எம்.எஸ். நாதன்
“இந்த முதலாளித்துவ ஆட்சியிலே இன்றைய பாட்டாளி வர்க்கம் படும் துன்பமும் துயரமும் எழுதி முடியாது. பஞ்சம் பசி பட்டினியில் நெஞ்சம் துடித்து நீதி தேடுகிறான் தொழிலாளி. இதிலிருந்து விடுதலை பெற முடியவே முடியாதா? தாராளமாக முடியும். ஆனால் ஒரேயொரு தீய சக்தி அவர்களை முடக்கி வைத்திருக்கிறது. அதுதான் ஒற்றுமையில்லாப் பண்பு. இனம்! ஜாதி!! மொழி!!! இது போன்ற பாகுபாட்டை விட்டு இரண்டே வர்க்கமுண்டு. ஒன்று தொழிலாளி மற்றது முதலாளி என்ற எண்ணங் கொண்டு உண்மை புரட்சி செய்தால் எளிதில் முதலாளித்துவ அக்கிரமத்தை அழித்துக்கட்ட முடியும். புரட்சி வழியென ஒவ்வொரு பாட்டாளியும் முன்னுக்கு வர வேண்டும் என்பதை அறைகூவி அழைப்பதே இதில் அடங்கியுள்ள பாட்டுக்களின் கருத்துக்கள். ஒவ்வொரு பாட்டாளியும் படித்து புரிந்து புத்துணர்ச்சி பெற்று புரட்சிப்பாதைக்கு புறப்பட வேண்டுமென்பதே எனது பேரவா. வாழ்க தொழிலாளி, வீழ்க முதலாளித்துவம்”
– தொழிலாளியின் குரல் பாடல் தொகுப்பு நூலின் முன்னுரையில் அதன் ஆசிரியர் எம்.எஸ். நாதன் எழுதிய வரிகள் –
மேற்குறித்த வரிகள் ஊடாக எம்.எஸ். நாதனில் பொதிந்திருந்த வர்க்க உணர்வும் உந்துதலும் மிகத் தெளிவாகப் புலப்படுகின்றன. அவ்வாறான மனத் தூண்டுதலோடு, தான் சார்ந்த வர்க்கத்தினரை ஓரணியில் திரட்டும் உத்வேகம் கொண்டே அவரது பாடல்கள் அமைந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக இத்தொகுப்பிலுள்ள முதலாவது பாடல் பின்வருமாறு அமைகிறது.
“பாட்டாளி என்றொரு வர்க்கமுண்டு
பாரில் அவர்க்கே திறமையுண்டு
வறுமையே அவர்கள் பொருளாம்
பொறுமையே அவரது பண்பாம்
வேலைகள் எதையும் செய்பவராம்
வெய்யில் மழை காற்றில் அலைபவராம்
ஆலையில் சேலைகள் நெய்பவராம்…….”
எனத் தொடரும் வரிகள் தொழிலாளர்களின் உழைப்பின் மகத்துவத்தையும் அர்ப்பணிப்பு நிலையையும் வலியுறுத்துவதைக் காணலாம். அதேவேளை வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த வறுமை நிலையை தெளிவுறுத்துவதையும் உணர முடிகிறது. இவ்வரிகளை உற்றுநோக்குகின்ற போது, பாரதியினுடைய தொழில் எனும் தலைப்பிலான பாடலின்,
“இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே!
யந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!”
எனத் தொடரும் வரிகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. பாரதி, உலகின் படைப்புக்குப் பிரதானியாகக் கொள்ளப்படும் பிரம்மனுக்கு உழைப்பவர்களை ஒப்பிடுகிறான். மாறாக எம்.எஸ். நாதன் “ஆக்குவது முழுதும் அவர்களாம் – ஆள்வது மட்டும் அடுத்தவராம், கோட்டைகள் கட்டும் தீரர்களாம், ஓட்டைக் குடிசையில் வாழ்பவராம்” எனச் சித்தரிக்கும் பாங்கு அவதானத்தைப் பெறுகிறது. இவ்வரிகள் ஊடாக உழைப்பில் தொழிலாளர்கள் கொண்டுள்ள திறன்களையும் அவர்களது ஏழ்மை நிலைமையையும் எடுத்துரைப்பதைக் காணலாம்.
