அறிமுகம்
இலங்கையில் சிங்கள மக்களின் சமய வாழ்வில் பத்தினி வழிபாடு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது. சிங்கள மக்கள் பத்தினித் தெய்வத்தினைத் தொற்று நோய்களைத் தீர்க்கும் அதிதேவதையாகக் கொள்கின்றனர். மழைவளம் குன்றிப் பசியும் பிணியும் தோன்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற நோய்களுக்கும் பத்தினியின் சீற்றமே காரணம் என்பதனை மனதிலே கொண்டு, பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதற்காகப் பலவகையான சடங்குகளையும் நிகழ்த்துகலைகளையும் சிங்கள மக்கள் செய்துவருகின்றனர். சிங்களவர்கள் கம்மடுவ, அங்கெலிய, கிரியம்மா தானம், சொக்கறி போன்ற சடங்குகளையும் நிகழ்த்துகலைகளையும் பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதன் பொருட்டு பயபக்தியுடன் மேற்கொண்டு வருகின்றார்கள்.
அங்கெலிய விளையாட்டு
அங்கெலிய என்பது சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பத்தினி வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு சடங்குசார் நிகழ்த்துகலையாகும். இது மரக்கொம்பு அல்லது மான்கொம்பினைக் கொண்டு விளையாடுகின்ற விளையாட்டாகும். இவ்விளையாட்டின் போது கிராமத்தவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிவர். இக்குழுக்கள் ‘உடபில’, ‘யட்டபில’ என்று அழைக்கப்படுகின்றன. உடபில என்பது கோவலனின் (அளுத் தெவியோ, பாலன்க) கட்சியாகும். யட்டபில என்பது பத்தினியின் கட்சியாகும். அங்கெலியவுடன் பெரஹெரா நிகழ்ச்சியும் இணைந்து நடைபெறுகின்றது. இது பாணமை, மாலிதுவ, பியன்வில, துனுஹெல போன்ற இடங்களில் நிகழ்த்தப்படுகின்றது.
ரொபேர்ட் நொக்ஸ் கி.பி. 1681இல் எழுதிய நூலில் அங்கெலிய பற்றிக் காணப்படும் குறிப்பு இலங்கையில் அங்கெலியவுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. ரொபேர்ட் நொக்ஸ் அங்கெலிய விளையாட்டுத் தொடர்பாகத் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“There is another sport, which generally all people used with much delight, being, as they called it, a sacrifice to one of their Gods; to wit, potting Dio. And the benefit of it is, that it frees the country from grief and Diseases. For the beastliness of the Exercise they never celebrated it near any Town, not in sight of Women, but in a remote place. The manner of the game is thus. They have two crooked sticks like Elbows, one hooked to the other, and so with contrivances they pull with Rops, until the one breaks the other; some siding with one stick, and some with the other ; but never is money laid on either side. Upon the breaking of the stick, that party that hath won doth not a little rejoice. Which rejoicing is exprest by Dancing and Singing, and uttering such sordid beastly Expressions, together with postures of their Bodies, as I omit to write them…and even the King himself hath spent time in it, but now lately he hath absolutely forbidden it under penalty of a forfeiture of money. So that now the practice hereof is quite left off. But though it is thus gone into disuse, yet out of the great delight the people had in it, they of Gompala would revive it again, and did…”1
ரொபேர்ட் நொக்ஸின் இக்கூற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:
