இலங்கையில் தமிழர்கள் மத்தியிலுள்ள கொம்புமுறி விளையாட்டிற்கும் சிங்களவர்கள் மத்தியிலுள்ள அங்கெலியவிற்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
9 நிமிட வாசிப்பு

இலங்கையில் தமிழர்கள் மத்தியிலுள்ள கொம்புமுறி விளையாட்டிற்கும் சிங்களவர்கள் மத்தியிலுள்ள அங்கெலியவிற்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

October 16, 2026 | Ezhuna

இலங்கைத் தமிழர்களிடையே கண்ணகி வழிபாடு என்றும் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு என்றும் வழங்கப்பட்டு வரும் வழிபாடுகளுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்து கலைகளில் ஒன்றாகவே ‘கொம்புமுறி’ விளையாட்டு இடம்பெற்று வருகின்றது. இக்கொம்புமுறி விளையாட்டு சமயம், கலை ஆகிய இரு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இது சிங்களவர்களால் ‘அங்கெலிய’ என்று அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்வு ஆடி மாதத்தில் அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். தமிழர்களின் கொம்புமுறிக்கும் சிங்களவர்களின் அங்கெலியவிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும் அவை தமக்கிடையே தனித்துவமான பண்புகளையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கண்ணகி வழிபாட்டிற்கும் அதனுடன் தொடர்புடைய நிகழ்த்து கலையான கொம்புமுறி விளையாட்டுக்கும் இடையிலான தொடர்பினையும், அதன் சமுதாய மானிடவியல் பின்புலத்தினையும், கொம்புமுறி விளையாட்டின் சடங்குசார் நிகழ்த்துகலை முறைமையினையும், தமிழ் – சிங்கள கொம்புமுறி விளையாட்டுகளுக்கு இடையிலான ஒற்றுமை – வேற்றுமைகளையும் ஆராய்வதாக ‘கொம்புமுறி விளையாட்டு: இலங்கையில் கண்ணகி – பத்தினி வழிபாட்டின் எச்சம்’ எனும் இத்தொடர் இடம்பெறுகின்றது.

இலங்கையில் தமிழர்கள் மத்தியில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலையாகக் கொம்புமுறி விளையாட்டுக் காணப்படுகின்றது. இவ்விளையாட்டு சிங்கள மக்களிடையே அங்கெலிய என்ற பெயரில் வழங்கிவருகின்றது. அங்கெலிய விளையாட்டானது பத்தினி தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்துகலையாகும். தமிழரிடையே காணப்படும் கொம்பு விளையாட்டும் சிங்களவரிடையே காணப்படும் அங்கெலிய விளையாட்டும் அறுவடைக்குப் பின்னரான வளர்பிறை நாட்களிலேயே ஆரம்பமாகின்றன. இவ்விரு தரப்பினராலுமே பொதுவாக இரண்டு நோக்கங்களுக்காகவே கொம்புமுறி விளையாட்டு விளையாடப்படுகின்றது: ஒன்று, மழை பொய்க்கும் போது. அடுத்து, ‘அம்மன் கோதாரி’ எனப்படுகின்ற அம்மை, கண்ணோய், வைசூரி போன்ற கொள்ளை நோய்கள் பரவும் போது. 

இரு தரப்பிலும் பொதுவாக விவசாயம் செய்கின்றவர்களினாலேயே இவ்விளையாட்டு நிகழ்த்தப்படுகின்றது. தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் வடசேரி கோவலனது கட்சியாகவும் தென்சேரி கண்ணகியினது கட்சியாகவும் காணப்படும். சிங்களவர்களின் அங்கெலியவில் உடபில அளுத் தெவியோவினது (கோவலன்) கட்சியாகவும் யட்டபில பத்தினித் தெய்வத்தின் கட்சியாகவும் காணப்படும். இரு தரப்பினரின் கட்சிகளும் கண்ணகியையும் கோவலனையும் பிரதிநிதித்துவப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன.

தமிழர்களிடையே சேரிப் பிரிப்பானது பொதுவாகத் தந்தை வழியாகப் பின்பற்றப்படும். அங்கெலிய விளையாட்டில் சிங்களவர்கள் தமக்குள் விரும்பியே ஒவ்வொரு கட்சிகளுக்கும் பிரிகின்றனர். ஆனால், பொதுவாகத் தந்தையின் கட்சியினையே மகனும் பின்பற்றுகின்ற நிலை காணப்படுகின்றது.