“ஜாதிபேதம் சவக்குழியில் வீழ்க, மக்கள் – சமத்துவமாய் ஜெகமுழுதும் வாழ்க, அறியாமை அலறிக்கொண்டு ஓட – அறிவு திறமையுடன் மக்கள் நன்கு வாழ்க” எனவும் மேற்குறித்த பாடலின் வரிகள் அறைகூவுகின்றன.
இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பொறுத்தவரையில், அவர்களது விடிவுக்கும் பாதுகாப்பிற்கும் இலங்கை இந்தியன் காங்கிரஸ் எனும் தாபனமே அரணாக விளங்கியது. இதன் விளைவாக 1947ஆம் வருட பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு போதியளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெறுகின்றது. பின்னர் பெரும்பான்மையின் சூழ்ச்சி நடவடிக்கைகள், உள்ளக முரண்பாடுகளால் இத்தாபனம் சிதையத் தொடங்குகிறது. தலைமைத்துவப் போட்டிகளும் மாற்று சிந்தனைகளும் புதிய அமைப்புகளின் உருவாக்கத்திற்கு வழிகோலுகின்றன. சாதிய ஆதிக்கம், சர்வாதிகாரப் போக்குகள் போன்றன முரண்பாட்டு நிலைமைக்கு ஏதுவாக அமைகின்றன. சமகாலத்தில் சமசமாஜக் கட்சியினர் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைசார் நடவடிக்கைகளில், குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர் விடயங்களில், புரட்சிகர நகர்வுகளை மேற்கொள்கிறார்கள். அந்நடவடிக்கைகளுக்கு எதிரான கோசங்களுடன் இலங்கை இந்தியன் காங்கிரஸ் செயற்படுகிறது. காந்தியம், சாத்வீகம் போன்ற கோட்பாடுகளை முதன்மைப்படுத்தி, தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.
இராஜலிங்கம், வெள்ளையன், சி.வி. வேலுப்பிள்ளை, சோமசுந்தரம், அஸீஸ், தொண்டமான் ஆகிய தலைவர்கள் ஒரே பாசறையில் செயற்பட்டவர்கள். பின்னர் கருத்து முரண்பாடுகளால் பிரியத் தொடங்குகிறார்கள். வெள்ளையனும் சி.வி. வேலுப்பிள்ளையும் ஓர் அணியாகச் செயற்படத் தொடங்குகிறார்கள். பின்னர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நிலையில், அஸீஸ் சார்பு அங்கத்தவர்கள் அவ்வமைப்பில் அங்கம் வகிக்கத் தொடங்கினார்கள். அஸீஸ் தலைமையில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தோழர்கள், இயக்க வேட்கையுடன் தங்கள் செயற்பாடுகளை திடப்படுத்தினார்கள். இவ்வமைப்பில் அங்கம் வகித்த எம்.எஸ். நாதன் போன்ற பாடலாசிரியர்களின் பாடல்களும் இவ்வியக்கத்தின் எழுச்சிக்கு பெரிதும் துணை நின்றமை கவனத்திற்குரியதாகும்.
“ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்றும்
ஜெயமே பெற உழைத்திடுவோம் நாங்கள்
பணநாயக கொடுமை நீங்கி என்றும்
மனமகிழ்வோடு வாழ்ந்திடுவோம்…..”
எனத் தொடரும் வரிகளால் இயக்கத்திற்கு தோழர்களை உள்வாங்கும் முனைப்புடன் பாடல்களை இயற்றும் பணியில் எம்.எஸ். நாதன் கவனத்தைப் பெறுகிறார்.
