மன்னார் கடற்கரை அரிப்பு: மூழ்கும் வாழ்க்கை, மறைக்கப்படும் குரல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
22 நிமிட வாசிப்பு

மன்னார் கடற்கரை அரிப்பு: மூழ்கும் வாழ்க்கை, மறைக்கப்படும் குரல்

August 13, 2026 | Ezhuna

இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மூன்று தசாப்த ஆயுத மோதலின் பின் மீட்சியின் பாதையில் இருக்கின்றன. ஆனால் அந்த மீட்சியின் நடுவே ஒரு புதிய நெருக்கடி வளர்கிறது: சூழல் சீரழிவு. யாழ்ப்பாணத்தில் குடிநீர் வறட்சி, மன்னாரில் கடற்கரை அரிப்பு, முல்லைத்தீவில் வெள்ளம், வன்னியில் நில உரிமை மறுப்பு — இவை ஒரே வேர் கொண்ட பிரச்சினைகளின் வெவ்வேறு வெளிப்பாடுகள். இந்த நெருக்கடிகள் அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. 46,000 போர் விதவைகள், 55,000 பெண் தலைமைக் குடும்பங்களைக் கொண்ட வடக்கில் — சூழல் சீரழிவின் முதல் பலி பெண்களே. காலநிலை மாற்றம் பாலின நடுநிலையானதல்ல — அது ஏற்கனவே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்துகிறது என்பதை ‘வடக்கும் கிழக்கும் பசுமையும்: சூழல் நெருக்கடிகளும் பாலின நீதியும்’ எனும் இந்தத் தொடர் ஆதாரங்களுடன் காட்டுகிறது.

கடல் முன்னேறுகிறது. நிலம் பின்வாங்குகிறது. 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிகிறது. மன்னார் கடற்கரை அரிப்பு ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல — இது திட்டமிடல் தோல்வி, சட்ட மீறல், பெண்களின் மறைக்கப்பட்ட இழப்பு.

ரீட்டா வசந்தி (வயது 54), மன்னார் தீவின் ஜிம்பிரவுன் நகர் என்னும் சிறிய கிராமத்தில் வாழ்கிறார். “என் குழந்தைப் பருவத்தில் நான் விளையாடிய நிலம் இப்போது கடலுக்குள் போய்விட்டது. நாங்கள் குளிக்கச் சென்ற கிணறு இப்போது கடலின் நடுவில் இருக்கிறது. கடல் நிலத்தை விழுங்குகிறது — நாங்கள் இங்கே வாழ்வது ஆபத்தாகிவிட்டது” என்று அவர் ‘புவி ஊடகவியல் வலையமைப்பிற்குக்’ (Earth Journalism Network, 2025) கூறினார்.

ரீட்டாவின் வார்த்தைகள் மன்னார் தீவின் ஒட்டுமொத்தக் கதையைச் சொல்கின்றன. இது ஒரு தனிக் குடும்பத்தின் கதை அல்ல. 15,000 மீனவக் குடும்பங்கள் இந்த நெருக்கடியை அனுபவிக்கின்றன. கடற்கரை அரிப்பு, கடல்மட்ட உயர்வு, மணல் சுரங்கம், காலநிலை மாற்றம் — இவை அனைத்தும் ஒரே நேரத்தில் மன்னார் மக்களைத் தாக்குகின்றன. மேலும் இந்த அழிவை அரசின் மாற்றுத்திட்டங்கள் தீவிரப்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகளும் சட்ட வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

முக்கிய தரவுகள் — மன்னார் நெருக்கடி

  • கடல்மட்ட உயர்வு (கடந்த 10 ஆண்டு): 12 மி.மீ. அதிகரிப்பு – வட இந்தியப் பெருங்கடல் கடலோரம் (UK Int’l Dev., 2024)
  • கடல்மட்ட உயர்வு (100 ஆண்டு சராசரி): 1.8 மி.மீ./ஆண்டு (IUCN, 2012)
  • வங்காலை கடற்கரை அரிப்பு: 4.7 முதல் − 5.3 மீ./ஆண்டு (Thasarathan et al., Journal of Maps, 2024)
  • 2042இன் கணிப்பு: வங்காலை மேற்கு அரிப்பு – 45 மீட்டர் கூடுதல் (Kalman Filter Model).
  • ஆபத்தான பகுதிகள்: வங்காலை, நறுவிலிக்குளம், கொண்டச்சிக்குடா – உயர் அரிப்பு மண்டலங்கள்
  • பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள்: 15,000+ (Groundviews, 2025)
  • உலர் மீன் தொழிலில் பெண்கள்: பெரும்பான்மை முக்கிய வருமான ஆதாரம்
  • 2024–2025 போராட்டப் பங்கேற்பு: 2,000+ மக்கள் (ஜூன் 11, 2025 பேரணி)
  • ஆகஸ்ட் 2025 முடிவு: ஒரு மாதம் மட்டும் நிறுத்தம் – காற்றாலை விரிவாக்கம் தற்காலிகம்

