2003 ஜனவரி 10 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற உரைகள்ஆங்கில மூலம்: எஸ்.கே. விக்னேஸ்வரன்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
28 நிமிட வாசிப்பு

2003 ஜனவரி 10 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம்பெற்ற உரைகள்

October 21, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

அடுத்து வரும் மூன்று நாடாளுமன்ற உரைகள்: 2003 ஜனவரி 10 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்வதற்காக யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் முன்வைத்த பிரேரணை, அதனை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) தலைவர் திரு. இரா. சம்பந்தன், எதிர்க்கட்சியைச் (PA) சேர்ந்த திரு. டிலான் பெரேரா ஆகியோர் ஆற்றிய மூன்று உரைகள் (ஹன்சார்டில் வந்த குறிப்புகளின்படி).

உரை 1: அப்பாதுரை விநாயகமூர்த்தி 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை (திருத்தப்பட்ட வடிவில்) ரத்து செய்ய வேண்டும் அல்லது சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தை இந்த அவை கொண்டுள்ளது என்பதை நான் முன்மொழிகிறேன். இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  1. இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தை நாம் அடையவில்லை.
  2. இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
  3. இது நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
  4. இச்சட்டத்தின் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்த அதிகாரங்கள் அவர்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.

இந்த அவை, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்கச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்தப் பிரேரணையிலேயே நான் குறிப்பிட்டுள்ளேன். இச்சட்டம் 1979 ஜூலை 19ஆம் திகதியன்று, இரண்டாவது முறையாக விவாதிக்கப்பட்டு, அவசரமாக நிறைவேற்றப்பட்டு, 1979 ஜூலை 20ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே இச்சட்டம் முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே அமுலில் இருக்கும் என்றுதான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமரர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், இச்சட்டம் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று அவரிடம் கூறப்பட்டதாகவும் நான் அறிகிறேன். அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தை இச்சட்டம் அடைந்துள்ளதா? இல்லை என்றே நான் கூறுவேன். என்ன நடந்துள்ளது என்றால், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குப் பதிலாக இது பயங்கரவாதத்தை – குறிப்பாக அரச பயங்கரவாதத்தை – உருவாக்கியுள்ளது. ரிச்சர்ட் டி சொய்சா, விஜய குமாரதுங்க ஆகியோரின் படுகொலைகளுக்கும், யாழ்ப்பாணத்தில் கிருஷாந்தி, சாரதாம்பாள் உள்ளிட்ட பல பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் பல தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு செம்மணியில் வீசப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றிற்கும் இந்த அரச பயங்கரவாதமே காரணமாகும். மேலும், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்குப் பதிலாக அரச பயங்கரவாதத்தை உருவாக்கியதன் மூலம் இது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியுள்ளது என்றும் நான் கூறுகிறேன். இது நாட்டில் பல மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்துள்ளது. இச்சட்டம் காவல்துறைக்கு விரிவான அதிகாரங்களை வழங்குகிறது; அந்த அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள ‘குற்ற ஒப்புதல் வாக்குமூலம்’ தொடர்பான விதியின் கீழ், ஒரு நிரபராதி கைது செய்யப்பட்டு, தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வரை தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்; பின்னர் சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் கையெழுத்திட அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். இந்த வாக்குமூலம் ‘குற்ற ஒப்புதல் வாக்குமூலம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மட்டுமே கௌரவ சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வழக்குகளிலும் இதுவே நிகழ்கிறது. நான் 2000க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகியுள்ளேன்; அவற்றில் கிட்டத்தட்ட அனைத்திலும் ‘குற்ற ஒப்புதல் வாக்குமூலம்’ என்று கூறப்படுவதே ஒரே சான்றாக உள்ளது. தாங்கள் அளித்ததாகக் கூறப்படும் இத்தகைய ‘வாக்குமூலங்கள்’ காரணமாக, சுமார் 2500 தமிழர்கள் உயர் நீதிமன்றங்களின் விசாரணைக்காகக் காத்திருக்கும் நிலையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) இதனை எதிர்த்தது. அதன் மதவாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலஞ்சென்ற கௌரவ மைத்திரிபால சேனநாயக்க, அக்கட்சியின் சார்பில் இம்முன்மொழிவை எதிர்த்துப் பேசினார். எந்தவொரு சூழ்நிலையையும் சாதாரண சட்டத்தின் கீழ் கையாள்வதற்கு அரசாங்கத்திடம் போதுமான அதிகாரங்கள் இருப்பதாகவும், இத்தகைய கடுமையான சட்டம் தேவையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். 1972 ஏப்ரல் 5 அன்று குற்றவியல் நீதி ஆணைக்குழு (Criminal Justice Commission) தொடர்பான சட்ட முன்மொழிவு மீதான விவாதத்தில், காலஞ்சென்ற ஜனாதிபதி ஜெயவர்த்தன ஆற்றிய உரையை அவர் இதற்காக மேற்கோள் காட்டினார்:

