இலங்கை (Sri Lanka)
மத்திய பழங்கற்காலத்திலும், இடைக்கற்காலத்திலும் பனியுகம் பரவியிருந்த பொழுதில் இலங்கை, தென்னாசியாவின் தென்முனையின் நிலநீட்சியாகவே இருந்தது. இலங்கையின் கடற்கரை வழியாகவே ஆபிரிக்காவிலிருந்து முதல் தடவையாகப் புலம்பெயர்ந்த நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசியாவையும், பின்னர் அவுஸ்திரேலியாவையும் சென்றடைந்தார்கள். வியப்பூட்டும் வகையில் தென் ஆசியா முழுவதிலும் இலங்கையில் மட்டும்தான் இடைக்கற்கால மக்களின் எலும்புக்கூடுகள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கையின் இடைக்கற்காலம் 1907ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சரஸின் சகோதரர்களாலும் (Sarasin Brothers), 1911ஆம் ஆண்டில் செலிக்மான்களாலும் (Seligmans), 1913-14ஆம் ஆண்டுகளில் C. ஹாட்லியினாலும், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் P.E.P. தெரணியகலவினாலும் ஆய்வு செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சரஸின் சகோதரர்களும், செலிக்மான்களும் தங்கள் அகழ்வுகளை குகைகளிலே மேற்கொண்டார்கள். செலிக்மான்கள் ஒரு வேடர் குடும்பம் வாழ்ந்த குகையில் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். இந்த இரு குழுக்களும் குவாட்ஸ் கற்களினால் செய்யப்பட்ட நுண்கற்களையும், அத்தோடு பெரிய கல்லாயுதங்களான பலவகையான சுத்தியல்களையும், உரல் கற்களையும் கண்டெடுத்தார்கள். எல்லா மட்டங்களிலும் மிருகங்களின் எலும்புகள் காணப்பட்டன. மேல் மட்டங்களில் பெருந்தொகையான மட்பாண்டங்கள் காணப்பட்டன. மேல் மட்டத்தில் இரும்புப் பொருட்கள் காணப்பட்ட தளத்தில் கற்கருவிகள் அருகியே காணப்பட்டன (Allchin, B. & Allchin, R. 1982: 88).

இற்றைக்கு 33,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடைக்கற்காலக் கருவிகளை உபயோகித்த மக்கள் வசித்த பாததொம்ப-லென குகை. படம் நன்றி: Lankalibrary.com.
சரஸின் சகோதரர்களும், செலிக்மான்களும் இலங்கையின் தென்பகுதி மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த வேடர்கள் பழைய கற்கால மக்களின் நேரடி வம்சாவளியினர் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். சிலர் இதற்கு ஐயம் தெரிவித்த போதிலும் பிற்காலத்தில் விவசாயமும், தொழிற்சாலைகளும் வரும்வரை, தொடர்ச்சியாக வேட்டையாடி உணவு சேகரித்து வந்த குகை வாழ்க்கைப் பண்பாடு, இந்த வேடர்களிடம் நீண்ட காலம் நிலைபெற்றிருந்தது என்பதில் ஐயப்பாடு இல்லை (Allchin, B. & Allchin, R. 1982: 89).
1913-14ஆம் ஆண்டுகளில் பண்டாரவளையில் ஹாட்லி மேற்கொண்ட அகழ்வுகளில் குவாட்ஸ் கற்களினாலான 4,768 கற்கருவிகளைக் கண்டெடுத்தார். இவற்றுள் பிராண்டிகள், செதிள்கள், பிறைகள், பாதிப் பிறைகள், நீள்சதுரங்கள், வளைகூர்கள், துளைப்பிகள், அம்பு நுனிகள் என்பன அடங்கும். அதிகமான கருவிகள் பிறைகளும், அகன்ற அம்புநுனிகளுமாகும். இவை சில சென்ரிமீட்டரிலிருந்து அரை சென்ரிமீட்டருக்கும் குறைவான நுண்கற்களாகும்.
இலங்கையில் பாகியன்-லென குகையில் (Fa-hien Lena) கண்டெடுத்த நுண்கல் இ.மு. 45,000 ஆண்டையும், கித்துல்கல என்ற இடத்திலுள்ள பெலி-லென (Beli-Lene) குகையிலிருந்து பெற்ற நுண்கல் இ.மு. 45,000 ஆண்டையும், பாததொம்ப-லென (Batadomba-Lene) குகையிலிருந்து பெற்ற நுண்கல் இ.மு. 36,000 ஆண்டுக் காலத்தையும் காட்டுகின்றன. இதன்படி இலங்கையின் இடைக்கற்காலம் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் 30-20,000 ஆண்டுகள் முன்னதாக ஆரம்பமாகியிருக்கிறது (Wedage et. al 2019, 2020; Deraniyagala, S.U. 1992, 2004).

இலங்கையில் கித்துல்கல என்ற இடத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட பெலி-லென குகை. இக்குகையினுள்ளே இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் களுத்துறை வட்டாரத்திலுள்ள பாகியன் குகை (பாகியன்-லென). பொ.யு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கை வந்த சீன யாத்திரிகர் பாகியன் இந்தக் குகையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. 1986ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குவாட்ஸ், சேட் கற்களினாலான நுண்கற் கருவிகளும், 38,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன. நன்றி: Wedage et. al 2019, 2020.

இலங்கையில் பாகியன்-லென குகையில் கண்டெடுத்த 45,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற் கருவிகள்.
இரணைமடு தேரி மேடுகள்
வடஇலங்கையில் முல்லைத்தீவின் வடபகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காக பரந்தன், பூநகரி, மாந்தை, புத்தளம், குதிரைமலை வரை கடற்கரையோரமாகப் பரந்திருக்கும் தேரி மேடு இரணைமடு அமைப்பு (Iranamadu Formation) என அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுக்கால தட்பவெப்பத்தில் (சீதோஷ்ண) சரளைக் கற்கள் சிதைவடைந்து, அதிலுள்ள இரும்புத்தாது பரவியதனால், பரந்து கிடக்கும் சரளைக்கற்களுக்கு (Gravel) மேலுள்ள களிமண் கலந்த இம்மணல் மேடுகள் சிவப்புநிறமாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த இரணைமடு மணல் மேடுகளில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் இடைக்கற்காலம்வரை பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவின் நிலநீட்சியாக இலங்கை இருந்த காலப்பகுதியில், தமிழ்நாட்டின் கிழக்குக் கரையோரமாகக் காணப்படும் தேரி மணற்குன்றுகளின் தொடர்ச்சியாக இத்தேரி மேடுகள் இருந்ததாகக் கருதப்படுகின்றன.
இக்கால மக்கள் தமது ஆகாரத்திற்காக நாடோடிகளாக இடம்விட்டு இடம் சென்று வேட்டையாடியும், கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் மீன்பிடித்தும் வாழ்ந்தமையால் இவர்கள் விட்டுச்சென்ற கற்கருவிகள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் காணப்படுகின்றன.
இரணைமடு தேரியில் குவாட்ஸ் கற்களினாலான பலவகையான நுண்கற் கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையாக ஆற்றோரங்களிலும் மற்றிடங்களிலும் பாறையாகக் காணப்பட்ட ‘குவாட்ஸ்’ (Quartz) கற்களைக் கொண்டே இக்கருவிகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டன. இப்பாறைகளை நெருப்பைக் கொண்டு சூடாக்கி பின்னர் அவற்றின் மேல் நீரை ஊற்றியோ அல்லது மற்றொரு பெருங்கல்லால் அடித்தோ பிளக்க வைத்து, பின்னர் அவற்றை உடைத்து வேண்டிய ஆயுதங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள். இவ்வாறு பாறையை உடைக்கும்போது வெடித்துச் சிதறும் செதிள்கள் (Flake Tools) மிகவும் கூர்மையாக இருப்பதனால் சவரம் செய்வதற்கும் நுணுக்கமாக வெட்டுவதற்கும் உபயோகப்படுத்தப்பட்டன. இந்நுண்கற் கருவிகள் இ.மு. 28,000 ஆண்டிற்குரியதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன (Deraniyagala, S.U. 1992).