ஐம்பதுகளின் தொடக்கத்தில் வெளியான ‘கோமதியின் காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற
“வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே – நீதான்
வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே”
எனும் பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது. இப்பாடலை கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் இயற்றியிருந்தார். இப்பாடலால் கவரப்பட்டிருந்த எம்.எஸ். நாதனும் ‘வெண்புறாவே’ என விளித்த நிலையில் பின்வருமாறு ஒரு பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலின் ஒவ்வொரு வரியும் கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது.
“ஜாதிபேதம் கொள்வதேனோ வெண்புறாவே, என்றும்
ஜெகத்தினில் ஆண் பெண் இருவரன்றோ வெண்புறாவே
உருண்டையான உலகமதில் வெண்புறாவே
ஒன்றுதானே மனிதஜாதி வெண்புறாவே
உயர்வு தாழ்வு பேசும் நம்மில் வெண்புறாவே
உலக நிலையை உணர்வது நன்றே வெண்புறாவே நீயும்
பார்முழுதும் பறந்து வாராய் வெண்புறாவே
உண்மை பண்பைக் கூறிவாராய் வெண்புறாவே
உலகமுழுதும் பறந்துவாராய் வெண்புறாவே”
இவ்வரிகளில், ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நடைமுறைகள் மீதான ஈடுபாட்டுடன் சமத்துவம் நிறைந்த சமூகத்தை வேண்டி நிற்கும் பாங்கு கவனத்தைப் பெறுகின்றது.
எண்பதுகளின் இறுதியில் ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு எதிரான வன்முறைகளும், இனப்பிரச்சினை தீவிரமடைந்தமையால் ஏற்பட்ட போர்ச் சூழலும் நாட்டில் அமைதிக்கான ஏக்கத்தை உருவாக்கின. இக்காலத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எச்.எம். ஷம்ஸின் எழுத்துருவாக்கத்தில், கேமதாஸவின் இசையில், நிரோஷா விராஜினி பாடிய ‘வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே’ என்ற பாடல் சுயாதீனத் தொலைக்காட்சி சேவை, ரூபவாஹினி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. இதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எஸ். நாதன் ‘ஜாதிபேதம் கொள்வதேனோ வெண்புறாவே’ என்ற பாடலைப் புனைந்திருந்தார். இரு பாடல்களுக்கும் கோமதியின் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே’ என்ற பாடலே ஆதர்சனமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தகுந்த விடயம்.
“சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் – சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்” எனும் வரிகள் ஐம்பதுகளின் பின்னர் உழைக்கும் மக்களிடத்தில் பெரிதும் அவதானத்தைப் பெற்றன. அவ்வரிகள் 1956இல் வெளியான ‘மதுரைவீரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்குரியவை. அப்பாடலை உடுமலை நாராயண கவி இயற்றினார். பாடல் காட்சியில் ஈ.வி. சரோஜா பிரதானமாக தோன்றும் நிலையில் எம்.ஜி.ஆரின் பிரசன்னமும் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் உழைக்கும் மக்களும் கலைஞர்களாகத் தோன்றுகிறார்கள். உழைப்பு, உழைப்பாளர்கள் மீதான அக்கறையோடு இயங்கும் தோழமைகளுக்கு இப்பாடல் ஆதர்சமாக விளங்கியுள்ளமை கவனத்திற்குரியதாகும். இப்பாடல் எம்.எஸ். நாதனிலும் தாக்கம் செலுத்தியுள்ளமையைக் காணலாம். எம்.எஸ். நாதன் பாரதியை விளித்து இப்பாடலின் வரிகளைத் தொடக்கியுள்ளார்: “ஒன்று பட்டால் உண்டே வாழ்வென – உரைத்தான் பாரதி உலகே அறியென, ஈழம் வாழும் தொழிலாளர் நிலைதான் இன்றென்ன – பார் இன்னல் மேலே இன்னல்தான் ஐயோ இதென்ன”. இப்பாடல் பின்வருமாறு மேலும் தொடருகின்றது.
