மலையக வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறை வடிவங்கள் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
19 நிமிட வாசிப்பு

மலையக வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்தும் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறை வடிவங்கள் 

September 24, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

இருபதாம் நூற்றாண்டில் ஆராய்ச்சியாளர்களும் மானிடவியலாளர்களும் மக்களின் வாழ்வியல் மரபுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இந்த ஆய்வுகள், அதுவரை மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும் ஒருபக்கச் சார்புடைய இலக்கியப் பதிவுகளையும் மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கிய மரபுசார்ந்த ஆய்வு முறையை உடைத்தெறிந்தன. இக்காலக்கட்டத்தில் வெளிவந்த வாய்மொழிப் பாடல்கள், மரபுகள், நிகழ்த்து கலைகள் ஆகியவை ஒடுக்கப்பட்ட அடிமட்ட மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிக்கொணர்ந்தன. மேலும், இம்மக்களின் மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள், வழிபாடு, சடங்குகள் மற்றும் கூத்துக் கலைகள் வழியாக வெளிப்பட்ட உண்மைகள், மேலோட்டமான ஆய்வுக் கருத்துகளைத் தவிடுபொடியாக்கின. இதன் காரணமாகவே, இன்று ‘மக்கள் இலக்கியங்கள்’ என்று போற்றப்படும் படைப்புகள் பேசும் வாழ்வியல் உண்மைகள், எந்தக் கோணத்தில் நோக்கினாலும் முற்றிலும் மறுக்க முடியாதவையாகத் திகழ்கின்றன.

மலையக இலக்கியம் என்பது, பெருந்தோட்டப் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கிய பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்றதாகும். அக்காலகட்டத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் மிகுந்த கொடூரமும் கடினமும் நிறைந்ததாகக் காணப்பட்டது. ஆரம்பத்தில் சமயத்தைப் பரப்புவதற்காக வந்ததாகக் கூறிய ஐரோப்பியர்கள், காலப்போக்கில் நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி, ஒட்டுமொத்தப் பொருளாதார மற்றும் சமூக அமைப்பையும் மாற்றியமைத்தனர். அவர்களின் பொருளாதார நலனுக்காக மனிதாபிமானமற்ற எந்தச் செயலையும் செய்யத் தயங்காதவர்களாகவே அவர்கள் திகழ்ந்தனர். பிரித்தானியர்களால் பயிற்சி அளித்து அனுப்பப்பட்ட அமைப்புகள் இருமுனைச் செயல்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்தன. ஒருபுறம் கடுமையான அடக்குமுறைகளையும் கொடூரங்களையும் கட்டவிழ்த்துவிட்ட அதேவேளை, மறுபுறம் மத நிறுவனங்களின் வழியாக ‘இறை அருள்’ வழங்குவதாகக் கூறி மக்களை மனரீதியாகத் தம் வசப்படுத்தும் மதபோதகர்களையும் அவர்கள் நியமித்தனர். இதுவே முழுச் சமூகத்தையும் அவர்களின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. அதேவேளை, கிழக்கத்திய நாடுகளில் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை மனிதர்களாக மதிக்கும் சூழலை உருவாக்கியதிலும் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளில் நிலவிய சனாதன அடக்குமுறைகளால் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு புதிய வாழ்வியல் பாதையைக் அமைத்துக் கொடுத்ததில் அவர்களின் பங்களிப்பை முழுமையாக மறுத்துவிட முடியாது.

