நாணயத் தொடர் 6
சங்ககால சேர, சோழ நாணயங்கள்: கி.மு. 200 – கி.பி. 300.
யாழ்ப்பாண மையங்களில் பாண்டிய நாட்டு நாணயங்களைப் போல பழைய சேர, சோழ நாணயங்கள் அதிக அளவில் காணப்படுவதில்லை. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து நாணயங்கள் அனைத்தும் சதுர வடிவிலேயே காணப்படுகின்றன. இவற்றில் சேர நாணயங்களில் முன்பக்கம் யானையும், மறுபக்கம் சேர அரச இலச்சினையான அம்பு-வில்லும் காணப்படுகின்றன. சோழ நாணயங்களிலும் ஒரு பக்கம் யானையும், மறுபக்கம் சோழ அரச இலச்சினையான புலியும் காணப்படுகின்றன.



சதுர வடிவான சேர, சோழ நாணயங்கள். சதுர வடிவான நாணயங்கள் அனைத்தும் கிறிஸ்தாப்த காலத்திற்கு முற்பட்டவை. கி.பி. முதலாம் நூற்றாண்டின் பின்னரே தமிழகத்தில் வட்ட வடிவான நாணயங்கள் வெளியிடப்பட்டன.
நாணயத் தொடர் 7
பல்லவ நாணயங்கள்: கி.பி. 300 – கி.பி. 900.
வட இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் பல்லவ அரச நாணயங்களும் காணப்படுகின்றன. இவற்றில் ஆரம்பகாலப் பல்லவ நாணயங்கள் வட்ட வடிவாகவும், எழுந்து நிற்கும் எருதை அரச இலச்சினையாகவும் கொண்டிருக்கின்றன. பிற்காலப் பல்லவ நாணயங்களில் எருதுக்குப் பதில் சிங்க உருவம் அரச இலச்சினையாகக் காணப்படுகிறது.
ஆதி பல்லவ அரசர்கள்: கி.பி. 300–கி.பி. 500
தமிழகத்தை ஆண்ட பல்லவ அரசர்கள் இரண்டு அரச பரம்பரைகளைச் சேர்ந்தவர்கள். கி.பி. 3ஆம் – 6ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட பல்லவர்கள் ஆந்திராவின் சாதவாகன மன்னர்களின் பாளையக்காரர்கள் (Feudatories) ஆவார்கள் என வரலாற்றாசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி, கிருஷ்ணசாமி ஐயங்கார் ஆகியோர் கருதுகிறார்கள். அவர்கள் ஆட்சி புரிந்த தொண்டைமண்டலம் சாதவாகனப் பேரரசின் ஒரு பகுதி என கல்வெட்டு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சங்க இலக்கியமான கடியலூர் உருத்திரங்கண்ணணாரின் பெரும்பாணாற்றுப்படை தொண்டை மண்டலத்தை வடதமிழகத்தைச் சேர்ந்த பிரதேசமாகவும், அதை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனை ஒரு தமிழ் அரசனாகவும் குறிப்பிடுகிறது. இளந்திரையன் சோழ மன்னன் கரிகால் வளவனின் பேரன் ஆவான்.
பல்லவர்களின் பேரரசனான ஸ்ரீஸ்கந்தவர்மனின் (கி.பி. 300–350) மயிடாவோலு மற்றும் பிரித்தானிய அருங்காட்சியக சாருதேவி செப்பேடுகள் அவனது ஆட்சிப் பிரதேசம் வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே பெண்ணாறு வரையும், மேற்கே பெல்லாரி மாவட்டத்திலிருந்து கிழக்கே (வங்காளக்) கடல் வரையும் பரந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து அவனது ஆட்சிப் பிரதேசம் இன்றைய தென் ஆந்திராவையும், வடக்குத் தமிழ்நாட்டையும் அடக்கியிருந்தது எனலாம். அவனது தலைநகரம் பல்லவபுரி எனக் கூறப்படுகிறது. பல்லவபுரி இன்றைய ஆந்திராவின் நெல்லூரிலுள்ள ‘பவத்திரி’ என இனங்காணப்படுகிறது. இந்த அரசர்கள் எருதை இலச்சினையாகக் கொண்ட வட்ட வடிவான செப்பு, வெள்ளி நாணயங்களை வெளியிட்டார்கள்.
பல்லவ நாணயங்கள் கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி, மாந்தை மற்றும் பல வன்னி மையங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பல்லவர்களின் வெள்ளி நாணயங்கள் இந்தியாவில் காணப்படாத போதிலும், அவை வட இலங்கையில் கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வட இலங்கையிலுள்ள ‘பல்லவராயன்’, ‘பல்லவராயன்கட்டு’, ‘பல்லவராயன்கட்டு ஆறு’ ஆகிய இடப்பெயர்கள் பல்லவர்களின் படைத்தளபதி ஒருவர் தனது இராணுவச் சேவைக்கான பாராட்டாக வட இலங்கையில் சன்மானமாகப் பெற்றுக்கொண்ட நிலப்பகுதியைக் குறிப்பிடுவதாகக் கொள்ளப்படுகின்றன (General of the Pallava dynasty who received a land grant in recognition of his military alliances) (Thiagarajah Siva, 2016: 212).
சில வரலாற்றாசிரியர்கள் ‘பல்லவராயன்கட்டு’ பாண்டியர்கள் பெற்றுக்கொண்ட நிலப்பகுதி என்றும், ‘பல்லவராயன்கட்டு’ என்பது தவறான பெயர் (Misnomer) என்றும் கூறுவர். இதற்கான ஆதாரம் எதுவும் தரப்படவில்லை.

எருது இலச்சினை கொண்ட பல்லவபுரிப் பல்லவ நாணயம். கி.பி. 350.

நரசிம்மவர்மனின் காஞ்சிப் பல்லவ நாணயம். கி.பி. 630-668.
பிற்காலப் பல்லவர்கள்: கி.பி. 600-850.
கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழர்களிடமிருந்து காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட பல்லவர்கள் அங்கே தலைநகரம் அமைத்து சக்திவாய்ந்த ஓர் அரசை அமைத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்தி ஒரிஸா, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பிராந்தியங்களைத் தங்களின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார்கள். அவர்களின் ஆட்சியில் காஞ்சி தலைநகரமாகவும், மாமல்லபுரம் துறைமுக நகரமாகவும் செயற்பட்டது.
