கொழும்பு, கொம்பனித்தெரு, அரசினர் புதிய பாடசாலைத் தமிழ் பண்டிதர் சு. இரத்தினசாமி ஐயர் 1930ஆம் ஆண்டில் ‘மேன்மக்கள் சரித்திரம்’ என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் கொழும்பு மீனாம்பாள் அச்சியந்திர சாலையினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நூலின் இரண்டாம் பதிப்பு 2008ஆம் ஆண்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் சமூக, பொருளாதார மாற்றங்களின் பயனாக பல்வேறு இன, மத, சாதிப் பிரிவுகளைச் சேர்ந்த சமூகப்பிரிவினர்களில் இருந்து இனத்துவ அடையாளங்களையுடைய உயர்குழுக்கள் தோன்றின.
இவ்வுயர் குழுக்களுள் ஒன்றான கொழும்பு நகரை மையமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றிருந்த தமிழ் உயர் குழாம் (Elites) பற்றிய வரலாற்றைக் கூறும் நூலாக சு. இரத்தினசாமி ஐயர் அவர்களின் நூல் அமைந்தது. அந்நூலிற்கான முடிவுரையில் ஐயரவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“இந்நகரிலிருக்கும் தமிழ் மக்களுள் அநேகர் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், நீதிபதிகளாகவும், பிரபல நியாயதுரந்தர்களாகவும், வியாபாரிமார்களாகவும், சீமை வர்த்தகர்களாகவும், பாரிய தனவந்தர்களாகவும், வேறுசிலர் ‘அட்ட ஐஸ்வரிய’ப் பிரபுக்களாகவும் இருக்கின்றனர்.” (முடிவுரை: XXVI)
இத்தகைய பெருமக்களின் இயல்புகளை சு. இரத்தினசாமி ஐயர் அவர்கள் தொடர்ந்து விவரிக்கையில், “பலரும் பலவித நோக்கமும், பலவித கொள்கையும், பலவித போக்கும், பலவிதமான உடன்பாடும் உடையவர்களாய் இருந்ததைக் காண்கிறோம் (மேலது XXVI)” என்றும் குறிப்பிடுகிறார். கொழும்பு நகரில் உருவாக்கம் பெற்றிருந்த தமிழ் உயர்குழாம் பல்வகைத் தன்மையுடையதாக இருந்தபோதும் அச்சமூகப் பிரிவினரிடையே காணப்பட்ட பொதுத்தன்மையை இரத்தினசாமி ஐயர் கவனிக்கத் தவறவில்லை. அவர்களைச் சமூகத்தின் மேன்மக்கள் எனவும், அவர்கள் யாவரும் புதிதாகத் தோற்றம் பெற்ற புதிய மேன்மக்கள் (New Elites) என்பதையும் அவர் உணர்ந்திருப்பது தெரிகிறது. தாம் ஆக்கிய நூலை அச்சில் பதிப்பிப்பதற்கு முன்னர் அவர் அக்காலத்தின் பெருமக்கள் பலருக்கும் தமது நூற்பிரதியைக் காண்பித்து, அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து அப்பெருமக்களின் கருத்துகளை நூலின் 6 பக்கங்களில் தந்துள்ளார்.
அக்காலத்தில் சட்ட சபை உறுப்பினராக இருந்தவரும், அறிவாளியுமான கே. பாலசிங்கம் இந்நூலை ‘Dictionary of Tamil Biographies’ (தமிழர் வாழ்க்கை வரலாற்று அகராதி) எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் பாராட்டுரை பின்வருமாறு அமைந்தது.

“Pandit Ratnasamy Aiyar who is a renowned Tamil and Sanskrit scholar, has rendered great service to Tamils by writing a dictionary of Tamil biographies. his enterprise worthy of support.”
புரக்டர் க. சிதம்பரநாதன் அவர்களின் கருத்துரை பின்வருமாறு அமைந்தது.
“இத்தகைய நூல்கள் ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவிலும் எழுதப்பெற்று அத்தேச மக்களை ஒரு திரட்டில் யாவரும் எளிது காணுமாறு இயற்றப் பெற்றுள்ளன. நம்மீழத்திலும், அதுவும் நம் தமிழ் மேன்மக்கள் சாலவும் செறிந்துள்ள இந்நாட்டில் இத்தகைய நூலொன்று வேண்டப்பட்டுள்ளதே.”
