
இற்றைக்கு 35,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 மரபணுக் குறியீடு கொண்டோரின் இந்திய-இலங்கை வருகை. Picture Courtesy: Genographic Project.
அறிமுகம்
மரபணுவியல் அறிவியலாளர்கள் மரபணுக்களின் வரிசைக் கிரமத்தை இயக்கினார்கள்; அவர்கள் மரபணுத் தொகைகளை வரைவு செய்தார்கள்; அவர்கள் இந்தியா முழுவதிலும், இலங்கையிலும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளிலும், பண்டைய உலக நாடுகளிலும் வாழும் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மரபணுக்களை ஒப்பிட்டார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட முடிவுகள் வியப்பூட்டுவதாக இருந்தன.
தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணுக்கள் (இனக்கீற்று அமிலங்கள்) மிகப் பழமையான, மிக ஆழமாகப் படிந்த மரபணுச் சுவடுகளைத் தாங்கி நின்றன. இப்பூவுலகில் வாழும் ஏறக்குறைய அனைத்து மக்களிடமிருந்தும் மாறுபட்ட மரபணுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் இம்மக்களை நவீன மனித மரபியலின் முக்கியமானதொரு ஆய்வின் கண்டுபிடிப்புகள் மையப் புள்ளியில் வைக்கின்றன.
இன்றைய அறிவியல் நமக்கு எடுத்துரைக்கும் உண்மை இது. தமிழ் பேசும் மக்கள் உலகின் மிகப் பழைமையான மனிதக் குழுக்களின் நேரடி வம்சாவளியினராவர். அவர்கள் பூமியின் பரப்பில் தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் மக்கள் தொகையினரில் ஒருவர். சில தமிழ் பேசும் மக்களின் நாடிநாளங்களில் ஓடிவரும் மரபணுக்கள் அவர்களை ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து கால்நடையாகப் புறப்பட்டுத் தென்னாசியாவை வந்தடைந்த முதல் நவீன மனிதர்களுடன் உயிரியல் ரீதியாக இணைக்கிறது. அது மட்டுமல்ல, ஆபிரிக்கக் கண்டத்திற்கு அடுத்தபடியாக உலகின் மிகப் பழமையான நவீன மனிதர் குழுக்களின் (ஹோமோ சேப்பியன்ஸ்) நேரடி வம்சாவளியினர் தமிழ் மக்களிடையேதான் காணப்படுகிறார்கள்.
தென்னகத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் வாழும் மக்களிடத்தில் காணப்படும் ‘தொல் பழங்காலத் தென்னிந்திய மூதாதை’ (Ancient Ancestral South Indian) இனங்களின் பாரம்பரிய மரபணு அடிச்சுவடுகளின் பரப்பளவை (பழங்குடி மக்களைத் தவிர) இந்தியாவில் வேறு எந்தப் பகுதிலும் வாழும் மக்களிடத்திலும் காண முடியாது.
மானிடவியல் மரபணுவியல் விவரங்கள்
உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல இனங்கள் தாம் வாழ்ந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றியமைத்து இனவிருத்தியடைந்திருக்கின்றன. இவர்களில் தம்மைச் சிறப்பாக மாற்றியமைத்துக் கொண்ட உயிரினங்கள் வம்சாவளியாகப் பெருகிப் பரவி, நீண்டகாலம் வாழ்ந்து, வாழ்நிலத்தில் மேலாண்மை செலுத்தியிருக்கின்றன. அத்தகைய உயிரினங்கள் அனைத்திலும் தாம் வாழ்ந்த சூழலைக் கட்டுப்படுத்தி, ஆண்டு, பெருவெற்றி கண்டது ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனித இனமே.