இலங்கையில் வடகிழக்கே முல்லைத்தீவிலிருந்து மேற்கே குதிரைமலை வரை தொடர்ந்து செல்லும் தேரி மணற்தொடர். இது தமிழகத்தின் தென்கிழக்கே காணப்படும் தேரிக்குன்றுகளின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. இலங்கையில் ஆதி மனிதர்கள் உபயோகித்த கற்கருவிகள் இந்தச் செம்மணற் குன்றுகளினுள்ளே காணப்படுகின்றன. நன்றி: S.U. Deraniyagala.

இலங்கையில் இரணைமடு தேரியில் கண்டெடுத்த நுண்கற் கருவிகள். காலம் இ.மு. 28,000. நன்றி: S.U. Deraniyagala.
தென் இலங்கை ஆய்வுகள்
1940ஆம், 1950ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் பலாங்கொடைப் பகுதியில் மேலாய்வுகளையும் அகழாய்வுகளையும் நடத்திய கலாநிதி P.E.P. தெரணியகல நவீன மனிதனுக்குரிய எலும்புகளைக் கண்டெடுத்தார். இந்த மனிதனுக்கு அவர் ‘ஹோமோ சேப்பியன்ஸ் பலாங்கொடெனஸிஸ்’ எனப் பெயரிட்டு, இந்தப் பண்பாட்டிற்கு பலாங்கொடைப் பண்பாடு என்ற பெயரையும் கொடுத்திருந்தார் (Deraniyagala, P.E.P. 1945: 140). இந்தப் பண்பாடு இடைக்கற்காலப் பண்புகளையும், புதிய கற்காலப் பண்புகளையும் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம்.
பலாங்கொடைப் பண்பாட்டின் இரு காலகட்டங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். முந்தைய பெல்லன்-பன்டி பண்பாட்டுக் கட்டத்தில் நுண்கற்களும் கூழாங்கற் சுத்தியல்களும் (Pebble Hammers) பாவனையிலிருந்தன. இந்த வேட்டைச் சமூகத்தில் மட்கலன்கள் பாவனையில் இருக்கவில்லை. இந்த மக்கள் கூட்டம் தன்னினந் தின்னிகள் (Cannibal Race) என அவர் கருதினார் (Deraniyagala, P.E.P., 1940: 351-373; 1958: 57-64).
இப்பண்பாட்டின் இரண்டாவது காலகட்டத்தை அவர் உடுப்பியன் பண்பாட்டுக் கட்டம் என அழைத்தார். இக்கட்டத்தில் குழிகொண்ட கூழாங்கற் சுத்தியல்களும் மட்கலன்களும் உபயோகத்தில் இருந்தன. மட்கலன்கள் முதலில் கரங்களால் செய்யப்பட்டு வெயிலில் சுடவைக்கப்பட்டிருந்தன. அடுத்த கட்டத்தில் அவை சூளையில் சுடப்பட்டு கறுப்பு, சிவப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன (Deraniyagala, P.E.P. 1957: 13). அவர் கூறிய கறுப்பு-சிவப்பு நிறங்கள் தொல்லியலாளர் சேர் மோட்டிமர் வீலர் எடுத்துக்காட்டிய ‘கலன்களைப் புரட்டிப் போட்டு சூளையில் சுடவைத்த தொழில்நுட்பத்தினால்’ (Inverted Firing Technique) ஏற்பட்டிருக்கலாம்.
கலாநிதி தெரணியகல பலாங்கொடை மனிதனை (Homo Sapiens Balangodensis) பின்வருமாறு வர்ணித்திருந்தார்: “இம்மனிதர்கள் நீண்ட கபாலத்தைக் கொண்டவர்கள் (Dolichocephalic). ஆண்கள் 5 அடி 11 அங்குல உயரம் கொண்டவர்களாகவும், பெண்கள் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கால்களின் நீளத்தோடு ஒப்பிடுகையில் உடல் உயரம் குறைவானது. இடுப்பு எலும்பு (இக்கால மனிதர்களின் எலும்போடு) ஒப்பிடுகையில் சிறியது. இமை விளிம்புகள் தடித்துப் பெரிய, ஆனால் ஆழம் குறைந்த கண் குழிகளுக்கு மேலே நீண்டிருந்தன. மேல்வாய் அண்ணம் இக்கால மனிதர்களை விட அகலமாக இருந்தது” (Deraniyagala, P.E.P. 1945: 140).
இந்த இன மக்கள் மிகப்பெரிய யானை, எருமை, கரடி ஆகிய மிருகங்களை வேட்டையாடினார்கள். அவர்களின் சமையல் திடர்களில் இம்மிருகங்களின் எலும்புகளோடு காட்டுப் பன்றி, மான், குரங்கு, முள்ளம்பன்றி, பாறை அணில் ஆகியவற்றின் எலும்புகளும் காணப்படுகின்றன (Deraniyagala, P.E.P. 1958: 73).

பலாங்கொடை மனிதன் – ஓர் ஓவியரின் எண்ணப்பதிவு. நன்றி: Dr. P.E.P. Deraniyagala.
பலாங்கொடை மனிதர்கள் உபயோகித்த கற்கருவிகள் இடைக்கற்கால-புதிய கற்காலத்திற்குரியவை. வெட்டுக் கற்கள், கற்செதிள்கள், துளையிட்ட கத்திகள் என்பன காணப்பட்டன. இவை குவாட்ஸ் கற்களினால் ஆனவை. சிறுகற்கள் 5-6 செ.மீ. நீளமானவை. இந்த இன மக்கள் பல தரப்பட்ட கல்லாயுதங்களை உபயோகித்திருக்கிறார்கள். கூழாங்கற் சுத்தியல்கள், கவண் கொண்டு வீசும் கற்கள் என்பன இவற்றில் அடங்கும்.
இவை தவிர, எலும்பினாலான ஊதுகுழல்-சிறுவேல் நுனிகள் (Blowpipe Darts), மிருக எலும்புகளினாலும், கொம்புகளினாலும் செய்யப்பட்ட கனதியான ஆயுதங்கள், நீண்ட கம்புகளில் பொருத்தப்பட்ட மான் கொம்புகள், யானையின் எலும்புகளின் கூராக்கப்பட்ட முக்கோண அலகுகள் என்பன கண்டெடுக்கப்பட்டன (Deraniyagala, P.E.P. 1958: 73).

