி மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமாற்றங்களில் முக்கிய தடம் பதித்த களமாகக் கம்பளை மண்ணை அடையாளப்படுத்தலாம். இந்திய வம்சாவளி மக்களின் சமூக இயக்கங்களாகத் தோற்றம் பெற்ற இலங்கை இந்தியன் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்ட களமாகவும் கம்பளை கவனத்தைப் பெறுகிறது. இவ்வகையில், இத்தலத்திலிருந்து பல்வேறு ஆளுமைகள் உருவாகி, கல்வி, அரசியல், சட்டம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் தமது தடத்தைப் பதித்துள்ளனர். அவர்களில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். கலை, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த ஆளுமைகள் இம்மண்ணுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்களில் ஒருவராக வீதிப்பாடலாசிரியர் கம்பளை எம்.எஸ். மாரிமுத்துவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மாரிமுத்துவின் எண்ணவோட்டங்களையும் சமூகப் பார்வையையும் புரிந்துகொள்வதற்கு, அவரது பாடல்களினூடாக அவற்றை உற்றுநோக்குவது அவசியமாகிறது.

மகாவலி கங்கை கம்பளைப் பிராந்தியத்தின் ஊடாகப் பாய்ந்து செல்வதால், இந்நகரம் ‘ஆற்றங்கரையில் அமைந்த எழில் கொஞ்சும் நகரம்’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சிங்கள மொழியில் இந்நகரத்தின் பூர்வீக வரலாற்றுப் பெயர் ‘கங்கசிரிபுர’ என்பதாகும். 14ஆம் நூற்றாண்டில் நான்காம் புவனேகபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் இராசதானியாகவும் இந்நகரம் விளங்கியுள்ளது. 1823ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்றுடனும் தொடர்புபட்ட கம்பளை, அவர்களின் சமூகப் பங்களிப்பை எடுத்துரைக்கும் களமாகவும் அமைந்தது. இத்தகைய பின்னணியில், வீதிப்பாடலாசிரியர் எம்.எஸ். மாரிமுத்துவின் எண்ணவோட்டங்களும் கவனத்திற்குரியவையாகின்றன. மலையக சமூக அசைவியக்கத்தில் இப்பாடலாசிரியரின் பங்களிப்பையும் அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. எழுச்சிப் பாடல்களில் ஈடுபாடு கொண்டிருந்த நிலையில், இவரும் பல பாடல்களைப் படைத்திருக்கக்கூடும். இருப்பினும், ‘மலையக மக்களின் மாண்பு கூறும் மதுர மணிக் கீதம்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மட்டுமே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே மாரிமுத்துவின் எண்ணவோட்டங்களையும் சமூகப் பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

“தொழிலாளியின் முழக்கம்” எனும் மகுடத்தில் அமைக்கப்பட்டுள்ள இவரது பாடல், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளுக்கு நியாயத்தை வலியுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. “உழைப்பவன் தொழிலாளி – நன்றாய் உணருங்கள் முதலாளி ஐயா” எனும் உரத்த முழக்கம், தொழிலாளர் வர்க்கத்தின் பொதுக் குரலாகவும், முதலாளித்துவச் சார்புடையவர்களுக்கு தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துரைக்கும் குரலாகவும் அமைந்திருப்பது கவனத்திற்குரியது.

“ஏழைத் தொழிலாளியைக் கூலிக்காரனென்று 

கேலி செய்யுறீங்க – இந்த

கூலிக்கார ஜனம் வேலை செய்யாவிட்டால் 

கும்பி காயும் போங்க.