சு. இரத்தினசாமி ஐயர் அவர்களின் நூலின் சிறப்பை க. சிதம்பரநாதன் அவர்கள் ‘மேன்மக்கள் சரித்திரத்தை எழுத முன்வந்துள்ள முதற்பெருமை பண்டிதர் இரத்தினசாமியர்க்கே உரித்து’ என்றும் பாராட்டினார். மேன்மக்கள் சரித்திரத்தை எழுதுவதன் மூலம் இலங்கையில் உருவாக்கம் பெற்றுவரும் தமிழ் தேசிய இனத்தின் சரித்திரத்தை எழுதும் புதுமையான முயற்சியில் ஐயர் முனைந்திருப்பதைக் கண்டு அக்கால அறிஞர் பெருமக்களான கே. பாலசிங்கம், க. சிதம்பரநாதன் ஆகியோர் வியந்து பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேன்மக்கள் பற்றிய அண்மைக்கால ஆய்வுகளும் வரைவிலக்கணமும்
‘மேற்கு மாகாணத்தின் முதலியார்கள்’ என்ற தலைப்பில் எழுநா இணையத்தில் வெளியாகிய (19 ஓகஸ்ட் 2026) கட்டுரையில் உயர்குழாம் (Elites) என்னும் எண்ணக்கருவைப் பிரயோகித்து, நவீன காலத்தில் எழுச்சி பெற்ற உயர் சமூகப் பிரிவினர் பற்றி ஆராய்ந்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான மைக்கேல் றொபர்ட்ஸ் ‘Elite Formation and Elites’ (உயர்குழாம் உருவாக்கமும் உயர்குழாம்களும்) என்ற தலைப்பிலான கட்டுரையில் நவீன காலத்தில் இலங்கையில் தோற்றம் பெற்ற உயர்குழாம்கள் குறித்த வரலாற்றை ஆராய்ந்து எழுதியிருந்தார். 1973ஆம் ஆண்டு எழுதப்பட்ட அக்கட்டுரையில் உயர்குழாம் (Elites) பற்றிய வரைவிலக்கணத்தைத் தந்திருந்தார். நவீன அரசியல் சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த வரைவிலக்கணத்தின் முக்கிய கூறுகளை எமது வார்த்தைகளில் கீழே தந்துள்ளோம்.
- உயர்குழாம் உறுப்பினரின் தகுதிகளில் ஒன்று பெருஞ்செல்வத்தை உடைமை கொண்டிருத்தலாகும். சமூகத்தால் பெறுமதிமிக்கதாகக் கருதப்படும் பண்டங்களையும், சேவைகளையும் ஏனைய சமூகக் குழுவினரையும் விடக் கூடிய அளவில் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உடையவர்களே செல்வந்தர் எனப்படுவர்.
- உயர்குழாத்தினர் அரசியல் அதிகாரம் உடையவர்களாக இருப்பர். அரசியல் அதிகாரம் இல்லாதவிடத்து, அந்த அதிகாரம் உடையவர்களை அணுகி கருமம் ஆற்றும் வல்லமை உடையவர்களாய் இருப்பர்.
- சமூகத்தால் மதிப்பு மிக்கதெனக் கருதப்படும் உத்தியோகப் பதவிகளை வகிப்பவராய் உயர்குழாத்தினர் இருப்பர். அரசியல் அதிகாரத்தில் இருந்து வேறுபட்டதான உத்தியோகப் பதவி வழி அதிகாரம் (Authority) உயர்குழாத்தினரின் சமூக அந்தஸ்தின் ஆதாரமாகும்.
- உயர்குழாத்தினர் வெகுஜனங்களிடமிருந்து வேறுபட்ட வாழ்க்கை முறையினையும் நடை, உடை, பாவனைகளையும் கொண்டிருப்பர். இவை ஏனைய சமூகக் குழுக்களால் உயர்ந்தன எனப் போற்றப்படுதலும் உண்டு. ஏற்புடையன அல்ல எனக் கண்டிக்கப்படுவதும் உண்டு.
- சமூகத்தால் மதிக்கப்படும் அறிவுத்துறை ஈடுபாடுகளில் நாட்டமும் விருப்பமும் கொண்டோராகவும், புலமை பெற்றவராயும், கல்வியாளர்களாயும், கலைகளில் வல்லோராயும் இவர்கள் விளங்குவர்.
உயர் சமூக அந்தஸ்து (High Social Status) உயர்குழாத்தின் முக்கிய அடையாளம் ஆகும். இந்த அடையாளம் இலங்கை போன்ற சமூகங்களில் சாதியை அடிப்படையாகக் கொண்டும் நிர்ணயிக்கப்படும்.
1930இல் மேன்மக்கள் சரித்திரம் நூலை எழுதிய சு. இரத்தினசாமி ஐயர் அவர்கள் உயர்குழாம் (Elites) என்ற எண்ணக்கரு பற்றியோ, அல்லது அவ்விடயப்பொருள் சார்ந்த உயர்குழாம் கோட்பாடுகள் (Elite Theories) என அழைக்கப்படும் கோட்பாடுகள் பற்றியோ அறிவு உடையவராக இருந்தார் எனக் கூறுதல் இயலாது.
அத்தகைய கோட்பாட்டு அறிவை (Theoretical Knowledge) சு. இரத்தினசாமி ஐயரிடமும் நாம் எதிர்பார்ப்பதும் அறிவுடைமையாகாது. மைக்கல் றொபர்ட்ஸ் அவர்கள் கூறியிருக்கும், பெரும் செல்வத்தின் உடைமையாளர்கள், அரசியல் அதிகாரம் உடையவர்கள், உத்தியோகப் பதவிகள் வழி அதிகாரம் உடையவர்கள், உயர் பண்பாட்டைத் தழுவியவர்கள், அறிவாளிகள் ஆகிய முக்கிய உயர்குழாம் பண்புகளை உடைய பெருமனிதர்களை மேன்மக்கள் என சு. இரத்தினசாமி ஐயர் அடையாளம் கண்டிருப்பது வியந்து பாராட்டத்தக்கது. ஐயரவர்களின் முகவுரையில் மேன்மக்கள் குறித்து அவர் கூறுவது கவனத்திற்குரியது.