“சட்டம், ஒழுங்கு என்பவை பரவலாகச் சீர்குலைதல், பரவலான அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் குற்றங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளக்கூடிய ‘பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம்’ (Public Security Ordinance) என்ற சட்ட ஏற்பாடு நம்மிடம் உள்ளது. ஒரு கிளர்ச்சியைக் கூட பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கையாள முடியும்; இச்சட்டம் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் அரசாங்க இயந்திரத்தின் ஊடாகப் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் வழங்குகிறது. அரசாங்கம் அதையும் தாண்டிச் சென்று இராணுவச் சட்டத்தைக் (Martial Law) கூட பிரகடனப்படுத்தலாம். 1952இல் நடைபெற்ற ஹர்த்தால் போராட்டத்தை நாங்கள் கையாண்டோம்; 1971இல் ஏற்பட்ட கிளர்ச்சியை இந்த அரசாங்கம் திறம்படக் கையாண்டது. பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதன் மூலமோ அல்லது இராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்துவதன் மூலமோ திறம்படவும் விரைவாகவும் கையாள முடியாத, ஆனால் ‘குற்றவியல் நீதி ஆணைக்குழுச் சட்டத்தின்’ விதிகள் தேவைப்படும் வகையிலான என்ன வகையான அசம்பாவிதங்கள் இந்நாட்டில் ஏற்படக்கூடும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

இந்தக் கடுமையான சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மறைந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன முன்வைத்த அதே வாதத்தையே நானும் முன்வைக்கிறேன். எந்தவொரு சூழ்நிலையையும் சாதாரண சட்டத்தின் கீழ் கையாள முடியும்; பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் குற்றங்களும் சாதாரண சட்டத்தின் கீழும் குற்றங்களாகவே கருதப்படுகின்றன.

ஜூலை 1995இல் வெளியிடப்பட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) அறிக்கையின்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் (1979இன் 48ஆம் இலக்கச் சட்டம் – இது 1982இன் 10ஆம் இலக்கச் சட்டம், 1988இன் 22ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றால் திருத்தப்பட்டது) இலங்கையின் அரசியலமைப்பிலும், குடியுரிமை, அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்துச் சட்டப் பாதுகாப்புகளையும் இடைநிறுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆரம்பத்தில் ஒரு தற்காலிகச் சட்டமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றபோதும், 1982இல் அது நிரந்தரச் சட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது. இச்சட்டத்தை இதனோடு தொடர்புடைய சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்றதாக மாற்றுவதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவாகவும், விரிவாகவும், முழுமையாகவும் மறுஆய்வு செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

கௌரவ தேவநாயகம் அவர்கள் இச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை முன்மொழிந்தபோது, ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திலும் இதேபோன்ற விதிகள் இருந்தன என்றும், இது அந்தச் சட்டத்தின் நகல் என்றும் கூறினார்.

ஆனால் உண்மையில் அது அப்படி இருக்கவில்லை. ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், ஒரு நபரை ஏழு நாட்கள் மட்டுமே பொலிஸ் காவலில் வைத்திருக்க முடியும். ஆனால் நமது இந்தச் சட்டத்தின் கீழ், ஒரு அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் ஒரு நபரை 18 மாதங்கள் வரை விளக்கமறியலிலோ அல்லது தடுப்புக் காவலிலோ தடுத்து வைத்திருக்க முடியும்.

இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்கான வரையறைகள் குறித்தும், சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதிவிசாரணையை அணுகுவதற்குத் தகுந்த எந்த வழிமுறையும் இல்லாதது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்தின் பிரிவு 16(1)இன் படி, உதவிப் பொலிஸ்மா அதிபர் (ASP) பதவிக்கு மேற்பட்ட தரத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. இந்த விதி, விசாரணை அதிகாரிகளைச் சித்திரவதை உட்பட எந்தவொரு வழியிலும் தகவல்களை அல்லது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறத் தூண்டும் ஒரு நேரடியான ‘ஊக்கக் காரணியாக’ அமைகிறது; ஏனெனில், சித்திரவதையின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு, அத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் மீதே சுமத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் விளைவாக, சித்திரவதைக் குற்றம் நடந்ததான குற்றச்சாட்டை முன்வைத்து நானே உச்ச நீதிமன்றத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிப்படை மனித உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளேன். மேலும், சர்வதேச மன்னிப்புச் சபை பலமுறை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அல்லது குறைந்தபட்சம் அதில் உள்ள வாக்குமூலங்கள் தொடர்பான விதிகளையாவது ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சாட்சியச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள வாக்குமூலம் தொடர்பான சாதாரண விதிகளுக்கு ஏற்றவாறு அதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. ஆனால், இந்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்த கோரிக்கைகள் எல்லாமே செவிப்புலனற்றோர் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கின்றன. இப்போது வெறுமனே ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளிகள்தான் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற 6894/94 இலக்க வழக்கில் செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவருக்கு 70 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பிடம் இருந்த ஒரே சாட்சியம், அவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் வாக்குமூலம் மட்டுமே. வாக்குமூலங்கள் தொடர்பான சட்ட விதிகள் காவல்துறை அதிகாரிகளால் எந்த அளவிற்குத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

அவசரகாலச் சட்டத்தின் 18(1)ஆவது விதியின் கீழ் ஒருவரைக் கைது செய்து, அதே சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைத்து, அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்ற பிறகு, காவல்துறை அதிகாரிகள் சட்ட நடைமுறையை இடையில் மாற்றுகிறார்கள். பின்னர், அவரை ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்’ 7(2)ஆவது பிரிவின் கீழ் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துகிறார்கள்; இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை அவர் காலவரையறையின்றி விளக்கமறியலில் வைக்கப்படுகிறார். அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் அதே சட்டத்தின் கீழ் பிணை பெறுவதைத் தடுப்பதற்காகவே காவல்துறை இத்தகைய சட்ட மாற்றத்தை மேற்கொள்கிறது.

