பற்றிக் பீபிள்ஸ் (Patrick Peebles) என்ற ஆய்வாளர் ‘Social Change In Nineteenth Century Ceylon (1995)’ என்ற நூலை எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தோற்றம் பெற்ற முதலியார்கள் என்ற உயர் சமூகக் குழு (Social Elites) பற்றி பற்றிக் பீபிள்ஸ் இந்நூலில் விரிவாக ஆராய்கிறார். இக்கட்டுரை, பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள் வகுப்பு பற்றிக் கூறியிருப்பவற்றைத் தமிழில் அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
உயர்குழாம் (Elites) என்னும் எண்ணக்கருவை முன்வைத்து இலங்கையின் சமூக மாற்றங்களை ஆராய்ந்தவர்களின் வரிசையில் பற்றிக் பீபிள்ஸ் ஓர் முன்னோடியாக முதலிடத்தைப் பெறுகின்றார். அவர் ‘The Transformation of a Colonial Elite: The Mudaliyars of Nineteenth Century Ceylon’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டை 1973இல் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். அவரது மேற்குறித்த ஆய்வேடு நூலாகப் பிரசுரிக்கப்படவில்லை. பிரசுரிக்கப்படாத இந்த ஆய்வேட்டில் உள்ளடங்கிய கருத்துகளை இவர் பின்னர் 1995ஆம் ஆண்டில், 22 ஆண்டுகள் கடந்த பின் ‘Social Change in Nineteenth Century Ceylon’ என்னும் தலைப்பில் நூலாகப் பிரசுரித்தார். பற்றிக் பீபிள்ஸ் அவர்களுக்குப் பின்னர் இவ்விடயம் குறித்து ஆராய்ந்தவராக மைக்கேல் றொபர்ட்ஸ் (Michael Roberts) அவர்களைக் குறிப்பிடலாம். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வாகச் சமர்ப்பித்த ஆய்வேட்டை ‘Caste Conflict and Elite Formation: The Rise of a Karava Elite in Sri Lanka’ என்னும் நூலாக வெளியிட்டார். மைக்கல் றொபர்ட்ஸ் அவர்களின் நூல் 1982இல் வெளியானது. இந்நூல்களின் வரிசையில் அமையும் மூன்றாவது முக்கியமான ஆக்கமாக குமாரி ஜயவர்த்தன அவர்கள் எழுதிய ‘Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka’ என்னும் நூல் அமைந்தது. 2007ஆம் ஆண்டு வெளியான இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்னும் தலைப்பில் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்மூன்று நூல்களும் இவ்விடயப் பொருள் குறித்த முக்கியமான படைப்புகள் என்பதையும், பற்றிக் பீபிள்ஸ் அவர்கள் இவ்விடயப் பொருள் பற்றி ஆராய்ந்தவர்களில் ஓர் முன்னோடி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
பற்றிக் பீபிள்ஸ், றொபர்ட்ஸ் ஆகிய இருவரும் உயர்குழாம் (Elites) என்ற சொல்லால் குறிப்பிடும் சமூகக் குழுவை, குமாரி ஜயவர்த்தன அவர்கள் முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். வர்க்கமும் சாதியும் (Class and Caste) என்னும் இருவிடயங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் முறையில் குமாரி ஜயவர்த்தன அவர்களின் ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை’ (Nobodies to Somebodies) என்னும் நூல் அமைந்துள்ளது. சாதியை விட வர்க்கங்களின் உருவாக்கமே பிரதானமானது என்பது குமாரி ஜயவர்த்தன அவர்களின் கருத்து எனவும் கூறலாம்.