“மேன்மக்களென்றது மானிடருள் கல்வியறிவொழுக்கம், சமயபக்தி, தானதருமம், நற்குண நற்செய்கை, சாந்தம், பொறை, அடக்கம், பரோபகாரம், பிரபுத்துவம், பகுத்தறிவு, இன்சொல், ஈகை, இரக்கம் முதலான இன்னோரன்ன சிறந்த குணங்களையும் செயல்களையுமுடைய உத்தமர்களே. சொல்லளவிலும் பார்க்கச் செயலளவில் மேன்மக்களாதலே மிக்க விஷேடமென்றார் அறிவுடையோர்.”
ஐயரவர்களின் மேன்மக்கள் குறித்த வரைவிலக்கணம் அகம் சார்ந்த மனிதாயப் பண்புகளுக்கு முதன்மையளிப்பதாக அமைந்துள்ளது. ஆயினும் நாம் ஏலவே எடுத்துக்காட்டிய பின்வரும் மேற்கோள் புறவயமான அளவுகோல்களையும் குறிப்பிடுவதைக் காணலாம்.
“இந்நகரிலிருக்கும் தமிழ் மக்களுள் அநேகர் அரசாங்க உத்தியோகத்தர்களாகவும், சட்டசபை அங்கத்தவர்களாகவும், பிரபல நியாயத்துரந்தர்களாகவும், டாக்டர்மார்களாகவும், வியாபாரிமார்களாகவும், புறோக்கர்மார்களாகவும், சீமை வர்த்தகர்களாகவும், அட்ட ஐஸ்வரியப் பிரபுக்களாகவும் இருக்கின்றனர்.”
இக்கூற்றில் பலவகைப்பட்ட குழுவினரை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இவர்களை மூன்று குழுக்களாக நாம் இனம் பிரித்துக் கொள்ள முடியும்.
- உயர்தொழில்களில் ஈடுபட்டிருப்போர் (Professionals), அரசாங்க உத்தியோகத்தர்கள், சட்டசபை உறுப்பினர்கள், நீதிபதிகள், நியாயத்துரந்தர்கள், டாக்டர்கள் ஆகியோர் முதலாவது பிரிவினராவர்.
- வியாபாரம், வங்கித்தொழில் ஆகியவற்றில் இடைத்தரகர்களாகச் செயற்பட்டோர், புறோக்கர்கள் (Brokers), சிறாப்பர்கள் (Shroffs) ஆகியோர் இரண்டாவது முக்கிய பிரிவினராவர்.
- சீமை வர்த்தகர்கள் என்பது ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் (Export–Import Trade) ஈடுபட்டோரையும், பாரியதான வர்த்தகர்களையும், பெருந்தோட்டங்களிலும் நகரச் சொத்துகளிலும் (Plantations and Urban Property) முதலீடு செய்துள்ளவர்களுமான முதலீட்டு முயற்சியாளர்களையும் உள்ளடக்கிய குழுவாகும்.
இக்குழுக்களைச் சேர்ந்த பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளை அகரவரிசையில் தொகுத்துத் தருவதாக மேன்மக்கள் சரிதம் என்னும் இந்நூலில் ஏறக்குறைய 390 வரையான பெருமக்களின் வாழ்க்கைச் சரித்திரக் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சமூக அசைவியக்கம்
சமூக மாற்றங்களின் பயனாக மேல்நிலைக்கு வரும் சமூகப் பிரிவினரின் உருவாக்கத்தை சமூக அசைவியக்கம் (Social Mobility) என்னும் எண்ணக்கருவின் துணையுடன் விளக்கலாம். சமூகக் கட்டமைப்பின் கீழ் அடுக்குகளில் இருந்தோர், கல்வியாலும், வர்த்தகம் போன்ற தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதாலும் சமூகக் கட்டமைப்பின் மேலடுக்குகளுக்கு உயர்ச்சியடைவதை சமூக அசைவியக்கம் என்ற கருத்தாக்கம் குறிப்பிடுகிறது. சு. இரத்தினசாமி ஐயரின் நூலில் குறிப்பிடப்பட்டோரில் பெரும்பான்மையினர் சாதாரண மனிதர்களாக இருந்து கல்வியாலும், வர்த்தக முயற்சிகளால் பொருளீட்டியும் வாழ்க்கையில் உயர்நிலையடைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான உயர்ச்சியைச் சில தனிநபர்கள் தமது வாழ்க்கைக் காலத்திலேயே அடைந்திருத்தல் முடியும். இவ்வாறு சமூகப் படிநிலையில் உயர்ந்து சென்றவர்கள், தம்மோடு தம் குடும்பத்தினரையும், உறவினர்களையும் உயர்நிலைக்கு உயர்த்தி விடுவர். தனிநபர் ஒருவரின் வாழ்க்கைக் காலத்தில் அடையப்பெறும் உயர்ச்சியோடு தலைமுறை வழிவரும் அசைவியக்கத்தையும் (Intergenerational Mobility) இக்கருத்தாக்கம் உள்ளடக்கியுள்ளது. இலங்கையில் கொழும்பு நகரம் அரச நிர்வாகத்தினதும், வர்த்தகத் தொழில் முயற்சிகளினதும் மையமாக விளங்கியது. இக்காரணத்தால், வாழ்க்கையில் உயர்ச்சி பெற்ற மேலோர் குழுக்கள் கொழும்பை நோக்கி இடம்பெயர்தல் ஒரு கட்டாயத் தேவையாயிற்று. புவியியல் சார்ந்த இவ்விடப்பெயர்ச்சியை ‘பக்கவாட்டு அசைவியக்கம்’ (Lateral Mobility) எனக் குறிப்பிடலாம். வாழ்க்கையில் உயர்ச்சி பெற்ற வட இலங்கையின் யாழ்ப்பாணத் தமிழர்களில் பெரும்பான்மையினர் 1830–1930 காலத்தில் கொழும்பை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
