நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
83 நிமிட வாசிப்பு

நவீன மனிதனின் தென்னாசிய வருகையும் திராவிட மக்களின் மூதாதையர்களும் – பகுதி 3

October 29, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

மைற்ரோகொண்டிரிய DNA ஆய்வுகள் (Mt DNA)

மனித உடலானது கோடிக்கணக்கான உயிருள்ள கலன்களால் ஆனது என்பதை ஏற்கனவே கண்டோம். இக்கலன்களில் காணப்படும் கருமையத்தினுள் (Nucleus) 23 சோடி குரோமசோம்கள் காணப்படுகின்றன. இந்தக் குரோமசோம்களில் வரிசையாகக் காணப்படும் நூறாயிரக்கணக்கான ‘ஜீன்கள்’ (Genes) எனப்படும் உயிரணுக்கூட்டுகளே ஒவ்வொரு மனிதரதும் உடற்கூற்றையும், உடலியக்க வளர்ச்சியையும், செயலாற்றலையும் நிர்ணயம் செய்கின்றன. இந்த ஜீன்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான DNAக்களைக் கொண்டிருக்கின்றன.

மனிதர்களின் உயிர்க் கலன்களில் கருமையத்திற்கு வெளியே ‘மைற்ரோகொண்டிரியா’ (Mitochondria) என அழைக்கப்படும் நுண்ம உறுப்புக்கள் (Organelles) காணப்படுகின்றன. இந்த நுண்ம உறுப்புக்கள் ஒரு மென்தோலினால் சுற்றிவர மூடப்பட்டிருக்கும். ஓர் உயிர்க்கலனின் உயிர்வேதியியல் செயற்பாடுகளை (Biochemical Actions) இயக்கும் சக்தியை இந்த மைற்ரோகொண்டிரியாக்களே வழங்குகின்றன. நமது உயிர்க்கலன்களின் கருமையத்தினுள்ளே காணப்படும் பண்புத்தொகுப்பு இழைகளான ‘குரோமசோம்களும்’ அவற்றில் பொதிந்திருக்கும் ‘ஜீன்களும்’ (Genes) இந்த மைற்ரோகொண்டிரியாக்களிலும் காணப்படுகின்றன.

மனித உடலிலுள்ள ஓர் உயிர்க்கலன்

ஓர் உயிர்க்கலனில் உள்ள கருவணுவினுள் காணப்படும் DNAக்களினாலான குரோமசோம்கள்

மைற்ரோக்கொண்டிரியாக்களில் உள்ள குரோமசோம்களில் காணப்படும் ஜீன்களும் DNA எனப்படும் மரபணுக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.

மைற்ரோக்கொண்டிரியாக்களில் உள்ள குரோமசோம்களில் காணப்படும் ஜீன்களும் DNA எனப்படும் மரபணுக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. மைற்ரோக்கொண்டிரியா அதிலுள்ள DNAக்களைப் பிரதிபண்ணும் (Replicate) வலுக்கொண்டது. இதன் காரணமாக, ஓர் உயிர்க்கலனில் காணப்படும் மைற்ரோகொண்டிரியாக்களிலுள்ள DNA ஒன்றின் பிரதியாகவே மற்றொன்றும் இருக்கும். மேலும், ஒரு மைற்ரோக்கொண்டிரியாவில் ஒரே ஒரு குரோமசோம் மட்டுமே காணப்படுவதால், இதிலுள்ள DNAஐப் பகுப்பாய்வு செய்வது, கருமையத்தினிலுள்ள DNAக்களைப் பகுப்பாய்வு செய்வதைக் காட்டிலும் சுலபமான காரியம். இந்த முறையைப் பின்பற்றியே பெண்கள் வழியாகத் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மரபணுக்களை ஆய்வு செய்வார்கள்.

மைற்ரோக்கொண்டிரிய DNA பகுத்தாய்வின் மூலக் கோட்பாடு (The Principle Behind Mitochondrial DNA Analysis)

மனித இனங்களில் கருத்தரித்தல் நடைபெறுவதற்கு முன், பெண்களின் சினைமுட்டைகளிலுள்ள கருவணுக்களினுள்ளே காணப்படும் ஒரு சோடிக் குரோமசோம்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சினைமுட்டையிலும் ஒரு குரோமசோம் மட்டுமே போய்ச் சேரும். இயற்கையின் இந்த நடைமுறை ஆங்கிலத்தில் ‘Meiosis’ எனப்படும். இதைப் போன்றே, ஆண்களின் விந்தணுக்கள் உருவாகும்போது அவர்களின் கருவணுக்களினுள்ளே உள்ள ஒரு சோடிக் குரோமசோம்கள் இரண்டாகப் பிரிந்து, அவற்றில் ஒன்றுதான் ஒரு விந்தணுவை அடையும். இவ்வாறு மொத்தமாக உள்ள 23 சோடிக் குரோமசோம்களில், 23 தனிக் குரோமசோம்கள் சினைமுட்டையையும், 23 தனிக் குரோமசோம்கள் விந்தணுவையும் சென்றடையும். புணர்ச்சியின்போது — விந்தணு சினைமுட்டையைச் சந்தித்து ஒன்றிவிடும் போது — உருவாகும் கருமுட்டையில் ஆணிடத்திலிருந்தும் பெண்ணிடத்திலிருந்தும் வரும் தனித்தனியான 23 குரோமசோம்களும் இணைந்து பிள்ளையின் 23 சோடிக் குரோமசோம்களாகிவிடும்.

இந்த இணைப்பில் உருவாகும் பிள்ளை ஆணோ அல்லது பெண்ணோ என்பதை ஆணின் விந்தணுக்களே தீர்மானிக்கின்றன. ஆணின் கருவணுக்களிலுள்ள 23 சோடிக் குரோமசோம்களில் பாலினத்தைக் காட்டும் சோடிக் குரோமசோம் X, Y என்னும் குரோமசோம்களிலானது. இந்தச் சோடி இரண்டாகப் பிரியும்போது, X குரோமசோம் ஒரு விந்தணுவையும், Y குரோமசோம் மற்றொரு விந்தணுவையும் சென்றடைகிறது. கலவியின்போது X குரோமசோம் உள்ள விந்தணு சினைமுட்டையைச் சென்றடைந்தால் பெண் பிள்ளையும், Y குரோமசோம் உள்ள விந்தணு சென்றடைந்தால் ஆண் பிள்ளையும் உருவாகும். எனவே, ஒரு பிள்ளையின் பாலைத் தீர்மானிப்பது முழுக்க முழுக்க ஆணின் விந்தணுக்களே.

இங்கே எங்களின் ஆய்விற்கு உதவப்போகிறது இன்னொரு வகையான குரோமசோம்கள். இவை உயிர்க்கலன்களில் கருமையத்திற்கு வெளியே, மைற்ரோகொண்டிரியா என்ற நுண்ம உறுப்புக்களில் காணப்படுபவை. பெண்களில் சினைமுட்டை உருவாகும்போது உயிர்க்கலன் முழுவதும் சினைமுட்டையாக மாறிவிடும். எனவே, கருமையத்துக் குரோமசோம்களும் மைற்ரோகொண்டிரிய குரோமசோம்களும் பெண்களின் சினைமுட்டையினுள் காணப்படும்.