காஞ்சிப் பல்லவர்களின் அரசை சிம்மவிஷ்ணு என்ற அரசன் ஆரம்பித்து வைத்தான். அவனது மகனான மாமல்லன் என்ற மகேந்திரவர்மன் மாமல்லபுரம் குகைக்கோயில் ஆக்க வேலைகளை ஆரம்பித்து வைத்தான். காஞ்சி நகரின் அதீத செல்வங்களைப் பற்றிக் கேள்வியுற்ற சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசின்மேல் படையெடுத்து வந்து, போரில் மகேந்திரவர்மனைத் தோற்கடித்து செல்வங்களைச் சூறையாடிச் சென்றான். இச்சம்பவம் பல்லவ அரசுக்கு பெருத்த அவமானமாகப் போயிற்று. மகேந்திரவர்மன் புலிகேசியின் மீது மேற்கொண்ட பழிவாங்கும் முயற்சிகள் பயனற்றுப் போயின.
மாமல்லன் மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசியின் நாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, மிகுந்த தைரியத்துடனும் புத்திசாதுர்யத்துடனும் போர் நடத்தி, சாளுக்கியர்களின் தலைநகரான பாதாமியை எரித்து தரைமட்டமாக்கினான். தனது தந்தையினால் ஆரம்பிக்கப்பட்ட மாமல்லபுரம் குகைக் கோவில்கள் நரசிம்மவர்மனின் ஆட்சிக் காலத்தில் பூர்த்திசெய்யப்பட்டன. நரசிம்மவர்மன் பல்லவ அரச இலச்சினையை சிங்கமாக மாற்றியமைத்து, சிங்க உருவம் கொண்ட நாணயங்களை வெளியிட்டு வைத்தான். பின்னர் கி.பி. 850ஆம் ஆண்டளவில் அதுவரை சிற்றரசர்களாக இருந்த சோழ அரசர்கள் புத்துறுதியும் புதுவலிமையும் பெற்று பல்லவர்களுடன் போராடி காஞ்சியையும் இழந்த பிரதேசங்களையும் மீளப் பெற்றுக்கொண்டார்கள். பல்லவ சிங்க நாணயங்கள் மேற்கூறப்பட்ட யாழ்ப்பாண மையங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
நாணயத் தொடர் 8
வட இலங்கை அரச நாணயங்கள்: கி.பி. 300 – கி.பி. 800.
2002ஆம் ஆண்டில் வெளிவந்த கலாநிதி பரமு புஷ்பரட்ணத்தின் வரலாற்றுப் புகழ்கொண்ட நாணயவியல் ஆய்வான Ancient Coins of the Sri Lankan Tamil Rulers என்ற நூலில், தமிழகத்தின் சங்ககாலத்திற்குச் சமமான காலப் பகுதியிலேயே இலங்கையில் தமிழ் அரசர்களின் மாநில உருவாக்கம் ஆரம்பித்துவிட்டதை நாணயவியல் ஆய்வுகள் மூலம் அவர் எடுத்துக் காட்டியிருந்தார். அதற்கு ஆதாரமாக வட இலங்கையில் வெவ்வேறு காலகட்டத்திற்குரிய பலவகை நாணயங்களைத் தனது களஆய்வில் வெளிக்கொணர்ந்திருந்தார்.


கந்தரோடை (கதிரைமலை) சதுர வடிவான செப்பு நாணயங்கள். நன்றி: ப. புஷ்பரட்ணம்.
இவற்றில் ஆதியான நாணயங்கள் சதுர வடிவானவை. உருக்கிய செம்பில் உருவாக்கப்பட்ட இந்த நாணயங்கள் 1.8 செ.மீ. நீளமும், 1.6 செ.மீ. அகலமும், 2.8 கிராம் நிறையும் கொண்டவை. இவற்றை கதிரைமலை (கந்தரோடை) அரச நாணயங்களாக அவர் இனங்கண்டார். இவற்றில் மூன்று வகையான நாணயங்கள் காணப்பட்டன.
- இரு விளக்குகளுக்கிடையே காணப்பட்ட மீன். மீன் சின்னம் பாண்டியர்களால் மட்டுமல்லாது வட இலங்கையின் அரசர்களாலும் பாவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான நாணயங்கள் தமிழ்நாட்டில் காணப்படவில்லை.
- நாணயத்தின் முன்பக்கத்தில் எழுந்து நிற்கும் எருதும், பின்பக்கத்தில் யானையின் உருவமும் காணப்படும் நாணயங்கள்.
- முன்பக்கத்தில் யானை அல்லது எருதின் உருவமும் (தெளிவில்லை), பின்னால் மீனின் உருவமும் பதித்த தேய்ந்த நிலையிலுள்ள நாணயம் (Pushparatnam, 2002: 97–98).
இந்த நாணயங்களை முன்னர் ஆராய்ந்த ஹியூபேர்ட் பிடுல்வ் (Biddulph, 1966: 32) இவற்றை பாண்டிய அரசனான ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வட இலங்கை வழியாக படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றிய சமயம் வெளியிட்ட நாணயங்களாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த அரசன் தனது ஆட்சியில் பாண்டிய நாட்டில் வெளியிட்ட நாணயங்கள் எல்லாம் வட்ட வடிவானவை. சங்க காலத்தின் பின்னர் எந்தத் தமிழக அரசரும் சதுர வடிவான நாணயங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாணயத் தொடர் 9
சிங்கை நகர் அரச நாணயங்கள்: கி.பி. 800 – கி.பி. 1242.
இக்காலத்தில் வெளியான யாழ்ப்பாண நாணயங்களில் காணப்படும் சின்னங்கள் ஆரம்ப-மத்தியகால யாழ்ப்பாண நாணயங்களின் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலை தரும் தகவல்களின்படி கதிரைமலை (கந்தரோடை) அரசர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தங்களது அரச தலைநகரை செங்கடக நகருக்கு (சிங்கைநகர்) மாற்றிக் கொண்டார்கள் என அறிய முடிகிறது. சிங்கைநகர் இருந்த இடம் இன்றைய யாழ்ப்பாணக் கோட்டை இருந்த இடம் என்பது சந்தேசய நூல்கள் தரும் தகவல்களின்படி பரணவிதானவினால் நிறுவப்பட்டது ஏற்கனவே (இயல்-5) கூறப்பட்டிருக்கிறது.
இந்த யாழ்ப்பாண நாணயங்களில், ஆரம்பகால நாணயங்களில் முன்பக்கத்தில் ஒரு குதிரையின் உருவமும், பின்னால் மீன் உருவங்களும் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து வந்த காலங்களில் வெளிவந்த நாணயங்களில் முன்பக்கத்தில் உட்கார்ந்த நிலையிலுள்ள எருதின் உருவம் (நந்தி) காணப்படுகிறது. இந்நந்தியின் மேல் பிறைநிலவு உருவமும், இரு பக்கங்களிலும் இரு குத்துவிளக்குகளும் காணப்படுகின்றன. நாணயங்களின் மறுபக்கத்தில் இரண்டு அல்லது மூன்று மீன்களின் உருவங்கள் காணப்படுகின்றன.