தொல்லியல், மானிடவியல், மரபணுவியல் ஆதாரங்கள் அனைத்தும், இந்தப் பூவுலக மண்ணில் கால்பதித்து நடந்த மனித இனங்களின் மூதாதையர்கள் அனைவரும் தோற்றம் பெற்றது ஆபிரிக்கக் கண்டத்தில்தான் என்பதை ஐயந்திரிபற நிரூபித்திருக்கின்றன. மிகப் பரந்த, தனிமைப்படுத்தப்பட்ட, தடைப்படுத்தப்படாத, வனாந்தரங்களையும், பச்சைக்காடுகளையும், காய்ந்த கானகங்களையும், பசும்புற் தரைகளையும், புதர் நிலங்களையும் கொண்ட இந்த இயற்கையான மூலநிலம் பல வகையான தாவரங்களினதும், பிராணிகளினதும், மனித இனங்களினதும் பரிணாமத் தோற்றத்திற்கும் விருத்திக்கும் உகந்த இடமாக அமைந்திருக்கிறது.
இற்றைக்கு 7 மில்லியன் (70 லட்சம்) ஆண்டுகளுக்கு முன் (இ.மு.) ஆபிரிக்கக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ‘ஹோமினிட்’ (Hominid = மனிதர்களைப் போன்ற) இனங்களால் மற்றைய விலங்குகளைப் போலல்லாது, இரு கால்களில் எழுந்து நின்று தன்னைச் சுற்றிவர உள்ள உலகைப் பார்க்க முடிந்தது. மனிதர்களும், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற மனிதக் குரங்கு இனங்களும் இந்த ஹோமினிட் குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள் என்பதே விஞ்ஞானிகளின் முடிபு. ஒரு மனிதனிடமிருக்கும் மரபணுக்களின் (DNA) 98.6% விகிதமான மரபணுக்கள் ஒரு மனிதக் குரங்கினிடம் காணப்படுகின்றன.
இந்த ஹோமினிட் இனங்களிலிருந்து 4 மில்லியன் (40 லட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆஸ்திரோலோபிதிகஸ்’ (Australopithecus) என்ற மந்தி-மனிதனும், 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஹோமோ ஹபிலிஸ்’ (Homo Habilis) எனப்படும் தொல் மனிதனும், 2.0 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஹோமோ இரக்டஸ்’ (Homo Erectus-upright Man) எனப்படும் நிமிர்ந்த மனிதனும் தோற்றம் பெற்றார்கள். இவர்களுக்கு முற்பட்ட ஹோமினிட் இனங்கள் சற்று கூனிய வண்ணமே நடந்தமையால் நேராக நிமிர்ந்து நடந்த இம்மனிதர்கள் ‘ஹோமோ இரக்டஸ்’ என அழைக்கப்பட்டார்கள்.
இந்த ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் மாமிச பட்சணிகளாக இருந்தார்கள்; கற்களைச் செதுக்கி ஆயுதங்கள் செய்யும் கலையை உருவாக்கினார்கள். நெருப்பை உண்டாக்கி உணவை வேகவைத்து உண்ணக் கற்றுக்கொண்டார்கள். ஆனால், இவர்களால் ஒருவரோடு ஒருவர் பேசும் அளவுக்கு மூளை விருத்தியடையவில்லை. சைகைகள் மூலமும் உறுமல்கள் மூலமும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டார்கள். இவர்கள் விரைவில் ஆபிரிக்கக் கண்டத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் நிலமார்க்கமாகப் பரவினார்கள்.
இற்றைக்கு 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் நியண்டர்தால் மனிதர்கள் (Homo Neanderthalensis) தோற்றம் பெற்றார்கள். இவர்கள் கூட்டுக்குடும்பங்களாகக் குகைகளில் வாழ்ந்து, நெருப்பின் பயனை அறிந்து, இறந்தவர்களைப் புதைத்து, ஈமச்சடங்குகள் செய்துவந்தார்கள் (Roberts, A. 2011). இவர்கள் ஹோமோ இரக்டஸ் மனிதர்களைவிட வாழ்வியலில் முன்னேறியவர்களாகக் காணப்பட்டார்கள்.

மனித இனங்களின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் படம்
மனிதன் மற்றும் மனிதக்குரங்கு உள்ளிட்ட உயிரினத் தொகுதிப் (Primates) பிராணிகளிலிருந்து 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித முன்னோடி (Hominids) இனங்கள் உருவாகின. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) என்ற மனிதனும், 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) என அழைக்கப்படும் நவீன மனிதனும் உருவானார்கள்.
ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) எனப்படும் நவீன மனிதன் இற்றைக்கு ஏறக்குறைய 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு ஆபிரிக்காவில் முந்தைய ஹோமினிட் இனங்களிலிருந்து பரிணாம வளர்ச்சிபெற்று உருவானான். 18ஆம் நூற்றாண்டின் உயிரியல் வல்லுநரான கார்ல் லின்னியஸ் இந்த மனிதனுக்கு ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் (லத்தீன் மொழியில் புத்திசாலி மனிதன் – Wise Man – என்று பொருள் தரும்) என்ற பெயரை வழங்கினார். இந்த மனிதனுக்கு இதற்கு முந்திய மனித இனங்களைப் போலல்லாது மூளை பெரிதாக அமைந்திருந்தது. அவனால் மற்றைய மனிதர்களோடு ஓர் அடிப்படை மொழியை உபயோகித்து தொடர்பு கொள்ள முடிந்தது. இந்த ஆற்றல் அவனை மற்றைய இனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. அவனால் மற்றைய மனிதர்களோடு கூட்டுச் சேர்ந்து தங்களை மற்றைய கொடிய விலங்குகளிலிருந்தும், விரோதிகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.
2017ஆம் ஆண்டில் மொராக்கோ நாட்டில், ஜெபெல் ஈர்ஹுட் என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் கண்டெடுத்த கபாலம் இற்றைக்கு 300,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹோமோ சேப்பியன்ஸ்க்கு உரியதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆபிரிக்க ஆரம்பகால ஹோமோ சேப்பியன்ஸ் கபாலங்கள் இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் காட்டுவதனால், இந்த ஒரு கணிப்பீட்டை மட்டும் கொண்டு அதற்கு முற்பட்ட திகதியைப் பொதுவாகக் கொள்வது கடினம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். ஆனால் இன்று பெரும்பாலான ஆய்வாளர்களால் நவீன மனிதனின் ஆரம்பம் இ.மு. 300,000 திகதி என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆபிரிக்காவிலிருந்து இந்த நவீன மனிதன் உலகம் முழுவதும் பரவி, முன்னர் உலகெங்கும் வாழ்ந்த ஆதி மனித இனங்களை அகற்றி, பதிலாக தான் அங்கே நிரந்தரமாக இடம் கொண்டான். இம்மனிதன் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உபகண்டத்தை வந்தடைந்தான் என இன்றைய மரபணுவியல் ஆய்வுகள் அறியத்தருகின்றன.
முதலில் அவனால் ஆபிரிக்கக் கண்டத்தின் மற்றைய பகுதிகளுக்கும், பின்னர் ஆபிரிக்காவிலிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பல அலைகளாகப் பரவ முடிந்தது. காலப்போக்கில் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலுமிருந்த ஹோமோ இரக்டஸ் மனிதர்களையும், ஐரோப்பாவிலிருந்த நியண்டர்தால் மனிதர்களையும் அழித்தொழித்துவிட்டு இந்த நவீன மனிதர்கள் தம்மை உலகெங்கும் நிலைநிறுத்திக் கொண்டார்கள்.
ஆபிரிக்காவிலிருந்து வெளிவருதல் (Out of Africa)
ஆபிரிக்காக் கண்டம் சினாய் குடா (Sinai Peninsula) வழியாக ஐரோப்பாவுடனும், ஆசியாவுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்காவிலிருந்து சகாரா வழியாக சினாய் குடாவை அடைய முடியும். இற்றைக்கு 120,000 ஆண்டுகளுக்கு முன்னர், கடைசியாக நடைபெற்ற பனியுகம் ஆரம்பமாவதற்கு முன்னால், சகாரா இன்றுபோல ஒரு பாலைவனமாக இல்லாமல் பசுமையாக இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான எருமைகளும், யானைகளும், காண்டா மிருகங்களும், நீர் யானைகளும், ஒட்டகச்சிவிங்கிகளும், தீக்கோழிகளும், மறிமான்களும் (Antelopes) அங்கே வாழ்ந்திருந்ததை மத்திய சகாராவில் இன்றும் காணப்படும் பாறை ஓவியங்கள் (அக்கால மக்கள் வரைந்தவை) அறியத்தருகின்றன.
