தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
45 நிமிட வாசிப்பு

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 3

September 29, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

மத்திய பழங்கற்காலம்

தொல்லியலாளர்கள் பொதுவாக மத்திய பழங்கற்காலம் கீழைப் பழங்கற்காலத்தின் வளர்ச்சியே எனக் கொண்டாலும், இக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், அவற்றை ஆக்குவதில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், பயன்பாடு ஆகியவற்றை நோக்குமிடத்து, கீழைப் பழங்கற்காலத்திலிருந்து மாறுபட்ட ஒரு சூழலிலே இக்கால மனிதன் வாழ்ந்திருந்தது புலனாகிறது. கீழைப் பழங்கற்காலக் கருவிகளை ஆக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிரதான கல்லின வகையான குவாட்சயிட்டை விட மென்மையான கல்லின வகைகளான ஜஸ்பர் (Jasper), சேட் (Chert), அகேற் (Agate), சல்செடனி (Chalcedony) ஆகிய மூலக் கற்களே இவர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும், கைக்கோடரி போன்ற பெரிய கனதியான கல்லாயுதங்கள் செய்வதற்கு கடினமான கல்லான குவாட்சயிட் (Quartzite) தேவையாக இருந்தது. மேலும், அதன் வெட்டும் பக்கங்களை மட்டும் செப்பனிட்டால் போதுமானது. செதுக்கல், உரித்தல் போன்ற வேலைகளுக்கு மென்மையான கற்களை வெட்டியெடுத்த மெல்லிய கற்கள் தேவைப்பட்டன.

கடினமான குவாட்சயிட் கல்

இவ்வாறு மென்மைத் தன்மை வாய்ந்த கற்களைத் தேர்ந்தெடுத்தமை, மனிதன் தன்னைச் சுற்றியிருந்த சூழல் பற்றிய அறிவில் முந்தைய காலத்தைவிட கூடிய அக்கறை கொண்டிருந்தமையை எடுத்துக்காட்டுகிறது. இதனால், இக்காலத்தில் முந்தைய காலத்தைவிடச் சூழலில் மனிதனது தாக்கம் கூடிக் காணப்பட்டது. செதுக்கல், உரித்தல் போன்ற கருவிகளைத் தயாரிக்க மென்மையான கல்லினங்கள் வேண்டியிருந்தாலும், இத்தோடு கனதியான கைக்கோடரி போன்ற கற்கருவிகள் தயாரிக்க குவாட்சயிட் கல்லின வகைகளும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பிரதேசங்களில் தமிழகமும் ஒன்றாகும்.

மத்திய பழங்கற்காலக் கருவிகளாக விளங்குபவை பல்வகை வடிவங்களில் அமைந்த செதுக்கல் அல்லது சுரண்டு கருவிகள் (Scrapers), துளைக் கருவிகள் (Borers), கூர்க்கருவிகள் (Points) என்பனவாகும். இச்செதுக்கற் கருவிகள் மரப் பட்டைகளை உரிப்பதற்கும், மிருகங்களின் தோலைச் செப்பனிடுவதற்கும், சிறுசிறு மரத்துண்டுகளை அழுத்தம் செய்வதற்கும் பயன்பட்டன. இதனால், இக்கால மனிதன் மரவுரி, மிருகத்தோல் ஆகியவற்றை தனது உடையாகப் பயன்படுத்தியிருக்கலாம். செதுக்கற் கருவிகள் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இவை முறையே நுனி, பக்கம், முழுவடிவம், கோண வடிவம் போன்ற பகுதிகளில் செப்பனிட்டுப் பயன்படுத்தப்பட்டவை ஆகும். கூர்க்கருவிகளின் முனைகள் மட்டும் கூர்மையாக இல்லாது, அவற்றின் பக்கங்களான கோண வடிவம், இலை வடிவம் ஆகிய பகுதிகளும் கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளன. சில கூர்க்கருவிகளில் சிறு கைப்பிடிகளும் காணப்படுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1999: 46).

இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அத்திரம்பாக்கத்தில் அகழாய்வுகளை மேற்கொண்ட சாந்தி பப்பு, அகிலேஷ் குமார், ஹரேஷ் ராஜபாரா ஆகிய ஆய்வாளர்கள் 7,200க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கல்லாயுதங்களைக் கண்டெடுத்திருக்கிறார்கள். இவற்றின் வெப்பேற்று-ஒளிவீச்சு (Thermoluminescence) காலக்கணிப்புகள், இக்கல்லாயுதங்களின் காலத்தை இற்றைக்கு 385,000±64,000 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துச் செல்கின்றன (Kumar, Akilesh et al. 2003). இவை மத்திய பழங்கற்காலத்திற்குரிய கற்கருவிகளாகும்.

அத்திரம்பாக்க அகழ்வுகளில் கண்ட ‘லெவலோயி’ வகை கருவிகள்: 1-2: லெவலோயி செதிள்கள் (Levallois Flakes); 3-4: லெவலோயி முனைகள் (Levallois Points). நன்றி: அகிலேஷ் குமார்

கீழைப் பழங்காலத்தின் இறுதிக் கட்டத்திலே, தான் விரும்பிய கருவியைப் படைக்க முனைந்த மனிதன் கற்களைச் செப்பனிடும் போது அதிலிருந்து சிதறும் செதிள்களையும் கருவிகளாக உபயோகிக்க முற்பட்டான். ஒரு கல்லைச் செம்மையாகச் சீர் செய்வதன் மூலம் பல ஆயுதங்களை ஆக்கும் கலையைக் கற்றுக்கொண்டான். இத்தகைய பாணி ‘லெவலோசியன்’ (Levalloisian) பாணி முறை என்றும், அக்கருவிகள் ‘லெவலோயி’ வகைக் கருவிகள் என்றும் அழைக்கப்படுகிறது.

சாந்தி-பப்பு குழுவினர் அத்திரம்பாக்கத்தில் கண்டெடுத்த இக்கல்லாயுதங்களில் உபயோகிக்கப்பட்ட ‘லெவலோயி தொழில்நுட்பம்’ – கற்களைச் செதுக்கி எடுக்கும் ஒரு முறை (Levallois Technology: A Method of Stone Knapping) – 380,000 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சூலியன் பண்பாடு முடிவுக்கு வந்து, மத்திய பழங்கற்காலம் ஆரம்பமான காலப்பகுதிக்குரியதாகும் (Tariach, G. 2018). அக்காலத்தில் இந்த மாதிரியான கல்லாயுதங்கள் ஐரோப்பாவில் நியண்டதால் மனிதர்களாலும், நடுநிலக்கரை (Levant) வாசிகளாலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்திரம்பாக்கத்தில் 200,000 ஆண்டுகளுக்கு மேலாக இக்கற்கருவிகள் தயாரிக்கப்படும் தொழில்துறை இயங்கி வந்ததாகக் கணிக்கப்படுகிறது (Tariach, G. 2018).

மத்திய பழங்கற்காலக் கருவிகளை நோக்குமிடத்து, இவை கீழைப் பழங்கற்காலக் கருவிகளிலிருந்து தோற்றம், பயன்பாடு ஆகியனவற்றில் மட்டுமின்றி, அவற்றை ஆக்க உதவிய கல் வகைகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தோற்றத்தில் சிறியனவான இக்கருவிகள் அழகாக, கலையம்சம் மிகுந்து காணப்படுகின்றன. இவற்றோடு தனிக் கற்களில் தயாரிக்கப்பட்ட கைக்கோடரிகள், வெட்டுக்கருவிகள், பிளத்தல் கருவிகளும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றன. கீழைப் பழங்காலப் பண்பாட்டை முழுக்கற்களிலே வடிக்கப்பட்ட கருவிகளைக் கொண்ட பண்பாடு என்றும், மத்திய பழங்காலப் பண்பாட்டை செதிள் கற்களினாலே ஆக்கப்பட்ட கருவிகளைக் கொண்ட பண்பாடு என்றும் அழைக்கலாம் (Sankalia, H.D. 1974).