சேயோன் (1998: 54–57) இம்மாதிரியான நாணயங்களை யாழ்ப்பாணம், மன்னார், மாதோட்டம் ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொண்டார். வடிவேலு என்பவர் பூநகரி பிரதேசத்திலிருந்து 302 நாணயங்களைப் பெற்றுக்கொண்டார். கலாநிதி புஷ்பரட்ணம் ஈழவூர் உடையார் குமாரசாமியின் மாந்தோப்பிலிருந்து இம்மாதிரி 600 நாணயங்களைப் பெற்றுக்கொண்டார். இவ்வாறு பெருந்தொகையான நாணயங்களை பூநகரிப் பகுதியிலிருந்து பெற்றுக்கொண்டமையால் சிங்கைநகர் பூநகரிப் பகுதியில் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார் (Pushparatnam, P. 2002: 110).
இந்த நாணயங்களின் பலவகையான வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாணயங்களின் பின்னால் காணப்படும் இரண்டு அல்லது மூன்று மீன்கள் சில நாணயங்களில் ஒரே பக்கம் நோக்கியும், சிலவற்றில் ஒன்றிற்கு ஒன்று எதிராக நோக்கியும் காணப்படுகின்றன. அநுராதபுரத்தில் கண்டெடுத்த நாணயங்களில் ஒரு பக்கம் எருதும், மறுபக்கத்தில் இரு மீன்களும் காணப்படுகின்றன (Bopearachchi, 1958: 157).
இற்றைக்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான வட இலங்கை நாணயங்களை ஆராய்ந்த பிரித்தானிய நாணயவியலாளரான ஜேம்ஸ் பிரின்ஸெப் (James Prinsep, 1858: 491.23) இவற்றை இலங்கையில் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் என ஒப்புக்கொண்டார். ஆனால் பின்பக்கத்தில் இருந்த மீன் சின்னங்களைக் கொண்டு, இவை பாண்டிய அரசர்கள் இலங்கையைக் கைப்பற்றியிருந்த வேளையில் வெளியிட்ட நாணயங்கள் என முடிவெடுத்தார். இவ்வகையான நாணயங்கள் தமிழ்நாட்டில் காணப்படவில்லை.

சிங்கைநகர அரசர்களின் நாணயங்கள். ஒரு சில நாணயங்களின் முன்பக்கத்தில் குதிரை உருவம் காணப்பட்ட போதிலும், பெரும்பாலான நாணயங்களில் எருதே அரச இலச்சினையாக குத்து விளக்குகளோடு காணப்படுகிறது. இதிலிருந்து யாழ்ப்பாண அரசர்கள் சிங்கைநகர் ஆட்சிக் காலத்திலிருந்தே நந்தியை அரச இலச்சினையாகக் கொண்டிருந்தார்கள் என்பது புலனாகிறது.
நாணயத் தொடர் 10
அரேபிய – சீன நாணயங்கள்: கி.பி. 600 – கி.பி.1200

யாழ்ப்பாணச் சிங்கை அரசர் கால சீன நாணயங்கள்
யாழ்ப்பாணச் சிங்கை அரசர் கால அரேபிய நாணயங்கள்
1921–22, 2017–18 ஆண்டுகளில் நடைபெற்ற யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளில் கி.பி. 600க்கும்–கி.பி. 1200க்கும் இடைப்பட்ட கால சசானிய, அரேபிய, சீன மட்பாண்டங்களுடன் அக்காலத்தைய அரேபிய, சீன நாணயங்களும் வெளிக்கொணரப்பட்டன. அரேபிய நாணயங்கள் செம்பு, பித்தளை, வெண்கலம் ஆகிய உலோகங்களால் ஆன வட்ட வடிவான நாணயங்கள். அவற்றில் சில நாணயங்களில் உம்மாயத் கலிபா அரசர்களின் (கி.பி. 661–750) பெயர் பதிக்கப்பட்டிருக்கிறது. இவற்றைத் தவிர பல மத்தியகால (Medieval Period) நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றோடு ஒப்பிடும் போது சீன நாணயங்கள் செம்பு, வெண்கலம் மற்றும் விலைமதிப்பற்ற வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களிலும் காணப்பட்டன. இந்த நாணயங்கள் அனைத்திலும் நடுவில் ஒரு சதுர வடிவான துவாரம் காணப்படுகிறது. இந்த நாணயங்களை ஒரு நூல் வழியாகக் கோர்த்து சுலபமாகக் கையாளுவதற்காக இந்த முறை மேற்கொள்ளப்பட்டது. சீனாவில் கின் வம்ச அரசர்கள் காலத்திலேயே (Qin Dynasty 206–221), கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் காலத்திலிருந்து, வட்ட வடிவான தரப்படுத்தப்பட்ட நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நாணயங்களின் காலப்பகுதியும், தொகையும் அக்கால யாழ்ப்பாணத்தில் செழிப்புற்றிருந்த அரேபிய, சீன வர்த்தகங்களின் அளவையும், பரவலையும் எடுத்துக்காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன.
நாணயத் தொடர் 11
சாவக அரசர்களின் நாணயங்கள்: கி.பி. 1250 – கி.பி. 1270.

சந்திரபானு வெளியிட்ட யாழ்ப்பாணச் ‘சாவக’ நாணயங்கள். ஒரு பக்கம் காளை உருவமும் மறுபக்கம் (கீழே) ‘சாவக’ என்ற எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது.
வரலாற்றுப் பின்னணி
கி.பி. 1215 இல் கலிங்கமாகனின் படையெடுப்பால் பொலநறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. கலிங்கமாகனும் அவனுடைய துணையரசனாகிய ஜெயபாகுவும் பொலநறுவையிலிருந்து ராஜரட்டையை நெடுங்காலம் ஆட்சிசெய்தனர் என சிங்கள வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அவனது ஆட்சிப்பரப்பு யாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசம், திருகோணமலை வரை பரவியிருந்தது. கலிங்கமாகனின் வேளக்காரப்படையில் வன்னியர்கள் இருந்தார்கள். மாகன் பொலநறுவையைக் கைப்பற்றிய பின் வன்னிப் பகுதியின் ஆட்சியை வன்னியருக்குப் பகிர்ந்து கொடுத்தான் என மட்டக்களப்புப் பூர்வசரித்திரம் கூறுகிறது. அதனைத் தொடர்ந்து வன்னிப் பகுதியில் பல சிற்றரசுகள் தோற்றம் பெற்றன. கோகர்ணம், கொட்டியாரம், கந்தளாய், மன்னார், மாதோட்டம், ஊராத்துறை போன்ற இடங்களில் மாகன் படைநிலைகளை அமைத்து பொலநறுவையிலிருந்து ஆட்சிபுரிந்தான் என சூளவம்சம் கூறுகிறது.
