கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலைகளுள் ஒன்றாகக் கொம்பு விளையாட்டு காணப்படுகின்றது. இவ்விளையாட்டு அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். மழைவளம் குன்றி நாட்டில் வெப்ப மிகுதியால் அம்மை, வைசூரி, குக்கல், வெப்பு, செங்கமாரி, கண்ணோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்ற போது அம்மனின் சீற்றத்தினாலேயே அவை ஏற்படுகின்றன என்ற அசையாத நம்பிக்கையினாலும் அவ்வியாதிகளைத் தீர்க்கின்ற தெய்வம் என்று பாராட்டியும் பக்தர்கள் அம்மனிற்குச் சாந்தி செய்ய வேண்டி இக்கொம்பு விளையாட்டை நிகழ்த்துகின்றனர்.
கொம்பு என்ற சொல் விலங்குகளின் கொம்புகளைப் பற்றிய எண்ணத்தையே பொதுவாக நமக்கு ஊட்டுவது ஆயினும் இங்கு குறிப்பிடும் கொம்பு என்பது மரங்களில் இயல்பாக அமைந்து காணப்படும் வளைதடி ஒன்றே என்பதைப் பயின்றோர் உடனே அறிந்து கொள்ளுதல் கூடும்.1
இவ்விளையாட்டு கிழக்கிலங்கையில் பட்டிமேடு, தம்பிலுவில், காரைதீவு, வீரமுனை, நீலாவணை, கோட்டைக்கல்லாறு, எருவில், களுதாவளை, தேற்றாத்தீவு, முதலைக்குடா, மகிழடித்தீவு, கன்னன்குடா, வந்தாறுமூலை, பள்ளிக்குடியிருப்பு, ஈரழக்குளம், கோராவெளி, சித்தாண்டி போன்ற பிரதேசங்களில் நடைபெறுகின்றது. மண்டூரில் முன்னர் நடைபெற்ற இவ்விளையாட்டு தற்போது வழக்கொழிந்து விட்டது. பள்ளிக்குடியிருப்பு, ஈரழக்குளம் போன்ற பிரதேசங்களில் இது நான்கு ஆண்டுகளிற்கு ஒருமுறை நடைபெறுவதுடன் ஏனைய இடங்களில் ஆண்டுக்கொருமுறை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
கொம்பு விளையாட்டுடன் தொடர்புடைய ஐதீகக் கதை
செங்கோல் கோடியவனாய்க் கோவலனைக் கொலை செய்த பாண்டிய மன்னனைப் பழிவாங்கி அவனரசியற்றிய மதுரையினை எரியூட்டிய பின்னரும் கோபம் தணியாது வந்த கண்ணகி முன்னர், இடையர்குல இளைஞர் ஒரு காதல் கலந்த விளையாட்டு விழாவாகக் கொம்பு விளையாடலைச் செய்து அவளைக் குளிர்வித்தனர்2 என்று வி.சி. கந்தையா தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஆனால் சிலப்பதிகாரத்தில் இக்கதையைக் காண முடியவில்லை. மாறாக ஆய்ச்சியர் குரவையில் இடைச்சேரியைச் சேர்ந்த பெண்கள் தம்சேரியில் நடைபெற்ற துர்நிமித்தங்களைப் பார்வையுற்று அதிலிருந்து காக்கும்படி மாயோனை வேண்டியே குரவைக் கூத்தினை ஆடினர் என்ற செய்தியே காணப்படுகின்றது. ஆனால் வி.சி. கந்தையாவின் கூற்றினைக் கொம்பு விளையாட்டுத் தொடர்பான ஐதீகக் கதையாக நோக்க முடியும்.
கொம்பு விளையாட்டிற்கான பொருட்கள்
கொம்பு
வளைந்த ‘ட’ வடிவிலுள்ள மரக்குற்றியே கொம்பு எனப்படும். பொதுவாகக் கொம்பினுடைய தலைப்பகுதியானது நிலத்திலுள்ள மரத்தின் வேராகவும், கழுத்துப்பகுதி மரத்தின் மேற்பாகமாகவும் காணப்படும். அநேகமாகக் கரையாக்கு எனப்படும் மரத்திலிருந்தே கொம்புகள் பெறப்படுகின்றன. இம்மரம் வெட்சி அல்லது கருவீரம் என்றும் அழைக்கப்படும். விளினை, விடத்தல், கோணயப்பூறி ஆகிய மரங்களிலிருந்தும் கொம்பு விளையாட்டிற்கான கொம்புகள் பெறப்படுகின்றன. கொம்பின் மேற்பகுதியைத் தலையென்றும், வளைந்த பகுதியைக் கழுத்து என்றும், கொம்புகள் பொருத்தப்படுகின்ற பகுதியை மார்பு என்றும், கீழ்ப்பகுதியைக் கடைக்கால் என்றும் கூறுவர். வடசேரியாரது கொம்பானது பெரும்பாலும் தொண்ணூறு பாகைக்கு மேற்பட்ட வளைவுடையதாகவும், தென்சேரியாரது கொம்பானது தொண்ணூறு பாகைக்குட்பட்டும் இருக்க வேண்டியது பொதுவிதியாகும்.

வடசேரிக் கொம்பு தென்சேரிக் கொம்பு

1. தலைப்பகுதி, 2. பல்வாய், 3. மார்புப் பகுதி, 4. கழுத்துப் பகுதி

கொம்பு அமைந்திருக்கும் முறை
பில்லித்தடி
கொம்புடன் இணைத்து வரிந்து கட்டப்படும் தடியே பில்லி எனப்படும். கொம்பு விளையாட்டின்போது கொம்பானது விலகாமல் இருப்பதற்காகவே பில்லி கட்டப்படுகின்றது. விளினை, கரையாக்கு, வெள்ளைக்கருங்காலி, பாலை, முதிரை போன்ற பாரங்கூடிய மரத்தடிகளையே இதற்காகப் பயன்படுத்துவர். பொதுவாக நான்கு அடி நீளம் கொண்டதாகவே பில்லிகள் அமைந்திருக்கும். இது கிரிக்கெட் விளையாட்டின்போது பயன்படுத்தப்படுகின்ற ‘விக்கெட்’ பொல்லினை ஒத்ததாகக் காணப்படும். பில்லித்தடியைக் கொம்புடன் கட்டுவதற்கு நவ்வை என்ற கொடியைப் பயன்படுத்துவர். தற்போது தென்னந்தும்புக் கயிறுகளே பில்லியைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

1. பில்லித்தடிகள், 2. கொம்பு, 3. அரிப்புக்கயிறு
கம்புக்கட்டு அடை
பில்லி அசையாதவாறு அதனுடன் இணைத்துக் கட்டப்படும் தடிகளே கம்புக்கட்டு அடை எனப்படும். கொம்பினது பருமனிற்கமைய கம்புக்கட்டு அடையானது தாய் அடை, முதலாம் அடை, இரண்டாம் அடை என அதிகரித்துச் செல்லும். கம்புக்கட்டு அடையினைத் தெகிழங்கொடியினைக் கொண்டே இறுக்கமாக வரிந்து கட்டுவர். கம்புக்கட்டு அடைக்கென வெள்ளைக்கருங்காலி, காட்டுக்கொக்கட்டி, வெடுக்குநாறி, முதிரை போன்ற பாரங்கூடிய மரங்கள் பயன்படுத்தப்படும்.
