தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
30 நிமிட வாசிப்பு

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 2

September 21, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

மனித வரலாற்றுக் கற்கைப் பிரிவுகள்

டென்மார்க்கில் தேசிய அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த கிறிஸ்டியன் ஜே. தொம்ஸன் (Christian Jurgensen Thomsen) 1930களில் புராதன மனித இன வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக, அம்மனிதர்கள் விட்டுச்சென்ற செய்பொருட்களை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை கற்காலம் (Stone Age), வெண்கலக் காலம் (Bronze Age), இரும்புக் காலம் (Iron Age) என மூன்றாகப் பிரித்தார். இது ‘மூன்று காலகட்ட முறை’ (The Three Age System) என வழங்கப்படுகிறது.

1865இல் பிரித்தானிய தொல்லியலாளரான ஜோன் லுப்பொக் (John Lubbock) கற்காலத்தை மேலும் மூன்று பிரிவுகளாக்கி பழையகற்காலம் (Palaeolithic), இடைக்கற்காலம் (Mesolithic), புதியகற்காலம் (Neolithic) என அழைத்தார். பழையகற்காலம் மேலும் மூன்று பிரிவுகளாக – கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம், மேலைப் பழங்கற்காலம் (Lower, Middle and Upper Palaeolithic) என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வகுப்பொழுங்கு ஆய்வாளர்களால் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பழைய கற்காலம்

பண்டைய நாகரிகச் சிறப்புப் பெற்ற பிராந்தியங்களில் தென்னாசியாவும் ஒன்றாகும். இங்கே கற்காலம் தொட்டு மனிதன் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறும் விதத்தில் அவன் விட்டுச் சென்ற பண்பாட்டு எச்சங்கள் விளங்குகின்றன. இதனால் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் போன்ற கற்காலப் பண்பாட்டு அம்சங்களுக்கான தடயங்கள் இங்கே சிறப்பாகக் காணப்படுகின்றன. கற்காலத்தைப் பொறுத்தமட்டில் இக்காலக் கற்கருவிகள் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும் காணப்படுகின்றன.

அண்மைக் காலங்களில் மேற்கு நாடுகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறைகளைப் பின்பற்றி இந்தியத் தொல்லியலாளர்கள் கற்கால ஆய்வில் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். இதற்கு முன்பெல்லாம் பழங்கற்கால ஆராய்ச்சி பெருமளவுக்குக் கல்லாயுதங்களையும், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட தொழில்நுட்பத் திறமையையும், குறிப்பிட்ட பிரதேசங்களிலே கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதங்களுக்கும் ஏனைய பிரதேசங்களிலே கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதங்களுக்கிடையே காணப்படும் தோற்றம், செய்திறன், பயன்பாடு ஆகியவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளையும் கண்டறிவதிலே மட்டும்தான் நடைபெற்றது. இதன் காரணமாக இவ்வித ஆய்வுகளில் ஈடுபட்டோர் பெருமளவுக்குப் பழைய கற்காலக் கருவிகள் காணப்படும் ஆற்றுப்படுகைகளை ஆராய்வதில் மட்டுமே கூடிய கவனம் செலுத்தினார்கள். இதற்கப்பால் அக்காலத்தில் மனித நடமாட்டமிருந்த பிராந்தியங்களையோ, அந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்த பழங்குடி மக்களையோ பற்றிய அவதானிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை (சிற்றம்பலம், சி.க. 1999: 33).

அண்மைக் காலங்களில் நவீன அறிவியல் ஆய்வு முறைகளின் துணையோடு கற்கால மனிதன் வாழ்ந்த சூழல் பற்றி அறிவதில் அதிக அக்கறை காட்டப்படுகிறது. இவ்வாறு சூழலை மையமாக வைத்து ஆராயும் போது மனிதன் உபயோகித்த ஆயுதங்கள் அதில் ஓர் அம்சமாக மட்டுமே காணப்படுகின்றன. இத்தகைய சூழல் பற்றிய ஆய்வில் பண்டைய நில அமைப்பு, ஆற்றோட்டம், வடிகாலமைப்பு, மனிதன் ஆயுதங்களை உருவாக்கிய இடங்கள், அவன் தனக்கு வேண்டிய மூலப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடங்கள், அக்காலச் சூழலில் வளர்ந்த தாவரங்கள், மிருகங்கள் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. மொத்தத்தில் பண்டைய மனிதனின் வாழ்வு, வளம் பற்றிய முழுமையான ஒரு வரலாற்றைக் கட்டி எழுப்புவதே இன்றைய ஆய்வின் முக்கிய நோக்கமாக விளங்குகிறது (சிற்றம்பலம், சி.க. 1999: 34).

ஐரோப்பா, மேற்காசியா, ஆபிரிக்காவைப் போன்று பிளிஸ்ரொசீன் காலத்து பழைய கற்காலத் தொழில்கள் அவற்றின் உருவம், அளவு, தயாரிக்கும் முறைகளைப் பொறுத்து மூன்று பெரும் பிரிவுகளாக அமையும். கீழைப் பழங்கற்கால ஆயுதங்கள் விலங்குகளை வேட்டையாடத்தக்க கல்லினால் செய்யப்பட்ட கைக்கோடரிகள், பிளப்பிகள், வெட்டும் கருவிகள், மற்றும் இவற்றோடு தொடர்புடைய கருவிகளாகும். மத்திய பழங்கற்காலக் கருவிகள் சிறிய, எடை குறைவான செதில் வகையான, கவனமாக உருவாக்கப்பட்டவை ஆகும். மேலைப் பழங்கற்காலக் கருவிகள் நீள்சதுரமான கற்றகடுகள், உளிகள் என்பனவாகும். இவ்வகையான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகளில் காணப்படும் கருவிகளோடு ஒப்பிட முடிந்த போதிலும், தென்னாசியக் கற்கருவிகள் அந்தந்த திணைநிலப் பகுதிக்கேற்ப தனித்தன்மையான தொழில்நுட்பங்களுடன் காணப்படுகின்றன (Allchins B&R, 1982: 33).

தென்னாசியாவில் மனித இனங்கள் வாழ்ந்து வந்திருப்பதற்கான ஆதாரம் அச்சூலியன் கருவிகளிலிருந்தே ஆரம்பமாகிறது. ஆனாலும், பெரிய செப்பனிடப்படாத கைக் கோடரிகள், பிளப்பிகள், வெட்டும் கருவிகள் போன்றவை பரந்துபட்டுக் காணக்கிடைப்பது, இதற்கு முற்பட்ட காலங்களிலும் வேறுவகையான கற்காலப் பண்பாடு இருந்திருக்க வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது. இக்கல்லாயுதங்கள் அதன் வகைப்பாட்டிலும் தொழில்நுட்பத்திலும் (Typology and Technology) அச்சூலியன் வகை ஆயுதங்களாகவே அமைகின்றன (Allchins B&R, 1982: 35-36).

