நல்லரத்தினம் சிங்கராசா வழக்கும், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
35 நிமிட வாசிப்பு

நல்லரத்தினம் சிங்கராசா வழக்கும், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும்

November 20, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

பரவலாக அறியப்பட்ட ‘சிங்கராசா’ வழக்கில், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும் அது தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் கருத்துகளும் தொடர்பான ஓர் ஆழமான பகுப்பாய்வு: 

சிறப்பு வழக்கு: நல்லரத்தினம் சிங்கராசா தொடர்பான மீது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

நீதிமன்றங்களின் வழக்கு இலக்கங்கள்:

உச்ச நீதிமன்றம்: S.C. Spl (LA) No. 182/99

மேல்முறையீட்டு நீதிமன்றம்: C.A. Appeal No. 208/95

உயர் நீதிமன்றம்: H.C. Colombo 6825/94

வழக்காளி (மனுதாரர்): நல்லரத்தினம் சிங்கராசா (இந்த நூல் எழுதப்பட்ட போது களுத்துறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்).

எதிராளி: மாண்புமிகு சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு 12.

நீதியரசர்கள்: பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நிஹால் ஜயசிங்க, என்.கே. உடலகம, என்.ஈ. திசாநாயக்க, காமினி அமரதுங்க ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்.

மனுதாரர் சார்பில்: ஈ. மரியாம்பிள்ளையின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்.கே.டபிள்யூ. குணசேகரவுடன் சாவித்திரி குணசேகர, சூரியா விக்கிரமசிங்க, வி.எஸ். கணேசலிங்கம், சாலிய எதிரிசிங்க ஆகியோர்.

சட்டமா அதிபர் சார்பில்: பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொடவுடன் அரச சட்டத்தரணி ஹர்ஷிகா டி சில்வா.

வாதங்கள் முன்வைக்கப்பட்ட நாள்: 05.12.2005

எழுத்துமூல வாதங்கள்: மனுதாரர் — 25.01.2006; எதிர்மனுதாரர் — 24.02.2006.

தீர்ப்பு வழங்கப்பட்ட நாள்: 15.09.2006

பிரதான நீதிபதி: சரத் என். சில்வா

இவ்வழக்கின் மனுதாரர் நல்லரத்தினம் சிங்கராசா மீது உயர் நீதிமன்றத்தில் ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவற்றின்படி அவர், 01.05.1990 முதல் 31.12.1991 வரையிலான காலப்பகுதியில், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, ஆனையிறவு ஆகிய இடங்களில், அசோக் பால்ராஜ், சொர்ணம், பொட்டு அம்மான், தினேஷ், சுசிகுமார் ஆகியோருடனும், அரசு தரப்பினால் இதுவரை அடையாளம் காணப்படாத வேறு சிலருடனும் இணைந்து, சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைச் சட்டவிரோதமான வழிகளில் கவிழ்ப்பதற்கான சதியில் ஈடுபட்டார் என்றும், இந்தச் சதியை நிறைவேற்றும் நோக்கில், யாழ்ப்பாணம் கோட்டை, பலாலி, காங்கேசன்துறை ஆகிய இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் மீது, தாக்குதல் நடத்தினார் என்றும் இந்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் (Emergency Regulations) கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள் – 1979ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட 48ஆம் இலக்கச் சட்டம்) கீழ் கொண்டுவரப்பட்டன.

விசாரணைக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் மனுதாரர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உறுதிசெய்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டுகள் என்ற அடிப்படையில், கடுங்காவல் தண்டனையை விதித்தது. கூடவே, இந்தத் தண்டனைகள் ஒன்றன்பின் ஒன்றாக (அதாவது தொடர்ச்சியாக) அனுபவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மனுதாரரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு தொடர்பாக 23.06.1999, 06.07.1999 ஆகிய திகதிகளில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதுடன், எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களும் மேற்கொள்ளப்பட்டன. மேல்முறையீட்டில் எழுப்பப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 06.07.1999 அன்று மனுதாரரின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த அதேவேளை, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் உரிய தண்டனைகள் ஒவ்வொன்றையும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகக் குறைத்ததுடன், அந்தத் தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, மனுதாரர் சிறப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தார். மார்க் பெர்னாண்டோ, வடுகொடபிட்டிய, விஜயதுங்க ஆகிய நீதிபதிகளைக் கொண்ட இந்த நீதிமன்றத்தின் அமர்வும், வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, 28.01.2000 அன்று அந்த மேல்முறையீட்டிற்கான சிறப்பு அனுமதியை மறுத்துவிட்டது.

மனுதாரர், இந்த நீதிமன்றத்தால் 28.01.2000 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை மறுஆய்வு (Revision) அல்லது மீள்பரிசீலனை (Review) செய்யவும், அத்துடன் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தண்டனைத் தீர்ப்பினை ரத்து செய்யவும் கோரி, 16.08.2005 அன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ‘குடியுரிமை, அரசியல் உரிமைகள் என்பவற்றின் மீதான சர்வதேச உடன்படிக்கை’யின் (International Covenant on Civil and Political Rights) கீழ், ஜெனீவாவில் நிறுவப்பட்ட மனித உரிமைக் குழுவின் (Human Rights Committee) கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அந்த உடன்படிக்கையின் விருப்ப நெறிமுறைக்கு (Optional Protocol) இணங்க, ‘தகவல் எண் 1033/2000’ (Communication No. 1033 of 2000) இன் வாயிலாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 16.12.1966 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘குடியுரிமை, அரசியல் உரிமைகள் என்பவற்றின் மீதான சர்வதேச உடன்படிக்கை’ (இதனை ‘உடன்படிக்கை’ எனக் குறிப்பிடலாம்) குறித்துக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும். இலங்கை இந்த உடன்படிக்கையில் 11.06.1980 அன்று இணைந்துகொண்டது. இந்த உடன்படிக்கையானது, ‘மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில்’ (Universal Declaration of Human Rights) குறிப்பிடப்பட்டுள்ள சில உரிமைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த உடன்படிக்கையின் 10 முதல் 14 வரையிலான பிரிவுகளில் அடங்கியுள்ள அடிப்படை உரிமைகள் (சுருக்கமாக) பின்வருமாறு அமைகின்றன:

“இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஒவ்வொரு தரப்பினரும், தங்கள் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதும் தங்கள் அதிகார வரம்பிற்குள் இருப்பவர்களுமான அனைத்து தனிநபர்களும், இந்த உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதி செய்யவும், அவற்றை மதிக்கவும் கடமைப்பட்டுள்ளனர். இத்தகைய உரிமைகளை வழங்குவதில் இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் அல்லது பிற கருத்துகள், தேசிய அல்லது சமூகப் பின்னணி, சொத்து, பிறப்பு அல்லது வேறு ஏதேனும் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படக்கூடாது.”

