ஆங்கில மூலம்: நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்
பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எண் 48, 1979இன் (இனிமேல் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என அழைக்கப்படும்) விளக்கக் குறிப்பும் அதன் முன்னுரையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிவகுத்த பின்னணியைப் பின்வருமாறு விவரிக்கிறது:
“இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ உள்ள எந்தவொரு தனிநபர், தனிநபர்களின் குழு, சங்கம், அமைப்பு அல்லது ஆட்களது, குழுக்களது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுப்பதற்கும், அது தொடர்பான அல்லது அதனுடன் இணைந்த விடயங்களுக்குமான தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஒரு சட்டம்.”
“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பதன் அடிப்படையில் சுதந்திரம் நிறுவப்படும்போது மட்டுமே, மனிதர்களும் நிறுவனங்களும் சுதந்திரமாக இருக்க முடிகிறது என்றும், அதன் குறைகள் அரசியலமைப்பு முறைகளால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகிறது;
மேலும், இலங்கையில் அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகவோ, அல்லது உதவியாகவோ வன்முறையைப் பயன்படுத்துவதை அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கும் பிரிவினர்கள், தனிநபர்கள், இத்தகைய நோக்கம் கொண்ட குழுக்கள், அல்லது சங்கங்களால் இலங்கையில் பொது ஒழுங்கு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது; இவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அத்தகைய செயல்களுக்குச் சாட்சிகளாக இருப்பவர்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் பிற அப்பாவிக் குடிமக்கள் மீது, கொலைகளையும் கொலை அச்சுறுத்தல்களையும் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், ஆயுதமேந்திய கொள்ளை, அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல், நேரடியான அச்சுறுத்தல் அல்லது அச்சுறுத்தும் வகையிலான வற்புறுத்தல், வன்முறையை உள்ளடக்கிய பிற வன்செயல்கள் போன்ற பலவகையான பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.”
இவற்றைக் கையாளும் வகையில், பிற ஜனநாயக நாடுகள் பயங்கரவாதச் செயல்களைக் கையாள்வதற்காகச் சிறப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன என்ற அடிப்படையின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையில் கொண்டுவரப்படுகிறது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்ற இந்தச் சட்டம் இயற்றப்படுகிறது:
1. இச்சட்டம், ‘பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்’ என அழைக்கப்படலாம்.
இலங்கையில், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ இயற்றுவதற்கான முதன்மையான காரணம், (அங்கு நடந்துவரும்) பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே தோன்றுகிறது. அத்துடன், இவ்விடயத்தில் மற்றைய ஜனநாயக நாடுகளும் இவ்வகையான சிறப்புச் சட்டங்களை இயற்றியுள்ளன என்பது இதற்கான நியாயமாகவும் இருந்தது.
ஆனால், ‘பயங்கரவாதச் செயல்கள்’ என்ற சொற்றொடர், மேலே குறிப்பிட்டபடி முன்னுரையில் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைத் தவிர, இச்சட்டத்தில் (வேறெங்கும்) வரையறுக்கப்படவில்லை. இச்சட்டத்தின் கீழ் குற்றங்களாகப் பட்டியலிடப்பட்டவையும் கூட, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ‘தண்டனைச் சட்டம்’ அல்லது இது தொடர்பான வேறு சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றங்களேதான் என்றபோதும், அவை சில வேறுபாடுகளையும் கொண்டிருந்தன. அத்தகைய செயல்கள் யாருக்கு எதிராகச் செய்யப்பட்டால் அவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களாக மாறும் என்பதற்கான நபர்கள் அல்லது அதிகார அமைப்புகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதாவது, பிரிவு 31இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறிப்பிடப்பட்ட நபர்கள்’ (Specified Persons), அல்லது ‘அரசாங்கம்’ என்பவற்றுக்கு எதிரான குற்றச் செயல்களே அவையாகும். ‘ஜனாதிபதி, நீதிபதிகள், வெளிநாடுகளின் தூதுவர்கள் அல்லது அரசுகளுக்கிடையேயான (தொடர்புகளைப் பேணும்) சர்வதேச அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புகள், அவற்றின் உறுப்பினர்கள், விசாரணைக் குழுக்களின் உறுப்பினர்கள், நீதிமன்ற அலுவலர்கள், இறுதியாக அரசின் ஆயுதப் படைகள், காவல்துறையினர் மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புள்ள பிற படைகளின் உறுப்பினர்கள்’ ஆகியோரே இவ்வாறு இந்தக் ‘குறிப்பிடப்பட்ட நபர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டனர். அரசாங்கச் சொத்துகளைக் கொள்ளையடிப்பது அல்லது அத்தகைய சொத்துகள் மீது சேதங்களை ஏற்படுத்துவது என்பவை குற்றங்களாகக் கருதப்பட்டன. இது தவிர்ந்த பிற குற்றங்களில், துப்பாக்கிகள், தாக்குதலுக்குப் பயன்படும் ஆயுதங்கள், சொற்கள், சைகைகள் போன்றவற்றால் நல்லிணக்கமின்மையை ஏற்படுத்துதல் என்பவற்றுடன், பொது இடத்தில் உள்ள சொற்கள், கல்வெட்டுகள் போன்றவற்றைச் சிதைத்தல் என்பவற்றுக்காகத் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல் போன்றவையும் கூட அடங்குகின்றன.
அதாவது, பிரதானமாக மேலே சொல்லப்பட்ட ‘குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு’ எதிரான செயல்கள் பயங்கரவாதச் செயல்களாகக் கருதப்பட வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் தம்மளவிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) அதிகார வரம்பிற்குள் அடங்குபவை அல்ல. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) பயன்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றால், இச்செயல்கள் மேற்கூறப்பட்ட ‘குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு’ எதிராகச் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட வகை நபர்களின் பாதுகாப்பையும் அரசாங்கச் சொத்துகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் ஏற்ற வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. துப்பாக்கிகள் முதலியவை தொடர்பான பிற செயல்கள் பொதுச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் குற்றங்களாக இருந்தன. இந்தக் குற்றங்கள் தொடர்பாக பொதுச் சட்டத்தைப் பயன்படுத்துவதா அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அரசாங்கத்திற்கு இருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர், குறிப்பாக இலங்கையின் வடக்கு, தெற்கு மாகாணங்களில், காவல்துறை அதிகாரிகள், ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் போன்றோரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான செயல்கள், அப்பகுதி மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, கடுமையான உணர்வுரீதியான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தன. 1974இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அப்பாவி மக்கள் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்டதும், அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடந்த தொடர்ச்சியான ஜனநாயகப் போராட்டங்கள் செவிசாய்க்கப்படாமல் போனதும், வட மாகாணத்தில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சில பொலிஸ் அதிகாரிகளால் இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டதும், வட மாகாண இளைஞர்களிடையே இவற்றுக்கெதிரான போர்க்குணத்தை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக தென் மாகாணத்தில், 1971இல் சிங்கள இளைஞர்கள் நடத்திய கிளர்ச்சியை ஆயுதப் படைகள் மிருகத்தனமாகக் கையாண்ட விதம், தெற்கில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர், அரசால் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான செயல்களடங்கிய சம்பவங்களின் விளைவாகவே இந்தவகையான போர்க்குணமும் அமைதியின்மையும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தன. அப்போதைய ஜனாதிபதியின் உறவினரான இராணுவத் தளபதிக்கு வடக்கில் ‘பயங்கரவாதத்தை ஒழிக்கும்’ பணி ஒப்படைக்கப்பட்ட போது, இரண்டு தமிழ் இளைஞர்களின் தலைகள் சிதைக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் பண்ணைப் பாலத்தில் வீசப்பட்டன. ஆயுதப் படையினரால் கதிர்காம அழகி கொடூரமாகக் கொல்லப்பட்டது தெற்கில் நிலவிய சூழலைப் பிரதிபலித்தது. அன்றைய அரசாங்கங்களால் கண்டுகொள்ளப்படாத இத்தகைய செயல்கள் பெருகியபோது, இளைஞர்களின் பதிலடிச் செயல்கள் இயல்பாகவே தீவிரமடைந்தன. இதன் விளைவாக, தனது பாதுகாப்பிலும், தன்னைக் காப்பவர்களான ஆயுதப் படைகளுக்கான பாதுகாப்பிலும் மட்டுமே அக்கறை கொண்ட ஓர் அரசாங்கத்தால், இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயற்றப்பட்டது.