கீழைப் பழங்கற்காலம்

தென் ஆசியாவில் கீழைப் பழங்கற்கால மக்களின் வதிவிடங்கள் மலைக் குகைகளிலும், கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும், திறந்த வெளிகளிலும் காணப்படுகின்றன. மக்கள் நிரந்தரமாகவோ அல்லது நீண்ட காலமோ வாழ்ந்த இடங்கள் அவர்களின் பண்பாட்டு, வாழ்க்கைச் சூழல் நடவடிக்கைகளைக் காட்டக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட முக்கிய இடங்களாகும். ஒரு வட்டாரத்தில் காணப்படும் வதிவிட மையங்களின் அனைத்து வகையான ஆதாரங்களையும் கொண்டே ஒரு முழுமையான காட்சியை உருவாக்க முடியும். இந்த ஆதாரங்களைக் கொண்டு இவை காணப்படும் மையங்களுக்கிடையிலும், சூழலுக்கிடையிலுமான தொடர்புகளையும் விளக்க முடியும் (Allchin B & R. 1982:38).

இந்தியாவில் முதல் தடவையாக பல்லாவரத்திலும், அத்திரம்பாக்கத்திலும் அச்சூலியன் வகைக் கோடரிகளைக் கண்டெடுத்த நிலவியல் ஆய்வாளரான ரொபேட் புரூஸ் புட் (Robert Bruce Foote).

இந்திய நிலவியல் மேலாய்வுத் துறையைச் (Geological Survey of India) சேர்ந்த நிலவியலாளரான ரொபெர்ட் புரூஸ் புட் சென்னைக்குத் தெற்கேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்த பல்லாவரத்தில், அணிவகுப்பு மைதானத்திற்கு அருகாமையிலிருந்த செவ்வண்ண இரும்பகக் களிமண் கிடங்குகளில் (Laterite Pits) 1863ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி இந்தியாவின் முதல் பழங்கற்காலக் கற்கருவிகளைக் கண்டெடுத்தார் (Ramachandran, K.S. 1980: 17).

இதைத் தொடர்ந்து சென்னைக்கு 60 கி.மீ. தொலைவில் அத்திரம்பாக்கம் என்னுமிடத்தில் கொற்றலையாற்றுப் படுகையில் பழங்கற்காலத்திற்குரிய குவாட்ஸைட் வகைக் கல்லினால் செய்யப்பட்ட அச்சூலியன் வகைக் கைக்கோடரிகளையும் மற்றும் பல கற்கருவிகளையும் கண்டெடுத்தார். மேலும் அங்கே பெருந்தொகையான பழங்கற்காலக் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவில் பழைய கற்கால ஆயுதங்கள் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று (Foote, B. 1901, 1914, 1916). இக்கருவிகளுக்கு ‘மதராசியன் கருவிகள்’ (Madrasian Tools) எனப் பெயரிடப்பட்டது. இந்தக் கைக்கோடரித் தொழில்துறை ‘மதராசியன் தொழில்துறை’ (Madrasian Industry) என அழைக்கப்பட்டது (Subbarao, B. 1958).

இக்காலக் கருவிகள் ‘குவாட்ஸைட்’ என்னும் கல்வகையால் ஆக்கப்பட்டன. இக்கற்கள் இயல்பாக ஆற்றோரங்களிலும், பெரிய பாறைகளாகவும் காணப்பட்டன. இப்பாறைகளில் முதலில் நெருப்பை ஏற்றிச் சூடாக்கியதன் பின்னர் அவற்றின் மேல் நீரை ஊற்றியதன் மூலம் இவற்றைப் பிளக்க வைத்து, பின்னர் அவற்றை உடைத்து தமக்கு வேண்டிய ஆயுதங்களை இக்கால மனிதர் செய்திருப்பார்கள் என மானிடவியலாளர் கருதுகின்றனர்.

கைக்கோடரிகள் முழுக் கற்களைச் செப்பனிட்டே உருவாக்கப்பட்டன. இவற்றைச் செப்பனிடுவதில் முக்கியமாக இரு வகையான முறைகள் அல்லது பாணிகள் கடைப்பிடிக்கப்பட்டன. இப்பாணிகளை ‘ஆச்சூலியன்’ (Acheulian) என்றும், ‘அபிவிலியன்’ (Abbevillian) என்றும் தொல்லியலாளர்கள் அழைப்பர். அச்சூலியன் வகைக் கோடரிகள் முதலில் பிரான்ஸ் தேசத்தில் செயின்ட் அச்சூல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டபடியினால் அப்பெயரைப் பெற்றது. அபிவிலியன் ஐரோப்பாவின் ஆரம்பகாலக் கைக்கோடரி. இதன் தோற்ற காலம் இ.மு. 600,000க்கும் இ.மு. 400,000க்கும் இடைப்பட்ட ஆண்டுக் காலமாகும்.

அத்திரம்பாக்கத்தில் இக்கருவிகள் கொற்றலை ஆற்றின் படுகையிலே காணப்படுகின்றன. இவ்வாற்றில் 100, 60, 20, 8 அடி உயரங்களில் அமைந்த நான்கு மட்டப் படுகைகள் காணப்படுகின்றன. அச்சூலியன் வகைக் கைக்கோடரிகள், வெட்டும் கருவிகள், துண்டாடும் கருவிகள் (Choppers), பிளத்தற் கருவிகள் (Cleavers) என்பன களிமண், வண்டல் மண், உருண்டைக் கற்திரள்களோடு கலந்து காணப்படுகின்றன (இராசவேலு, சு., திருமூர்த்தி, கோ. 1955).

இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஆய்வுகளில் பஞ்சாப், ராஜ்புதனம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம், பீகார், அஸாம், வங்காளம் ஆகிய பகுதிகளிலும் இவ்வகையான கல்லாயுதங்களைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என அறியப்பட்டது.

கீழைப் பழங்கற்காலக் கருவிகள்: 1-4 பஞ்சாப்: 1, 2. வெட்டும் கருவிகள், 3. கைக் கோடரி, 4. பிளப்பி. 5 – 8 சென்னை: 5. வட்ட வெட்டி, 6. வெட்டும் கருவி, 7. அச்சூலியன் வகை கைக் கோடரி, 8. பிளப்பி. நன்றி: Bridget and Raymond Allchin, 1982.