ஆப்புத்தடி
இறுக்கமாக வரிந்து கட்டப்பட்ட கம்புக்கட்டு அடையை மேலும் வலுப்படுத்துவதற்காகக் கூராக்கப்பட்ட ஆப்புத்தடியினை இடையிலே புகுத்தி இறுக்குவர். ஆப்பிற்காகப் புளி, மயிலடிக்குருந்தை போன்ற மரத்தின் தடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
தாய்மரம்
கொம்பினைத் தொடுத்துக் கட்டுகின்ற மரம் தாய்மரம் என்று அழைக்கப்படும். தாய்மரத்தினைக் கண்ணகியம்மனாகவே பக்தர்கள் பாவனை செய்கின்றனர். கொம்பு முறித்தலின்போது தாய்மரத்தின் பக்கமாகவே கண்ணகியின் கட்சியின் (தென்சேரி) கொம்பானது கொழுவப்பட்டிருக்கும். செவ்வாய்க்குற்றி சரித்து வைக்கக்கூடிய அளவிற்குத் தாய்மரம் பெரிதாகக் காணப்பட வேண்டும். அரசு, வம்மி, வாகை, புளி, ஆலை, காட்டுத்தேக்கு போன்ற மரங்கள் தாய்மரங்களாகக் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. தம்பிலுவில் என்னும் இடத்திலே தாய்மரம் இல்லாமலேயே கொம்பு விளையாட்டு நடைபெறுகின்றது.
தாய்மர வளையம்
கொம்பு முறிப்பதற்காகத் தாய்மரத்தினைச் சுற்றிப் போடப்படுகின்ற வளையம் தாய்மர வளையம் எனப்படும். இத்தாய்மர வளையமானது கயிறு போன்று கருந்தெகிழங்கொடிகளை முறுக்கி அமைக்கப்பட்டிருக்கும். தாய்மரத்தில் உயரமாகத் தாய்மர வளையம் அமைக்கப்படுவதை வடசேரியினரும், தாழ்வாக அமைக்கப்படுவதைத் தென்சேரியினரும் விரும்புவர்.
செவ்வாய்க்குற்றி
பனைமரத்தின் அடிப்பகுதியினைத் தலைகீழாக நாட்டிச் செவ்வாய்க்குற்றியாகப் பயன்படுத்துவர். அதிலும் சிறப்பாக இடிவிழுந்த பனைமரங்களே இதற்கெனத் தெரிவு செய்யப்படுகின்றன. இடிவிழுந்த பாலைமரம் அல்லது இடிவிழுந்த திருக்கொன்றை மரம் போன்றனவும் செவ்வாய்க்குற்றியாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோவலனது கட்சியினரின் கொம்பானது செவ்வாய்க்குற்றிப் பக்கமாகவே பூட்டப்பட்டிருக்கும். செவ்வாய்க்குற்றி நடப்படும் உயரத்தைத் தீர்மானிப்பதில் கொம்பினது அளவுடன் செவ்வாய்க்குற்றி நாட்டப்படும் நிலத்தின் தன்மையும் செல்வாக்குச் செலுத்தும். கெட்டியான நிலத்திலே இதனை ஒன்றரை முழம் அளவும், மணற்பாங்கான நிலத்திலே இதனை இரண்டு முழம் அளவும் புதைப்பது அவசியமாகும். செவ்வாய்க்குற்றி உயரமாக இருப்பதனைத் தென்சேரியாரும், உயரம் குறைவாக இருப்பதனை வடசேரியாரும் விரும்புவர். முன்னர் களுதாவளை, மண்டூர், தேற்றாத்தீவு போன்ற இடங்களிலே செவ்வாய்க்குற்றி இல்லாமலேயே கொம்பு விளையாட்டினை விளையாடியுள்ளனர்.
செவ்வாய்க்குற்றி வளையம்
தாய்மரத்தினைச் சுற்றித் தாய்மர வளையம் போடப்படுவதைப் போன்று செவ்வாய்க்குற்றியினைச் சுற்றிப் போடப்படுகின்ற வளையம் செவ்வாய்க்குற்றி வளையமாகும். இது கருந்தெகிழங்கொடிகளினால் அமைக்கப்பட்டிருக்கும். தாய்மர வளையத்தின் பருமனளவிற்குச் செவ்வாய்க்குற்றி வளையமும் அமைந்திருக்க வேண்டும் என்பதும், தாய்மர வளையம் போடப்படும் உயரத்திற்குச் சமமாக செவ்வாய்க்குற்றி வளையம் போடப்பட வேண்டும் என்பதும் நியதி. தற்போது சில இடங்களில் இதற்காக நைலோன் கயிறுகளையே பயன்படுத்துகின்றனர்.
அரிப்புக்கயிறு
அரிப்புக்கயிறானது முறுக்கிச் சுற்றப்பட்ட பல சுற்றுக் கயிறுகளாலானது. கொம்பு விளையாட்டின்போது இரண்டு அரிப்புக்கயிறுகள் பயன்படுத்தப்படும். ஒன்று வடசேரிக் கொம்பைச் செவ்வாய்க்குற்றி வளையத்துடனும், மற்றையது தென்சேரிக் கொம்பைத் தாய்மர வளையத்துடனும் பிணைக்கப் பயன்படும். இரண்டு அரிப்புக்கயிறுகளும் சமமான அளவிலே இருக்க வேண்டுமென்பது நியதி. அரிப்புக்கயிறு திரிப்பதற்காக ஆத்திமரத்தின் நார், தெகிழங்கொடி, நார்ப்பட்டு, நறுபுனி போன்றவை பயன்படும். தற்போது நைலோன் கயிறுகளே அரிப்புக் கயிறுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வடம்தாங்கித் தடி
இரண்டு அரிப்புக் கயிறுகளையும் செவ்வாய்க்குற்றி வளையத்துடனும் மரவளையத்துடனும் பிணைப்பதற்காகப் பொருத்தப்படும் தடிகள் வடம்தாங்கித் தடிகள் எனப்படும். இவை உலக்கை போன்ற அமைப்பினையுடையவையாகக் காணப்படும். இதற்காக முதிரை, விற்பனை, விண்ணாங்கு, வெள்ளைக்கருங்காலி போன்ற மரங்களின் தடிகள் பயன்படுத்தப்படும்.
வடக்கயிறு
செவ்வாய்க்குற்றியின் மேற்புறத்தில் துளையிட்டுக் கட்டப்படும் கயிறே வடக்கயிறாகும். இக்கயிறு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் கட்டப்படும். வடக்கயிற்றின் ஒருபகுதியை வடசேரியினரும், மற்றைய பகுதியினைத் தென்சேரியினரும் பிடித்து இழுப்பர். இது தேர் இழுக்கும் வடம் போன்று மொத்தமானதாக அமைந்திருக்கும். மகிழடித்தீவில் நடைபெறும் கொம்பு விளையாட்டில் வடக்கயிறாகக் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தேர் இழுக்கும் வடமே பயன்படுத்தப்படுகின்றது.