கீழைப் பழங்கற்கால அச்சூலியன் பாணிக் கருவிகள் அத்திரம்பாக்கத்தில் கோர்த்தலை ஆற்றின் முதல் படுகையில் கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். அதன் இரண்டாவது ஆற்றுப் படுகையில், புத்தமனுவங்கா என்ற இடத்தில், மத்திய பழங்கற்காலக் கருவிகளான செதிள் கருவிகள், கூர்க்கருவிகள், துளைக் கருவிகள் ஆகியன காணப்படுகின்றன. இவற்றோடு சமாந்தரமாக நீளமுள்ள அகலம் குறைந்த கல்தகடுகளிலமைந்த சிறு கருவிகளும் காணப்படுகின்றன (Sankalia, H.D. 1974).

குடியம் குகைப்பகுதியில் கே.டி. பனர்ஜி தலைமையில் 1962-63, 1963-64ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் இரண்டாவது அகழ்வாய்வுக் குழியில் கூழாங்கற்களிலமைந்த கருவிகள், இருபக்க முனைகளைக் கொண்ட கற்றகடுகள், செதுக்கல் கருவிகள் ஆகியன வெளிவந்தன. மூன்றாவது அகழ்வாய்வுக் குழி கிருஷ்ணபுரம் என்ற ஊருக்கருகில் அமைக்கப்பட்டது. இதில் அச்சூலியன் பாணியிலமைந்த கருவிகளோடு கூர்க்கருவிகள், செதுக்கல் கருவிகள், செதிள் கருவிகள், தட்டு வடிவக் கருவிகள் (Discoids), வெட்டுதல் கருவிகள் ஆகியன கிடைத்துள்ளன. இவை பளிங்குக் கற்களினால் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது (Ramachandran, K.S. 1980: 22; இராசவேலு–திருமூர்த்தி 1995).

மத்திய பழங்கற்காலக் கருவிகள் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. மதுரைக்குத் தெற்கே பதினைந்து மைல் தொலைவிலுள்ள மறத்தாற்றுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப் பேட்டை ஆகிய இடங்களில் இக்கருவிகள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டனவாகக் காணப்படுகின்றன (Raman, K.V. 1969-70).

மத்திய பழங்கற்காலம் இந்தியாவில் கி.மு. 50,000 ஆண்டளவில் தோன்றி கி.மு. 20,000 ஆண்டளவில் முடிவுற்றது என முன்பு கருதப்பட்டது (Sankalia, H.D. 1974). ஆனால், சமீபகாலக் கதிரியக்கக் காலக்கணிப்புகள் இந்திய மத்திய பழங்கற்காலம் இற்றைக்கு 3,85,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாகி இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நீடித்திருப்பதாக அறியத்தருகின்றன (Kumar, A. et al. 2003; Mishra, S. 1995). ஆபிரிக்க மத்திய பழங்கற்காலம் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களுடன் இணைக்கப்படுகிறது.

இந்தியாவில் இக்காலகட்டத்தில் முதலில் ஹோமோ இரக்டஸ் மனிதர்களும், இற்றைக்கு 68,000-65,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களும் வாழ்ந்திருந்தார்கள் என அறிய முடிகிறது. அவர்களது எலும்புப் படிவுகள் கிடைக்காதபடியினால் இந்தியாவில் ஹோமோ இரக்டஸ் இனம் எந்தக் காலம்வரை வாழ்ந்தார்கள் என அறிய முடியவில்லை. இவ்விரு வகையான மனித இனங்களும் ஒரே சமயத்தில் தென்னாசியாவில் வாழ்ந்திருந்ததால் பேச இயலாத ஹோமோ இரக்டஸ் இனத்தின் அழிவு பேச்சு வன்மை கொண்ட நவீன மனிதர்களால் ஏற்பட்டிருக்கலாம் (If both species overlapped in time, that would raise the possibility that our species might have driven our ancient cousins extinct). மேற்கொண்ட புதைப்படிவுகளின் திகதிக்கணிப்பு ஆய்வுகளின்படி, அங்கே இறுதியாக வாழ்ந்த ஹோமோ இரக்டஸ் மனித இனம் இற்றைக்கு 117,000-108,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது (Choi, C.Q. 2019; Rizal, Y. et al. 2020).

மேலைப் பழங்கற்காலம்

கற்கால வரலாற்றில் அதன் தனிச் சிறப்பியல்புகள் சிறந்து காணப்படும் காலம் மேலைப் பழங்கற்காலமாகும். இக்காலம்தான் சிந்திக்கும் திறன் படைத்த ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ மனித வர்க்கம் ஐரோப்பாவிற்கும், தென் ஆசியாவுக்கும் பரவிய காலமுமாகும். இந்த மனித வர்க்கத்தின் சிறப்பியல்புகளை ஐரோப்பாக் கண்டத்திலே தான் முழுமையாகக் காண முடிகிறது. கீழைப் பழங்கற்காலத்தில் முழுக் கற்களிலுமே கருவிகளைச் செய்த மனிதன், மத்திய பழங்கற்காலத்தில் செதிள்களைப் பயன்படுத்தி கருவிகளை ஆக்கிய மனிதன், மேலைப் பழங்கற்காலத்தில் பல சமாந்தரமான பக்கங்களையுடைய சிறிய நீளமான கற்றகடுகள் (Blades) வரும் வண்ணம் கல்லைத் தயார் செய்து ஒரே முறையில் பல தகடுகளை வடித்தெடுக்கக் கற்றுக்கொண்டான். அழகான இத்தகட்டுக் கருவிகள் இக்கால மனிதன் இவற்றை ஆக்குவதில் பெற்றிருந்த கைவண்ணத்தினை எடுத்துக் காட்டுவதோடு, குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் வடிக்கப்பட்ட கருவிகளாகவும் காணப்படுகின்றன. இதனால், இக்கருவிகள் தனிச்சிறப்புப் பொருந்திய கருவிகள் (Specialised Tools) என அழைக்கப்படுகின்றன (சிற்றம்பலம், சி.க. 1990).

இவை தவிர, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள கற்குகைகளில் காணப்படும் குகை ஓவியங்கள் இக்கால ஐரோப்பிய மேலைப் பழங்கற்காலத்திற்குச் சிறப்புத் தருவன எனலாம். இவற்றுடன், இக்கால மனிதர்களின் கைவண்ணத்தில் உருவான பொம்மைகளும், எலும்புகளால் செய்யப்பட்ட உருவங்களும் இதற்குச் சான்றாக அமைகின்றன. 

பிரான்ஸ் தேசத்திலுள்ள லஸ்கோக்ஸ் குகையில் காணப்படும் உயிர்த்துவமான மிருக ஓவியங்கள். 

1970ஆம் ஆண்டுகள் வரை இந்தியாவில் மேலைப் பழங்கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்படவில்லை. இதனால், மேலைப் பழங்கற்காலத்திற்கான தடயங்கள் இந்தியாவில் காணப்படவில்லை என்றும், கீழைப் பழங்கற்காலம், மத்திய பழங்கற்காலம் ஆகியவற்றைத் தொடர்ந்து இடைக்கற்காலம் தோன்றிவிட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால், 1970ஆம் ஆண்டு முதலாக நடைபெற்ற ஆய்வுகள் மேலைப் பழங்கற்காலத்திற்கான தடயங்கள் இந்தியாவிலும் உள்ளன என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. இதைக் கொண்டு, இக்காலம் ‘கி.மு. 20,000 ஆண்டளவில் தோன்றி, கி.மு. 10,000 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம்’ என சங்கேலியா கருதினார் (Sankalia, H.D. 1970).

சமீபகாலத்திய கதிரியக்கக் காலக்கணிப்புகள் இந்திய மேலைப் பழங்கற்காலம் இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாகிவிட்டதாக அறியத்தருகின்றன (Mishra, S. 1995). தர்மபுரி, தாரங்கோன், சந்திரசால், மெஹதக்கேரி, நக்தா ஆகிய வடஇந்திய இடங்களில் கண்ட மேலைப் பழங்கற்காலக் கற்கருவிகளில் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க ஆய்வுகள் (Radiometric Datings) இவற்றின் காலத்தை இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் செல்கின்றன.

தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திர மாநிலத்தில், மேலைப் பழங்கற்கால மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்கள் வடதமிழ்நாட்டுக்குச் சமீபமாக உள்ள ரேனிகுண்டாவுக்கு அண்மையில் உள்ள குகைகளில் கிடைத்துள்ளன. இக்குகைகளில் இக்காலக் கருவிகளும், எலும்பாயுதங்களும், மனிதனால் பயன்படுத்தப்பட்ட பலவகை மிருக எலும்புகளும் கிடைத்திருக்கின்றன (Murty, M.L.K. 1970).

இலங்கையில் கற்கால மனிதர்கள்

பழைய கற்காலம்

இந்தியாவில் இ.மு. 1,800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Mishra, S. 1995b: 11-16). நெடுங்காலமாக இலங்கையும் இந்தியாவும் நிலத்தொடர்பு கொண்டிருந்தமையால், இலங்கையிலும் இக்காலகட்டத்திற்குரிய மனித எச்சங்கள் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம். இன்றைய தொல்லியல் ஆய்வுகளின்படி, இ.மு. 125,000 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து இலங்கையில் மக்கள் வாழ்ந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன (Deraniyagala, S.U. 1996: 277-285). இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பழைய கற்காலத்தைச் சேர்ந்த மக்களாவர்.

ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதன் இலங்கையை வந்தடைந்த காலப்பகுதி கி.மு. 68,000-65,000 ஆகையால், இலங்கையில் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்களில் ஒரு பகுதியினர் ஹோமோ இரக்டஸ் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பர். கி.மு. 50,000 ஆண்டுகாலப் பகுதியில் ஹோமோ இரக்டஸ் இனம் முற்றாக அழிந்துபோயிற்று.

வடஇலங்கையில் முல்லைத்தீவின் வடபகுதியிலிருந்து வடக்கு-வடமேற்காகப் பரந்தன், பூநகரி, மாந்தை, புத்தளம், குதிரைமலை வரை கடற்கரையோரமாகப் பரந்திருக்கும் தேரி-மேடு, இரணைமடு அமைப்பு (Iranamadu Formation) என அழைக்கப்படுகிறது. இந்த மேடுகள் – பரந்து கிடக்கும் சரளைக்கற்களுக்கு (Gravel) மேலுள்ள களிமண் கலந்த மணல் மேடுகள் – பல்லாயிரம் ஆண்டுகால சீதோஷ்ண தட்பவெப்பத்தில் சிவப்பு நிறமாக மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த இரணைமடு மணல் மேடுகளில் இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் முதல் இடைக்கற்காலம் வரை பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் – முக்கியமாக, அவர்கள் உபயோகித்த கற்கருவிகள் – காணப்படுகின்றன (Deraniyagala, S.U. 1992: 686-688).

இக்கால மக்கள் தமது ஆகாரத்திற்காக நாடோடிகளாக இடம்விட்டு இடம்சென்று வேட்டையாடியும், கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் மீன்பிடித்தும் வாழ்ந்தமையால், இவர்கள் விட்டுச்சென்ற எச்சங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் காணப்படுகின்றன. இவர்கள் உபயோகித்த மற்றைய பாவனைப் பொருட்களும், உடுத்திய உடுப்புகளும், ஏன் – அவர்களின் எலும்புக்கூடுகளும் – அழிவுற்றுப் போனபின், முக்கியமாக எஞ்சியிருப்பவை அவர்கள் விட்டுச்சென்ற கற்கருவிகளே ஆகும்.

ஆதியில் வன்னிப்பகுதியில் வாழ்ந்த மக்கள் விட்டுச்சென்ற கல்லாயுதங்களும், கல்லுபகரணங்களும் கடற்கரையோரமாகக் காணப்படும் இரணைமடு தேரிமணற் குன்றுகளிடையே காணப்படுகின்றன. ஆரம்பகாலத்தில் இயற்கையாகக் கிடைத்த கற்களை உபயோகித்த மனிதன் பின்னர் இந்நிலையிலிருந்து ஒருபடி முன்னேறித் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பலவாறு அவற்றைச் செப்பனிடத் தொடங்கினான். இவ்வாறு செய்யும் போது முழுக்கல்லையும் செப்பனிடுவதற்குப் பதிலாக, தனது தேவைக்காகப் பயன்படுத்தும் முனையை மட்டுமே செப்பனிட்டான்.

இலங்கையில் வடக்கு–வடமேற்காக முல்லைத்தீவிலிருந்து குதிரைமலை வரை தொடர்ந்து செல்லும் இரணைமடு தேரிமணற் தொடர். இலங்கையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இந்தச் செம்மணற் குன்றுகளினிடையே காணப்படுகின்றன. வரைபடம்: நன்றி – Dr S.U. Deraniyagala.

இயற்கையாக ஆற்றோரங்களிலும் மற்ற இடங்களிலும் பாறையாகக் காணப்பட்ட ‘குவார்ட்ஸ்’ (Quartz) கற்களைக் கொண்டே இக்கருவிகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டன. இப்பாறைகளை நெருப்பைக் கொண்டு சூடாக்கி, பின்னர் அவற்றின் மேல் நீரை ஊற்றியோ அல்லது மற்றொரு பெருங்கல்லால் அடித்தோ பிளக்க வைத்து, பின்னர் அவற்றை உடைத்து வேண்டிய ஆயுதங்களை இவர்கள் செய்திருக்கிறார்கள் (Allchin, B & Allchin, R. 1968: 96-99). இவ்வாறு பாறையை உடைக்கும்போது வெடித்துச் சிதறும் செதிள்கள் (Flake Tools) மிகவும் கூர்மையாக இருப்பதனால், சவரம் செய்வதற்கும் நுணுக்கமாக வெட்டுவதற்கும் இவை உபயோகப்படுத்தப்பட்டன. முழுக்கற்களையும் சிறப்பாகச் செப்பனிட்டு கைக்கோடரிகள் (Hand Axe) தயாரிக்கப்பட்டன. தட்டைக் கற்களைக் கொண்டு பிளப்பிகள் உருவாக்கப்பட்டன. கைக்கோடரிகளும் பிளத்தற் கருவிகளும் மரங்களை வெட்டுவதற்கும், மிருகங்களைக் கொன்று இறைச்சியை வெட்டி எடுப்பதற்கும், நிலத்தில் விளையும் கிழங்கு வகைகளை அகழ்ந்து எடுப்பதற்கும் உபயோகிக்கப்பட்டன.

இரணைமடு தேரி மணற்குன்றுகளினிடையே கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால கருவிகள், உபகரணங்கள் நன்றி – Dr S.U. Deraniyagala.

பழைய கற்கால மக்கள் 20 முதல் 40 பேரைக் கொண்ட குழுக்குடும்பமாக, 50 சதுர மீட்டர் அளவான ஓரிடத்தில் தங்கி, வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்தார்கள் எனக் கணிக்கப்படுகிறது. இவர்களது பிரதான தொழிலாக வேட்டையாடுதல் அமைந்திருந்தாலும், தமது உணவிற்காக மிருகங்களின் இறைச்சியோடு மீன், கிழங்கு வகைகள், பழவகைகள் ஆகியவற்றையும் உட்கொண்டனர். ஓரிடத்தில் உணவு குறைந்ததும் கூட்டமாக வேறிடம் சென்று இவர்கள் தங்கினார்கள். வட இலங்கையின் உலர்ந்த வலயத்தில் (வன்னிப்பகுதி) ஒரு சதுர கிலோமீட்டருக்கு 0.8 மனிதர்கள் வரை வாழ்ந்தார்கள் எனக் கணக்கிடப்படுகிறது. கடலிலிருந்து கிடைக்கும் கடலுணவுகளின் தாராளத்தால் இலங்கையின் வடக்கு-கிழக்குக் கடற்கரையோரங்களில் சதுர கிலோமீட்டருக்கு 1.5 பேர்கள் வரை வாழ்ந்தார்கள் (Deraniyagala, S.U. 1996: 277-285).