காத்தான் கருப்பன் காணுவெட்டாட்டிக் 

கம்பனி ஏதுங்க – எங்கள்

காமாட்சி கண்ணம்மா கொந்தரப்பு வெட்டாட்டிக்

காடாய் போகும் போங்க”

பொதுவாக, தேயிலைத் தொழிற்களங்கள் மாத்திரமே பாடலாசிரியர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாறாக, இரப்பர் தோட்டங்கள் தொடர்பான கவனத்தையும் உள்வாங்கிய வகையில் இவரது பாடலின் உள்ளடக்கம் அமைந்துள்ளதை, “குப்பம்மா – சுப்பம்மா – பால்மரம் வெட்டாட்டி டயர் டியூப் ஏதுங்க?” என வினாத் தொடுப்பதன் மூலம் அவதானிக்கலாம். தொடர்ந்து, பெருந்தோட்டப் பொறிமுறையில் தோட்டத் தொழிலாளர்களின் பங்கேற்பை வலியுறுத்தும் முனைப்புடன் பாடல் வரிகள் தொடர்வதையும் காணலாம். தேயிலைத் தொழிற்களத்தில் ‘மொட்டு புடுங்குதல்’, ‘பக்கவாது’ சமாச்சாரம், ‘வங்கி முத்தெளை’ புடுங்குவதனால் ஏற்படும் பாதிப்பு நிலை குறித்த சித்தரிப்புகளும் பாடலின் உள்ளடக்கத்திற்கு மேலும் வலிமை சேர்ப்பதைக் காணலாம்.

“பத்துப்பனிரெண்டடி பாழுங்குடிசையில் 

படுக்க முடியலைங்க – ஏழை

பாட்டாளி மக்களும் துரையிடம் கேட்டால்

பத்துச் சீட்டுத் தானுங்க…”

எனத் தொடரும் வரிகள் இருப்பிடப் பிரச்சினையை வலியுறுத்திச் செல்வதை நோக்காகக் கொண்டுள்ளன. இங்கு ‘லயன்’ வாழ்விடச் சூழலில் அனுபவிக்கும் நிலைமைகளைப் பாடலூடாக நாசூக்காக எடுத்துரைக்கும் இலாவகம் கவனத்திற்குரியதாகும். ‘பத்துச் சீட்டு’ எனும் பிரயோகமும் இங்கு அவதானத்தைப் பெறுகிறது. மலையகப் பெருந்தோட்டப் பொறிமுறையில் பத்துச் சீட்டு என்பது அடிமைத்தனத்துடன் தொடர்புடைய ஆவணமாகத் திகழ்கிறது. ஒரு தோட்டத்திலிருந்து பிறிதொரு தோட்டத்திற்கு மாற்றலாகிச் செல்லும்போது, பத்துச் சீட்டு இருந்தால் மாத்திரமே குறித்த தோட்டத்தில் பெயர்ப் பதிவு இடம்பெறும். ஒருவர் குறித்த தோட்டத்தில் தொழில் புரியும்போது, அத்தோட்டத்திற்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியதை உறுதிப்படுத்திய பின்னரே இச்சீட்டு வழங்கப்படும். ‘பற்றுச்சீட்டு’ என்ற பிரயோகம் மருவியே ‘பத்துச் சீட்டு’ என அழைக்கப்படுகிறது. ஒரு தோட்டத்திலிருந்து ஒருவர் அல்லது குடும்பத்தினர் வெளியேறுவதற்கும், பிறிதொரு தோட்டத்தில் குடியேறுவதற்கும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பத்துச் சீட்டு வழங்கப்படுவதுண்டு:

  1. பெண் தொழிலாளர் ஒருவர் பிறிதொரு தோட்டத்தில் திருமணம் செய்து, கணவர் தொழில் புரியும் தோட்டத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்;
  2. சுய விருப்பத்தின் பேரில் தொழிலாளர் குடும்பம் பிறிதொரு தோட்டத்தில் வசிக்க விரும்புகின்ற சந்தர்ப்பத்தில்;
  3. தோட்ட நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக முரண்பாடு நடக்கும் நிலையில், குறித்த குடும்பத்தினரை அத்தோட்டத்தில் தொடர்ந்து வைத்திருக்க நிர்வாகம் விரும்பாத சந்தர்ப்பத்தில்;
  4. குறித்த தோட்டத்தில் வாழும் தொழிலாளர் குடும்பத்தினருக்கும் அத்தோட்டத்தில் வாழும் ஏனைய தொழிலாளர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான முரண்பாடுகள் ஏற்பட்டு, அவர்களை அத்தோட்டத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டாம் எனப் பொதுவான முடிவு எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில்.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு தோட்டத்திலும் அபூர்வமான நிகழ்வுகளாகவே இடம்பெறுவதுண்டு.