மேன்மக்கள் சரித்திரம் நூல் பல நிலைகளிலும் ஏற்படும் உயர்ச்சியை எடுத்துக் கூறுகிறது. ஆங்கிலப் பாடசாலையில் கற்று ‘சீனியர்’ பரீட்சையில் தேறியபின் ‘கிளரிக்கல் லைனில்’ உயரும் இளைஞர்கள் முதல், கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக்குச் சென்று கல்வி கற்று சிவில் சேவைப் பரீட்சையில் சித்தி பெற்ற பெருமையைப் பெற்ற பொன்னம்பலம் அருணாசலம் வரை, பலர் இதில் அடங்குவர். இவ்வாறு உயர்ச்சி பெற்ற தனிநபர்களின் வாழ்க்கைச் சரிதக் குறிப்புகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இவர்கள் யாவரிடமும் காணும் பொது இயல்புகளாக விடாமுயற்சி, ஊக்கம், கடின உழைப்பு, கல்வியின் மீதான வேட்கை என்பன அமைந்திருப்பதைக் காணலாம். ஆகையால் மேன்மக்கள் சரித்திரத்தில் விவரிக்கப்படும் ஆளுமைகளில் பெரும்பான்மையினோர் உழைப்பால் உயர்ந்தோர் என்று கூறத்தக்கவர்களே ஆவர்.
சமூக அசைவியக்கம் – ஒரு மாதிரி
மரபுவழிச் சமூகங்களின் உயர்குலத்தின் (Aristocracy) பண்புகளும், தகுதியும், நிலையும் (Position) நபர்களின் முயற்சியால் அடையப்பெறுவன அல்ல; மாறாக அவை நபர்கள் மீது மரபுரிமையாக ஏற்றப்படுவனவாக இருந்தன. கொழும்பு மாநகரில் ‘றிக்வெஸ்ற் கோட்’டென்னும், நீதித்தலத்திற்கு கொம்மிஷனராய் விளங்கும் W.D. நைல்ஸ் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை சு. இரத்தினசாமி ஐயர் பின்வருமாறு எழுதுகிறார்.
“இப்பேரறிஞருடைய சந்ததி வரலாற்றை இங்குள்ளாரிடம் விசாரித்த போது எமக்கு விபரமாகக் கூறுவாரில்லை. ஆகவே யாம் ஒரு வயோதிபரிடம் சென்று விசாரித்த பொழுதுதான் அவர் சிலவற்றைத் தெரிவித்தார். அதை இங்கு தருகிறோம். அதாவது புன்னாலைக் கட்டுவன் என்னுமிடத்தில் வேளாண் மரபிலே உதித்த வேலாயுதம் என்று ஒருவர் இருந்ததாகவும், இவருக்குக் கதிரேசன் என்ற ஒரு புத்திரன் இருந்ததாகவும், இக்காலத்தில் இவர் மிஷனரியிற் சேர்ந்து கல்வி கற்றுக் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி ‘Nathaniel Niles’ என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தாரென்றும், இந்த நதானியல் நைல்ஸுக்கு ஜோன் நைல்ஸ் என்றும், டானியல் பூர் நைல்ஸ் என்றும், சாமுவல் நைல்ஸ் என்றும் மூன்று புத்திரர்கள் உண்டென்றும் தெரிவித்தார். இந்த மூவருள் டானியல் பூர் (Daniel Poor) என்பவர் வட்டுக்கோட்டை மிஷன் பாடசாலையில் கல்வி கற்று அரங்கேறியதாகவும், அக்காலத்திலிருந்த பாதிரியாரைத் தமக்குத் துணையாகக் கொண்டு வட்டுக்கோட்டையிற்றானே ஹைஸ்கூல் என்ற நாமத்துடன் ஓர் வித்தியாசாலையைத் ஸ்தாபித்து பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து உலகில் நற்கீர்த்தி பெற்று விளங்கினாரென்றும், இவருடைய புத்திரரே இப்பொழுது நீதவானாக இருக்கின்றாரென்றும் அறியலானோம். ஆகவே சீமான் W.D. நைல்ஸ் அவர்களுடைய திறமையைப் பற்றி பலரும் மெச்சியதால் இப்பேரறிஞரை யாமும் நன்கு மதித்து எழுதலானோம். இவர் யாழ்ப்பாணத்தில் பலகாலம் பிரபல நியாயதுரந்தராக இருந்து பிரக்யாதி பெற்று விளங்கினார். இவருடைய திறமையை நன்குணர்ந்த அரசினர், ‘டிஸ்திறிக்’ நீதிபதியாக நியமித்தனர். இவர் இதுகாறும் மட்டக்களப்பு, சிலாபம், திரிகோணமலை என்னுமிடங்களிற் கடமை பார்த்துப் பலராலும் நன்கு மதிக்கப் பெற்றார். வடமாகாணத்திலுள்ள நியாயவாதிகளுள் முதலாவதாக இவ்வுத்தியோகத்தைப் பெற்றவர் இவர் ஒருவரேயாம். இவர் ஆழ்ந்த அறிவும், அமைதியான போக்கும், விவேக புத்தியும், சாந்த குணமும், மிக்க பொறுமையுடையவராகவும் காணப்படுகின்றார்.”