சமூகரீதியான பாகுபாட்டிற்கு உள்ளான பிரிவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சிரமங்களையும் புரிந்துகொள்ளவும், அனுதாபம் காட்டவும், அவற்றைச் சரி செய்யவும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாகத் தவறியதன் விளைவாக எழுந்துவந்த அரச எதிர்ப்பு நடவடிக்கைகளைக் காரணமாக முன்வைத்து, அரசு தனது தற்காப்பிற்காக அவற்றை எதிர்கொள்வதை நோக்கமாகக் குறிப்பிட்டே இறுதியில் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) அரசினால் இயற்றப்பட்டது.
ஒரு பசியுள்ள நாய்க்கு (உண்பதற்கு) எதையாவது கொடுப்பதற்குப் பதிலாக, நான் அதன் மீது கல்லை எறிகிறேன்; அது இன்னும் வன்மையாக எதிர்வினையாற்றுகிறது. பிறகு நான் ஒரு பெரிய தடியை எடுத்து அதைத் தாக்குகிறேன். அந்தப் பெரிய தடிதான் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA). அது வடக்கையும் தெற்கையும் சேர்ந்த இளைஞர்களுக்கு எதிராக, மிக இழிவான முறையில், கொடூரமாகப் பயன்படுத்தப்பட்டது. உண்மையில், அரசியல் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான தீர்வுகளை வழங்கத் தவறியதும், அதற்குப் பதிலாக அடுத்தடுத்த அரசாங்கங்களின் பகுத்தறிவற்றதும் பாகுபாடு நிறைந்ததுமான கொள்கைகளைக் கொண்ட அரசியலுக்கு எதிராக எழுந்த இயல்பான எதிர்ப்பை ஒடுக்குவதற்காகத் தொடர்ச்சியாக வன்முறையைக் கையாண்டதும் தான், வேறு வழியின்றி, தமது கடைசிப் புகலிடமாக, கொடுங்கோன்மைத் தன்மை கொண்ட இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இயற்றுவதற்கு அரசைத் தூண்டிய காரணங்களாகும்.
இலங்கை அரசு, அரசியல் பிரச்சினைகளை அடக்குவதற்காகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது. இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக இளைஞர்களிடமிருந்து எழுந்த இயல்பான அரசுக்கு எதிரான பதில் எதிர்வினைகளும், பதிலடிகளும் தீவிரமடைந்தன. அதன் போதெல்லாம், அவற்றுக்கெதிராக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட (அந்த இளைஞர்கள் மீதான) அடக்குமுறை, ஊழல், கண்டனத்துக்குரிய வேறுபல நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக மக்கள் மத்தியிலிருந்து (பரவலான) எதிர்ப்புகள் எழுந்தபோது, அரசு தானே கட்டவிழ்த்துவிட்ட தனது அடக்குமுறைக்கும், தனது பயங்கரவாதத்திற்கும் ஒரு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குவதற்காகவே ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்’ கொண்டுவரப்பட்டது.
வன்முறை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, அதற்குக் காரணமான தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் மக்கள் மத்தியில் இருந்தன. தலைமுறை தலைமுறையாக அடக்கமாகவும், படிப்பிலும், கடின உழைப்பிலும் கவனத்தைச் செலுத்துபவர்களாகவும் இருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஏன் வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டும்? சுதந்திரத்திற்குப் பிறகு வந்த அடக்குமுறை அரசாங்கங்கள், வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை அழிக்கத் தொடங்கியபோது, அடிப்படை மனித விழுமியங்களும் நேர்மைத்தன்மைகளும் முழுமையாக மீறப்பட்டன. பிரித்தானிய ஆக்கிரமிப்புக் காலத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களைச் சுதந்திரத்திற்குப் பிறகான புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள்தொகை அளவில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள நிலங்களில், அரசின் காலனித்துவம், உள்ளூர் மக்களுக்கு முதல் முன்னுரிமை அளிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. வெளியிலிருந்து ஆட்கள் கொண்டுவரப்பட்டு வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டனர். முழுத் தீவுக்கும் ‘சிங்களம் மட்டும்’ என்ற கொள்கை கொண்டுவரப்படுகிறது. ஏழு மாகாணங்களில் சிங்களமும், இரண்டு மாகாணங்களில் தமிழும் என்று இருந்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. பல்கலைக்கழகங்களில் சேரும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே தரப்படுத்தல் என்ற ஒரு புதுமையான முறை கொண்டுவரப்பட்டது. 1956க்குப் பிறகு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் எதுவும் நிறுவப்படவில்லை. வடக்கு – கிழக்கின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்தது. அப்பகுதிகளில் வேலையின்மை கடுமையாக உயர்ந்தது. பிரிவினைவாதக் கொள்கையைக் கையாண்ட அடுத்தடுத்த அரசாங்கங்களிடமிருந்து அந்த இரண்டு மாகாணங்களுக்கும் கிடைத்ததெல்லாம் மிகக் குறைந்த அளவிலான பலன்களே கிடைக்கும் நிலையோ அல்லது எந்தவகையான பலன்களும் கிடைக்காத நிலையோதான். இயல்பாகவே, இந்தக் காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, வடக்குக் கிழக்கு இளைஞர்களிடம் பழிவாங்கும் மனப்பான்மை வளர்வதற்கு வழிவகுத்தன.
இலங்கையின் தென்பகுதியில் உள்ள கிராம சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகள், ஏழைப் பிரிவினர் மீதான நிலப்பிரபுத்துவ அடக்குமுறை மனப்பான்மைகள், அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களால் ஒடுக்கப்பட்ட மக்கள் அப்பட்டமாகச் சுரண்டப்படுதல் போன்ற அனைத்தும் இணைந்த நிலைமை, தென்பகுதி இளைஞர்களிடையே அவற்றுக்கெதிரான போர்க்குணம் கொழுந்துவிட்டு எரிவதற்குக் காரணமாக அமைந்திருந்தன.
இலங்கையின் சமூகப்பரப்பின் மத்தியில் இருந்த இந்தப் பாதிக்கப்பட்ட மக்கட் பிரிவினரின் இயல்பான எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், மேலும் மேலும் அதிகமான அரச அடக்குமுறைகளுக்கு வழிவகுத்தன. தமது சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டையும் ஆக்கிரமிப்பையும் கையாண்ட பிரிவைச் சேர்ந்தவர்களது நலன்களைப் பாதுகாப்பதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயற்றப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தப் பாகுபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயுதப் படைகள் போன்றோரைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும், அந்த உண்மையை மறைக்கும் நோக்குடன், நீதிபதிகளும் பிறரும் குறிப்பிடத்தக்க நபர்களாக அந்த அணிக்குள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பது, இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் உணர்திறனற்றதும், ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டதுமான போக்குகளுக்கான பொருத்தமான ஓர் அடையாளமாகவே இருந்தது. ஒரு கண்ணியமான, நியாயமுள்ள அரசாங்கம் தனது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இலங்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, புதியதும் மேலும் சிக்கலானதுமான பிரச்சினைகளை மக்கள் மீது திணிப்பதையே செய்தன. சுதந்திரத்தின் போது செழிப்பாகவும் வளமாகவும் இருந்த ஒரு நாடு, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் சிந்தனையற்ற செயல்களால் மோசமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் முன்னுரையில், அதன் “குறைகள், அரசியலமைப்பு முறைகளால் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது. உண்மையில் இது ஓர் உன்னதமான எண்ணம்தான்! ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் உணர்வின்மை, இரக்கமின்மை, அலட்சியம், அப்பட்டமான (இனரீதியான) பாகுபாடு என்பவை காரணமாக, எண்ணற்ற இன்னல்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவினரின் உண்மையான அரசியல் ரீதியான, சமூக ரீதியான குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என்று உள்ள அனைத்து அரசியலமைப்பு முறைகளும் தோல்வியுற்றால், அரசியலமைப்பு முறைகள் மூலம் தங்கள் குறைகளை அவர்களால் எவ்வாறுதான் நிவர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியும்?
சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இலங்கையில் ஓர் இனப் பெரும்பான்மையினர் பாராளுமன்றத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்தியபோது, பிராந்தியப் பெரும்பான்மையினராக இருந்த தேசிய இனச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு முறைகள் மூலம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய என்ன வாய்ப்பு இருந்தது? பெரும்பான்மையினரின் தட்டுகளிலிருந்து மூச்சுத்திணறி எலும்புகள் விழும் வரை அடிபணிந்து காத்திருப்பது ஒரு முறையாக இருந்தது. ஆனால், அத்தகைய எலும்புகளும் கூட மிக அரிதான இடைவெளிகளில் சொட்டுச் சொட்டாக விழுந்தபோது, ஆளும் சக்திகளின் ஆணவத்திற்கும் ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கும் எதிராக வடக்கு மற்றும் கிழக்கின் சிறுபான்மையினருக்கு செய்வதற்கென என்னதான் வாய்ப்பு இருந்தது?
இதே போன்ற அலட்சியமே, முன்னர் ஒருங்கிணைந்த பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
ஆகவே, இலங்கை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பாகுபாட்டிற்கு உள்ளான பிரிவினரின் நிலைமைகளை மேம்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியே, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எதிர்வினையையும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் தூண்டியது என்பதே எனது வாதம். பின்னர் அரசு, தனது சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மூலம் வன்முறையைப் பயன்படுத்தி, கடுமையாக அவர்களது அரசியல், சமூக, மனிதாபிமானப் பிரச்சினைகளை அமுக்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, தவிர்க்க முடியாத வகையில், பழிவாங்கும் நடவடிக்கைகளும் எதிர்வினைகளும் ஏற்பட்டபோது, அதன் விளைவாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.
அத்தகைய சட்டத்தை இயற்றுவதை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட நடைமுறைகள் பின்வரும் மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
அ. பயங்கரவாதச் செயல்களால் பொது ஒழுங்குக்கு ஆபத்தை விளைவிப்பதை, தேசிய பாதுகாப்புக்கு எதிரான ஓர் அச்சுறுத்தலாகச் சித்தரிப்பது.
ஆ. பயங்கரவாதச் செயல்களைக் கையாள்வதற்காக மற்ற ஜனநாயக நாடுகளும் சிறப்புச் சட்டங்களை இயற்றியிருப்பது.
இ. சட்டம் தற்காலிகமானதுதான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.
இந்தத் தற்காலிகச் சட்டம் இப்போது 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ளது!
பெரும்பாலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டமாகச் சித்தரிக்கப்படுகிறது. நமது பொதுப் பாதுகாப்புச் சட்டங்கள், நாம் 1948 பிப்ரவரி 4 அன்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் எண் 25இலிருந்து உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அந்த அவசரச் சட்டம் காலனித்துவ ஆக்கிரமிப்பின் போது, தேசிய பாதுகாப்பிற்காக அல்லாமல், பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பேணுதல், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களையும் சேவைகளையும் பராமரித்தல் ஆகியவற்றுக்காக இயற்றப்பட்டது. வேறுவிதமாகக் கூறுவதென்றால், பொது ஒழுங்கைப் பேணுதல், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பவற்றுக்காக இந்த நாட்டின் குடிமக்களின் உரிமைகள் தற்காலிகமாகக் குறைக்கப்பட வேண்டும் எனக் கருதுவது.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்தச் சட்டங்களை வெற்றிகரமாக தேசிய பாதுகாப்புச் சட்டங்களாக மாற்றியுள்ளன. பொதுப் பாதுகாப்புக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்பு என்பது, ஒருவேளை அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியால் (அல்லது நாட்டால்), ஒட்டுமொத்த தேசத்திற்கும் நிலவக்கூடிய பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டது. 1979ஆம் ஆண்டில் நமது அரசாங்கங்கள், இந்த நாட்டின் ஏழு மாகாணங்களுக்கு மட்டுமே தங்கள் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி, மற்ற இரண்டு மாகாணங்களை அந்நிய மண்ணாகக் கருதியிருந்தாலன்றி, (அப்படியானால் அந்த இரண்டு மாகாணங்களிலும் அரசாங்கப் படைகளே ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும்!), இதில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்படவில்லை; மாறாக, பொது ஒழுங்குமுறை மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தது. ஆயினும், 1982ஆம் ஆண்டின் 10ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தால் கொண்டுவரப்பட்ட பிரிவு 15A, இதை “தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கின் நலன்களை நோக்கமாகக் கொண்டு” என்று குறிப்பிடுகிறது.
தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, கையாளப்பட வேண்டியதெல்லாம் உள்நாட்டுப் பொதுப் பாதுகாப்புக்கான ஒரு விடயம் மட்டும்தான் என்றபோதும், ஆரம்ப நாட்களில் இதை ஒரு தேசிய பாதுகாப்புப் பிரச்சினையாகச் சித்தரிக்க மேற்கொள்ளப்பட்ட பல தொடர்ச்சியான பிரசாரங்கள், அரசியலமைப்பின் 13(5), 13(6) ஆகிய பிரிவுகளின்படி குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு அரசாங்கங்கள் கொண்டிருந்த வெளிப்படையான ஆர்வத்தை வைத்தே கண்டறியப்படலாம். இது தொடர்பாக, அரசியலமைப்பின் 15(1) பிரிவின் விதிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அது பின்வருமாறு கூறுகிறது:
“15(1): சரத்துகள் 13(5), 13(6) என்பவற்றால் அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதும் செயற்படுத்துவதும், தேசிய பாதுகாப்பின் நலன்களுக்காகவென, சட்டத்தால் பரிந்துரைக்கப்படக்கூடிய கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே உட்பட்டதாக இருக்கும்.” இந்தப் பத்தியின் நோக்கங்களுக்காக, ‘சட்டம்’ என்பது பொதுப் பாதுகாப்பு தொடர்பான, அவ்வப்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகின்ற ஒழுங்குமுறைகளையும் உள்ளடக்கியது.
மேற்கூறப்பட்ட அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தச் சரத்தால் முன்வைக்கப்பட்ட ஒரே ஒரு காரணம் ‘தேசியப் பாதுகாப்பின்’ நலன் மட்டுமே; பொதுப் பாதுகாப்பு அல்ல.
இந்தத் ‘தேசிய பாதுகாப்பு’ என்ற சொல், மனித உரிமைகளின் மீதான வன்முறை அடக்குமுறையைத் தக்கவைப்பதற்காகவும், பாதுகாப்பு வரி போன்ற பல்வேறு கட்டணங்களை விதிப்பதற்காகவும் என்றே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதற்கும் வாய்ப்புள்ளது.
பிரிட்டன் போன்ற பிற ஜனநாயக நாடுகள் சிறப்புச் சட்டங்களை இயற்றுவதைப் பொறுத்தவரை, போல் சீகார்ட் (Paul Sieghart) தனது “இலங்கை – தவறுகளால் பெருகிவரும் சோகம்” (Sri Lanka – Mounting Tragedy of Errors) என்ற புத்தகத்தில், பிரித்தானிய பயங்கரவாதம் தொடர்பான சட்டத்திற்கும் நமது பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கும் இடையே உள்ள பல வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். நமது பயங்கரவாதத் தடைச் சட்டம், அவர்களது பிரித்தானியச் சட்டத்தை விட மிகவும் கடுமையானதாக அமைந்துள்ளது. உதாரணமாக, பிரிட்டனில் குற்றச்சாட்டு இல்லாமல் ஒரு கைதியைத் தடுத்து வைத்திருப்பதற்கு 7 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நமது சட்டத்திலோ அது 18 மாதங்கள்! பிரித்தானியச் சட்டத்தில் இல்லாத பல சட்டங்கள் இதில் உள்ளன. உதாரணமாக, அங்கு இல்லாத ‘கட்டுப்பாட்டு உத்தரவுகள்’ (Restriction Orders) இங்கே இருக்கின்றன; அரசுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டுக்காக ஒருவருக்கு 5 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குதல், இவற்றைச் செய்தித்தாள்களில் வெளியிடுவதற்கான தடைகள் போன்றவை எதுவும் அங்கு இல்லாதவை.
நமது தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள எந்தவொரு அமைப்பாலும் எத்தகைய ஆபத்தும் இல்லாத நிலையில், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் அவசரக் கவனக் குவிப்புக்கும் அவசியமாக இருந்த விடயங்கள், வறுமைக்கும் பாகுபாட்டிற்கும் எதிரான நடவடிக்கைகள் மட்டுமே. அப்படி இருந்த ஒரு சூழலில்தான், தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ற போர்வையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயற்றப்பட்டது.
