நிலவமைப்பியல் கால அளவு (The Geologic Time Scale)
| சகாப்தம் (Geologic Period) | ஆண்டுக் காலம் (Epoch) | காலவரிசை (Chronology)இ.மு: இற்றைக்கு முன் |
| Quaternary | பிளிஸ்ரொசீன் (Pleistocene) | இ.மு. 16,00,000 ஆண்டுகள் முதல்இ.மு. 12,000 ஆண்டுகள் வரை |
| Quaternary | ஹோலொசீன் (Holocene) | இ.மு. 12,000 ஆண்டுகள் முதல் இன்றுவரை |
நிலவமைப்பியல் கால அளவானது பூமியின் வயதை அடிப்படையாகக் கொண்டு அதில் காலத்திற்குக் காலம் நடைபெற்ற நிகழ்வுகளைக் கூறுவதற்கு வசதியாக அகில உலக அடுக்கியற் படிவாய்வு ஆணைக் குழுவினரால் (International Commission of Stratigraphy) உருவாக்கப்பட்ட காலவரிசை அட்டவணையாகும். இக்கால அளவு நிலவியல் ஆய்வாளர்களாலும், பூகோள விஞ்ஞானிகளாலும், தொல்லியல் ஆய்வாளர்களாலும் உபயோகிக்கப்படுகிறது.
இக்கால அளவு பூமியின் வயதை ஊழிக் காலங்களாகவும் (Era), ஊழிக் காலங்களை சகாப்தங்களாகவும் (Period), சகாப்தங்களை ஆண்டுக் காலங்களாகவும் (Epoch) நிரைப்படுத்தியிருக்கிறது. பூமியின் ஆரம்பத்திலிருந்து பிறிகேம்பிரியன், பேலியோஸோயிக், மீஸோஸோயிக், சீனோஸோயிக் என நான்கு ஊழிக்காலங்கள் நடைபெற்றிருக்கின்றன. கடைசி ஊழிக்காலத்தில் டெர்ஷியரி (Tertiary), குவாட்டர்னரி (Quaternary) என இரு சகாப்தங்கள். இந்த குவாட்டர்னரி சகாப்தத்தின் இரண்டு காலப் பகுதிகளான ஹொலொசீன் காலமும், அதற்கு முற்பட்ட பிளிஸ்ரொசீன் காலமுமே மனித வரலாற்றிற்கு முக்கியமானவை. பிளிஸ்ரொசீன் காலத்தில் பூமி 17 பனியுகக் காலங்களையும், 17 பனி இடைக் காலங்களையும் கண்டிருக்கிறது. கடைசிப் பனியுகக் காலம் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுற்றது. இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமான ஹொலொசீன் காலத்தில் – அதாவது 17ஆவது பனி இடைக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நிலவமைப்பியல் கால அளவு. Source: International Commission of Stratigraphy.
இந்திய உபகண்டத்தின் தோற்றம்
ஆசியப் பெருங்கண்டத்தில் இமாலய மலைத்தொடருக்குத் தெற்கே பரந்திருக்கும் நிலப்பகுதி தென் ஆசியா என அழைக்கப்படுகிறது. நிலவியல் அடிப்படையில் இந்தியக் கண்டத் தகட்டின் (Indian Tectonic Plate) மேல் அமைந்த, ஹிந்துகுஷ்–இமாலய–அரக்கனிஸ் மலைத் தொடர்களுக்குத் தெற்கேயுள்ள ‘இந்திய உபகண்டம்’ இந்நிலப்பரப்பின் முக்கியமான பகுதியாகும். ஹிந்துகுஷ்–இமாலயத் தொடர், அரக்கனிஸ் ஆகிய மலைகளை வட எல்லையாகக் கொண்டு தெற்கு நோக்கிப் பரந்து, மேலும் இந்து மாகடலினுள் துருத்திக்கொண்டு, மேற்கே அரபிக் கடலுக்கும், கிழக்கே வங்காள விரிகுடாவுக்குமிடையே முக்கோண வடிவில் அமைந்திருப்பது இந்தியத் தீபகற்பம் (Peninsular India).
அகன்ற இந்த நிலப்பரப்பானது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இமாலய நாடுகளான நேபாளம், பூட்டான், சிக்கிம் ஆகியவற்றையும், எல்லை நிலங்களாக மேற்கே ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளையும், கிழக்கே மியன்மாரையும் (பர்மா), அத்தோடு தெற்கே தீவகமான இலங்கையையும் கொண்டிருக்கிறது.
இருந்தபோதும், ‘தென் ஆசியா’ என்ற நிலப்பகுதியை விளங்கவைப்பதில் ஆய்வாளர்களிடையே ஒருமைப்பாடு கிடையாது. ஐக்கிய நாடுகளின் நிலவியல் அடிப்படையிலான நிலப்பகுதி வகைப்படுத்தலில் (United Nations Geoscheme), ‘தென் ஆசியா’ என்பது: இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைத் தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருக்கிறது. சில ஆய்வாளர்கள் மியன்மாரையும் (பர்மா) தென் ஆசிய நாடுகளில் ஒன்றாகக் கொள்வர் (Mann, M. 2014; Norwine, J. 1988; Bhopal, R.S. 2007).
நிலவமைப்பியல் அடிப்படையில், இற்றைக்கு 180 மில்லியன் (1800 லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நடுவிலிருக்கும் எரிகுழம்பிலிருந்து வெளிக்கிளம்பிய வெப்பம் ஏற்படுத்திய சலனத்தினால் கொண்டவானா பெருங்கண்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பிளவுபட ஆரம்பித்தது. கொண்டவானா பல கண்டத்தகடுகள் ஒன்றோடொன்று இணைந்ததனால் ஏற்பட்ட பெருங்கண்டமாதலால் இத்தகடுகள் பிரிந்து போக ஆரம்பித்தன. இந்தியத் கண்டத்தகட்டின் மேல் (Indian Tectonic Plate) தனித் தீவாகப் பிரிந்த நிலம், நிலவமைப்பியலாளர்களால் ‘கிறிட்டேசியஸ்’ என அழைக்கப்படும் காலப்பகுதியில் (Cretaceous Period: began 145 million years ago and ended 66 million years ago) வடக்கு நோக்கி நகர்ந்தது (Wegener, A. 1966; Dietz, R.S. & Holden 1970).
