அறிமுகம்
சார்புக் கோட்பாடு (Dependency Theory) என்னும் பொருளியல் கோட்பாட்டின் நோக்கில் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரப் பின்னடைவையும் குறைவிருத்தியையும் (Under-development) விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சார்புக் கோட்பாட்டின் பிரதானமான எண்ணக்கரு ‘சார்பு நிலை’ (Dependency) என்பதாகும். சார்பு நிலை என்பதை தங்கியிருத்தல் எனவும் தமிழில் கூறலாம்.
உலக முதலாளித்துவப் பொருளாதார முறைமையில் மையம் (Centre), சார்பு மண்டலம் (Periphery) என இருவகை நாடுகள் உள்ளன. இவ்விருவகை நாடுகளுக்குமிடையில் சமத்துவமற்ற பொருளாதார உறவுகள் உள்ளன எனச் சார்புக் கோட்பாட்டாளர்கள் விளக்குவர். சார்பு நாடுகளின் சார்பு நிலை (Dependency) அல்லது தங்கியிருத்தல் பலமற்ற அந்நாடுகளில் விருத்திக் குறைவையும், பலமுள்ள மைய நாடுகளில் விருத்தியையும் (Development) ஏற்படுத்துகிறது. மைய நாடுகள், சார்பு நாடுகளைச் சுரண்டுகின்றன. இவ்விரு வகை நாடுகளுக்குமிடையே மேலாதிக்கம் (Dominance), சார்பு நிலை (Dependence) என்னும் உறவுகள் நீடிக்கின்றன.
விருத்தியும் (Development) குறைவிருத்தியும் (Underdevelopment) ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. விருத்தியுற்ற மைய நாடுகளுக்கும் குறைவிருத்தியுடைய குறைவளர்ச்சி நாடுகளுக்கும் (Less Developed Countries – LDC) இடையே சமத்துவமற்ற உறவுகள் நீடிக்கின்றன.
சார்பு நிலை இருவகையானது என்றும் சார்புக் கோட்பாட்டாளர்கள் விளக்குவர். மேலே குறிப்பிட்டதுபோல் சார்பு நாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வெளியகச் சார்பு நிலை (External Dependency) என்பர். சார்பு நாடு ஒன்றுக்குள்ளேயும், மையம் – சார்புப் பகுதி என்ற வகையிலான உள்ளகச் சார்புநிலை (Internal Dependency) செயற்பாட்டில் உள்ளது எனவும் இக்கோட்பாடு விளக்குகிறது.
அடுத்து சார்புக் கோட்பாட்டை இலங்கைக்கும், இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் பிரயோகித்து, எவ்வாறு தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்த இம்மாகாணங்கள் தமது சுயத்துவத்தை இழந்து கொழும்பு என்ற மையத்தின் சார்புப் பகுதிகளாக மாறின என்பதை நோக்குவோம். இதனை விளக்குவதற்கு வி. நித்தியானந்தம், குமாரி ஜயவர்த்தன ஆகிய இருவரது நூல்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளோம்.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் வருவதற்கு முன்னர் சுயத்துவம் உடைய பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. போர்த்துக்கேயருடன் ஆரம்பித்த காலனித்துவ ஆட்சி ஒல்லாந்தர், பிரித்தானியர் வரை தொடர்ந்தது. காலனித்துவத்தின் கீழ் யாழ்ப்பாணத்தினதும் வடக்குக் கிழக்கினதும் சுயத்துவம் இழக்கப்பட்டது. அவை படிப்படியாக குறைவிருத்திப் பகுதிகளாயின. பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கோப்பிச் செய்கையுடன் பெருந்தோட்டப் பொருளாதாரம் ஒன்று உருவாகியது. அது தேயிலை, றப்பர், தெங்கு உற்பத்தியை பிரதானப்படுத்தியதாக வளர்ச்சிபெற்றது.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் பொருளாதாரம் தன் சுயத்துவத்தை இழந்தது மட்டுமன்றி, இலங்கையின் மையப்பகுதியாக (Centre) மாற்றம் பெற்ற கொழும்பு நகரின் சார்பு மண்டலமாகவும் (Periphery) அப்பகுதிகள் மாறின. இலங்கை முழுமையாக உலக முதலாளித்துவப் பொருளாதார முறைமையில் பிணைக்கப்பட்டு எப்படி ஒரு சார்பு மண்டலமாக மாறியதோ, அதேபோன்று உள்நாட்டிலும் கொழும்பு மையமாகவும் வடக்கு, கிழக்கு கொழும்பின் சார்பு மண்டலமாகவும் மாற்றம் பெற்றது. உலக முதலாளித்துவ வளர்ச்சியின் சமனற்ற விருத்தி (Under-development) உள்நாட்டுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது.
