ஆசியாவில் மார்க்சீயம்
ஆசியாவில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை அச்சுறுத்தும் வகையில் 1930களில் மார்க்சீயச் சிந்தனைகள் இளைஞர்களால் பரப்பப்பட்டன. படிப்புக்காகவும் தொழிலுக்காகவும் பெருந்தொகையான ஆசிய இளைஞர்கள் 1920களில் ஐரோப்பாவுக்குச் சென்றனர். சீனாவில் இருந்தும் வியட்நாமில் இருந்தும் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று தொழிற்சாலைகளில் வேலை செய்தனர், படித்தனர். அதேபோல் ஒல்லாந்தர் ஆண்ட கிழக்கிந்தியத் தீவுகளில் (இந்தோனீசியா) இருந்து இளைஞர்கள் ஒல்லாந்துக்குச் சென்று வேலைசெய்தனர், அத்துடன் கல்விகற்றனர். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய தென்னாசிய நாடுகளில் இருந்து பெரும்பாலும் படிப்புக்காக மத்தியவகுப்பு இளைஞர்கள் இங்கிலாந்துக்குச் சென்றனர்.
இவ்வாறு ஆசிய இளைஞர்கள் ஐரோப்பாவுக்குச் சென்ற காலத்தின் பின்புலம் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய சிந்தனைகள் செல்வாக்குப் பெற்றிருந்த பின்புலமாகும். நீண்ட காலம் ஐரோப்பாவில் ஆதிக்கத்துடன் அசைக்கமுடியாத நிலையில் இருந்த ருஷ்யப் பேரரசை மார்க்சீயக் கம்யூனிசப் புரட்சி ஒன்று வீழ்த்தி, உலகின் முதலாவது மார்க்சீய அரசை அமைப்பதில் வெற்றிகண்டிருந்தது. ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில், இளைஞர்கள் தீவிரமாக இடதுசாரி இயக்கங்களில் பங்குகொண்டனர்.
இந்த இளைஞர்கள் ஒரு புறம் முதலாளித்துவத்தின் கொள்கைகளும் செயல்களும் எவ்வாறு தொழிலாளர் வகுப்பினைச் சுரண்டின என்பதைக் கண்டுகொண்டதுடன், தாமே உரிமைகள் இல்லாது தொழிற்சாலைகளில் வேலைசெய்து தொழிலாளரது இன்னல்களை அனுபவித்தனர். இத்தகைய நிலையை நீக்குவதற்கு வழிவகுக்கும் சிந்தனைகளை மறைவாகவும் வெளிப்படையாகவும் பரப்பும் இடதுசாரி இயக்கங்கள் பல ஐரோப்பிய இளைஞர்களை மட்டுமல்லாது, ஆசியாவில் இருந்து சென்ற மாணவர்களையும் பிற இளம் தொழிலாளர்களையும் தம்பால் ஈர்த்தன.
இந்த இயக்கங்கள் வாயிலாகவே ஆசிய மாணவர்களும் பிற இளைஞர்களும் மார்க்சீயவாதிகளாகித் தத்தம் தாய்நாடுகளுக்குத் திரும்பிச்சென்று மார்க்சீய இயக்கங்களைத் தொடக்கினர். இன்றைய சீனாவை உருவாக்குவதற்குச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த டெங் ஷௌ பிங் (Deng Xiaoping) 1920இல் 16 வயதுப் பையனாக பிரான்ஸுக்குச் சென்று, ஒரு இறப்பர் தொழிற்சாலையில் வேலைசெய்து படித்தபோது, மார்க்சீயக் குழுக்களைச் சேர்ந்து, மார்க்சீயவாதியாகி, சீனாவுக்குத் திரும்பியபின் அங்கு புரட்சியை நடத்தியோருள் ஒருவரானார். அவரைப் போன்றே, சீனாவின் பிரதமராக விளங்கிய ஜோ என்லாய் (Zhou Enlai) அவர்களும் 1922இல் பிரான்ஸ் தலைநகராகிய பாரிஸுக்குப் போய்ப் படித்து, மார்க்சீயவாதியாக நாடுதிரும்பியவர்.