I. மன்னார் — ஒரு தீவின் சூழலியல் செல்வம்

மன்னார் வெறும் நிலம் மட்டுமல்ல. இது உயிரியல் வளமிக்க ஒரு சூழல் அமைப்பு. ஆதாம்பாலத்தை ஒட்டிய இந்தப் பகுதி உலகிலேயே மிகவும் பழமையான கடல்புல் (Seagrass) படுகைகளில் ஒன்றைக் கொண்டிருக்கிறது. கடல் பசுக்கள் (Dugongs) இங்கு உணவு தேடி வருகின்றன. புலம்பெயர் பறவைகளுக்கான முக்கிய தங்குமிடம் இது. வங்காலை பறவைகள் சரணாலயம் இங்கே அமைந்திருக்கிறது. அருவி ஆறு மற்றும் கல் ஆறு ஆகியவற்றின் முகத்துவாரங்கள் (Estuaries) மீன் இனப்பெருக்க மண்டலங்களாக விளங்குகின்றன.

இலங்கை மீன்வளத்தில் மன்னார் கடல் மண்டலம் மிகவும் முக்கியமானது. 15,000க்கும் அதிகமான குடும்பங்கள் இந்தக் கடலை நம்பி வாழ்கின்றன. கடல்புல் படுகைகள் இல்லாமல் போனால் மீன் இனங்கள் இல்லாமல் போகும். மீன் இல்லாமல் போனால் இந்தக் குடும்பங்கள் இல்லாமல் போகும். இது தொடர்ச்சியான அழிவின் சங்கிலி.

“மன்னார் தீவு கடல்புல், புலம்பெயர் பறவைப் பாதைகள் மற்றும் பல்வகை சூழல் அமைப்புகளை கொண்டிருக்கிறது — இது ஆழ்மட்ட மணல் அகழ்வால் (Deep Sand Mining) ஆபத்தில் இருக்கிறது.” — மங்கபே (Mongabay, 2025)

II. கடற்கரை அரிப்பு — அறிவியல் என்ன சொல்கிறது?

2024ஆம் ஆண்டு ‘ஜேர்னல் ஒஃப் மெப்’ (Journal of Maps) இல் வெளியான தசரதன் மற்றும் பலரின் (Thasarathan et al.) ஆய்வு மன்னார் கடற்கரையில் 1988 முதல் 2022 வரையான 34 ஆண்டுகளில் நடந்த கடற்கரை மாற்றங்களை ‘லேண்ட்சட்’ (Landsat) செயற்கைக்கோள் படங்கள் மூலம் ஆய்வு செய்தது. இது மன்னார் கடற்கரை குறித்த மிகவும் விரிவான ஆய்வுகளில் ஒன்று.

வங்காலை மேற்கு — அரிப்பு வீதம் ஆண்டுக்கு − 4.7 முதல் − 5.3 மீட்டர். 2042க்குள் இன்னும் 45 மீட்டர் அரிக்கப்படும் என்று ‘கால்மன் வடிகட்டி மாதிரி’ (Kalman Filter Model) கணிக்கிறது. இது ஒரு வீட்டின் அகலத்திற்குச் சமம். 2042க்குள் தற்போதுள்ள வாழ்விடங்கள் நேரடியாக ஆபத்திற்கு உள்ளாகும்.

நறுவிலிக்குளம் — கல்லாறு ஆற்றின் முகத்துவாரம் அருகே, அரிப்பும் படிவமும் (Erosion and Accretion) இரண்டும் சேர்ந்து நடக்கும் ‘இயங்குநிலை கடற்கரை’ (Dynamic Shoreline) மண்டலமாக உள்ள பகுதி. ஆற்று வண்டல் படிவது குறைந்து, ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் மணல் அள்ளப்பட்டால், இறுதியில் கடற்கரை அரிப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். 

கொண்டச்சிக்குடா — இந்தப் பகுதியும் உயர் ஆபத்து மண்டலமாக அடையாளம் காணப்பட்டது. இங்கு கடலோரத்தில் வாழும் குடும்பங்கள் நேரடி ஆபத்தில் இருக்கின்றன.

