தேசியவாதத்தைப் புரிந்து கொள்ளல்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
38 நிமிட வாசிப்பு

தேசியவாதத்தைப் புரிந்து கொள்ளல்

November 16, 2026 | Ezhuna

‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ (Encyclopedia Of Political Science) என்னும் தலைப்பில் அமையும் இத் தொடரில் அரசியல் கோட்பாடுகள் (Political Theories), அரசியல் விஞ்ஞான எண்ணக்கருக்கள் (Concepts) சமகால அரசியல் விவாதங்கள் என்பன குறித்த கட்டுரைகள் வெளியிடப்படவுள்ளன. பொதுவெளியில் (Public Sphere) நடைபெறும் அரசியல் விவாதங்களை ஆரோக்கியமுடையனவாக ஆக்குவதற்கு, அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்துவதும், சமூகத்தின் பல மட்டங்களிற்கும் அரசியல் அறிவை எடுத்துச் செல்வதும் அவசியமான பணி என நாம் உணருகின்றோம். தமிழ் அரசியல் சூழலில் நிலவும் கோட்பாட்டு வறுமையை (Theoretical Poverty) நீக்குவதற்கு இக் கட்டுரைத் தொடர் உதவும் என்பது எமது நம்பிக்கை. தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் மூலதனம் (Intellectual Capital) ஒரு சிறு மேட்டிமைக் குழுவிடம் (Elite Group) குவிந்திருப்பதை நீக்கி, அறிவுச் செல்வத்தின் மறுபங்கீட்டின் மூலம் சமூக விடுதலை, ஜனநாயக மயப்படுத்தல், அடிமட்டத்தினர் அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய இலக்குகளை அடைதல் இத் தொடரின் நோக்கமாகும்.

தேசியவாதத்தைப் புரிந்து கொள்ளல் (Understanding Nationalism) என்னும் தலைப்பிலான இக்கட்டுரை ‘அரசறிவியல் கலைக்களஞ்சியம்’ என்னும் தலைப்பிலான இத்தொடரின் கீழ் இவ்விதழில் பிரசுரிக்கப்படுவதன் நோக்கம் குறித்து ஒரு சிறிய விளக்கவுரையைத் தருதல் பயனுடையது.

இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்வதாயின் ‘தேசியவாதம்’ என்னும் அரசியல் கருத்தியல் (Political Ideology) பற்றிய புரிதல் அவசியமானது என்பதனை உணர்ந்தோம்.

தேசியவாதம் என்னும் கருத்தியல் புரிந்து கொள்வதற்கு சிக்கலான ஒரு கருத்தியல். 1920களில் இலங்கையில் சிங்கள-பௌத்த தேசியவாதம் (Sinhala-Buddhist Nationalism) என்னும் கருத்தியலின் தோற்றத்திற்கான மூல வித்துகள் விதைக்கப்பட்டன. இதன் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் கட்டமைப்பதில் அநகாரிக தர்மபால முக்கிய வகிபாகத்தைப் பெற்றார். இவரின் மறைவுக்குப் பின்னர் இத்தேசியவாதத்தை முழுமையான வடிவில் வளர்த்தெடுப்பதில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முக்கிய வகிபாகத்தைப் பெற்றார். 1956 பொதுத்தேர்தலில் பண்டாரநாயக்க அவர்களின் எம்.ஈ.பி. (MEP) என்னும் அரசியல் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியமை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

1956ஆம் ஆண்டுக்குப் பின்னரான 70 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாறு, ஒன்றுக்கொன்று முரண்பட்டு மோதிய சிங்கள-பௌத்தத் தேசியவாதம் மற்றும் இலங்கைத் தமிழர் தேசியவாதம் ஆகிய இரு தேசியவாதங்களின் வரலாறாகவே அமைந்துள்ளது. இவ்விரு தேசியவாதங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்து, இறுதியில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. இரு தேசியவாதங்களின் முரண்பாடும், மோதல்களும் அரசியல் ஆய்வுகளில் விவாதத்திற்குரிய கருப்பொருளாக அமைந்துள்ளன. 

‘தேசியவாதத்தைப் புரிந்துகொள்ளல்’ என்னும் இக்கட்டுரை தேசியவாதம் பற்றிய கோட்பாட்டுப் புரிதலின் பின்புலத்தில் மேற்கூறிய அரசியல் ஆய்வுகளைப் புரிந்து கொள்ள உதவும் என்பது எமது நம்பிக்கை. இச்சிறிய விளக்கத்தை அடுத்து தேசியவாதம் என்னும் கருத்தியல் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைத் தரவுள்ளோம்.

அறிமுகம்

நவீன கால அரசியலைப் புரிந்து கொள்வதற்கு அரசியல் கருத்தியல்கள் (Political Ideologies) சிலவற்றைப் பற்றிய புரிதல் இன்றியமையாதது என அரசியல் விஞ்ஞானிகள் கூறுவர். முதலாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய 20ஆம் நூற்றாண்டு அரசியலில் பின்வரும் மூன்று கருத்தியல்கள் முதன்மையான கருத்தியல்களாக இருந்தன.

1. தாராண்மைவாதம் (Liberalism)

2. பழமைவாதம் (Conservatism)

3. சோஷலிசம் (Socialism)

இவற்றை மரபுவழிக் கருத்தியல்கள் (Traditional Ideologies) என்றும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். 1960க்குப் பிற்பட்ட காலத்தில் புதிய கருத்தியல்கள் பல உரையாடலில் முக்கியத்துவம் பெற்றன. தேசியவாதம் (Nationalism) அத்தகைய புதியதொரு கருத்தியலே ஆகும். 

தேசியவாதம் – சொற்பொருள் விளக்கம்

‘நேஷன்’ (Nation) என்ற சொல் ஐரோப்பாவில் 13ஆம் நூற்றாண்டு முதல் வழக்கில் இருந்துள்ளது. ‘Nascī’ என்ற லத்தீன் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த இச்சொல் ‘Natio’ என்ற உருமாற்றத்தைப் பெற்று, மக்கள் குழு ஒன்றின் பிறந்த இடத்தை (Birth Place) குறிப்பதாக உபயோகிக்கப்பட்டது. காலப்போக்கில் இச்சொல் ஓர் இனப்பிரிவினரைக் (Racial Group) குறிக்கும் சொல்லாக மாறியபோது அரசியல் முக்கியத்துவம் உடைய சொல்லாக மாறியது. ‘போர்த்துக்கேயர்’, ‘ஸ்பானியர்கள்’, ‘பிரஞ்சுக்காரர்கள்’, ‘டச்சுக்காரர்கள்’, ‘ஆங்கிலேயர்’ முதலிய சொற்கள் 19ஆம் நூற்றாண்டில் ‘நாட்டினவாதம்’ (Patriotism) என்ற அர்த்தத்தைப் பெற்றன. பிரஞ்சுப் புரட்சியின்போது 1789ஆம் ஆண்டில் ‘தேசியவாதம்’ (Nationalism) என்ற சொல் ‘பிரஞ்சு தேசத்துப் பிரஜைகள்’ (Citizens Of France) என்ற அர்த்தத்தைப் பெற்றது. பிரஞ்சு தேசத்தின் அரசனான 16ஆம் லூயிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மக்கள் தம்மை ‘முடிமன்னருக்குக் கீழ்ப்பட்ட மக்கள்’ (Subjects Of The Crown) என்ற நிலையில் இருந்து ‘பிரஞ்சு தேசத்தின் பிரஜைகள்’ என்ற நிலைக்கு உயர்த்திக் கொண்டனர். இவ்வகையில் பிரஞ்சுப் புரட்சி ‘மக்களின் அரசு’ அல்லது ஜனநாயகம் (Democracy) என்ற கருத்துடன் ‘தேசம்’, ‘தேசியவாதம்’ என்பனவற்றை இணைத்தது. 1848இல் ஐரோப்பா எங்கும் தேசியவாதப் புரட்சிகள் (Nationalist Revolutions) வெடித்தன.

