மலையகத்தில் நோய் தீர்த்தல் சடங்கு அல்லது கழிப்புச் சடங்கு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
33 நிமிட வாசிப்பு

மலையகத்தில் நோய் தீர்த்தல் சடங்கு அல்லது கழிப்புச் சடங்கு

April 15, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

மலையகத்தில் நிகழ்த்தப்படும் பல்வேறு சடங்கு முறைகளில், நோய் தீர்த்தல் பொருட்டு செய்யப்படும் சடங்குகள் மிக முக்கியமான இடத்தினைப் பெறுகின்றன. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து குடியேறிய காலத்தில் நீண்டதூர ஆபத்தான பயணம், கள்வர் பயம், காடுகளுக்கூடாகப் பயணம் செய்யும் போதும், பெருந்தோட்டங்களை அமைப்பதற்காகக் காடுகளை அழிக்கும்போதும் ஏற்பட்ட விபத்துகள், கொடிய மிருகங்கள், ஜந்துகள் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு, வெளியுலகத் தொடர்புகள் குறைவான தனிமையான வாழ்க்கை, மழை, வறட்சி, குளிர், கடுங்காற்று, வெள்ளம், தொற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு போன்ற தேவைகளின் நிமித்தம் சடங்கு முறைகளும் நோய் தீர்த்தல் மற்றும் கழிப்புச் சடங்குகளும் மலையகத்தில் நிலைபெறத் தொடங்கின.

இது புதிதாக உருவான ஒன்று அல்ல; தமிழகத்தில் மக்களின் வாழ்வியலோடு ஏற்கனவே வேரூன்றி இருந்தவையே. ஆனாலும் அதன் தேவையும் பயன்பாடும் மலையக மக்கள் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட போது அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் தீர்த்தல் சடங்கு அல்லது கழிப்புச் சடங்கு ஒருவரது உடல் மற்றும் மனப் பிணிகளுக்குக் காரணமான எதிர்மறை சக்திகளை அல்லது தோஷங்களை, நோய்களை அகற்றி, அவரை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் ஒரு பண்பாட்டு வழிமுறையாகும். இது பிராந்திய ரீதியாக மாறுபட்டாலும், பொதுவாக ‘கழித்தல்’ அல்லது ‘நீக்குதல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.

உடல்நலக் குறைவு என்பது தீய பார்வைகள், இயற்கையை மீறிய ஆற்றல்கள் அல்லது சூழலியல் பாதிப்புகளால் உண்டாவது என்ற நம்பிக்கையுடைய சமூகங்களில் இச்சடங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இச்சடங்கின் போது பாதிக்கப்பட்ட நபரைச் சுற்றி எலுமிச்சை, வேப்பிலை அல்லது குறிப்பிட்ட தானியங்களைச் சுற்றி எறிவதன் மூலம் அவரிடம் உள்ள பாதிப்புகள் அந்தப் பொருட்களுக்கு மாற்றப்படுவதாக நம்பப்படுகிறது. நவீன மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு, இத்தகைய சடங்குகள் ஒருவருக்குப் பெரும் உளவியல் ரீதியான பலத்தையும் பாதுகாப்பான உணர்வையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மானிடவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகளின் பின்னணியில், தீய சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் மனித முயற்சியானது ‘அபோட்ரோபிக் மேஜிக்’ (Apotropaic Magic) என்று அழைக்கப்படுகிறது. ‘அபோட்ரோபிக்’ என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியின் ‘அபோட்ரெப்போ’ (Apotrepo) என்ற சொல்லிலிருந்து உருவானது; இதற்கு ‘திருப்புதல்’ அல்லது ‘விலக்குதல்’ என்று பொருள். இது தீய கண்களின் பாதிப்பு, துரதிர்ஷ்டம் மற்றும் தீய ஆவிகளின் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து ஒரு நபரையோ, இடத்தையோ அல்லது பொருளையோ பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாதுகாப்பு மந்திரமாகும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாகரிகங்களில், மனிதன் தனது அச்சங்களை எதிர்கொள்ளவும், நிச்சயமற்ற தன்மைகளை சமாளிக்கவும் இத்தகைய தற்காப்பு முறைகளை உருவாக்கியுள்ளான்.

உதாரணமாக பண்டைய கிரேக்க (Ancient Greece) சமூகத்தில், மனிதர்களை தீய சக்திகளிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமான ஆன்மிக மற்றும் சமூக செயலாக இருந்தது. இச்சூழலில் மேற்குறிப்பிட்ட ‘அபோட்ரோபிக் மேஜிக்’ எனப்படும் பாதுகாப்பு மந்திரச் சடங்குகள் பரவலாக நடைமுறையில் இருந்தன. மேலும் தீய ஆவிகள், பொல்லாத பார்வை மற்றும் துரதிர்ஷ்டத்தைத் தடுக்க பல்வேறு வழிகளைப் பயன்படுத்தினர். அதில் முக்கியமானது தெய்வங்களை வேண்டுதல் ஆகும். குறிப்பாக Zeus, Apollo போன்ற தெய்வங்களுக்கு ‘தீமையைத் தடுத்திடும்’ (Alexicacus) என்ற பெயரில் வழிபாடு செய்யப்பட்டது.

மேலும், குழந்தைகளைப் பாதுகாக்க தாயத்துகள் (Amulets) அணிவிக்கப்பட்டன. வீடுகளிலும், மிருகங்களிலும் தாலிச்மான்கள் (Talismans) பொருத்தப்பட்டன. இவை அனைத்தும் தீய சக்திகளை விலக்க உதவும் என நம்பப்பட்டது. மேலும் கிரேக்கர்களின் நம்பிக்கையில், கண்வைத்தல் அல்லது ‘கண்ணேறு’ மிகப் பெரிய அபாயமாகக் கருதப்பட்டது. இதனைத் தவிர்க்க அவர்கள் சில விசித்திரமான நடைமுறைகளையும் பின்பற்றினர். உதாரணமாக, ஆடையின் மடிப்புகளில் துப்புதல், சிறுவர்களை பெண் குழந்தைகள் போல உடையணியச் செய்தல் போன்றவை தீய பார்வையைத் தடுக்க உதவும் என நம்பப்பட்டது. மேலும், வீடுகளின் நுழைவாயில்களில் அல்லது பொருட்களில் பாதுகாப்புச் சின்னங்கள் பதிக்கப்பட்டன. ‘Gorgon’ போன்ற பயமுறுத்தும் முகச்சின்னங்கள் தீய ஆவிகளைப் பயமுறுத்தி விலக்குகின்றன என கருதப்பட்டது.

