குறிப்பு: மேற்குறித்த தலைப்பிலான கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்று அண்மையில் வெளிவரவுள்ளது. இந்நூலின் முன்னுரையாக அமைந்துள்ள கட்டுரையை இங்கே பதிவிடுகின்றோம்.
1833இல் நடைமுறைக்கு வந்த கோல்புறூக் சீர்திருத்தத்துடன் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாறு ஆரம்பிக்கிறது என்பதே இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றை எழுதிய அறிஞர்களின் கருத்தாகும். 1833இல் ஆரம்பித்த இந்த வரலாறு, 1978இன் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு வரை தொடர்ந்திருப்பதைக் காணலாம். இந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றைப் பன்முக நோக்கில் ஆராயும் 5 கட்டுரைகளின் தொகுப்பாக ‘இலங்கையின் அரசியல் யாப்பு வரலாறு: பன்முகநோக்கு (1833 – 1978)’ எனும் இந்நூல் அமைந்துள்ளது.
அரசியல் விஞ்ஞானம், நவீனகால இலங்கையின் வரலாறு, அரசியல் யாப்புச் சட்டவியல் (Constitutional Jurisprudence) ஆகிய புலமைத்துறைகளின் அறிஞர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அத்தியாயங்களில் உள்ள கருத்துகளைத் தொகுத்துத் தருவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.
இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாறு
இக்கட்டுரைத் தொகுப்பின் முதலாவது கட்டுரை இலங்கையில் பாராளுமன்றத்தின் தோற்றமும் அதன் சுருக்கமான வரலாறும் என்னும் பொருள் பற்றியது. இக்கட்டுரை பசன் ஜயசிங்க, பீற்றர் றீட், அசங்க வெலிக்கல ஆகிய சட்டவியல் துறை அறிஞர்கள் மூவர் எழுதிய ‘Parliament in Its Historical and Constitutional Context’ என்ற ஆங்கிலக் கட்டுரையினைத் தழுவிய தமிழாக்கமாக அமைந்துள்ளது. இலங்கையின் அரசியல் யாப்பின்படி சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் பிரதான அங்கமாக (Primary Legislative Organ of the State) பாராளுமன்றம் விளங்குகிறது. இச்சபை தொடக்கத்தில் வெறும் ஆலோசனை சபையாகவே செயற்பட்டது. சட்டத்தை ஆக்கும் அதிகாரம் உள்ள சபையாக இது இருக்கவில்லை. இதனால், இதனை முந்து சட்டசபை (Proto-Legislature) என அழைக்கலாம் என இக்கட்டுரையின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1833இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் காலப்போக்கில் படிப்படியான மாற்றங்கள் மூலம் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சியின் பயனாக இன்று பாராளுமன்றம் என்று நாம் அடையாளம் காணும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. இச்சபையின் பெயரும் காலத்திற்குக் காலம் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1. சட்டசபை (Legislative Council) – 1833 முதல் 1931 வரை
2. அரசுச்சபை அல்லது ஸ்டேற் கவுன்சில் (State Council) – 1931 முதல் 1946 வரை
3. பாராளுமன்றம் (சனப்பிரதிநிதிகள் சபை, செனற் சபை என்று இரு சபைகளைக் கொண்டது) – 1947 தொடக்கம்
4. தேசிய அரசுப்பேரவை (National State Assembly) – 1972 முதல் 1978 வரை
5. பாராளுமன்றம் (Parliament) – 1978இல் மீண்டும் பெற்றுக்கொண்ட இப்பெயர் இன்றுவரை தொடர்கிறது.
சட்டவியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு ஆகிய பல்துறைகளின் நோக்கில் இலங்கைப் பாராளுமன்றத்தின் நீண்ட நெடிய வரலாற்றை இம்முதலாவது கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.
சட்டசபையில் அரசியல் பிரதிநிதித்துவம்
இத்தொகுப்பு நூலின் இரண்டாவது கட்டுரை சுதந்திரத்திற்கு முந்திய அரைநூற்றாண்டு வரலாற்றில் (1900–1948) இலங்கையின் சட்டசபைகளில் அரசியல் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளக்குவதாக உள்ளது. இக்கட்டுரையின் ஆசிரியரான குமாரி ஜயவர்த்தன கூறியிருக்கும் முக்கிய கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்துக்கொள்ளலாம்.
1. 1900–1948 காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிப்பனவாக வர்க்கம், சாதி, இனத்துவம் (Class, Caste and Ethnicity) என்ற மூன்று காரணிகள் அமைந்தன.
2. வர்க்கம் என்ற காரணியை எடுத்துக்கொண்டால் நில உடைமையாளர் வர்க்கமும், வர்த்தகத் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு புதுப்பணக்காரராக மேல்நிலைக்கு உயர்ச்சி பெற்ற வர்த்தக முதலாளி வர்க்கமும் சட்டசபைகளின் ஆசனங்களில் பெரும்பான்மையானவற்றைக் கைப்பற்றிக் கொண்டன. 1920களின் சட்டசபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள், அவர்களின் குடும்பப் பின்னணி போன்ற விடயங்கள் குறித்த விரிவான தகவல்களைக் கட்டுரையாசிரியர் தருகின்றார். மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் கீழ் நாட்டின் மொத்த சனத்தொகையில் 4% மட்டுமே வாக்களிக்கும் தகுதியுடையவராக இருந்தனர் என்பதையும், இதன் விளைவாகச் சட்டசபைப் பிரதிநிதித்துவம் உயர்வர்க்கங்களின் ஏகபோக உரிமையாக மாறியது என்பதையும் சான்றாதாரங்களுடன் கட்டுரையாசிரியர் விளக்கிக் கூறுகிறார்.