இந்தச் சமனற்ற வளர்ச்சியை விளக்கும் இரு நூல்கள் இக்கட்டுரைக்கு ஆதாரமாக அமைகின்றன. அவற்றில் ஒன்று பேராசிரியர் வி. நித்தியானந்தம் எழுதிய ‘இலங்கையின் பொருளாதார வரலாறு – வடக்குக் கிழக்குப் பரிமாணம்’ என்பது ஆகும். இன்னொரு நூல் குமாரி ஜெயவர்த்தன எழுதிய ‘அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்டவர்களானமை: இலங்கையில் காலனித்துவ முதலாளித்துவத்தின் தோற்றம்’ (Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka) எனும் நூலாகும். இவ்விரு நூல்களோடு சார்புக் கோட்பாட்டாளர்கள் எடுத்துக்கூறிய எண்ணக்கருக்களான,
- சமனற்ற விருத்தி
- குறைவிருத்தியின் விருத்தி (Development of Underdevelopment)
- மையத்தில் தங்கியிருக்கும் சார்பு மண்டலம்
ஆகியவற்றின் துணையுடன் வடக்குக் கிழக்கின் குறைவிருத்தி விளக்கப்படும்.
பொருளாதார சுயத்துவத்தை இழத்தல்
1619ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் ஆட்சி அதிகாரத்தின் பிடியில் வீழ்ச்சியுற்ற காலத்தில் இருந்து படிப்படியாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமது பொருளாதார சுயத்துவத்தை இழக்கலாயின. ‘இலங்கையின் பொருளாதார வரலாறு – வடக்குக் கிழக்குப் பரிமாணம்’ என்னும் நூலில் கலாநிதி நித்தியானந்தம் இவ்வாறு எழுதுகிறார்.
“சமூகப் பொருளாதார அளவுகோல்களைக் கொண்டு பார்க்குமிடத்து, யாழ்ப்பாண இராச்சியம் ஒரு தன்னிறைவு சமுதாயமாக விளங்கியிருந்தது. உணவு, சமூக சேவைகள் என்ற யாவும் தனித்தனியே யாழ்ப்பாண இராச்சியத்துக்குள்ளான உற்பத்தி அலுவல்களில் மாத்திரமன்றி அதன் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளினதும் பங்களிப்புடனேயே பூர்த்தியாக்கப்பட்டது. 1344ஆம் ஆண்டு இபின் பதூதா (Ibn Battuta) இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட போது, யாழ்ப்பாண இராச்சியம் பெருமளவு வர்த்தக அலுவல்களிலீடுபடுவதொன்றாகவும், பரந்தளவு கடல் கடந்த தொடர்புகளைக் கொண்டதொன்றாகவும் விளங்கியிருந்ததென்று குறித்துச் சென்றமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.” (பக். 17, மே.கு.நூல்)
1619ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாண இராச்சியம் சுயத்துவமான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. காலனித்துவத்தின் கீழ் அது தன் சுயத்துவத்தை இழந்தது. நித்தியானந்தம் அவர்களின் நூலின் 2ஆம், 3ஆம் அத்தியாயங்களை சார்புக் கோட்பாட்டு எண்ணக்கருக்களின் பின்னணியில் வாசிக்கும் பொழுது இவ்வுண்மை தெளிவாகும். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் குறைவிருத்தி காலனித்துவத்தின் ஆட்சியுடன் ஆரம்பித்துவிட்டது எனலாம். போர்த்துக்கேய காலனித்துவத்திற்கு அடுத்து டச்சுக்காரர்களிடமும் பின்னர் பிரித்தானியரிடமும் யாழ்ப்பாணம் கைமாறியது. வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளும் கைமாறின. பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள் சமனற்ற வளர்ச்சியைத் தீவிரப்படுத்தி வடக்குக் கிழக்கு மாகாணங்களை கொழும்பின் சார்பு மண்டலம் (Periphery) என்ற நிலைக்கு மாற்றின. இந்த மாற்றங்களை அடுத்து நோக்குவோம்.