மக்களால் பொதுவாக மகிழ்ச்சியுடன் விளையாடப்படுகின்ற, பத்தினித் தெய்யோ (Potting Dio) என்று அவர்களால் பெயர்கூறி அழைக்கப்படும் தெய்வங்களுள் ஒருவருக்கு அர்ப்பணம் செய்வதன் பொருட்டு விளையாடப்படும் இன்னுமொரு விளையாட்டும் அங்கே உள்ளது. இவ்விளையாட்டின் மூலம் நாட்டிலுள்ள துயரங்களும் நோய்களும் விடுவிக்கப்படும் என்பதுதான் இவர்களின் நம்பிக்கை போல். மிருகத்தனமான அங்க அசைவுகளைக் கொண்ட விளையாட்டு என்பதினால், நகரங்களிலும் பெண்கள் இருக்கும் பகுதிகளிலும் இது விளையாடப்படாமல் சற்றுத் தொலைவாக உள்ள இடத்திலேயே விளையாடப்படுகின்றது. மடிக்கப்பட்ட முழங்கை வடிவிலான இரண்டு கோணலான தடிகளை அவர்கள் வைத்துள்ளனர். ஒன்று இன்னொன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் அவர்கள் திட்டமிட்டுக் கயிறுகளைப் பிடித்துப் பலமாக இழுப்பர். அதாவது ஒரு கொம்பு மற்றையதை உடைக்கும் வரை இழுப்பர். சிலர் ஒரு தடியை வைத்துக் கொண்டு இதற்கு உதவி செய்கின்றார்கள். இவ்விளையாட்டில் இரு பக்கங்களிலும் பணம் பயன்படுத்தப்படுவதில்லை. கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னர் கொண்டாட்ட நிகழ்ச்சியொன்று நிகழும். இக்கொண்டாட்டமானது சிறிய அளவிலான மகிழ்ச்சி வெளிப்பாடாக இருக்காது. ஆடியும் பாடியும் மிருகத்தனமான கேவலமான சொற்களை உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே உச்சரித்தும் கொண்டாடுவர். உடல்களை ஒன்றிணைத்துக்கொண்டு… நான் அதனை எழுதுவதைத் தவிர்க்கின்றேன். மன்னனும் தானாக நேரத்தைச் செலவு செய்து அங்கே பிரவேசித்திருக்கின்றார். பின்னர் மன்னர் அச்செயற்பாடுகளிற்குத் (மிருகத்தனமான செயற்பாடு) தண்டப்பணம் விதித்துள்ளார். எனவே அத்தகைய செயற்பாடுகள் தற்போது குறைவு. இந்த நடைமுறை மிகவும் அமைதியாக இடம்பெறுகின்றது. அவை குறைந்து பயன்படுத்தப்படாமற் போனாலும் மக்கள் தொடர்ந்து உச்ச மகிழ்ச்சியையே பெற்று வருகின்றனர். கம்பளையில் (Gompla) உள்ளவர்கள் இதனைப் புதுப்பிக்க எண்ணியுள்ளனர். புதுப்பித்தார்கள் (செய்தார்கள்).
அங்கெலிய விளையாட்டுத் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஐதீகக் கதை
பத்தினியும் பாலங்கனும் (கோவலன்) இரு மரக்கிளைகளைப் பிடித்து ஒரு செண்பகமலரைப் பறிக்க முயன்றனர். அப்போது, இரண்டும் ஒன்றோடொன்று கொழுவிக்கொண்டன. இருவரும் அதை விளையாட்டாக மாற்றிய போது, பாலங்கனின் கையிலிருந்த மரக்கொம்பு முறிந்தது. பத்தினி மகிழ்ச்சியில் குதித்தாள். அதனால் அங்கெலிய பத்தினியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் முக்கியமான கலையாடல்களில் ஒன்றாகியது என்று சிங்கள மக்கள் நம்புகின்றனர்.2 அங்கெலியவின் பழங்கதைகள் சிலப்பதிகாரத்துடனும் கம்மடுவவின் போது பாடப்படுகின்ற பத்தினி தெய்வப் பாடல்களுடனும் எவ்விதத் தொடர்பினையும் கொண்டனவல்ல.3
அங்கெலிய விளையாட்டு
அங்கெலிய விளையாட்டிற்கான முன்னாயத்தங்கள்
அங்கெலிய விளையாட்டு விளையாடப்படுகின்ற காலப்பகுதி வந்ததும் கப்புறாளை மற்றும் பஸ்ஸநாயக்க நிலமே போன்றோர் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வர். அங்கெலிய விளையாட்டினை நடாத்துவதற்காக உடபில, யட்டபில போன்ற அணிகளிற்குப் பொறுப்பாக வட்டாண்டிமார் நியமிக்கப்படுவர். இவர்கள் நியமிக்கப்பட்ட நாட்களிலிருந்து சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்றும் அங்கெலிய முடிவடையும் நாட்கள் வரை ‘ஹொலுஹால்’ எனப்படும் சோற்றுடன் முருங்கைக் கீரையையே இவர்கள் உண்ண வேண்டுமென்பதுடன், பாலியல் நடவடிக்கைகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும். ஆனால் அங்கெலிய நிகழ்வின் போது இவர்கள் மதுபானம் அருந்துவர். மதுபானம் அருந்துவதால் இவர்களின் தூய்மைக்குப் பங்கம் ஏற்படாது என்று கருதப்படுகின்றது. அங்கெலிய நிறைவுபெறும் வரை இவர்கள் ஆலய வளாகத்திலேயே கூடாரமமைத்துத் தங்கவைக்கப்படுவர். வட்டாண்டி தூய்மையற்றவராகக் கருதப்படின் அவருக்குப் பதிலாக வேறு வட்டாண்டி நியமிக்கப்படுவார். அங்கெலிய நிறைவுறும் வரை இவர்கள் சவரம் செய்யவோ தலைக்கு எண்ணெய் வைக்கவோ கூடாது.
