இலங்கை ஒரு வெப்பமண்டலத் தீவு நாடாகும். இது வட அரைக்கோளத்தில் 5°55’ முதல் 9°51’ வரையான வட அகலங்களுக்கும் 79°41’ முதல் 81°53’ வரையான கிழக்கு நீளங்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. புவியியல் வரலாற்றில் நீண்டகால மாற்றங்களின் விளைவாக இலங்கை இன்றைய நிலைப்பாட்டை அடைந்துள்ளது. ப்ரீகேம்பிரியன் காலத்திலிருந்து ஹோலோசீன் காலம் வரை நிகழ்ந்த நிலத்தட்டு இயக்கங்கள் மற்றும் புவிச்சரிவு மாற்றங்கள் தீவின் புவியியல் அமைப்பை உருவாக்கியுள்ளன.
இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதி பாலைஒப்ரோட்டெரோசோயிக் (Paleoproterozoic) காலத்தைச் சேர்ந்த ‘Gneiss’ மற்றும் மாற்றப்பாறைகளால் ஆனது. இப்பாறைகள் சுமார் 3,000 முதல் 2,000 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன. மேலும், நியோப்ரோட்டெரோசோயிக் காலத்தில் உருவான பான்–ஆபிரிக்க (Pan-african) அதிவெப்ப மாற்றப்பாறைகளும் இலங்கையில் காணப்படுகின்றன. காம்பிரியன் முதல் குவாட்டர்னரி காலம் வரை உருவான பாறைப் படிவங்கள் பெரும்பாலும் கடலோரப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
இலங்கையின் அடிப்படைப் பாறைகள் ப்ரீகேம்பிரியன் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றன. இக்காலம் சுமார் 2.8 பில்லியன் ஆண்டுகள் நீடித்ததாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், பண்டைய மாற்றப்பாறை உருவாக்கங்கள் மற்றும் புவிச்சரிவு மாற்றங்களின் காரணமாக இப்பாறைகளைத் தெளிவாக அடையாளம் காணுவது சிரமமாக உள்ளது. நிலத்தட்டு இயக்கங்களின் விளைவாக கீழ் பெர்மியன் மற்றும் மேல் பெர்மியன் காலங்களில் இலங்கை வடதிசை நோக்கி நகர்ந்ததாக புவியியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அக்காலத்தில் அண்டார்டிகா, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, மடகஸ்கார், அவுஸ்ரேலியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் போன்ற நிலப்பரப்புகள் பிரிந்து நகர்ந்ததாகக் கருதப்படுகிறது.
நிலவடிவ அமைப்பின் அடிப்படையில் இலங்கைப் பரப்பை பல்வேறு நிலப்பகுதிகளாகப் பிரிக்கலாம் (இலங்கையின் நிலத்தோற்றத்தின் உயரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஒரு படம் தரப்பட்டுள்ளது). பொதுவாக மேற்கு முதல் கிழக்கு நோக்கி காணப்படும் நிலவடிவங்கள் நான்கு முக்கிய சமப்படுத்தப்பட்ட நிலப்பரப்புகளாக (Planated Surfaces) வகைப்படுத்தப்படுகின்றன.
- கடலடியில் மூழ்கிய நிலப்பரப்பு.
- சமவெளி முதல் அலை போன்ற நிலப்பரப்பு, உருளும் மற்றும் மலைச்சரிவு நிலப்பகுதிகள்.
- ஆழமாக வெட்டப்பட்ட உருளும் மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகள்.
- மலைப்பாங்கான மற்றும் கடினமான மத்திய மலைநாடு.

மத்திய மலைநாடு இலங்கையின் உயர்ந்த நிலப்பகுதியாகும். இப்பகுதியிலிருந்து தீவின் பெரும்பாலான ஆறுகள் தோன்றி பல்வேறு திசைகளில் பாய்ந்து கடலை அடைகின்றன. மலைச்சிகரங்கள், மேட்டு நிலங்கள், சமவெளிகள், பள்ளத்தாக்குகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் இன்சல்பெர்க் போன்ற நிலவடிவங்கள் இலங்கையின் புவியியல் மற்றும் நிலவடிவ வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.
இலங்கையின் நிலவடிவ வளர்ச்சியிலும் சுற்றுச்சூழல் அமைப்பிலும் ஆற்றுப்படுகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய மலைநாட்டில் தோன்றும் ஆறுகள் பல்வேறு நிலவடிவங்களை வெட்டி வடிவமைத்து சமவெளிகளை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் ஆற்றுப்படுகைகள் மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் நிரப்பு, விவசாயப் பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் போன்ற பல்வேறு பண்புகளை நிறைவேற்றுகின்றன.
