மலையகக் காமன் கூத்தும், வழிபாட்டுச் சடங்கு நிகழ்த்துகைகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
28 நிமிட வாசிப்பு

மலையகக் காமன் கூத்தும், வழிபாட்டுச் சடங்கு நிகழ்த்துகைகளும்

October 20, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

இலங்கை மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வழிபாட்டு மரபிலும் சமூக வாழ்வியலிலும் காமன் கூத்து ஒரு நிகழ்த்துகைக் கலையாக மட்டுமன்றி, சமயம், இயற்கை வழிபாடு, வர்க்க அடையாளங்களை உள்ளடக்கிய தொன்மையான சடங்கு வடிவமாகவும் திகழ்கிறது. பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட உழைக்கும் தமிழ் மக்கள், தங்களது தாய்நிலத்துப் பண்பாட்டு வேர்களைப் புதிய புவியியல் சூழலில் தகவமைத்துக் கொண்டதன் முதன்மை வெளிப்பாடாக இக்கூத்து விளங்குகிறது. காமன் கூத்தின் ஒவ்வொரு படிநிலையும் ஆழ்ந்த சடங்கு நெறிகளாலும் இறுக்கமான நம்பிக்கைகளாலும் பிணைக்கப்பட்டு, புனித வெளியையும் சமூக ஒருமைப்பாட்டையும் மீளுருவாக்கம் செய்கிறது. இக்கலை வடிவம் வெறும் கதையாடலை மேடையேற்றும் சாதாரண நாடகமல்ல. மாறாக அது சமூகத்தின் கூட்டு மன உணர்வுகள், உளவியல் கருத்தாக்கங்கள், வேளாண்மைச் சுழற்சி, நாட்டார் அரங்கியல் ஆகியவை ஒருங்கே கலந்த ஒரு சடங்கியல் கூத்து வடிவமாகும். இக்கூத்து ஒரே நேரத்தில் சடங்காகவும், அழகியல் கலை வடிவமாகவும் நிகழ்த்தப்படும் நுட்பத்தை நிகழ்த்துகைக் கோட்பாடுகளின் துணைகொண்டு ஆராய்வது சமூக மானிடவியல் தளத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.

இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர், கொக்கோ ஆகிய பயிர்களைக் கொண்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் மத்திய பகுதியாகிய மலைநாட்டில் இப்பயிர்களைச் செய்வதற்கு அடர்ந்து வளர்ந்திருந்த காடுகள் தடையாக இருந்தன. இவற்றை அழித்துத் தோட்டங்களை உருவாக்குவதற்கு ஏராளமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இத்தொழிலில் ஈடுபடுவதற்கு உள்ளூர்வாசிகள் எவரும் முன்வராத காரணத்தால் இந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களை ஆங்கிலேயர் அழைத்து வந்தனர். முதற் தொகுதியினர் 1823ஆம் ஆண்டு இங்கு கொண்டுவரப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர் குடும்பங்கள் மலைநாட்டின் உயர்நில, இடைநில, தாழ்நிலப் பகுதிகளில் குடியேறின. காடுகளாகக் கிடந்த மலைநாட்டைத் திருத்திப் பொன்கொழிக்கும் தோட்டங்களாக மாற்றியமைத்த பெருமை இவர்களையே சாரும்.

இவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்தியது மட்டுமல்லாமல், ஈழத்துக் கலை வரலாற்றிலும் புதிய பரிமாணத்தை வழங்கினர். மலையகத் தொழிலாளர்கள் மத்தியில் பல்துறை கிராமியக் கலைகளில் வல்லமை வாய்ந்த இசைக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் பரந்து காணப்பட்டனர். இந்தியாவில் தாம் ஆடியும் பாடியும் வந்த அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர், காமன் கூத்து போன்ற கலைகளை இங்கும் தக்கவைத்துக் கொண்டனர். பெருந்தோட்ட அமைப்பானது வெளித்தொடர்புகளற்ற தனிமையான வாழ்க்கையை உருவாக்கிய சூழலில், கடுமையான உழைப்பு, குளிர், அட்டைக்கடி, கொடிய மிருகங்கள், தொற்றுநோய்கள் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்களுக்கு மன ஆறுதல் தரும் பண்பாட்டு வடிகாலாக இக்கூத்துகள் விளங்கின. தங்களின் இருப்பையும் கூட்டு நினைவுகளையும் தக்கவைத்துக் கொள்ளும் கருவியாகத் தொழிலாளர்கள் காமன் கூத்தை மலையக மண்ணில் தகவமைத்துக் கொண்டனர்.

மன்மதன், மாரன், மதனன், வசந்தன், வேள், கருப்புவில்லி, மலர்க்கணையோன் என்றெல்லாம் அழைக்கப்படும் காமன், சிற்றின்பத்தை உண்டாக்கிச் சந்ததி விருத்திக்கும் பயிர்ச்செழுமைக்கும் துணைநிற்கும் ஒரு தெய்வமாகக் கருதப்படுகிறான். காமனுடைய வரலாறு மிகவும் தொன்மையானது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள் தொடக்கம் நாட்டார் இலக்கியங்கள் வரை இவனுடைய செல்வாக்கு நீடித்து நிற்கிறது. சங்க இலக்கியங்களான கலித்தொகை மற்றும் அகநானூற்றில் வசந்த காலத்தை வரவேற்கும் காமன் விழா அல்லது வேனில் விழா பற்றிய குறிப்புகள் உள்ளன. உதாரணமாக, பின்வரும் பாடலை நோக்கலாம்:

“பனி நீங்கிப் பைங்குழைய நனை தோன்றத் தளிர் ஈனப்

புனிற்று நல் இளவேனில் காமர உலந்தெனக்

கலந்தவர் நாணாராக் காதலார் வைகலும்

புலம்பு கொண்டு உறைவார்க்குப் புணர்வு ஆகப் புனைந்தவர்

அலங்கலந் தாரவர் காமன் வேள் விழவெனக்

கலங்கினர் மாந்தர் களி கொள்வ தனைத்தும் கண்டு…”

