பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் ‘இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்’ என்னும் நூலின் அறிமுகம் 

May 21, 2026 | Ezhuna

1920களில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் கொழும்பு நகரில் ஓர் உயர்கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை/ விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கு வெளிவாரி பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களைத் தயார்ப்படுத்தும் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டது. 1942 இல் இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு தனித்து இயங்க ஆரம்பித்தது. காலப்போக்கில் நாட்டின் பிறபகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டன. இலங்கையில் பல்கலைக்கழக முறை (University System) ஒன்று உருவாகியது. இம்மாற்றங்கள் மேற்குறித்த மூன்று கற்கைத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. ‘இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்’ என்ற இத்தொடரில் இக்கற்கைத்துறைகளின் வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகள், முக்கிய ஆய்வாளர்களின் நூல்களினதும், ஆய்வுக் கட்டுரைகளினதும் அறிமுகமும் விமர்சனமும், ஆய்வாளர்களின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் (Theoretical Contributions), அவர்களின் புலமைத்துறை வாழ்க்கை வரலாறு, மாணவர் பரம்பரைகளின் உருவாக்கம், அரசியல் – சமூக – பண்பாட்டு உயர்குழக்களின் (Elites) உருவாக்கம் என்பன குறித்த பகுப்பாய்வுகளாக அமையும் கட்டுரைகள் பதிவிடப்படும்

ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன்

இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் நூல் குமரன் புத்தக இல்லத்தினால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 383 பக்கங்களுடைய இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியாயிற்று. இதன் பிரதி ஒன்றின் விலை இலங்கை ரூபா 950 ஆகும். பெறுமதி மிக்க இந்நூல் இலங்கைத் தமிழர்களின் வழமைச் சட்டங்களையும் (Customary Laws), அம்மக்கள் சமூகத்தின் சமூக வரலாறு, பொருளாதாரம், வர்த்தகம், நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றையும் வரலாற்று நோக்கில் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் பலவற்றைத் தொகுத்துத் தரும் அரிய நூலாக விளங்குகின்றது. அத்தொகுதியில் எல்லாமாக ஐந்து பகுதிகள் உள்ளன. அவை வருமாறு.

  1. தேசவளமைச் சட்டம்.
  2. புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலுள்ள தேசவளமைகளும் சாதி வழமைகளும்.
  3. திருகோணமலைத் தமிழரின் வழமைகள்.
  4. முக்குவர் சட்டம்.
  5. பரதவர் சாதி வழமை.

மேற்குறித்த ஐந்து பகுதிகள் இலங்கைத் தமிழர்களின் மரபு வழித் தாயகமாக விளங்கிய யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம், கற்பிட்டி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகள் சார்ந்த வரலாற்று ஆவணங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. ‘இலங்கைத் தமிழர் வரலாறு, பொருளாதார முறை, சமூக வழமைகள், சொத்துரிமை பற்றிய கோட்பாடுகள், நிலப்பிரிவுகள், பாரம்பரியம், மொழிவழக்கு முதலான அம்சங்கள்’ அடங்கிய தொகுப்பாக இந்நூல் விளங்குவதாக சி. பத்மநாதன் தெரிவித்துள்ளார் (பக். 3). அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு.

“இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லோராலும் படித்தற்குரியவை. முற்காலங்களில் இலங்கைத்தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்கள் ஏற்படுத்தியிருந்த ஆட்சிமுறை, நீதிபரிபாலன முறை, பயிர்ச்செய்கை முறை, தொழில்கள், சமூக வழமைகள் போன்ற பிரதானமான விடயங்களைப் பற்றி இவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.” (பக். 3)