உணவு

பழைய கற்கால மக்கள் தங்கள் உணவிற்காகக் கல்லாயுதங்களைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடியும், கிழங்குகள், பழங்கள், விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தும் உட்கொண்டார்கள். மற்றைய மிருகங்கள் கொன்றுபோட்ட விலங்குகளின் இறைச்சிகளையும் எலும்புகளையும் கூட உட்கொண்டிருக்கலாம். கடற்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வாழ்ந்தவர்கள் மீன்களையும் உணவாகக் கொண்டார்கள்.

நெருப்பு

ஹோமோ இரக்டஸ் மக்கள் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த நாட்களிலேயே நெருப்பின் உபயோகத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள். காய்ந்த குச்சிகளை ஒன்றோடு ஒன்று உரசி நெருப்பை உண்டாக்கும் கலையை அறிந்திருந்தார்கள். வேட்டையாடிய விலங்கினங்களைக் கல்கத்திகளால் வெட்டி, கல்தட்டுகளில் போட்டும், மரக்குச்சிகளில் இணைத்தும் நெருப்பில் வாட்டி உட்கொண்டார்கள். இதன் காரணமாக, பச்சை ஊனிலிருந்து உண்டாகக்கூடிய நோய்களிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். திறந்த வெளிகளில் வாழ்ந்தவர்கள் இரவு நேரங்களில் நெருப்பை எரித்து, அதைச் சுற்றிலும் உறங்கியதன் மூலம் கொடிய மிருகங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டார்கள்.

வதிவிடங்கள்

இரணைமடு கடற்கரை தேரி மேடுகளைத் தவிர, இம்மக்கள் திறந்த வெளிகளிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், மலைக்குகைகளிலும், பாறை ஒதுக்குகளிலும் வாழ்ந்து வந்திருப்பதை அவ்விடங்களில் காணப்படும் அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களைக் கொண்டு அறிய முடிகிறது. தென்னிலங்கையில் உள்ள பாதாதொம்ப லென, பெலி லென குகைகளிலும் பல நூற்றாண்டுகளாக மக்கள் குடிகொண்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

தெப்பம் – கட்டுமரம்

இற்றைக்கு 800,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மரங்களைச் சேர்த்துக் கயிற்றால் கட்டி, அதைக் கட்டுமரமாக மிதக்கவிட்டு ஆற்றைக் கடக்கவும், கரைக்கடல்களில் சென்று கூராக்கப்பட்ட கம்புகளைக் கொண்டு மீன்பிடிக்கவும் இந்திய உபகண்டத்தின் பழங்கற்கால மக்கள் அறிந்திருந்தார்கள். அந்த அறிவு இலங்கையில் வாழ்ந்த பழங்கற்கால மனிதர்களுக்கும் இருந்திருக்கும்.

இடைக்கற்காலம்

பழைய கற்கால மக்களைப் போன்று இடைக்கற்கால மக்களினதும் பிரதான தொழில்களாக வேட்டையாடுதல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல் போன்ற தொழில்களே அமைந்தன. ஆனால், பழைய கற்கால மனிதனைவிட இவனது வாழ்க்கை சற்று முன்னேற்றமடைந்து காணப்படுகிறது. ஆதியில் நாடோடியாகத் திரிந்த இம்மனிதன் ஓரளவு தொடர்ந்து ஓரிடத்தில் இருந்தது பற்றியும், தான் வாழ்ந்த சூழலை முன்னரைவிடக் கூர்மையாக அவதானித்து அதை மாற்ற முற்பட்டதையும் அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன (Deraniyagala, S.U. 1992: 686-688).

இக்கால மனிதனால் காடுகள் அழிக்கப்பட்டதை, தாவரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப்பொடியின் (Pollen) படிவங்கள், எச்சங்கள் ஆகியவை எடுத்துக்காட்டியுள்ளன. இக்காலத்தில் காட்டு மரங்கள் விட்டுச் சென்ற மகரந்தப்பொடியின் எச்சங்கள் எண்ணிக்கையில் குறைய, சிறு பற்றைகள், புல், பூண்டு ஆகியவை விட்டுச் சென்ற மகரந்தப்பொடியின் எச்சங்கள் மேலோங்கிக் காணப்படுவதை ஆதாரமாகக் கொண்டு, இக்கால மனிதன் காட்டை அழித்துச் சூழலை வளப்படுத்த முற்பட்டான் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள் (Allchin B. & Allchin R. 1968: 96-99).

பழைய கற்காலத்தில் வாழ்ந்த பெரிய மிருகங்களின் இனங்கள் பெருமளவுக்கு அழிந்துபோக, காடுகளில் காணப்பட்ட மான், மரை, முயல் ஆகிய சிறிய மிருகங்களை வேட்டையாட இக்கால மனிதன் கற்றுக்கொண்டான். கூர்மையாக்கப்பட்ட சிறிய (குறுணி) நுண்கற்களை அம்புகளிலும் ஈட்டிகளிலும் முனையாகப் பொருத்தி, அவற்றைக் கொண்டு வேட்டையாடியதை அறிய முடிகிறது. இப்பண்பாட்டு மக்கள் காட்டுப் புற்களாகத் தோன்றிய பயிர்களிலிருந்து தானியங்களை அறுக்கவும், உணவுப் பண்டங்களைச் சிறு துண்டுகளாக வெட்டவும் தட்டையான ‘பிளேட்’ போன்ற கல் அலகுகளைப் பயன்படுத்தினார்கள்.

இச்சிறிய கற்கள் நுண்கற்கள் அல்லது குறுணிக் கற்கள் (Microliths) எனத் தொல்லியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. வட இலங்கையில் பல இடங்களில் காணப்படும் வரலாற்றுக்கு முற்பட்டகாலத் தொல்லியற் சான்றுகள் குறுணிக்கல் பண்பாட்டிற்குரியனவாகும். இதன் காரணமாக இலங்கையின் இடைக்கற்காலத்தை குறுணிக்கற் பண்பாட்டுக் காலம் எனவும் அழைப்பார்கள். இக்குறுணிக் கற்கள் வன்னியில் இரணைமடு தேரிமணற் குவியல்களிலிருந்தும், மாந்தை (மாதோட்டம்), குருந்தன்குளம், பனங்காமம், உருத்திரபுரம், பூநகரி (கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு) ஆகிய இடங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993: 14).

ஆயுத முனைகளாக உபயோகப்படுத்தப்பட்ட இவ்வகை நுண்கற்கள் 1-2 செ.மீ. நீளமும், 0.5 செ.மீ. அகலமும் கொண்டு சேட், சக்கிமுக்கிக் கற்களில் (Chert, Quartz) பல வகையான வடிவங்களில் செய்யப்பட்டிருக்கின்றன. நுண்கல் பிராண்டிகள் (Scrapers) 5 செ.மீ. நீளம் கொண்டவை. இந்த நுண்கற்கள் அம்பு நுனிகள், ஈட்டி முனைகள், கைவேலைக் கருவி முனைகள், பிராண்டிகள் மற்றும் பலவகையான கருவிகளின் முனைகளாக உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நுண்கற்கள் வெப்பேற்றுக் கதிரொளிவீச்சுக் காலக்கணிப்புகளின்படி இ.மு. 34,000 ஆண்டுகளுக்கு உரியனவாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன (Deraniyagala, S.U. 1992).