‘மதராஸ் பாணி’ கைக்கோடரிப் பண்பாடு: குஜராத் பகுதியிலுள்ள மாகி பள்ளத்தாக்கிலிருந்தும், கர்நாடகத்தில் மலபிரபா பள்ளத்தாக்கிலிருந்தும் பெறப்பட்டவை. நன்றி: B. Subbarao, 1958.

சோனியன் பண்பாட்டுக் கருவிகள்

1936இல் இன்றைய பாகிஸ்தானிலுள்ள சோன் ஆற்றின் (Soan River) வடிநீர்ப்பகுதியில் வாழ்ந்த மக்கள் உபயோகித்த துண்டாக்கும், வெட்டும் கருவிகளைக் கண்டெடுத்த டி தெரா, பற்றசன் (Hellmut De Terra and Patterson) ஆகிய ஆய்வாளர்கள் இவை ஆச்சூலிய மரபின் சமகாலத்தைய கருவிகள் என மதிப்பிட்டு, இவற்றிற்கு ‘சோனியன் பண்பாட்டுக் கருவிகள்’ எனப் பெயரிட்டார்கள் (De Terra, H. 1969). இந்திய உபகண்டத்தின் சிவாலிக் பகுதிகளிலுள்ள இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய இடங்களில் காணப்படும் இக்கற்கருவிகள் சோன் பண்பாட்டுக் கருவிகள் என அழைக்கப்படுகின்றன. பிற்காலங்களில் இப்பகுதிகளில் இவற்றோடு அச்சூலியன் மரபு சார்ந்த கருவிகளும் கண்டெடுக்கப்பட்டபடியினால், பிற்கால ஆய்வாளர்கள் சோனியப் பண்பாடு என்பது அச்சூலியப் பண்பாட்டின் மாற்றுப் பெயரா? என வினா எழுப்பினார்கள் (Rendell, H. R. et al. 1989).

சோனியன் பண்பாட்டுக் கற்கருவிகள்

சோன் ஆற்றுப்படுகையின் குறுக்குவெட்டுப் படமும், ஆற்றுப்படுகையில் கண்டெடுத்த கற்கருவிகளும். 1. முற்பட்ட சோன் காலத்து சீவல் கருவி, 2 – 9. ஆரம்பகால சோன் கருவிகள், 10 – 18. பிற்காலச் சோன் கருவிகள். நன்றி: B. Subbarao, 1958.

இவ்வாயுதங்கள் சோன் ஆற்றுப்படுகைத் தளவரிசைகளில் கண்டெடுக்கப்பட்டமையால், இவற்றின் தயாரிப்பு ‘சோன் தொழில்துறை’ (Soan Industry) என அழைக்கப்படுகிறது. இத்தொழில்துறை இரு கூறுகளைக் கொண்டது. ஒன்று கைக்கோடரி மரபு, மற்றது வெட்டுக்கருவி – சீவல்கருவி மரபு.

சமீபகாலத் திகதிக் கணிப்புகளில், டி தெராவினால் கீழைப் பழங்கற்காலக் கருவிகள் என முன்வைக்கப்பட்ட சோன் கல்லாயுதங்கள் மத்திய பழங்கற்காலத்திற்கு உரிய கல்லாயுதங்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, கீழைப் பழங்கற்காலத்தைப் பற்றிப் பேசும்போது சோன் கருவிகளைத் தவிர்த்துக்கொள்வது நல்லது என ஆல்சின் கருதுகிறார் (Allchins B&R, 1982: 36).

நர்மதா ஆற்றங்கரை நில ஆய்வுகள்

மத்திய இந்தியாவில் நர்மதா ஆற்றங்கரையில் பிம்பேத்கா மலைச்சாரலில் காணப்படும் குகைகளின் ஆய்வுகளில், கற்கால மக்களின் அச்சூலியன் வதிவிட மையங்கள் வாக்கங்கார், மிஸ்ரா (Wakankar, V.S.; Misra) ஆகிய தொல்லியலாளர்களால் 1957இல் கண்டுபிடிக்கப்பட்டன. இதுவரை பிம்பேத்காவில் 243 வதிவிடக் குகைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வதிவிடங்கள் பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் ஈறாகப் புதிய கற்காலம் வரை நீடித்திருக்கின்றன (Agrawal et al. 1978).

பிம்பேத்கா குகைகளில் வெவ்வேறு காலங்களுக்குரிய ஏராளமான ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்த வாக்கங்கார், இதை ஏழு காலகட்டங்களுக்கு உரியவையாகக் கணிப்பிட்டிருக்கிறார் (Yasodhar, M. 1984; Javid & Javeed 2008; Chakravarthy 1984; Tiwari, S.K. 2000). இந்த ஓவியங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பவை தாவர வர்ணங்கள் ஆகும். உட்சுவர்களிலும், மாடக்குழிகளிலும் இருப்பதனால் இவை நெடுங்காலம் நீடித்திருக்கின்றன.

காலப்பகுதி 1 (மேலைப் பழங்கற்காலம்): பச்சை நிறத்தில், நடனமாடும், வேட்டையாடும் மனிதர்களின் கோட்டுப் படங்கள். இப்படங்கள் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகின்றன.

காலப்பகுதி 2 (இடைக்கற்காலம்): இக்குழுவில் காணப்படும் மனிதர்களின் உடலில் வரைகோடுகள் தீட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களை வேட்டையாடும் காட்சிகளில் முட்களைக் கொண்ட ஈட்டிகள், கூராக்கப்பட்ட கம்புகள், அம்பு-வில்லுகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. குழு நடனங்களில் பறவைகள், இசைக்கருவிகளோடு தாய்மார்கள், பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், வேட்டையாடிய மிருகங்களைச் சுமந்த மனிதர்கள், குடிப்பவர்கள் காணப்படுகிறார்கள்.

காலப்பகுதி 3 (வெண்கலக் காலம்): இக்கால ஓவியங்கள் இடைக்கற்காலம் போன்றவை. இவர்கள் மல்வா சமவெளி விவசாயிகளுடன் பண்டமாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காலப்பகுதி 4 – 5 (ஆதி வரலாற்றுக் காலம்): இந்த உருவங்கள் அலங்காரமாகச் சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் அமைந்தவை. இவை மிருகங்களில் சவாரி செய்வோர், மதச் சின்னங்கள், யக்ஷ உருவங்கள், மரத் தெய்வங்கள், விண்வெளித் தேர்கள் என்பனவாகும்.

