அறிமுகம்
பஞ்சமும் பட்டினியும் போரும் ஒரு சமூகத்தைப் புரட்டிப் போடுகின்ற வல்லமைமிக்கதாகும். இதற்கு இலங்கையில் உள்ள பெருந்தோட்ட சமூகமும் விதிவிலக்கானது அல்ல. 1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் அப்போது ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கமானது உணவுப் பொருட்களின் இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டில் உணவு உற்பத்தியை மேற்கொண்டுவரும் கிராமியத் துறையானது நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது காணப்பட்ட நிலையில், உணவுப் பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகளானது நேரடியாகப் பெருந்தோட்ட சமூகத்தைப் பாதித்தன. இவர்களில் பலர் பட்டினியால் மாண்டனர். சுமார் ஐந்து ஆண்டுகள்வரை நீடித்திருந்த உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டின் காரணமாக, பஞ்சமும் பட்டினியும் இம்மக்களின் சாதாரண வாழ்க்கையைச் சவால்களுக்குள்ளாக்கின. இந்நிலையில், ஏன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தது? இதனால் இலங்கையில் உள்ள பெருந்தோட்ட மக்கள் ஏன் தனித்துவமான துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்? அதனால் ஏற்பட்ட சமூக விளைவுகள் என்ன? அதிலிருந்து எவ்வாறு மீள் எழுச்சி பெற்றனர்? என்பன பற்றி சுருக்கமாக அணுகுவது இக்கட்டுரையின் பிரதான உள்ளடக்கமாகும்.
இக்கட்டுரைக்கான ஆதாரங்களாக 1974–76 காலப்பகுதியில் வெளிவந்த மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கைகளே பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைவிட, அமர்த்தியா சென் எழுதிய நூலும் உலகத் தொழிலாளர் அமைப்பின் அறிக்கைகளும் உசாத்துணையாகக் கொள்ளப்பட்டன. மேலும், இக்காலத்தில் ஏற்பட்ட துயரங்கள் பற்றிய பதிவுகள் என்பன எளிதாகக் கிடைக்கக்கூடியதாக இல்லை. இருப்பினும், இக்கட்டுரையின் எழுத்தாளர் தாம் பார்த்து அனுபவித்த விடயங்களுடன் சிலரிடம் மேற்கொண்ட கலந்துரையாடல்களையும் பின்னணியாகக் கொண்டே இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

பஞ்சமும் பட்டினியும்
பஞ்சம் (Famines) என்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் அல்லது நாட்டில் நீண்டகாலமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, பெருமளவிலான மக்கள் பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மரணங்களை எதிர்கொள்ளும் ஒரு கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஆகும். பஞ்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்: 1) வறட்சி, வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள், 2) போர்கள் மற்றும் உள்நாட்டு மோதல்கள், 3) பொருளாதார நெருக்கடிகள் மற்றும் விலைவாசி உயர்வு, 4) விவசாய உற்பத்திக் குறைவு, 5) அரசாங்கக் கொள்கைகளின் தோல்வி, 6) உணவுப் பொருட்களின் சமமற்ற விநியோகம். உலக வரலாற்றில் அயர்லாந்துப் பஞ்சத்தின் (Irish Famine) போது உருளைக்கிழங்குப் பயிர் நோயால் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவின் கிழக்கே வங்காள (Bengal) மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை மற்றும் நிர்வாகத் தவறுகளால் சுமார் 3 மில்லியன் மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர். இது உலக வரலாற்றில் மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனப் பெரும்பஞ்சம் (Chinese Great Famine) உலக வரலாற்றின் மிகப்பெரிய பஞ்சங்களில் ஒன்றாகும். சீனாவில் சுமார் 25 முதல் 50 மில்லியன் பேர் 1959–62 வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் இறந்துள்ளனர். மேலும், வறட்சி மற்றும் உள்நாட்டு மோதல்களால் ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் (Ethiopia), 1983–85 காலப்பகுதியில் சுமார் 3 மில்லியன் பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் ஒரு புறம் வறட்சியும் மறுபுறம் இடம்பெற்றுவந்த போரும் காரணமாக, 2020 ஆம் ஆண்டிலும் உணவுப் பஞ்சம் காரணமாக இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. இதைவிட, மேற்கூறிய ஓரிரண்டு காரணங்களால் உலக நாடுகள் சிலவற்றில் ஏற்படும் உணவுப் பஞ்சத்தினால் தொடர்ந்து இறப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இலங்கையும் இந்த அனுபவங்களில் இருந்து விலகியிருக்கவில்லை.
