பயத்துடன் உறையும் பக்தி: மலையகத்தில் முனி வழிபாடுகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

பயத்துடன் உறையும் பக்தி: மலையகத்தில் முனி வழிபாடுகள்

August 18, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

கிராமிய சமய மரபில் எல்லாம் வல்ல ஆற்றல் கொண்ட கடவுள் என்பது காணப்படுவதில்லை. இதுவே கிராமிய சமயங்கள் பல தெய்வ மரபுகளை உருவாக்கிக் கொண்டுள்ள காரணமாகும். இதன் அடிப்படையில் நோக்கும் போது, மலையகச் சமூக அசைவியக்கத்தில் பல்வேறு கிராமியத் தெய்வங்களையும் வேறுபட்ட வழிபாட்டுச் சடங்குகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இம்மக்களின் பண்பாட்டு வாழ்வியலில் முனி வழிபாடு என்பது தனித்துவமான சமூக-மானிடவியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிராமிய வழிபாட்டு மரபாகும். முனி வழிபாடு என்பது ஆரம்ப காலத்தில் பேய் அல்லது அச்சமூட்டும் ஆவியாகப் பார்க்கப்பட்ட ஒரு வழிபாட்டு வடிவத்திலிருந்து, காலப்போக்கில் சமூகத்தின் காவல் தெய்வமாகப் பரிணமித்த வரலாற்றுப் போக்கைக் கொண்டுள்ளது. ‘முனிவு’ என்னும் சொல் சினம், கோபம் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய பொருள்களைத் தாங்கி நிற்கின்றது. மரத்தடி வழிபாடு மற்றும் நடுகல் வழிபாடு ஆகியவற்றின் தொடர்ச்சியாகத் தோற்றம் பெற்ற இந்நாட்டார் தெய்வ மரபு, காலப்போக்கில் சிவகணங்களின் அம்சமாகவும், அந்தகாசுரனை அழித்த வீரமும் ஆவேசமும் நிறைந்த காவல் தெய்வமாகவும் இந்துப் புராணக் கதைகளுடன் இணைக்கப்பட்டது. குறிப்பாக, மலையகப் பெண் தெய்வமான அம்மனின் சகோதரர்களாகவும், அம்மனுக்குப் பாதுகாப்புத் தரும் எல்லைக் காவலர்களாகவும் மாடசாமி, மருதைவீரன், கருப்பன், சங்கிலிக் கருப்பன் ஆகிய தெய்வங்களுடன் இணைத்து முனிகள் வழிபடப்படுகின்றனர்.

மலையகத்தின் வழிபாடுகளின் வேர்களை ஆராய்கின்ற போது, தமிழ்நாட்டின் வழிபாடுகளின் தொடர்ச்சியான பகிர்தலின் இயக்கவியலே முக்கியமாகவும் முதன்மையானதாகவும் விளங்குகின்றது. அடிப்படையில் தமிழ்நாட்டின் கிராமிய சமய மரபில் ‘முனி’ வழிபாடு என்பது மிக ஆழமான சமூகப் பண்பாட்டு வேர்களைக் கொண்ட ஒரு காவல் தெய்வ வழிபாடாகும். கிராம எல்லைகளைக் காக்கும் தெய்வமாகவும், துயர்தீர்க்கும் தெய்வமாகவும், தீய சக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் தெய்வமாகவும் முனி வழிபடப்படுகிறார். வடமொழி செவ்வியல் இலக்கியங்களில் காணப்படும் அமைதியான தபோதனர்களான ‘முனிவர்’ என்ற கருத்தாக்கத்திற்கும், தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலில் நிலவும் வீரம் மற்றும் ஆவேசம் நிறைந்த ‘முனி’ தெய்வ வழிபாட்டிற்கும் இடையே வரலாற்று ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் சுவாரஸ்யமான பரிணாம வளர்ச்சிகள் காணப்படுகின்றன.

வேத மற்றும் உபநிடதக் கால நூல்களில் ‘முனி’ என்ற சொல் உலகியல் வாழ்வைத் துறந்து, மௌனத்தைக் கைக்கொண்டு, மனக்கட்டுப்பாட்டுடன் பரம்பொருளைத் தியானிக்கும் ஞானிகளைக் குறிக்கப் பயன்பட்டது. ரிக் வேதத்தில் இச்சொல் ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்றும் அச்சமற்றவர் என்றும் பொருள்படுகிறது. கழகத் தமிழகராதி இச்சொல்லிற்கு கோபம், முனிவர், புத்தன், வில், யானைக்கன்று எனப் பல்வேறு பொருள்களைத் தருகிறது.