3. 1920களின் சட்டசபைகளில் உயர் தொழில் வகுப்பினர் (Professional Class) முதற்தடவையாக உறுப்பினராவதையும், அவ்வழி அரசியலில் பிரவேசிப்பதையும் கட்டுரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். ஜோர்ஜ். ஈ.டி. சில்வா (கண்டி), சி.பி. ஜயா (மலே சமூகத்தவர்), சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா (இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்தவர்), எச்.ஆர். பிரீமன் (வடமத்திய மாகாணத்தின் அரசாங்க அதிபராக இருந்து இளைப்பாறியவர்) ஆகியோர் சட்டசபைகளில் உறுப்பினராயினர் என்பதையும், இதன் மூலம் பழமைவாதத்திற்கு எதிரான முற்போக்குச் சிந்தனையுடையவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்தது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
4. சாதி என்ற காரணி சட்டசபைப் பிரதிநிதித்துவத்தில் வகித்த முக்கியத்துவத்தை குமாரி ஜயவர்த்தன அவர்கள் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார். 1920களில் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால், சட்டசபைக்கு கொவிகம சாதியல்லாதவர்கள் தெரிவு செய்யப்படும் வாய்ப்புக் கிட்டியது. 1920கள் கராவ சாதியினரின் அரசியல் எழுச்சிக் காலமாக அமைந்தது. 1931இல் சர்வசன வாக்குரிமை நடைமுறைக்கு வந்தபோது கராவ சாதியினரின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் சடுதியாக வீழ்ச்சியடைந்தது என்பதையும் கட்டுரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
5. இனத்துவம் (Ethnicity) என்னும் காரணி 1920க்குப் பிந்திய காலத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. 1931இன் சட்டசபை 50 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டதாய் இருந்தது. இவர்களுள் 38 பேர் (76 வீதம்) சிங்களவராவர். சட்டவாக்க அதிகாரம் உடையை சபையின் பெரும்பான்மை இடங்களைத் தமதாக்கிக்கொள்ளும் சிங்களவர் முயற்சியின் தொடக்கம் இதுவெனலாம் என இம்மாற்றத்தினைக் குமாரி ஜயவர்த்தன அவர்கள் குறிப்பிடுகின்றார். 1931இல் சர்வசன வாக்குரிமை இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாது ஆண்–பெண் இருபாலருக்கும் வழங்கப்பட்டது என்பது முற்போக்கான ஒரு நடைமுறை என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. ஆயினும், இந்த முற்போக்கான நடவடிக்கையின் விளைவாகச் சிறுபான்மை இனத்தவர்கள், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள், ஒரு தேசிய இனம் என்ற முறையில் சமத்துவமான உரிமைகளைப் பெறுவதற்கு மாறாக, இரண்டாம் தரப் பிரஜைகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதை வரலாறு தெளிவாக உணர்த்தியுள்ளது.
6. 1931இல் சர்வசன வாக்குரிமையை நடைமுறைப்படுத்திய போது, பிரித்தானியாவின் தொழிற்கட்சியைச் சேர்ந்த முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆயினும், 1931–1947 காலத்து அரச சபைகளில் (State Council) முதலாளித்துவ–நில உடைமை வர்க்கத்தின் ஆதிக்கமே மேலோங்கியது என்ற உண்மையை குமாரி ஜயவர்த்தன அவர்களின் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. வயது வந்த யாவருக்கும் வாக்குரிமை என்பதைக் கொண்டுவந்தபோதும், சட்டசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டோர் வசதி படைத்த வகுப்பினைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். நியாயதுரந்தர்கள், மருத்துவர்கள், தோட்டத்துரைமார், வர்த்தகர்கள், பொறியியலாளர்கள், கண்டியினதும் கரைநாட்டினதும் பிரதானிகள், முன்னாள் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோர் சட்டசபை உறுப்பினர்களாய் இருந்தனர் (பக். 396) எனக் குமாரி ஜயவர்த்தன அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்டுரை சர்வசன வாக்குரிமையின் சாதக, பாதக விளைவுகளை மதிப்பிடுவதாகவும், வர்க்கம், சாதி, இனத்துவம் என்பன சட்டசபைப் பிரதிநிதித்துவத்தில் தீர்மானக் காரணிகளாய் செயற்பட்டதை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.