நல்லரத்தினம் சிங்கராஜா என்ற மற்றொருவருக்கும் உயர் நீதிமன்றத்தின் 6825/94 எண் கொண்ட வழக்கில் 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது; அவரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் வாக்குமூலம் மட்டுமே அரசுத் தரப்பின் ஒரே சாட்சியமாக இருந்தது. இத்தீர்ப்பை மாற்றியமைக்க நாங்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்கள் முயற்சிகள் தோல்வியடைந்தன; தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிடம் முறையிடுவதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச சட்ட வல்லுநர்கள் குழு (International Committee of Jurists), அதன் பிரித்தானியப் பிரிவான ‘ஜஸ்ரிஸ்’ (Justice) ஆகியவற்றின் சார்பில், ‘ஜஸ்ரிஸ்’ அமைப்பின் செயற்குழுத் தலைவரான போல் சிகார்ட் (Paul Sighart) தனது அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள விதிகள் மிகவும் பரந்த அளவிலானவை என்று குறிப்பிட்டுள்ளார்: “சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றும் பிற சுதந்திரமான ஜனநாயக நாடுகளில்—அவை அரசியல் உள்நோக்கம் கொண்ட வன்முறைகளால் எவ்வளவுதான் பாதிக்கப்பட்டிருந்தாலும்—இத்தகைய அதிகாரங்களை வழங்கும் எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லை. உண்மையில், இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 11ஆவது பிரிவின் கீழ் கட்டுப்பாட்டு ஆணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் தொடர்பான ஒரே ஒரு முன்னுதாரணம் மட்டுமே அறியப்படுகிறது; அது—பேராசிரியர் லியரி (Professor Leary) தனது அறிக்கையில் சரியாகச் சுட்டிக்காட்டியது போல—தற்போது தென்னாபிரிக்காவில் நடைமுறையில் உள்ள அதேபோன்ற சட்டமாகும். ‘அனைத்து வகையான இனப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை’ இன்னும் அங்கீகரிக்காத, அதே வேளையில் தென்னாபிரிக்க ஆட்சியையும் அதன் இழிவான செயல்களையும் கண்டிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ள இலங்கையைப் போன்ற ஒரு பொதுநலவாய (Commonwealth) நாட்டுக்கு, ஒரு வெளிநாட்டுப் பார்வையாளரால்—அவர் எவ்வளவுதான் சிறந்தவராகவும் நடுநிலையானவராகவும் இருந்தாலும்—இத்தகைய ஒப்பீடு பகிரங்கமாகச் செய்யப்படுவது ஆழ்ந்த மனவேதனையை அளிப்பதாகவே இருக்கும்.” அந்தப் பழைய காயத்தை மீண்டும் கிளறுவதில் தனக்கு இயல்பாகவே தயக்கம் இருந்தபோதிலும், பேராசிரியர் லியரியின் முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார். இத்தகையதொரு விதிமுறை, நாகரிகமடைந்த எந்தவொரு நாட்டின் சட்டத் தொகுப்பிலும் ஒரு கறைபடிந்த அம்சமாகவே அமைகிறது.

சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகிய இரண்டும் நியாயமற்றவை என்பதே தனது கருத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1983 ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்தது போன்ற தீவிரமானதும் பரவலானதுமான வன்முறைச் சம்பவங்கள் ஏற்படும்போது மட்டுமே, அதுவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையிலான குறுகிய காலத்திற்கு மட்டுமே இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவது நியாயமானதாக இருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். பேராசிரியர் லியரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியது போல, பயங்கரவாதத் தடைச் சட்டம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்றும், அது ‘தமிழ்ப் புலி’களின் (விடுதலைப் புலிகள்) உறுதியை வலுப்படுத்துவதோடு, சட்டத்தை மதித்து நடக்கும் தமிழ்ச் சமூகத்தையும், அவர்களது சட்டபூர்வமான அரசாங்கத்திடமிருந்து அந்நியப்படுத்துவதற்கே உதவுகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட நோக்கத்தைக்கூட நிறைவேற்றவில்லை என்றும், புலிகளைக் கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, காவல்துறைக்கு எந்த வகையிலும் இது உதவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமரர் திரு. அ. அமிர்தலிங்கம் உட்பட எதிர்க்கட்சியில் இருந்த எந்தவொரு தமிழ் உறுப்பினரும் விவாதத்தில் பங்கேற்கவோ அல்லது இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கவோ இல்லை என்பது வருந்தத்தக்கது. ஒருவேளை, இந்தச் சட்டம் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே அமுலில் இருக்கும் என்று திரு. அமிர்தலிங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்டிருக்கலாம்.

அக்காலத்தில் கொழும்பு நகர மண்டபத்துக்கு (Town Hall) வெளியே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இந்தச் சட்டத்தை எதிர்க்கும் பொறுப்பு LSSP (லங்கா சமசமாஜக் கட்சி) வசமே இருந்தது.

இந்தக் கடுமையான, மனிதாபிமானமற்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, 1980களின் முற்பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய நல்லுறவு சீர்குலையத் தொடங்கியது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன். அக்காலகட்டத்தில், இந்தியாவின் அப்போதைய வெளியுறவு அமைச்சரும் தற்போதைய பிரதமருமான திரு. வாஜ்பாய் அவர்கள், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து, இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். அதேபோல கொழும்பிலும், அக்காலகட்டத்தில் இலங்கையிலிருந்த இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்தித்து, இக்கொடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த இந்திய அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