பண்டைய மெசொப்பொத்தேமியாவில் நோய்கள் என்பன் அசுரர்களாலோ அல்லது கடவுளின் கோபத்தாலோ ஏற்படுபவை என்று கருதப்பட்டன. இதற்காக மதகுருமார்களை வரவழைத்து, மந்திரங்களை உச்சரித்து, களி மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளுக்கு நோயைக் கடத்தி, பின்னர் அவற்றை அழிக்கும் சடங்குகளைச் செய்தனர்.

அத்தோடு, எகிப்தியர்கள் தாயத்துகள் (Amulets) மற்றும் குறிப்பிட்ட நறுமணப் புகைகளைப் பயன்படுத்தித் தீய சக்திகளை விரட்டினர். அமேசான் பூர்வகுடிகளின் பண்பாட்டிலும் இவ்வாறான நோய்தீர்த்தல் சடங்குகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘ஷாமனிசம்’ (Shamanism) எனும் முறை பிரபலமானது. ஷாமன்கள் எனப்படும் ஆன்மிக வழிகாட்டிகள் தாள வாத்தியங்களை இசைத்து (Drumming Rituals), ஒருவித ஆழ்நிலை தியானத்திற்குச் சென்று, நோயாளியின் ஆன்மாவை அலைக்கழிக்கும் சக்திகளுடன் பேசி பிணியைத் தீர்ப்பதாக நம்பப்படுகிறது. புகையிலையின் புகையை நோயாளியின் மீது ஊதி தூய்மைப்படுத்தும் முறையும் இவர்களிடம் காணப்படுகிறது.

மேலும், சீனப் பாரம்பரியத்தில், ‘சி’ (Qi) எனப்படும் உயிர் ஆற்றலில் ஏற்படும் சமநிலையின்மையே நோய் எனக் கருதப்படுகிறது. இதைக் குணப்படுத்த, காகிதங்களில் எழுதப்பட்ட மந்திரங்களை எரித்து, அந்தச் சாம்பலை நீரில் கரைத்துக் குடிக்கும் அல்லது வீட்டின் வாயிலில் ஒட்டும் சடங்குகள் இன்றும் சில பகுதிகளில் புழக்கத்தில் உள்ளன.

அதைப்போல, ஆபிரிக்காவின் பல பகுதிகளில் நடனம் மற்றும் இசை மூலமாகத் தீய சக்திகளை வெளியேற்றும் ‘ஆவி ஓட்டும்’ (Exorcism) சடங்குகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக, ‘வூடூ’ (Voodoo) போன்ற வழிபாட்டு முறைகளில் பலி கொடுத்தல் மற்றும் உருவப் பொம்மைகளைப் பயன்படுத்தி நோயைக் கழிக்கும் முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அத்தோடு, பழங்கால ஐரோப்பாவில் ‘கண் திருஷ்டி’ போன்ற பாதிப்புகளுக்கு உப்பு மற்றும் புனித நீரைப் பயன்படுத்திக் கழிப்புச் சடங்குகள் செய்யப்பட்டன. கத்தோலிக்க மரபுகளில் சில குறிப்பிட்ட புனிதர்களின் பெயரால் மந்திரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பூசி நோய் தீர்க்கும் சடங்குகள் இன்றும் நிலவுகின்றன.

“தொட்டுணர முடியாத ஒரு தீய ஆற்றலை, தொட்டுணரக்கூடிய ஒரு பொருளுக்கு (உப்பு, காகிதம், பொம்மை அல்லது விலங்கு) மாற்றுவதன் மூலம் ஒருவருக்கு உடல் மற்றும் மனரீதியான விடுதலையை வழங்குவது” என்பது இந்த அனைத்துக் கலாசாரங்களிலும் காணப்படும் பொதுவான ஓர் அம்சம் ஆகும்.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், இது மிக ஆழமாகப் பதிந்த ஒரு மரபாக இருந்து, அன்று தொட்டு இன்று வரையில் பின்பற்றப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் தீமை நீக்கல் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல; அது ஒரு சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பாகவும் உள்ளது. கிராமங்களின் எல்லைகளில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்கள், ஆவிகளையும் தீய சக்திகளையும் ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

இச்சமூகம் தனது தொன்மையான வரலாற்றில் மருத்துவம், ஆன்மிகம் மற்றும் சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றை ஒருங்கே இணைத்த ஒரு தனித்துவமான வாழ்வியல் முறையைக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் தொடங்கி தற்கால நாட்டுப்புற மரபுகள் வரை, பிணி தீர்த்தல் மற்றும் பேயோட்டுதல் தொடர்பான குறிப்புகள் ஒரு தொடர்ச்சியான பண்பாட்டுப் பரிணாமத்தை வெளிப்படுத்துகின்றன.

மேற்குறிப்பிட்டது போல, நோய் என்பது வெறும் உடல் சார்ந்த உபாதையாகக் கருதப்படாமல், அது தெய்வீகக் குற்றம், தீய சக்திகளின் ஊடாட்டம் அல்லது கர்ம வினையின் வெளிப்பாடு எனப் பல்வேறு நிலைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இத்தகைய புரிதல்கள், அவற்றுக்கான தீர்வினைத் தேடும் போது, சடங்குகள், மந்திரங்கள் மற்றும் இயற்கை மருந்து முறைகளின் கலவையாக உருவெடுத்தன.

சங்க காலத் தமிழர்களின் வாழ்வில் ‘வெறியாட்டு’ என்பது மிக முக்கியமான ஒரு சடங்காகத் திகழ்ந்தது. வெறியாட்டு என்பது ஒரு சாதாரண வழிபாட்டு முறையாக இல்லாமல், உருவேறியாடும் சடங்காக விளங்குகிறது. இந்தச் சடங்கின் மையத்தில் ‘வேலன்’ எனப்படும் பூசாரி நிற்கிறார்; அவர் ஒரு நடுவராகச் செயற்படுகிறார்.

