1983 - 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் - பகுதி 4
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 4

May 12, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

அதிகாரப் பங்கீடு

ஒரு நாட்டிற்குள் இனப்பிச்சினைக்கான தீர்வு என்பது இனங்களுக்கிடையே நியாயமான சுயநிர்ணயமுடைய அதிகாரப் பங்கீடே ஆகும். இவ்வதிகாரப் பங்கீடு ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தமது தனியான நலன்களை உச்ச வகையில் பேணுவதற்குரிய வாய்ப்புகளை கொடுப்பதாக இருத்தல் வேண்டும். அதாவது கூட்டும், சுயாட்சியும் என்ற தத்துவம் நடைமுறையில் இருத்தல் வேண்டும். ஒரு நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களும் தமது கூட்டான நலன்களைக் கூட்டாகவும், தனியான நலன்களைக் தனியாகவும் பேணுவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதே கூட்டும் சுயாட்சியும் ஆகும். பல்வேறு தேசிய இனங்களுக்கு மத்தியில் நிலவும் பொதுவான நலன்களைக் கூட்டு அதிகாரமாக மத்திய அரசிடம் விட்டுவிட்டு ஏனையவற்றினை தேசிய இனங்களின் பகிர்வு அதிகாரங்களாக விட்டுவிடும் போதே அவை தனியான நலன்களை உச்ச வகையில் பேணக்கூடியதாக இருக்கும். 13ஆவது திருத்தத்தில் இதற்கான வாய்ப்பு அறவே இருக்கவில்லை.

13ஆவது திருத்தத்தின்படி மூன்று வகையான அதிகாரப் பட்டியல்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மத்திய பட்டியல், மாகாண பட்டியல், ஒத்தியங்கு பட்டியல் என்பனவே அவ் மூன்றுமாகும். மத்திய பட்டியலில் மத்திய அரசும், மாகாண பட்டியலில் மாகாண சபைகளும், முன்னர் கூறியது போல ஒத்தியங்கு பட்டியலில் மத்திய பாராளுமன்றம், மாகாண சபைகள் ஆகிய இரண்டும் சட்டங்களை இயற்றலாம் எனக் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு மூன்று பட்டியல்கள் இருக்கும் போது அதிகாரப் பகிர்வில் தெளிவின்மை ஏற்படுவது சகஜமாகும். பட்டியல்கள் பல இருப்பது அதிகாரங்கள் எவற்றிற்குரியது என அடையாளம் காண்பதைக் கடினமாக்கும். எஞ்சிய அதிகாரங்கள் பற்றிய தெளிவின்மையும் ஏற்படும். ஏதாவது ஒரு தரப்பினர் அதிகாரத்தினை வரையறுத்துவிட்டு எஞ்சியவற்றினை மறு தரப்பின் அதிகாரமாக விட்டுவிட்டால் தெளிவின்மை வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக இருக்கும். பெரும்பாலான நாடுகள் அவ் நடைமுறையினையே பின்பற்றுகின்றன. அமெரிக்கா, சுவிஸ் போன்ற நாடுகள் மத்திய அரசின் அதிகாரங்களை வரையறுத்துவிட்டு ஏனையவற்றினை மாநிலங்களின் அதிகாரங்களாக விட்டுள்ளன. கனடா மாநில அரசுகளின் அதிகாரங்களை வரையறுத்துவிட்டு ஏனையவற்றினை மத்திய அரசின் அதிகாரங்களாக விட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் அதிகாரப் பங்கீட்டில் தெளிவின்மை பெரியளவில் ஏற்படவில்லை. தெளிவின்மை அதிகளவில் இருந்தால் மத்திய அரசின் அதிகாரங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

13ஆவது திருத்தத்தில் இக்குறைபாடு அதிகமாக இருந்தது. மத்திய அரசின் அதிகாரங்களில் தெளிவு இருந்தது. மாகாண சபை அதிகாரங்களில் தெளிவு இருக்கவில்லை. இத்தெளிவின்மை மாகாண சபைகளின் தனித்துவமான அடையாளங்களை இல்லாமல் செய்தது.

