‘ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் செயற்பாட்டாளர்’ ஏ.எம். இராமையாவும், ‘தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்’ எம்.ஏ. இராகவனும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

‘ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் செயற்பாட்டாளர்’ ஏ.எம். இராமையாவும், ‘தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயற்பாட்டாளர்’ எம்.ஏ. இராகவனும்

March 31, 2026 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

ஏ.எம். இராமையா அவர்களின் வீதிப்பாடல்கள்

பல்வேறு தளங்களில் மலையக வீதிப்பாடல்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. கோவிந்தசாமி தேவரின் தோழராக இருந்து பாடல்களை வழங்கியவர்களில் முக்கியத்துவம் பெறுபவராக ஏ.எம். இராமையா தேவரை அடையாளம் காண முடிகிறது. எட்டியாந்தோட்டையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவராகவே கோவிந்தசாமி அடையாளங் காணப்பட்டிருந்தார். ஆனால் ஏ.எம். இராமையா தேவரின் வாழிடம் தொடர்பில் உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அவரும் எட்டியாந்தோட்டையில் வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. அதேவேளை, நாவலப்பிட்டி தளத்திலிருந்து இராமையா தேவரின் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. கோவிந்தசாமி தேவருடன் இணைந்த நிலையில் அவர் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கோவிந்தசாமி தேவரைப் போலவே, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மேடைகளே அவருக்கான பாடலிசைக்கும் களங்களாக அமைந்துள்ளன.

கோவிந்தசாமி தேவருக்கே உரிய பாணியில் நீண்ட வரிகளைக் கொண்ட பாடல்களை இயற்றுவதில் இராமையா தேவரும் ஆர்வம் காட்டியுள்ளார். அவர் பாடிய பாடல்களை அடையாளப்படுத்தும் வகையில், அவரது பாடல்களில் அவரைக் குறிப்பிட்டும் வரிகள் இடம்பெறுகின்றன. “இன்னும் எவ்வளவோ இடைஞ்சல் இருக்குது.. ஏ.எம். இராமையா மனதில் இருப்பதைச் சொல்லவும் மனமில்லையே..” என்று தனது வேதனையுணர்வையும் பதிவு செய்துள்ளார். அதேபோல் “ஜெயமோங்கும் பாண்டிநாடு சீலன் ராமையா தமிழ்”, “பன்னுதமிழ் வாணனெனும் ராமையா தமிழ்” போன்ற வரிகளின் மூலம் தன்னைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்துவதையும் காண முடிகிறது.

1955 ஆம் ஆண்டு வீ.எஸ். கோவிந்தசாமி தேவருடன் இணைந்து வெளியிடப்பட்ட ‘பிரஜா உரிமைக் குரல்’ என்ற பாடல் தொகுப்பு நூலில் இராமையா தேவரின் பங்களிப்பும் கவனத்தைப் பெறுகிறது. அந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலையிலே எழுந்திருச்சி” எனும் பாடலின் மெட்டில் அமைந்த பாடல், மூன்று வரிசைக் கட்டமைப்பில் நாற்பது அடிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்தியத் தமிழர்களின் வரவை சித்தரிக்கும் முனைப்பில் மேற்குறித்த பாடலினுள் அமைந்த வரிகள் பின்வருமாறு அமைகிறது.

“பாட்டனோடு முப்பாட்டன் 

கூட்டமாக நாங்கள் வந்து 

காட்டுமலைக் காடுகளை வெட்டினோம் – பெரிய 

காட்டை வெட்டித் தேயிலை உண்டாக்கினோம்

பாரத உலகமென்னும் பாண்டியர்கள் நாட்டினிலே

தீராத அச்சுதாவின் பஞ்சமே – மக்கள்

தேடி வந்தோம் லங்கை நகர் தஞ்சமே”

என புலப்பெயர்வுக்கான நிர்ப்பந்தத்தையும் எடுத்தியம்புவதைக் காண முடிகிறது. தொடர்ந்து ஆட்கட்டும் கங்காணிகளின் போக்கினையும் பதிவு செய்துள்ளதை அவதானிக்கலாம். 