சந்திரபானு என்ற சாவக நாட்டு அரசன் கி.பி. 1247 இல் இலங்கையின் தம்பதெனியா சிங்கள அரசு மீது படையெடுத்து வந்தான். அவனால் வெற்றிகாண முடியவில்லை; தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டான். அவன் இரண்டாம் தடவையாக சோழ, பாண்டிய நாடுகளிலிருந்து படைகளைச் சேர்த்துக் கொண்டு வட இலங்கையில் மாகன் ஆட்சிபுரிந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்டு தம்பதெனியா அரசனான இரண்டாம் பராக்கிரமபாகுவைத் (கி.பி. 1236–1270) தாக்கினான். சந்திரபானுவால் மீண்டும் வெற்றிகாண முடியவில்லை. யாழ்ப்பாணம் திரும்பி சிங்கைநகரிலிருந்து ஆட்சி புரிந்தான்.
சாவகரின் ஆட்சி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடக்கிலுள்ள வன்னிப் பிரதேசத்திலும், திருகோணமலையிலும் அமைந்திருந்தது என்பதை 13ஆம் நூற்றாண்டின் திரிசிங்கள கடயம்பொத் என்ற நூல் குறிப்பிடுகிறது. சாவகச்சேரி, சாவங்கோட்டை, சாவகக்கோட்டை ஆகிய இடப்பெயர்கள் சாவகர் ஆட்சியில் தோற்றம் பெற்றன.
சந்திரபானுவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து முதலாம் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1253–1268) படையெடுப்பு வட இலங்கையின் மீது நடைபெற்று, யாழ்ப்பாணச் சாவக அரசு பாண்டியரின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் வரும் “துலங்கொழி மணியும், சூழி வேழமும் இலங்கை காவலனை இறைகொண்டருளி” என்ற வரிகளில் பாண்டியர்கள் யானைகளையும் மணிகளையும் திறையாகக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
பின்னர் பாண்டியர்களுக்கு சந்திரபானு திறை செலுத்த மறுத்ததனால் பாண்டிய அரசர்கள் படையெடுத்து வந்து அவனைத் தோற்கடித்து கொலை செய்தார்கள். சுந்தர பாண்டியனின் துணை அரசனாகிய வீரபாண்டியனுடைய பத்தாவது ஆண்டு மெய்க்கீர்த்தியில் “சோணாடும் ஈழமும் சாவகன் முடித்தலையும் கொண்டருளிய” என்ற வாசகம் வருகிறது. சோழ நாட்டையும் ஈழத்தையும் வென்று கைப்பற்றியதோடு சாவக அரசனின் முடித்தலையையும் இவன் கவர்ந்தான் என அறிய முடிகிறது.
பதினொராம் ஆண்டு முதலான வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி அவனது ஈழப் படையெடுப்பைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது. குடுமியாமலைச் சாசனத்திலும் வீரபாண்டியனுடைய இலங்கைப் படையெடுப்பைப் பற்றிய செய்திகள் வருகின்றன. வீரபாண்டியன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்து அந்நாட்டு மன்னன் ஒருவனைக் கொன்று, அவனுடைய முடி முதலான அணிகலன்களையும், சிங்காசனம், வெண்கொற்றக்குடை, சாமரம் முதலிய அரச சின்னங்களையும் கவர்ந்தான் என்றும், பின்னர் முன்பு தனக்குப் பகைத்தொழில் புரிந்து பின்பு பணிந்துவிட்ட சாவகனுடைய மைந்தனுக்கு ஆட்சியுரிமை வழங்கி, வீரக்கழல் அணிவித்து அவனை ஆனைமேல் ஏற்றி நகரத்திற்குச் செல்லவிட்டான் என்றும் அச்சாசனம் கூறுகிறது. இம் மெய்க்கீர்த்தி தரும் செய்திகளின் மூலம் யாழ்ப்பாணத்தில் சாவகர்கள் ஏற்படுத்தியிருந்த இராச்சியத்தை பாண்டியர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள் என அறிந்துகொள்ள முடிகிறது.
இதன் பின்னர் ஏற்பட்ட பாண்டிய மன்னர்களின் மேலாதிக்க வலுவும், வட இலங்கை அரச விவகாரங்களில் அவர்களின் தலையீடும், கி.பி. 1284ஆம் ஆண்டில் ஆரியச் சக்கரவர்த்தி என்பவனின் தலைமையில் நடைபெற்ற இலங்கைப் படையெடுப்பின் பின்விளைவுகளுமே யாழ்ப்பாண இராச்சிய மன்னர்களின் தோற்றத்திற்குக் காரணங்களாக அமைந்தன.
சாவக அரசர்கள் வெளியிட்ட யாழ்ப்பாண நாணயங்களில் உட்கார்ந்த நிலையிலுள்ள காளை உருவங்களை யாழ்ப்பாண அரசின் இலச்சினையாகப் பொறித்திருப்பதைக் காண முடிகிறது. சிங்கைநகர் அரசர்களின் இலச்சினையான காளையின் உருவத்தையே இவர்களும் அரச சின்னமாகப் பாவித்தார்கள். இவர்களின் நாணயங்களின் முன்பக்கத்தில் காளையின் உருவமும், மறுபக்கத்தில் ‘சாவக’ என்ற பெயர் பொறிப்பும் காணப்படுகின்றன.
நாணயத் தொடர் 12
யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகளின் அரச நாணயங்கள்: கி.பி. 1284 – கி.பி. 1450.
வரலாற்றுப் பின்னணி
பாண்டிய மன்னன் முதலாம் சடாவர்மனின் ஆட்சிக் காலத்தில் அவனது துணை அரசனான வீரபாண்டியன் இலங்கையின் மேல் படையெடுத்து, யாழ்ப்பாண அரசன் சாவகன் சந்திரபானுவைச் சிரச்சேதம் செய்து அவனது மகன் ‘சாவகன் மைந்தனை’ பாண்டியர்களின் மேலாதிக்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தின் அரசனாக்கியதை ஏற்கனவே பார்த்தோம். யாழ்ப்பாண விவகாரங்களைக் கவனிப்பதற்காக விட்டுச் சென்ற பிரதானிகளுள் பாண்டிமழவன் என்பவன் முக்கியமானவன்.
பாண்டிய நாட்டில் முதலாம் சடாவர்மனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய அரசைப் பேரரசாக்கி, இராச்சியத்தை உன்னத நிலைக்குக் கொண்டுவந்தான். யாழ்ப்பாணத்தில் அரசன் ‘சாவகன் மைந்தனை’ தொடர்ந்து வேறு அரசர்கள் இல்லாமையால் பாண்டிமழவன் அரச நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு சுந்தரபாண்டியனுக்குச் செய்தி அனுப்பினான். சுந்தரபாண்டியன் தனது தளபதிகளில் ஒருவனான ஆரியச்சக்கரவர்த்தி என்பவனைப் பெரும் படையுடன் கி.பி. 1284ஆம் ஆண்டில் இலங்கைக்கு அனுப்பிவைத்தான். இவன் யாழ்ப்பாண அரச அதிகாரத்தை எடுத்துக்கொண்டான்.