இக்கொடுமையான சட்டத்தை இந்நாட்டின் சட்டப் புத்தகத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் கூறுகிறேன். எனவே, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து, சட்டப் புத்தகத்தில் உள்ள இந்த அவமானகரமான கறையை நீக்குமாறு இந்த உயரிய சபையின் உறுப்பினர்கள் அனைவரையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றிருந்தபோது, கௌரவ பிரதமர் அவர்கள் ‘சர்வதேச மன்னிப்புச் சபை’ அமைப்பின் பிரதிநிதியைச் சந்தித்தார். அப்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாகவோ அல்லது அதற்குப் பதிலாகக் குறைவான கட்டுப்பாட்டு அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதாகவோ அவர்களிடம் உறுதியளித்தார்.

நன்றி.

உரை 2: இரா. சம்பந்தன்

ஐயா, கௌரவ உறுப்பினர் திரு. விநாயகமூர்த்தி அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான ஒரு பிரேரணையை முன்மொழிந்துள்ளார். குறிப்பாக இச்சூழ்நிலையில், இப்பிரேரணை மிகவும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன்.

இது ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் பிரேரணையாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு அல்லது சட்ட அமுலாக்கம் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் அரசாங்க அமைச்சர்கள் எவரும் இதில் பங்கேற்காதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது. இந்த நேரத்தில் இந்தச் சபையில் இருக்கும் அமைச்சர்களில், சட்ட விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் இங்கு இருந்திருக்கலாம். பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நீதித் துறை அமைச்சர் அல்லது குறைந்தபட்சம் வெளியுறவுத் துறை அமைச்சராவது இங்கு இருந்திருக்கலாம். ஆனால், சபையில் ஓர் அமைச்சரைக் கூட நான் காணவில்லை. சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை மட்டுமே நான் காண்கிறேன்; அவர்கள் கௌரவ அஸ்வர், கௌரவ மகேஸ்வரன் ஆகியோர் ஆவர்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என்பது இந்நாட்டில் பெரும் சிக்கல்களையும், குறிப்பாகத் தமிழ் மக்களிடையே பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்திய ஒரு சட்டமாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று நாட்டில் போர் இல்லாத, அமைதி நிலவுகின்ற ஒரு சூழலை நாம் அடைந்துள்ளோம். இத்தகைய சூழலில்தான், இச்சட்டத்தை ரத்து செய்வதற்கான இந்தத் தீர்மானத்தை கௌரவ உறுப்பினர் கொண்டு வந்துள்ளார். ஏனெனில், இச்சட்டம் எந்தப் பயனும் அளிக்காதது மட்டுமல்லாமல், தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது என்பது அவரும் நாமும் முன்வைக்கின்ற ஒரு கருத்தாகும். இந்நாட்டின் சட்டப் புத்தகத்தில் இச்சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியம் ஏதுமற்ற ஒரு நிலையை நாம் இன்று அடைந்துள்ளோம். ஐயா, இந்நாட்டின் சட்ட வரலாற்றிலேயே மிகவும் கடுமையானதும் கொடூரமானதுமான சட்டம் இதுவாகும். எந்தவொரு நாகரிகமடைந்த நாட்டின் சட்ட அமுலாக்கக் கட்டமைப்பிற்கும் களங்கம் விளைவிக்கக்கூடிய வகையிலான விதிகள் இதில் அடங்கியுள்ளன. நபர்களைக் கைது செய்தல், சொத்துகளைச் சோதனையிடுதல், விசாரணைகள், தடுத்து வைத்தல், சாட்சியம் தொடர்பான விதிகள் எனப் பல்வேறு அம்சங்களிலும் இதில் மிகக் கடுமையான விதிகள் உள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளால் இச்சட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தைக் கண்டித்துள்ள சில அமைப்புகளைப் பற்றி இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்த விஷயத்தை மீண்டும் கூறி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இந்தச் சட்டம் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், இச்சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரையறை எதுவும் வழங்கப்படவில்லை. ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ என்று பெயரிடப்பட்டிருந்தாலும், ‘பயங்கரவாதம்’ என்றால் என்ன என்பது சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. ஐயா, இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது: அதாவது அரசாங்கம் தான் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலேயே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இச்சட்டம் இயற்றப்பட்ட போது, பயங்கரவாதம் என்ற குற்றத்தை (அது எவ்வகைப்பட்டது என்று) வரையறுக்கக்கூட அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என்பது. உண்மையில், இச்சட்டம் இயற்றப்பட்ட போது அது முக்கியமாகத் ‘தமிழ் ஆயுதப் போராட்டத்தை’ ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது. இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே நிலவிய கடும் அதிருப்தியின் விளைவாகவே தமிழ் இளைஞர்களிடையே ஆயுதப் போராட்டம் வளர்ந்தது; சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் தமிழ் மக்கள் நீண்ட காலமாக மோசமாக நடத்தப்பட்டதன் காரணமான வெளிப்பாடே அந்த ஆழ்ந்த அதிருப்தியாகும். பாரம்பரியமாகவே மிகவும் படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியதற்குக் காரணம் அந்த அதிருப்திதான். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள், அவர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பகுதிகளில் உள்ள வளங்களை ஒதுக்குவதில் காட்டப்பட்ட பாகுபாடு, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மறுக்கப்படுதல் போன்றவைதான் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிக்கான காரணங்களாக அமைந்தன.