சார்பு மண்டலம் ஆதல்
1619ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சி ஒரு முக்கிய நிகழ்வு என்று கொள்வோமாயின், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் வடக்குக் கிழக்கை ஒரு சார்பு மண்டலமாக ஆக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இலங்கையின் மத்திய மலைநாட்டில் கோப்பிச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. கோப்பிச் செய்கையில் ஆரம்பித்த வணிக முதலாளித்துவம் (Merchant Capitalism) தேயிலை, றப்பர், தெங்கு என்னும் ஏற்றுமதிப் பயிர்களை உற்பத்தி செய்யும் பெருந்தோட்ட உற்பத்தி முறையை ஏற்படுத்தியது. ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்து, வர்த்தகம், கைத்தொழில் ஆகியவற்றையும் ஒன்றிணைத்து பெருந்தோட்ட உற்பத்திமுறை துரித வளர்ச்சி பெற்றது. இக்கட்டத்தில் வடக்குக் கிழக்கின் பொருளாதாரம் அந்தரே குந்தர் பிராங், சமிர் அமின் ஆகியோர் விவரித்திருக்கும் சார்புப் பகுதி (அதாவது சார்பு நாடு ஒன்றிற்குள் அமையும் சார்பு மண்டலம் – Periphery Within Periphery) என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தச் செயல்முறையை குமாரி ஜயவர்த்தனவின் நூலை ஆதாரமாகக் கொண்டு விளக்குவோம்.
குமாரி ஜயவர்த்தன ‘இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி’ (The Rise of Labor Movement in Ceylon) (1972) என்ற நூலின் ஆசிரியர். இவர் இலங்கையின் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றி முன்பு குறிப்பிட்ட நூலில் (Nobodies to Somebodies) ஆராய்ந்துள்ளார். 19ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற முதலாளித்துவத்தின் தமிழ்ப் பங்காளிகள் தமது வாழ்விடத்தை கொழும்புக்கு இடமாற்றிக் கொண்டனர். இந்த இடப்பெயர்ச்சி தவிர்க்க முடியாததும் மிகவும் அவசியமானதும் ஆயிற்று. வடக்குக் கிழக்கு இலங்கையின் சார்பு மண்டலமாகவும், கொழும்பு அதன் மையமாகவும் மாறிய கட்டத்தில் இலங்கையின் தமிழ் முதலாளித்துவம் ‘கொழும்புத் தமிழ்’ ஆகியதில் வியப்பெதுவும் இல்லை. குமாரி ஜயவர்த்தன அவர்கள் ‘தமிழ் முதலாளித்துவம்’ என இந்த மாற்றத்தைச் சரியாக அடையாளப்படுத்துகிறார். எமது கட்டுரையின் எஞ்சிய பகுதியில் பின்வரும் தலைப்புகளில் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பில் வடக்குக் கிழக்கு எவ்விதம் சார்பு மண்டலமாக மாறியது என்பதை மேலும் விரிவாக ஆராய்வோம்.
- கொழும்பு மையமாதலின் முக்கியத்துவம்
- ஆரம்பநிலை மூலதனத் திரட்சியும் வடக்குக் கிழக்கும்
- கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் எழுச்சி
கொழும்பு மையமாதலின் முக்கியத்துவம்
பிரித்தானிய ஆட்சியின்போது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் யாவற்றின் மையமாக கொழும்பு மாற்றம் பெற்றது. மத்திய மலைநாடும், இலங்கையின் தென்மேற்கு மாகாணமும் (குறிப்பாக கொழும்பு, பாணந்துறை, மொறட்டுவ, களுத்துறை ஆகிய நகரங்களும் அவற்றைச் சார்ந்த பகுதிகளும்), கொழும்பு நகரமும் இலங்கைப் பொருளாதாரத்தின் மையம் ஆகின. பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மட்டுமன்றி, அரசியல், சமூக நடவடிக்கைகளின் மையமாகவும், காலனித்துவ ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தின் செயற்பாட்டுத் தளமாகவும் கொழும்பு மாற்றம் பெற்றது.
இலங்கையின் தமிழ் முதலாளித்துவம் தேசிய நிலைப்பட்ட உயர்குழாம் (National Elite) ஆகும். அது தன் பொருளாதாரப் பரிமாணம் வழியிலான உயர்குழாம் தகுதியை பிரதேச மட்டத்தில் கால் கொண்டபடி நின்றவாறே பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் யாழ்ப்பாணமும், மட்டக்களப்பும் இலங்கைப் பொருளாதாரத்தின் விளிம்புநிலைப் பகுதியாக, சார்புப் பகுதியாக மாறிவிட்டிருந்தன. அவை தம் சுயத்துவத்தை இழந்து கொழும்பு என்ற மையத்தின் சுரண்டலுக்கும், சமூக, அரசியல், கலாசார அடிமைத்தனத்திற்கும் உரிய பிராந்தியங்களாக மாறத் தொடங்கின. ஆக, 19ஆம், 20ஆம் நூற்றாண்டின் தமிழ் முதலாளித்துவம் ‘கொழும்பு முதலாளித்துவம்’ ஆகவும் இருந்தது.