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியல் சூழல் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. வாக்குரிமை மற்றும் பிரஜாவுரிமையைப் பறிக்கும் முனைப்புகள் இப்பாடலாசிரியரிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலைமை தொடர்பான வெளிப்பாடுகளையும் அவரது பாடல்களில் அவதானிக்க முடிகிறது. தொடக்கக் காலத்தில், பெருந்தோட்டத் துறையில் பணியாற்றிய இந்திய வம்சாவளி மலையகத் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க ரீதியாக ஓரணியில் திரண்டிருந்தனர். ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட பிளவுகளும் மாற்றங்களும் பெரும் எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவித்தன. தொழிலாளரிடையே உருவான இத்தகைய ஒற்றுமையின்மையும் அமைப்பியல் ரீதியான சீர்குலைவுமே, இந்திய வம்சாவளி மக்கள் தங்களின் உரிமைகளை இழந்து பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளானமைக்கான முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக அமைந்தது. அத்தகைய தன்மைகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஒரு பாடல்,

“கல்லடியும் பொல்லடியும் கட்சிரெண்டு உதயமாகி

காடைத்தனம் பெருத்துப் போச்சிங்க – இந்த நாட்டிலே

காலம் ரொம்ப மாறிப்போச்சிங்கோ….”

எனவும் 

“நாட்டுரிமை ஓட்டுரிமை நல்ல பிரஜா உரிமை

நாளடைவில் ஒன்றுமில்லீங்க – தொழிலாளிக்கு

நம்பிக்கையும் அற்றுப்போச்சிங்க

வேலை நிறுத்தம் பல வேலையில்லா திண்டாட்டம்

துப்பாக்கி சூடு வேறங்க தொழிலாளிக்கி

தொல்லை பல எண்ணிப்பாருங்க”

என்றவாறும் தொடர்கிறது. அவ்வாறே தொழிற்சங்கங்கள் மீதான விமர்சனப் பாங்கிலும் பாடல் தொடர்கிறது.

பொதுவாக, மலையக வீதிப் பாடலாசிரியர்களிடையே “மணப்பாறை வீடு கட்டி” என்ற பாடல் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே இப்பாடலின் மெட்டைத் தழுவிப் பெரும்பாலான பாடலாசிரியர்கள் தமது பாடல்களைப் படைத்துள்ளனர். அவ்வகையில், எம்.எஸ். மாரிமுத்துவின் பாடல் ஒன்றும் கவனத்திற்குரியதாகிறது. மலையக மக்களின் உரிமை மீறப்பட்டமை குறித்த பதிவையும் இம்மெட்டில் அமைந்த பாடலின் ஊடாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

“அண்ணன் தம்பி அக்கா தங்கை அப்பனுடன் பாட்டன் பூட்டன் 

அடிமையாக உழைத்தோமடா சின்னதம்பி – இப்ப 

யாரென்று கேட்கிறாங்க நல்லதம்பி

கொழும்பு நகர்தனிலே கொதித்தெழுந்து மக்களெல்லாம்

ஊர்வலமும் சென்றோமடா சின்னத்தம்பி – அத்துடன்

உரிமைக்குரல் எழுப்பினோமே நல்லதம்பி”

மேலும், போராட்டக் களத்தில் பட்ட அவஸ்தைகளையும் சுட்டிக்காட்டி, “பிரஜா உரிமைக்கான மனுவைக் கட்டுக்கட்டாய் எழுதி கதிரைமலை போல் குவித்தோமே” என எடுத்துரைப்பதும் அவதானத்திற்குரியதாகும். எதிர்காலம் குறித்த பார்வையுடன், “வருங்கால சந்ததிகள் வாழ்க்கை உயர்வதற்கு சங்கத்தையே பலப்படுத்த சின்னத்தம்பி – வெற்றி வேங்கைபோல் எழுந்திரடா நல்லதம்பி” என அறைகூவல் விடுப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே, “கட்டளைப்படி நடக்கணும்” எனும் மெட்டில் அமைந்த பாடல், தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தையும் அச்சங்கங்களின் நிர்வாகிகளுக்குரிய பொறுப்புகளையும் எடுத்துரைப்பதைக் காணலாம்.

இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தமட்டில், கம்பளை என்றதும், புசல்லாவை மண்ணையும் கே. இராஜலிங்கம் அவர்களையும் தவிர்த்துப் பார்க்க இயலாது. அவ்வகையில், புசல்லாவை மண்ணின் பெருமையையும் இராஜலிங்கம் அவர்களின் சிறப்பையும் பாடலாசிரியர் எம்.எஸ். மாரிமுத்துவும் எடுத்துரைக்கத் தவறவில்லை.

“சங்குவாரித் தோட்டத்தில் பிறந்து 

சங்கத் தலைவனாக திகழ்ந்து

வங்காளம் மேல் நாடும் போயமர்ந்து

வாதிட்டு பாட்டாளியாயிருந்து

மக்களின் சேவை பெரிதென்றெண்ணி

மணமுடிப்பதை அர்ப்பணித்தோன்

சொல்லும் செயலும் பெரிதாயெண்ணி

சேர்வின்றி உழைத்த ராஜலிங்கம்”

சாந்த சொரூபன், சமத்துவத் தோழன், மாந்தருள் மாணிக்கம், மாசில்லா மன்னன் எனப் புகழாரம் சூட்டி அமரர் கே. இராஜலிங்கம் அவர்களைப் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலைநாட்டுக் காந்தி எனச் சிறப்பிக்கப்பட்டுப் போற்றப்பட்ட கே. இராஜலிங்கம் அவர்களைப் போன்றே மதிக்கப்பட்ட தலைவராக கே.ஜி.எஸ். நாயரும் விளங்குகிறார். இலங்கை இந்தியன் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தொண்டராக அவர் விளங்கியுள்ளார். “தோட்டங்களில் வாழும் மக்கள் துயரைத் தீர்த்தவன் – வெற்றி தோன்றும் வரை அஞ்சிடாமல் தொடர்ந்தெதிர்ப்பவன்” என எம்.எஸ். மாரிமுத்து அவரைச் சிறப்பிப்பதோடு, பின்னாளில் உருவான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாட்டாளராகவும் அவரை அடையாளப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

“சணப்பொழுதும் கடமை தவறாத சன்மார்க்கன் – இலங்கை

ஜனநாயக காங்கிரசின் திடத்தினும் யோக்யன்.

வீரம் மிகுந்த நாயர் வீரனைப்போலே – இந்த

விரிபுவனம் தன்னினுண்டோ விழையும் தமிழே

தெள்ளுதமிழ் மாரிமுத்து செந்தமிழ் கீதம் உண்மை

தேசத் தொண்டன் நாயர் சேவை தெரிந்துரை நீதம்.”

தனது காலத்தில் உருவெடுத்த சமூகப் பிரக்ஞைகளை பதிவு சென்ற பணியில் அன்னாரது பங்கேற்பு மிகுந்த முக்கியமானதாக விளங்குகிறது. வெறுமனே வாழ்ந்துவிட்டுச் செல்பவர்கள் மத்தியில் எம்.எஸ். மாரிமுத்து போன்ற ஆளுமைகள் சிறந்த முன்மாதிரிகளாகப் போற்றப்பட வேண்டியவர்களாகத் திகழ்கிறார்கள். இவரால் இயற்றப்பட்ட ஏனைய பாடல்களும் கிடைக்கப்பெறுமானால், இவரைப் பற்றியும் இவரது எண்ணவோட்டங்களையும் முழுமையாக அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அது அமையும்.