சமூக அடுக்கமைவில் முதலியார்களின் இடம்
மேற்கு மாகாணத்தில் 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கம் பெற்ற முதலாளித்துவ உயர்வர்க்கத்தில் ஒரு படிநிலை அமைப்புக் காணப்பட்டது. ‘கொவிகம’ சாதியைச் சேர்ந்த முதலியார்கள் என்ற பிரிவினர் இப்படிநிலை அமைப்பின் உயர் அடுக்கினைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். இம்முதலியார்கள் டச்சுக்காரர் ஆட்சியின் போது கிறிஸ்தவர்களாகி, டச்சு ஆட்சியாளர்களின் சலுகைகளைப் பெற்று உயர்நிலை பெற்றனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இம்முதலியார்கள் குழுமம் நிலங்களைக் கொள்வனவு செய்து பெரும் நில உடைமையாளர்களாக உயர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியில் சாராய வர்த்தகம், காரியச் சுரங்க அகழ்வுத் தொழில் என்பனவற்றில் முதலீடுகளைச் செய்து உயர்ச்சியைப் பெற்ற குழுவாக புதிதாகத் தோற்றம் பெற்ற ‘கொவிகம’ முதலாளி வர்க்கம் விளங்கியது. சாதியால் வேறுபட்ட ‘கராவ முதலாளித்துவப் பிரிவினர்’ இந்த அடுக்கமைவில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தனர். கராவ முதலாளிகள் பிரிவினர் மொறட்டுவ – பாணந்துறைப் பகுதிகளை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்றனர். இம்மூன்று சமூகப் பிரிவினர்களுள் கொவிகம முதலியார்களின் எழுச்சியை, பற்றிக் பீபிள்ஸ் விவரிக்கிறார். இம்முதலியார்கள் பிரிவின் தோற்ற மூலத்தையும், அவர்கள் சமூகத்தில் உயர்குழுவாக எழுச்சி பெற்றதையும் பற்றிக் பீபிள்ஸ் விளக்கியிருப்பதை அடுத்து நோக்குவோம்.

சுதேச திணைக்களம் (Native Department)
‘சுதேச திணைக்களம்’ என்று அழைக்கப்பட்ட நிர்வாகப் பிரிவு ஒன்று இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போது உருவானது. முதலியார்கள், முகாந்திரங்கள் என்ற வகையிலான உத்தியோகத்தர்கள் இந்த நிர்வாகப் பிரிவுக்குள் அடங்குபவர்கள். 1833ஆம் ஆண்டில் உள்ளபடி இப்பதவிகளில் நான்கு வகையினர் இருந்தனர் என்று பீபிள்ஸ் குறிப்பிடுகிறார்.
- தேசாதிபதியின் அலுவலகத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பணிபுரிந்த ‘கேற்’ முதலியார், ‘கார்ட்’ (Guard) முதலியார், மஹா முதலியார் என்போர் முதல்வகையினர். இவர்கள் தேசாதிபதியின் மொழிபெயர்ப்பாளர்களாகவும் நீதிமன்றுகளின் மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிந்தனர். இவர்கள் உயர் உத்தியோகத்தர்களின் மொழிபெயர்ப்பாளர்களாகவும் இருந்தனர்.
- கச்சேரியில் பணிபுரிந்த உத்தியோகத்தர்களின் தலைவராகப் பணியாற்றிய அத்தப்பத்து முதலியார், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இரண்டாவது முதலியார் என்ற இருவரை இரண்டாம் வகைக்குள் அடக்கலாம். இவர்கள் அரசாங்க அதிபரின் கடிதத் தொடர்புகளை கவனிப்போராகவும் உரைபெயர்ப்பாளர்களாகவும் இருந்தனர்.
- கோறளை என்ற நிர்வாகப் பிரிவுகளின் தலைவர்களாக இருந்த கோறளை முதலியார்கள் மூன்றாம் பிரிவினர். மேற்கு மாகாணத்தில் சியான் கோறளை மேற்கு, சியான் கோறளை கிழக்கு, ஹப்பிட்டிகம் கோறளை, ஹேவகம் கோறளை, றைகம் கோறளை ஆகிய பல கோறளைப் பிரிவுகள் இருந்தன. இப்பிரிவுகளில் வரிகளை அறவிடுதல், அரசாங்க வருமானத்தை அறவிடுதல், ராஜகாரியம் என்ற ஊழியத்தைச் செய்வித்தல் ஆகிய பணிகளை கோறளை முதலியார்கள் செய்து வந்தனர்.
- முதலியார்களில் இருந்து பதவிப் பெயர்களில் வேறுபாடு உடைய சாதித் தலைமைக்காரர்களும் சில சாதிகளின் தலைவர்களாக இருந்தனர். சலவைத் தொழில் செய்வோர் சாதியின் மஹரிதான, வெள்ளி என்ற உலோகத்தோடு தொடர்புடைய தொழில் செய்வோரின் மேஸ்திரி ஆகியோர் இப்பிரிவில் அடங்குவர்.
மேலே குறிப்பிட்ட நான்கு வகையினருள் மூன்று வகையினரும் கொவிகம சாதியினராகவே இருந்தனர். பீபிள்ஸ் நூலில் (பக். 57) தரப்பட்டுள்ள மேற்படி வகைப்பாடுகள் முதலியார்கள் என்போர் யார்? அவர்களின் பதவிப் பொறுப்புகள் யாவை? என்ற கேள்விகளுக்கான விடையை வரலாற்றுப் பின்னணியில் விளங்கிக் கொள்ள உதவுகிறது.