மேலும், அகநானூற்றில் கொங்கு நாட்டில் நடைபெற்ற உள்ளி விழா பற்றிய குறிப்பு, மக்கள் மணிகளைக் கட்டிக்கொண்டு தெருக்களில் ஆடி மகிழ்ந்த வசந்த காலக் காமன் கொண்டாட்டத்தின் தொன்மையை உணர்த்துகிறது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பூம்புகார் நகரில் நிகழ்ந்த காமன் வேள் கோட்டம், வேனில் விழாக்கள் விவரிக்கப்படுகின்றன. இலக்கியங்களில் இளவேனிற்காலக் கொண்டாட்டமாக விளங்கிய இவ்விழா, கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகியவற்றின் தொன்மக் கதைகளுடன் இணைந்து சடங்கியல் நாடகமாக உருப்பெற்றது. தேவர்கள் அசுரர்களால் துன்பமடைந்த சூழலில், அவர்களைக் காக்கச் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து முருகன் அவதரிக்க வேண்டியிருந்தது. ஆனால், சிவன் மோனத் தவத்தில் ஆழ்ந்துவிட்டதால், பிரம்மனதும் இந்திரனதும் ஆலோசனையின் பேரில் சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதன் மலரம்புகளை எய்தான். தவம் கலைந்த சிவன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காமனை எரித்துச் சாம்பலாக்கினார். கணவனை இழந்த ரதிதேவியின் உள்ளமுருகும் கண்ணீருக்கும் பக்திக்கும் இரங்கி, சிவன் காமனை உருவமற்ற அநங்கனாக மீண்டும் உயிர்ப்பித்தார். அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்றும் மற்றவர் கண்களுக்குப் புலப்படமாட்டான் என்றும் அருளினார். தக்கனின் தவத்தைச் சிவன் கலைத்த பிறகு இமயமலையில் அவர் தீவிர தவம் மேற்கொள்வதாகவும், அதனால் எழுந்த வெப்பத்தால் தேவலோகம் தவிப்பதாகவும் சித்தரிக்கப்படுகிறது. இந்நிலையைத் தவிர்க்க இந்திரன் அனுப்பும் ஓலையைப் பெற்றுக்கொண்டு புறப்படும் மன்மதன், சிவனின் கோபத்தால் எரிந்து சாம்பலாகி, பின்னர் மீண்டும் உயிர்பெறும் கதையானது மலையகக் கூத்துப் பிரதிகளில் நாட்டார் பாணியில் நயம்படப் பாடப்படுகிறது. 

காமன் கூத்து நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்னரான சடங்குகள் ஓர் உலகியல் வெளியைப் புனித வழிபாட்டுத் தளமாக மாற்றியமைக்கும் ஆழ்ந்த சடங்கு நெறிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்து அமாவாசைக்குப் பின்வரும் மூன்றாம் பிறை நாளிலிருந்து முப்பது நாட்கள் வரை காமவேள் நோன்பு நோற்கப்படுகிறது. விழாவுக்கு நாள் குறித்ததும், காமன் கூத்து நடத்தும் மாஸ்டர், அதாவது தலைமை நெறியாளரான அண்ணாவியார், தலைமையில் கலைஞர்களும் விரதமிருப்போரும் ஊரின் பிரதான ஆலயத்தில் இருந்தோ, அல்லது அவ்வூரில் காமன் கூத்தைத் தொடங்கி வைத்த கூத்து மாஸ்டரின் வீட்டிலிருந்தோ ஊர்வலத்தைத் தொடங்குவது வழக்கம். பெரும்பாலும் தொடங்கி வைத்த மாஸ்டர் வீட்டிலிருந்து செல்வதே பெரும்பாலான ஊர்களில் கடைப்பிடிக்கப்படுகின்ற மரபாகும். அவர்கள் செல்லும்போது, கம்பத்திற்கான பொருட்களுடன் பூசைக்கான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் அல்லது நீரோடைக்கு அருகில் உள்ள எல்லை தெய்வத்தின் கோயில்களுக்குச் செல்வர். அங்கே பாலித்தல் என்னும் நிகழ்ச்சி இடம்பெறும்.

குடத்தில் அல்லது செம்பில் தூய நீர் எடுத்து, மாவிலை, தேங்காய் வைத்துப் பூசை செய்யப்படும். பின்னர், ‘மன்மதஸ்தம்பம்’ அல்லது ‘காமண்டி கம்பம்’ உருவாக்கப்படுகிறது. நன்கு விளைந்த பேய்க்கரும்பு, செங்கரும்பு, கொட்டத்தண்டு (ஆமணக்கு), ஆல், அரசு, துவரை, மூங்கில் ஆகியவற்றின் தண்டுகளையும் இலை தழைகளையும் ஒன்றாகச் சேர்த்து, சம்பா வைக்கோற் புரியால் சுற்றி இறுகக் கட்டுவர். பேய்க்கரும்பு மற்றும் செங்கரும்பு ஆகியவை இனிமையின் அடையாளமாகவும், விவசாயச் செழிப்பின் குறியீடாகவும், மன்மதனின் கரும்பு வில்லின் வடிவமாகவும் திகழ்கின்றன. வெட்டி நட்டாலும் மீண்டும் துளிர்க்கும் கொட்டத்தண்டு (ஆமணக்கு), அழியாப் பெருவாழ்வையும் மறுஜென்மத்தின் மீளுருவாக்க ஆற்றலையும் உணர்த்துகிறது. அதேபோல, துவரையும் மூங்கிலும் உறுதியான வளர்ச்சிக்கும் நீண்ட ஆயுளுக்கும் சான்றாக நிற்க, வைக்கோற் புரி என்பது இயற்கைக்கும் மனிதனுக்குமான பிணைப்பின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இக்கம்பத்தின் நடுவே ஒரு விராட்டியையும் (வரட்டி) பொன்னையும் வெள்ளியையும் வைத்துப் பிணைப்பர். சில ஊர்களில், கிடைக்கின்ற ஏனைய மரக்கிளைகளையும் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, கந்தக்கட்டிய பிரதேசத்தில் மாங்கொத்து, வேம்பு போன்றவையும் சேர்த்துக் கட்டப்படுகின்றது.