அடுத்து, சில குறிப்பான அடிப்படை உரிமைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்திய இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளைப் பற்றிப் பார்ப்போம்:
அத்தகைய விதிகளில் முதலாவது, சட்டப் பிரிவு 5 ஆகும். அது பின்வருமாறு கூறுகிறது:
“A. எந்தவொரு நபராவது,
- இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் அல்லது செய்துகொண்டிருக்கிறார் அல்லது,
- இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அல்லது செய்கிறார் என நம்புவதற்கு நியாயமான காரணம் இருந்தும், அதை ஒரு காவல்துறை அதிகாரியிடம் தெரிவிக்கத் தவறினால் அல்லது,
B. இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்த, அல்லது செய்துகொண்டிருக்கின்ற, அல்லது செய்ய முயற்சிக்கின்ற எந்தவொரு நபரின் நடமாட்டம் அல்லது அவரது இருப்பிடம் தொடர்பான எந்தவொரு தகவலையும் தன்வசம் வைத்திருந்தும், அதை ஒரு காவல்துறை அதிகாரியிடம் தெரிவிக்கத் தவறினால்,
அவர் ஒரு குற்றத்தைச் செய்தவராகக் கருதப்படுவார், மேலும் இந்த இருவகைக் குற்றங்களில் ஏதாவதொன்றைச் செய்ததற்காக வழங்கப்படும் தீர்ப்பின் பேரில், அவர் ஏழு ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனைகளில் ஒன்றிற்கு உள்ளாவார்.”
பொதுவாக, சமூகத்தின் மற்ற உறுப்பினர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, வேண்டுமென்றே செய்யப்படும் செயல்களுக்கு எதிராகவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. மேலே கூறப்பட்ட பிரிவு 5, ஒரு செயலைச் செய்ததற்காக அல்ல; மாறாக, ஒரு செயலைச் செய்யத் தவறியதற்காக நபர்களைத் தண்டிப்பதற்காக இயற்றப்பட்டுள்ளது. இது செய்யத் தவறியதைக் கையாளும் ஒரு சட்டப்பிரிவு. செய்ததைக் கையாளும் பிரிவு அல்ல.
இங்கே நான் சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன்; என் உடல்நிலை சரியில்லாத அம்மா, மனைவி அல்லது குழந்தையைப் பற்றியோ, அல்லது அடுத்த சம்பளம் வரும் வரை வரும் மாதத்திற்கான செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றியோ கவலைப்பட்டபடி நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவர் என்னைக் கடந்து செல்கிறார். நான் அவரைக் காண்கிறேன். ஆயினும், நான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன். சிறிது நேரம் கழித்து ஒரு பொலிஸ் அதிகாரியோ அல்லது ராணுவ வீரரோ என்னை நிறுத்தி, “இப்படி ஒருவர் உங்களைக் கடந்து சென்றதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்கிறார்.
அவரைப் பார்த்தது எனக்கு மங்கலாக நினைவுக்கு வருகிறது. நான் சொல்கிறேன்:
“ஆம், ஒருவர் என்னைக் கடந்து சென்றார்.”
சரி. அவ்வளவுதான், அதுவே அவர்களுக்குப் போதும்.
சட்டத்தின் கீழ் அந்த நபர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் என்றோ, அல்லது அந்த நபர் ஒரு குற்றத்தைச் செய்யத் தயாராகிக் கொண்டிருந்தார் என்றோ, அல்லது ஒரு குற்றத்தைச் செய்வதற்கு முயன்று கொண்டிருந்தார் என்றோ நம்புவதற்கு எனக்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்தால், “என்னைக் கடந்து சென்ற அவரைப் பற்றி நான் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டுமே” என்று நினைத்து, ஆனால் அதைக் காவல்துறையிடம் தெரிவிக்கத் தவறியதற்காக நான் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம். பெரும்பாலும், யாருக்கு எதிராகப் புகார் அளிக்கப்படவில்லையோ, அவர் செய்த ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுபவராக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், குற்றம் செய்ததாக அவர்கள் யாரைக் குறிப்பிடுகிறார்களோ, அந்த நபர்தான் உண்மையில் அத்தகைய குற்றத்தைச் செய்திருப்பார் என்று காவல்துறை கருதுகிறது. முற்காலத்தில் இருந்தது போல, ஒரு கிராமத்தில் உள்ள மக்களுக்கு, ‘இன்னார்’ ஒரு தேடப்படும் குற்றவாளி என்றும் அவரைக் கைது செய்வது அவசியம் என்றும் பறைசாற்றப்பட்டால், ‘இன்னார்’ ஓர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களைத் தெரிவிக்காததற்காகவாவது ஒரு கிராமவாசியை நாம் குறை கூற முடியும். ஆனால், கொழும்பு உயர்நீதிமன்றத்தில் என் முன் வந்த சில வழக்குகள் எனக்கு நினைவிலிருக்கின்றன. அவற்றில், சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்தவர்கள் என்று கூறும் ஒப்புதல் வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள், சட்டப் பிரிவு 5இன் கீழ் காவல்துறையிடம் இருப்பிடம் குறித்துப் புகார் அளிக்கப்படாத நபர்களாகவும், இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஒருபோதும் தண்டிக்கப்பட்டிராதவர்களாகவுமே இருந்தனர். சில சமயங்களில், அவர்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நபர்களாகவும் இருந்தனர். எனவே, இது தொடர்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் என்று கூறப்படுபவை சந்தேகத்துடன் ஆராயப்பட்டன.
பெரும்பாலும் ஒரு கிராமத்து மக்களுக்கு ஒரு தீவிரவாதியைத் தெரிந்திருக்கலாம். அத்தகைய நபரின் தீவிரவாதத்திற்கு வழிவகுத்த காரணங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் இருக்க வேண்டியவர்கள் மத்தியில் அப்பட்டமான அலட்சியமும் உணர்வின்மையும் இருக்கின்ற போது, தீவிரவாதம் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றுதான். உண்மையில், சூர சரடியல், வீர கெப்பெட்டிபொலா ஆகியோர் ஓர் ஆக்கிரமிப்பாளருக்கு எதிராகப் போராடிய நாயகர்களாகக் கருதப்பட்டதைப் போலவே, இத்தகைய தீவிரவாதியும் கிராம மக்களால் மிகுந்த பிரமிப்புடனும் உத்வேகத்துடனும் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், எதிரியை விட பெரும்பாலும் நண்பர்களாகவே இருக்கும் அத்தகைய நபர்களையே உண்மையில் சாதாரண குற்றவாளிகள் என்றும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. இல்லையென்றால், நீங்களும் கைது செய்யப்படுவீர்கள்.
சாதாரண திருடனான பரபாஸையும், மனிதகுலத்தின் மீட்பரான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் பிலாத்துவின் ஆட்கள் குற்றவாளிகளாகக் கருதிய நிகழ்வை நாம் நினைவுகூரத் தவற முடியாது. உண்மையில், புனித இயேசு கிறிஸ்து பரபாஸை விட ஒரு பெரிய அயோக்கியனாகவே கருதப்பட்டார். வீரபுரன் அப்பு, வீர கெப்பெட்டிபொல மற்றும் சூர சரடியல் ஆகியோர் ஆங்கிலேயர்களின் பார்வையில் குற்றவாளிகளாக இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது; இருப்பினும், இப்போது அவர்களின் நினைவாக நாம் வீதிகளுக்கும் நிறுவனங்களுக்கும் பெயரிட்டுள்ளோம்.