கொம்பு விளையாட்டு விளையாடுவதற்கு முன்னராக இடம்பெறும் நிகழ்வுகள்
1. பொதுக்கூட்டம் நடாத்துதல்
அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதிகளில் கண்ணகி அம்மனது கோபத்தினாலேயே வறட்சி, வெப்பம் போன்றன அதிகரிக்கின்றன என்றும் கண்ணகியம்மனைக் குளிர்விக்கும் முகமாகக் கொம்பு விளையாட்டு நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் ஊர்மக்கள் கருதிக் கொம்பு விளையாட்டிற்கான முன்னாயத்தங்களைச் செய்வர். முதலில் கொம்பு விளையாட்டு விளையாடுவது பற்றித் தீர்மானிப்பதற்காகப் பொதுக்கூட்டம் ஒன்று கூட்டப்படும். இக்கூட்டமானது கண்ணகியம்மன் கோயிலிலோ அல்லது ஊரிலுள்ள பொது இடமொன்றிலோ நடத்தப்படும். ஊரிலுள்ள பெரியவர்கள், வண்ணக்கர்மார், பொதுமக்கள் ஆகியோர் இக்கூட்டத்திலே கலந்து கொள்ளுவர். முதலாவதாகக் கொம்பு விளையாட்டினை விளையாடுவதற்கான நாட்கள் குறிக்கப்படும். இதனடிப்படையில் கொம்பு விளையாட்டினை நடத்துவதற்காக ஒவ்வொரு சேரிக்கும் ஒவ்வொரு கொம்புத் தலைவர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர்கள் வட்டாண்டிமார் என்று அழைக்கப்படுவர். இவர்களுடன் வடசேரி, தென்சேரி ஆகிய இரு சேரிப்பக்கங்களிலுமிருந்து இரு விளையாட்டுக் குழுக்கள் தெரிவு செய்யப்படும். இக்குழுவினர் கொம்புப் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுவர். மேலும் ஊர்ப்பிரமுகர்கள் அடங்கிய சமாதானச் சபையொன்றும் தெரிவு செய்யப்படும். கொம்பு விளையாட்டின்போது இரு சேரிக்குமிடையில் தோன்றும் கருத்து வேறுபாடுகளை நீக்கிவைக்க இச்சமாதானச் சபை உதவும்.
2. சேரிப்பிரிப்பு
கொம்பு விளையாட்டு தொடங்க முன்னர் ஊர்முழுவதும் இரண்டு கட்சியாகிவிடுதல் உண்டு. ஒன்று கண்ணகிக்கும் மற்றையது கோவலனுக்குமான அக்கட்சிகள் முறையே தென்சேரி, வடசேரி என்று குறிப்பிடப்படும். கோவலனது கட்சியினைச் சாமிப்பக்கம் என்றும் கண்ணகியினது கட்சியினை அம்மாள் பக்கம் அல்லது தாயார் பக்கம் என்றும் மக்கள் குறிப்பிடுவர். பண்டைக்காலந்தொட்டுத் தாய்வழிச் சமுதாய முறையைப் பின்பற்றிவருகின்ற கிழக்கிலங்கையினர், கொம்பு விளையாட்டின் சேரிப்பிரிப்பில் மட்டும் தந்தைவழியைச் சார்ந்து நிற்கின்றனர் என்று வி.சி. கந்தையா தனது நூலில் குறிப்பிடுகின்றார்.3 ஆனால் தம்பிலுவில் என்ற இடத்தில் நடைபெறுகின்ற கொம்பு விளையாட்டில் மட்டும் இன்றுவரை தாய்வழிச் சமுதாய முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. கொம்பு விளையாட்டினை உரமூட்டி வளர்த்து வந்ததில் இச்சேரிப் பிரிப்புகளிற்கு முக்கிய இடமுண்டு. சேரிப்பற்றும், போட்டியும் கொம்பு விளையாட்டு அடிக்கடி நடத்தப்படுவதற்கு உந்துசக்தியாக இருக்கின்றன.
3. கொம்பு விளையாட்டு விளையாடுவதற்கான பொருட்களைத் தேடித் தயார் செய்தல்
கொம்பு விளையாட்டினை விளையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு சேரியினரும் அதற்குரிய பொருட்களைச் சேகரிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு மும்முரமாக ஈடுபடுவர். இதற்கு அவ்வவ் சேரிகளிற்குப் பொறுப்பான வட்டாண்டிமார் தலைமை தாங்குவர். முதலில் காட்டிற்குச் சென்று கொம்புகளை வெட்டியெடுக்கின்ற செயற்பாடு ஆரம்பமாகும். அரிப்புக்கயிறு, தாய்மர வளையம், செவ்வாய்க்குற்றி வளையம் போன்றவற்றிற்கான கொடிகளையும் காட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கயிறு திரிக்கின்ற பணிகளும் ஆரம்பமாகும். கம்புக்கட்டு அடை, ஆப்புத்தடி, பில்லி போன்றவற்றிற்கான மரத்தடிகளும் தெரிவு செய்யப்பட்டு வெட்டியெடுக்கப்படும். மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட கொம்புகளைப் பட்டை உரிப்பதற்காகக் கைகளையோ அல்லது ஆயுதங்களையோ பயன்படுத்துவதில்லை. வெட்டப்பட்ட கொம்புகளை எடுத்து வந்து மாடுகள் கட்டப்படுகின்ற பண்ணைகளின் நிலத்திலே ஐந்து அல்லது ஆறு நாட்கள் இட்டு வைப்பர். மாடுகளின் கால்கள் அக்கொம்புகளின் மேலே பட்டும், சாணம், கோசலம் என்பவற்றாலும் கொம்புகளின் பட்டைகள் தானாகவே உரியும்.
4. கொம்பிற்குத் தோடு கொடுத்தல்
இரு சேரியினரும் இணைந்து ஒன்றுடனொன்று போட்டியிட இருக்கின்ற கொம்புகளைத் தெரிந்தெடுக்கின்ற நிகழ்வு ‘தோடு கொடுத்தல்’ என்று அழைக்கப்படும். இதன்போது கொம்புகள் விளையாடுவதற்குத் தகுதியுள்ளனவா எனக் கொம்பு விளையாட்டிற்கு மத்தியஸ்தம் வகிக்கும் குழுவினர் தெரிவு செய்வர். போட்டியிடுகின்ற கொம்புகள் இரண்டும் ஒரே அளவினைக் கொண்டனவாகவும், ஒரே இனத்தினைச் சேர்ந்த மரத்திலிருந்து வெட்டப்பட்டனவாகவும் இருக்க வேண்டும். திரித்துண்டொன்றையோ அல்லது பச்சைத் தென்னை ஓலையினையோ வைத்துக் கொம்பின் மார்புப் பகுதியானது அளக்கப்படும். இந்த அளவினைக் கொண்டே கொம்பினது அளவும் தீர்மானிக்கப்படும். தோடு கொடுப்பதற்காக முன்னர் நடைபெற்ற கொம்பு விளையாட்டின்போது வெற்றிபெற்ற கொம்புகளையும் கொண்டுவருவர்.