பூநகரிப் பிராந்தியத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலக் குடியேற்றங்கள் நுண்கற்காலப் பண்பாட்டுடன் தோற்றம் பெற்றதற்கான சில ஆதாரங்கள் கல்முனை, மண்ணித்தலை, வெட்டுக்காடு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது கிடைத்துள்ளன. இவ்விடங்களில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய சிறிய குவார்ட்ஸ் (Quartz) கல்லாயுதங்களும், குவார்ட்ஸ் கற்களைக் கொண்டு கல்லாயுதங்கள் ஆக்கும் போது ஏற்படும் செதிள்கள் (Flakes) பலவும் கிடைத்துள்ளன. வெட்டுக்காட்டில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய மற்றொரு வகையான சேட் (Chert) கற்கள் சில கிடைத்திருக்கின்றன. இவ்விடத்திலிருந்து குவார்ட்ஸ் கல்லாயுதங்களோடு உலோகத்தாலான மீன்பிடிப்பதற்குரிய ஊசியும் (Metal Fish-hook) (பிற்காலத்திற்குரியது), ‘பிளேட்’ போன்ற தட்டையான ஆயுதமும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன (புஷ்பரட்ணம், ப. 1993: 14).

இடைக்கற்கால இலங்கை மக்களின் வாழ்வியல்

இலங்கையின் இடைக்கற்கால மக்கள் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்க்கை நடத்திய மக்கள். நுண்கற் பண்பாட்டைப் பேணிய இம்மக்களின் நாளாந்த வாழ்க்கையில் கற்கருவிகளே முக்கிய பங்கு வகித்தன. அவர்களது வாழ்வியலை அவர்கள் விட்டுச் சென்ற கற்கருவிகள் மூலமாகவும், மற்றைய தொல்லியல் சான்றுகள் மூலமாகவும் அனுமானிக்க முடிகிறது. கற்கருவிகளின் வடிவமைப்பையும், வகைகளையும், நுணுக்கப்பாட்டையும் கொண்டு அவற்றைத் தயாரித்த மக்களின் எண்ணங்களையும், அக்கருவிகளை உபயோகப்படுத்தும் நோக்கங்களையும் அறிய முடிகிறது.

இக்கற்கருவிகள் பெரும்பாலும் குவார்ட்ஸ் (Quartz), சேட் (Chert) ஆகிய கற்களிலிருந்தும், மிக அரிதாக யஸ்பர் (Jasper) கற்களிலிருந்தும் வடிவமைக்கப்பட்டிருந்தன (Deraniyagala, S.U. 1992: 266-70; 688-94; 2004: 8). இடைக்கற்கால மக்களின் முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம், அவர்கள் வேட்டையாடுவதற்காகக் கண்டுபிடித்த அம்பும் வில்லுமாகும். அம்பு நுனிகளில் உபயோகித்த குறுக்குத்தலை அம்புநுனிகள் (Transverse Arrowheads) தனித்துவமானதொரு சீர்திருத்தக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இதைக் கொண்டு முன்னர் வேட்டையாட முடியாத பறவைகளையும் மிருகங்களையும் வேட்டையாட முடிந்தது. நுண்கற்கள் பொருத்தப்பட்ட பலவகையான பல்சினைக் கருவிகள் (Composite Tools) உபயோகப்படுத்தப்பட்டன. பிறைவடிவான நுனி பொருத்தப்பட்ட ஈட்டிகள், முக்கோண நுண்கற்கள் வரிசையாகப் பொருத்தப்பட்ட வாட்கள், கத்திவடிவில் ஆக்கப்பட்ட வளைந்த கற்கள் என்பன இவற்றில் அடங்கும்.

இரணைமடு தேரியில் கண்டெடுக்கப்பட்ட இடைக்கற்கால நுண்கல் ஆயுதங்கள். இவை இ.மு. 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கணிக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: Dr S.U. Deraniyagala. 

இலங்கையில் பாததொம்ப-லென குகை. இதற்குள் இற்றைக்கு 34,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நன்றி: Lankalibrary.com.

கோல்கள் நட்டு மிருகத் தோல்களால் மூடப்பட்ட தற்காலிகக் கூடாரம்.

நுண்கற்களை இயற்கையான மரப்பிசின் கொண்டு பிளந்த மரச் சட்டங்களினிடையில் பொருத்தி பலசினைக் கருவிகள், வாட்கள் என்பன உருவாக்கப்பட்டன. கற்கள் தவிர எலும்புகளும், கற்களைக் கொண்டு கூராகச் செதுக்கப்பட்ட மரத்தண்டுகளும் ஆயுதங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. இம்மரத்தண்டுகளைக் கொண்டு ஆற்றிலும், கடற்கரைகளிலும் மீன்களைக் குத்திப் பிடிக்க முடிந்தது.

இடைக்கற்கால மனிதர்கள் பெரும்பாலும் நாடோடிகளாகவும், சிலர் நிரந்தரமாகக் குகைகளிலும் வாழ்ந்தார்கள். திறந்த வெளிகளிலும், ஆற்றோரங்களிலும், கடற்கரைகளிலும், குகைகளிலும் இவர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. இவர்களது ஆயுதங்கள் குகைகளில் கிடைத்த போதிலும், குகைகளில் இவர்கள் நிரந்தரமாக வாழ்ந்ததற்கான பிற ஆதாரங்கள் காணப்படாதது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் குகைகளில் இவர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் காணப்படுவதோடு, இவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பற்றிய சான்றுகளும் கிடைத்துள்ளன. இத்தகைய கூடாரங்கள் பெரிய மிருகங்களின் எலும்புகளையோ அல்லது மரத்தண்டுகளையோ கால்களாக நட்டு, அவைகளின் தோலைக் கூரையாக மூடி அமைக்கப்பட்டவையாகும்.

இம்மக்கள் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப நாடோடிகளாக இடத்திற்கு இடம் சென்று பலவகைப்பட்ட உணவுகளைச் சேகரித்துள்ளனர். தென்னிலங்கையில் பெலன்பண்டி-பலஸ (Bellanbandi-Palassa) என்ற இடைக்கற்காலத் திறந்தவெளி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இம்மக்கள் பலவகைப்பட்ட தானியங்கள், கிழங்கு வகைகள், பழங்கள், காட்டு விலங்குகள், மீன் போன்ற கடல் உணவுகள் ஆகியவற்றை உட்கொண்டமை தெரியவந்துள்ளது. இம்மக்கள் இந்த உணவுகளைக் காய வைத்து சேமித்து வைக்கும் பழக்கத்தையும், நெருப்பின் பயன்பாட்டையும் அறிந்திருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அடுத்து, பெலிலெனா குகையில் (Beli Lena) இற்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உப்புப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதிலிருந்து அக்காலத்தில் மலைநாட்டிற்கும், கடற்கரைகளுக்கும் இடையே வலைப்பின்னலான பண்டமாற்றுத் தொடர்புகள் இருந்ததை அறிய முடிகிறது (Deraniyagala, S. U. 1992: 326).

இடைக்கற்கால மக்களின் சந்ததியினரான பழங்குடி மக்கள் இன்றும் குகைகளில் வாழுவதை நாம் அவதானிக்க முடிகிறது. பாதுகாப்பிற்காக இக்குகைகளின் வாசல்களைத் தோல் கொண்டு மறைத்துவிடும் வழக்கமும் இவர்களிடையே காணப்படுகிறது. இதனால் இடைக்கற்கால மனிதன் முந்தைய பழங்கற்கால மனிதரைப் போலல்லாது குகைகளில் நிரந்தரமாக வாழ்ந்தான் என ஊகிக்க இடமுண்டு. இக்காலத்தில் வேடர்கள் மத்தியில் தாம் ஆயுதங்களை உருவாக்கும் இடத்திலேயே (Factory Sites) தற்காலிகமாகக் குடில்களை அமைக்கும் வழக்கம் காணப்படுவது போன்றே, அக்காலத்திலும் இவ்வழக்கம் இருந்திருக்கலாம் (சிற்றம்பலம், சி.க. 1999: 77).