இற்றைக்கு 120,000 ஆண்டுகளுக்கு முன்னர், கடைசிப் பனியுகம் ஆரம்பமாவதற்கு முன்னர், பசுமையாக இருந்த சகாராவைக் கடந்து நைல்நதிக் கரையோரமாக வடக்கு ஆபிரிக்காவையும், லெவன்ற்றையும் (Levant) அடைந்த மனிதர்களால் ஐரோப்பாவை அடைய முடியவில்லை. இற்றைக்கு 115,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட உலகப் பனி உறைவும் (Global Freeze-up), உலர்விப்பும் (Desiccation) வட ஆபிரிக்காவையும், லெவன்ற்றையும் பாலைவனமாக்கி அங்கு சென்ற மக்களை உணவின்றி அழித்தொழித்தது. அதன் பின்னர் அந்த இடத்தில் வடக்கேயிருந்து பெயர்ந்துவந்த பனிப்பாறைகளுக்கு ( (Advancing Glaciers from the North) அஞ்சி தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த நியண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். அந்த இடத்தில் நவீன மனிதன் இ.மு. 45,000 ஆண்டு காலத்தின் பின்னரே இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறான் (Mc Brearly, S., Brooks, A.S. 2000).

கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்த நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் – செங்கடலின் முகத்துவாரத்தைக் கடந்து யெமன் கடற்கரை, அரேபியக் கடற்கரை, ஈரான் கடற்கரை வழியாக நடந்து வந்தான். அவனது வம்சாவளியினர் இந்து சமுத்திரக் கடற்கரையோரமாக தென்னிந்தியா-இலங்கையை அடைந்தார்கள்.
வெற்றிகரமான முதல் வெளியேற்றம் (The First Successful Exodus)
ஆபிரிக்கக் கண்டத்தைவிட்டு ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதன் வெளிவந்து, அவனது சந்ததியினர் உலகின் கண்டங்களிலெல்லாம் பரவிய காலத்தைப்பற்றி இரண்டு, மூன்று வகையான கருத்துகள் உள்ளன. ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த தாய்வழி மரபணுக்களை (mt DNA) ஆராய்ந்த அலன் வில்சன், ரெபெக்கா கான் (Allan Wilson, Rebecca Cann) ஆகிய மரபணுவியல் விஞ்ஞானிகள் அக்காலத்தை இற்றைக்கு முன் இ.மு. 80,000 ஆண்டாக முதலில் கணிப்பிட்டார்கள் (Oppenheimer, S. 2003).
ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த ஆண்வழி மரபணுக்களை (Y-DNA) ஆராய்ந்த ஸ்ரிங்கர், சவாலி ஸ்போர்ஸா (Cavalli-Sforza, Stringer) போன்ற விஞ்ஞானிகள் நவீன மனிதன் ஆபிரிக்காவை விட்டு வெளிவந்த காலம் இ.மு. 70,000 எனக் கணிப்பிடுகிறார்கள் (Cavalli-Sforza; Stringer, C. 2000).
இந்தியாவை L3, N, M, R ஆகிய தாய்வழி மரபினக் குழுக்கள் வந்தடைந்திருக்கின்றன. மரபினக் குழு L3 இ.மு. 70,000 ஆண்டளவில் தோற்றம் பெற்றிருக்கிறது. மரபினக் குழு N இ.மு. 61,000 ஆண்டளவில் தோன்றியிருக்கிறது. மரபினக் குழு M இ.மு. 48,000 ஆண்டளவில் தோற்றம் பெற்றிருக்கிறது (முந்தைய ஆய்வுகள் M இ.மு. 65,000 ஆண்டளவில் தோற்றம் பெற்றதாகக் கூறுகின்றன). மரபினக் குழு R மரபினக் குழு Nஇலிருந்து பிரிந்த ஒரு கிளையாகும் (Reich, D. 2018, 2019; Wells, S. 1969: 192).