“எமது முன்னோர்கள் தமிழ் மொழியை எவ்வாறு பேசினார்கள்? வெவ்வேறு பிரதேசங்களில் வாழ்ந்தவர்களின் பேச்சுவழக்கில் எவ்விதமான வேற்றுமைகள் காணப்பட்டன? அவர்கள் தங்கள் கருத்துக்களையும் சமுதாயம் பற்றிய விடயங்களையும் எவ்வாறு எழுதினார்கள்? அரசினர் வெளியிட்ட ஆவணங்களில் எத்தகைய சொல்லாட்சியைப் பயன்படுத்தினார்கள்? அரசினரின் ஆவணங்களை ஐரோப்பிய மொழிபெயர்ப்பொன்றிலிருந்து தமிழில் எவ்வாறு மொழிபெயர்த்தார்கள்? அவ்வாறு மொழிபெயர்க்குமிடத்து என்ன பிரச்சினைகளை எதிர்நோக்கினார்கள்? போன்ற இன்னோரன்ன விடயங்களைப் புரிந்து கொள்வதற்கும் இத்தொகுதியில் உள்ள ஆவணங்கள் மிகவும் பிரயோசனமானவை.” (பக். 3-4)

இந்த ஆவணங்களின் அறிமுகமாக அமையும் மூன்று ஆய்வுக்கட்டுரைகள் நூலின் முற்பகுதியில் 3-30 வரையான 28 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. அக்கட்டுரைத் தலைப்புகள் பின்வருவன.

  1. இந்நூலில் அடங்கியுள்ள ஆவணங்கள் (பக். 3-15)
  2. தமிழர் வாழும் பிரதேசங்களும் வரலாற்று மூலங்களும் (பக். 16–20)
  3. தமிழ்த் தலைமைக்காரரின் பிராந்திய சபைகள் (பக். 21-30)

இம்மூன்று ஆய்வுக் கட்டுரைகளினையும் அறிமுகம் செய்வதன் மூலம் இந்நூலின் உள்ளடக்கம் பற்றி முக்கியமான கருத்துகளை இக்கட்டுரையில் கூறவுள்ளோம்.

தேசவளமை

வடஇலங்கையில் வாழும் தமிழருக்குரிய சட்டமான ‘தேசவளமை’ டச்சுக்காரர் ஆட்சியின்போது 17ஆம் நூற்றாண்டில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்திலே திசாவை பதவியை வகித்த கிளாசு ஈசாக்கு (Class Isaacs) என்பவர் அங்குள்ள முதலியார்களின் உதவியுடன் தேசவளமைச் சட்டத்தைத் தொகுத்தார். தேசவளமை குறித்து கிளாசு ஈசாக்கு கூறியிருப்பதை பேராசிரியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

“இலங்கைத் தீவில் உள்ள யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்துவருகின்ற வழமைகள். இவைகள் உலாந்தாக் கொம்பனியார் காலத்துத் தேசவளமைகளும் கட்டளைகளுமெனப்படும். இந்தத் தேசத்தாருடைய சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத்தலங்களில் நீதி செலுத்தப்பட்டும் வருகிறது. அவ்வழமைகளாவன முதுசொம், மஞ்சணீர், நன்கொடை, கொள்வனவு விற்பனவு, காணிகள் தோட்டங்களை ஒற்றி வைத்தல், மீழுதல், அறுதி விற்றல் முதலானவைகளாம். இவைகள் யாவற்றையும் கொழும்பில் உத்தமகத்துவம் பொருந்திய எங்கள் தேசாதிபதியாகிய கொருநீலியு சுவாம் சீமோன் (Dr. Cornelis Joan Simons) அவர்களும் அவ்விடத்தில் உள்ள ஆலோசனைத் தலைவர்களும் இவ்விடத்தில் காகிதத்திலடங்கிய கட்டளைப் பிரகாரம் நான் இவ்விடத்தில் முப்பத்தைந்து வருஷக் காலமளவாக இத்தேசத்தாருடனே ஊடாடிச் சிரித்துப் பழகி அறிந்தபடிக்குத் திரட்டி எழுதி கோவைப்படுத்தினேன்.” (பக். 5)