“சங்கரா சம்போவென்று சங்கூதி தப்படித்து 

பொங்கலிட்டு பலிகொடுக்க எங்களை 

கங்காணி கூட்டி வந்தார் லங்கையில்”

புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் பயணப்பாதை பெரும்பாலும் காட்டு வழியாகவே அமைந்திருந்தது. காடுகளில் கொடூர மிருகங்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். தாங்கள் பயணம் செய்கின்ற வேளையில் தப்பிசைத்தும், சங்கூதியும் அவ்வகை மிருகங்களை தங்கள் பயணப் பாதையில் இருந்து துரத்தும் நுட்பத்தைக் கையாண்டுள்ளார்கள். அவற்றை அடையாளப்படுத்தும் வகையில் மேற்குறித்த வரிகள் கவனம் பெறுகின்றன. 

தீவிர வறுமை நிலைமையை எடுத்துரைக்கும் வகையில்,

“ஆத்தாளும் உங்கப்பனுமே சோத்துக்குடி இல்லாமே

தூத்துக்குடிப் பாதை வழி கடவுளே – நாங்கள்

துன்பப்பட்டு வந்த முடா படகிலே…

புறப்பட்டு வரும் போது புயல்காற்று வீசினதால்

புரண்டோடுமே தலைகீழாய் போட்டிலே – எங்களை 

போட்டடைத்தான் தட்டப்பாரை வாட்டிலே

சம்பாதிக்க கெட்டிக்கார கங்காணி

தட்டப்பாரை கேம்புக்குள்ளே ஆண்டவா – நாங்கள்

பட்ட பாட்டைக் கேட்டுக்கடா தாண்டவா”

எனத் தொடரும் வரிகள் தொழிலாளர்கள் பட்ட துன்பத்தை எடுத்துரைப்பதாக அமைகின்றன. 

“கம்பளி பத்து ரூபா – கருப்பு கம்பளி பன்னிரெண்டு ரூபா” எனக் கணக்கு எழுதி கங்காணிகள் தொழிலாளர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் நடைமுறை இருந்ததாகக் கூறப்படுகிறது. உண்மையில் கம்பளி இயல்பாகவே கருப்பாக இருக்கும். இருந்தபோதிலும் மக்களை ஏமாற்றும் நோக்கில், அதன் வண்ணத்தைக் காரணம் காட்டி அதிகமாகக் கணக்கெழுதும் முறையும் காணப்பட்டது. இவ்வாறு கம்பளி தொடர்பான விடயத்தில் மட்டும் அல்ல, பொருட்கள் பகிர்ந்தளிப்பு, நிதி வசூல் போன்ற பல துறைகளிலும் இம்மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். அவ்வாறான ஒரு சம்பவத்தை இராமையா தேவரும் தனது பாடலில் பின்வருமாறு குறிப்பிடுவது அவதானத்திற்குரியதாகும். வேட்டிகள் என்றாலே பொதுவாக வெள்ளையாகத்தான் இருக்கும். வேட்டியின் விலையையும், வெள்ளை வேட்டியின் விலையையும் குறிப்பிட்டு ஏமாற்றும் செயற்பாட்டை கண்டிக்க விளையும் அவரது போக்கு கவனத்திற்குரியதாகும். 