சடங்கு தொடங்கும் முன், ‘களம்’ எனப்படும் புனித இடம் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தச் செந்நிற அலங்காரம் குருதியை நினைவூட்டும் ஒரு சக்திவாய்ந்த சின்னமாக இருந்து, தெய்வீக சக்தியை அழைக்கும் மனநிலையை உருவாக்குகிறது. பின்னர், இசைக்கருவிகளின் ஒலியுடன் வேலன் ஆடத் தொடங்குகிறார்; இந்த ஒலியின் தாளமும் அதிர்வுகளும் அவரது உடல் மற்றும் மனதை ஒரு மயக்கநிலைக்கு இட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில்தான் ‘அணங்கு’ எனப்படும் அருவமான சக்தி அல்லது முருகன் தாமே வேலனின் உடலில் இறங்குவதாக மக்கள் நம்பினர். இதன் விளைவாக, வேலன் தனது இயல்பான சுயநிலையை இழந்து, தெய்வத்தின் உருவமாக மாறுகிறார். அவர் கூறும் வார்த்தைகள் ‘குறி’ எனப் புரிந்துகொள்ளப்பட்டு, நோய்கள், துன்பங்கள், பிரச்சினைகள் போன்றவற்றிற்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பலிப்பொருட்கள், குறிப்பாக தினை மற்றும் குருதி கலந்த படையல்கள், இச்சடங்கின் தீவிரத்தையும் தெய்வத்தை அமைதிப்படுத்தும் நோக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு இசை, உடல் அசைவு மற்றும் கூட்டு நம்பிக்கை ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து, வெறியாட்டை ஓர் உருவேறியாடும் சடங்காக மாற்றுகின்றன. இதில் வேலன் ஒரு சாதாரண மனிதனாக இல்லாமல், தற்காலிகமாக தெய்வீக சக்தியின் பிரதிபலிப்பாக மாறுகின்றார்.

சங்க காலத்திற்குப் பிந்தைய காலத்தில், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில் பேய்கள் மற்றும் பூதங்கள் குறித்த கருத்துகள் மிகவும் விரிவான சமூகப் பரிமாணத்தைப் பெற்றன. இவை வெறும் அச்சமூட்டும் உருவங்களாக மட்டுமன்றி, சமூகத்தின் தார்மீக ஒழுக்கத்தைக் காக்கும் காவல் தெய்வங்களாகவும் உருமாற்றம் பெற்றன. அதில் முக்கியமானது சதுக்கப் பூதம். இது நீதியையும் ஒழுக்கத்தையும் காக்கும் சக்தி எனக் கருதப்பட்டது. புகார் நகரத்தின் முக்கியச் சந்திகளில் சதுக்கப் பூதம் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இப்பூதம் சோழ மன்னன் முசுகுந்தனுக்கு உதவத் தேவருலகிலிருந்து இந்திரனால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது ஒரு நீதிபதியின் பணியைச் செய்தது. சமூகத்தில் எவராவது தவறு செய்தால், அல்லது தவறு செய்ய நினைத்தாலே இப்பூதம் அவர்களைத் தண்டிக்கும் என்ற நம்பிக்கை காணப்பட்டது. இத்தகையவர்களைச் சதுக்கப் பூதம் பிடித்து, அடித்து, கடித்துத் தின்னும் என்று மக்கள் நம்பினர். பூதத்தின் சிலை ஊரின் நடுவே வைக்கப்பட்டிருந்தது; குழந்தைகளுக்கு அறநெறிகளைப் புகட்டவும், பெரியவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழவும் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

மேலும், மணிமேகலை காப்பியத்தில் வரும் ‘சக்கரவாளக் கோட்டம்’ பேய்கள் மற்றும் சுடுகாட்டுச் சூழலை வர்ணிப்பதாக அமைகிறது. இது புகார் நகரத்தின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சுடுகாட்டுக் கோவில் ஆகும். இக்கோட்டத்தைச் சுற்றிப் பேய்கள் நடமாடும் அரிய இடங்கள் இருந்தன. இங்குள்ள மரங்களில் உயிர்க்கடன் இறுத்தவர்களின் தலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன என்று சீத்தலைச் சாத்தனார் விவரிக்கிறார்.

சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள பேய்கள் மற்றும் தெய்வங்கள் பௌத்த அறக்கோட்பாடுகளுடன் இணைத்துப் பேசப்படுகின்றன. சம்பாபதி என்ற தெய்வம் இக்கோட்டத்தின் முதன்மைத் தெய்வமாக விளங்கியது. இறந்த தன் மகனை மீட்டுத் தரக் கோரிய ஒரு தாயிடம், “ஊழி முதல்வனால் மட்டுமே இறந்த உயிரைத் தர முடியும்” என்று கூறி நிலையாமையை உணர்த்தும் காட்சி, பேய் மற்றும் பூதக் கதைகளின் வழியாகப் பௌத்த தத்துவத்தை விளக்குவதாக அமைகிறது.

இதன் தொடர்ச்சியில் பேணப்பட்டும், அடுத்த சந்ததியினருக்கும் கடத்தப்பட்டு வந்த கூறுகளே நாம் காணும் சடங்கு முறைகள். இதன் அடிப்படையில் மலையக சமூகத்தின் வேர்களான தமிழகத்தின் நாட்டுப்புற மரபுகளை நோக்கும் போது, தமிழ் இலக்கியங்கள் காட்டும் நோய் தீர்த்தல் முறைகளின் நேரடித் தொடர்ச்சியை இன்றும் காணலாம்.

கிராமப்புறங்களில் நிலவும் ‘சாமியாடுதல்’ மற்றும் ‘பேயோட்டுதல்’ சடங்குகள் சமூக உளவியலின் வெளிப்பாடுகளாகத் திகழ்கின்றன. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சமூகத்தால் ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்டவர்கள் கிராமப்புறங்களில் ‘பேய் பிடித்தவர்களாக’ கருதப்படுகின்றனர். இவர்களைக் குணப்படுத்தப் பூசாரிகள் பேயோட்டுதல் சடங்குகளை நடத்துகின்றனர். உடுக்கை அடித்து, வேப்பிலை கொண்டு தாக்கி, ஆவேசமாகப் பேசுவதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் அடிமனதில் உள்ள அழுத்தங்கள் வெளியேற்றப்படுகின்றன. இது ஒருவகையான ‘உணர்ச்சி வடிகாலை’ (Catharsis) அவர்களுக்கு வழங்குகிறது. சாமியாடுபவர்கள் ஒரு நிலையில் தங்களை மறக்கிறார்கள். இந்த நிலை, சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்ட ‘வெறியாட்டின்’ தற்கால வடிவமே ஆகும்.

மேலும், அம்மை நோய் போன்ற தொற்றுநோய்கள் பரவும்போது, மக்கள் அதை ‘மாரித் தாயின்’ அருளாடலாகக் கருதி மாரியம்மன் வழிபாட்டை மேற்கொள்கின்றனர். வேப்பிலை கட்டுதல் போன்ற சடங்குகள் கிருமி நாசினியாகவும், அதே சமயம் மக்களின் அச்சத்தைப் போக்கும் ஆன்மிகச் செயற்பாடாகவும் அமைகின்றன.