கம்பம் உருவாக்கப்பட்டதும், கலைஞர்கள் அனைவரும் நீராடிய பின்னர், விழாவிற்குரிய புனித நீரைச் செம்பில் எடுத்துப் பூசைகள் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து கூத்தில் பங்குகொள்வோரைப் புனிதப்படுத்துவதற்கு அறிகுறியாக மஞ்சள் நீரில் தோய்த்த நூலைக் கையில் கட்டும் காப்புக் கட்டுதல் சடங்கு நடைபெறும். காப்புக் கட்டிய கணத்திலிருந்து கூத்து முடியும் வரை கலைஞர்கள் அசைவ உணவுகளையும் மதுபானங்களையும் தவிர்த்து, தூய பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துக் கடும் விரதத்தை மேற்கொள்வர். பெரும்பாலும் கன்னி கழியாதவர்களே இந்நோன்பை முக்கியமாக மேற்கொள்வர். கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதிலும் ஒரு சடங்கு நெறி நிலவுகிறது. பாத்திரத் தேர்வில் எந்தவிதத் தன்னிச்சையான விருப்புவெறுப்பும் இடம்பெறாமல் தெய்வத்தின் அருள்படியே தேர்ந்தெடுக்கும் சடங்கு சில இடங்களில் பின்பற்றப்படுகிறது. வெற்றிலையில் விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை வைத்து மடித்து பொட்டலமாக உருவாக்கப்படும். விரதமிருக்கும் கலைஞர்கள் தேர்வு செய்யும் பொட்டலத்தின் அடிப்படையில் மன்மதன், ரதி, சிவன் போன்ற வேடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன; இது தெய்வத்தின் திருவுளப்படியே நடப்பதாகக் கருதப்படுகிறது.

கம்பம் சேர்த்தெடுத்த பின்னர் அதற்குப் பக்தியுடன் பூசை செய்து, தப்பு வாத்தியம் முழங்கச் செம்பு நீரோடும் கரகத்தோடும் ஊர்வலமாக வந்து காமன் பொட்டலை அடைவர். இந்நிகழ்ச்சியைக் குடியழைத்து வருதல் என்பர். காமன் பொட்டல் என்பது பெரும்பாலான தோட்டங்களில் இக்கூத்திற்கென நிரந்தரமாக ஒதுக்கப்பட்ட பொதுவான பொட்டல் இடமாகும். அங்கே முதல் வருடம் காமன் ஊன்றிய இடத்திலேயே ஒரு குழி தோண்டப்படும். அக்குழிக்குள் முந்தைய ஆண்டு பக்தர்களால் இடப்பட்ட காசுகளை எடுத்துப் பகிர்ந்துகொள்வர். இந்நாணயங்களை வீட்டில் வைத்தால் பிணிகள் தீரும் என்பதால் மக்கள் இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுவர். மேலும், மூல வாத்தியாரால் தாய்நிலமான இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் புனிதப் பிடிமண் அக்குழியில் இடப்படும். அதனுள் பால் ஊற்றி, மன்மதஸ்தம்பத்தை ஊன்றி மணலிட்டு மூடுவர். மணலின் மேல் சாணத்தால் மெழுகி, அதன்மேல் நவதானியங்களை இட்டுப் பாலூற்றிக் கற்பூர தீபம் காட்டுவர். சைவக் கிரியைகளில் வரும் அங்குரார்ப்பணம் அல்லது முளைப்பாலியே இந்நாட்டார் சடங்கில் முளைப்பாரியாக வளர்க்கப்படுகிறது.

அத்தினத்திலிருந்து பதினைந்து முதல் பதினெட்டு நாட்கள் வரை ஒவ்வொரு இரவும் மன்மத ஸ்தம்பத்திற்குத் தூப தீபப் பூசைகள் தொடரும். இப்பூசைகளைப் பிராமணக் குருக்கள் செய்வதில்லை; தோட்ட மக்களுள் ஒருவரே பூசாரியாகக் கடமையாற்றுவார். கம்பம் நட்ட மறுநாளிலிருந்து காமன் கூத்து முழு வீச்சில் தொடங்குவதுடன், கூத்து நிகழ்த்துகையின் அடுத்தடுத்த கட்டமைப்பு நிலைகளும் ஆரம்பமாகின்றன. முன்னைய காலத்தில் இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை அல்லது நள்ளிரவு வரை தொடர்ந்து பல நாட்கள் இக்கூத்து ஆடப்பட்டது. ஆனால் சமகாலத்தில் இது பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. மாஸ்டரும் பக்கப்பாட்டுக்காரர்களும் பாட, தப்பு வாத்தியம் முழங்க நடிகர்கள் அதற்கேற்ப ஆடுவர். கடவுள் வாழ்த்தாக ஆனைமுகப் பிள்ளையாரையும் விக்கின விநாயகரையும் வாழ்த்திப் பாடி, ஒவ்வொரு பாடலடியும் பாடி முடியத் தப்பு வாத்தியம் தனித்து அதிரும்போது கூத்து களைகட்டத் தொடங்கும்.

காமன் பண்டிகையின் முக்கியமானதொரு கட்டத்தில் ரதி – மன்மதன் திருமணச் சடங்கு முறைப்படி நிகழ்த்தப்படுகிறது. அதாவது ஒரு வீட்டில் திருமணச்சடங்கு எவ்வாறு நிகழுமோ (முன்னமே மலையகத்தில் திருமணச் சடங்குகள் என்னும் கட்டுரைப் பகுதியில் திருமண முறைகளை விளக்கியிருக்கிறேன்) அதைப் போலவே நடைபெறும். நிச்சயம் செய்வதில் தொடங்கி, பாக்கு வைத்து அழைப்பது வரை தொடர்ச்சியாக நடைபெறும் இந்நிகழ்வுகளுக்காக, காமன் பொட்டலிலேயே கன்னிக்கால் அல்லது மூர்த்தக்கால் நட்டுப் பந்தல் அமைப்பர். மன்மதனுக்கும் ரதிக்கும் மணமக்களைப் போலப் பட்டாடைகள், புஜக்கிரீடம், மணிமாலைகள் அணிவித்து அழகுபடுத்துவர். தோட்ட மக்கள் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என இரு அணிகளாகப் பிரிந்து சீர்வரிசைகளைக் கொண்டு வருவர். மங்களத் தப்பு முழங்க ரதிக்கு மன்மதன் தாலி கட்டியதும், தேவலோகப் பாத்திரங்கள் வாழ்த்தி மொய் எழுதும் வழக்கம் இடம்பெறும். இவ்வாறு ஊர் மக்களும் மொய் எழுதுவார்கள். புதுமணத் தம்பதியர் லயங்களைச் சுற்றி ஊர்வலமாக ஆடிவந்து மீண்டும் பொட்டலை அடைவர். இந்நிகழ்வு சமூகத்தில் திருமண வரம் வேண்டுவோருக்கான முக்கிய நேர்த்திக்கடனாக அமைகிறது.