பஞ்சங்கள் சமூகத்தில் கடுமையான மற்றும் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. உடனடி விளைவுகளாகப் பரவலான பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நோய்ப் பெருக்கமும் குறைந்துவரும் உடல்-மன நலனும் பொதுச் சுகாதாரத்தைச் சீர்குலைக்கின்றன. பொருளாதார ரீதியாக, பஞ்சங்கள் வாழ்வாதாரங்களை அழிக்கின்றன, விவசாய உற்பத்தியைக் குறைக்கின்றன, வேலை இல்லாமையை அதிகரிக்கின்றன மற்றும் வறுமையை மேலும் தீவிரப்படுத்துகின்றன. சமூக ரீதியாக, மக்கள் இடப்பெயர்வு, குடும்பப் பிரிவு, குழந்தைத் தொழில், குற்றச்செயல்கள் மற்றும் சமூகக் கலக்கம் போன்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றன. பல சந்தர்ப்பங்களில், உணவு மற்றும் வளங்களை இன்னும் அணுகக்கூடிய செல்வந்தர்களைவிட ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதால், பஞ்சம் சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கிறது. அரசியல் ரீதியாக, பஞ்சங்கள் பொதுமக்களின் அதிருப்தி, போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையை உருவாக்கலாம். வரலாற்றில் சில பஞ்சங்கள் முக்கியமான அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கும் காரணமாகியுள்ளன. பஞ்சத்தின் உளவியல் விளைவுகள் தலைமுறைகள் கடந்தும் நீடித்து, சமூகங்களில் மன உளைச்சல் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தக்கூடும்.

இவ்வாறு பஞ்சங்கள் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான விளக்கத்தை அமர்த்தியா சென் தான் எழுதிய ‘Poverty and Famines’ (1981) என்ற நூலில் வெளிப்படுத்தியுள்ளார். இவரது ஆய்வானது அபிவிருத்திப் பொருளாதாரமும் பஞ்ச ஆய்வுகளும் தொடர்பான மிகுந்த செல்வாக்கு வாய்ந்த படைப்புகளில் ஒன்றாகும். இந்த நூல், பஞ்சங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை ஆராய்கிறது மற்றும் பஞ்சங்கள் பெரும்பாலும் உணவுப் பற்றாக்குறையால் மட்டுமே ஏற்படுகின்றன என்ற பாரம்பரிய நம்பிக்கையைச் சவாலுக்கு உட்படுத்துகிறது. பஞ்சம் என்பது வெறும் உணவுக் கிடைப்பின் குறைவால் மட்டும் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக, மக்கள் தங்களுடைய ‘உரிமைத்தகுதிகளை’ (Entitlements) இழப்பதாலேயே பட்டினியால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, தமது தொழில், உற்பத்தி அல்லது சமூக ஆதரவு வழியாக உணவைப் பெறும் திறனை அவர்கள் இழக்கின்றனர். இந்தக் கருத்து பின்னர் ‘உரிமைத்தகுதிக் கோட்பாடு’ (Entitlement Theory) என்றவாறு அறியப்பட்டது. வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வறுமையை வரையறுப்பதை அமர்த்தியா சென் விமர்சிக்கிறார். வறுமை என்பது சமத்துவமின்மை, வேலை இல்லாமை, உரிமைகள் இல்லாமை மற்றும் வளங்களின் சமமற்ற பகிர்வு ஆகியவற்றுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என அவர் விளக்குகிறார்.
இந்த நூலில் எடுத்துக்கூறப்படும் சுருக்கமான விளக்கம் என்னவெனில்: மக்கள் பஞ்சத்தில் இறப்பது உணவு குறைவாக இருப்பதனால் மட்டுமல்ல, உணவை அணுகுவதற்கான சமூகத் திறனை இழப்பதாலுமாகும். இந்தச் சிந்தனை, ‘உணவுப் பற்றாக்குறை’ என்ற பார்வையிலிருந்து ‘உரிமைகள், பகிர்வு மற்றும் அணுகல்’ என்பவற்றைப் பசி மற்றும் பஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய அம்சங்களாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டியதாகக் குறிப்பிடலாம். மொத்தத்தில், பஞ்சம் என்பது சமூகத்தின் முழு அமைப்பையும் பாதிக்கும் ஒரு பேரழிவாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) உலக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக எழுதிய அறிக்கையில், நான்கு முக்கியமான பஞ்சங்கள் குறித்த நிகழ்வு ஆய்வுகள் (Case Studies) வழங்கப்பட்டுள்ளன: மகா வங்காளப் பஞ்சம் (1943), எத்தியோப்பியப் பஞ்சங்கள் (1972–75), ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியப் பஞ்சங்கள் (செனெகல், மாலி, அப்பர் வோல்டா, நைஜர் மற்றும் சாட் ஆகிய நாடுகளில் 1970களின் ஆரம்பகாலத்தில் ஏற்பட்டவை) மற்றும் பங்களாதேஷ் பஞ்சம் (1974). இந்த அறிக்கை, பஞ்சங்கள் உணவுக் குறைவால் மட்டுமல்லாது, உணவு பகிர்ந்தளிக்கப்படும் முறைகளில் உள்ள சமத்துவமின்மையாலும் ஏற்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கிடையில் உணவு எவ்வாறு பகிரப்படுகின்றது என்பதை நிர்ணயிக்கும் காரணிகளை ஆய்வு செய்கிறது.