அங்கெலிய விளையாட்டு ஆரம்பமாகும் நாள் அறிவிக்கப்பட்டவுடன் கிராமத்தில் மாமிச உணவானது முற்றாகத் தடை செய்யப்படும். மக்கள் அனைவரும் மரக்கறி உணவையே உண்பர். இதனை மேற்பார்வை செய்வதற்காக ஆலய நிர்வாகத்தினரால் ஒரு குழுவினர் நியமிக்கப்படுவர். யாராவது வீட்டிலே புலால் உணவினைச் சமைத்தாலோ அல்லது வைத்திருந்தாலோ ஆலயத்தினரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் அவர்களிற்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டு, அவர்கள் ஊரை விட்டு விலக்கியும் வைக்கப்படுவர். இக்காலத்தில் கிராமத்தில் வசிப்பவர்களிடையே பாலியல் உறவுகள் தவிர்க்கப்படும். பிரசவமான தாய்மார்கள், மாதவிடாயுள்ள பெண்கள் போன்றோர் அருகாமையிலுள்ள வேறு கிராமத்திற்கு அனுப்பப்படுவர். அல்லது காட்டிலே ‘குடிலிகே’ என்ற கூடாரம் அமைத்துத் தங்கவைக்கப்படுவர்.
காட்டிற்குச் சென்று கொம்புகளையும் கயிற்றிற்குத் தேவையான கொடிகளையும் வெட்டியெடுக்கின்ற பணியில் ஒவ்வொரு கட்சியினரும் ஈடுபடுவர். இச்செயற்பாட்டிற்கு ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த வட்டாண்டிமாரே பொறுப்பாக இருப்பர். பாலை, வீரை, குறுமண்கஸ், ஹபற, வாயன் போன்ற மரங்களிலிருந்தே கொம்புகள் பெறப்படுகின்றன. கயிறு திரிப்பதற்காக மைலா மரத்தின் வேரும் களவெல என்ற கொடியும் மான், மரை போன்றவற்றின் தோல்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஹெனகந்தவடவிற்காக (செவ்வாய்க்குற்றி) இடிவிழுந்த பனைமரம் அல்லது இடிவிழுந்த பாலை மரம் போன்றவற்றினைத் தெரிவு செய்வர்.
இளையோர் விளையாடுகின்ற விளையாட்டான கொழு அங்கெலியவிற்கான கொம்புகளே முதலிலே தெரிவு செய்யப்படும். உடபில, யட்டபில ஆகிய இரு அணியினரும் கப்புறாளவும் சேர்ந்தே இதற்கான கொம்புகளைத் தெரிவு செய்வர். அதன் பின்னரே மஹா அங்கெலியவிற்கான கொம்புகளை ஒவ்வொரு கட்சியினரும் தனித்தனியாகக் காட்டிற்குச் சென்று வெட்டியெடுப்பர்.
காட்டிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்ட கொம்புகளை, மத்தியஸ்தம் வகிப்பதற்காகப் பஸ்ஸநாயக்க நிலமேயினால் நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் கப்புறாளைமார் போன்றோர் பரிசோதனை செய்து விளையாடத் தகுதியுள்ள கொம்புகளைத் தெரிவு செய்வர். ஒரே அளவினையுடைய கொம்புகளே விளையாடத் தகுதியுள்ளனவாகக் கருதப்படும். விளக்கெரிக்கப் பயன்படும் திரித்துண்டம் ஒன்றினால் கொம்பினது மார்புப்பகுதி அளக்கப்பட்டே கொம்பினது அளவு கணிக்கப்படும். கொம்பின் அளவு பெரியதாகக் காணப்படின் அது சீவப்பட்டுச் சிறியதாக்கப்படும். கொம்பு சிறியதாக இருப்பின் அது கயிற்றினைக் கொண்டு கட்டிப் பெரிதாக்கப்படும்.
விளையாடத் தகுதியான கொம்புகளைத் தெரிவு செய்த பின்னர் கொம்புகளை வலுப்படுத்தும் செயற்பாடு இடம்பெறும். கொம்புகளை வலுப்படுத்துவதற்காக வட்டாண்டிமாரினால் கொம்புகளின் மீது மாக்கட்டிகளைக் கொண்டு தயார் செய்த பசையும் சோற்றுப்பசையும் பூசப்படும்.