கொம்புமுறி விளையாட்டினை விளையாடுவதற்கு முன்னர் அது பற்றி முடிவெடுப்பதற்காகப் பொதுக்கூட்டம் ஒன்று வண்ணக்கரினாலும் கட்டாடியாராலும் கூட்டப்பட்டு, வட்டாண்டிமார், கொம்புப் பிரதிநிதிகள், சமாதானச் சபையினர் போன்றோர் அக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்படுவர். அங்கெலிய விளையாட்டின் போதும் பஸ்ஸநாயக்க நிலமேயினாலும் கப்புறாளையினாலும் முதலில் கூட்டம் கூட்டப்பட்டு, வட்டாண்டிமார், சமாதானச் சபையினர் போன்றோர் தெரிவு செய்யப்படுவர். சிங்களவர்களின் அங்கெலியவில் பஸ்ஸநாயக்க நிலமே என்ற உத்தியோகத்தர் செயற்படுவது போன்று, தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் வண்ணக்கர் என்ற அதிகாரி செயற்படுவார்.

இரு தரப்பினரிடையேயும் விளையாட்டிற்குப் பொறுப்பானவர்கள் வட்டாண்டி என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ்ப் பிரதேசங்களில் இவர்களைப் பட்டாண்டியார் என்று அழைக்கின்றனர். இது வட்டாண்டி என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததாகவே இருக்க வேண்டும். இரு தரப்பிலும் வட்டாண்டியார் கொம்பு விளையாட்டு முடியும் காலம் வரை மரக்கறி உணவு உண்டு பத்தியம் காக்கின்றனர்.

அங்கெலிய விளையாட்டு நடைபெறும் காலங்களில் ஊரிற்குள் மக்கள் அனைவரும் புலால் உணவினை உண்பதையோ வைத்திருப்பதையோ தவிர்ப்பர். அதனைப் போன்றே தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டு தொடங்கியதும் புலால் உணவினை உண்ணுதல், அதனை வைத்திருத்தல் போன்றன தவிர்க்கப்படும். அத்துடன் பொரித்தல், இடித்தல், கறிக்கு மஞ்சள் பாவித்தல் போன்றனவும் தடை செய்யப்படும்.

கொம்புமுறி விளையாட்டிற்கான கொம்புகளைச் சேகரிப்பதில் இருதரப்பினரிடையேயும் ஒத்த தன்மையே காணப்படுகின்றது. இரண்டிற்கும் வட்டாண்டிமாரே பொறுப்பாக இருப்பர். காட்டினுள் சென்று கொம்புகளும் கயிறு திரிப்பதற்கான கொடிகளும் கொண்டுவரப்படுகின்றன. அங்கெலியவின் போது மான், மரை போன்றவற்றின் கொம்புகளும் முறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தமிழரின் கொம்புமுறி விளையாட்டிலோ மரத்தாலான வளைந்த தடிகள் மட்டுமே கொம்பு முறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழர்களின் கொம்பு விளையாட்டின் போது தற்போது காட்டுக் கொடிகள் குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பதிலாக நைலோன் கயிறுகளையே பயன்படுத்துகின்றனர். ஆனால், அங்கெலியவின் போது சிங்களவர்கள் இன்றும் காட்டுக் கொடிகளையும் மான், மரை போன்றவற்றின் தோல்களையுமே கயிறு திரிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