இந்தியாவில் நிலவிய வர்ணாசிரம தர்மக் கோட்பாடும், சாதிய அடக்குமுறைகளுடன் கூடிய மதக் கட்டுப்பாடுகளும் மிகத் தீவிரமான வடிவம் எடுத்திருந்தன. இதன் காரணமாக, சாதாரண மக்கள் கடுமையான சமூக அடுக்குமுறைகளுக்குள் முடக்கப்பட்டு, அதிலிருந்து தப்பியோட வழியின்றித் தவித்துக் கொண்டிருந்தனர். இது அப்பண்பாட்டின் பெரும் அவலமாக இருந்தபோதிலும், கற்றறிந்த மேதைகள்கூட இந்தச் சனாதனக் கட்டமைப்பை மீற முடியாமல் முடங்கிக் கிடந்தனர். இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பிரித்தானிய அரசு, அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களைத் தம் வசப்படுத்திக் கொண்டது; அவர்களைத் தெய்வத்தின் குழந்தைகளாகவே ஏற்றுக்கொள்வது போல் காட்டிக் கொண்டதுடன், நிலவி வந்த சனாதனச் சட்டங்களையும் செயலற்றதாக்கியது. இது பிரித்தானியர்கள் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவியது. இத்தகைய சூழலில், தமது பொருளாதாரக் கட்டமைப்பைப் பெருக்கிக் கொள்வதற்காகத் தம் கட்டுப்பாட்டில் இருந்த பெருந்திரளான மக்களை, காலனித்துவ நாடுகளுக்கு உழைக்கும் கூலிப் படைகளாக பிரித்தானியர்கள் அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் தமிழ்நாட்டு மக்களும் முதன்மையானவர்கள். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றதாகப் பேராசிரியர் கா. அருணாச்சலம் குறிப்பிடுவது இங்குச் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு புலம்பெயர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்வியல் சூழல் மிகவும் விசித்திரமானதாகவும் கடினமானதாகவும் அமைந்தது. கடல் மட்டத்திலிருந்து 4,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்த அடர்ந்த காடுகளை அழித்து, புதிய தோட்டங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. காடுகளை அழித்து வாழ்விடங்களை உருவாக்கி, பாதைகளை அமைத்து, பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு, இலாபம் ஈட்டக்கூடிய ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழலில் கோப்பி, தேயிலை, இறப்பர், சிங்கோனா முதலான பொருளாதாரப் பயிர்ச்செய்கை வழி பிறந்த ஒரு புதிய தொழிற்களமும் வாழ்வியலும் உருவெடுத்தன. இதிலிருந்து தோன்றிய மலையக வாய்மொழிப் பாடல்களை உற்றுநோக்கும்போது, அவை உலக மக்களின் ஏனைய வாய்மொழிப் பாடல் மரபுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவத்தையும் செழுமையையும் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

தென்னிந்திய விவசாயப் பெருநிலத்தில் நிலமற்ற கூலிகளாகவும் அன்றாடத் தொழிலாளர்களாகவும் வாழ்ந்த மக்களைக் கங்காணிகளும் இடைத்தரகர்களும் மிக இலகுவாகத் திரட்டி இலங்கை போன்ற நாடுகளுக்கு அனுப்பினர். மேலடுக்கு மக்களும் இவர்களுடன் இணைந்து செயல்பட்டுப் பெருமளவில் லாபம் ஈட்டினர். மேலும், மக்களை அழைத்துச் சென்ற தரகர்களே அவர்களுக்கு முதலாளிகளாகவும் உருவெடுத்தனர். இவர்களில் பெரிய கங்காணிமார்கள், வட்டிக்கடைக்காரர்கள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் முதன்மையான இடம் வகித்தனர். இவர்களின் வருகையால் உருவான சிறு வர்த்தக நகரங்கள், இன்றைக்குப் பெருவளர்ச்சி பெற்ற நகரங்களாக மாறியுள்ளன.

எனினும், இம்மாற்றங்களின் ஊடே மக்களின் வாழ்வில் கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், இலங்கை வரலாற்றின் இந்த 200 ஆண்டுகளில் அவர்கள் அரசியல் ரீதியாக வளருவதையோ, ஆட்சி அதிகாரத்தில் உரிமைகளைப் பெறுவதையோ, அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பதையோ பெரும்பான்மையினம் வெற்றிகரமாகத் தடுத்துவிட்டது. இதற்கு மலையகத்திற்குள்ளேயே நிலவிய சில அகக்காரணிகளும் மிக முக்கிய பங்கு வகித்தன:

  • தொழிற்சங்க அடிப்படையிலான போராட்டம்: அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்தும் வெறும் தொழிற்சங்கக் கட்டமைப்பிற்குள்ளேயே முடக்கப்பட்டதும், முதலாளித்துவச் சிந்தனை கொண்டவர்களே இவற்றுக்குத் தலைமை தாங்கியதும் முதன்மைப் பின்னடைவாக அமைந்தது.
  • தாயக நினைவும் தற்காலிக மனநிலையும்: இம்மக்களிடம் காணப்பட்ட இந்தியச் சிந்தனைப்போக்கும், என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பிவிடலாம் என்ற மனநிலையும், அவர்களின் உரிமைப் போராட்டங்களை பலவீனப்படுத்தியதோடு எளிதில் அடக்கப்படவும் வழிகோலியது.
  • சுயநல தலைமைத்துவம்: போராட்டத்தில் ஈடுபட்ட சாதாரண மக்கள் கல்வியறிவோ பொருளாதார பலமோ இல்லாதவர்களாக இருந்தனர். இதனால் போராட்டங்களின் முடிவில், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சுயநலமிக்க சிறுபான்மைக் குழுவே அதிகாரத்தைக் கைப்பற்றி, எப்போதும் தங்கள் சொந்த நலன்களிலேயே அக்கறை காட்டியது.
  • தலைமைத்துவப் போட்டி: போராட்டங்கள் அனைத்தும் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்காகக் கொள்ளாமல், தலைமைத்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியதால், மக்களின் அனைத்துத் துறை சார்ந்த முன்னேற்றமும் தடைப்பட்டது.

இத்தகைய சூழலில், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பின்னரே அரசியல் அதிகாரமும் தொழிற்சங்க உரிமைகளும் உருவெடுத்தன. இதன் பின்னணியிலேயே மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் ஓரளவுக்கு வலிமை பெறத் தொடங்கின. இதில் கோ. நடேசய்யர் ஆற்றிய மகத்தான பங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரசியல் விழிப்புணர்வுக்கு முன்னர், தொழிற்களங்களில் மக்கள் எவ்வாறு கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்டனர் என்பதை மலையக வாய்மொழிப் பாடல்கள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, வேலைத்தலங்களில் நடைபெற்ற அடக்குமுறைகளே இப்பாடல்களில் முதன்மைப் பொருளாக அமைந்தன. கூட்டு உழைப்பின் இயல்பான வெளிப்பாடாக உருவான இப்பாடல்கள், தொழிலாளர்களின் உழைப்புக் களங்களிலேயே மிகவும் தீவிரமாகப் பாடப்பட்டு விழிப்புணர்வையும் ஆசுவாசத்தையும் அளித்தன.

“அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்

அவமான சொல்லும் பட்டோம்..

முழிபிரட்டி கங்காணியாலே

மூங்கிலாலே அடியும் பட்டோம்”

இப்பாடலின் மூலம், மலையகத் தொழிலாளர்கள் எவ்விதமான எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கப்பட்ட அவல நிலை புலனாகிறது. கங்காணிகள் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், கொடூரமான முறையில் அடித்து மிதிக்கப்பட்டனர். இத்தகைய அநீதிகளைத் தட்டிக்கேட்பதற்கோ, நியாயத்தைப் பெறுவதற்கோ எவ்வித வழியுமின்றித் தொழிலாளர்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டதை இப்பாடல் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி என்பது, முதலாளித்துவவாதிகள் தமது சொந்த நாட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதோடு நின்றுவிடாமல், பிற நாடுகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, அந்நாட்டு மக்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சுரண்டுவதையே முதன்மை இலக்காகக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே, காலனித்துவ நாடுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகள் பல்வேறு தன்மைகளைக் கொண்டவையாக அமைந்தன.

“கல்லாறு தோட்டத்தில 

கண்டக்கையா பொல்லாதவன் 

மொட்ட புடுங்குனேனு

மூணால வெரட்டி புட்டானே”

இப்பாடல், தொழிற்களத்தில் தொழிலாளர்கள் சிறிய தவறு செய்தாலோ அல்லது பணிக்குத் தாமதமாக வந்தாலோ, அன்றைய நாளுக்கான வேலையை மறுக்கும் முழு அதிகாரமும் கங்காணிமார்களிடம் இருந்ததை உணர்த்துகிறது. இவர்களுக்குத் துணையாகச் செயல்பட்ட ‘கண்டக்கையா’ எனும் பதவிநிலை அதிகாரியும் தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு சட்டபூர்வமான விதிமுறைகளுக்கும் உட்பட்டவை அல்ல; மாறாக, அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே நிகழ்ந்தன. இதன் காரணமாக, தொழிலாளர்கள் கங்காணி மற்றும் கண்டக்கையாவின் அநியாயமான போக்கிற்குப் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய கொடூரமான அடக்குமுறைகளுக்கு நடுவிலும், மலையகத் தொழிலாளி வர்க்கம் போராடித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, சமூக வளர்ச்சிக்கான பாதையை அமைத்துக் கொண்டது. 