வியட்நாம் வரலாற்றில் பெருந்தலைவராகப் போற்றப்படும் ஹோச்சிமின் (Ho Chi Minh), பிரான்ஸில் நீண்ட காலம் வாழ்ந்து, மார்க்சீயத்தைக் கற்று, 1920இல் பிரெஞ்சுக் கம்யூனிஸக் கட்சியை நிறுவுவதில் பங்குகொண்டு, தாய்நாடு திரும்பியபின் நாட்டின் விடுதலைக்குப் போராடியவர்.
இலங்கையின் இடதுசாரி இளைஞர்கள்
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 1920களிலும் 1930களிலும் ஐரோப்பாவுக்குச் சென்ற இளைஞர்கள் பெரும்பாலும் படிப்பதற்கே சென்ற மத்திய வகுப்பினராவர். இவர்களுள் மிகவும் பிரபலமான ஒருவர் பண்டாரநாயக்க ஆவார். இவர் இங்கிலாந்தில் படித்த காலத்தில் தாராண்மைவாதம் மற்றும் சோசலிசம் ஆகிய சிந்தனைகளின் செல்வாக்கைப் பெற்று ஓர் இடதுசாரி இளைஞராக நாடு திரும்பியபோது மார்க்சீயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கவில்லை.

மார்க்சீயராக அரசியல் புரட்சியில் நம்பிக்கை வைத்து நாடு திரும்பிய இளைஞர்களை 1930களில் காண்கிறோம். இப்படியானோருள் முதலிடம் பெறுபவர் பிலிப் குணவர்தன (1901-1972 – முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தந்தை) எனலாம். இவர் தனது 21ஆவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்கு சில பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர். மாணவராக அங்கு இருந்த காலத்தில் தீவிர மார்க்சீயவாதியாகி, ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் பேரரசுவாதத்தை எதிர்க்கும் இயக்கங்களில் பங்குபற்றி, 1930களில் நாடு திரும்பி, இலங்கையின் முதலாவது மார்க்சீயக் கட்சியாகிய லங்கா சம சமாஜக் கட்சியை நிறுவ உதவினார்.

சம சமாஜக் கட்சியை நிறுவியோருள் முக்கியத்துவம் பெறும் இன்னொருவர் என்.எம். பெரேரா (1904-1979) ஆவர். இவர் 1927இல் லண்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, பொருளியலில் PhD, DSc பட்டங்களைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்பியதும் அரசியலில் ஈடுபட்டவர். இவருடன் கொல்வின் ஆர். த சில்வா, லெஸ்லி குணவர்தன ஆகியோரும் பிற இடதுசாரி இளைஞர்களும் (குறிப்பாக வைத்தியர் எஸ்.ஏ. விக்ரமஸிங்ஹ, 1900-1981) இணைந்து புதிய மார்க்சீயக் கட்சியை அமைத்தனர்.
யாழ்ப்பாணத்து மார்க்சீய இளைஞர் Tony
இவ்வாறு மார்க்சீய இயக்கம் இலங்கையில் காலூன்றிய காலத்தில் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இதில் ஈடுபடவில்லையா என்ற வினா எழலாம். நிச்சயம் இருந்தார்கள். கல்வியில் திறமைசாலிகளாகப் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சித்திபெற்ற மாணவர் சிலர் மார்க்சீயச் சிந்தனையால் பெரிதும் கவரப்பட்டுத் தம் வாழ்க்கையை சோசலிச அரசியலுக்காக அர்ப்பணித்தமை கவனிக்கத்தக்கதாகும்.
இவர்களுள், காலத்தால் முதல் வருபவர் செபஸ்தியன் சிறில் கொன்ஸ்தந்தீன் அந்தோனிப்பிள்ளை (1914-2000) எனலாம். இவரை நண்பர்கள் Tony என அழைத்தனர். இவர் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick’s College) படித்து, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் (University College) வரலாற்றைக் கற்று லண்டன் பல்கலைக்கழகத்தின் B.A. பட்டத்தைப் பெற்றார். அதே காலத்தில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) அமைக்கப்பட்டபோது இவர் அதில் உறுப்பினராகச் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

இலங்கையில் அரசியல் செயல்பாடுகளைத் தொடருமுன் அந்தோனிப்பிள்ளை லண்டன் பல்கலைக்கழகத்தின் King’s College நிறுவனத்தில் படிக்கச் சென்று, அங்கு இந்திய மாணவர்களுடைய India League கழகத்திலும் இலங்கை மாணவர்களுடைய Marxist Study Group குழுவிலும் சேர்ந்து மார்க்சீயம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
அந்தோனிப்பிள்ளை லண்டனில் இருந்து 1938இல் நாடு திரும்பியதும் முழுநேர அரசியலில் ஈடுபட விரும்பியதால், சிங்களத் தொழிலாளருடன் தொடர்புகொள்ளச் சிங்கள மொழி அறிவு தேவைப்பட்டது. அதற்காக, LSSP தலைவர் பிலிப் குணவர்தன இவரைத் தனது சகோதரி கரொலைன் (Caroline) குணவர்தனவிடம் அனுப்பிவைத்தார். கரொலைனும் ஒரு மார்க்சீயவாதியாகத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்.