மேலும், தென் தமிழகத்தில் ‘சுடலை மாடன்’ வழிபாடு மிகவும் முக்கியமானது. ‘சுடலை’ என்பது சுடுகாட்டைக் குறிக்கும்; ‘மாடன்’ என்பது தலைவனைக் குறிக்கும். இத்தெய்வம், மயானங்களில் உலவும், அலைந்து திரியும் ஆன்மாக்களையும் தீய சக்திகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது என நம்பப்படுகிறது. சுடலை மாடனின் சன்னதிகள் பொதுவாக திறந்தவெளியில், ஊரின் ஒதுக்குப்புறத்தில் அல்லது மயானங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும். பூசாரிக்கு அருள் வந்து ஆடும்போது, அவர் மயானத்திற்குச் சென்று தீய ஆவிகளை வேட்டையாடுவதாகப் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. அத்தோடு, பிற காவல் தெய்வங்களான ஐயனார், கருப்பசாமி, மாரியம்மன் மற்றும் பேச்சியம்மன் ஆகியோரும் நோய் தீர்க்கும் தெய்வங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில், மலையகத்தின் நோய் தீர்த்தல் சடங்கு மற்றும் கழிப்புச் சடங்குகளை விளக்குவது பொருத்தமானதாகும். மலையகத்தின் நிலப்பரப்பு என்பது வெறும் தேயிலைச் செடிகளால் ஆன பசுமைப் போர்வை அல்ல; அது இருநூறு ஆண்டுகால இடப்பெயர்வு, கண்ணீர், அடக்குமுறை மற்றும் அதிலிருந்து மீண்டெழுந்த ஒரு சமூகத்தின் ஆழமான பண்பாட்டு வேர்களைக் கொண்டது. இச்சமூகத்தின் வாழ்வியலில் நோய் தீர்த்தல் என்பது வெறும் உடலியல் சார்ந்த சிகிச்சை முறையல்ல; அது ஒரு கூட்டு உளவியல் செயல்முறையாகவும், தீய சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் ஒரு பண்பாட்டுப் போராட்டமாகவும் பரிணமித்துள்ளது. குறிப்பாக, பேயோட்டல், எலுமிச்சைக் கனி வெட்டிக் கழித்தல் மற்றும் பல்வேறு கிராமிய தெய்வ வழிபாட்டுச் சடங்குகள் மலையகத் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தை இன்றும் பறைசாற்றுகின்றன. இச்சடங்கு முறைகளில் ஐந்து வகையான சடங்கு முறைகள் மலையகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. அவையாவன, 

  1. சாமி பார்த்தல் (கட்டுச் சொல்லுதல்)
  2. பேயோட்டுதல் (பேய் விரட்டல்)
  3. நூல் போடுதல் (தாயத்துக் கட்டல்)
  4. செய்வினையெடுத்தல்
  5. தேசிக்காய் வெட்டுதல் (வெட்டிக் கழித்தல்)

சாமி பார்த்தல் (கட்டுச் சொல்லுதல்) சடங்கு

கட்டுச் சொல்லுதல் (Fortune-telling or Soothsaying) என்பது ஒருவரின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கான தீர்வை தெய்வத்திடம் கேட்டுச் சொல்லும் ஒரு முறையாகும். பொதுவாக இது ‘குறி கேட்டல்’ என்றும் அழைக்கப்படும். ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் ‘அருள்வாக்கு’ச் சொல்லும் கோடாங்கி, குறிகாரி (குறி சொல்லும் பெண்) அல்லது பூசாரிகள் இதனைச் செய்வார்கள். தீராத நோய், குடும்பப் பிரச்சினை, தொழில் நஷ்டம் அல்லது செய்வினை போன்ற தடைகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்குப் பரிகாரம் தேடுவது இதன் நோக்கமாகும்.

அத்தோடு, உருவேறி வாக்குச் சொல்லுதல் (Trance/ Possession) என்பது கட்டுச் சொல்லுதலின் ஒரு தீவிரமான நிலையாகும். இதை ‘அருளாடுதல்’ அல்லது ‘சாமி ஆடுதல்’ என்றும் கூறுவர். ஒரு நபர் தன்னை மறந்து, ஆவேசம் கொண்டு, தெய்வத்தின் சக்தியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் பேசும் பேச்சு ‘வாக்கு’ எனப்படும். உடுக்கை அல்லது பம்பை போன்ற கருவிகளின் இசை முழங்க, தெய்வத்தின் பாடல்களைப் பாடும் போது, அந்தப் பக்தரின் உடலில் தெய்வம் ‘உருவேறி’ வருவதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் இருப்பவர் இயல்பான மனிதராக இருக்க மாட்டார்; அவரது குரல் மாறும், கண்கள் சிவக்கும், உடல் அதிரும். அவர் சொல்லும் சொற்கள் தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும்.

கட்டுச் சொல்லும் சடங்கு தொடங்கும் முன், அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டு தெய்வீகச் சூழல் உருவாக்கப்படும். பொதுவாக இது ஒரு சிறு தெய்வக் கோவிலிலோ அல்லது சாமியாடியின் வீட்டிலோ நடைபெறும். பூசாரி ஒரு சாக்கினை அல்லது பாய் ஒன்றை கீழே விரித்து, வந்தவர்களை அமரச் செய்து, முதலில் தெய்வங்களின் படங்கள் மற்றும் தடி உடுக்கை இருக்கும் இடத்திற்கு முன் உள்ள விளக்கை ஏற்றி, கற்பூரம் ஏற்றி, சுருக்குப் பையில் இருந்து சோழிகளை எடுத்து உருட்டி குறி சொல்லுவார்.

சோழி (கௌரி சிப்பி) போன்றவற்றை பூசாரி தரையில் அல்லது குறிப்பிட்ட தட்டில் உருட்டி, அவை விழும் விதம், அமைப்பு, முகப்பின் திசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு குறி கூறுவார். இந்தக் குறிகள் மூலம் நோய்க்கான தீர்வு, குடும்பப் பிரச்சினைகள், எதிர்கால நிகழ்வுகள், தீய சக்திகளின் தாக்கம் போன்றவற்றை விளக்கி, அதற்கான பரிகாரங்களையும் கூறுவார்.

இச்சடங்கு மக்கள் நம்பிக்கைகளோடு ஆழமாக இணைந்ததாக இருந்துவருகின்றது. குறிகேட்க வந்தவர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் மற்றும் காணிக்கையை ஒரு தட்டில் வைப்பார்கள். பின்னர் தெய்வத்தை அழைக்கும் நிகழ்வு தொடங்கும். பூசாரி தனக்குப் பிடித்தமான தெய்வத்தை—உதாரணமாக அங்காளம்மன், காளி, மாரியம்மன் அல்லது சுடலைமாடன்—வேண்டிப் பாடுவார். பாடலைப் பாடப் பாட, அந்தத் தெய்வத்தின் உருவம் அப்பூசாரியின் உடலில் மெதுவாக ஏறும். அவ்வுருவேற்றத்தை அப்பூசாரியின் உடலில் ஏற்படும் அசைவு மற்றும் செயல் மாற்றங்களின் மூலம் அறியலாம். உடல் நடுங்கும்; அது கடவுளின் தன்மைக்கு ஏற்ற வகையில் மாறும். முழுமையாக தெய்வம் உருவேறிய நிலையில், சில நேரங்களில் ஆவேசத்தைக் காட்ட சாமியாடி சாட்டையால் அடித்துக்கொள்வது அல்லது தீப்பந்தங்களை ஏந்துவது போன்ற செயல்களைச் செய்வார்.

