நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

நாடு பிளவுபட்ட நாற்பதுகள் – 2

October 1, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்ட, கேட்ட, கேள்விப்பட்ட, வாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

–கார்த்திகேசு இந்திரபாலா– 

தமிழ்த் தலைவர்களின் பதில்

சேனாநாயக்கவும் பிற சிங்கள மத்திய வகுப்பு அரசியல் தலைவர்களும் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைப்பதை எதிர்பார்த்துப் பல நடவடிக்கைகளில் ஈடுபட, தமிழர் தரப்பில் வேறுபட்ட செயல்பாடுகள் இடம்பெற்றன. அரசியல் சீர்திருத்தத்தின் விளைவாகவும் சுதந்திரத்தின் பலனாகவும் பெரும்பான்மையினராகிய சிங்களத் தலைவர்கள் ஆதிக்கம் பெறுவர் என்ற உணர்வும் தமிழ் மத்திய வகுப்பினர் அனுபவிக்கும் பொருளியல் நன்மைகளை இழக்க நேரிடும் என்ற ஏக்கமும் தமிழ் அரசியல் தலைவர்களிடையே அச்சத்தை உண்டுபண்ணின.

நாட்டில் சிங்களத் தலைவர்கள் என்றும், தமிழ்த் தலைவர்கள் என்றும் அரசியலில் பிளவு ஏற்பட்டுவிட்டதை மறைக்க முடியாது. யாழ்ப்பாணத்துச் செய்தித்தாள்களைப் பார்க்கும் போது இது தெளிவாகின்றது. D.S. சேனாநாயக்க, பண்டாரநாயக்க, ஜயவர்தன, டட்லி சேனாநாயக்க ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தில் மக்கள் விருப்பு (Popularity) இருக்கவில்லை.

இச்சூழ்நிலையில், தமிழ் மத்திய வகுப்பினரை ஒன்றுகூட்டி, பொன்னம்பலமும் அவர் தலைமை வகித்த கட்சியும் தமிழர் தரப்பின் பதிலை (Response) வெளிப்படுத்தினர். தமிழருக்கு எழுந்த பிரச்சினையாக இவர்கள் கண்டதற்குப் பொன்னம்பலம் வகுத்த தீர்வு ‘சமநிலைப் பிரதிநிதித்துவம்’ (Balanced Representation) ஆகும். இதையே பொதுவழக்கில் ‘ஐம்பதுக்கு ஐம்பது’ (Fifty-Fifty) என்றனர். 

பொன்னம்பலமும் பிற தலைவர்களும் கண்ட பிரச்சினை என்ன? பின்னர் எழுந்த பிரச்சினை போல, தமிழ்மொழியின் நிலை சார்ந்ததா? இல்லை. தமிழர் வாழும் இடம் சார்ந்ததா? இல்லை. பொன்னம்பலம் எதற்காக சோல்பரியின் பரிந்துரைகளை எதிர்த்தார்?

சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி இலங்கையின் புதிய பாராளுமன்றம் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தை ஒத்ததாக இருக்கும். அதாவது, இடம்சார் தேர்தல் தொகுதிகளில் (Territorial Constituencies) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரைக் கொண்ட பாராளுமன்றம் நாட்டின் ஆட்சி மன்றமாக இயங்கும். இங்கிலாந்தில் இருந்து வந்த ஆணைக்குழுவினருக்கு அதுவே சிறந்த அரசியல் அமைப்பாகத் தோன்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொன்னம்பலம் இதனை எதிர்த்தார். இந்த அரசியல் கட்டமைப்பில் பெரும்பான்மை இனக்குழுவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவோரே பாராளுமன்றத்தில் நிரந்தரமாக அதிகாரம் பெற்று, ஏனைய (சிறுபான்மை) இனக்குழுக்கள் மீது ஆதிக்கம் செலுத்த நேரிடும் என்பது அவருடைய முதன்மைவாதம் ஆகும். அரசியல் அதிகாரம் பிற இனக்குழுக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு (Power Sharing) இந்த அமைப்பு இடமளிக்காது எனக் கடுமையாக வாதிட்டார்.