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் அல்லது பிற நடவடிக்கைகளின் மூலம் இந்த உரிமைகள் உறுதி செய்யப்படாது இருக்குமானால், இந்த உடன்படிக்கையில் உள்ள ஒவ்வொரு நாடும், தனது அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில், இந்த உடன்படிக்கையின் விதிகளுக்கு இணங்கவும், இதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகள் செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான சட்டங்களையோ அல்லது பிற நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக் கடமைப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது, ஒவ்வொரு உறுப்பு நாடும் “தனது அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப, …உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான, சட்டத்தை இயற்றுதலை அல்லது பிற ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தலைச் செய்ய வேண்டும்” என்ற அடிப்படையைக் கொண்டுள்ளது. இலங்கையில், 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பிலும், தற்போதைய அரசியலமைப்பிலும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன; அத்துடன், 1980இல் இந்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த நீதிமன்றத்தினால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், அரசியலமைப்பில் உள்ள அடிப்படை உரிமைகள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் என்பவை தொடர்பாக எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் கருதியுள்ளது. இதற்குக் காரணம், அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகள், மேலே குறிப்பிடப்பட்ட இந்த உடன்படிக்கையின் 2ஆவது விதியின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானவை என்று, அது கருதுவதுதான்.

அந்த வகையில், இந்த உடன்படிக்கையின் பொதுவான அடிப்படை என்னவென்றால், ஓர் உறுப்பு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் தனிநபர்கள், அந்த நாட்டில் பின்பற்றப்படும் சட்டம், அரசியலமைப்பு நடைமுறைகள் என்பவற்றின் வாயிலாக, உடன்படிக்கையில் உள்ள உரிமைகளுக்கான பலன்களையும் உத்தரவாதங்களையும் பெறுவார்கள் என்பதாகும். உடன்படிக்கையின் இந்த அடிப்படை, நமது அரசியலமைப்பின் கட்டமைப்போடு ஒத்துப்போகிறது (இது குறித்து விரைவில் விரிவாகப் பார்ப்போம்). நமது அரசியலமைப்பு, உள்நாட்டுச் சட்டம் (Municipal Law), சர்வதேசச் சட்டம் ஆகிய இரண்டையும் தனித்தனி அமைப்புகளாகக் கருதும் ‘இருமைவாதக் கோட்பாட்டின்’ (Dualist Theory) அடிப்படையில் அமைந்துள்ளது. ‘ஒருமைவாதக் கோட்பாடு’ (Monist Theory), ‘இருமைவாதக் கோட்பாடு’ (Dualist Theory) என்ற இரண்டுக்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஒருமைவாதக் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பாகக் கருதப்படுகின்றன. எனவே, சர்வதேசச் சட்டத்தின் பொதுவான விதிகள் உள்நாட்டுச் சட்டத்தின் ஓர் அங்கமாகி, அந்த நாட்டில் கூடுதல் சட்டங்கள் ஏதும் இயற்றப்படாமலேயே நேரடியாகவே வேண்டிய சட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மாறாக, இருமைவாதக் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒன்றையொன்று சாராத, தனித்தனியான சட்ட அமைப்புகளாகும்; ஒன்று தேசிய அளவிலானது, மற்றொன்று சர்வதேச அளவிலானது. இதில், சர்வதேசச் சட்டமானது, நாட்டின் வழக்காற்றுச் சட்டங்கள் (Customary Law), ஒப்பந்தச் சட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்துகிறது. அதே சமயம், உள்நாட்டுச் சட்டமானது, தேசிய அரசியலமைப்பிலிருந்து தனது அதிகாரத்தைப் பெற்று, தனிநபர்களுக்கும் சட்டபூர்வ அமைப்புகளுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டபடி, இந்த உடன்படிக்கையின் பொதுவான அடிப்படை என்னவென்றால், ஓர் உறுப்பு நாட்டின் எல்லைக்குள் உள்ள தனிநபர்கள், அந்த உறுப்பு நாட்டில் பின்பற்றப்படும் சட்டம், அரசியலமைப்புச் செயல்முறைகள் என்பவற்றின் மூலம் அவற்றில் அடங்கியுள்ள நன்மையையும், உரிமைகளுக்கான உத்தரவாதத்தையும் பெறுவார்கள் என்பதாகும். இந்த உடன்படிக்கையின் அடிப்படையானது, தற்போது குறிப்பிடப்படவிருக்கும் நமது அரசியலமைப்பின் கட்டமைப்புடன் இது ஒத்துப்போகிறது என்பதாகும். இது, உள்நாட்டுச் சட்டம், சர்வதேசச் சட்டம் ஆகிய இரண்டும் தனித்தனி அமைப்புகளாக இருக்கும் கண்ணோட்டத்தை, அல்லது பொதுவாக விவரிக்கப்படும் இருமைவாதக் கோட்பாட்டை, அடிப்படையாகக் கொண்டது. ஒருமைவாத மற்றும் இருமைவாதக் கோட்பாடுகள் என வகைப்படுத்தப்படும் இவ்விரண்டு கோட்பாடுகளுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒருமைவாதக் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் ஒரே சட்ட அமைப்பை உருவாக்குகின்றன. எனவே, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசச் சட்ட விதிகள், உள்நாட்டுச் சட்டத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்து, ஒரு நாட்டிற்குள் வேறு எந்தச் சட்டமும் இயற்றப்படாமலேயே நேரடிச் சட்ட விளைவை ஏற்படுத்துகின்றன. இருமைவாதக் கோட்பாட்டின்படி, சர்வதேசச் சட்டமும் உள்நாட்டுச் சட்டமும் இரண்டு தனித்தனியானதும் சுதந்திரமானதுமான சட்ட அமைப்புகளாகும்; ஒன்று தேசிய அளவிலானது, மற்றது சர்வதேச அளவிலானது. பிந்தையது, சர்வதேசச் சட்டமாக இருப்பதால், வழக்காற்றுச் சட்டம், ஒப்பந்தச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் நாடுகளுக்கு இடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்துகிறது. அதேசமயம், முந்தையது, தேசியச் சட்டமாக இருப்பதால், தேசிய அரசியலமைப்பிலிருந்து அதன் வலிமையைப் பெற்று, தனிநபர்களுக்கும் சட்டபூர்வ நிறுவனங்களுக்கும் உரிமைகளையும் கடமைகளையும் வழங்குகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் (UK) அரசியலமைப்பு அடிப்படை, இருமைவாதக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. 1972இல் ஐக்கிய இராச்சியம், டென்மார்க் மற்றும் அயர்லாந்துடன் இணைந்து, ஐரோப்பிய சமூகத்தில் ஒரு தரப்பாக இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது இது தெளிவாக வெளிப்பட்டது. சமூகத்தின் உறுப்புரிமையானது ஒருமைவாத அணுகுமுறையை முன்னிறுத்துவதால், அதாவது ‘சமூக ஒப்பந்தங்களை’ உள்நாட்டுச் சட்டமாக மாற்ற வேண்டிய அவசியமின்றி, அவற்றின் நேரடியானதும் உடனடியானதுமான உள்நாட்டு விளைவை உள்ளடக்கியிருப்பதால், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம்,1972இல் ஐரோப்பிய சமூகங்கள் சட்டத்தை இயற்றியது.