‘சென்’ வாதிப்பதாவது, உணவுத் தட்டுப்பாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு செய்யப்பட்ட பாரம்பரியப் பஞ்ச ஆய்வுகள் தவறானவை; எனவே, அவை கொள்கை வடிவமைப்பையும் வழிதவறச் செய்கின்றன. இதற்குப் பதிலாக, உரிமைத்தகுதி (Entitlements) என்ற மாற்று அணுகுமுறையை அவர் முன்வைக்கிறார். இந்த அணுகுமுறை, சொத்துரிமை மற்றும் பரிமாற்ற முறைகளை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் உணவை வாங்குவதற்கோ அல்லது வேறு வழிகளில் அதை அணுகுவதற்கோ எவ்வாறு திறன் பெறுகின்றனர் என்பதையே இது கவனத்தில் கொள்கிறது. இதன்படி, வேலையின்மை, ஊதியக் குறைவு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகளே சில மக்களுக்குப் போதுமான உணவை அணுக முடியாத நிலைமையை உருவாக்கின என சென் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், வறுமையின் கருத்துகளையும் அதன் அளவீடுகளையும் சென் விமர்சன ரீதியாக ஆராய்கிறார். ஏழை மக்களை ஒரே குழுவாகக் கருத முடியாது; வறுமையைப் புரிந்துகொள்ள நுட்பமான மற்றும் ஆழமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது. வளங்களின் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள், வறுமையையும் பஞ்சத்தின் காரணிகளையும் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானவை என சென் வலியுறுத்துகிறார். பொதுவாக, சமூகப் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களே நெருக்கடிக் காலங்களில் பசியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்த நூலின் முக்கிய அவதானிப்புகள் பின்வருமாறு:
• மிகக் கடுமையான சில பஞ்சங்கள், நாட்டின் மொத்த உணவுத் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லாதபோதும் ஏற்பட்டுள்ளன. 1943ஆம் ஆண்டின் வங்காளப் பஞ்சத்தில், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தபோதிலும், உணவுத் தயாரிப்பு 1941ஆம் ஆண்டைவிடக் குறைவாக இருக்கவில்லை.
• சில பஞ்சங்களில் மொத்த உணவுத் தட்டுப்பாடு இருந்தாலும், எந்தக் குழுக்கள் பட்டினியால் பாதிக்கப்படுகின்றன, எந்தக் குழுக்கள் உணவை அணுகுகின்றன என்பதை வேறு காரணிகளே தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறிய நிலத்தைக் கொண்ட விவசாயிகள் போன்ற பல்வேறு தொழில் குழுக்கள் உணவை வெவ்வேறு முறைகளில் பெறுகின்றன; ஆகவே, பஞ்சம் அவர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.
இலங்கையில் பஞ்சம் 1973-76
இலங்கையில் 1973–76 காலப்பகுதியில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்பட்ட பஞ்சம், அதன் காரணமாக நெருக்கடிக்குள்ளான பெருந்தோட்ட மக்களின் இன்னல்கள், அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டெழுந்தனர் என்பதை இனிவரும் பகுதி அவதானிக்கிறது. இக்காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் உணவின் முழுமையான பற்றாக்குறையால் மாத்திரம் ஏற்பட்டதல்ல. உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்ளூர் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி, அரசியல் – பொருளாதாரச் சூழல், காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாகவும் அது ஏற்பட்டது. இதனைப் பின்வருமாறு காணலாம்.
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி: 1973ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடி உலகளவில் பெற்றோலியத்தின் விலையைப் பெருமளவில் உயர்த்தியது. இலங்கை இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளில் அதிகளவு சார்ந்திருந்ததால், போக்குவரத்து மற்றும் உற்பத்திச் செலவுகள் வேகமாக அதிகரித்தன. இதன் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதற்கான செலவுகளும் உயர்ந்தன.
