நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
33 நிமிட வாசிப்பு

நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் – பகுதி 2

October 16, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

Y – குரோமசோமில் ஏற்படும் மரபணுக்கூற்றுப் பிறழ்வு (DNA Mutation in the Y – Chromosomes)

நமது உடலிலுள்ள உயிர்க்கலன்களில் காணப்படும் கருமையத்தினுள் (Nucleus) 23 சோடி குரோமசோம்கள் காணப்படுகின்றன. இந்தக் குரோமசோம்களில் வரிசையாகக் காணப்படும் ஜீன் (Genes) எனப்படும் உயிரணுக்கூட்டுகளே ஒவ்வொரு மனிதரதும் உடற்கூற்றையும், உடலியக்க வளர்ச்சியையும் (Structural and Functional Development) நிர்ணயம் செய்கின்றன. இதில் 23ஆவது சோடி குரோமசோம் மனிதர்களின் ஆண்-பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கிறது. பெண்களிடத்தில் ஒரு சோடி X – குரோமசோம்கள் உள்ளன. ஆண்களிடத்தில் ஒரு Y – குரோமசோமும், ஒரு X – குரோமசோமும் காணப்படுகின்றன. இதில் ஆண்களில் காணப்படும் Y – குரோமசோம் X – குரோமசோமைக் காட்டிலும் வலுவானது.

நமது உடற்கலன்களின் கருமையத்தினுள் காணப்படும் ஜீன்கள் எமது பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டவை. இந்த ஜீன்கள் DNA எனப்படும் அணுக்கூட்டுக்களிலான ‘மரபணு மூலக்கூறுகளை’க் கொண்டவை. நமது ஒவ்வொரு கலன்களிலும் 300 கோடி (3 billion: 300,00,00,000) DNA கூறுகள் காணப்படுகின்றன. இந்த DNAகள் எமது உடலின் உருவ அமைப்பு, வளர்ச்சி, இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன (Wells, Spencer 2003).

நமக்கு ஒவ்வொரு சோடி குரோமசோம் இருப்பதற்கான காரணம் இனவிருத்தியே. தாயின் சூல்முட்டையில் உள்ள சூல்கலன்களில் சோடிகளிலிருந்து பிரிந்த ஒரு தனிக் குரோமசோம் வரிசை மட்டும் காணப்படுகிறது. அவ்வாறே தந்தையின் விந்தணுவிலும் ஒரு தனிக் குரோமசோம் வரிசை மட்டும் இடம்பெறுகிறது. ஆண்-பெண் புணர்ச்சியின் போது தந்தையின் விந்தின் தனிக் குரோமசோம்களும், தாயின் சூல்முட்டையின் தனிக் குரோமசோம்களும் இணைந்து பிள்ளையின் சோடிக் குரோமசோம்களாக உருவாகின்றன. கரு உருவாக்கத்தின் போது X, Y ஆகிய இனவிருத்திக் குரோமசோம்களைத் தவிர மற்றைய குரோமசோம்களில் காணப்படும் ஜீன்கள் பிளந்தும் திரும்பக் கலந்தும் (Splitting and Recombining) போய்விடுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு வித்தியாசமான அமைப்பில் உருவாகிறார்கள். ஒரே புணர் முட்டையிலிருந்து (Zygote) உருவாகும் இரட்டைப் பிள்ளைகள் மட்டுமே ஒரே வடிவில் இருப்பார்கள்.

இது தவிர, குரோமசோம்களின் DNA அடுக்கில் காலத்திற்குக் காலம் தன்னிச்சையான மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இவை DNA – மரபணுக்கூறுப் பிறழ்வு (Mutation) எனப்படும். இம்மாற்றங்களடைந்த குரோமசோம்கள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைச் சென்றடைகின்றன. இவற்றில் ஆண்களின் Y – குரோமசோமில் இடம்பெறும் DNA மரபணுப் பிறழ்வு மாற்றங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை பற்றி இனிப் பார்ப்போம். 

ஹோமோ சேப்பியன் மனித இனங்களில் காணப்படும் மாதிரி உயிர்க்கலன் (Cell). இதன் கருமையத்தினுள் (Nucleus) 23 சோடி குரோமசோம்கள் காணப்படுகின்றன.

நவீன மனிதனின் உயிர்க் கலன்களில் காணப்படும் 23 சோடி குரோமசோம்கள்

ஒரு குரோமசோமின் ஒரு பகுதியிலுள்ள DNAகளிலுள்ள ஜீன்களைக் காட்டும் படம்.

மரபணுக்கூறுப் பிறழ்வு (Mutation)

நமது உடற்கலன்களின் கருமையத்தினுள் காணப்படும் மரபணுக்கள் (DNA) ‘நியூகிளியோரைட்’ (Nucleotide) எனப்படும் கரிமப்பொருட்களால் ஆன மூலக்கூறுகளைக் (Molecules) கொண்டவை. இக்கரிமப் பொருட்கூறுகளில் ஒரு பொஸ்பேற் பிரிவு (Phosphate Group), ஒரு சர்க்கரைப் பிரிவு (Sugar Group), ஒரு நைட்ரஜன் தளம் (A Nitrogen Base) என்பன காணப்படுகின்றன.

இந்த நைட்ரஜன் தளங்கள் அடினின் (Adenine: A), தைமின் (Thymine: T), குவனின் (Guanine: G), சிஸ்ரொசின் (Cystocine: C) என நான்கு வகையான நியூக்கிளிக் அமிலப் பகுதிகளைக் கொண்டவை. இவற்றில் அடினின், தைமினிடம் மட்டுமே கூட்டுச் சேரும். அதுபோல குவனின், சிஸ்ரொசினுடன் கூட்டுச் சேரும். இந்த அமிலப்பகுதிகள் கூட்டுச் சேரும் ஒழுங்கு, நாம் எழுத்துகளை அடுக்கிச் சொற்களை உருவாக்குவது போல அமைந்து நமது உடலின் உருவ அமைப்பு, வளர்ச்சி, இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன. இதையே மரபுத் தொகுப்பு (Genetic Code) அல்லது ஜீன்களின் மொழி (Language of the Genes) என அழைப்பார்கள்.

இரு வார்களைப் போல அமைந்த இந்த நியூகிளியோரைட் கூறுகள் இரட்டைத் திருகுசுழல் (Double Helix) வடிவில் நீண்டதொரு ஏணிபோல அமைந்திருக்கின்றன. இந்த ஏணியின் குறுக்குச் சட்டங்களாக அடினின், தைமின், குவனின், சிஸ்ரொசின் ஆகிய அமிலப்பகுதிகள் காணப்படுகின்றன.