கௌரவப்பட்டமா அல்லது உத்தியோகமா?
முதலியார் என அழைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் எவ்வித உத்தியோகக் கடமைகள் அற்றவர்களாயும் சம்பளம் பெறாதவர்களாயும் இருந்தனர். 1915இல் வெளியிடப்பட்ட ‘சிலோன் அல்மனாக்’ என்ற பிரசுரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் பீபிள்ஸ் சில புள்ளிவிவரங்களைத் தருகிறார் (பக் 68). சிங்களப் பகுதிகளில் சுதேசித் திணைக்களத்தின் கீழ் 193 முதலியார்கள் இருந்தனர். இவர்களுள் முதலியார்கள் 8, ‘கேற்’ முகாந்திரங்கள் 5, முகாந்திரங்கள் 39 என 52 பேர் வெறும் கௌரவப் பட்டங்களைப் பெற்றவர்களாய் இருந்தனர். இவ்விதம் கௌரவப் பட்டங்களைப் பெற்றவர்களாய் இருந்தவர்களுடன் மேற்கு மாகாணத்திற்கு வெளியே இருந்த முதலியார்கள் தொகையையும் நீக்கிவிட்டுப் பார்க்கும் போது, ஏறக்குறைய 76 வரையான முதலியார் பதவிகள் மேற்கு மாகாணத்தில் இருந்தன. இப்பதவிகளைப் பெறுவதற்கு மேற்கு மாகாணத்தின் உயர்குல முதலியார் குடும்பத்தினர் போட்டியிட்டனர் என்று கருத முடிகின்றது என பீபிள்ஸ் கூறுகிறார்.
முதலியார் பதவிக்கு ஆட்சேர்ப்பு
முதலியார் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பில் பிரித்தானியர் ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளில் நான்கு அம்சங்கள் இருந்தன என்று பீபிள்ஸ் கூறுகிறார் (பக். 69).
- கொவிகம சாதியின் ஏகபோக உரிமை போன்று இப்பதவிகள் இருந்தன. பெரும்பான்மை நியமனங்கள் இச்சாதியினருக்கே வழங்கப்பட்டன.
- பரம்பரை முதலியார் குடும்பங்களில் இருந்தே பெரும்பான்மை நியமனங்கள் செய்யப்பட்டன.
- புதிய நியமனங்கள் செய்யப்படும் போது குறித்த பதவியில் இருந்தவரின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
- பிறப்பால் முதலியார் குடும்பத்தவராய் இருப்பது மட்டுமன்றி நியமிக்கப்படும் நபரின் தனிப்பட்ட தகுதிகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இத்தனிப்பட்ட தகுதிகளில் ஆங்கிலக் கல்வியைப் பெற்றவராய் இருத்தல் முக்கிய தகுதியாகக் கொள்ளப்பட்டது.
மேற்குறிப்பிட்ட முறையில் முதலியார் குடும்பங்கள் ஒன்றிணைந்தன. டி சேரம் குடும்பத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்த இந்த ஒன்றிணைவு அக்குடும்பத்தின் உறவுக் குடும்பமான டயஸ் பண்டாரநாயக்க – ஒபயசேகர குடும்பத் தலைமைக்குள் வந்து சேர்ந்தது. இதுவே வரலாற்றாசிரியர்களாலும், அரசியல் அறிஞர்களாலும், சமூகவியலாளர்களாலும் அடையாளம் காணப்பட்ட இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார் குழுமம் (Mudaliyar Clan) ஆகும். இக்குழுமத்தின் குடும்பங்களில் முக்கியமானவையாக டி சேரம், டயஸ் பண்டாரநாயக்க, ஒபயசேகர, பிலிப்ஸ் பண்டிதரட்ண, டி சில்வா, டி லிவோரா, டி அல்விஸ் ஆகியன காணப்படுகின்றன. இக்குடும்பங்கள் ஒன்றோடொன்று திருமண உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இப்பிணைப்பின் மூலம் இக்குடும்பக் குழுமம் முதலியார் பதவிகளை தமக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டது. மேற்குறித்த பெயர்களுக்கு முன்னால் டேவிட், லூயிஸ், சைமன், கிறிஸ்ரோபல், யாக்கோப், பீலிக்ஸ், சொலமன் முதலிய முதற்பெயர்களைக் கொண்டிருந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் உயர்நிலை பெற்ற தனிநபர்களாய் இலங்கையின் அரசியல், சமூக வாழ்வில் பிரகாசித்தனர். முதலியார் குழுமம் ஒரு சமூகக் குழுவாக எழுச்சி பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகள் உதவின.