தமிழர்களின் கொம்புமுறியின் போது பயன்படுத்தப்படுகின்ற செவ்வாய்க்குற்றியானது சிங்களவர்களின் அங்கெலியவில் ஹெனகந்தவட என்று அழைக்கப்படுகின்றது. இதற்காக இருதரப்பினரும் இடி விழுந்த மரங்களையே தெரிவு செய்கின்றனர்.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட கொம்புகளை மத்தியஸ்தம் வகிக்கின்ற குழுவினர் ஆராய்ந்து, ஒன்றுடனொன்று போட்டியிட இருக்கின்ற கொம்புகளைத் தேர்ந்தெடுக்கின்ற நிகழ்வு தோடு கொடுத்தல் என்ற பெயரிலே இடம்பெறும். அங்கெலிய விளையாட்டின் போதும் இதுபோன்ற கொம்புகளைத் தெரிவு செய்கின்ற நிகழ்வு இடம்பெறும். இரு தரப்பிலும் திரித்துண்டம் அல்லது பச்சைத் தென்னம் ஓலை ஒன்றினை வைத்தே கொம்பின் மார்புப் பகுதி அளக்கப்பட்டு விளையாடுவதற்குத் தகுதியுள்ள கொம்புகள் தெரிவு செய்யப்படுகின்றன.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொம்புகளைப் பதப்படுத்துவதற்காகப் பனிச்சங்காய்ப் பசையை இட்டுக் காயவைத்ததன் பின்னர் பச்சையரிசிப் பொங்கல், உலராத கடுக்காய், மஞ்சள், வடை போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்துக் கொம்பின் மீது பூசிப் பதப்படுத்துவர். இச்செயற்பாட்டினை வட்டாண்டியாரே மேற்கொள்வார். சிங்களவர்களின் அங்கெலியவிலே கொம்பினைப் பதப்படுத்துவதற்கு வட்டாண்டியார் மாக்களாலான பசையையும் சோற்றுப் பசையையும் பயன்படுத்துகின்றார்.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டானது போர்த்தேங்காய் உடைத்தலுடனேயே ஆரம்பமாகின்றது. ஆனால், பாணமையில் நடைபெறும் அங்கெலியவிலே போர்த்தேங்காய் உடைத்தல் நடைபெறுவதில்லை. எனினும், மாலிதுவ என்ற பிரதேசத்திலே போர்த்தேங்காய் உடைத்த பின்னரே அங்கெலிய விளையாட்டு ஆரம்பிக்கப்படுகின்றது என கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார்.1

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டானது மாலை நேரங்களில்தான் நடைபெறுவதுண்டு. ஆனால், சிங்களவர்களின் அங்கெலிய இரவு நேரத்திலேயே நடைபெறுகின்றது. தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் முதலாவதாக முறிக்கப்படுகின்ற கொழுக்கொம்பானது கண்ணகியின் கட்சிக்கு வெற்றியளிக்கின்ற விதத்திலேயே முறிக்கப்படுவதுண்டு. அதுபோன்று, அங்கெலிய விளையாட்டிலும் முதலாவதாக முறிக்கப்படுகின்ற கொழுஅன் பத்தினித் தெய்வத்தின் கட்சிக்கு வெற்றிதருகின்ற விதத்திலேயே முறிக்கப்படுகின்றது. கொழுஅன் எனப்படுவது தமிழிலே கொழுக்கொம்பு என்று நேரடியாகப் பொருள்படுகின்றது. (கொழு – கொழு, அன் – கொம்பு)