பின்னர், வந்திருப்பவர் தன் குறையைச் சொல்வதற்கு முன்பே, சாமியாடியே அதைச் சொல்ல முயல்வார். உதாரணமாக: “உன் வீட்டில் ஒரு கறுப்பு ஆடு நேர்த்திக்கடன் பாக்கி இருக்கிறது”, “உன் வீட்டில் இந்தப் பிரச்சினை இருக்கிறது”, “இந்தத் தெய்வத்திற்கு நீ நேர்த்திக்கடன் செலுத்தவில்லை” போன்ற தகவல்களைச் சொல்லுவார். எதனால் இந்த நோய் குறிப்பிட்ட நபரைத் தொற்றியது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பல விடயங்களைப் பாடியும் சொல்லுவார்; அதே நேரத்தில் பாட்டை நிறுத்தி உரையாடலாகவும் கூறுவார்.

சாதாரணமாக பயத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு என்றால், கட்டுச் சொல்லி விபூதி வாங்கி பூசினாலே நோய் சரியாகிவிடும் எனக் குறிப்பிடுகின்றனர். வலி இருக்கும் இடங்களில் விபூதியைப் பூசினாலும் வலி தீரும் என்பதும் நம்பிக்கையாகப் பேணப்படுகிறது.

வாக்குச் சொல்லி முடித்த பிறகு, மெல்ல மெல்ல இசை குறைக்கப்படும். சாமியாடியின் முகம் மற்றும் கை கால்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, அவர் சாதாரண நிலைக்குக் கொண்டுவரப்படுவார். இந்த நிலைக்குப் பின், தனக்கு என்ன நடந்தது அல்லது தான் என்ன பேசினோம் என்பது சாமியாடிக்கே தெரியாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாகும்.

இது முழுக்க முழுக்க மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. மன ரீதியான துன்பத்தில் இருப்பவர்களுக்கு, தெய்வமே நேரில் வந்து வழி காட்டுவது போன்ற உணர்வைத் தருவதால், இது ஒரு வகை ‘மனவியல் ஆற்றுப்படுத்துதலாகவும்’ (Counseling) அமைகிறது.

வாக்குச் சொல்லும் போது பெரும்பாலும் ஆடு அல்லது கோழி பலியிடுதல், முடி காணிக்கை, பொங்கல் வைத்தல் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் போன்ற பரிகாரங்கள் முன்மொழியப்படும். அறிவியல் ரீதியாக நோக்கும்போது, இது ஒருவகை ‘தன்னிலை மறந்த நிலை’ (Altered state of consciousness) என்று விளக்கப்படுகிறது. அதீத பக்தி மற்றும் இசை முழக்கங்கள் ஒருவரின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, அவரை ஒருவித மயக்க நிலைக்கு அல்லது ஆவேச நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

இருப்பினும், மலையக சமூகக் கட்டமைப்பில் பயத்தைப் போக்குவதற்கான கருவியாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்காலத்தில் இது ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.

பேயோட்டுதல் (பேய் விரட்டல்)

பேயோட்டும் சடங்கு (Exorcism) ‘கட்டுச் சொல்லுதல்’ சடங்கின் அடுத்த கட்டமாகும். ஒரு நபரைத் தீய சக்திகள் அல்லது ஆவிகள் பிடித்துள்ளன என்று நம்பப்படும் போது, அவற்றை விரட்ட நடத்தப்படும் இந்தச் சடங்கு மிகவும் தீவிரமானது.

முதலில், ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்றால், அந்த நபருக்குப் பிடித்துள்ளது நோயா அல்லது பேயா என்பதைப் பூசாரி கண்டறிவார். பாதிக்கப்பட்ட நபர் இயல்புக்கு மாறாகப் பேசுவது, கண்கள் நிலைகுத்தி இருப்பது, அதிக பலத்துடன் செயற்படுவது போன்றவை ‘பேய் பிடிப்பதன்’ அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன. பூசாரி ஒரு கைப்பிடி வேப்பிலையை வைத்து அல்லது நூலால் அளந்து பார்த்து பாதிப்பை உறுதி செய்வார்.

பின்னர், சடங்கு தொடங்கும் முன் அந்த இடத்தை மந்திரங்களால் ‘கட்டுவார்கள்’. தீய சக்தி தப்பிச் செல்லாமல் இருக்கவும், மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தரையில் கோலம் இட்டு (மந்திரச் சக்கரம்), அதன் நடுவில் பாதிக்கப்பட்ட நபரை அமர வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, கருகமணி மற்றும் சில வகை வேர்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படும்.

அடுத்து முக்கியமான நிகழ்வு ஆவியை வரவழைத்தல் (Manifestation) ஆகும். ஆவி அடங்கி இருந்தால், அதை முதலில் பேச வைக்க வேண்டும். இதற்காகப் பூசாரி உடுக்கை முழங்கி தீவிரமான பாடல்களைப் பாடுவார். பாதிக்கப்பட்ட நபரின் மீது மஞ்சள் நீர் அல்லது விபூதியை வீசுவார். சில நேரங்களில், ஆவியை ஆவேசமடையச் செய்யப் புகையிலை அல்லது சாம்பிராணிப் புகை போடப்படும்.

பின்னர், ஆவி ஆவேசமாக ஆடத் தொடங்கும்போது, பூசாரி அதனிடம் கேள்விகளை எழுப்புவார். உதாரணமாக, “நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இவனை ஏன் பிடித்தாய்?” என்று அதட்டுவார். ஆவி பதில் சொல்ல மறுத்தால், சாட்டையாலோ அல்லது வேப்பிலைக் கொத்தாலோ அடிப்பது போன்ற செயல்கள் மூலம் ஆவியை அச்சுறுத்துவார். “என்ன கொடுத்தால் நீ இவனை விட்டுப் போவாய்?” என்று பேரம் பேசுவார். ஆவி வெளியேறச் சம்மதித்தவுடன், அதற்கு அடையாளமாகச் சில செயல்கள் செய்யப்படும்:

  • முடி வெட்டுதல்: பாதிக்கப்பட்ட நபரின் ஒரு சிறு முடிக் கற்றையை வெட்டி, ஒரு மரத்தில் ஆணி அடித்து அறைவார்கள். இதன் மூலம் ஆவி அங்கே கட்டப்படுவதாக நம்பப்படுகிறது.
  • எலுமிச்சை அறுத்து திசைகளில் வீசுதல்: தீய சக்தி பரவாமல் தடுக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.
  • முட்டை அல்லது பலி: தீய சக்திக்கு உணவாக முட்டை அல்லது கோழி பலி கொடுக்கப்பட்டு, அது அந்த நபரை விட்டு வெளியேற்றப்படும் எனக் கருதப்படுகிறது.