ஒரு நூற்றாண்டு அரசியல் யாப்பு வரலாறு – 1833–1931
இத்தொகுப்பு நூலின் மூன்றாவது கட்டுரை, பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க அவர்களால் எழுதப்பட்ட ‘இலங்கையில் யாப்பியல் வரம்புக்கு உட்பட்ட ஆட்சியின் படிமுறை வளர்ச்சி’ (The Evolution of Constitutional Government in Sri Lanka) என்ற நூலின் இரண்டாவது அத்தியாயமாக அமையும் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டதாகும். இக்கட்டுரையில் பேராசிரியர் 1833 முதல் 1931 வரையான காலத்து இலங்கையின் அரசியல் யாப்புகளைப் பகுப்பாய்வு செய்துள்ளார். இத்தமிழாக்கத்தின் கட்டுரைத் தலைப்பை நாம் ‘இலங்கையின் அரசியல் யாப்புகள்: ஒரு நூற்றாண்டு வளர்ச்சியும் வரலாறும் – 1833 முதல் 1931 வரை’ எனக் குறிப்பிட்டுள்ளோம் (ஆங்கிலத்தில் Constitutionalism: The Period of Restrictive Franchise எனக் குறிப்பிடப்பட்டுள்ளது).
நவீன தாராண்மை ஜனநாயக அரசியல் யாப்புகளின் அடிப்படையாக அமைவது வயது வந்த ஆட்கள் அனைவருக்குமான வாக்குரிமை (Universal Franchise) ஆகும். 1833 முதல் 1931 வரை செயற்பாட்டில் இருந்த அரசியல் யாப்புகள் யாவும், மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் (Restricted Franchise) அடிப்படையில் அமைந்தவை. இதனால் இவை சர்வசன வாக்குரிமைக்கு மாறானவை. இந்நான்கு அரசியல் யாப்புகளாவன:
- கோல்புறூக் அரசியல் யாப்பு – 1833–1912
- குறூமக்கலம் அரசியல் யாப்பு – 1912–1921
- மனிங் அரசியல் யாப்பு – 1921–1924
- மனிங்–டிவன்சியர் அரசியல் யாப்பு – 1924–1931
இந்த அரசியல் யாப்புகளின் முக்கியமான இயல்பை எடுத்துக்காட்டுவதாக ‘மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமைக் காலம்’ (The Period of Restrictive Franchise) எனும் கட்டுரைத் தலைப்பு அமைந்துள்ளது.
பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்கவின் ஆய்வு அரசியல் யாப்பு ஒப்பீட்டு ஆய்வாக அமைந்துள்ளது. ஒவ்வொரு அரசியல் யாப்பினதும் சட்டவியல், அரசியல், சமூக வரலாற்றுப் பின்புலம் என்பன ஒப்பீட்டு முறையில் விளக்கப்படுகின்றன.
கோல்புறூக் அரசியல் யாப்பு
கோல்புறூக் அரசியல் யாப்பின் அடிப்படைக் கூறுகள் பற்றியும், அவ்வரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் சமூக–அரசியல் தாக்கங்கள் பற்றியும் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
1833இல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் யாப்பு குறிப்பிட்டவகை அரசியல் யாப்பு மாதிரி (Constitutional Model) ஒன்றை இலங்கையில் அறிமுகம் செய்தது. அந்த மாதிரியின் முக்கிய கூறாக நான்கு தூண்கள் அமைந்தன.
1. நிர்வாக சபை (Executive Council)
2. சட்டசபை (Legislative Council)
3. காலனிய இலங்கையின் ஆளுநர் (The Colonial Governor)
4. காலனிகளுக்குப் பொறுப்பான பிரித்தானியாவின் அமைச்சர் (The Secretary of State for Colonies)
1796இல், இலங்கை பிரித்தானியாவின் ஆளுகைக்குக் கீழ் வந்த பின்னர் ஏறக்குறைய 37 ஆண்டுகாலம் ஆளுநர் என்ற தனிநபர் ஒருவரின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட காலனியாகவே இருந்து வந்தது.
1833இல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் யாப்பு, நிர்வாக சபை, சட்டசபை என்ற இரு சபைகளை உருவாக்கி, அவ்விரு சபைகளின் அனுசரணையுடன் ஆட்சி அதிகாரத்தைப் பிரயோகிக்கும் ஒருவராக ஆளுநரை மாற்றியது. நிர்வாக விடயங்களில் நிர்வாக சபையும், சட்டங்களை ஆக்கும் விடயங்களில் சட்டசபையும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் சபைகளாக விளங்கின. ஆளுநரைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் அற்ற சபைகளாக இவ்விரு சபைகளும் இருந்தபோதும், இவ்விரு சபைகளின் ஆலோசனைகளைப் பெறவேண்டிய சட்டக் கட்டுப்பாடு ஆளுநர் மீது விதிக்கப்பட்டது.
அதிகாரமற்ற சட்டசபை
ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டசபை, ஆளுநரைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாக இருக்கவில்லை. சட்டங்களை வரைதல், அவற்றைச் சட்டமாக இயற்றுதல், இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகிய சட்டவாக்கச் செயல்முறையின் அனைத்து விடயங்களிலும் ஆளுநருக்கு முழுமையான அதிகாரங்கள் இருந்தன. சட்டசபையின் ஆலோசனையை ஆளுநர் பெறவேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஆளுநரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டசபைக்கு இருக்கவில்லை.