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டிலே கொழுக்கொம்பு முறிக்கப்படுகின்ற போது வடசேரியினரின் (கோவலனது கட்சி) செவ்வாய்க்குற்றி பயன்படுத்தப்படுவதில்லை. அதேபோன்று, சிங்களவர்களின் கொழுஅங்கெலியவிலே உடபிலவினரின் (கோவலனது கட்சி) ஹெனகந்தவட பயன்படுத்தப்படுவதில்லை.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டிலே போட்டியின் போது முறிக்கப்படுகின்ற கொம்புகள் செவ்வாய்க்குற்றியைப் பயன்படுத்தியே முறிக்கப்படுகின்றன. அதேபோன்று, சிங்களவர்களின் அங்கெலியவிலும் மஹா அங்கெலியவில் போட்டிக்காக முறிக்கப்படுகின்ற கொம்புகள் ஹெனகந்தவடவினைப் பயன்படுத்தியே முறிக்கப்படுகின்றன.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டின் போது தென்சேரியினரின் (கண்ணகியின் கட்சி) கொம்பு தாய்மரத்துடனும், வடசேரியினரின் (கோவலனது கட்சி) கொம்பு செவ்வாய்க்குற்றியுடனும் பிணைக்கப்பட்டே கொம்புகள் முறிக்கப்படுகின்றன. அதுபோன்று, சிங்களவர்களின் அங்கெலியவிலும் யட்டபிலவினரின் (பத்தினித் தெய்வத்தின் கட்சி) கொம்பானது அன்கஹவுடன் (தாய்மரம்) பிணைக்கப்பட்டும், உடபிலவினரின் (அளுத்தெவியோவினரின் கட்சி) கொம்பானது ஹெனகந்தவடவுடன் (செவ்வாய்க்குற்றி) பிணைக்கப்பட்டும் கொம்புகள் முறிக்கப்படுகின்றன.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் போட்டிக்கான கொம்புகள் முறிக்கப்படுகின்ற போது கொம்புகள் விலகாமலிருப்பதற்காகப் பில்லித்தடியுடனும் கம்புக்கட்டு அடையுடனும் கட்டப்பட்டே முறிக்கப்படும். சிங்களவர்களின் அங்கெலியவிலே அவ்வாறு பில்லி போன்ற தடிகள் கட்டப்படுவதில்லை. கொம்புகள் விலகாமலிருப்பதற்காக அவர்கள் ‘றிக்கிலிய’ அல்லது ‘றிக்கிலிப்பொல்’ என்ற தடிகளையே பயன்படுத்துகின்றனர்.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டிலே போட்டிக்காக முறிக்கப்படுகின்ற கொம்புகளில் கண்ணகியின் கட்சியினருக்கு வெற்றி கிடைத்தால் நல்ல மழை பொழிந்து ஊரில் விவசாயம் சிறப்பாக நடைபெறும் என்றும், கோவலனது கட்சியினருக்கு வெற்றி கிடைத்தால் நோய்நொடிகள் நீங்கும் என்றும், மக்கள் நம்புகின்றனர். சிங்களவர்களின் அங்கெலியவிலும் போட்டிக்காக மஹா அங்கெலிய கொம்புகள் முறிக்கப்படுகின்ற போது பத்தினியின் கட்சியினருக்கு வெற்றி கிடைத்தால் நல்ல மழை பொழிந்து ஊரிலே விவசாயம் செழிக்கும் என்றும், அளுத்தெவியோவின் கட்சியினருக்கு வெற்றி கிடைத்தால் நோய்நொடிகள் நீங்கும் என்றும் நம்புகின்றனர்.

சிங்களவர்களின் அங்கெலியவின் போது உடபில, யட்டபில போன்ற கட்சியினரிடையே காணப்பட்ட போட்டி மனப்பான்மையை நீக்கி இரண்டு கட்சியினருக்கும் வெற்றியைக் கொடுக்கின்ற வகையில் வலிபானவ என்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. இதுபோன்று, இரண்டு கட்சிகளுக்கும் வெற்றியைக் கொடுக்கின்ற நிகழ்வு தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டின் போது இடம்பெறுவதில்லை.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் இறுதியாக முறிக்கப்படுகின்ற தண்ணீர்க் கொம்பானது கண்ணகியின் கட்சியினருக்கு வெற்றியைத் தருகின்ற விதத்திலேயே முறிக்கப்படும். அதுபோல, சிங்களவர்களின் அங்கெலியவிலும் பெரஹரா செல்லும் முன்னர் இறுதியாக முறிக்கப்படுகின்ற கொம்பானது பத்தினியின் கட்சிக்கு வெற்றியைத் தருகின்ற விதத்திலேயே முறிக்கப்படும்.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டின் போது, ஏடகக் கொம்புகள் முறிக்கப்பட முன்னர் செல்லும் ஊர்வலத்தில் கோவலனுடைய ஏடகத்தின் பின்னர் பத்தினியின் ஏடகம் கொண்டு செல்லப்படுவது போன்று, சிங்களவர்களின் பெரஹரா நிகழ்விலும் அளுத்தெவியோவின் ஊர்வலத்தின் பின்னரே பத்தினித் தெய்வத்தின் ஊர்வலம் கொண்டு செல்லப்படுகின்றது. தமிழர்களின் ஏடக ஊர்வலங்களின் போது ஊர்மக்கள் வீதியின் முன் மஞ்சள் நீர் தெளித்து நிறைகுடம் வைத்துக் கண்ணகியினை வழிபடுவது போன்று, பெரஹரா நிகழ்விலும் ஊர்மக்கள் வீதியில் மஞ்சள் நீர் தெளித்து நிறைகுடம் வைத்துப் பத்தினித் தெய்வத்தினை வழிபடுகின்றனர். இருதரப்பிலும் கப்புறாளைமார்களே ஊர்வலத்தினைத் தலைமைதாங்கிக் கொண்டு செல்கின்றனர். தமிழர்களின் ஏடக ஊர்வலத்தின் போது ஏடகங்களின் முன்னர் கோல்களைத் தட்டி வசந்தன் கூத்து ஆடப்படுவது போன்று, அங்கெலியவின் போதான பெரஹரா நிகழ்விலும் ‘லிக்கிலிய’ என்ற கோலாட்டம் ஆடப்படுகின்றது.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டின் இறுதி நாளன்று கொம்புக் குளிர்த்தியின் போது கட்டாடியார் தாய்மரத்திலும் செவ்வாய்க்குற்றியிலும் மஞ்சள் கலந்த நீரினை ஊற்றித் தாய்மர வளையத்தினையும் செவ்வாய்க்குற்றி வளையத்தினையும் வெட்டுவது போன்று, சிங்களவர்களின் அங்கெலியவிலும் இறுதி நாளன்று கப்புறாளை அன்கஹவிற்கும் (தாய்மரம்) ஹெனகந்தவடவிற்கும் மஞ்சள் கலந்த நீரினை ஊற்றி அவற்றில் பிணைக்கப்பட்டுள்ள கயிறுகளை வெட்டுகின்றார்.