தேசியவாதம் 20ஆம் நூற்றாண்டின் முக்கியமான அரசியல் இயக்கங்களில் (Political Movement) ஒன்றாக மாறியது. ஐரோப்பாவின் வரலாற்றை ஆராய்ந்து எழுதிய வரலாற்றாசிரியர்கள் துருக்கி, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய மூன்று பல்தேசியப் பேரரசுகளின் (Multi-national States) உடைவினதும் சிதைவினதும் பயனாக ஐரோப்பாவில் வெவ்வேறு பெயரடையாளங்களை உடைய தேசிய அரசுகள் (National States) பல தோற்றம் பெற்றன என்பதை விளக்கியுள்ளனர். இத்தேசிய அரசுகளை உருவாக்கிய இயக்கமாக தேசியவாத இயக்கம் (Nationalist Movement) அமைந்தது.

ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாத இயக்கம் ஐரோப்பாவிற்கு வெளியே இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய பிற பகுதிகளிலும் தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. இச்சிறு கட்டுரையில் தேசியவாதத்தின் வரலாற்றையும், அதன் படிமுறை வளர்ச்சியையும் விரிவாக ஆராய்தல் இயலாது. அது பற்றி பிறிதொரு கட்டுரையில் விரிவாக நோக்குவோம்.

தேசியவாதம் – சிக்கலான கருத்தாக்கம்

தேசியவாதம் நாட்டுப்பற்று (Patriotism) என்னும் தேசப்பற்றுடன் தொடர்புடையதாக, உணர்ச்சிக் கலப்புடைய, அரசியல் சார்புடைய கருத்தாக இருந்து வந்துள்ளது. தாராண்மைவாதம், பழமைவாதம், சோஷலிசம் ஆகிய கருத்தியல்கள் தேசியவாதம் போன்று தீவிர உணர்ச்சியைக் கிளர்த்தும் கருத்தியல்கள் அல்ல. தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தின் எல்லைக்குள் வாழும் மக்களுக்கான சுய ஆட்சியையும் (Self-Rule), தனித்துவமான தேசிய அரசை (National State) உருவாக்குவதுமான இலக்கினைக் கொண்டதாகவும் உள்ளது. மூன்றாவதாக, தேசியவாதம் என்னும் கருத்து தேசிய இனம் (Nation) என்னும் மொழி, மத, பண்பாட்டு அடையாளங்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கின்றது. நான்காவதாக, தேசியவாதம் பலவித அரசியல் கருத்தியல்களுடன் தொடர்புடையதாகவும் உள்ளது.

இத்தாலியில் முசோலினியின் பாசிசம் (Fascism) என்னும் கருத்தியல் இத்தாலிய தேசியவாதத்துடன் இணைந்த கருத்தியலாகும். ஹிட்லரின் நாஜி இயக்கம் யூதர்கள் மீதான இனவெறுப்பை வளர்த்துப் பேரழிவை ஏற்படுத்திய தேசியவாத இயக்கமாகும். வலதுசாரி தேசியவாதம் (Right-Wing Nationalism), இடதுசாரித் தேசியவாதம் (Left-Wing Nationalism) ஆகிய சொற்றொடர்கள் தேசியவாதம் பல்வகை அரசியல் கருத்தியல்களுடன் தொடர்புடைய சிக்கலான கருத்தியல் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. தேசியவாதம் என்னும் அரசியல் கருத்தியலின் அடிப்படையாகப் பின்வரும் நான்கு விடயங்கள் இருப்பதை அன்ட்ரூ ஹெய்வூட் (Andrew Heywood) என்னும் அரசியல் அறிஞர் எடுத்துக் காட்டியுள்ளார்.

1. தேசிய இனம் (The Nation)

2. உயிரிச் சமுதாயம் (Organic Community)

3. சுயநிர்ணயம் (Self-Determination)

4. அடையாள அரசியல் (Identity Politics)

இவை பற்றி அன்ட்ரூ ஹெய்வூட் கூறியிருக்கும் கருத்துகளை நோக்குவதற்கு முன் ‘தேசிய இனம்’ என்ற சொற்பதம் தொடர்பாகச் சில குறிப்புகளைக் கூறுதல் அவசியம்.

அரசியல் ஒழுங்கமைப்பின் அடிப்படைத் தத்துவமாக தேசிய இனம் (Nation) என்ற கருத்து அமைவதாக தேசியவாதிகள் நம்புகின்றனர். உதாரணமாக, நவீன காலத்தில் திபெத்தியர்கள், குர்தியர்கள் (Kurds), பலஸ்தீனியர்கள், பஸ்க்குகள் (Basques) ஆகிய தேசிய இனக்குழுமங்கள் தமக்கென்று ஒரு நாட்டையும், அரசையும் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு என்றும், தத்தம் தேசிய இனக்குழுக்களுக்குச் சில அடிப்படையான உரிமைகள் உண்டு எனவும் நம்புகின்றன. இந்நம்பிக்கையின் அடிப்படையிலான அவர்களின் அரசியல் ஒழுங்கமைப்பு தேசியவாதம் (Nationalism) என்று கூறப்படுகிறது. குர்திய தேசியவாதம், பஸ்க்கிய தேசியவாதம் போன்ற தொடர்கள் இன்று அரசியல் சொல்லாடலில் இடம்பெறுவதை நாம் காண்கிறோம். ஆயினும், தேசிய இனம் என்பதன் அடிப்படையில் அமையும் தேசியவாதத்தை வரையறை செய்வது எப்படி என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன.

தேசிய இனம் (Nation), அரசு (State), நாடு (Country), இனம் (Race) ஆகிய கருத்துகள் ஒரே அர்த்தமுடைய ஒரு பொருட் பல சொற்கள் போன்று அன்றாட உரையாடலில் உபயோகிக்கப்பட்டு வருவதால் தேசியம் பற்றிய கருத்துக் குழப்பம் மிகுந்துள்ளது. ஆங்கிலத்தில் பயன்படும் சொற்பதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து உபயோகிக்கும் பொழுதும் மேலதிகக் குழப்பம் உருவாகிறது. உதாரணமாக, அன்ட்ரூ ஹெய்வூட் ‘The Nation’ என்று குறிப்பிட்டிருப்பதை நாம் இக்கட்டுரையில் ‘தேசிய இனம்’ என மொழிபெயர்த்துள்ளோம். ஏன் இச்சொல்லை ‘தேசியம்’ என்று கூறக்கூடாது, ‘இனம்’ என்ற இன்னொரு சொல்லை ஏன் சேர்க்க வேண்டும் போன்ற வினாக்கள் எழுகின்றன. இவ்வினாக்களுக்கான விடை காண்பது இக்கட்டுரையின் நோக்கெல்லைக்கு அப்பாற்பட்டது.

இக்கருத்துக் குழப்பங்கள் யாவற்றையும் நீக்கும் வகையில் அடிப்படையான சொற்பதங்கள் சிலவற்றைத் தமிழில் வரையறை செய்து கொள்ளல் அவசியம் என்பதை மட்டும் இவ்விடத்தில் அழுத்திக் கூறுவதுடன் அன்ட்ரூ ஹெய்வூட் அவர்களின் கருத்துகளை அடுத்து நோக்குவோம். அன்ட்ரூ ஹெய்வூட் அவர்கள் எழுதிய ‘Political Ideologies: An Introduction’ என்னும் நூலின் 5ஆவது அத்தியாயம் ‘Nationalism’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது (பக். 155–187). இங்கு சுருக்கமாக எடுத்துக்கூறப்படும் விளக்கங்களுக்கு ஆதாரமாக அவரது நூலின் மேற்படி அத்தியாயம் அமைந்துள்ளது. இத்தமிழ்க் கட்டுரையை நேரடி மொழிபெயர்ப்பாக அல்லாது கட்டுரையின் சாரத்தை எமது மொழியில் சுயமாக எடுத்துக் கூறும் முறையில் எழுதியுள்ளோம் என்பதையும் இவ்விடத்துக் குறிப்பிட விரும்புகிறோம்.

தேசிய இனம்

பொதுவான பண்பாட்டினாலும், மரபுகளாலும் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட மக்கள் சமூகத்தை ‘தேசிய இனம்’ என்று கூறலாம். பொதுவான பண்பாடு எனப்படும் பொதுமை இயல்பின் பிரதான கூறுகளாக மொழி, சமயம், இனத்துவம் (Ethnicity), வரலாறும் மரபும் (History and Tradition) போன்றன அமைந்துள்ளன. எனினும் ஒரு மக்கள் சமூகத்தின் தனித்துவமான தேசியவாதம் பற்றி எழுதிய கோட்பாட்டாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ‘தேசிய இனம்’ என்பது பற்றிய புறநிலை வரையறைகள் (Objective Criteria) எவையென வகுத்துக் கூறுவது கடினமானது.