பலாங்கொடை மனிதன் உபயோகித்த சில கற்கருவிகளும், உணவின் எச்சங்களும். நன்றி: Dr. P.E.P. Deraniyagala.
இலங்கையில் நவீன மனிதர்களின் கதிரியக்கப் பகுப்பாய்வு (Radiometric Studies of Homo Sapiens in Sri Lanka)
தென்னாசியாவில் உடற்கூற்றமைப்புச் சார்ந்த ஆதிகால ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களைக் காண்பது, இலங்கையின் குகைகளில் காணப்படும் அவர்களின் எலும்புகளிலேயாகும். இந்த எலும்புகளின் கதிரியக்கக்-கரிம திகதிகள் இ.மு. (இற்றைக்கு முன்) 38,000 ஆண்டுகளுக்கு உரியவையாகக் கணிக்கப்பெற்றுள்ளன (Deraniyagala, S.U. 1992). இந்நாட்டில் ஆரம்பகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான நம்பகமான ஆதாரங்கள், கடற்கரையோரமாகப் பரந்து கிடக்கும் ‘இரணைமடு உருவாக்கம்’ (Iranamadu Formation) எனப்படும் வண்டல் கொண்ட சரளைக்கற்களினிடையிலும் மணல் மேடுகளினிடையிலும் காணப்படும் கற்கருவிகளும், அவற்றின் திகதிக் கணிப்புகளுமாகும். பந்தல என்ற இடத்திலிருந்து பெறப்பட்ட இரு கற்கருவிகளின் வெப்பூட்டு-ஒளிக்கதிர்வீச்சுக் காலக்கணிப்பு (Thermoluminescence Dates) இ.மு. 74,000, இ.மு. 64,000 ஆகிய ஆண்டுகளைத் தந்திருக்கிறது (Singhvi et al. 1986).
இலங்கையில் காணப்படும் பல குகைகளில் மிகப் பழைமையான மனித எச்சங்கள் காணப்படுவது ‘பாகியன்’ குகையிலாகும். இது தாழ்நிலமும் மழைவீழ்ச்சியும் கொண்ட களுத்துறை வட்டாரத்தில் அமைந்திருக்கிறது. இயற்கையாக அமைந்த இக்குகையில் நீண்ட காலத்திற்கு ஆதி மனிதர்களும், பின்னர் பல நூற்றாண்டுகளுக்கு மதகுருமார்களும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் (Kennedy, K.A.R. 2000).
இக்குகையினுள்ளே செதிள்களாக உதிர்ந்து கிடந்த பாறை நிலத்தின் (Desquamated Rock Floor) மத்தியிலும் உள்ளேயும் A, B என அடையாளப்படுத்தப்பட்ட இரு இடங்களில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குகையின் உட்பகுதியில், B என அடையாளப்படுத்தப்பட்ட குழியில் மக்களின் உறைவிடப் படிவுப்பொருள்களினிடையே கரித்துண்டுகள், நுண்கற்கள், மிருக, மனித எலும்புகள் காணப்பட்டன. குகையின் இன்றைய நில மட்டத்தின் கீழே உறைவிட மட்டங்களும், அதன் கீழே அடிமட்டப் பாறையும் காணப்பட்டன. கரித்துண்டுகளின் கதிரியக்கப் பகுப்பாய்வுத் திகதிக் கணிப்புகள் (Radiometric Datings) இ.மு. 54,000த்திலிருந்து இ.மு. 34,000 ஆண்டுகள் வரை குடியிருப்புகளைக் காட்டி நிற்கின்றன. இக்காலக் கணிப்பு இலங்கையின் மற்றைய தொல்லியல் தலங்களின் காலக் கணிப்புகளுடன் ஒத்திருக்கிறது (Kennedy, K.A.R. and Deraniyagala, S.U. 1989; Deraniyagala, S.U. 1992b). இவற்றுள் பல காலத்திற்குரிய பல வகையான எலும்புகள் காணப்படுகின்றன. அதில் ஒரு குழந்தையின் எலும்பு இ.மு. 30,060±380 ஆண்டுகளுக்கு உரியதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது (Kennedy, K.A.R. 2000).
மொத்தத்தில், புலத்சிங்கலவிலுள்ள பாகியன்-லெனவில் காணப்பட்ட உடற்கூற்றமைப்புச் சார்ந்த ஆதிகால ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் எலும்புகள் இ.மு. 38,000 ஆண்டுகளுக்குரியவை என்பதைக் கதிரியக்கப் பகுப்பாய்வு ஆதாரங்கள் காட்டியுள்ளன. இதுவே தென்னாசியா முழுவதிலும் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் மிகப் பழமையான எலும்புகளாகும். இதைத் தொடர்ந்து வருபவை பாததொம்ப-லென (இ.மு. 31,000), பெலி-லென (இ.மு. 30,000), மீண்டும் பாததொம்ப லென (இ.மு. 18,000), மீண்டும் பெலி-லென (இ.மு. 16,000), மீண்டும் பாகியன்-லென (இ.மு. 6,900), பெல்லன்-பன்டி பலஸ்ஸ (இ.மு. 6,500), மீண்டும் பாகியன்-லென (இ.மு. 4,800) என்பனவாகும் (Deraniyagala, S.U.: 1992).
இக்காலக்கணிப்புகளின்படி இற்றைக்கு 38,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து இலங்கையில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் ஆதி-ஆஸ்திரலோயிட் குழுவினர் மட்டுமே என உறுதிப்படுத்தலாம் என்பது ஆய்வாளர் சிரான் தெரணியகலவின் முடிவாகும் (From about 38,000 BP onwards the Proto-Australoid peoples occupying Sri Lanka are described with some confidence, as the only group of Homo sapiens present there). (Deraniyagala, S.U. 1992).
ஆனால், இற்றைக்கு முன் 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாசியாவை வந்தடைந்த ஆதி-ஆஸ்திரலோயிட்டைத் தொடர்ந்து, இற்றைக்கு முன்னர் 45,000 ஆண்டுகள் முதலாக இங்கே வந்த திராவிட மக்களின் முன்னோடிகளான M89, M69, M20, M172 ஆகிய மரபணுக் குறியீடுகளைக் கொண்டவர்கள் − இலங்கை உட்பட − தென்னாசியாவை வந்தடைந்துவிட்டார்கள் என்று நவீன மரபணுவியல் ஆய்வுகள் காட்டியதை ஏற்கனவே சென்ற இயலில் (இயல் 4) பார்த்தோம். இதன்படி இலங்கையில் வாழ்ந்த இடைக்கற்கால மக்கள் அனைவரும் ஆதி-ஆஸ்திரலோயிட் மக்கள் (Proto-Australoid) என்பது தவறான முடிவாகும் (However in the light of modern genetic studies, Dr Deraniyagala’s contention that the Mesolithic population of Sri Lanka were all Proto-Australoids is not true). (Thiagarajah, S. 2011).