- திருமண உறவுகள் மூலம் தமது குழுவின் எல்லைகளை வரையறை செய்து பெரும்பான்மைப் பதவிகளை தமது குடும்பத்துக்குள் வைத்துக் கொள்ளல்.
- ஆங்கிலக்கல்வியும், கிறிஸ்தவ மதத்தைத் தழுவுதலும்.
- காணிகளின் உடைமையாளர்களாகி நிலப் பிரபுக்களாகவும், பெருந்தோட்ட உடைமையாளர்களாகவும் உயர்ச்சி பெறுதல்.
முதலியார் குடும்பத்தின் ஒன்றிணைவு
19ஆம் நூற்றாண்டில் சிங்கள சமூகத்தில் ஒன்றோடொன்று திருமண உறவுகளால் பிணைக்கப்பட்ட உயர்குடும்பங்கள் சமூக அந்தஸ்தில் உயர்நிலை பெற்றன. உறவுக்குடும்பங்களின் ஒன்று சேர்கையில் இரு அம்சங்கள் இருந்தன. உயர்வடைந்து சென்ற குடும்பங்கள் தமக்குள் சில குடும்பங்களை திருமண உறவு மூலம் சேர்த்துக் கொள்ளுதல். இவ்வாறு சேர்த்துக் கொள்ளும் போது முதலில் தூரத்து உறவுக்காரர்களாக இருந்த குடும்பங்கள் கூட திருமண உறவால் கிட்டியனவாகும். இரண்டாவது, தமது உறவுக்காரர்களாக இருந்த குடும்பங்கள் காலப்போக்கில் பணம், உத்தியோகம், நில உடைமை ஆகிய தகுதிகளால் தாழ்ந்து போகுமிடத்து அவற்றை விலக்கி விடுதல். இவ்வாறாக உருவாகிய குடும்ப வலைப்பின்னலை (Family Network) மானிடவியலாளர் கணநாத் ஒபயசேகர ‘பெலன்டிய’ (Pelantiya) அமைப்பு என்ற சிங்களச் சொல் மூலம் குறிப்பிடுகிறார். மேற்கு மாகாணத்தின் முதலியார் குடும்பங்களும் பெலன்டிய அமைப்பாகவிருந்தன. டி சேரம், டயஸ் பண்டாரநாயக்க – ஒபயசேகர குழுமம் இத்தகையதோர் உறவுக் குடும்ப உயர்குழாம் ஆகும். ‘Land Tenure In Village Ceylon’ என்ற நூலில் இருந்து கணநாத் ஒபயசேகரவின் மேற்கோள் ஒன்றைப் பீபிள்ஸ் தம் நூலில் தந்துள்ளார். அதனைக் கீழே எமது மொழிபெயர்ப்பில் தந்துள்ளோம்.
“நகரம்சார் சிங்கள மத்தியவர்க்கம் என்று நாம் குறிப்பிடும் பிரிவினரில் பெரும்பாலானோர் எமது பகுதியில் காணப்படும் ‘பெலன்டிய’ வகைக் குடும்பங்களில் இருந்து தோன்றியவர்களாவர். இவ்வர்க்கத்தினர் அரசாங்கத்திலும், வர்த்தகத் துறையிலும் உயர் அலுவலர் உத்தியோகங்களைத் தமதாக்கிக் கொண்டு தேசிய உயர்குழாம் (National Elite) என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஆகவே மத்திய வர்க்கம், தேசிய உயர் அலுவலர் உயர்குழாம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் ‘பெலன்டிய’ முக்கிய வகிபாகத்தைப் பெற்றுள்ளது” (பீபிள்ஸ் நூலின், பக். 92).