அந்தோனிப்பிள்ளை 1939இல் கரொலைனை (ஆறு வயது மூத்தவர்) மணம் முடித்து, நாவலப்பிட்டியில் இந்தியத் தொழிலாளருக்குத் தொழிற்சங்கம் அமைப்பதில் கவனம் செலுத்திய காலத்தில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. LSSP கட்சி ஐரோப்பியப் பேரரசுவாதிகள் நடத்திய இப்போரை எதிர்த்தபடியால், கட்சியின் தலைவர்கள் சிறையில் வைக்கப்பட்டனர்.
சிறையில் இருந்து 1942இல் என்.எம். பெரேரா, கொல்வின் ஆர். த சில்வா, மற்றும் பிலிப் குணவர்தன ஆகியோர் தப்பி ஓடி இந்தியாவில் தலைமறைவாகினர். அவர்களைத் தொடர்ந்து அந்தோனிப்பிள்ளையும் பிற LSSP உறுப்பினரும் மீனவர் படகுகளில் தமிழ்நாட்டுக்குச் சென்று, அங்கு தலைமறைவாகினர். அந்தோனிப்பிள்ளையும் மனைவி கரொலைனும் மதுரைக்குச் சென்று பிரித்தானியர் ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
அந்தோனிப்பிள்ளையின் அரசியல் வரலாறு 1942இல் இருந்து அவர் இறக்கும் வரை (2000) இந்திய அரசியல் வரலாற்றுடன் இணைந்துவிடுகிறது. இக் காலப்பகுதியில் அவர் தீவிரமாகத் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். மும்பையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா சுதந்திரம் பெற்றபின் தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வமுடன் பங்குகொண்ட இவர், 1950களில் இந்தியப் பாராளுமன்றமாகிய லோக் சபையில் தமிழ்நாட்டுத் தொகுதி ஒன்றில் தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினராகவும் கடமையாற்றினார்.
பிற மார்க்சீயவாதிகள்
அந்தோனிப்பிள்ளையின் தலைமுறையைச் சேர்ந்த வேறும் பல யாழ்ப்பாணத்து இளைஞர்கள் மார்க்சீயச் சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தம் வாழ்க்கையை இடதுசாரி இயக்கங்களுக்காக அர்ப்பணித்திருந்தனர். இவர்கள் இலங்கையில் மட்டுமல்லாது இங்கிலாந்திலும் மார்க்சீயக் குழுக்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.
இப்படியானோருள் ஒருவர் பொன்னம்பலம் கந்தையா (1914-1960) ஆவார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்தபின் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் லண்டன் B.A. பட்டத்தைச் சிறப்புடன் பெற்றதால், இங்கிலாந்தில் படிக்கப் புலமைப் பரிசிலும் கிடைத்தது.
இவர் முதலில் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் எம் ஏ பட்டத்தைப் பெற்றபின், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் இரண்டு ஆண்டுகள் படித்து இலங்கைக்குத் திரும்பினார். கேம்பிறிஜ் நாட்களில் பல இடதுசாரி மாணவர்களுடன் கூடி மார்க்சீயத்தை மேலும் கற்க வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுதுதான் இலங்கை மாணவர்களாகிய பீட்டர் கெனமன், எஸ். ஏ. விக்ரமஸிங்ஹ, அ. வைத்தியலிங்கம் ஆகியோருடன் கூடி இடதுசாரி இயக்கங்களில் பங்குகொள்ளவும் முடிந்தது. அத்துடன், அந்நாட்டு கம்யூனிசக் கட்சியிலும் (Communist Party of Britain) உறுப்பினராகச் சேர்ந்தார்.