பாறை ஓவியங்கள் (Rock Art)
நமது மூதாதையர்கள் விட்டுச் சென்ற முக்கியமான, தனித்தன்மை வாய்ந்த வரலாற்றுச் சின்னம் பாறை ஓவியங்களாகும். தொல் பழங்கால வேட்டைச் சமூகத்தில் மொழிக்குரிய எழுத்துகள் உருவாகுவதற்கு முன்னர், தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக உலகெங்கும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. தொல்லியல் பதிவுகளில் இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகெங்கும் பாறை ஓவியங்கள் தோற்றம் பெற ஆரம்பித்திருப்பதைக் காணலாம். மனித வரலாற்றில் ஹோமோ சேப்பியன்ஸ் ஆகிய நவீன மனிதர்களே இக்கலை வடிவத்தை முதன்முதலாக உருவாக்கியவர்களாவர்.
பாறை ஓவியங்கள் மனித மூளை வளர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வியக்கத்தக்க வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல்காட்சிப் பதிவுகளுமாகும். பாறை ஓவியங்கள் அவற்றை வரைந்த மனிதர்களின் அக உலகத்தைக் காட்டுவதுமல்லாமல், மனிதர்களின் இடப்பெயர்வையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு குகையினுள்ளோ, பாறையிலோ காணப்படும் ஓவியங்கள், அவ்விடத்தில் ஒரு காலத்தில் மக்கள் வாழ்ந்திருந்தமைக்கான அசைக்க முடியாத ஆதாரங்களாகும். மிக ஆதியான ஓவியங்கள் ஐரோப்பாவிலும், சற்றுப் பிற்காலத்தவை ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஐரோப்பிய, இந்தியப் பாறை ஓவியங்கள் குகைகளினுள்ளே வரையப்பட்டமையால் அவை நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இடைக்கற்காலத்தில் மத்திய இந்தியாவின் குகைகளிலும், தங்குபாறை ஒதுக்குகளிலும் தனித்தன்மையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை தனியான உருவங்களையோ அல்லது காட்சியையோ காட்டுவதாக உள்ளன. இவை கோடுகளினாலான வரைபடங்களே ஒழிய தூரிகை ஓவியங்களல்ல என்பது ஆய்வாளர் அல்சினின் கருத்து. இவற்றை வரைந்த சிவப்பு நிறமான அல்லது கறுத்த இரும்புக் கனிப்பொருள் (Haematite) அக்குகைகளினுள்ளே கண்டெடுக்கப்பட்டிருக்கிறது (B. & R. Allchin 1982: 94).
நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பிம்பேத்கா குகைகள் இந்தியாவிலே அதிகமான பாறை ஓவியங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த ஓவியங்களிலே அதிகமாகக் காணப்படுபவை மிருகங்கள்தாம். இவை தனியாகவும் மந்தையாகவும் காணப்படுகின்றன. ஆதம்கார் பாறை ஓவியங்களில் ஒரு காண்டாமிருகத்தை வேட்டையாடும் காட்சி வரையப்பட்டிருக்கிறது. பிம்பேத்கா குகை ஓவியங்களில் காணப்படும் வேட்டையாடும் காட்சிகளில் மிருகங்கள் மந்தை மந்தையாகக் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் அதிக அளவில் அடிக்கடி காணப்படும் மிருகங்களாக மான்களும் மறிமான்களும் (Antelope) காணப்படுகின்றன. இவற்றின் உடல் பருத்தும், கால்களும் கொம்புகளும் நீண்டும் மெலிந்தும் காணப்படுகின்றன. யானைகளும், காண்டாமிருகங்களும் பல ஓவியங்களில் இடம்பெறுகின்றன. இவை தவிர புலிகள், எருமைகள், மாடுகள், குரங்குகள் ஆகிய மிருகங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. வரலாற்றுக் காலத்தில் முக்கியப்படுத்தப்பட்ட குதிரைகள் இந்திய இடைக்கற்காலப் பாறை ஓவியங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது (B. & R. Allchin 1982: 95).
இந்தப் பாறை ஓவியங்களில் காணப்படும் மக்கள் மிருகங்களைக் காட்டிலும் கவர்ச்சிகரமானவர்களாகவும், உயிர்த்துடிப்புள்ளவர்களாகவும் காணப்படுகிறார்கள். அவர்கள் அம்பு, வில்லு, ஈட்டி ஆகிய ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடுபவர்களாகவும், வரிசையில் நின்று நடனமாடுபவர்களாகவும் வரையப்பட்டிருக்கிறார்கள். சில ஓவியங்களில் குடிசைகளும், சுற்றடைப்புகளும் காணப்படுகின்றன. பிம்பேத்கா ஓவியங்களில் ஊதா, கருஞ்சிவப்பு, சுடுமண்நிறம், ஆரஞ்சு நிறம், சிவப்பு, மண்ணிறம் ஆகிய நிறங்கள் உபயோகிக்கப் பட்டிருக்கின்றன (Bridget & Raymond Allchin 1982: 95).
இக்காலப் பகுதியில் அம்பு-வில்லு கொண்டு வேட்டையாடுதலே உணவு பெற்றுக்கொள்வதற்கான முக்கிய வழியாக இருந்தது என்பதை மத்திய இந்தியாவின் ஏராளமான பாறை ஓவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. சிறிய வெட்டுக் கருவிகள், பெருவிரல் நக அளவு பிராண்டிகள், செதுக்கல் கற்கள் என்பன கற்தொழில் உற்பத்தியின் மற்றைய பகுதிகளாகும். மேற்பழங்காலத்தில் உபயோகத்திலிருந்த துளையிட்ட கற்கள் இடைக்கற்காலத்தில் பொதுவான பாவனையிலிருந்தன. தோண்டும் குச்சிகளில் எடைக்காகவும், வலைகளில் மூழ்கிகளாகவும் இவை உபயோகப்படுத்தப்பட்டன. அரைக்கும் கற்கள், பெரிய வெட்டும் கற்கள் என்பன சில இடங்களில் காணப்பட்டன. இவ்வகையான புதிய தொழில்நுட்ப அம்சங்கள் வேட்டையாடுவதிலும், தாவர உணவு சேகரிப்பதிலும் மேம்பட்ட செயல்திறனைக் (Enhanced Efficiency) கொண்டு வந்தன (Misra, V.N. 2001: 499).


நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பிம்பேத்கா குகைகள் இந்தியாவிலே அதிகமான பாறை ஓவியங்களைக் கொண்டிருக்கின்றன. மேலே காணப்படும் பாறை ஓவியம் பொ.ஆ.மு. 12,000ஆம் ஆண்டுக்கு உரியதாகக் கணிக்கப்படுகிறது.

இடைக்கற்கால மனிதர் வேட்டையாடும் காட்சி. மத்திய இந்தியாவில் காணப்படும் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிம்பேத்கா குகை ஓவியம். படம் நன்றி: The New York Times.
தமிழகப் பாறை ஓவியங்கள்
பழங்கால வேட்டைச் சமூகத்தில் பேசும் மொழிக்குரிய எழுத்துகள் உருவாகுவதற்கு முன்னர் தகவல் பரிமாற்றத்தில் ஓவியங்களே காட்சி மொழியாக இருந்து வந்தன. குகைகளிலும், பாறை ஒதுக்குகளிலும் காணப்படும் இவ்வகையான ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சமூகத்தின் வாழ்வியல் சூழலைப் பதிவு செய்துள்ள தொல்காட்சிப் பதிவுகளாகும். தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் குறிஞ்சி, முல்லைப் பகுதிகளிலுள்ள மலைக்குகைகளிலும் குன்றுகளிலும் காணப்படுகின்றன.
தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் சுமார் 80க்கும் மேற்பட்டவை இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவை அதிக அளவில் வெள்ளை நிறத்தினாலும், அடுத்து சிவப்பு நிறத்தினாலும் வரையப்பட்டுள்ளன. சில இடங்களில் வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களும் பாவிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கறுப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களும் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் ஒரே நிறத்திலேயே வரையப்பட்டிருக்கின்றன. கீழ்வாலை, செத்தவரை, அழகர் கோவில், கீழவளவு ஆகிய இடங்களில் ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. சிவப்பு நிறம் − அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு ஆகிய நிலைகளில் காணப்படுகிறது.
ஓரமணகுண்டா, மகாராஜகடை, மல்லசத்திரம் போன்ற இடங்களில் ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமே உள்ளன. வெள்ளை நிறம் சுண்ணாம்புக் கல், வெண் களிமண் போன்றவற்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. செத்தவரை, கரிக்கையூர் போன்ற இடங்களில் காணப்படும் ஓவியங்களில் வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உசிலம்பட்டி, பழனி பகுதிகளில் வெள்ளை, கருப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (காந்திராஜன், க.த. 2018: 82).
தமிழகப் பாறை ஓவியங்களில் வரையப்பட்ட கருப்பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் ஓவியங்களைப் போல பல்வேறு காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. பெரும்பாலானவை விலங்குகளை வேட்டையாடும் ஓவியங்கள். விலங்குகளில் மான்கள், மாடுகள், யானை, நாய், உடும்பு, ஆடு, பன்றி, புலி, சிறுத்தை, நரி, கழுதை, பாம்பு, மீன்கள், பறவைகள் காணப்படுகின்றன. இவை தவிர மரங்கள், சண்டைக் காட்சிகள், சடங்கு மற்றும் சமூக நிகழ்வுகள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உருவங்களும் அதிக அளவில் உள்ளன (காந்திராஜன், க.த. 2018: 83).
தமிழகத்தில் காணப்படும் சில பாறை ஓவியங்கள் ஒரே சீராக இல்லாமல் இடத்துக்கு இடம் வரைந்த கலைஞர்களுக்குத் தகுந்தாற்போல் தனித்துவமாக உள்ளன. பல பாறை ஓவியங்களில் மனிதர்கள் குச்சி வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றனர். இக்குச்சி வடிவ கை, கால், உடல்களோடு அம்பு, வில், கேடயம், பிற ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் வரையப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் இதுபோன்ற குச்சி வடிவக் கோட்டோவியங்கள் இடைக்கற்காலத்திற்கு உரியன என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதே சமயம் தமிழகத்தில் காணப்படும் இத்தகைய ஓவியங்கள் சற்றுப் பிற்காலத்திற்குரிய, பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன (காந்திராஜன், க.த. 2018: 83).
முற்கால ஓவியங்களில் ‘X-ரே’ ஓவியங்கள் எனப்படும் ஓவிய முறையில், மிருகங்களின் உள் உறுப்புகள் தெரியும்படியாக வரையும் முறை உள்ளது. இத்தகைய ஓவியங்கள் இரு வகைப்படும். முதலாவது வகையில் மிருகங்களின் உள் உறுப்புகள் தத்ரூபமாக இருக்கும். இதனை வரையும் ஓவியர்கள் விலங்குகளின் உள்ளுறுப்புகள் குறித்து நல்ல அறிவைப் பெற்றிருத்தல் வேண்டும்.
சில ஓவியங்களில் கர்ப்பமான மிருகங்களின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் வரையப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் ஆலம்பாடி, செத்தவரை போன்ற இடங்களில் இம்மாதிரி ஓவியங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது வகையில் மிருகங்களின் உள் உறுப்புகள் எளிமையாக்கப்பட்டு அலங்காரக் கோடுகளாக வரையப்பட்டுள்ளன (காந்திராஜன், க.த. 2018: 84).
செத்தவரையில் காணப்படும் ஓர் ஓவியத்தில் விலங்கொன்றினைத் தீயில் வாட்டுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இக்காட்சியின் மூலம் நம் முன்னோர்கள் வேட்டையாடிய விலங்கைத் தீயில் வாட்டி எவ்வாறு தமது உணவைத் தயார் செய்தார்கள் என அறிய முடிகிறது.

தமிழ்நாடு – வில்லுபுரத்தில் காணப்படும் பாறை ஓவியம். நன்றி: The Times of India.

கிருஷ்ணகிரி குகையினுள் காணப்படும் பாறை ஓவியம். குதிரை வீரர்கள் காலாட்களுடன் போரிடச் செல்லும் காட்சி. நன்றி: The Times of India.

விலங்கு வேட்டை. திண்டுக்கல் – சிறுமலை பாறை ஓவியம்.

இடைக்கற்கால மனிதர்கள் வேட்டைக்குப் போகும் காட்சி. கரிக்கையூர், நீலகிரி.

மகாராஜகலை என்ற இடத்தில் உள்ள கல்லறைப் படிவத்தினுள்ளே (Dolmen) காணப்படும் பாறை ஓவியம். படம் நன்றி: K. Rajan.
தென்னிந்தியாவில் காணப்படும் பாறை ஓவியங்கள் வட இந்திய ஓவியங்களைக் காட்டிலும் காலத்தால் பிந்தியதாகக் கருதப்படுகிறது. வட இந்தியப் பாறை ஓவியங்கள் தொல்பழங்காலப் பிற்பகுதியில் (Upper Palaeolithic) ஆரம்பமாவதாகவும், தென்னிந்தியப் பாறை ஓவியங்கள் இடைக்கற்காலத்தில் (Mesolithic) ஆரம்பமாகி புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக் காலம் வரை நீடித்ததாகவும் கருதப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களுக்கு அறிவியல்பூர்வமான (கதிர்வீச்சு அளவியல் – Radiometric) காலக்கணிப்புகள் மேற்கொள்ளப்படாமையே இக்கருத்திற்கான காரணமாகத் தெரிகிறது.
இலங்கைப் பாறை ஓவியங்கள்
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்லியல் ஆணையாளராகவிருந்த H.C.P. பெல் என்பவரால் இலங்கையின் பாறை ஓவியங்கள் முதன் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. 1897ஆம் ஆண்டில் பொலன்னறுவையில் கொண்ணத்தெ-கொடகலகே என்ற இடத்தில் காணப்பட்ட பாறை ஓவியமும், மட்டக்களப்பில் கொஹொம்பலாவ என்ற கிராமத்தில் காணப்பட்ட மனிதர்களையும், விலங்குகளையும் வரைந்த ஓவியங்களும் அவரது கவனத்தை ஈர்த்தன. 1904ஆம் ஆண்டுவரை பதின்மூன்று பண்டைய ஓவியங்கள் காணப்பட்ட மையங்களை அவர் இனம் கண்டிருந்தார். இந்த ஓவியங்களின் காலம் சரியாகக் கணிக்கப்படவில்லை.

குருநாகலில் கொண்ணத்தெ-கொடகலகே என்ற இடத்திலுள்ள கற்பாறை ஓவியங்கள். Courtesy: H.C.P. Bell.