காலப்பகுதி 6 – 7 (மத்திய காலம்): வடிவியல் முறையில் அமைக்கப்பட்ட ஓவியங்கள். வர்ணங்கள் மாங்கனீஸ் ஒக்ஸைட், சிவப்பு சாயம், நிலக்கரி என்பன கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மிருகக்காட்சிப் பாறை (Zoo Rock) என அழைக்கப்படும் ஒரு பாறையில் யானைகள், சதுப்புநில மான்கள், காட்டெருது ஆகியன காணப்படுகின்றன. மற்றொரு பாறையில் மயில், பாம்பு, மான் என்பன கதிரவனுடன் வரையப்பட்டுள்ளன. கையில் திரிசூலத்துடன் நடனமாடும் மனித உருவத்தை ‘நடராஜர்’ என தொல்லியலாளர் வாக்கங்கார் இனம் காண்கிறார் (Tiwari, S.K. 2000).

   பிம்பேத்கா குகை ஓவியங்கள்

பிம்பேத்கா குகைப்பகுதிகள் 1990ஆம் ஆண்டு முதல் சட்ட ரீதியாக இந்திய தொல்லியல் மேலாய்வுத் திணைக்களத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 2003ஆம் ஆண்டு முதலாக ஐக்கிய நாடுகள் கல்வி-அறிவியல்-பண்பாட்டு நிறுவனத்தினரால் (UNESCO) இது ஓர் உலக மரபுரிமை மையமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

‘நர்மதா மனிதன்’ கண்டுபிடிப்பு

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்திய அரசு மத்திய இந்தியாவின் நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள ஹத்னோரா கிராமத்தில் தொல்கால மனித மண்டை ஓட்டின் புதைப்படிவம் (skull Fossil) ஒன்றும் சில புதைப்படிவ மனித எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தது. இதை அடுத்து உலகப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ‘நர்மதா மனிதனின் கண்டுபிடிப்பு’ என செய்திகள் வெளிவரலாயின. இது இந்திய ஹோமோ இரக்டஸ் மனிதனின் 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கபால ஓடு என முதலில் அறிவிக்கப்பட்டது.

உண்மையில் இந்தக் கண்டுபிடிப்பு 1982ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மத்தியப் பிரதேசத்தில் ஹத்னோரா கிராமத்தில் நர்மதா ஆற்றங்கரை வண்டல் மண் அடுக்குகளை (Alluvial Terrace) ஆய்வு செய்த அருண் சோனக்கியா என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வை ஆரம்பித்து இரு மாதங்களின் பின்னர் ஆற்றின் வடகரையில் வண்டல் மண்ணில் இக்கபால ஓட்டை அவர் கண்டெடுத்தார் (Sonakia, A. & Kennedy K.A.R. 1985).

1988ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொல்மானிடவியலாளர்களான கென்னெத் கென்னடி, வில்லியம் ரோத்ஜென் இருவரும் இக்கபாலத்தைப் பரிசோதனை செய்து, இது முப்பது வயதளவில் இறந்த ஒரு பெண்ணின் மண்டை ஓடு எனத் தெரிவித்தார்கள். முதலில் பரிசோதனை செய்தவர்களால் இது ஓர் ஆணின் மண்டை ஓடாகக் கருதப்பட்டது. பிளிஸ்ரொசீன் கால மனித இனங்களிலிருந்து (பிளிஸ்ரொசீன் காலம்: 2.588 மில்லியன் முதல் 11,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரை) பின்வரும் உடற்கூரமைப்பு வடிவங்களால் நர்மதா கபாலம் மாறுபட்டிருப்பதாக கென்னடி குழுவினர் அறிவித்தார்கள்.

  1. பக்கவாட்டுக் கபாலத்தின் கோண வடிவம் (Form of Torus Angularis).
  2. கபாலத்தின் மத்தியில் ஓடும் குழிவிழுந்த எலும்பு பொருந்து வாய் (Furrowing of the Sagittal Ridge).
  3. பெரிய வெளிப்புறக் காதுத் துவாரம்.
  4. மிக நீண்ட கன்னப் பொட்டெலும்பு (Unusually Long Temporal Bone).
  5. மிக உயர்ந்த கபாலம்.
  6. உயர்ந்த பிடரி எலும்பின் மொழி (Elevated Opisthocranion).
  7. அகன்ற, உயர்ந்த நெற்றி.
  8. கபாலத்தின் கொள்ளளவு 1,421 கன சென்டிமீட்டர்.

மேற்குறிப்பிட்ட வடிவ அமைப்புகளைக் கொண்டு நர்மதா கபாலம் ஹோமோ இரக்டஸ், ஹோமோ சேப்பியன்ஸ் இரண்டு வகை மனிதர்களினதும் சிலசில கூறுகளைக் கொண்டிருப்பதாகக் கென்னடி தெரிவித்தார் (‘According to Kenneth Kennedy, given the above features, the Narmada crania exhibited some anatomical features of both the erectus and sapiens elements’ − Kennedy, K.A.R. 2000: 179). நர்மதா கபாலம் இற்றைக்கு 700,000க்கும் 130,000க்கும் முற்பட்ட மத்திய பிளிஸ்ரொஸீன் காலத்திற்குரிய ஆரம்பகால ஹோமோ சேப்பியன் இனத்திற்குரியதாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இக்கபாலத்தில் காணப்படும் வடிவ அமைப்புகளைக் கொண்டு இக்கபாலம் இந்தியாவிலேயே பரிணாம வளர்ச்சி பெற்றதாகக் கூறப்பட்டது (Kennedy and Chiment 1991; Kennedy, K.A.R. 2000: 180).

இதன்படி நர்மதா கபாலம் ஹோமோ இரக்டஸ்ஸிலிருந்து ஹோமோ சேப்பியன்ஸ் தோற்றம் பெற்ற இடைமாறுதல் பருவத்தைக் (Transitional Stage) காட்டுகிறது. இக்கணிப்பீடு ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் தோற்றம் ஆபிரிக்காவிற்கு வெளியிடங்களிலும் இடம்பெற்றிருக்கலாம் என்ற புனைவுகோளுக்கு (Multiregional Hypothesis) ஆதரவளிப்பதாகச் சிலர் கூறுவர்.