அரிச்சமுனை — ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி (ResearchGate), மன்னார் வளைகுடாக் (Gulf of Mannar) கடற்கரையில், பூர்வமழைக்கு முன்பும் பின்பும் மணல் நகர்வு திசை மாறுகிறது. இந்த இயற்கையான சமநிலை மணல் சுரங்கத்தால் சீர்குலைக்கப்படுகிறது.

‘லண்டன் சர்வதேச அபிவிருத்தி’யின் (UK International Development) 2024ஆம் ஆண்டு ஆய்வான ‘இலங்கையின் கடல் மற்றும் கடலோரச் சூழலுக்கான காலநிலை மாற்ற அபாயங்கள்’ (Climate Change Risks to the Marine and Coastal Environment in Sri Lanka) — கடந்த பத்து ஆண்டுகளில் வட இந்தியப் பெருங்கடல் கடலோரத்தில் சராசரி கடல்மட்டம் 12 மி.மீ. உயர்ந்திருக்கிறது என்று காட்டுகிறது. 1964இல் ராமேஸ்வரம் புயல் 7.6 மீட்டர் கடல் பெருக்கை உண்டாக்கியதால் சேதமடைந்த தலைமன்னார் படகுத்துறை நிலையம் இன்று வரை மீளக்கட்டப்படவில்லை. பாக்கு நீரிணை (Palk Bay) ஒரு அரை-மூடப்பட்ட கடல் பகுதியாக (Semi-enclosed basin) இருப்பதால், அடுத்தடுத்து வரும் கடுமையான புயல்களின் போது வடக்கு மன்னார் பகுதி எந்தளவுக்குப் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் என்பதைத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.

III. மணல் சுரங்கம் — கடற்கரை அழிவின் முகம்

கடல்மட்ட உயர்வு இயற்கையானது. ஆனால் மணல் அகழ்வு? அது மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழிவு. மன்னாரில் இல்மனைட் மணல் (Ilmenite Sand – Titanium Ore உள்ள கருப்பு மணல்) சுரங்கத் திட்டங்கள் 2023-2024 காலத்தில் வேகம் பெற்றன. அரசு அனுமதியோடு நிறுவனங்கள் கடலோர மணலை அகழத் தொடங்கின. மணல் சுரங்கம் நிலத்தடி நீர் அடுக்குகளைச் சீர்குலைக்கும், கடல்புல் படுகைகளை (Seagrass Beds) அழிக்கும், மணல் நகர்வின் இயற்கைச் சமநிலையைச் சிதைக்கும், 15,000 குடும்பங்களுக்கான மீன்வளத்தை அழிக்கும் என்று சூழலியல் விஞ்ஞானிகள் உடனடியாக எச்சரித்தனர். காற்றாலைத் திட்டங்களும் ஒரே நேரத்தில் திணிக்கப்படுகின்றன — சாலைக் கட்டுமானம், கம்பி பதித்தல் (Cable-laying), விசையாழி நிறுவுதல் (Turbine Installation) ஆகியவை கடற்கரைச் சூழலியலை மேலும் சேதப்படுத்துகின்றன.

‘கிரவுண்ட்வியூஸ்’ (Groundviews, 2025) அறிக்கை முக்கியமான ஒரு சட்டக் கேள்வியை எழுப்புகிறது: தேசியச் சுற்றுச்சூழல் சட்டம் (National Environmental Act, 1980), கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டம் (Coastal Conservation and Coastal Resource Management Act — CCCRMA) ஆகியவற்றில் மீறல் நடக்கிறதா? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் (EIA) அதற்குத் தேவையான உரிய திட்டமிடலும் இன்றி, இத்திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி இன்னமும் நிலுவையில் உள்ளது.

IV. மக்கள் போராட்டம் — மன்னாரின் எதிர்ப்பு

மன்னார் மக்கள் அமைதியாக இருக்கவில்லை. 2024 முதல் 2025 வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்தன — இது இலங்கையின் வட மாகாணத்தில் சமீப ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய சூழல் எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்று:

  • மார்ச் 2024: மீனவர்களும் விவசாயிகளும் கடற்கரையில் 10 கிலோமீட்டர் மனிதச் சங்கிலி அமைத்தனர்.
  • ஆகஸ்ட் 2024: கத்தோலிக்கப் பாதிரியார்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தின் (District Secretariat) எதிரே உட்கார்ந்து போராட்டம் நடைபெற்றது; அவர்கள் காவல்துறையினரின் தடைகளையும் மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
  • ஜூன் 11, 2025: 2,000க்கும் அதிகமான மக்கள், அரசுசாரா நிறுவனங்கள் (NGOகள்), பாதிரியார்களுடன் பெரும் பேரணி — FPIC கோரிக்கை.
  • ஆகஸ்ட் 4–6, 2025: ‘கருநிலம்’ (Black Soil) போராட்டம் — இளைஞர்கள், மீனவர்கள், பெண்கள் அகழ்வு வாகனங்களைத் தடுத்தனர்.
  • ஆகஸ்ட் 2025: தொடர் போராட்டங்கள் — “எங்கள் எதிர்காலத்துடன் விளையாடாதீர்கள்” (Don’t play with our future), “மணலும் காற்றும் வாழ்வு, விற்பனைப் பொருட்கள் அல்ல” (Sand and wind are life, not commodities) போன்ற வாசகங்கள்.
  • ஆகஸ்ட் 13, 2025: யாழ்ப்பாணத்தில் ஒருமைப்பாடு போராட்டம் — ‘மன்னார் போராட்டம் வடக்கு – கிழக்கின் போராட்டம்’ என்று அறிவிப்பு.

போராட்டத்தை நசுக்க அரசு முயற்சித்தது என்று ‘கிரவுண்ட்வியூஸ்’ ஆவணப்படுத்துகிறது: போராட்டத் தலைவர்களுக்கு இரவுவேளை அச்சுறுத்தல்கள், சமூகத்தைப் பிரிக்க வேலை வாய்ப்பு இலஞ்சம், போராட்ட இடங்களில் ஊடகவியலாளர்களுக்குத் தடை. ஆகஸ்ட் 2025இல் அரசு காற்றாலை விரிவாக்கத்தை ‘ஒரு மாதத்திற்கு’ நிறுத்தியது — ஆனால் மணல் அகழ்வு அனுமதிகள் தொடர்கின்றன என்று ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

♀ I. ரீட்டாவின் வாழ்க்கை — மீனவப் பெண்களின் மறைக்கப்பட்ட இழப்பு

ரீட்டா வசந்தியின் கதை ‘புவி ஊடகவியல் வலையமைப்பு’ (Earth Journalism Network) மற்றும் ‘டெய்லி மிரர்’ (Daily Mirror, 2025) இரண்டிலும் ஆவணப்படுத்தப்பட்டது. தேசிய மீன்வள ஒற்றுமை இயக்கத்தின் (National Fisheries Solidarity Movement) உறுப்பினரான அவர் தெளிவாகச் சொல்கிறார்: “கடல் வேகமாக நிலத்தை நோக்கி வருகிறது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது.” ஆனால், இந்த ஆபத்தை எண்ணி வேதனைப்படுவது அவர் மட்டுமே அல்ல; மன்னார் தீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும் இதே நிலையில் தான் தவிக்கிறார்கள்

டெய்லி மிரர் மற்றும் புவி ஊடகவியல் வலையமைப்பின் ஆய்வு தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது: “பெண்கள் காலநிலை மாற்றத்தின் மறைக்கப்பட்ட விலையைக் கொடுக்கிறார்கள். ஆனால் இந்த விலை கொடுப்பு கொள்கை உருவாக்கும் கூட்டங்களில் பேசப்படுவதில்லை” (Today, women bear the hidden costs of climate change and mega development projects in terms of loss of property, livelihoods and income and displacement.)

உலர் மீன் (Dry Fish) தயாரிப்பு, மன்னார் பெண்களின் முக்கிய வருமான ஆதாரம். கடலில் மீன் பிடிப்பது ஆண்கள்; மீன் பதப்படுத்துவது, உலர்த்துவது, விற்பது பெண்கள். இந்தச் சங்கிலி, சூழல் பிரச்சினைகளால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.

♀ II. உலர் மீன் தொழில் — காலநிலை மாற்றத்தின் நேரடிப் பலி

கடல் வெப்பமயமாதல் காரணமாக மீன்கள் ஆழமான கடல் பகுதிக்குச் செல்கின்றன. இதனால் வழக்கமான வலைகளுக்கு மீன்கள் எட்டுவதில்லை. மீன்பிடி குறையும் போது உலர் மீன் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வருமானமும் சரிவடைகிறது; ஆனால், அவர்களின் குடும்பச் செலவுகள் சிறிதும் குறைவதில்லை. 