பெரும்பான்மை இனக்குழுவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான தீர்வு ‘சமநிலைப் பிரதிநிதித்துவம்’ என்பது பொன்னம்பலத்தின் நம்பிக்கை. இதன்படி, பெரும்பான்மை இனக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 50% ஆகவும், சிறுபான்மை இனக்குழுக்களின் உறுப்பினர்கள் 50% ஆகவும் இருப்பர். இந்த அமைப்பில், பெரும்பான்மை இனக்குழுவின் வாக்குகளுக்குக் கொடுக்கப்படும் பெறுமானம் (Value) குறைந்ததாகவும், சிறுபான்மை இனக்குழுக்களுடைய வாக்குகளின் பெறுமானம் கூடியதாகவும் மாறிவிடும்.

பின்புலம்

பொன்னம்பலமும் அவரது ஆதரவாளர்களும் வைத்த முன்மொழிவுக்கு (Proposal) ஏன் எதிர்ப்பு இருந்தது என்பதை விளங்கிக்கொள்ளவும், இம்முன்மொழிவுக்கு ஏதுவாக இருந்தவற்றைக் கண்டுகொள்ளவும் பின்புலத்தில் உள்ளவற்றை அறிவது பயனுடைத்தாகும்.

முதலில், வாக்கு (Vote) என்பதன் பெறுமானத்தைக் குறைப்பது எவ்வாறு வரலாற்றின் போக்குக்கு மாறாகச் சென்றது என்பதைப் பார்க்கலாம். வாக்குமூலமாகச் சட்டவாக்க மன்றங்களை அமைத்திருந்த ஐரோப்பிய நாடுகளில்கூட 19ஆம் நூற்றாண்டில் வயதுவந்தோர் அனைவர்க்கும் வாக்குக் கொடுக்கப்படவில்லை. சொத்தின் அடைப்படையில் ஆண்களுக்கு இந்த உரிமை இருந்தது. ‘பாராளுமன்றங்களின் தாய்’ (Mother of Parliaments) எனப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் மன்றத்துக்குத் தேர்வான உறுப்பினருக்கான தேர்தலில்கூட 1918வரை வயதுவந்த எல்லா ஆண்களும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. அது 1918இலேதான் கிடைத்தது. பெண்களுக்கு இந்த உரிமை இங்கிலாந்தில் பல எதிர்ப்பாட்டங்கள் (Protests) நடத்தப்பட்ட பின் 1928இல் கிடைத்தது. 

இங்கிலாந்தில் மாடமாளிகைகளில் வாழ்ந்த சீமாட்டியரும் லண்டன் சேரிகளில் வாழ்ந்த ஏழைப் பெண்களும் சமமான பெறுமானம் உள்ள வாக்குரிமையைப் பெற்று மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கையில் தேயிலைத் துளிர் பறித்த ஏழைப் பெண்களும் மத்திய வகுப்பு மகளிரும் சமமான பெறுமானம் உள்ள வாக்கினைப் பெற்றனர். உரிமைகள் முக்கியத்துவம் பெறும் நவீன உலகில், எல்லோருக்கும் சமமாகக் கிடைத்த, மிகுந்த பெறுமானம் உள்ள, முதலாவது மனித உரிமை இதுவாகும். இப்பின்புலத்தில், ஒருவருடைய வாக்கின் பெறுமதியைக் குறைக்க முற்படுவது இன்று ஒரு மனித உரிமை மீறலாகக் கருதப்படும்.

இரண்டாவதாக, பொன்னம்பலமும் அவருடைய கட்சியும் காட்டிய பிரச்சினையை ஒரு சிறுபான்மையினர் பிரச்சினையாக அல்லாது ஆங்கிலக் கல்விகற்ற யழ்ப்பாணத்து மத்திய வகுப்பினர் பிரச்சினையாகவே கருத வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினர் பரவலாகப் பொன்னம்பலத்துக்கு ஆதரவு அளித்தனர். அவர் கேட்பது நியாயமானது எனக் கருத்துத் தெரிவித்தனர்.