5. கொம்பினைப் பதப்படுத்துதல்
ஒவ்வொரு சேரியினரும் தோடு கொடுக்கப்பட்ட கொம்புகளைக் கொண்டு வந்து பதப்படுத்தி வலிமையூட்டும் செயற்பாடுகளைச் செய்வர். கொம்புகளைச் சில நாட்கள் நீரினுள் அமிழ்த்தியோ அல்லது ஈரமான மண்ணினுள் புதைத்தோ வைப்பர். அதன் பின்னர் கொம்புகளின் மீது பனிச்சங்காய்ப் பசை பூசி நன்றாகக் காயவிடுவர். இதன் பின்னர் கொம்பிற்கு நத்தடித்தல் என்ற செயற்பாடு நிகழும். உலராத கடுக்காய், பச்சையரிசிப் பொங்கல், வடை, மஞ்சள் ஆகியவற்றை அம்மியில் வைத்து அரைத்து நத்தடிப்பதற்கான பசையைத் தயார் செய்வர். தாய்க்குத் தலைமகனான ஒருவரே அப்பசையினை எடுத்துக் கொம்பின் மேல் பூசுவார். பூசப்பட்ட பசையின் மீது சணற்பஞ்சினை அல்லது வெடிப்பஞ்சினை இதமாக ஒட்டிவிடுவர்.
6. கொம்பினை வரிதல்
பதப்படுத்தப்பட்ட கொம்பானது பில்லியுடன் இணைத்துக் கட்டப்படும் செயற்பாடே கொம்பு வரிதல் என்று அழைக்கப்படும். இழுவைக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் இது மிகவும் இறுக்கமாகக் கட்டப்படும். கொம்பு வரிவதற்காக நவ்வைக்கொடி, ஆத்திநார் போன்றவற்றைப் பயன்படுத்துவர்.
7. அரிப்புக்கயிறு திரித்தல்
கொம்பு வரியப்பட்ட பின்னர் கொம்பினைப் பூட்டி இணைப்பதற்கான அரிப்புக்கயிறு திரிக்கப்படும். இரண்டு சேரியினரும் ஒரே இடத்திலிருந்தே தத்தமது அரிப்புக் கயிறுகளைத் திரிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். இரு சேரியினரதும் அரிப்புக் கயிறுகள் சமமான அளவினைக் கொண்டனவாக இருக்க வேண்டும் என்பது நியதி.
8. ஏடகங்களை அமைத்தல்
வெற்றிபெறுகின்ற கொம்புகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு சேரியினரும் போட்டி போட்டுக் கொண்டு அழகான முறையில் ஏடகங்களை அமைப்பர். கிடுகு ஓலைகளினால் மறைத்து வைத்தே இந்த ஏடகங்களைக் கட்டுவர். தமது சேரியின் ஏடகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு சேரியினரும் அக்கறை காட்டுவர். வடசேரியாரது ஏடகம் தென்சேரியாரது ஏடகத்தினைவிடச் சற்று உயரமாக அமைக்கப்படுவது வழக்கம். பெண்ணைவிட ஆண் உயரமாக இருப்பதை இது குறிக்கும். மண்டூரில் கொம்பு விளையாட்டு பல வருடங்களாக நிகழ்த்தப்படாது அழிந்துவிட்டது. ஆனால் பல வருடங்களின் முன்னர் கொம்பு விளையாட்டிற்காகக் கட்டப்பட்ட ஏடகத்தின் புரையானது இன்றும் மண்டூர் முருகன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கொம்பு முறித்தல் செயற்பாடுகள்
1. போர்த்தேங்காய் உடைத்தல்
கொம்பு விளையாட்டின் ஆரம்ப கட்டமாக அமையும் நிகழ்வு போர்த்தேங்காய் உடைப்பதாகும். கொம்பு விளையாட்டில் வடசேரி, தென்சேரி என்ற இரண்டு குழுவினரிற்கிடையே போட்டி இடம்பெறும். இவ்விரு சேரியினரும் மாலை வேளையில் வெட்டவெளியான பகுதியில் தேங்காய்களைக் கொண்டு அடித்து விளையாடும் விளையாட்டே போர்த்தேங்காய் உடைத்தல் எனப்படுகின்றது. இவ்விளையாட்டு மூன்று அல்லது ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். அடிக்கும்போது விரைவில் உடையாத தன்மையையுடைய தேங்காய்கள் தெரிவு செய்யப்படும். அநேகமாக இத்தேங்காய்கள் துருவுமனை கொண்டு துருவ முடியாத மிகச்சிறிய அமைப்பைக் கொண்டனவாகவே காணப்படும். இத்தேங்காய்கள் இரு சேரியினரிடையேயும் சமமான எண்ணிக்கை கொண்டனவாக இருத்தல் வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட தேங்காய்களை வைத்துக் கொண்டு அந்தந்தச் சேரிகளிற்குப் பொறுப்பான வட்டாண்டிமார் இருவரும் எதிரெதிராக இருப்பர். விளையாடுபவர் ஒரு தேங்காயைக் கையில் வைத்துக் கையைப் பின்புறம் கட்டிக் கொள்வார். மற்றைய கையில் இன்னுமொரு தேங்காயை எடுத்து உருட்டி விடுவார். எதிர்த்திசையில் இருப்பவர் உருட்டிவிடப்பட்ட தேங்காயைத் தமது கையிலுள்ள தேங்காயின் முன்பக்கத்தினால் வேகமாக அடிப்பார். இவ்வாறு அடிக்கின்றபோது உருட்டிவிடப்பட்ட தேங்காய் உடைந்தால் உருட்டிவிட்ட பகுதியினர் தோல்வியை அடைந்தோராவர். அவ்வாறன்றி அடிக்கின்ற தேங்காய் உடையுமாயின் அப்பகுதியைச் சேர்ந்தோர் தோல்வியடைந்தவராவர். இவ்வாறு உருட்டிவிடப்பட்ட தேங்காய் உடைந்தால் மீண்டும் மீண்டும் உருட்டிவிடப்படுதல் வேண்டும். இறுதியில் யாரிடம் தேங்காய் எஞ்சுகின்றதோ அவரது கட்சி வெற்றிக்குரியதாகும். போர்த்தேங்காய் உடைத்தலின்போது முதலாவதாக உடைக்கப்படும் தேங்காய் கண்ணகியின் கட்சிக்கு வெற்றிதருகின்ற விதத்திலேயே உடைக்கப்படும்.