ஒரே கண்டத்தகட்டிலிருந்த இந்தியாவும் இலங்கையும் ஆபிரிக்காவை விட்டுப் பிரிந்தபோது அதனோடு ஒட்டிக்கொண்டு மடகஸ்கார் தீவும் பிரிந்தது. பின்னர் மடகஸ்கார் தீவு இந்தியாவிலிருந்து பிரிந்துபோக, இந்தியா வடக்கு நோக்கி ஆண்டுக்கு 20 செ.மீ. (ஒரு மில்லியன் ஆண்டுகளில் 200 கிலோ மீட்டர்) வீதம் ரெதிஸ் சமுத்திரத்தில் நகர்ந்தது (Wegener, A. 1966). சில ஆய்வாளர்கள் இந்தியக் கண்டத்தகடு அவுஸ்திரேலியக் கண்டத்தகடுடன் இணைந்து வடக்கே நகர்ந்ததாகக் கூறுகிறார்கள். மற்றும் சில ஆய்வாளர்கள் அவுஸ்திரேலியக் கண்டத்தகடு இந்தியக் கண்டத் தகடுடன் பின்னர் இணைந்ததாகக் கூறுவர். ரெதிஸ் மாகடல் இருந்த கண்டத்தகடு இந்திய-அவுஸ்திரேலிய தகடுகளை முதலில் இணையவிடவில்லை. இந்திய நிலம் மேலே (வடக்கே) நகர்ந்து செல்ல அதன் பின்னால் மிகுதியிருந்த கண்டத்தகட்டில் கடல் புகுந்து இந்து சமுத்திரம் உருவாயிற்று (Dietz, R.S. & Holden 1970).
இமயமலைத் தொடரின் உருவாக்கம்
வடக்கு நோக்கி ரெதிஸ் மாகடலில் நகர்ந்துகொண்டிருந்த இந்தியக் கண்டத்தகடு 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய-ஆசிய (லொறேசிய) கண்டத் தகட்டுடன் முனைப்பாக மோதியது. இந்த நிகழ்வை ‘கண்டங்களின் மோதல்’ (Continental Collision) என நிலவியலாளர்கள் அழைப்பர். ஆசியக் கண்டத் தகட்டின் கீழே புகுந்த இந்தியத் தகடு ஆசியத்தகட்டை மேலே மேலே உயர்த்தித்தள்ள, அதன் மேலிருந்த பாறை மேலே மேலே எழுந்து இமயமலை உருவாயிற்று (Van Andel 1985). இமாலய மலைத்தொடரும், திபெத்தியப் பீடமும் இவ்வாறே உருவாகின.
இந்தியக் கண்டத்தகடு இன்றுவரை ஆசியத்தகட்டின் கீழே செருகிய வண்ணமே இருக்கிறது. இதன் காரணமாக இமயமலைத் தொடர் ஆண்டுக்கு 5 மி.மீ. வரை மேலெழுந்த வண்ணமே இருக்கிறது. இந்தியத் தகடு ஆண்டுக்கு 67 மி.மீ. வரை ஆசியத் தகட்டினுள் புகுந்து செல்கிறது. இதன் காரணமாக இன்னும் 10 மில்லியன் ஆண்டுக் காலத்தில் இந்தியத் தகடு ஆசியாவினுள் 1,500 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிடும் எனக் கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டத் தகட்டுச் செருகலே இமயமலையின் அடிவார நிலங்களில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படக் காரணமாகும்.


ஆபிரிக்கா, மற்றும் தென்துருவக் கண்டத்தகடுகளிலிருந்து பிரிந்த இந்தியக் கண்டத்தகடு ரெதிஸ் மாகடலில் வடக்கு நோக்கி ஆண்டுக்கு 20 செ.மீ. நகர ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து இந்து மாகடல் உருவாகியது. படத்தில் ரெதிஸ் கடல் சாம்பல் நிறமாகவும், இந்துமாகடல் நீல நிறத்திலும் காட்டப்பட்டிருக்கின்றன.

வடக்கே ஐரோப்பிய-ஆசியக் கண்டத்தகடை நோக்கி நகர்ந்த இந்தியக் கண்டத்தகடு இற்றைக்கு 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய-ஆசிய கண்டத்தகட்டில் மோதி, அதன் கீழே புகுந்த போது இமயமலை கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்தது.
உலகிலுள்ள பெரிய மலைத் தொடர்களோடு ஒப்பிடும் போது வண்டலாகப் படிந்துருவான ‘அடையற் பாறைகளையும்’ (Sedimentary Rock), ‘இயன் மாறுபாடு அடைந்த பாறைகளையும்’ (Metamorphic Rock) கொண்ட இமாலய மலைத் தொடர், வயதால் மிக இளமையானது. இமயமலையின் மலைப்பாறை, முன்னர் கடலினடியிலிருந்து மேலெழுந்ததால் இன்றும் இமயமலையில் கடற்பிராணிகளின் படிவ எச்சங்கள் (Fossils) காணப்படுகின்றன.