சிங்களவர்கள் அங்கெலிய விளையாட்டின் இறுதி நாளன்று கடற்கரைக்குச் சென்று நீர்வெட்டுச் சடங்கினைச் செய்கின்றனர். ஆனால், தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டின் இறுதி நாளன்று நீர்வெட்டுச் சடங்கு நடைபெறுவதில்லை. தமிழர்களிடையே கொம்புமுறி விளையாட்டின் இறுதி நாளன்று செய்யப்படுகின்ற கொம்புக் குளிர்த்தியின் போது கற்பூகனார் மஞ்சள் கலந்த நீரினைக் கொம்புகளின் மீதும் மக்களின் மீதும் தெளிப்பது போன்று, அங்கெலிய விளையாட்டின் நீர்வெட்டின் போது நடைபெறும் ஊர்வலத்திலும் கப்புறாளைமார் மஞ்சள் கலந்த நீரை மக்கள் மீது தெளிப்பர். நீர்வெட்டு ஊர்வலம் நடைபெறும் போது ஊர்மக்கள் ஊர்வலம் வருகின்ற வீதியில் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி ஊர்வலத்தில் வருபவர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்குவது போன்று, தமிழர்களின் கொம்புக் குளிர்த்தியிலும் ஊர்மக்கள் வீதியில் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி ஊர்வலத்தில் வருபவர்களுக்கு உணவுப் பண்டங்களை வழங்குவர். தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டில் கொம்புக் குளிர்த்தி இடம்பெறுகின்ற நாளும், சிங்களவர்களின் அங்கெலியவில் நீர்வெட்டு இடம்பெறுகின்ற நாளும் பூரணை தினமாகவே அமைந்திருக்கும். மேலும், இரு இனத்தவர்களது விளையாட்டுகளிலும் தோற்ற கட்சியினரை இகழ்கின்ற வசைப்பாடல்கள் பாடப்படுகின்றன.

தமிழர்களின் கொம்புமுறி விளையாட்டிற்கும் சிங்களவர்களின் அங்கெலியவிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. எனினும், அவை தமக்கிடையே தனித்துவமான பண்புகளையும் கொண்டு காணப்படுகின்றன.

அடிக்குறிப்பு

1. Gananath Obeyesekere, op cit, p.401-402.



About the Author

கிருபாகரன் கவிதாஞ்சன்

கிருபாகரன் கவிதாஞ்சன் மட்டக்களப்பு மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.

தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வாளராக தொடர்ந்தும் தனது கல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். நாட்டுப்புறவியல், நாடகமும் அரங்கியிலும் ஆகிய துறைகளிலும் பல ஆக்கங்களைத் தற்காலத்தில் எழுதி வருகின்றார். என்பதோடு இவர் சிறந்த மேடை நடிகரும் ஆவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்