இடைக்கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களே சிலசமயம் அவர்கள் ஆயுதங்களை உருவாக்கிய இடங்களாகவும், இன்னும் சில சமயங்களில் ஆயுதங்களை உருவாக்கிய இடங்களிலேயே அவர்கள் வாழ்ந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. இம்மக்கள் நீர்நிலைகள், ஆயுதங்களை உருவாக்குவதற்கான கல் வகைகள் கிடைக்குமிடங்கள், வேட்டைக்குத் தேவையான மிருகங்கள் செறிந்து வாழும் இடங்கள் என்பவற்றை மையமாக வைத்தே தமது இருப்பிடங்களை அமைத்தார்கள் (Allchin, B. & Allchin, R. 1982; சிற்றம்பலம், சி.க. 1999: 77).

அமெரிக்காவின் கோணெல் பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியரான கென்னெத் கென்னெடி நீண்ட ஆண்டுகளாக தென்னிந்திய, இலங்கையின் புராதன மக்களின் மானிடவியல் கற்கைநெறி ஆய்வுகளை மேற்கொண்டவர். அவர் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த இடைக்கற்கால நுண்கற் பண்பாட்டைக் கடைப்பிடித்த மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். தொல்லியலாளர்கள் இலங்கையில் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகளுக்கும், தென்னிந்தியாவில் சமகாலத்து மக்களால் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இருபக்க அலகுடைய நுண்கற் கல்லாயுதங்கள் தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையிலுள்ள தேரிக் கலாசாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமையைக் கொண்டுள்ளன (Kennedy, K. A. R. 1990: 34).

இடைக்கற்கால மனிதன் நாயை தனது நண்பனாகப் பழக்கக் கற்றுக்கொண்டான். தவிர, மந்தை வளர்ப்பிலும் இக்கால மனிதன் ஈடுபட்டிருந்ததை இக்காலக் குடியிருப்புகளில் காணப்படும் எலும்புக்கூடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இம்மிருகங்களில் ஆடு, எருது, பசு, செம்மறி ஆடு என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு மந்தை மேய்ப்பில் இக்கால மனிதன் அக்கறை காட்டியது அவனது நாகரிக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மற்றைய நாடுகளில் இடைக்கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் புதிய கற்காலம் எனப்படும். நாடோடிகளாக இடத்திற்கு இடம் பெயர்ந்து வேட்டையாடி, உணவு சேகரித்து வந்த மனிதன் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி விவசாயத்திலும், பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்ட காலம் இது. மனிதர்கள் கூட்டாக ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்க, அங்கே முதல் கிராமங்கள் உருவாயின. இக்காலத்தில் செம்பு, ஈயம், வெண்கலம் (Bronze) போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. இதைத் தொடர்ந்து இரும்பு அறிமுகமான காலம் இரும்புக்காலம் எனப்பட்டது.

இலங்கையிலோ ‘புதிய கற்காலம்’ என ஒரு காலப்பகுதி இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இங்கே இரும்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறியத்தருகின்றன. இலங்கையின் இடைக்கற்காலம் இ.மு. 34,000 முதல் ஆதி இரும்புக்காலம் வரை – அதாவது இ.மு. 3380 வரை நீடித்திருக்கிறது (Deraniyagala, S. U. 1992: 695–70; 2013: 511).

_ _ _ _ _

இனிக் கூறப்படுபவை ஒரு சுருக்கக் குறிப்புகள்தாம். இவை பற்றி விவரமாக அடுத்து வரும் இயல்களில் காணலாம்.

இடைக்கற்காலம் (Mesolithic Age)

இடைக்கற்கால மக்கள் அகேற், ஜாஸ்பர், சால்கிடெனி போன்ற கல் வகைகளைக் கொண்டு நேர்த்தியான வடிவமைப்பில் மென்மையான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்தினார்கள்.

இடைக்கற்கால மக்களில் மிகச் சிறிய குறுணிக்கல் ஆயுதங்களை உபயோகப்படுத்திய மக்கள், நுண்கற்கால (Microlithic Age) மக்கள் என அழைக்கப்படுகிறார்கள். இரண்டு சென்டிமீட்டர் நீள அளவினாலான அம்பு முனைகள், சுரண்டிகள், வெட்டும் தகடுகள் என்பவற்றைச் செய்து பயன்படுத்தினர். தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம், சாயர்புரம், காயாமொழி, ஏரல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், மதுரைப் பகுதியில் துவரிமான் ஆகிய இடங்களில் நுண்கற்காலக் கல்லாயுதங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய கற்காலம் (Neolithic Age)

புதிய கற்காலம் என்பது மக்கள் நாடோடிகளாகக் காடுகளில் வேட்டையாடி, உணவு சேகரித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை விட்டு, நாட்டுக்குள் வந்து ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு, நிலையாக ஓரிடத்தில் வாழ ஆரம்பித்த காலமாகும். இந்த நிலையான குடியிருப்பு வாழ்க்கையில், மனிதர்கள் சக்கரம் மூலம் மண்பாண்டங்கள் செய்து சூளையில் சுட்டுப் பயன்படுத்தவும், கூர்மையான வழுவழுப்பான கற்கருவிகளைச் செதுக்கவும், விலங்குகளைப் பழக்கி வளர்க்கவும் கற்றுக்கொண்டனர்.

களி மண்ணைக் குழைத்து மண்வீடுகள் கட்டி ஓலைகளால் வேய்வதற்கும், நூல் நூற்பதற்கும், நெசவுத் துணி செய்வதற்கும், துணிகளைக் கொண்டு ஆடைகள் செய்வதற்கும் கற்றுக்கொண்டனர். மணிகள், வளையங்கள், மோதிரங்கள் போன்ற அணிகலன்களைச் செய்து பெண்கள் அணிந்துகொண்டனர். கோதுமை, பார்லி, அரிசி, சோளம் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டு விளைவித்தனர். இவற்றை நெருப்பில் சமைத்து உண்ணப் பழகிக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைப்பகுதிகளிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, கப்பல்வாடி, பருகூர், பன்னிமருவு, தைலமலை, முள்ளிக்காடு, பையம்பள்ளி, சந்திராபுரம், கோவலன் பொட்டல் (மதுரை), மாங்குடி (நெல்லை), நல்லவன்னியன் குடிகாடு (தஞ்சாவூர்) ஆகிய ஊர்களிலும் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த எச்சங்கள் கிடைத்துள்ளன.

செம்புக்காலம் (Bronze Age)

செப்பு உலோகத்தைப் பயன்படுத்தி கோடரிகள், வாள்கள், ஈட்டி முனைகள், அம்புமுனைகள், கத்திகள், உளிகள் போன்ற கருவிகளைச் செய்து அவற்றை உபயோகப்படுத்திய காலம் ‘செம்புக்காலம்’ எனப்படும். சிந்துவெளியில் உருவான வேளாண்மை நாகரிகம் செப்பு உலோகக் கருவிகளைக் கொண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது. வட இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும், போர் செய்யவும், வேளாண்மைக்கும் இக்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

வடஇந்தியாவோடு ஒப்பிடும்போது செம்புக்காலம் சற்று தாமதமாகத்தான் தென்னிந்தியாவிற்கு அறிமுகமாயிற்று. ஆனால், வடஇந்தியாவுக்கு முன்னரே இங்கே இரும்பின் பாவனை ஆரம்பித்துவிட்டதால், செப்பில் மக்கள் அதிக கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

1884–85ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகளை அகழாய்வு செய்த பிரித்தானியத் தொல்லியலாளர் அலெக்ஸாந்தர் ரீ (Alexander Rea) மிகச் சிறப்பான வேலைப்பாடுடன் கூடிய 123 வெண்கலப் பொருட்களையும், 90 வகையான இரும்புப் பொருட்களையும் கண்டெடுத்துப் பட்டியலிட்டிருக்கிறார்.