நாட்டில் எழுந்த இப்பிரச்சினையைப் பிறர் எவ்வாறு பார்த்தனர்? பிறர் பார்வையில் இப்பிரச்சினையில் அடங்கியுள்ள பொருளியல் காரணி முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். இது பற்றி நூல் ஒன்றில் 1940களில் ஒருவர் எழுதியது கவனிக்கத் தக்கது: 

“The real causes were however deeper and arose principally from the struggle for openings in the Government Service and for a proportionate share of whatever political power passed into the hands of the people of Ceylon. Coming from the Dry Zone where the opportunities in life were limited and faced with the closure of openings for employment outside Ceylon, as in Malaya and Burma, the Tamils had now to fall back mainly on the Government Service in Ceylon, and the struggle for openings in it formed the core of the communal conflict.” (Introduction to J.R. Weinman, Our Legislature, xvi – xvii).

பொருளியல் காரணியின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ள மத்திய வகுப்பைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தவர் 1940களில் நாட்டில் அடைந்திருந்த செல்வாக்கு மிகுந்த நிலையை அறிந்திருப்பது அவசியமாகும். இந்த ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினரைச் சுருக்கமாக யாழ்ப்பாணத்தவர் எனக் குறிப்பிட விரும்புகிறேன். இவர்களுள் யாழ்ப்பாணக் குடும்பங்களைச் சேர்ந்தோராய் கொழும்பிலும் இலங்கையின் பிற இடங்களிலும் வாழ்ந்தோரும் அடங்குவர்.

பிரித்தானியர் இலங்கையின் நிர்வாகத்தில் வைத்திருந்த இறுக்கமான பிடி 1940 அளவில் பெருமளவு தளர்வதைக் காணலாம். ஆட்சிப் பொறுப்பு இலங்கையர் கைக்கு மாறத் தொடங்க பிரித்தானிய நிர்வாகிகள் ஒவ்வொருவராகத் தங்கள் உயர் பதவிகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். அந்நிலையில் அவர்கள் பதவிகளை இலங்கையர் பெறத் தொடங்கினர். அரசாங்க நிர்வாக சேவையில் உயரச் சென்றிருந்த இலங்கையர் முன்னர் பெறமுடியாதிருந்த உயர் பதவிகளைப் பெற்றனர். 

இந்நிலையில், யாழ்ப்பாணத்தவர் 1940களில் பெற்ற உயர் பதவிகளை இங்கு முழுமையாகக் குறிப்பிட முடியாது. சிலவற்றை இங்கு கொடுப்பது அக்கால நிலையை உணர்வதற்கு உதவும்:

  1. கந்தையா வைத்தியநாதன் (பின்னர் Sir) – Cabinet Secretary, later Permanent Secretary to the Prime Minister.
  2. செல்லையா நாகலிங்கம் – Attorney-General (1946), later Acting Chief Justice.
  3. கந்தையா கனகரத்தினம் – Acting Auditor-General.
  4. மார்க்கண்டு கனகசபை – First Ceylonese General Manager Railways.
  5. பாக்கியசோதி சரவணமுத்து – Tea and Rubber Commissioner.
  6. கோவிந்தபிள்ளை ஆழ்வாப்பிள்ளை – Food Commissioner.
  7. க.ச. அருள்நந்தி – Deputy Director of Education (1946).
  8. வேலுப்பிள்ளை குமாரசுவாமி – Government Agent, Eastern Province (1945), first Ceylonese Government Agent, Western Province.
  9. செல்லப்பா குமாரசுவாமி – Government Agent, Northern Province.
  10. மயில்வாகனம் ஶ்ரீகாந்தா – Asst. Govt. Agent, Puttalam (later G.A., Northern Province).

(இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள்.)