ஆண்களின் விந்தணுவின் அமைப்பு 

ஆண்களைப் பொறுத்தவரையில், அவர்களது விந்தணு ஒரு தலையையும் வால் பகுதியையும் கொண்டிருக்கிறது. அதன் தலைப்பகுதியில் கருமையமும் அதனுள் காணப்படும் குரோமசோம்களும் உள்ளன. ஆனால், மைற்ரோகொண்டிரியாவும் அதனுள் காணப்படும் குரோமசோம்களும் விந்தணுவின் வால்பகுதியிலேயே காணப்படும்.

கருத்தரித்தலின் போது பெண்களின் சினைமுட்டை விந்தணுவின் தலையை மட்டுமே — அது கொண்டிருக்கும் கருமையத்தை மட்டுமே — உள்வாங்கிக்கொண்டு, விந்தணுவின் வால் பகுதியை வெட்டிவிடுகிறது. இதன் காரணமாக ஆண்களின் மைற்ரோகொண்டிரிய குரோமசோம்கள் பிள்ளைகளைச் சென்றடைவதில்லை. தலைமுறை தலைமுறையாக ஒரு தாயின் மைற்ரோகொண்டிரிய குரோமசோம்கள் மட்டுமே அவரது பிள்ளைகளைச் சென்றடைந்துகொண்டிருக்கும்.

இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே மரபணுவியலாளர்கள் பெண்களின் வம்சாவளியைக் கண்டுபிடிப்பதற்கு மைற்ரோகொண்டிரிய குரோமசோம் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார்கள். இந்த வகையான ஆய்வுகளின் அடிப்படையிலேயே இனிவரும் பகுதி எழுதப்பட்டிருக்கிறது.

இந்தியாவை L3, M, N, R ஆகிய நான்கு தாய்வழி மரபினக் குழுக்கள் வந்தடைந்திருக்கின்றன. இவற்றில் மரபினக்குழு L3 இ.மு. 80,000 ஆண்டளவில் தோற்றம் பெற்றிருக்கிறது. மரபினக்குழு M இ.மு. 61,000 ஆண்டளவில் தோன்றியிருக்கிறது. மரபினக்குழு N இ.மு. 48,000 ஆண்டளவில் தோற்றம் பெற்றிருக்கிறது. மரபினக்குழு R, மரபினக்குழு N இலிருந்து பிரிந்த ஒரு கிளையாகும் (Reich, D. 2018, 2019; Wells, S. 1969: 192).

திராவிடப் பெண்களின் மூதாதையர்கள்

இந்தியப் பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட மைற்ரோகொண்டிரிய மரபணுவியல் ஆய்வுகள் (Mitochondrial DNA Studies) பல்வேறு வகைப்பட்ட இனங்களிடையிலும் குழுக்களிடையிலும் தோன்றிய பெண்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட வகையான மரபணுக்கள் மட்டுமே காணப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன. ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த பெண்களின் மரபணுச் செறிவு தென் ஆசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா ஆகிய இடங்களிலே அதிகமாகக் காணப்படுவதைப் பல ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் (Kivisild et al., 1999; Quintana-Murci et al., 1999, 2004; Metspalu et al., 2004).

மரபணுப் பெருங்குழு M (Haplogroup M)

வம்சாவளி L1/ L0 → L2 → L3 → M

மரபணுக் குறியீடு M

மரபணுப் பெருங்குழு M இன் தோற்றமும் பரவலும்

ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தைச் சேர்ந்த பெண்கள் உதயமானதும் ஆபிரிக்காவில்தான். இந்த முதல் பெண்ணின் மைற்ரோகொண்டிரியா — பெண்களின் வம்சாவளி வரலாற்றாய்வின் ஆணிவேராகும். இப்பெண்ணின் மைற்ரோகொண்டிரிய குரோமசோமில் இரு வகையான மரபணுப் பிறழ்வுகள் ஏற்பட்டன. அவற்றிற்கு L0, L1 எனப் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இக்குறியீடுகளைக் கொண்ட பெண்களின் வம்சாவளியினர் இன்று ஆபிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறார்கள்.

சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் L2 குறியீட்டைக் கொண்ட ஒரு பெண்ணின் குரோமசோமில் L3 எனப் பெயரிடப்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இப்பிறழ்வு கொண்ட பெண்ணின் வம்சாவளியினர் கிழக்கு ஆபிரிக்காவில் விருத்தியாயினர். இவர்களில் ஒரு பகுதியினரே ஆபிரிக்காவை விட்டு முதன்முதலாக வெளிவந்த பெண்களாவர். சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னால் வட ஐரோப்பாவின் பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்து, ஆபிரிக்காவில் வெப்பமான நிலை உருவாயிற்று. சில காலம் சஹாரா பாலைவனம் மிருகங்கள் வாழக்கூடிய நிலமாயிற்று. L3 குறியீடு கொண்ட மக்கள் கிழக்கு ஆபிரிக்காவை விட்டு கடற்கரையோரமாக இடம்பெயர்ந்தார்கள். இப்பெண்கள் கடற்கரை வழியாக ஆபிரிக்காவின் கொம்பைக் (Horn of Africa) கடந்து, செங்கடலைக் கடந்து, நீண்ட கடற்கரைப்பாதை வழியாக மத்திய கிழக்கைக் கடந்து, தென்னிந்தியக் கடற்கரை வழியாக, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, பொலினேசியா வரை சென்றிருக்கிறார்கள். இப்பெண்கள் இந்தியாவை அடைந்த சமயம் மரபணுப் பெருங்குழு M, மரபணுக் குறியீடு L3 கொண்ட ஒரு பெண்ணின் குரோமசோமில் உருவாகிய மரபணுப் பிறழ்விலிருந்து பெருகிப் பரவிய குறியீடாகும். இந்த மரபணுப் பெருங்குழு M இந்தியாவில் தோற்றம் பெற்றதனால் இதை இந்திய மரபுவழிப் பரம்பரை அல்லது ஆசிய மரபுவழிப் பரம்பரை (Asian Lineage) என அழைப்பர்.

மரபணுவியல் ஆய்வாளர் ஸ்பென்ஸர் வெல்ஸ் (Spencer Wells) ஆபிரிக்காவைவிட்டு 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக வெளிவந்த பெண்கள் (ஆண்களோடு சேர்ந்து) இந்து சமுத்திரத் தென்கரைப் பெயர்வு வழியாக நகர்ந்து (Southern Coastal Migration Route), இந்தியத் தீபகற்பக் கரையோரமாகப் பரவி, மேற்குக் கரையிலிருந்தும் கிழக்குக் கரையிலிருந்தும் இந்தியாவிற்குள் இ.மு. 55,000 ஆண்டளவில் இடம்பெயர்ந்தார்கள் என எடுத்துக்காட்டியுள்ளார். இப்பெண்களின் மைற்ரோகொண்டிரிய மரபணுக் குறியீடு (Mitochondrial Genetic Marker) ‘M’ என அழைக்கப்படுகிறது (Wells, S. 2003, 2007).

M மரபணுக் குறியீட்டின் இந்து சமுத்திர, பசுபிக் சமுத்திர, தென் ஆசிய, தென்கிழக்கு ஆசிய கரையோரப் பெயர்வு.