இலங்கைக்கு வந்தபின், கல்வித் துறையில் பணியாற்றினார். சிறிது காலம் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை நூலகராகச் செயலாற்றி, யாழ்ப்பாணத்தில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்ற முடிவு செய்தார். எனினும் தொடர்ந்து மார்க்சீய அரசியலில் ஈடுபட்டு, LSSP கட்சி பிளவுபட்டபோது, பீட்டர் கெனெமன், எஸ். ஏ. விக்ரமஸிங்ஹ ஆகியோருடன் அக்கட்சியில் இருந்து விலகி ஒரு புதிய கம்யூனிசக் கட்சியை (United Socialist Party) 1941இல் நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். இக்கட்சிதான் 1943இல் இலங்கைக் கம்யூனிசக் கட்சியாக (Communist Party of Ceylon) மாற்றம் பெற்றது.
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 1947இல் நடைபெற்றபோது, பருத்தித்துறைத் தொகுதியில் கந்தையா போட்டியிட்டார். அதில் அவருக்கு வெற்றி கிட்டவில்லை. அடுத்த தேர்தலில் (1952) போட்டியிட்ட போதும் வெற்றி பெறவில்லை. மூன்றாவது தடவை, 1956இல், போட்டியிட்ட போது பருத்தித்துறையின் பிரதிநிதியாக இவர் பாராளுமன்றம் செல்ல முடிந்தது. இன்றுவரை யாழ்ப்பாணத்தில் இருந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்ற ஒரேயொரு மார்க்சீயவாதி இவர்தான்.
கந்தையாவுடன் 1930களில் நெருங்கிய உறவு கொண்டிருந்த இன்னொரு முக்கிய மார்க்சீயவாதி இளைஞர் அம்பலவாணர் வைத்தியலிங்கம் (1915-1988) ஆவார். இவர் யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்து, கொழும்பு University Collegeஇல் 1935இல் பட்டம் பெற்று (B.Sc. Mathematics Special – First Class Honours, University of London), இங்கிலாந்துக்குச் சென்று கல்விகற்கப் புலமைப் பரிசிலும் பெற்றார்.
இங்கிலாந்தில் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் இவர் கல்விகற்ற காலத்தில் மார்க்சீய இயக்கங்களில் ஈடுபட்டு, அந்நாட்டுக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து கொண்டார். இலங்கை திரும்பியபின், பெருந்தோட்டத் தொழிலாளருக்கும் ஆசிரியர்களுக்கும் தொழிற்சங்க வசதிகளைச் செய்வதில் கவனம் செலுத்தினார். இவரும் இவர் கொள்கைகளை ஆதரித்த பிறரும் எடுத்த முயற்சியின் விளைவாக எல்லாத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைக்கும் Ceylon Federation of Trade Unions என்ற நிறுவனமும் வடக்கில் Northern Province Teachers Association என்ற ஆசிரியர் தொழிற்சங்கமும் அமைக்கப்பட்டன. கந்தையாவைப் போன்று இவரும் இலங்கைக் கம்மியூனிசக் கட்சியை நிறுவியவர்களுள் ஒருவர் ஆவார்.
வைத்தியலிங்கம் இரு முறை பாராளுமன்றத் தேர்தலில் (வட்டுக்கோட்டைத் தொகுதி, 1952 மற்றும் 1956) போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. இவர் பல ஆண்டுகள் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர மார்க்சீயவாதியாகச் செயல்பட்ட இன்னொரு முக்கிய இளைஞர் வைத்தியநாதன் காராளசிங்கம் (1921-1983) ஆவார். இவர் இளவயதிலேயே மிகுந்த உணர்ச்சியுடன் மார்க்சீயச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். பதினெட்டு வயதுப் பையனாக இருந்தபோதே, 1939இல், பாடசாலைப் படிப்பைக் கைவிட்டுப் புரட்சிகர அரசியலில் ஈடுபடும் நோக்குடன் LSSP கட்சியில் சேர்ந்தார். அன்று தொட்டு இறுதி வரை அவர் மார்க்சீயத்தை முழுமையாகத் தழுவியவராக வாழ்ந்தார்.