உயர் கல்வித் துறையிலும் இதை ஒத்தநிலை காணப்பட்டது. இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகம் 1942இல் நிறுவப்பட்ட போது யாழ்ப்பாணத்தவர் பலர் பேராசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் நியமனம் பெற்றனர். அவர்களுள் சிலரை இங்கு குறிப்பிடலாம்:

  1. A.W. மயில்வாகனம் – Dean of the Faculty of Science.
  2. A. கந்தையா – Professor of Chemistry.
  3. செ. சுந்தரலிங்கம் – Professor of Mathematics (1942).
  4. C.J. எலியேசர் – Professor of Mathematics (from 1949).
  5. மில்ரோய் போல் (Milroy Paul) – Professor of Surgery.
  6. R.H. போல் (R.H. Paul) – Professor of Electrical Engineering (1945).
  7. A. சின்னத்தம்பி – Professor of Obstetrics and Gynaecology.

கணிதத் துறையில் 1940களில் ஒரு சிங்கள விரிவுரையாளர்கூட இருக்கவில்லை. எலியேசர் பேராசிரியராகப் பதவி ஏற்கும் வரை (1949 வரை) F.H.V. குலசேகரம் துறையின் பொறுப்பை, எஸ். நடராசருடைய உதவியுடன், ஏற்றிருந்தார்.

நிர்வாகத்தின் இடைநிலைப் பதவிகளில் யாழ்ப்பாணத்தவர் பரவலாகக் காணப்பட்டனர். இந்த நிலை 1930களில் மாறத் தொடங்கியபோது சில தமிழ்த் தலைவர்கள் கவலை தெரிவித்தனர் போலும். இதையிட்டு, மிகவும் பிரபலம் பெற்ற யாழ்ப்பாணத்து அரசியல் தலைவர்களுள் ஒருவராகிய H.A.P. சந்திரசேகரா 1933இல் கூறியது இவ்வாறு பதியப்பட்டுள்ளது:

(Mr. Sandrasagara) “said that he could not understand what grievances the Tamils nursed. He went to the Public Works Department and found three-fourths of the staff were Tamils. In the Registrar-General’s Office there were nearly 90% Tamils. In the Irrigation Department there were over 75% Tamils. In the higher grades of accountants almost all were Tamils.” (Documents of the Ceylon National Congress, III: 2043 – M.W. Roberts).

இந்த விவரங்களுடன் மக்கள்தொகை பற்றிய சில விவரங்களையும் கருத்தில் கொள்வது பயனுள்ளதாகும்.

இக்கட்டுரைக்குப் பொருத்தமான மக்கள் கணக்கெடுப்புகள் 1931இலும் 1946இலும் எடுக்கப்பட்டவையாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் மக்கள்தொகை 1931இல் முழுநாட்டுத் தொகையில் 6.7% ஆகவும், 1946இல் 6.4% ஆகவும் இருந்தது. பெரும்பாலும் இச்சிறிய மக்கள் சமூகத்தில் இருந்து வந்த மத்திய வகுப்பினரே தங்கள் ஆங்கிலக் கல்வியின் பயனாக நாட்டின் அரசாங்க சேவையில் கணிசமான (இது 19.4% எனச் சில ஆய்வாளர் கணித்துள்ளனர்) பதவிகளை 1940களில் பெற்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்தவருக்கு அரசாங்க சேவையில் இருந்த வேலை வாய்ப்பு 1931இல் இருந்து பெரிதும் குன்றத் தொடங்கியது. அரசாங்க அமைச்சர்கள் மறைமுகமாகக் கடைப்பிடித்த பாகுபாடு (Discrimination) காட்டும் கொள்கைகளும் எடுத்த நடவடிக்கைகளும் இதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டைத் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்தனர். அரசாங்க சேவையில் தமிழர் பெற்றிருந்த பங்கு 1930களில் இருந்து குறையத் தொடங்கி, 1950களின் பின் பெருமளவு குன்றியது என ஆய்வாளர் காட்டியுள்ளனர். 

மலாயா வேலைவாய்ப்பின் மறைவு

மலாயாவிலும் இதே காலத்தில் மலாய்த் தலைவர்களிடையே இனக்குழுத் தேசியவாதம் (Ethno-nationalism) எழுச்சி பெற்றதன் விளைவாகவும் உலகப் பெருமந்தத்தின் (Great Depression) தாக்கத்தாலும் வெளிப்படையாக இயற்றப்பட்ட சட்டங்கள் யாழ்ப்பாணத்தவர் அனுபவித்த வேலைவாய்ப்பை முற்றுவித்தன.