இந்தியப் பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட மைற்ரோகொண்டிரிய DNA ஆய்வுகள், பல வகையான இனங்களிலிருந்தும், வித்தியாசமான சமூகத் தரங்களைக் கொண்ட பின்னணியிலிருந்தும் வந்த பெண்களிடமெல்லாம் ஒரு மரபணுவியல் ஒற்றுமை இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து முதன்முறையாக வெளிவந்த பெண்கள் தென்கடற்கரை இடப்பெயர்வு வழியாக இந்தியத் தீபகற்பத்தைச் சுற்றித் தென்கிழக்காசிய நாடுகளுக்கெல்லாம் சென்றிருக்கிறார்கள் (Wells, S. 2003, 2007). M மரபணுக் குறியீடு கொண்ட பெண்களின் மைற்ரோகொண்டிரிய ஆய்வுகள் அனைத்தும், இப்பெண்கள் தென்கடற்கரை வழியாக இந்தியத் தீபகற்பத்தை வந்தடைந்து, தீபகற்பத்தின் மேற்குக் கரையிலிருந்தும் கிழக்குக் கரையிலிருந்தும் இந்திய உள்நாட்டினுள் இடம்பெயர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகின்றன (Kivisild et al. 1999; Quintana-Murci et al. 1999, 2004; Metspalu et al. 2004).

நெடுங்காலமாக, வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியக் கண்டத்தை வந்தடைந்த மக்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். வெவ்வேறு காலகட்டங்களில் வந்த ஆண்கள், பெண்கள் போதாமையால், ஆரம்பத்தில் இங்கு வந்தடைந்த M மரபணுக் குறியீடு கொண்ட வம்சாவளிப் பெண்களையே மணந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, இப்பெண்கள் வெவ்வேறு இனங்களிடையிலும் வெவ்வேறு சமூகத் தரங்களிடையிலும் பரந்திருக்கிறார்கள்.

M மரபணுக் குறியீடு கொண்ட பெண்களின் வம்சாவளியினரிடத்தில் காலத்திற்குக் காலம் அக்குறியீட்டில் மேலும் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வுகள் (Mutations) காரணமாகப் பல வகையான கிளைப்பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இக்கிளைப்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டு ‘மரபணுப் பெருங்குழு M’ என அழைக்கப்படுகிறது. மரபணுப் பெருங்குழுவான Mஉம் அதன் கிளைப்பிரிவுகளான M2, M3, M4, M5, M6, M18, M30, M33, M35 ஆகியனவும் இந்தியாவில் 60–70% பெண்களிடம் காணப்படுகின்றன.

மரபணுப் பெருங்குழு Mஇன் உலகளாவிய பரவல்

இந்த மரபணுப் பெருங்குழு M அதனுள் பல உபகுழுக்களைக் கொண்டிருக்கிறது. சில பிரிவுகள் சில நாடுகளுக்குத் தனித்துவமானவை. உபகுழுக்கள் M2–M6 இந்தியாவுக்குத் தனித்துவமானவை. இவை கிழக்கு ஆசியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. M7 குறியீடு கொண்ட பெண்கள் சீனாவிலும் யப்பானிலும் காணப்படுகிறார்கள். M31 அந்தமான் தீவுப் பெண்களிடையே காணப்படுகிறது (Thangaraj, K. et al. 2006). M27, M28, M29 ஆகிய குறியீடுகளைக் கொண்ட பெண்கள் தென்மேற்கு பசிபிக்கிலுள்ள மெலனேசியாவில் காணப்படுகிறார்கள் (Merriwether, D. A. et al. 2006). மரபணுப் பெருங்குழு M ஐரோப்பியப் பெண்களிடம் காணப்படுவதில்லை.

இந்தியாவில் மரபணுப் பெருங்குழு M

மரபணுப் பிறழ்வுப் பிரிவுகள்: L1, L2, L3, M

L1, L2, L3, M, M1 முதலாக

பல சிறு பிரிவுகளை உள்ளடக்கிய புராதன இந்திய மரபணுப் பெருங்குழு Mஐச் சேர்ந்த பெண்கள் இந்தியச் சனத்தொகையில் 60% விழுக்காட்டைக் கொண்டவராவர். இந்த மரபணுக் குழு, ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பெண்களின் கடற்கரை வழியான கிழக்காசிய நீண்டதூரப் பயணத்தின்போது, அவர்கள் தென்னிந்தியாவில் இருந்த காலத்தில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வு (Mutation) ஆகும். இக்குறியீடு அவர்களின் வம்சாவளியினரிடம் இன்றுவரை தொடர்கிறது. இக்காலத்தில் இக்குறியீட்டைக் கொண்ட பெண்களை ஒரு தனிப்பட்ட மொழி பேசும் இனத்திற்குரியவர்களாகக் கொள்ள முடியாது. இந்தியாவில் எல்லா மொழிகளைப் பேசும் மக்களிடையிலும் இக்குறியீட்டைக் கொண்ட பெண்கள் இருக்கிறார்கள். இப்பெருங்குழுவில் பல உபகுழுக்கள் காணப்படுகின்றன (Thangaraj, K. et al. 2006).

இவற்றைத் தவிர, சிறிய அளவில் M33, M34, M35, M39, M40, M41 உபகுழுக்கள் இந்தியா எங்கும் காணப்படுகின்றன.

இடப்பெயர்வுக் காலம்

இந்த ஆய்வுகளில், ஆண்களின் Y குரோமசோமை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகள், இம்மக்கள் ஆபிரிக்காவை விட்டு முதன்முதலாக வெளிவந்த காலம் கி.மு. 70,000க்கு சற்று முற்பட்டது எனவும், பெண்களின் மைற்ரோகொண்டிரிய ஆய்வுகள் இப்பெண்கள் வெளிவந்த காலம் கி.மு. 60,000 ஆண்டளவு எனவும் அறியத்தருகின்றன.

உண்மையில், ஆண்களும் பெண்களும் ஒரே சமயத்தில் ஆபிரிக்காவை விட்டு வெளிவந்திருப்பார்கள். ஆகையால், இவற்றில் எது சரியான கணிப்பாக இருக்கலாம் என்பதில் வாதப்பிரதிவாதங்கள் இருந்துவந்தன. சமீபகால ஆய்வுகள், ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்ட நவீன மனிதர்கள் கி.மு. 65,000 ஆண்டளவில் அவுஸ்திரேலியாவை அடைந்துவிட்டார்கள் என உறுதியாக அறியத்தருகின்றன. இதன்படி, கி.மு. 70,000 ஆண்டுகளுக்குச் சற்று முன்னர் ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் கி.மு. 68,000 ஆண்டளவில் இந்தியா–இலங்கையையும், கி.மு. 65,000 ஆண்டளவில் அவுஸ்திரேலியாவையும் அடைந்திருப்பார்கள் எனக் கொள்வதே பொருத்தமாக உள்ளது.

இரண்டாவது இந்தியப் பெண்கள் இடப்பெயர்வு அலை: மரபணுப் பெருங்குழு N, பெருங்குழு R

மரபணுப் பெருங்குழு N (Haplogroup N)

வம்சாவளி L1/ L0  →  L2  →  L3  → N

L1/ L0  →  L2  → L3  → N → R

மரபணுப் பெருங்குழு N, ஏற்கனவே கூறப்பட்ட M குழுவைப் போன்றே ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த L3 மரபணுவிலிருந்து உதயமானது. சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் L2 குறியீட்டைக் கொண்ட ஒரு பெண்ணின் குரோமசோமில் L3 எனப் பெயரிடப்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இப்பிறழ்வு கொண்ட பெண்ணின் வம்சாவளியினர் கிழக்கு ஆபிரிக்காவில் விருத்தியாயினர். இவர்களில் ஒரு பகுதியினர் ஆபிரிக்காவை விட்டு வடக்கு நோக்கிப் பயணமானார்கள்.