இலங்கையின் பிரித்தானிய அரசாங்கம் 1940இல் LSSP கட்சி மீது தடைவிதித்தது. கட்சி உறுப்பினர் தலைமறைவாகினர். சிலர் இந்தியாவுக்குத் தப்பியோடினர். காராளசிங்கம் 1941இல் கட்சியால் மும்பைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இந்திய மார்க்சீயவாதிகளும் LSSP உறுப்பினர்களும் (இவர்கள் அனைவரும் Leon Trotsky கருத்துகளை ஏற்ற திரொட்ஸ்கிவாதிகள்) இரகசியமாகக் கூடி, Bolshevik-Leninist Party of India, Burma and Ceylon என்ற கட்சியை நிறுவினர். இதில் காராளசிங்கமும் பங்குகொண்டார்.
காராளசிங்கம் பின்னர் இங்கிலாந்துக்குச் சென்று வழக்கறிஞராகத் தகைமை பெற்று வந்தபின் LSSP கட்சியின் கோட்பாடுகளை விளக்கும் விற்பன்னராக (Theoretician) பெயர்பெற்றிருந்தார். இவர் 1960இல் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் S.J.V. செல்வநாயகத்துக்கு எதிராகக் காங்கேசன்துறையில் போட்டியிட்டது பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
யாழ்ப்பாணத்தில் 1930களிலும் 1940களிலும் கவனத்தைப் பெறும் பிற மார்க்சீய இளைஞர்களுள் இருவர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் LSSP கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பொன்னம்பலம் நாகலிங்கம் (1905-1980), மற்றவர் செல்லையா தர்மகுலசிங்கம் (1910-1949).
நாகலிங்கம் இளைஞர் காங்கிரஸில் இருந்தவர்; பெரும்பாலும் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர். சுருட்டுத் தொழிலாளருடைய நிலையைச் சீர்படுத்துவதற்காக ஒரு தொழிற்சங்கத்தை (All Ceylon Cigar Workers Union) நிறுவ உதவினார். நாட்டின் மேலவையாகிய செனற் சபையில் 1950களில் உறுப்பினராக (Senator) கடமையாற்றியவர். இருமுறை பாராளுமன்றத் தேர்தலில் (1947 காங்கேசன்துறை; 1960 உடுவில்) இவர் போட்டியிட்டு வெற்றிபெறவில்லை.
செல்லையா தர்மகுலசிங்கம் இளவயதில் இருந்தே புரட்சியாளருக்குரிய பண்புகளைக் கொண்டிருந்தார் என அறியமுடிகின்றது. தன் வாழ்விடமாகிய வடமராட்சியில் பலராலும் ‘ஜெயம்’ என அழைக்கப்பட்ட இவர், தனது பழமைபேணும் சமூகத்தின் பல பண்புகளை எதிர்த்துப் போராடத் தயங்கவில்லை. அப்பண்புகளுள் ஒன்று சாதிப்பாகுபாடு.
பஸ்வண்டித் தொழிலாளர்களுடைய உரிமைகள் சரியாக வழங்கப்படாதிருந்த அக்காலத்தில், தர்மகுலசிங்கம் அவர்களுடைய உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடி, அவர்களுக்கு ஒரு தொழிற்சங்கம் (Bus Workers Union) அமைப்பதற்கு உதவினார். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 1947இல் நடைபெற்றபோது இவர் LSSP கட்சியின் சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டார். கம்யூனிசக் கட்சியின் சார்பில் அதே தொகுதியில் பொ. கந்தையாவும் போட்டியிட்டதால் இடதுசாரிகளுடைய வாக்குகள் பிளவுபட்டன. இருவரும் தோல்வியுற்றனர்.
அரசியல் வானில் புதிய தோற்றப்பாடுகள்
முன்னர் கூறியதுபோல், 1940கள் தொடங்கியபோது ஆங்கிலேயர் ஆட்சி முடிவடையும் கட்டம் வந்துவிட்டது என்ற உணர்வு அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருந்தது. பிரித்தானியப் பேரரசு என்றென்றும் நிலைக்கும் என எண்ணியவர்கள் சுதந்திர இலங்கையைக் காணத் தயாராக இருக்கவில்லை. ஒவ்வொரு குழுவும் தத்தம் நலன்களைப் பேணும் நோக்குடன் வெள்ளையர் வெளியேறுமுன் பெறக்கூடியவற்றைப் பெற முயன்றது.