ஆபிரிக்காவை விட்டு மனித இனம் வெளிவந்ததற்கு வெவ்வேறான திகதிகள் ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெண்வழி மரபணுக்களை ஆராய்ந்தவர்கள் இ.மு. 60,000ஆம் ஆண்டுகளையும், ஆண்வழி மரபணுக்களை ஆராய்ந்தவர்கள் இ.மு. 70,000ஆம் ஆண்டுகளையும் கொடுத்திருந்தார்கள். சமீப காலங்களில் தாய்வழி மரபணுக்களை (mt DNA) ஆராய்ந்த டேவிட் றீச், பிரியா மூர்ஜானி (David Reich, Priya Moorjani) ஆகியோர் ஆபிரிக்காவை விட்டு மனிதன் வெளிவந்த காலம் இ.மு. 70,000 எனக் கொள்கிறார்கள். மரபணுக்கூறுப் பிறழ்வுகளின் விகிதாசாரத்தைக் (Mutation Rates) கொண்டு மரபினக் குழுக்கள் (Haplogroups) தோற்றம் பெற்ற காலத்தைக் கண்டறிய முடியும் (இவை பற்றி பின்னால் விளக்கமாகக் கூறப்படுகிறது).
உண்மையில் ஆண்களும், அவர்களோடு சேர்ந்து பெண்களும், பிள்ளைகளும் ஒரே குடும்பமாகத்தான் வெளிவந்திருக்க முடியும். அடுத்து நாம் கவனிக்க வேண்டியது இந்தத் திகதிகள் ஒரு மதிப்பீடுகளே ஒழிய கல்லிலே செதுக்கிவைத்த திகதிகள் அல்ல. பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆபிரிக்காவை விட்டு நவீன மனித இனம் வெளிவந்த திகதி இ.மு. 70,000க்கு சற்று முன்னர், அல்லது 60,000க்குப் பின்னரான ஆண்டுகள் எனக் கருதுகிறார்கள்.

அமெரிக்காவில் அரிஸோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அன்றூ கொஹேன் (Andrew Cohen) மனிதர்கள் ஆபிரிக்கா கண்டத்தை விட்டு வெற்றிகரமாக வெளியேறியதற்கு அன்றைய தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம் எனக் கூறுகிறார். இ.மு. 70,000க்கும் இ.மு. 59,000க்கும் இடைப்பட்ட காலத்தில் பனியுகம் உச்சநிலையை (Glacial Period – OIS 4) அடைந்திருந்தது. அக்காலத்தில் ஏற்பட்ட வறட்சியினால் கொடிய பஞ்சம் ஏற்பட்டு ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் சனத்தொகை நொறுங்கி வீழ்ந்தது (Population Crash). பனியுகம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த அந்நேரம் கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 130-135 மீட்டர் கீழே பதிந்திருந்தது. அச்சமயம் ஒரு ‘கைப்பிடி’ அளவு மக்களே கிழக்கு ஆபிரிக்காவில் எஞ்சியிருந்தார்கள். இ.மு. 59,000ஆம் ஆண்டு முதலாக வறட்சி சற்று நீங்கி, மழை பெய்ய ஆரம்பித்த சமயம் சீதோஷ்ணமும் சற்று வெப்பமாகியது. இ.மு. 57,000 ஆண்டுக் காலத்தில் வடஆபிரிக்காவும் அரேபியாவும் உலர்ந்த, வெப்பமான, பசுமையான நிலமாக மாற்றம் பெற்றன. இக்காலத்தில் மனித இனம் பெருகியது. அடுத்து வந்த பனியுக உச்சநிலை இ.மு. 24,000 முதல் இ.மு. 13,000 ஆண்டுக்காலம் வரையும் (OIS-2) நீடித்தது. இதன் வெகு உச்சக் கட்டம் (Last Glacial maximum LGM) இ.மு. 20,000 – 18,000 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.