19ஆம் நூற்றாண்டில் உயர்நிலை பெற்ற தமிழ்க் குடும்பங்களில் ஒன்று பொன்னம்பலம் குமாரசுவாமி குடும்பம். இக்குடும்பத்தில் இருந்து சேர். முத்துக்குமாரசுவாமி, அவரின் மகன் ஆனந்தகுமாரசாமி, சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணாசலம் ஆகியோர் தோன்றினர். இவர்கள் 19ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல், சமூக, பண்பாட்டு வாழ்க்கையில் முதன்மை பெற்றிருந்த தலைவர்களாவர். இக்குடும்பத்தின் எழுச்சிக்கு ஏதுவாக இருந்த காரணிகள் இரண்டினை குமாரி ஜயவர்த்தன குறிப்பிடுகிறார்.
“குமாரசுவாமி குடும்பத்தின் நிலை இரண்டு பிரதான தீர்மானங்கள் மூலம் உறுதியாயிற்று. அவற்றுள் முதலாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இடம்மாறியது தொடர்பான தீர்மானம். கொழும்பு அன்று வர்த்தகத்தினதும் அரசாங்க நிர்வாகத்தினதும் மையமாக இருந்தது. இரண்டாவது அக்குடும்பத்தினர் ஆங்கிலக் கல்வியை நாடியது. ஆங்கிலக் கல்வி மேல் நோக்கிய சமூக உயர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் ஆதாயத்தையும் வழங்கியது.” (பக். 209)
பொன்னம்பலம் குமாரசுவாமி குடும்பத்தின் எழுச்சிக்கு ஏதுவாக இருந்த இரு காரணிகளும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எல்லோருக்கும் பொதுவான விடயங்களாகவே இருந்தன. அவற்றுள் முதலாவது, கொழும்பு நோக்கிய இடப்பெயர்வு இல்லாமல் தேசிய உயர்குழாத்தின் உறுப்பினர் என்ற வகையில் தேசிய மட்டத்தில் உயர்நிலை பெறுதல் சாத்தியமற்றதாகவே இருந்தது. மைக்கல் றொபர்ட்ஸ் தமது கட்டுரை ஒன்றில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உயர்நிலை பெற்றிருந்த இலங்கையின் உயர்குடும்பங்கள் 21ஐ பட்டியலிட்டுகிறார். இப்பட்டியலில் இடம்பெறும் ஏழு குடும்பங்கள் விவரம் வருமாறு.
பிரான்சிஸ்கோ – மொறட்டுவ
ஹர்மானிஸ் டயஸ் – பாணந்துறை
பொன்னம்பல முதலியார் – கொழும்பு
அட்ரியன் ஜயவர்த்தன – கிராண்ட்பாஸ்
பானபொக்கே – உடபலாத்த, கண்டி
குறுவில – கண்டி
ரம்புக்பொத்த – ஊவா
இங்கே கவனிக்கக்கூடிய முக்கிய விடயம் இதுதான். மொறட்டுவ, பாணந்துறை, உடபலாத்த, கண்டி, ஊவா என்ற பிரதேச அடையாளங்களைக் கொண்டவர்கள் தமது சொந்த இடத்தில் கால் கொண்டு நின்றவாறே வர்த்தகம், உயர்தொழில் என்பவற்றில் உயர முடிந்தது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் கொழும்புக்கு இடம்பெயருதல் உயர்ச்சிக்கான முதல் நிபந்தனை ஆயிற்று.
ஆரம்பநிலை மூலதனத் திரட்சியும் வடக்குக் கிழக்கும்
ஒரு நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சியில் ஆரம்ப மூலதனத் திரட்சிக் (Primitive Accumulation) கட்டம் மிக முக்கியமானதாகும். 1796ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பின்னர் இந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கம் ஒன்று படிப்படியாக வளர வழிவகுத்தது. இந்த முதலாளித்துவ வர்க்கம் கொழும்பு நகரையும் கரையோரச் சிங்கள மாகாணங்களான மேற்கு மாகாணம், தென் மாகாணம் என்பவற்றையும் மையமாகக் கொண்டு வளர்ச்சிபெற்றது.
உள்ளூர் முதலாளி வர்க்கம் தமக்கு வேண்டிய ஆரம்ப மூலதனத்தை சாராய உற்பத்தி, சாராயக் குத்தகை என்பன மூலம் பெற்றது. சாராய வர்த்தகம் மூலம் ஆரம்ப மூலதனத் திரட்சி ஏற்பட்டதையும், அதன் பயனாக முதலாளித்துவம் எழுச்சி பெறுவதையும் குமாரி ஜயவர்த்தன தமது நூலின் மூன்றாம் அத்தியாயத்தில் விவரிக்கிறார். இந்த அத்தியாயத்துக்கு ‘சாராய வர்த்தகம் மூலம் மேற்கிளம்பல்’ (Taking-off through the arrack trade) எனத் தலைப்பிட்டுள்ளார்.