நர்மதா மனிதனின் கபாலத்தின் சுத்திகரிக்கப்பட்ட புதைப்படிவம்

மனித பரிணாமப் படிநிலை வளர்ச்சியின் போது ஹோமோ இரக்டஸ்ஸிற்கும், ஹோமோ சேப்பியன்ஸ்ஸிற்கும் இடைப்பட்ட நிலையில் உருவாகி, பிற்காலத்தில் அழிந்துபோய்விட்ட இனம் ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ். இந்த ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் இனத்திலிருந்தே ஐரோப்பாவின் ஹோமோ நியண்டதால் மனிதர்களும், நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களும் உதயமானார்கள் எனக் கருதப்படுகிறது. இற்றைக்கு 600,000 ஆண்டுகளுக்கும் 400,000 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த இம்மனிதர்கள் அச்சூலியன் வகைக் கல்லாயுதத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள்.

2005-2006ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக மானிடவியல் துறையைச் சேர்ந்த சீலா அத்திரேயா (Sheela Athreya) நர்மதா கபாலத்தை ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் கபாலத்துடன் ஒப்பீட்டு ஆய்வு – அதற்கிடையேயுள்ள வடிவ அமைப்பியல் உறவை அறிந்துகொள்ளும் ஆய்வு – மேற்கொண்டிருந்தார். நர்மதா மனிதன் ஹோமோ இரக்டஸ்ஸிற்கும், ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸிற்கும் இடைப்பட்ட இனமாகக் கருதப்பட்டால், இந்த ஆய்வின் முடிவில் ஹோமோ இரக்டஸ் அம்சங்களே இந்தக் கபாலத்தில் அதிகம் காணப்படுவதாகக் கூறப்பட்டது (Athreya, S. 2007).

தமிழக ஆய்வுகள்

இந்தியத் தொல்லியல் மேலாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த கே.டி. பனர்ஜீயின் தலைமையில் 1960களில் தென் இந்தியாவில் தமிழகத்தில் பல இடங்களில் மேலாய்வுகளும் அகழாய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வுகளில் காஞ்சிபுரம் தாலுகாவிலுள்ள பரண்டையூர், வாடியூர் ஆகியவற்றிலும், அத்திரம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ரங்கபுரம், அம்மம்பாக்கம், கொல்லபாளையம், சுனிபாளையம், கம்மவரிபாளம், குஞ்சரம், நாராயணபுரம், நெய்வேலி, பூண்டி, ராஜபாளையம், சித்தஞ்சேரி, திம்மபூபாளபுரம் ஆகிய இடங்களிலும் பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன (Ramachandran, K.S. 1980: 21).

குடியம், அத்திரம்பாக்கம், வடமதுரை, பூண்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குடியத்தில் பழங்கற்கால மனிதர் வாழ்ந்த குகைப்பாறைகள் (Rock-shelters) அகழ்வு செய்யப்பட்டன. குடியம் குகையில் தரை மட்டத்திலிருந்தே கற்கருவிகள் காணப்பட்டன. அடியிலுள்ள சரளைக்கல் மட்டத்தில் காணப்பட்ட பின்-அச்சூலியன் (Post-Acheulian) கருவிகள் மேல் மட்டங்களில் நுட்பமாகப் பண்பு மாறுபாடடைந்து நுண்கல் கருவிகளாக (Microlithic) மாற்றமடைவதைக் காண முடிகிறது (Ramachandran, K.S. 1980: 22).

அத்திரம்பாக்கம்

1863ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிலவியல் ஆய்வாளரான ரொபெர்ட் புரூஸ் புட் முதல் தடவையாக அச்சூலியன் வகைக் கல்லாயுதங்களை அத்திரம்பாக்கத்தில் கண்டெடுத்ததை ஏற்கனவே பார்த்தோம். தொடர்ந்து இவ்விடத்தில் இந்தியப் பாரம்பரியக் கல்வி நிறுவனமான சர்மா நடுவத்தின் (Sharma Centre for Heritage Education in India) தொல்லியலாளர்கள் இருபது ஆண்டுக்கால அகழாய்வுகளில் பெருந்தொகையான கற்கருவிகளைக் கண்டெடுத்தார்கள். அச்சூலியன் கைக்கோடரிகளைக் கொண்டு இவை ஹோமோ இரக்டஸ் மனிதர்களால் உபயோகிக்கப்பட்ட கருவிகள் எனக் கருதப்பட்டதே தவிர, இம்மனிதர்களின் மனித எலும்புக்கூடுகளோ, எலும்புகளோ இவ்விடங்களில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அத்திரம்பாக்கத்தில் 1965இல் டாக்டர் பனர்ஜீயினால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் நிலமட்டங்களில் காணப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்ணுக்கும் (Laterite), அம்மட்டத்தில் இடம்பெறும் கற்கருவிகளுக்கும் இடையிலான உறவைக் கண்டறிவது முக்கியப்படுத்தப்பட்டது. அகழ்வுகளில் நான்கு நில அடுக்குகள் காணப்பட்டன. அகழ்வின் அடிப்பகுதி எளிதில் தகடுகளாகப் பிளவுறும் கற்பலகை போன்ற களிப்பாறை (Shale) ஆகும். இந்த மட்டத்தில் கைக்கோடரிகளும், பிளப்பிகளும் காணப்பட்டன. இதற்கு மேலுள்ள இரும்பகக் களிமண் சரளைக்கல் (Lateritic Gravel) மட்டத்தில் பின்-அச்சூலியன் கருவிகளான கூர்கற்கள், பிராண்டிகள், நீண்ட சீவல்துணுக்கு-வாள் (Points, Scrapers, Long Flake-blades) என்பன காணப்பட்டன. இதற்கு மேலுள்ள மண்ணிற வண்டல் மட்டத்தில் கற்கருவிகள் ஏதும் காணப்படவில்லை. இதற்கும் மேலுள்ள மண்ணிற நில மட்டத்தில் குறுணிக்கல் (நுண்கல்) கருவிகள் காணப்பட்டன (Ramachandran, K.S. 1980: 23).

அத்திரம்பாக்கத்தில் கண்டெடுத்த அச்சூலியன் கைக்கோடரி. நன்றி: சென்னை அருங்காட்சியகம்.

இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அத்திரம்பாக்கத்தில் அகழாய்வுகளை மேற்கொண்ட சாந்தி பப்பு, அகிலேஷ் குமார், ஹரேஷ் ராஜபாரா ஆகிய ஆய்வாளர்கள் 7,200க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கல்லாயுதங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். இவற்றின் வெப்பேற்று ஒளிவீச்சு (Thermoluminescence) காலக்கணிப்புகள் இக்கல்லாயுதங்களின் காலத்தை இற்றைக்கு 385,000±64,000 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் செல்கின்றன (Kumar, Akilesh et al. 2003). இக்கல்லாயுதங்கள் கீழைப் பழங்கற்காலத்து அச்சூலியன் வகை ஆயுதங்களுக்கு அடுத்த கட்டமான மத்திய பழங்கற்கால ஆயுதங்களாகும் (கீழே பார்க்கவும்).