“இலங்கை மணித்திரு நாட்டில் வாழும்
இனம்பல எல்லாம் ஒன்றாய் கூடி
ஏழை வாழ்வில் மண்ணைத் தூவும்
கோழையாட்சியை குழியில் தள்ளுவோம்.
ஒற்றுமையாக வாழ்ந்த இந்நாட்டில்
வேற்றுமை சூழ்ந்து சீற்றம் கொள்ளுதே……”
“சீற்றமுறச் சிறுபான்மை மக்களை
ஏற்றம் காட்டும் இனவெறி தனைநாம்
மாற்றம் கொள்ள வைக்கணும் மடமை மண்தின்ன
நம் சீற்றம் மாறிப் போகோணும் தீயோர் மண்தின்ன….”
ஆகிய உறுதிமிக்க வரிகள் எம்.எஸ். நாதனில் பொதிந்திருந்த எழுச்சி எண்ணங்களின் வெளிப்பாடாய் விளங்குகின்றன.
அவர், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு, அதற்கு எதிராக மக்கள் திரண்டெழும் போக்கையும் சுட்டிக்காட்டுகிறார்.
“அடிதடி வந்தால் அதனையும் ஏற்போம்
அம்புகள் வரினும் அதனையும் ஏற்போம்
வம்புகள் வரினும் அதனையும் ஏற்போம்
தெம்புகள் எதுவரை செல்லுமோ பார்ப்போம்.”
தொழிலாளர்களிடத்தில் மனத்திடத்தை ஏற்படுத்தும் நோக்கில் எம்.எஸ். நாதன் நம்பிக்கை மிக்க வரிகளால் தன் பாடல்களை வலிமைப்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது. வர்க்க ஒற்றுமையை வலியுறுத்தும் முனைப்போடு, வீச்சுமிகு அறைகூவல்களால் தொழிலாளர்களிடத்தில் எழுச்சிக்குரிய எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பாடலாசிரியரின் உந்துதல் இவ்வரிகளில் வெளிப்படுகிறது.
“தன்னம்பிக்கை இருப்பதனால் தயங்கிட மாட்டோம் அந்த
தரகர்களை கண்டு நாங்கள் மருண்டிட மாட்டோம்
நன்மையான காரியத்தில் நம்பிக்கை வைப்போம், சேரும்
தீமைகள் அகற்றி நாங்கள் திடமுடன் வாழ்வோம்
பணக்கார கும்பலுக்குப் பயப்பட மாட்டோம் அவர்
பயமுறுத்தலுக்காக நாங்கள் பணிந்திட மாட்டோம்…”
எழுச்சிக்கான நம்பிக்கையை வெளிப்படுத்தும் இப்பாடல், சாதிய ஆதிக்கங்களையும் சாடுகிறது. நாட்டின் பலவீனங்களைக் களைந்து முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான வழிமுறைகளையும், நாட்டின் ஸ்திரத்தன்மையில் தொழிலாளர்களின் பங்கையும் எடுத்துரைக்கிறது. உழைக்கும் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பஞ்சநிலையைப் போக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத முதலாளிகளின் அறியாமையையும் பாடலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். சாதிய ஒடுக்குமுறை, இனப்பாகுபாடு ஆகிய தூண்டுதல்களின் வழியாகத் தொழிலாளர்களின் கோபத்தைக் கிளறி அவர்களைப் பலவீனப்படுத்தும் நுண்ணரசியலை நிதானமாகப் பதிவு செய்வது அவரது தனித்துவமாகும்.