அங்கெலிய விளையாட்டானது கதிர்காமத் தெய்வத்தின் திருவிழாவின் இறுதியில் நடைபெறுகின்ற நீர்வெட்டுச் சடங்கு முடிவடைந்த பின்னர் ஆரம்பமாகும். ஆவணி மாதத்திலுள்ள வளர்பிறையிலே தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு இந்நிகழ்வு இடம்பெறும். இறுதிநாள் (பதினைந்தாவது நாள்) பூரணை நாளாக அமைந்திருக்கும். முதல் மூன்று நாட்கள் கொழு அங்கெலிய (Kolu Ankeliya) இடம்பெறும். இதனை இக்கிராமத்தில் வசிக்கின்ற இளவயதினையுடைய ஆண்கள் மேற்கொள்வர். அடுத்து வருகின்ற ஒன்பது நாட்கள் மஹா அங்கெலிய (Maha Ankeliya) இடம்பெறும். இது கிராமத்திலுள்ள பெரிய பருவமுள்ள திருமணமான ஆண்களால் மேற்கொள்ளப்படும் விளையாட்டாகும். பதின்மூன்றாம் நாள் வலிபனாவ (Valibanava) என்ற நிகழ்வு இடம்பெறும். பதினான்காம் நாள் பெரஹெரா ஊர்வலமும் பதினைந்தாம் நாள் நீர்வெட்டுச் (Diya Keliya) சடங்கும் இடம்பெறும்.
கொழு அங்கெலிய நிகழ்வு
அங்கெலியவில் முதல் மூன்று நாட்களும் இடம்பெறுகின்ற நிகழ்வு கொழு அங்கெலிய எனப்படும். இது அக்கிராமத்தில் வசிக்கின்ற இளவயதினையுடைய ஆண்கள் மட்டுமே விளையாடுகின்ற விளையாட்டாகும். இதன்போது முறிக்கப்படுகின்ற கொம்புகள் அளவில் சிறியனவாகக் காணப்படும். அனேகமாகப் பாலை மரங்களிலிருந்து பெறப்பட்ட கொம்புகளே இதன்போது முறிக்கப்படுகின்றன. கொம்பு முறிப்பதற்கு முன்னர் பத்தினி ஆலயத்திலும் அளுத் தெவியோவின் ஆலயத்திலும் இரு கட்சியினரும் தத்தம் கொம்புகளை வைத்துப் பூசை செய்வர். பூசைகள் நிறைவடைந்த பின்னர் கொம்புகள் தட்டிலே வைக்கப்பட்டுக் கொம்பு முறிப்பதற்கான இடத்திற்குக் கொண்டுவரப்படும். கொழு அங்கெலிய முறித்தலின் போது உடபில கட்சியினருக்குரிய ஹெனகந்தவட (செவ்வாய்க்குற்றி) பயன்படுத்தப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக நீளமான இரு கயிறுகளை உடபிலவின் கொம்புகளில் கட்டுவர். இக்கயிறு வரன் (Varan) என்று அழைக்கப்படும். அக்கயிறுகளில் ஒன்றை உடபிலவினரும் மற்றையதை யட்டபிலவினரும் பிடித்து இழுப்பர். கொழு அங்கெலியவில் முறிக்கப்படுகின்ற முதலாவது கொம்பு பத்தினியின் கட்சிக்கு வெற்றிதரும் முகமாகவே முறிக்கப்படுவது வழக்கமாகும். இவ்விளையாட்டு இடம்பெறும் நாட்களில் பெண்கள் ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

1. அன்கஹ (தாய்மரம்)
2. அன்கஹ வளையம்
3. வடம்தாங்கித் தடி
4. யட்டபிலவினரின் கயிறு
5. யட்டபில கொம்பு
6. உடபில கொம்பு
7. உடபிலவினரின் கயிறு
8. இழுவை வடம் (உடபில)
9. இழுவை வடம் (யட்டபில)
மஹா அங்கெலிய
கொழு அங்கெலிய நிறைவுற்றதும் அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் மஹா அங்கெலிய இடம்பெறும். இவ்விளையாட்டானது கிராமத்திலுள்ள திருமணம் முடித்த பெரிய பருவமுள்ள ஆண்களினால் விளையாடப்படும். இவ்விளையாட்டு விளையாடப்படும் நாட்களில் ஆலய வளாகத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்விளையாட்டின் போதே யட்டபிலவினரிற்குரிய ஹெனகந்தவட (செவ்வாய்க்குற்றி) பயன்படுத்தப்பட்டுக் கொம்புகள் முறிக்கப்படும். இதற்காக ஹெனகந்தவட வெள்ளைத் துணியினால் மூடப்பட்டுக் கொம்பு முறிப்பதற்கான இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இதனை நடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குழியினுள் ஆதாரமாக வைக்கப்படும்.