பின்னர்தான் ஐயா இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த மிகக் கடுமையான சட்டத்தின் மூலம் தமிழ் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்றும், அதோடு மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைக் கையாள்வதைத் தவிர்த்து அவற்றை அலட்சியப்படுத்திவிடலாம் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், இந்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்தபடி, தமிழ் ஆயுதப் போராட்டத்தை அந்த வகையில் கையாள்வது சாத்தியமாகவில்லை. ஒரு கெரில்லா இயக்கமாகத் தொடங்கிய எல்.டி.டி.ஈ (LTTE), காலப்போக்கில் இலங்கை அரசாங்கத்தின் வழக்கமான ஆயுதப் படைகளை எதிர்த்து நிற்கும் வல்லமை கொண்ட ஓர் இராணுவமாகவே மாறியது. பயங்கரவாதத் தடைச் சட்டமும், அச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் – குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் – நடத்தப்பட்ட விதமும், விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு வலுவடைவதற்குக் கணிசமான அளவில் பங்களித்தன என்று நான் கருதுகிறேன். 1980களின் தொடக்கத்தில் ஒரு சாதாரண கெரில்லாப் படையாகத் தொடங்கிய அவ்வமைப்பு, இலங்கை ஆயுதப் படைகளை நேருக்கு நேர் மோதும் மரபுசார் போரில் எதிர்கொள்ளக்கூடிய ஒரு சக்தியாக உருவெடுத்ததற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.

எனவே ஐயா, திரு. வினாயகமூர்த்தி அவர்கள் தனது பிரேரணையில் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியது போல, இந்தச் சட்டத்தை இயற்றியதன் மூலம் அதன் நோக்கம் நிறைவேறவில்லை என்பது மட்டுமல்லாமல், அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது என்றும் நான் கருதுகிறேன். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக இந்நாட்டில் நிகழ்ந்த கடுமையான மனித உரிமை மீறல்கள் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போயுள்ளனர்; அவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; நியாயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; போதிய ஆதாரங்கள் இல்லாமலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில், சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்கள் மீது நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