ஐரோப்பிய சமூகச் சட்டப் பகுதியில், ஐக்கிய இராச்சியத்தை ஒருமைவாத அமைப்புக்கு நடைமுறையில் மாற்றுகின்ற அந்தச் சட்டத்தின் பிரிவு 2 பின்வருமாறு கூறுகிறது: 

“ஒப்பந்தங்களின் கீழ் அவ்வப்போது உருவாக்கப்படும் அல்லது எழும் அனைத்து உரிமைகள், அதிகாரங்கள், பொறுப்புகள், கட்டுப்பாடுகள், ஒப்பந்தங்களின்படி, ஐக்கிய இராச்சியத்தில் மேலதிக சட்டமியற்றல் ஏதுமின்றி, சட்டபூர்வ விளைவைக் கொண்டிருக்க வேண்டிய, அல்லது பயன்படுத்தப்பட வேண்டிய அனைத்துத் தீர்வுகளும் நடைமுறைகளும், சட்டத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும். ‘நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக உரிமை’ (Enforceable Community Right), அல்லது அது போன்ற பிற சொற்றொடர்கள், இந்த உட்பிரிவுக்குப் பொருந்தக்கூடிய உரிமைகளைக் குறிப்பதாகவே கொள்ளப்பட வேண்டும்.”

‘ஹால்ஸ்பரியின் சட்டங்கள்’ (Halsbury’s Statutes) தொகுப்பில் உள்ள முன்னுரை, 1972ஆம் ஆண்டின் ‘ஐரோப்பிய சமூகங்கள் சட்டத்தின்’ (European Communities Act 1972) பிரிவு 1, பிரிவு 2 ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ‘இருமைவாத’ (Dualist), ‘ஒருமைவாத’ (Monist) அரசியலமைப்பு அணுகுமுறைகளுக்கு இடையிலான வேறுபாட்டை இவ்வாறு விளக்குகிறது:

பிரிவு 1, பிரிவு 2 ஆகியவை, பிரிட்டிஷ் சட்ட அமைப்பில், ஐரோப்பிய சமூக ஒப்பந்தங்களின் நிலையைத் தீர்மானிக்கின்றன. ஏன் இது அவசியமானது என்றால்,

“இருமைவாதக் கோட்பாட்டின்படி (Dualist Theory), ஐக்கிய இராச்சியம் ஒரு தரப்பாக இருக்கும் சர்வதேச ஒப்பந்தங்கள், அரசைப் பொறுத்தவரை (Crown qua state) மட்டுமே பிணைப்பை ஏற்படுத்துகின்றன; ஆனால், அவை உள்நாட்டுச் சட்ட அமைப்பில் விளைவை ஏற்படுத்த வேண்டுமானால், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பினராக இருப்பது ‘ஒருமைவாத’ (Monist) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது; இதன்படி, சர்வதேச ஒப்பந்தங்கள் உள்நாட்டுச் சட்டமாக மாற்றப்பட வேண்டிய அவசியமின்றி, நேரடியாகவும் உடனடியாகவும் உள்நாட்டில் சட்டபூர்வ விளைவை ஏற்படுத்துகின்றன. பிரிவு 2(1)இன் கீழ், ஐரோப்பிய சமூகத்தில் இணைவதற்கு முன்பிருந்த ஒப்பந்தங்கள், ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறின. அதே சமயம், இணைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளித்த பிறகு, ‘ஓடர்ஸ் இன் கவுன்சில்’ (Orders in Council) எனப்படும் ‘அரசவைக் கட்டளைகள்’ மூலமாகச் சட்டபூர்வ விளைவைப் பெறுகின்றன (பிரிவு 1(3)). (ஹால்ஸ்பரியின் சட்டங்கள் – நான்காம் பதிப்பு, தொகுதி 17, பக்கம் 32). 

இவ்வாறு, 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் மற்றும் பிற உள்நாட்டுச் சட்டங்களின் வாயிலாக ஐக்கிய இராச்சியத்தில் ‘சமூக உரிமைகள்’ (Community Rights) நடைமுறைக்கு வருகின்றன. இருப்பினும், ஐக்கிய இராச்சியத்தில் ‘இருமைவாதக் கோட்பாடு’ (Dualist Theory) தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவது, லார்ட் டென்னிங்கின் (Lord Denning) பின்வரும் கூற்றிலிருந்து தெளிவாகிறது:

“இதுவரை, நமது நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும்போது, அது ஒப்பந்தத்தின் கீழ் தனக்குள்ள கடமைகளை நிறைவேற்றும் நோக்கத்துடனேயே செயல்படுகிறது என்று நான் கருதி வந்தேன். ஒருவேளை, நமது நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும்போது, அந்த ஒப்பந்தத்தையோ அல்லது அதில் உள்ள ஏதேனும் ஒரு விதியையோ வேண்டுமென்றே நிராகரிக்கவோ, அல்லது ஒப்பந்தத்திற்கு முரணாகச் செயல்படவோ தீர்மானித்து, அதைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிட்டால், அத்தகைய சூழலில் அந்தச் சட்டத்தைப் பின்பற்றுவதே நமது நீதிமன்றங்களின் கடமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” ((Macarthys vs Smith) (1979) 3 All ER 325, பக்கம் 328.)