மேலே தரப்பட்ட கிளாசு ஈசாக்குவின் கூற்றாக வரும் பந்தியை ஹென்றி பிரான்சிஸ் முத்துகிருஸ்ண என்னும் பெயருடைய வழக்கறிஞர் 1862 ஆம் ஆண்டு எழுதிய The Thesawalame or The Laws and Customs of Jaffna என்னும் நூலில் இருந்து தாம் பெற்றுக்கொண்டதாகப் பேராசிரியர் அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வெளியான முத்துகிருஸ்ணவின் நூல் இன்று கிடைத்தற்கரிய ஆவணமாக உள்ளதெனக் குறிப்பிடும் பேராசிரியர், தேசவளமை பற்றியும் முத்துகிருஸ்ணவின் நூல் பற்றியும் கூறும் தகவல்கள் வருமாறு.

“தேசவளமை 1707 ஆம் வருஷத்திலே சட்டமாக அரசாங்கத்தினாலே பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டது. அக்காலம் முதலாக அது வழக்கிலுள்ளது. இலங்கையில் உள்ள சட்ட நெறிகளில் அதுவே மிகப்பழமையானது என்பதும் கவனத்திற்குரியது. தேசவளமையின் பிரதிகள் 1797 ஆம் வருஷத்தில் பிரித்தானிய அதிகாரிகளினாலே வெளியிடப் பெற்றன.” (பக். 6)

இவ்வாறு டச்சுக்காலத்தில் கோவைப்படுத்தப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்கத்தில் 1797இல் வெளியிடப்பட்ட தேசவளமைச்சட்டம் பற்றிய ஆங்கில நூல் 1862 இல் முத்துகிருஸ்ண என்பவரால் எழுதி வெளியிடப்பட்டது. அந்த நூல் பற்றிப் பேராசிரியர் குறிப்பிடும் தகவல்கள் வருமாறு:

“முத்துகிருஸ்ணவின் நூலிலே தேசவளமை, அதன் ஆங்கில வாசகம், உலாந்தாக்கார அதிகாரிகள் 1707 இல் யாழ்ப்பாண இராச்சியம் குறித்து வெளியிட்ட 72 கட்டளைகள், அரசாங்கத்தின் வேறுசில கட்டளைப் பத்திரங்கள், 1801-1860 ஆகிய காலப்பகுதியில் தேசவளமையின் அடிப்படையில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள் என்பன அடங்கியுள்ளன. அந்த அரிய நூல் இப்போது கிடைத்தற்கரியதாகி விட்டது.” (பக். 6)

தமிழர் சமூக வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய முத்துகிருஸ்ண அவர்களின் 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல், ஒன்றரை நூற்றாண்டு கடந்த பின்னரும் இரண்டாம் பதிப்பு வெளிவராத காரணத்தால் கிடைத்தற்கரியதாகி அழிவுறும் நிலையில் உள்ளதை பேராசிரியர் தரும் குறிப்பு மூலம் அறிகின்றோம்.

மஞ்சணீர் சடங்கு

மாதா, பிதா இருவரும் தம் பிள்ளைகளுக்கு சொத்தை உரிமையாகக் கொடுப்பது போல், தாம் தத்தெடுத்து வளர்த்த வளர்ப்புப் பிள்ளைகளுக்கு சொத்தில் ஒரு பாகத்தைக் கொடுப்பதற்கு தேசவளமைச் சட்டத்தில் இடம் உள்ளது. ‘மஞ்சணீர்’ என்பது வளர்ப்புப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் சொத்தைக் குறிப்பிடும். இதனோடு தொடர்புடைய சடங்கு ‘மஞ்சணீர் சடங்கு’ என அழைக்கப்பட்டது. இது போன்றே பல அரிய சட்டக்கலைச் சொற்கள் தேசவளமைச் சட்டத்தில் காணப்படுகின்றன. 