இருப்பினும், தமிழ் நாட்டார் வழக்காற்றியலில் ‘முனி’ என்ற சொல் முற்றிலும் மாறுபட்ட, உக்கிரமும் காவல் குணமும் கொண்ட ஒரு தெய்வத்தைக் குறிப்பதாக உருப்பெற்றது. மானிடவியல் மற்றும் இனவரைவியல் நோக்கில், ஆரம்பகாலத்தில் முனி என்பது மனிதர்களுக்கு அச்சத்தை விளைவிக்கும் ஓர் ஆவியாகவே அல்லது பேயாகவே கருதப்பட்டது. நள்ளிரவிலும் நடுச்சாமப் பொழுதிலும் ஆலமரம், புளியமரம் மற்றும் சுடலை போன்ற பாழ்வெளிகளில் உலாவி, தனியாகச் செல்லும் மனிதர்களை அச்சுறுத்தும் ஆற்றலாகப் பார்க்கப்பட்ட முனி, காலப்போக்கில் சமூகத்தின் பாதுகாப்பாளராகவும், பயத்தைப் போக்கும் காவல் தெய்வமாகவும் மாற்றம் பெற்றார். மனிதர்கள் மனதிலிருந்த பய உணர்வே பிற்காலத்தில் பக்தியாகவும், படையலிட்டு வழிபடும் வழிபாட்டுச் சடங்காகவும் உருமாறியது.

வரலாற்று அடிப்படையில், முனி வழிபாடு என்பது தமிழர்களின் தொன்மையான நடுகல் மரபு மற்றும் மரத்தடி வழிபாடுகளின் தொடர்ச்சியாகவே திகழ்கிறது. பண்டைக்காலத்தில் ஊரைக் காக்கும் போரிலோ அல்லது விலங்குகளுடனான போரிலோ உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்களே, விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் பூசப்பட்டு, திரிசூலம் நாட்டப்பட்டு முனீஸ்வர வடிவங்களாகக் காலப்போக்கில் மாற்றமடைந்தன. இறந்துபோன மனிதர்களில் அரும்பெரும் செயல்கள் ஆற்றிய பெரியோர்களையும், வீர மரணமடைந்தவர்களையும் தெய்வமாகக் கருதி வழிபடும் செயற்கை முறைத் தேவத் தோற்றக் கோட்பாட்டின் மிகச்சிறந்த உதாரணமாக முனி வழிபாடு விளங்குகிறது.

மேலும் கிராமிய வழக்கிலிருந்து முனி என்ற சொல் முனீஸ்வரராக திரிபுருவாக்கம் அடைகின்றமையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முனீஸ்வரர் சிவபெருமானின் உக்கிர அம்சமாகவும், அவரது காவல் கணங்களில் ஒன்றாகவும் சித்தரிக்கப்படுகிறார். தக்கன் நடத்திய யாகத்தை அழிப்பதற்காகச் சிவபெருமான் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கியபோது, சிவகணங்களின் தலைவனாகத் தன்னிலிருந்து தன்னம்சமாக முனீஸ்வரரையும் தோற்றுவித்தார் என்றும், அவர் நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அவதாரங்களை எடுத்தார் என்றும் கதையாடல்கள் கூறுகின்றன. மேலும், தேவர்களையும் மக்களையும் வதைத்து வந்த அந்தகாசுரன் என்ற அசுரனை அழித்தவராக முனீஸ்வரர் அறியப்படுகிறார்.

முனி வழிபாட்டின் மற்றொரு முக்கிய வடிவம், அன்னை பார்வதி தேவியின் தவத்தோடும் பச்சையம்மன் அவதாரத்தோடும் பிணைக்கப்பட்டுள்ளது. பிருங்கி முனிவர் சிவனை மட்டுமே வணங்கி பார்வதியைப் புறக்கணித்ததால், சிவனின் உடலில் பாதியைப் பெற வேண்டி அன்னை பூமியில் வாழைத்தோட்டம் அமைத்துத் தவம் இயற்றினாள். அப்போது அன்னையின் தவத்தைக் கலைக்க முயன்ற அரக்கர்களை அழிக்கச் சிவபெருமானின் முகத்திலிருந்து தோன்றி வந்த பஞ்ச முனிகளும் சப்த முனிகளும் காவலாட்களாக நின்று அசுரர்களை வதம் செய்தனர். இதில் சிவபெருமான் வாமுனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதரித்து அன்னைக்குத் துணையாக நின்றதாகக் கூறப்படுவது சைவ, வைணவ, சாக்த ஒருங்கிணைப்பைப் புலப்படுத்துகிறது.