இந்தப் பின்னணியில், நமது அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். அரசியலமைப்பின் 3ஆம், 4ஆம் பிரிவுகள் பின்வருமாறு அமைகின்றன:

3. ‘இலங்கைக் குடியரசில், இறைமை மக்களிடமே உள்ளது; அதனை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. இறைமை என்பது, அரசாங்க அதிகாரம், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.’

4. ‘மக்களின் இறைமை, பின்வரும் முறைகளில் பயன்படுத்தப்படவும் அனுபவிக்கப்படவும் வேண்டும்:

(அ) மக்களின் சட்டவாக்க அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தின் மூலமாகவும், மக்கள் வாக்கெடுப்பின் (Referendum) மூலமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்;

(ஆ) இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரால் பயன்படுத்தப்பட வேண்டும்;

(இ) மக்களின் நீதித்துறை அதிகாரம், அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட, அல்லது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், இவைபோன்ற நிறுவனங்கள் வாயிலாக நாடாளுமன்றத்தால் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்களின் சலுகைகள், விலக்குரிமைகள், அதிகாரங்கள் தொடர்பான விடயங்களில், சட்டத்திற்கு உட்பட்டு நாடாளுமன்றமே நேரடியாக நீதித்துறை அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்;

(ஈ) அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள், அரசாங்கத்தின் அனைத்து அங்கங்களாலும் மதிக்கப்படவும், உறுதிப்படுத்தப்படவும், மேம்படுத்தப்படவும் வேண்டும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையிலும் அளவிலும் அன்றி, இந்த உரிமைகளைக் குறைக்கவோ, கட்டுப்படுத்தவோ அல்லது மறுக்கவோ கூடாது; 

(உ) மேலும், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும், மக்கள் வாக்கெடுப்புகளின் போதும், பதினெட்டு வயது பூர்த்தியடைந்த, வாக்காளராகத் தகுதியுடைய, வாக்காளர் பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள குடிமக்களில் ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தலாம்.’

இதன் 5ஆவது சரத்து, இலங்கை குடியரசின் ஆட்சிப்பகுதியானது, அதன் முதல் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்களையும், அதன் கடல் எல்லைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று வரையறுக்கிறது. நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் இத்தகைய பிரிவுகளிலிருந்து, இது ஒரு பாரம்பரிய, குடியரசு வடிவிலான அரசியலமைப்பு என்பது தெளிவாகிறது. இதில், ஒரு நாட்டை உருவாக்கும், ஆட்சிப்பகுதிக்கு உட்பட்ட இறையாண்மையானது மக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறையாண்மை என்பது சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை சார்ந்த அதிகாரங்களை உள்ளடக்கியது; இவை மக்களுக்காகவும், மக்களிடம் பொறுப்புக்கூறும் வகையிலும் அரசாங்கத்தின் அந்தந்த அங்கங்களால் செயல்படுத்தப்படுகின்றன. மக்களின் இறையாண்மையிலிருந்து பெறப்பட்ட அதிகாரங்களைச் செயல்படுத்துவதில், அரசாங்கத்தின் மூன்று அங்கங்களான நிர்வாகம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றிற்கு இடையே செயற்பாட்டு ரீதியான பிரிவினை உள்ளது. அரசாங்கத்தின் இந்த அங்கங்களுக்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட முழுமையான அதிகாரம் (Plenary Power) கிடையாது; மாறாக, அவற்றின் அதிகாரச் செயல்பாடுகள் அரசியலமைப்பாலும், அதிலிருந்து அதிகாரம் பெறும் சட்டங்களாலும் வரையறுக்கப்பட்டுள்ளன. இது, ஐக்கிய இராச்சியத்தில் காணப்படுவது போன்ற, முழுமையான அதிகாரத்தையும், எல்லையற்ற வல்லமையையும் கொண்ட முடியாட்சி முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.

உதாரணமாக, மெகாரி (Megarry V-C) அவர்களின் கூற்றை இங்கு குறிப்பிடலாம்: 

“…நாடாளுமன்றமே அதியுயர் சபையாகும் என்பது ஆங்கில அரசியலமைப்பின் ஓர் அடிப்படைக் கொள்கையாகும்.” “இங்கிலாந்தின் நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் தனக்கேயுரிய சர்வ வல்லமையை (Omnipotence) அழித்துக்கொள்வதற்கான அதிகாரத்தைத் தவிர, மற்ற அனைத்து விஷயங்களிலும் அது சர்வ வல்லமை படைத்தது என்பதைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றன” (Manuel vs A.G. [1982] 3 AER 786, 795இல்). 

ஆனால், இந்தக் கருத்து இலங்கை நாடாளுமன்றத்திற்குப் பொருந்தாது; ஏனெனில், இலங்கை நாடாளுமன்றம் மக்களிடமிருந்து பெறப்பட்ட சட்டவாக்க அதிகாரத்தைச் செலுத்துகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பின் 4(அ) பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, மக்களின் இறையாண்மை பிரிக்க முடியாதது. நிர்வாக அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் இதுவே பொருந்தும்.

ஐக்கிய இராச்சியத்தில் இருப்பது போன்ற, முடியாட்சிக்கு (Crown) உரிய முழுமையான நிர்வாக அதிகாரம் இலங்கையில் இல்லை; மாறாக, அரசியலமைப்பின் 4(ஆ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அதிபரின் நிர்வாக அதிகாரம் மக்களிடமிருந்தே பெறப்படுகிறது. எனவே, ‘ஹால்ஸ்பரியின் கட்டளைச் சட்டத் தொகுப்பில்’ (Halsbury’s Statute) “ஐக்கிய இராச்சியம் ஒரு தரப்பாக இருக்கும் சர்வதேச உடன்படிக்கைகள், அரசைப் பொறுத்தவரை (qua State) அந்த முடியாட்சியைக் கட்டுப்படுத்துகின்றன; ஆனால், அவை உள்நாட்டில் நடைமுறைக்கு வர வேண்டுமானால், சட்டத்தின் (Statute) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.” 