தேசவளமைச் சட்டத்தின் மொழி

வட இலங்கைத் தமிழர்களிடை நீண்டகாலமாக வழக்கில் இருந்து வந்த தேசவளமைச் சட்டம், ஒரு வரலாற்று ஆவணம் என்ற வகையில் முக்கியம் பெறுவதோடு, அதன் மொழிவழக்கும் தனித்துவம் மிக்கதாக அமைந்துள்ளது எனப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

“தேசவளமையில் காணப்படும் மொழிவழக்கும் சொல்லாட்சியும் தனித்துவமானவை. இலக்கிய மரபிற்கும் பேச்சு வழக்கிற்கும் இடைப்பட்ட ஒரு வழக்கினை அது பிரதிபலிக்கிறது. சமஸ்கிருத மொழிச் சொற்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. கடுமையான இலக்கண விதிகளுக்கு அமையவும் அது எழுதப்படவில்லை. சொற்களின் வடிவத்திலும் சொல்லாட்சியிலும் பிரதேச வழக்கினை அது பிரதிபலிக்கிறது. தமிழ்மொழியை நன்கு கற்ற உலாந்தாக்காரர்களின் மேற்பார்வையில் அது தொகுக்கப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டமையால், ஐரோப்பிய மொழிச் செல்வாக்கும் அதன் சொல்லாட்சியில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.” (பக். 6-7)

தேசத்து வழமைகளை தொகுத்துக்கூறும் சட்டத்தொகுப்பிற்கு முதலியார்கள் பெயரிட்ட போது ‘ழ’ என்பதை ‘ள’ என்று தவறாக எழுதிவிட்டனர் போலும். இதனால் அது ‘தேசவளமைச் சட்டம்’ என்றே அழைக்கப்பட்டது. சட்டப்புத்தகங்களிலும் இது ‘தேசவளமை’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இதனை திருத்தம் செய்தல் இயலாது. 

புத்தளம், கற்பிட்டி பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வழமைகள்

இத்தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியில் புத்தளம், கற்பிட்டிப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் வழமைகளை விவரிக்கும் ஆவணங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவை பற்றி பேராசிரியர் கூறுவன கவனிப்புக்குரியவை.

“புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றில் உள்ள தமிழர்களின் வழமைகள் பற்றிய ஐந்து ஆவணங்கள் உள்ளன. அவை கி.பி. 1815 ஆம் ஆண்டிலே அங்குள்ள தலைவர்களினால் எழுதப்பெற்றவை. அக்காலத்தில் பிரதம நீதியரசராக விளங்கிய அலெக்ஸாண்டர் ஜோன்சன் செய்த ஏற்பாடுகளின் பிரதிபலனாக, இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களிலே பரவியிருந்த தலைமைக்காரருக்கு தேசவளமையின் பிரதிகளை அனுப்பிவைத்து, அதன் விதிகள் எந்தளவிற்கு நடைமுறையிலுள்ளன என்பது பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிகாரிகள் கட்டளையிட்டனர். அதற்கமையத் தலைமைக்காரரில் பலர் தங்கள் பொறுப்பிலுள்ள பகுதிகளில் வழங்கும் வழமைகள் பற்றிச் சுருக்கமான அறிக்கைகளை அனுப்பியிருந்தார்கள். அவற்றைச் சிலர் தமிழில் எழுதினார்கள்; வேறுசிலர் ஆங்கில மொழியில் எழுதினார்கள்.”

“புத்தளம், கற்பிட்டி ஆகிய பகுதிகளைப் பற்றிய அறிக்கைகள் தமிழில் எழுதப்பட்டிருந்தன. அவையாவும் அலெக்ஸாண்டர் ஜோன்சன் சேகரித்து வைத்த ஆவணச்சுவடிகளில் உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் ஆவணங்களை இதுவரை வேறொருவரும் வெளியிட்டிருப்பதாகத் தெரியவில்லை.” (பக். 7)

புத்தளம், கற்பிட்டி பகுதிகளின் வழமைகள் பற்றித் தமிழில் எழுதப்பட்ட ஐந்து எழுத்துச் சுவடிகள் பின்வருவன.