நாட்டார் சமயத்தில் முனி என்பது தனித்த ஒரு தெய்வத்தைக் குறிப்பதல்ல. மாறாக அது பல்வேறு தோற்றங்களையும் அதிகார எல்லைகளையும் கொண்ட பல தெய்வங்களின் கூட்டமைப்பாகும். பிராந்திய ரீதியாகவும் புராண ரீதியாகவும் முனிகள் பஞ்ச முனிகள், சப்த முனிகள் மற்றும் 21 பரிவார முனிகள் என வகைப்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் வழக்கிலுள்ள முனிகளின் வகைப்பாட்டினை நோக்கும் போது, வாழ்முனி (வாமுனி) பிரம்மாண்ட சுதை வடிவிலும், ஆயுதங்கள் தாங்கிய தோற்றத்திலும், சிவபெருமானின் அம்சமாகவும், பச்சையம்மன் ஆலயங்களின் முதன்மை வாயிற் காவலராகவும் இருப்பவர். செம்முனி சிவந்த திருமேனியும், கம்பீரமான வீரத் தோற்றமும் கொண்டவர். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் இவர், காத்தற்றொழிலுக்குரிய முக்கிய காவல் தெய்வமாகச் சொல்லப்படுகின்றார். நாதமுனி (பூவிலங்கு முனி) தன் துடிப்பான, அச்சமூட்டும் தன்மையைக் கட்டுப்படுத்தவும், நாரதர் கலகம் செய்வதைத் தடுக்கவும் கால்களிலும் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்ட வடிவில் காட்சியளிக்கிறார். இவர் ஜடாமகுடமும் கையில் மகர யாழும் ஏந்தியுள்ளார். முத்துமுனி வெண்ணிறத் தோற்றத்துடனும், முத்து மாலை, முத்து மகுடத்துடனும் காணப்படுபவர்; முருகனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். லாடமுனி (லாட சந்நியாசி) துறவிக் கோலத்தில், யோக தண்டம், கமண்டலம் ஆகியவற்றுடன், பழங்கால லாட தேசத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் யோக நிலையில் அருளும் முனி. ஜடாமுனி யோகாசன நிலையில், பெரிய ஜடாமுடியுடன், ரோமரி முனிவரின் அம்சமாகக் கருதப்படுபவர்; முடிச் சிக்கல், பிணிகளைத் தீர்ப்பவர். கும்ப முனி குள்ளமான மேனியுடன், அமர்ந்த கோலத்தில், அகத்திய முனிவரின் அம்சமாகக் கருதப்படும் வடிவமைப்பில் உள்ளவர். பாண்டி முனி கம்பீரமான ராஜ கோலத்திலும், வெண்ணிற ஆடையிலும் காணப்படுபவர்; நீதியைத் தவறவிட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் மறுபிறவி வடிவமாகப் போற்றப்படுபவர். இவர்களைத் தவிரக் கருமுனி, கொடுமுனி, தங்கமுனி, சாட்டைமுனி, சந்தனமுனி, கோரமுனி, கொங்குமுனி, யோகமுனி, பழையமுனி, கோட்டைமுனி, பாதாளமுனி, அக்னிமுனி, இராமுனி, சாமமுனி போன்ற பல வடிவங்களும் கிராமிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கிராமியப் பண்பாட்டிலும் முனி வழிபாடு என்பது எல்லைப் பாதுகாப்பு, விவசாயச் செழிப்பு மற்றும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து கிராம மக்களைப் பாதுகாக்கும் முதன்மையான நாட்டார் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக வழக்கத்தில் உள்ளது. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு, மரத்தடி, நடுகற்கள் மற்றும் திரிசூலங்களை முதன்மைச் சின்னங்களாகக் கொண்டு இவை நிலைபெற்றுள்ளன. இது தொடர்பாக ஆய்வாளர் தி. செல்வமனோகரன் அவர்கள் விளக்கமான கட்டுரையை எழுதியிருக்கின்றார்.