இரவு நேரத்திலேயே மஹா அங்கெலியப் போட்டிகள் நடைபெறும். இவ்விளையாட்டின் போது ஆலய வளாகத்தினைவிட்டு இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட வெளியில் செல்ல முடியாது. போட்டிக்கான கொம்புகள் ஆலயத்தில் வைத்துப் பூசை செய்த பின்னரே எடுத்துவரப்படும். கொம்புகளை விளையாடப்படுகின்ற இடத்திற்கு எடுத்துவரப்படும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெறும். முதலில் யட்டபிலவினைச் சேர்ந்த கொம்பினை வெள்ளைத்துணியால் போர்த்திக்கொண்டு அக்கட்சிக்குப் பொறுப்பான வட்டாண்டியார் கொம்பு முறிக்கப்படுகின்ற இடத்திற்குக் கொண்டுவருவார். அதன் பின்னர் உடபிலவிற்குரிய கொம்பானது வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்டு அக்கட்சிக்குப் பொறுப்பான வட்டாண்டியால் கொண்டுவரப்படும். அதன்பின்னர் கொம்புகளைத் தாங்கிய ஊர்வலம் இடம்பெறும். முதலிலே அளுத் தெவியோவினுடைய கொம்பினைத் தாங்கிக்கொண்டு செல்ல, பின்னர் பத்தினித் தெய்வத்தின் கொம்பு கொண்டு செல்லப்படும். இவ்வூர்வலமானது இடமிருந்து வலமாக உடபில மற்றும் யட்டபில சந்நிதானங்களை இணைக்கும் வகையிலே வட்டவடிவில் சுற்றிக் கொண்டுவரப்படும். இதற்குப் பின்னர் கொம்புகள் கொம்பு முறிக்கப்படவிருக்கின்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்படும். யட்டபிலவின் கொம்பானது அதற்குரிய கொடிக்கயிறுகளால் பிணைக்கப்பட்டுத் தாய்மரத்துடன் (AnGaha) கட்டப்படும். உடபிலவின் கொம்பானது அதற்குரிய கொடிக்கயிறுகளினால் பிணைக்கப்பட்டு ஹெனகந்தவடவுடன் (செவ்வாய்க்குற்றி) இணைக்கப்படும். ஹெனகந்தவடவிலே பிடித்து இழுப்பதற்காக இரண்டு வடக்கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். அதன்பின்னர் வட்டாண்டிமார் உடபில கொம்பினை யட்டபில கொம்புடன் ஒன்றுடனொன்று பிணைப்பார்கள். கொம்புகள் விலகாது இருப்பதற்காக ‘றிக்கிலிய’ என்ற தடியினைப் பயன்படுத்துவர். அதன்பின்னர் ஹெனகந்த வடவில் கட்டப்பட்ட ஒரு வடக்கயிறை உடபிலவினரும் மற்றைய வடக்கயிறை யட்டபிலவினரும் பிடித்து இழுப்பர். இழுவையின் போது எந்தக் கொம்பு முதலில் உடைகின்றதோ அது தோல்வியடைந்த கொம்பாகக் கருதப்படும். வெற்றிபெற்ற கொம்பானது ஆரவாரத்துடன் சிவப்புத் துணியினால் மூடப்பட்டு அதற்குரிய ஆலயத்திற்குக் கொண்டு செல்லப்படும். அதன்போது வெற்றிபெற்ற கட்சியினர் தோல்வியடைந்த கட்சியினரை இகழ்ந்து வசைப்பாடல்களைப் பாடுவர். ஆபாசக் கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில் சில செய்கைகள் இடம்பெறும். தாய் – மகன் உறவுகள் போன்றன தவறான முறையில் கூறப்பட்டு அது சைகைகள் மூலமும் செய்து காட்டப்படும். சிலர் நிர்வாணமாகவும் நடனமாடுவர். புத்தருக்குரிய வழிபாடுகள் கேலி செய்யப்படும். கொம்பு முறித்தலின் போது அவ்விளையாட்டில் ஈடுபடுபவர்கள் மதுபானத்தினையும் அருந்துவர். இவ்வாறாக ஒன்பது இரவுகளின் போதும் நாளொன்றிற்கு நான்கு அல்லது ஐந்து கொம்புகள் வீதம் உடைக்கப்படும். கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னர் பத்தினி ஆலயத்திற்குரிய கப்புறாளை பின்வரும் பாடலைப் பாடுவார்.