  1. புத்தளம், கற்பிட்டி தமிழரின் வழமைகள்
  2. புத்தளத்தில் வெள்ளாளர் சாதியாருக்குள்ளே நடந்து வருகின்ற வழமை
  3. கற்பிட்டி செட்டி, வெள்ளாளர், கம்மாளர், வண்ணார் இவர்களுக்குள்ளே நடந்து வருகின்ற வழமை
  4. கற்பிட்டிப் பரதவர் சாதியாருக்குள்ள வழமை
  5. முக்குவர் சாதி வழமை

இவற்றுள் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள ஆவணம் கற்பிட்டி முதலியார் சிமியோன் த றொசாய்றோ 1815 ஆம் ஆண்டு எழுதிய ஆவணம் என அறியமுடிகிறது. மேலே குறிப்பிட்ட இரண்டாவது ஆவணமும் கற்பிட்டி முதலியார் சிமியோன் த றொசாய்றோ அவர்களாலேயே எழுதப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது. மேலே குறிப்பிட்ட மூன்றாவது ஆவணம் கற்பிட்டி வைத்தியநாத உடையார் என்பவர் எழுதியது. நான்காவது ஆவணத்தினை எழுதியவர் பெயரை அறியமுடியவில்லை. ஐந்தாவது ஆவணம் கற்பிட்டியின் அந்தோனிக்குருசு அடப்பன் என்பவரால் எழுதப்பட்டது.

இந்தத் தமிழ் ஆவணங்கள் பற்றிய மேலதிக விவரங்களை இந்நூலின் 7 முதல் 10 வரையிலான பக்கங்களில் பேராசிரியரால் கூறப்பட்டவற்றை வாசித்து அறிந்து கொள்வதோடு, நூலின் இரண்டாம் பகுதியில் பக்கம் 131 முதல் 162 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ள மூல ஆவணங்களையும் படித்து அறிந்து கொள்ளலாம்.

திருகோணமலைப் பிராந்தியத்து தமிழர்களிடையே காணப்பட்ட வழமைகள்

புத்தளம், மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளையும் சேர்ந்த முக்குவரிடையே காணப்பட்டது போன்ற தாய்வழி உரிமைமுறை, திருகோணமலைப் பிராந்தியத் தமிழர்களிடையேயும் காணப்பட்டது எனக் குறிப்பிடும் பேராசிரியர், அலெக்ஸாண்டர் ஜோன்சனின் சேகரிப்பில் இருந்த திருகோணமலை மாவட்டம் தொடர்பான மூல ஆவணங்கள் பற்றிக் கூறியிருப்பவை வருமாறு:

“முற்காலத்தில் தாய்வழி உரிமை திருகோணமலைப் பிராந்தியத்துத் தமிழரிடையேயும் காணப்பெற்றது. 1815 ஆம் ஆண்டிலே திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவராகிய திருகோணமலைப் பிரிவு, கொட்டியாரம் பற்று, தம்பலகாமம் பற்று ஆகியவற்றின் தலைமைக்காரர்களிடமிருந்து தேசவளமைகள் பற்றிய அறிக்கைகள் தனித்தனியாக அரசாங்கத்தினாலே பெற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்மொழியில் எழுதப்பட்ட மூல ஆவணங்கள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவற்றின் வாசகங்களே அலெக்ஸாண்டர் ஜோன்சன் சேகரித்து வைத்த ஆவணச்சுவடிகளில் உள்ளன. திருகோணமலைப் பிரிவில் நிலவிய வழமைகள் ஏனைய மூன்று பிரிவுகளில் நிலவியவற்றிலிருந்தும் வேறுபட்டிருந்தன என்பது அவற்றினாலே தெளிவாகிறது. திருகோணமலைப் பிரிவிலே தேசவளமை நாட்டு வழமையாகப் பின்பற்றப்பட்டது. ‘மாட்சிமை பொருந்திய தேசாதிபதி அவர்களால் அனுப்பி வைக்கப்பெற்ற தேசவளமைச் சட்டத்தை வாசித்த பின், அதில் அடங்கிய சட்டங்கள் பல இச்சொல்லிலிருந்து நிலைபெறுகின்றன என்பதை மேலே கையொப்பமிட்டுள்ளோராகிய நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்’ என்று பன்னிரெண்டு முதலியார்கள் அத்தாட்சிப்படுத்தினார்கள்.” (பக். 10-11)

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூல ஆவணங்களான இவற்றைப் பேராசிரியர் தமிழிலே மொழிபெயர்த்து நூலின் மூன்றாம் பகுதியில் (பக். 163–198) தந்துள்ளார்.