இலங்கையின் முக்கிய ஆற்றுப்படுகைகள் மத்திய மலைநாட்டிலிருந்து பல திசைகளில் பாய்ந்து கடலை அடைகின்றன. மகாவலி, களனி, களு, வாலவே, அருவி ஆறு போன்ற பல ஆறுகள் நாட்டின் நீர்வள அமைப்பில் முக்கிய இடம் பெறுகின்றன. இவ்வாறான ஆறுகள் பிராந்திய புவியியல் மற்றும் நிலவடிவ அமைப்புகளின் தாக்கத்தால் வெவ்வேறு திசைகளில் பாய்கின்றன.
எனவே, இலங்கையின் நிலவடிவ அமைப்புகளையும் ஆற்றுப்படுகை அமைப்புகளையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக விளக்குவது அவசியமாகிறது. புவியியல் அமைப்பு, நிலவடிவ வளர்ச்சி மற்றும் நீரேற்ற அமைப்புகளின் பரஸ்பர தொடர்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம் நாட்டின் நீர் வளங்களைச் சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் நிலையான விவசாய வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படலாம்.
இலங்கையில் வாழும் மக்களின் முக்கிய உணவாக அரிசி திகழ்கிறது. இலங்கையில் நெல் சாகுபடிக்கு நீண்டகால வரலாறு உள்ளது. நாட்டின் சாதகமான காலநிலை மற்றும் இயற்கை வளங்கள் காரணமாக நெல் சாகுபடி சிறப்பாக வளர்ச்சி பெற்றதுடன், இலங்கை மக்களின் வாழ்வியல் முறையாகவும் உருவெடுத்தது. இதன் விளைவாக, இலங்கையில் பயிரிடப்படும் மொத்த விவசாய நிலப்பரப்பில் சுமார் 34% பகுதியை நெல் சாகுபடி ஆக்கிரமித்துள்ளது. மேலும், சுமார் 2.15 மில்லியன் விவசாயக் குடும்பங்கள் நேரடியாக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றன. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் நெல் சாகுபடி மிக முக்கிய பங்காற்றுகிறது. எனவே, நெல் உற்பத்தியை அதிகரிப்பதும், பாசன வசதிகளை மேம்படுத்துவதும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு அவசியமானதாகும்.
நெல் சாகுபடிக்கான முக்கியமான இயற்கை வளம் நீராகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. நீர்வளங்களை பாதுகாக்கவும், திறம்பட பயன்படுத்தவும் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நீர்வள மேலாண்மை மற்றும் பாசன நடவடிக்கைகளுக்கான பிரதான அரசாங்க நிறுவனமாக பாசனத் திணைக்களங்கள் (Irrigation Departments) செயற்பட்டு வருகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மொத்தமாக எட்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளன. அவை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகும். இம்மாகாணங்களின் மொத்தப் பரப்பளவு சுமார் 18,881 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்தொகை சுமார் 2.9 மில்லியன் ஆகும். இம்மாகாணங்களில் விவசாயம் முக்கியமான பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகிறது; இதில் மீன்பிடித் தொழிலும் அடங்குகிறது. மாகாணத்தின் மொத்த தொழிலாளர்களில் 50%க்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தைச் சார்ந்து உள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக நீருக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், விவசாயத் தேவைகளுடன் இணைந்து குடிநீர் மற்றும் தொழில்துறை நீர்ப் பயன்பாட்டிற்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இன்று, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நீர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய இரட்டைப் பேரிடர்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்துகின்றன. உலக நாடுகள் இந்தச் சவால்களைச் சமாளிக்க எத்தகைய உண்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று பார்க்கும்போது, கவலையே எஞ்சுகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக கிலோமீட்டர்களுக்கு நடக்கும் மக்கள் இன்னும் உலகில் உள்ளனர் என்பதை மறந்து, நாம் பொறுப்பற்ற வாழ்க்கை முறையைத் தொடர முடியாது.
நகர்ப்புறமயமாக்கல் குடிநீர்ப் பற்றாக்குறை, அடிப்படை சுகாதார வசதிகளின் குறைபாடு, நீர் வழி பரவும் நோய்கள் என பல்வேறு நீர் சார்ந்த சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
வளரும் நாடுகள் நிலத்தடி நீர் வளங்களைப் பயன்படுத்துவதிலும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதற்கு முக்கிய காரணங்கள்: காடழிப்பு, பாலைவனமயமாக்கல், மழைப்பொழிவு குறைவு.