சில தோட்டங்களில் திருமணத்தைத் தொடர்ந்து குறவன், குறத்தி பாத்திரங்கள் பிரவேசித்துக் குறிசொல்லும் காட்சி இடம்பெறும். குறத்தி, ரதியின் கைரேகையைப் பார்த்து அவளது கணவனைப் பிரிவதற்கான ஜோதிட யோகம் உள்ளதாக எச்சரிப்பது, இக்கூத்தின் முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது. இதன் தொடர்ச்சியாகத் தக்கன் யாகம், வீரபத்திரரின் தோற்றம், சிவபெருமானின் பெருங்கோபத் தவம் ஆகிய கிளைக்கதைகள் ஆட்ட வடிவில் நிகழ்த்தப்படும். தேவர்களின் துயரத்தை உணர்ந்த இந்திரன், சிவனின் தவத்தை அழிக்க மன்மதனுக்குத் தூதோலை அனுப்புகிறான்.

தூதன் வரும் காட்சி மலையகக் காமன் கூத்தின் அரங்கியல் உச்சமாகும். மன்மதனும் ரதியும் பள்ளியறையில் இருக்கும்போது தூதன் வேறோர் இடத்திலிருந்து ஒற்றைத் தப்பு முழங்க ஆடிய வண்ணம் அழைத்து வரப்படுவான். தூதுவனின் முதுகில் பல பந்தங்களைக் கட்டி எரியவிடுவர். எரிகிற பந்தங்களுடன் அவன் துரித கதியில் ஆடிவரும் காட்சி அற்புதமும் அச்சமும் கலந்த ஒன்றாக இருக்கும். தூதோலையைப் பார்த்த மன்மதன் சிவனின் தவத்தை அழிக்கப் புறப்பட முடிவெடுக்க, ரதி அதிர்ச்சியடைந்து அவனைத் தடுத்துரைப்பாள்.

பந்தல் பிரிக்கவில்லை, வந்த சனம் போகவில்லை, கொண்டைப் பூ வாடவில்லை, மேளக்காரன் எல்லை தாண்டவில்லை, அதற்குள் தன்னைத் தவிக்கவிட்டுப் போகலாமா என்று அவள் கவலையோடு மன்றாடுவாள். அதற்கு மன்மதன் மறுத்துரைக்க இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூளும். தன்னுடைய தந்தை சிவன் கஞ்சா மயக்கம் கொண்ட பொல்லாதவன் என்றும் உயிரோடு எரித்துவிடுவான் என்றும் ரதி எச்சரிப்பாள். மன்மதனோ உன் தகப்பன் சுடுகாட்டுப் பேயன், அவனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விடைபெற்றுப் புறப்படுவான். மன்மதன் புறப்படும்போது சாரைப்பாம்பு, சன்னியாசி, பூனை, புடையன் பாம்பு, கட்டோலை ஏந்திய கணக்கன் எனப் பல தீய சகுனங்கள் குறுக்கிடுகின்றன. மக்களிடையே நிலவும் சகுன நம்பிக்கைகள் இக்கூத்தின் ஊடாக அழகுற வெளிப்படுகின்றன. ஆயினும் மன்மதன் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் சிவனை நோக்கிச் சென்று, அறியாத பாலனான தன்னை அமரேசன் கட்டளைக்காகத் தவம் கலைக்க வந்ததாகக் கூறி வணங்கி மலரம்பு தொடுப்பான்.

இக்கூத்தின் பதினாறாம் நாள் அல்லது பதினெட்டாம் நாள் நள்ளிரவில் காமதகனம் என்ற உன்னத சடங்கு நிகழ்கிறது. மன்மதஸ்தம்பத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட பந்தலில் சிவவேடம் பூண்டவர் உரல் மீது அமர்ந்து தவமிருப்பார். அடுத்த புறத்தில் மன்மதன் நிற்பான். இருவரையும் இணைத்து ஒரு நூல் கட்டப்படும். மன்மதன் மலர்ப்பாணத்தை எய்ததும், சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்து கோபத்துடன் நோக்குவார். உடனேயே மன்மதன் அப்புறப்படுத்தப்பட்டு, மன்மதஸ்தம்பம் தீயிட்டுக் கொளுத்தப்படும். சிவனும் காமனும் இணைக்கப்பட்ட நூலில் வெடிமருந்து பூசிய திரியைக் கொளுத்துவதன் மூலமோ அல்லது வாயில் மண்ணெண்ணெய் கொப்பளித்துத் தீப்பந்தம் உமிழ்வதன் மூலமோ வாணத் தொழில்நுட்பத்துடன் கம்பம் எரிக்கப்படும். காமன் எரியும் காட்சியைப் பார்த்து மக்கள் பக்திப் பரவசமடைவர். எரியும் தீயில் அவல், உப்பு ஆகியவற்றை வீசி மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இதன்மூலம் நமைச்சல், தேமல், மரு போன்ற தோல் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கையாகும்.

மன்மதன் எரிந்த மறு கணம் அரங்கு பெரும் சோகத்தில் ஆழ்கிறது. ரதி வேடமிட்டவர் தனது மாங்கல்யத்தைக் கழற்றி எறிந்துவிட்டு (தாலியறுத்தல்), ஆபரணங்களை நீக்கி வெள்ளைச் சேலை உடுத்தித் தலைவிரி கோலமாக நின்று ஒப்பாரி வைப்பார். சொந்த மருமகனை மாமன் கொன்ற மகா பாவம் உலகில் உண்டோ என்று கூறித் தன் தந்தையான சிவனைத் திட்டி உள்ளமுருக அழுவார். ரதியின் அவலக் குரலைக் கேட்டுப் பொட்டலில் கூடியிருக்கும் மக்களும் ஐயோவென்று கதறி அழுவர். பின்னர் மன்மதன் எரிந்த இடத்தில் மாவிளக்கு ஏற்றி, ஒரு சிறு தேர் செய்து ரதியுடன் இழுத்துக்கொண்டு லயங்கள் தோறும் சென்று மடிப்பிச்சை ஏந்துவர். மக்கள் அவளுக்குப் படியரிசியும் பணமும் வழங்குவர். அதன் பின் ஆற்றங்கரைக்குச் சென்று தேரை ஆற்றில் விடுத்து, நீராடிவிட்டுத் திரும்புவர்.