“வேஷ்டியெல்லாம் ரண்டு ரூபாய்

வெள்ளைவேட்டி மூன்று ரூபாய்

தாட்டிகமாய் கொழுந்தெடுத்தா பொம்பள உனக்கு

சாக்கு சாக்காய் பணங்குவியும்…”

மலையகப் பெண்களின் அவல நிலையை 110 வரிகளில் பாடலாக எடுத்துரைக்கும் இராமையா தேவரின் முனைப்புக் கவனத்தைப் பெறுகிறது. அதிகாலை நித்திரையிலிருந்து எழும் தருணத்திலிருந்து தொடங்கி அவர்கள் ஆற்ற வேண்டிய அன்றாட வேலைகள் எத்தகைய பாரத்தையும் சுமையையும் கொண்டவை என்பதைப் பாடல் வரிகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. அதேவேளை, வீட்டுச் சூழலில் கணவன் மற்றும் குடும்ப அங்கத்தினருடன் தொடர்புடைய துன்பங்களையும் பாடல் வரிகள் பதிவு செய்ய முயல்கின்றன. இதனால், குடும்பத்திலும் தொழிலிடத்திலும் பெண்கள் எதிர்கொள்ளும் இரட்டைச் சுமை வெளிப்படையாகப் பிரதிபலிக்கிறது. தொழில்களத்தில் பெண்ணாக இருப்பதன் காரணமாக அவர்கள் அனுபவிக்க வேண்டிய அவஸ்தைகளும் ஏராளமாக இருப்பதை இந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.

“சில்லரைப்புலி சின்னக்கங்காணி விரட்டிடுவாரு

ஐயோ சீக்கிரமாய் பத்தாம் நம்பர் ஓடித்தீரணும்

சீலை மேலே படங்கு ஒன்றை சேர்த்துக்கட்டணும் – பெரிய 

சணல் கயிற்றை அதுக்கு மேலே இறுக்கிக்கட்டணும்…..”

எனத் தொடரும் வரிகள் தொழில்களத்தில் படும்பாட்டை எடுத்துரைப்பதாக அமைகின்றன. அத்துடன், 

“ஓட்டுப் பிரஜா உரிமை இல்லை ஓடிப்போங்கடா நீங்கள் 

உழைத்ததற்கு கூலி தந்தோம் நாட்டை விடுங்கடா…” 

என்ற எதிர்த்தரப்பின் கோசத்தை எழுதும் இராமையா தேவர், 

“ஓட்டுரிமை இல்லையென்று சொல்ல வேணாங்க – நாங்கள் 

ஓடிவிட்டால் லங்கையெல்லாம் காடாய்ப் போகுங்க

தென்னிலங்கை மண் மிதித்தோம் பொன்னாகிப் போச்சி – இன்று

தேறுதலே இல்லையெனறால் வீணான பேச்சு  

பாட்டாளி மக்கள் படும்பாட்டைப் பாருங்க கொஞ்சம்

பகிர்ந்து பார்த்து உணர்ந்துகொண்டு உரிமை தாருங்க”

என நாசூக்காக தனது வாதத்தை எடுத்துரைப்பதையும் காணலாம்.

இராமையா தேவரின் பாடல்கள் மிக அருமையாகக் கிடைக்கின்ற நிலையில், ‘விபரீத போக்கு’ எனும் தலைப்பிலான அவரது பாடல் வரிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

படுகொலைச் சிந்துப் பாடல்களை வழங்கிய ஜபார் ஜில்லியின் பாடல்களை நாம் அவதானித்திருக்கிறோம். குறிப்பிட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, அவற்றின் களச்சூழல் மற்றும் பின்னணியை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு பாடல்களை இயற்றுவதில் கைதேர்ந்தவராக ஜில் விளங்கினார். அவ்வாறான ஓர் அணுகுமுறையில், தோட்டங்களில் துரைமார்களின் அட்டகாசங்களை எடுத்துரைக்கும் பாடல்களை இராமையா தேவரும் இயற்றியுள்ளார். டம்மோரியா, பசறை, ஹோப்டன், ஹைபாரஸ்ட் போன்ற தோட்டங்களில் பொறுப்பில் இருந்த துரைமார்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை எடுத்துரைத்து, அவற்றைக் கண்டிக்கும் போக்கில் இராமையா தேவரின் வரிகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. தோட்டம் குறித்த அறிமுகம், தொழிலாளர்களுக்கு எதிரான துரைமார்களின் செயற்பாடுகள், தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அவதானத்தோடு இப்பாடல் புனையப்பட்டுள்ளது. 