வடமதுரை

அத்திரம்பாக்கம் போன்று வடமதுரையிலும் கீழைப் பழங்கற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை விரிவாக ஆராய்ந்த கிருஷ்ணசுவாமி, இவற்றின் தோற்றம், செய்திறன், பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் (Krishnaswami, V.D. 1947: 11-57).

  1. முதலாம் பிரிவு: இப்பிரிவைச் சார்ந்த கருவிகள் உருண்டைக் கற்களுடன் காணப்படுகின்றன. இவற்றின் பக்கங்கள் நீண்ட தூரம் இவை இழுத்துச் செல்லப்பட்டதனால் போலும் மழுங்கிக் காணப்படுகின்றன. இவற்றில் ஒருவகைப் பழுப்பு நிறம் படிந்து காணப்படுகிறது.
  2. இரண்டாவது பிரிவு: இப்பிரிவைச் சார்ந்த கருவிகள் உருண்டைக் கற்களமைந்த பகுதி மேல் காணப்படுகின்றன. இக்கருவிகள் செம்பூரன் சேர்க்கையுடன் (Laterite) கலந்து காணப்படுவதனால் செம்மண் நிறம் பெற்றிருக்கின்றன. காலத்தால் இவை முதலாம் பிரிவைவிடப் பிந்தியவை.
  3. மூன்றாம் பிரிவு: இக்கருவிகள் செம்மண் நிறமோ பழுப்பு நிறமோ இன்றிக் காணப்படுகின்றன. காலத்தால் இவை மிகப் பிந்தியவை.

இக்கற்கருவிகளை நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றின் அமைப்பு, செய்திறன், பயன்பாடு ஆகியவற்றின் சிறப்பியல்புகளுக்கு ஏற்ப முதலாம், இரண்டாம் பிரிவுகளில் மேலும் இரு உட்பிரிவுகளையும் அடக்கியிருக்கிறார்.

முதலாம் பிரிவின் முதலாவது உட்பிரிவில் ‘அபிவிலியன்’ வகைக் கைக்கோடரிகள் இடம்பெறுகின்றன. இக்கோடரிகளின் நுனி முனையைத் தவிர, மிகுதிப் பாகங்கள் செப்பனிடப்படவில்லை. இரண்டாவது உட்பிரிவில் உள்ளடக்கப்பட்ட ஆயுதங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆரம்பகால ‘அச்சூலியன்’ பாணி ஆயுதங்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாவது பிரிவைச் சேர்ந்த கைக்கோடரிகளில் தழும்புகள் இல்லாது அழகாக ஆக்கப்பட்டமையால், இவை மரம் அல்லது எலும்புச் சம்மட்டிகளால் அடித்து ஆக்கப்பட்டவையாகத் தெரிகிறது. இவை வளர்ச்சியடைந்த ‘அச்சூலியன்’ வகை ஆயுதங்களாகக் கொள்ளப்படுகின்றன.

வடமதுரையில் 1966-67ஆம் ஆண்டுகளில் கே.டி. பனர்ஜி மேற்கொண்ட அகழ்வுகளில் நில அடுக்கமைவின் வரிசைப்படி (Stratigraphic Sequence), நிலத்தின் மேற்பகுதி இரும்பகக் களிமண்ணால் ஆனது. அடுத்த அடுக்கு களிமண்ணும் குவாட்ஸ் கற்பாளங்களும் கொண்டது. இந்த அடுக்கில் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளிலுள்ள அச்சூலியன் வகைக் கற்கருவிகள் – புத்தம் புதிய நிலைகளில் – கண்டெடுக்கப்பட்டன. இரண்டாவது அடுக்கின் கீழே கற்பாளங்களும் சரளைக் கற்களும் களிமண்ணுடனும் மணலுடனும் கலந்த நிலையில் காணப்பட்டன. இந்த அடுக்கில் சில ஆரம்பகால அச்சூலியன் வகைக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன (Ramachandran, K.S. 1980: 23-24).

மற்றைய தமிழக மையங்கள்

கற்கால மனிதன் வாழ்ந்த குகைகள் பல தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள குடியம் குகை குறிப்பிடத்தக்கது. இங்கே கே.டி. பனர்ஜி தலைமையில் 1962-63, 1963-64ஆம் ஆண்டுகளில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது மூன்று அகழ்வாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. முதலாவது அகழ்வுக் குழியில் பல அளவிலான கைக்கோடரிகள், வெட்டுக் கருவிகள், பிந்திய அச்சூலியன் பாணிக் கருவிகள் ஆகியன கிடைத்தன. இரண்டாவது அகழ்வாய்வுக் குழியில் கூழாங்கற்களிலமைந்த கருவிகள், இருபக்க முனைகளைக் கொண்ட கற்றகடுகள், செதுக்கல் கருவிகள் ஆகியன வெளிவந்தன. மூன்றாவது அகழ்வாய்வுக் குழி கிருஷ்ணபுரம் என்ற ஊருக்கருகில் அமைக்கப்பட்டது. இதில் அச்சூலியன் பாணியிலமைந்த கருவிகளோடு கூர்க்கருவிகள், செதுக்கல் கருவிகள், செதில் கருவிகள், தட்டு வடிவக் கருவிகள் (Discoids), வெட்டுதல் கருவிகள் ஆகியன கிடைத்துள்ளன. இவை பளிங்குக் கற்களினால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது (சிற்றம்பலம், சி.க. 1999: 41; இராசவேலு – திருமூர்த்தி 1995; Ramachandran, K.S. 1980: 22).

குடியம் குகையில் கீழைப் பழங்கற்கால, மத்திய பழங்கற்கால, மேலைப் பழங்கற்கால ஆயுதங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டாலும், மனிதன் தொடர்ச்சியாக இக்குகையில் வாழ்ந்ததற்கான எச்சங்கள் காணப்படவில்லை (Allchin, B. & F.R. 1982). இது தமிழகத்தில் மட்டும் காணப்படும் அம்சமன்று. பொதுவாக முழு இந்தியாவிலும் இக்காலக் கருவிகள் குகைகளில் காணப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக இவற்றில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை. பெரும்பாலும் இடைக்கற்காலத்திற்குப் பின்னர்தான் மனிதன் நிரந்தரமாகக் குகைகளில் வாழப் பழகிக் கொண்டான் என்பதை தற்போதைய ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1999: 41).