மன்மதன் எரிந்த மூன்றாம் நாள் உயிர்ப்பித்தல் அல்லது உயிர்த்தெழும்பும் விழா நடத்தப்படுகிறது. மன்மதன் வேடமிட்ட கலைஞர் கம்பம் நட்ட இடத்தில் பிணம் போல வெள்ளைத்துணியால் மூடப்பட்டுப் படுத்திருப்பார். ரதி சிவனிடம் தன் தாலிப் பிச்சையை வழங்குமாறு காலில் விழுந்து மன்றாடுவாள். தேவர்களும் மன்மதன் இல்லாமல் உலகம் இயங்காது என்று சிவனை வணங்குவர். சிவன் மனமிரங்கி, மன்மதனை உருவமற்ற அரூபியாய் எழுப்பித் தருவதாகவும், அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்றும் வாக்களிப்பார். பின்னர் தன் கமண்டலத்து நீரை மன்மதன் மீது மூன்று முறை தெளித்து, கையிலுள்ள பிரம்பினால் மூன்று முறை தட்டுவார். பிரம்படி பட்ட மாத்திரத்தில் மன்மதன் உயிர்பெற்றெழுவான். உடனே மங்களத் தப்பு ஒலிக்க மங்களம் பாடப்படும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்ந்ததும், மடிப்பிச்சையாகச் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு காமன் விருந்து சமைக்கப்படும். பின்னர், அனைவருக்கும் சமபந்தி விருந்தாகப் பரிமாறப்பட்டு விழா மங்கலமாக நிறைவடையும்.

அரங்கியல் கூறுகளும் அழகியல் வடிவமும் நிறைந்த மலையகக் காமன் கூத்து, நாட்டுப்புற ஆடலின் செழுமையையும் கிராமிய இசையின் இனிமையையும் ஒருங்கே கொண்ட சிறப்பான கலைவடிவமாகும். வடமோடி, தென்மோடி கூத்துகள் போல இது மிகக் கடுமையான ஆட்ட நுணுக்கங்களைக் கொண்டிராவிட்டாலும், பாத்திரங்களுக்கேற்ப தனித்துவமான நடைகளைக் கொண்டுள்ளது. காமனும் ரதியும் ஆடும் ஆடல் நளினமான நடனமாகும். அண்ணாவியார் பாடலின் முதல் அடியைப் பாட, எதிரும் புதிருமாக நிற்கும் இருவரும் ஒரு காலை முன்னெடுத்து வைப்பர்; அடுத்த அடிக்குப் பின்னெடுத்து வைப்பர். பின்னர் தப்பு வாத்தியம் தனித்து ஒலிக்க அரைவட்ட வடிவில் லாவணி ஆட்டத்தைப் போல ஆடுவர். மாறாக, தூதன், எமன் போன்ற பாத்திரங்கள் ஆடும் ஆட்டம் அதிவேகத் துரித கதி ஆட்டமாகும். தூதுவன் முதுகில் தீப்பந்தங்கள் எரியத் துரித கதியில் சுழன்று ஆடுவது பார்வையாளர்களுக்கு அச்சத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். வெட்டியான், வெட்டிச்சி பாத்திரங்கள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மக்கள் விரும்பும் வகையில் சமுதாய விமர்சனங்களையும் சிருங்கார ரசப் பாடல்களையும் பாடிச் சுதந்திரமாக ஆடுவர்.

இக்கூத்தின் பிரதான இசைக்கருவியாகத் தப்பு விளங்குகிறது. தோளில் மாட்டப்பட்டு, இடது புயத்தால் அணைத்து மணிக்கட்டால் தாங்கி அடிக்கப்படும் இத்தோற்கருவி பற்பல தாளக் கட்டுகளுக்கு ஈடுகொடுக்கக்கூடியது. தூதன் போன்ற பாத்திரங்கள் வரும்போது ஒற்றைத் தப்பும், மன்மதன் ரதி போன்ற முதன்மைப் பாத்திரங்கள் ஆடும்போது இரட்டைத் தப்பும் முழக்கப்படும். இவற்றுடன் தாளம், சல்லாரி, அளுக்கு, சேமக்கலம் ஆகிய கருவிகளும், சில இடங்களில் டோலக்கும் பயன்படுத்தப்படுகின்றன. பாடல்கள் ஒரே சீராக அமையாமல் பல்வேறு நாட்டார் தரு மெட்டுகளில் அமைந்திருப்பதால் கூத்துப் பார்ப்பவர்களுக்கு ஒருபோதும் சலிப்புத் தட்டுவதில்லை. காமன் கூத்துடன் பின்னிப்பிணைந்த லாவணி இசை மரபு மிகவும் சுவையானது.

இதில் கூத்தர்கள் எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் எதிர்த்து வாதிடுவர். சிவன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை முழுமையாக எரித்துச் சாம்பலாக்கினார் என்பது எரிந்த கட்சியின் வாதமாகும். காமன் எரியவில்லை, காமமே எரிந்தது, காதலின்றிப் பிரபஞ்ச இயக்கம் சாத்தியமில்லை, மன்மதன் அநங்கனாக வாழ்கிறான் என்பது எரியாத கட்சியின் வாதமாகும். மாரனின் மகிமையால் குழந்தைகள் பிறப்பதென்றால் மலட்டுத்தன்மைக்குக் காரணமென்ன என்று எரிந்த கட்சியினர் கேட்க, மனிதர்கள் செய்த வினையினாலே பிள்ளை பிறப்பதில்லை என்றும், காமன் எரிந்துபோயிருந்தால் உலகத்தில் எவருக்கும் கர்ப்பம் தரிக்காது என்றும் எரியாத கட்சியினர் மடக்குவர். இவ்விவாதத்தில் எரியாத கட்சியினர் வென்றாலும், கம்பத்தை எரிக்காவிட்டால் ஊருக்குத் தீங்கு விளையும் என்ற பொதுவான நம்பிக்கையின் காரணமாக, இருசாராரும் சமரசத்திற்கு வந்து காமன் கம்பத்தை எரித்து விழாவை முடிப்பர்.