இரும்புக்காலம் (Iron Age)

மனித நாகரிகம் அதன் உச்சிக்கட்டத்தை அடைவதற்கு இரும்பின் வருகை முக்கியமானதொரு அம்சமாகும். தமிழகத்தில் சிவகளை, தெலுங்கனூர் போன்ற இடங்களில் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பற்றி அறியப்பட்டிருந்தாலும், பெருங்கற்கால ஆண்டுக் காலங்களில்தான், இதன் பாவனை நாடெங்கும் பரவலாக நடைமுறைக்கு வந்தது (இயல் 13இல் காணலாம்).

இரும்புக்காலத்தில் வாழ்ந்த மக்கள் இரும்பை உருக்கி கலப்பைகள், கத்திகள், கோடரிகள், மண்வெட்டிகள் என்பவற்றை உருவாக்கி, நெல், தினை, வரகு போன்ற தானிய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயப் புரட்சியைக் (Agricultural Revolution) கொண்டுவந்தார்கள்.

உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்

ABEYARATNE, M. (1996): Multi-dating Studies of Archaeological Sites, Unpublished Ph.D. Dissertation, Australian National University, Canberra.

AGRAWAL, D.P.; KRISHNAMURTHY, R.V.; PANT, R.K. (1978): “Chronology of Indian Prehistory from Mesolithic Period to the Iron Age”, Journal of Human Evolution 7: 37–44.

ALLCHIN, BRIDGET & ALLCHIN, RAYMOND (1968): The Birth of Indian Civilization, Harmondsworth, London.

ALLCHIN, B. & ALLCHIN, R. (1982): The Rise of Civilization in India and Pakistan, Cambridge University Press, Cambridge.

ANTON, S. C. (2003): “Natural History of ‘Homo erectus’”, Am. J. Physical Anthropology 122.

ATHREYA, SHEELA (2007): “Was Homo heidelbergensis in South Asia? A Test Using the Narmada Fossil from Central India”, in MICHAEL D. PETRAGLIA and BRIDGET ALLCHIN (Eds.): The Evolution and History of Human Populations in South Asia, Springer, The Netherlands.

BECKER, RACHEL (2018): “Discovery of Ancient Stone Tools Rewrite the History of Technology in India”, The Verge, 31 January 2018.

CHAKRABARTI, DILIP K. (1979): “Robert Bruce Foote and Indian Prehistory”, East and West No. 29: 11–26.

CHAKRAVARTY, KALYAN KUMAR (Ed.) (1984): Rock-Art of India: Paintings and Engravings, Arnold-Heinmann, New Delhi.

CHOI, CHARLES Q. (2019): “The Final Days of Homo Erectus”, Inside Science, 18 December 2019.

CLARK, J.G.D. (1969): World Prehistory: A New Outline, Cambridge University Press, Cambridge.

CLARK, PETER U. & MIX, ALAN C. (2002): “Ice Sheets and Sea Levels of the Last Glacial Maximum”, Quaternary Science Reviews 21 (1–3): 1–7.

DEDIU, D. & LEVINSON, S.C. (2018): “Neanderthal Language Revisited”, Current Opinion in Behavioural Sciences 21: 49–55.

DENNELL, R.W., RENDELL, H.M. and HAILWOOD, E. (1988): Early Tool-Making in Asia: Two-Million-Year-Old Artefacts in Pakistan, Antiquity 62: 98–106.

DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Dept. of Archaeological Survey, Government of Sri Lanka, Colombo.

DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka (as above): pp. 686–688. The gravel at Iranamadu Formation had given varying dates of 125,000 BCE (M. Abeyaratne 1996: as above), and 80,000 BCE (Oxford Archaeological Laboratory) from different sites.

DERANIYAGALA, S.U. (1992b): “‘The Prehistoric Chronology of Sri Lanka’” in Memoirs of the Archaeological Department, Govt. of Sri Lanka, No. 8, Addendum I.

DERANIYAGALA, S.U. (1996): “Pre and Protohistoric Settlements in Sri Lanka”, in The Prehistory of Asia and Oceania, Vol. 5, Section 16, pp. 277–285.

DERANIYAGALA, S.U. (2004): Pre-historic Basis for the Rise of Civilization in Sri Lanka and Southern India, Second Vesak Commemoration Lecture, Madras.

DERANIYAGALA, S.U. (2013): “‘General Conclusions’” in Mantai, City by the Sea by John Carswell, Siran Deraniyagala and Alan Graham, Linden Soft Verlag, Aiochwald, Germany.

DE TERRA, H. and PATERSON, T.T. (1939): Studies on the Ice Age in India and Associated Human Cultures, Washington: Carnegie Institute, Publication No. 493.

DE TERRA, HELMUTT (1969): Early Man: As Depicted at the International Symposium, Academy of Natural Sciences, Philadelphia.

DUBEY-PATHAK, MEENAKSHI (2014): “Rock Art of the Bimbetka Period in India” (PDF), Adoranten 2014. Tanums Hällristningsmuseum Underslös.

DOUGLAS, M.M.; DOUGLAS, J.M. (2016): Exploring Human Biology in the Laboratory, Morton Publishing Company, USA.

DOUKA, K. (2019): “Age Estimates for the Hominin Fossils and the Onset of the Upper Palaeolithic at Denisova Cave”, Nature 565 (7741): 640–644.

FOOTE, R. B. (1868): “On the Distribution of Stone Implements in Southern India”, Quarterly Journal of the Geological Society of London 24: 484–495.

FOOTE, R.B. (1883): “On the Geology of Madura and Tinnevelly Districts”, Memoirs of the Geological Survey of India 20 (2): 1–103.

FOOTE, R. B. (1886): “Notes on the Prehistoric Finds in India”, Journal of the Anthropology Institute of Great Britain and Ireland 16: 70–75.

FOOTE, R.B. (1916): The Foote Collection of Indian Prehistoric Antiquities: Notes on Their Ages and Distribution, Madras: Government Museum.

GOONATILAKE, SUSANTHA (1981): The Formation of Sri Lankan Culture, Ancient Ceylon, No. 4.

GREGORY, J.W. (1968): The Great Rift Valley, Frank Cass & Co. Ltd., London.

HAVILAND, WILLIAM A.; WALRATH, DANA; PRINS, HARALD E.L.; McBRIDE, BUNNY (2007): Evolution and Prehistory: The Human Challenge (8th Ed.), Belmont, CA.

HIGHAM, TOM; et al. (2004): “The Timing and Spatiotemporal Patterning of Neanderthal Disappearance”, Nature, 21 August 2014, 512 (7514): pp. 306–309.

HOLLOWAY, R. L. (1985): “The Poor Brain of Homo sapiens neanderthalensis”, in Delson, E. (Ed.): Ancestors: The Hard Evidence, Alan R. Liss, Manhattan.

IQBAL, SARAH (2018): “Ancient Stone Tools Found in Tamil Nadu Push Back ‘Out of Africa’ Exodus Date”, The Wire, 2 February 2018. (Tools Found in India Suggest Humans Left Africa Earlier Than We Thought).

JACOBS, ZENOBIA; LI, BO; SHUNKOV, MICHAEL; et al. (Jan. 2019): “Timing of Archaic Hominin Occupation of Denisova Cave in Southern Siberia”, Nature 565 (7741): 594–599.

JAVID, ALI and JAVEED, TABASSUM (2008): World Heritage Monuments and Related Edifices in India, Algora Publishing, New York.

JOSHI, R.V. (1972): “Environment and Evolution of Stone Age Cultures in India, with Reference to Middle Stone Age Cultures”, in (F. Bordes Ed.): The Origin of Homo Sapiens, pp. 91–93, UNESCO, Paris.

KENNEDY, K.A.R. (1975): The Physical Anthropology of the Megalithic Builders of South India and Sri Lanka, Canberra.

KENNEDY, K.A.R. (1990): “Palaeodemography of Sri Lanka and Peninsular India: A Cross-regional Survey”, Perspectives in Archaeology: Leelananda Prematillake Festschrift 1990; Ed. Sudharsan Seneviratne et al. Peradeniya: 29–37.