நெய்வேலியிலும் கே.டி. பனர்ஜி 1962-63, 1963-64ஆம் ஆண்டுகளில் அகழாய்வை மேற்கொண்டிருந்தார். அச்சமயம் அச்சூலியன்’ பாணியிலமைந்த கைக்கோடரிகள், வெட்டுக் கருவிகள், கூர்க்கருவிகள் ஆகியனவற்றோடு மத்திய பழங்கற்காலக் கருவிகளும் கிடைத்தன. இவ்வாறே பூண்டியிலும் கே.டி. பனர்ஜி 1965ஆம் ஆண்டில் அகழ்வை மேற்கொண்ட போது அச்சூலியன் பாணியிலமைந்த பிற்கால கீழைப் பழங்கற்காலக் கருவிகளோடு மத்திய பழங்கற்காலக் கருவிகளும் வெளிவந்தன (இராசவேலு, சு., திருமூர்த்தி, கோ. 1995: 11). அவரது கள ஆய்வின் போது இம்மாவட்டத்திலுள்ள பரந்தியூர், வடியூர், அரம்பாக்கம், கிருஷ்ணபுரம், ரங்கபுரம், அம்மம்பாக்கம், கொல்லாப்பாளையம், கம்ம வாரிப்பாளையம், குஞ்சரம், நாராயணபுரம், ராஜபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய இடங்களிலும் பழையகற்காலக் கருவிகள் கிடைத்தன (சிற்றம்பலம், சி.க. 1999: 42).

வட ஆர்க்காடு மாவட்டத்தின் பழைய கற்கால மையங்களாக அம்பரிசபுரம், அரும்பாக்கம், சென்னாசமுத்திரம், களத்தூர், கனியனூர், கீழ்வெண்பாக்கம், முசிறி, நாகவேடு, பகவெலி, தக்கோலம், திருமால்பூர், வன்னியன் சத்திரம் என்பன இனங்காணப்பட்டுள்ளன (Rajan, K. 1997: 262-273).

1887இல் புறூஸ்புற், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பர்கூருக்கு அண்மித்துள்ள ஒரு பகுதியில் பழங்கற்காலக் கருவிகளைக் கண்டுபிடித்தார். 1960களில் இப்பகுதியில் கள ஆய்வை மேற்கொண்ட பி. நரசிம்மையா பழையகற்காலக் கருவிகளை இனங்கண்டார். இங்குள்ள வரதனாப் பள்ளியிலும் பழையகற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன (Rajan, K. 1997: 111).

தஞ்சாவூர் மாவட்டத்திலமைந்த தஞ்சாவூர், அத்திரம்பட்டினம், மதுரை மாவட்டத்திலமைந்த அவியூர், புதுப்பட்டி ஆகிய இடங்களிலும் பழையகற்காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த கல்லாயுதங்களின் அடர்த்தியையும் எண்ணிக்கையையும் பார்க்கும் போது, இவை வட தமிழகத்திலேயே செறிந்து காணப்படுகின்றன. தஞ்சாவூர், திருச்சி, மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இவை மிகமிக அரிதாகவே காணப்படுகின்றன. இக்காலத்தில் பெருமளவுக்கு தென், கிழக்குத் தமிழகப் பகுதிகளில் மனித நடமாட்டம் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது (Raman, K.V. 1969, 1970).

தமிழக அகழ்வுகளில் கண்டெடுத்த கீழைப் பழங்கற்காலக் கற்கருவிகள். நன்றி: National Geographic.

உய்த்துணர்வு (Inference)

கீழைப் பழங்காலத்தில் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த மக்கள் ஹோமோ இரக்டஸ் இன மக்களாவர். இவர்கள் ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து மேற்கு ஆசியா வழியாக மேற்கு மலைத் தொடரில் உள்ள போலன் கணவாய், கைபர் கணவாய் போன்ற கணவாய்கள் வழியாக இந்திய உபகண்டத்திற்குள் நுழைந்து – இந்தியாவின் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை – உணவு கிடைக்கும் இடங்களைத் தேடி இடம்பெயர்ந்தவர்கள். கீழைப் பழங்காலக் கருவிகளின் அடர்த்தியும், பரவலும் அவர்களின் பெயர்ச்சிப் பாதையைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் சில பகுதிகளில் இக்காலக் கருவிகள் அருகிக் காணப்படுவதற்கு இத்துறையில் போதிய அளவு ஆய்வுகள் இடம்பெறாதது ஒரு காரணமாக இருந்தபோதிலும், இப்பகுதியில் இக்கருவிகள் செய்வதற்கான ‘குவாட்ஸைட்’ கல்லின வகை காணப்படாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அக்காலத்தில் மூலப்பொருளை மையமாக வைத்தே மனித நடமாட்டம் நடைபெற்றது.

கைக்கோடரிகளைப் பயன்படுத்திய ஹோமோ இரக்டஸ் இன மனிதர்கள் அனைவரும் இக்கருவிகளோடு இந்தியாவை வந்தடைந்தார்களா, அல்லது இவர்களில் பின்னர் வந்த கூட்டத்தினர் கொண்டு வந்த கருவிகளை மாதிரியாகக் கொண்டு இங்கே ஏற்கனவே வாழ்ந்த மனிதர்கள் இந்த மரபைக் கற்றுக் கொண்டார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயம். உலகெங்கும் காணப்படும் அச்சூலியன் வகைக் கோடரிகளிடையே காணப்படும் ஒற்றுமையை ஆதாரமாக வைத்து, ஆபிரிக்காவிலிருந்தே பழையகற்கால மனிதன் இக்கருவிகளுடன் உலகெங்கும் பரவினான் என்ற கருத்து முந்தைய ஆய்வாளர்களிடையே நிலவியது. சமீபகால ஆய்வுகள், ஆங்காங்கே வாழ்ந்த மனிதக் கூட்டத்தினர் இத்தகைய மரபைக் கற்று, தாங்களே அந்தப் பாணியில் கற்கருவிகளைத் தயாரித்தார்கள் என்பதை விளக்குகின்றன.