உலகளாவிய அளவில் ஒருவருக்கான ஆண்டு நீர்ப் பயன்பாட்டு அளவுகள் பொதுவாக பின்வருமாறு கணிக்கப்படுகின்றன: குடிநீருக்காக சுமார் 1 கன மீட்டர் நீர் மட்டுமே தேவைப்படுகிறது. சுத்தம், குளியல், சுகாதாரம் மற்றும் பிற வீட்டு உபயோகங்களுக்காக சுமார் 10 கன மீட்டர் நீர் தேவைப்படுகிறது. உற்பத்தித் தொழில்கள் மற்றும் சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்காக மேலும் சுமார் 100 கன மீட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உணவுத் தயாரிப்பிற்கான விவசாயத் துறைக்கு சுமார் 1000 கன மீட்டர் நீர் தேவைப்படுவதால், தற்போது உலக அளவில் நீர்ப் பயன்பாட்டில் விவசாயத் துறையே அதிக அளவு நீரைப் பயன்படுத்துகிறது.
- விவசாயத்திற்கு 85%
- தொழில்துறைக்கு 14%
- வீட்டுப் பயன்பாட்டிற்கு 1%
நீர்ப் பயன்பாட்டில் மிகப்பெரிய பங்கை விவசாயத் துறையே வகிக்கிறது. ஆகவே, பாசனத் துறை ஒரு நாட்டின் மிகப்பெரிய நீர்ப் பயன்பாட்டு துறையாக விளங்குகிறது. பல துறைகளுக்கிடையிலான நீர் ஒதுக்கீட்டுச் சிக்கல்கள் பெரும்பாலும் பாசனத் துறை மற்றும் பிற துறைகளுக்கிடையிலான சமமான (Equitable) நிலையைப் பற்றியவையாகும். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தேவைகளுக்கான நீர்ப் பயன்பாடுகளுக்கும், பல்வேறு பயன்பாட்டு துறைகளுக்கும் இடையிலான சமமான (Equitable) நிலையைத் தெளிவாக உணர்ந்து, அதனைக் கொள்கை வடிவமைப்பு மற்றும் திட்டமிடலில் சரியாக கருத்தில் கொள்ளுதல் அவசியமாகும். இந்த விலைமதிப்பற்ற வளத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். நீர் வளங்களை பாதுகாப்பதும், பகிர்ந்து கொள்வதும் இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.
கடந்த பல காலங்களில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தொழில்துறையின் பங்கு சுமார் 25% (கட்டுமானத் தொழில்துறை சுமார் 7%, உற்பத்தித் தொழில்துறை சுமார் 18%) ஆகவும், சேவைகள் துறையின் பங்கு 68% ஆகவும் இருந்தன. அதே நேரத்தில், விவசாயம், வனவளம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் இணைந்து சுமார் 7% (இதில் நெல் உற்பத்தியின் பங்களிப்பு சுமார் ஒரு வீதம் மட்டுமே) பங்களிப்பை வழங்கின. 2019 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின் படி தொழில்துறை, சேவைகள் துறை, விவசாயம், வனவளம் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளின் GDP பங்களிப்பின் விகிதமும் நீர்த் தேவைகளும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி சமீபத்தில் வெளியிட்ட மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி (Provincial GDP) தொடர்பான அறிக்கை, மேற்கு மாகாணத்துக்கும் நாட்டின் மற்ற மாகாணங்களுக்கும் இடையிலான பொருளாதாரப் பிளவைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களின் விவசாயத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியவையாகும். தொடர்புடைய தரவுகள் கீழ்க்கண்ட இணைப்பில் காணப்படுகின்றன: https://www.cbsl.gov.lk/…/PGDP_Current_Market_Price
மேற்படி மத்திய வங்கியின் அறிக்கைகளின் படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் GDP பங்களிப்பின் விவரங்கள் அறியக்கூடிய/ விளங்கக்கூடிய வகையில் கீழே உள்ள மூன்று படங்களிலும் தரப்பட்டுள்ளன.



வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாகத்தின் மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்பு முயற்சிகளின் தொடர்ச்சியாக, விவசாய உற்பத்தி அதிகரிப்பதும், மீன்வளத் துறையில் கணிசமான முன்னேற்றமும், கிராமப்புற பால் உற்பத்தி உயர்வதும், சிமெண்டு, இரசாயனப் பொருட்கள், உப்பு, பனை சார்ந்த தொழில்கள் போன்ற கைவிடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயற்படத் தொடங்குவதும், சுற்றுலாவிலிருந்து வருவாய் அதிகரிப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணம் (Northern Province), 2023 இல் நாட்டின் மொத்த GDPயில் சுமார் 4.5% பங்காற்றியது. இது 2019 இல் 4.7% ஆக இருந்தது. 2022 இல் 4.0% ஆகக் குறைந்து, பின்னர் சிறிது வளர்ச்சி அடைந்தது. இந்த மாகாணத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் அரசு சேவை, விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் ஆற்றல் பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம் (Eastern Province) 2023 இல் நாட்டின் மொத்த GDPயில் சுமார் 4.7% பங்காற்றியது. இது 2019 இல் 5.2% இருந்ததைப் போல மெதுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக தொழில்துறை வளர்ச்சி மற்றும் உட்புறக் கட்டமைப்பு வளர்ச்சியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
தேசிய திட்டமிடல் துறையால் தயாரிக்கப்பட்ட 1981-1990 காலகட்டத்திற்கான (1975ஆம் ஆண்டு மாறாத விலையில்) இரு மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Provincial GDP) தற்காலிக மதிப்பீட்டின்படி, அக்காலகட்டத்தின் தொடக்கத்தில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (National GDP) இரு மாகாணங்களின் பங்களிப்பு சுமார் 15% ஆக இருந்தது. பின்னர், இந்தப் பகுதியில் ஏற்பட்ட போர் நிலைமையின் விளைவாக, 1980களின் பிற்பகுதியில் இந்தப் பங்களிப்பு 10%க்கும் கீழாகக் குறைந்தது.
மேலும், இவ்விரு மாகாணங்களினதும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) கூட்டுப் பங்களிப்பானது, 2019 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் சுமார் 9% முதல் 10% வரை காணப்பட்டு வருகின்றது. இது நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் குறைந்த பங்காகக் கருதப்படுகிறது. போர் காரணமாக கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மறுசீரமைப்பு முழுமையாக நடைபெறாதது, போக்குவரத்து மற்றும் உள்ளாட்சிக் கட்டமைப்புகளின் குறைபாடு, தொழிற்சாலைகளின் குறைந்த வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளின் சிக்கல்கள் ஆகியவை இக்குறைந்த ஏற்றத்தாழ்வுக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
விவசாயத்தின் ஒப்பீட்டு முக்கியத்துவம் மற்றும் இரு மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அதன் பங்களிப்பு கீழ்வரும் அட்டவணையில் பிரதிபலிக்கிறது. விவசாயத்தின் உட்பிரிவுகளான இந்தத் துறைகளின் தனித்தனிப் பங்களிப்புகளும் இதில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இம்மாகாணங்கள் நிறைந்த இயற்கை வளங்களைக் கொண்டுள்ளன. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வளர்ச்சி அடையும்போது, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) இம்மாகாணங்கள் அளிக்கும் பங்களிப்பு வலுவாகப் பெருகும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளன; இதன் மொத்தப் பரப்பளவு 18,881 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் சுமார் 558 சதுர கிலோமீட்டர் பரப்பு நீர் நிலைகளால் (உள்நாட்டு ஏரிகள், நீர்த்தேக்கங்கள்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் 28.77% பகுதியைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் விவரமான பரப்பளவு அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் வறண்ட மண்டலத்தில் அமைந்துள்ளன; இங்கு சராசரி வருடாந்திர மழையளவு 900 முதல் 1,500 மி.மீ. வரை இருக்கும். மழைப்பொழிவு முறை இரு வடிவத்தைக் (Bimodal) கொண்டது. 70–80% மழைப்பொழிவு வடகிழக்குப் பருவக்காற்றின் போது பெரும்போகத்திலும், மீதமுள்ளவை சிறுபோகத்திலும் மற்றும் இடைப் பருவக்காற்றுகளின் போதும் ஏற்படுகின்றன.
இப்பிரதேசத்தின் நில அமைப்பு கடற்கரைப் பகுதியில் மிகவும் சமதளமாகத் தொடங்கி, உட்பகுதியை நோக்கி மெதுவான அலைவுநிலைச் (Gently Undulating) சமவெளியாக (Peneplain) நீண்டுள்ளது. யாழ்ப்பாணத் தீபகற்பம் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது; இது ஆனையிறவுக்கு வடக்கே, மயோசின் யுகத்தின் (சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) கார்ஸ்டிக் சுண்ணாம்புக்கல் மூலம் முழுமையாக உருவாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து (MSL) சுமார் 6 மீட்டர் உயரமே இத்தீபகற்பத்தின் உயர்ந்த புள்ளியாக இருப்பதால், நிலம் மற்றும் நீர்வளம் தொடர்பான குறிப்பிடத்தக்க நதிகள் அல்லது பிற நில அமைப்புச் சிறப்புகள் எதுவும் இங்கு இல்லை.