1. தேசிய இனத்தின் அடிப்படைகளுள் மொழி முதன்மையானது எனலாம். ஜேர்மனி என்ற தேசத்தின் பிரதான அடையாளமாக ஜேர்மானிய மொழி இருந்துள்ளது. தேசிய இனங்கள் தமது மொழியின் தூய்மையைப் பேணுவதிலும், தம் மொழி அழியாது பாதுகாக்கப்படுவதிலும் தீவிரமான அக்கறையுடையனவாகச் செயற்படுகின்றன. கனடாவின் கியூபெக்கியர்களின் கியூபெக் தேசியவாதத்தின் அடிப்படையாகப் பிரெஞ்சு மொழி அமைந்துள்ளது. கியூபெக் தேசிய இனம் கனடாவின் ஆங்கிலம் பேசும் பகுதி மக்களிலிருந்து தன்னை மொழியின் அடிப்படையிலேயே வேறுபடுத்திக் கொள்கிறது. ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் பகுதியின் வெல்ஷ் தேசியவாதம் (Welsh Nationalism) வெல்ஷ் மொழியை மறுமலர்ச்சியடையச் செய்தல், அதனைப் பேணிப் பாதுகாத்தல் என்பதன் அடிப்படையிலேயே தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. 

ஆயினும் சில தேசங்களில் பல்வேறு மக்கள் சமூகங்கள் ஒரு பொது மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டிருந்தபோதும் மொழியின் அடிப்படையிலான தேசியவாத உணர்வுடையவர்களாக இருப்பதில்லை. உதாரணமாக அமெரிக்கர்கள், அவுஸ்திரேலியர்கள், நியூசிலாந்தியர் (New Zealanders) ஆகிய தேசத்தவர்கள் தாம் ‘ஆங்கில தேசிய இனத்தின்’ (English Nation) உறுப்பினர்கள் என்ற உணர்ச்சியுடையவர்களாக இருக்கவில்லை. இவ்வுணர்வு இம்மூன்று தேசிய இனத்தவர்களிடமும் ஒருபோதும் வேரூன்றவில்லை. வேறுபல தேசிய இனங்களும், தேசியங்களும் (Nations) ஒரு பொது மொழி என்ற அடையாளமே இல்லாது வலிமையான தேசிய ஐக்கியத்தை (National Unity) உருவாக்கியுள்ளன.

சுவிற்சர்லாந்து இதற்குச் சிறந்த உதாரணமாகும். அந்நாட்டில் ‘சுவிஸ் மொழி’ (Swiss Language) என ஒரு மொழி இல்லை. அங்கே பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, இத்தாலிய மொழி என மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. ஆயினும் வெவ்வேறு மொழி பேசும் இம்மக்களிடையே சுவிற்சர்லாந்திய தேசியவாதமும் தேசிய ஐக்கியமும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்விடத்து இலங்கையில் சிங்களம், தமிழ் என்ற மொழி அடையாளங்களைக் கடந்த இலங்கைத் தேசியவாதம் (Ceylonese Nationalism) ஒன்று ஏன் தோன்றவில்லை என்பது வரலாற்றின் விசித்திரமான புதிராகவே எமக்குத் தோன்றலாம். 

2. மொழிக்கு அடுத்ததாக ‘சமயம்’ தேசிய இனத்தின் அடையாளங்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. வட அயர்லாந்தில் ஒரே மொழியைப் பேசுபவர்களான கத்தோலிக்கர்களும், புரட்டஸ்தாந்தியர்களும் சமய அடிப்படையில் பிரிக்கப்பட்டவர்களாய் உள்ளனர்.

கத்தோலிக்க சமூகத்தினர்களில் பெரும்பான்மையினர் அயர்லாந்துடன் தமக்குள்ள பிணைப்புகளைத் தொடர்ந்து பேண விரும்புகிறார்கள். ஆனால் வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்தியர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாகவே வட அயர்லாந்து தொடர்ந்து இருக்க வேண்டும் என விரும்பினார்கள். வட ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் பல நாடுகளின் தேசிய உணர்வின் அடிப்படையாக இஸ்லாம் இருந்து வருகிறது. 1979ஆம் ஆண்டின் ஈரானியப் புரட்சி (Iranian Revolution) அடிப்படைவாத ஷியா முஸ்லிம் நம்பிக்கைகளின் ஆதாரத்தில் அமைந்தது. சமயப் பிரிவினைகள் தேசியவாத உணர்வைத் தீர்மானிக்கும் பிரதான கூறாக இருந்தபோதும் ஐக்கிய இராச்சியத்திற்குள் இங்கிலாந்தில் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்தியர் மதப்பிரிவினை அழுத்தம் பெறவில்லை. அவ்வாறே ஐக்கிய அமெரிக்காவிலும் கத்தோலிக்கர், புரட்டஸ்தாந்தியர் என இரண்டு போட்டியான தேசியவாதங்கள் எழுச்சி பெறவில்லை. சமயம் ஐக்கிய அமெரிக்காவில் தனித்துவமான தேசியங்களை உருவாக்கவில்லை. போலந்து, இத்தாலி, பிரேசில், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் கத்தோலிக்கம் என்ற பொது அடையாளம் உள்ளது. ஆயினும் அந்நாடுகள் தம்மை ஐக்கியப்பட்ட ‘கத்தோலிக்க தேசம்’ (Catholic Nation) என அடையாளப்படுத்துவதில்லை.

3. இனத்துவம் அல்லது இனம் (Ethnicity or Race) தேசியங்களின் பிரதான கூறாக அமைவதுண்டு. நாஜிகளின் ஆட்சியின்போது, ஜேர்மனியில் இனத்தின் அடிப்படையிலான தேசியவாதம் உருவாக்கப்பட்டது. ஜேர்மன் மொழியில் ‘VOLK’ என்ற சொல் உள்ளது. இச்சொல்லால் தம்மை அழைத்துக்கொள்ளும் ஜேர்மன் தேசத்தவர்கள் பண்பாடு, இரத்த உறவு என்பனவற்றால் பிணைக்கப்பட்ட மக்களாக தம்மைக் கருதுகின்றனர். ஜேர்மனியர்களின் தேசியவாதம் இனம் (Race) என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைவதைக் காண்கின்றோம். பிரான்ஸ் நாட்டில் குடியேறிகளுக்கு (Migrants) எதிரான எதிர்ப்புணர்வு வலுப்பெற்றுள்ளது. இந்த எதிர்ப்புணர்வு இனம் என்ற அடிப்படையில் அமையும் தேசியவாத இயக்கத்தின் பண்பினைப் பெற்றுள்ளது. 

தேசிய உணர்வுக்குப் பண்பாட்டைவிட ‘இனம்’ (Race) முக்கியம் பெறும்போது உயிரியல் (Biological) அடிப்படையிலான வேறுபாடு அழுத்தம் பெறுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பு உணர்வு (Black Consciousness) தோலின் நிறம் என்பதைவிடத் தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் (History and Culture) அழுத்துவதாக உள்ளது. ஐக்கிய அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் என்பனவற்றிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வாழும் கறுப்பின மக்கள் அடிமைமுறையின் ஊடான தமது வரலாற்று அனுபவத்தையும் பண்பாட்டு அடையாளத்தையும் (Black Cultural Roots) முதன்மைப்படுத்துவதைக் காணலாம். ஆகவே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ‘இனத்துவமும் இனமும்’ (Ethnicity and Race) தேசியவாதத்தின் முதன்மைக் கூறாக அமைவதில்லை.

4. பொதுவான வரலாறும் மரபுகளும் (Common Histories and Traditions) தேசியவாத உணர்வை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன. தேசிய அடையாளத்தைப் பேணுவதில் தேசிய இனத்தின் புகழ்மிக்க கடந்த கால வரலாற்றை நினைவுகூருதல் முக்கியம் பெறுகிறது. குறித்த தேசிய இனம் சுதந்திரம் பெற்ற நாள் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். தேசியத் தலைவர்களின் நினைவுநாட்களும் கொண்டாடப்படுகின்றன.