அத்தோட்டத்தில், அரிசிப் பங்கீட்டில் ஏற்பட்ட முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பதிலாக துரைமார்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக மற்ற தொழிலாளர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். 

பொதுவாக மலையக வீதிப்பாடல்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் சௌமியமூர்த்தி தொண்டமானையும் விமர்சிக்கும் போக்கைக் கொண்டுள்ளன. ஆனால் இச்சம்பவத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தொண்டமானின் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையிலான குரலும் இப்பாடலில் இடம்பெறுவது கவனிக்கத்தக்கதாகும். இதனை வலியுறுத்தும் வகையில் பின்வரும் வரிகள் குறிப்பிடத்தக்கவை.

“கூலி வேலை செய்யு மேழைத் தொழிலாளி

கொண்ட பெருங்கூட்டம் – தொண்டமான் 

விண்டமொழி நாட்டம் ………………”

“தோட்டத் துரைமார்களின் போக்கையுங் கண்டித்து

மோட்டாரில் விரைந்தார் – தொழிலாளர்

வாட்டமும் உணர்ந்தார் – சரியான 

சாட்டையுங் கொடுத்தார் – தலைவர்

தொண்டமான் அஸீஸ் ராஜலிங்கமுடன் 

பேட்டியுங் கொடுத்தார்….”

“எண்டிசையோர் புகழ் தொண்டமான் பொன்மொழி

இடி முழங்குது பார் – மூவர்ணக்

கொடி துலங்குது பார் – தொழிலாளர் 

குறையகலுது பார்”

இராமையா தேவரின் பாடல் உருவாக்கத்தில் கோவிந்தசாமி தேவரின் வகிபங்கு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பான மேலதிக ஆய்வு அவசியமாகிறது. மலையக வீதிப்பாடல்கள் குறித்துப் பேசப்படும் சூழலில், இராமையா தேவரைப் பற்றிய குறிப்புகள் பலராலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவே இராமையாவின் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். அதேவேளை, கோவிந்தசாமி தேவரின் பாடல் பாடும் பாணியிலிருந்து வேறுபடும் சில தன்மைகளை இராமையா தேவரின் பாடல்களில் அவதானிக்க முடிகிறது. இயக்கச் செயற்பாட்டாளராகவும் சமூக அக்கறையாளர் எனும் நிலையிலும் அவர் ஆற்றிய பங்கேற்பு, மலையகச் சமூகத்தின் முன்னேற்றத்தையே நோக்கமாகக் கொண்டதாக அமைந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