சுருக்கமாகக் கூறுவதாயின், 19ஆம் நூற்றாண்டில் இலங்கையின் அரசியல் சர்வாதிகாரம் கொண்டதாக நிறுவனமயப்படுத்தப்பட்டது. ஆளுநருக்குப் பணிந்து சேவை செய்யும் அமைப்புகளாக நிர்வாக சபையும் (Executive Council), சட்டசபையும் (Legislative Council) விளங்கின. சட்டசபை நியமனங்களை ஆளுநர்கள் தனிநபர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கான ஒரு கருவியாக உபயோகித்தனர். தமது நடவடிக்கைகளை விமர்சித்தவர்களையும், சுயாதீனமாகச் செயற்பட முனைந்தவர்களையும் தணிப்பதற்கான ஒரு கருவியாகவும் சட்டசபை நியமனங்களை ஆளுநர்கள் உபயோகித்தனர்.
1833 முதல் 1910 வரையான காலத்தில் சட்டசபைகளுக்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபையாக இக்காலச் சட்டசபைகள் இருக்கவில்லை. 1833இல் உருவாக்கப்பட்ட சட்டசபையில் 15 பேர் உறுப்பினர்களாய் இருந்தனர். இவர்களுள் 5 பேர் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
சிங்களவர் – 01
தமிழர் – 01
பறங்கியர் – 01
ஐரோப்பியர் – 01
வர்த்தகர்கள், தோட்ட முதலாளிகள் சமூகத்தின் பிரதிநிதி – 01
மேற்குறிப்பிட்ட 5 உறுப்பினர்களில் சிங்களவர், தமிழர், பறங்கியர் என்ற சமூகப் பிரிவினரைப் பிரதிநிதித்துவம் செய்வோர் சுதேசிகளின் (Natives) பிரதிநிதிகளாக விளங்கினர். ஏனைய இருவரும் ஐரோப்பிய சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருந்தனர்.
1889இல் சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் தொகை 8 ஆக உயர்த்தப்பட்டது. விவரம் பின்வருமாறு:
கரைநாட்டுச் சிங்களவர் – 01
கண்டிச் சிங்களவர் – 01
தமிழர் – 01
பறங்கியர் – 01
முஸ்லிம் – 01
ஐரோப்பியர் – 03
நியமன முறைப் பிரதிநிதித்துவம் என்பதை இனவாரிப் பிரதிநிதித்துவம் (Communal Representation) என்று குறிப்பிடுதல் பொருத்தமானது. இலங்கையின் முக்கியமான சமுதாயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டனர். 1910 வரை சட்டசபையின் அமைப்பில் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. அதன்பின்னர் 1911இல் படித்த இலங்கைப் பிரதிநிதி ஒருவர் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காலனிய கொள்கைத் திட்டத்தின் அனுமானங்கள்
கோல்புறூக் அரசியல் யாப்பின் சட்டசபை மக்கள் சமூகங்களின் பங்கேற்புக்கான (Popular Participation) ஒரு நிறுவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. அச்சபையில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்களை முன்மொழியும் அல்லது தெரிவு செய்யும் அதிகாரம் அதன் உறுப்பினர்களுக்கு இருக்கவில்லை. இத்தகைய செயல்வலுவற்ற, அதிகாரங்கள் இல்லாத ஒரு சட்டசபையை கோல்புறூக் அரசியல் யாப்பு உருவாக்கியதற்குப் பின்னால் இருந்த காலனிய கொள்கைத் திட்டத்தின் அனுமானங்கள் (Assumptions) எவை என்பது கவனிக்கப்பட வேண்டியவை என லக்ஸ்மன் மாறசிங்க குறிப்பிடுகிறார்.
1. இலங்கையின் சுதேசிகள் படிப்பறிவற்றவர்கள். அவர்களிடையே அறிவு ஆற்றல் உடையவர்கள் என எவரும் இப்போது இல்லை.
2. இக்காரணத்தால் சட்டசபைக்கு நேரடிப் பிரதிநிதித்துவ முறையில் (Direct Representation) ஆட்களைத் தெரிவு செய்தல் பொருத்தமற்றது. தெரிவு செய்யப்படுவதற்கு மாறாக நியமித்தல் (Nomination) முறையே ஏற்றது.
மேற்படி அனுமானங்களின் அடிப்படையில் செயற்பட, கோல்புறூக் ஆணைக்குழுவும், ஆளுநரும், பிரித்தானிய அதிகாரிகளும், காலனிய அரசாங்கமும் இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் இனத்தவர்களான சுதேச மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக இருக்கவில்லை. கோல்புறூக் அரசியல் சீர்திருத்தங்களின் பிரதான இலக்காக, இலங்கையில் ஒரு சிறிய ஆங்கிலம் பேசும் உயர்குழாத்தை (A Small English Speaking Elite) உருவாக்குவது அமைந்தது.
ஐரோப்பியர் சமூகத்தின் இலட்சியங்கள், பழக்கங்கள், வாழ்க்கை முறை என்பவற்றை உள்ளீர்த்துக்கொண்டவர்களான சிறிய ஆங்கிலம் பேசும் உயர்குழாம், மிகத் தொலைவில் உள்ள எதிர்காலத்தில் உருவாகும் இலங்கை என்ற காலனியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்பதே பிரித்தானியாவின் கொள்கையாகும் (பக். 28–29).