சட்டப் பிரிவு 5, ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து அமைதியான மக்களையும், அவர்கள் தங்கள் சொந்த உறவினர்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பவர்களாகவும், காவல்துறைக்குத் தகவல் கொடுப்பவர்களாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே இயற்றப்பட்டிருந்தது. அத்துடன், அவர்களது சொந்தங்களான உறவினர்கள் ஒவ்வொருவரும், தத்தமது எதிர்வினைகளுக்கு முன்பதாகவே, அதிகாரத்தில் இருந்த நபர்களால் தவறாகவோ, உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ செய்யப்படுகின்ற ஏதாவதொரு நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்ய, பொலிஸ் அத்தியட்சகர் (Police Superintendent) அல்லது எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உதவிக் காவல்துறை அதிகாரிக்கு (Sub Inspector) மட்டுமே பிரிவு 6 அதிகாரம் அளித்திருந்த போதும், காக்கிச் சட்டை அணிந்த எந்தவொரு பொலிசாரும் கைது செய்யவும், வழக்குத் தாக்கல் செய்யப்படும்போது மட்டும் பதிவேட்டில் (கைது செய்தவர் பெயரைத்) திருத்தி அமைக்கவும் செய்கின்றனர். சட்டத்தில் ஒரு கைதை மேற்கொள்வதற்கு, ஒரு மூத்த அதிகாரி ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்பதற்கான காரணம் யாராலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
முந்தைய நாட்களில், வடக்குக் கிழக்கு மாகாணங்களில், ஒருவர் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு ஒரு காவல் (பொலிஸ்) நிலையத்திற்குச் செல்வதென்றால், அதைச் செய்வது ஏறக்குறைய சாத்தியமற்றதாகவே இருந்தது. ஏராளமான பாதுகாப்புச் சோதனைகள் இருந்தன. மட்டக்களப்பில் வெகு காலத்திற்கு முன்பு, எங்கோ ஒரு காவல் நிலையப் பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு முன், தங்கள் வாகனத்திலிருந்து இறங்கியபோது, பல குழந்தைகள் கொல்லப்பட்டனர்; ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் படுகாயமடைந்தார். அந்த அநாதைக் குழந்தைகளை இந்தப் பாதிரியார்தான் சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருந்தார்.
இதுபோன்ற பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளைக் கடக்கும்போது, நீங்கள் உள்ளே சென்று, குற்றம் செய்த ஒருவரைப் பற்றிப் புகார் அளிக்க விரும்புவதாகக் கூறினால், காவல்துறை மிகவும் எச்சரிக்கையாகிவிடும். குற்றம் செய்ததாகக் கூறப்படும் நபர், தகவல் கொடுப்பவருடன் கைகோர்த்துச் செயல்படுவதாக அவர்கள் அஞ்சுவர். எனவே, அவர்கள் அத்தகைய தகவல் கொடுப்பவரை ஒரு சாதாரண குற்றவாளியைப் போல விசாரித்துச் சோதனையிடுவர்.
நீங்கள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தவுடன், பல மணிநேரம் கழித்து ஒரு காவல்துறை அதிகாரி வரும் வரை உங்கள் வாக்குமூலத்திற்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வேறு சந்திப்புகள் இருப்பதாக அவர்களிடம் கூற உங்களுக்கு உரிமை இல்லை. இறுதியில், உங்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படும். உங்கள் வாக்குமூலத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க உங்களுக்கு எந்த வழியும் இருக்கப் போவதில்லை. ஆனால், பெரும்பாலும் ஒரு மூத்த அதிகாரி உங்களைக் கேள்வி கேட்க அழைத்துவரப்படும் வரை, நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பீர்கள்.
இதை இன்னொரு வகையில் கூறுவதென்றால், நீங்கள் ஒரு குற்றவாளியாகவே நடத்தப்படுவீர்கள். ஆனால், உங்கள் மீதான ‘பிரிவு 5இன் அடிப்படையிலான குற்றச்சாட்டைத்’ தவிர்க்க விரும்பினால், அதற்கான முழுச் சுமையையும் நீங்கள்தான் சுமந்து அனுபவிக்க வேண்டும் என்று சட்டம் எதிர்பார்க்கிறது.
இந்தச் ‘சட்டப் பிரிவு 5’ இன் குற்றச்சாட்டு என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டாகும். அரசு வழக்கறிஞர் உங்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று கண்டறிந்தால், உங்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு, நீங்கள் குறைந்தது 2 ஆண்டுகளுக்கு காவலில் வைக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், உங்களை இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையிலான குற்றச்சாட்டின் கீழ் கொண்டு வருவார். 1982 ஆம் ஆண்டின் சட்ட இலக்கம் 10 இன் படி திருத்தப்பட்ட பிரிவு 15(2) பின்வருமாறு கூறுகிறது:
“15 (2). இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு குற்றம் தொடர்பாகவோ அல்லது பிரிவு 23 இன் விதிகள் பொருந்தக்கூடிய ஏதேனும் ஒரு குற்றம் தொடர்பாகவோ எந்தவொரு நபருக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை பெறப்பட்டவுடன், நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கிலும், விசாரணை முடியும் வரை அத்தகைய நபரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்.”
அடுத்து, குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகளின் ஏற்புத்தன்மை குறித்துப் பார்ப்போம். ஒரு குடிமகன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும்போது, அவர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று, அவர் செய்த குற்றங்களை அரசு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எடுத்துரைக்க முடியாமலிருக்கும் நிலையாகும். பெரும்பாலும், குற்றச்சாட்டுகள் தெளிவற்றனவாகவே இருக்கின்றன.
ஒரு குற்றச்சாட்டைத் தாக்கல் செய்யும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் ஒரு பிரிவை அல்லது ஒழுங்குமுறையின் எந்தப் பகுதியை மீறியுள்ளார் என்பது குறித்து (குற்றம் சாட்டும்) அரசு தரப்பு தெளிவாக இருக்க வேண்டும் என்பதுடன், அதையே குறிப்பிடவும் வேண்டும். ஒரு பிரிவில் உள்ள மாற்று வழிகளைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் அவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்துள்ளார் என்று அரசு தரப்புக் கூறுவது ஏற்கப்படுவதில்லை. இந்த விடயத்தில் அரசு தரப்பு ஒரு முடிவுக்கு வர இயலாவிட்டால், அரசு தரப்பு மாற்றுக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய வேண்டும். அதன் மூலம், நீதிமன்றம் நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டுகளிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவரை இறுதியில் விடுவிக்கவும், அரசு தரப்பால் தேவையான ஆதாரங்களை நிரூபிக்க முடிந்த குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றவாளி எனக் கண்டறியவும் ஏதுவாக, மாற்றுக் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு குற்றச்சாட்டும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தைக் குறிப்பிட வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164(1)ஐப் பார்க்க). குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட விஷயம் குறித்து அவருக்குத் தெரியப்படுத்தும் வகையில், குற்றத்தின் வரையறையின் ஒரு பகுதியை அது குறிப்பிட வேண்டும் (பிரிவு 164(3)ஐப் பார்க்க). குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது என்பது, குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை உருவாக்க, சட்டத்திற்கு அவசியமான ஒவ்வொரு சட்டபூர்வ நிபந்தனைகளும் ஒரு குறிப்பிட்ட வழக்கில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்ற கூற்றுக்குச் சமமாகும் (பிரிவு 164(5)ஐக் காண்க). குற்றச்சாட்டு, குற்றம் நடந்ததாகக் கூறப்படும் நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும் (பிரிவு 165(1) ).
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 165(2)இல், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் முறைகேடு தொடர்பாக ஒரு வருட காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடாகப் பயன்படுத்துதல் தொடர்பான குற்றம் பொதுவாக நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதே இதற்குக் காரணம். இருப்பினும், அத்தகைய வழக்குகளுக்கும் கூட, பிரிவு 165(2)இல் ஓராண்டு கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில குற்றச் செயல்களைப் பொறுத்தவரை, ஓராண்டு கால வரம்பு பொருந்தாது. நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்கள், ஓராண்டுக் காலத்திற்குத் தெளிவற்ற முறையில் நீட்டிக்கப்படாமல், மிகவும் திட்டவட்டமாக இருக்க வேண்டும். சட்டத்தின் பிரிவு 164இன் படி கொடுக்கப்பட்ட விவரங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்துப் போதுமான முன்னறிவிப்பை அளிக்கவில்லை என்றால், குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்ட செயல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் இடம்பெற வேண்டும் (பிரிவு 165(3) ).
இந்த விதிகள் அனைத்தும், செய்யப்பட்ட குற்றத்தின் தன்மை குறித்து அரசுத் தரப்பு தனது பக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன.
