1991 - 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் - பகுதி 5
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
12 நிமிட வாசிப்பு

1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 5

November 6, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாதல்

இவர் இலங்கையின் ஐந்தாவது பிரதமரும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுமாவார். இவர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். இவரது தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சந்திரிகாவின் பிறப்பின்போது (1945) அமைச்சராக இருந்து, பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிகாவுக்கு 14 வயதாகும்போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிகாவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்திரிகா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிகா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராகப் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1976-1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். 1976-1979 காலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைச்சிற்கு விசேட ஆலோசகராகப் பணியாற்றினார்.

1978இல் சந்திரிகா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிகா தனது பெயரில் இருந்த ‘ண’வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிகா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார்.

1999 ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்குரிய காலத்திற்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்தத் திட்டமிட்டார். டிசம்பர் 18 1999இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, அவரைக் கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார். அங்கீகரிக்கப்படாத சுயசரிதை நூலான ‘கள்வரின் தலைவி’ என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களின் அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது ‘குண்டர் படை’யைக் கொண்டு செய்விக்கப்பட்டதாகக் கூறுகின்றார். அத்தேர்தலில் சந்திரிகா ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

குமார் பொன்னம்பலம் கொலை

நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துகளைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக்கட்டமாக 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இறந்த பின்னர், விடுதலைப் புலிகள் இவருக்கு ‘மாமனிதர் விருது’ வழங்கிக் கௌரவித்தனர்.

முகம்மது அஷ்ரப் மரணம்

முகம்மது ஹுசைன் முகம்மது அஷ்ரப் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். இலங்கைப் பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இவர் இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராவார்.

உலகின் முதல் பெண் பிரதமர் மரணம்

சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது கணவர், மறைந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் சொலமன் பண்டாரநாயக்கா. மகள் சந்திரிகா பண்டாரநாயக்கா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தவர். இவரது ஏனைய மக்கள் அநுர பண்டாரநாயக்கா, சுனேத்திர பண்டாரநாயக்கா ஆகியோராவார்.

இவர் தனது கணவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 1960 ஜூலை 21இல் முதன்முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழிநடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977இல் நடந்த தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்தது. 1980இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியின் போது, ஊழல் குற்றச்சாட்டுகளால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார். 2000ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 10ஆம் திகதி மரணமடைந்தார்.

ரணில் – பிரபா உடன்படிக்கை

நோர்வேயின் அனுசரணையுடன் 2002 பெப்ரவரியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமே, விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் என அழைக்கப்படுகிறது. புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

ஊடகவியலாளர் சிவராம் கொலை

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது. சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சிறீஸ்கந்தராஜா என்ற சந்தேகநபருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் குசல் பெரேரா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தர்மரத்தினம் சிவராம் கடத்திச் செல்லப்பட்டதைத் தான் நேரில் கண்டதாக குசல் பெரேரா தெரிவித்தார்.

கறுப்பு நிற பஜிரோ வாகனத்தில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் அவர்களை அடையாளம் காண முடியாமல் போனதாகவும் சாட்சியாளர் குசல் பெரேரா கூறினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் மது அருந்தியிருந்தபடியால் அருகிலிருந்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யத் தயங்கியதாகவும் அரச சட்டத்தரணியின் குறுக்குக் கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை

லக்ஸ்மன் கதிர்காமர் 1932 ஏப்ரல் 12ஆம் திகதி கண்டியில் பிறந்தார். இவர் மானிப்பாயைச் சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமர், பரிமளம் கதிர்காமர் தம்பதியின் ஆறாவதும் கடைசியுமான பிள்ளையாவார். பள்ளிக் கல்வியைக் கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிர்காமர், கல்லூரியின் துடுப்பாட்ட அணியின் தலைவராகவும், ரக்பி அணியினது அங்கத்தவராகவும் இருந்தார். கல்லூரித் தடகள விளையாட்டுகளிலும் பங்குபற்றி வந்தார். 1950ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தைக் கதிர்காமர் வென்றார்.

சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் ‘இன்னர் டெம்பள்’ (Inner Temple) வழியாகச் சட்டத்தரணியாகப் பதவியேற்றார். அதேவேளை ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துகொண்டார். இதன்போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஒக்ஸ்போர்டு பல்கலையின் மாணவர் ஒன்றியத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

கதிர்காமர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக 1994ஆம் ஆண்டு சித்திரை தொடக்கம் 2001 மார்கழி வரையும், பின்னர் 2004 சித்திரை தொடக்கம் 2005 புரட்டாதி வரையும் பதவி வகித்தார். 2005ஆம் ஆண்டு புரட்டாதி 13ஆம் திகதி அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

நான்காம் கட்ட ஈழப்போர்

திசையை மாற்றிய தேர்தல்?

2005 இலங்கை அதிபர் தேர்தலின்போது மகிந்த ராஜபக்ஷ புலிகள் மீது கடும் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை மீளத் தொடங்குவதாகவும் அறிவித்துப் போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்பட்டது. அதனால் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தமை, மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி

விடுதலைப் புலிகள் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது, இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுடன் ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்பாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976இல் உருவாக்கப்பட்டது. தமிழீழம் என்ற பெயரில் இலங்கையின் வடக்கு-கிழக்கில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன், இவ்வமைப்பு 1976 மே 5ஆம் திகதியில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது. இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர், இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009இல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2001இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005இன் இறுதியில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009இல் புலிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். மே 24, 2009இல், கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன், புலிகள் வன்முறையைக் கைவிட்டுவிட்டதாகவும், இனி மக்களாட்சி வழியில் செயற்படப்போவதாகவும் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்தவர்கள்

பண்ருட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டரான சுப்பிரமணி என்ற 43 வயதுடையவர், ஈழத்தமிழர்களைக் காக்கக் கோரி 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று குளத்தூர் பாளையம் என்ற இடத்தில் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் மனைவி உள்ளனர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் போரில் சிக்கித் தவிப்பதைப் பற்றி அடிக்கடி தனது குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பேசி வந்துள்ளார். இவர் ஈழத்தமிழர்களுக்காக உயிர்விடுவதைப் பற்றித் தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியம், சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்புவின் மகன் கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்தார். பொறியியல் பட்டதாரியான இவருக்குத் திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். உடன்பிறந்த இரு தம்பிகளின் படிப்புச் செலவுகளை இவரே கவனித்து வந்தார். சில மாதங்களாகவே, இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷ நடத்திய இனப்படுகொலை, இளம் பெண்களைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதைப் பாதித்துள்ளன. தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. 19.04.2011 அன்று அதிகாலை 5 மணியளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 3 லீற்றர் பெற்றோலை கொஞ்சம் கொஞ்சமாக தன் மீது ஊற்றித் தீவைத்துக்கொண்டவாறு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர். தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, “இலங்கையில் தமிழர்களைக் கொலை செய்துவிட்டார்கள். இனி நான் இருந்து என்ன பயன்? அதனால் நான் தீக்குளிக்கிறேன்” என்று கூறியவாறே மயங்கி விழுந்தார். மயக்கமடைந்த கிருஷ்ணமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவரது குடும்பத்தினரிடம் கிடைத்தது. அதில், ஈழத்தமிழர்களுக்குத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே தான் தீக்குளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி 2009 பெப்ரவரி 7 அன்று மலேசியாவில் 27 வயதுடைய இலங்கைத் தமிழ் இளைஞர் ராஜா என்பவர் தீக்குளித்து இறந்தார். ராஜா தீக்குளித்த இடத்தில் பெரிய நாட்குறிப்பு, பணப்பை, தீப்பெட்டி ஆகியவை கிடந்தன. அந்த நாட்குறிப்பில் ராஜா உருக்கமான கடிதம் ஒன்றை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ‘இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்படவும், உடனடிப் பேச்சுவார்த்தை மூலம் அப்பாவித் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் அமெரிக்க அதிபர் ஒபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும்; அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், நோர்வே அமைதித் தூதர் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் செல்ல வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தின் முன்பாக, 2009 பிப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 முதல் 9:45 மணிக்குள், லண்டனைச் சேர்ந்த ஈழத்தமிழரான வர்ணகுலசிங்கம் முருகதாசன் (துன்னாலை, வயது 27) என்ற இளைஞர், இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக் கோரித் தீக்குளித்து உயிர்நீத்தார். இவர் 7 பக்கங்களில் ‘உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்’ என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதிவைத்திருந்தார். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்