பிரான்ஸில் ‘பஸ்ரில் தினம்’ (Bastille Day) தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு உலகின் பல்வேறு தேசங்களினதும் தேசிய அடையாளம் (National Identity) பேணப்படுவதற்கு வரலாறும் மரபும் பயன்படுவதைப் பல உதாரணங்கள் கொண்டு விளக்கலாம்.

தேசிய இன அடையாளம் புறநிலைக் காரணிகளால் மட்டும் விளக்கக்கூடியதல்ல. ஒரு தேசம் உளவியல் அரசியல் (Psycho-Political) சமூகமாகத் தன்னை அடையாளப்படுத்துவதால் அகக்காரணிகளும் (Subjective Factors) தேசிய அடையாள உருவாக்கத்தில் முக்கியம் பெறுகின்றன.

உயிரிச் சமுதாயம்

தேசிய இனத்தின் வரைவிலக்கணம் பற்றித் தேசியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளனவேனும், அவர்கள் தேசிய இனத்தை ஓர் உயிரிச் சமுதாயமாக (Organic Community) அடையாளம் காண்பதில் ஒருமித்த கருத்தையுடையவர்களாக உள்ளனர். உலகம் இயற்கையாகவே பல தேசிய இனங்களாக, தனித்துவமுடைய சமூகக் குழுமங்களாகப் பிரிவுற்றுக் காணப்படுகின்றன. மனித சமூகத்தில் வர்க்கம், பாலினம் (Gender), சமயம், மொழி போன்ற பல அடிப்படைகளில் சமூகக் குழுக்கள் (Social Groups) காணப்படலாம். இவ்வாறான பிரிவுகளைவிட, யாவற்றையும் உள்ளடக்கியதாக அமையும் தேசிய இனம் என்ற சமூகக் குழு அடையாளம் மேலானது. உள்ளமைந்திருக்கும் சமூகக் குழுக்கள் யாவற்றையும் பிணைக்கும் தேசிய அடையாளம் என்னும் கூட்டு அடையாளம் ஆதிமுதலாகவே இருந்து வரும் இயல்புணர்வாக அமைந்துள்ளது. தேசிய அடையாளத்தின் உருவாக்கம் குறித்து வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இவை குறித்த முக்கிய மூன்று கோட்பாடுகளாவன:

1. ஆதிமுதல்வாதம் (Primordialism)

2. நவீனவாதம் (Modernism)

3. கட்டமைப்புவாதம் (Constructivism)

உயிரிச் சமுதாயம் – கோட்பாடுகள்

இக்கோட்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன் ‘உயிரிச் சமுதாயம்’ (Organic Community) என்ற கருத்தாக்கம் பற்றி ஒரு குறிப்பைக் கூறுதல் அவசியம். தேசிய இனம் என்பதை ஒருவகை ‘அரசியல் சமுதாயம்’ (Political Community) எனச் சமூகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சமுதாயம் (Community) என்ற சொல் சமூகக் குழுவொன்றிடம் இருக்கும் வலிதான கூட்டு அடையாளத்தைக் (Strong Community) குறிப்பிடுகின்றது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் பரஸ்பர அன்பும், மதிப்பும் (Mutual Affection and Respect) காணப்படும். மரபுவழிச் சமூகங்களான கிராமங்களின் சிறிய சமுதாயங்களில் இத்தகைய ஆழ்ந்த உணர்வுப் பிணைப்பு இருப்பதனைக் காணலாம். இதனை பெர்டினட் ரொனிஸ் (Ferdinand Tonnies) என்னும் அறிஞர் (1855–1936) ‘ஜெமினிஸ்சவ்ட்’ (Gemeinschaft) என்னும் ஜேர்மானிய மொழிச் சொல்லால் குறிப்பிட்டார். நகர வாழ்க்கையில் ஒரு குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்களிடையே இதுபோன்ற ஆழ்ந்த உணர்வுப் பிணைப்பு இருப்பதில்லை. அம்மக்களின் ஒழுங்கமைப்பை (Association) தளர்வுடைய, செயற்கையான, யாந்திரீக உறவு (Mechanical Relationship) என பெர்டினட் ரொனிஸ் குறிப்பிட்டார். அவர் இதனை ‘ஜெசல்ஸ்சவ்ட்’ (Gesellschaft) உறவு எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளில் ஆதிமுதல்வாதம் (Primordialism) என்னும் கோட்பாடு தேசிய இனங்களிடையே ஆதிமுதலாக இருந்து வரும் ஆழ்ந்த உணர்வுப் பிணைப்பைக் (Gemeinschaft) குறிப்பிடுகிறது. நவீன காலத்தின் தேசிய இனங்கள், நவீனத்துக்கு முந்திய ‘எத்னீஸ்’ (Ethnies) எனப்படும் முந்தைய தேசிய இனங்களின் (Proto-Nations) தொடர்ச்சியே என்ற கருத்தை அந்தனி டி. ஸ்மித் (Anthony D. Smith) என்ற ஆய்வாளர் எடுத்துக் காட்டியுள்ளார்.

ஆதிமுதல்வாதம் என்ற கோட்பாட்டுக்கு மாறான கருத்தை முன்வைக்கும் நவீனவாதம் (Modernism) தேசியவாத அடையாள உணர்வு மாற்றமும் சூழ்நிலையாலும், வரலாற்று மாற்றங்களாலும் (Changing Situations and Historical Change) உருவாக்கப்படுவது எனக் குறிப்பிடுகிறது. எர்னஸ்ட் கெல்னர் (Ernest Gellner) என்னும் அறிஞர் 1983ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘Nations and Nationalism’ என்ற நூலில் கைத்தொழில்மயமாதல் (Industrialisation) என்னும் செயல்முறையூடாக, நவீனத்துக்கு முந்திய காலத்து விவசாய சமூகங்களின் கட்டமைப்புச் சிதைவடைந்தது என்றும், இதன் விளைவாக நவீனத்துக்கு முந்திய காலத்து நிலமானியப் பிணைப்புகளும் விசுவாச உணர்வும் (Feudal Bonds and Loyalties) தளர்வுற்றன என்றும் குறிப்பிட்டார்.

கைத்தொழில் சமூகம் தனிநபர்களின் சமூக அசைவியக்கத்திற்கு (Social Mobility) வாய்ப்பளித்தது. சமூக அசைவியக்கத்தின் மூலம் நகர மாந்தர்களாகியவர்கள் சுய முன்னேற்றம் மூலம் பழைய நிலமானிய உறவுகளில் இருந்து விடுதலை பெற்றனர். இவ்வாறு விடுதலை பெற்ற நபர்களுக்கு மொழி, பண்பாடு என்பனவற்றின் அடிப்படையிலான தேசியவாதம் சமுதாய உணர்வை வழங்குகிறது. தேசியவாதம் கைத்தொழில் சமூகத்தில் மக்களை ஒரு தேசத்தவர் என்ற உணர்வால் பிணைப்பதாக அமைகிறது என எர்னஸ்ட் கெல்னரின் விளக்கம் அமைந்தது. பெனடிக்ட் அன்டர்சன் (Benedict Anderson) தான் எழுதிய ‘Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism’ என்னும் நூலில் தேசியவாதம் நவீன காலத்தின் உருவாக்கம் என்றும் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மக்களை ஒன்றிணைக்கும் தேசியவாத உணர்வு தோற்றம் பெற்றிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நவீன கல்வி முறையும் வெகுஜன ஊடகங்களும் கற்பனையான அல்லது ‘கற்பிதமான’ (Imagined) சமுதாய உணர்வை ஏற்படுத்துகின்றன. இழந்துபோன மரபுவழிச் சமுதாயத்தின் சமுதாய உணர்வுக்குப் பதிலீடாக அமையும் ‘கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயங்களாக’ தேசியம் அமைகிறது என்று அன்டர்சன் விளக்கம் அளித்தார்.

கட்டமைப்புவாதம் (Constructivism) என்னும் கோட்பாடு, தேசியவாத உணர்வை ஒரு ‘கருத்தியல் கட்டமைப்பு’ (Ideological Construct) என விளக்குகிறது. இக்கருத்துப்படி தேசியவாதம் ‘தேசியம்’ (Nation) என்பதனைப் புதிதாகக் கண்டுபிடிக்கிறது, உருவாக்குகிறது. ஹொப்ஸ்பாம் (Hobsbawm) என்னும் மார்க்சிய அறிஞர் தேசிய இனங்கள் தமக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது எனக் கூறுவது ஒரு பொய்ப்புனைவு (Myth) எனக் குறிப்பிடுகிறார். தேசியகீதம், தேசியக்கொடி போன்றன தேசியவாதத்தின் கண்டுபிடிப்புகளாகும்.