மலாயாவுக்கு யாழ்ப்பாணத்தவர் தொழிலுக்காகப் பெருந்தொகையில் சென்றது பற்றி முன்னர் கூறியுள்ளேன். பிரித்தானியர் மலாயாவின் வளங்களைச் சுரண்டத் தொடங்கிய போது, அங்கு அமைத்த இறப்பர் தோட்டங்களில் வேலை செய்யத் தென் இந்தியர்களும், ‘ரின்’ சுரங்கங்களில் வேலை செய்யச் சீனர்களும், இடைநிலை நிர்வாகப் பணிகளைச் செய்வதற்கு ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாணத்தவரும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்ததன் விளைவாக, அங்கு வாழ்ந்த மலாய் மக்களின் தொகையை எட்டும் அளவுக்கு வெளிநாட்டார் தொகை உயர்வடைந்திருந்தது. 

பிரித்தானியர் 1931இல் நடத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மலாயாவின் சில இடங்களில் மலாயருக்குச் சமமாகவும் சில இடங்களில் மலாயரை விடக் கூடுதலாகவும் வெளிநாட்டவர் இருந்தமை அறிவிக்கப்பட்டது. இதே காலத்தில் உலகப் பெருமந்தத்தின் தாக்கமும் அங்கு பொருளியல் பிரச்சினைகளை உண்டு பண்ணியது. இவற்றின் விளைவாக மலாயர் தேசியவாதம் தலைதூக்கியது. மலாயாவில் வாழ்ந்த மக்கள் ‘Bhumiputera’ (பூமிபுத்திரர் – நம்நாட்டு மக்கள்) எனவும், ‘Pendatang’ (புலம்பெயர்ந்து வந்தோர்) எனவும் பிரிக்கப்பட்டனர். ‘Kesatuan Melayu Muda’ (மலாய் இளைஞர் ஒன்றியம்) கொடுத்த அழுத்தங்களின் விளைவாகத் தென் ஆசியாவில் இருந்து தொழிலுக்காக மலாயாவுக்கு வருவோர் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டதுடன், பெருந்தொகையான தென்னிந்தியத் தோட்டத் தொழிலாளர் கட்டாயத் திருப்பியனுப்புதலுக்கு ஆளாகினர்.

இப்படியான நிலை உருவாகியதன் விளைவாக யாழ்ப்பாணத்து இளைஞர்கள் வேலை தேடி மலாயாவுக்குச் செல்வது தடைப்பட்டது. அங்கு இருந்த யாழ்ப்பாணத்தவர் உறவினருக்கும் பிறருக்கும் மலாயாவுக்கு வரவேண்டாம் என்று எழுதினர். கோலாலம்பூரில் இருந்த ‘Malayan Urumparay Union’ என்ற யாழ்ப்பாணத்தவர் கழகம் ‘Hindu Organ’ செய்தித்தாளுக்கு அனுப்பிய ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியது: 

“A note of warning may be sounded to those who intend seeking employment in the Government of this country. The Government service of British Malaya is definitely closed to all Asiatics born and educated outside the country. … Unemployment amongst the Jaffnese both in Ceylon and Malaya is bound to increase to an alarming extent as years roll on…” (HO 28/01/1932).

தமிழ்த் தலைவர்கள் முன் நின்ற சவால்

இப்படியான பின்புலத்தில் யாழ்ப்பாணத்தவர் பெரிதும் பாதிக்கப்பட்டனர், அவர்கள் எதிர்காலம் இருள்மயமாகியது. கொழும்பு தவிர்ந்த வேறெந்த மாவட்டத்து மக்களையும் விட யாழ்ப்பாணத்தவர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது ஏன்?