‘மீன் மற்றும் மீன்வளம்’ (Fish and Fisheries) (Wiley, 2025) எனும் ஆய்வு ‘பாலின வேறுபாடுகளை வெளிப்படுத்துதல்’ (Unveiling Gender Disparities) பற்றிய உலகளாவிய தரவைச் சுட்டிக்காட்டுகிறது: “மீனவப் பெண்கள் கரையோரத்தில் மட்டுமே வேலை செய்கிறார்கள், ஆழமான கடலுக்குப் போவது ஆண்கள் மட்டுமே. ஆனால் கரையோரச் சூழலியல் சீர்குலையும்போது பாதிக்கப்படுவது பெண்களே” (Fisherwomen, who often rely on nearshore zones and ecosystems highly sensitive to environmental changes, are especially vulnerable to local threats and climate extremes).

கடற்கரை அரிப்பால் உலர் மீன் உலர்த்தும் இடங்கள் அழிகின்றன. கடல் நீர் கடற்கரைக் கிடங்குகளை மூழ்கடிக்கிறது. சேமிக்கப்பட்ட மீன் கெட்டுப்போகிறது. ‘பாலினம், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி’ (Gender, Technology and Development) (Tandfonline, 2025) எனும் ஆய்வு தெளிவாகச் சொல்கிறது: “பெண்களுக்கு இழப்பு நிகழும்போது, வங்கிக் கடன், அரசு நிவாரணம், காப்பீடு — எதுவும் அவர்கள் பெயரில் இல்லை” (Patriarchal norms and the lack of institutional support compel fisherwomen to have little control over productive resources).

♀ III. நிலம் இழப்பு — சட்டத்தில் யாருடைய பெயர் இருக்கிறது?

கடற்கரை அரிப்பால் வீட்டை இழக்கும்போது, மறுகட்டுமான உதவி யாருக்கு கிடைக்கிறது? நிலம் யாருடைய பெயரில் பதிவாகியிருக்கிறதோ அவர்களுக்கு. இலங்கையில் — குறிப்பாக வடக்கு – கிழக்கில் நிலம் பெரும்பாலும் ஆண்களின் பெயரில் பதிவாகியிருக்கிறது. ‘IFAD SDG 5.a’ குறிகாட்டி, நில உரிமையில் பாலின சமத்துவம் இலங்கையில் இன்னும் எட்டாத இலக்காகவே உள்ளது என்கின்றது. 

போர் விதவைகள் – கணவர் இல்லாத நிலையில் – குடும்பத்திற்கு ஒரேயொரு வருமான ஆதாரமாக உலர் மீன் தொழிலை நடத்துகிறார்கள். கடற்கரை அரிப்பால் வீட்டை இழந்தால் அல்லது உலர்த்தும் இடம் அழிந்தால் அவர்களுக்கு வேறு வழியே இல்லை. ஆனால் அவர்கள் பெயரில் நிலம் இல்லாததால், அரசு நிவாரணக் கடிதத்தில் அவர்கள் பெயர் வராது.

‘CEDAW’ ஒப்பந்தத்தின் உறுப்புரை 14 (2) (g), கிராமப்புற பெண்களுக்குக் கடன் வசதிகள், சந்தை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான சமமான அணுகலை உறுதிசெய்ய அரசு கடமைப்பட்டுள்ளது என வலியுறுத்துகிறது. இருப்பினும், மன்னார் பெண் மீனவர்களின் தற்போதைய கள யதார்த்தம் இந்த சர்வதேச விதியிலிருந்து வெகுதொலைவில் உள்ளது.

V. சட்டக் கட்டமைப்பு — இருக்கிறதா, இயங்குகிறதா?

மன்னார் கடற்கரை அரிப்பும் மணல் அகழ்வும் பல சட்டங்களின் வரம்பிற்குள் நேரிடையாக வந்தாலும், அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு சவாலாகும். 

கடலோரப் பாதுகாப்புச் சட்டம் 1981 மற்றும் CCCRMA (Coast Conservation Act 1981 & CCCRMA) — கடலோர மண்டலத்தில் (200 மீட்டருக்குள்) எந்தத் திட்டமும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (Coast Conservation Department) அனுமதி இல்லாமல் நடக்கக்கூடாது. மணல் அகழ்விற்கு இந்த அனுமதி முறையாகப் பெறப்பட்டதா என்பது ஆர்வலர்கள் கேட்கும் கேள்வி. காலநிலை உண்மைச் சரிபார்ப்புகள் (Climate Fact Checks) (2025), “2024-2029 கடலோர மேலாண்மைத் திட்டம் (CZ&CRMP) கடலோர அரிப்பு, மாசு மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள வேண்டும்” என்கின்றது. ஆனால் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

தேசியச் சுற்றுச்சூழல் சட்டம் (NEA) (National Environmental Act) — பிரிவு 23Z இன் கீழ் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) கட்டாயமாக்கப்பட்டுள்ள திட்டங்கள், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் (Central Environmental Authority) முன்அனுமதி இன்றித் தொடங்கப்படக் கூடாது. மணல் அகழ்வின் அளவு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு உட்படுகின்றனவா என்ற கேள்வி முக்கியமானது.