இது தவிர, அரசு தரப்பு தான் தனது வழக்கை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்க வேண்டும். சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு குற்றத்தின் பல கூறுகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்டவற்றையோ குற்றம் சாட்டப்பட்டவர் செய்துள்ளார் என்று கூறி, அத்தகைய கூறுகளில் ஒன்றிலிருந்து அல்லது அதற்கு மேற்பட்டவற்றிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை விடுவித்துக் கொள்வார் என அரசு தரப்பு எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட சில செயல்கள் எந்தக் கூறின் கீழ் வருகின்றன என்பதை அரசு தரப்பினரால் உறுதியாக நிர்ணயிக்க முடியாத பட்சத்தில், அவை மாற்றுக் குற்றச்சாட்டுகளுடன் கூடிய ஒரு குற்றப்பத்திரிகையாக அவர்களால் தயாரிக்கப்பட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைக்கப்பட்டிருந்த பல வழக்குகளில், அரசு தரப்பு தனது வழக்குகளை நிரூபிக்க முழுமையாக ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே சார்ந்திருந்த காரணத்தால், குற்றம் சாட்டப்பட்டவரது என்று குறிப்பிடப்படும் செயல்கள் எந்தக் (குற்றச் செயல்களின்) கூறின் கீழ் வருகின்றன என்பதைக் குறிப்பிடாமலேயே குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்திருந்தது. மேற்குறிப்பிட்ட அத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள் மூலமாகத் தெரிய வந்ததைத் தவிர, அதில் கூறப்படும் செயல்கள் நடந்ததற்கான (சுயாதீனமாகக் கண்டடையப்பட்ட ஆதாரமான) சான்றுகள் எதுவும் அரசிடம் இல்லை.
ஆனால், 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் இலக்கம் 48 அல்லது அவசரகால ஒழுங்குமுறைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன என்பதன் மூலம், இந்த நாட்டின் நடைமுறைச் சட்டம் மாற்றப்பட்டுவிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாட்சியச் சட்டத்தின் பிரிவு 25, அத்தகைய ஒப்புதல்களைத் தடை செய்தபோதிலும், இந்தச் சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை வழக்குகளுக்கான சாட்சியங்களாக ஏற்றுக்கொண்டன.
வழக்குத் தொடுக்கும் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்க வேண்டும் என்ற நடைமுறை விதி இன்னமும் செல்லுபடியாகும் ஒரு விதியாகும். வழக்குத் தரப்பின் வழக்கை நிரூபிக்க ஒரு தன்னார்வ சாட்சியின் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல்கள் உண்மையில் செய்யப்பட்டன என்ற முடிவுக்கு வர, போதுமான சுயாதீனமான ஆதாரங்கள் இல்லாமல், வழக்குத் தரப்பு தனது வழக்கை நிரூபிப்பதற்கு ஒரு வாக்குமூலத்தை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க முடியாது.
கொலை வழக்குகளில், மரண தண்டனை விதிக்கப்படும்போது, சட்டம் ஒரு ‘தானாகவே முன்வந்து’ வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதலைக் கூட ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது போலவே அது விசாரணையைத் தொடர்கிறது (குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 205இன் நிபந்தனையைப் பார்க்கவும்).
எனவே, ஒரு தண்டனை மரணதண்டனையாக இருக்கும் என்ற முடிவுக்கு வருவதில் சட்டம் மிகவும் கவனமாக இருக்கிறது. உதாரணமாக, அவசரகால சட்ட விதிமுறைகள் 23, மரணதண்டனையைத் தண்டனையாக விதிக்கிறது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒரு வழக்கிற்கும், ஒரு வாக்குமூலமே வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஒரே அடிப்படையாக இருக்கும் வழக்கிற்கும் இடையே வேறுபாடு உள்ளது. முதலாவது வகை வழக்கில், அரசு தரப்பு, விசாரணைக்குப் பிறகு போதுமான ஆதாரங்களைப் பெற்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுக்கக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் வழக்கை நிரூபிக்க ஒரு குற்றப்பத்திரிகையைத் தயாரிக்கிறது. மற்ற வழக்கில், அரசு தரப்பு எந்த விசாரணையும் செய்வதில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் என்று சொல்லப்படுவதைத் தவிர, குற்றத்தை உருவாக்கும் செயல்கள் குறித்து அதற்கு சுயாதீனமான அறிவு எதுவும் இருப்பதில்லை. ஒரு நபர் தன்னலமற்ற காரணங்களுக்காகவோ, பயம் அல்லது எரிச்சலின் காரணமாகவோ, அல்லது சூழ்நிலைகள் குறித்த தவறான புரிதலின் காரணமாகவோ, தன்னைத்தானே குற்றவாளியாக்கும் ஒரு தன்னார்வ வாக்குமூலத்தைக் கூட அளிக்கலாம் (நாகமணி ரவேந்திரன் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காண்க). எனவே, அரசு தரப்பு, ஒரு நிரபராதி தண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வாக்குமூலத்தை மட்டும் சார்ந்திராமல், குற்றப்பத்திரிகைக்கு அடிப்படையாக அமைந்த சம்பவம் அல்லது நிகழ்வின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒரு வாக்குமூலம், அது தானாக முன்வந்து அளிக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட, அது உண்மையானதுதான் என்று அனுமானிக்க முடியாது. அந்த வாக்குமூலத்தைச் சார்ந்திராமல் உண்மை கண்டறியப்பட வேண்டும். எனவே, ஒரு வழக்கில் அரசு தரப்பு தனது வழக்கை நிரூபிக்க ஒரு வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், அரசு தரப்பால் தனது வழக்கை நிலைநிறுத்த முடியாது என்பதே அதன் தவிர்க்க முடியாத பொருளாகும். அரசு தரப்பு வாக்குமூலங்களை மட்டுமே சார்ந்திருக்கும்போது, அரசின் மீதான சுமை அதிகமாகிறது. உதாரணமாக, ஒரு நபர் தனது வாக்குமூலத்தில், ஒரு குறிப்பிட்ட தேதியில், X அல்லது Y என்பவரால் ஓர் இராணுவ வாகனம் சுடப்பட்டதையும், அதன் விளைவாக X அல்லது Y ஆல் பல வீரர்கள் கொல்லப்பட்டதையும் கண்டதாகக் கூறினால், குறிப்பிடப்பட்ட இடத்திலும் நேரத்திலும் உண்மையில் ஓர் இராணுவ வாகனம் தொடர்பான அத்தகைய சம்பவம் நடந்ததா என்பதை இராணுவத் தளபதியிடம் சரிபார்ப்பது அரசின் கடமையாகும். ஒருவேளை, அந்தக் குறிப்பிட்ட நாளில், சம்பந்தப்பட்ட நேரத்தில், கொடுக்கப்பட்ட இடத்தில் ஓர் இராணுவ வாகனம் தொடர்பான அத்தகைய சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று இராணுவத் தளபதி கூறினால், அந்த வாக்குமூலம் எப்படி ஒரு கற்பனையான இராணுவ வாகனத்தையும் வீரர்களையும் உருவாக்கி, அந்த நேரத்தில் அவர்களையும் கொல்ல முடியும்?
பெரும்பாலும் இந்தக் குற்றம் ஒரு ‘குறிப்பிட்ட நபரின்’ மரணம் தொடர்பானது என்பதை மறந்துவிடக் கூடாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) பிரிவு 31இன் படி ‘குறிப்பிட்ட நபர்’ என்பது, மற்றவற்றுடன், “ஆயுதப் படைகள், காவல் படை மற்றும் பொது ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்புள்ள பிற படைகளின் எந்தவொரு உறுப்பினரையும்” குறிக்கும். எனவே, இந்தக் குற்றம் ஒரு ‘குறிப்பிட்ட நபருடன்’ தொடர்புடையது என்று நிரூபிக்கப்படாவிட்டால், அந்தக் குற்றச்சாட்டு செல்லுபடியாகாது. ஒருவேளை, வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம், தேதி மற்றும் இடத்தில் உண்மையில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்திருந்தும், அதன் விளைவாக ‘குறிப்பிட்ட நபர்கள்’ யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், குற்றச்சாட்டுப் பத்திரம் தோல்வியடையும். ஏனெனில், அந்தக் குற்றம் குறிப்பிட்ட நபர்களுக்கு ஏற்பட்ட மரணம் தொடர்பானது மட்டுமே.
சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் என்ற அடிப்படையில் அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு சதிகாரர்களதும் பொதுவான நோக்கம் அல்லது பொதுவான எண்ணம் என்ன என்பது பற்றித் தெரிந்திருந்தது என்பதற்கு ஆதாரம் இருக்க வேண்டும் (பார்க்க: 67 NLR, பக். 193). ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பொதுவான நோக்கம் அல்லது பொதுவான எண்ணம் பற்றி குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது’ என்பதை அரசு தரப்பால் நிரூபிக்க முடியாது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் அடையாளம் குறித்து மிகக் குறைவான ஆதாரங்களே இருக்கும்; மேலும், அவர்களின் நோக்கம் குறித்து எந்த ஆதாரமும் இருக்காது.