அத்துடன், உணவுத் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்துவந்த இலங்கை, 1970களின் ஆரம்பத்தில் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகள் அதிகரித்ததால், குறைந்தளவிலிருந்த வெளிநாட்டு நாணய இருப்பைக் கொண்டு அவற்றை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டது. மறுபுறம், அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கம் நாட்டில் கைத்தொழில் மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதற்காகப் பெருமளவிலான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதுடன், அவற்றுக்கான கொடுப்பனவுகளையும் வருடாந்தம் மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.
இவ்வாறு, ஒருபுறம் எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது சவாலாக இருந்ததுடன், மறுபுறம் கைத்தொழில் துறைக்காக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இந்நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி, கைத்தொழில் அபிவிருத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான உபாயம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டது.
குறைந்த விவசாய உற்பத்தி: இறக்குமதிகளுக்கான கட்டுப்பாடுகள் காரணமாக உரங்கள் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான இரசாயனப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விவசாய உற்பத்திக்குத் தேவையான உள்ளீடுகளின் கிடைப்பில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதேவேளை, இக்காலப்பகுதியில் நிலவிய தொடர்ச்சியான வறட்சி, விவசாயத்திற்குப் போதுமான அளவில் விரிவுபடுத்தப்படாத நீர்ப்பாசன வசதிகள் போன்ற காரணிகளால் கிராமிய விவசாய உற்பத்தியை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்க முடியவில்லை. சாதகமற்ற காலநிலை காரணமாகப் பல அறுவடைகள் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நெல் உற்பத்தியையும் அதிகரிக்க முடியவில்லை.
அதுமட்டுமன்றி, அடிப்படையான உணவுப் பொருளான அரிசியையே போதுமான அளவில் உற்பத்தி செய்ய முடியாத நிலையில், உப உணவுப் பொருட்களின் உற்பத்தியும் நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்கவில்லை. இக்காலப்பகுதியில் இலங்கையின் தேசிய உற்பத்தி 3.0 வீத வளர்ச்சியை மட்டுமே கொண்டிருந்தது. இது 1968 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் முறையே 8.4 வீதமாகவும் 4.5 வீதமாகவும் காணப்பட்டது. விவசாய உற்பத்தி பலமடங்கு வீழ்ச்சியடைந்ததையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உதாரணமாக, நெல் அறுவடை செய்யும் கிராமங்களில் 1973ஆம் ஆண்டில் 73 மில்லியன் புசல் அரிசி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 1975ஆம் ஆண்டில் அதன் அளவு 55 மில்லியன் புசலாகக் குறைந்து, சுமார் 28.6 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. தெங்கு உற்பத்தியும் 1973–76 காலப்பகுதியில் 12 வீதம் வீழ்ச்சியடைந்தது (Ceylon Labour Gazette Annual Report: 1975–76). இவ்வாறான நிலையில்தான் நாட்டின் அத்தியாவசிய உணவுப் பொருளான அரிசிக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை: தேயிலை மற்றும் ரப்பர் போன்ற ஏற்றுமதிகளிலிருந்து இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டு வருமானம் குறைவாக இருந்தது. குறிப்பாக, 1975ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி 213 மில்லியன் கிலோவாகக் காணப்பட்ட நிலையில், 1976ஆம் ஆண்டு அது 8.1 வீத வீழ்ச்சியுடன் 195 மில்லியன் கிலோவாகக் குறைந்தது. இவ்வீழ்ச்சியானது, 1959ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் தேயிலை உற்பத்தியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இறக்குமதிச் செலவுகள் கடுமையாக அதிகரித்தன. இதனால், நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான உணவு, தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் போதுமான அளவு வெளிநாட்டு நாணயம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.
இந்நிலையில், அரிசி மட்டுமன்றி சீனி, மாவு, பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், மாசி, நெத்தலி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்வதற்குப் போதுமான அந்நியச் செலாவணி இல்லாததால், இப்பொருட்களை மக்களுக்குப் பங்கீட்டு முறையில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான விநியோகம், அக்காலத்தில் நாடு முழுவதும் பரவலாக வளர்ச்சியடைந்திருந்த கூட்டுறவுச் சங்கக் கடைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இக்கடைகளில் விநியோகிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது. இதேவேளை, நாட்டில் கள்ளச்சந்தைகளும் உருவாகின.
பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட பணவீக்கம் பொதுமக்களின் கொள்வனவு சக்தியைக் குறைத்தது. உணவுப் பொருட்கள் கிடைத்தபோதிலும், அவற்றின் விலைகள் உயர்ந்த அளவுக்கு ஊதியங்கள் அதிகரிக்காததால், ஏழைக் குடும்பங்களால் போதுமான உணவை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்களைப் போல உணவு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு அதன்மூலம் வருமானத்தையும் கொள்வனவு சக்தியையும் பெற்றிருக்காத காரணத்தால், இந்நெருக்கடியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். தோட்டப் பகுதிகளில் ஊட்டச்சத்துக் குறைபாடும் மரண விகிதமும் அதிகரித்திருந்ததாகப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையை அறிந்த அரசாங்கம், மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும் அடிப்படை உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியது. இதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கும் குடும்ப அட்டையின் அடிப்படையில் அரிசி, மாவு, சீனி, பருப்பு மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. இதனால் குறைந்த வருமானம் கொண்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களாலும் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளைப் போலவே தோட்டப் பகுதிகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தோட்டத் தொழிலாளர் சமூகமும் பஞ்சமும்
இவ்வாறான சூழலில், அரிசிச் சோற்றை உட்கொள்வதில் அதிகமான சிரமத்திற்கு உட்பட்டவர்கள் அதனை உற்பத்தி செய்யும் கிராமிய மக்களாக அன்றி, அதனைப் பிரதான உணவாகவும், அதுமட்டுமன்றி, அதனை உற்பத்தி செய்ய முடியாதவர்களாகவும் காணப்பட்ட பெருந்தோட்ட மக்களாவர். யாவரும் அறிந்தவாறு, தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்ற வாய்ப்புகள் தோட்டங்களில் இல்லை. பெருந்தோட்டங்களில் வசிப்பவர்களுக்கு தமது குடியிருப்புடன் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக, அவர்களது வீட்டோடு ஒரு சிறிய நிலத்துண்டு வழங்கப்பட்டது. ஆனாலும், அந்த வீட்டுத் தோட்டங்களைப் பராமரிக்கக்கூடிய நிலைமையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. மாறாக, அந்த வீட்டுத் தோட்டத்தை விறகுகளைச் சேமித்து வைக்கும் இடமாகவே பயன்படுத்தினர். சாதகமான சூழ்நிலையில் காணப்பட்ட சில வீட்டுத் தோட்டங்களில் வாழை மரங்கள், மரவள்ளிச் செடிகள், ஓரிரண்டு மிளகாய்ச் செடிகள் மற்றும் இயற்கையாக வளர்ந்த சவுக்கை, புளி, கத்திரிக்காய், கொய்யா, சேமன் கீரை மற்றும் பலா மரங்கள் இருந்தன. இவையாவும் தேவையான உப உணவுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
பெருந்தோட்ட மக்களுக்கு, கிராமிய மக்களைப் போலத் தமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்து, அதனைக் களஞ்சியப்படுத்தி நுகர்கின்ற ஒரு நிலைமை காணப்படுவதில்லை. மாறாக, பெருந்தோட்டத்தில் உள்ளவர்கள் பெருந்தோட்ட வேலையில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதன் காரணமாகவும், தமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்வதற்கான போதுமான வாய்ப்புகள் இல்லாததன் காரணமாகவும், தமது அடிப்படைத் தேவைகளை அருகில் இருக்கும் நகரங்களில் விலை கொடுத்து வாங்கி நுகர்கின்ற பழக்கமே தோட்டங்களில் காணப்படுகின்றது. ஒரு கட்டத்தில், பெரும்பாலான தோட்டங்களில் தோட்ட முகாமையானது அடிப்படை உணவுப் பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு, மாசி போன்றவற்றை மொத்த வியாபாரிகளிடமிருந்தோ அல்லது கூட்டுறவுச் சங்கக் கடைகளிலிருந்தோ பெற்று, அதனை அப்போதைய அரசாங்கம் முன்மொழிந்த நியமங்களின்படி வாராந்தம் தொழிலாளர்களுக்கு வழங்கியது. அத்தகைய சேவையைத் தோட்டங்களில் இருந்த களஞ்சியப் பொறுப்பாளர் (Store Keeper) ஊடாக நிறைவேற்றினர்.