முக்குவர் சட்டம் 

நூலின் நான்காம் பகுதி முக்குவர் சட்டம் பற்றியது. பக்கம் 201 முதல் 272 வரையான 72 பக்கங்களில் அமைந்துள்ள இப்பகுதியின் பொருளடக்கம் வருமாறு.

1. மட்டக்களப்பு தேசம் – பக். 201-237
2. இலங்கையில் முக்குவர்: சில வரலாற்றுக் குறிப்புக்கள் – பக். 238-249
3. முக்குவர் சட்டம் (ஆங்கில நூலின் தமிழாக்கம்) – பக். 250-272

மட்டக்களப்பின் முற்கால இராச்சியங்களின் தோற்ற வரலாற்றை ஆராய்வதாக ‘மட்டக்களப்பு தேசம்’, ‘இலங்கையில் முக்குவர்: சில வரலாற்றுக் குறிப்புக்கள்’ என்னும் இரு தலைப்புகளில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன. மூன்றாவதான ‘முக்குவர் சட்டம்’, சி. பிரிட்டோ (C. Brito) எனும் வழக்கறிஞர் 1876 ஆம் ஆண்டிலே வெளியிட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூல் பற்றிப் பேராசிரியர் கூறும் அரிய தகவல்கள் பின்வருமாறு.

“முக்குவர் சட்டமென்னும் நூலை சி. பிரிட்டோ என்னும் வழக்கறிஞர் 1876 ஆம் ஆண்டிலே வெளியிட்டார். அவர் நெடுங்காலமாக மட்டக்களப்பிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தவர். தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலும், வழக்குத் தீர்ப்புகள் பலவற்றை ஆதாரமாகக் கொண்டும் அந்நூலை அவர் எழுதினார். மேலும், முதியவர்களாயும் தலைமைக்காரராயும் விளங்கிய பலரது ஆலோசனைகளைப் பெற்று, பல விடயங்கள் தொடர்பான சந்தேகங்களைத் தான் தெளிவுப்படுத்திக் கொண்டதாகப் பிரிட்டோ குறிப்பிடுகிறார்.” (பக். 12)

“முக்குவர் சட்டம் என்ற சிறிய நூலில் ஏழு அத்தியாயங்கள் உள்ளன. அவை வழக்குரைஞரின் தேவையொன்றைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் எழுதப்பெற்றவை. அந்நூல் ஒரு தடவை மட்டுமே பிரசுரமானது. அதுவும் இப்பொழுது கிடைத்தற்கரியதாகிவிட்டது. அது எவராலும் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. மட்டக்களப்பு தமிழரின் சமூக அமைப்பு, பூர்வீகமான வழமைகள் என்பன பற்றிய ஓர் அதிமுக்கியமான வரலாற்று ஆவணம் என்பதால் அதனை தமிழிலேயே மொழிபெயர்த்து இந்நான்காம் பகுதியிலேயே சேர்த்துள்ளோம். ‘முக்குவர் சட்டம்’ என்பதிலே விளக்கப்படும் கோட்பாடுகள் மட்டக்களப்பு தமிழர் அனைவருக்கும் பொருத்தமானவை. மருமக்கள் வழியான உரிமை முறையும் சமூக வழமைகளும் முக்குவருக்கு மட்டுமன்றி அங்குள்ள எல்லாத் தமிழ்ச் சமூகங்களுக்கும் பொதுவானவை என்பது கவனத்திற்குரிய ஒன்றாகும்.” (பக். 12)

பரதவர் சாதி வழமை

நூலின் ஐந்தாம் பகுதியிலேயே பரதவர் சாதிவழமை பற்றிய ஆவணம் ஒன்றைத் தந்துள்ளார். இவ்வாவணம் ‘தூத்துக்குடி பரதவர் வழமைகள்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