ஆபிரிக்காவை விட்டு சினாய் குடாவழியாகப் பயணித்த இவர்கள், சஹாரா பாலைவனத்தின் கடுமையான தட்பவெப்ப நிலைகளினூடாகவும் மணற்புயல்களினூடாகவும் நடந்து, நைல் நதிப் படுகையை அடைந்தபோது வேண்டிய நீர்வளம் கிடைத்தது. மேற்காசியாவில் இருந்த காலத்தில் L3 என்ற மரபணுக் குறியீட்டில் N என்ற மரபணுப் பிறழ்வு ஏற்பட்டது. இவர்களில் ஒரு பகுதியினர் முக்கியமாக போலன் கணவாய் வழியாக — இன்றைய பாகிஸ்தான் வழியாக — மத்திய இந்தியாவை வந்தடைந்தார்கள். இவர்கள் இந்தியாவை வந்தடைந்த இரண்டாவது அலையினர் என விவரிக்கப்படுகிறார்கள் (Wells, S. 2007).

இந்த N என்ற மரபணுக் குறியீட்டிலிருந்து மரபணுப் பிறழ்வினால் பிறந்த உபகுழு R ஆகும். இந்த மரபணுக் குறியீடுகளான N, R இரண்டும் சேர்ந்ததே மரபணுப் பெருங்குழு N என அழைக்கப்படுகிறது. மரபணுப் பெரும்பிரிவான Nஉம் அதன் கிளைப்பிரிவான Rஉம் 35% இந்தியப் பெண்களிடையே காணப்படுகின்றன.

மரபணுப் பெருங்குழு Nஇன் பரவல்

இந்த மரபணுக் குழுவின் புராதன அங்கத்தினர் மத்தியதரைக் கடல் பகுதியிலும் மேற்கு ஆசியாவிலும் நெடுங்காலம் தங்கியிருந்தார்கள். அங்கிருந்த காலங்களில் நியண்டதால் மனிதர்களோடு உடனொத்து வாழ்ந்திருப்பார்கள் என அனுமானிக்க முடிகிறது. இஸ்ரேலில் கார்மெல் மலையிலுள்ள கெபாரா குகையை (Kebara Cave in Mount Carmel) அகழ்ந்தபோது, இப்பெண்களின் எலும்புகளோடு 60,000 ஆண்டுகள் பழமையான நியண்டதால் எலும்புகளும் காணப்பட்டன (Wells, Spencer, 2007).

மரபணுப் பெருங்குழு Nஇலிருந்து பிறந்த பல வகையான பிறழ்வுகளைக் கொண்டவர்கள் ஆசியா முழுவதிலும், இந்தியாவிலும், அமெரிக்காவிலும், சமீப கிழக்கிலும், ஐரோப்பாவிலும் வாழ்கிறார்கள் (Richards, M. et al. 2000; Quintana-Murci et al. 2004; Spencer Wells, 2007).

ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து மேற்கு ஆசியா வழியாகப் பயணித்த L3 மரபணுக் குழுவினரும், அதிலிருந்து மரபணுப் பிறழ்வினால் பிறந்த N மரபணுக் குழுவினரும், அதிலிருந்து பிறந்த R மரபணு உபகுழுவினரும். இந்த மரபணுக் குழுவினர் இடம்பெயர்ந்த பாதை, அவர்கள் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் விட்டுச் சென்ற மரபணுக் கூட்டங்களால் (Genetic Clusters) அறியப்படுகிறது. Courtesy: Genographic Project.

மரபணுப் பெருங்குழு U

இந்தியப் பெண்களிடையே காணப்படும் மூன்றாவது மரபணுப் பெருங்குழு U ஆகும். மரபணுப் பெருங்குழுவான U, சராசரியாக 3% இந்தியப் பெண்களிடையே காணப்படுகிறது. இந்தப் பெருங்குழுவானது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர், மரபணுக் குழு Rஇல் ஏற்பட்ட ஒரு மரபணுப் பிறழ்வினால் உருவான புதிய மரபணுக் குறியீடாகும். இது U1, U2, U3, U4, U7 என U9 வரையும் பிரிந்து பரவியிருக்கிறது. இப்பரவல் இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 40,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாகும். (Around 46,530 ± 3,290 Years Before Present)

மரபணுப் பெருங்குழு Uஇன் பரவல்

மரபணுப் பெருங்குழு U இந்தியச் சாதியினரிடம் 15% சதவீதமும், குலமரபுக் குழுப் பெண்களிடம் 8% சதவீதமும், பொதுவாக இந்தியப் பெண்களிடம் 3% சதவீதமும் காணப்படுகின்றன. ஐரோப்பியப் பெண்களிடம் 11% சதவீதத்தினர் இந்த மரபணுக் குழுவைச் சேர்ந்தவர்களாவர். இப்பெண்கள் மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா, தென் ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறார்கள். (Harmin, M. 2005; Gozalvez, G. M. et al. 2006; Metspalu, M. et al. 2004; Bambets et al. 2001).

மரபணுப் பெருங்குழு Nஇன் சிந்துவெளிப் பரவல்

பாகிஸ்தானிலுள்ள சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் வாழும் பெண்களிடத்தில் கணிசமானோர் மரபணுப் பெருங்குழு Nஐச் சேர்ந்தவர்களாவர். இப்பெண்கள் மேற்கு ஆசியாவிலிருந்து போலன் கணவாய் வழியாகவும், கைபர் கணவாய் வழியாகவும் சிந்துவெளியை வந்தடைந்தவர்களாவர். மேற்கு ஆசியாவில் இவர்கள் இருந்த காலப்பகுதியில் அவர்களிடையே R எனப்படும் மரபணுப் பிறழ்வு (Mutation) ஏற்பட்டது. இந்த மரபணுவைக் கொண்ட வம்சாவளியினர் அனரோலிலா, ஈரான், மத்திய ஆசியா, சிந்துவெளி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள் (Wells, S. 2007).

மேற்கு ஐரோப்பிய மரபணுப் பெருங்குழுக்கள்

இந்தோ-ஆரியர்கள் ஐரோப்பிய ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தபோது, சில சமயங்களில் பெண்களும் அவர்களுடன் சேர்ந்து வந்திருக்கிறார்கள். H, HV, J, T, W ஆகிய மரபணுப் பெருங்குழுக்களைச் சேர்ந்த இவை பிராமணப் பெண்களில் 1–5 சதவீதத்தினரிடம் காணப்படுகின்றன (Helix Line Report, Jan. 22, 2026).

மரபணு வேறுபாடும் இணைப்பும் (Genetic Variation and Affiliation)

உலகின் நிலக்கண்டங்களில் வாழும் மக்களிடையே, ஆபிரிக்காவுக்கு வெளியே அதிகமான மரபணு வேறுபாட்டைக் காட்டும் (Highest Genetic Diversity) மக்கள் வாழும் நாடு இந்தியா (Cavalli-Sforza, L. L. 1994). இதை இன்னொரு விதமாகச் சொல்வதாயின், ஆபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக காலமாக உலகில் ஹோமோ சேப்பியன்ஸ் மனித இனம் வாழ்ந்து வரும் நாடும் இந்தியாதான். ஆழமாக வேர்விட்டு மண்ணிலே பொதிந்திருக்கும் இந்தியாவுக்கே என வரையறுக்கப்பட்ட தனித்துவமான Y குரோமசோம்களையும் மைற்ரோகொண்டிரியாக்களையும் கொண்ட மரபுவழி மக்கள், ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த உடனே இங்கே குடியேறி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிரந்தரமாக வாழ்ந்து வரும் நாடு இது! (Kivisild, T. 2003; Sahoo, 2006; Sengupta, S. 2006).