அடுத்த விடயம், மாகாண சபைகளுக்கு போதியளவிலான அதிகாரங்கள் வழங்கப்படாமையாகும். தேசிய இனங்கள் தனியான நலன்களைப் பேணுவதற்கு அவசியமான கல்வி, சுகாதாரம், விவசாயம், வரிவிதிப்பு, காணி, சட்ட ஒழுங்கு என்கின்ற அடிப்படை விடயங்களில் கூட போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. சட்டமியற்றுதல் இதில் முக்கியமானதாக இருந்தது. மாகாண சபைகளுக்கு சுயாதீனமாக சட்டங்களை இயற்றும் அதிகாரம் இருக்கவில்லை. மசோதாக்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஆளுநர் ஊடாக சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. ஆனால் அந்த அனுமதி பெரியளவிற்கு நடைமுறையில் கிடைக்கவில்லை. அமைச்சரவை அனுமதி வழங்கினால் மட்டுமே சட்டமா அதிபர் அனுமதியை வழங்கக் கூடிய நிலையில் இருந்தார். கிழக்கு மாகாண சபை 19இற்கு மேற்பட்ட மசோதாக்களை ஆளுநரிடம் கையளித்த போதும், ஆளுநர் அதற்கு சம்மதத்தினைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மாகாண சபை சட்டங்களை நிறைவேற்றினாலும் ஆளுநரின் சம்மதத்தின் பின்னரே அது நடைமுறைக்கு வரும். இதுவும் மிகப் பெரும் தடையாக இருந்தது. சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கே அனுமதியைப் பெற்றுத்தராத ஆளுநர், சட்டங்களுக்கு சம்மதம் அளிப்பார் என எதிர்பார்ப்பது கற்பனையானதே!

இதைவிட ஆளுநர் மாகாண சபையில் அறிமுகப்படுத்துகின்ற சட்டங்கள் தொடர்பாக பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி ஊடாகப் பாரப்படுத்தலாம். இந்த நீதிப்புனராய்வு அதிகாரம் பாராளுமன்றச் சட்டங்களுக்கு இருக்கவில்லை. அரச இயந்திரம் முழுவதும் பேரினவாதமயமாகியுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு சார்பாக நீதிமன்றங்கள் தீர்ப்பினை வழங்கிவிடும் எனக் கூற முடியாது. மேலும் மாகாண சபை தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதியைப் பெறுதல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நியதிச் சட்டங்களை பாராளுமன்றம் 2/3 பெரும்பான்மையுடன் மாகாண சபையின் அனுமதி இல்லாமலேயே மாற்றியமைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்குரிய மாகாண சபையின் சட்டங்களை இல்லாமல் செய்வதற்கும் வழிவகைகளை உருவாக்கும். இதனையும் கூட சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு திருத்தத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. அவசர காலநிலையின் போது மாகாண நிர்வாகம் தொடர்பாக ஜனாதிபதி கட்டளைகளைப் பிறப்பிக்கலாம். இதையிட்டு எந்த நீதிமன்றத்திலும் கேள்வியெழுப்ப முடியாது.

மாகாண நிறைவேற்றுத் துறையைப் பொறுத்தவரை அதன் தலைவர் ஆளுநரே ஆவார். அவருக்கு உதவுவதற்கும் ஆலோசனை கூறுவதற்கும் மட்டும் முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை இருக்கும். ஆளுநர் நேரடியாகவோ, மாகாண அமைச்சர்கள் மூலமாகவோ அல்லது ஆளுநருக்குக் கீழ் செயற்படும் அலுவலர்கள் மூலமாகவோ நிறைவேற்றுத் தத்துவத்தைப் பிரயோகிப்பார் என்றும் யாப்பில் கூறப்பட்டுள்ளது. ஆளுநர் அரசியல் அமைப்பினால் அவருக்குத் தற்துணிவின் படி வழங்கப்பட்டவற்றைத் தவிர ஏனைய விடயங்களில் முதலமைச்சரதும் மாகாண அமைச்சரவையினதும் ஆலோசனையின் படியே செயற்படுதல் வேண்டும் எனக் கூறப்பட்ட அதேவேளை அமைச்சரவையின் ஆலோசனையுடன் உடன்படாதவிடத்து பொதுநலன் கருதி அவ்விடயத்தை கட்டளைகளுக்காக ஆற்றுப்படுத்தலாம் என்றும், அரசியலமைப்பின் கீழ் ஏதேனும் கருமம் ஆளுநரின் தற்துணிவின்படி நடைபெற வேண்டுமா? இல்லையா? என்ற கேள்வி எழும்போது ஆளுநரின் முடிவே இறுதியானதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நீதிமன்றத்தினாலும் கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இங்கு ஆளுநரின் தற்துணிவு என்பது ஜனாதிபதியின் பணிப்பாகவே கொள்ளுதல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிறைவேற்றுத் துறையின் அதிகாரம் முழுமையாக ஆளுநரிடம் இருப்பதையே இங்கு காணலாம். முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அரசியல் நிர்வாகத்திடம் ஆளுநர் தயவுபண்ணி அதிகாரத்தை வழங்கினால் மட்டுமே அமைச்சரவையினால் அவற்றைச் செயற்படுத்த முடியும்.

கிழக்கு மாகாண சபையில் இந்த நிலைமை தெளிவாகவே தெரிந்தது. இங்கு ஆளுநர் அமைச்சரவையைக் கணக்கே எடுக்கவில்லை. அதிகாரிகளுக்கு அவர் நேரடியாகவே கட்டளையிட்டார். அதிகாரிகளும் அமைச்சர்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காது ஆளுநரின் கட்டளைப்படியே செயற்பட்டனர்.