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் வறண்ட மண்டலத்திற்குள் வருகின்றன. இம்மாகாணங்களின் முக்கிய விவசாய-சூழல் (Agro-Ecological) பிரதேசங்கள் DL1, DL2, DL3, DL4, DL5 என வரையறுக்கப்பட்டுள்ளன; மிகச் சிறிய பகுதி IL2 பிரிவின் கீழும் உள்ளது. முக்கிய விவசாய-சூழல் பிரதேசங்கள் கீழுள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நபருக்கான குடிநீர்ப் பயன்பாடு, பாசனத் துறைக்கான நீர்த்தேவை மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தகத் தேவைகளுக்கான எதிர்காலக் கணிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பக் கணக்கீடுகள், நீர்த்தேவை தொடர்ந்து அதிகரிக்கும் போக்கைக் காட்டுகின்றன.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு மேற்பரப்புப் பாசனத் திட்டங்களும் நிலத்தடி நீர் எடுப்புத் திட்டங்களும் உட்பட நீர்வளங்களை மேம்படுத்தி வந்தாலும், புதிய வளங்களை மேலும் விரிவாக்குவதற்கான வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதாகக் காணப்படுகிறது. புதிய திட்டங்கள் தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்பைவிடச் சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளன. ஆகவே, கிடைக்கும் நீர் வளங்களைப் பாதுகாப்பதும் திறமையான முறையில் மேலாண்மை செய்வதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
வட மாகாணத்தில் காணப்படும் முக்கிய ஆறுகளில் அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு, கோடலிக்கல்லு ஆறு, மண்டைக்கல் ஆறு, நாய் ஆறு, நெத்தலி ஆறு, பாலி ஆறு, பல்லவராயன்கட்டு ஆறு, பறங்கி ஆறு, பேர் ஆறு, பிரமந்தனாறு மற்றும் தேராவில் ஆறு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாறான ஆறுகள் பெரும்பாலும் பருவமழைக் காலங்களில் மட்டுமே ஓடும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றின் நீர்வளம் ஆண்டு முழுவதும் நிலைத்திருக்காது.
வறட்சிக் காலங்களில் இந்த ஆறுகள் மற்றும் அவற்றைச் சார்ந்த நீர்த்தேக்கக் குளங்களில் நீர்வரத்துக் குறைவதால் பல பாசனத் திட்டங்கள் செயலிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக அந்தப் பாசனத் திட்டங்களின் கட்டுப்பாட்டு நிலப்பரப்புகளில் வருடத்திற்கு இரண்டு பருவங்களிலும் சாகுபடி மேற்கொள்ள இயலாமல் போகிறது. இதனால் பயிர்ச்சேதம் ஏற்பட்டு விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பின்னணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆற்றுப்படுகைகளில் உள்ள நீர் வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்வது மிக அவசியமாகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு புலத் தரவுகள் சேகரித்தல், ஆறுகளில் இருந்து திசை திருப்பக்கூடிய நீரளவை மதிப்பிடுதல், நீர்ப்பிடிப்புப் பரப்புகளிலிருந்து குளங்களுக்கு வரும் நீர்வரத்தை நீரியல் மாதிரிகள் (Hydrologic Modelling) மூலம் கணித்தல், பயிர் நீர்த் தேவையை பயிர் நீர் மேலாண்மை மாதிரிகள் (Crop Water Management Models) மூலம் மதிப்பிடுதல் மற்றும் சாகுபடிப் பரப்பளவு மற்றும் பயிரிடும் தீவிரத்தை (Cropping Intensity) அதிகரிக்கும் சாத்தியங்களை ஆய்வு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.
இந்த ஆரம்பகட்ட ஆய்வின் அடிப்படையில், ஆய்வுப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளை மேம்படுத்துவது அவசியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஆறுகளின் மீது சிறிய அணைக்கட்டுகள் (Anicuts) அமைத்தல், திசைதிருப்புக் கால்வாய்கள் மற்றும் ஊட்டுக் கால்வாய்கள் (Diversion/Feeder Canals) அமைத்தல் போன்ற நீர்வள மேலாண்மை நடவடிக்கைகள் முன்மொழியப்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பாசன நிலப்பரப்பை விரிவுபடுத்துவதுடன் வருடாந்திரப் பயிரிடும் தீவிரத்தையும் அதிகரிக்க முடியும்.