சாராய வர்த்தகத்தின் வளர்ச்சிப் போக்கினை ஆராயும் போது வடக்குக் கிழக்கு மாகாணம் ஏன் முதலாளித்துவ வளர்ச்சியின் பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது தெரியவரும். சமனற்ற வளர்ச்சியின் பின்னணியை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சாராய வர்த்தகத்தின் சமனற்ற வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டின் பிரதான இயல்பாக இருந்தது.
1837ஆம் ஆண்டு முதல் 1863 வரையான 25 வருட காலத்தில் சாராயக் குத்தகை வருமானமாக அரசுக்குக் கிடைத்த தொகை மூன்று மடங்கு அதிகரித்தது. 1837இல் இது 40,000 ஸ்டெர்லிங் பவுண்களாக இருந்து 1861–62இல் 120,000 ஸ்டெர்லிங் பவுண்களாக உயர்ந்தது. வெவ்வேறு மாகாணங்களில் கிடைத்த குத்தகை வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை பின்வரும் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
| மாகாணம் | 1861-61 காலத்தில் குத்தகை வருமானம் (ஸ்டெர்லிங் பவுண்களில்) |
| மேற்கு மாகாணம் | 57,000 |
| மத்திய மாகாணம் | 38,000 |
| வடமேற்கு மாகாணம் | 11,000 |
| தென் மாகாணம் | 8,000 |
| வடக்கு மாகாணம் | 4,000 |
| கிழக்கு மாகாணம் | 3,000 |
(குமாரி ஜயவர்த்தன, மே.கு.நூல், பக். 83)
| வடக்குக் கிழக்கு மாகாணங்களின் குத்தகைக்காரர்களும் குத்தகைத் தொகையும் 1870ஆம் ஆண்டு | ||
| இடம் | குத்தகைக்காரர் | தொகை (ஸ்டெர்லிங் பவுண்) |
| யாழ்ப்பாணம் | T. ராமலிங்கம் | 3,315 |
| மன்னார் | A. கதிரவேலுப்பிள்ளை | 907 |
| வன்னி | M. வெற்றிவேலு (1855ஆம் ஆண்டு) | 240 |
| திருகோணமலை | அ. சின்னக்குட்டிப்பிள்ளை | 2,450 |
| மட்டக்களப்பு | பஸ்டியன் டி சில்வாவும் A. பெர்ணாண்டோவும் (நீர்கொழும்பைச் சேர்ந்தவர்) | 525 |
(குமாரி ஜயவர்த்தன, மே.கு.நூல், பக்.82)
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சாராய உற்பத்தியும் வியாபாரமும் இலாபகரமாக இருக்கவில்லை என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கு, சாராயம் என்ற பண்டத்தின் உற்பத்தி – நுகர்வு இயல்புகள் சிலவற்றையும் அந்த வியாபாரம் ஏன் மேற்கு மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் இலாபகரமாக இருந்தது என்பதையும் நோக்குதல் வேண்டும்.
- சாராயம் குடிப்பதற்கான கலாசாரம் ஒன்று தொழிலாளர் வர்க்கக் குடியிருப்புகளையும் நகரங்களையும் சார்ந்துமே வளர்ச்சியடைந்தது.
- கோப்பித் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளர்களாக அழைத்துவரப்பட்டவர்கள் மத்திய மலைநாட்டில் சாராயத் தவறணைகளின் விற்பனையை பல மடங்கு உயர்த்தினர். கொழும்பிலும் மேற்கு மாகாண நகரங்களிலும் பெருந்தோட்டத்தோடு இணைந்த பல தொழில்கள் சார்ந்து உழைப்பாளர் வகுப்பு ஒன்று உருவானது. சாராயத்தின் நுகர்வு இதனால் அதிகரித்தது.
- கட்டாய ஊழியமான ராஜகாரியம் ஒழிக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பெருந்தெருக்கள், ரெயில்வே முதலிய பொதுத்துறை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்குக் கொடுப்பனவு பணமாக வழங்கப்பட்டது. இப்பணத்தின் ஒரு பகுதியை தவறணைகளுக்கு இத்தொழிலாளர்கள் கொடுத்தனர். மாலை வேளைகளில் தவறணைகளில் கூடிக் குடிக்கும் பழக்கத்திற்கு தொழிலாளர் அடிமைகளாயினர்.