தமிழ்த் திரையுலகில் ‘மகேஸ்வரி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரிதும் அபிமானத்தை பெற்றிருந்தது. அப்பாடலைத் தழுவி எம்.எஸ். நாதன் மலையக சமூகத்தின் அவல நிலையைப் பாடலாக்கியிருப்பதையும் அறியலாம். “தோட்டத்தில் வாழும் தொழிலாளர் கதை கேளுங்கண்ணே – தொல்லைகள் கேளுங்கண்ணே” என்ற கோசத்தோடு தொடங்கும் இப்பாடல், நாளொன்றில் தொழிலுக்கான ஆரம்பம், களத்தில் படும் இன்னல் நிலை, அதிகாரிகளின் அடக்குமுறை, சிரமத்திற்கு ஏற்ற கூலியின்மை, திருப்தியற்ற போசாக்கு நிலை போன்றவற்றையெல்லாம் நாசுக்காக எடுத்துரைக்கும் லாவகத்தில் சிறப்புப் பெறுகிறது.
நாட்டார் பாடல் மெட்டிலமைந்த மேலுமொரு பாடலில் அவர் தன்மானம் குறித்து வலியுறுத்துகின்றார்.
“காடுகளை வெட்டியே நாடுவள மீட்டியே
ஓடுடனே வாழ்வதை ஒழித்திடவே எல்லோரும்
பாடிடும் பாட்டாளி பசியுடன் மடிவதை
ஓடிவிடச் செய்திட உறுதியுடன் எல்லோரும்
சீறும் முதலாளிகளின் சீற்றங்கள் அடங்கிடவே
வீறு கொண்டெழுந்தே நாம் வெற்றி வளம் சூடுவோம்
மாடு போல் உழைத்தாலும் மரியாதை இல்லாமல்
மட்டரகமாகவே மதிப்பதை அழித்திடவே
கூடுங்கள் ஒன்றாக அண்ணே நமது
குறைகளை தீர்த்திட செல்வோம் முன்னே….”
எனப் பாடல் வரிகள் தொடர்கின்றன. ‘உழைப்பவனுக்கே இந்த உலகம் சொந்தம்’ என்ற கோசத்தை இங்கு முனைப்பாக்கும் எம்.எஸ். நாதனின் எத்தனிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
எம்.எஸ். நாதனில் பொதிந்துள்ள வர்க்க உந்துதலும் தெளிவான கருத்தியல் அறிவும், அவரது பாடல்கள் மிக நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளமைக்குச் சான்றாக அமைவதைக் காணலாம். வர்க்க அரசியல் தொடர்பான ஆழ்ந்த ஈடுபாடும் அவ்விடயம் தொடர்பான தொடர் தேடுதலும் எம்.எஸ். நாதனின் பாடல்களின் காத்திரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. பாடல் சித்தரிப்புகளைப் பொறுத்தமட்டில், தெளிவான போதிப்புகளும் கருத்து முன்வைப்புகளும் கவனத்தைப் பெறுகின்றன.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் இலங்கைக்கான புலப்பெயர்வின் அவசியத்தையும் தேவைப்பாட்டையும் வலியுறுத்தும் முனைப்போடு “துரையிலே துரை வெள்ளைத்துரை ஈழம் – ஆண்ட துரை நமக்கு தொல்லைகள் கொடுத்திட்ட லண்டன் துரை” எனும் பாடல் அமைகின்றது. பிரித்தானிய காலனித்துவம் தங்கள் நலன் கருதிய பொருண்மிய நடவடிக்கைகளில் இந்திய வம்சாவளித் தமிழர்களை எவ்வாறு பலிக்கடாக்கள் ஆக்கியது என்பதன் அடையாளமாக இப்பாடலை உற்றுநோக்கலாம். “பாடுபட்ட தோழனுக்கு பாதகம் புரிஞ்சி விட்டார் – பச்சோந்தி புத்திகொண்ட வெள்ளைத்துரை” என்ற வரிகள் ஒட்டுமொத்த பாதிப்பு நிலைமையையும் அடையாளப்படுத்துவதாக அமைகின்றன.