ஆவி வெளியேறிய பிறகு, அந்த நபர் மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்படுவார். வீட்டுக்குள் நுழையும் முன் ஆலத்தி எடுக்கப்படும் அல்லது ஒரு குடம் தண்ணீரைத் தலைக்கு ஊற்றி தூய்மைப்படுத்துவார்கள். பின்னர் காப்புக் கயிறு (மந்திரிக்கப்பட்ட கயிறு) மணிக்கட்டில் கட்டப்படும்.

அறிவியல் பூர்வமாக நோக்கும்போது, ‘பேய் பிடித்தல்’ என்பது பெரும்பாலும் மனநலக் கோளாறுகள் மற்றும் ஆழ்மன அழுத்தத்தின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இதை ‘பேயோட்டுதல்’ மூலம் தீர்க்க முயல்வது, சில நேரங்களில் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இத்தகைய சூழல்களில் மருத்துவ ஆலோசனையே முதன்மையானது. ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் சடங்கு முறையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்; மாறாக மூட நம்பிக்கைகளை வளர்ப்பது நோக்கமல்ல என்பதை குறிப்பிடுவதும் அவசியம்.

நூல் போடுதல் (தாயத்துக் கட்டல்)

மலையகத்தில் தாயத்துக் கட்டுதல், யந்திரம் போடுதல் அல்லது நூல் போடுதல் என்பது ஒருவருடைய உடல் மற்றும் மனதைப் பாதுகாக்கும் ‘பாதுகாப்புக் கவசம்’ (Protection Ritual) எனக் கருதப்படுகிறது. தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் நோய்களில் இருந்து ஒருவரைக் காக்க இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.

இது, சாமி பார்த்தல் அல்லது கட்டுச் சொல்லலின் பின்னர், குறிப்பிட்ட நோய்வாய்ப்பட்டவருக்கு பாதுகாப்புச் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும். நூல் போடுதல் அல்லது தாயத்துப் போடுவதற்கு பூசாரி பரிந்துரைத்து, அதற்கான ஒரு நாளைத் தெரிவு செய்து கொடுப்பார். சில நேரங்களில், ஓர் ஊரில் உள்ள பூசாரியிடம் பல ஊர்களிலிருந்து மக்கள் வந்து சாமி பார்ப்பதுண்டு; அவ்வாறு இருக்கும் போது, ஒரு நாளில் அனைத்தையும் செய்ய முடியாத சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. இதனால் தெரிவு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட நாளில், சாமி பார்த்தல் நிகழ்வு மீண்டும் இடம்பெறும்; அது முடிந்தபின் பூசாரியால் யந்திரம் எழுதப்படும். யந்திரம் என்பது செம்பு, பித்தளை அல்லது வெள்ளித் தகடுகளில் வரையப்படும் ஒரு நுட்பமான வடிவியல் வரைபடம் (Geometric Diagram) ஆகும். குறிப்பிட்ட நட்சத்திரம் அல்லது திதியில், பூசாரி ஒரு கூர்மையான கருவியைக் கொண்டு தகட்டில் மந்திர எழுத்துகளையும் சக்கரங்களையும் வரைவார். வரைந்த பிறகு, அந்த யந்திரத்திற்கு உயிர் கொடுப்பதாக நம்பப்படும் பூஜைகள் செய்யப்படும். இதில் தூபம், தீபம் காட்டி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மூல மந்திரங்கள் ஜபிக்கப்படும். யந்திரம் தகடாக மட்டும் போடப்படுவதில்லை; சில நேரங்களில் அது ஒரு சிறிய உருளை வடிவக் குழாய்க்குள் (தாயத்து) வைக்கப்படும். யந்திரத் தகடுடன் சேர்த்து, சில குறிப்பிட்ட மூலிகைகள், வேர்கள் அல்லது மந்திரிக்கப்பட்ட விபூதி உள்ளே வைக்கப்படும். பின்னர் அதன் வாய்ப்பகுதி மெழுகு அல்லது உலோகத்தால் மூடப்படும். இது கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டப்படும்.

தாயத்து அணிய விரும்பாதவர்கள் அல்லது எளிய பாதுகாப்பு வேண்டுபவர்களுக்கு ‘மந்திரக் கயிறு’ அல்லது நூல் கட்டப்படும். பொதுவாக கருப்பு, சிவப்பு அல்லது மஞ்சள் நிற நூல்கள் பயன்படுத்தப்படும். நூலில் மந்திரங்களை ஓதிக்கொண்டே குறிப்பிட்ட எண்ணிக்கையில் (3, 5, 7 அல்லது 9) முடிச்சுகள் இடப்படும். ஒவ்வொரு முடிச்சும் ஒரு தேவதையையோ அல்லது சக்தியையோ குறிப்பதாகக் கருதப்படும்.

இந்தச் சடங்கு பொதுவாகப் பின்வரும் முறையில் நடைபெறும். யாருக்காக இது செய்யப்படுகிறதோ, அவருடைய பெயரைச் சொல்லி பூஜையைத் தொடங்குவார்கள். தாயத்து அல்லது நூலை மஞ்சள் நீரால் கழுவி, அதன் மேல் சந்தனம், குங்குமம் இடுவார்கள். பின்னர் ‘உருவேற்றுதல்’ நடைபெறும்; இதுவே மிக முக்கியமான பகுதி.