- கொழும்பு – கண்டி வீதியில் கோப்பித் தோட்டங்கள் ஏற்பட்ட பின்னர் வீதிப் போக்குவரத்துக்கும் பொருள் ஏற்றியிறக்கலுக்கும் மாட்டு வண்டிகள் பெருந்தொகையில் உபயோகிக்கப்பட்டன. 1847ஆம் ஆண்டில் கொழும்பு, கண்டிக்கு இடையில் ஒரு ஆண்டுக் காலத்தில் 79,000 தடவைகள் மாட்டு வண்டிப் பயணம் நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டது. ரெயில்வே ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் மாட்டு வண்டிக்காரர் கொழும்பு–கண்டிப் பாதையில் சேவை செய்தனர். மாட்டு வண்டிக்காரர்கள் தவறணைகளின் வாடிக்கையாளர்களாய் இருந்தனர்.
- கொழும்பு நகரில் இராணுவத்தினருக்குரிய கன்ரீன்களிலும் (Military Canteens) சாராயம் விற்பனை ஆகியது. இந்த கன்ரீன்களிற்கு வழங்கல் செய்யும் ஒப்பந்தம் மிகுந்த இலாபம் தருவதாக இருந்தது.
வட மாகாணத்தில் இருந்து அரசுக்கு கிடைத்த வருமானம் ஒப்பிட்டளவில் மிகக் குறைவாக இருந்தது. அங்கு கூலி உழைப்பாளர் வகுப்பு ஒன்றின் தோற்றத்திற்கான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. அந்தப் பகுதிகளின் உழுகுடிச் சமூகத்தின் கலாசாரத்தில் குடிப்பழக்கம் வேரூன்றவில்லை. குடிகாரருக்குத் தேவையான பனங்கள்ளு கொல்லைப்புறத்தில் உள்ள பனையில் இருந்து கிடைத்தது. உள்ளூர் சாராயமும் குடிசைத் தொழில் முறையில் உற்பத்தியாகி களவாக விற்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திலும் இந்த நிலைமையே இருந்தது.
ஆரம்பநிலை மூலதனத் திரட்சியில் முக்கிய பங்கு வகித்த சாராயக் குத்தகை பற்றி இதுவரை குறிப்பிட்டோம். சாராயக் குத்தகை தவிர்ந்த பிற வியாபாரத் துறைகள் பலவற்றின் மூலமும் முதலாளித்துவ வளர்ச்சிக்கான மூலதனத் திரட்சி நிகழ்ந்தது. அத்துறைகளாவன:
- ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்
- கரையோர நகரங்களிற்கும் இந்தியா (தூத்துக்குடி), பர்மா போன்ற இடங்களிற்கும் இடையிலான கப்பற் போக்குவரத்தும் வர்த்தகமும், படகுகள், தோணிகள் உற்பத்தி செய்தல் தொழிலும் (Coastal Trade and Shipbuilding)
- உள்ளூர் வர்த்தகமும், போக்குவரத்தும்
- அரசாங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்கள், சேவைகள் வழங்கல்
- நிலங்களை கொள்வனவு செய்தல்; குறிப்பாக நகரத்தின் நிலம், வீடு, கட்டடம் ஆகியவற்றின் முதலீடு
- கறுவா வர்த்தகமும், கறுவாத் தோட்டங்களும்
- நெல், மீன் பொருட்களின் வரிக்குத்தகை, ஆயக்குத்தகை, பலவகையான வரிகளை அறவிடுதல்
இவ்விதமான வியாபாரங்களிற்கான வாய்ப்புகளும் மேற்கு மாகாணத்தில், குறிப்பாக கொழும்பு நகரத்தில் அதிக அளவில் இருந்தன. கொழும்பு மையமாகவும், ஏனைய பகுதிகள் சார்பு மண்டலங்களாகவும் மாற்றமடைய சமனற்ற வாய்ப்புகள் காரணமாக இருந்தன. இவ்வாய்ப்புகளில்,
- ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்
- கொழும்பு நகரில் (கறுவாக் காட்டுப் பகுதியில்) அசையாச் சொத்துகளில் முதலீடு செய்தல்
ஆகிய இரு வழிகளும் மிக முக்கியமான முதலீடுகளாக இருந்தன. இவ்விரு துறைகளிலும் முதலீடு செய்வதற்கு வடக்குக் கிழக்கின் முயற்சியாளர்கள் கொழும்புக்கு இடம்பெயர்தல் முதல் நிபந்தனையாக இருந்தது. இந்த இடப்பெயர்வை மேற்கொள்ளாதவர்கள் உள்ளூர் மட்டத்தில் பெரிய மனிதர்களாக அல்லது உள்ளூர் உயர்குழாமாக இருந்தார்களே அன்றி தேசிய நிலைப்பட்ட முதலாளி வர்க்கத்தின் உறுப்பினர்கள் ஆக முடியவில்லை.