“Towards the end of the thirteenth century Āryaccakravarthi, a chieftain from the Pāndya kingdom acquired authority over the kingdom in the northern part of the island” (Pathmanathan, S. 1978: 5)
யாழ்ப்பாணத்தில் தனது படையுடன் நிலைகொண்ட ஆரியச்சக்கரவர்த்தி அங்கிருந்து யாப்பகுவவிலிருந்த சிங்கள அரசின் மீது படையெடுத்துச் சென்றான். அவனது படையெடுப்பைப் பற்றி சூளவம்சம் இவ்வாறு விவரிக்கிறது:
“முன்பு பஞ்சமொன்று நிலவிய காலத்திலே பாண்டிய இராச்சியத்தில் ஆட்சி புரிந்த மன்னர்கள் ஆரியச்சக்கரவர்த்தி என்னும் பெயர் கொண்ட தமிழ்ச் சேனாதிபதியின் தலைமையிற் படையொன்றை அனுப்பி வைத்தார்கள். அவன் ஆரியன் அல்லாதாயினும் மிகுந்த செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட பிரதானியாக விளங்கினான். இராச்சியத்தின் எல்லாப் பக்கங்களையும் அழித்துவிட்டு அரண்கள் பொருந்திய சுபபட்டணத்தினுள் (யாப்பகுவ) அவன் நுழைந்தான். அங்கிருந்த புனித தந்ததாதுவையும், விலை மதிக்கமுடியாத செல்வங்களையும் கவர்ந்து கொண்டு திரும்பினான்”.
சாவகர்களின் பின்னர் யாழ்ப்பாண இராச்சியத்தில் ஆட்சி ஏற்பட்டதற்கு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துப் பாண்டியப் படையெடுப்பின் விளைவே காரணமாகும். சூளவம்சம் குறிப்பிடும் படைத்தலைவனாகிய ஆரியச்சக்கரவர்த்தியோ, அவனது வம்சாவளியிலுள்ள ஒருவனோ யாழ்ப்பாணத்தில் அரசனாக அதிகாரம் பெற்றான். ஆரியச்சக்கரவர்த்தி என்பது யாழ்ப்பாணத்தில் அரசரின் இயற்பெயராகவன்றி வம்சப் பெயராகவே வழங்கி வந்தது (சிற்றம்பலம், சி.க. 1992: 30–33).

யாழ்ப்பாண இராச்சிய ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களின் சேது நாணயங்கள்.
சேது நாணயங்கள்
நீண்ட காலமாக யாழ்ப்பாண மக்கள் ஐரோப்பியரின் ஆட்சியின் கீழ் இருந்தமையால் சேது நாணயங்களைப் பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை. சேது நாணயங்களிலே மிகப் பெரும்பாலானவை இலங்கையின் வடபகுதிகளிலே ஈழ மன்னர் பலரின் நாணயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுவாமி ஞானப்பிரகாசர் எழுபது சேது நாணயங்களைத் தேடிப் பெற்று ஆராய்ந்த பின்னர், அவற்றை யாழ்ப்பாண மன்னர்களே வெளியிட்டனர் என்பதை முதன்முதலாக தக்க சான்றுகளுடன் நிறுவினார் (Gnanapragasar, S. 1920: 172–179).
யாழ்ப்பாணத்தை அரசாண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் சேதுவுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத சுவாமி கோயிலின் திருப்பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பினையும் அவர்கள் ஏற்றிருந்தனர். யாழ்ப்பாணத்து ஆரியச்சக்கரவர்த்திகள் சேது காவலன் என்ற விருதினைக் கொண்டிருந்தனர் என்பதை ‘செகராசசேகரமாலை’, ‘தக்ஷிண கைலாசபுராணம்’ ஆகிய யாழ்ப்பாணத்து நூல்கள் அறியத்தருகின்றன. நாணயங்களில் காணப்படும் ‘சேது’ என்ற பதிவு, ‘சேதுகாவலன்’ என்ற சொல்லின் குறுகிய வடிவமாகும். சேது நாணயங்களை ஆராய்ந்த நாணயவியலாளர்கள் இவற்றின் உருவம், அமைப்பு, எடை என்பவற்றைக் கொண்டு இவற்றை நான்கு வகையாகப் பிரிவுபடுத்தியுள்ளனர் (Pathmanathan, S. 1980: 409–447).
வகை 1
இவை 13 ஆம் நூற்றாண்டுச் சோழ நாணயங்களை ஒத்தவை. சராசரி 0.74 அங்குல விட்டமும் 61.7 கிரெயின் நிறையும் கொண்ட இந்த நாணயங்கள், அவற்றை ஒத்த சோழக் காசுகளை விடப் பெரியவை. இவை வார்க்கப்பட்ட செப்பு நாணயங்கள். இவற்றின் முற்பக்கத்தில் கிரீடம் அணிந்து நிற்கும் அரசனின் தோற்றம் காணப்படும். வலக்கரத்தின் கீழ் ஒரு விளக்குச் சுடரும், இடக்கரத்தின் கீழ் ஒரு திரிசூலமும் காணப்படும். நாணயத்தின் பின்பக்கத்தில் உட்கார்ந்த நிலையில் நந்தி (காளை) உருவமும், அதன் கீழே ‘சேது’ என்ற மொழியும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நாணய வகையில் மூன்று ரகங்கள் உள்ளன. முன்புறம் காணப்படும் உருவங்களில் விளக்கு, மயிலின் தலை, திரிசூலம், பிறைச் சந்திரன் என்பன கலந்து காணப்படும். ஆரியச் சக்கரவர்த்திகள் இடபத்தையே தமது அரச இலச்சினையாகக் கொண்டு நந்தி உருவத்தை தமது நாணயங்களிலே பதித்தார்கள்.
வகை 2
இவ்வகை நாணயங்கள் முதலாம் வகை போலவே அமைந்துள்ளன. முன்பக்கத்தில் அரசனின் உருவத்தின் இடது பக்கத்தில் நந்தியின் சிறு உருவம் பதித்திருக்கும். பின்புறத்தில் நந்தியின் உருவத்தைச் சுற்றிவர புள்ளிகளால் ஆன ஒரு வளையம் நாணய விளிம்பில் காணப்படும். இப்புள்ளி வளையம் சில நாணயங்களின் இரு பக்கங்களிலும் காணப்படும். இந்த நாணயங்கள் சராசரி 0.80 அங். விட்டமும் 61 கிரெயின் நிறையும் கொண்டவை. முன்புறத்தைப் போல பின்புறத்திலுள்ள உருவங்களும் ஒரு வட்டத்தினுள்ளே அமைக்கப்பட்டு, சுற்றிலும் புள்ளிகள் காணப்படும்.