என்ற கூற்றை, இலங்கைக்குப் பயன்படுத்தும்போது அதை மாற்றியமைக்க வேண்டும். அதில் ‘அரசியலமைப்புக்கு உட்பட்டிருத்தல்’ (Constitutionality) என்ற இன்றியமையாத அம்சத்தைச் சேர்க்க வேண்டும். அதன்படி, அதனை இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்: 

“அரசியலமைப்புக்கும், எழுதப்பட்ட சட்டங்களுக்கும் உட்பட்டு, அதிபராலோ, இலங்கை அரசாங்கத்தாலோ மேற்கொள்ளப்படும் சர்வதேச உடன்படிக்கைகள், அரசைப் பொறுத்தவரை (qua State) குடியரசைக் கட்டுப்படுத்தும்; ஆனால், அவை உள்நாட்டில் நடைமுறைக்கு வர வேண்டுமானால், அரசியலமைப்பின் கீழ் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.”

குடியரசை, ஓர் அரசாகக் கட்டுப்படுத்தும் நிறைவேற்று அதிகாரத்தின் மீதான இந்த வரம்பு, குடியரசுத் தலைவரின் அதிகாரங்களையும் பணிகளையும் வரையறுக்கும் 33ஆவது பிரிவில் (Article 33) அடங்கியுள்ளது. இதில் தொடர்புடைய விதியானது 33(f) பிரிவாகும், அது பின்வருமாறு கூறுகிறது:

“அரசியலமைப்பின் விதிகளுக்கோ அல்லது எழுதப்பட்ட சட்டங்களுக்கோ முரணாக இல்லாத வகையில், சர்வதேசச் சட்டம், வழக்கம் அல்லது மரபுகளின்படி செய்ய வேண்டிய அல்லது செய்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட அனைத்துச் செயல்களையும் மேற்கொள்வது.”

எனவே, அரசுத் தலைவராக, இலங்கை குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சர்வதேச வழக்கிலுள்ள சட்டத்தின் கீழ், அரசியலமைப்புக்கோ அல்லது எழுதப்பட்ட சட்டங்களுக்கோ முரணாக இல்லாத உடன்படிக்கைகளில் கையெழுத்திடவோ அல்லது உடன்படிக்கைகளில் இணையவோ அவருக்கு அதிகாரம் உள்ளது. இந்த வரம்பு, ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) என்பதன் முதன்மையான பொருளான ‘சட்டபூர்வத்தன்மை’ (Principle of Legality) என்ற கொள்கையை வலியுறுத்துகிறது; அதாவது, “அனைத்துச் செயல்களும் சட்டத்திற்கு உட்பட்டே செய்யப்பட வேண்டும்.” (வேட், ஃபோரர்சைத் (Wade, Forsyth) ஆகியோர் எழுதிய ‘நிர்வாகச் சட்டம்’ (Administrative Law), 9ஆவது பதிப்பு, பக்கம் 20).

இந்தச் சூழலில், முன்வைக்கப்பட்ட வாதங்களை நான் பரிசீலிக்கிறேன். மனுதாரரின் வழக்கறிஞர், இலங்கை 1980 ஜூன் 11 அன்று மேற்குறிப்பிட்ட உடன்படிக்கையிலும் (Covenant), 1997 அக்டோபர் 3 அன்று, அதன் விருப்ப நெறிமுறையிலும் (Optional Protocol) இணைந்துகொண்டதாக வாதிட்டார். விருப்ப நெறிமுறையில் இணைந்தபோது இலங்கை வெளியிட்ட பிரகடனத்தை மனுதாரர் சமர்ப்பித்தார்; அது குறித்து பின்னர் விரிவாகக் காண்போம். இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் குழுவிற்கு (Human Rights Committee) மனுதாரர் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனை, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதும், இந்த நீதிமன்றத்தால் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதும், அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தனது உரிமைகளை மீறும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்தக் குழு, இலங்கை அரசுக்கு அனுப்பிய முடிவில் வழங்கப்பட்ட தண்டனையும் தீர்ப்பும், அந்த உடன்படிக்கையின் 14ஆவது பிரிவின் பத்திகள் 1, 2, 3, 14(g) ஆகியவற்றுடன், 2ஆவது பிரிவின் பத்திகள் 3, 7 ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கண்டறிந்தது. மேலும், ஓர் ‘அரசு தரப்பு’ (State Party) என்ற முறையில், மனுதாரருக்கு விடுதலையோ அல்லது மறுவிசாரணையோ மற்றும் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பயனுள்ளதும் பொருத்தமானதுமான தீர்வை வழங்க இலங்கை கடமைப்பட்டுள்ளது என்றும் அக்குழு கண்டறிந்தது.

கவனத்திற்குரிய இரண்டு அம்சங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவை பின்வருமாறு:

i) குழு பரிந்துரைத்துள்ள மாற்றுத் தீர்வுகள், நமது நீதிமன்ற நடைமுறைகளின் பின்னணியில் பொருந்தி வரவில்லை. விடுதலையும் இழப்பீடும் (இவை தனி உரிமையியல் வழக்கின் மூலமே கோரப்பட முடியும்) என்பது, அடிப்படையற்றதும் தீய உள்நோக்கம் கொண்டதுமான ஒரு வழக்குத் தொடரப்பட்ட சூழலில் மட்டுமே பொருந்தும். மாறாக, போதுமான ஆதாரங்கள் இருந்தும், தீவிரமான நடைமுறைச் சட்ட மீறல்களால் தீர்ப்பு பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பட்சத்திலேயே, ஒரு வழக்கு மீண்டும் விசாரிக்க (Retrial) உத்தரவிடப்படும். மனுதாரர் அளித்த வாக்குமூலம், அது தானாக முன்வந்து அளிக்கப்பட்டதா என்பது குறித்த விரிவான விசாரணைக்குப் (Voir dire inquiry) பின்னரே, உயர் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. அந்த வாக்குமூலம், தண்டனை வழங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் நிலையில், குழு பரிந்துரைத்தது போல மீண்டும் ஒரு விசாரணை நடத்துவது, ஏற்கனவே நடந்த அதே நடைமுறையைத் தேவையற்ற முறையில் மீண்டும் நிகழ்த்துவதாகவே அமையும்.

ii) இலங்கையின் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க மற்றவர்களுடன் சதி செய்ததாகவும், அதற்காகப் பல இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இக்குற்றங்கள் இலங்கை மக்களின் இறையாண்மையுடன் நேரடியாகத் தொடர்புடையவை. ஆனால், மக்களின் இறையாண்மையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஜெனீவாவில் உள்ள அக்குழு, இலங்கையின் மக்களின் நீதித்துறை அதிகாரத்தைச் செயல்படுத்தும் மூன்று நிலை நீதிமன்றங்களும் வழங்கிய தீர்ப்புகளை ரத்து செய்ய முற்பட்டுள்ளது.