மஸ்கெலியா மண்ணின் மைந்தன் எம்.ஏ. இராகவனின் வீதிப்பாடல்கள்

மலையக அசைவியக்கத்தில் மஸ்கெலியா மண்ணின் வகிபங்கும் கணிசமான தடங்களைப் பதித்துள்ளது. இந்த மண்ணில் இருந்து பலரும் மலையகச் சமூக உருவாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவ்வகையில் மலையக வீதிப்பாடல் துறையில் பங்களிப்பை வழங்கியவராக எம்.ஏ. இராகவன் விளங்குகிறார். எம்.ஏ. இராகவன் முழுநேர தொழிற்சங்கவாதியாக அறியப்படுகிறார். தேசிய தொழிலாளர் சங்கத்தின் தொடக்கத்திற்கு பங்களிப்பை வழங்கிய முன்னோடியாகவும் அவர் அறியப்படுகிறார். இத் தொழிற்சங்கத்தில் வி.கே. வெள்ளையனுடன் இவர் இணைந்து பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது. பாடல் புனையும் ஆற்றல் கொண்ட ஆளுமையான எம்.ஏ. இராகவனின் பாடல்களும் இத்துறையில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளன எனலாம். ஏற்கனவே வெளியாகிய பாடல்களின் மெட்டுக்களிலேயே இவரும் பாடல்களை இயற்றியுள்ளார். அறுபதுகளில் தொடங்கிய இவரது செயற்பாடுகள் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்துள்ளன. எழுபதுகளிலேயே அவர் இயற்கை எய்தியதாகவும் அறிய முடிகிறது. தொழிலாளர்கள் மீதான கரிசனையுடன் இரண்டு தொகுதிகளாகப் பாடல்களை வெளியிட்டுள்ளார். அவர் எழுதிய இரண்டாம் பாகம் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவரை முழுமையாக வெளிப்படுத்துவதில் சிக்கல் நிலை தோன்றுகிறது. இருந்த போதிலும், இத்தொகுதியின் பாடல்கள் வெளிப்படுத்தும் உட்கருத்துகள் ஊடாக அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக உணர முடிகிறது. ‘தொழிலாளர் இதய கீதம்’ இரண்டாம் பாகம் தொகுதியில் முதலாவதாக அமைந்த பாடல் “ஆசையா கோபமா” என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ளது. 

“தொழிலாளியே ஏனிந்த மயக்கம் 

துயர் போக்கிட ஏனின்னும் தயக்கம்

தோழனே பாரிங்கே….. தோழனே பாரிங்கே….”

என்ற அறைகூவல் வரிகளோடு,

“உன் திறமையை நீ உணராமல் 

தெளிவாகவே ஏதும் புரியாமல்

ஏய்க்கின்றார்…ஏய்க்கின்றார்…”

என ஏமாறும் தன்மையைச் சாடுகிறார். விடிவு நோக்கி நகர வேண்டும் என்ற அவரது உள்ளார்ந்த நிலைப்பாட்டை உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் விடிவை நோக்கிய நகர்வில் மே தினத்தைச் சார்ந்த முன்னெடுப்புகள் மிகுந்த கவனத்திற்குரியவையாக அமைகின்றன. உலகத் தொழிலாளர்களை ஒரே அணியில் ஒன்றிணைத்த வரலாற்றுத் திருப்பத்தை உணர்த்தும் இந்நிகழ்வு சிறப்புமிக்கதாகும். அவ்வகையில், இலங்கையில் பெரும் தொழிலாளர் படையாக விளங்கும் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றுபட்டுச் சிந்திக்கத் தூண்டும் மே தின அனுஷ்டிப்பு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகிறது. மே தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அன்னாரின் பாடல் புனைவு பின்வருமாறு அமைகிறது.

“துயர் கொண்ட தோழர்கள் துணிவென்ற பாதையில்

களம் கண்ட நாள் இந்த மேய் தினமே

செல்வச் சீமான்கள் நிறைந்த அந்த சிக்காக்கோ தெருக்களில் நின்று

உரிமையைக் கோரியே போர்தொடுத்து 

உழைப்பவர்கள் வாழ்விற்கு வழிகாட்டி

மறைந்த அத்தோழர்கள் தியாகத்தை போற்றியே

சிரம் தாழ்த்துவோம் இந்த மேய் நாளிலே”

இப்பாடல் “மனமென்னும் மேடை மேலே” எனும் பாடலின் மெட்டைத் தழுவியதாக உள்ளது. 

மலையக மக்கள் ஏமாற்றத்திற்கு மாத்திரமே தாம் உரித்தானவர்கள் என வரையறுத்துக் கொள்கிறார்கள். அந்நிலையில் இருந்து மீண்டெழ வேண்டிய அவசியத்தை உணர்த்தும் பொறுப்பில் பாடலாசிரியரால் இவ்வரிகள் புனையப்பட்டுள்ளன. 