ஆளும் உயர்குழுவான குடும்பக் குழுமங்களின் உருவாக்கம்
ஆங்கிலம் பேசும் சிறிய உயர்குழாம் ஒன்றை உருவாக்கும் பிரித்தானியாவின் கொள்கைத் திட்டத்தின்படி, இலங்கையின் சட்டசபைகளுக்கு நியமித்தல் (Nomination) முறைப்படி ஆட்களை நியமிக்கும் முறை தொடரப்பட்டது என்பதை மேலே குறிப்பிட்டோம். இந்நியமன முறைப் பிரதிநிதித்துவத்தின் விளைவாக, சட்டசபைக்கு சிங்களவர், தமிழர் ஆகிய இரு சமூகத்தவர்களையும், பிற சமூகத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் முறையில் நியமனம் செய்யும் முறை தொடரப்பட்டதன் விளைவாக, இலங்கையில் சில குடும்பங்களையும் குடும்பக் குழுமங்களையும் ஆளும் உயர்குழுக்கள் என்ற நிலைக்கு உயர்த்தும் செயல்முறையைக் காலனிய அரசாங்கம் தொடக்கிவைத்தது. இலங்கையில் கோல்புறூக் காலம் என்பதன் தனித்துவமான அடையாளம் என ஒன்றைக் குறிப்பிட முடியும் என்றால், அது பண்டாரநாயக்க ஒபயசேகர குடும்பம் என்ற ஒரு குடும்பத்தை ஆளும் உயர்குழு என்ற நிலைக்கு உயர்த்தியதுதான் என்று கூறலாம். இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 1835இல் தொடங்கி 60 ஆண்டு காலத்திற்குள் சட்டசபையின் ஏகப்பிரதிநிதித்துவம் தமக்கு உரியதென்பதை நிலைநாட்டினர்.
சிங்களவர்களின் பிரதிநிதிகளாக ஒரு குடும்பக் குழுமம் தனியுரிமை கொண்டாடியது போன்று, பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் குடும்பக் குழுமம் ஒன்றையும் உருவாக்கினர். லக்ஸ்மன் மாறசிங்க அவர்கள் இக்குடும்பங்கள் இரண்டினதும் சட்டசபைப் பிரதிநிதிகளின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியல்களைத் தந்துள்ளார். நியமன முறையின் பயனாகப் பறங்கியர் இனத்துச் சட்டவாளர்கள் (Burger Lawyers) என்னும் உயர்குழுவும் உருவாக்கம் பெற்றது.
ஒரு நூற்றாண்டு காலம் இலங்கையில் நிலைபெற்றிருந்த கோல்புறூக் அரசியல் யாப்பு மாதிரி 1910 வரையான ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் அடிப்படையான மாற்றங்கள் எதுவுமின்றித் தொடர்ந்திருந்தது. இக்காலத்தில் இந்த அரசியல் யாப்பு இலங்கையின் அரசியலிலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த அரசியல் யாப்பில் பல குறைகள் இருந்தபோதும், இந்த யாப்பு பாராளுமன்ற முறை வளர்ச்சியடைவதற்கான அடித்தளத்தை அமைத்தது எனக் கூறலாம். 1833க்குப் பின்னர் சட்டங்களை ஆக்குதல் என்னும் செயல்முறை பொது வெளியின் வெளிச்சத்தில் விவாதிக்கப்படும் விடயமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆளுநரும் இலங்கையின் அதிகாரிகளும் இச்செயல்முறையை விரும்பாதபோதும், சட்டங்களைப் பொது வெளியில் விவாதிப்பதை அரசியல் யாப்பு அவர்கள் மீது ஒரு சட்டத் தேவையாகத் திணித்தது. சட்டசபையின் நியமன உறுப்பினர்கள் ஆளுநருக்குப் பணிந்து செல்பவர்களாகவும், அவருக்கு விசுவாசம் காட்டுபவர்களாகவும் இருந்தபோதும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையின் பத்திரிகைகள் என்ற ஊடகம் வாயிலாகச் சட்டவாக்கச் செயற்பாடு பற்றிய விமர்சனம் வெளிப்பட்டது. பறங்கியர், சட்டவாளர்கள் போன்ற படித்த இலங்கையர் குழுவினர் இயற்றப்படும் சட்டங்களைப் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டனர். இதன் பயனாகப் பொதுசன அபிப்பிராயம் (Public Opinion) உருவாக்கப்பட்டது. சுதேசிகள் படிப்பறிவற்றவர்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் செயற்பட்ட காலனிய ஆட்சியாளர்கள், வர்த்தக, தொழில்துறை உற்பத்தி முறையில் ஏற்படுத்திய மாற்றங்களின் பயனாக இலங்கையில் படித்த இலங்கையர் என்ற வகுப்பை உருவாக்கினர். அவர்கள் உருவாக்கிய இப்படித்த இலங்கையர் என்ற சமூகக் குழு ஆட்சியதிகாரத்தில் தமக்குப் பங்கு வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தது. 1911க்குப் பிற்பட்ட 20 ஆண்டுகாலத்தில் பின்வரும் 3 அரசியல் யாப்புகள் நடைமுறைக்கு வந்தன.