முன்கூட்டிய, சுதந்திரமான மற்றும் தகவலறிந்த ஒப்புதல் கோட்பாடு (FPIC) — ‘FPIC’ கொள்கையின்படி, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன் உள்ளூர் மக்களிடமும் நேரடியாகப் பாதிக்கப்படும் சமூகங்களிடமும் ஒப்புதல் பெற வேண்டும் எனச் சர்வதேசச் சட்டம் வலியுறுத்துகிறது. ஜூன் 2025 இல் நடைபெற்ற பேரணியிலும், “அனைத்துத் திட்டங்களுக்கும் இந்த FPIC சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்” என்பதே முதன்மைக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

புலங்குளம (Bulankulama) வழக்கின் தொடர்பு — புலங்குளம (2000) தீர்ப்புக் கூறியது: “மக்களை நேரடியாகப் பாதிக்கும் திட்டங்களில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் பொதுமக்கள் ஆலோசனை கட்டாயம்”. இக்கோட்பாட்டை மன்னார் சூழலுக்குப் பொருத்திப் பார்க்கும்போது, மக்களின் முறையான ஒப்புதலின்றித் திட்டங்களை முன்னெடுப்பது சட்ட விரோதமானதா? என்ற கேள்வி எழுகிறது.

“நாங்கள் கடலோடு வாழ்கிறோம். கடல் நம்மை வாழவிடும் — ஆனால் மனிதர்கள் கடலை அழிக்கும்போது நாம் எங்கே போவது?” — மன்னார் போராட்டக்காரர்

VI. கடல்புல் (Seagrass) மற்றும் கடல்பசு (Dugong) — அழியும் சூழலின் சாட்சிகள்

‘IUCN’இன் அறிக்கை (2012) மன்னார் கடல் மண்டலம் பற்றி ஒரு முக்கியமான கவலையை வெளிப்படுத்தியது: “இந்தப் பகுதி காலநிலை மாற்றத்தில் ‘பாதிக்கப்படக்கூடிய நிலையில்’ (Vulnerable Position) இருக்கிறது. அதே நேரத்தில் கடல்புல் படுகைகளும் (Seagrass) கடல் பசுக்களும் (Dugong) இப்போது மறைவை நோக்கி நகருகின்றன.”

கடல் பசு (Dugong) என்பது ஒரு பெரிய கடல் பாலூட்டி. இது கடல்புல்லை (Seagrass) மட்டுமே உண்கிறது. கடல்புல் மண்டலங்கள் அழிந்தால் கடல் பசுக்களும் அழியும். மன்னார் வளைகுடாவில் (Gulf of Mannar) இவை ஒரு காலத்தில் ஏராளமாக இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. “மன்னார் தீவில் கடல்புல் படுகைகளும் கடல் பசு வாழ்விடங்களும் ஆழ்மட்ட மணல் அகழ்வால் (Deep Sand Mining) நேரடி ஆபத்தில் இருக்கின்றன” என்கின்றது ‘மங்கபே’ (Mongabay, 2025).

மன்னார், புலம்பெயர் பறவைகளின் முக்கிய தங்குமிடமாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஆசியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரை பயணிக்கும் பறவைகள் இங்கே ஓய்வெடுக்கின்றன. கடற்கரைச் சூழல் சீர்குலையும்போது இந்த ‘பறவைப் புலம்பெயர்வுப் பாதை’ (Flyway) பாதிக்கப்படும். இது ஒட்டுமொத்தப் பிராந்தியப் பறவைப் பல்வகைமையைப் பாதிக்கும்.