“ஏய்க்கும் கூட்டமொன்று எக்காளம் போடுது

ஏமாற்றும் கூட்டமொன்று எப்போது மிருக்குது

வள்ளுவன் தந்த குரல் வையகம் தழைத்தோங்க 

வழிவகை செய்ததடா தமிழா.. 

வண்டமிழ் மொழிகாத்து முல்லைக்குத்தேரீந்த

வள்ளல் பாரி நம்மவரே

மறக்க முடியாத சிலப்பதிகாரம் தந்த 

இளங்கோவும் நம்மவரே

காணக் கிடைக்காத கருத்துக் குவியல்களை

வாரியிறைத்திட்ட கவிகளின் வரலாறு 

தேடக் கிடைக்காத தேனினுமினிக்கின்ற

தீந்தமிழ் காவியங்கள் பலவுண்டு 

வீரத்தில் பெயர் கொண்ட வேந்தர்கள் மூவரும்

சங்கம் வளர்த்த தமிழ் புலவர்கள் யாவரும்

வானமே இடிந்தாலும் மனம் சற்றுமசையாத

மறவரின் சரித்திரங்கள் பலவுண்டு”

தமிழ் மொழியின் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, எழுச்சியை ஏற்படுத்தும் இப்பாடலின் முனைப்பு மனங்கொள்ளத்தக்கதாக அமைகிறது.

மொழி மீதான பற்றுறுதி மிக்கவராகவும் எம்.ஏ. இராகவனை அடையாளம் காணலாம். தான் சார்ந்த மொழி மீதான பற்றுறுதியும், இனம் மீதான பிடிப்புணர்வும் அவசியம் என்பதை போதிக்கும் மனப்பாங்குடன் “வாழ்வது போனாலும் வறுமையே வந்தாலும்” என்ற மெட்டில் அமைந்த பின்வரும் பாடலும் கவனத்தை ஈர்க்கின்றதாக அமைகிறது.

“தாழ்வுமே வந்தாலும் தலையது போனாலும் 

தாய் மொழி மறவாதே தமிழா”

அறுபதுகளில் வெளிவந்த பாடல்களில் “சரவணப் பொய்கையில் நீராடி” எனும் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றதாக விளங்கியது. அப்பாடலின் மெட்டிலேயே தனது வரிகளையும் தொடர்புபடுத்திய இராகவன், இடதுசாரி உணர்வுடன் தொழிலாளர்களை ஒன்றிணைக்க முயல்கிறார்.

“சமத்துவப் பாதையில் போராடி

புதுவாழ்வினைக் காண்போம் சோதரனே

துணைக்கரம் தந்தே துயர் போக்க சொந்த

சோதரன் சொல்லதனை உடன் கேட்போம்”

அத்துடன், “துன்ப நிலை நாம் அடைவதற்குள் – சொந்த சோதரன் இடந்தனை நாடிச் செல்வோம்” என்ற அறைகூவலும் கவனத்தைப் பெறுகிறது. 

தான் சார்ந்த அமைப்பின் வழியாகத் தனது மனவுணர்வுகளைப் பதிவு செய்யவும் இராகவன் முனைகின்றார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிறப்பையும் நோக்கத்தையும் பதிவுசெய்யும் பின்வரும் வரிகளும் குறிப்பிடத்தக்கதாகின்றன.

“தேயிலை இரப்பரும் தென்னையும்

செழிப்புடன் வளர்ந்திட உழைத்திடும்

உழைப்பவர் வாழ்வுமே உயர்ந்திட உயர்த்துவோம்”

அவ்வாறே இவ்வமைப்பின் கொடியைச் சிறப்பிக்கும் வரிகளும் கவனத்தைப் பெறுகின்றன. 