சட்டமும் ஒழுங்கும் பற்றிய அதிகாரம், அதிகாரப் பகிர்வினை பொறுத்தவரை முக்கியமான ஒன்றாகும். இவ் அதிகாரம் மாகாண அரசியல் நிர்வாகத்திற்குரியதாகவே இருந்திருக்க வேண்டும். 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளின் அதிகாரம் என இது கூறப்பட்ட போதும், அது ஒரு தோற்றமாகத் தெரிந்ததே தவிர உண்மையானதாக இருக்கவில்லை.

மாகாண சட்டம், ஒழுங்கிற்குப் பொறுப்பாக மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் இருப்பார் எனக் கூறப்பட்டது. இவரை மாகாண முதலமைச்சரின் ஆலோசனையின் படி நியமித்தல் வேண்டும் எனக் கூறப்பட்ட போதும் முதலமைச்சர் முரண்படுவாரானால் ஜனாதிபதி அந்த நியமனத்தினை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மாகாண அரசியல் நிர்வாகத் தலைவரான முதலமைச்சரை விட மத்திய அரசின் அரசியல் நிர்வாகத் தலைவரான ஜனாதிபதியே முக்கியத்துவப்படுத்தப்படுகின்றார். இது ஒரு வகையில் இதனை ஜனாதிபதியின் அதிகாரமாக்கி விடுகின்றது.

மாகாணத்திற்கான பொலிஸ் ஆட்சேர்ப்பில் கூட மத்திய அரசின் அதிகாரமே மேலோங்கியுள்ளது. தேசிய பொலிஸ் பிரிவிலிருந்து கடமை வழி அனுப்பப்பட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் மாகாண மட்டத்தில் ஆட்சேர்ப்பு மூலம் சேர்க்கப்படுவர் எனவும் இதற்காக மாகாண பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாகாண பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதியின் கலந்தாலோசனையுடன் பகிரங்க சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் ஒருவர், மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்படும் ஒருவர் என மூவர் அங்கம் வகிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது. இம்மூவரில் முதல் இருவரும் ஜனாதிபதியின் செல்வாக்கிற்குட்பட்டவர்களாக இருப்பதினால் இங்கும் ஜனாதிபதியின் அதிகாரமே மேலோங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

இவ்விடயத்தில் மேற்கூறியவாறு ஜனாதிபதியின் கை மேலோங்கிய நிலையில் இருந்த போதும் கூட இதுவரை சட்டமும் ஒழுங்கும் அதிகார நடைமுறையில் உருவாக்கப்படவில்லை. அதாவது மாகாண பொலிஸ் பிரிவு உருவாக்கப்படவில்லை. மாகாணப் பொலிஸ் ஆணைக்குழுவும் உருவாக்கப்படவில்லை. எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கும் அரசிற்கு இருப்பதாகவும் தெரியவில்லை. ஜனாதிபதி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படமாட்டாதென திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு கூட பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கல்வியும், கல்விச் சேவைகளையும் பொறுத்தவரை குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் மாகாண சபைகளின் அதிகாரங்களாக இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகளுக்குள் தேசிய பாடசாலைகள் கொண்டுவரப்பட்டன. மாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் தற்போது தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றும் அதிகாரமும் மத்திய அரசிற்கு இருந்தது. அங்கவீன மாணவர்களுக்கான விசேட பாடசாலைகளும் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. இதைவிட ஆசிரிய கலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்பன மத்திய அரசிடமே இருக்கும் எனக் கூறப்பட்டது. இவை தொடர்பில் மாகாண சபைகளுக்கு எந்த அதிகாரங்களும் கிடையாது. பொதுவாக சுயாட்சி அதிகாரங்களுக்குள் கல்வி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுவதே வழக்கமானதாகும். கொள்கை நிலைப்பட்ட முடிவுகளை மட்டுமே சில நாடுகளில் மத்திய அரசு தன் கையில் வைத்திருக்கின்றது. அதிலும் கூட நெகிழ்ச்சிப் போக்கே காணப்படுகின்றது. மாநிலங்களின் அடையாளம் சம்பந்தமான விடயங்கள் கல்வி அதிகாரத்தில் உள்ளதினால், அது தொடர்பான கொள்கை வகுப்பில் மத்திய அரசு பெரியளவிற்குத் தலையிடுவதில்லை. ஆனால் 13ஆவது திருத்தத்தில் இவை காணப்படவில்லை. வழங்கப்பட்ட சிறியளவிலான கல்வி அதிகாரங்களையும் ஆளுநர் தன்வசமே வைத்திருக்கின்றார். கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் ஒரு சிங்களவராக இருந்தபோது “இக்கல்வி அமைச்சர் பதவி வகிப்பதை விட வயலில் வெள்ளாமை வெட்டப்போகலாம்” எனக் கூறியிருந்தார்.