2. செவ்வாய்க்குற்றியில் நேர்ந்து கட்டுதல்
கொம்பு விளையாட்டு ஆரம்பமாகும் முன்னர் வடசேரியினரும் தென்சேரியினரும் ‘வயிரம் உடைப்போம்’ எனக் கூறி செவ்வாய்க்குற்றியில் சத்தியம் செய்வர். அதன் பின்னர் கொம்பு விளையாட்டின்போது எதுவிதமான தடைகளும் நிகழக்கூடாது என்று வேண்டுதல் செய்து செவ்வாய்க்குற்றிக்கு மஞ்சள் கலந்த நீரினால் நீராட்டிப் பட்டுத் துணிகளைச் செவ்வாய்க்குற்றியில் நேர்ந்துகட்டுவர்.
3. கொழுக்கொம்பு முறித்தல்
கொம்பு விளையாட்டின்போது முதலாவதாக முறிக்கப்படுகின்ற கொம்பு கொழுக்கொம்பாகும். கொழுக்கொம்புகள் அளவில் சிறியனவாகவே காணப்படும். பாவட்டம் மரங்களிலிருந்து பெறப்பட்ட கொம்புகளே கொழுக்கொம்பு முறித்தலின்போது முறிக்கப்படுகின்றன. கொழுக்கொம்பானது கண்ணகியின் கட்சியினருக்கு (தென்சேரிக்கு) வெற்றியளிக்கின்ற வகையிலேயே முறிக்கப்படும். இதன்போது முறிக்கப்படுகின்ற வடசேரியினரது கட்சிக்குரிய கொம்பானது தென்சேரியினரின் கொம்பினைவிடப் பலவீனமானதாகவே காணப்படும். இக்கொம்புகளை இருவர் மட்டுமே முறிப்பர். அதாவது வடசேரியிலிருந்து ஒருவரும் தென்சேரியிலிருந்து ஒருவரும் வடக்குத் தெற்குத் திசையாக நின்று கொம்பினை முறிப்பர். இழுவையின்போது பலவீனமான வடசேரியினரின் கொம்பானது முறியும். ஆனால் கொழுக்கொம்பு முறித்தலின்போது இரு சேரியினரிடையேயும் போட்டி மனப்பான்மை காணப்படாது.
4. போட்டிக்கான கொம்புகள் முறிக்கப்படுதல்
கண்ணகியின் கட்சிக்கு வெற்றி தருகின்ற விதத்தில் கொழுக்கொம்பு முறிக்கப்பட்ட மறுநாளிலிருந்து போட்டிக்கான கொம்புகள் முறித்தல் ஆரம்பமாகும். இக்கொம்புகள் முறிக்கப்படுகின்றபோது வடசேரி, தென்சேரியினரிடையே போட்டி மனப்பான்மை அதிகரித்துக் காணப்படும். வடசேரியினருடைய கொம்புகள் கோவலனது ஆலயத்திலும், தென்சேரியினரது கொம்புகள் கண்ணகியின் ஆலயத்திலும் வைத்துப் பூசை செய்யப்படும். பூசை செய்யப்பட்ட பின்னர் வடசேரியினர் தமது கொம்புகளைக் கொண்டு வந்து சபைக்குக் காட்டுவர். தென்சேரியினர் தமது கொம்புகளை இலகுவில் சபைக்குக் காண்பிக்க மாட்டார்கள்.
கொம்பு முறித்தல் ஆரம்பமாகும் முன்னர் பில்லியுடன் கட்டப்பட்ட கொம்புகள் ஒவ்வொரு சேரிக்குமுரிய வட்டாண்டிமார்களினால் சிவப்புத்துணியால் போர்த்தியபடி கொம்புச் சந்திக்குக் கொண்டுவரப்படும். சில இடங்களில் மாட்டு வண்டியிலேயே கொம்புகள் வைத்துக் கொண்டுவரப்படுகின்றன.
கொம்புகளைக் கொம்புச் சந்திக்குக் கொண்டுவந்த பின்னர் இரண்டு சேரியினரின் கொம்புகளிற்கும் அரிப்புக் கயிறு போடுதல் இடம்பெறும். அதன்பின்னர் அரிப்புப் போடப்பட்ட கொம்புகள் இரண்டையும் ஒன்றுடனொன்று பூட்டியெடுக்கின்ற நிகழ்வு ஆரம்பமாகும். அதன்போது ஒவ்வொரு சேரியினரும் அரிப்புக் கயிறுகளைப் பில்லியில் இருந்து விலகாதவாறு பிடித்துக் கொள்வர். அதன்போது கொம்புகளை ஒன்றுடனொன்று அசைத்து அசைத்துப் பிணைக்கும் செயற்பாட்டினை வட்டாண்டிமாரும் கொம்புப் பிரதிநிதிகளும் மேற்கொள்வர்.
கொம்புகள் ஒன்றுடனொன்று பூட்டப்பட்ட பின்னர் பில்லியிலிருந்து கொம்பு விலகாமல் இருப்பதற்காக கம்புக்கட்டு அடை பூட்டுதல் இடம்பெறும். கொம்பினைச் சுற்றிக் கம்புக்கட்டு அடை வைக்கப்பட்டு தெகிழங்கொடியினால் இறுக்கமாகக் கட்டப்படும். கொம்பின் பருமனிற்கமைய கட்டப்படும் கம்புக்கட்டு அடையும் அதிகரித்துச் செல்லும். கட்டப்பட்ட இந்த அடையை ஆப்புகளைக் கொண்டு இறுக்குவர்.
கம்புக்கட்டு அடையுடன் கட்டப்பட்ட கொம்புகளைத் தாய்மரத்துடனும் செவ்வாய்க்குற்றியுடனும் இணைக்கின்ற செயற்பாடு அடுத்து நிகழும். இதற்காகத் தாய்மரத்தில் தாய்மர வளையமும், செவ்வாய்க்குற்றியில் செவ்வாய்க்குற்றி வளையமும் போடப்படும். தென்சேரிக் கொம்பு தாய்மரத்தின் பக்கமாகவும், வடசேரிக் கொம்பு செவ்வாய்க்குற்றியின் பக்கமாகவுமே பூட்டப்படும். இவ்வாறு பூட்டுவதற்காகத் தென்சேரிக் கொம்புடன் இணைக்கப்பட்ட அரிப்புக் கயிறானது தாய்மர வளையத்துடன் வடம் தாங்கியைக் கொண்டு பிணைக்கப்படும். வடசேரிக் கொம்புடன் பிணைக்கப்பட்ட அரிப்புக்கயிறானது செவ்வாய்க்குற்றி வளையத்துடன் வடம் தாங்கியைக் கொண்டு பிணைக்கப்படும்.
தாய்மரத்துடனும் செவ்வாய்க்குற்றியுடனும் கொம்புகள் இணைக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்குற்றியின் மேற்புறத்தில் கட்டப்பட்டிருக்கும் வடத்தினைப் பிடித்து இரு சேரியினரும் செவ்வாய்க்குற்றியை முற்பக்கமாக இழுத்து நிறுத்துவர். இவ்வாறு இழுக்கும்போது செவ்வாய்க்குற்றியின் வலதுபுறமாக உள்ள வடத்தினைத் தென்சேரியாரும், இடதுபுறமாக உள்ள வடத்தினை வடசேரியாரும் பிடித்து இழுப்பர். வடத்தினை இழுக்கின்ற வடசேரியினரின் எண்ணிக்கையும் தென்சேரியினரின் எண்ணிக்கையும் சமமானதாகவே அமைந்திருக்கும். கொம்பினது பருமனிற்கேற்ப வடம் இழுக்கின்றவர்களின் எண்ணிக்கை கூடிக்குறையும். கொம்புகளை இழுக்கின்றபோது கொம்புகள் பூட்டப்பட்ட அடைகளைக் கம்புத் தடிகளைக் கொண்டு தாங்கிப் பிடிப்பர்.