W.D. நைல்ஸ் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் சட்டத்துறையில் பிரகாசித்த தமிழர்களுள் ஒருவரின் வாழ்க்கையின் உயர்ச்சியைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது. இலங்கைச் சட்டக்கல்லூரி 1872இல் ஆரம்பிக்கப்பட்ட பின்னருள்ள ஏறக்குறைய 50 ஆண்டுக்காலப் பகுதியில் (1872–1930) உருவாக்கம் பெற்ற சட்டத்துறை நிபுணத்துவமுடைய நீதிபதிகள், நியாயதுரந்தர்கள் (Proctors and Advocates) ஆகிய உயர் தொழில் பிரிவினர் கொழும்புத் தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஆளுமைகளாகப் பிரகாசித்தனர். சு. இரத்தினசாமி ஐயரின் நூல் இந்த ஆளுமைகள் பலர் பற்றிய விவரிப்பைத் தருகின்றது.
மருத்துவத்துறை உயர் தொழில் வகுப்பினர்
உயர்தொழில் வகுப்பினரில் சட்டத்துறையினருக்கு அடுத்த நிலையில் மருத்துவத்துறையில் பிரகாசித்த தமிழர்கள் விளங்கினர். மருத்துவத் துறையில் யாழ்ப்பாணத்தவர்கள் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்தனர். எஸ்.எவ். கிரீன் (1822–84) என்னும் அமெரிக்கர் 1848ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மானிப்பாய் என்னும் இடத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரை மேலைத்தேச மருத்துவ முறையில் பயிற்றுவித்தார். 1870ஆம் ஆண்டில் கொழும்பில் இலங்கை மருத்துவக் கல்லூரி அரசாங்கத்தால் தொடக்கப்பட்ட பொழுது, கிரீனின் மாணவர்கள் கொழும்புக்கு மாற்றப்பட்டனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவக் கல்வியைப் பெற்று தனியார் துறை மருத்துவ சேவையிலும் அரச சேவையிலும் பிரகாசித்தனர். இது பற்றிக் குமாரி ஜயவர்த்தன பின்வருமாறு கூறுகிறார்.
“முன்னிலையில் திகழ்ந்த மருத்துவர்களுக்கு சில உதாரணங்களைக் கூறலாம். Dr. M.R. றொக்வூட் (பிறப்பு 1843) சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் வரை இவர் அரச மருத்துவமனைகளில் பணியாற்றினார். Dr. S.C. போல் (பிறப்பு 1872) L.R.C.P., F.R.C.S. போன்ற உயர் பட்டங்களைப் பெற்றார். அவர் அரச சேவையில் உயர்ச்சி பெற்றுத் தனிச்சிறப்புகள் அடைந்ததோடு, மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார். Dr. M. சின்னத்தம்பி (பிறப்பு 1859) F.R.C.S. (எடின்பேர்க்), M.D. (பிரஸ்ஸல்ஸ்) ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு டி சொய்சா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் சிறப்புறப் பணியாற்றினார். Dr. E.V. ரட்ணம் மருத்துவக் கல்வியை முடித்த பின் 1900ஆம் ஆண்டு முதல் அரசுப் பொது மருத்துவமனையில் கடமையாற்றத் தொடங்கினார். பின்னர் 1906ஆம் ஆண்டில் தனது சொந்த மருத்துவமனையை ஆரம்பித்தார். Dr. யொனதன் ஹோமர் (பிறப்பு 1878) தமது மருத்துவமனையை ஆரம்பிக்கும் முன்னர் அரச மருத்துவராகப் பணிபுரிந்தார். Dr. முத்துக்குமாரு (பிறப்பு 1865) அபர்டீன் சென்று கல்வி கற்றார். அவர் தனியார் மருத்துவமனையைத் தாபித்து அதன் மூலம் விசாலமான சேவையை வழங்கினார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறதுறைகளிலும் யாழ்ப்பாணத்தவர்கள் தடம் பதித்தனர். சட்டத்துறை, பொறியியல்துறை என்பவற்றிலும் பிற உயர் தொழில்களிலும் இவர்கள் பிரகாசித்தனர். யாழ்ப்பாணத்தின் இரண்டாம் நிலைக் கல்விக்குரிய பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கின. இத்தரமான கல்வி யாழ்ப்பாணத்தவர்களின் உயர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. இந்தியாவிற்கோ அல்லது பிரித்தானியாவிற்கோ சென்று மேற்படிப்பையும் அவர்கள் மேற்கொண்டனர்.”