வகை 3
அழகுமிக்க கலை வனப்பான இந்த நாணயங்கள் ஆரியச் சக்கரவர்த்திகளின் உலோகத் தொழிற்சாலைகளில் தொழில் புரிந்த தொழிலாளர்களின் தொழில்நுட்பத்திற்கும், கலைத்திறனுக்கும், வார்ப்புக்கலையின் முன்னேற்றத்திற்கும் எடுத்துக்காட்டாக அமையக்கூடியவை. நாணயத்தின் முன்பக்கமுள்ள அரச உருவம் மெலிந்தும், நேராகவும் காணப்படும். வலது கரத்தின் கீழ் வச்சிராயுதம் போன்ற உருவமும், இடப்பக்கத்தில் திரிசூலம் மற்றும் செங்கோல் போன்ற நேர்கோடும் காணப்படும்.
நாணயத்தின் பின்பக்கத்தில் நந்தியின் தலையின் மேல் சற்றுப் பின்புறமாக பிறைச்சந்திர வடிவமும், அதன்மேல் ஒரு தாரகையைக் குறிப்பிடும் புள்ளியும் காணப்படும். நந்தியின் முன்னும் பின்னும் மும்மூன்று புள்ளித் தொகுதிகள் உள்ளன. நந்தியின் கீழே ஒரு தடித்த கோடு வரையப்பட்டிருக்கும். அக்கோட்டின் கீழே ‘சேது’ என்ற வாசகம் காணப்படும்.
மேற்குறிப்பிட்ட நாணயத்தின் ஒரு வேறுபாடாக நந்தியின் உருவம் ஒரு அரைவட்டத்தினுள்ளும், கீழே ‘சேது’ என்ற வாசகம் ஓர் அழகிய வட்டத்தினுள்ளும் அமைந்துள்ளன. வட்டங்களைச் சுற்றி புள்ளிகளினாலான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலுள்ள நாணயத்தின் மற்றொரு வேறுபாடான அளவில் சிறிய நாணயத்தில் வட்ட வளையங்களைச் சுற்றி ஒரு சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை நாணயங்கள் மிக அரிதாக உள்ளன.
வகை 4 – தாமரை நாணயங்கள்
இவ்வகையான நாணயங்கள் அளவில் சிறியன. அவை சராசரி 34.67 கிரெயின் நிறை கொண்டவை. அவற்றின் முன்பக்கத்தில் மற்றைய நாணயங்களில் வரும் அரச உருவங்களுக்குப் பதிலாக அழகிய எட்டு இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் வடிவம் காணப்படும். மறுபக்கத்தில் நந்தியின் உருவமும், கீழே ‘சேது’ என்ற மொழியும் காணப்படும். இதன் ஒரு வேறுபாடாக முன்பக்கத்திலுள்ள தாமரை மலரின் நடுவே ‘சேது’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் (Pathmanathan, S. 1980: 409–447).

நாணயத் தொடர் 13
நல்லூர் அரச நாணயங்கள்: கி.பி. 1450 – கி.பி. 1467, கி.பி. 1467 – கி.பி. 1619.
வரலாற்றுப் பின்னணி
தென் இலங்கைக் கோட்டை அரசின் அரசனாக கி.பி. 1415 இல் ஆறாம் பராக்கிரமபாகு அரசகட்டில் ஏறினான். விவேகமும், ஆற்றலும், சாதுரியமும் கொண்ட அரசனான பராக்கிரமபாகு இலங்கை முழுவதிலும் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டான். கண்டி இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள் ஆகியவற்றைக் கைப்பற்றியமை இவனுடைய சிறப்புமிக்க சாதனைகள் என ராஜாவலிய, கிராசந்தேசய ஆகிய நூல்கள் புகழ்ந்துரைக்கின்றன.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை கனகசூரிய சிங்கையாரியன் என்ற அரசன் சிங்கைநகரிலிருந்து ஆட்சி புரிந்தான். மலையாள தேசத்துப் போர் வீரனான பணிக்கன் ஒருவனின் மகனும், பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமான செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான். கனகசூரியன், செண்பகப் பெருமாளை எதிர்த்து இயன்றவரை போர் புரிந்துவிட்டு, நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலையில் தனது மனைவி, மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடினான்.
உக்கிரமான போரின் போது யாழ்ப்பாண சிங்கைநகருக்கு ஏற்பட்ட பேரிழப்பால் அரச மாளிகைகள் அழிவுற்றன. செண்பகப் பெருமாள் நல்லூரில் இராசதானி அமைத்து கி.பி. 1450 இல் புவனேகபாகு என்ற பட்டப் பெயரில் முடிசூடிக்கொண்டான். யாழ்ப்பாண மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காக நல்லூரில் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். நல்லூர் கந்தசுவாமி கோயிலைச் செண்பகப் பெருமாளே தாபித்தான் என்பதற்கு அக்கோயிலில் இன்றுவரை ஓதப்பட்டுவரும் கட்டியம் ஆதாரமாக அமைகிறது.
கி.பி. 1477 இல் கோட்டை அரசனான பராக்கிரமபாகு இறந்தவுடன், செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தனது படைவீரர்களை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று, பராக்கிரமபாகுவின் உறவினனான ஜயவீர பராக்கிரமபாகு என்பவனுடன் போர் புரிந்தான். அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றி ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு என்ற பட்டப் பெயரோடு அங்கே ஆட்சி புரிந்தான்.
செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டுப் போன பின்னர் கனகசூரிய சிங்கையாரியன் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தனது ஆட்சியை மீட்டெடுத்துக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியம் கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. கனகசூரியன் நல்லூரில் தலைநகரமைத்து அங்கிருந்து ஆட்சி புரிந்தான். அவனைத் தொடர்ந்து நல்லூர் அரசர்கள் தங்களை சிங்கை ஆரியர்கள் எனக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நல்லூர் அரச நாணயங்கள் முன்புபோல நந்தியின் உருவத்தைத் தொடர்ந்து அரச இலச்சினையாகக் கொண்டிருந்தன.

கி.பி. 1450க்குப் பின்னர் நல்லூரிலிருந்து யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களின் நாணயங்கள். யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்கள் எல்லோரும் சிங்கைநகர் காலத்திலிருந்தே எருதையோ அல்லது நந்தியையோ அரச இலச்சினையாகக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
நாணயத் தொடர் 14
யாழ்ப்பாணக் கந்தன் நாணயங்கள்
பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தனது தொல்லியல் ஆய்வுகளின் போது மண்ணித்தலை, பூநகரி ஆகிய இடங்களில் மயில் உருவம் பதித்த கந்தவேள் நாணயங்களைக் கண்டெடுத்தார். கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்குரிய அழகுமிக்க கலை எழில் கொண்ட இந்த நாணயங்கள் வட இலங்கையில் ஒரு பெரிய கந்தசுவாமி கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்த காலத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத இடமிருக்கிறது. நாட்டில் பெரிய கந்தசாமி கோயில்கள் இல்லாத காலத்தில் இப்படியான நாணயங்களை வெளியிட்டிருக்க மாட்டார்கள் எனத் தோன்றுகிறது. வட இலங்கையில் 15ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஒன்றைத்தவிர வேறு பெரிய கந்தன் கோயில்கள் இருந்ததாக வரலாறு இல்லை. 15ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் கட்டப்பட்ட பெரிய கந்தசுவாமி கோயில் நல்லூர்க் கந்தன் ஆலயம் ஒன்றுதான்.