அரசியல் அரங்கில் பலவகைப்பட்ட குழுக்கள் நின்றன. இந்த அரங்கில் கூடுதலான செல்வாக்குடன் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் பழமைபேணும் பண்புடையவர்கள் (Conservatives). இவர்களுடைய அமைப்பாக இருந்தது இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress). இதுவே ஆட்சியாளருடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னணி அமைப்பாக எழுச்சிபெற்றிருந்த காரணத்தால், பழமைவாதிகளுடன் இணைந்துபோக விரும்பாதவர்கள்கூட, சிறப்பாக முற்போக்குக் கருத்துகளையுடையவர்கள் கூட, இந்த அமைப்புக்குள் இருந்து கிடைக்கக்கூடிய நலன்களைத் தவறவிடாதிருக்க விரும்பினர் என்று தோன்றுகிறது.
இதன் காரணமாக, தேசிய காங்கிரஸில் பல்வகைப்பட்ட அரசியல் கருத்துகளையுடையவர்கள் இருந்தனர். அவர்களுள் சிலர் வரப்போகும் அரசியல் அமைப்பில் தலைமைத்துவத்தைப் பெறவிரும்பியவர்கள். இதனால், தமக்கெனத் தனியான குழுக்களைச் சேர்த்துவைத்திருந்தனர்.
இக்குழுக்களுள் மிகவும் முக்கியமானது D.S. சேனாநாயக்கவுடன் கூடியிருந்த குழு எனலாம். இக்குழுவில் பெரும்பாலும் பழமைபேணும் சக்திகள் ஒன்றுகூடி இருந்தன. சேனாநாயக்க நாட்டுக்குத் தன்னாட்சியைப் பெற ஆவலுடையவராக இருந்தாலும், பிரித்தானிய அரசாங்கத்துடன் முரண்பட்டு எதிர்ப்பைத் தெரிவிக்காது அமைதியான முறையில் தன் நோக்கை அடைய விரும்பினார். இதனால், தீவிரப் போக்கைக் கடைப்பிடித்துப் பிரித்தானியர் ஆட்சியை எதிர்த்து நின்ற இலங்கைத் தேசிய காங்கிரஸ் உறுப்பினருடன் சேர்ந்து செயல்பட விரும்பாது, அக்காங்கிரஸில் இருந்து விலகினார். விலகியபின் அவர் ஐக்கிய தேசியக் கட்சி (United National Party) என்ற ஒரு புதிய கட்சியை 1946 திசெம்பரில் நிறுவிப் பல்வகைப்பட்ட குழுக்களை அதற்குள் கொண்டுவந்து புதிய சட்டவாக்க சபைத் தேர்தலுக்குத் தயாரானார்.
புதிய கட்சியில் சேர்ந்த ஒரு முக்கிய குழு SWRD பண்டாரநாயக்க தலைமையில் இயங்கிய சிங்கள மஹா ஸபா ஆகும். சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சர் பதவியை பெறுவதற்கு சேனாநாயக்க கொண்டிருந்த பெருவிருப்பு (Ambition) பண்டாரநாயக்கவுக்கும் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆளுமையைப் பொறுத்தும் கொள்கைகளைப் பொறுத்தும் இருவருக்கும் இடையில் பல வேறுபாடுகள் இருந்தன.
நீண்ட காலமாக ஐரோப்பிய ஆட்சியாளருக்குப் பணிபுரிந்து சமூகத்தில் உயர்நிலையை அடைந்திருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் பண்டாரநாயக்க. இவருடைய வரலாற்றுப் பின்புலத்தை அறிந்திருப்பது இவருடைய ஆளுமையில் ஏற்பட்ட மாற்றத்தையும் பெருவிருப்பையும் நோக்கங்களையும் விளங்கிக்கொள்ள உதவும்.
பண்டாரநாயக்க குடும்பம் பேணிவைத்திருக்கும் பதிவேடுகளின் அடிப்படையில் இக்குடும்பத்தின் மூதாதையராகக் கருதப்படுபவர் நீலப்பெருமாள் என்பவராவார். இவர் 15ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து வந்து, கண்டி அரசின் முக்கிய தேவாலயங்களுள் ஒன்றாகிய சமன் (இலங்கையின் காவல் தெய்வங்களுள் ஒன்றாகக் கருதப்படும் தெய்வம்) கோயிலின் தலைமைப் பூசகராக (Chief Priest) நியமிக்கப்பட்டார். இவர் கோயில் பண்டாரத்தின் (Treasury) பொறுப்பையும் பெற்றதனால் அதன் தலைவர் என்று பொருள் படும் ‘பண்டார நாயகர்’ என்ற விருதையும் பெற்றார். இது பின்னர் குடும்பப்பெயராக மாறியது.