இந்த மனு மீதான பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் ஆட்சேபனை, மேலே (ii)இல் குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்தை அடிப்படையாகக் கொண்டது. நீதித்துறை அதிகாரம் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு பகுதியாகும் என்றும், அரசியலமைப்பின் 4(இ) பிரிவின்படி, அரசியலமைப்பால் அல்லது சட்டத்தால் நிறுவப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது நிறுவனங்கள் மூலமாக மட்டுமே இந்த அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்றும் அவர் வாதிட்டார். இந்த அடிப்படை அம்சம் அரசியலமைப்பின் 105(1) பிரிவில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது:

“அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நிலைநாட்டவும், நடைமுறைப்படுத்தவும் கூடிய நீதி நிர்வாகத்திற்கான நிறுவனங்கள் பின்வருமாறு அமைகின்றன:

அ. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர் நீதிமன்றம்; 

ஆ. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேல்முறையீட்டு நீதிமன்றம்;    

இ. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மேல் நீதிமன்றத்தாலும் நாடாளுமன்றத்தாலும் அவ்வப்போது நிறுவப்படும் பிற முதனிலை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது நிறுவனங்கள்.”

இதன் விளைவாக, மனுதாரர் தனது உரிமைகளை நிலைநாட்டவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் குழுவை (Human Rights Committee) அணுக முடியாது; ஏனெனில், நமது அரசியலமைப்பின் கீழ் அக்குழுவிற்கு நீதித்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. மேலும், அரசியலமைப்பின் 118ஆவது பிரிவின்படி, “நாட்டின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான உயர் நீதிமன்றமாக” விளங்கும் இந்த நீதிமன்றம், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் தனது சொந்த உத்தரவை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. ஏனெனில், அந்த மனித உரிமைக் குழுவிற்கு நமது அரசியலமைப்பின் கீழ் எந்தவொரு நீதித்துறை அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மறுபுறம், மனுதாரரின் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், இலங்கை 1997ஆம் ஆண்டில் ‘விருப்பத்திற்குரிய நெறிமுறை’யில் (Optional Protocol) இணைந்ததாகவும், மேலே குறிப்பிட்ட பிரகடனத்தைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்தப் பிரகடனத்தின் மூலம் வழங்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்தித்தான், மனுதாரர் ஜெனீவாவில் உள்ள குழுவின் அதிகார வரம்பை நாடியுள்ளார். எனவே, அக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் நடைமுறைப்படுத்தும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு அவருக்கு உள்ளது. மாற்றாக, இந்த நீதிமன்றம் அக்குழுவின் முடிவுகளை அங்கீகரித்து, மனுதாரரைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். சட்ட ஆலோசகர்களின் வாதங்கள், ஒன்று சட்டபூர்வமான எதிர்பார்ப்பையும் மற்றொன்று அரசியலமைப்புக்கு முரணான தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, ஏறக்குறைய இணையாகச் செல்கின்றன. 1980இல் உடன்படிக்கையில் இணைந்ததன் சட்ட விளைவு, விருப்ப நெறிமுறையில் இணைந்ததன் சட்ட விளைவு, 1997இல் வெளியிடப்பட்ட பிரகடனம் ஆகியவை தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளில் அவை ஒன்றிணைகின்றன. முந்தைய பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்ட இருமைவாதக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கும் நமது அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும், இலங்கை மக்களின் இறையாண்மைக்குள்ளும், வழக்கமான சர்வதேச சட்டத்தின் கீழ் குடியரசின் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில், சரத்து 4(1)ஐ சரத்து 33(1)உடன் சேர்த்துப் படிப்பதன் மூலம் பெறப்படும் ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள்ளும், இந்தப் பிரச்சினைகள் அவசியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள முடியாட்சி அதிகாரம் (Crown) போல, ஜனாதிபதி முழுமையான நிறைவேற்று அதிகாரத்தின் இருப்பிடமாக இருப்பதில்லை. மேலே குறிப்பிடப்பட்ட அடிப்படை விதியான பிரிவு 3இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளபடி, அரசாங்க அதிகாரங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் உள்ள முழுமையான அதிகாரம், மக்களின் பிரிக்க முடியாத இறையாண்மையையே குறிக்கிறது. ஜனாதிபதி மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைச் செலுத்துகிறார்; சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் (Customary International Law) கீழ் குடியரசிற்காகச் செயல்படவும், உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளவும், சர்வதேச உடன்படிக்கைகளில் இணையவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரிவு 33(f)இல் உள்ள குறிப்பிட்ட வரம்பின்படி, இத்தகைய செயல்பாடுகள் அரசியலமைப்பின் விதிகளுக்கோ அல்லது எழுதப்பட்ட சட்டங்களுக்கோ முரணாக இருக்கக்கூடாது. இந்த வரம்பு விதிக்கப்பட்டதற்குக் காரணம், ஜனாதிபதி மக்களின் சட்டவாக்க அதிகாரத்தின் இருப்பிடமாக இல்லை என்பதே ஆகும்; அரசியலமைப்பின் பிரிவு 4(அ) இன்படி, சட்டவாக்க அதிகாரம் நாடாளுமன்றத்தாலும், மக்கள் வாக்கெடுப்பின் (Referendum) மூலம் மக்களாலும் மட்டுமே செலுத்தப்படுகிறது. எனவே, ஜனாதிபதி சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் கீழ் குடியரசிற்காகச் செயல்பட்டு, அரசியலமைப்பிற்கோ அல்லது எழுதப்பட்ட சட்டத்திற்கோ முரணாக இல்லாத ஓர் உடன்படிக்கையைச் செய்துகொள்ளும்போது, அந்தச் செயல் குடியரசை, ஓர் அரசாகக் கட்டுப்படுத்தும். ஆனால், அத்தகைய உடன்படிக்கை உள்நாட்டில் நடைமுறைக்கு வரவும், தனிநபர்களுக்கு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கவும் வேண்டுமானால், நாடாளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியும், தேவைப்பட்டால் மக்கள் வாக்கெடுப்பு மூலமாகவும் அதைச் செயல்படுத்த வேண்டும். இது, நமது அரசியலமைப்பிற்கு அடிப்படையாக அமையும் ‘இருமைவாதக் கோட்பாட்டிற்குப்’ (Dualist Theory) பொருந்துவதாக இருக்கும்.