ஒப்பனையைப் பொறுத்தவரை இயற்கை அரிதாரமே முகப்பூச்சுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மன்மதனுக்குப் பச்சைப் பூச்சும், அழகிய புஜக்கிரீடம், மணிமுடி, முத்துமாலைகளும் அணிவிக்கப்படும். ரதிக்கு மணமகளுக்குரிய முறையில் நெற்றிப்பட்டம், சூரிய – சந்திரப் பிறை, மயிர்மாட்டி, குஞ்சம் வைத்த கூந்தல் அலங்காரமும் வளையல்களும் அணிவிக்கப்படும். எமனுக்குக் கரிய பூச்சும் பயங்கரமான உடைகளும் கொடுக்கப்படும். தூதுவனுக்கு முதுகில் உதயசூரியனின் அமைப்பில் மரச்சட்டம் கட்டி, நுனியில் சீலைப்பந்தங்கள் வைத்து எண்ணெய் ஊற்றி எரியவிடும் நாட்டார் தொழில்நுட்பம் அற்புதமானது.

மலையகக் காமன் கூத்தின் சடங்கியல் கட்டமைப்பைப் புகழ்பெற்ற நிகழ்த்துகைக் கோட்பாட்டாளர்களின் கருத்துகளோடு இணைத்துப் பார்க்கும்போது அதன் ஆழமான உட்பொருள்கள் புலப்படுகின்றன. ரிச்சர்ட் செக்னர் முன்வைத்த மீளுருவாக்கப்பட்ட நடத்தை (Restored Behavior அல்லது Twice-Behaved Behavior) என்ற கோட்பாட்டின்படி, ஒரு நிகழ்த்துகை என்பது அன்றாட வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, கலாசார ரீதியாகப் பழக்கப்படுத்தப்பட்ட உடல்சார் நினைவுகளின் மீள்நிகழ்வாகும். பெருந்தோட்டங்களில் அன்றாடம் கொழுந்து பறிக்கும், புல் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் உடல்கள், காமன் கூத்து தொடங்கும் தருணத்தில் அத்தன்மைகளிலிருந்து முற்றிலும் விடுபடுகின்றன. பல தலைமுறைகளாக வழிவழியாகக் கடத்தப்பட்டு வந்த தாளக் கட்டுகள், உடல் அசைவுகள், ஒப்பாரி மெட்டுகள், மந்திர வாசகங்கள் ஆகியவை கலைஞர்களின் உடல்களில் மீளுருவாக்கம் பெறுகின்றன. தொழிலாளர்கள் தொன்ம காலத்து ரதியாகவும் மன்மதனாகவும் தங்களை மாற்றிக்கொண்டு ஆடுவதன் மூலம், புலம்பெயர்ந்த சமூகத்தின் வரலாற்று வேர்களும் கூட்டு நினைவுகளும் காலந்தோறும் உடலியல் ரீதியாக மீட்டெடுக்கப்படுகின்றன.

செக்னரின் சடங்குக்கும் அரங்குக்குமான தொடர்ச்சி (Ritual to Theatre Continuum) கோட்பாட்டை இக்கூத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. ஒருபுறம் மந்திர பலன் அல்லது செயல்திறனை நோக்கிய சடங்காகவும் (Efficacy / Ritual), மறுபுறம் பொழுதுபோக்கு, ரசனையை நோக்கிய அரங்காகவும் (Entertainment / Theatre) இக்கூத்து இயங்குகிறது. கம்பம் நடுதல், முளைப்பாரி இடுதல், காப்புக் கட்டுதல், தீயில் அவல் உப்பு இட்டு நேர்த்தி செலுத்துதல் ஆகியவை மழை பெய்வதற்கும், வம்சம் தழைப்பதற்கும், நோய்கள் நீங்குவதற்குமான தூய சடங்குகளாகும். அதேநேரத்தில், தூதனின் தீப்பந்த ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிருங்காரக் கேலிப் பாடல்கள், லாவணி விவாதங்கள் ஆகியவை விடிய விடிய மக்களை விழித்திருக்கச் செய்யும் கலைசார் பொழுதுபோக்காகவும் அழகியல் அரங்காகவும் தொழிற்படுகின்றன. இவ்வாறாகச் சடங்கும் கலையும் ஒன்றையொன்று செழுமைப்படுத்தும் ஒரு தொடர்ச்சியாகவே காமன் கூத்து நிகழ்கிறது.

மேலும் மானிடவியல் அறிஞர் விக்டர் டர்னர் விளக்கிய நிலையிடைப் பருவம் (Liminality), சமூகப் பிணைப்பு (Communitas) ஆகிய கோட்பாடுகளும் இக்கூத்தில் துல்லியமாகப் பொருந்துகின்றன. காப்புக் கட்டி விரதம் தொடங்கும் வேளையில் கலைஞர்கள் பழைய சமூக வாழ்க்கையிலிருந்து பிரிக்கப்படுகின்றனர். கூத்து முடியும் வரை மன்மதனும் ரதியும் தங்களின் வீடுகளுக்குச் செல்லாமல், உலகியல் வாழ்விற்கும் அப்பாற்பட்ட காமன் கொட்டிலிலேயே தங்கியிருக்க வேண்டும். இந்நிலை டர்னர் கூறும் எல்லையற்ற, இடைப்பட்ட நிலையிடைப் பருவமாகும். மேலும், இக்காலகட்டத்தில் தோட்டத்தில் நிலவும் அன்றாட அதிகாரப் படிநிலைகள் கரைகின்றன. கங்காணி, தொழிலாளி என்ற வர்க்கப் பிரிவினைகளும், சாதிய இறுக்கங்களும் மறைந்து, அனைவரும் ஒரே பந்தலில் கூடி, மடிப்பிச்சையிட்டு, காமன் விருந்துண்டு சமத்துவமாக இணையும் சமூக ஒருமைப்பாட்டு நிலை உருவாகிறது.