கொழும்புத் தமிழ் முதலாளித்துவத்தின் தோற்றம்: 1830 – 1930
1830 முதல் 1930 வரையான ஒரு நூற்றாண்டு வரலாற்றை ஆராய்ந்து பார்க்குமிடத்து, கொழும்பு நகரம் என்ற மையம் சார்ந்து எழுச்சி பெற்ற வர்த்தக முதலாளித்துவத்தில் சமனற்ற வளர்ச்சி தெளிவாக வெளிப்பட்டது. இதற்கான காரணங்களை குமாரி ஜெயவர்த்தனவின் கீழ்கண்ட மேற்கோள் விளக்குகிறது.
“வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு முதலீட்டுத் திரட்சிக்கான பிரதான வழிகள் 19ஆம் நூற்றாண்டில் முடக்கப்பட்டே இருந்தன. சாராய உற்பத்தி வழிகளும் 19ஆம் நூற்றாண்டில் மூடப்பட்டே இருந்தன. சாராய உற்பத்தி, பெருந்தோட்டங்கள், காரீய அகழ்வுத் தொழில் (Graphite Industry), வர்த்தகம், ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகியனவே அக்காலத்தில் மூலதனத் திரட்சிக்கான பிரதான வழிகளாக இருந்தன. வடக்குக் கிழக்கில் சனத்தொகை அடர்த்தி குறைவாக இருந்ததால் வர்த்தகம், சாராய வியாபாரம் என்பன மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. கனிம வளம் அப்பகுதிகளின் இயற்கை வளமாக இருக்கவில்லை. கோப்பி, தேயிலைப் பெருந்தோட்டங்கள் மத்திய மலைப் பிரதேசங்களில் தொடங்கப்பட்டன. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சாராயக் குத்தகை ஏலத்தின் மூலம் கிடைத்த வருவாய் பற்றிய தரவுகளை ஆராய்ந்தால் மூலதனத் திரட்சிக்கு இருந்த தடைகள் தெளிவாகும்.” (குமாரி ஜெயவர்த்தன, மே.கு.நூல், பக். 201)
இங்கே மேற்கோள் காட்டிய பகுதியில் இரு விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஆரம்ப மூலதனத் திரட்சி வடக்குக் கிழக்கில் குறைவாக இருந்தது.
- வர்த்தகம், சாராய உற்பத்தி, காரீய அகழ்வுத் தொழில், கோப்பி, தேயிலை, பெருந்தோட்டங்கள் ஆகிய வர்த்தக உற்பத்தித் துறைகள் வடக்குக் கிழக்குக்கு வெளியேதான் மையம் கொண்டிருந்தன.
இவ்விரு காரணங்களினாலும் வடக்குக் கிழக்கைச் சேர்ந்தவர்கள் முதலாளித்துவப் பாதையில் முன்னேறுவதற்கான தடைகள் பிரித்தானிய காலனித்துவத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உருவாகிவிட்டன. இந்தத் தடைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டன என்றோ, ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி என்றோ கூறுவதற்கு இல்லை. பொருளாதார மாற்றத்தின் புறநிலையான கட்டமைப்பு இயல்புகளில் (Structural Features) இதற்கான விளக்கத்தைக் கண்டுகொள்ள முடியும். குமாரி ஜெயவர்த்தன தொடர்ந்து எழுதும்போது புள்ளிவிவரங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றைத் தந்து நிலைமையைத் தெளிவாக்குகிறார்.
“தமிழர்களிடம் செல்வம் (மூலதனம்) பெரும் அளவில் சேரவில்லை. இதனால் பெருந்தோட்டங்களிலும், காரீயச் சுரங்கங்களிலும் தமிழர்களின் முதலீடுகள் மிகக் குறைவாக இருந்தன. 1870ஆம் ஆண்டில் ஐரோப்பியர் அல்லாதவர்களின் (சுதேசிகளின்) பெருந்தோட்ட முதலீடுகள் பற்றிய தரவுகளைப் பார்த்தால் இரண்டு தமிழர்களின் பெயர்கள் மட்டுமே இருப்பது தெரியவரும். ஒருவர் ஈ. நன்னித்தம்பி. இவர் தும்பறவில் 419 ஏக்கர் தோட்டத்தை வைத்திருந்தார். மற்றவர் எம். முத்துசாமி. இவர் றங்கலவில் 350 ஏக்கர் தோட்டத்தை வைத்திருந்தார். பெருந்தோட்டத் துறையில் தமிழர் முதலீட்டின் பலவீனம் (இலங்கைப்) பொருளாதாரத்தின் ஓர் இயல்பாக நிலைபெற்றது.” (பக். 202, மே.கு. நூல்)
இலங்கையின் முதலாளித்துவம் கோப்பி, தேயிலை, றப்பர், தெங்குப் பயிர்ச் செய்கையை முதன்மையான உற்பத்தியாகக் கொண்டு அதனைச் சார்ந்து பிற துறைகளிலும் வளர்ச்சி பெற்றது. இம்முதலாளித்துவ முறைமையில் தமிழ் முதலாளித்துவத்தின் இடம் என்ன என்பதை, 1979இல் மைக்கேல் றொபர்ட்ஸ் எழுதிய கட்டுரையில் எடுத்துக்காட்டிய புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி பின்வருமாறு குமாரி ஜெயவர்த்தன குறிப்பிடுகின்றார்.