இலங்கையில் வேட்டம்புகல என்ற இடத்திலுள்ள பாறையினுள் காணப்படும் யானைக் கூட்டம் ஓவியம். Courtesy: Dr. Raj Somadeva.
2011ஆம் ஆண்டில் இலங்கை களனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட கள ஆய்வுகளில் பாறை ஓவியங்களும், கற்பொறிப்புகளும் கொண்ட 24 மையங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த மையங்களில் பல அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காணப்பட்டன. இந்த இடங்கள் இக்கால வேடர்கள் வதியும் இடங்களாகும். ஓவியங்களுக்கும், கல்வெட்டுக்களுக்குமிடையே பல நுட்பமான வேறுபாடுகள் காணப்பட்டன. ஓவியங்கள் ஒரு வகையான விவரிப்பு (Narrative) வகையில் அமைந்திருந்தன; கல்வெட்டுக்கள் அவ்வாறு இல்லை. இந்த ஓவியங்கள் விலங்குகளையும், மனிதர்களையும் காட்டி நின்றன.
வேட்டம்புகல குகையினுள் உள்ள பாறை ஓவியத்தில் நூற்றுக்கணக்கான யானைகள் காணப்பட்டன. இவற்றைக் கட்டுப்பாடற்ற (மூர்க்கமான) காட்டு யானைகளாகக் கொள்ளலாம். 40 மீட்டர் நீளமான இப்பாறை ஓவியம் இலங்கைத் தீவிலுள்ள மிக நீளமான பாறை ஓவியமாகும். ஹுலன்னுகே குகை ஓவியத்தில் மனிதர்கள் நீரை எடுத்துக்கொண்டு போகும் காட்சி வரையப்பட்டிருக்கிறது. அக்காலத்தைய வளச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படும் உத்திகளில் ஒன்றை வெளிப்படுத்தும் முயற்சியாக இதைக் கொள்ளலாம் (Somadeva, Raj 2012).
இந்த ஓவியங்களில் காணப்படும் முக்கியமான சிறப்பியல்பு அவற்றின் தடிப்பும், உபயோகப்படுத்தப்பட்ட நிறங்களுமாகும். எல்லா மையங்களிலும் மொத்தமாக பின்வரும் நிறங்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை: வெள்ளை, சாம்பல் நிறம், மந்தமான சிவப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு என்பனவாகும். ஓவியங்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட இடங்களில் அவை 0.5 மி.மீ. முதல் 2.0 மி.மீ. வரையான தடிப்பைக் கொண்டிருந்தன. ஓவியங்கள் பாறையில் உறுதியாகப் படிந்திருப்பதை நோக்குமிடத்து வர்ணங்கள் ஏதோ ஒரு வகையான இரசாயனக் கலவையுடன் கலந்து வரையப்பட்டதாகத் தோன்றுகிறது. வட அவுஸ்திரேலிய ஆர்ஹெம் பகுதியிலுள்ள பழங்குடியினர் காவிச் சாயத்தை உறுதியாக ஒட்டச் செய்வதற்காக ஒரு வகையான மந்தாரைச் செடியின் சாற்றை உபயோகித்தார்கள். இலங்கையின் பழங்குடியினரும் அவ்வகையான தாவர ஒட்டுப் பொருளை வர்ணக் கலவையுடன் உபயோகித்திருக்கலாம். வெவ்வேறு நிறங்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது பகுப்பாய்வு செய்யப்படவில்லை. நிறங்களைத் தாவரங்களிலிருந்தும், கறுப்பு நிறத்தை எரிந்த கரியிலிருந்தும் பெற்றுக்கொண்டார்கள் என ஊகிக்க முடிகிறது.
ஓவியங்களைக் கூர்மையாக அவதானிக்குமிடத்து ஒரு வகையான தூரிகை போன்ற கருவிகளைக் கொண்டே அவற்றை வரைந்திருப்பது புலனாகிறது. இந்த ஓவியங்களின் சரியான காலத்தை நிர்ணயம் செய்யக்கூடிய சுட்டிக்காட்டிகள் கிடையாது. இவை பிந்திய ஹோலோஸீன் காலத்தைய வேட்டையாடி-உணவு திரட்டிய மக்களின் (Late Holocene Hunter-gatherers) ஓவியங்களா அல்லது வேடர் சமூகத்தினரின் ஓவியங்களா என்ற சர்ச்சை அறிஞர்களிடம் காணப்படுகிறது (Somadeva, Raj 2012).

ஹுலன்னுகே குகை ஓவியத்தில் மனிதனும் யானையும் இடம்பெறும் காட்சிகள் மூன்று தடவைகள் இடம்பெறுகின்றன. Courtesy: Dr. Raj Somadeva.
சமய நம்பிக்கைகள்

குடியம் குகையினுள் காணப்படும் பாறைக் கல்வெட்டினாலான தாய்த்தெய்வம் பெனாச்சி அம்மன். நன்றி: சுற்றுலாத்துறை, தமிழ்நாடு அரசு.
இடைக்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகள் பற்றி தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல தகவல்களைப் பெற முடிகிறது. கற்கால மனிதர்கள் வாழ்ந்த பல குகைகள் இன்று நாட்டார் வழிபாட்டிற்குரிய தெய்வங்களின் இருப்பிடங்களாக விளங்குகின்றன (Allchin, B.&R. 1982: 93-96). இதற்கான சான்றுகள் வட இந்தியா, மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. தமிழகத்திலுள்ள குடியம் குகை பழைய கற்காலம் தொட்டு இடைக்கற்காலம் வரை மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இக்குகை இன்றுவரை ‘பெனாச்சி அம்மன்’ என அழைக்கப்படும் ஒரு தாய்த்தெய்வத்தின் வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
ஆதிகால மனிதர்கள் பிறப்பு, இறப்பு, இயற்கை என்பனவற்றை உலகின் புனிதமான இயங்கு பொருட்களாகக் கொண்டார்கள். மனித உயிர்களை உருவாக்கும் தாய், இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள், உயிரினங்களைப் பேணி வளர்க்கும் பூமி, ஒளி வழங்கும் ஞாயிறு, மழை வழங்கும் மேகம் என்பன வணக்கத்திற்குரிய அம்சங்களாக விளங்கின.
‘தாய்த்தெய்வம்’ என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும் பெண் தெய்வம் தாய்மை, கருவளம், படைத்தல், உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருப்பதனால் ‘பூமாதேவி’, ‘பார்வதி’ ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டார். ‘உலகப் பெருந்தாய்’ உலக மக்கள் அனைவரதும் தோற்றத்துடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. பழைய கற்கால ஆதாரங்கள் சில இருப்பினும், இடைக்கற்காலத் தொல்லியல் இவ்வழிபாட்டிற்கான உறுதியான பல ஆதாரங்களைத் தந்து வருகிறது.
தாய்த் தெய்வத்தின் மிகப் பழமையான உருவம் பொ.யு.மு. 29,000 ஆண்டிற்குரிய ‘டொல்னி வெஸ்ரொனிஸ் வீனஸ்’ (The Venus of Dolni Vestonice) ஆகும். ‘வீனஸ்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் இப்பெண் தெய்வ உருவம் செக் நாட்டின் டெவின் மலை அடிவாரத்தில் உள்ள ‘மொராவியன் பள்ளத்தில்’ 1925ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ‘விலன்டொவின் வீனஸ்’ (Venus of Willendorf) என்ற பொ.யு.மு. 24,000-22,000 ஆண்டிற்குரிய பெண்தெய்வச் சிலை ஒஸ்ரியா நாட்டில் உள்ள விலன்டோவ் என்ற கிராமத்தில் 1908ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. இவை மேல்பழங்கற்காலத்திற்குரிய பெண்தெய்வ வடிவங்களாகும்.