இதற்கான விடையைக் காண யாழ்ப்பாணத்தில் 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு முக்கிய வளர்ச்சியை நோக்க வேண்டும். அது ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சி. அதற்கு வழிகோலியவர்கள் கிறிஸ்தவ மிஷனரிமார், குறிப்பாக அமெரிக்கன் மிஷனரிமார்.

இது ஒரு நீண்ட கதை. இதில் ஒரு கூறு மட்டும் இங்கு கவனத்துக்கு உரியது. இதை எடுத்துக் கூறுமுன் அமெரிக்கன் மிஷனரிமாருக்கும் பிற மிஷனரிமாருக்கும் இடையில் இருந்த ஒரு முக்கிய வேறுபாட்டை எடுத்துச் சொல்வது அவசியம். இது யாழ்ப்பாணத்துக்கும் பிற இடங்களுக்கும் இடையில் கல்வி வளர்ச்சியைப் பொறுத்து ஏற்படுத்திய வேறுபாட்டை விளங்கிக்கொள்ள உதவும். இந்த வேறுபாடு 1940களில் எழுந்த பிரச்சினையுடன் தொடர்புடையது.

காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளுக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற மிஷனரிமார் பெரும்பாலும் பேரரசுவாதத்தின் கருவியாக இயங்கினர் என்று கொள்ள இடமுண்டு. இலங்கையில் இவர்கள் ஆட்சியாளருக்குத் தேவைப்பட்ட ஆங்கில அறிவுள்ள சில சுதேச நிர்வாகிகளைப் பயிற்றுவிப்பதையே தொடக்கத்தில் தம் நோக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால், இவர்கள் முதலில் கொழும்பிலும் பின்னர் காலி, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய முக்கிய வெளியிடப் பட்டினங்களிலும் ஒவ்வொரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடக்கினர். பரவலாக நாட்டு இளைஞர்களுக்குக் கல்வி புகட்டிச் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இருக்கவில்லை. கொழும்பில் படித்த ஒரு சிலரைத் தெரிவு செய்து இங்கிலாந்துக்கு அனுப்பி, அங்கு அவர்கள் பல்கலைக்கழகக் கல்வி பெற்று, திரும்பிவந்து ஆளுநருக்கு நிர்வாகத்தில் உதவுவோராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் சேவை செய்ய ஒழுங்குகள் இருந்தன.

யாழ்ப்பாணத்துக்குச் சென்ற அமெரிக்க மிஷனரிமார் ஐரோப்பியப் பேரரசுவாதத்தின் ஆதரவாளர்களாகச் செல்லவில்லை. அவர்களுடைய நாடு இலங்கையில் ஆட்சி செலுத்தும் நாடாகவும் இருக்கவில்லை. கிறிஸ்தவர் அல்லாத சுதேசிகளுக்கு (Natives) கல்விமூலம் அறிவை வளர்த்து, அவர்களைக் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை வைக்கச் செய்வதே அவர்களின் நோக்கம். சிறிது முன்னேற்றம் அடைந்த பட்டினத்தில் கவனம் செலுத்தாது, ஊர்ப்புறங்களுக்குச் சென்று தமிழ்ப் பாடசாலைகளை நிறுவித் தம் செயல்பாடுகளைத் தொடங்கினர்.

சில இடங்களில் ஆங்கிலப் பாடசாலைகளையும் அமெரிக்க மிஷனரிமார் நடத்தினர். சில ஆண்டுகளின் பின், தங்கள் பாடசாலைகளில் படித்து முடித்த பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்பதைச் சிந்தித்து, அவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது தங்கள் கடமை என்ற முடிவுக்கு வந்து, அவர்களுக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க ஒரு விரிவான திட்டத்தையும் வகுத்தனர். இதற்கு அமெரிக்க மிஷன் அதிகாரிகள் அனுமதி வழங்கிய போதும், கொழும்பில் இருந்த பிரித்தானிய ஆளுநர் (அமெரிக்கருக்கு எதிராகப் முன்னர் போர் புரிந்த Edward Barnes) மறுத்துவிட்டார்.