இமாலயத்தின் உச்சிப் பகுதியில் காணப்படும் புராதன மீன்களின் பாறைப் படிவங்கள்
இமாலயத் தொடரில் உள்ள ஸ்பிற்றி பள்ளத்தாக்கில் (Spiti Valley) 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட படிவ எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலிருந்தும் புதைப்படிவ ஆய்வாளர்கள் (Palaeontologists) இங்கு வருகை தந்தவண்ணமே இருக்கிறார்கள். ஸ்பிற்றி பள்ளத்தாக்கிலுள்ள கோமிக், மட், ஹிக்கிம் (உலகின் மிக உயரமான தபால் கந்தோர் இருக்குமிடம்), லாங்ஸா, லலுங் ஆகிய கிராமங்கள் புராதன படிவ எச்சங்கள் காணப்படும் இடங்களாகும். நேபாளத்தில் ஓட்டுடன் கூடிய கடல் நத்தை இனங்கள் (Marine Cephalopods with Shells) ‘கலி கண்டாக்கி’ ஆற்றுப் படுகைகளில் (Kali Gandaki River Beds) கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இமயமலை ஏறும் சிலர் அதன் உச்சிப் பகுதிகளிலிருந்து புராதன கடல் தாவரங்களின் படிவங்கள் பதிந்த பாறைத் துண்டுகளை எடுத்துவந்திருக்கிறார்கள். வருடம் பூராகவும் பனிப்பாளங்களால் மூடப்பட்டு, வானிலை மாற்றங்களால் வெளிறிப் போயிருக்கும் இந்த மலைமுகடு ஒரு காலப்பகுதியில் மீன்களும், மற்றைய கடல் பிராணிகளும் வாழ்ந்த ஒரு பெருங்கடல் படுக்கை என்பதை எண்ணிப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

இமாலயப் பிரதேசத்திலுள்ள ஸ்பிற்றி பள்ளத்தாக்கு. இது இந்தியாவின் படிவப்பாறைப் பூங்கா (Fossil Park of India) என அழைக்கப்படுகிறது.
மனிதத் தோற்றத்திற்கேற்ப ஒரு தட்பவெப்ப நிலை உருவாக்கம்
ஆசியாக் கண்டத்துடன் இந்தியக் கண்டம் மோதியதைத் தொடர்ந்து பெயர்த்தெழுந்த இமாலயத் தொடரும் திபெத்திய முகடும் உலகம் முழுவதிலும் வானத்துக் காற்றுச் சுற்றோட்டத்தில் தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவந்து, பூமியின் தட்பவெப்ப நிலைகளையும் மாற்றியமைத்தது.
பனியுகக் காலத்தில் இமாலயத்தின் கிழக்கே அதன் மலைமுகடுகளான ‘காஞ்சென்யுங்கா’விற்கும் மேற்கே ‘நங்காபர்வதத்’திற்கு இடையே பனிப்பாளங்களின் பனியோட்டத் தொடர்பு (Connected Ice Stream of Glaciers) காணப்பட்டது. வடக்கே இருந்த பனிப்பாளங்கள் காரகோரத்தின் பனியோட்ட வலைப்பின்னலோடு இணைந்து கொண்டு, வடக்கே திபெத்திய உள்நாட்டுப் பனிப்படலங்களோடும் இணைந்து கொண்டன.
பனியுகக் காலத்தில் இமயத்தின் கிழக்கே பனிப்பாளங்களின் வெளிப்புற நகர்வு 1,000 – 2,000 மீட்டர் (3,300 – 6,600 அடி) உயரமளவில் நின்றுவிடும் (Kuhle, M. 2005; 2011). தற்காலத்தில் இமாலயப் பள்ளத்தாக்குகளில் பனிப்பாளங்கள் 20 முதல் 32 கி.மீ. (12 முதல் 30 மைல்) நீளம் கொண்டவையாக இருக்கின்றன. பனியுகத்தில் இவை 60 முதல் 112 கி.மீ. (37 முதல் 70 மைல்) நீளம் கொண்டவையாக இருந்தன. இதன் காரணமாகப் பனியுகத்தில் இமாலயப் பகுதியின் தட்பம் இக்காலத்தை விட 7.0 முதல் 8.3°C சென்டிகிரேட் குறைவாக – மிகவும் குளிராக இருந்திருக்கும் (Kuhle, M. 2001, 2005).
இமயமலைத் தொடரின் உயரமான சிகரங்கள் வட துருவப் பகுதிகளிலிருந்து தென்மேற்காக வீசிய காற்றோட்டத்தைத் தடைசெய்தன. வட அட்சரேகை (Latitude) நோக்கித் திருப்பப்பட்ட குளிர் காற்று அப்பிரதேசங்களில் தொடர்ச்சியான குளிரையும் பனிப்பாளங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தது. அதே சமயம் இமயத்திற்குத் தென்மேற்கே இந்தியக் குடாநாட்டிலும் அப்பால் ஆபிரிக்காவிலும் வறண்ட தட்பவெப்ப நிலை தோன்றியது. இந்த தட்பவெப்ப நிலை ஆபிரிக்க கண்டத்தில் ஏற்பட்ட உயிரினங்களின் படிநிலை வளர்ச்சியோடு ஒருங்கிணைந்தது. அவைகளின் வளர்ச்சிக்கு அங்கே நிலவிய வெப்பநிலை காரணமாக இருந்திருக்கலாம். அக்காலத்தில் ஆபிரிக்காவில் முதலாவது மனித இனங்கள் தோற்றம் பெற்றன (Kerr, R.A. 1994).
மேலும், ஒரு நிலத்தில் வாழும் மக்களின் பண்பாட்டையும் அவர்களது வாழ்வியலையும் அவர்கள் வாழும் மண்ணின் தன்மையும், அங்கே நிலவும் தட்பவெப்ப நிலையும், சூழலுமே தீர்மானிக்கின்றன. அவ்வாறே தென்னாசிய மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் அந்த நிலத்தின் சூழலும், பருவக்காற்றுகளும், மழையின் தன்மையும், ஆறுகளின் போக்குகளுமே தீர்மானித்து வந்திருக்கின்றன.
இந்தியா என்னும் நிலப் பெயர்
‘இந்தியா’ என்ற நிலப்பெயர் இந்த உபகண்டத்தின் மேற்கிலுள்ள, இன்று பாகிஸ்தான் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதியிலிருந்து (Indus River) பெறப்பட்டதாகும். சமஸ்கிருத மொழியில் ‘சிந்து’ என்ற சொற்பதம் ஓர் ஆற்றைக் குறிப்பிட்டது. ஏனெனில், ‘சப்த சிந்து’ என்றால் ஏழு ஆறுகளைக் கொண்ட நிலம் என்ற பொருளில் வேதகால ஆரியர்கள் கொடுத்த இந்நிலப்பெயர் பின்னாளில் பஞ்சாப் ஆனது. இந்த ஏழு ஆறுகளும், சரஸ்வதி நதியும் சிந்து நதியோடு சங்கமமாயின.