மலையகத்தில் நிலவும் வழிபாட்டின் மிக முக்கிய அம்சம், தொழிலாளர்களின் தினசரி உழைப்புச் சூழலோடும் தொழிற்சாலை இயந்திரங்களோடும் தெய்வ வடிவங்கள் நேரடியாகத் தொடர்புடுத்தப்பட்டிருப்பதாகும். தமிழக நாட்டார் மரபில் காணப்படும் பொதுவான முனி வடிவங்களிலிருந்து வேறுபட்டு, பெருந்தோட்ட உற்பத்திச் சங்கிலியின் ஆபத்து நிறைந்த ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் தொழில்சார் காவல் தெய்வங்களாக முனிகள் இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ரோதை முனி என்பதில் ‘ரோதை’ என்பது சில்லு என்னும் பொருளில் பயன்படும் ஒரு திசைச்சொல்லாகும். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் பொறிகளும் சுழலும் இயந்திரச் சில்லுகளும் போதிய பாதுகாப்பு வசதிகளின்றி இயங்கியதால், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அடிக்கடி கை, கால்களை இழக்கும் கொடூர விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் உள்ளாகினர். இத்தகைய தொழில்சார் ஆபத்துகளைத் தவிர்க்கவும் இயந்திரங்களை அமைதிப்படுத்தவும் பொறிகளின் சுழல் சில்லுகளையே தெய்வமாக உருவகப்படுத்தி ரோதை முனி வழிபாடு உருவாக்கப்பட்டது. வாராந்த அல்லது தொடர் விடுமுறைகளுக்குப் பின்னர் தொழிற்சாலையைக் கழுவிச் சுத்தப்படுத்தி, புதிதாக வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாக ரோதை முனிக்குப் படையலிட்டு வழிபடும் வழக்கம் இன்றளவும் பேணப்பட்டு வருகின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், போக்குவரத்துப் பாதைகள் ஒழுங்கமைக்கப்படாத மலைப்பாங்கான தோட்டத்தில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துகள் மூட்டைகளாகக் கட்டப்பட்டுப் பள்ளத்தாக்குகளுக்கு இடையே அமைக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் வழியே தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டன. இக்கம்பிகளில் கொழுந்து மூடைகளை அனுப்பும்போதும், பராமரிப்பு வேலைகளில் ஈடுபடும்போதும் தொழிலாளர்கள் பேராபத்துகளை எதிர்நோக்கியதால், தொழிலாளர்களையும் அவர்தம் உழைப்பையும் காக்கும் பொருட்டு அந்த வடக் கம்பிகளையே ‘கம்பி முனி’ என்னும் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடத் தொடங்கினர்.

அதேபோன்று, தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் பயிர்கள் நோய்களின்றிச் செழிப்பாக வளரவும், நாற்று மேடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களைப் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் ‘தவறணை முனி’ வழிபடப்படுகின்றார். தேயிலைச் செடிகளின் மகசூலை அதிகரிக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கூரிய கத்திகளைக் கொண்டு செடிகளை வெட்டிவிடும் கடினமான வேலையின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ‘கவ்வாத்து முனி’ வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், தோட்டப் பிரிவுகளின் எல்லைகளில் அமையப்பெற்றுள்ள ‘எல்லை முனி’ மற்றும் ‘அஞ்சி முனி’ ஆலயங்கள் குடியிருப்புப் பகுதிகளையும் எல்லைகளையும் காக்கும் பாதுகாப்பு அரணாக விளங்குவதுடன், அநீதி இழைப்போரையும் தவறு செய்வோரையும் தண்டிக்கக்கூடிய தார்மீக அதிகார மையமாகவும் திகழ்கின்றன. மேலும் சில ஊர்களில் போர்மலை முனி, வண்ணத்திக் கோட்டை முனி, மகாமுனி போன்ற பெயர்களைக் கொண்டும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

மலையகத்தில் இம் முனி வழிபாடு என்பது வாழ்வியல் சடங்குகளோடும் வழிபாட்டுச் சடங்குகளோடும் இணைந்த வகையில் நிகழ்த்தப்படுகின்றது. மலையகச் சடங்கு மரபில் ‘உருவேற்றுதல்’ அல்லது ‘சாமி ஆடுதல்’ என்பது தெய்வத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் ஊடகமாக இயங்குகின்றது. மானிடவியல் நோக்கில், இது சங்க இலக்கியத்தில் விவரிக்கப்பட்ட ‘வெறியாட்டின்’ தற்கால வடிவமாகவே கொள்ளப்படுகின்றது.