பூசாரி கையில் அந்தத் தாயத்தை வைத்துக்கொண்டு, நூற்றுக்கணக்கான முறை மந்திரங்களை ஓதுவார். அப்போதுதான் அந்தப் பொருளுக்கு சக்தி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதில் பல்வேறு தெய்வங்கள் அழைக்கப்படுகின்றன. அனைத்து தெய்வங்களின் சாட்சியாக, பாதிக்கப்பட்ட நபரின் வலது மணிக்கட்டு, கழுத்து அல்லது இடுப்பில் அதைக் கட்டுவார்கள். கட்டும் போது, “இந்த நபரை எவ்வித தீய சக்திகளும் நெருங்கக் கூடாது” என்று ஆணை இடுவார்கள். அந்த வகையில், நோய் தீர்த்தல் மட்டுமின்றி இன்னும் பல நோக்கங்களுக்காகவும் தாயத்துகள் போடப்படுகின்றன. அதன் வகைப்பாடுகளை நோக்கும் போது:

  • திருஷ்டி தாயத்து: பிறர் கண்ணேற்றிலிருந்து பாதுகாப்பு
  • நோய் தாயத்து: தீராத நோய்களைப் போக்க
  • குழந்தை தாயத்து: குழந்தைகள் திடுக்கிட்டு அழுதல் அல்லது அடிக்கடி அழுதல் போன்ற நிலைகளுக்கு
  • தொழில் தாயத்து: தொழில் வளர்ச்சி பெறுவதற்காக

சில நேரங்களில் நூல் மாத்திரம் மந்திரித்து கட்டப்படுகின்றது; அல்லது கருப்பு நூலில் வசம்பு கோர்த்துக் கட்டும் வழக்கமும் உண்டு. தொழில் விருத்திக்காக சில இடங்களில் வீடுகளிலும் தொழில் நிலையங்களிலும் செப்புத்தகட்டில் வரையப்பட்ட யந்திரங்களை வைக்கும் முறையும் காணப்படுகின்றது.

தாயத்து அணிந்த பிறகு சில ‘கட்டுப்பாடுகள்’ அல்லது ‘பத்தியம்’ கடைப்பிடிக்கப்பட வேண்டியது கட்டாயமானது என வலியுறுத்தப்படுகிறது. அதாவது:

  • மரண நிகழ்வுகளுக்கு (துக்க வீடுகள்) செல்லும் போது பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுதல்
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் (உதாரணமாக 48 நாட்கள்) தாயத்திற்கு மீண்டும் உருவேற்றுதல்
  • தாயத்து அசுத்தமடையாமல் பாதுகாத்தல்

ஆய்வாளர்களின் பார்வையில், இது ஒரு நபருக்குத் தன்னம்பிக்கையையும் மனோதிடத்தையும் வழங்கும் ஒரு நம்பிக்கை சார்ந்த சிகிச்சை (Placebo Effect) முறையாகவும் பார்க்கப்படுகிறது. உருவேறி வாக்குச் சொல்லுதல் முதல் தாயத்துக் கட்டுதல் வரை நாம் பார்த்த இந்தச் சடங்குகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகும்.

செய்வினையெடுத்தல்

‘செய்வினை எடுத்தல்’ அல்லது ‘பில்லி சூனியம் அகற்றுதல்’ என்பது ஒருவருக்கு யாரோ ஒருவரால் ஏவப்பட்ட எதிர்மறை சக்திகளை (Black Magic) நீக்கும் சடங்காகும். இது மிகவும் நுணுக்கமான மற்றும் பயம் கலந்த ஒரு சடங்கு முறையாகப் பார்க்கப்படுகிறது. இதன் நிகழ்த்து முறையை நோக்கும் போது, முதலாவதாக பூசைக்கான பொருட்களை பூசாரியும் அவரது உதவியாளரும் தயார் செய்வார்கள். பின்னர் செய்வினை இருப்பதனைக் கண்டுபிடிக்கும் நிகழ்வு தொடங்கும். செய்வினை இருப்பதைக் கண்டறிய பூசாரி சில முறைகளைக் கையாளுவார். பாதிக்கப்பட்ட நபரின் உயரத்தை ஒரு நூலால் அளப்பார். மந்திரம் ஓதிய பிறகு அந்த நூல் நீளமாகவோ அல்லது குறுகியதாகவோ மாறினால் செய்வினை இருப்பதாக நம்பப்படும் (இது ஆரம்ப காலத்தில் பயன்பாட்டில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது).

மேலும், வெற்றிலையின் நரம்புகள் மற்றும் அதில் தெரியும் குறிகளைக் கொண்டு எவ்வகையான வினை செய்யப்பட்டுள்ளது என்பதைக் கணிப்பார். இது பெரும்பாலும் நள்ளிரவு நேரத்திலோ அல்லது அமாவாசை போன்ற நாட்களிலோ, ஊரின் ஒதுக்குப்புறமான இடத்திலோ அல்லது பாதிக்கப்பட்டவர் வீட்டிலோ நடைபெறும்.

பூசாரியால் தரையில் அரிசி மாவு, கரித்தூள் மற்றும் கோலப்பொடி கொண்டு ‘மந்திரச் சக்கரம்’ வரையப்படும். பின்னர் ஒரு செம்புக் கலசத்தில் புனித நீர், மா இலை மற்றும் தேங்காய் வைத்து தெய்வத்தை ஆவாஹனம் செய்வார்கள். இது ‘கும்பம் வைத்தல்’ எனப்படுகிறது. பூசாரி தங்களுக்கு ஏற்ற வகையில் கும்பங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பார்.

பின்னர், பாதிக்கப்பட்ட நபரை அந்தச் சக்கரத்தின் நடுவில் அமர வைத்து, பூசாரி மந்திரங்களை ஓதுவார். வேப்பிலையை நபரின் மீது விசிறி, தீய சக்தியை வெளியே வரத் தூண்டுவார். மிளகாய் வத்தல், வெண்கடுகு மற்றும் சில மூலிகைகளை நெருப்பில் போட்டுப் புகை எழுப்புவார்கள். செய்வினை இருந்தால், அந்த நபர் நெடியை உணராமல் ஆவேசமாக ஆடுவார்.

செய்வினை என்பது ஏதோ ஒரு பொருளை (முடி, நகம், எலும்பு, பொம்மை) மண்ணில் புதைத்து வைப்பதன் மூலம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. அதை எடுப்பதற்கு இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன:

  • பூசாரி உருவேறி ஆடி, குறிப்பிட்ட இடத்தைக் காட்டி, அங்கே தோண்டி அந்தப் பொருளை எடுப்பது
  • கும்பத்தில் இழுத்தல் – மந்திர வலிமையால் அந்தத் தீய சக்தியை ஓர் எலுமிச்சை அல்லது தேங்காய்க்குள் ஈர்த்து, அதை செயலிழக்கச் செய்வது

எதிர்மறை ஆற்றலை முழுமையாக நீக்க ‘கழிப்பு’ச் செய்யப்படும். குங்குமம் தடவிய பூசணிக்காயைச் சுற்றி திசையெங்கும் சிதறும்படி உடைப்பார்கள். சில இடங்களில் கோழி அல்லது ஆடு பலி கொடுக்கப்பட்டு, அந்த ரத்தத்தை ஒரு பிடி சோற்றில் பிசைந்து ‘திசைக்காவல்’ தெய்வங்களுக்கு வழங்குவார்கள்.