மேற்குறிப்பிட்டது போல, தோட்ட முகாமையினர் அரசாங்கத்தின் நியமங்களின்படி தொழிலாளர்களுக்கு வாராந்த அடிப்படையில் உணவுப் பொருட்களைப் பங்கிட்டு வழங்கியபோதிலும், இந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, அதனைப் பங்கிட்டு வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ‘வெள்ளைக் கோதுமை’ மாவு இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப் பொறுப்பாளர் ஊடாகப் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட போது, இலகுவாகக் கிடைக்கப்பெற்ற அந்த மாவில் இருந்து தோட்டத் தொழிலாளர் ரொட்டியைத் தயாரிக்கப் பழகிக்கொண்டனர். மிக இலகுவாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் தயாரிக்கக்கூடிய வெள்ளை மாவிலான ‘ரொட்டி’ நாளடைவில் அவர்களின் பிரதான உணவாகவும் மாறியது. வெள்ளைக் கோதுமை மாவினைக் கொண்டு ரொட்டி தயாரித்து, அதனை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம், அவர்கள் குடிபெயர்ந்து வந்த தென்னிந்தியக் கிராமங்களில் எப்போதும் இருந்ததில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், இந்த உணவுப் பஞ்சத்தின் போது வெள்ளைக் கோதுமையை இறக்குமதி செய்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, அதற்குப் பதிலாக ‘சோள மாவு’ இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இதன்போது சீனியின் பங்கீட்டு அளவும் கணிசமாகக் குறைக்கப்பட்டது. அத்துடன், அதுவரைகாலம் வழங்கப்பட்டுவந்த பச்சைப் பயறு, துவரம் பருப்பு, கடலை, மாசி போன்றவற்றிற்கான இறக்குமதிகளுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டன. அதனால், இத்தகைய உப உணவுப் பொருட்கள் அன்றாடத் தேவையில் இருந்து மெதுமெதுவாக மறைந்துவிட்டதையும் அக்காலத்தில் உணர முடிந்தது. மேலும், ஒரு குடும்பத்திற்கு வாரத்திற்கு 2½ இராத்தல் அரிசி மட்டுமே வழங்கப்பட்டது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் போதுமான அரிசி உணவை உட்கொள்ள முடியாதவர்களாகினர்.
தோட்டத் தொழிலாளர்கள் ஒருபுறம் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட உணவு தமக்குப் போதுமானதாக இல்லாத நிலையில், மறுபுறம் அப்பொருளை அதிக விலை கொடுத்து கறுப்புச் சந்தையில் வாங்க வேண்டிய ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். கறுப்புச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்குவதற்குப் போதுமான வருமானம் இல்லாத போது, தங்களிடமிருந்த பெறுமதியான பொருட்களை ஈடுவைத்து அல்லது அவற்றை விற்றுப் பணம் தேடி, பொருட்களைக் கொள்வனவு செய்வது தவிர்க்க முடியாத செயலாகிவிட்டது. இதன்போது, தாங்கள் சேமித்து வைத்திருந்த தங்க ஆபரணங்களை முதலில் ஈடுவைத்தனர்; அவற்றில் அதிகமானவை மீட்கப்படாமல் போயின. இதற்கு அடுத்த நிலையில், தாம் தென்னிந்தியாவிலிருந்து வரும்போது கொண்டு வந்த பித்தளைப் பாத்திரங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றை ஒன்றில் ஈடுவைத்தனர் அல்லது விற்பனை செய்தனர். மேற்குறிப்பிட்டது போல ஈடுவைத்த பெரும்பாலான பொருட்களை மீளப்பெற முடியாமல் போய்விட்டது.
இதன்போது, தோட்ட மக்கள் பாரம்பரியமாகத் தமது பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு கலை வடிவங்களிலானதும், பரம்பரை பரம்பரையாகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதுமான, தமது திருமணத்தின் போது அணியப்பட்ட தாலி, தாலிக்கொடி, பெயர் பதிக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரங்கள், வெண்கலத் தட்டுகள், குடம், அகலமான தாம்பாளம், சர்வபானை, வெற்றிலைத் தட்டுகள், கும்பா, செம்பு, திருகாணிச் செம்பு, வெள்ளித் தட்டுகள், கால் சிலம்பு, கைக்காப்புகள், பித்தளைப் பூட்டுகள், பல்வேறு வடிவங்களிலான பித்தளை விளக்குகள் (உதாரணமாக: சேவல், மயில்), மேலங்கியில் பதிக்கப்பட்டிருந்த பித்தளைப் பொத்தான்கள், சலங்கைகள், பட்டுச் சேலைகள், பித்தளையிலான எச்சில் பணிக்கம், இசைக்கருவிகளான ஹார்மோனியப் பெட்டி, மென்டோலின் போன்ற யாவற்றையும் ஒன்றில் அடகு வைத்து அல்லது விற்றுத் தமது அடிப்படை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முயன்றனர்.