கிழக்காசியாவில் காணப்படும் பழங்கற்காலக் கற்கருவிகளினிடையே அச்சூலியன் வகைக் கருவிகள் காணப்படாமைக்கு பின்வரும் விளக்கம் தரப்படுகிறது: ஆபிரிக்காவிலிருந்து ஹோமோ இரக்டஸ் மனிதர்களது இடப்பெயர்ச்சி இரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி, ஏறக்குறைய ஒரு மில்லியன் ஆண்டுகளாகக் காலத்திற்குக் காலம் நடைபெற்றிருக்கிறது. அச்சூலியன் மரபுக் கருவிகள் 1.5 மில்லியன் காலப்பகுதியில்தான் ஆபிரிக்கக் கற்கால மக்களிடையே பரவியிருக்கிறது. அதற்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் இக்கருவிகள் பற்றி அறிந்திருக்கவில்லை.

அக்காலகட்டத்தில் ஆபிரிக்காவிலிருந்து மக்கள் கால்நடையாக, தலைமுறை தலைமுறையாக, நீண்ட தொலைதூரங்களுக்கு இடம்பெயர்ந்திருப்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. 1891ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு (ஜாவா மனிதன்), இற்றைக்கு 1,490,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆபிரிக்க ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) மனிதனின் மண்டையோடு என உடற்கூறு ஆய்வுகள் திட்டமாகத் தெரிவிக்கின்றன (Encyclopaedia Britannica: Java Man).

காலக்கணிப்பு

கடந்த காலங்களில் இந்தியாவின் கீழைப் பழங்கற்கால ஆரம்பகாலம் அச்சூலியன் வகை ஆயுதங்களின் வயதைக் கொண்டே கணிக்கப்பட்டது. அறிவியல் ரீதியிலான கதிரியக்கக் காலக்கணிப்புகள் (Radiometric Datings) மேற்கொள்ளப்படாத காலத்தில், இந்திய உபகண்டத்தில் புரூஸ் புட் கண்டெடுத்த அச்சூலியன் வகைக் கருவிகள் அதே வகையான ஆபிரிக்கக் கருவிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு (Cross-Matching Technique), 1.5 மில்லியன் (15 லட்சம்) ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஒப்பீட்டு ரீதியாகக் கணிக்கப்பட்டது.  

அத்திரம்பாக்கத்தில் 1863இல் புரூஸ் புட் கண்டெடுத்த ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் உபயோகித்த கல்லாயுதங்கள். இவற்றில் கண்ட அச்சூலியன் வகைக் கோடரிகளைக் கொண்டு இக்கற்கருவிகளின் வயது 1.5 மில்லியன் எனக் கணிக்கப்பட்டது.

சமீபகால ஆய்வுகள் இந்தியக் கீழைப் பழங்கற்காலம் இற்றைக்கு இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானதாகத் தெரிவிக்கின்றன. கதிரியக்கக் காலக் கணிப்புகளின்படி, இந்தியக் கீழைப் பழங்கற்காலம் இ.மு. 380,000 ஆண்டுக்காலம் வரை நீடித்ததாக சாந்தி-பப்பு குழுவினரும் (Kumar, Akilesh et al. 2003; Tariach, G. 2018), இ.மு. 125,000 ஆண்டுக்காலம் வரை நீடித்திருந்ததாக மிஷ்ராவும் (Mishra, S. et al. 1995a; 1995b) கூறியுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் போறி (Bori) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அச்சூலியன் வகைக் கோடரி, பொட்டாசியம்-ஆர்கன் கதிரியக்கத் திகதிக்கணிப்புப்படி (K/Ar Dating), இ.மு. 670,000 ஆண்டிற்கு உரியதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

கீழைப்பழங்கால மக்களின் வாழ்வியல்

கீழைப் பழங்காலத்தில் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த மக்கள் ஹோமோ இரக்டஸ் மனித இனங்களைச் சேர்ந்தவராவர். இவர்களிடம் பேச்சு வன்மை இருக்கவில்லை. உறுமல்களாலும், சைகைகளாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கும், கூட்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதற்கும், ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்க்கை நடத்துவதற்கும், மூலக் கற்பாளங்களைத் தெரிவு செய்து அதிலிருந்து தேவையான கல்லாயுதங்களையும் கருவிகளையும் செய்வதற்கும் வேண்டிய அறிவுத் திறனும் ஆற்றலும் அவர்களிடையே இருந்தது.

உணவு

கீழைப்பழங்கால மக்கள் தங்கள் உணவிற்காகக் கல்லாயுதங்களைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியும், கிழங்குகள், பழங்கள், விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தும் உட்கொண்டார்கள். மற்றைய மிருகங்கள் கொன்றுபோட்ட விலங்குகளின் இறைச்சிகளையும் எலும்புகளையும் கூட உட்கொண்டிருக்கலாம். கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்தவர்கள் மீன்களையும் உணவாகக் கொண்டார்கள்.

நெருப்பு

ஹோமோ இரக்டஸ் மக்கள் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த நாட்களிலேயே நெருப்பின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். காய்ந்த குச்சிகளை ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பை உண்டாக்கும் கலையை அறிந்திருந்தார்கள். வேட்டையாடிய விலங்கினங்களைக் கற்கத்திகளால் வெட்டி, கற்தட்டுகளில் போட்டும், மரக் குச்சிகளில் இணைத்தும் நெருப்பில் வாட்டி உட்கொண்டார்கள். இதன் காரணமாகப் பச்சை ஊனிலிருந்து உண்டாகக்கூடிய நோய்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொண்டார்கள். திறந்த வெளிகளில் வாழ்ந்தவர்கள் இரவு நேரங்களில் நெருப்பை எரித்து, அதைச் சுற்றிவர உறங்கியதன் மூலம் கொடிய மிருகங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.

வதிவிடங்கள்

இம்மக்கள் திறந்த வெளிகளிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், மலைக்குகைகளிலும், பாறை ஒதுக்குகளிலும் வாழ்ந்து வந்திருப்பதை அவ்விடங்களில் காணப்படும் அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களைக் கொண்டு அறிய முடிகிறது. மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பேத்கா குகைகளிலும், சென்னைக்கு சமீபமாக உள்ள குடியம் குகைகளிலும் பல நூற்றாண்டுகளாக மக்கள் குடிகொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

தெப்பம் – கட்டுமரம்

இற்றைக்கு 800,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மரங்களைச் சேர்த்து, கயிற்றால் கட்டி, அதைக் கட்டுமரமாக மிதக்கவிட்டு ஆற்றைக் கடக்கவும், கரைக் கடல்களில் சென்று கூராக்கப்பட்ட கம்புகளைக் கொண்டு மீன் பிடிக்கவும் கீழைப்பழங்கால மக்கள் அறிந்திருந்தார்கள்.

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்