பாரஸீக மொழியில் இந்த நதி ‘ஹிந்து’ எனப்பட்டது. இந்நதிக்குக் கிழக்கிலிருந்த நாட்டை பாரஸீகர்கள் ‘ஹிந்து தேசம்’ என்றார்கள். ‘ஹிந்து’ என்ற இச்சொற்பதம் முதன் முதலாக இந்தியாவிற்கு வெளியேதான் பாவனையில் இருந்திருக்கிறது. ஈரானினுள்ள (பண்டைய பாரஸீகம்) பெர்ஸிபொலிஸ் என்ற இடத்தில், முதலாம் டாரியஸ் மன்னனின் ஆட்சிக் காலத்தில் (Achaemenid Empire) வெட்டப்பட்ட ‘பெர்ஸிபொலிஸ் கல்வெட்டு’ என அழைக்கப்படும் கல்வெட்டில், அம்மன்னனது ஆட்சியின்கீழ் ‘ஹிந்து தேசத்தின்’ சில பகுதிகள் உள்ளடங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டின் காலம் பொ.யு.மு. 518 ஆகும் (John Keay 2000: 57–58).
கிரேக்கர்கள் பாரஸீகர்களிடமிருந்து ‘ஹிந்து’ நதியைப் பற்றி அறிந்திருந்தார்கள். ‘ஹிந்து’ என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புகுந்தபோது அந்நதி ‘இந்து நதி’ என்றும், ‘இன்டஸ் நதி’ என்றும் பெயர் பெற்றது (Indu/ Indus). இந்தப் பெயர் வழக்கில் அது இலத்தின் மொழியையும், மற்றும் பல ஐரோப்பிய மொழிகளையும் சென்றடைந்தது. இந்து நதிக்கு அப்பால் இருந்த நாடு கிரேக்க மொழியில் ‘இந்தியா’ ஆயிற்று.
அரேபிய, அதன் குடும்ப மொழிகள் ‘ஹ’ என்ற எழுத்துப் பிரயோகத்தைத் தக்க வைத்துக் கொண்டன. அரேபிய மொழியில் ஹிந்து தேசம் ‘ஹிந்துஸ்தான்’ ஆனது. துருக்கியர்களுக்கும் மொகலாயர்களுக்கும் இந்நாடு ‘ஹிந்துஸ்தான்’ என்ற பெயரிலேயே அறிமுகமாயிற்று. இப்பதம் ஐரோப்பாவிற்கு அறிமுகமானபோது அவர்கள் ஹிந்துஸ்தானத்து சுதேச மக்களை ‘ஹிந்துக்கள்’ (Hindus, meaning people of Hindustan) என அழைத்தார்கள். 1830ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் இந்நாட்டின் மக்களுக்கான மதத்தையும் ‘ஹிந்து மதம்’ எனப் பெயரிட்டார்கள் (Encyclopaedia Britannica, Ed. 14).
வரலாற்றின்படி இந்நாட்டின் ‘இந்தியா’ என்ற பெயரோ, ‘ஹிந்து’ மதம் என்ற பெயரோ இந்திய மண்ணில் உருவானவை அல்ல. இச்சொற்பதங்களை பண்டைய வேதகால, ஜைன, பௌத்த, தமிழ், சமஸ்கிருத, பிராகிருத இலக்கியங்களில் காண முடியாது. வேதகால ஆரியர்கள் இந்த நாட்டை பாரதவர்ஷ அல்லது ஆரியவர்த்த என்றே அறிவர். மகாபாரதம் எழுதிய சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு இந்நாட்டின் பெயர், ஜம்புத்வீப. அன்றைய தமிழர்களுக்கு இது, நாவலந்தீவு. இந்தியா என்ற பெயர் அவர்கள் அனைவருக்குமே அயலான சொற்பதமாகும்.
தென்னாசிய நிலவியல்
ஆசியப் பெருங்கண்டத்தில் இமாலய மலைத்தொடருக்குக் தெற்கே பரந்திருக்கும் நிலப்பகுதி தென்-ஆசியா என அழைக்கப்படுகிறது. நிலஅமைப்பியல் அடிப்படையில் இந்தியக் கண்டத் தகட்டின் (Indian Tectonic Plate) மேல் அமைந்த, ஹிந்துகுஷ்–இமாலய மலைகளுக்குத் தெற்கேயுள்ள ‘இந்திய உபகண்டம்’ இந்த நிலப்பரப்பின் முக்கியமான பகுதியாகும் (Baker, M. 2002).
கடிகார முள்ளின் சுற்று நோக்காக – மேற்கிலிருந்து – மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா, இந்து மாகடல் ஆகிய பகுதிகளால் தென் ஆசியா சூழப்பட்டிருக்கிறது (McLeod, J. 2002: 1; Lal, B.B. 1997).

தென் ஆசிய நிலப்பரப்பு
தென் ஆசியா என்ற மாற்றுப் பெயரைக்கொண்ட இந்திய உபகண்டம் இன்றிருக்கும் எல்லைகளைக் கொண்ட ஏழு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், இலங்கை, மாலைத்தீவுக் குடியரசு ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதியாகும். செவ்வக அல்லது வைரக்கல் வடிவுடைய (Rhombic or Diamond Shaped) இந்நிலப்பகுதி மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கிறது.
- பிரம்மாண்டமான மலைத்தொடர்கள்: வடக்கே இமாலயத் தொடர், வடமேற்கே ஹிந்துகுஷ் மலைத்தொடர், வடகிழக்கே அரக்கனீஸ் தொடர் – இவை வட இந்தியாவின் வட எல்லையாக அமைந்திருக்கின்றன.
- மேற்கே அரபிக் கடலையும், கிழக்கே வங்காள விரிகுடாவையும் எல்லையாகக் கொண்டு இந்து மாகடலினுள் துருத்திக்கொண்டிருப்பது இந்திய தீபகற்பம் (Peninsular India).
- இந்த இரு நிலப்பரப்புகளுக்குமிடையே பரந்து கிடப்பது இந்தோ-கங்கைச் சமவெளி. இலங்கையும், மாலைத்தீவுக் கூட்டமும் தெற்கே இந்து மாகடலிலுள்ள தீவுகள்.