மேலும், இற்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிலுள்ள ரோபா எரிமலை வெடித்துப் பிரமாண்டமாகச் சிதறியதில் (Toba Super-eruption) இந்திய உபகண்டத்திலும், தென்கிழக்காசிய நாடுகளிலும், இந்துமா கடலிலும், தென்சீனக் கடலிலும் எரிமலைச் சாம்பல் படிந்தது. அச்சமயம் வீசிய பருவக் காற்றினால் இச்சாம்பலின் பெரும் பகுதி தென் ஆசியாவிலேயே படிந்திருக்கிறது. பூமியின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பிரம்மாண்டமான இச்சிதறலில் இந்திய உபகண்டத்தில் இரண்டு மீட்டர் உயரம் வரை எரிமலைச் சாம்பல் படிந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வு ஆறு ஆண்டுக்கால எரிமலைக் குளிரை (Volcanic Winter) ஏற்படுத்தியது. இந்த எரிமலைச் சாம்பல் படிவினால் இந்திய உபகண்டத்தில் வசித்த 90 விழுக்காடு விகிதமான ஹோமோ இரக்டஸ் மனிதர்களும், விலங்குகளும் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது (Rampono, M.R. & Ambrose, S.H. 2000: 71-82: Oppenheimer, 2002: 1593-1609).
2008ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியலாளர் அலிஸ் ரொபெட்ஸ் (Alice Roberts) ஆந்திராவில் ஜுவாலபுரம் என்ற இடத்திலுள்ள ஒரு மேட்டை அகழ்ந்த போது அங்கு சென்று பார்வையிட்டார். மேல் மட்டத்திலிருந்து 57 மீட்டர் ஆழத்தில் மேலும் இரண்டு மீட்டர் வெண்ணிறத் தடிப்பில் ‘ரோபா எரிமலைச் சாம்பல்’ காணப்பட்டிருந்தது (Roberts, A. 2009: 81-83).
இவற்றைக் கவனத்தில் கொண்டால் ரோபா எரிமலைச் சாம்பல் பாளம் பாளமாக விழுந்த காலத்திலும் சரி – அல்லது பனியுகம் உச்ச நிலையை அடைந்த காலத்திலும் சரி – மக்கள் கண்டம் விட்டுக் கண்டம் பெயர்ந்திருப்பது இயலாமல் இருந்திருக்கும். அவர்கள் இடம் பெயர்ந்திருக்கக்கூடிய சாளரம் (Migratory Window) இ.மு. 72,000க்கும் இ.மு. 70,000க்கும் இடைப்பட்ட காலமாக இருக்க முடியும்; அல்லது அவர்கள் ஆபிரிக்காவை விட்டு வெளிவந்த காலம் இ.மு. 59,000 ஆண்டின் பின்னராகத்தான் இருக்க முடியும் (Cohen, A.S. et al. 2022a., 2022b.).
ஆபிரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக சுண்டா நிலம் வரையும், அங்கிருந்து ஒரு பகுதி அவுஸ்திரேலியாவிற்கும், மற்றொரு பகுதி சீனா வரையும் கடற்கரையோரமாக இடம்பெயர்ந்ததைக் காட்டும் படம். Courtesy: Stephen Oppenheimer.
2017ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய குவின்ஸ்லன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ் கிளாக்சனும் (Chris Clarkson) சகாக்களும் அவுஸ்திரேலியாவின் மஜ்ஜிட்பீபி குகையில் (Madjedbebe Cave) கண்டெடுத்த மனிதர்கள் உபயோகித்த கருவூலங்களின் காலக்கணிப்பு இ.மு. 59,000க்கும் 70,000க்கும் இடைப்பட்ட காலத்தைக் கொடுத்திருந்ததாக அறிவித்திருந்தார்கள். இதன் சராசரியை எடுத்துக்கொண்டு இ.மு. 65,000 ஆண்டளவில் நவீன மனிதன் அவுஸ்திரேலியாவை அடைந்திருப்பார்கள் என அறிவித்தார்கள் (Clarkson, Chris, et.al. 2017). இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆபிரிக்காவை விட்டு மனிதர்கள் முதலில் வெளிவந்த காலம் இ.மு. 72,000க்கும் 70,000க்கும் இடைப்பட்ட பனியிடைக் காலமாக இருப்பதே சாத்தியம்.