மே தினத்தின் முக்கியத்துவத்தைப் பேசும் முனைப்போடு எம்.எஸ். நாதன் உருவாக்கிய தழுவல் பாடல் ஒன்றும் கவனத்தைப் பெறுகிறது. “வாழ்விலே பொன்னாளாம், மே தின நன்னாளாம் – தேவையைக் கேட்கவும் தீவிரம் கொள்ளும் தினம், தீராத சோகத்தை தீர்த்திடும் நன்னாளாம்” என அவர் மேதினத்தைச் சிறப்பிப்பதையும் காணலாம். இவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கும் மே தினம் இன்றைய சூழ்நிலையில் கட்சிகளின் பிரசாரத்திற்கான களமாக மாறியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறே சில தோட்டங்களில் தோட்ட நிர்வாகத்தின் கட்டாயத்தில் அத்தினத்தில் தொழிலாளர்கள் வேலைக்கு வருகை தர நிர்ப்பந்திக்கப்படுவதையும், வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. இந்நாளின் சிறப்பைப் போற்றும் அதேவேளையில், ஆட்சியாளர்களை எச்சரிக்கும் நோக்கத்தோடும் எம்.எஸ். நாதன் இப்பாடலை இயற்றியுள்ளார்.
எம்.எஸ். நாதனின் காலத்தில் பெரும்பான்மையின மொழியை மட்டும் ஆட்சி மொழியாக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சூழலில், சிறுபான்மையினரின் மொழி உரிமைகள் மீறப்பட்டதை அவர் கூர்மையாகக் கவனித்துத் தனது படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
“விழிபறி போனால் விட்டுக்கொடுக்கும்
வெள்ளையுள்ளம் எங்களுக்குண்டு
மொழியைத் தொட்டால் உமையே விடுவோமா?
அடக்கி ஆளும் முறையே சரிதானா ஆட்சியாளரே”
இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் வர்க்க ரீதியிலான சிந்தனையிலிருந்து பாடலாக்கித் தந்தவர்களில், முக்கியத்துவத்திற்குரிய பாடலாசிரியராக எம்.எஸ். நாதன் கவனத்தைப் பெறுகிறார். பொதுவாக வீதிப்பாடலாசிரியர்களின் உணர்விலும் ஈடுபாட்டிலும் திருப்தி கொள்ளும் அளவுக்கு, அவர்களின் புலமைத்துவத்தில் திருப்தியடைய முடியாது. மாறாக, அவர்களது தற்துணிவும் விடுதலை வேட்கையும் மண்ணுணர்வும் மிக முன்மாதிரியானவையாகும். அடுத்த தலைமுறையினரின் இருப்புக் குறித்த அவர்களது அவதானம் குறிப்பிடத்தக்கதாகும். எளிய மொழிநடை, காத்திரமான முன்வைப்பு, எழுத்திலும் கருத்திலும் அதீத கவனம் ஆகிய வகைகளிலும், எம்.எஸ். நாதனின் ஈடுபாடும் அவரது படைப்புகளும் காத்திரம் பெற்றுள்ளன எனலாம். தான் வாழ்ந்த சமகாலத்தில் நிலவிய சமூக முரண்பாடுகளையும், எதிர்கால இருப்பு தொடர்பிலான எதிர்வுகூறல்களையும் அவர் தெளிவாகக் கணித்துள்ளமை அவதானத்திற்குரியதாகும். மலையக சமூக வரலாற்றில் முக்கிய சிந்தனைக் கருவூலத்தை தொடக்கி வைத்த நபர்களில் ஒருவராகவும் எம்.எஸ். நாதன் அடையாளப்படுத்தப்பட வேண்டியவராவார்.