‘தென் ஆசியா’, ‘இந்திய உபகண்டம்’ ஆகிய பதங்கள் இந்நிலப்பகுதியைக் குறிப்பிட உபயோகிக்கப்படும் மாற்றுப் பதங்கள். அரசியல் நுட்பப்பண்பு காரணமாக சிலர் ‘இந்திய உபகண்டம்’ என்னும் சொற்பிரயோகத்தைத் தவிர்த்து ‘தென் ஆசிய உபகண்டம்’ அல்லது ‘தென் ஆசியா’ ஆகிய பதங்களை உபயோகிக்க விரும்புவர் (McLeod, J. 2002: 1; Meyer, M.W. 1976: 1; Pye, L.W. 1985: 133).
நிலவமைப்பியல் அடிப்படையில் மேற்கூறிய ஏழு நாடுகளும் இந்தியக் கண்டத் தகட்டில் 4.4 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இது ஆசியப் பெருங்கண்டத்தின் 10 சதவீதமாகும் (The Columbia Encyclopaedia, 2003). வரலாற்றின்படி, நில அளவைக் கணக்கின் அடிப்படையில், உலகில் மிக நெருக்கமான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. சுமாராக உலகின் 20 சத விழுக்காடு மக்கள் இங்கே வாழ்கிறார்கள்.
வட இந்தியா, பாகிஸ்தானின் மலைகளும் நதிகளும்
நாம் ஏற்கனவே நிலஅமைப்பியல் பகுதியில் அறிந்த வண்ணம், இமாலய மலைத்தொடர் நெடுங்காலமாக ரெதிஸ் பெருங்கடலினுள்ளே அமிழ்ந்து கிடந்து 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் வெளிவந்த நிலப்பகுதியாகும். மேற்கிலிருந்து கிழக்காக இமாலயத் தொடர் 2,500 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கிறது. இம்மலைத் தொடர் 6,000 மீட்டருக்கும் உயரமான பல மலைமுகடுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில் தலையானது 8,848.86 மீட்டர் உயரங்கொண்ட எவரெஸ்ட் சிகரமாகும் (2020இல் சீன நில அளவையாளர்களால் பெறப்பட்ட அளவீடு). இமாலய மலைத்தொடர் வழியே கடந்து செல்வது சாதாரண மக்களுக்கு இயலாத காரியம். ஆனால், துணிச்சலுள்ளவர்கள் கடப்பதற்கு ஏதுவாக கிழக்கு-மேற்காக இமாலய மலைத்தொடரைப் பிளந்து பாயும் மூன்று பெரும் நதிகளின் மூலநீர்கள் (Headwaters) உதவி செய்கின்றன. இந்த நதிகளாவன: மேற்கே மானசரோவர் ஏரிக்கருகே ஆரம்பமாகும் சிந்து-சத்லெஜ் ஆகிய நதிகள், கங்கோத்திரி பனிப்பாளத்தின் (Gangotri Glacier) அடியில் ஆரம்பிக்கும் கங்கை நதி, கிழக்கு இமாலயத்தில் ஆரம்பிக்கும் பிரம்மபுத்ரா நதி.

இந்திய உபகண்டத்தின் இயற்பியல் தோற்றம். வரைபடம், நன்றி: B.B.Lal
திபெத்திய பீடத்தில் மானசரோவர் ஏரிக்கருகே ஆரம்பமாகும் சிந்து நதி (Indus River) ஜம்மு, காஷ்மீரத்தின் லடாக் பகுதியூடாக ஓடி, கில்கித், பால்திஸ்தான் ஆகிய இடங்களினூடாக பாகிஸ்தான் தேசத்தின் முழு நீளத்தையும் கடந்து தெற்கே அரேபியக் கடலில் சங்கமமாகிறது.
இந்திய மாநில அரசான உத்தரகாண்டில் ஆரம்பமாகும் கங்கை நதி (Ganges River) முதலில் தெற்கு நோக்கியும், பின் கிழக்கே திரும்பி வட இந்தியாவின் கங்கைச் சமவெளியூடாகவும் ஓடிச்சென்று, இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையான எல்லையாக அமைந்து கிழக்கே வங்காளக் கடலில் கலக்கிறது.
இமாலயத்தின் பந்தர்பூ சிகரங்களில் (Banderpooh Peaks) அமைந்த ‘யமுனோத்ரி பனிப்பாளங்களில்’ உருவாகும் யமுனா நதி உத்தரகாண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய பகுதிகளினூடாக ஓடிச் சென்று திரிவேணி சங்கத்தில் கங்கை நதியோடு சங்கமமாகிறது.
செயற்கைக் கோள் நிலப்படங்கள் சிந்து நதி வெவ்வேறு காலகட்டங்களில் தனது ஆற்றுப் பாதையை மாற்றி மாற்றி ஓடிச்சென்றிருப்பதைக் காட்டி நிற்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் இன்று கங்கையின் துணைநதியான யமுனா நதி, தெற்கே ஓடி காக்கர் நதிப்பின்னலில் (Ghaggar River System) ஒரு துணை நதியாக விளங்கியது. சத்லெஜ், சரஸ்வதி நதிகள் இந்த காக்கர் நதிப்பின்னலில் இணைந்த நதிகளாகும். இந்த காக்கர் நதி பின்னர் ஹரியானாவில் உள்ள ‘தார்’ பாலைவனப் பகுதியில் (Thar Desert) உலர்ந்து மறைந்து போயிற்று.

இந்திய ஆறுகளின் இக்காலச் செல்வழி.
வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் இமாலய மலைத் தொடருக்கு மேலாக மனித நடமாட்டம் அருகியே காணப்பட்டது. இதற்கான காரணங்கள் இருவகை. ஒன்று, இமாலயத் தொடரினிடையே மனிதர்கள் குடியிருந்து விவசாய முயற்சிகளில் ஈடுபடக்கூடிய பள்ளத்தாக்குகள் இருக்கவில்லை. இதோடு ஒப்பிடும்போது வடமேற்கே ஹிந்துகுஷ், சுலைமான், கிர்தார், கச்சி ஆகிய மலைப்பகுதிகள் மனிதர்களின் வாழ்விடங்களாகவும், மனித நடமாட்டம் கொண்ட இடங்களாகவும் காணப்பட்டன. இரண்டாவது, இந்த மலைத் தொடர்களில் உள்ள கைபர், போலன் ஆகிய கணவாய்களினூடாக தொல்நெடுங்காலமாக மேற்கு நாடுகளிலிருந்து சிந்து சமவெளிப் பிரதேசங்களுக்கு மனித நடமாட்டம் இருந்து வந்திருக்கிறது. இது போன்ற மலைக் கணவாய்கள் தென் ஆசிய நாடான பலுச்சிஸ்தானை கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடனும், ஆப்கானிஸ்தான் ஊடாக மத்திய ஆசியாவுடனும் தொடர்பு கொள்ள வைத்தன. இந்த இணைத்தல் காரணமாக வடமேற்குத் தென்னாசியா, மனித நாகரிகங்கள் தோன்றுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்கு நாடுகளுடன் தொடர்புகொண்டிருந்தது (Spate, O.H.K. 1957; Lal, B.B. 1997).
கிழக்கே பங்களாதேஷ் நாட்டின் எல்லையாக இருக்கும் அரக்கனீஸ் மலைத்தொடர், இமாலயத்தைப் போல மனித நடமாட்டத்திற்கு கடுமையான தடை கொடுத்தது. மேலும், அம்மலைத் தொடரினிடையே உள்ள ஒரு சில கணவாய்களைக் கடப்பதற்கு வெகு சிரமப்பட வேண்டியிருந்தது. இதன் காரணமாக மியன்மாருக்கும் தென் ஆசியாவுக்குமிடையே பண்பாட்டுப் பரிமாறல்கள் அதிகம் இடம்பெறவில்லை.
கைபர் கணவாய் (The Khyber Pass)

இக்காலத்தில் கைபர் கணவாய்க்குச் செல்லும் புகுவழி
இன்று பாகிஸ்தானின் பக்துன்கவா (Pakhtunkhwa) மாகாணத்திலுள்ள பேஷாவர் பள்ளத்தாக்கிற்கும், ஆப்கானிஸ்தானிலுள்ள நன்கர்ஹார் (Nangarhar) மாகாணத்தின் ‘லண்டிக் கோட்டை’ நகருக்கும் எல்லையாக உள்ள வெள்ளை மலையூடாகச் செல்லும் கணவாய் இது. மத்திய ஆசியாவையும் தென்னாசியாவையும் இணைக்கும் இப்பாதை முற்காலத்தில் வரலாற்றுப் புகழ் பெற்ற பட்டுப்பாதையாக (Silk Road) விளங்கியது. வரலாற்றில் காலத்திற்குக் காலம் இக்கணவாயைக் கட்டுப்படுத்திய அரசுகளின் இராணுவ, போர்த்திற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய தளமாகவும் இது விளங்கியது. உலகிலேயே நெடுங்காலமாகப் பிரபலமான ஒரு மலைப்பாதை இது (Docherty, P. 2008).
ஆப்கானிஸ்தானில் கைபர் கணவாய் ‘ஸ்பின்கார்’ என அழைக்கப்படும் வறண்ட மலைத்தொடர்களினூடே செல்கிறது. வளைந்து வளைந்து செல்லும் இப்பாதையின் பள்ளத்தாக்குகளின் இரு பக்கமும் 180–300 மீட்டர் உயரமான கற்பாறைகள் காணப்படுகின்றன. இப்பாதை இறுக்கமான பாறை நிலத்தையும், வண்டித்தொடர் வணிகப் பாதையையும் கொண்டிருக்கிறது. இப்பாதையின் மிக உயரமான இடம் ‘லண்டிக் கோட்டை’. இது ஒரு முக்கியமான சந்தையாக விளங்குகிறது.

கைபர் கணவாய். 1848இல் வெளியிடப்பட்ட படம். நன்றி: Dr James Atkinson
சிந்து சமவெளியின் முதிர்ந்த நாகரிக காலத்தில் (பொ.யு.மு. 3300 – 1500) ஹிந்துகுஷ் ஊடாகச் சென்ற கைபர் கணவாய், அருகாமையிலிருந்த பேரரசுகளோடு தொடர்பு கொள்ளும் வழியாகவும், வர்த்தகம் செய்யும் வியாபாரிகளின் தொடர் வண்டிப் பாதையாகவும் (Caravan Route) விளங்கியது. பொ.யு.மு. 1500 ஆண்டுகாலப் பகுதியில் இந்தோ-ஈரானியர்கள் மத்திய ஆசியாவிருந்து கைபர் கணவாய் வழியாக இப்பிரதேசத்திற்குள் நுழைய ஆரம்பித்தார்கள் (Yasmeen, M. 2007: 36; Docherty, P. 2008).
கைபர் கணவாய் வழியாகச் சென்ற பட்டுப்பாதை கிழக்கு ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான முக்கிய பாதையாக விளங்கியது. பட்டுப்பாதை வர்த்தகத்தில் இன்றைய பாகிஸ்தானிலுள்ள காந்தாரா, மத்திய ஆசியாவுடனான ஒரு வர்த்தக கேந்திர மையமாக விளங்கியது.
வரலாற்றுக் காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்கிதியர்கள், பாத்தியர்கள், குஷானர்கள், ஹூணர்கள், துருக்கியர்கள், மங்கோலியர்கள் ஆகியோரின் இந்திய உபகண்டப் படையெடுப்புகள் அனைத்தும் கைபர் கணவாய் வழியாகவே நடைபெற்றன.
1834ஆம் ஆண்டில் ரஞ்சித்சிங்கின் தலைமையில் சீக்கியர்கள் கைபர் கணவாயைக் கைப்பற்றினார்கள். கைபர் கணவாயை நிர்வகித்த சீக்கிய ஜெனரல் ஹரிசிங்கின் பெயர் ஆப்கானிஸ்தானின் வீடுகளில் வழங்கிவந்த பெயராயிற்று. அக்கால இந்தியநாட்டின் நிலப்பரப்பு ‘கைபரிலிருந்து கன்யாகுமரிவரை’ எனக்கூறப்பட்டது.