இற்றைக்கு முன்னர் 70,000–59,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட உச்சக் கட்டப் பனியுகம் (Glacial maximum) ஏற்படுவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், கிழக்கு ஆபிரிக்காவை விட்டு தங்கள் குடும்பங்களோடு வெளிவந்த ஒரு கூட்டம் செங்கடலின் முகத்துவாரத்தைக் கடந்தது. அக்கூட்டத்தின் வம்சாவளியினர் யெமென் – சவுதி அரேபியா – ஈரான் கடற்கரை வழியாக வந்து, பின்னர் இந்து சமுத்திரக் கடற்கரையோரமாக நடந்து தென்னிந்தியாவை அடைந்தார்கள். அவர்கள் கடற்கரையோரமாக இடம்பெயர்ந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு: ஒன்று – மக்கள் நடந்து முன்னேறுவதற்கு கடற்கரை மணல் தடைகளற்ற அன்றைய விரைவு-நெடுவழியாக (Express Highway) இருந்தது. இரண்டு – அருகிலிருக்கும் கடலிலிருந்து வேண்டிய நேரமெல்லாம் மீன்களை உணவுக்காகப் பெற்றுக்கொள்ள முடிந்தது (Quintana-Murci, L. 1999; Wells, S. 2002; Petraglia, M.D. 2003).
கடல் மட்டம் இன்றிருப்பதைவிட 130 மீட்டர் வரை குறைவாக இருந்த அக்காலத்தில் செங்கடல் ஆழம் குறைவாக இருந்தது. இலங்கை தென்னிந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. மலேசியா, இந்தோனேசியா, அந்தமான்-நிக்கோபர் தீவுகள் அனைத்தும் இணைந்த ‘சுண்டா’ நிலப்பரப்பு தென்கிழக்கு ஆசிய உபகண்டமாக விளங்கியது.
முதல் நவீன மனிதர்களின் இடப்பெயர்ச்சி கடற்கரை வழியைக் காட்டிலும் இமயமலைச் சாரல் வழியாக ஏற்பட்டிருக்கிறது என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்த முதல் இடப்பெயர்ச்சி கடற்கரை வழியாக இடம்பெற்றது எனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களும், ஆதாரங்களும் இவை:
1. இ.மு. 70,000 ஆண்டு முதலாக ஏற்பட்ட பனிப்படர்வினால் வெப்ப வலயத்திலிருந்த தென்இந்தியக் கடற்கரையைக் காட்டிலும் இமயமலைக்கரை பனிப்பாளங்களைக் கொண்டு மிகமிகக் குளிராக இருந்தது.
2. இ.மு. 74,000 ஆண்டில் ஏற்பட்ட ரோபா எரிமலை வெடித்துச் சிதறியதில் படிந்த எரிமலைச் சாம்பலால் 90 விழுக்காடு உயிரினங்களும் தாவரங்களும் அடுத்த ஆறாண்டு காலத்திற்கு மீளடைய முடியவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்து. இமயமலைச்சாரல் வழியாகச் சென்றிருந்தால் இந்த மக்களுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும். கடற்கரை வழியாகச் சென்றவர்களுக்கு வேண்டியளவு மீன் கிடைத்திருக்கும்.
3. முதலில் இடம்பெயர்ந்து வந்த ஆண்கள் தங்கள் Y – குரோமசோமில் M130 என்ற மரபணுப் பிறழ்வைக் (DNA Mutation) கொண்டவர்கள். இந்த M130இன் வம்சாவளியினரான ‘ஆஸ்திரலோயிட்’ இன ஆண்கள் இன்று தென்னிந்தியாவில் 5% விழுக்காடு காணப்படுகிறார்கள். வடஇந்தியாவில் இவர்களின் பரவல் 1% விடக் குறைவாகவே காணப்படுகிறது. M130 குறியீட்டின் பரவல் இவர்கள் வந்த பாதையைக் காட்டி நிற்கிறது.
4. நவீன மனிதனின் மிகப் பழைமையான – இ.மு. 45,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட – எலும்புகள் தென் இலங்கையில் கடற்கரைக்குச் சமீபமாக உள்ள பாததொம்ப லென, பெலி லென ஆகிய குகைகளில் கிடைத்திருக்கின்றன.

இலங்கையில் பாததொம்ப லென, பெலி லென குகைகளைக் காட்டும் நிலப்படம். Picture Courtesy: S.U. Deraniyagala.