‘டொல்னி வெஸ்ரொனிஸ் வீனஸ்’ உருவம்.

சிந்துவெளித் தாய்த்தெய்வம்.
இடைக்கற்காலத்திற்குரிய பெருந்தொகையான தாய்த்தெய்வ உருவங்கள் சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. கொற்றவை, துர்க்கை, காளி என்பன தாய்த்தெய்வத்தின் வரலாற்றுக்கால வடிவங்களாகும். ‘சாக்தம்’ (தாய்த்தெய்வ வழிபாட்டு மரபு) பிற்கால இந்துமதத் தத்துவங்களின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது.

இலங்கையில் யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்டெடுத்த தாய்த்தெய்வ உருவம். இரு பக்கமும் முழங்காலில் நிற்கும் இரு பக்தர்கள் காணப்படுகிறார்கள். Source: Dept. of History, University of Jaffna.

இலங்கையில் கட்டுக்கரை அகழ்வுகளில் கண்ட திரிசூல வடிவம், தாய்த்தெய்வ உருவம், ஆவுடையோடு கூடிய சிவலிங்க உருவம் என்பன இடைக்கற்கால-ஆதிஇரும்புக்கால மக்களின் சமய நம்பிக்கைகளைக் காட்டுகின்றன. Courtesy: Dr. P. Pushparatnam.
தென்னாசியாவின் இடைக்கற்கால, புதியகற்கால தொல்திராவிடச் சமுதாயம் தாய்வழிச் சமுதாயமாகும் என்பது பல ஆய்வாளர்களின் முடிவு. ஆதிக்க நிலையில் அல்லாமல், வம்சத்தை விருத்தி செய்பவர்களாக, திராவிடச் சமுதாயத்தின் உச்சநிலையில் பெண்களே இருந்தனர். சமுதாய அந்தஸ்தும் பரம்பரைச் சொத்துகளும் பெண்வழியாகவே மரபுரிமையாக்கப்பட்டன. ஆண்கள் வேட்டையாடச் சென்ற பொழுதில் பெண்களே விதைகளைச் சேகரித்து வந்தனர். பின்னர் விவசாயம் வந்த பொழுதில் அதற்குரிய விதைகளைத் தெரிவு செய்யும் ஆற்றலும், வன்மையும், பொது அறிவும் அவர்களிடமே இருந்தன. இந்தியாவுக்கு இந்தோ-ஐரோப்பியர்களின் வருகையின் பின்னரே ஆண் தெய்வங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, சமுதாயத்தில் பெண்களின் பங்கும் மட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் பல இடங்களில் பண்டைய கற்கருவிகள் செய்யப்பட்ட தொழிற்சாலைகள் இக்காலத்தைய வழிபாட்டு மையங்களாக மாறியிருக்கின்றன. உதாரணமாக − ராஜஸ்தானிலுள்ள புஷ்கர் பாரம்பரியமாக ஒரு வழிபாட்டு நடுவமாகப் பேணப்படுகிறது. பாலைவனத்தின் அருகில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் ஒரு நல்லநீர் ஏரியும், அதைச் சுற்றிவரக் கற்காலத்தின் பல்வேறு காலநிலைகளுக்கான கற்கருவிகளின் தயாரிப்பிடங்களும், ஒரு சிவன் கோயிலும் காணப்படுகின்றன (Allchin, B. & R. 1982: 93).
இலங்கையிலுள்ள வேடர்களும், இந்தியக் குடாநாட்டின் செஞ்சுக்களும் தங்களது நாட்டார் தெய்வங்களை வணங்கிய பின்னரே வேட்டைக்கும், காட்டுக் கிழங்குகளைக் கிண்டியெடுப்பதற்கும், பழங்கள், தேன் சேகரித்தல் ஆகிய செயல்களை மேற்கொள்ளுவதற்கும் புறப்பட்டார்கள். இத்தெய்வங்கள் ஆண்களாகவும், பெண்களாகவும், சில சமயங்களில் இரண்டும் இணைந்ததாகவும் காணப்படுகின்றன. வேடர்கள் தங்கள் முன்னோர்களின் ஆவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவர்கள் இறந்தோர்களைத் திறந்த வெளிகளில் புதைத்தும், பாறை ஒதுக்குகளில் அடக்கம் செய்தும் வருகிறார்கள். இறந்தோருக்கு மரியாதை செய்யும் முகமாக அப்புதையிடங்களுக்குப் பல ஆண்டுகள் வரை போகமாட்டார்கள் (Allchin, B. & R. 1982: 94).
இறந்தோருக்குச் செய்யும் சடங்குகள் இடம், காலம் கடந்து பரவிய மனித சமுதாயப் பண்பாட்டின் ஓர் அம்சமாகும். இறந்தோரைப் புதைத்து, அப்புதைகுழி மேல் நடுகற்களைக் கொண்டோ அல்லது மர இடுகைகளை நட்டோ அடையாளமிடுவது இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கிலிருந்ததாகக் கருதப்படுகிறது. சில ஆதிகால மனிதர்கள் இறந்தோரைக் குகைகளில் புதைத்திருப்பது அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இறுதிச் சடங்குகள் மனித சமுதாயங்களில் வேறுபட்டிருந்தாலும் சில ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. இச்சடங்குகள் இறந்தோரை மரியாதை செய்வதற்கும், அவர்களை எண்ணித் துக்கம் அனுசரிப்பதற்கும் அல்லது புலம்புவதற்கும் உபயோகப்படுகின்றன. சில சமுதாயங்களில் இப்புதையல் தலங்கள் வழிபாட்டுத் தலங்களாக புனிதமாகப் பேணப்படுகின்றன. இவ்விடங்களில் இறந்தோரின் இனத்தவர்கள் தம் முன்னோரிடம் தொடர்பு கொள்வதாகவும் சில சமுதாய நம்பிக்கைகள் உள்ளன. திராவிட மக்களின் பெருங்கற்காலக் கல்லறைகள் இவ்வகையைச் சேர்ந்தவை. இவை பற்றி பின்னர் ஓர் இயலில் விரிவாகப் பார்ப்போம்.
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
ALLCHIN, B. & ALLCHIN, F.R. (1982): The Rise of Civilization in India and Pakistan, Cambridge University Press, Cambridge.
ALLCHIN, RAYMOND and BRIDGET ALLCHIN (1997): Origins of a Civilization, Viking Penguin India, New Delhi.
AIYAPPAN, A. (1945): ‘Mesolithic artifacts from Sawyerpuram in Tinnevelly District, S. India, Spolia Zeylania, XXIV, pt. 2 (1945), pp 145-154.
BASAK, BISHNUPRIYA & SRIVASTAVA, PRADEEP (2017): Earliest dates of Microlithic Industries (42-25 ka) from West Bengal, Eastern India: New Light on Modern Human Occupation in the Indian Subcontinent, Asian Perspectives Vol. 56, No.2., University of Hawaii Press.
DANIELOU, ALAIN (2003): A Brief History of India, Inner Traditions, Vermont
DERANIYAGALA, P.E.P (1940): Balangoda Culture, Journal Royal Asiatic Society (Ceylon Branch), Vol. XXXIV, No. 92., pp. 351-373.
DERANIYAGALA, P.E.P. (1945): Homo sapiens balangodensis, Spolia Zeylanica, Vol. 24, Part 2, Colombo.
DERANIYAGALA, P.E.P. (1957): Udupiyan Culture Phase, Journal Royal Asiatic Society (Ceylon Branch), New Series, Vol. V, Pt. 1., Colombo.
DERANIYAGALA, P.E.P. (1958): The Pleistocene of Ceylon, Ceylon National Museum, Colombo.
DERANIYAGALA, S.U. (1992a): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Archaeological Department, Govt. of Sri Lanka, Colombo.
DERANIYAGALA, S.U. (1992b): The Prehistoric Chronology of Sri Lanka, Memoirs of the Archaeological Department (8) Addendum I, Govt. of Sri Lanka, Colombo.
DERANIYAGALA, S.U. (1996): ‘Pre and Protohistoric Settlements in Sri Lanka’ in The Prehistory of Asia and Oceania, Vol. 5, Section 16, pp: 277-285.