கூத்தின் உக்கிரமான தாள லயங்களின் போது கலைஞர்கள் அருள் இறங்குதல் அல்லது உருநிலை அடைதல் நிகழ்கிறது. தன்னுணர்வை இழந்து தெய்விக ஆவேசத்துடன் ஆடும் கலைஞர்கள் சில சமயங்களில் மயங்கி விழுவர். அப்போது, அவர்களின் முகத்திற்கு முன் நிலைக்கண்ணாடியைக் காட்டித் தங்களின் சுய உருவத்தை உணரச் செய்வதன் மூலம், அவர்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவர். மானிடவியல் ஆய்வுகளின்படி, இது ஒரு மாற்று விழிப்புணர்வு நிலையாகும் (Altered State of Consciousness). இவ்வாறாக உருநிலை தெளிவிக்கும் மரபு சிங்கள மக்களின் மரபுவழி நாடகமான சொக்கறியிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இது இரு சமூகங்களிடையே நிகழ்ந்த ஆழமான பண்பாட்டுப் பரிமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

மலையகக் காமன் கூத்து வெறும் பக்தி மார்க்கமாக மட்டும் நின்றுவிடாமல், உழைக்கும் மக்களின் கருவளச் சடங்காகவும் (Fertility Cult), சமூக முரண்பாடுகளை வெளிப்படுத்தும் களமாகவும் இயங்குகிறது. காமனும், யாழ்ப்பாணத்தில் வழிபடப்படும் காத்தவராயனும் நாட்டார் மானிடவியல் பார்வையில் கருவளத் தெய்வங்களாவர். மன்மதன் சிற்றின்பத்தை வழங்கிச் சந்ததி விருத்தி செய்பவன். தரிசு நிலங்களாகக் கிடக்கும் காடுகளை உழுது பயிர் செய்ய வேண்டும் என்ற வேளாண்மைத் தத்துவமே இச்சடங்கில் பொதிந்துள்ளது. பழைய காய்ந்த கம்பத்தை எரித்துவிட்டு, நவதானிய முளைப்பாரியையும் பாலையும் ஊற்றிப் புத்துயிர் பெறச் செய்வது, இயற்கையின் பருவகால மீளுருவாக்கத்தையும் பயிர்ச் செழுமையையும் குறிக்கும் சடங்காகும். அதேவேளை, இக்கூத்து நிலப்பிரபுத்துவ அமைப்பையும் ஆதிக்க வர்க்கத்தையும் கேள்விக்குட்படுத்தும் சமூக விமர்சனக் கருவியாகவும் திகழ்கிறது.

தோட்டச் சூழலில் தொடக்க காலத்தில் வழிபாட்டுச் சடங்குகளைப் பண்டாரங்களும், பந்தம் பிடித்தல், தப்படித்தலை அடித்தட்டு மக்களும் செய்யும்படியான சாதிப் படிநிலைகள் நீடித்தன. ஆனாலும் வடக்கு – கிழக்குக் கூத்துகளுடன் ஒப்பிடும்போது மலையகக் கூத்தில் ஒரு தனித்துவமான சமத்துவத்தைக் காணமுடிகிறது. யாழ்ப்பாணக் கூத்துகளில், தாழ்த்தப்பட்ட பாத்திரங்கள் முதன்மைப் பாத்திரங்களுடன் நெருங்கிப் பழக அனுமதிப்பதில்லை. ஆனால், மலையகக் காமன் கூத்தில் வரும் வெட்டியான், வெட்டிச்சி பாத்திரங்கள் மன்மதன், ரதி ஆகியோருக்குத் தோழன், தோழியாகவே உரிமையுடன் பழகுகின்றனர். உழைக்கும் மக்கள் மத்தியில் உருவான வர்க்க ஒற்றுமையை இது புலப்படுத்துகிறது.

மேலும், கோயில்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத அடித்தட்டு மக்கள், பெருந்தெய்வ வழிபாட்டாளர்களின் போலித்தனங்களைக் காமன் கூத்தின் வழியே துணிச்சலாகச் சாடினர். நீங்கள் வணங்கும் பெருந்தெய்வங்களும் குற்றங்களும் பலவீனங்களும் கொண்டவையே என்பதை மன்மதன், ரதியின் வாக்குவாதப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சிவன் கஞ்சா வெறியன், அபினி குடிகாரன், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவன், சுடுகாட்டுச் சாம்பலில் திரியும் பேயன் என்று மன்மதன் சிவனைப் பழித்துப் பாடுவான். அதேபோல ரதி, நாராயணன் மாவலியை ஏமாற்றிய மோசக்காரன், ஆயர்பாடிப் பெண்களின் சேலைகளைத் திருடியவன் என்று திருமாலைப் பழித்துப் பாடுவாள். இது நேரடியாகக் கடவுளர்களை நிந்திக்கும் நோக்கத்தோடு பாடப்பட்டதன்று; மாறாக, சிவனையும் திருமாலையும் முன்னிறுத்தித் தங்களை ஒடுக்கிய சாதி ஆதிக்க, நில உடைமைச் சக்திகளையே கடவுள் கதையின் வழியே தொழிலாளர்கள் மறைமுகமாகச் சாடினர்.

நவீனமயமாக்கல், காட்சி ஊடகங்களின் ஆதிக்கம், பெருந்தோட்டங்களின் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக மலையகக் காமன் கூத்து தற்காலத்தில் தீவிரமான கட்டமைப்புச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பதினெட்டு நாட்கள் வரை ஊரே ஒன்றிணைந்து விரதமிருந்து கொண்டாடிய மரபு, இன்றைய இயந்திரமயமான சூழலில் ஒரு சில நாட்களுக்குள்ளாகவோ அல்லது ஒரே இரவிலோ நடத்தி முடிக்கப்படும் அவசரச் சடங்காக மாறிவருகிறது. பல்லாயிரக்கணக்கான அடிகளைக் கொண்ட லாவணி ஏடுகளை மனனம் செய்து விடிய விடிய தர்க்கம் செய்யும் பாரம்பரிய மாஸ்டர்களின் தலைமுறை அருகிவிட்டதால், கூத்தின் தத்துவார்த்த விவாதப் பரிமாணம் சுருங்கிவிட்டது. அத்தோடு, மரபுசார் தப்பு இசையைக் கௌரவக் குறைவாகக் கருதும் சில தவறான சமூக மனப்பாங்குகளின் தோற்றமும், மரபு வாத்தியங்களுக்குப் பதிலாக மின்சார இசைக்கருவிகளைப் புகுத்தும் போக்கும் கூத்தின் தனித்துவமான நாட்டார் அழகியலைச் சிதைக்கின்றன. ஆயினும், இத்தகைய இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும், ஆவணப்படங்களும் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் களப் பதிவுகளும் இக்கலை வடிவத்தைப் பாதுகாப்பதில் பெரும்பங்காற்றி வருகின்றன. சமகால மலையக இளைஞர்கள் தங்களது பண்பாட்டு வேர்களையும், தேசிய அடையாளத்தையும் நிலைநிறுத்தும் கருவியாகக் காமன் கூத்தை மீட்டுருவாக்கம் செய்ய முன்வருவது இக்கலை மரபின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