ஆரம்பகால நல்லூர்க் கந்தன் கோயில் தென்னிந்தியக் கோயில்களுக்கு இணையாக ‘யாழ்ப்பாணத்திலே மிகப் பெரிய கோயிலாக இருந்தது’ என்றும், இக் ‘கோயிலைச் சுற்றி நெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்தன’ என்றும் குவறோஸ் பாதிரியார் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நாணயங்கள் சப்புமால் குமாரய என்ற செண்பகப் பெருமாள் (கி.பி. 1450–1467) நல்லூர் கந்தசுவாமி கோயிலைக் கட்டி யாழ்ப்பாண மக்களுக்காக அர்ப்பணித்த சமயம் வெளியிட்ட நாணயங்களாக இருக்கலாம். இது ஒரு கற்கைநெறி பேணிய ஊகமாகும் (Educated Guess). 15ஆம் நூற்றாண்டில் வேறு எந்த அரசனும் ஒரு கந்தசுவாமி கோயிலைக் கட்டியதாக வரலாறு இல்லை.
கந்தன் நாணயங்களில் மூன்று வகையான நாணயங்கள் காணப்படுகின்றன:
வகை 1
செப்புக் கலவை கொண்டு உருக்கி வார்த்த இந்த நாணயங்கள் முழுநிறைவான வட்ட வடிவம் கொண்டவை. 15.6 மி.மீ. விட்டமும், 1.7 மி.மீ. தடிப்பும் கொண்ட இந்த நாணயங்கள் 2.93 கிராம் நிறை கொண்டவை. நாணயத்தின் முன்பக்கத்தில், நாணயத்தின் வட்ட விளிம்பினுள்ளே இரு இணை கோடுகளும், அவற்றினுள்ளே தடித்த புள்ளிகளாலான வளையமும் காணப்படுகின்றன. உள்ளே வாயில் ஒரு பாம்பைக் கவ்விய, இடது பக்கம் பார்த்த அழகான மயிலின் உருவம் காணப்படுகிறது. மயிலின் மேலே பிறைநிலாவும், அதன்மேல் ஒரு தாரகையும் காணப்படுகின்றன.
நாணயத்தின் மறுபக்கத்திலும் வட்டமான இணை கோடுகளும், அவற்றின் இடையில் தடித்த புள்ளிகளாலான வளையமும் காணப்படுகின்றன. வளையத்தின் உள்ளே மேல் பக்கத்தில் கந்தனைக் குறிக்கும் ‘கந்’ என்ற எழுத்துப் பதிவும், வலது பக்கத்தில் வேலின் உருவமும், இடது பக்கத்தில் தெளிவில்லாத ஒரு முக்கோண வடிவமும் காணப்படுகின்றன. கீழே பெட்டி வடிவிலான சதுர அடையாளமும், அதன் இடது பக்கத்தில் திருவாச்சி போன்ற வடிவமும் காணப்படுகின்றன.
நாணய வகை 1

நாணய வகை 2

நாணய வகை 3

மேலே காணப்படும் முதல் இருவகை நாணயங்களும் சப்புமால் குமாரய என்ற செண்பகப் பெருமாள் நல்லூர் கந்தசுவாமி கோயிலைக் கட்டி யாழ்ப்பாண மக்களுக்காக அர்ப்பணித்த சமயம் வெளியிட்ட கந்த நாணயங்களாக இருக்க வேண்டும். கடைசியில் உள்ள நாணயம் கனகசூரிய சிங்கை ஆரியன் நல்லூரிலிருந்து ஆட்சிசெய்த காலத்தைய நாணயமாக இருக்கலாம். நன்றி: கலாநிதி ப. புஷ்பரட்ணம்.
வகை 2
செப்புக் கலவை கொண்டு உருக்கி வார்த்த இந்த நாணயம் 13.9 மி.மீ. விட்டமும், 2.4 மி.மீ. தடிப்பும், 3.25 கிராம் நிறையும் கொண்டது. இந்த வகையான நாணயங்கள் இரு ரகங்களாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ரகத்தில் உருவங்கள் உள்நோக்கிச் செதுக்கப்பட்ட மாதிரி அமைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற ரகத்தில் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக (Embossed Images) அமைக்கப்பட்டிருக்கின்றன.
நாணயத்தின் வட்ட விளிம்பினுள்ளே தடித்த புள்ளிகளாலான வளையமும், அதனுள்ளே வலது பக்கம் பார்த்த பாம்பைக் கவ்விய மயிலின் உருவமும் பதிக்கப்பட்டிருக்கின்றன. நாணயத்தின் மறுபக்கத்தில் ‘ஆ’ என்ற எழுத்தும், அதனோடு கீழே இணைக்கப்பட்ட இரு கால்களும் காணப்படுகின்றன.
வகை 3
செப்புக் கலவை கொண்டு வார்க்கப்பட்ட இந்த நாணயங்களில் மற்றைய நாணயங்களைப் போல நாணயத்தின் வட்ட விளிம்பினுள்ளே தடித்த புள்ளிகளினாலான வளையம் காணப்படுகிறது. அதனுள்ளே இடது பக்கம் பார்த்த மயிலும், அதை எதிர்நோக்கிய நந்தி உருவமும், நந்தியின் மேல் வழமையான பிறைச்சந்திரனும் பதிக்கப்பட்டிருக்கின்றன. கீழ்ப்பக்கத்தில் ‘சேது’ என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மயிலின் உருவம் காணப்படுவதனால் இந்நாணயம் நல்லூர்க் கந்தன் ஆலயம் கட்டி முடித்த பின்னரே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் எனலாம். அத்துடன் நந்தியின் உருவமும், ‘சேது’ வாசகமும் காணப்படுவதனால், செண்பகப் பெருமாளின் பின்னர் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த ஆரியச்சக்கரவர்த்தியான சேதுகாவலன் கனகசூரிய சிங்கையாரியன் ஒருவன்தான் இதனை வெளியிட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.
உசாத்துணை நூல்கள், கட்டுரைகள்
BEGLEY, VIMALA (1981): ‘Excavations at Pomparippu 1970’, Ancient Ceylon No. 4, May 1981, Colombo.