மறுபுறம், அரசியலமைப்பின் விதிகளுக்கோ அல்லது எழுதப்பட்ட சட்டங்களுக்கோ முரணான உள்ளடக்கத்தைக் கொண்ட ஓர் உடன்படிக்கையில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டாலோ அல்லது அத்தகைய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டாலோ, அது மேலே குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பின் 33(f) பிரிவில் உள்ள வரம்புகளை மீறுவதாகும்; மேலும் இது அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட (Ultra Vires) செயலாகவும் அமையும். குடியரசுத் தலைவரின் இத்தகைய செயல், ஓர் அரசாகிய குடியரசுக்கு (Republic) எவ்விதக் கடப்பாட்டையும் ஏற்படுத்தாது. இந்த முடிவு, மேலே குறிப்பிட்ட ‘இருமைவாதக் கோட்பாட்டின்’ (Dualist Theory) அடிப்படையில் மட்டுமல்லாமல், அரசியலமைப்பின் 3, 4 மற்றும் 33(f) ஆகிய பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ள இறையாண்மை, அரசு அதிகாரத்தைச் செலுத்துதல் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், 1980ஆம் ஆண்டின் உடன்படிக்கை (Covenant), 1997ஆம் ஆண்டின் விருப்பத் தேர்வு நெறிமுறை (Optional Protocol) ஆகியவற்றில் இலங்கை இணைந்துகொண்ட விவகாரத்திற்கு நான் வருகிறேன்.

முந்தைய பகுப்பாய்வில் குறிப்பிட்டபடி, இந்த உடன்படிக்கையானது, ஒவ்வொரு உறுப்பு நாடும் “தங்கள் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு இணங்க… உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதற்கு” தேவையான சட்டமியற்றுவது அல்லது வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டுள்ளது (பிரிவு 2). எனவே, 1980இல் அப்போதைய அதிபர் இந்த உடன்படிக்கையில் இணைந்த செயல், இலங்கையின் அரசியலமைப்பு அல்லது எழுதப்பட்ட சட்ட விதிகளுக்கு முரணானதாக அமையவில்லை. இந்த உடன்படிக்கையில் இணைந்ததன் மூலம், இலங்கை அரசு அதனுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரிவு 2இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டமியற்றும் அல்லது பிற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த உடன்படிக்கை உள்நாட்டில் சட்ட விளைவைக் கொண்டிருக்கவில்லை; மேலும், இதில் உள்ள உரிமைகள் இலங்கையின் சட்டத்தின் கீழ் அமையும் உரிமைகளாகக் கருதப்பட முடியாது.

மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, 1997ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் (அரசுத் தலைவரும் அரசாங்கத்தின் தலைவரும் என்ற முறையில்) இந்த விருப்பத் தேர்வு நெறிமுறையில் (Optional Protocol) இணைந்துகொண்டார். அப்போது அவர் செய்திருந்த பிரகடனம் இது:

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம், விருப்பத் தேர்வு நெறிமுறையின் பிரிவு (I)இன் கீழ், மனித உரிமைக் குழுவின் (Human Rights Committee) அதிகார வரம்பை அங்கீகரிக்கிறது. இதன்படி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தனிநபர்கள், இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டதாகக் கூறி, அக்குழுவிடம் முறையிடலாம். இத்தகைய மீறல்கள், இந்த நெறிமுறை இலங்கைக்கு நடைமுறைக்கு வந்த திகதிக்குப் பிறகு நிகழ்ந்த செயல்கள், தவிர்ப்புகள், முன்னேற்றங்கள் அல்லது நிகழ்வுகளாலோ, அல்லது அத்தகைய திகதிக்குப் பிந்தைய செயல்கள், தவிர்ப்புகள், முன்னேற்றங்கள் அல்லது நிகழ்வுகள் தொடர்பான முடிவுகளாலோ ஏற்பட்டிருக்க வேண்டும். மேலும், ஒரு தனிநபரின் முறையீட்டை மனித உரிமைக் குழு பரிசீலிக்கும்போது, அதே விவகாரம் வேறொரு சர்வதேச விசாரணை அல்லது தீர்வு நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு செயல்படுகிறது.”

இந்த விவகாரத்திற்குத் தொடர்புடைய இந்தப் பிரகடனத்தில், சட்ட முக்கியத்துவம் வாய்ந்த மூன்று அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

“1. குடியரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஒரு தனிநபருக்கு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள உரிமைகளை வழங்குதல்;

2. இலங்கையில் நிகழும் செயல்கள், செய்யத் தவறியவை, முன்னேற்றங்கள் அல்லது நிகழ்வுகளின் விளைவாக உடன்படிக்கையில் உள்ள ஏதேனும் உரிமை மீறல் குறித்து மனித உரிமைகள் குழுவிற்கு ஒரு தகவலை அனுப்புவதற்கான உரிமையை குடியரசின் அதிகார வரம்பிற்குள் உள்ள ஒரு தனிநபருக்கு வழங்குதல்;

3. உடன்படிக்கையின் கீழ் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் அத்தகைய தகவலைப் பெற்றுப் பரிசீலிப்பதற்கான மனித உரிமைகள் குழுவின் அதிகாரத்தை அங்கீகரித்தல்.”

கூறுகள் 1 மற்றும் 2 ஆகியவை பொதுச் சட்ட உரிமைகளை வழங்குவதற்குச் சமமாகும்.

எனவே, இது சட்டமியற்றும் அதிகாரத்தின் ஒரு வெளிப்படையான பயன்பாடாகும். இது மேலே மேற்கோள் காட்டப்பட்ட அரசியலமைப்பின் 4(இ) பிரிவில் கூறப்பட்டுள்ளபடி, பாராளுமன்றம் மற்றும் ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. அரசியலமைப்பின் 76(1) பிரிவு பின்வருமாறு கூறுகிறது:

“பாராளுமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை எந்த வகையிலும் கைவிடவோ அல்லது அந்நியப்படுத்தவோ கூடாது, மேலும் எந்தவொரு சட்டமியற்றும் அதிகாரத்துடனும் எந்தவொரு அதிகார அமைப்பையும் நிறுவக்கூடாது;

(2) பொதுப் பாதுகாப்புத் தொடர்பான எந்தவொரு சட்டத்திலும், அத்தகைய சட்டத்திற்கு இணங்க அவசரகால விதிமுறைகளை உருவாக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் ஏற்பாட்டைப் பாராளுமன்றம் செய்வது, இந்தச் சரத்தின் மேலுள்ள பகுதி (1)இன் விதிகளுக்கு முரணாகாது.”