கண்டி மண்ணின் வீதிப்பாடல் கலைஞர் சோமு. பெரீ. இருளப்பா

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் பெருந்தோட்டத் துறையானது கண்டிப் பிராந்தியத்தை மையப்படுத்தியே விரிவடைந்தது. ஆட்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால், இலங்கையைக் கைப்பற்றிய பிறகு தோட்டங்களுக்குத் தங்கள் சமய பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுவதில் ஆர்வம் காட்டினர். இருப்பினும், இத்தோட்டங்களை உருவாக்கிய இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்கள், அந்த ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் தாய்மொழியான தமிழிற்கு ஏற்ப உருமாற்றி அடையாளப்படுத்தினர். எடுத்துக்காட்டாக, ‘சென் அந்தனீஸ் எஸ்டேட்’ (St. Anthony’s Estate) என்ற பெயர் தொழிலாளர்களால் ‘ஆந்தோனி தோட்டம்’ எனத் தமிழ்மயமாக்கப்பட்டது. ஆனால், தற்காலத்தில் இத்தோட்டம் ‘ஹந்தானை தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு காலப்போக்கில் நிகழும் பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் உள்ள பண்பாட்டு மற்றும் அதிகார அரசியல், விரிவான ஆய்வுக்குரிய முக்கியப் பொருளாக அமைகிறது.

இத்தோட்டத்திலிருந்து உருவான பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுள் காசி ரெங்கநாதன் என்பவரின் பங்களிப்பு மிகவும் கவனத்திற்குரியதாகும். அதேகாலகட்டத்தில், அவரது நண்பரும் வீதிப் பாடலாசிரியருமான சோமு. பெரீ. இருளப்பா என்பவரைப் பற்றியும் நாம் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக, அக்காலத்து வீதிப் பாடல் தொகுப்புகளில் பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. ஆனால், அதற்கு விதிவிலக்காக இருளப்பாவின் ‘மலைநாட்டு தொழிலாளர் பாட்டு’ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியரின் முன்னுரை, பெருமளவு முக்கியத்துவம் பெறுகின்றது.

“தோட்டத் தொழிலாளர்களே, அன்புள்ள நண்பர்களே, உங்கள் அன்பு மிகுதியால் நான் உங்களின் கஸ்ட நஸ்டங்களை நேரில் கண்டும் துன்பத்தை அனுபவித்தும் வருகிறேன். இந்நாட்டவர்கள் நம்மை பல வகையாகப் பிரித்து ஆட்சி செய்கிறார்கள். இதன் காரணம் தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில்தான். பல கோணத்திலும் இழுத்துச் செல்கிறார்கள் என்பது சந்தேகமில்லை. எனவேதான் வேதனை கொண்ட நான் நமது குறைகளை இந்த சிறு புத்தகம் மூலம் பாட்டாக அமைத்துள்ளேன். நமது தொழிற்சங்க இயக்கங்களுக்கு பக்கபலமாய் இருந்து குறை தீர்த்து வாழ விரும்புகிறேன். எமது தொண்டுக்கு உங்கள் ஆதரவு நிறையக் கிடைக்கும் என நம்புகிறேன்.” 

பொதுவாக, இவரது பாடல்கள் அனைத்தும் அக்காலத் திரையிசைப் பாடல்களின் மெட்டுகளைத் தழுவியே அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அப்பாடல்கள் ஒவ்வொன்றும் உழைக்கும் மக்களின் விடிவையும் மேன்மையையும் நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதலாளிகளின் லாபவெறிக்காகத் தொழிலாளர்கள் சுரண்டப்படும் அவலநிலையையும், அதனால் ஏற்படும் வேதனையையும் இவரது வரிகளில் தெளிவாக உணர முடிகிறது. எடுத்துக்காட்டாக, ‘கவலையில்லாத மனிதன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “பிறக்கும் போதும் அழுகின்றான்” என்ற பாடலின் மெட்டினைக் கொண்டு அமைக்கப்பட்ட தழுவல் பாடல் இதற்கொரு சான்றாகும். மேலும், உழைக்கும் மக்களிடையே காணப்படும் ஒற்றுமையின்மையைச் சுட்டிக்காட்டுவதோடு, அவர்கள் மீதான ஆத்திரத்துடனும் ஆதங்கத்துடனும் அந்த ஒற்றுமையின்மையைக் கண்டித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் இவரது பிரயத்தனமும் ஆழமான கவனிப்பிற்குரியது.