♀ IV. போராட்டத்தில் பெண்கள் — முன்னணியில் இருந்தவர்கள்

மன்னார் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருந்தனர். ஆகஸ்ட் 2025 கருநிலம் (Black Soil) போராட்டத்தில் ‘இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் பெண்கள் போக்குவரத்து வாகனங்களைத் தடுத்தனர்’ (Youth, fishers and women blocked transport trucks) என்று ‘கிரவுண்ட்வியூஸ்’ ஆவணப்படுத்தியது. பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிவிடாமல் தெருக்களிலும் இறங்கி, காவல்துறையின் தடுப்பரண்களை எதிர்கொண்டு திரண்டு நின்றனர்.

ஆனால் இந்தப் போராட்டப் பங்கேற்பு அவர்களுக்கு கூடுதல் ஆபத்தைக் கொண்டுவந்தது. போராட்டத் தலைவர்களை நள்ளிரவில் நேரில் சென்று சந்தித்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறின. இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பெண் போராட்டத் தலைவர்களும் ஆளாக்கப்பட்டனரா என்ற கேள்வி இங்கு முதன்மையானதாகிறது. அதேவேளையில், போராட்டக் களங்களில் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் பெண்களின் குரல் வெளியுலகிற்கு எட்டாமலேயே போனது.

மன்னார் பெண்களின் போராட்டம் ஒரு முக்கியமான நீதிக் கோட்பாட்டை நடைமுறையில் நிரூபிக்கிறது. சூழல் உரிமைப் பாதுகாவலர்கள் (Environmental Human Rights Defenders) என்று அழைக்கப்படும் சூழல் உரிமை ஆர்வலர்களுக்கான சர்வதேசப் பாதுகாப்புக் கட்டமைப்பு இலங்கையில் போதுமான அளவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. சூழல் பாதுகாவலர்களுக்கான ஐக்கிய நாடுகள் சிறப்புத் தூதரின் (UN Special Rapporteur on Environmental Defenders) நிலைப்பாட்டில், இத்தகைய சூழல்களில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.

VII. நிறைவு — கடல் கடக்கிறது, நிலம் விலகுகிறது

மன்னார் கடற்கரை அரிப்பைப் புரிந்துகொள்வது சிரமமான விஷயமல்ல. வங்காலை மேற்கு ஆண்டுக்கு 4.7 முதல் 5.3 மீட்டர் அரிக்கப்படுகிறது. 2042க்குள் மேலும் 45 மீட்டர் தூரத்திற்கு நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகக் கடல்புல் படுகைகள் அழிந்து, அரிதான கடற்பசுக்கள் (Dugongs) மறையும் சூழல் உருவாகியுள்ளது. இதன் இறுதி விளைவாக, சுமார் 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இந்தச் சூழலியல் பாதிப்புகளுக்கு மத்தியில்தான் மணல் அகழ்வுப் பணிகளும் காற்றாலை மின் திட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. இதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) முறையான வகையில் மேற்கொள்ளப்படவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்கூட்டிய, சுதந்திரமான மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (FPIC) கோரிக்கை கேட்கப்படவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். தேசியச் சுற்றுச்சூழல் சட்டம் (NEA), கடலோரப் பாதுகாப்புச் சட்டம் (Coast Conservation Act) ஆகியவற்றில் மீறல் நடக்கிறதா என்று சட்ட வல்லுநர்கள் கேட்கிறார்கள்.

இந்த நெருக்கடியில் பெண்கள் இரட்டை விலை கொடுக்கிறார்கள். ரீட்டா வசந்தி (வயது 54), முன்பு விளையாடிய நிலம் கடலுக்குள் போய்விட்டது. உலர் மீன் தொழிலை மட்டுமே நம்பி வாழும் பெண்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது; கடல் வெப்பமயமாதலால் மீன் வளம் குறைகின்றது. நிலத்தை இழக்கும் சூழலில், நில உரிமைகளுக்கான சட்டப் பத்திரங்களில் அவர்களின் பெயர்கள் இல்லை. இதனை எதிர்த்து அவர்கள் போராடும் போது, பல்வேறு அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கடலோரப் பாதுகாப்புச் சட்டம் (Coast Conservation Act) இருக்கிறது. தேசியச் சுற்றுச்சூழல் சட்டம் (NEA) இருக்கிறது. முன்கூட்டிய, சுதந்திரமான மற்றும் தகவலறிந்த ஒப்புதல் (FPIC) கோட்பாடு இருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை (CEDAW) இருக்கிறது. புலங்குளம வழக்கின் (Bulankulama) கோட்பாடு இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் மன்னாரில் நடைமுறையில் இல்லை என்பதே மிகப்பெரிய சோகம்.