தேசியவாதக் கருத்துக்கள் ‘மரபினைப் புதிதாகக் கண்டுபிடித்தல்’ (Inventing Traditions) என்னும் பண்பினை உடையவை. அவரது ‘Invented Traditions’ என்ற பிரபலமான தொடர் இதனையே குறிப்பிடுகிறது. ‘கட்டமைப்புவாதம்’ (Constructivism) தேசியவாதத்தைச் செயற்கையான உருவாக்கம் என்று குறிப்பிடுகிறது.

சுயநிர்ணயம்

தேசியவாதம் என்னும் அரசியல் கருத்தியலின் அடிப்படையான கருத்துகளில் மூன்றாவதான ‘சுயநிர்ணயம்’ (Self-Determination) பற்றி அன்ட்ரூ ஹெய்வூட் கூறியிருப்பவற்றை அடுத்து நோக்குவோம்.

பிரஞ்சுப் புரட்சியின் நிறைவாக மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது. மக்களாட்சி மலர்ந்தது. மக்களாட்சியை மலரச் செய்த சிந்தனையின் அடிப்படையாகத் ‘தேசியவாதம்’ (Nationalism) அமைந்தது. மன்னர் ஆட்சியின் ஆதாரமாக அமைந்த முடிமன்னரின் சர்வ அதிகாரம் (Absolute Power of Monarchy) பிரஞ்சுப் புரட்சியின் மூலம் ஒழிக்கப்பட்டது. முடிமன்னரின் சர்வ அதிகாரம் புரட்சியின் பயனாக நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை மக்களின் அதிகாரம் எடுத்துக் கொண்டது. மக்களால் உருவாக்கப்பட்ட ‘பிரான்சு தேசம்’ (French Nation) உருவானது.

புதிதாக உருவான ‘பிரான்சு தேசத்தின்’ பிரஜைகளாக (Citizens) மக்கள் மாற்றம் பெற்றனர். இவ்வாறு மாற்றம் பெற்ற மக்கள் முன்னர் முடிமன்னர் ஆட்சியின் கீழ் மன்னருக்கு அடிமைப்பட்ட குடிகளாக (Subjects) இருந்தனர். பின்னர் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்ற மக்கள் ‘பிரஜைகள்’ என்ற தகுதிக்கு உயர்ந்தபோது, ‘உரிமைகளும் கடமைகளும் உடையவர்களாக’ மாற்றம் பெற்றனர். இவ்வுரிமைகளும் கடமைகளும் தனிநபர்களிடமிருந்து பிரித்து எடுக்கப்பட முடியாதன (Inalienable) எனக் கருதப்பட்டன. இந்த மாற்றங்களை அன்ட்ரூ ஹெய்வூட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“The form of nationalism that emerged from the French Revolution was therefore based on the vision of a people or nation governing itself. In other words, the nation is not merely a natural community, it is a natural political community.”

“In this tradition of nationalism, nationhood and statehood are intrinsically linked. The litmus test of national identity is the desire to attain or maintain political independence, usually expressed in the principle of national self-determination. The goal of nationalism is therefore the founding of a ‘Nation-state.”

(பக். 165: Political Ideologies: An Introduction – Andrew Heywood)

மேற்தரப்பட்ட மேற்கோள் தேசியவாதம் என்னும் கோட்பாட்டின் அடிப்படையாக தேசிய சுயநிர்ணயம் (National Self-Determination) என்னும் தத்துவம் அமைந்துள்ளது என்பதை விளக்கமாக எடுத்துக்கூறுகிறது.

மேலே தரப்பட்ட பந்தியின் கருத்துகளைச் சுருக்கியும் எளிமைப்படுத்தியும் தமிழில் தந்துள்ளோம்:

“ஒரு மக்கள் அல்லது தேசிய இனம் (A People or Nation) தனக்குரிய தேசத்தை உருவாக்க வேண்டும், அத்தேசத்தைத் தானே ஆட்சி செய்ய வேண்டும் (National Government Itself) என்ற தொலைநோக்கை (Vision) உடையது. இக்கருத்தைப் பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக உருவான தேசியவாதம் முன்வைத்தது. ஒரு தேசிய இனம், தனக்கென ஒரு தேசத்தை (Nation) உருவாக்குதல், அதனைத் தானே ஆளுதல் என்பதன் மறுபெயர் ‘தேசிய சுயநிர்ணயம்’ (National Self-Determination) ஆகும். இத்தேசியவாதச் சிந்தனை Nationalism, National Hood, State Hood என்னும் மூன்று விடயங்களையும் ஒன்றுடன் ஒன்று உள்ளார்ந்த பிணைப்புடையதாகப் (Intrinsically Linked) பார்க்கிறது. தேசிய அடையாளம் (National Identity) சுயநிர்ணயம் என்ற தத்துவத்துடன் பிணைப்புடையது. ஆகையால் தேசிய அரசை நிறுவுதல் (Founding of a National State) தேசியவாதத்தின் இலக்கு ஆகும்.

பிரஞ்சுப் புரட்சியின் தேசியவாதக் கருத்துகள் ஐரோப்பா எங்கணும் பரவி புதிய தேசிய அரசுகள் (New National States) உருவாகின.

அடையாள அரசியல்

எல்லாவகைத் தேசியவாதங்களும் கூட்டு அடையாள உணர்வை (Collective Identity) முதன்மைப்படுத்துகின்றன. அரசியல் இலக்குகளை உடைய தேசியவாதம் புறநிலையானவை (Objective), அகநிலையானவை (Subjective) என்றும் இருவகைச் சட்ட அடையாளங்களையும் சம அளவில் முக்கியத்துவப்படுத்துகின்றது.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் (Territory) வாழ்தல், ஒரு குறிப்பிட்ட சமயத்தினராக இருத்தல், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுபவராக இருத்தல் என்பன புறநிலையாக வரையறை செய்யக்கூடிய அடையாளங்களாகும். பிரதேசம், சமயம், மொழி (Territory, Religion, Language) போன்ற புறநிலை அடையாளம் சார்ந்த அரசியல் கோரிக்கைகளை தேசியவாதம் முன்வைப்பது மட்டுமல்லாமல், உணர்வு சார்ந்த நாட்டுப்பற்றையும் (Patriotism) அம்மக்களிடம் கிளர்ந்தெழச் செய்கிறது. தேசியவாதம் தனது மக்களை நோக்கி ‘நீங்கள் யார்’ என்ற கேள்வியை முன்வைக்கிறது. அவர்களுக்கு என ஒரு வரலாறு (History) இருப்பதை எடுத்துக்கூறி அதனை அவர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் தனது மக்களிடையே சமூகப் பிணைப்புகளை வளர்த்துக் கூட்டு உணர்வை வளர்க்கிறது (Forges Social Bonds and a Collective Spirit). இக்கூட்டுணர்வை வளர்ப்பதன் மூலம் அம்மக்கள் குழுமத்தின் தலைவிதியை (Destiny) அவர்களுக்கு உணர்த்துகிறது.

‘தாய்நாடு’ என்றும் ‘தந்தையர் நாடு’ என்றும் அம்மக்களை உணரவும், பேசவும், செயற்படவும் வைக்கிறது. இவ்வாறான உணர்வு சார்ந்த கூறுகள் தேசியவாதத்திற்குச் சக்தியையும், வீரியத்தையும் வழங்குகின்றன. புறநிலையிலும், அகநிலையிலும் கட்டமைக்கப்படும் தேசியவாதம் அடையாள உணர்வை வளர்ப்பதன் மூலம் மக்களை தேசியவாதத்தின் அரசியல் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டில் ஈடுபடுத்துகிறது. நாட்டின் விடுதலைக்காகப் போராடும் அரசியல் இயக்கம் ஒன்று நாட்டுப்பற்று, தேசிய உணர்வு (National Consciousness) என்பவற்றை மக்களிடையே வளர்க்காமல் சுதந்திரம் என்ற இலக்கை அடைவதில்லை. இக்காரணத்தினாலேயே தேசியவாதம் அடையாள அரசியலாக (Identity Politics) வரையறை செய்யப்படுகிறது.