தமிழ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் நேர்ந்தது இதுதான். தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மட்டுமல்ல, சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கூட இச்சட்டத்தின் கீழ் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் மிகக் கொடூரமான, தீய வழிகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டமாக இருந்து வருகிறது; இது எதிர்மறையான விளைவுகளையே தந்துள்ளது. இது தீங்கு விளைவிப்பதாக அமைந்ததோடு, ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிக்கே வழிவகுத்தது; இச்சட்டத்தால் பயனுள்ள அல்லது நல்ல நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை. எனவே, இந்நாட்டின் சட்டப் புத்தகத்தில் இச்சட்டம் இனிமேலும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலையை நாம் நிச்சயமாக அடைந்துவிட்டோம் என்று நான் கருதுகிறேன். இந்நாட்டில் நிலவிய கடுமையான தமிழ் மக்களின் அதிருப்தியை இராணுவ ரீதியாகவோ அல்லது ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ போன்ற சட்டங்களைப் பயன்படுத்தியோ தீர்க்க முடியாது என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அதிருப்தியை அரசியல் ரீதியாகவே அணுக வேண்டும் என்பது உணரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாய்லாந்தில் நிறைவடைந்த இறுதிக்கட்டம் உட்பட, தற்போது நடைபெற்று வரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அதுதான் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐயா, இன்று நம்மிடையே போர் நிறுத்தம் நிலவுகிறது; அதாவது, கிளர்ச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கூட தங்கள் கிளர்ச்சியைக் கைவிட்டுள்ளனர். இன்று இந்நாட்டில் ஆயுத மோதல்கள் எதுவும் இல்லை; குறிப்பாக, ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஐயா, இந்தச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட தீங்குகள், கடுமையான மனித உரிமை மீறல்கள் – குறிப்பாக விரிவான, வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்டிருந்த ஆயுதப் படை, காவல்துறையைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை – ஆகியவற்றைத் தாண்டி, இந்தச் சட்டம் மிகக் கடுமையான முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் முழுமையாக மீறப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, சட்டப் புத்தகத்தில் இந்தச் சட்டம் தொடர்ந்து இடம்பெற வேண்டிய அவசியமே இல்லாத ஒரு கட்டத்தை நாம் இப்போது அடைந்துள்ளோம். இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது நிகழ்ந்தவற்றிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்நாட்டுச் சமூகத்திற்கும், நாட்டின் சமூகக் கட்டமைப்பிற்கும் இச்சட்டம் இழைத்த தீங்கிலிருந்து நாம் பாடம் பெற வேண்டும். தமிழர்களின் கிளர்ச்சி வளர்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது இந்தச் சட்டமே ஆகும். ஓர் இளம் தமிழரை நீங்கள் கைது செய்து சித்திரவதை செய்ததன் விளைவாக, பத்து இளம் தமிழர்கள் ஆயுதமேந்திய இயக்கத்தில் இணைந்தனர்.

எனவே ஐயா, நாட்டில் அமைதி நிலவும், போர் இல்லாத இக்காலகட்டத்தில், மிகவும் மோசமான, கொடூரமான முறையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் நாட்டின் சமூகக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பெரும் பாதிப்பை நாம் அனைவரும் அறிவோம். இந்நாட்டின் சட்டப் புத்தகத்தில் இச்சட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று நான் கருதுகிறேன். திரு. வினாயகமூர்த்தி அவர்களால் இன்று முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தின் நோக்கமும் அதுவேயாகும்.

இது தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவ்வப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும்; இது சிங்கள மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். மனித உரிமைகளைப் பேணிக் காக்க விரும்பும் அனைவரும், சட்ட அமுலாக்க அமைப்புகள் சட்டத்தை முறையாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய விரும்பும் அனைவரும், நாகரிகமான நிர்வாகத்தில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து இச்சட்டத்தை எதிர்க்க வேண்டும். உண்மையில், இச்சட்டம் இனிமேலும் சட்டப் புத்தகத்தில் (நடைமுறையில்) இருக்கக்கூடாது என்பதே இந்நாட்டின் அனைத்துச் சிந்தனையாளர்கள், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் தெளிவான கருத்தாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.

இவ்விஷயத்தில் அக்கறை கொண்டிருக்க வேண்டிய அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் இங்கே இல்லை என்றாலும், இச்சட்டம் இனிமேலும் சட்டப் புத்தகத்தில் இருக்கக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தத் தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இச்சட்டத்தை ரத்து செய்யவும், நாட்டின் சட்டப் புத்தகத்திலிருந்து இதனை நீக்கவும் அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி, ஐயா.