எனவே, பொதுப் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு மட்டுமே, நாடாளுமன்றம் சட்டத்தின் வாயிலாக அதிபருக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்க முடியும்; இதுவே அத்தகைய அதிகாரம் வழங்கப்படக்கூடிய ஒரே சூழலாகும். மேற்கூறிய அறிவிப்பை வெளியிடுவதற்கு, நாடாளுமன்றத்திடமிருந்து அதிபருக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ எவ்வித அதிகாரமும் வழங்கப்பட்டதாக வாதிடப்படவில்லை. எனவே, அந்த அறிவிப்பின் 2ஆம், 3ஆம் கூறுகள், அரசியலமைப்பின் 3ஆவது பிரிவு, 4(இ) பிரிவு, 75ஆவது பிரிவு (இது சட்டமியற்றும் அதிகாரத்தை வரையறுக்கிறது) ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானவை.

அறிவிப்பின் 3ஆவது கூறு, ஜெனீவாவில் உள்ள மனித உரிமைக் குழுவிற்கு (Human Rights Committee) நீதித்துறை சார்ந்த அதிகாரத்தை வழங்க முயல்கிறது. அதாவது, குடியரசுக்குள் நடைபெறும் செயல்கள் தொடர்பாக, அந்தக் குடியரசுக்கு உட்பட்ட ஒரு தனிநபரின் பொதுச் சட்ட உரிமையை நிலைநாட்டும் அதிகாரத்தை அக்குழுவிற்கு வழங்க முற்படுவது, அரசியலமைப்பின் 3ஆவது பிரிவு, 4(இ) பிரிவு மற்றும் 105(1) பிரிவு ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானதாகும்.

எனவே, 1997இல் அப்போதைய அதிபர் ‘விருப்பத் தேர்வு நெறிமுறை’யில் (Optional Protocol) இணைந்ததும், அதன் 1ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பும், மேலே குறிப்பிட்ட அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானவை; மேலும், இவை அரசியலமைப்பின் 33(f) பிரிவின் கீழ் அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தாண்டியவை. இந்த இணைப்பும் அறிவிப்பும், ஒரு நாடாகிய குடியரசுக்குக் கட்டுப்படுபவை அல்ல; மேலும், குடியரசுக்குள் இவை எவ்வித சட்ட விளைவையும் ஏற்படுத்தாது.

மேலும் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், 1997இல் ‘விருப்பத் தேர்வு நெறிமுறை’யில் இணைந்ததாகக் கூறப்படுவது, அந்த உடன்படிக்கையின் (Covenant) 2ஆவது பிரிவுக்கு முரணானது. அந்தப் பிரிவு, உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு நாடு, தனது அரசியலமைப்புச் செயல்முறைகளுக்கு உட்பட்டு, அதில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களையோ அல்லது பிற நடவடிக்கைகளையோ மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதற்கான உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தின் ‘ஐரோப்பிய சமூகங்கள் சட்டம் 1972’ (European Communities Act 1972)ஐ நான் சுட்டிக்காட்டுகிறேன்; இதில், ஒரு சர்வதேச உடன்படிக்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, அதிலுள்ள கடமைகளைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒப்பந்தத்தில் (Covenant) உள்ள உரிமைகளுக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில், 1997ஆம் ஆண்டில் ‘விருப்ப நெறிமுறை’ (Optional Protocol) ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம், இலங்கைச் சட்டத்தில் இன்னும் இயற்றப்படாத உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், மனித உரிமைகளுக்கான குழுவின் (Human Rights Committee) வாயிலாகத் தீர்வு பெற வழிவகை செய்யப்படுவதாகக் கருதப்பட்டது. ‘உரிமை உள்ள இடத்தில் தீர்வு’ (ubi jus ibi remedium) என்ற சட்டக் கொள்கை, ஓர் உரிமை வழங்கப்பட்டால் அதற்கான தீர்வும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உரிமை ஏதுமின்றி சட்டப்படி எந்தவொரு தீர்வையும் கற்பனை செய்ய முடியாது.

இத்தகைய சூழலில், மனித உரிமைக் குழுவின் (Human Rights Committee) முடிவுகளை இந்த நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று மனுதாரர் கோருவதற்கு எவ்வித நியாயமான எதிர்பார்ப்பும் (Legitimate Expectation) இருக்க முடியாது.

இலங்கை அரசாங்கம், மனித உரிமைக் குழுவிற்கு அளித்த பதிலில் (இது மனுதாரரால் தனது ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது), அது குறித்த சரியான சட்ட நிலைப்பாட்டை பின்வருமாறு விளக்கியுள்ளது:

“இலங்கை அரசியலமைப்பின்படியும், நடைமுறையில் உள்ள சட்டக் கட்டமைப்பின்படியும், ஒரு நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பு இலங்கையின் மிக உயர்ந்த மேல்முறையீட்டு நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, அவரை விடுதலை செய்யவோ அல்லது மீண்டும் விசாரணை நடத்தவோ இடமில்லை. எனவே, குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் அல்லது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான குழுவின் முடிவைச் செயல்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் அரசுக்கு இல்லை. இலங்கை அரசியலமைப்பிற்கு முரணான வகையில் இலங்கை அரசாங்கம் செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது.”

அப்போதைய ஜனாதிபதி (அரசாங்கத் தலைவராக), அரசியலமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்டிருந்தால், 1997இல் செய்த ‘விருப்பத் தேர்வு நெறிமுறை’யை (Optional Protocol) ஏற்றுக்கொண்டிருக்கவோ அல்லது மேலே குறிப்பிட்ட பிரகடனத்தைச் செய்திருக்கவோ முடிந்திருக்காது. இத்தகைய ஒரு முரண்பட்ட சூழலால்தான், மனித உரிமைக் குழுவிடம் அரசாங்கம் சமர்ப்பித்த பதிலில், தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்ற தொனியில் அதன் இயலாமை நிலை வெளிப்பட்டிருந்தது; இது இலங்கைக் குடியரசிற்கு நற்பெயரைத் தரும் ஒன்றாக அமையவில்லை.

இந்தக் காரணங்களின் அடிப்படையில், மனுதாரரின் விண்ணப்பம், தவறான புரிதலின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், அதற்கு எவ்வித சட்ட அடித்தளமும் இல்லாதிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுத் தள்ளுபடி செய்யப்பட்டது.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்