எம்.எஸ். நாதன் நாவலப்பிட்டி, பதுளை ஆகிய தளங்களில் இயங்கியமையை, அவரது தொகுப்பு நூலில் இணைக்கப்பட்டுள்ள விளம்பரங்களிலிருந்து அறிய முடிகிறது. அவர் வேறு பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளாரா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. பொதுவாக வீதிப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், இவருடைய பாடல்கள் பற்றிய கருத்துகளை முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ். நாதன்
இத்துறையில் மலையகத்தில் தடம் பதித்த மற்றுமொரு ஆளுமையாக எஸ்.எஸ். நாதன் அறியப்படுகின்றார். எஸ்.எஸ். நாதன் உரைநடை வடிவத்தில் தன் படைப்புகளை வெளிப்படுத்தியிருப்பது தொடர்பில் சாரல் நாடனின் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இவரைப் போன்றே பல ஆளுமைகள் தங்களின் எண்ணங்களைக் கட்டுரை, விவரண வடிவங்களில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான வடிவங்கள், எழுத்துகள் தொடர்பிலும் இத்தேடலில் பார்வையைச் செலுத்த வேண்டிய தேவையை இது உணர்த்துகிறது. எஸ்.எஸ். நாதன் இதழாசிரியர் என்ற நிலையிலும் கவனத்தை செலுத்த வேண்டிய ஆளுமையாகத் திகழ்கிறார். தொண்டன், குண்டு, விளம்பர கேசரி, சுதந்திரம் போன்ற பல சஞ்சிகைகளை நடத்தியிருக்கின்றார். சாரல் நாடனின் குறிப்புகளின்படி, எஸ்.எஸ். நாதன் பல்துறை ஆளுமையாக நோக்கத்தக்கவராக விளங்குகிறார். அவரது காலத்தில் அவர் அணுகிய விடயப்பரப்புகளின் பதிவுகள் இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும்.
மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் உருளவள்ளிப் போராட்டம் மிக முக்கிய கவனத்தைப் பெறுகிறது. தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகைச் செறிவைக் குறைக்கும் முனைப்போடு தொடங்கப்பெற்ற சம்பவம் என்ற வகையில் இப்போராட்டம் இலங்கை வரலாற்றிலும் முக்கிய கவனத்திற்குரியதாகிறது. இப்போராட்டத்தை முன்வைத்து எஸ்.எஸ. நாதன் அவர்களும் பாடல் தந்துள்ளார். அப்பாடலின் அடிகளை சாரல் நாடன் குறிப்பிட்டதற்கு அமைய நாமும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் அடிகள் பின்வருமாறு அமைகின்றன.
“சாதியால் சங்கத்தால் உன்னை ஏய்க்கும்
சண்டாளர் கூட்டம் கால்நூற்றாண்டாக
மோதியே உள்வீட்டில் மூட்டும் சண்டை
மூவிரண்டு தவணையால் பொலிஸ் கோர்ட்டில்
பாதியாய்ப் போனவுடன் ஆஸ்தியெல்லாம்
பறித்திடுவார் தெண்டம் எனக் கொடுத்துத் தாலி
மீதியாய் வந்த காதைபோதும், போதுமிந்த
மேதைகளை வெளியேற்று”
எஸ்.எஸ். நாதனின் இப்பாடல், உருளவள்ளித் தோட்டத்தில் தொடங்கப்பட்ட பேரினவாதக் குடியேற்றம் பற்றியதாகும். 1939க்குப் பின், இந்தியத் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வால் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. குறிப்பாகத் துறைமுகம், இரயில்வே மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றிய இந்தியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். 1942 இல் இந்தியர்கள் அரசு நிலங்களில் குடியேறுவதையும் விவசாயம் செய்வதையும் தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இதனால், இந்திய வம்சாவளித் தமிழர்கள் தங்கள் விவசாய நிலங்களை விட்டு வெளியேற நேரிட்டது. அரச ஆதரவோடு இந்நிலங்களைச் சுவீகரித்து பெரும்பான்மையின மக்கள் குடியேறினர்.