வர்த்தகம், வங்கித்தொழில் – இடைத்தரகர்கள்
உயர்தொழில் துறைகளில் புறோக்கர்கள், சிறாப்பர்கள், காசாளர்கள் என்னும் பதவிகளில் இருந்த தமிழர்களைத் தனித்த ஒரு பிரிவினராக நோக்குதல் வேண்டும். கொழும்புத் தமிழ்ச் சமூகத்தில் புறோக்கர்கள், சிறாப்பர்கள், காசாளர்கள், கொமிசன் ஏஜன்டுகள் போன்றோர் வகித்த முக்கியத்துவம் குறித்து சு. இரத்தினசாமி ஐயர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதை இந்நூலினைப் படிப்போர் தெரிந்துகொள்வர்.
குமாரி ஜயவர்த்தன அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிறாப்பர்கள், காசாளர்கள், புறோக்கர்கள் ஆகியோர் கொழும்பு நகரில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களாக இருந்தனர் என்பதை ‘Nobodies to Somebodies’ என்ற நூலின் 11ஆம் அத்தியாயத்தில் ‘வர்த்தகம், வங்கித்துறைகளின் தரகர்களும், நடுவர்களும்’ (Intermediaries in Commerce and Banking) என்னும் தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார் (தமிழ்மொழிபெயர்ப்பு நூல், பக். 187–190). அவரது நூலில் இருந்து சில தகவல்களை மேற்கோளாகக் கீழே தந்துள்ளோம்.
“கொழும்பு நகரின் செல்வாக்கு மிக்க மனிதர்களுள் ‘அந்நிய உடைமையாளர்களின்’ வர்த்தக நிறுவனங்களிலும், முகவர் இல்லங்களிலும் (ஏஜன்சி ஹவுஸஸ்) தரகர்கள், காசாளர்கள், சிறாப்பர்கள் ஆகிய இடைநடுவர்களாகப் பணிபுரிந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் முக்கியமான ஒரு குழுவாக விளங்கினர்” என அவர் குறிப்பிடுகிறார் (பக். 187). “இவ்வங்கித்துறையும் புறோக்கர் தொழிலும் சிங்களவர்களால் உள்நுழைந்து வெற்றிகளைக் காண முடியாத துறையாக இருந்தன” என்றும் அவர் குறிப்பிடுகிறார் (பக். 187). “இலங்கையில் கோப்பித்தொழில் செய்கையின் ஆரம்பகட்டத்தில் வங்கித் தொழிலும் வங்கி முறைமையும் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. இக்காலத்தில் தரகர்கள் முக்கியமான சேவையொன்றை வழங்கினர். உண்டியல்களைக் கழிவு செய்யும் இச்சேவையினால் கொமிசன், வட்டி என்பன லாபமாகக் கிடைத்தன. யாழ்ப்பாணத்தில் கல்விகற்றோருக்கு இத்துறையில் சாதகமான வாய்ப்புகள் இருந்தன. அவர்களின் ஆசிரியர்களான அமெரிக்கர்கள் யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்குக் கல்வியை ஊட்டியதோடு வர்த்தகம் தொடர்பான திறன்களையும் அவர்களிடம் விதைத்தனர். ஐரோப்பியரல்லாத வர்த்தகர்களான செட்டிகள், முஸ்லிம்கள் ஆகியோர் தமிழ்பேசும் வர்த்தகர்களாதலால் யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்துறையில் பிறரை விட இலகுவாக நுழைந்து முன்னேற முடிந்தது (பக். 187–188).”
சிறாப்பர் கதிரவேலு குடும்பம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புரோக்கர்களில் கதிரவேலு குடும்பத்தினர் பிரபலம் மிக்கவர்கள் (பக். 189) எனக் குமாரி ஜயவர்த்தன குறிப்பிடுகிறார். கதிரவேலு பற்றியும் அவரது புத்திரர் ஞானசேகரம் பற்றியும் குமாரி ஜயவர்த்தன அவர்கள் கூறியிருப்பதை அடுத்து நோக்குவோம்.