காணி தொடர்பான அதிகாரங்களை பொறுத்தவரையில் அரச காணிகள் மத்திய அரசிற்கு உரித்தாதல் வேண்டும் என்றே யாப்பில் கூறப்பட்டது. எனினும் காணிகளைப் பயன்படுத்தும் உரிமை மாகாண சபைகளுக்கு உரியது என்றும் கூறப்பட்டது. ஆனாலும் மத்திய அரசின் கொள்கைகளுக்கேற்பவே மாகாண சபைகள் காணிகளைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டதுடன், மத்திய அரசின் தேவைக்கேற்ற காணிகளை அது சுவீகரித்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது.

விவசாயக் குடியேற்றங்கள் மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்பவே உருவாக்கப்படும். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கான கொள்கைகளையும் மத்திய அரசே தீர்மானிக்கும். மாகாண சபைகள் நடைமுறைப் பணிகளையே மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டது. இது கொள்கை உருவாக்கம் என்ற பெயரில் மத்திய அரசு காணி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அரச காணிகளின் பயன்பாடு தொடர்பாக தேசிய ஆணைக்குழு முடிவெடுக்கும் எனக் கூறப்பட்டாலும் அவ் ஆணைக்குழுவிலும் மத்திய அரசின் ஆதிக்கமே மேலோங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு அரச காணிகள் தொடர்பாக மத்திய அரசின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த போதும், இதுவரை இவ் அதிகாரமும் நடைமுறைக்கு வரவில்லை. எதிர்காலத்தில் வரக்கூடிய அறிகுறிகளும் இல்லை. பேரினவாத சக்திகள் எதிர்க்கும் என்ற காரணத்தினால் அரசு இதனை உருவாக்க விரும்பவில்லை. திருகோணமலையில் காணிகளை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கிய போது கிழக்கு மாகாண சபையுடன் கலந்தாலோசிக்கவில்லை. கிழக்கு மாகாண காணி அமைச்சர் தனக்குத் தெரியாமல் 25,000 ஏக்கர் காணிகள் வெளியாருக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். காணி அதிகாரம் இல்லாமல் ஒரு தேசிய இனத்தினால் தனது பொருளாதார நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்க முடியாது. குடியேற்ற அபாயங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது.

13ஆவது திருத்தத்தைவிட, பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் (1957) காணி அதிகாரம் தெளிவாக இருந்தது எனக் கூறலாம். பண்டா – செல்வா ஒப்பந்தத்தின் பிரிவு 5 பின்வருமாறு கூறுகின்றது.

“விவசாயம், கூட்டுறவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூக சேவை, மின்சாரம், தண்ணீர்த்திட்டங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங்கிய குறிப்பிட்ட விடயங்கள் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருத்தல் வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்தினாலேயே வரையறுக்கப்படும்.”

அதேவேளை பிரிவு 6 பின்வருமாறு கூறியது: “குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை தமது அதிகார எல்லைக்குட்பட்ட காணிகள் வழங்கப்பட வேண்டிய குடியேற்றவாசிகளைத் தெரிவு செய்வதும், அத்திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் ஆட்களைத் தெரிவு செய்வதும் பிரதேச சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.”

டட்லி – செல்வா ஒப்பந்தத்திலும் (1965) குடியேற்றம் சம்பந்தமான ஏற்பாடுகள் தெளிவாக இருந்தது எனக் கூறலாம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குடியேற்றங்களை மேற்கொள்ளும் போது அம்மாகாண மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஒப்பந்தத்தின் பிரிவு 4 பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

• வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அம்மாகாணங்களிலுள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வழங்கப்படுதல் வேண்டும்.
• வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்படல் வேண்டும்.
• இலங்கையின் ஏனைய பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு முதலிடம் கொடுத்து, அதன் பின்னர் ஏனையவர்களுக்கு வழங்கலாம்.

சுகாதாரத்தினைப் பொறுத்தவரை போதனா வைத்தியசாலைகளையும், விசேட நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளையும் தவிர ஏனையவை மாகாண சபைகளின் அதிகாரத்தினுள் இருக்கும் என அரசியல் யாப்பில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் இவற்றில் பலவற்றினை மத்திய அரசாங்கம் சுற்றுநிருபங்கள் மூலம் பறித்துள்ளது. இது தொடர்பாக நியதிச் சட்டம் ஒன்றில்லாதபடியினால் மாகாண சபையின் அதிகாரத்தில் இருந்த இரத்தினபுரி, கேகாலை வைத்தியசாலைகளை மத்திய அரசு மீளப்பெற்றது.