“வெண்மை காட்டிடும் தூய்மையை

பச்சை காட்டிடும் செழுமையை

சிவப்பு சூரியன் காட்டிடும் தியாகம் உழைப்பு இரண்டையும்

வர்ண மூன்றைக் கொண்டதாய் 

வளங்கள் பொங்க நேர்த்தியாய் 

வானளாவ பறந்திடும் வறுமை தீர நாளுமே” 

அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கம் மீதான பற்றுறுதி நிலையினை எடுத்தியம்பும் வகையில், “தொழிலாளர் தேசிய சங்கமடா துயர்படும் ஏழைகளின் நண்பனடா – சுரண்டலை எதிர்த்திட தோன்றியது, துன்பங்கள் பறந்திட வளர்கிறது” என பாடலாசிரியர் அறைகூவுகின்றார். மேலும், 

“இயக்கத்தின் பேரொலி கேட்குது பார் – இளையோர்கள் அணியங்கு தோன்றுது பார்

ஜனநாயகம் வாழப் போரிடுவோம் – சதிகளை வேருடன் ஒழித்திடுவோம்

தொழிலாளர் ஒற்றுமை வேண்டும் தம்பு –  உயர்வாக வாழ வழி வேண்டும் நம்பு”

என்ற உறுதிமொழி வாசகங்களும் நம்பிக்கையின் கீற்றுகளாக அமைகின்றன. 

“தொழிலாளர் வாழ்க்கையில் துயர் கொடுத்தோர் இருந்ததில்லை

துன்பப்படும் ஏழைகளை ஏய்த்தவர்கள் வாழ்ந்ததில்லை

வருவதெல்லாம் வரட்டும் மன உறுதியோடு நமக்கு

பொறுமையுடன் இருந்தே புதுவழி காண்போமே”

என்ற வரிகளும் திடத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. தொடர்ந்து வரும் பாடலில் பின்வரும் வரிகளும் கவனத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. 

“பீலிக்கரையினில் நடந்திடும் சண்டையை பிரமாதப்படுத்தாமல் 

தொழில் வகையில் வரும் பிரச்சினையை எதிர்கொண்டு 

சங்கத்தின் துணையால் வெற்றி கொள்வோம்”

தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகச் சிந்தனைகள் மலையகத்திலும் ஊடுருவிய காலமாக அது அமைந்தது. சினிமா வாயிலாக இக்கருத்துகள் மிக இலாவகமாக சமூகத்தினிடையே சென்றன. அறிஞர் அண்ணாவும் திராவிடக் கழகச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளும் மலையகச் செயற்பாட்டாளர்களை உந்தின. பல வீதிப்பாடலாசிரியர்கள் அறிஞர் அண்ணாவின் சிறப்பைப் பாடியுள்ளார்கள். 

எம்.ஜி.ஆர் வழியாகவும் திராவிடக் கருத்துகள் மலையகத்திற்குள் மிக வேகமாக ஊடுருவியமை குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கச் சிந்தனைகளை கற்றுக்கொடுத்த ‘வாத்தியார்’ ஆக எம்.ஜி.ஆர் பெரும் செல்வாக்கைப் பெற்றார். பொதுவாக எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களே திராவிடக் கருத்துநிலைகளின் ஊன்றுகோலாகத் திகழ்ந்தன எனலாம். அவ்வீர்ப்பின் வெளிப்பாடாக, வாத்தியார் மீதான பற்றுதலுடன் அவருக்காகவும் எம்.ஏ. இராகவன் பாடல் இயற்றியுள்ளார்.

“அறிஞர் எங்கள் அண்ணாவின் அன்பு மிகும் தம்பிகளில் 

ஆற்றல் மிகுந்த நல்ல எம்.ஜியாரே

கலைவாணர் வாரிசு கலைக்கொரு மேதையே

கடமை மறவாத எம்.ஜியாரே”