1. குறூமக்கலம் அரசியல் யாப்பு (1912–1921)
2. மனிங் அரசியல் யாப்பு (1921–1924)
3. மனிங் டிவன்சியர் அரசியல் யாப்பு (1924–1931)
இம்மூன்று அரசியல் யாப்புகளினதும் அரசியல், சமூகப் பின்புலத்தையும், அம்மாற்றங்களின் விளைவுகளையும் பேராசிரியர் லக்ஸ்மன் மாறசிங்க ஆராய்கிறார். இக்காலத்தின் அரசியல் யாப்பு வளர்ச்சிப் போக்குகளின் முக்கிய கூறுகள் சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானது.
1. தெரிவு செய்தல் என்னும் தத்துவம் (Elective Principle) இக்காலத்தில் அரசியல் யாப்பில் புகுந்தது. 1911இல் படித்த இலங்கையர் ஆசனத்திற்கு ஒருவர் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1921–1924 ஆகிய ஆண்டுகளின் அரசியல் யாப்புத் திருத்தங்கள் மூலம் இலங்கையின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் தேர்தல் மூலம் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்படலாயினர். இதனால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுதல் விரிவாக்கம் பெற்றது.
2. இக்காலத்தில் படித்த இலங்கையர் என்ற சமூகக் குழு உருவாக்கம் பெற்றது. இலங்கையின் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டவர்களான ஆங்கிலம் படித்த சொத்துடையவர்களான தனிநபர்கள் வாக்காளர் (Voters) என்ற தகுதியைப் பெறவும் அரசியலில் பங்குபற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
3. சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கோல்புறூக் சட்டசபையில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 15 உறுப்பினர்கள் இருந்தனர். 1911இன் யாப்புச் சீர்திருத்தம் சட்டசபை உறுப்பினர் தொகையை 21 ஆக அதிகரித்தது. பின்னர் 1921இல் இத்தொகை 37 ஆகவும், 1924இல் 48 ஆகவும் அதிகரித்தது.
4. சட்டசபை உறுப்பினர்களின் கலவையிலும் (Composition) அதன் கட்டமைப்பிலும் (Structure) குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 1921, 1924 ஆகிய இரு ஆண்டுகளின் சட்டசபை உறுப்பினர்களின் புள்ளிவிவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இப்புள்ளிவிவரங்கள் சில முக்கியமான செய்திகளை எமக்கு உணர்த்துகின்றன.

5. சட்டசபைப் பிரதிநிதித்துவம் பிரதேச ரீதியில் இக்காலத்தில் விரிவாக்கம் பெற்றது. 1924ஆம் ஆண்டில் மாகாணங்களின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் பற்றிய தரவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
மேல் மாகாணம் – 5
வட மாகாணம் – 5
தென் மாகாணம் – 3
மத்திய மாகாணம் – 2
கிழக்கு மாகாணம் – 2
வடமேல் மாகாணம் – 2
வடமத்திய மாகாணம் – 1
ஊவா மாகாணம் – 1
சப்பிரகமுவ மாகாணம் – 2
மேற்கு மாகாணத்தின் குடும்பக் குழுமங்களிடம் குவிக்கப்பட்ட அரசியல் அதிகாரம், பிராந்தியங்களை நோக்கிப் பரவலாக்கப்பட்டதை மேற்காட்டிய தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
லக்ஸ்மன் மாறசிங்க அவர்களின் கட்டுரை 1931 வரையான அரசியல் யாப்பு வளர்ச்சிகளை விரிவான முறையில் பகுப்பாய்வு செய்வதாக அமைந்துள்ளது.
அரசியல் யாப்பு ஆவணங்கள் ஊடான வரலாறு 1926–2005
இத்தொகுப்பு நூலின் நான்காவது கட்டுரை, 1926–2005 காலத்தில் வெளியிடப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களின் தொகுப்பு நூலான ‘Power Sharing in Sri Lanka: Constitutional and Political Documents 1926–2005’ என்னும் தலைப்பில் அமைந்த நூலின் முன்னுரையாக அமையும் ஆய்வுரையின் சுருக்கமான தமிழாக்கமாகும். இத்தொகுப்பு நூலின் பதிப்பாசிரியர்களான றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல ஆகிய சட்ட அறிஞர்கள் இணைந்து இந்த ஆய்வுரையை எழுதியுள்ளனர். 1926–2005 காலப்பகுதியில் அதிகாரப் பகிர்வு என்னும் விடயப்பொருள் குறித்து வெளியான ஆவணங்கள் எழுத்து வடிவிலான அறிக்கைகள், மனுக்கள், அரசியல் யாப்பு வரைவுகள் எனப் பல வடிவங்களில் வெளிவந்தன. காலனிய சட்டசபைகளிலும் சுதந்திரத்திற்குப் பிந்திய காலப் பாராளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பான பல விவாதங்கள் இடம்பெற்றன. 1931, 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் அரசியல் யாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வாறாக உருவாக்கம் பெற்ற ஆவணங்களில் மிக முக்கியமானவற்றைத் தொகுத்துத் தரும் அறிவுக் களஞ்சியமாக இத்தொகுப்பு நூல் அமைந்துள்ளது.
இத்தொகுப்பு நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத்துவமுடைய பிரச்சினைகளை இக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றது.