அமெரிக்கர் தங்கள் திட்டத்தைக் கைவிட விரும்பவில்லை. ‘பல்கலைக்கழகம்’ என்று அழைக்காது தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். வட்டுக்கோட்டையில் உயர்கல்வி நிறுவனம் ஒன்று உருவாகியது. அங்கு மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் போல, லத்தீன், கிரேக்கம், அறிவியல் (சிறப்பாகக் கணிதம், வானியல்) ஆகியவற்றுடன் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. அனுமதி மறுத்த ஆளுநர் இலங்கையைவிட்டுச் சென்றபின், இந்த நிறுவனம் ‘Batticotta Seminary’ எனப் பிரபலம் பெற்றது.

யாழ்ப்பாண மக்களுக்கு மேலைத்தேச வைத்திய முறைப்படி நோய் தீர்க்கும் வசதிகளையும் தாம் செய்ய வேண்டும் என விரும்பிய அமெரிக்க மிஷனரிமார், மருத்துவப் பயிற்சி பெற்ற மிஷனரிமாரையும் அனுப்பிவைக்கும்படி தங்கள் மேலதிகாரிகளுக்கு விண்ணப்பித்தனர். அத்தகைய மிஷனரிமாரும் வந்தனர். மேலைத்தேசத்தில் இருந்து முதல் தடவையாக ஆசியாவுக்கு அனுப்பப்பட்ட மிஷனரியார் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அங்கு இளைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றனர், ஒரு மேலைத்தேச வைத்தியசாலை தொடக்கப்பட்டது. பயிற்சிபெற்ற இளைஞர்கள் வைத்தியர்களாகக் கடமையாற்றினர். ஒருவர் சென்னைக்குச் சென்று வைத்தியராகப் பணிபுரிந்தார் (யாழ்ப்பாணத்தில் இருந்து தொழில்புரிய வெளிநாடு சென்ற முதலாவது ‘டாக்டர்’!).

இவை அனைத்தும் அமெரிக்கர் மானிப்பாயில் மருத்துவக் கல்வியைத் தொடங்குமுன் நிகழ்ந்தவை. பின்னர் சாமுவேல் கிறீன் வைத்தியர் தலைமையில் மானிப்பாயில் நடத்தப்பட்ட மருத்துவ நிறுவனத்தில் பயிற்சி பெற்ற வைத்தியர்கள் யாழ்ப்பாணத்திலும் வெளியேயும் தொழில் பெற்றனர்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிமார் நவீனமுறைக் கல்வி வளர்ச்சிக்குச் செய்த பங்களிப்புப் போன்று இலங்கையில் வேறெங்கும் காணமுடியாது. இந்த வளர்ச்சியின் பலனைச் சுருங்கக் கூறுவதாயின், அது ஆங்கிலக் கல்வி மோகம், உயர்கல்வி விருப்பு, மருத்துவத் தொழிலுக்கான ஆர்வம் ஆகியவற்றை யாழ்ப்பாணத்தவர்க்கு ஊட்டி அவர்கள் சமூகத்தை மாற்றியமை எனலாம்.

இதன் விளைவே 1940களில் யாழ்ப்பாணத்தவர் தம் சமூக எண்ணிக்கைக்குத் தகுந்ததாக அல்லாது கூடுதலான அரசாங்க சேவைப் பதவிகளையும் வைத்தியர்களையும் பெற்றிருந்தமையாகும். இந்த நிலை மாறி, தொடர்ந்தும் இவ்வாறான பதவிகளைப் பெறமுடியாத சூழ்நிலை உருவாகியமை யாழ்ப்பாண மத்திய வகுப்புத் தலைவர்களுக்கு ஒரு சவாலாகியது. தமக்கும் தமக்குப்பின் வருவோர்க்கும் கிடைக்க வேண்டியவை இல்லாமல்போகும் என்ற உணர்வு (Relative Deprivation) புதிய அரசியல் மாற்றங்களுக்கு எதிராகப் போராட வைத்தது. அவர்கள் சமநிலைப் பிரதிநிதித்துவம் என்ற தீர்வை முன்வைத்தனர்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்