உலகப் பொதுமறையாகச் சித்தரிக்கப்படும் திருக்குறள் மீது கொண்டிருந்த ஈர்ப்பின் காரணமாக, அந்நூல் தொடர்பாக சமூகத்தின் கவனத்தை ஏற்படுத்தும் வகையிலும் எம்.ஏ. இராகவன் பாடல்களைப் புனைந்துள்ளார். அவர் தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் கொண்டிருந்த உள்ளார்ந்த ஈடுபாட்டினால் அவற்றின் சிறப்புகளையும் வீதிப்பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்விடயமே அவரை ஏனைய வீதிப்பாடலாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது எனலாம். தான் சார்ந்த சமூகத்தினரை அறிவுபூர்வமான சிந்தனை கொண்டவர்களாக மாற்ற வேண்டும் எனச் சிந்திப்பவர்களாலேயே அவ்வாறான அணுகுமுறையைப் பின்பற்ற முடியும். திருக்குறளின் மேன்மையையும் வள்ளுவனின் சிறப்பையும் எடுத்துரைக்கும் முனைப்பில் பின்வரும் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

“என்றும் அழியா இலக்கியப் படைப்பு

ஏற்று நாம் ஓதிடுவோம் 

அறம் பொருள் இன்பம் ஆன முப்பாலும் 

அனைவரும் விரும்பிடவே தான்

அறிவுக்கு விருந்தாய் அமைந்த நற்குரலே

ஒளி தந்துமே ஒலி தந்துமே

நல்வழி காட்டிடும் உன்னத மறையாம் நற் திருக்குறளே

போற்றுவோம் போற்றுவோம் என்றும் நாமே

புகழ் ஓங்கும் குறள் தன்னை எந்நாளுமே”

சமூகம், இயக்கம், அரசியல், அறிவு ஆகிய விடயங்களில் இராகவன் கொண்டிருந்த தெளிவை அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. தாம் சார்ந்த மொழி மீதான பற்றுறுதியின் அவசியத்தை உணர்ந்த ஆளுமையாகவே இராகவனை நோக்கலாம். தாய்மொழி சார்ந்த இலக்கியங்கள் மீதான கரிசனையும் அக்கறையும் அவரின் வீதிப்பாடல்களில் தெளிவாக உணரப்படுகின்றன.

சமூக மேம்பாட்டுக்கான படிமுறைகளை நன்கு அறிந்த படைப்பாளி மற்றும் செயற்பாட்டாளர் என்ற வகையிலும் பாடலாசிரியரின் பங்களிப்பு கவனத்திற்குரியதாகிறது. உழைக்கும் வர்க்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடும் உணர்வும் அவரின் ஆளுமையில் பிரதிபலிக்கின்றன. மலையகச் சமூகத்தின் மீது கொண்டிருந்த உள்ளார்ந்த பற்றையும் அவரது பாடல்களில் தெளிவாக உணர முடிகிறது. சமூக அதிர்வலைகளை உருவாக்கும் ஆற்றலை அவரது பாடல்கள் நிச்சயமாகக் கொண்டிருந்தன. அவர் சார்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பார்ந்த வளர்ச்சிக்கும் இராகவனின் பாடல்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் இயற்றிய இன்னுமொரு பாடல் தொகுப்பும் கிடைக்குமானால், அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அவர் பேசிய பாடுபொருட்களை விரிவாக அறியவும் அது வாய்ப்பாக அமையும். இந்நூலை வெளியிட்டுள்ள லட்சுமி பதிப்பகம், நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பதிப்பு முயற்சிகளுக்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகவும் கருதப்படுகின்றது.

உசாத்துணை நூல்கள்

யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.

கோவிந்தசாமி, வி., ராமையா, ஏ. எம். (1955). உழைப்பாளி மக்களின் பிரஜா உரிமைக் குரல். பாண்டியன் புக் ஸ்டால்.

இராகவன், எம். ஏ. (19…). தொழிலாளர் இதய கீதம். லட்சுமி பதிப்பகம்.

முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.

சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.

மாத்தளை ரோகிணி. (1993). உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள். குறிஞ்சி வெளியீடு.

சிவலிங்கம், மு. (2007). மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம். 



About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்