“தூத்துக்குடி முதல் இந்த இடங்களில் எங்கள் முன்னோர்கள் நாள் முதல் நடந்து வருகிற ஞாயங்களும், ஒழுங்குமுறைகளும், குடுக்கல் வாங்கல்களும், வியாபாரம் செய்து வருகின்ற வழமைகளுக்கும் இதனாலே எழுதி அறியப்பண்ணிக் கொள்கிறது ஆவது” எனத் தொடங்கும் இந்த ஆவணத்தின் இறுதியில்,

“பரதவர் சாதித்தலைவன் 1815 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தூத்துக்குடி” என எழுதி கையொப்பமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசாதிபதியான அலெக்ஸாண்டர் ஜோன்சனின் வேண்டுகோளுக்கு அமைய பரதவர் சாதித்தலைவன் எழுதிய இந்த அறிக்கையின் இறுதி வாக்கியம் வருமாறு:

“இத்தியாதி ஞாபகங்கள் எல்லாம் ஆண்டவனவர்கள் கட்டளை இட்டருளிய உத்தரவுப் பிரகாரம் எழுதி அறியப்பண்ணிக் கொண்டேன்.”

நூலின் ஐந்தாம் பகுதியில் ‘பரதவர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புக்கள்’ என்னும் ஆய்வுக் கட்டுரையையும் பேராசிரியர் எழுதிச் சேர்த்துள்ளார். மீனவர், மாலுமிகள், வணிகர், படைவீரர் எனப் பல்திறத்தோராய் விளங்கிய பரதவர்களின் வரலாற்றைச் சான்றுகளின் அடிப்படையில் ஆராயும் இக்கட்டுரை, கற்பிட்டி, புத்தளம் பகுதிகளில் குடியேறிய பரதவர்களின் சாதிவழமைகள் பற்றிய ஆவணத்தைப் படிப்பதற்கும் புரிந்துக் கொள்வதற்கும் உதவுவதாக அமைந்துள்ளது. இந்நூலின் இரண்டாம் பகுதியில் புத்தளம், கற்பிட்டி ஆகியவற்றிலுள்ள தேசவளமைகளும் சாதிவழமைகளும் கூறப்பட்டன. அத்தேசவளமைகள், சாதிவழமைகளிலிருந்து சில விடயங்களில் வேறுபட்டதாக தூத்துக்குடி பரதவர் சாதிவழமைகள் இருந்தமையையும் கவனத்தில் கொண்டு ஐந்தாம் பகுதியைப் படித்தல் சிறப்பாகும்.

முடிவுரை

இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும் என்னும் இந்நூலில் வரலாற்று முக்கியத்துவமுடைய ஆவணங்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டோம். இந்த ஆவணங்களில் முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிரித்தானியாவின் ஆவணச்சுவடிகள் நிலையத்தில் உள்ள சுவடிகளின் மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்நூலாசிரியர் 1967 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட காலத்தில் இந்த ஆவணங்களின் நிழற்படங்களைப் பெற்றுக்கொண்டார். இவற்றுள் முக்குவர் சாதிவழமை என்னும் ஆவணத்தையும், திருகோணமலைத் தமிழரின் வழமைகள் பற்றிய ஆவணத்தையும் சில விளக்கக் குறிப்புகளோடு 1994 ஆம் ஆண்டு தனிநூலாகப் பிரசுரித்தார். 2002 ஆம் ஆண்டில் இவர் சேகரித்த ஆவணங்கள் யாவற்றையும் ஒன்றுசேர்த்து 383 பக்கங்களுடைய பெருநூலாக வெளியிட்டார். இதன் மீள்பதிப்பு 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகங்களில் வரலாறு, சட்டம், சமூக இயல், மானிடவியல், இந்து – இஸ்லாம் – கிறிஸ்தவ நாகரிகம் ஆகிய பாடங்களைக் கற்கும் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய மிக முக்கியமான இவ்வரிய நூலை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தோடு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்