“ஓரியன்டல் வங்கியின் பிரதம சிறாப்பராக இருந்த கதிரவேலு தனது இரு மகன்மாரையும் அத்துறையில் ஈடுபட வைத்தார். ஞானசேகரம் 1879ஆம் ஆண்டு தொடக்கம் கண்டியில் ஓரியன்டல் வங்கியில் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் ஹொங்கொங் அன்ட் ஷங்காய் வங்கியில் பணியாற்றினார். இறுதியில் இந்தியன் நாஷனல் வங்கியில் சேர்ந்து பணியாற்றினார். கின்சி வீதியில் ‘மங்கள கிரி’ என்ற மனையில் வசித்த ஞானசேகரம், ரேஸ் கிளப் உறுப்பினராகவும் இருந்தார். இவருடைய சகோதரன் கதிரவேலு நமசிவாயம் இலங்கைப் புகையிரதப் பகுதியில் தலைமைச் சிறாப்பராகப் பணியாற்றினார். பிற்காலத்தில் ஹொங்கொங் அன்ட் ஷங்காய் வங்கியின் பிரதம காசாளரானார். அவர் நிலங்களைக் கொள்வனவு செய்வதில் முதலீடு செய்தார். 1927இல் நமசிவாயம் 617 ஏக்கர் தென்னை, 273 ஏக்கர் ரப்பர் தோட்டங்களை உடைமை கொண்டிருந்தார் (ஜயவர்த்தன 2015: 189).”
குமாரி ஜயவர்த்தன அவர்களின் ஆய்வுக் குறிப்புகளின் உதவியோடு, கதிரவேலு குடும்பம் பற்றியும், ஞானசேகரம் பற்றியும் மேன்மக்கள் சரித்திரம் ஆசிரியர் சு. இரத்தினசாமி ஐயர் 3 பக்கங்களில் (பக். 42, 44, 45) தந்திருக்கும் விவரங்களை ஒப்பிட்டு வாசித்தல் பயனுடையது. நூலின் 42ஆம் பக்கத்தில் சமாதான நீதிபதி சீமான் க. ஞானசேகரம் J.P. அவர்களின் புகைப்படம் தரப்பட்டுள்ளது.
கதிரவேலு அரசாங்கத்தில் அதிகாரம் படைத்த பிரபுவாகவும், தருமம் கொடுப்பதில் சிறந்த கொடை வள்ளலாயும், சிற்றரசனுக்கு ஒப்ப விளங்கியதாகவும் சு. இரத்தினசாமி ஐயர் குறிப்பிடுகிறார். கதிரவேலு குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது பூர்வீக கிராமங்களோடு உள்ள தொடர்பை வலுப்படுத்தியிருந்தனர். இக்குடும்பம் நவாலிப் பகுதிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என சு. இரத்தினசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். கதிரவேலுவின் மகன் ஞானப்பிரகாசம் தமது தந்தையைப் போல் தானதருமங்களை இயன்ற மட்டும் செய்து புகழ் பெற்றார் என்று புகழ்ந்துரைக்கிறார். ஜெனரல் ஆஸ்பத்திரியில் தரும வைத்தியசாலை ஒன்றை ஏற்படுத்தியவர்; யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, கீரிமலைச் சிவன் கோவில், களவோடை அம்மன் கோவில் ஆகியவற்றின் திருப்பணிகளுக்கு உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார். ஞானசேகரத்தின் புத்திரராக விளங்கிய Dr. G. விக்னராஜா பற்றியும் குறிப்புகளை இரத்தினசாமி ஐயர் பதிவு செய்துள்ளார் (பக். 302–303).
1897ஆம் ஆண்டு பிறந்த விக்னராஜா, கேம்பிரிட்ஜ் பரீட்சைகளில் தேர்வடைந்து மெடிக்கல் கல்லூரியில் வைத்திய மாணவராயிருந்து, இங்கிலாந்துக்குச் சென்று உயர்தரக் கல்வியைப் பெற்று LRCP (London), MRCS (Eng.) ஆகிய உயர்பட்டங்களைப் பெற்றதையும், டாக்டராகப் பணியாற்றியதையும், மீண்டும் ஒருமுறை கல்விக்காக இங்கிலாந்துச் சென்று Barrister-at-Law பட்டத்துடன் திரும்பியதையும் குறிப்பிடுகிறார்.
முன்னேற்றத்திற்கான தடைகள்
19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட முதலாளித்துவ உற்பத்திமுறையின் வளர்ச்சியை ஆராய்ந்த பொருளியல் வரலாற்று ஆசிரியர்கள் நான்கு துறைகள் முதலாளித்துவ உற்பத்தி முறையில் முக்கிய வகிபாகம் பெற்றதை எடுத்துக்காட்டியுள்ளனர். அவையாவன,
- சாராய உற்பத்தியும் முதலீடுகளும்
- பெருந்தோட்ட முதலீடுகள்
- காரியச் சுரங்க அகழ்வுத்தொழில்
- ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம்
இந்நான்கு துறை வளர்ச்சியின் குவிமையமாக இலங்கையின் மத்திய மாகாணமும், கொழும்பு நகரை மையமாகக் கொண்ட மேற்கு மாகாணமும் விளங்கின. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்குறித்த துறைகளின் முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் இருக்கவில்லை. இதுபற்றி குமாரி ஜெயவர்த்தன அவர்கள் கூறியிருக்கும் கருத்துகளை எமது வார்த்தைகளில் சுருக்கமாகக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
“இலங்கையில் 19ஆம் நூற்றாண்டில் மூலதன ஆக்கம் ஏற்படுவதற்கு பிரதான வழிகளாக இருந்தவை என்று கூறத்தக்க வழிகள் எதுவும் வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை. மதுபான உற்பத்தித் தொழில், பெருந்தோட்ட முதலீடுகள், காரியச் சுரங்க அகழ்வு, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஆகியனவே அக்காலத்தின் பிரதான முதலீட்டு வழிகளாக இருந்தன. வடக்குக் கிழக்கு மக்கள் தொகை அடர்த்தி குறைவாக இருந்த காரணத்தால் வர்த்தகம், மதுபான உற்பத்தி வியாபாரம் ஆகிய இருதுறைகளிலும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டவையாய் இருந்தன. இயற்கை வளங்களில் ஒன்றான காரியம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருக்கவில்லை. கோப்பி, தேயிலைத் தோட்டங்கள் மத்திய மலைநாட்டிலேயே உருவாக்கப்பட்டன.”