“மீதா குளமே உம் பத்தினியோ
நரலோவா அன்கெலி பலன்ன வெடியோ
மேகமு உவதிர சிரிபா ஹரியோ
அவ் அன்கெலியட சத் பத்தினியோ
ஏசிறி பொட்டக் கென காடத மீ கென
ரண் சலமக் கென தேத புராகன
நொமல நொகில பன நகுசே வயாகன
சித்த பத்தினி எகாதி திவஸ் பலாகன.”4
பத்தினியின் கட்சி அங்கெலிய விளையாட்டின் போது வெற்றி பெற்றால் விவசாயம் செழிப்பாக நடைபெறும் என்றும் அளுத்தெவியோவின் கட்சி வெற்றி பெற்றால் நோய்நொடிகள் ஊரைவிட்டு நீங்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

1. அன்கஹ (தாய்மரம்)
2. அன்கஹ வளையம்
3. யட்டபில கொம்பு
4. உடபில கொம்பு
5. றிக்கிலிய
6. யட்டபிலவினரின் கயிறு
7. உடபிலவினரின் கயிறு
8. ஹெனகந்தவடவினைச் சுற்றிப் போடப்பட்ட கயிறு
9. யட்டபிலவினரின் இழுவை வடம்
10. உடபிலவினரின் இழுவை வடம்
11. ஹெனகந்தவட
12. ஹெனகந்தவடவினை நடுவதற்காக அமைக்கப்பட்ட குழி
வலிபனாவச் சடங்கு
மஹா அங்கெலிய நிறைவு பெற்றதும் பதின்மூன்றாம் நாள் இடம்பெறுகின்ற சடங்கு வலிபனாவ சடங்கு என்று அழைக்கப்படும். வலிபனாவ என்பது கயிற்றினைக் குறைத்தல் அல்லது கயிற்றினை இழுத்தல் என்று பொருள்படும். உடபில, யட்டப்பில போன்ற கட்சியினரிடையே இதுவரை காலமும் இருந்த போட்டி மனப்பான்மையை நீக்கவே இச்சடங்கானது செய்யப்படும். இச்சடங்கின் போதே பெண்கள் ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவர். இச்சடங்கின் போது உடபிலவிற்குரிய கொம்பும் யட்டபிலவிற்குரிய கொம்பும் ஆலயத்திலிருந்து கொம்பு முறிக்கப்படும் இடத்திற்குக் கொண்டுவரப்படும். இக்கொம்புகள் இதுவரை காலமும் முறிக்கப்பட்ட கொம்புகளைவிட அளவில் பெரியதாகக் காணப்படும். கொம்புகள் அதற்கான இடத்திலே வைத்து ஒன்றுடனொன்று கொழுவப்படும். ஆனால் இதன்போது கொம்புகளை உடைப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதன் பின்னர் இரண்டு அணிகளுமே வெற்றிபெற்ற அணிகளாக அறிவிக்கப்படும். இச்சடங்கில் வசைச் சொற்களைக் கூறுவதோ நடனமாடுவதோ இடம்பெறுவதில்லை.
இச்சடங்கு நிறைவுற்றதும் ஆலயத்தின் கதவு திறக்கப்பட்டுப் பூசை இடம்பெறும். ஆனால் அதன்போது திரைச்சீலையொன்றினால் ஆலயத்தின் வாயில் மூடப்பட்டிருக்கும். பக்தர்கள் ஆலயத்திற்குச் சென்று பத்தினி தெய்வத்தையும் அளுத்தெவியோவையும் வழிபடுவர். இதன்போது பக்தர்கள் வெள்ளைத் துணியொன்றில் நாணயக்குற்றியினைச் சுற்றிக்கட்டி ஆலயத்திலுள்ள விளக்கிலே தமக்குள்ள நோய்களைத் தீர்க்கும்படி பத்தினியை வேண்டி நேர்ந்து கட்டுவர். இது ‘பண்டுறு’ (Panduru) என்று அழைக்கப்படும். பூசை முடிவடைந்த பின்னர் உடபில, யட்டபில போன்ற கட்சியினர் தமக்குள் இனிப்பு வகைகளைப் பரிமாறிக்கொள்வர்.