BEGLEY, VIMALA. (1983): Arikamedu Reconsidered, American Journal of Archaeology, 87: 461-81.
BEGLEY, VIMALA. (1988): Rouletted Ware at Arikamedu: A New Approach, American Journal of Archaeology, 92: 427-40.
BIDDULPH, C. H. (1966): Coins of Pandyas, NNM No. 11 of the Numismatic Society of India, Bombay.
BOPEARACHCHI, OSMUND (1998): Archaeological Evidence on Changing Patterns of International Trade Relations of Ancient Sri Lanka in Origin and Circulation of Foreign Coins in the Indian Ocean (Ed.): Bopearachchi, O., and Weerakkody, D.P.M.; Sri Lanka, Society for Numismatic studies and French Mission of Archaeological Cooperation in Sri Lanka, New Delhi.
BOPEARACHCHI, O and WICKRAMASINGHE, W. (1999): Ruhuna – An Ancient Civilization Revisited: Numismatic and Archaeological Evidence on Inland and Maritime Trade, Nugegoda.
CARAWELL, JOHN; DERANIYAGALA, SIRAN; GRAHAM, ALAN (2013): Mantai City by the Sea, Linden Soft Verlag, Aichwald, Germany.
CODRINGTON, H.W. (1924): Ceylon Coins and Currency, Memoirs of the Colombo Museum, Series A, No. 3, Colombo.
CULAVAMSA transl. Wilhelm Geiger (1930): Part II, PTS, London.
DERANIYAGALA, S.U. (1972): ‘Archaeological Exploration in Ceylon, Kollan Kanatta, Vilpattu’, Ancient Ceylon No. 2, December 1972, Colombo.
DERANIYAGALA, S.U. (1972): ‘The Citadel of Anuradhapura 1969: Excavation in the Gedige Area’, Ancient Ceylon No. 2, Colombo.
GNANAPRAKASAR, S. (1920): The Forgotten Coinage of the Kings of Jaffna, Ceylon Antiquary and Literary Register, 5 (4), April 1920.
GUPTA, P.L. (1965): The Early Coins from Kerala, Dept. of Archaeology, Govt. of Kerala, Trivandrum.
GUPTA, P.L. (1969): Coins, National Book Trust, New Delhi.
GURURAJA RAO, B.K. (1972): The Megalithic Culture in South India, University of Mysore, India.
KRISHNAN, K. & CONINGHAM, R.A.E. (1997): Microstructural Analysis of Samples of Rouletted Ware and associated Pottery from Anuradhapura, Sri Lanka, In E.R. Allchin & B. Allchin (ed.) South Asian Archaeology, 1995, Vol.2 : 925-37, Oxford and IBH, New Delhi.
KRISHNAMURTHY, R. (1991): Oblong Coin with a Mother Goddess Symbol from Karur, Tamilnadu in Journal of the Numismatic Society of India, 53: 59-61.
KRISHNAMURTHY, R. (1997): Sangam Age Tamil Coins, Garnet Publications, Madras.
KRISHNAMURTHY, R. (2004): The Pallava Coins, Garnet Publications, Chennai.
KRISHNARAJAH, S. (1983): Coins obtained in the Jaffna Peninsula (in Tamil) Cintanai, 1: 71-84.
LÖVENTHAL, Rev Eduard (1888): The Coins of Tinnevelly, Higginbotham & Co., Madras.
MAHADEVAN, I. (1970): Some Rare Coins of Jaffna, in Damilica I: 111-120.
MAHADEVAN, I. (2003): Early Tamil Epigraphy, Harvard University, Massachusetts, USA.
MITCHINER, M. (1998): The Coinage and History of Southern India, Tamil Nadu-Kerala Part I & II, Hawkins Publications.
NILAKANTA SASTRI, K.A. (2009): The Illustrated History of India, Oxford University Press.
PARKER, HENRY (1909): Ancient Ceylon, Luzac & Co., London. (Reprint 1981), Asian Educational Services, New Delhi.
PATHMANATHAN, S. (1978): The Kingdom of Jaffna, Arul M. Rajendran, Colombo.
PATHMANATHAN, S. (1980): Coins of Medieval Sri Lanka: The Coins of the Kings of Jaffna, Spolia Zeylanica, Vol.35, Parts I & II : 409-417.
PETRIE, W.M.FLINDERS (1931): Seventy Years in Archaeology, London. (Reprint 1969), Greenwood Press, Westport.
PIERIS, PAUL E. (1917): Nagadipa and the Buddhist Remains in Jaffna, Part I Journal of the Royal Asiatic Society (C.B.), Vol. XVII, No. 70, Colombo.
PRENSEP, S. (1858): Ceylon Coins in Essays on Indian Antiquities, London.
PUJAVALIYA Ed. A.V.Suraveera (1959): Colombo, Ceylon.
PUSHPARATNAM, P. (2002): Ancient Coins of Sri Lankan Tamil Rulers, Bavani Publishers, Chennai.
PUSHPARATNAM, P. (2021): Recent Archaeological Excavations within the Jaffna Fort: Sir Pon. Ramanathan Memorial Lecture, Jaffna.
QUEYROZ, FERNAO DE. Transl. by Fr S.G.Perera (1930): The Temporal and Spiritual Conquest of Ceylon, Colombo.
RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Madras.
SAHNEY, VIMALA (1965): ‘The Black and Red Ware’ in The Iron Age of South India, Ph.D. Thesis, University of Pennsylvania.
SEYON, K.N.V. (1998): Some Old Coins Found in Early Ceylon, Nawala, Sri Lanka.
SITRAMPALAM, S.K. (1980): The Megalithic Culture in Sri Lanka, Ph D Thesis, Deccan College, Poona.
SIVASAMY, V. (1974): Coins of Jaffna (in Tamil), Tellippalai.
SOUNDARA RAJAN, K.V. (1969): ‘Megaliths and Black and Red Ware’ in Seminar Papers on the Problems of Megaliths in India, Varanasi.
TYLDESLEY, JOYCE (2005): Egypt, BBC Books, London
WHEELER, R.E.M., GHOSH, A. & DEVA, K. (1946): Arikamedu: An Indo Roman Trading Station on the East Coast of India, Ancient India 2: 17-124.
WHEELER, R.E.M. (1966): Civilizations of the Indus Valley and Beyond,Thames and Hudson, London.
WHEELER, R.E.M. (1968): The Indus Civilization, Cambridge University Press, Cambridge.
YALPANA VAIPAVA MALAI Transl. C.Brito (1879): Colombo, Ceylon.
சிற்றம்பலம், சி.க. (1992): யாழ்ப்பாண இராச்சியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
புஷ்பரட்ணம், ப. (2001): இலங்கைத் தமிழரின் பண்டைய நாணயங்கள், யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாண வைபவமாலை (1950): (பதி.) குல சபாநாதன், கொழும்பு.