வடக்கயிற்றினைக் கொண்டு செவ்வாய்க்குற்றியினை இழுக்கின்றபோது இழுவையின் பலத்தினால் இரண்டிலொரு கொம்பு முறியும். அப்போது முறிவடைந்த கொம்பிற்குரிய கட்சியினர் தோல்வியடைந்தவர்களாகவும், முறிவடையாத கொம்பினையுடைய கட்சியினர் வெற்றி பெற்றவர்களாகவும் கருதப்படுவர். உடனேயே வென்ற பகுதியார் தமது சேரியின் பெயரைச் சொல்லி அதற்கு வெற்றியென்று கூறி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்வர். இதன்போது வெற்றிபெற்ற சேரியினர் தோல்வியடைந்த சேரியினரை இகழ்ந்து வசைப்பாடல்களைப் பாடி ஆடுவர். வசைப்பாடல்கள் பாடப்படுவது மட்டுமன்றி வசைச் சொற்களைப் பேசுதலும் இடம்பெறும். மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே திட்டுவதைக் ‘கொம்புதல்’ என்றே குறிப்பிடுவர். கொம்பு விளையாட்டின் மூலமாகவே கொம்புதல் என்ற சொல் மட்டக்களப்புப் பிரதேசத்தில் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
வெற்றிபெற்ற கொம்பினை சிவப்புத் துணியால் போர்த்தி அச்சேரிக்குரிய வட்டாண்டியார் தனது தலையின் மேலே வைத்துக் கொண்டு தம் சேரிக்குரிய ஆலயத்தினுள் எடுத்துச் செல்வார். அதன் பின்னர் வெற்றி பெற்ற கட்சியினரின் ஏடகத்தின் மீது வெற்றிபெற்ற கொம்பானது வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அப்போது வெற்றிபெற்ற சேரியினரின் வீடுகளிற்கு முன்னர் மஞ்சள் நீர் தெளித்துக் கும்பம் வைத்து ஏடகத்தில் கொண்டுவரப்படும் கொம்பினை வழிபடுவர். வெற்றி பெற்ற சேரியினர் தோல்வியடைந்த சேரியினரின் வீடுகளிற்கு முன்னே சென்று அவர்களைக் கேலி செய்து வசைப்பாடல்களையும் பாடுவர்.
போட்டிக்காக முறிக்கப்படும் கொம்புகளுள் மூன்று கொம்புத் தட்டுக் கொம்புகளும், ஐந்து கூடாரக் கொம்புகளும், ஏழு ஏடகக் கொம்புகளும் முறிக்கப்படுவது வழக்கமாகும். கொம்பினது அளவினைப் பொறுத்தே இக்கொம்புகளின் பெயர்கள் வித்தியாசப்படுகின்றன.
ஏடகக் கொம்புகள் ஏனைய கொம்புகளைவிட அளவில் மிகப் பெரியனவாகக் காணப்படும். இந்த ஏடகக் கொம்புகளை முறிப்பதற்கு ஊர்மக்கள் அனைவரும் கூடி வடம் இழுக்க வேண்டும். ஏடகங்களிலே கொண்டுவரப்படுவதால் இவை ஏடகக் கொம்புகள் எனப்படுகின்றன. ஏடகக் கொம்புகள் முறிக்கப்படுவதற்கு முன்னர் ‘சீலை எறிதல்’ என்ற சடங்கு இடம்பெறும். இந்த நாள் பக்தர்களால் மங்களகரமான நாளாகக் கருதப்படும். இந்த நாள் அம்மனின் தீட்டுக் காலப்பகுதியின் இறுதி நாளாகக் கருதப்படுகின்றது. கண்ணகி அம்மனைத் தூய்மைப்படுத்துவதற்காக அம்மனின் பழைய சேலையை எறிவர். அச்சேலையைத் துணி துவைக்கின்ற சாதியைச் சேர்ந்த ஒருவர் வந்து பெற்றுக் கொண்டு செல்வார்.
ஏடகக் கொம்பு முறிக்கப்படுவதற்கு முன்னர் ஏடகங்கள் (தேர்) அலங்கரிக்கப்பட்டு அதன்மேல் ஏடகக் கொம்புகள் வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். கோவலனுடைய ஏடகம் முன்னரும், கண்ணகியினுடைய ஏடகம் அதன் பின்னரும் செல்லும். இதன்போது ஒரு கட்சியினரின் வெற்றிப்பாடல்களன்றி உடுக்குச்சிந்து எனும் ஊர்சுற்றுக் காவியமே பாடப்படும். ஊரின் சந்திகளில் ஏடகம் நிறுத்தப்பட்டு வசந்தன் கூத்தும், வேடர், குறவர், போர்வீரர், மன்னர், முனிவர் போன்ற வேடம் புனைந்தவர்களின் ஆடல்களும் இடம்பெறும். இவ்வாறு இரவு முழுவதும் ஊர்வலம் சென்று மறுநாள் காலையிலேதான் ஏடகங்கள் கோயிலுக்குத் திரும்பும். ஏடகங்கள் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இரண்டு சிறுவர்களிற்குக் கோவலனாகவும், கண்ணகியாகவும் வேடம் புனைவித்துத் திருமணம் நடத்தி வைப்பர். மறுநாள் மாலை நேரத்தில் மீண்டும் ஏடகங்கள் அலங்கரிக்கப்பட்டுக் கொம்புச் சந்தியினை வந்தடையும். இதன் பின்னரே ஏடகக் கொம்புகளை முறிக்கின்ற செயற்பாடுகள் ஆரம்பமாகும்.
போட்டிக்காக எடுத்துவரப்பட்ட இரண்டு கொம்புகளும் அன்றைய தினம் எவ்வளவு முயன்றும் முறிக்கப்படாதவிடத்து அக்கொம்புகள் ஆலயத்தினுள் எடுத்துச் செல்லப்பட மாட்டாது. இக்கொம்புகளைத் ‘தங்கு கொம்புகள்’ என அழைப்பர். இத்தங்கு கொம்புகள் அடுத்த நாள்வரை கொம்புச் சந்தியிலேயே வைக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் இரு சேரிகளிற்குமுரிய வட்டாண்டிமார்களும் தமது வீடுகளிற்குச் செல்ல முடியாது. அவர்கள் கொம்புச் சந்தியிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் மறுநாள் வரை பால், பழங்களையே உண்ண வேண்டும். மறுநாள் கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னரே வட்டாண்டிமார்கள் ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவர். பொதுவாக ஏடகக் கொம்புகள் முறிக்கப்படுகின்ற போதே இவ்வாறான நிலைமை ஏற்படுவதுண்டு.