பெரஹர நிகழ்வு
அங்கெலிய விளையாட்டின் பதினான்காம் நாள் பெரஹர செல்லுதல் (ஊர்வலம் செல்லுதல்) இடம்பெறும். இதன்போது மாலை நேரத்தில் ஆலயத்திலிருந்து பத்தினித் தெய்வத்தின் பேழை உடபிலவினரிற்குரிய ஹெனகந்தவிற்கு (செவ்வாய்க்குற்றி) அருகாமையில் எடுத்துவரப்படும். அதன்போது உடபிலவினருடைய சிறிய அளவிலான கொம்பினைக் கப்புறாளை வளைத்துப் பலவீனமாக்குவார். பின்னர் அக்கொம்பு யட்டப்பிலவினரின் கொம்புடன் பிணைக்கப்பட்டு உடைக்கப்படும். முறையாக வெற்றியானது பத்தினிக்கு உரித்தானதாக்கப்படும். அங்கெலிய விளையாட்டின் போது முதலாவதாக முறிக்கப்படுகின்ற கொம்பும் இறுதியாக முறிக்கப்படுகின்ற கொம்பும் பத்தினியின் கட்சிக்கே வெற்றி கிடைக்கத்தக்கதாக முறிக்கப்படுவது வழக்கமாகும்.
கொம்புகள் முறிக்கப்பட்ட பின்னர் பத்தினித் தெய்வத்தின் பேழையும் அளுத் தெவியோவின் பேழையும் ஊர்வலமாக யானைமீது ஏற்றப்பட்டுக் கொண்டு செல்லப்படும். இதற்கு பஸ்ஸநாயக்க நிலமே தலைமை தாங்குவார். முதலிலே அளுத் தெவியோவினுடைய ஊர்வலமும் அதன் பின்னர் பத்தினித் தெய்வத்தின் ஊர்வலமும் செல்லும். ஊர்வலத்தின் போது ‘லிக்கிலிய’ (Likeliya) என்றழைக்கப்படும் கோலாட்டக்காரர்களின் கோலாட்ட நடனமும் இடம்பெறும். இதன்போது லிக்கிலிய ஆடுபவர்கள் மது வகைகளைப் பாவிப்பதுண்டு.
கிராமத்தின் நுழைவாயிலில் பாரிய அரங்கமொன்று அமைக்கப்பட்டிருக்கும். அங்கே நெல், வெற்றிலை, பாக்கு, பூக்கள், தேங்காய், கற்பூரம் போன்றன பத்தினித் தெய்வத்திற்குப் படைக்கப்பட்டிருக்கும். இது அக்கிராமத்தின் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதன் பின்னர் பத்தினித் தெய்வம் யட்டப்பிலவினரின் வீடுகளிற்கும் அளுத் தெவியோ உடபிலவின் வீடுகளிற்கும் கொண்டு செல்லப்படும். ஒவ்வொரு வீட்டிலும் வீட்டிற்கு முன்புறமாகப் பலிப்பீடமொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதிலே நிறைகுடம், மஞ்சள் கலந்த நீர், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், பூக்கள், தேங்காய் எண்ணெய், விளக்கு போன்றன வைக்கப்பட்டிருக்கும். ஊர்வலம் வீட்டிற்கு அருகாமையில் வருகின்ற போது கப்புறாளை நிறைகுடத்திலுள்ள தேங்காயை எடுத்து உடைத்துப் பின்னர் மஞ்சள் கலந்த நீரினை எடுத்து வீட்டிலுள்ளவர்களின் மீது தெளிப்பார். அதன்பின்னர் கப்புறாளையினால் மதுரையில் நெருப்பு எவ்வாறு அணைக்கப்பட்டது என்பது தொடர்பான பாடல் பாடப்பட்டு மக்களுக்கு விளக்கம் கொடுக்கப்படும். அப்பாடல்கள் பின்வருமாறு அமைந்திருக்கும்.
“ஹெமி தெவியோ ஹெமி மஹிமா
ஹெமி மல்வசி வெஸ்ஸீ மெஹேம
மதுராவே கினி நிவ்வே மெஹேம”5
இதன் தமிழ் அர்த்தமானது பின்வருமாறு:
“கடவுளின் மிகுந்த வலிமை காரணமாக
வானத்திலிருந்து பூமழை பொழிந்தது
இவ்வாறே மதுரையில் தீ தணிக்கப்பட்டது”
இதன்போது பக்தர்கள் கப்புறாளைக்கு பண்டுறு எனப்படுகின்ற நேர்த்திக்கான சில்லறைக் காசுகளை வழங்குவர். இவ்வாறு மறுநாள் காலையிலேதான் ஊர்வலம் ஆலயத்திற்குக் கொண்டுவரப்படும். ஆலய வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பத்தினியின் பேழையானது சந்நிதானத்தினுள் வைக்கப்படாமல் ஹெனகந்தவடவிற்கு அருகாமையிலே தற்காலிகமாக வைக்கப்படும். ஊர்வலம் செல்லுகின்ற பகுதியிலே யாராவது இறந்துவிட்டால் அப்பகுதியினூடாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட மாட்டாது.