உருவேற்றுதல் சடங்கு வழக்கமாக ஒரு சிறு தெய்வ ஆலயத்திலோ அல்லது சாமி ஆடுபவரின் புனித இடத்திலோ தூய்மைப்படுத்தப்பட்டுத் தொடங்குகின்றது. உடுக்கை, பம்பை போன்ற இசைக்கருவிகளின் அதிவேக முழக்கத்துடனும், முனியின் ஆவேசப் பாடல்களுடனும் இச்சடங்கு தீவிரமடைகின்றது. இசையின் ஒலி அதிர்வுகளும் சடங்குச் சூழலும் ஒரு நபரைத் தன்னை மறந்த நிலைக்கு (Altered State of Consciousness) அழைத்துச் செல்கின்றன. இந்த ஆவேச நிலையில், தெய்வத்தின் சக்தி அந்நபரின் உடலில் உருவேறி வருவதாக நம்பப்படுகின்றது. உருவேறிய சாமியாடியின் உடல் அதிரும், கண்கள் சிவக்கும், குரலின் தொனி இயல்பான மனிதக் குரலிலிருந்து மாறுபடும். உருவேறிய நிலையில் சாமியாடி பேசும் சொற்கள் வாக்கு அல்லது அருள்வாக்கு என அழைக்கப்படுகின்றன. இது தெய்வத்தின் நேரடிக் கட்டளையாகவும் வழிகாட்டுதலாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. கட்டுச் சொல்லுதல் அல்லது சாமி பார்த்தல் என்ற சடங்கின் மூலம், ஒரு குடும்பத்திற்கு அல்லது நபருக்கு ஏற்பட்டுள்ள தீராத நோய், தொழில் நட்டம், செய்வினைத் தடைகள் அல்லது குடும்பப் பிரச்சினைகளுக்கான மூல காரணங்களைச் சாமியாடி கண்டறிந்து கூறுகிறார். பாதிக்கப்பட்டவர் தன் குறையைச் சொல்லும் முன்னரே, சாமியாடி அதனை ஊகித்துக் கூறி அதற்கான பரிகாரங்களை முன்வைக்கின்றார்.

உடலிலும் மனதிலும் உள்ள எதிர்மறைச் சக்திகள், தோஷங்கள் மற்றும் நோய்களை நீக்கக் ‘கழிப்புச் சடங்கு’ நடத்தப்படுகின்றது. இதில் காளமாமுனியை ஆட்டி, எலுமிச்சம்பழம் வெட்டுதல், வேப்பிலை அடித்தல், நூல் போடுதல் (தாயத்துக் கட்டுதல்) ஆகியவை செய்யப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட பெருந்தோட்ட மக்கள் தங்கள் மனக் கவலைகளையும் பயத்தையும் வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையும் மன வலிமையும் பெற இச்சடங்குகள் பெருந்துணையாக அமைகின்றன.

மேலும் முனி வழிபாட்டில் முனியாட்டம் என்பது முக்கியமானதாகும். இது உருவேறிய சாமியாடி, முனியின் படிமத்திற்குரிய உடலசைவுகள், ஆவேச நடை மற்றும் குறியீட்டுப் பொருட்களைத் தாங்கி நிகழ்த்தும் ஒரு சடங்குசார் ஆற்றுகைக் கலையாகும். இது வெறும் நடனம் அல்ல. மாறாக அச்சத்தையும் தெய்வீகத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் மெய்ம்மைக் குறியீட்டு வெளிப்பாடாகும். முனியாட்டத்தின் போது சாமியாடி கறுப்பு நிறத்தில் ஆடை அல்லது ஆவேசத்தைக் குறிக்கும் சிவப்பு ஆடைகளை அணிந்து, உருத்திராக்க மாலைகள், சூலம் மற்றும் கூரிய வாள் ஆகிய குறியீட்டுப் பொருட்களைத் தாங்கி ஆடுவார். அந்நேரம் சூழலே அச்சமும் பக்தியும் கலந்த ஓர் உணர்வில் மூழ்கும். வாள்முனி உருவேறி ஆடும் போது சாமியாடி வாளேந்தி, ஆவேசமான கதியிலும் சுழற்சியிலும் ஆடுவார். முனியாட்டத்தின் உச்சக்கட்டத்தில் சாமியாடி தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் அல்லது கூரிய ஆயுதங்களால் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளுதல் போன்ற தீவிர உடலியல் செயல்களில் ஈடுபடுவதுண்டு. ஆட்டத்தின் இறுதியில், பக்தர்களுக்கு அருள்வாக்குக் கூறி, திருநீறு (நீறு) இடுவார். இந்தத் திருநீறை அணிவதன் மூலம் தீராத நோய்கள் மற்றும் பிணிகள் தீரும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