பெரு வீதிகளைப் பொறுத்தவரை தேசிய பெருவழிகள், அதன் மீதான பாலங்கள் தவிர்ந்த ஏனையவை மாகாண சபைகளின் அதிகாரங்களாக இருக்கும் எனக் கூறப்பட்டது. இதனடிப்படையில் வடக்கு – கிழக்கு மாகாண சபை நியதிச் சட்டத்தை இயற்ற முயன்ற போது அது தடுக்கப்பட்டது. பஸ் சேவைகளை நடத்துவது தொடர்பாகவும் கூட முயற்சி செய்த போது 1991 இல் 37ஆம் இலக்கச் சட்டத்தின்படி மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் பஸ் சேவைகளை நடத்துவது தடை செய்யப்பட்டது.

வரி விதிப்புத் தொடர்பாக மாகாண சபை நிரலில் 36 (1) தொடக்கம் 36 (20) வரை மாகாண சபைகளின் வரிவிதிப்புப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றம் எவ்வளவிற்கு மாகாண சபைகள் வரிவிதிக்கலாம் எனச் சட்டமியற்றிக் கொடுத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இதுவரை பாராளுமன்றம் அவ்வாறான எந்தச் சட்டத்தையும் இயற்றிக் கொடுக்கவில்லை.

நீதித்துறை அதிகாரப் பகிர்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மத்திய நீதித்துறையின் நீட்சியாகவே மாகாண நீதித்துறை காணப்பட்டது. மாகாண நீதித்துறைக்குப் பொறுப்பான மாகாண மேல் நீதிமன்றம் பிரதம நீதியரசரின் பொறுப்பின் கீழேயே செயற்பட்டது. அதன் நீதிபதிகளும் மத்திய நீதித்துறையிலிருந்தே அனுப்பப்பட்டனர். மாகாண அரசியல் நிர்வாகத்திற்கும், மாகாண மேல் நீதிமன்றத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

மொத்தத்தில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை குறைந்த மட்டத்திலாவது பேணக்கூடிய சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிங்கள ஆய்வாளரான கலாநிதி றொகான் எதிரிசிங்க, “13ஆவது திருத்தம் பல அடிப்படைக் குறைபாடுகளைக் கொண்டது. ஒரு பாதுகாப்பான, திறமைமிக்க அதிகாரப் பகிர்வினை அது வழங்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கூட்டு அதிகாரம் 

இனப்பிரச்சினைக்கு இலங்கை என்ற அதிகாரக் கட்டமைப்பிற்குள் தீர்வு ஒன்றினை உருவாக்க வேண்டுமானால் சுயாட்சி அதிகாரங்களுக்கான தளங்கள் இருப்பதோடு, கூட்டு அதிகாரத்திற்கான வலிமையான தளம் ஒன்றும் இருப்பதும் அவசியமாகும். ஆனால், 13ஆவது திருத்தத்தில் அத்தளம் உருவாக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசின் ஆட்சிச் செயற்பாட்டில் ஒரு சமூகமாகப் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. பொதுவாக இரண்டாவது சபையொன்றினை உருவாக்கி தேசிய இனங்களுக்கு அதில் சமத்துவமான பங்கினை வழங்கிச் செயற்படுவதே நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்தளம் உருவாக்கப்படாமல் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டமையினால், சிங்களப் பெரும்பான்மை ஆதிக்கம் கொண்ட பாராளுமன்றத்தின் கீழேயே மாகாண சபைகள் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மாகாண சபைகள் தொடர்பான பல அதிகாரங்கள் பாராளுமன்றத்திடமே வழங்கப்பட்டிருந்தன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசின் அதிகாரங்களாக மாற்றிவிடக்கூடிய நிலையிருந்தது அல்லது அனைத்து மாகாண சபைகளினதும் சம்மதத்துடனும் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடனும் மாற்றக்கூடிய நிலையிருந்தது.

சிங்கள மக்கள் 75 சதவீதம் வாழ்கின்ற ஒரு நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது கடினமானதல்ல. உண்மையில் இவ்விடயத்தில் தேசிய இனங்கள் தீர்மானிக்கக்கூடிய வகையில் ஒரு கட்டமைப்புப் பொறிமுறை இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் பாராளுமன்றத்திலுள்ள குறித்த தேசிய இனத்தின் பிரதிநிதிகளது சம்மதத்துடனாவது மாற்றங்களைச் செய்யலாம் என்ற ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கலாம்.

மத்திய நிர்வாகத் துறையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு எந்தவித பங்கும் இருக்கவில்லை. ஜனாதிபதியே மத்திய நிர்வாகத் துறைக்கும் பொறுப்பாக இருந்தார். அவருக்கு உதவியாக அவரின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவை செயலாற்றியது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதில் காத்திரமான பாத்திரம் தமிழ் மக்களுக்கு இருந்தபோதும் ஜனாதிபதியாக வருபவர்கள் நடைமுறையில் அப்பாத்திரத்தைப் பொருட்படுத்துவதில்லை. தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடிய எந்தச் சூழலும் இலங்கையில் இல்லை.