தேசியவாதம் என்னும் சிக்கலான கருத்தியலின் அடிப்படைக் கூறுகளான தேசிய இனம், உயிரிச் சமுதாயம், சுயநிர்ணயம், அடையாள அரசியல் என்பவற்றைச் சுருக்கமாக மேலே எடுத்துக்கூறினோம்.

தேசியவாதமும் அரசியலும்

அரசியல் தேசியவாதம் (Political Nationalism) என்னும் நவீனகாலத் தோற்றப்பாடு எளிதில் வரையறை செய்து விளக்கிக் கூறமுடியாத தன்மையுடையது. இதன் விழுமியங்கள் எவையெனவும், அது அடைய விரும்பும் இலக்குகள் எவையெனவும் ஐயம்திரிபற எடுத்துக்கூற முடியாது. அரசியல் தேசியவாதத்திற்கு எதிரெதிரான இருமைப் பண்புகள் பல உள்ளன. அது விடுதலையை (Liberation) இலக்காகக் கொண்டது. அதே சமயம் அது ஒடுக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. தேசியவாதம் மக்களுக்கு சுய ஆட்சியையும் சுதந்திரத்தையும் (Self-Government and Freedom) பெற்றுக் கொடுத்துள்ளதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. அதேவேளை தேசியவாதம் ஆக்கிரமிப்புச் செய்து, அயல் சமூகங்களை அடிமைப்படுத்தியதையும் காண்கிறோம். தேசியவாதம் முற்போக்கான சக்தியாக (Progressive Force) செயற்பட்டு தேசிய மேன்மையையும், கௌரவத்தையும் மீட்டெடுக்க உதவியது. அதேவேளை அது ஒரு சில சமூகக் குழுக்களின் அடையாளங்களை முதன்மைப்படுத்தும் பிற்போக்குச் சக்தியாகவும் செயற்பட்டுள்ளது.

தேசியவாதம் பகுத்தறிவுடன் பொருந்துவதாகவும், பகுத்தறிவுக்கு மாறுபட்டதாகவும் இருந்துள்ளது (Both Rational and Irrational). தேசியவாதம் தேசிய சுயநிர்ணயம் (National Self-Determination) போன்ற உயர்ந்த தத்துவங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கையைச் செலுத்தியுள்ளது. அதேசமயம் அது காரணமற்ற அச்ச உணர்வுகளையும், வெறுப்புணர்ச்சியையும் தூண்டி வளர்க்கிறது. இவ்வாறாகத் தெளிவற்ற தன்மையும் (Ambiguity) முரண்பாடுகளும் (Contradictions) கொண்டதாக அமையும் தேசியவாதக் கருத்தியல் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் தேசியவாதம் வெவ்வேறு வரலாற்றுச் சூழமைவில் (Historical Context) தோற்றம் பெற்று, வெவ்வேறு அரசியல் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் முன்னெடுத்துச் சென்றதைக் காணமுடிகிறது.

தேசியவாதம் சமகாலத்தின் பிற கருத்தியல்கள் பலவற்றையும் உள்வாங்கிக் கொண்டு பலவித அரசியல் கருத்தியல் கோலங்களை வெளிப்படுத்துவதாய் இருந்து வருகிறது. இவற்றுள் முக்கியமான கருத்தியல்கள் நான்கைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.

1. தாராண்மைத் தேசியவாதம் (Liberal Nationalism)

2. பழமைத் தேசியவாதம் (Conservative Nationalism)

3. விஸ்தரிப்புத் தேசியவாதம் (Expansionist Nationalism)

4. காலனிய எதிர்ப்புத் தேசியவாதமும் பின்காலனிய தேசியவாதமும் (Anti-Colonial and Post-Colonial Nationalism)

தாராண்மைத் தேசியவாதம்

தேசியவாதங்கள் யாவற்றுள்ளும் தாராண்மைத் தேசியவாதம் மிகவும் பழமையானது. அதனைப் பிரஞ்சுப் புரட்சி தோற்றுவித்தது. அப்புரட்சியின் விழுமியங்கள் பலவற்றை உட்செரித்துக்கொண்ட தாராண்மைத் தேசியவாதம் மிக விரைவாக ஐரோப்பிய நாடுகளில் பரவியது. தாராண்மைத் தேசியவாதத் தத்துவத்தை மிகத் தெளிவாக எடுத்துக்கூறியவராக இத்தாலிய தேசத்தின் அறிஞர் மாஜினி (Mazzini) 1805–1872 விளங்கினார்.

இத்தாலியை ஒன்றுபட்ட தேசமாக ஐக்கியப்படுத்திய தீர்க்கத்தரிசி என மாஜினி கருதப்படுகிறார். தாராண்மைத் தேசியவாதக் கருத்துகளால் கவரப்பட்ட சைமன் பொலிவார் (Simon Bolivar) 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலத்தீன் அமெரிக்காவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்தார். சைமன் பொலிவார் தொடக்கிவைத்த சுதந்திரப் போராட்டம் இலத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருந்து ஸ்பானியர்களை விரட்டியடிப்பதற்கு உதவியது. முதலாம் உலக யுத்தத்தின் முடிவில் வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) தாராண்மைத் தத்துவங்கள் பதினான்கை (Fourteen Points) உள்ளடக்கிய சுயநிர்ணய உரிமை என்னும் கோட்பாட்டை முன்வைத்தார். 20ஆம் நூற்றாண்டின் தலைவர்களான சீனாவின் சன்யாட்சன் (Sun Yat-sen), சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவகர்லால் நேரு ஆகியோர் தாராண்மைத் தேசியவாதத்தினால் கவரப்பெற்ற தலைவர்களாவர்.

ரூசோ (Rousseau 1712–1778) என்ற அறிஞர் எழுதிய ‘சமூக ஒப்பந்தம்’ (The Social Contract) என்னும் நூல் 1762ஆம் ஆண்டு வெளியானது. இந்நூல் ‘மக்கள் இறைமை’ (Popular Sovereignty) என்னும் தத்துவத்தை ‘பொது விருப்பு’ (General Will) என்ற கருத்தாக்கம் மூலமாக வெளிப்படுத்தியது. ரூசோவிற்கு முந்திய காலத்தில் இறைமை (Sovereignty) அரசனிடம் உறைவதாகக் கருதப்பட்டது. ரூசோ இறைமையை மக்கள் என்ற கூட்டு அமைப்புக்கு (Collective Body) உரியதாக்கினார்.

மக்கள் கூட்டாகத் தமது விருப்பத்தைப் பிரஜைகள் என்ற முறையில் வெளிப்படுத்துவதே பொது விருப்பு எனவும் அவர் விளக்கம் அளித்தார். 19ஆம் நூற்றாண்டில் தாராண்மைத் தத்துவங்களை உள்ளடக்கியதாக ரூசோவின் மக்கள் இறைமை என்ற கருத்து வளர்ச்சியடைந்து, ஐரோப்பாவில் முடிமன்னர் ஆட்சிக்குப் பதிலாக மக்களின் சுய ஆட்சி (Popular Self-Government) தோற்றம் பெற வழிவகுத்தது. தாராண்மைத் தேசியவாதம் ஐரோப்பாவின் பேரரசுகளின் சர்வாதிகாரத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரானதாக அமைந்தது. உதாரணமாக, மாஜினி இத்தாலியை ஐக்கியப்படுத்தி ஒரு நாடாக உருவாக்கப் போராடியது, சர்வாதிகார ஆஸ்திரியாவின் ஒடுக்குமுறையில் இருந்து இத்தாலியின் பகுதிகளை விடுவிப்பதாகவே அமைந்தது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் தாராண்மைவாதமும், தேசியவாதமும் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திப் பார்க்க முடியாத தத்துவங்களாகவே நோக்கப்பட்டன.

தாராண்மைவாதம் தனிமனித சுதந்திரத்தை முதன்மைப்படுத்தியது. தனிநபர்களுக்குச் சில அடிப்படை உரிமைகள் (Rights) உள்ளன என்பதையும் தாராண்மைவாதம் வலியுறுத்தியது. தாராண்மைவாதமும், தேசியவாதமும் விடுதலை (Liberation), சுதந்திரம் (Freedoms), உரிமைகள் (Rights) ஆகிய விழுமியங்களைப் பரப்பின. தேசியவாதிகள் தேச விடுதலையை சுயநிர்ணய உரிமை (The Right to Self-Determination) என்றும் தேசிய அரசுகள் சுய ஆட்சிக்கான உரிமையை உடையவை என்றும் விளக்கினர்.