இன்றைய இந்திய மக்களிடையே குலமரபுக் குழுக்களும் (Tribes), குலமரபு அல்லாதோரும் வாழ்கிறார்கள். சனத்தொகையில் 8% சதவீதமான குலமரபுக் குழுக்கள் பாரம்பரியமான வாழ்வாதாரத் தொழில்களான வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், இரை இரத்தல் ஆகியவற்றை மேற்கொள்பவர்கள். அதிகமான மக்களைக் கொண்ட குலமரபு அல்லாதோர், தம்மை உயர் சாதியினர் எனக் கூறிக்கொள்வோர், விவசாயம் செய்து சீவனம் நடத்துவோராவர் (Singh, K. S. 2002).

பனியுகக்கால இந்தியாவில் மக்கள் குடியேற்றம் (Peopling of India during the Last Ice Age)

இந்த உலகில் கடந்த 2.58 மில்லியன் ஆண்டுகளில் 17 பனியுகக் காலங்களும் (Glacial Periods: Ice Ages), 17 பனியிடைக் காலங்களும் (Interglacial Periods) இடம்பெற்றிருக்கின்றன. கடைசிப் பனியுகம் இற்றைக்கு முன் 115,000 ஆண்டிலிருந்து, இற்றைக்கு முன் 12,000 ஆண்டுகள் வரை 103,000 ஆண்டுகள் நீடித்திருக்கிறது.

உலகம் முழுவதும் மிகக் குளிர்ந்த, உலர்ந்த தட்பவெப்ப நிலவியபோது, பிரம்மாண்டமான பனிப்பாளங்கள் துருவப் பகுதிகளிலிருந்து நிலத்திலும் கடலின் மேலும் பரவிக்கிடந்தன. ஒரு கிலோமீட்டர் உயரமான பனிப்பாளங்கள் வட அமெரிக்கா, வட ஐரோப்பியக் கண்டங்களை மூடியிருந்தன. பிரித்தானியா முழுவதுமே பனிப்பாளங்களால் மூடிக்கிடந்தது (MacDougall, 2004). இப்பகுதிகளில் ஆறுகள் ஓடவில்லை; நீர்நிலைகள் உறைந்து கிடந்தன. மரஞ்செடிகள் வளரவில்லை; மிருகங்கள் விருத்தியாகவில்லை.

இந்த 103,000 ஆண்டுக்காலப் பனியுகத்தில் உலகம் முழுமையும் தொடர்ச்சியான பனிப்படலத்தால் மூடப்பட்டிருக்கவில்லை. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள வெப்பமண்டல நாடுகளான பிரேசில், ஆபிரிக்காவின் சில பகுதிகள், இலங்கை, தென்னிந்தியா, மாலைதீவுகள், இந்தோனேசியா ஆகிய இடங்கள் நீர்நிலைகளைக் கொண்டு மனிதர்களினதும் மிருகங்களினதும் தாவரங்களினதும் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக விளங்கின (Oppenheimer, S. 2003).

உலகை மூடியிருந்த பிரம்மாண்டமான பனிப்பாளங்கள் உலகின் மேலுறையை அமுக்கி நசுக்கின. பனியுகம் முடிவுக்கு வந்து இன்று 12,000 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், உலகை மூடி நசுக்கியிருந்த அழுத்தத்திலிருந்து உலகம் இன்னும் மீண்டு இயல்புநிலையை அடையவில்லை (Cottack, C. P. 2005). கடல்நீர் ஆவியாகிச் சென்று மேலிருந்து மழையாக விழ, மழை நீர் மலை உச்சிகளில் பனியாக உறைய, ஆறுகள் ஓடாமல் உறைந்து போக, கடல் மட்டம் சிறிது சிறிதாகக் கீழே போய், இப்போதிருக்கும் மட்டத்தைவிட 130–135 மீட்டர் கீழே இருந்தது (MacDougall, D. 2004; Rohling, E.J. 1998, 2003; Mix, A.C. 2002).

கடல் மட்டம் 130–135 மீட்டர் கீழே போக, கண்டங்களுக்கிடையே நிலப்பாலங்கள் தோன்றின. பிரித்தானியா ஐரோப்பாவுடனும் பிரான்ஸுடனும் நிலத் தொடர்பு கொண்டது. தென்னிந்தியா இலங்கையுடன் இணைந்தது. மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமாத்ரா ஆகிய பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ‘சுண்டா பெருநாடு’ ஆகி ஆசியக் கண்டத்துடன் இணைந்தன. பேரிங் தொடுவாய் உறைபனி நிலமாக சைபீரியாவை அலாஸ்காவுடன் இணைத்தது.

70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து முதன்முறையாக வெளிவந்த ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து, தென்கடற்கரை இடப்பெயர்வு வழியாக இந்தியத் தீபகற்பத்தை நோக்கி வந்த காலத்தில், வெப்பவலய நாடுகளில் (Tropical Countries) உணவும் நீரும் கிடைத்தன. வெப்பவலயத்திலிருந்த அரபிக்கடலும் இந்து மாகடலும் உறையாமல் மீன்பிடிக்கக் கூடியதாக இருந்தன. அவர்கள் பயணத்தை ஆரம்பித்து சுமார் 5,000–3,000 ஆண்டுகளின் பின் இந்திய உபகண்டத்தை வந்தடைந்த காலத்தில், இலங்கை–தென்னிந்தியப் பகுதிகள் மரக்காடுகளாகவும் (Woodlands), மழைக்காடுகளாகவும் (Rainforests) இருந்திருப்பதை ஸ்டீபன் ஒப்பன்ஹீமர் (Stephen Oppenheimer) போன்ற ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள் (படம் பார்க்கவும்).

இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஆபிரிக்காவிலிருந்து காலத்துக்குக் காலம் இடம்பெயர்ந்த வெவ்வேறு ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ மனித இனக் குழுக்கள் இந்திய உபகண்டத்தில் குடிவந்த வண்ணமே இருக்கிறார்கள். இவர்களின் குடியேற்றத்திற்கும், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழும் வாழ்வாதாரத்திற்கும், மரக்காடுகளையும் மழைக்காடுகளையும் கொண்ட வெப்பவலயத்திலிருந்த தென்னிந்தியாவே உகந்த வாழ்விடமாக இருந்தது (படம் பார்க்க).

70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து புறப்பட்டுக் கடற்கரை வழியாக நவீன மனிதர்கள் இந்திய உபகண்டத்தை வந்தடைந்த காலத்தில், இலங்கை–தென்னிந்தியப் பகுதிகள் வெப்பமான சூழலுடன் மரக்காடுகளையும் மழைக்காடுகளையும் கொண்டிருந்தன. இமாலயப் பகுதி பனிப்படலங்களால் மூடப்பட்டிருந்தது. படம் நன்றி: Stephen Oppenheimer (2004, pages 70–71).