அமைச்சரவை மட்டத்திலாவது, காத்திரமான பங்கினை திட்டவட்டமான வகையில் தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கலாம். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. ஜனாதிபதி தயவுபண்ணினால் மட்டும் தமிழர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஜனாதிபதிக்குச் சார்பாக இருப்பாரே தவிர தமிழ் மக்களுக்கு சார்பாக இருப்பார் எனக் கூறிவிட முடியாது. நடைமுறையிலும் அதுவே நடந்தது. அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யும் போதும் கூட தமிழ் மக்களின் நலன்களைப் பேணக்கூடிய அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.

அதிகாரப் பங்கீட்டுச் செயற்பாடு ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால் கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானதாகும். இங்கு கூட்டுத் தத்துவம் என்பது விசேடமாக கூட்டு அதிகாரத்தினையே குறித்து நிற்கின்றது. தேசிய இனங்களைப் பொறுத்தவரை கூட்டு அதிகாரம் பிரதானமாக இரு விடயங்களை நிறைவேற்றுவதற்கு அவசியமானதாகும். அதில் முதலாவது, பகிர்வு அதிகாரங்களைப் பாதுகாப்பதாகும். இரண்டாவது, கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கினைப் பெற்றுக்கொள்வதாகும்.

பகிர்வு அதிகாரங்களைப் பாதுகாக்கக்கூடிய தரத்தில் கூட்டு அதிகாரம் இருக்க வேண்டுமானால் குறிப்பாக இரண்டு விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முதலாவது கூட்டு அதிகார அமைப்பு பகிர்வு அதிகாரங்களைப் பாதுகாக்கக்கூடிய வலிமை வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும். இதற்கு இரண்டாவது சபையொன்றும் அதற்கு வலிமையான அதிகாரங்களும் இருப்பது அவசியமானதாகும். மத்திய அரசு, பகிர்வு அதிகாரங்களைப் பறிக்கும் சூழல் இருப்பதால், அதனைத் தடுக்கக்கூடிய வலிமையான அதிகாரங்கள் அதற்கு அவசியமாகின்றது. ஓர் அமைப்பு என்ற வகையில் வீட்டோ அதிகாரம் இருக்கும் போதே இது சாத்தியமானதாகும். அமெரிக்க செனற்சபை இதற்கு நல்ல உதாரணமாகும்.

அடுத்த விடயம், இரண்டாவது சபையில் தேசிய இனங்கள் சமத்துவமான பங்கினைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பகிர்வு அதிகார அலகுகளை உருவாக்குவதாகும் (தேசிய இனங்களின் பிரதேசங்களைக் கருத்தில் கொண்டு பகிர்வு அதிகார அலகுகளை உருவாக்கும் போதே இது சாத்தியமானதாக இருக்கும்).

ஆனால் மாகாண சபை முறையில் இவ்விரண்டு விடயங்களுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. இங்கு தேசிய இனங்கள் சமத்துவமாக மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் வகையில் இரண்டாவது சபையொன்று உருவாக்கப்படவில்லை. மாறாக மத்திய சட்டவாக்க அதிகாரப்பீடமாக சிங்கள சமூகத்தினை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றமே திகழ்ந்திருந்தது. இப்பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்தல் மாவட்டங்கள் தோறும் நடைபெறுகின்ற விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின்படியே தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாகாண அலகுகளின் பிரதிநிதிகளாக அவர்கள் இருக்கவில்லை.

பகிர்வு அதிகார அலகுகளை உருவாக்கும் போது அவை தேசிய இனங்களின் அடிப்படையில் பிரிக்கப்படவில்லை. மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களினால் பிரிக்கப்பட்ட மாகாணங்களே பகிர்வு அதிகார அலகுகளாக இருந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்ட போதும் பின்னர் அவை பிரிக்கப்பட்டன.

இந்த மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏனைய ஏழு மாகாணங்களிலும் சிங்கள மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். இதனால் மாகாண சபை முறையில் சிங்கள மாகாணங்களே அதிகமாக இருக்கின்ற நிலை தோற்றம் பெற்றது. தேசிய இனங்களின் பிரதேசங்களை அதிகார அலகுகளாகக் கொண்டிருப்பின் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் என்கின்ற பிரிவினருக்கும் தனியே அதிகார அலகுகள் உருவாகியிருக்கும். தேசிய இனங்களுக்கிடையே இதன் காரணமாக சமத்துவ நிலையும் உருவாகியிருக்கும்.

அடுத்து, கூட்டு அதிகாரத்தில் சமத்துவமான பங்கினை தேசிய இனங்களுக்குப் பெற்றுக்கொடுப்பது முக்கியமானதாகும். குறைந்தபட்சம் தேசிய இனங்களோடு தொடர்புடைய இரு விடயங்களில் காத்திரமான பங்கு அவசியமானதாகும்.