இந்தக் குறுக்குச் சட்ட அமில அடுக்குகளில் அடினின் தைமினோடு இணைவதும், குவனின் சிஸ்ரொசினுடன் கூட்டுச் சேருவதும் நியதியாக இருந்தபோதிலும், சில சமயங்களில் தன்னிச்சையாக இந்த நியதி தவறி அடினின் சிஸ்ரொசினுடனோ அல்லது குவனின் தைமினுடனோ இணையுமானால், அந்த நியதி தவறிய இணைப்பை நாம் மரபணுக்கூறுப் பிறழ்வு (Mutation) என அழைக்கிறோம். இந்த மரபணுப் பிறழ்வு பெற்றோரிடமிருந்து வம்சாவழியாகத் தொடர்ந்து பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்குத் தலைமுறை தலைமுறையாகப் போய்ச் சேருகிறது. மரபணுவியல் ஆய்வுகள் இப்பிறழ்வுகளை அடிப்படையாக வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன.

Y – குரோமசோமின் தந்தைவழி வம்சப்பரவல்

Y – குரோமசோம் ஆண்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. ஒரு தந்தையிடமிருந்து இக்குரோமசோம் முழுமையாக அவரது ஆண் பிள்ளைகளை வந்தடையும். இவ்வாறு வந்தடைந்த Y – குரோமசோம் தலைமுறை தலைமுறையாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவர்களின் ஆண் வாரிசுகளிடம் தொடர்ந்த வண்ணம் இருக்கும். அந்த Y – குரோமசோமில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வுகளும் (Mutations) வம்சாவளியாக ஆண் சந்ததியினரிடம் தொடர்ந்துகொண்டே வரும்.

இம்மரபணுப் பிறழ்வுகளை இனம் கண்ட விஞ்ஞானிகள் அப்பிறழ்வுகளுக்கு M20…M21… என அவை கண்டுபிடிக்கப்பட்ட வரிசையில் பெயரிட்டிருக்கிறார்கள். ஆண்களின் Y – குரோமசோம்களில் இடம்பெறும் DNA மரபணுப் பிறழ்வு மாற்றங்கள்:

(1) 20 முதல் 100 தலைமுறைக்கு ஒரு தடவைதான் (500 ஆண்டு முதல் 2500 ஆண்டிற்கு ஒரு தடவை) பெரும்பாலும் நடைபெறுகிறது (ஒரு தலைமுறை 25 ஆண்டுகள் என்ற கணக்கின்படி).

(2) இம்மரபணுப் பிறழ்வு நடைபெறும் Y – குரோமசோம் ஒரு தந்தையிடமிருந்து ஆண் பிள்ளைகளுக்கு (மகன்களுக்கு) மட்டுமே தலைமுறை தலைமுறையாகப் பரவிக்கொண்டிருக்கும். இதன் பிரகாரம் 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆண்மகனின் மூதாதையரான முதல் ஆணின் குரோமசோமில் ஏற்பட்ட DNA மரபணுப் பிறழ்வு இன்றும் அவனது வம்சாவளியில் பிறந்த ஆண்மகனிடம் காணப்படுகிறது. இந்த மரபணுப் பிறழ்வுகளைக் கருவிகளாகக் கொண்டே பொதுசன வம்சாவளி ஆய்வுகள் (Population Genetics) மரபணுவியல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆண்களின் உடற்கலன்களிலிருந்து பெறப்பட்ட Y – குரோமசோமை ஆராய்ந்த மரபணுவியல் ஆய்வாளர்கள் அதில் காணப்படும் DNA மரபணுப் பிறழ்வுகளை மரபணுக் குறியீடுகள் (Genetic Markers) என அழைக்கிறார்கள். ஒருசில துளி இரத்தத்திலிருந்து பெற்ற DNA இலிருந்தோ அல்லது கன்னவாய்க்குள்ளிருந்து பெற்ற துடைத்தழியின் (Buccal Smear) DNA இலிருந்தோ இக்குறியீடுகளை இனம்காண முடியும்.

மரபணுப் பெருங்குழு (Haplogroup)

ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்ட Y – குரோமசோமின் நியூகிளியோரைட் கிளையில் பல நூறு ஆண்டுகளின் பின்னரும் புதிய பிறழ்வுகள் தொடர்ந்தும் நடந்துகொண்டேயிருக்கும். இப்பிறழ்வுகள் அதன் மரபணுக் குறியீடுகளைக் கொண்டு இனம்காணப்படுகின்றன. இக்குறியீடுகளைத் தொடர்ந்து பின்னோக்கி ஆராய்ந்தால் அப்பிறழ்வு காணப்படும் மனிதனின் ஆரம்பகால மூதாதையரைக் கண்டுகொள்ள முடியும். உதாரணமாக: M168 > M89 > M9 > M20. (M20 இலிருந்து அதன் மூதாதையரான M168 பிறழ்வு கொண்டோரைக் கண்டறியும் முறை). ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிறந்துவந்த இக்குறியீடுகள் காணப்படும் மரபினக் குழு ‘ஹப்லோகுழு’ (Haplogroup) என அழைக்கப்படுகிறது. இக்குழுவின் ஆதி மூதாதையர்களை (Deep Ancestor) இதனால் இனம்கண்டுகொள்ள முடிகிறது. இந்த ஹப்லோ குழுவினருக்கு C, F, H, L, J2 போன்ற குழுக்குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ‘ஹப்லோகுழு’ என்பதைத் தமிழில் ‘மரபணுப் பெருங்குழு’ என அழைக்கலாம்.

இந்திய உபகண்டத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள்

இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்திய உபகண்டத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் பலவகையான மரபினக் குழுக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களின் வம்சாவளியினர் இன்றுவரை அங்கே வாழ்ந்து வருவதை மரபணுவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடிகிறது. அவர்களில் முக்கியமான மரபினக் குழுக்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

ஆதிகால இந்தியத் தொல்திராவிடர் (Ancestral Dravidians of India)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த ஆதி மக்களின் மரபணுக் குறியீடுகள் (Genetic Markers of the Ancient People Who Migrated to India and Sri Lanka from Africa)

மரபணுப் பெருங்குழு C (Haplogroup C)

வம்சாவளி: M168> M130

மரபணுக் குறியீடு: M130 (மூல-ஆஸ்திரலோயிட் இனம்) 

இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் M168 என்ற மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களில் ஒரு குழுவினர் கிழக்கு ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்டு, செங்கடலின் முகத்துவாரத்தைக் கடந்து, யேமன் கடற்கரை வழியாக நடந்து, அரேபியக் குடாவைக் கடந்து, ஈரானியக் கடற்கரையோரமாக இந்தியாவை நோக்கி நடந்தார்கள். கடற்கரையே வரலாற்றிற்கு முற்பட்ட உலகின் மேம்பட்ட நெடும்பாதையாக (Prehistoric Super-highway) விளங்கியது. அவர்கள் குறுக்கிடும் மலைகளையோ அல்லது வனாந்தரங்களையோ கடந்து செல்ல வேண்டியிருக்கவில்லை. அவர்களுக்குக் குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கனமான தோல் உடைகளைத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை. அவர்களுக்குக் கனதியான கல்லாயுதங்கள் தேவைப்படவில்லை. கடலிலிருந்து பெறும் உணவுக்குக் குறைவு இருக்கவில்லை (Luis Quintana-Murci 1999).