“மலைத் தமிழா நீ மறந்தாயே

கொள்கை லட்சியம் மறைந்தாயோ

ஒரு நாள் வேலையில் கொடிய முதலாளி

கொள்ளை லாபம் சுரண்டுகிறார்.

கூட்டத்தில் சொன்னதைக் கேட்டிருந்து 

குண்டர்கள் பந்தமாய் போகின்றாரே 

ஒற்றுமை கடமையில் வளருவது இன்பம்

அற்பர்கள் பந்தத்தால் நேர்வது துன்பம்…”

தொழிலாளர்களிடையே காணப்படும் காட்டிக்கொடுக்கும் போக்கைக் காரசாரமாகச் சாடும் வரிகளாக இவை அமைந்துள்ளன. தோட்ட நிர்வாகத்திற்குப் ‘பந்தம் பிடிக்கும்’ செயலினால், சக தொழிலாளர்கள் பாதிப்பிற்குள்ளாகும் அவலநிலையை இப்பாடல் வரிகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்குப் ‘பற்றுச்சீட்டு’ வழங்குவதற்குத் தொழிலாளர்களின் ஒற்றுமையின்மையே காரணமாக அமைந்துவிடுவதைச் சுட்டிக்காட்டி, அந்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்ற பாடலாசிரியரின் தீவிர விருப்பமும் இப்பாடலில் தெளிவாகப் புலனாகிறது. “பற்றுச்சீட்டு கொடுக்கும் சட்டத்தை – மாற்றியமைப்போம் ஒற்றுமையாலே” என்று அவர் விடுக்கும் அறைகூவல், தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியை வலியுறுத்தும் மிக முக்கியமான வரியாகக் கவனம்பெறுகிறது.

அக்காலத்தில் ‘மணப்பந்தல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உடலுக்கு உயிர் காவல்” என்ற மெட்டிலான பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாக விளங்கியது. கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய அப்பாடல் பின்வருமாறு அமைகிறது.

“மழலைப் பருவத்தில் தாய் காவல்

வளர்ந்து விட்டால் தன் மனம் காவல்

இளமையிலே ஒரு துணை காவல்

இறந்துவிட்டால் பின் யார் காவல்…”

இப்பாடலின் தாக்கத்தை உணர்ந்த இருளப்பா, “யார் காவல்… யார் காவல்… யார்… காவல்” என்ற தொகையறா வரிகளுடன் தனது பாடலைத் தொடங்குகிறார். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலைக் களமாகக் கொண்டு அமைக்கப்பட்ட அவரது பாடல் வரிகள் பின்வருமாறு தொடர்கின்றன.

“முதலாளிக்குப் பணம் காவல்

குறைகள் கேட்டால் நோட்டீஸ் காவல்

தொழிலாளர் தலைவருக்குப் பதவி காவல்

மடிந்து விட்டால் பசியில் யார் காவல்?”

இப்பாடலில், “தினமும் உழைப்பவனுக்கு வறுமை காவல்… மலைநாட்டுத் தமிழனுக்கு யார் காவல்? அனாதைக்கு யார் காவல்? ஏது காவல்? தொழிலாளிக்கு யார் காவல்?” எனத் தொடர்ச்சியாக எழுப்பப்படும் வினாக்கள் ஆழமான கவனிப்பிற்குரியவை.