ஆங்கிலக் கல்வியும், கிறிஸ்தவ மதத்தைத் தழுவுதலும்
பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பக்கட்டத்தில் கல்வி அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்ற கொள்கையே பின்பற்றப்பட்டது. ஆயினும், முதலியார்களுக்குத் தரமான ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டிருந்தது. கிறிஸ்தவர்களாகவும், அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் இருந்த முதலியார்களின் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிப்பது அவர்களது விசுவாசத்தைத் தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கான வழி என்பதை அரசு உணர்ந்தது. இதைக்கருத்தில் கொண்டு ஆங்கிலக் கல்வி கிறிஸ்தவ மிசனரிகளிடம் பொறுப்பளிக்கப்பட்டது. முதலியார்களும் விசுவாசம் மிக்க கிறிஸ்தவர்களாகவும் ஆங்கிலக் கல்வியைப் பெறும் ஆர்வம் உடையவர்களாகவும் இருந்தனர். அரசாங்கம் முதலியார்களை கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ஆயினும் முதலியார்கள் கிறிஸ்தவத் திருச்சபையின் தூண்களாயினர். பலர் பாதிரிகளாகவும் பதவி வகித்தனர். முதலியார் நியமனங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். முதலியார் டொன் ஆப்பிரஹாம் டி தோமஸ் மொழிபெயர்ப்பாளராகச் செய்த சேவைக்காக ‘கேற்’ முதலியார் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். நோர்த் தேசாதிபதி காலத்தில் ‘ஹில்’ வீதியில் (Hill Street) தனியார் பாடசாலை ஒன்று 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் முதலியார்களதும் பிற உயர் குழாம் மக்களதும் பிள்ளைகள் படித்தனர். இப்பாடசாலை பின்னர் கொழும்பு அக்கடமியாக அரசாங்க ஆதரவில் வளர்ச்சி பெற்றது.
வேறு பல பாடசாலைகளும் கொழும்பில் தோன்றின. 1833ஆம் ஆண்டளவில் ஆங்கிலக் கல்வி முதலியார்களின் ஏகபோகமாகவே இருந்தது. முதலியார்கள், தம் பிள்ளைகளோடு கொவிகம சாதியல்லாத பிள்ளைகள், ஒரே வகுப்பில் ஒரே ஆசனத்தில் இருந்து படிப்பதை விரும்பவில்லை. ஆயினும் மிசனரிகள் எல்லா சாதிப்பிள்ளைகளுக்கும் சம ஆசனம் வழங்குதல் என்ற கொள்கையைக் கடைப்பிடித்தனர். முதலியார்களின் பிள்ளைகள் வெளிநாடு சென்றும் கல்வி கற்றனர். கிறிஸ்தோபர் டி சேரம், மஹா முதலியார் பதவியில் இருந்தவர். ஹென்றிக் டி சேரம் என்பவரும் மஹா முலியாராக இருந்தார். இவர்களது பிள்ளைகளான கிறிஸ்தோபர் டி சேரம், லூயிஸ் டி சேரம் ஆகிய இரு சிறுவர்கள் அரசாங்க உதவிப்பணம் பெற்று இங்கிலாந்தில் கல்வி கற்பதற்கு அனுப்பப்படனர். இவ்விதமாக ஆங்கிலக் கல்வியை விரைந்து பெற்றுக்கொண்ட முதலியார்கள், கிறிஸ்தவர்களாகவும், ஆங்கிலக் கலாசாரத்துடன் இணைந்தவர்களாகவும் ஆயினர். ‘இலங்கை பற்றிய விவரிப்பு’ என்ற நூலில் ஜேம்ஸ் கோர்டினர் என்பவர் முதலியார் குழுமத்தின் இளம் அறிவாளிகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார் (1803இல் எழுதப்பட்ட இக்குறிப்பு பிரித்தானிய ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில் எழுதப்பட்டது என்பதைக் கவனித்தல் வேண்டும்).
“சிங்கள அறிவாளிகள் முதலியார்களின் புத்திரர்கள். அவர்கள் (முதலியார்கள்) இந்த நாட்டின் முதல்தர மனிதர்கள். இந்த அறிவாளிகளில் பலர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வல்லவர்கள். அம்மொழியில் நன்றாக எழுதவும் சிங்களத்தில் இருந்து மிகச்சரியான மொழிபெயர்ப்புகளைச் செய்யவும் திறமை படைத்தோராக உள்ளனர்.”