அக்கடற்கரைவாசிகள் ஓரிடத்தில் தங்கியிருப்பார்கள். சனத்தொகை பெருகியதும் அந்த இடம் தம்மைப் பேணுவதற்குப் போதாது எனக் கண்டதும் அவர்களில் ஒரு குழுவினர் மேலே செல்வார்கள். இப்படியாக நடந்து நடந்து ஏறக்குறைய இ.மு. 68,000ஆம் ஆண்டளவில் இந்தியாவை அடைந்த காலத்தில் அவர்களில் ஓர் ஆணின் Y – குரோமசோமில் M168 மரபணுக் குறியீடு உள்ள கிளையில் ஒரு புதிய மரபணுப் பிறழ்வு தன்னிச்சையாக ஏற்பட்டது. இந்தப் புதிய மரபணுக் குறியீட்டிற்கு C-M130 என்ற பெயர் கொடுக்கப்பட்டது (Wells, S. 2003).

இவர்கள் தென்னிந்தியாவையும், அதோடு இணைந்த இலங்கையையும் அடைந்த சமயம் அப்பிராந்தியம் பச்சிலைக் காடுகளையும், வனவிலங்குகளையும் கொண்டு வாழ்வாதாரத்திற்கு உகந்த இடமாக விளங்கியது. C-M130 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களில் ஒரு பகுதியினர் அங்கே தங்கிவிட, மற்றொரு பகுதியினர் கிழக்குக் கரையோரமாக வங்காளம் வரை நகர்ந்து, அங்கிருந்து இ.மு. 67,000–66,000 ஆண்டுக் காலப்பகுதியில் அந்தமான் தீவுகளையும், மலேசியாவையும் அடைந்திருக்கிறார்கள். அங்கிருந்து புறப்பட்டவர்கள் விரைவில் இந்தோனேசியா, திமோர் பகுதிகளைச் சென்றடைந்தார்கள் (Mellars, P. 2006).

இந்தோனேசியாவிலிருந்தும் திமோரிலிருந்தும் சிறிய படகுகள் மூலம் இவர்கள் இ.மு. 65,000–60,000 ஆண்டுக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவையும், போர்ணியோவிலிருந்து நியூகினியாவையும் சென்றடைந்தார்கள். அவுஸ்திரேலியக் கண்டத்தில் குரங்கினங்களோ, ஆதி மனித இனங்களோ கிடையாது. முந்திய ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் கடல் நீரைக் கடந்து செல்லக்கூடிய கலங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. கடலைக் கடந்து அவுஸ்திரேலியக் கண்டத்தில் முதல் தடவையாக இற்றைக்கு முன் 65,000 ஆண்டுக் காலத்தில் அடியெடுத்து வைத்தவர்கள் மரபணுக் குறியீடு M130 கொண்ட மனிதர்களே! இந்த ஆதி மனிதர்கள் மூல-ஆஸ்திரலோயிட் (Proto Australoid) இனத்தவர் என அழைக்கப்படுகின்றனர் (Stringer, C. 1996; Stringer & McKie 1996, 2000; Underhill et al. 2001).    

ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா வரை இடம்பெயர்ந்த மக்கள் சென்ற பாதையைக் காட்டும் படம். இவர்கள் தென்னிந்தியாவில் இருந்தபோது இடம்பெற்ற M130 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களின் சந்ததியினர் இன்று தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, சீனா வரை காணப்படுகிறார்கள்.

மரபணுக் குறியீடு C-M130ஐக் கொண்ட மக்களே இந்தியாவிற்குள் முதன்முதலாக வந்த ஹோமோ சேப்பியன்ஸ் – நவீன மனிதர்களாவார்கள். இன்று இந்தியாவின் வடமேற்குப் பிரதேசம் தவிர மற்றைய பகுதிகளில் இந்தக் குறியீட்டைக் கொண்ட ஆண்கள் ஆங்காங்கே சிதறலாகக் காணப்படுகிறார்கள். குறிப்பாக வங்கதேசம், ஆந்திரப் பிரதேசம், கடற்கரையோரத் தமிழகம், இலங்கை ஆகிய இடங்களில் இம்மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணுவியல் பேராசிரியர் ராமசாமி பிச்சப்பன் 2008ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் தென்னிந்திய மரபணுப் புலப்பெயர்வு பற்றிய ஒரு முக்கியமான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.

2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் ஜேதிமாணிக்கம் எனும் ஊரில் வாழ்ந்த விருமாண்டி ஆண்டித்தேவரிடத்திலும், அவரது உறவினரான பத்து ஆண்களிடமும் மரபணுக் குறியீடு C-M130 இருப்பதைக் கண்டறிந்தார். இந்த ஆய்வு முடிவினை இந்திய ஊடகங்கள் அனைவருடைய கவனத்திற்கும் எடுத்துச் சென்றன. இங்கிலாந்தில் பிபிசி தொலைக்காட்சி இந்தத் தகவலை விருமாண்டி ஆண்டித்தேவரின் நிழற்படத்துடன் வெளிச்சமிட்டுக் காட்டியது. பின்னர் தமிழ்நாட்டில் 31 ஆதிவாசிகளிடமும், 19 சாதிக் குழுக்களிடமும் மரபணுக் குறியீடு C-M130 கண்டுபிடிக்கப்பட்டது (Philip Endicott et al. 2003: 178).

மதுரை ஜோதிமாணிக்கம் ஊரில் வாழும் விருமாண்டி ஆண்டித்தேவர். இந்திய மண்ணில் முதன்முதலாகக் காலடி பதித்த முதல் நவீன மனிதனின் நேரடி வம்சாவளியினராவார். Fuente: BBC Television.