மேலும், மலையகத்தின் கலையம்சங்களில் ‘பொன்னர் சங்கர் கூத்து’ மிக முக்கியமானதொரு வழிபாட்டு ஆற்றுகையாகும். இக்கூத்தில் வரும் ‘மகாமுனி’ கதாபாத்திரம் வெறும் நாடகக் கதாபாத்திரமாக மட்டுமன்றி, சமூகத்தைப் பாதுகாக்கும் ஒரு காவல் தெய்வமாகவும், ஆற்றல்மிக்க எல்லைத் தெய்வமாகவும் உருவாக்கப்படுகிறார். பெருந்தோட்ட வாழ்வியலின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களின் துயரங்களைப் போக்கி அருள்புரியும் தெய்வமாக மகாமுனியை மக்கள் ஏற்றுக்கொண்டனர். கதையாடலில் உள்ள வீரமும் தியாகமும் வழிபாட்டுத் தளத்திற்கு நகர்த்தப்பட்டு, சடங்குசார் கூறுகளினூடாக அவர் ஒரு வழிபாட்டுத் தெய்வமாக நிலைநிறுத்தப்படுகிறார். பொன்னர் சங்கர் கூத்தின் ஆற்றுகையானது கோயில்களின் ஆண்டுத் திருவிழாக்களுடனும் சடங்குகளுடனும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. கூத்து நடக்கும் களம் வெறும் மேடையாக இராமல், புனிதமான வழிபாட்டுத் தலமாகவே மாற்றப்படுகிறது. கூத்தின் போது மகாமுனி வேடமிட்டு நடிக்கும் கூத்துக் கலைஞர், காப்புக்கட்டி விரதமிருந்து தெய்வ நிலையை அடைகிறார். ஆற்றுகையின் போது இசை, மேளதாளங்கள் மற்றும் பாடல்களின் வழி எழும் அதிர்வுகள் பார்வையாளர்களையும் கூத்துக் கலைஞர்களையும் சாமியாடுதல் (மெய்மைப்படுதல்) நிலைக்குக் கொண்டு செல்கின்றன. இதனால், நாடகக் காட்சியும் தெய்வ வழிபாட்டுச் சடங்கும் ஒன்றிணைந்து, கூத்து ஒரு புனிதமான வழிபாட்டு ஆற்றுகையாக உருவெடுக்கிறது. பண்டாரவளை மீரியபெத்த பகுதியில் நடைபெறும் பொன்னர் சங்கர் உடுக்கையடிக்கதைச் சடங்கில், படுகள நிகழ்வுக்குப் பிறகு மகாமுனிக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அங்கு காணப்பட்ட பெரிய ஆலமரமும் உயரமான மகாமுனி சிலையும் சிறப்பு வாய்ந்தது. 2014இல் ஏற்பட்ட மண்சரிவினால் ஆலமரத்தோடு மகாமுனி கோவிலும் சிலையும் மண்ணுக்குள் புதைந்தது குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

தமிழகத்தில் வேரூன்றியிருந்த இவ்வழிபாட்டு மரபு மலையக மக்களின் வாழ்வியலோடு தன்னைத் தகவமைத்துக்கொண்டு இருநூறு வருட இயங்கியலைச் சாத்தியப்படுத்தியது. தமிழகக் கிராமியச் சூழலில் நிலவிய முனி வழிபாடு, மலையகப் பெருந்தோட்டங்களின் தனித்துவமான உற்பத்தியமைப்பு, தொழிற்களம், காலநிலை மற்றும் சமூகப் பாதுகாப்புத் தேவைகளுக்கேற்பப் பல வியக்கத்தக்க பரிணாம மாற்றங்களை அடைந்தது. தமிழகக் கிராமப்புறங்களில் விவசாய நிலங்களையும் எல்லைகளையும் காக்கும் தெய்வமாக இருந்த முனி, இலங்கையின் மலையகச் சூழலில் தொழிற்கூடங்களையும் பெருந்தோட்டப் பயிர்களையும் காக்கும் தொழில் தெய்வமாக உருமாறியது. நிலப்பரப்பு மற்றும் உற்பத்தி முறைமையின் மாற்றத்தால் இவ்விரு பிராந்தியங்களுக்கும் இடையே வழிபாட்டு அமைப்பில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் தோன்றின.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் நிலவிய அபாயகரமான உழைப்புச் சூழல், தொழிலாளர்களை தங்களின் அன்றாடத் தொழிலோடு இணைந்த புதிய முனி வடிவங்களை உருவாக்கத் தூண்டியது. காலனிய தேயிலைத் தொழிற்சாலைகளிலும் மலைப்பாங்கான தோட்டங்களிலும் நிகழும் தொழில்சார் விபத்துகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தொழிலாளர்கள் உருவாக்கிய தொழில்சார் முனிகள் மலையகப் பண்பாட்டின் தனித்துவமான அடையாளங்களாகும்.