இலங்கையில் ஆதிகால ஹோமோ சேப்பியனஸ் மனிதர்களின் எலும்புகள் காணப்பட்ட பாததொம்ப லென குகை. தென் ஆசியாவிலேயே இந்த ஆதிமனிதர்களின் எலும்புகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது. Photo Courtesy: Lankalibrary.com.
இக்கடற்கரை வழி இடப்பெயர்வால் இம்மனிதர்களின் சந்ததியினர் இ.மு. 68,000 ஆண்டளவில் தென்னிந்தியாவையும், அதன் தொடரான இலங்கையையும் அடைந்திருக்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் தென்னிந்தியாவும் இலங்கையும் நிறைந்த பச்சிலைக் காடுகளையும், நெடுமர வனங்களையும் கொண்டிருந்தபடியால் மனிதக் குடியமர்விற்கு ஏற்ற இடமாக அமைந்திருந்தது. அதன் காரணமாக கணிசமான ஒரு தொகையினர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தங்கிவிட, மற்றைய புலப்பெயர் முன்னோடிகள் மேலே சென்றார்கள். இலங்கையின் கடற்கரையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட 68,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவீன மனிதர்களின் கல்லாயுதங்களும், தென்பாகத்திலுள்ள பாததொம்ப லென குகைகளில் கண்டெடுக்கப்பட்ட இந்த மக்களின் எலும்புகளும், இந்த மக்களின் நகர்வையும், அமர்வையும் உறுதிப்படுத்துகின்றன (Deraniyagala, S.U. 1992: 686; 2004).
இலங்கையிலிருந்து இந்து சமுத்திரக் கரையோரமாக வங்காள விரிகுடாவைக் கடந்து, பர்மா முதல் இந்தோனேசியா வரை (இன்றைய அந்தமான், நிக்கோபர் தீவுகள் அன்று சுண்டா நிலப்பரப்பின் பகுதிகளாக இருந்தன) கரையோரமாக நடந்து சுண்டா நிலப்பரப்பின் கிழக்கு எல்லையாக இருந்த திமோரை அடைந்தார்கள். அங்கிருந்து ஒரு குழுவினர் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல மற்றையோர் சீனாவை நோக்கி நகர்ந்தார்கள். இன்றைய மரபணுவியல் ஆய்வுகள் இற்றைக்கு 67–66,000 ஆண்டுக்காலத்திற்கு முன்னரே ஹோமோ சேப்பியன் மனிதர்கள் அந்தமான் தீவுகளையும் மலேசியாவையும் அடைந்துவிட்டார்கள் என்பதை அறியத்தருகின்றன.
2018ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிலுள்ள ‘லிடா-அஜேர்’ குகையில் அவுஸ்திரேலியா சிட்னி மக்குவெரி பல்கலைக்கழக ஆய்வாளரான கீரா வெஸ்வேயும் (Kira Westway) சகாக்களும் கண்டெடுத்த நவீன மனிதனின் பற்கள் இ.மு. 63,000க்கும் 73,000க்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்குரியவை எனக் கணிப்பிடப்பட்டிருக்கிறது (Westway, K.E. et al. 2018).
இந்தோனேசியாவிலிருந்தும் திமோரிலிருந்தும் சிறிய படகுகள் மூலம் இவர்கள் இ.மு. 65,000 ஆண்டுக்காலத்தில் அவுஸ்திரேலியாவையும், போர்ணியோவிலிருந்து நியூகினியாவையும் சென்றடைந்தார்கள் என இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய கண்டத்தில் குரங்கினங்களோ, ஆதிமனித இனங்களோ கிடையாது. முந்திய ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் கடல் நீரைக் கடந்து செல்லக்கூடிய கலங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. கடலைக் கடந்து அவுஸ்திரேலியக் கண்டத்தில் முதல் தடவையாக இற்றைக்கு முன் 65,000 ஆண்டுக் காலத்தில் அடியெடுத்து வைத்தவர்கள் ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்களே ஆவர். இந்த மனிதர்களின் இடப்பெயர்ச்சியை மரபணுவியல் ஆய்வுகளின் மூலம் இன்று நாம் கண்டறிய முடிகிறது. அது பற்றி அடுத்து வரும் பகுதியில் பார்ப்போம்.
தொடரும்.