பல்தேசியப் பேரரசுகளான (Multi-national Empires) ஆஸ்திரியா–ஹங்கேரி, ரஷ்யா, துருக்கி என்பவற்றுக்கு எதிரான போராட்டங்களும், காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவனவாக அமைந்தன. இவ்வகையில் தாராண்மைத் தேசியவாதம் இருவகை உரிமைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தது. முதலாவதாக அது அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது. இரண்டாவதாக அரசியல் யாப்புவாதம் என்னும் அடிப்படையில் இன, மொழி, மத பேதங்களைக் கடந்து பிரஜைகள் யாவருக்கும் சமத்துவத்தின் அடிப்படையில் தனிநபர் உரிமைகளையும் (Individual Rights) வழங்கியது.  

தனிநபர்கள் எவ்வாறு சமத்துவம் உடையவர்களோ அவ்வாறே தேசங்களும் சமத்துவமானவை, எல்லாத் தேசியங்களுக்கும் சுயநிர்ணயத்திற்கான சமத்துவ உரிமை உள்ளது என்ற கருத்து தாராண்மைத் தேசியவாதிகளால் முன்வைக்கப்பட்டது. இக்கருத்தை அன்ட்ரூ ஹெய்வூட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“The ultimate goal of liberal nationalism is, therefore, the construction of a world of independent nation-states, not merely the unification or independence of a particular nation.”

(மேலது, பக். 171) 

தாராண்மைத் தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட தேசத்தின் ஐக்கியத்தையும் விடுதலையையும் மட்டும் குறிக்கோளாகக் கொண்டதல்ல, அதன் இறுதி இலக்கு சுதந்திர தேசிய அரசுகளைக் கொண்ட (Independent Nation States) உலகைக் கட்டமைப்பதே ஆகும்.

மாஜினி ஐக்கியப்பட்ட சுதந்திர இத்தாலியை உருவாக்கும் இலட்சியத்துடன் ‘இளம் இத்தாலி’ (Young Italy) என்னும் இரகசிய அமைப்பை உருவாக்கினார். அவரது இறுதி இலக்கு தேசியவாதக் கருத்துகளை ஐரோப்பாவில் பரவச் செய்து ‘இளம் ஐரோப்பாவை’ (Young Europe) உருவாக்குவதாகவே இருந்தது. பாரிஸ் சமாதான மாநாட்டில் வூட்றோ வில்சன் ‘சுயநிர்ணயம்’ (Self Determination) என்ற தத்துவத்தை முன்வைத்தார்.

சுயநிர்ணயம் என்னும் இத்தத்துவம் 1918க்குப் பிந்திய கால ஐரோப்பாவில் போலாந்தியர்கள், செக் தேசிய இனத்தவர்கள் (Czechs), ஸ்லோவாக்கியர்கள், ஹங்கேரியர்கள், சேர்பியர்கள், குறோசியர்கள், பொஸ்னியர்கள், அல்பேனியர்கள் முதலிய பல தேசிய இனங்கள் விடுதலையைப் பெறவும், புதிய தேசங்களை (New States) உருவாக்கவும் காரணமாக அமைந்தது.

பழமைத் தேசியவாதம்

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பழமைவாதிகள் (Conservatives) தேசியவாதத்தைப் பயங்கரமான ஒரு சக்தியாகவும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு (Political Stability) ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் கருதினர். ஆனால் காலப்போக்கில் பழமைவாதிகளான முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் தேசியவாதத்தை அனுதாபத்தோடு நோக்குபவர்களாக மாறினர்.

இவர்களுள் இங்கிலாந்தின் பிரதமர் டிஸ்றேலி (Disraeli), ஜேர்மன் தேசத்தின் பிஸ்மார்க் (Bismarck), ரஷ்யாவின் மூன்றாம் ஜார் அலெக்ஸாண்டர் (Tsar Alexander III) ஆகியோர் தேசியவாதத்தை ஏற்று அங்கீகரித்தவர்களில் குறிப்பிடத்தக்க தலைவர்களாவர். பழமைவாதிகளான இத்தலைவர்கள் தேசியவாதம், சமூக ஒழுங்கையும் சமூகப் பிணைப்பையும் பேணவும், மரபுவழி நிறுவனங்களின் நிலைபேற்றுக்கு உதவுவதையும் உணர்ந்து பழமைத் தேசியவாதத்தை அரசின் கருவியாக உபயோகித்தனர். நவீன காலத்தில் தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டு அதனைப் பயன்படுத்திய பழமைவாதிகளில் மார்கரட் தட்சர் (Margaret Thatcher), றொனால்ட் றீகன் (Ronald Reagan) என்போர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பழமைத் தேசியவாதம் (Conservative Nationalism) பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நிலைபேறுடைய அரசுகளினால் அரசுக் கருத்தியலாகப் பயன்படுத்தப்பட்டமை கவனிக்கத்தக்கது. இப்பழமைத் தேசியவாதம் புதிதாக எழுச்சி பெறும் தேசிய அரசுகளின் சுயநிர்ணய உரிமையை ஏற்பனவாக இருக்கவில்லை. பழமைத் தேசியவாதம் ‘நாட்டுப்பற்று’ (Patriotism) என்னும் உணர்வைத் தூண்டி தமது நாட்டவர்களிடையே ஐக்கிய உணர்வை வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது. ‘சுயநிர்ணயம்’ போன்ற தாராண்மை விழுமியங்களில் அக்கறையுள்ளவர்களான பழமைத் தேசியவாதிகள் வெளிநாடுகளில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்துவதற்கும், உள்நாட்டில் சிறுபான்மை இனக் குழுக்கள் மீது சகிப்புத்தன்மையைத் (Intolerance) தூண்டி வளர்ப்பதற்கும், இனவாதத்தை (Racism) தூண்டிவிடுவதற்கும், தேசியவாதத்தை ஒரு கருவியாக உபயோகித்தனர்.

விஸ்தரிப்புத் தேசியவாதம்

இன்று பல நாடுகளில் தேசியவாதம் ஆக்கிரமிப்பு, இராணுவமயப்படுத்தல் ஊடாக ஒடுக்குமுறை என்னும் கோரமுகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். தேசியவாதத்தின் ஆக்கிரமிப்புக் கோரமுகம் (The Aggressive Face of Nationalism) அதன் முரண்பட்ட போக்குகளை உணர்த்துவதாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய வல்லரசுகள் ஆபிரிக்காவைக் கூறுபோட்டுத் தம்மிடையே பங்கிட்டுக்கொள்ளும் போட்டியில் ஈடுபட்டபோது தேசியவாதத்தை ஒரு கருவியாக உபயோகித்தன. தம் தேசத்தின் புகழுக்காகவும் (National Glory), தம் தேசத்திற்கு சூரியனின் கீழ் தலைமை இடம் (Place In The Sun) வேண்டும் என்பதற்காகவும் பிரதேச விஸ்தரிப்பை மேற்கொள்வதாக இந்நாடுகள் தம் மக்களுக்குள் கூறின.

காலனி நாடுகள் பலவற்றை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பேரரசு (Empire) என்ற பெருமையைத் தேடித் தருவதற்கு தேசியவாதம் என்ற கருவியை இந்நாடுகள் உபயோகித்தன. ஒவ்வொரு காலனியும் கைப்பற்றப்பட்ட போது, ஏகாதிபத்திய வல்லரசுகளின் தலைநகரங்களில் மக்கள் வெள்ளம் திரண்டு தேசியவாதக் கோஷங்களை முழங்கி ஆர்ப்பரித்தது. ஏகாதிபத்தியத்தின் விஸ்தரிப்பை (Imperialist Expansion) பொதுமக்கள் ஆர்ப்பரித்து வரவேற்கும் இந்த மனப்பாங்கை விளக்கும் சொல் ஒன்று ஆங்கில மொழியில் உள்ளது. ஜிங்கோயிசம் (Jingoism) என்பதே இச்சொல்லாகும். 1914க்கும் 1939க்கும் இடைப்பட்ட உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (Inter-War Period) யப்பான், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளில் வெறியுடன் கூடிய விஸ்தரிப்புத் தேசியவாதம் வளர்ச்சியுற்றது. இத்தேசியவாதம் ஜிங்கோயிசத்தின் தன்மையையும் பெற்றது.