இந்தியாவிற்கு முதன்முதலாக வந்தடைந்த ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தின் முதல் பிரதிநிதிகள் இந்த C-M130 மரபணுக் குறிகளைக் கொண்டவர்கள். இவர்களின் வம்சாவளியினர் இன்று தென்னிந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் காணப்படுவது இப்பிரதேச மக்களின் தொன்மையைக் காட்டுகிறது. இன்று தமிழகத்தில் வாழும் மக்களில் 5 சதவிகிதமான ஆண்களிடம் இம்மரபணுக் குறியீடு காணப்படுகின்றது (Thiagarajah, Siva 2011: 98).

தமிழ்நாட்டில் 12% இருளர் சமுதாயத்தினரிடமும், 8% பறையர் சமுதாயத்தினரிடமும் M230 மரபணுக் குறியீடு காணப்படுகிறது (Helixline Report Jan. 22, 2026). இலங்கையில் வாழும் வேடர்களிடையே M130 மரபணுக் குறியீடு காணப்படுகிறது. இதன் சரியான விகிதம் ஆய்வு செய்யப்படவில்லை. இந்திய உபகண்டத்தை வந்தடைந்த ஆதி மனிதர்களின் மரபணுக்கள் இலங்கையின் வேடர்களிடம் காணப்படுகிறது என்பதை பெண்வழி ‘மைற்றோக்கொண்றிய’ ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன (Anjana Welikala et. al. 2024: 1-7).

இன்று அந்தமான் தீவில் வாழும் தேசிய ஆண்கள் அனைவரிடமும் இந்த C-M130 மரபணுக் குறியீடு காணப்படுகிறது. இவர்களே இன்றைய உலகின் ஆதிமனிதர்களின் கலப்பற்ற நேரடி வம்சாவளியினராவர். வங்காள விரிகுடாவில் பர்மாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பரந்திருக்கும் 200 வரையான அந்தமான் தீவுக் கூட்டங்கள் பனியுகத்தின் போது தென் ஆசிய கடற்கரை நிலமாக இருந்திருக்கின்றன (Philip Endicott et al. 2003: 178).

மரபணுப் பெருங்குழு F

வம்சாவளி: M168> M89

மரபணுக் குறியீடு: M89 (மத்திய கிழக்கு இனம்)

Picture courtesy: Geographic Project

ஆபிரிக்காவிலிருந்து முதலில் புறப்பட்ட தூரக் கிழக்குக் குழுவினரைத் தொடர்ந்து, இ.மு. 50,000 ஆண்டுக் காலப்பகுதியில் தங்களின் Y – குரோமசோமில் M168 மரபணுக் கூறைக் கொண்ட ஆண்களின் இரண்டாவது குழு ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்டு மத்திய கிழக்கை வந்தடைந்தது. இன்று உலகில் வாழும் (M130 மரபணுக் கூறில்லாத) அனைத்து ஆண்களும் இந்த மத்திய கிழக்கு மாந்தர்களின் வம்சாவளியினராவர்.

இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் M168 குழுவினர் மத்திய கிழக்கிலிருந்த சமயம், அவர்களில் ஓர் ஆணிடம் F-M89 என்ற மரபணுப் பிறழ்வு (Mutation) ஏற்பட்டது. அவரின் சந்ததியினரில் F-M89 மரபணுக் கூறைக் கொண்ட பலர் அங்கே தங்கிவிட, அவர்களில் சிலர் ஈரான்-ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்கும், மற்றும் சிலர் ஈரான் வழியாக மத்திய ஆசியாவுக்கும் இடம்பெயர்ந்தார்கள் (Wells, Spencer 2007: 209-10).

சில மரபணுவியலாளர்கள் இதற்கு ஒரு மாற்றுக்கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். ஆபிரிக்காவிலிருந்து M168 மரபணுக்கூறைக் கொண்ட மக்கள் ஆபிரிக்கக் கரையோரமாக முதலில் இந்தியாவை அடைந்ததாகவும், F-M89 மரபணுப் பிறழ்வு இந்தியாவில் இடம்பெற்றதாகவும், இந்தியாவிலிருந்தே F-M89 குறியீட்டைக் கொண்ட மக்கள் மத்திய கிழக்கிற்கும், மத்திய ஆசியாவுக்கும் பரவினார்கள் எனவும் அக்கருதுகோள் கூறுகின்றது (Sengupta, S. et al. 2006; Kivisild, T. 2003).

ஆனால், சகாராவை அண்டிய நிலப்பரப்புகளான சாட், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வுகளில் (Genographic project), F-M89 மரபணுக் கூறைக் கொண்ட மக்கள் அவ்விடங்களில் காணப்படுவதனால், ஆபிரிக்க மக்களின் இந்த இடப்பெயர்வு சகாரா ஊடாக மத்திய கிழக்கை அடைந்திருக்கலாம் என்பதே சரியான கணிப்பாக நம்பப்படுகிறது. உயிரியல் ஆய்வாளரான வில்லியம் கல்வின் (William Calvin), சகாரா எப்போதும் பாலைவனமாக இருந்ததில்லை என்றும், சில காலப்பகுதிகளில் அது பசுந்தரையாக இருந்தது என்றும், இ.மு. 50,000–45,000 ஆண்டுக் காலங்களில் மழையும் நீரும் அதைப் பசுமையான புற்தரையாக வைத்திருந்ததாகவும், அது மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வதிவிடமாக இருந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். மேலும், மத்திய கிழக்கிலுள்ள குவாவ்ஸா (Qafzeh), ஸ்குஹல் (Skuhl) குகைகளில் கண்டெடுக்கப்பட்ட மனிதக் கபாலங்கள், எலும்புகள் என்பன இ.மு. 50,000 ஆண்டு காலத்தில் அங்கே நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன (Wells, S. 2007: 127-8).

இந்தியா முழுவதிலும் F-M89 மரபணுக்கூறைக் கொண்ட மக்கள் சராசரியாக 12.5% காணப்படுகிறார்கள். இந்த மரபணுக்கூறு 18.1% பழங்குடி இனக்குழுவினரிடமும் (Tribal Groups), 9.6% பிற சாதியினரிடமும் காணப்படுகின்றது (Cordaux, R. et al. 2004). தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகமாகப் பஞ்சமர்களிடையிலும் (Panchamas), சூத்திரர்களிடையிலும் (Sudras) இந்த மரபணுக் கூறு காணப்படுகிறது (Zerjal, T. et al. 2006; Sengupta, S. et al. 2006). தமிழ்நாட்டில் புராதன திராவிடர்களான கோயா இனத்தவரிடையே 27% ஆனவர்கள் F-M89 மரபணுக் கூறைக் கொண்டிருக்கிறார்கள் (Kivisild, T. et al. 2003). இன்றைய உலகச் சனத்தொகையில் காணப்படும் மக்களில் 90% இந்த F-M89 மரபணுக் கூறிலிருந்து தோன்றியவர்களாவர்.