KENNEDY, K.A.R. and CHIMENT, J. (1991): “The Fossil Hominid from Narmada Valley, India; Homo erectus or Homo sapiens?”, Indo-Pacific Prehistory Association Bulletin 10 (1): 42–58.

KENNEDY, K.A.R. (2000): God Apes and Fossil Men; Palaeoanthropology in Asia, Michigan University Press.

KLEIN, R. (1999): The Human Career: Human Biological and Cultural Origins, University of Chicago Press, Chicago.

KRAUSE, J.; FU, Q.; GOOD, J.M.; VIOLA, B. (2010): “The Complete Mitochondrial DNA Genome of an Unknown Hominin from Southern Siberia”, Nature 464 (7290): 894–897.

KRISHNASWAMI, V.D. (1947): “Stone Age in India”, Ancient India, No. 3, pp. 11–57.

KUMAR, AKILESH; PAPPU, SHANTI; RAJAPARA, HARESH M.; GUNNELL, YANNI; SHAKULA, ANIL D.; ASHOK, K. (2018): “Early Middle Palaeolithic Culture in India around 385–172 ka Reframes Out of Africa Models”, Nature 554 (7690): 97–101, 31 January 2018.

MATHPAL, YASHODAR (1984): Prehistoric Painting of Bhimbetka, Abhinav Publications, New Delhi.

MACDOUGAL, DOUG (2004): Frozen Earth: The Once and Future Story of the Ice Ages, University of California Press.

MISHRA, S. (1994): “The South Asian Lower Palaeolithic”, Man and Environment 19: 57–52.

MISHRA, S., VENKATESAN, S.N., RAJAGURU, S.N. (1995a): “A 0.67 Million-Year Acheulian Industry from Peninsular India”, Current Anthropology 36: 847–851.

MISHRA, S. (1995b): “Chronology of the Indian Stone Age”, Man and Environment 20 (2): 11–16.

MISHRA, SHEILA (2006–2007): “The Indian Lower Palaeolithic”, Bulletin of the Deccan College Post-Graduate and Research Institute, Pune, Vol. 66/67.

OAKLEY, KENNETH (2007): Framework for Dating Fossil Man, Transaction Publishers, New Jersey.

PAPPU, SHANTI; GUNNELL, YANNI; TAJEB, MAURICE; BRUGAL, ANUPAMA K.; SANKALIA, H.D. (1964): “Middle Stone Age Culture in India and Pakistan”, Science 146: 365–375.

PETRAGLIA, M. D. (2003): “The Lower Palaeolithic of the Arabian Peninsula: Occupations, Adaptations and Dispersals”, Journal of World Prehistory 17: 141–179.

PINHASI, R., HIGHAM, T.F.G., GOLOVANOVA, L.V., DORONICHEV, V.B. (2011): “Revised Age of the Neanderthal Occupation and the End of the Middle Palaeolithic in the Northern Caucasus”, Proceedings of the National Academy of Sciences 108 (21): 8611–8616.

QUINTANA-MURCI, LUIS (1999): “The mtDNA Evidence for a Coastal Exodus from Africa”, Nature Genetics 23: 437–441.

RAMACHANDRAN, K.S. (1980): Archaeology of South India: Tamil Nadu, Sundeep Prakashan, Delhi.

REICH, DAVID (2019): Who We Are and How We Got Here, Oxford University Press.

RENDELL, H. R., DENNELL, R. W., HALIM, M. (1989): Pleistocene and Palaeolithic Investigations in the Soan Valley, Northern Pakistan, British Archaeological Reports International Series, Cambridge University Press, p. 364 ff.

RIZAL, Y., WESTWAY, K. E., VAN DEN BERGH, G.D. et al. (January 2020): “Last Appearance of Homo Erectus at Ngandong, Java, 117,000–108,000 Years Ago”, Nature 577 (7790): pp. 381–385.

ROBERTS, ALICE (2009): The Incredible Human Journey, Bloomsbury, London.

ROBERTS, ALICE (2011): Evolution – The Human Story, DK Publishing, New York, New York.

ROHLING, E.J. et al. (1998): “Magnitudes of Sea-Level Low-Stands of the Past 500,000 Years”, Nature 394: 162–165.

SANKALIA, H.D. (1964): “Middle Stone Age Culture in India and Pakistan”, Science 146: 365–375.

SANKALIA, H.D. (1974): Prehistory and Protohistory of India and Pakistan, 2nd Edn., Poona: Deccan College.

SANKARARAMAN, S., PATTERSON, N., REICH, D., AKEY, J. M. (2012): “The Date of Interbreeding between Neanderthals and Modern Humans”, in PLOS Genetics 8 (10).

SAWYER, S.; RENAUD, G.; VIOLA, B.; et al. (2015): “Nuclear and Mitochondrial DNA Sequences from Two Denisovan Individuals”, Proceedings of the National Academy of Sciences 112 (51): 15696–15700.

SEMSAW, Sileshi; ROGERS, Michael; SIMPSON, Scott W.; LEVIN, Naomi E.; JAY, Dunbar (4 March 2020): “Co-occurrence of Acheulian and Oldowan Artefacts with Homo erectus Cranial Fossils from Gona, Afar, Ethiopia”, Science Advances 6 (10).

SION, V.; VIOLA, B.; RENAUD, G. et al. (2017): “A Fourth Denisovan Individual”, Science Advances 3 (7).

SONAKIA, ARUN & KENNEDY, KENNETH A.R. (1985): “Skull Cap of an Early Man from the Narmada Valley Alluvium (Pleistocene) of Central India”, American Anthropologist, New Series, Vol. 87, No. 3 (Sept. 1985), pp. 612–616.

STRINGER, C. (1984): “Human Evolution and Biological Adaptation in the Pleistocene”, in Delson, E. (Ed.): Ancestors: The Hard Evidence, Alan R. Liss, Manhattan.

SUBBARAO, B. (1958): The Personality of India, Faculty of Arts, University of Baroda, Baroda.

SUKUMAR, RAMAN & AKILESH, KUMAR (2003): “Excavations at the Palaeolithic Site of Attirampakkam, South India”, Antiquity 77 (297).

SUWA, G. et al. (2007): “Early Pleistocene Homo erectus Fossils from Konso, Southern Ethiopia”, Anthropological Science 115 (2): 133–151.

TARIACH, GEMMA (2018): “Stone Tools from India: Another Blow to Human Evolution Model?”, Discover Magazine, 31 January 2018.

THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, London.

TIWARI, SHIV KUMAR (2000): Riddles of the Indian Rockshelter Paintings, Sarup & Sons, New Delhi.

WELLS, SPENCER (repr. 2003): The Journey of Man, Random House Paperback Edition, New York.

WELLS, SPENCER (2007): Deep Ancestry, National Geographic, Washington, DC.

WILLOCK, Colin (1977): Africa’s Rift Valley, Time-Life Books, New York.

WUNN, I. (2000): “Beginning of Religion”, Numen 47 (4): 417–452.

ZUBOVA, A.; CHIKISHEVA, T.; SHUNKOV, M.V. (2017): “The Morphology of Permanent Molars from the Paleolithic Layers of Denisova Cave”, Archaeology, Ethnology & Anthropology of Eurasia 45: 121–134.

இராசவேலு, சு., திருமூர்த்தி, கோ. (1995): தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், சென்னை.

இராமன், கே.வி. (1979): தொல்லியல் ஆய்வுகள், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

குருமூர்த்தி, சா. (1974): தொல்பொருளாய்வும் தமிழர் பண்பாடும், சென்னை.

சிற்றம்பலம், சி.க. (1999): பண்டைய தமிழகம், குமரன் பப்ளிசர்ஸ், சென்னை.

சீதாராமன், ஆறுமுகம் (194): தமிழகத் தொல்லியல் சான்றுகள், தொகுதி I, சென்னை.

புஷ்பரட்ணம், ப. (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.

ராஜன், கா. (1994): கொடுமணல் அகழாய்வு – ஓர் அறிமுகம், தஞ்சாவூர்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்