மனித சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருந்தே வந்துள்ளது. அவ்வர்க்கத்தின் உடல் உழைப்பே செல்வத்தை உற்பத்தி செய்தது; ஆனால் ஆளும் வர்க்கமோ அச்செல்வத்தின் மீது முழு அதிகாரத்தையும் செலுத்தியது. காலப்போக்கில் சமுதாயம் வளர வளர, ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகினர். அந்த வரலாற்றுப் பின்னணியில், மலையக மக்களும் எவ்வித ஒடுக்குமுறைகளுக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்று, படிப்படியாகத் தமது சமூக வளர்ச்சியை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதை நாம் தெளிவுற அறிந்துகொள்ள முடிகிறது.

“ஓடி ஓடி நெரப்புடிச்சு

ஒரு கூடைக் கொழுந்து எடுத்து 

பாவி கணக்கப்புள்ளை 

பத்து ராத்தை சொல்லுறானே”

இப்பாடல், மலையகத் தொழிலாளர்கள் வெயிலிலும் மழையிலும் மாடாய் உழைத்துப் பறித்து வரும் கொழுந்தின் அளவைக் கங்காணியும் கணக்கப்பிள்ளையும் சேர்ந்து முறைகேடாகக் குறைத்துக் கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு நிறையைக் குறைத்துக் கூறினாலும், தொழிலாளர்களுக்குச் சரியான எடையைக் கேட்கும் உரிமையோ அல்லது நிறுவை தராசின் அளவைப் பார்த்துச் சரிபார்க்கும் அதிகாரமோ வழங்கப்படவில்லை. ஒருவேளை, இந்த அநீதியை எதிர்த்து ஏதேனும் கருத்துத் தெரிவித்தால், அவர்கள் தோட்ட அதிகார வர்க்கத்தின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது. இத்தகைய வேதனையையும் உச்சகட்டத் துயரத்தையும் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வந்தனர். குறிப்பாக, கங்காணிமார்கள் முகம் சுளிக்கும்படி எந்தவொரு தொழிலாளியும் எந்தச் சூழலிலும் நடந்துவிடக் கூடாது என்பதில் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. கங்காணிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மிக மோசமான வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என்பதை வரலாறு தெளிவாகப் பதிவு செய்துள்ளது.

“கண்டி கண்டி எங்காதிங்க 

கண்டிப் பேச்சு பேசாதீங்க 

கண்டியில பட்டப்பாட்ட 

கண்டவங்க சொல்லுவாங்க”

இப்பாடல், தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்து கடுமையான உழைப்பைச் சிந்திய பின்னரும், இரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் அவல வரலாற்றைப் பதிவு செய்கிறது. தொழிலாளர்களுக்கு வேலை இல்லையென்றால் பட்டினி மட்டுமே தீர்வாக இருந்தது; கங்காணிகளுக்கும் துரைமார்களுக்கும் முற்றிலுமாக விசுவாசமாக நடந்து கொண்டால் மட்டுமே கிடைக்கும் அற்பக் கூலியைக் கொண்டு உயிர்வாழ முடியும் என்ற கட்டாயச் சூழல் மரபாகவே மாறியது.

மேலும், நாள் முழுவதும் உழைத்தாலும் வெயில், கடும் மழை, புயல்காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் தேயிலைக் கொழுந்தின் வளர்ச்சி குறையும் காலங்களில், நிர்வாகம் எதிர்பார்க்கும் எடையைத் தொழிலாளர்களால் பறிக்க முடிவதில்லை. இத்தகைய சூழலில், உற்பத்தி குறைவுக்குத் தொழிலாளர்களையே பொறுப்பாக்கி, நாள் முழுதும் உழைத்தவருக்கு அரை நாள் சம்பளமே வழங்கி நிர்வாகம் துன்புறுத்திய அநீதியை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

“கூடை எடுத்ததில்லை – நாங்க

கொல்லிமலை பார்த்ததில்லை 

கூட எடுக்கலாச்சு – நாங்க 

கொழுந்து மலை பார்க்கலாச்சி 

கொழுந்து குறைந்ததின்னு

கொர பேரு போட்டாங்க”