செய்வினை நீக்கப்பட்ட பிறகு, அந்த நபர் மீண்டும் பாதிக்கப்படாமல் இருக்க கையில் மந்திரக் கயிறு கட்டப்படும். வீட்டின் வாசல் அல்லது நான்கு மூலைகளில் மந்திரிக்கப்பட்ட செப்புத் தகடுகளைப் புதைத்து வைப்பார்கள்.

ஆய்வாளர்கள் இதனை ‘நம்பிக்கை சார்ந்த மனநலச் சிகிச்சை’ எனக் கருதுகின்றனர். ஒருவருக்கு யாரோ தீங்கு செய்துவிட்டார்கள் என்ற பயம் இருக்கும் போது, இத்தகைய சடங்குகள் அவருக்குத் தீமை நீங்கிவிட்டது என்ற மனநிம்மதியைத் தந்து, உடல் நலத்தைத் தேற்ற உதவுகின்றன என்பது மக்களின் நம்பிக்கை.

தேசிக்காய் வெட்டுதல் (வெட்டிக் கழித்தல்)

மலையகத் தமிழ் மக்களின் பண்பாட்டில் எலுமிச்சம் கனி வெட்டிக் கழித்தல் என்பது உடல் மற்றும் மனரீதியான பிணிகளைப் போக்கும் ஒரு முக்கியமான ‘நிவாரணச் சடங்காக’ (Healing Ritual) விளங்குகிறது. குறிப்பாக தீய சக்திகளின் பாதிப்பு அல்லது மருத்துவத்தால் எளிதில் குணப்படுத்த முடியாத நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ‘கழிப்புச் செய்தல்’ எனும் நோக்கில் இச்சடங்கு முன்னெடுக்கப்படுகிறது. மலையகச் சூழலில் வாழும் மக்களிடையே நிலவும் ஆழமான நம்பிக்கைகளின்படி, எலுமிச்சம் பழம் என்பது எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் ஒரு கருவியாகப் பார்க்கப்படுகிறது. இச்சடங்கின் செயல்முறை மிகவும் தனித்துவமானது.

முன்பு சாமி பார்த்தலின் போது கட்டுச் சொல்லும் பூசாரி குறிப்பிட்ட நபருக்கு தேசிக்காய் வெட்ட வேண்டும் என்று வாக்கு சொன்னால், இச்சடங்கு நிகழ்த்தப்படும். அதன்படி, பாதிக்கப்பட்ட நபரை கிழக்கு நோக்கி அமரவைத்து, பூசாரி மந்திரங்களை ஓதியபடி எலுமிச்சம் பழத்தை அந்த நபரின் தலை முதல் கால் வரை வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் சுற்றிக் கழிப்பார். இதன் மூலம், அந்த நபரின் உடலில் தங்கியிருப்பதாக நம்பப்படும் தீய சக்திகள் அனைத்தும் அந்தப் பழத்திற்குள் கடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது. பின்னர், அந்தப் பழத்தை கத்தியால் இரண்டாக வெட்டி, அதன் உட்புறத்தில் குங்குமத்தைத் தடவி, ஊர்ச் சந்தி அல்லது ஆள் நடமாட்டமற்ற இடங்களில் எறிந்து விடுவார்கள். பழத்தை வெட்டி குங்குமம் தடவுவது என்பது பண்டைய உயிர்ப்பலி முறைக்கு மாற்றாக அமையும் ஓர் ‘அடையாளப் பலி’ (Symbolic Sacrifice) ஆகும்.

மானிடவியல் ரீதியாகப் பார்க்கும் போது, இச்சடங்கு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படும் அன்றாட அழுத்தங்கள், பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அச்சம் ஆகியவற்றிற்கு ஒருவித ‘உளவியல் சிகிச்சை’ (Psychological Healing) போலச் செயற்படுகிறது. இதனை வெறும் மூடநம்பிக்கையாகச் சுருக்காமல், மலையக மக்களின் வாய்மொழி மரபுகள், சமூக ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தின் ஒரு பகுதியாகவும், ஒரு நிகழ்த்துகை முறைமையை வாழ்வியலோடு பேணும் ஓர் அணுகுமுறையாகவும் நோக்கலாம். நவீன மருத்துவ வசதிகள் பெருகியுள்ள காலத்திலும், ஆன்மிக மற்றும் உளவியல் பலம் வேண்டும் இத்தகைய சடங்குகள் இன்றும் மலையக சமூகத்தில் உயிர்ப்புடன் நடைமுறையில் உள்ளன.

இந்தச் சடங்குகள், முதன்மையாக, ‘மனநல ஆற்றுப்படுத்துதல்’ (Folk Psychiatry) என்ற வகையில் செயற்படுகின்றன. நவீன மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில், மன அழுத்தம் (Stress) அல்லது மனச்சிதைவு (Hysteria) போன்ற நிலைகள் ‘பேய் பிடித்தல்’ என்று கருதப்பட்டு, சடங்குகள் மூலம் குணப்படுத்தப்பட முயற்சிக்கப்பட்டன. இது ஒருவகையான ‘கதார்சிஸ்’ (Catharsis) அல்லது உணர்ச்சி வெளியீடாக அமைந்தது. மேலும், தீய செயல்கள் செய்தால் ‘தெய்வக் குத்தம்’ ஏற்படும் என்ற பயம், மக்களை ஓரளவுக்கு அறவழியில் நடக்கத் தூண்டும் சமூகக் கட்டுப்பாட்டுக் கருவியாகச் செயற்பட்டது. இச்சடங்குகள் குறிப்பிட்ட சாதி அல்லது குலத்தின் குலதெய்வ வழிபாட்டுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தச் சமூகத்தின் தனித்துவமான அடையாளமும், வரலாறும் பாதுகாக்கப்படுகின்றன. பூசாரிகள் பாடும் பாடல்கள் மற்றும் சடங்கு முறைகள் வழியாக, இக்கூறுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.

உசாத்துணை நூல்கள்

சதாசிவம், சு., 1983. மூட்டத்தினுள்ளே. வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம், கொழும்பு.

சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம், மட்டக்களப்பு.

சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.

தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.

தர்ஸ்டன், எட்கர்., 2025. தென்னிந்திய ஈமச் சடங்குகள். மொழிபெயர்ப்பு: வானதி. சுவாசம் பதிப்பகம், சென்னை.

பக்தவத்சல பாரதி., 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.

மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம், யாழ்ப்பாணம்.

வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.

சஞ்சிகைகள் 

குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை–செப்டம்பர் 1993, பக். 19–20.

குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி–மார்ச் 1994, பக். 19–20.

நட்புறவு பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16.

நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27.

பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்