மரபணுப் பெருங்குழு H 

வம்சாவளி: M168> M89> M69

மரபணுக் குறியீடு: M69 (மூலத் திராவிட முன்னோடிகள் பகுதி I) 

இந்து சமுத்திரக் கரையோரமாக C-M130 மரபணுக்கூறு கொண்ட மனிதர்கள் ஆபிரிக்காவிலிருந்து இந்தியாவை வந்தடைந்து, அங்கிருந்து கிழக்காசிய நாடுகள் ஊடாக அவுஸ்திரேலியா வரை சென்றடைந்ததைத் தொடர்ந்து, M168 மரபணுக் குறியீட்டைக் கொண்ட அடுத்த தொகுதி மக்களிடையே, ஓர் ஆணின் மரபணுப் பிறழ்வினால் உண்டான F-M89 மரபணுக் குறியீட்டைக் கொண்ட சந்ததியினர் தோற்றம் பெற்றதை ஏற்கனவே கண்டோம். இவர்களில் ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்த குழுவினரில் ஓர் ஆணிடம் இ.மு. 35,000 ஆண்டளவில் ஏற்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வு F-M69 எனக் குறிக்கப்படும் மரபணுக் குறியீட்டை உருவாக்கியது. இந்தியாவில் உருவான இம்மரபணுக் குறியீடு கொண்ட மக்களின் வம்சாவளியினர் வடஇந்தியாவிலிருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். இவர்களே பின்னாளில் திராவிட மொழிகளைப் பேசிய மக்களின் முக்கியமானதொரு முன்னோடிகளாவர்.

F-M89 மரபணுக் குறியீடு கொண்ட மக்களின் வட இந்திய வருகையும் H-M69 மரபணுப் பிறழ்வும். Picture courtesy: Genographic Project.

தென்னாசியாவில் F-M69 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களின் இன்றைய செறிவு. திராவிட மொழிகளைப் பேசும் மக்களில் பழங்குடி மக்களிடையே 35–45 சதவீதமானவர்களிடம் இக்குறியீடு இன்று காணப்படுகிறது.

இம்மரபணுப் பிறழ்வு இந்தியாவில் தோற்றம் பெற்றதனால் இந்த H-M69 மரபணுக் குறியீட்டை ‘இந்தியக் குறியீடு’ என அழைக்கும் ஆய்வாளர்களும் உளர். இக்குறியீடு தென்னிந்திய திராவிட மொழிகளைப் பேசும் மக்களிடமும், புராதன குலமரபு மக்களிடமும் (Tribal Populations) அதிகமாகக் காணப்படுகிறது. இந்த H-M69 மரபணுக் குறியீடு காணப்படும் ஆண் மக்களின் முன்னோடிகள் மத்திய கிழக்கிலிருந்து வடகிழக்கு நோக்கிப் பாரசீகம் ஊடாக (இன்றைய ஈரான்) பரவிக்கிடந்த வன்பாலைப் பெருவழியாக (Steppe Highway) படிப்படியாக முன்னேறி, இற்றைக்கு 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாசியாவை வந்தடைந்த முக்கியமான பழங்கற்கால மக்களாவர். இந்திய மண்ணில் குறிப்பிடத்தக்க பழங்கற்காலக் குடியேற்றங்களை நிறுவியவர்கள் இவர்களேயாவர். இந்தியாவின் பழங்குடி மக்களிடையே (Tribal Population) 25 முதல் 40% விழுக்காடுவரை இன்று காணப்படும் மரபணுக் குறியீடு M69 ஆகும் (Cordaux, R. et al. 2004; Sengupta, S. et al. 2006; Thanseem, I. et al. 2006).

இந்த H-M69 மரபணுக் குறியீட்டைக் கொண்ட H-மரபணுக் குழுவினர் இன்று இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் வசித்து வருகிறார்கள். இவர்களில் அதிக விகிதாசாரமான இம்மரபணுக் குறியீடு (45–33%) திராவிட மொழிகளைப் பேசும் மக்களிடையே காணப்படுகிறது (Sahoo, S. 2006; Helixline Report 22 Jan. 2026).

தென்னிந்திய திராவிட மொழி பேசும் மக்களிடையே நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 405 ஆண்களில் 110 பேரிடம் (27.2%) இந்த H-M69 குறியீடு காணப்படுகிறது (Hammer et al. 2006). திராவிட மொழிகளில் ஒன்றான கோயா மொழி பேசும் மக்களிடையே 71% சதவீதமானவர்களிடம் இக்குறியீடு காணப்படுகிறது (Kivisild, T. et al. 2003).

இந்தியாவிற்கு வெளியே தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ‘பால்கன் ரோமானியர்கள்’ (Balkan Romanis) என அழைக்கப்படும் நாடோடிகளான ஜிப்ஸிக் கூட்டத்தினரிடையே (Gypsies) 60% சதவீத ஆண்களிடம் H-M69 மரபணுக் குறியீடு காணப்படுகிறது. இந்த ரோமானி ஜிப்ஸிகள் பல்கேரியா, ஸ்பெயின், லிதுவேனியா ஆகிய நாடுகளிலும் வசித்து வருகிறார்கள் (Gresham et al. 2001; Moorjani, P. et al. 2011). இந்த ஜிப்ஸிகள் இந்தியாவிலே தோற்றம் பெற்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என்ற கோட்பாட்டிற்கு இந்த ஆய்வு வலுச் சேர்க்கிறது.

சமீப காலங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் தமிழ்நாட்டின் ‘இருளர்’ பழங்குடியினரிடம் H-M69 குறியீடு 45%, பறையர் சமூகத்தில் H-M69 குறியீடு 40% இடம்பெறுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது (Helixline Team Report, Jan. 22, 2026).

இந்தியாவில் M69இன் பிறழ்வு (Mutation)

மரபணுப் பெருங்குழு H1

வம்சாவளி: M168> M89> M69> M52

இற்றைக்கு 25,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் H-M69 இல் உதயமான இந்த H1-M52 எனப்படும் மரபணுப் பிறழ்வு 25 சதவிகிதமான இந்தியர்களிடமும், பாகிஸ்தான் மக்களிடமும் காணப்படுகிறது (Wells, S. 2007:212)

மரபணுப் பெருங்குழு L 

வம்சாவளி: M168> M89> M9> M20

மரபணுக் குறியீடு: M20 (மூலத் திராவிட முன்னோடிகள் – பகுதி II)    

Picture courtesy: Genographic Project.

இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பழங்கற்காலத்தைச் சேர்ந்த M168 என்னும் மரபணுக் குறியீட்டைக் கொண்ட நவீன ஹோமோ சேப்பியன்ஸ் இன மனிதர்கள் ஆபிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கை வந்தடைந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவர்களில் ஓர் ஆணின் Y – குரோமசோமில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வு  F-M89 என்ற மரபணுக் குறியீடு கொண்ட மக்களின் தோற்றத்திற்கு ஆதாரமாயிற்று. அக்காலச் சூழ்நிலையை சிறப்பாக எதிர்கொண்ட இம்மக்கள் (Survival of the Adaptable) வெகுவாகப் பெருகிப் பரவினார்கள். இவர்கள் ‘மத்திய கிழக்கு மரபுக்குழு’ (Middle Eastern Genetic Clan) என அழைக்கப்படுகிறார்கள்.  

இவர்களின் வம்சாவளியினர் இற்றைக்கு 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடமேற்காக ஈரான் ஊடாக மத்திய ஆசியாவுக்கு இடம்பெயர்ந்தார்கள். இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் ஈரானிலோ அல்லது மத்திய ஆசியாவின் தென்பகுதியிலோ இருந்த பொழுதில், அவர்களது F-M89 வம்சாவளியில் K-M9 என்ற குறியீடு கொண்ட மரபணுப்பிறழ்வு ஏற்பட்டது. K-M9 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்கள் ‘ஐரோப்பாசிய மரபுக்குழு’ (Eurasian Genetic Clan) எனப்படுவர். இவர்களது வம்சாவளியினர் அடுத்த 35,000 ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறார்கள். 

இற்றைக்கு 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் ஈரான் வழியாக தென்மத்திய ஆசியாவிற்குள் நுழைந்த போது தென்மத்திய ஆசியாவின் முப்பெரும் மலைத் தொடர்களை எதிர்கொள்ள நேர்ந்தது – கிழக்கே பரந்திருந்த ஹிந்துகுஷ் மலைத்தொடர், வடமேற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கிப் பரந்த இமாலய மலைத் தொடர், தென்மேற்கிலிருந்து வடகிழக்காக ஓடிய தியென்-ஷா. இந்த மூன்று மலைத் தொடர்களும் இணையும் முச்சந்தி – தயிகிஸ்தானில் உள்ள ‘பமீர் முடிச்சு’ (Pamir Knot) ஆகும். இந்த மூன்று மலைத் தொடர்களின் உச்சிப் பகுதி 5,000 மீட்டரைவிட உயரமானது. இம்மக்கள் இடம்பெயர்ந்த காலத்தில் இறுதிப் பனியுகத்தின் கோரப் பிடியில் சிக்கி பனிப்படலங்களால் மூடப்பட்டிருந்த மலைகளைத் தாண்டிச் செல்வது வெகு கடினமான செயலாக இருந்திருக்கும். இந்த ‘பமீர் முடிச்சுப்’ பகுதியில் இந்த ஐரோப்பாசிய மரபுக்குழுவினர் மூன்று குழுவினராகப் பிரிந்தார்கள் – ஒரு குழுவினர் ஹிந்துகுஷ் தொடருக்கு வடக்கேயும், மற்றெரு குழுவினர் கிழக்கு நோக்கி கிழக்காசியாவுக்கும், மூன்றாவது குழுவினர் தெற்கு நோக்கி இந்தியாவுக்கும் பெயர்ந்தார்கள். Y – குரோமசோமின் இன்றைய பரப்பீடு (Spread) − இந்த உண்மையை மரபணுவியல் ஆய்வாளர்களுக்கு எடுத்துரைக்கிறது (Spencer Wells 2003: 112-113).

இந்தியாவிற்குள் நுழைந்த K-M9 குழுவினரின் ஓர் ஆண் ஒருவரின் Y – குரோமசோமில் L-M20 எனப் பெயரிடப்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இந்த L-M20 குறியீட்டைக் கொண்ட வம்சாவளியினர் தென்னிந்தியா நோக்கி இடம்பெயர்ந்தார்கள். தென்னிந்தியப் பெண்களின் மரபணுக்களை (mt-DNA) ஆய்வு செய்த மரபணுவியலாளர்கள், இந்த ஆண்கள் முதலில் வந்த ஆஸ்திரலோயிட் இன ஆண்களில் பலரைக் கொன்றுவிட்டு, அவர்களின் பெண்களை மணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த ஆஸ்திரலோயிட் ஆண்கள், இத்துன்புறுத்தலுக்கு அஞ்சி காடுகளிலும் மலைச்சாரல்களிலும் தனிமையில் வாழ்ந்தார்கள் (Spencer Wells, 2003: 112–114).

L-M20 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்கள் அகில இந்திய மக்களிடையே 7% முதல் 15% வரை காணப்படுகிறார்கள் (Basu et al. 2003; Cordaux et al. 2004; Sengupta et al. 2006; Thamseem et al. 2006). திராவிட மொழிகளைப் பேசும் உயர் மட்ட, மத்திய தர மக்களிடையே இக்குறியீடு விழுக்காடு அதிக அளவில் (17–19%) காணப்படுகிறது. அதே சமயம் இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளைப் பேசும் உயர்தர, மத்திய தர மக்களிடம் இக்குறியீடு 5–6 சதவிகிதமே காணப்படுகிறது. இந்த L-M20 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்கள், J2-J172 குறியீட்டைக் கொண்ட மக்களோடு இணைந்தனர். இவ்வாறு இணைந்த மக்களே சிந்துவெளி நாகரிகத்தின் கர்த்தாக்கள் எனக்கொள்ள இடமிருக்கிறது (Sengupta, S. et al. 2006).

தென்னிந்தியாவைத் தவிர, பலுச்சிஸ்தானத்தில் (பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட, பிராகுயி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி) இந்த மரபணுக் குறியீடு அதிக அளவில் காணப்படுகிறது (Qamar, S. et al. 2002; Sengupta et al. 2006). இந்தியாவின் ஆதிக்குடியினரிடம் இக்குறியீடு மிகக் குறைந்த அளவில் (5–6%) காணப்படுகிறது (Cordaux et al. 2004; Thamseem et al. 2006). இதிலிருந்து இக்குறியீட்டைக் கொண்ட மக்கள் இந்தியாவின் மேல்-பழங்கற்காலத்திற்கு (Upper Palaeolithic) உரியவர்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

தென்னாசியாவில் M20 மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களின் அடர்த்தி.