இதில் நிலவிய மற்றொரு கொடூரம் என்னவென்றால், தமக்கு ‘அரைப்பேரு’ (அரை நாள் வேலை) மட்டுமே போடப்பட்டிருப்பதை தொழிலாளர்களால் அன்றாடக்களத்தில் அறிந்துகொள்ள முடியாது; சம்பள நாளில்தான் அந்த உண்மையே தெரியவரும். சம்பள நாளன்று கிளார்க்கர் (எழுத்தர்) பெயரை வாசித்து வேலை நாட்களைக் குறிப்பிட, துரை சம்பளத்தைக் கொடுப்பார். அப்போதுதான் தமக்கு அரைகுறை வேலைப் பதிவே செய்யப்பட்டுள்ளது என்பதைத் தொழிலாளர்கள் அறிய முடியும். இது குறித்து அவ்விடத்திலேயே கேள்வி கேட்கவோ விசாரணை செய்யவோ முடியாது. மீறித் தட்டிக்கேட்டால், புதன்கிழமை நடைபெறும் ‘அலுவலக நாளில்’ வந்து பேசுமாறு கூறிவிட்டுத் துரை சென்றுவிடுவார். அதன்பின்னர், அன்றைய நாளில் தான் வேலை செய்ததற்கான பதிவைப் பெறத் தொழிலாளி கணக்கப்பிள்ளையிடம் செல்ல வேண்டும். இதற்காகப் பல நாட்கள் கணக்கப்பிள்ளையின் வீட்டிலோ அல்லது அவரின் காரியாலயத்திலோ தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டிவரும். அவ்வாறு காத்திருக்கும்போது கணக்கப்பிள்ளை கூறும் காரணங்களைத் தொழிலாளி வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொண்டால் மட்டுமே, தமக்கு அரை நாள் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டதன் நியாயத்தைக் கணக்கப்பிள்ளை தொழிலாளிக்கு விளக்குவார். இவ்வாறுதான் இம்மக்களின் வாழ்நாள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கழிந்திருக்கிறது என்பது வேதனையும் வியப்பும் அளிக்கக்கூடிய செய்தியாகும். இத்தகைய அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் மற்றொரு பாடல் இவ்வாறு அமைகிறது.

“அருவா எடுத்ததில்ல 

அட மழையை பார்த்ததில்ல 

அரும்பு குறைந்ததுன்னு 

அரைப் பேரு போட்டாங்க”

இப்பாடலும், மழைக்காலத்தில் தேயிலை அரும்புகள் சீராக வளராததால் தோட்ட நிர்வாகம் எதிர்பார்க்கும் கொழுந்தின் எடையைப் பறித்துக் கொடுக்க முடியாமல் போன அவலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக, நாள் முழுவதும் உழைத்த போதிலும் தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளம் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு, அவர்கள் மீள முடியாத வறுமை நிலையிலேயே தொடர்ச்சியாக முடக்கப்பட்டனர். ஆண்கள் வேலை செய்யும் தலங்களிலும் வேறொரு வடிவில் கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டன. அதைப் பின்வரும் பாடல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

“எண்ணி எண்ணிக் 

குழி வெட்டி

இடுப்பு ஒடுஞ்சி 

நிற்கையிலே 

வெட்டு வெட்டு என்கிறானே 

வேலையத்த கங்காணி”

ஆண்கள் ஈடுபடும் வேலைக்களங்களும் எப்போதும் அதிமுனைப்பான கடினத்தன்மை கொண்டவையாகவே இருக்கும். கல் உடைத்தல், கட்டிடம் கட்டுதல், தேயிலை மரம் பிடுங்குதல், கவ்வாது வெட்டுதல், முள் வெட்டுதல், உரம் போடுதல், வாய்க்கால் (காண்) வெட்டுதல், பாதை அமைத்தல் மற்றும் புல் வெட்டுதல் போன்றவை அவர்கள் செய்த மிகக் கடுமையான பணிகளாகும்.

இதில், தேயிலைக் கன்றுகளை நடுப்பதற்காக வெட்டப்படும் குழிகளை அதிகாரிகள் அளவுகோல் வைத்துத் துல்லியமாக அளப்பார்கள். அதில் ஏதேனும் ஒரு குழியின் அளவில் வித்தியாசம் தெரிந்தாலும், அத்தொழிலாளி வெட்டிய அனைத்துக் குழிகளையும் மீண்டும் அளந்து, அவற்றைத் திரும்பவும் வெட்ட வைப்பார்கள்.