கொம்பு விளையாட்டில் தங்கள் சேரியே வெல்ல வேண்டும் என்று இருசேரியாரும் பல்வேறு உத்திகளைக் கையாளுவர். தோல்வியடைந்த சேரியினர் மறுநாள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகக் கொம்புகளை வைத்து மந்திரங்களைச் சொல்லிக் கொம்பினை வலுப்படுத்துவர்.

1. தாய்மரம், 2. தாய்மர வளையம், 3. வடசேரியினரின் கடைக்கால் கயிறு, 4. வடம்தாங்கித் தடி (தென்சேரி), 5. அரிப்புக்கயிறு (தென்சேரி), 6. தென்சேரி அடை, 7. வடசேரி அடை, 8. வடம்தாங்கித் தடி (வடசேரி), 9. செவ்வாய்க்குற்றி வளையம், 10. அரிப்புக்கயிறு (வடசேரி), 11. தென்சேரியினரின் கடைக்கால் கயிறு, 12. செவ்வாய்க்குற்றி, 13 – 14. இழுவைவடம்.
5. தண்ணீர்க் கொம்பு முறித்தல்
போட்டிக்கான கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னர் இறுதியில் முறிக்கப்படுகின்ற கொம்பு தண்ணீர்க்கொம்பு எனப்படும். இக்கொம்புகள் கண்ணகியின் கட்சிக்கு வெற்றியளிக்கும் முகமாகவே முறிக்கப்படும். இதன்போது முறிக்கப்படுகின்ற வடசேரியினரின் கொம்பு தென்சேரியினரின் கொம்பினைவிடப் பலவீனமானதாகவே இருக்கும். இக்கொம்புகளை இருவர் மட்டுமே முறிப்பர். அதாவது வடசேரியிலிருந்து ஒருவரும் தென்சேரியிலிருந்து ஒருவரும் வடக்குத் தெற்குத் திசையாக நின்று கொம்பினை முறிப்பர். இழுவையின்போது பலவீனமான வடசேரியினரின் கொம்பானது முறியும்.
6. கொம்புக் குளிர்த்தி
தண்ணீர்க்கொம்பு முறிக்கப்பட்ட பின்னர் இரு சேரியினரும் குதூகலமாக ஆடித் தமது நேர்த்தியை முடித்த மகிழ்ச்சியில் வென்ற கொம்புகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டித் தலைகளிலே சுமந்துகொண்டு ஊர்வலமாக வருவார்கள். இதன்போது மஞ்சள், வேப்பம் இலை, அறுகம்புல் போன்றவற்றைச் சேர்த்த நீரைக் கொம்பின் மீதும் மக்களின் மீதும் சொரிவர். இது கொம்புக் குளிர்த்தி என்று அழைக்கப்படும். இதனைக் கொம்புத்தீர்த்தம் என்றும் அழைப்பர். மதுரையை எரித்த கண்ணகியின் சீற்றத்தினைக் குறைத்து அவளைக் குளிர்விப்பதற்காகவே இதனைச் செய்கின்றனர். இந்நீர் நோய்களைத் தீர்க்கும் ஆற்றலுடையது என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஊர்மக்கள் இனிப்பு வகைகளை வழங்குவர். இந்த ஊர்வலம் முடிவடைந்ததும் கட்டாடியார் தாய்மரத்திற்கும் செவ்வாய்க்குற்றிக்கும் மஞ்சள் நீரினை ஊற்றித் தாய்மர வளையத்தினையும் செவ்வாய்க்குற்றி வளையத்தினையும் வெட்டுவார். அதன் பின்னர் கண்ணகியம்மன் குளிர்த்திப்பாடல்கள் பாடப்படும். முறிக்கப்பட்ட கொம்புகள் ஆலயத்தில் வைக்கப்படும்.
கொம்பு விளையாட்டு நிகழ்த்துகையில் காணப்படும் நிகழ்த்துகலைக்குரிய அடிப்படைக் கூறுகள்
நிகழ்த்துகைக்கெனத் தீர்மானிக்கப்பட்ட விடயங்களைப் பார்ப்போருக்குக் குறித்தவொரு இடத்திலே நிகழ்த்திக்காட்டுதல் நிகழ்கைக்குரிய சிறப்பம்சமாகும். நாடகம் என்பது ஒரு சிலர் முன்னே ஒருவர் அல்லது இருவர் அல்லது பலர் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஏதோ ஒன்றினைச் செய்து காட்டுவது, ஆற்றுவது அல்லது நிகழ்த்திக் காட்டுவதாகும்.4 கொம்பு விளையாட்டிலே கொம்புகள் முறிக்கப்படுவது நிகழ்த்துகையாக அமைகின்றது. கொம்பு விளையாட்டில் நிகழ்த்துவோராகக் கட்டாடியார், வட்டாண்டிமார், கொம்புப் பிரதிநிதிகள் போன்றோர் காணப்படுகின்றனர். நிகழிடமாக ஆலய வளாகத்திலுள்ள கொம்புச் சந்தி காணப்படுகின்றது. நிகழ்த்துகையைப் பார்ப்பவர்களாகப் பக்தர்களும் பொதுமக்களும் காணப்படுகின்றனர். நாடகத்தின் நெறியாளரைப் போன்று கொம்பு விளையாட்டிலே வட்டாண்டிமார்களும் கட்டாடியார்களும் செயற்படுகின்றனர்.
நிகழ்கலைகளின் கலையாக்கம் கலைஞர்களினதும் கலைச் செயற்பாட்டாளர்களினதும் கூட்டிணைவின் பெறுபேறேயாகும். நிகழ்த்துகை கூட்டுச் செயற்பாடாக அமைவதனால் நிகழ்த்துவோர், அதனை நெறிப்படுத்துவோர், பார்வையாளர் ஆகியோரது கூட்டு இணைவும் அவசியமாகின்றது. வடசேரி, தென்சேரி ஆகிய இரு சேரிப்பக்கங்களிலுமிருந்து தெரிவு செய்யப்படும் இரு விளையாட்டுக் குழுக்கள், அதனை நெறிப்படுத்துகின்ற வட்டாண்டியார், ஊர்ப்பிரமுகர்கள் அடங்கிய சமாதானச் சபை உறுப்பினர்கள் ஆகியோரது கூட்டு முயற்சியே கொம்பு விளையாட்டினைச் செய்து முடிக்கக் காரணமாய் அமைகின்றது. ஒவ்வொருவரினதும் பங்குபற்றல் இதன் இருப்பிற்குக் காரணமாக அமைகின்றது.
நிகழ்த்துக் கலையின் செயற்பாட்டிற்கு கலைச் செயற்பாட்டாளர்களின் ஒன்றிணைவும் பயிற்சியும் அவசியமாகவுள்ளது. கொம்பு விளையாட்டின் நிகழ்த்துகையில் நிகழ்த்துவோரின் ஒன்றிணைவானது முக்கியத்துவம் பெறுகின்றது. மற்றும் கலைப் பயிற்சிகளைப் போன்று கொம்பு விளையாட்டினை நிகழ்த்துபவர்கள் அதனை விளையாடுவதற்கு முன்னர் சில தயார்படுத்தல்களைச் செய்கின்றனர்.