முதலாவது: தேசிய இனங்களுடன் தொடர்புடைய சட்டங்கள், தீர்மானங்கள் என வரும்பொழுது மறுப்பாணை அதிகாரம் தேசிய இனங்களின் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். இதுவே இரட்டை வாக்குரிமை என அழைக்கப்படுகின்றது. இது பற்றி முன்னரும் குறிப்பிடப்பட்டது. இதே நிலை அரசியல் யாப்புத் திருத்தத்திற்கும் இருப்பது அவசியமானதாகும். தற்பொழுது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பில் இதற்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை. சாதாரண கூட்டங்கள், தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சாதாரணமான பெரும்பான்மையே போதுமானதாகவுள்ளது. 75 வீதத்திற்கு மேல் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான சாதாரண சட்டங்கள், தீர்மானங்களை நிறைவேற்றுவது சிங்கள சமூகத்திற்கு ஒன்றும் கடினமானதல்ல. மாதந்தோறும் நிறைவேற்றப்படுகின்ற தமிழருக்கு எதிரான அவசரகாலச் சட்டம் இதற்கு நல்ல உதாரணமாகும். இச்சட்டம் நிறைவேற்றப்படும் போது தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு இதனை எதிர்த்து வாக்களிப்பது தவிர வேறு எதுவும் செய்ய முடிவதில்லை. எதிராகக் கிடைக்கின்ற வாக்குகள் மிகச் சிறியளவாக இருப்பதனால் எதையும் செய்ய முடிவதில்லை. தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு வீட்டோ அதிகாரம் இருந்திருப்பின் அவற்றைத் தடுத்து நிறுத்த முடிந்திருக்கும்.

இரண்டாவது: யாப்புத் திருத்தங்களைப் பொறுத்தவரை சில திருத்தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையும், வேறு சில வகையான திருத்தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியமானது எனக் கூறப்பட்டுள்ளது. இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இலங்கை ஓர் ஒற்றையாட்சி நாடு, பௌத்த மதம் முதன்மை மதம், தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற ஏற்பாடுகளில் மாற்றங்களைச் செய்வதாயின் அவற்றிற்கு மக்கள் தீர்ப்பு அவசியமானதாகும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதே கடினமாக இருக்கும் போது மக்கள் தீர்ப்பில் வெற்றி கொள்வது என்பது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். இவற்றிற்கான அரசியல் கலாசாரம் தென்னிலங்கையில் அறவே கிடையாது.

எனவே அரசியல் யாப்புத் திருத்தச் செயற்பாட்டினை பொறுத்தவரை தமிழ் மக்கள் சமமாகப் பங்குபற்றுவதற்கு எந்த வாய்ப்பும் இங்கு வழங்கப்படவில்லை. மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையே போதுமானதாக உள்ளது. ஏற்கனவே ஜே.ஆர். ஜெயவர்த்தனா காலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் யாப்பிற்கான 6ஆவது திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அக்காலத்தில் பாராளுமன்றத்திலிருந்த உறுப்பினர்கள் தேர்தல் தொகுதி மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக இருந்தபடியினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தது என இதற்கு நியாயம் கூறலாம். ஆனால் அன்றைய வாக்களிப்பில் இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பதனை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது.

இலங்கையின் அரச இயந்திரம் என்பது சிங்கள அரச இயந்திரமாகவேயுள்ளது. நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. நீதித்துறையின் பல தீர்ப்புகள் சிங்கள மேலாதிக்கக் கருத்துகளை நிரூபிப்பதாகவே அமைந்துள்ளன. சுனாமி பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான தீர்ப்பு, வடக்கு – கிழக்கு இணைப்பிற்கு எதிரான தீர்ப்பு, பத்திரிகையாளர் திசநாயகத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிரான தீர்ப்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சிங்கள மரபுரிமைப்படியே அத்தீர்ப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டார் (இது பற்றி முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது). பேனாவைப் பயன்படுத்தியமைக்காக திசநாயகத்திற்கு 20 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இலங்கையின் சட்ட ஏற்பாடுகளிலும், அது தொடர்பான நீதித்துறையின் நடவடிக்கைகளிலும், பிரஜாவுரிமைச் சட்டத்துடனேயே தமிழ் மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது. இதனால் இலங்கையின் சட்டத்துறை, நிர்வாகத்துறை மட்டுமல்ல நீதித்துறையிலும் தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது.