L-M20 உபகுழுக்கள்

L1: (M27, M76): இந்தியா, இலங்கையில் திராவிட மொழிகள் பேசுவோரிடம் குறைவான விகிதம். இந்தோ-ஈரானியரிடம் 10-20 சதவிகிதம் வரை.

L2: (M317): மத்திய, தென்மேற்கு ஆசியா – குறைவான (5%) விகிதத்தில்.

L3: (M357): தமிழ்நாடு, பாகிஸ்தானில் புருஷோ, பஸ்துன் மக்களிடம் 10-20 சதவிகிதம்.  

மரபணுப் பெருங்குழு R2

வம்சாவளி: M168> M89> M9> M45> M207> M124

மரபணுக் குறியீடு: M124 (மத்திய ஆசிய மரபுக்குழு)

K-M9 என்னும் மரபணுக் குறியீட்டைத் தாங்கிய முன்னோடி மக்கள் தென்மத்திய ஆசியாவை அடைந்தபோது மூன்று பெரும் கிளைகளாகப் பிரிந்து, அவற்றில் ஏற்பட்ட L-M20, O-M175, P-M45 ஆகிய மரபணுப் பிறழ்வுகளோடு (Mutations) மேலே பயணித்தார்கள். இவர்களில் L-M20 குறியீட்டைத் தாங்கியவர்கள் தென் ஆசியாவுக்கும், O-M175 குறியீட்டைக் கொண்டவர்கள் கிழக்கு ஆசியாவுக்கும், P-M45 குறியீட்டைக் கொண்ட மூன்றாவது கிளையினர் மத்திய ஆசியாவை நோக்கியும் பயணித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

M124 மரபணுக் குறியீடு கொண்ட மக்களின் இந்திய வருகை. Picture courtesy: Genographic Project.

ஏறக்குறைய 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவில் P-M45 குறியீட்டைக் கொண்ட ஓர் ஆணிடம் M207 என்னும் மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. M207 குறியீட்டைக் கொண்ட மனிதரின் வம்சாவளியினர் தாம் சென்ற பாதையிலிருந்து திரும்பி தென்னாசியாவை நோக்கி நகர்ந்தார்கள். அவ்வாறு சென்ற வழியில் இவர்களின் மரபணுவில் R-M124 என அழைக்கப்படும் மேலும் ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இவர்கள் இரு கிளைகளாகப் பிரிந்து வட இந்தியாவிற்குள் மேற்குப் பக்கமாகவும், கிழக்குப் பக்கமாகவும் உட்புகுந்தார்கள். மரபணுக் குறியீடு M124 கொண்டவர்களும், அவர்களது முன்னோடிகளான M207, M45 ஆகிய அனைவரும் R என்னும் மரபினப் பெருங்குழுவைச் சேர்ந்தவராவர் (Spencer Wells 2009).

25,000 ஆண்டுகளுக்கு முன்னர் வட இந்தியாவை வந்தடைந்த R-M124 குறியீட்டைக் கொண்ட இக்குழுவினர் தென்னாசியாவின் ஆரிய மக்களுக்கு முற்பட்ட சனத்தொகையின் ஒரு பகுதியினராவர். இவர்களின் வம்சாவளியினர் வட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் இன்றைய சனத்தொகையின் 5–10 சதவீதத்தினராவர் (Spencer Wells 2007: 227).

தென்னிந்தியச் சனத்தொகையிலும் இக்குறியீடு கொண்ட மக்கள் 5–10% காணப்படுகிறார்கள். 2003ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் இலங்கையின் சிங்கள மக்களிடமும் R-M124 குறியீடு கொண்ட மக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது (Kivisild, T. et al. 2003).

மரபணுப் பெருங்குழு J2 

வம்சாவளி: M168> M89> M304> M172

மரபணுக் குறியீடு: M172 (மொசப்பத்தேமிய மரபுக்குழு) 

இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு மொசப்பத்தேமியாவில் – சுமேரியா, இலம் ஆகிய நாடுகளில் நீர்ப்பாசன விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் குழுக்களில் முக்கியமானவர்கள் J2-M172 என்ற மரபணுக் குறியீட்டைக் கொண்ட மக்களாவார். மத்திய கிழக்கில் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய F-M89 மரபணுவைக் கொண்ட மக்களில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வு J-M304 ஆகும். இந்த J-M304 மரபணுவில் ஏற்பட்ட மற்றுமொரு பிறழ்வு J2-M172 என அழைக்கப்படுகிறது.

புராதன தெற்கு பாரசீகத்திற்கும் (இன்றைய ஈரான்) சுமேரியாவிற்கும் (இன்றைய தெற்கு ஈராக்) இடையே படர்ந்திருந்த ஸாகுரொஸ் (Zagros Mountains) மலைச்சாரல்களில் வாழ்ந்திருந்த பண்டைய மக்களிடையே J2-M172 மரபணுக் குறியீடு கொண்டோரும் காணப்பட்டனர். உலகில் முதன்முதலாக விவசாயத்தில் ஈடுபட்டவர்களில் இவர்களும் ஒரு குழுவினர் எனக் கருதப்படுகிறது. இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து சுமேரியாவிலும், கிழக்கே இடம்பெயர்ந்து இலம் நாட்டிலும் குடியேறி நீர்ப்பாசன விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.

இற்றைக்கு 11,000–9,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த J2-M172 மரபணுக் குறியீடுகளைக் கொண்ட விவசாயிகள் அன்றைய இலம் நாட்டிலிருந்து (Modern Khuzistan) போலன் கணவாய் வழியாக பலுச்சிஸ்தானத்திற்கும், அங்கிருந்து சிந்துவெளிக்கும், பின்னர் இந்தியா முழுவதும் பரவினார்கள். அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் விவசாய நடவடிக்கைகளைப் பரப்பினார்கள். இந்த J2-M172 மரபணுக் குறியீடு குஸிஸ்தானில் (பண்டைய இலம்) வாழும் 32% மக்களிடையிலும், பலுச்சிஸ்தானில் பிராகுயி மொழி (திராவிட மொழி) பேசும் 28% மக்களிடையிலும், தமிழ்நாட்டில் 19% மக்களிடையிலும், கேரளத்தில் 15% மக்களிடையிலும் காணப்படுகிறது (Cavalli-Sforza 1994; Quamar, R. et al. 2002; Sengupta, S. et al. 2006; Regueiro et al. 2006; Thiagarajah, Siva 2011: 122–123).

இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்காசியாவில் J-M304 இலிருந்து தோற்றம் பெற்ற இரு மரபணுப் பெருங்குழுக்கள் J1, J2 என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் J1 குழு அரேபியாவிலும், J2 குழுவினர் மொசப்பத்தேமியாவிலும் (சுமேரியா + இலம் நாடுகள்) பரவினார்கள். வேளாண்மை விவசாயத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் J2 குழுவினராவர்.

1970களில் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர் டேவிட் மக்அல்பின் இலம் மொழிக்கும், இந்தியாவின் திராவிட மொழிகளுக்கும் உள்ள இலக்கண, சொற்பத ஒற்றுமைகளைக் கொண்டு திராவிட மொழிகளும், இலம் மொழியும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்ட ஒரு பொது மொழியிலிருந்து உருவானவை என்ற கோட்பாட்டை முன்வைத்து, அதற்கு ‘இலமைத்திராவிட’ (Elamo-Dravidian) மொழி என்ற பெயரை வழங்கியிருந்தார் (Mc Alpin, D. 1981). (இப்பொருள் பற்றி விவரமாக இனித் தொடரும் இயல்களில் பேசப்படும்).

இலம் நாட்டிலிருந்து போலன் கணவாய் வழியாக பாகிஸ்தான் மேற்கெல்லையிலுள்ள பலுச்சிஸ்தானத்து மேர்கார் கிராமத்திற்கும், அங்கிருந்து சிந்துவெளிக்கும், பின்னர் முழு இந்தியாவுக்கும் பரவிய J2-M172 மரபணுக் குறியீட்டைக் கொண்ட இலமைத்திராவிட (Elamo-Dravidian) மக்கள் பரவிய பாதை. இவர்களில் ஒரு பகுதியினர் இலத்திலிருந்து கடல் மார்க்கமாகவும் தென்னிந்தியாவை வந்தடைந்தார்கள் எனக் கருதப்படுகிறது. இந்தியச் சனத்தொகையில் J2-M172 குறியீட்டைக் கொண்ட மக்கள் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அதிகம் காணப்படுவதற்கு இந்தக் கடல் மார்க்க இடப்பெயர்வு காரணமாகலாம்.

மரபணுப் பெருங்குழுக்கள் J1+J2இன் மேற்காசிய, தென்னாசிய, மத்திய ஆசிய, மத்திய கிழக்கு, அரேபிய, வட ஆபிரிக்கப் பரவலைக் காட்டும் படம்.

இந்தோ-ஆரிய மக்களின் இந்திய வருகை

மரபணுப் பெருங்குழு R1a1

வம்சாவளி: M168> M89> M9> M45> M207> M173> M17 

மரபணுக் குறியீடு: M17 (இந்திய-ஆரிய மரபுக்குழு)

R1a1-M17 மரபணுக் குறியீடு கிழக்கு ஐரோப்பாவில் தெற்கு ரஷ்யாவின் உக்ரைன் (Ukraine) பகுதியில் முதன்முதலாக இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்றது. இக்குறியீட்டின் தந்தையான R1-M173 ஐரோப்பாவில் தோற்றம் பெற்றதை மரபணுக்கூறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன (The microsatellite diversity is greatest in Southern Russia and Ukraine, suggesting it arose there). R1a1-M17 குறியீட்டின் தோற்றம், பரவல், அதன் காலம் அனைத்தும், ஐரோப்பாவில் கூர்கன் இன மக்கள் (Kurgan People) இக்குறியீட்டை தங்கள் ஐரோப்பிய-ஆசிய ஸ்ரெப்பி இடப்பெயர்வின் போது தம்முடன் எடுத்துச் சென்று பரப்பியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது (Wells, S. 2003: 167).

K-M9 என்னும் மரபணுக் குறியீட்டைத் தாங்கிய முன்னோடி மக்கள் தென்மத்திய ஆசியாவை அடைந்தபோது மூன்று பெரும் கிளைகளாகப் பிரிந்து, அவற்றில் ஏற்பட்ட M20, M175, M45 ஆகிய மரபணுப் பிறழ்வுகளோடு (Mutations) மேலே பயணித்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவர்களில் L-M20 குறியீட்டைத் தாங்கிய மக்கள் தென்னாசியாவை நோக்கியும், O-M175 குறியீட்டைக் கொண்ட மக்கள் தென்கிழக்கு ஆசியாவை நோக்கியும், P-M45 குறியீட்டைக் கொண்டவர்கள் மத்திய ஆசியாவை நோக்கியும் பயணித்தார்கள். மத்திய ஆசியாவை அடைந்த காலத்தில் P-M45 குரோமசோமில் R-M207 என்ற குறியீடு கொண்ட ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. R-M207 குறியீட்டைக் கொண்டோர் கிழக்கு ஐரோப்பாவை நோக்கிப் பயணித்தார்கள். அவர்கள் ஐரோப்பாவில் இருந்த சமயம் R-M207 குறியீடு கொண்ட ஒருவரின் குரோமசோமில் R-M173 பிறழ்வு நிகழ்ந்தது. இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் உக்ரைன் நாட்டை அடைந்த சமயத்தில், அவர்களில் ஓர் ஆணின் R-M173 மரபணுக் குறியீடு கொண்ட குரோமசோமில் R1a1-M17 எனப் பெயரிடப்பட்ட மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இந்த ஆணின் வம்சாவளியினர் மிகவும் வலிமை பெற்று, அங்கிருந்து மேற்குலகம் முழுவதற்கும், இந்தியாவிற்கும் பரவினார்கள்.

மரபணுக் குறியீடு R1a1- M17இன் தோற்றம். Picture courtesy: Genographic Project.

R1a1-M17 மரபணுக்குறியைத் தாங்கிய மக்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஈரான்-ஆப்கானிஸ்தான் வழியாக பொ.யு.மு. 2000க்கும் பொ.யு.மு. 1500க்கும் இடைப்பட்ட 500 ஆண்டுக் காலத்தில் பகுதி பகுதியாகப் பஞ்சாப் வந்தடைந்து அங்கிருந்து இந்தியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவினார்கள். இன்று டெல்லியில் வாழும் இந்தி பேசும் ஆண்களிடையே 35 சதவீதம் R1a1-M17 மரபணுக் குறியீடு காணப்படுகிறது (Wells, S. 2003: 167). இந்தியப் பிராமணர்களிடையே R1a1-M17 குறியீடு அதிகமானவர்களிடம் காணப்படுகிறது (Cavalli-Sforza 1994).

உலக மக்களின் Y – குரோமசோம்களில் காணப்படும் மரபணுக் குறியீடுகள். இக்குறியீடுகளில் பல, இன்றைய தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்