மூலதன ஆக்கத்திற்கும் முதலீட்டுக்குமான வாய்ப்புகள் தடைப்பட்ட நிலையில் ஆங்கிலக் கல்வியின் துணைகொண்டு தமிழர்கள் உயர் தொழில்களிலும், புறோக்கர்கள் என்னும் இடைத்தரகர் தொழிலிலும் முன்னிலைக்கு வந்தனர்.
விரிந்த நோக்கு
மேன்மக்கள் சரித்திரம் நூலின் ஆசிரியர் சு. இரத்தினசாமி ஐயர் 390 வரையான தமிழ்ப் பெருமக்களின் வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளைத் தமது நூலில் தந்துள்ளார் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர், சைவர்கள் என எல்லா மதப்பிரிவினரையும் சேர்ந்த மேன்மக்களின் சரிதம் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, சிலாபம், புத்தளம், கொழும்பு, மலையகம் என இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகள் யாவற்றினதும் பெருமக்களைப் பற்றிய விவரங்களை நூலாசிரியர் தருகிறார். அவர் தம் நூலில் சேர்த்துக்கொண்ட பெருமக்களின் அட்டவணையை வகுத்துக்கொள்வதில் நடுவுநிலை, விரிந்தநோக்கு என்பனவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
M.A. அருளானந்தம் (சிலாபம்), C. அரியநாயகம் (மாத்தளை), பிரிட்டோ பபாப்பிள்ளை (கொழும்பு), A.C. செல்லையா (திருகோணமலை), A.S. இளையதம்பி (பொலிஸ் சுப்பிரிண்டன்ட், மட்டக்களப்பு), கதிரைவேற்பிள்ளை (பொறியியலாளர், கல்முனை), ஈ.ஆர். தம்பிமுத்து (சட்டசபை உறுப்பினர், மட்டக்களப்பு), R. குமாரசாமிச் செட்டியார் (வர்த்தகர், கொழும்பு), வ. மயில்வாகனம் (முல்லைத்தீவு/ திருகோணமலை), பெரி. சுந்தரம் (மலையகம்) ஆகியோர் பற்றிய பதிவுகள் சில உதாரணங்களாகும். நூலாசிரியர் சைவ அபிமானம் மிக்கவராயினும் கிறிஸ்தவம், கத்தோலிக்கம் என்னும் இருமதப் பிரிவினர்களையும் சார்ந்தவர்களான மேன்மையும் கீர்த்தியும் மிக்க பெரியோர்களின் வாழ்க்கைச் சரிதங்களையும் நடுவுநிலையோடு விவரித்துக் கூறுகிறார். றொக்வூட், நைல்ஸ், சரவணமுத்து, S.C. போல், A.R. ஹலக், திசவீரசிங்கம், புவிராஜசிங்கம் முதலியோரது வாழ்க்கைக் குறிப்புகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இவை கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் தமிழர் சமூக வாழ்வியலிலும், கல்வி, பண்பாட்டுத் துறைகளிலும் ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைப்பனவாய் அமைந்துள்ளன.
பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பம்
19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் சமூக, அரசியல் வாழ்வில் முதன்மை பெற்றிருந்த சேர். பி. இராமநாதன் (1851–1930), சேர். பி. அருணாசலம் (1853–1930) ஆகியோரின் வாழ்க்கைச் சரிதக் குறிப்புகள் நூலாசிரியரால் விவரமாகத் தரப்பட்டுள்ளன. அ. மகாதேவ, ஆர். சிறிபத்மநாதன் ஆகிய பல உறவினர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் அனுபந்தம் என்னும் பகுதியில் ‘கௌரவ சேர். அருணாசலம் இலங்கை அரசாங்க முறையைச் சீர்செய்து, இராச்சியத்தைத் திருத்திய விதங்கள்’ என்னும் விரிவான கட்டுரையும் (பக். 304–310) நூலாசிரியரால் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது.
கொழும்புத் தமிழர்களான மேன்மக்கள் குழுமத்தின் வரலாற்றைச் சான்றாதாரங்களின் அடிப்படையில் தமிழில் எழுதும் முயற்சியை மேற்கொண்டவர் என்ற வகையில் சு. இரத்தினசாமி ஐயரவர்கள் முன்னோடியான வரலாற்று ஆய்வாளராக விளங்குகிறார்.