நில உடைமையாளர்களான முதலியார்கள் வகுப்பு
பிரித்தானிய ஆட்சியின் தொடக்கத்தில் இலங்கையின் மேற்கு மாகாணத்தில் பெருநில உடைமையாளர் வகுப்பு ஒன்று இருந்ததெனக் கூற முடியாது. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கத்தில் இலங்கை சிறுநில உடைமையாளர்களான விவசாயக் குடியான்களின் நாடாகவே இருந்தது. நோர்த் தேசாதிபதி காணிகளை சுதேசிகளுக்கும் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதன் பயனாக முதலியார்கள் காணிகளின் உடைமையாளர்களானார்கள். மிகப்பெரிய நில உடைமையாளர்களுள் முதலியார் குழுமத்தைச் சேர்ந்த 8 நபர்களின் பெயர்களை பீபிள்ஸ் தருகின்றார். அவை வருமாறு (பக். 108):
- சொலமன் டயஸ் பண்டாரநாயக்க
- கறோலிஸ் டி லிவேரா
- ஜொகான்ஸ் பௌலஸ் பெரரா
- ஜோன் லூயிஸ் பெரரா
- சைமன் பரன்ட் டி சில்வா
- ஹன்திமாப்கோ அல்லது ஆஸ்டன்
- கிறிஸ்ரோபல் டி சேரம்
- ஜோகன் ஜெராப் பிலிப்பஸ் பண்டிதரட்ண
மேற்குறிப்பிட்ட தகவல்களை 1829ஆம் ஆண்டின் நிலவுடைமை பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தந்திருப்பதாக பீபிள்ஸ் குறிப்பிடுகின்றார்.
மேற்கு மாகாணத்தின் முதலியார் குடும்பத்திற்கு வெளியே இருந்து பெரும் நில உடைமையாளர்களாக மூன்று பெயர்களைப் பீபிள்ஸ் குறிப்பிடுகிறார். அவர்கள் அட்ரியன் ஜயவர்த்தன, டேவிட் இலங்கக்கோன், அட்ரியன் டி ஆப்ரு ராஜபக்ச என்போராவார். கோப்பிச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மொறட்டுவ – பாணந்துறையைச் சேர்ந்த கராவ முயற்சியாளர்களும் பிறரும் பெருந்தோட்டக் காணிகளின் உடைமையாளர்கள் ஆயினர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெங்குத் தோட்டங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் மேற்கு மாகாணத்தின் முதலியார் குழுமம் இலங்கையின் பெருநில உடைமையாளர்களில் மிக முக்கியம் வாய்ந்த குழுவாக இருந்தது.
1887–88 காலத்தில் முதலியார் குழுமத்தைச் சேர்ந்த 6 நபர்களிடம் 10,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட பரப்பளவுடைய பெருந்தோட்டங்கள் இருந்ததை இன்னொரு ஆய்வாளரான குமாரி ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். அவர் தரும் புள்ளிவிவரங்கள் வருமாறு:
| பெயர் | ஏக்கர் காணி |
| ஜே.பி. ஒபயசேகர | 1334 |
| டி.சி.எச். டயஸ் பண்டாரநாயக்க | 2100 |
| எஸ்.சி. ஒபயசேகர | 1400 |
| ஹென்றி டயஸ் | 2178 |
| ஜோன் ஆப்பிரஹாம் பெரரா | 1928 |
| ஜேம்ஸ் டி அல்விஸ் | 1202 |
| மொத்தம் | 10,142 |
முடிவுரை
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி பற்றிக் பீபிள்ஸ் தமது ஆய்வினை 19ஆம் நூற்றாண்டு என எல்லைப்படுத்தியுள்ளார். மேலும் அவர் (அ) மேற்கு மாகாணம், (ஆ) மேற்கு மாகாணத்தின் முதலியார்களும் கராவ சாதி உயர்குழாமும் என்றும் தமது நூலின் விடயப்பரப்பை ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் உட்பட்ட இரு உயர்குழுக்கள் பற்றியதாக மட்டுப்படுத்தியுள்ளார்.
ஒன்பது அத்தியாயங்களையும் 288 பக்கங்களையும் உடைய பற்றிக் பீபிள்ஸ் அவர்களின் நூலின் முதல் நான்கு அத்தியாயங்களில் உள்ள தகவல்களைப் பிரதான ஆதாரமாகக் கொண்டு முதலியார் குழுமம் என்ற உயர்குழாம் 19ஆம் நூற்றாண்டில் எழுச்சிப் பெற்ற வரலாற்றைச் சுருக்கமாக இக்கட்டுரையில் கூறியுள்ளோம். நூலின் ஆறாம் அத்தியாயம் கராவ உயர்குழுமம் (The Karava Elite) என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இது மொறட்டுவ – பாணந்துறை பகுதியினை மையமாகக் கொண்டு உயர்ச்சி பெற்ற கராவ உயர்குழாம் பற்றிய தகவல்களைக் கொண்டது. இவ்விடயம் தனியாக ஆராயப்பட வேண்டியது.