கடல் தொடர்ந்து முன்னேறும். நிலம் தொடர்ந்து பின்வாங்கும். ஆனால் மக்கள் — குறிப்பாக பெண்கள் — எங்கே போவார்கள் என்று கேட்கும் இந்தக் கேள்வி, 2042இன் கணிப்புகளை விட அவசரமான கேள்வி.

உசாத்துணை மூலங்கள்

1. Thasarathan, N., Choy, L.K. & Aiyub, K.B. (2024). ‘Shoreline dynamics over last three decades and predictions for 2032 and 2042: a spatial analysis along the coastal stretch of Aruvi Aru and Kal Aru estuaries in Mannar district, Sri Lanka.’ Journal of Maps, Vol. 20, No. 1. Taylor & Francis. doi: 10.1080/17445647.2023.2285520

2. Groundviews (2025). ‘The Sand Mining Crisis in Mannar: A Battle for Survival, Ecology and Justice.’ August 19, 2025. groundviews.org

3. Rodrigo, M. (2025). ‘A fragile Sri Lankan island fights back against the threat of mineral extraction.’ Mongabay, November 2025. doi: 10.66709/news-310298

4. Sahana David Menon (2025). ‘Rising sea, mega projects push Mannar women toward uncertainty.’ Earth Journalism Network & Daily Mirror, March 2025. earthjournalism.net

5. UK International Development (2024). ‘Climate Change Risks to the Marine and Coastal Environment in Sri Lanka.’ UK Government Development Programme.

6. IUCN (2012). ‘Gulf of Mannar and its Surroundings: Climate Change Vulnerability Assessment.’ International Union for Conservation of Nature.

7. Business & Human Rights Centre (2025). ‘Sri Lanka: Climate crisis devastates farming, fishing, and fragile livelihoods across Eastern provinces.’ May 2025. business-humanrights.org

8. Climate Fact Checks (2025). ‘Sri Lanka’s Disappearing Shores: How Climate Change is Accelerating Coastal Erosion.’ March 2025. climatefactchecks.org

9. Cavole, L.M. et al. (2025). ‘Unveiling Gender Disparities: The Role of Women in Transforming Small-Scale Fisheries.’ Fish and Fisheries, Wiley Online Library. doi: 10.1111/faf.70023

10. Tandfonline (2025). ‘Gender disparities and barriers for fisherwomen in the fisheries value chain system.’ Gender, Technology and Development, Vol. 29, No. 2. doi: 10.1080/09718524.2025.2509194

11. Daily Mirror Sri Lanka (2025). ‘Coastal Degradation threatens Sri Lanka.’ dailymirror.lk

12. Bulankulama & Others v. Secretary, Ministry of Industrial Development & Others (2000). Supreme Court of Sri Lanka, S.C. Application No. 884/99.



About the Author

அஸாம் ஷா

மட்டக்களப்பைச் சேர்ந்த அஸாம் ஷா, விவசாய அறிவியலில் இளநிலைப் பட்டம் (B.Sc. Agriculture) பெற்றதையடுத்து, சுற்றுச்சூழல் இயற்கையியல் துறையில் முதுகலைப் பட்டம் (M.Sc. Ecology and Environmental Studies) பெற்றார். மேலும், தொழில்துறை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Occupational Health and Safety) துறையில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார். தற்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் காலநிலை மாற்றச் சட்டம் (LLM – International Environmental Law and Climate Change) தொடர்பாகப் பயின்று வருகிறார்.

விவசாயம், சுற்றுச்சூழல் இயற்கையியல் மற்றும் சட்டம் ஆகிய மூன்று துறைகளில் பெற்றுள்ள கல்வி மற்றும் ஆய்வு அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் நீதி தொடர்பான சிக்கலான விடயங்களை எளிய தமிழில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் விரிவாக்கம் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய எல்லைகடந்த சுற்றுச்சூழல் விளைவுகள், UNCLOS மற்றும் சர்வதேசச் சட்டத்தின் கீழ் அரசுகளுக்குள்ள கடமைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சுற்றுச்சூழல் சட்டம், மனித உரிமைச் சட்டம் மற்றும் தென்னாசிய மூன்றாம் உலக அணுகுமுறை (TWAIL) ஆகியவற்றை ஒருங்கிணைத்த பன்முகக் கண்ணோட்டத்தில் தனது ஆய்வுகளையும் எழுத்துகளையும் முன்னெடுத்து வரும் இவர், வடக்கு–கிழக்கு மக்களின் வாழ்வுரிமையும் சுற்றுச்சூழல் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் கல்வி, சட்ட விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய மூன்று தளங்களிலும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்