“றொபர்ட்ஸ் தரும் தகவல்களின்படி (1979ஆம் ஆண்டுக் கட்டுரை) 224 பெருந்தோட்டங்கள் ஐரோப்பியர் அல்லாதவர்களுடையதாய் (இலங்கையர்) இருந்தன. இந்தப் பெருந்தோட்ட உடமையாளர்களில் 25 பேர் தமிழர்களாய் இருந்தனர். இந்த 25 பேர்களிலும் 1000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட தோட்டங்களை உடமையாக வைத்திருந்தவர்கள் சிலரே. சி.எம். பிரிட்டோ, எஸ்.டபிள்யூ. சேனாதிராஜா (பங்குடமை), எம். கதிரவேலுப்பிள்ளை, டாக்டர் எஸ்.சி. போல், என். ரத்தினசபாபதி, டாக்டர் யோன் றொக்வூட் ஆகியோரே இவ்விதம் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட தோட்டங்களை வைத்திருந்தோர். தமிழர்களின் தேயிலைத் தோட்டங்கள் 146 ஏக்கரும், றப்பர் 288 ஏக்கரும் மட்டும் இருந்தன.”
தொகுப்புரை
இக்கட்டுரையில் எடுத்துக்கூறப்பட்ட பிரதான கருத்துகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. சார்புக் கோட்பாட்டின் பிரதான கருத்துகளில் சமனற்ற வளர்ச்சி என்பது ஒன்று. உலகளாவிய சமனற்ற வளர்ச்சி மட்டுமல்ல, நாடுகளுக்கு உள்ளேயும் மையம், சார்பு மண்டலம் என்ற பிரதேச ரீதியான சமனற்ற வளர்ச்சி நிகழ்கிறது.
2. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சார்பு மண்டலங்களாக, விளிம்பு நிலைப் பிரதேசங்களாகத் தாழ்ந்தன. அங்கு மூலதனத் திரட்சிக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. இலங்கைப் பொருளாதாரத்தின் உற்பத்தி மையங்கள் வடக்குக் கிழக்குக்கு வெளியே தான் இருந்தன.
3. தமிழர்களிடையே தோன்றிய முதலாளித்துவ உயர்குழாம் கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. இந்த உயர்குழாம் ‘கொழும்புத் தமிழர்’ ஆகத் தம்மை மாற்றிக்கொள்ளும் தேவையிருந்தது.
4. கொழும்புக்கு இடம்பெயருதல் என்பதோடு கல்வியால் உயர்ச்சி பெறுதல் என்பதையும் தமிழர்கள் உயர்ச்சிக்கான வழியாகக் கொண்டனர். இதனால் வர்த்தகம், சாராய உற்பத்தியும் குத்தகை வர்த்தகமும், காரீயச் சுரங்க முதலீடு போன்ற வழிகளில் அல்லாமல் உயர்குழாம் தகுதியை ஆங்கிலக் கல்வியின் வழி பெற முயன்றனர்.
சுருங்கக்கூறின் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் கொழும்பு என்ற மையத்தின் சார்பு மண்டலமாக மாறின. இப்பகுதிகளில் கால்கொண்டு நின்றவாறே முதலாளித்துவம் ஒன்று வடக்குக் கிழக்கில் தோன்ற முடியவில்லை. கொழும்பை மையமாகக் கொண்டு தமிழ் உயர்குழாம் ஒன்று உருவானது. இந்த உயர்குழாம் தனது உயர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வியை ஒரு கருவியாகக் கொண்டது. ஆரம்பம் முதலே பலவீனமுடைய முதலாளித்துவமாகவே கொழும்புத் தமிழ் முதலாளித்துவம் இருந்து வந்தது.