ஐரோப்பியர் ஆட்சி தொடங்கியபின் பண்டாரநாயக்க குடும்பத்தினர் கத்தோலிக்கராயினர். பின்னர், ஒல்லாந்தர் ஆட்சியின்போது, புரொட்டஸ்தாந்துத் கிறிஸ்தவராகி (Protestant Christian) ஆங்கிலேயர் ஆட்சியில் அங்கிலிக்கன் (Anglican) சபையில் சேர்ந்தனர். இருபதாம் நூற்றாண்டில் இக்குடும்பத்தின் பிரமுகராக விளங்கிய சேர் சொலமன் தியஸ் பண்டாரநாயக்க ஆங்கிலேயருக்கு விசுவாசமாகப் பணியாற்றி, ‘சேர்’ என்ற விருதையும் பெற்றார். இவருடைய மகன் பிறந்தபோது, அப்பொழுது ஆளுநராக இருந்த West Ridgeway என்பவருடைய பெயரையும் சேர்த்து மகனுக்குப் பெயரிட்டார். இதனால் மகனுடைய பெயர் Solomon West Ridgeway Dias Bandaranaike ஆகியது. இவரே நாம் இப்பொழுது கருத்திற்கொள்ளும் பண்டாரநாயக்க.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துக்கொண்டு 1925இல் பண்டாரநாயக்க கொழும்புக்குத் திரும்பியபோது அவர் தந்தையார் ஓர் அங்கிலிக்கன் தேவாலயத்தில் Thanksgiving நிகழ்ச்சியையும் நடத்தினார். வெகுவிரைவில், 1931 அளவில், பண்டாரநாயக்க பௌத்தராகிவிட்டார்.
மாற்றம் புகுத்திய மூவர்
ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் கையில் இருந்த அரசியல் உரிமைகள் 1931இல் திடீரெனப் பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்தன. இப்பொதுமக்கள் மத்தியில் அநகாரிக தர்மபால தொடக்கி வளர்த்த இயக்கம் இப்பொழுது அரசியல் வலுவைப் பெறும் நிலைக்கு வந்தது. இதனை முக்கியமாக மூன்று அரசியல் தலைவர்கள் நன்கு உணர்ந்தனர். மூவரும் வெவ்வேறு உபாயங்களை வகுத்துத் தம்மை எதிர்நோக்கிய சவாலைச் சந்திக்க முயன்றனர்.
இதனை நன்கு அவதானித்து, அதற்கு ஏற்றவாறு தன் ஆளுமையையும் கொள்கைகளையும் மாற்றிப் புதிய நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தயாரானவர் பண்டாரநாயக்க எனலாம். மதம் மாறினார்; ஐரோப்பிய உடைக்குப் பதிலாகத் தேசிய உடையை அணியத் தொடங்கினார். பொதுமக்கள் கூட்டங்களில் பேசுவதற்குச் சிங்கள மொழியை நன்கு கற்றார்; தனக்கென ஓர் அரசியல் அமைப்புத் தேவை என்பதால் சிங்கள மஹா ஸபா என்ற நிறுவனத்தை அமைத்து அதன் தலைவரானார். எனினும், 1931இல் அவர் ஓர் இயக்கம் இல்லாத தலைவராகவே (A leader without a movement) காணப்பட்டார். அதே காலத்தில் சிங்கள பௌத்த இயக்கம் ஒரு தலைவர் இல்லாத இயக்கமாக (A movement without a leader) இருந்தது. இரு தரப்பும் சந்திக்க வாய்ப்பு உருவாகியது.
யார் மற்ற இரு தலைவர்கள்? ஒருவர் D.S. சேனாநாயக்க, மற்றவர் J.R. ஜயவர்தன. மூவரும் சிங்கள பௌத்த இயக்கத்தின் சவாலை எப்படி எதிர்நோக்கினர் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.