நூலின் நோக்கம்
‘அதிகாரப் பகிர்வு’ தொடர்பான அரசியல் யாப்பு மற்றும் அரசியல் ஆவணங்களைத் தொகுத்து நூலாக வெளியிடப்பட வேண்டியதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் பதிப்பாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு விளக்கிக் கூறியுள்ளனர்.
- இன்றைய நாளிலும் எதிர்காலத்திலும் அதிகாரப் பகிர்வும் அரசியல் யாப்புத் திருத்தமும் பற்றிய உரையாடல்களுக்கு ஆதாரமாக இத்தொகுப்பில் உள்ள ஆவணங்கள் அமையும்.
- 1920 முதல் அதிகாரப் பகிர்வு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், மனுக்கள் என்பன பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை ஒன்றுசேரத் தொகுத்து இந்நூல் வழங்குகிறது.
- அவ்வவ் காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை அவற்றின் வரலாற்றுச் சூழமைவில் வைத்துப் பார்க்க வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அவை முன்வைக்கப்பட்ட காலத்து சமூக, அரசியல் பின்புலத்தில் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய புரிதலை வாசகர்களுக்கு வழங்குவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.
- இத்தொகுப்பு நூலைப் படிப்பதன் மூலம் இன்றைய நாளில் அரசியல் யாப்புகளை வரைதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளம் காண முடியும். எதிர்காலத்திலும் எழப்போகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணவும் அவற்றைத் தீர்வு செய்யவும் இந்த ஆவணங்கள் வழிகாட்டி உதவக்கூடியன.
தமிழ் மொழிபெயர்ப்பின் பின் இணைப்பாகத் தொகுப்பு நூலின் அத்தியாயத் தலைப்புகள் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன. இவ்வத்தியாயத் தலைப்புகளின் பட்டியல், ஆங்கிலத் தொகுப்பு நூலின் உள்ளடக்கம் பற்றித் தெரிந்துகொள்வதற்கு வாசகர்களுக்கு உதவுவதாக அமைந்துள்ளது.
இத்தொகுப்பு நூலில் 51 ஆவணங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. 51 ஆவணங்களையும் 37 தலைப்புகளில் பதிப்பாசிரியர்கள் வகுத்தும் ஒழுங்கமைத்தும் தந்துள்ளதோடு, ஆவணங்களின் உள்ளடக்கம், அவை எழுந்த சூழல், அவற்றின் அரசியல் சமூகத் தாக்கம் என்பன பற்றிப் பயனுள்ள ஆய்வுக் குறிப்புகளையும் தந்துள்ளனர். இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றின் எட்டுப் பத்தாண்டுகள் காலத்தில் (1926–2008) உருவாக்கம் பெற்ற முக்கிய ஆவணங்கள் யாவும், பன்மைத்துவம், பன்மைத்துவ சமூகங்களின் பிரச்சினையை அதிகாரப் பகிர்வு மூலம் தீர்த்தல் என்பனவற்றுக்கான எதிர்வினைகளாக அமைந்திருப்பதனையும் காண முடிகிறது.
தமிழ்த் தேசியவாத நோக்கில் இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு
இத்தொகுப்பு நூலின் இறுதியில் அமைந்துள்ள ஐந்தாவது அத்தியாயம் ஏ.ஜே. வில்சன் அவர்கள் எழுதிய இலங்கைத் தமிழ்த் தேசியவாதம் என்ற நூலின் அறிமுகமாகும். அவரின் மேற்குறித்த நூல் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்றைத் தமிழ்த் தேசியவாத நோக்கில் புரிந்துகொள்வதற்கான ஒரு திறவுகோலாக அமைந்துள்ளது. ஏ.ஜே. வில்சன் அவர்கள் கூறியிருக்கும் முக்கிய கருத்துகளை அடுத்து நோக்குவோம்.
சமநிலைப் பிரதிநிதித்துவம்
1930களில் சமநிலைப் பிரதிநிதித்துவம் என்னும் கோரிக்கை தமிழர்களின் அரசியல் கோரிக்கையாக எழுந்த வரலாற்றுப் பின்னணியை ஏ.ஜே. வில்சன் விளக்கியிருப்பதைக் கட்டுரையின் முதற்பகுதி எடுத்துக் கூறுகிறது. டொனமூர் அரசியல் யாப்பு பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்தபோது, அதன் பாதக விளைவுகளைச் சிறுபான்மை இனத் தலைவர்கள் உணர்ந்துகொண்டனர். அத்தலைவர்களின் கோரிக்கை 50க்கு 50 என்று பொதுச்சொல்லாடலில் அழைக்கப்பட்டது. சட்டசபையின் 50 வீத ஆசனங்கள் இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையான உட்கருத்தாகும். சமநிலைப் பிரதிநிதித்துவம் என்ற இக்கருத்தாக்கம் இலங்கையின் பல்லின இனக் குழுமங்களின் சேர்க்கையாக அமையும் ‘ஒருமைத்துவமுடைய தீவு’ (Unified Island) என்ற நோக்கில் பார்ப்பதாக அமைந்தது என்றும் ஏ.ஜே. வில்சன் அவர்கள் குறிப்பிடுகிறார்.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்
1944ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தமிழர் தேசிய உணர்வுக்கு அரசியல் இயக்கம் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு வடிவத்தைக் கொடுத்தது. டொனமூர் சட்டசபையில் 1935ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தனி அங்கத்தவர் என்ற முறையில் செயற்பட்டு வந்த ஜி.ஜி. பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ற கட்சியின் தலைவர் என்ற முறையில் டொனமூர் சட்டசபையில் 1944 முதல் செயலாற்றத் தொடங்கினார். 50க்கு 50 என்னும் சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கை ஜி.ஜி. பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்டது.
சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கை நிராகரிக்கப்படல்
சட்டவாக்க அதிகாரத்திலும், நிர்வாக அதிகாரத்திலும் சிறுபான்மையினருக்குக் கூடிய பங்கேற்பை வழங்கக்கூடிய சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கையைச் சிங்கள அரசியல் தலைமை ஏற்றுக்கொள்ள மறுத்தது. சிங்களத் தலைமையைத் திருப்திப்படுத்தத் தவறினால் தமது வர்த்தக நலன்களும், இராஜதந்திர நலன்களும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த பிரித்தானிய அரசாங்கம் தமிழர் தரப்பின் நியாயமான அபிலாசைகளைக் கருத்தில் கொள்ளவில்லை. டொனமூர் ஆணைக்குழு போன்றே சோல்பரி ஆணைக்குழுவும் இலங்கையின் இனமுரண்பாடுகளின் தீர்வை நோக்கிய அரசுக்கட்டமைப்பை (State Structure) வடிவமைக்கும் பணியில் தவறிழைத்தது. ஜி.ஜி. பொன்னம்பலம் சமநிலைப் பிரதிநிதித்துவத்தினைப் பெறுவதற்காகக் கடுமையாக வாதாடியபோதும் அவரது முயற்சிகள் யாவும் 1947இல் தோல்வியடைந்தன.
இணக்க அரசியல்
சமநிலைப் பிரதிநிதித்துவக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஜி.ஜி. பொன்னம்பலம் தமது ஆதரவை வழங்கினார். முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்களவருடன் ஒத்துழைப்பு மிக்க கூட்டுறவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என ஜி.ஜி. பொன்னம்பலம் விளக்கம் கொடுத்தார். 1949இல் அவர் இணக்க அரசியல் என்ற பாதையைத் தேர்ந்துகொண்டார்.
சமஷ்டிக் கட்சியின் பாராளுமன்றவாத அரசியல்
1949இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்று எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்னும் பெயருடைய அரசியல் கட்சியை நிறுவினர். இக்கட்சி ஆங்கிலத்தில் ‘Federal Party’ என அழைக்கப்பட்டது. 1949 முதல் 1976 வரையான காலத்தில் தமிழரசுக் கட்சி சாத்வீக வழிகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. பாராளுமன்றத்தை அரசியல் பேரம் பேசலுக்கான ஒரு பயனுள்ள வழியாகப் பயன்படுத்தும் கொள்கையை இக்கட்சி பின்பற்றியது. இக்காலம் தமிழரசுக் கட்சி பாராளுமன்றவாதம் என்ற வழியைப் பின்பற்றிய காலமாக அமைந்தது. இக்காலத்தில் 1957, 1961, 1965 ஆகிய ஆண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்களுடன் தமிழரசுக் கட்சி ஒப்பந்தங்களைச் செய்து தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இம்முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன.
1976இன் பின்னரான காலம்
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரிந்து போதல் என்ற கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டது. 1972இன் அரசியல் யாப்பு ஒற்றையாட்சி அரசு முறையிலான அரசுக் கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாத வகையில் இலங்கையை ஒற்றையாட்சி அரசு என அரசியல் யாப்பின் மூலம் பிரகடனப்படுத்தியது.
சிங்களத் தலைமை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்கியிருந்தால் பிரிவினைக் கோரிக்கை எழுந்திருக்க மாட்டாது. சமஷ்டி ஆட்சி முறையிலான தீர்வை வழங்கித் தமிழர் பிரச்சினையைத் தீர்வு செய்திருக்கக்கூடிய வாய்ப்பும் இழக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை, ஒடுக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம், ஒடுக்கப்படும் தமிழ் இனத்தின் பாதுகாப்புத் தேசியவாதம் என்று இரு தேசியவாதங்களின் போராட்டக் களமாக மாறியது.
முடிவுரை
இத்தொகுப்பு நூலில் உள்ளடக்கப்பட்ட ஐந்து கட்டுரைகளும் 1833 முதல் 1978 வரையிலான அரசியல் யாப்புகள் பற்றிய ஆழமான கோட்பாட்டுப் பார்வைகளை வழங்குவன. இவை தமிழில் அரசியல் சொல்லாடலின் தரத்தை மேம்படுத்தவும் வளப்படுத்தவும் உதவுவன. இவை தமிழிற்குப் புதியன.
எழுநாவின் முன்னைய வெளியீடுகளுக்கு ஆதரவு வழங்கியது போன்று இத்தொகுப்பு நூலிற்கும் தமிழுலகம் ஆதரவு வழங்கும் என்பது எமது நம்பிக்கை.