1946 இல் கிராம விரிவாக்கத் திட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்களை வெளியேற்றி, சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தன. இத்திட்டத்தை முதன்முதலாகச் சோதித்துப் பார்ப்பதற்காகச் சப்ரகமுவ மாகாணம், எட்டியாந்தோட்டையில் உள்ள உருளவள்ளி தோட்டத்தை அரசு தேர்வு செய்தது. பிரித்தானியர் ஆட்சியின் கீழ் “ஸ்டேட் கவுன்சில்” நடைமுறையில் இருந்த அக்காலத்தில், காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கவின் உத்தரவின் பேரிலேயே உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றிச் சிங்கள மக்களைக் குடியேற்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
போராட்டமே தீர்வு எனத் தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டனர். அவர்களின் குடியேற்றம் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர்களை வெளியேற்ற நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியது. உருளவள்ளி தோட்டத்தைச் சுற்றியுள்ள பிற தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவோடு இப்பாதிப்பு மலையகம் முழுமைக்கும் தெரியவந்தது. இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.ஜி.எஸ். நாயர் தலைமையில் போராட்டம் வலுப்பெற்று, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வேலைநிறுத்தம் நீடித்தது. அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களும் ஓரணியில் திரண்டு இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளே நுழைவதைத் தடைசெய்தது. தொழிலாளர்கள் முட்கம்பி வேலிக்குள் சிறைவைக்கப்பட்டு, அவர்களுக்கான குடிநீர், சுகாதாரம், உணவுப் பொருட்களுக்கான வழிகளும் முடக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், நுவரெலியா மாவட்டத் தொழிலாளர்கள் சி.வி. வேலுப்பிள்ளையின் தலைமையில் ஒன்றுதிரண்டனர். இப்போராட்டம் குறித்துத் தொழிற்சங்கவாதி டி. அய்யாதுரை குறிப்பிடுகையில், “பிரசார சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 21 நாட்கள் நீடித்த இம்மாபெரும் போராட்டத்திற்கு, மலையக நாடோடிப் பாடகர்கள் தோட்டங்களில் நடக்கும் கொடுமைகளைப் பாடல்களாக இயற்றி அச்சிட்டுப் பரப்பியதன் மூலம் மக்களுக்கு ஊக்கமளித்தனர்” என்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளையும் தாண்டித் தொழிலாளர்களின் ஒற்றுமையால் உருளவள்ளிப் போராட்டம் இறுதியில் வெற்றியடைந்தது.
மலையகச் சமூக மாற்றத்தில் வீதிப் பாடல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சட்டங்களும், திட்டங்களும் ஒரு சமூகத்தை எவ்வாறு பாதித்தன என்பதைப் பிரதிபலிக்கும் ஊடகமாக அவை திகழ்ந்தன. படிப்பறிவு குறைந்த மக்களுக்கு அவர்களின் எளிய மொழியிலேயே அவல நிலைகளை உணர்த்தியதில் இப்பாடல்களுக்கு முக்கிய பங்குண்டு. அதிகார மையங்களை எதிர்த்து நிற்கும் வீதிப் பாடலாசிரியர்களின் தணிவில்லாச் சிந்தனையும் துணிச்சலும் போற்றத்தக்கவை. அவ்வரிசையில், எம்.எஸ். நாதன், எஸ்.எஸ். நாதன் ஆகியோரின் உணர்வுமிக்க வரிகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின என்பதில் ஐயமில்லை.
உசாத்துணை நூல்கள்
1. யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேஷன்.
2. முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
3. சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரைவி வெளியீட்டகம்.
4. நாதன், எம்.எஸ். (1955). தொழிலாளியின் குரல். (வெளியீட்டகம் தொடர்பான தகவல் இல்லை).
5. வஹாப்தீன், ஜே. (2021). ஒலுவில் பிரதேசத்து வெகுசனப் பாடல்கள்: தொகுப்பும் பகுப்பாய்வும். பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம்.