காலனிய எதிர்ப்புத் தேசியவாதமும் பின்காலனிய தேசியவாதமும்

தேசியவாதம் ஐரோப்பாவில்தான் தோற்றம் பெற்றது. அதை உலகம் முழுவதையும் ஆட்கொண்ட ஒரு கருத்தியலாக வளர்ப்பதற்குக் காரணமாக ஏகாதிபத்தியம் விளங்கியது. குறிப்பாக ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் ஏகாதிபத்திய நாடுகளின் காலனிய ஆட்சி அந்நாடுகளின் மக்களைக் காலனிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்தது. அந்நியர்களின் பிடியிலிருந்து தம் மக்களை மீட்பதற்கான இந்தப் போராட்டம் ‘தேசிய விடுதலை’ (National Liberation) எனப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் உள்ள கருத்தியல் காலனிய எதிர்ப்புத் தேசியவாதம் (Anti-Colonial Nationalism) என அடையாளம் காணப்படுகிறது.

முதலாவது உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் தமது ஆதிக்கப்பிடிக்குள் வந்திருந்த காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தைப் பலாத்காரம் கொண்டு அடக்கி ஒடுக்கியபோது, ‘சுயநிர்ணய உரிமை’ என்பது தமக்கு மட்டுமே உரியதென்றும் தமது ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட நாடுகளுக்கு அவ்வுரிமை கிடையாது என்றும் கருதிச் செயற்பட்டன. ஆபிரிக்காவில் புதிய காலனிகளை 20ஆம் நூற்றாண்டில் அமைக்கப் போட்டி போட்டபோதும், அக்காலனிகளின் மக்களின் ‘சுயநிர்ணய உரிமை’ குறித்து அவை துளியளவும் சிந்திக்கத் தயாராக இருக்கவில்லை. ஆயினும் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியம் அடியோடு சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் 1947இல் இந்தியாவை இந்தியர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறினர். 1957இல் மலாயாவை மலாயர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறினர். ஆனால் வேறு இடங்கள் பலவற்றில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் மூலமே நாடுகள் விடுதலை அடைந்தன.

1937–45 காலத்தில் யப்பானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் சீனா போராடியது. 1954–62 காலத்தில் அல்ஜீரியா பிரான்சிற்கு எதிராகப் போராடியது. வியட்நாம் 1946–54 காலத்தில் பிரான்சுக்கு எதிராகவும், 1964–75 காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராகவும் போராடியது.

மேற்காட்டிய மூன்று உதாரணங்கள் இருபதாம் நூற்றாண்டின் காலனிய எதிர்ப்புத் தேசியவாதத்தின் இயல்புகளை ஊகித்தறிய எமக்கு உதவுகின்றன. சுருங்கக்கூறின், ஏகாதிபத்தியங்கள் காலனிய நாடுகளை ஆக்கிரமிப்புச் செய்தபோது, அந்நாடுகளில் தமது அழிவுக்குக் காரணமான தேசியவாத விதைகளை விதைத்தன.

அடுத்து, காலனிய நாடுகளில் தோன்றிய தேசியவாதம், மேற்கு நாடுகளில் தோன்றி வளர்ச்சிபெற்ற தாராண்மைவாதத் தேசியவாதத்திலிருந்து சில முக்கியமான விடயங்களில் வேறுபாடு உடையதாக இருந்ததை அன்ட்ரூ ஹெய்வூட் எடுத்துக் காட்டியுள்ளார் (மேலது, பக். 178–180). அவ்வேறுபாடு பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்.

காலனிய நாடுகளின் தேசியவாதம் அரசியல் விடுதலையை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. அத்தேசியவாதம் ஐரோப்பாவின் கைத்தொழில் நாடுகளின் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதையும் நோக்கமாகக் கொண்டது. காலனிய நாடுகளின் பொருளாதார விருத்தி என்ற விடயம் அத்தேசியவாதத்தின் முக்கிய கூறாக அமைந்தது.

காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திய தலைவர்களில் பலர் தமது நாடுகள் விடுதலை பெற்றதும் சோசலிசப் பாதையில் பயணிக்க வேண்டும், சோசலிச அடிப்படையில் சமூக நிர்மாணத்தைச் செய்ய வேண்டும் என்ற இலக்கைக் கொண்டவர்களாய் இருந்தனர். சோசலிசம், மதவாத சோசலிசம் முதல் மார்க்சிய சோசலிசம் வரை வேறுபட்டதாகவும் இருந்தன.

மார்க்சியம் சமத்துவமின்மை (Inequality), சுரண்டல் (Exploitation) ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் காலனிய ஆட்சியின் தன்மையை விளக்கிக் கூறியது. லெனின் ஏகாதிபத்தியம் பற்றி எழுதிய நூல் ஏகாதிபத்தியம் காலனிய நாடுகளைப் பொருளாதாரச் சுரண்டலுக்கு உட்படுத்தியதை எடுத்துக் காட்டியது. காலனிய நாடுகளின் விடுதலை என்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல, சமூகப் புரட்சியும் (Social Revolution) ஆகும். அரசியல், சமூக, பொருளாதார விடுதலையே காலனிய விடுதலையின் சாராம்சம் என்றும் மார்க்சியம் குறிப்பிட்டது.

காலனிய நாடுகள் அரசியல் விடுதலை பெற்றவுடன் தேசியவாதம் அந்நாடுகளில் இருந்து மறைந்துவிடவில்லை. அது புதிய வடிவங்களில் அந்நாடுகளில் தொடர்கின்றது. இவ்வாறு தொடரும் தேசியவாதம் பின்காலனிய தேசியவாதம் (Post-Colonial Nationalism) என அழைக்கப்படுகிறது. பின்காலனிய தேசியவாதம், மேற்கின் தேசியவாதத்தை அப்படியே ஏற்று உட்செரிப்பதாக அல்லாது, அதற்கு எதிரானதாக மேற்குலகின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான தத்துவமாக வளர்ச்சிபெற்றுள்ளது. தேசத்தைக் கட்டி வளர்த்தல் (Nation Building) என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசியவாதம் மேற்குலகின் கருத்துகளையும் பண்பாட்டையும் நிராகரிக்கும் தன்மையுடையதாக இருப்பதையும் காணலாம்.

தொகுப்புரை

இக்கட்டுரையில் இதுவரை கூறியவற்றைத் தொகுத்து நோக்குவோம்.

முதலில் இலங்கையின் சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தையும், அதன் எதிர்வினையாக எழுந்த இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும் பற்றிக் குறிப்பிட்டோம். இத்தேசியவாதங்கள் பற்றிய புரிதல், தேசியவாதம் என்னும் அரசியல் கருத்தியலின் புரிதல் மூலமே சாத்தியமாகும் என்பதையும் குறிப்பிட்டோம்.

அடுத்து, தேசியவாதம் என்னும் சிக்கலான கருத்தியலின் வரலாறு பற்றிய வரலாற்று விளக்கம் (Historical Overview) எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து பின்வரும் நான்கு பிரதான கருத்துகளும் தத்துவங்களும் (Core Ideas and Principles) விளக்கப்பட்டன.

  • தேசிய இனம் (The Nation)
  • உயிரிச் சமூகம் (Organic Community)
  • சுயநிர்ணயம் (Self Determination)
  • அடையாள அரசியல் (Identity Politics)

இறுதியாகப் பின்வரும் வகைப்பட்ட தேசியவாதங்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டது.

  • தாராண்மைத் தேசியவாதம் (Liberal Nationalism)
  • பழமைத் தேசியவாதம் (Conservative Nationalism)
  • விஸ்தரிப்புத் தேசியவாதம் (Expansionist Nationalism)
  • காலனிய எதிர்ப்புத் தேசியவாதமும் பின்காலனியத் தேசியவாதமும் (Anti-Colonial and Post-Colonial Nationalism)

ஒப்பீட்டளவில் தாராண்மைவாதம், சோசலிசம் போன்ற கருத்தியல்களைவிடப் புரிந்துகொள்வதற்குச் சிக்கலான கருத்தியலாகத் தேசியவாதம் விளங்கிவருவது அவதானிக்கத்தக்கது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்