DERANIYAGALA, S.U. (2004): Prehistoric basis for the Rise of Civilization in Sri Lanka and South India, Chennai.
FOOTE, R.B. (1883): On the Geology of Madura and Tinnevelly Districts, Memoirs of the Geological Survey of India, 20(2): 1-103.
FOOTE, R.B. (1916): The Foote Collection of Prehistoric and Protohistoric Antiquities: Notes on their Ages and Distribution, Madras: Government Museum.
GARDNER, P.M. (1972): ‘The Palians’ in Hunters and Gatherers Today, pp 404-450 (ed.) M.G. Bichieri, Illinois: Wave Land.
GARDNER, P.M. (1988): ‘Pressures for Tamil propriety in Paliyan social organization’ in Hunters and Gatherers , Vol. 1: History, Evolution and Social Change: pp 91-106, (ed.) T. Ingold, D. Riches and J. Woodburn, New York: Berg.
GARDNER, R.A.M. (1986): Quaternary Coastal Sediments and Stratigraphy, Southeast India, Man and Environment, 10: 51-72.
GARDNER, R.A.M. (1995): Red dunes and Quaternary paleoenvironment in India and Sri Lanka, in Quaternary Environments and Geoarchaeology of India, Essays in Honour of Prof. S. N. Rajaguru: 391-404. (ed.) S. Wadia, R. Korisetter, and V.S. Kale, Geological Society of India, Memoir No. 32.
GARDNER, R.A.M. and MARTINGELL, H. (1990):Microlithic sites and their Palaeo environmental setting, Southeast India: A re-evaluation, Geoarchaeology 5: 1-13.
GURUMOORTHY, S. (1974): Archaeology and Tamil Culture, Chennai.
JOSHI, R.V. (1958): Narmada Pleistocene Deposits at Maheswar, Journal of Paleontological Society of India, II (1958).
KENNEDY, K.A.R., and DERANIYAGALA, S.U. (1989): Fossil Remains of 28,00 Year Old Hominids from Sri Lanka, Current Anthropology, 30(3).
KENNEDY, K.A.R. (2000): God Apes and Fossil Men; Palaeoanthropology in South Asia, Michigan University Press.
KSHIRSAGAR, A. (1993): Role of fluorine in the Chronometric Dating of Indian Stone Age Cultures, Man and Environment 18(2): 23-32.
MALONEY, CLARENCE (1974): Peoples of South Asia, Holt, Rinehart and Winston, Inc., New York.
McINTOSH, JANE R. (2008): The Ancient Indus Valley, ABC-CLIO, California.
MISRA, V.N. (1989): Stone Age India: An ecological perspective, Man and Environment. 15: 17-64.
MISRA, V.N. (1997): Mesolithic India: History and current status of Research, Colloquia of the International Congress of Prehistoric and Protohistoric Sciences 1996 (Froli: ABACO Edizioni) 16: 321-328.
MISRA, V.N. (2001): Prehistoric Human Colonization of India, J.Biosci. Vol. 24, No. 4 Suppl. pp 491-531.
MISRA, V.N. (1974): ‘Archaeological and Ethnographic evidence for the hafting and use of microliths and related tools’, Puratattva 7: 3-12.
POSSEHL, GREGORY L. (2002): The Indus Civilization: A Contemporary Perspective, AltaMira Press, Lanham, MD, USA.
RAJENDRAN, P. (1979): Environment and Stone Age Cultures of North Kerala, Ph.D. Thesis, University of Poona, Poona.
RAMACHANDRAN, K.S. (1980): Archaeology of South India, Delhi.
RAMAN, K.V. (1969): Pre- and Proto-historic Cultures of Tamil Nadu, Arayacci, pp. 137-142.
RAMAN, K.V. (1970): Distribution Pattern of Culture traits in the Pre and Proto Historic times in the Madurai Region, Arayacci , pp 499-599.
SANKALIA, H.D. (1974): Prehistory and Protohistory of India and Pakistan, 2nd edn., Poona.
SELVAKUMAR, V. (1996): Archaeological investigations in the upper Gundar Basin, Man and Environment, 22(2): 27-42.
SELVAKUMAR, V. (1997): Investigations into the Prehistoric and Protohistoric Cultures of the Upper Gundar Basin, Ph.D diss., University of Poona.
SELVAKUMAR, V. (2002): Hunter-Gatherer Adaptations in the Madurai Region, Tamil Nadu, India, Asian Perspectives Vol. 41, No. 1. pp 71-103
SINGHVI, A.K., DERANIYAGALA, S.U., and SENGUPTA, D. (1986): Thermoluminescence Dating of Quaternary Red Sand Beds in Sri Lanka, Earth and Planetary Science Letters, 80: 139-44.
SOMADEVA, RAJ (2012): Rock Paintings and Engravings in Sri Lanka, Bradshaw Foundation.com.
SUBBARAO, BENDAPUDI (1958): The Personality of India, University of Baroda, Baroda.
THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, Kingston, UK.
WEDAGE, OSHAN; PICIN, ANDREA; DOUKA, DERANIYAGALA, SIRAN et al. (2019): Microliths in the South Asian Rainforest ~ 45-4 ka: New Insights from Fa-Hien Lena Cave, Sri Lanka, Plos One, October 2, 2019.
WEDAGE, OSHAN; ROBERTS, PATRICK; DERANIYAGALA, SIRAN et al. (2020): Late Pleistocene to early-Holocene rainforest foraging in Sri Lanka: Multidisciplinary analysis at Kitulgala Beli-Lena, Quaternary Science Reviews. Volume 231 (March 2020).
WELLS, SPENCER (2007): Deep Ancestry, Inside the Genographic Project, National Geographic, Washington DC.
ZEUNER, FREDERICK E., and ALLCHIN, BRIDGET (1956): ‘Microlithic Sites of Tinnevelly District, Madras State’, Ancient India, No. 12, Archaeological Survey of India, New Delhi.
இராசவேலு, சு., திருமூர்த்தி (1995): தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், சென்னை.
காந்திராஜன், க.த. (2018): ‘தமிழகப் பாறை ஓவியங்கள்: ஓர் அறிமுகம்’ − தொல்லியல்: தமிழர் வரலாற்றுத் தடங்கள், மதுரை.
சிற்றம்பலம், சி.க. (1999): பண்டைய தமிழகம், சென்னை: குமரன் பப்ளிசர்ஸ்.
பத்மநாதன், சி. (2001): இந்து கலாசாரம்: கோயில்களும் சிற்பங்களும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.