நீர்வெட்டுச் சடங்கு
அங்கெலிய விளையாட்டில் இறுதிநாளான பதினைந்தாம் நாள் நடைபெறுகின்ற சடங்கு நீர்வெட்டுச் சடங்காகும். இது தியகெலிய (Diya Keliya) அல்லது திய கபீம (Diya Kapeema) என்று அழைக்கப்படுகின்றது. கஜபாகு மன்னன் கடலினைக் கடந்து தமிழ்நாட்டிற்குச் சென்று பத்தினி வழிபாட்டினை இலங்கைக்குக் கொண்டுவந்த கதையினை நினைவூட்டும் முகமாகவே இங்கு நீர்வெட்டுச் சடங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நீர்வெட்டுச் சடங்கின் முன்னதாகக் காவடியாட்டம் இடம்பெறும். இதன் போது ‘மாற இப்பதீம’ (Mara Ippaddima) என்ற நூலிலுள்ள பாடல்களைப் பாடியபடி உடபிலவினைச் சேர்ந்தவர்கள் நடனமாடுவர். வட்டாண்டியார் மஞ்சள் நீரினைக் கொண்டுவந்து தாய்மரத்திற்கு (AnGaha) ஊற்றுவார். அதன் பின்னர் அளுத் தெவியோ ஆலயத்திற்குரிய கப்புறாளை கத்தியினைக் கொண்டுவந்து தாய்மரத்தினைச் சுற்றிப் போடப்பட்டுள்ள கொடியினையும் ஹெனகந்தவடவினைச் (செவ்வாய்க்குற்றி) சுற்றிப் போடப்பட்டுள்ள கொடியினையும் வெட்டுவார். பின்னர் ஹெனகந்தவட வெள்ளைத் துணியைக் கொண்டு சுற்றப்பட்டு அவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்தப்படும். பின்னர் பிரதேசத்திற்கு போதுமான அளவு மழை பெய்ய வேண்டுமென்று கப்புறாளை பிரார்த்திப்பார்.
ஹெனகந்தவடவினை அப்புறப்படுத்திய பின்னர் தியகெலிய ஊர்வலம் செல்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறும். இதற்காகப் பத்தினி தெய்யோவின் பேழையும் அளுத் தெவியோவின் பேழையும் யானைகளின் மீது வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இந்த ஊர்வலத்திற்குப் பத்தினி தெய்யோ ஆலயத்தின் கப்புறாளையும் அளுத் தெவியோ ஆலயத்தின் கப்புறாளையும் தலைமை தாங்குவர். இருவரின் கைகளிலும் நீரினை வெட்டுவதற்கான தடிகள் காணப்படும். இந்த ஊர்வலத்தின் போது காவடியாட்டங்களும் கோலாட்டங்களும் இடம்பெறும். பறை மேளக்காரர்களும் பறையை அடித்தபடி அணிவகுத்துச் செல்வர். ஊர்வலத்தின் போது ஊர் மக்கள் வீதியில் மஞ்சள் நீரினைக் கரைத்து ஊற்றுவர். ஊர் மக்களால் ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்குப் பிரசாதங்களும் வழங்கப்படும். இந்த ஊர்வலமானது கடற்கரை, அல்லது நீர்நிலைப் பிரதேசத்தில் நிறைவுபெறும். கப்புறாளைமார்கள் கைகளில் கோல்களையும் அளுத் தெவியோவின் பேழையையும் பத்தினியின் பேழையையும் கொண்டு நீரிற்குள் இறங்குவர். அதன்பின்னர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களும் நீரினுள் இறங்குவர். பின்னர் கப்புறாளைமார் மக்களிற்கு நீரினைத் தெளித்து ஆசீர்வாதம் வழங்குவர். இவ்வாறு நீர்வெட்டுச் சடங்கு முடிவடைந்ததும் மீண்டும் ஆலயத்திற்குச் சென்று பூசைகள் இடம்பெற்ற பின்னர் மக்களிற்கு அன்னதானம் வழங்கப்படும். அத்தோடு அங்கெலியவிற்கான அனைத்துச் சடங்குகளும் நிறைவுபெறும்.
அடிக்குறிப்புகள்
- Robert Knox, An Historical Relation of Ceylon AD 1681. P.99.
- M.D. Ragavan, (1951), The Pattini Cult as a Socio-Religious Institution, Spolia Zeylonica, p.252.
- Gananath Obeyesekere, (1994), The Cult of the Goddess Pattini, London, University of Chicago, p.383.
- ஞானபால (பாணமைப் பத்தினி தெய்யோ ஆலயக் கப்புறாளை)
- Gananath Obeyesekere, op cit, p.393.