கொம்பு விளையாட்டில் ஈடுபடுகின்ற வட்டாண்டிமார், கொம்புப் பிரதிநிதிகள், சமாதானச் சபையினர், ஊர்மக்கள் யாவரும் கொம்பு விளையாட்டுக் காலங்களில் புலால் உணவினைக் கைவிட்டு உடலினையும் உள்ளத்தினையும் சுத்தப்படுத்துவர். ஆலயத்தைச் சூழ வசிக்கின்ற மக்கள் கறிக்கு மஞ்சள் இடுவதனையும், பொரியல் போன்ற உணவுப் பண்டங்களைத் தயார் செய்வதையும், உரலில் இடிக்கின்ற செயல்களைச் செய்வதனையும் தவிர்க்கின்றனர். மேலும் இருசேரிகளுக்கும் பொறுப்பான வட்டாண்டிமார்களும் கொம்புப் பிரதிநிதிகளும் கொம்பு விளையாட்டிற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குச் சென்று எடுத்துவந்து தயார்படுத்துகின்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
நாடகம் என்பது கணப்பிரசன்னமான கலையாகும். அதாவது ஆற்றப்படும் அந்தக் கணத்தில் அது நம்முன்னே பிரசன்னமாக இருக்கும்.5 கொம்பு விளையாட்டும் அது ஆற்றப்படுகின்ற வேளையில் பார்வையாளனுடன் நேரடித் தொடர்பு கொண்டதாகக் காணப்படுகின்றது.
நிகழ்த்துக் கலையில் ஒப்பனை, அலங்காரம் போன்றன முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. கொம்பு விளையாட்டு நிகழ்த்தப்படுகின்ற இடமானது வேப்பம் இலை, தென்னம்பாளை, குருத்தோலை, சரிகைச் சேலை போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு சேரியினரும் போட்டி போட்டுக் கொண்டு ஏடகங்களினை அலங்கரிப்பதிலும் இத்தன்மை வெளிப்படுகின்றது. கொம்பு விளையாட்டினை விளையாடுகின்றவர்களும் தமது சேரியினை மற்றைய சேரியிலிருந்து பிரித்துக் காட்டுவதற்காக வேறு வேறான நிறங்களைக் கொண்ட துணிகளைத் தமது தலையிலே கட்டித் தம்மை ஒப்பனை செய்து கொள்கின்றனர். அத்துடன் கொம்பு விளையாட்டிலே வெற்றி பெற்ற சேரியினருள் சிலர் தாம் வெற்றியடைந்த களிப்பிலே வேடன், குறத்தி, படைவீரன், மன்னன், முனிவர் போன்ற வேடங்களை ஒப்பனை செய்து ஆடுகின்றனர்.
நிகழ்த்துகலை என்பது ஒன்றைப் போலச் செய்து காட்டுவது என்று கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டில் கூறுகின்றார். நாடகத்தினுடைய பிரதான அடித்தளம் ஒன்றைப் போலச் செய்தலாகும்.6 கொம்பு விளையாட்டின் போது ஏடக ஊர்வலங்களின் பின்னர் கோவலனாகவும் கண்ணகியாகவும் இரு சிறுவர்களிற்கு ஒப்பனை செய்யப்பட்டு அவர்களிற்குத் திருமணம் நடைபெறும். இதன்போது போலச் செய்தல் முக்கியம் பெறுகின்றது.
கொம்பு விளையாட்டின்போது பாடப்படுகின்ற வசைப்பாடல்கள் இசை நிகழ்த்துகைகளுக்குச் சான்றாக அமைகின்றன. இவை வாய்மொழிப் பாரம்பரியங்களினூடாகப் பேணப்பட்டு வருகின்றன. ஏடகக் கொம்பு ஊர்வலத்தின் போது ஊர்சுற்றுக்காவியம் எனப்படுகின்ற மழைக்காவியமும் வசந்தன் கவிகளும் பாடப்படுகின்றன.
கொம்பினைத் தாங்கிய ஏடக ஊர்வலங்கள் செல்லும்போது அதன் முன்பாக வசந்தன் கூத்து ஆடப்படும். இது கொம்பு விளையாட்டுடன் தொடர்புடைய நிகழ்த்துகலையாகக் காணப்படுகின்றது. கொம்பு விளையாட்டினை ஒட்டியதாக ‘பள்ளுக்கு வளைதல்’ எனும் தனித்துவமான கலையாடல் தம்பிலுவில் போன்ற கிராமங்களில் வளர்ச்சியடைந்திருக்கிறது. தென்னோலையைக் குவித்து எரித்து ‘அம்மன் பள்ளு’ எனும் பாடலைப் பாடியபடி, எரிகின்ற தென்னோலைகளைச் சுற்றி ஆண்கள் கைகொட்டி ஆடும் நடனம் பள்ளுக்கு வளைதல் எனப்படும். கொம்பு விளையாட்டில் நிகழ்த்து கலைகளிற்குரிய மகிழ்வளிப்புப் பண்புகளும் காணப்படுகின்றன. வெற்றி பெற்ற சேரியினரிடையே இது மகிழ்வூட்டுகின்ற கலையாக அமைந்து விடுகின்றது. பார்வையாளர்களிற்கும் இவ்விளையாட்டு மகிழ்வூட்டுவதாகவும், விறுவிறுப்பினைத் தூண்டுவதாகவும் அமைகின்றது.
கொம்பு விளையாட்டானது தற்காலத்தில் சடங்கின் தன்மைகளைப் படிப்படியாக இழந்து வருகின்றது. கொம்பு விளையாட்டினைப் பார்ப்பவர்கள் அனைவரும் அதன் சடங்குத் தன்மையில் பூரண விசுவாசம் கொள்வதில்லை. விசுவாசம் அற்றவர்களிற்கு இது வெறும் நிகழ்த்து கலையாகவே தோன்றும்.
எனினும் கொம்பு விளையாட்டானது இன்னமும் முழுமையாகச் சடங்கு நிலையிலிருந்து விடுபட்டுப் பூரணமான நிகழ்த்துகலையாக மாற்றம் பெறவில்லை. இது கண்ணகி வழிபாட்டுடன் பின்னிப் பிணைந்ததாகவே காணப்படுகின்றது. கொம்பு விளையாட்டைப் பார்க்கின்ற ஒருசாரார் மத உணர்வு நிலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாத நிலையிலேயே இதனைப் பார்க்கின்றனர்.
அடிக்குறிப்புகள்
1. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.179.
2. மேலது, பக்.179.
3. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.180.
4. கா. சிவத்தம்பி, சி. மௌனகுரு, க. திலகநாதன், மு.கு.நூ, பக்.3.
5. மேலது, பக்.3.
6. மேலது, பக்.10.