அக்காலத்தில் பெருந்தோட்டங்களில் ‘நோட்டீஸ்’ (Notice) வழங்குவது என்பது மிகவும் சக்திவாய்ந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையாக விளங்கியது. ஒரு தொழிலாளியை வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு வேலை இடைநிறுத்தம் செய்வது போன்ற தண்டனைகள் இந்நோட்டீஸ் முறையின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டன. அதேபோன்று, ‘பட்டம் அடித்தல்’ என்ற செயன்முறையும் குறிப்பிடத்தக்கது. ஒரு குடும்பத்தை லயன் குடியிருப்பிலிருந்து வெளியேற்றுவது அல்லது அவர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகள், வீட்டின் கதவில் ‘பட்டம் அடிப்பதன்’ மூலமே மேற்கொள்ளப்பட்டன. தோட்ட நிர்வாகத்தின் இந்நடவடிக்கையானது, ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையான அதிகாரத்தைக் கொண்டிருந்தது. இத்தகைய ஒடுக்குமுறைச் செயன்முறைகளைத் தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலம் வரை பிரயோகித்து வந்தமையையும் அறிய முடிகிறது.

1960ஆம் ஆண்டு வெளியான ‘படிக்காத மேதை’ திரைப்படத்தில் இடம்பெற்ற “பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு” என்ற பாடல், காதலர்கள் தங்களின் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் காதல் பாடலாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

“ஆண்: பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு! – கண்

பார்வை போடுதே சுருக்கு!

பெண்: பாதையிலே பல வளைவிருக்கு! – உங்க

பார்வையிலே நம்ம உயிரிருக்கு!

ஆண்: நானிருக்கும் போது பயமெதற்கு? – என்

நாட்டமெல்லாம் உன் மேலிருக்கு!

பெண்: ஆனைக்கும் உண்டு அடிசறுக்கு! – இதை

அறிந்தும் ஏனோ வீண்கிறுக்கு!

பெண்: நெஞ்சினிலே புது நினைவிருக்கு! – அதில்

நேசத்தினால் வரும் மணமிருக்கு!

ஆண்: நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு! – நல்ல

நேரமும் இடமும் கிடைத்திருக்கு!

பெண்: எங்கும் இன்பம் நிறைந்திருக்கு! – அதில்

இருமனம் ஒன்றாய்க் கலந்திருக்கு!”

இப்பாடலின் நுட்பத்தைப் பயன்படுத்தி இருளப்பா எழுதிய பாடல், சமூக விழிப்புணர்வையும் உணர்வெழுச்சியையும் தூண்டுவதற்கு முக்கிய வழிகாட்டியாக அமைந்துள்ளது. 

“தோட்டத்திலே தேயிலை இரப்பரிருக்கு – உயர்

தெங்கு கொக்கோ இருக்க பயமெதுக்கு

தொழிலிலே பல கலை இருக்கு – அதன்

தரத்தில் நம் உயிரிருக்கு

ஒன்றுமை பலமும் நமக்கிருக்கு – இந்த

இலாப பணமூட்டை நமக்கெதுக்கு

இன்பமுடன் நாம் வாழ்வதற்கு – நல்ல

நேரமும் காலமும் நெருங்கியிருக்கு….”

இலங்கை மலையகச் சமூக அசைவியக்கத்தில் பங்காற்றிய பல தலைசிறந்த ஆளுமைகளின் பங்களிப்பு, வரலாற்று ரீதியாக என்றென்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூரப்படுகின்றது. அவ்வாறான முக்கிய ஆளுமைகளுள் எஸ். சோமசுந்தரம் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை இந்தியன் காங்கிரஸின் (Ceylon Indian Congress) உருவாக்கத்தில் முதன்மைப் பங்காற்றிய அவர், பின்னாளில் அவ்வியக்கத்தின் இணைச் செயலாளராகவும் திறம்படப் பணியாற்றினார். தன்னலமற்ற பொதுநல நோக்கோடு அவர் தன் வாழ்நாளை மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணித்த வரலாற்றுப் பதிவுகள் ஆழமான கவனிப்பிற்குரியவை. அவரது புகழைப் போற்றும் வகையில், ‘பாலும் பழமும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்” என்ற புகழ்பெற்ற பாடலின் மெட்டினைத் தழுவி இயற்றப்பட்ட பாடல் வரிகள் பின்வருமாறு தொடர்கின்றன.