குற்றம் சாட்டப்பட்ட பங்கேற்பாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு ஆதாரம் கிடைக்காத வரையில், ஒரு வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தச் செயலும் இலங்கையின் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டமாக அமையாது. பங்கேற்றதாகக் கூறப்படும் ஒரு தனி நபரின் வாக்குமூலத்தால் இதை நிரூபிக்க முடியாது. ஒருவேளை, ஓர் ஒட்டுமொத்தத் தலைவரின் வாக்குமூலம் சற்றே சிறந்ததாக இருக்கலாம். ஆயினும்கூட, பங்கேற்ற அனைவரின் பொதுவான நோக்கம் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சி குறித்து அவரால்கூடப் பேச முடியாமல் போகலாம்.
சட்டப்படி அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது குறித்து எந்தவிதமான அனுமானங்களோ அல்லது முன்முடிவுகளோ இருக்க முடியாது. கவிழ்ப்பதற்கான சதித்திட்டமோ அல்லது கவிழ்ப்பதற்கான முயற்சியோ அல்லது தயாரிப்போ கற்பனையானதாக இல்லாமல் உண்மையானதாக இருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது, கொழும்பில் தற்போதுள்ள சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்க நிறுவனத்தை இடம்பெயரச் செய்வதாகும். துப்பாக்கிப் பயிற்சி பெறுவது அல்லது ஆயுதமேந்திய போராளிகளுக்கு உணவு அல்லது எரிபொருள் வழங்குவது போன்றவை வேறு சில சட்டங்களின் கீழ் குற்றங்களாக இருக்கலாம். ஆனால், மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தையோ அல்லது இயந்திரத்தையோ கைப்பற்றி, அதற்குப் பதிலாக ஒத்துழைப்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்களைக் கொண்ட ஒரு புதிய இயந்திரத்தை நிறுவுவதற்கான ஓர் ஒருங்கிணைந்த திட்டம் இல்லாத நிலையில், அச்செயல்கள் மட்டுமே ஓர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் குற்றமாக நிச்சயமாக அமையாது.
எனவே, தொடர்புடைய உண்மைகளுக்கான ஆதாரம் இல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டுமே அரசு தரப்பு எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் வழக்கை நிரூபிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். நிலைநிறுத்த முடியாத குற்றச்சாட்டுகளுடன் வழக்கை முன்னெடுத்துச் செல்வது என்பது, நீதிமன்றங்களின் முன் ஏற்கனவே உள்ள வழக்குகளுடன் சேர்த்து மேலும் வேலைச் சுமையை அதிகரிக்கின்ற ஒரு செயலாகவே அமையும். உண்மையில், வாக்குமூலங்களில் கூறப்பட்டுள்ள சம்பவங்களின் உண்மைத்தன்மையையும் அவை நிகழ்ந்திருப்பதையும் அரசால் சரிபார்க்க முடியும் என்பதால், இதுபோன்ற வழக்குகள் ஒருபோதும் தொடரப்படக்கூடாது. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகள், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, மக்களைத் துன்புறுத்தவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி, தன்னிடம் கொண்டுவரப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் அல்லது குற்றவாளிகள் என்று முன்கூட்டியே தீர்மானித்திருந்தாலன்றி, வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தண்டனைத் தீர்ப்பில் முடிவடையவில்லை. அந்தத் தண்டனைத் தீர்ப்புகள்கூட, மேல்முறையீடுகளில் பலமுறை ரத்து செய்யப்பட்டன. சில சமயங்களில், உச்ச நீதிமன்றத்தால் மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராகத் தனக்குக் கிடைத்த தகவல்தொடர்புகள் தொடர்பாக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. சமீபத்திய நல்லையா சிங்கராசா வழக்கில் (தகவல் தொடர்பு எண் 1033/2000 இல்), இலங்கை அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற மீறல்களைத் தவிர்க்கக் கடமைப்பட்டுள்ளது என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) சில ஆட்சேபிக்கப்பட்ட பிரிவுகள் (உ.ம். பிரிவு 16), அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) விதிகளுடன் இணக்கமாக ஆக்கப்படுவதை அது உறுதி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்திலும் ஏற்பட்ட இறுதி விளைவு என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் சிறைக் காவலில் வைக்கப்பட்டு, நீண்ட காலத்திற்குத் வெளித் தொடர்பில்லாத நிலையில் இருப்பதன் காரணமாக, அவர்களது அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதுதான். இறுதியில், அத்தகைய நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை, ஒப்புதல் வாக்குமூலங்கள் என்று சொல்லப்படுபவற்றை மட்டுமே கொண்டு நிலைநிறுத்த முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்படியென்றால், நாம் ஏன் இன்னும் இதுபோன்ற வழக்குகளைத் தொடர்ந்து தாக்கல் செய்து கொண்டிருந்தோம்? அது குடிமக்களைத் துன்புறுத்துவதற்கா அல்லது வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்திறனைக் காட்டுவதற்காகவா?
3.5.2000 தேதியிட்ட அவசரகால ஒழுங்குமுறைகள், ‘பிணை வழங்குதல்’ தொடர்பான முந்தைய ஒழுங்குமுறை 54(3)ஐ நீக்கியது. ஒழுங்குமுறை 19(2)இன் கீழ், அரசு தரப்பு வழக்கறிஞரால் ஒரு நபரைத் தொண்ணூறு நாட்கள் காவலில் வைத்துப் பின்னர் விடுவிக்க முடியும். ஆனால் நடந்தது என்னவென்றால், அதன் பிறகு அந்த நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 7இன் கீழ், நீதிபதி முன் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். நிச்சயமாக, அந்த 90 நாட்களில் ஒரு ‘தன்னார்வ’ ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுதல் நடக்கவே செய்தது!
பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டதென்பது, சட்ட அடிப்படையில் எந்த அடிப்படைகளையும் கொண்டிராத வழக்குகளைத் தாங்கிப் பிடிப்பதன் மூலம், இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பறித்தது. மக்களின் இயல்பான மனித வாழ்க்கையைப் பறித்து, அவர்களைச் சிறையில் அடைத்து, அரசின் கருவூலத்திலிருந்து அவர்களுக்கு உணவளித்து, இதுபோன்ற ஆதாரமற்ற வழக்குகளின் முடிவில் அவர்களை விடுவிப்பதற்காகவே பல ஆண்டுகளாக நாம் அவர்களைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறோம்.
1979ஆம் ஆண்டின் ‘தற்காலிக ஏற்பாடுகள் சட்டம்’ எண் 48 இயற்றப்பட்ட பிறகு, ஒரு முழுத் தலைமுறை மனிதர்களும் தங்களின் உண்மையான மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய எந்த அறிவும் இன்றி பிறந்து வளர்ந்தனர் என்பதை நாம் உணர்ந்தோமா? இந்த நாட்டின் சில பகுதிகளில் இராணுவ ஆட்சியை நிலைநிறுத்த இந்தத் தற்காலிக ஏற்பாடுகள் இன்னும் எவ்வளவு காலம் பயன்படுத்தப்படும்?
இதுவரை நாம் அனுபவித்த அனைத்து அவசரத் தேவைகளையும் சமாளிக்க நாட்டின் சாதாரண சட்டங்களே போதுமானதாக இருந்தன என்பது என் நம்பிக்கை. உண்மையில், ஆயுதப் படைகளுக்கும் காவல்துறைக்கும் வழங்கப்பட்ட பரந்த அதிகாரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறை, காவலில் ஏற்படும் மரணங்கள் மற்றும் காணாமல் போதல் ஆகியவற்றை நிச்சயமாக அதிகரித்துள்ளன. உண்மையான குற்றவாளிகளைத் தண்டிப்பதை விட, அரசியல் காரணங்களுக்காகத் தன் குடிமக்களைத் துன்புறுத்த அரசு விரும்புவதையே இது குறிக்கவில்லையா?