மலையகச் சூழலில் முனி வழிபாடு என்பது வெறும் வழிபாட்டுடன் நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியல் ஆற்றுப்படுத்தலாகத் திகழ்கிறது. முனி வழிபாட்டின் போது பூசாரி அல்லது அருள்வாக்கு சொல்பவர் மீது முனி ஆவேசமாக இறங்குவது முனி ஆட்டம் எனப்படும். ஆடுபவர் தீப்பந்தங்களைக் கையிலெடுப்பது, எண்ணெயில் தோய்க்கப்பட்ட திரிகளைக் கொளுத்தி வாய்க்குள் வைப்பது (18 திரிகள் வரை வாயில் வைக்கும் வழக்கு உண்டு) போன்ற தீவிரச் செயல்களில் ஈடுபடுவார். மேலும், சாம்பல் அல்லது திருநீறு அளித்துத் தீராத நோய்களைக் குணமாக்கும் நீறிடும் வழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது.

காலனிய காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களைக் கண்காணித்த கங்காணிமார் அமைப்பின் செல்வாக்கு வழிபாட்டிலும் எதிரொலித்தது. அவர்களின் ஆதரவோடு மக்களின் பணத்தையும் சேர்த்து வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. அதில் முக்கிய முதல் மரியாதைக்குரியவர்களாக கங்காணிமார்களும் துரைமார்களும் இருப்பார்கள்.

தொகுத்து நோக்கும் போது, தமிழகக் கிராமப்புறங்களில் இயற்கை சார்ந்த எல்லைக் காவல் தெய்வமாக நிலவிய முனி வழிபாடு, இலங்கையின் மலையகத்திற்குப் புலம்பெயர்ந்த போது, அங்கு இருந்த பெருந்தோட்ட முதலாளித்துவ உற்பத்தி முறைமைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ரோதை முனி, கம்பி முனி, தவறணை முனி, கவ்வாத்து முனி போன்ற தொழிற்களம் சார்ந்த புதுமைத் தெய்வங்களின் தோற்றம், ஓர் உழைப்பாளர் சமூகம் தன் தொழில்சார் அச்சுறுத்தல்களையும் உயிராபத்துகளையும் எவ்வாறு ஆன்மீகக் குறியீடுகளாக மாற்றி எதிர்கொண்டது என்பதற்கான இனவரைவியல் சான்றாகும். காலனியச் சுரண்டல், வறுமை மற்றும் பாதுகாப்பற்ற உழைப்புச் சூழலில் மலையகத் தமிழர்களுக்கு முனி வழிபாடு என்பது வெறும் சமய நம்பிக்கை மட்டுமல்ல. அது அவர்களின் அச்சத்தைப் போக்கி, சமூக நீதியை உறுதிசெய்து, அவர்களின் பண்பாட்டு அடையாளத்தைத் தக்கவைத்த முதன்மை அரணாகவும் விளங்கியது.

உசாத்துணை மூலங்கள்

இன்பமோகன், வ., 2012. கிழக்கிலங்கைச் சடங்குகள். குமரன் புத்தக இல்லம், சென்னை–கொழும்பு.

சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம்.

சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.

சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.

தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.

பக்தவத்சல பாரதி, 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.

மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.

வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.

சஞ்சிகைகள்

குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை–செப்டம்பர் 1993, பக். 19–20.

குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி–மார்ச் 1994, பக். 19–20.

நட்புறவு பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16.

நாவலபிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27.

பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்