“சோமா யாரெண்டு எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்

இது யார் காட்டும் வழிகள் என்று நீ கேட்கிறாய்

தொழிலாளர் சங்கரனார் குமரனல்லவா

தொழிலாளர் தோழர்களுக்கு துறவியல்லவா…”

இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கும் நோக்கோடே இவரது பாடல் வரிகள் இயற்றப்பட்டுள்ளன. அவரது பாடல்களின் பல இடங்களில் எழுத்துப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் கணிசமாக வெளிப்பட்ட போதிலும், அக்குறைகளுக்கப்பால் இச்சமூகத்தின் மீதான ஆழந்த பற்றும், மக்களின் வாழ்வியல் மேன்மையை விரும்பிய சமூக அக்கறையுமே இப்பாடல்களின் முதன்மை உந்துசக்தியாக அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆயிரம் காலம் ஆண்டியாய் வாழ்வதில்

அர்த்தம் என்ன நீ சொல்வீரே

ஒரு நாளாகிலும் வீரமாய் வாழ்ந்து

புகழாய் மடிவது மேன்மையடா

அறப்போர் செய்யப் புறப்படடா

அநாதை விலங்கை முறிப்போமடடா

உரிமை வாங்கி வாழ்வோமடடா”

என்ற அறைகூவலும் இருளப்பரின் எழுச்சி எண்ணங்களுக்கு எடுத்துக்காட்டாக  அமைகின்றமை கவனத்திற்குரியதாகும். 

தான் வாழ்ந்த காலத்தில், தன் சமூகம் மீது கொண்ட பற்றும் அக்கறையுமே இப்பாடல்களின் உறுதியான வழிகாட்டலுக்கு முதன்மை அடித்தளமாக அமைந்தன என்பது இவரின் சிறப்பு அம்சமாகும். இவரது படைப்புகளை வெறுமனே திரையிசை மெட்டுகளைத் தழுவிய சொற்களின் கோர்வை என்று ஒதுக்கிவிட முடியாது; அதற்கு அப்பால், அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டும் நோக்கில் அமைந்த இவரது நெறிமுறைகளும் சமூக அக்கறையும் உயர்ந்து நிற்பது ஆழமான கவனிப்பிற்குரியது.

கண்டி மாவட்டத்தில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு நெருக்கடிகளும், நிலச்சிதைவுகளும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போதைய அரசியலமைப்பின் படி, கண்டி மாவட்டம் 12 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் கண்டி மற்றும் கம்பளை ஆகிய தேர்தல் தொகுதிகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. கண்டி மாவட்டத்தில் அதிகளவு தமிழ் மக்களைக் கொண்ட தொகுதிகளில் கம்பளை இரண்டாவது இடத்தில் உள்ளது. கண்டி நகர மையப் பகுதியை உள்ளடக்கிய தொகுதியில், அந்தோனி மலைத் தோட்டமும் ஒரு முக்கியக் களமாக விளங்குகிறது. இப்பிராந்தியங்களிலும் தொகுதிகளிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்வியல் இருப்பும் அரசியல் பிரதிநிதித்துவமும் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகின்றன. குறிப்பாக, பெருந்தோட்ட நிலங்களைத் துண்டுதுண்டாகப் பிரிக்கும் நடைமுறை இம்மக்களின் சமூகப் பொருளாதார அமைப்பிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நெருக்கடிகளின் விளைவுகள் குறித்து அன்றே கவலை கொண்டு, பாடல்கள் வாயிலாக எச்சரித்த முன்னோடிப் பாடலாசிரியர்களின் பிரயத்தனங்களை இன்றைய சூழலில் மீள்வாசிப்பிற்கு உட்படுத்துவது காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.

உசாத்துணை மூலங்கள் 

யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேஷன்.

முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.

சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.

மாரிமுத்து, எம். (1963). மலையக மக்களின் மாண்புகூறும் மதுர மணிக் கீதம். ஆசிரியர் வெளியீடு.

இருளப்பா, சோ. (1962). மலைநாட்டுத் தொழிலாளர் பாட்டு. குருநாதன் அச்சகம்.



About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்