மாற்றமடைந்த உணவு வகைகள்
பெருந்தோட்ட முகாமைத்துவம், தரிசு நிலங்களைத் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளித்து, சேனை முறையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகளை வழங்கியது. பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் மரவள்ளிக் கிழங்கு, வற்றாளைக் கிழங்கு, சீனிவாளைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைப் பிரதான உணவாகவும் மாற்று உணவாகவும் இணைத்துக்கொண்டனர். குறிப்பாக, சோளம் பெரும்பாலும் ரொட்டி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. சோள மாவுடன் தமது காணியில் விளைந்த வற்றாளை, சீனிவாளைக் கிழங்குகளைக் கலந்து ரொட்டி தயாரித்து உண்ணுகின்ற ஒரு புதிய பழக்கமும் இந்த மக்களிடம் உருவாகியது. இவை எல்லாம் தமக்குத் தேவையான அளவு இல்லாத நிலையில், அதிகமானோர் இந்தப் பட்டினியில் வாழுகின்ற சூழ்நிலை காணப்பட்டது. சந்தையில் பயறு, பருப்பு போன்ற பொருட்கள் கூட்டுறவுக் கடைகளில் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட போதும், அங்கு பழுதடைந்த பொருட்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம்தான் பங்கீட்டுப் பொருட்களை வழங்க முடியும் என்ற ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, துர்நாற்றம் வீசிய கருவாடு, பழுதடைந்த நெத்திலி, மாசி ஆகியவை இவர்களுடைய சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன.
பொதுவாக, பெருந்தோட்டங்களில் சோள மாவிலான ரொட்டி, கீரை வகைகள் போன்றவை மட்டுமின்றி, கிராமத்தை அண்டி வாழ்ந்த தோட்டங்களில் பலாக்காய், பலா மரத்துப் பொருட்கள், காய்கள், விதைகள் போன்ற அனைத்தையும் தமது உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தினர். மேலும், வெதுப்பகங்களில் தயாரிக்கப்பட்ட பாண், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரை இராத்தல் என்ற அளவிலேயே வழங்கப்பட்டது. மக்கள் தினமும் வரிசையில் காத்திருந்து அதைப் பெற வேண்டியிருந்தது; பல நேரங்களில், தாமதமாகச் செல்பவர்களுக்கு பாண் கிடைப்பதே இல்லை.
பஞ்சம் நிலவிய அக்காலகட்டத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையால், பழுதடைந்த உணவைக் கூட உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் பலர் நோய்வாய்ப்பட்டதுடன், அதிகமானோர் தோல் நோய்களினாலும் பாதிக்கப்பட்டனர். உணவின்றி முதியோர்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். மக்கள் காலங்காலமாகச் சேர்த்து வைத்த செல்வங்களை இழந்து நின்றதால், பெரும்பாலான வீடுகள் வெறிச்சோடிக் கிடந்தன. தோட்டத்தில் முன்னாட்களில் விமரிசையாக நடந்த திருவிழாக்கள், கூத்துகள், நடனங்கள் மற்றும் நாடகங்கள் அனைத்தும் மறைந்துபோக, தோட்ட மக்களின் வாழ்வு இருளில் மூழ்கியது.
இதனிடையே, இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் தாயகம் நோக்கி வேகமாகத் திரும்பத் தொடங்கியமை அவர்களின் வெறுமை நிலையை மேலும் மோசமாக்கியது. முன்னதாக ஒரு லயத்தில் 10 முதல் 12 குடும்பங்கள் வாழ்ந்த நிலையில், அந்நாட்களில் 5 அல்லது 6 குடும்பங்கள் மட்டுமே வாழும் சூழல் ஏற்பட்டது. தொழிலாளர்களின் இந்த இடப்பெயர்வு காரணமாகத் தோட்டங்களில் வேலை செய்வதற்கான ஆட்களின் எண்ணிக்கையிலும் பற்றாக்குறை ஏற்பட்டது (Sinnathamby: 1984). ஒருவகையில், இப்பஞ்சம் மலையக மக்களின் இயல்பான வாழ்வியலை அடியோடு ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.
மீள் எழுச்சி
இக்கட்டான இந்த இருண்ட காலம் சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1977இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசு திறந்த பொருளாதாரக் கொள்கையுடன், தோட்டங்களை JEDB மற்றும் SLSPC (Janatha Estate Development Board/ Sri Lanka State Plantation Corporation) போன்ற அரசு கூட்டுத் தாபனங்களின் கீழ் கொண்டு வந்தது. தோட்டங்களில் செய்யப்பட்ட புதிய முதலீடுகளும், கிராமிய அபிவிருத்தித் திட்டங்களும் மலையக மக்களின் வாழ்க்கையில் புதிய விடியலை ஏற்படுத்தின.
குறிப்பாக, தோட்டங்களில் நிலவி வந்த குழந்தைகள் மரணம் மற்றும் கர்ப்பிணிகளின் ஆரோக்கியம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பஞ்ச காலத்தில் 1000 குழந்தைகளுக்கு 39 ஆக இருந்த சிசு மரண விகிதம், அரசு எடுத்த தாய் சேய் நல நடவடிக்கைகளால் 1980களில் 28 ஆகக் குறைந்தது. 1973இல் கர்ப்பிணித் தாய்மார்களில் 90 சதவீதம் பேர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருந்த நிலை படிப்படியாக மாறத் தொடங்கியது (SLSPC சுகாதார அறிக்கை, 1984). குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, இரண்டு குழந்தைகள் உள்ள இளம் தம்பதியருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தோட்டங்கள்தோறும் நலன்புரி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுத் தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன; சுகாதார ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுச் சிறுவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது.