இந்நிலையில் நீதித்துறையைப் பொறுத்தவரை பகிர்வு அதிகாரத்திலும் கூட்டு அதிகாரத்திலும் காத்திரமான பங்கு தமிழ் மக்களுக்கு அவசியமாகின்றது. முன்னர் குறிப்பிட்டது போல மத்திய அரசின் நீதிமன்றங்கள், மாநில அரசின் நீதிமன்றங்கள் என வகைப்பாடு செய்யும்போதே பகிர்வு அதிகாரங்களில் காத்திரமான பங்கினைப் பெற்றுக்கொள்ள முடியும். அமெரிக்காவில் இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்யும் அதிகாரம் மத்திய அரசின் நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல மாநில அரசின் நீதிமன்றங்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் நீதிபதிகள் கடமையாற்றுகின்றனரே, அவர்கள் சரியான நீதியினை வழங்கமாட்டார்களா? என்ற கேள்வியும் எழலாம். நீதித்துறை சுதந்திரம் பற்றி பெரியளவிற்கு கூறப்பட்ட போதும் இலங்கை நீதித்துறை அமைப்பில் தமிழ் நீதிபதிகளுக்கு சுதந்திரமான அதிகாரங்கள் எதுவும் கிடையாது. பிரதம நீதியரசரின் கட்டளைகளை தலைமேற்கொண்டு செயற்படுவதனை விட வேறு சுயாதீன இயக்கம் அவர்களுக்கு கிடையாது. நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களும் நீதியான தீர்ப்பினை வழங்குவதற்கு ஏற்றதாக இல்லை. தமிழ்ப் பிரதேசங்கள் ஆயுதப் படைகளினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கு நிலவுகின்ற இராணுவ நிர்வாகத்தினை மீறி அவர்களினால் எதுவும் செய்ய முடியாது.

இதைவிட உயர்நிலை நீதிமன்றங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கொழும்பிலேயே உள்ளது. முக்கியமான வழக்கின் மேன்முறையீடுகள் இங்கேதான் விசாரிக்கப்படுகின்றன. பல வழக்குகளின் மேன்முறையீட்டின் போது, முன்னைய தீர்ப்புகளையே சிங்களச் சமூகத்திற்கு சார்பாக இவை மாற்றிவிடுகின்றன. பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் கொலை வழக்கு இதற்குச் சிறந்த உதாரணமாகும். மேன்முறையீட்டின் போது குற்றவாளிகளுக்கான மரண தண்டனைகள் நீக்கப்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அடிப்படை உரிமைகள் சம்பந்தமான வழக்குகள் அண்மைக்காலமாக தமிழ் மக்களுடன் அதிகம் தொடர்புடையவை. இது தொடர்பான அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றம் தமிழ் மக்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்கவில்லை. சம்பூர் விவகாரம் இதற்கு நல்ல உதாரணம்.

எனவே பகிர்வு அதிகாரங்களுக்குள் நீதித்துறையும் அடங்கும் போதே தமிழ் மக்களினால் தமது பிரதேச மட்டங்களில் உண்மையான நீதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பகிர்வு அதிகாரத்திற்கு அப்பால் கூட்டு அதிகாரத்திலும் நீதித்துறை தொடர்பான காத்திரமான பங்கு தமிழ் மக்களுக்குத் தேவையாக உள்ளது. அரசியல் யாப்பு தொடர்பான முக்கிய விடயங்களை கூட்டு அதிகாரப் பீடமான மத்திய அரசின் நீதித்துறையே கவனிப்பதால் இப்பங்கு தேவையாகவுள்ளது. நீதித்துறையின் அமைப்பு, நீதித்துறையின் அதிகாரங்கள் ஆகிய இரண்டிலும் இப்பங்கு தேவையானதாகும்.

அமைப்பினைப் பொறுத்தவரை சமத்துவமான பங்கு அல்லது குறைந்தபட்சம் விகிதாசாரப் பங்காவது தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். சுவிட்சர்லாந்து நீதித்துறையில் இவ்வாறான பங்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி முன்னரும் கூறப்பட்டுள்ளது.

நீதித்துறையின் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் நீதிபதிகளே அவற்றை விசாரணை செய்யக்கூடிய வகையில் பங்கு இருத்தல் வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களை எவரும் விசாரணை செய்யலாம். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுடன் தொடர்புடைய விடயங்களில் தமிழ் நீதிபதிகளே அவற்றை விசாரணை செய்ய வேண்டும்.

நீதி வழங்கும் நடவடிக்கைகளில் முக்கியமான விடயம் நீதி வழங்கப்படுவது மட்டுமல்ல, அது உண்மையான நீதியாக இருத்தல் வேண்டும் என்பதுமாகும். பேரினவாதக் கருத்துநிலை ஆதிக்கமுள்ள நீதி நிறுவனத்தால் ஒருபோதும் உண்மையான நீதியை வழங்க முடியாது. பக்கச்சார்பு வெளிப்படையாகக் தெரியக்கூடிய வகையில் வழங்கப்படும் நீதியை எவ்வாறுதான் தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியும்?

நீதித்துறையைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தத்தில் தமிழ் மக்களுக்கு பகிர்வு அதிகாரமும் கிடையாது. கூட்டு அதிகாரமும் கிடையாது.

தொடரும். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்