இத்தகைய கடினமான உழைப்பை வழங்கி உற்பத்தி செய்த தேயிலையின் மூலமே, இலங்கை உலக அளவில் ஒரு தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றது. ஆனால், அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த மக்களைத் தன் நாட்டின் சொந்தக் குடிமக்களாக முழுமையாக ஏற்றுக்கொள்வதற்குக் கூட இன்றும் இந்த நாடு தயங்குகிறது. அவர்களுக்குச் சொந்தக் காணி உரிமையையோ அல்லது வீட்டு உரிமையையோ வழங்குவதற்கு இந்நாடு இன்னும் தயங்குவது ஏன் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

ஆண்களை வேலைக்களங்களுக்குப் பிரித்தனுப்புவதற்காகக் காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை ‘பிரட்டுக்களம்’ எனப்படும் இடத்தில் வேலைப் பிரிப்பு நடைபெறும். தொழிலாளர்கள் அதற்குள் விரைந்து சென்று பங்கேற்க வேண்டும்; தாமதமாகச் சென்றால் பெண்களோடு சேர்ந்து கொழுந்து பறிக்கச் செல்ல வேண்டியிருக்கும். இதனால் காலையிலேயே பிரட்டுக்களத்திற்குச் செல்வது அனைத்து ஆண்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. அங்கு யார் யாருக்கு எந்தெந்த வேலை ஒதுக்கப்பட வேண்டும் என்பதை கங்காணி மற்றும் கணக்கப்பிள்ளையின் மனநிலையே தீர்மானிக்கும். அங்கு நடைபெற்ற அநீதிகளையும் நிகழ்வுகளையும் பின்வரும் பாடல் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறது.

“கொண்டை புரம் எடுத்து 

கூலியாளை பிரட்டெடுத்து    

துண்டுகளைக் கொடுத்து 

துரத்தினாரே கங்காணி”

இந்த நிகழ்வைப் பற்றிப் பேசுவது மிகவும் எளிதாக இருக்கலாம்; ஆனால், கடுமையான குளிரோ, கரடுமுரடான மலைப்பாங்கான பாதைகளோ எதுவாக இருந்தாலும், தொழிலாளர்கள் அந்த அதிகாலை வேளையில் கட்டாயம் பிரட்டுக்களத்திற்குச் சென்றாக வேண்டும். ஒருவேளை உடல்நலக்குறைவாலோ அல்லது பிற காரணங்களாலோ சரியான நேரத்திற்குச் செல்ல முடியாவிட்டால், அன்றைய தினம் வேலையே கிடைக்காமல் வீடு திரும்ப நேரிட்ட அவலங்களும் உண்டு. அந்த அளவிற்குத் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைக் கட்டமைப்பு தொழிலாளர்களைத் தன் முழுப் பிடிக்குள் வைத்து ஒடுக்கியே, இந்தப் பொருளாதாரச் சாதனையைச் சாத்தியமாக்கிக் கொண்டது.

இக்கால அடக்குமுறை பற்றி, ‘இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்’ என்ற நூலில் பி.ஏ. காதர் பின்வருமாறு பதிவு செய்கிறார்:

“தோட்டத் தொழிலாளர்களின் சர்வ வல்லமை பொருந்திய எஜமானர்களாகத் துரைமார் திகழ்ந்தனர். தோட்டத் துரைமார்களின் முரட்டுத்தனத்தையும் மூர்க்கமான நடத்தையையும் பற்றி ஒரு வரலாற்று நூல் இவ்வாறு கூறுகிறது: ‘உண்மையில் தோட்டத் துரைமார் முரடர்கள். எதற்கும் தயங்காதவர்கள். வெகு சிலரே விவசாயப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். பொதுவாக, இவர்கள் கல்வியறிவற்றவர்களாக இருந்தனர். இவர்களின் அடாவடித்தனம், கொடுமை என்பவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டனர். அதற்குக் கங்காணிமார்கள் துணையாக நின்றனர். தோட்டத் துறையில் அநேகமாகக் கங்காணிமார்களும் எழுதுவினைஞர்களும் உயர் சாதியினராகத் திகழ்ந்த அதேவேளை, தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகக் காணப்பட்டனர். இந்தியாவில் நிலவிய நிலப்பிரபுத்துவச் சாதி அமைப்பு முறையைப் பெருந்தோட்டத் துறையின் முதலாளித்துவம் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டது.’”