மலையகக் காமன் கூத்து என்பது தொல் தமிழரின் சங்க கால வசந்த விழாக் கூறுகளையும் கந்தபுராணத் தொன்மத்தையும் ஒருங்கிணைத்து, புலம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பு வாழ்வியலோடு இயைந்து நிற்கும் ஓர் உன்னதமான சடங்கியல் காவியமாகும். கம்பம் நடுதல் தொடங்கி முளைப்பாரி வளர்த்தல், காமதகனம், ரதியின் மடிப்பிச்சை, மன்மதனை உயிர்ப்பித்தல் வரையிலான ஒவ்வொரு சடங்கும், இயற்கை – மனித உறவையும் வாழ்வு – மரணம் குறித்த தத்துவ தரிசனங்களையும் தாங்கி நிற்கின்றன. நிகழ்த்துகைக் கோட்பாடுகளின் ஒளியில் பார்க்கும்போது, இது செயல்திறன் கொண்ட வழிபாட்டுச் சடங்காகவும், அழகியல் நிறைந்த மக்கள் அரங்காகவும் ஒரே தளத்தில் இயங்கும் பேராற்றல் கொண்டதாகும். கடுமையான அடக்குமுறைகளுக்கும் காலனிய உழைப்புச் சுரண்டல்களுக்கும் ஆளான ஒரு சமூகம், தங்களின் துயரங்களை மறந்து வர்க்க ரீதியாக ஒன்றுதிரளும் கூட்டு விழிப்புணர்வாக இக்கூத்து திகழ்கிறது. அத்தோடு இக்கூத்து ஒரு முழுமையான நாடக ஆற்றுகைக்கான அழகியல் கூறுகளைக் கொண்டிருந்தாலும், ஒருபோதும் தனது தொடக்கச் சடங்கியல் தளத்திலிருந்து விடுபட்டு வெறும் மேடைப் பொழுதுபோக்காக மாறிவிடவில்லை. ஆற்றங்கரையில் நிகழும் கம்பம் பாலித்தல், காப்புக் கட்டுதல், கடும் விரத நெறிகள், புனிதப் பிடிமண் இட்டுக் கம்பம் நடுதல், நவதானியம் வளர்த்தல், அருள் இறங்கி உருநிலைக்கு ஆட்படுதல், தீயில் அவலும் உப்பும் இட்டு நேர்த்திக்கடன் செலுத்துதல், காமன் விருந்து படைத்தல் போன்ற ஆழமான சடங்கு முறைகளே இதன் நிகழ்த்துகைக் கட்டமைப்பைத் தொடக்கம் முதல் இறுதிவரை வழிநடத்துகின்றன. சடங்கின் புனிதத்தன்மையையும் இறையுணர்வையும் சிதைக்காமல் பேணி, மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அனுபவிக்கும் கூட்டு அரங்கியல் நிகழ்வாக இதனைத் தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் பாதுகாத்து வந்துள்ளனர். மலையகக் காமன் கூத்து, இவ்வாறு சடங்கின் பலன் நோக்குத் தன்மையையும் (Efficacy), அரங்கின் கலைசார் அழகியலையும் (Entertainment) ஒருங்கே தக்கவைத்துக் கொண்டதன் மூலமே, சடங்கிலிருந்து விடுபடாத அதேவேளை மக்கள் கலையாகவும் இன்றும் தன் பண்பாட்டு ஆன்மாவை உயிர்ப்புடன் நிலைநிறுத்தி வருகிறது.

உசாத்துணை மூலங்கள்

சிவரத்தினம், சு. (2008). சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.

சுந்தரம்பிள்ளை, காரை. செ. (2000). வட இலங்கை நாட்டார் அரங்கு. குமரன் புத்தக இல்லம்.

சுந்தரம்பிள்ளை, காரை. செ. (2005). ஈழத்து மலையகக் கூத்துகள். பாரதிப் பதிப்பகம்.

தருமராஜன், டி. (2006). சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்.

தாம்ஸன், ஜார்ஜ். (2005). மனித சாரம் (எஸ். வி. ராஜதுரை, மொ.). விடியல் பதிப்பகம். (அசல் படைப்பு 1977 இல் வெளியிடப்பட்டது)

பக்தவத்சல பாரதி. (1990). பண்பாட்டு மானிடவியல். மெய்யப்பன் பதிப்பகம்.

பக்தவத்சல பாரதி. (2012). மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு.

பிரபாகரன், பொன். (2015). காமன் கூத்து. புதிய பண்பாட்டு அமைப்பு வெளியீடு.

மௌனகுரு, சி. (1988). சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.

மௌனகுரு, சி. (2007). நாடகம்: பழையதும் புதியதும். குமரன் புத்தக இல்லம்.

மௌனகுரு, சி. (2014). தமிழ்க் கூத்துக் கலை. குமரன் புத்தக இல்லம்.

மௌனகுரு, சி. (2014). மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள். குமரன் புத்தக இல்லம்.

வித்தியானந்தன், சு. (2009). நாடகம் நாட்டாரியல் சிந்தனைகள். குமரன் புத்தக இல்லம்.

D’Andrade, R. G. (1995). The development of cognitive anthropology. Cambridge University Press.

Lavenda, R. H., & Schultz, E. A. (2007). Core concepts in cultural anthropology (3rd ed.). McGraw-Hill.

Miller, T., & Yúdice, G. (2002). Cultural policy. SAGE Publications.

Milner, A. (1996). Literature, culture and society (2nd ed.). Routledge.

Morgan, L. A., & Kunkel, S. R. (1998). Aging: The social context. Pine Forge Press.

Rojek, C. (2007). Cultural studies. Polity Press.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்