பனியுகக் காலத்தில் இமயமலையை மூடியிருந்த பனிப்பாளங்களால் ஆறுகள், ஏரிகள் அனைத்தும் உறைந்து போயிருந்தன. கங்கை, யமுனை நதிகள் எதுவும் அன்று ஓடியிருக்காது. வெப்பவலயத்தில் இருந்தது போன்ற மரக்காடுகளைப் பனி படர்ந்த பிரதேசங்களில் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாக, அக்கால மக்களின் ‘வேட்டையாடி–உணவு சேகரிக்கும்’ வாழ்வாதார முறைக்குத் தென்னிந்தியாவே அவர்கள் விரும்பித் தெரிவு செய்த இடமாக இருந்தது.

உலகம் முழுவதிலும் அதிக மரபணு மாற்றங்கள் (மரபணுப் பிறழ்வுகள்) கொண்ட, அளவில்லாத பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆபிரிக்கா. ஆபிரிக்காவிற்கு அடுத்தபடியாக, இ.மு. 68,000 ஆண்டுக் காலத்திலிருந்து பல வகையான மரபணுக் கூறுகளைக் கொண்ட மக்கள் தொடர்ச்சியாக வந்து, பல வகையான மரபணு மாற்றங்களைக் கொண்டிருக்கும் நாடு தென்னிந்தியாதான்.

தென் ஆசியாவின் இடைக்கற்கால மக்கள்

இற்றைக்கு முன் 68,000 ஆண்டுகள் முதலாகத் தென் ஆசியாவில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்ஸ் இன மனிதர்கள் ஆஸ்திரலோயிட் இனத்தவரும் திராவிட முன்னோடிகளுமாவர். மேல் பழங்கற்காலத்திற்கும் இடைக்கற்காலத்திற்கும் உரிய, வேட்டையாடி உணவு சேகரிக்கும் பொருளாதார வாழ்க்கையைக் கொண்ட இம்மக்கள், முந்தைய இனத்தவரான ஹோமோ இரக்டஸ் மக்களுடன் உணவிற்காகப் போட்டியிட வேண்டியிருந்திருக்கலாம். இற்றைக்கு 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிலுள்ள ரோபா எரிமலை வெடித்துச் சிதறிய சாம்பல் இந்திய உபகண்டத்தில் இரண்டு மீட்டர் உயரம் வரை படிந்த காரணத்தால், 90 விழுக்காடு வரையிலான ஹோமோ இரக்டஸ் மனிதர்களையும் விலங்கினங்களையும் இழந்திருக்கலாம் என ஏற்கனவே பார்த்தோம். இச்சம்பவத்தைத் தொடர்ந்த இருண்ட காலம் ஆறாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது. நவீன மனிதர்களிடையே பேச்சு வன்மை இருந்தமையால், அவர்களால் கூட்டுச் சேர்ந்து எஞ்சிய முந்தைய இனங்களை ஒழித்துக்கட்டவும் செய்திருப்பர். இந்தியாவிற்கு ஹோமோ சேப்பியன்ஸ் வருவதற்கு முன்னரே ஹோமோ இரக்டஸ் இனம் முற்றாக அழிந்துபோய்விட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்த பெண்களில் முக்கியமானவர்கள், சுமார் 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரலோயிட் ஆண்களோடு இங்கு வந்தடைந்த பெண்களின் வம்சாவளியினராவர். பெண்களின் போதாக்குறையினால் திராவிட முன்னோடிகளும் ஆஸ்திரலோயிட் பெண்களுக்காக ஆஸ்திரலோயிட் ஆண்களுடன் போட்டியிட வேண்டியதாயிற்று. ஆஸ்திரலோயிட் பெண்களைப் போல ஆஸ்திரலோயிட் ஆண்களால் இனப்பெருக்கம் காண முடியவில்லை. மேலும், பிற்காலத்தில் வந்த இந்தோ-ஆரிய ஆண்கள் குழுக்கள் பெண்களோடு வரவில்லை. அவர்கள் இங்கிருந்த ஆண்களைக் கொன்றுவிட்டு அவர்களின் பெண்களை மணந்துகொண்டார்கள் எனக் கூறப்படுகிறது. இன்றைய இந்தியா முழுவதிலும் மரபணுக் குறியீடு  C-M130 கொண்ட ஆஸ்திரலோயிட் ஆண்களின் வம்சாவளியினர் 8–5% விழுக்காடு மட்டுமே தென்னிந்தியாவில் இருக்கிறார்கள் (Wells, S. 2003:113; Helix Line Report 22 Jan. 2026).

இவர்களோடு ஒப்பிடும்போது, மரபணுக் குறியீடு H-M69, L-M20 ஆகியவற்றைக் கொண்ட திராவிட முன்னோடி ஆண்கள் கடந்த 35,000 ஆண்டுகளாக இந்திய உபகண்டம் முழுவதிலும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். தென்னிந்திய ஆண்களில் 55% சதவீதத்தினரிடம் மரபணுக் குறியீடு H-M69 + L-M20 காணப்படுகிறது. வடக்கே செல்லச் செல்ல இந்த விகிதாசாரம் குறைந்து, காஷ்மீரத்தில் 10% சதவீதத்தினரிடம் மட்டுமே இக்குறியீடுகள் காணப்படுகின்றன.

தென் ஆசியாவின் இடைக்கற்கால மக்கள், முக்கியமாக 68,000–60,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேலைப் பழங்கற்காலத்தில் இங்கு வந்தடைந்த ஆஸ்திரலோயிட் ஆண்களும் பெண்களும், இற்றைக்கு முன்னர் 45,000 ஆண்டுகளுக்கும் 35,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வந்த திராவிட முன்னோடிகளுமாவர். அவர்களின் வாழ்விடங்களை, அவர்கள் பயன்படுத்திவிட்டுச் சென்ற கற்கருவிகளால் இன்று இனங்கண்டுகொள்ள முடிகிறது.

வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர் என்னும் அண்மைக்காலப் பிரிவுகள்

அண்மைக் காலங்களில் வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர் (Ancestral North Indian/ Ancestral South Indian) என்றொரு பிரிவைச் சில மரபணுவியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வடஇந்திய மூதாதையர் – தென்னிந்திய மூதாதையர் என்ற கருத்தியலை ஆரம்பித்து வைத்தவர்கள், 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஹைதராபாத்தில் சந்தித்த டேவிட் றைக், நிக் பற்றஸன், குமாரசாமி தங்கராஜ், உபேந்தர் சிங் ஆகிய நான்கு மரபணுவியலாளர்களாவர் (Reich, D. 2019:134–135).

இவர்கள் நால்வரும் இணைந்து, இன்றைய இந்தியர்கள் இரண்டு வித்தியாசமான இந்தியச் சனத்தொகைகளின் கலப்பினால் உருவானவர்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள். வடஇந்திய மூதாதையர் ஐரோப்பியர், மத்திய ஆசியாவினர், அண்மைக் கிழக்கினர், கோக்கேசியர் ஆகியோரின் உறவினராவர். இவர்களின் தாயகம் பற்றியோ, இவர்களின் புலப்பெயர்வு பற்றியோ எதுவும் கூறப்படவில்லை. தென்னிந்திய மூதாதையர் ஏற்கனவே இந்தியாவில் வாழ்ந்து வந்தவர்களின் வம்சாவளியினர். இவர்களின் புலப்பெயர்வும் கூறப்படவில்லை. இவர்களின் உறவினர்கள் என்று இந்தியாவிற்கு வெளியே உலகில் இன்று எவரும் இல்லை. இந்த வடஇந்திய மூதாதையினரும் தென்னிந்திய மூதாதையினரும் இந்தியாவில் உயிர்த்துடிப்புடன் கலப்புற்றனர். இதன் பலன், இந்தியாவில் வாழும் அனைவரும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலப்புற்ற மக்களாவர். இவ்வாறு கலப்புற்ற மக்களின் மூதாதையர் மரபுகள் மேற்கு யூரேசிய மக்களோடு உறவும், பல்வகைப்பட்ட கிழக்கு ஆசிய மக்களோடும் தென் ஆசிய மக்களோடும் நெருக்கமான உறவும் கொண்டிருந்தன. இன்று இந்தியாவில் வாழும் எந்தக் குழுவினரும் பரிசுத்தமான (கலப்பற்ற) மரபினர் என உரிமைகோர முடியாது.