இத்தகைய சட்டங்களால் இந்த நாட்டின் சில குடிமக்களின் மனித உரிமைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நம் அனைவரின் மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் மனித உணர்திறன் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. மற்றவர் மீது குற்றம் சாட்டுவது எளிது. பல நேரங்களில், நாம் சரியாகச் செயல்படாததால்தான் மற்றவர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுகிறார். தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் வடிவில் அதிகாரம் நம் கைகளில் இருப்பதால், இந்த நாட்டின் சில பகுதிகளில் ஆயுதப் படைகளின் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கு அது ஒரு காரணமாகாது. ஏற்கனவே, ஆயுதப் படைகளின் கைகளில் அதிகாரம் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பது, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் வன்முறை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ அதிகாரத்தைக் கையாள விரும்பும் நபர்களுக்கு அவர்கள் மேலும் மேலும் பயனுள்ளவர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சில காலத்திற்கு முன்பு நடந்த ஒரு பொதுத் தேர்தலின் போது, இந்த நாட்டின் சில பகுதிகளில் நாம் கண்டது போல, அத்தகைய தப்பியோடியவர்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி பேரழிவாக இருக்கும்.
போர் நிறுத்தப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) திரும்பப் பெறப்பட்டிருக்கும் என்று ஒருவர் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக, அது இன்னும் சட்டப் புத்தகத்தில் உள்ளது.
பாதுகாப்புச் சட்டங்களுடன் ஒப்பிட்டு மனித உரிமைகளைப் பற்றி விவாதிக்கும்போது, மனிதக் கடமைகளைப் பற்றியும் விவாதிப்பது பொருத்தமற்ற ஒன்றல்ல. மேற்கத்திய நாடுகள் வருவதற்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில், மனித உரிமைகளை விட கடமைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது எனது வாதம். மேற்கத்திய நாடுகள் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் வலியுறுத்திய அதே வேளையில், சீனா உட்பட கிழக்கத்திய நாடுகள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்கிடையேயான உறவையும் கடமைகளையும் வலியுறுத்தி வந்தன. இந்தியப் பார்வையில் தர்மம் என்பதன் பொதுவான பொருள் கடமை அல்லது கடமையுணர்வாகும். அனைத்து உயிர்களும் வேரூன்றியிருப்பது ஒரேயொரு இருப்பில்தான்.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு முழுமையின் ஒரு பகுதியாகவே இருந்தனர். ஒருவர் தனித்து இருக்கவில்லை. அவர் சுதந்திரமானவராக இருக்கவில்லை. அவர், பரந்து விரிந்த, ஒன்றோடொன்று இணைந்த மற்றும் ஒன்றையொன்று சார்ந்த ஓர் ஒழுங்கின் உள்ளார்ந்த பகுதியாக அல்லது அங்கமாக இருந்தார். கிழக்கத்தியக் கருத்தின்படி, மனிதன் சுதந்திரமாகப் பிறக்கவில்லை. அவன் எண்ணற்ற கடமைகளுடன் பிறந்தான். இவ்வுலகில் தோன்றி வாழ்வதன் மூலம், அவன் தனது கடமைகளைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தான்.
எந்த மனிதனும் தனக்காகவோ அல்லது தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ வாழ்வதில்லை. அவன் அனைவருக்காகவும், பொதுவான நோக்கங்களுக்காகவும் வாழ்கிறான். ஒரு கை உடலின் ஒரு பகுதியாகும்; அது உடலில் இருக்கிறது மற்றும் உடலின் பயன்பாட்டிற்காகவே உள்ளது. அதுபோலவே, மனிதன் சமூகத்தின் ஒரு பகுதி; சமூகத்தில் வாழ்கிறான் மற்றும் சமூகத்தின் மீது கடமைகளைக் கொண்டுள்ளான். மேற்கத்தியர்களைப் போல சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் இருக்க முடியும் என்று நினைப்பது ஓர் அபத்தமாகும். அது அறியாமையிலிருந்து வருகிறது. அது தனித்தன்மையின் மாயையிலிருந்து வருகிறது.
உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையில் சாராம்சமான வேறுபாடு எதுவும் இல்லை என்பதை நாம் அறிவோம். அவை துணைவிதிகள். அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால் அணுகுமுறைகள் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து வருகின்றன. தனது சமூகத்தை உரிமைகளின் அடிப்படையில் அமைக்கும் மேற்கத்தியர், “இது என்னுடையது. இதை எனது உரிமையாக நான் கோருகிறேன்” என்கிறார். தனது சமூகத்தைக் கடமைகளின் அடிப்படையில் அமைக்கும் கிழக்கத்தியர், “இது உங்களுடையது. இதை எனது கடமையாக உங்களுக்கு அளிக்கிறேன்” என்கிறார். இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கும் இடையிலான மனப்பான்மை முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விளைவுகளும் வேறுபட்டவை. உரிமைகளின் அணுகுமுறை ஆக்ரோஷமானது, போர்க்குணம் கொண்டது மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கிறது. கடமைகளின் அணுகுமுறை விட்டுக்கொடுப்பது, அமைதியானது மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது. தர்மம் எனும் இலட்சியத்திலிருந்து எழும் நற்பண்புகள் அனைத்தும், கடமையுணர்வின் வேரிலிருந்து வெளிப்படும் இந்தக் கடப்பாட்டு உணர்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.
உரிமைகளுக்குப் பதிலாகக் கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இந்த முக்கிய உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் இந்த நாட்டிற்கான தங்கள் கடமைகளைத் தீவிரமாகக் கருதியிருந்தால், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற ஒரு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதப்படும் ஒரு சூழல் உருவாக அவர்கள் ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்கள்.
அணுத்துகள் இயற்பியலின் பல்வேறு மாதிரிகளை ஆய்வு செய்தபோது, பருப்பொருளின் கூறுகளும் அவற்றை உள்ளடக்கிய அடிப்படை நிகழ்வுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை, ஒன்றையொன்று சார்ந்தவை என்ற முடிவுக்கு அறிவியல் ஏற்கனவே வந்திருந்தது. எதையும் தனித்தனிக் கூறுகளாகப் புரிந்துகொள்ள முடியாது; மாறாக, ஒரு முழுமையின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
ஆட்சியிலும் கடமைகளையும் சுய விழிப்புணர்வையும் வலியுறுத்துவதன் அவசியத்தை நாம் உணராவிட்டால், மேலும் மேலும் கடுமையான, தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் என்று அழைக்கப்படுபவை நடைமுறைக்கு வந்து சேரும். சுதந்திரத்திற்குப் பிறகு நமது அரசாங்கங்கள் முறையாக ஆட்சி செய்து, பிரச்சினைகளை மனிதாபிமானத்துடனும் உறுதியுடனும் தீர்த்திருந்தால், ஆட்சியாளர்களை மக்களிடமிருந்து பாதுகாக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை எழுந்திருக்காது.
பிரச்சினைகளைத் தீர்க்க, துயருற்றவர்களை பலவந்தத்தாலும் வன்முறையாலும் நசுக்க வேண்டியதில்லை. மற்றவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதும் பாராட்டுவதும் பெரும் பயனைத் தரும். மனித உரிமைகளை ஒடுக்குவதற்கான ஒரு நயமான சொல்லாக இருக்கும் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றுவதும் அமல்படுத்துவதும் மூலம் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. மனிதர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் அனுதாபம் கொண்டு, தீர்வுகளைக் காண வேண்டும்.
கடமையே உந்து சக்தியாக இருக்கும் இடத்தில், சுய முன்னேற்றம், தற்பெருமை மற்றும் சுயநலம் ஆகியவற்றுக்கு இடமில்லை. நமது கடமைகளைச் செய்ய நாம் உறுதி கொள்ளும்போது, சுயநல ஆட்சிக்குப் பதிலாக சட்டத்தின் ஆட்சிக்குத் தானாகவே வழிவிடுவோம். அப்போது மனித உரிமைகள் மதிக்கப்படும்; தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் என்பன இயற்கையாகவே அழிந்துவிடும்.
கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு
நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், பி.ஏ. (இலண்டன்), எல்.எல்.பி. (இலங்கை)
கொழும்பு அரசு சட்டக் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியைப் பெற்றார். கொழும்பு சட்டக் கல்லூரியில், அவர் 1962–63 ஆம் ஆண்டில் சட்ட மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். படிப்பை முடித்த பிறகு, நீதித்துறைப் பதவிக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஹல்ஃப்ட்ஸ்டோர்ஃபில் பதினைந்து ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார். கொழும்பில் மேலதிக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட நீதிபதியாகவும், நீதித்துறை நடுவராகவும் பணியாற்றினார். 1988 ஆம் ஆண்டில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசரானார். 2001 இல் உச்சநீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.