முதலாவது உலக மகா யுத்தத்தின் போது இந்தியாவின் பிரித்தானிய அரசு கைபர் கணவாய் ஊடாக ‘கைபர் கணவாய் புகைவண்டிப் பாதை’யை நிறுவியது. பேஷாவருக்கருகாமையில் உள்ள ஜம்ருட் நகரிலிருந்து ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த ‘லண்டி கோத்தால்’ வரை சென்ற இந்த புகைவண்டிப் பாதை 1925ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.
போலன் கணவாய் (The Bolan Pass)
போலன் கணவாய் உள்ள மலைத் தொடர் இந்திய-ஈரான் கண்டத்தகடுகள் இணையும் தென் எல்லையில் இருக்கிறது. மேற்குப் பாகிஸ்தானிலுள்ள பலுச்சிஸ்தான் மாவட்டத்தின் மேற்கெல்லையாக இருப்பது ரோபாகாகர் மலைத்தொடர் (Toba Kakar Range). இம்மலைத்தொடர் ஹிந்துகுஷ் மலைத் தொடருக்குத் தெற்காக அமைந்துள்ளது. இம்மலைத் தொடரினூடே தெற்கிலிருந்து வடமேற்காகச் செல்லும் இக்கணவாய் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் இணையும் கேந்திர மையத்தில் அமைந்திருக்கிறது. இந்தக் கணவாயின் ஆரம்பம் சிந்துப் பள்ளத்தாக்கின் மேற்கு எல்லையில் பலுச்சிஸ்தானிலுள்ள சிபி நகரம் (Sibi). இங்கிருந்து ஆப்கானிஸ்தானின் எல்லை நகரான தர்வாஸா (Darwaza) வரை இக்கணவாய் செல்கிறது (Heathcote, T.A. 2016).
போலன் ஆறு பாயும் பள்ளத்தாக்கு வழியே செல்லும் 89 கி.மீ. (55 மைல்) நீளமான போலன் கணவாயின் புகுவாய் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து தெற்கே 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் இருக்கிறது. இந்தக் கணவாய் குறுகலான பல ஆற்றுக்குடைவு மலை இடுக்குகளையும் (Passes), பள்ளத்தாக்குகளையும் (Valleys), நீண்ட மலைப்பாதைகளையும் கொண்டிருக்கிறது (Singh, S. 2004: 112).
தொல்பழங்காலத்தில் ஆதிகால மனிதர்கள் தென் ஆசியாவுக்கு இந்தக் கணவாய் வழியாக மேற்கு ஆசியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள். பொ.யு.மு. பத்தாயிரம் ஆண்டுக் காலத்தில் மேற்காசியாவில் தோற்றம் பெற்ற வேளாண்மை விவசாயத்தையும், அதனோடு இணைந்து வந்த பேச்சுவழக்குகளையும் இக்கணவாய் வழியாகக் கொண்டுவந்த சிலர், சிந்து சமவெளிக் கரைநகரான மேர்கார்வில் (Mehrgarh) தென் ஆசியாவின் முதல் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வின் விவரங்களை இனித் தொடரும் இயல்களில் நாம் காணலாம்.
வர்த்தகர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், நாடோடிப் பழங்குடியினர் ஆகியோர் பல பல நூற்றாண்டுகளாக இப்பாதையால் மேற்கு ஆசியா – தென் ஆசியாவிற்கிடையே முன்னும் பின்னும் சென்று வந்திருக்கிறார்கள். பலுச்சிஸ்தானத்தில் போலன் கணவாய் அருகே வாழும் புராதன பிராகுயி பழங்குடியினர், போலன் பகுதியிலிருந்து தெற்கே அரேபியக் கடற்கரைக் கிராமமான கேப் மொன்ஸி (Cape Monze) வரை பரவியுள்ளார்கள். இவர்கள் பேசும் பிராகுயி மொழி ஒரு புராதன திராவிட மொழியாகும் (Minahan, J.B. 2016: 79–80; Shah, M.A. 1992).

போலன் கணவாய்க்கருகே வறண்ட மலைப்பகுதிகளில் கூடாரங்களில் வாழும் பிராகுயி மக்கள், புராதன திராவிட மொழி பேசும் மக்களாவர்.

பலுச்சிஸ்தானில் தாதூர் என்ற இடத்திலிருந்து போலன் கணவாயின் புகுவழி. 1842இல் பிரித்தானிய டாக்டர் ஜேம்ஸ் அட்கின்ஸனின் வரைபடம்.
போலன் கணவாய், கைபர் கணவாயின் தென்பக்க ஈரானிய-ஆப்கானிஸ்தானிய-இந்திய இணைப்புப் பாதையாகும். வரலாற்றுக்காலம் முழுவதும் இந்திய உபகண்டத்தின் ஆக்கிரமிப்புகள் இக்கணவாய்கள் வழியாகவே நடைபெற்றிருக்கின்றன. 1748ஆம் ஆண்டில் ஆப்கானிய அரசன் அகமது ஷா துரானி, கைபர் கணவாய், போலன் கணவாய் என இரு வழியாகவும் இந்தியாவின் மேல் படையெடுத்து வந்தான். துரானியின் தலைநகரான ‘கந்தகார்’ போலன் கணவாய்க்கருகாமையில் அமைந்திருந்ததனால் இந்திய நிலங்களை விரைவாக வந்தடையக்கூடியதாக இருந்தது. (Aitchison, C.U. 1878; Riedel 2015).
1837ஆம் ஆண்டில் தென் ஆசியாவை ரஷ்யா ஆக்கிரமிக்கப்போகிறது என்ற அச்சம் காரணமாக ஆப்கானிஸ்தானில் காபுல் நகருக்கு எமிர் தோஸ்த் முகமதின் ஆதரவை வேண்டி இந்தியாவின் பிரித்தானிய அரசு ஒரு தூதர் குழுவை அனுப்பி வைத்தது. 1839ஆம் ஆண்டில் பிரித்தானியர்கள் 12,000 இராணுவ வீரர்களோடு போலன் கணவாய் வழியாகச் சென்று கந்தகார் நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அங்கிருந்து அரசன் கஜனியின் படைகளை வெற்றி கொண்டார்கள்.