இவை அனைத்தும் தொழிலாளர்கள் உழைப்புக் களத்தில் சந்தித்த அடக்குமுறைகளாகும். இதையும் தாண்டி, மலையகப் பெண்கள் பாலியல் ரீதியாகவும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். கங்காணிமார்கள், பெண்கள் மீது ஏவிவிட்ட அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; அவர்கள் மிகவும் வக்கிரமாகவும் மோசமாகவும் நடந்து கொண்டனர் என்பதைப் பேராசிரியர் குமாரி ஜெயவர்த்தனவின் வரலாற்று ஆய்வுகள் தெளிவாக வெளிக்கொணர்ந்துள்ளன. இருப்பினும், இயல்பிலேயே நாகரிகமும் பண்பாடும் கொண்ட பாமர மக்கள், இத்தகைய கசப்பான சம்பவங்களை முழுமையாக வெளிப்படுத்தத் தயங்கினாலும், ஒருசில பாடல்களில் கங்காணிமார்களின் அந்த வக்கிரச் செயல்களைப் பதிவு செய்யத் தவறவில்லை.

“செம்பு சிலை போல பெண்ணே அவர்

சிம்மாசனத்தில் வச்சுப்புட்டு

வேலைக்கிறங்கிய நம்மையா

கங்காணிக்கு ஏழு எட்டு பேராம்

வப்பாட்டி”

“முருங்கை இலை போல கோலம்

இட்டு அவர் 

முன்னஞ்சு பின் அஞ்சி

கூத்தியாராம் 

சரிகத்துப்பட்டி 

மேல போட்டு அவர் 

தங்க பல்லாக்கு மேல் வாறாராம்”

இப்பாடல்கள், மலையகப் பெண்கள் எவ்வாறெல்லாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுச் சுரண்டப்பட்டார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகளாக விளங்குகின்றன. இவை வாய்மொழிப் பாடல்களில் வெளிப்படும் சில அடையாளங்கள் மட்டுமே; ஆனால், இதைவிடவும் மிக மோசமான கொடூரங்களை நாவல்கள், சிறுகதைகள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

இவற்றையெல்லாம் விட, இம்மக்கள் மீது ஏவப்பட்ட உளவியல் ரீதியான அடக்குமுறைகள் மிகவும் கொடூரமானவை. சாதி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளானபோதிலும், எந்தச் சூழலிலும் தம் சொந்த உழைப்பை மட்டுமே நம்பி, அத்தனை துயரங்களையும் தாங்கிக்கொண்டு இம்மண்ணில் தமக்கானதொரு தனித்துவ அடையாளத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களின் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையக மக்களின் வரலாறு மிகுந்த கொடூரமும் ஈவிரக்கமற்ற தன்மையும் கொண்டது என்பதை அறிய முடிகிறது.

தென்னிந்தியாவிலிருந்து அடுக்கடுக்கான சுமைகளோடு வருகை தந்து, எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து, பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, இன்றும் தம் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் இம்மக்களின் வரலாற்றையும் வாழ்வியல் அனுபவங்களையும் தலைமுறைதோறும் சுமந்து செல்லும் உயிருள்ள பதிவுகளாக இந்த நாட்டுப்புறப் பாடல்கள் திகழ்கின்றன.

சான்றாதாரங்கள்

  1. வேலுப்பிள்ளை, சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள். மகாவலி பிரசுரம், கொழும்பு.
  2. சிவலிங்கம், மு. 2007. மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.
  3. சாரல் நாடன். 1993. மலையக வாய்மொழி இலக்கியம். சவுத் ஆசியன் புக்ஸ், சென்னை.
  4. கந்தையா, மு.சி. 2002. சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
  5. காதர், பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். சமூக இயல் பதிப்பகம், லண்டன்.
  6. சிவலிங்க ராசா, எஸ். 2023. யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள். குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
  7. லூர்து, தே. 2008. நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள். மூன்றாம் பதிப்பு. பாளையங்கோட்டை: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.


About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்