இவ்வாறான வளர்ச்சிப் பணிகளோடு, உணவும் உடைகளும் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கின. புதிய வேலை வாய்ப்புகளும் மாதம் முழுவதும் தொடர்ச்சியான வேலையும் உறுதி செய்யப்பட்டன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1984 முதல் நடைமுறைக்கு வந்த ஆண், பெண் தொழிலாளர்களுக்கான சம சம்பள முறை, மலையக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை ஓரளவு மீட்டு எடுத்துத் தோட்டத்தில் நிலைத்து வாழ வழிவகுத்தது.
முடிவுரை
1973–76 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்திற்கு உலக நாடுகளின் மசகு எண்ணெயில் ஏற்பட்ட விலை அதிகரிப்பும், இக்காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியும் பிரதான காரணங்களாக இருந்தன என்பதை நாம் அறிந்துகொண்டோம். இந்த நிலையில், இலங்கையில் கிராமிய மக்களை விட, பெருந்தோட்டங்களில் அத்தகைய உணவு உற்பத்தியில் ஈடுபடாத மக்கள் இக்காலப்பகுதியில் அதிகமான சிரமங்களுக்கு உட்பட்டனர். தமது உணவுத் தேவைக்காகப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த இம்மக்களுக்கு, தோட்ட முகாமை பல்வேறு வகையில் உதவிக்கரம் நீட்டினாலும், அவர்களது பசியைத் தீர்த்துவைக்க முடியவில்லை. தாம் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த, பாதுகாப்பாக வைத்திருந்த பெறுமதியான கலாச்சார அடையாளங்களை இழந்த வரலாறு என்பது மிகவும் உருக்கமானது. அதுமட்டுமன்றி, ஒரு புதிய வாழ்க்கையைச் சுதாகரிக்க வேண்டிய நிலைக்கு மலையக மக்கள், குறிப்பாகப் பெருந்தோட்ட மக்கள், தள்ளப்பட்டனர்.
ஆயினும், இந்தப் பஞ்ச காலம் பற்றிய பதிவுகள் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாக இல்லை. அதனால், 1974–76 காலப்பகுதியில் வெளியான மத்திய வங்கியின் அறிக்கைகளைப் பயன்படுத்தியும், எனது சொந்த அனுபவங்களையும் மற்றவர்களுடன் கலந்துரையாடிய அனுபவங்களையும் பயன்படுத்தியும் இந்தக் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். இந்தச் சமூகத்தின் கலாசார அடையாளங்களை மாற்றியமைத்த நிகழ்வுகள் பற்றி ஆணித்தரமான ஓர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. இளைஞர்கள், ஆய்வாளர்கள் இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இது பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
உசாத்துணை மூலங்கள்
Alailama, P. J. (1997). Poverty and Unemployment in Sri Lanka. Colombo: Department of National Planning, Ministry of Finance and Planning, Government of Sri Lanka.
Central Bank of Sri Lanka. (1974, 1975 & 1976). Annual Reports. Colombo: Central Bank of Sri Lanka.
Chandrabose, A. S., & Ramesh, R. (2022, March). Socio-Political and Economic Status of Plantation Residents in Abandoned Estates of Sri Lanka: The Case of Central, Sabaragamuwa and Uva Provinces. Kandy: Institute of Social Development (ISD).
Chandrabose, A. S. (2020, February). Changing Scope of Plantation Industry and Emergence of Strata as a Nation. In M. Muthulingam (Ed.), 150 Years of Ceylon Tea & Community. Kandy, Sri Lanka: Institute of Social Development. Institute of Social Development
Department of Census and Statistics. (1985/86). Labour Force and Socio-Economic Survey 1985/86. Colombo: Department of Census and Statistics.
Isenman, Paul. (1980). Basic Needs: The Case of Sri Lanka. World Development, 8(3), March 1980.
Romeshun, K., & Fernando, Priyanthi. (2015). Poverty in the Estate Sector: Has It Turned the Corner? Colombo: Centre for Poverty Analysis (CEPA).
Sen, Amartya. (1980). Famines. World Development, 8, 613–621.
Sen, Amartya. (1981). Poverty and Famines: An Essay on Entitlement and Deprivation. Oxford: Clarendon Press, Oxford University Press.
Sen, Amartya. (1989). Development as Capability Expansion. Journal of Development Planning, 19, 41–58.