அக்காலத்தில், போலன் கணவாய் வழியாகச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் பயங்கரங்களை வங்காளப் பீரங்கிப் படையைச் சேர்ந்த (Bengal Artillery) ஒரு பிரித்தானிய அதிகாரி 1841ஆம் ஆண்டில் ‘அரச புவிமேற்றியல் சங்க சஞ்சிகைக்கு’ அனுப்பி வைத்த கடிதத்தில் பின்வருமாறு விவரிக்கிறார் (The Bolan Pass: JRGS, Vol. 12, 1842): “இக்கணவாய் வழியாகச் செல்லும் பாதை சில அரிதான விதிவிலக்குகளுடன், பனிக்கட்டிகள் உருகியோடும் நீரோ அல்லது மழை நீரோ அருவியாகப் பாய்ந்தோடும் பாதையாக இருந்தது. அதன் அடியிலுள்ள தளர்வான சரளைக்கற்களில் கால்கள் புதைந்து போகும். ஒட்டகங்கள் மட்டுமே இவற்றின் மேல் சுலபமாக நடந்து சென்றன. இப்பாதையில் வதியும் ‘கக்கூர்’ எனக் கூறப்படும் திருடர்கள் இவ்வழியால் செல்லும் வழிப்போக்கர்களிடமிருந்து திருடிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். மிகவும் கொடூரமான துரோகச் செயல் புரியும் இத்திருடர்கள் உயரமான பாறைகளிலிருந்து வழிப்போக்கர்களை கற்களால் அடித்து பின்னர் அவர்களது உடைமைகளைப் பறித்துச் செல்வர். என்னுடன் வந்த வழிகாட்டி வழிப்பறி நடைபெறும் இடங்களை எனக்குக் காட்டிவந்தார். நாங்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அங்கிருந்த நாட்களில் பல ஐரோப்பிய அதிகாரிகள் தங்கள் பொருட்களை இங்கே இழந்திருக்கிறார்கள். சில இடங்களில் பாதைக்குக் குறுக்காக நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கும். மலைகளின் உச்சிப்பகுதியில் பெருமழை பெய்யும் போது எச்சரிக்கை எதுவுமின்றி நீர் கனத்த ஓடையாக மேலிருந்து செங்குத்தாக வந்து விழும். ஒரு சமயம் கூட்டாக தங்கள் குதிரைகள், ஒட்டகங்களுடன் பொருட்களைக் கொண்டு வந்த ஒரு மக்கள் குழுவினரை ஒட்டுமொத்தமாக ஒரு மழை நீரோடை அடித்துச் சென்றிருக்கிறது.”
போலன் கணவாய் புகைவண்டிப் பாதை
பிரித்தானியர்களின் இந்திய ஆட்சியில் இடம்பெற்ற மிகப் பெரிய பொறியியல் சாதனைகளுள் ஒன்று போலன் கணவாயினூடாக அவர்கள் அமைத்த புகைவண்டிப் பாதை. இதை அமைத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், இன்றைக்கும் இவ்வழியாகப் பயணம் செய்து, இதைப் பார்வையிடும் ஆர்வலர்களிடம், இப்புகைவண்டிப் பாதை ஏற்படுத்தும் பிரமிப்பு அளவிடமுடியாதது.
போலன் கணவாயினூடாக புகைவண்டிப் பாதை அமைக்க முடியுமா என்ற கணிப்பு 1876 முதல் நடைபெற்று, 1880இல் இரும்புப்பாதை போடும் வேலைகள் ஆரம்பமாயின. 31 கி.மீ. பாதை முடிவுற்ற சமயம் அங்கே ஏற்பட்ட போரினால் வேலை நிறுத்தப்பட்டது. 1885இல் வேலைகள் திரும்ப ஆரம்பமாகின. முதலில் போலன் ஆற்றுப்படுகையின் மேல் நிறுவப்பட்ட வண்டிப்பாதையை வெள்ளம் அடித்துக்கொண்டு போயிற்று. திரும்ப உயரமாகப் போடப்பட்ட புதிய பாதையும் பனிவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 1890ஆம் ஆண்டில் எல்லா வகையான தட்பவெப்ப நிலைகளையும் தாக்குப்பிடிக்கக்கூடிய புகைவண்டிப்பாதை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாறைகளை வெட்டிச் சமதரையாக்கி, சிறு பள்ளத்தாக்குகளை கற்களால் நிரப்பிச் சமன்படுத்தி, பெரும் பள்ளத்தாக்குகளுக்கு மேலாக இரும்புப் பாலம் அமைத்து, பாதையைக் குறுகலாக்கும் மலைப்பாறைகளை செங்குத்தாக வெட்டி, பெருமலைகளுக்கூடாகச் சுரங்கப்பாதை வெட்டி, 1897ஆம் ஆண்டில் பாதை அமைத்து முடிக்கப்பட்டது. 1897ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதலாவது புகைவண்டி இப்பாதையால் பயணித்தது. கிழக்கே பலுச்சிஸ்தானில் கடல் மட்டத்திலிருந்து 435 அடி உயரத்திலுள்ள சிபி (Sibi) நகரிலிருந்து ஆரம்பித்து மேற்கே ஆப்கானிஸ்தானில் 5,499 அடி உயரத்திலுள்ள தர்வாஸாவில் (Darwaza) இப்பாதை முடிவடைகிறது. இதன் தூரம் 141 கி.மீ. (87.6 மைல்கள்) ஆகும். இன்றைக்கும் இப்புகைவண்டிப் பாதையில் பயணிப்போர், கைவிடப்பட்ட முந்தைய சுரங்கப்பாதைகளையும், வண்டிப் பாதைப் படுகைகளையும் காணலாம்.

பாறைகளைக் கிடைமட்டமாக – சமதரையாக வெட்டி, பிரம்மாண்டமாக எழுந்து விரியும் மலைத்தொடர்களைக் குடைந்து, அதனூடே செல்லும் பிரித்தானிய-இந்திய போலன் கணவாய்ப் புகைவண்டிப் பாதை. படம், நன்றி: உமார் மார்வாத்.
தொடரும்.