உரை 3: டிலான் பெரேரா

சபாநாயகர் அவர்களே, நன்றி. விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு டி. மகேஸ்வரன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேவேளையில், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு சட்டத்தைப்பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்தச் சட்டம் இந்த அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது நான் ஒரு சட்ட மாணவராக இருந்தேன்; அப்போதே, சட்ட மாணவர்கள் சங்கத்தில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து, இந்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டாம் என்று வலியுறுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. எனவே, எங்கள் கட்சிகளின் – அதாவது இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணி (People’s Alliance) – நிலைப்பாடு என்னவென்றால், நாங்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். உண்மையில், இந்த அவையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) குறித்து விவாதிக்கப்பட்ட போதே நான் இதைக் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்ட போது, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்படக்கூடியவர்கள் என்பதையும், விரும்பினால் நம்மால் ஒன்றிணைய முடியும் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் காட்ட வேண்டிய தருணம் இது என்று நான் கூறினேன். 225 உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு விஷயம் ஏதேனும் இருக்குமானால், அது ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ (தற்காலிக ஏற்பாடுகள் சட்டம்) ரத்துச் செய்வதுதான் என்று நான் சொன்னேன். அரசாங்கமோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எனது நல்ல நண்பர்களோ இதைத் தொடர்ந்து முன்னெடுக்கவில்லை என்றாலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் விவாதிக்கப்பட்ட போது – இது ஹன்சார்ட் (Hansard) குறிப்புகளில் பதிவாகியுள்ளது – நான் இந்த இருக்கையிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், 225 உறுப்பினர்களும் ஒன்றிணையக்கூடிய ஒரு களம் இது என்றும் வலியுறுத்திக் கூறினேன் என்பதை நான் சொல்லியாக வேண்டும். கடந்த வரவு-செலவுத் திட்டத்தின் போது அதிபர் அவர்களின் ஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போதும் நான் இதை மீண்டும் வலியுறுத்தினேன். “நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம்” என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது, ஐயா? பாங்கொக் நகரில் வைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ரத்து செய்யுமாறு திரு. அன்ரன் பாலசிங்கம் அரசாங்கத்திடம் கோரியபோது, அரசாங்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அளித்த பதில் இதுதான்:

“இச்சட்டத்தை ரத்து செய்வதற்கான தருணம் இதுவல்ல. இதன் சில பகுதிகளை நாம் திருத்தலாம்; ஆனால் இதை முழுமையாக ரத்து செய்வதற்கான நேரம் இதுவல்ல.”

பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இந்தப் பதிலுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அதாவது, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியை ஆதரிக்கும் மக்களையும் மீண்டும் துன்புறுத்துவதற்காகவே அவர்கள் இந்தச் சட்டத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள். இச்சட்டம் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் அவர்கள் தொடர்ந்து இச்செயலையே செய்து வருகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காகவே ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (PTA) கொண்டுவரப்பட்டதென்றால், அது எவ்வாறு பயங்கரவாதத்தை ஒடுக்கியது என்று எனக்குச் சொல்லுங்கள்? உண்மையில், பயங்கரவாதம் அதிகரித்ததுதான் மிச்சம். 1989ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? தமிழர், சிங்களவர் அல்லது முஸ்லிம் எனப் பாகுபாடின்றி, எத்தனை அப்பாவி மக்கள் உயர் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன? தமிழர்கள், சிங்கள இளைஞர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அது எவ்வாறு நிகழ்ந்தது? இந்தச் சிறப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியே அது நடந்தது.

ஐயா, “இவர் பொய் சொல்கிறார், அவர் பொய் சொல்கிறார்” என்று இங்கே மீண்டும் மீண்டும் வாதிடுவதில் பயனில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள்—அவர்கள் சிங்களவராகவோ, தமிழராகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கலாம்—அநியாயமாகத் துன்புறுத்தப்பட்டனர். அத்துடன் இந்நாட்டின் உயர் நீதிமன்றங்களில் தேவையற்ற வகையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அரசாங்கம் அவர்களைத் தண்டிக்கவே இச்சட்டத்தைப் பயன்படுத்தியது. இதை நாம் ஒப்புக்கொள்வோம்; இதில் நாம் ஒருமித்த கருத்தைக் கொண்டிருப்போம்.

எனவே சபாநாயகர் அவர்களே, அமைதி மலர்வதாகவும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைவதாகவும் அரசாங்கம் கூறும்போது, இந்நாட்டின் சட்டப் புத்தகங்களில் ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ தொடர்ந்து இடம்பெற வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

நன்றி.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்