(‘The result is that everyone in mainland India is a mix, albeit in different proportions, of ancestry related to West Eurasians, and ancestry more related to diverse East Asian and South Asian populations. No group in India can claim genetic purity’ – Reich, D. 2019: 135).

டேவிட் றைக் எழுதிய ‘Who We Are and How We Got Here’ என்ற நூலில் (2019 பதிப்பு, பக்கம் 122), வடஇந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் ஆகிய இரு பிரிவினரும் தோற்றம் பெற்ற காலம் இற்றைக்கு முன் 4,000–3,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் எனவும், இந்த இரு பிரிவினரும் பெருமளவில் கலப்புற்ற காலம் இ.மு. 4,000–இ.மு. 2,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என்றும் பதிவு செய்திருக்கிறார் (Reich, D. 2019: 122).

இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் காலத்துக்குக் காலம் இந்திய உபகண்டத்திற்குள் குடிவந்த வண்ணமே இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே முதலில் வடஇந்தியாவுக்கு வந்து, பின்னர் அங்கிருந்து தென்னிந்தியா வரை புலம்பெயர்ந்தவர்கள் தாம். இவர்களைப் பொதுவாக மூன்று பிரிவினர்களாகக் கொள்ளலாம். இவர்களில் முதலில் வந்தவர்கள் ஆபிரிக்காவிலிருந்து தென்கடற்கரை இடப்பெயர்வு வழியாக இந்தியத் தீபகற்பத்தை நோக்கி வந்தவர்கள். இவர்களின் வம்சாவளியினர் முதலில் வடஇந்தியாவின் மேற்குக் கடற்கரையை வந்தடைந்து, அங்கிருந்து கடற்கரை வழியாகத் தென்னிந்திய–இலங்கைக் கரையை அடைந்து, அங்கிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கும் அப்பால் அவுஸ்திரேலியா வரையிலும் சென்று குடியேறியவர்கள். இவர்களை நாம் ‘ஆஸ்திரலோயிட்’ மக்கள் என அழைக்கிறோம். இவர்களின் வம்சாவளியினர் இன்றைய தமிழ்மொழி பேசும் ஆண்களில் 5 சதவீதத்தினராவர்.

இவர்களை அடுத்து, இ.மு. 45,000 ஆண்டுகளுக்கும் இ.மு. 10,000 ஆண்டுகளுக்கும் இடையே காலத்துக்குக் காலம் இந்தியாவை வந்தடைந்த இரண்டாவது பிரிவினர் ‘திராவிட முன்னோடிகள்’ என அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் ஆபிரிக்காவிலிருந்து மேற்கு ஆசியா சென்று, போலன் கணவாய் வழியாக வடமேற்கு இந்தியாவை வந்தடைந்தவர்கள். மற்றும் சிலர் ‘ஹிந்துகுஷ்’ வரை சென்று கைபர் கணவாய் வழியாக வடஇந்தியாவை வந்தடைந்தவர்கள். அடுத்து வந்தவர்கள் மெசப்பத்தேமியா–இலத்திலிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தவர்கள். இவர்களும் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியா வரை இடம்பெயர்ந்து வந்தவர்கள்தாம். இவர்கள் அனைவரதும் வம்சாவளியினர் வெவ்வேறு விகிதாசாரங்களில் இந்தியாவெங்கும் பரவலாக இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்.

மூன்றாவது பிரிவினர் மத்திய ஆசியாவிலிருந்து ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக இற்றைக்கு முன் 3,800 ஆண்டுக் காலத்திலிருந்து வடஇந்தியாவை வந்தடைந்த ‘இந்தோ-ஆரியர்கள்’. இவர்களிலும் ஒரு பகுதியினர் தென்னிந்தியா வரை பரந்து குடியேறி, இன்று தமிழ்மொழி பேசும் மக்களாக ஆகியுள்ளார்கள்.

கடைசிப் பனியுகம் இற்றைக்கு 12,000 ஆண்டுகளுக்கு முன்புவரை நீடித்திருக்கிறது. பனியுகக் காலத்தில், உறைபனியால் ஆறுகள் ஓடாமலும் காடுகள் குறைந்தும் காணப்பட்ட வடஇந்தியப் பகுதிகளைக் காட்டிலும், மக்கள் தங்கியிருந்து வேட்டையாடவும் உணவு மற்றும் குடிநீர் பெறவும் தென்னிந்தியப் பகுதிகளே ஏற்றதாக இருந்தன. இதனால், வெப்பமான சூழலும் அடர்ந்த காடுகளும் நிறைந்த தென்னிந்திய நிலப் பகுதிகளுக்கே மனிதர்கள் அதிகளவில் இடம்பெயர்ந்திருப்பார்கள். இருந்தபோதிலும், வடஇந்தியாவில் காஷ்மீரம் வரை நவீன மக்கள் விட்டுச் சென்ற கல்லாயுதங்களும், பத்து கிலோமீட்டர் தொலைவுக்குப் பரந்து கிடக்கும் மக்களின் வாழ்விடங்களான 750க்கும் மேற்பட்ட மத்திய பிரதேசத்து பிம்பேத்கா பாறை ஒதுக்குகளும், 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவீன மனிதர்களின் நூற்றுக்கணக்கான பிம்பேத்கா பாறை ஓவியங்களும் இந்தோ-ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட வடஇந்திய மக்களின் பண்பாட்டை நமக்கு எடுத்துரைக்கின்றன.

இந்தியாவில் காலத்துக்குக் காலம் இடம்பெயர்ந்து வந்த மக்கள், காலப்போக்கில் அங்கே ஏற்கனவே குடியிருந்த மக்களோடு தொடர்புகொண்டு, இனங்கலந்து வாழ்ந்து வந்திருப்பார்கள். மேலும், இ.மு. 3,800 ஆண்டுக் காலம் முதலாக இந்தியாவிற்குள் இடம்பெயர்ந்து வந்த இந்தோ-ஆரியர்கள் 99 சதவீதம் ஆண்களாவர். இந்தியாவினுள் குறிப்பிடத்தக்க பெண்களின் இடப்பெயர்வு கடைசியாக இற்றைக்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே இடம்பெற்றது. இற்றைக்கு 3,800 ஆண்டுகள் முதலாக இங்கே வந்த இந்தோ-ஆரிய ஆண்கள், கடைசியாக இ.மு. 68,000 முதல் இ.மு. 30,000 ஆண்டுகள் வரையாக இங்கே வந்து குடியேறிய இந்தியப் பெண்களின் வம்சாவளியினரையே மணந்துகொண்டார்கள். இவர்கள் அனைவருமே அகில இந்தியாவின் பூர்வீகக் குடிமக்கள் தாம். இப்படியிருக்கும் போது, 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆண்களை உள்ளடக்கிய ‘வடஇந்திய மூதாதையர் குழு’வை உருவாக்கும் போது, அவர்களின் வம்சாவளியைத் தொடர வைத்த பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மூதாதையரைக் கொண்ட இந்தியப் பெண்கள் இந்த ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இன்றைக்கு வடஇந்தியாவில் வாழும் மக்களில் பலருக்கு, இற்றைக்கு 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே வந்த இந்தோ-ஆரிய ஆண்கள் மூதாதையர்களாக இருக்கலாம். ஆனால், அதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் – இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து – ஆங்காங்கே வடஇந்தியாவில் வாழ்ந்துவந்த ஹோமோ சேப்பியன்ஸ் ஆண்களையும் பெண்களையும், இந்தோ-ஆரிய ஆண்களை மணந்துகொண்ட பெண்களையும், இன்று வரை அங்கு வாழும் அவர்களது வம்சாவளியினரையும் இக்கருத்தியல் வடஇந்திய மூதாதையராகக் கொள்ளாது புறக்கணித்துவிடுகிறது.

இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நவீன மனிதர்கள் (ஆண்களும் பெண்களும்) இந்திய உபகண்டத்திற்கு வந்து, அவர்களது வம்சாவளியினர் இனக்கலப்பில் ஈடுபட்டு நீண்ட நெடுங்காலமாக இங்கே வாழ்ந்துவரும் வரலாறு, அவர்கள் அனைவருமே அகில இந்திய மக்களின் ஆதி மூதாதையர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிலையில், இ.மு. 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் ‘வடஇந்திய மூதாதையர்–தென்னிந்திய மூதாதையர்’ என்னும் பிரிவு, உண்மையான வரலாற்றை ஆய்வுநெறி பேணிக் கூறும் வகைப்படுத்தலாகத் தெரியவில்லை (Does not seem to be a genuine accurate academic classification). இந்தப் பகுப்பு ஒரு குறிப்பிட்ட குழுவினரைத் திருப்திப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட கருத்தியலோ என நம்மை ஐயுறச் செய்கிறது.

சமீபகால மரபணுவியல் ஆய்வுகள்

ஒட்டுமொத்த மரபணுத் தொகுதியை வரிசைப்படுத்தி ஆராய்தல்

இதற்கு முன்னர் நடைபெற்ற மரபணு ஆய்வுகள் அனைத்தும் ஆண்களின் Y குரோமசோம்களில் உள்ள மரபணுக்களையோ, அவற்றில் ஏற்பட்ட பிறழ்வுகளையோ (Mutations), அல்லது பெண்களின் மைற்ரோகொண்டிரிய மரபணுக்களையோ அலசி ஆராய்ந்து, அவற்றின் மரபணுப் பெருங்குழு (Haplogroup) எங்கே, எப்போது தோற்றம் பெற்றது? எந்த வழியாக எங்கெங்கெல்லாம் பரவியது? இக்காலத்தில் அவர்களின் வம்சாவளியினர் யார்? அவர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை முன்வைத்தன.

கடந்த இருபது ஆண்டுகளில் நடைபெற்ற மரபணு ஆய்வுகளில் இரு பெரிய மாற்றங்கள் இடம்பெற்றன. இதை புதிய அலசி ஆராயும் முறை (Investigative Methodology) என்பார்கள். ஒன்று, மனிதக் கலன்களில் உள்ள உட்கருவில் (Nucleus) உள்ள அனைத்து மரபணுக்களினதும் தகவல்களை வரிசைப்படுத்தி ஆராய்வதாகும். இதை ஆங்கிலத்தில் ‘Whole Genome Sequencing’ என அழைக்கிறார்கள். இந்த ஆய்வின் மூலம் ஒருவரின் உடலிலுள்ள அனைத்து மரபணுக்களிலும் இருக்கும் தகவல்களை மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் குடியேற்ற வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது (Reich, D. 2018: 17–22).

இரண்டாவது பெரிய மாற்றமானது, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான எலும்புகள், மண்டை ஓடுகள் அல்லது திசுக் கலன்களிலிருந்து மரபணுக்களைப் பிரித்தெடுத்து ஆராய்ந்து, கிடைக்கும் அனைத்துத் தகவல்களையும் வரிசைப்படுத்துவதாகும். இதை ‘Ancient DNA Sequencing’ என்பர். இத்தகைய ஆய்வுகள் மூலம் மக்கள் குழுக்கள் தோற்றம் பெற்ற இடங்கள், அவர்கள் குடியேறிய இடங்கள், அவற்றின் வடிவமைப்புகள், அவர்கள் புலம்பெயர்ந்த காலம் மற்றும் பயணம் செய்த பாதைகள், அவர்கள் சென்ற இடங்களில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த மக்களோடு கொண்ட உறவுகள் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அறிய முடிகிறது (Reich, D. xviii–xxiii).

மேலே கூறப்பட்ட சமீபகால ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்கால இந்திய மக்களின் ஒட்டுமொத்த மரபணுத் தொகுதியையும் வரிசைப்படுத்தி, இந்திய மக்களின் வரலாற்றை மறுநிர்ணயம் செய்யும் நோக்கில் 2009, 2013, 2019ஆம் ஆண்டுகளில் மூன்று முக்கியமான மரபணுவியல் ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. அவை சுருக்கமாக இங்கே தரப்படுகின்றன.

இந்தியச் சனத்தொகையின் மறுநிர்மாணம்

2009ஆம், 2013ஆம் ஆண்டுகளின் தொல்மரபணுவியல் ஆய்வறிக்கைகள்

செப்டெம்பர் 2009

இன்றைய இந்திய மக்களின் ஒட்டுமொத்த மரபணுத் தொகுதியையும் வரிசைப்படுத்தி, இந்திய மக்களின் சனத்தொகை வரலாற்றை மறுமதிப்பீடு செய்யும் நோக்கில் ‘Reconstructing Indian Population History’ (இந்தியச் சனத்தொகையின் வரலாற்றைத் திருப்பிக் கட்டியெழுப்புதல்) என்ற தலைப்பிட்ட ஆய்வு 2009ஆம் ஆண்டு செப்டெம்பரில் ‘Nature’ அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்தது. இந்த ஆய்வை டேவிட் றீச், குமாரசாமி தங்கராஜ், நிக் பற்றசன், அல்கிஸ் பிறைஸ், லால்ஜி சிங் ஆகிய அமெரிக்க, இந்திய மரபணுவியல் ஆய்வாளர்கள் இணைந்து முன்வைத்திருந்தார்கள்.

இந்த ஆய்வில் இந்தியாவிலுள்ள புராதன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 வேறுபட்ட மக்கள் குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. ‘வடஇந்திய மூதாதையர்’ (‘Ancestral North Indians’: ANI), ‘தென்னிந்திய மூதாதையர்’ (‘Ancestral South Indians’: ASI) எனக் கூறப்பட்ட இம்மக்கள் குழுக்கள், இன்று இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களுக்கெல்லாம் மூதாதையினர் எனக் கூறப்பட்டது. இவர்களில் ‘வடஇந்திய மூதாதையர்’ மரபணு வழியாக மத்திய கிழக்கினர், மத்திய ஆசியாவினர் மற்றும் ஐரோப்பியர்களுக்கு உறவினராவர். ‘தென்னிந்திய மூதாதையர்’ என்போர் இந்தியாவின் ஆதிக்குடிகளின் வம்சாவளியினர். இவர்களின் மூதாதையர்கள் இன்று இந்தியாவில் இல்லை. அந்தமான் தீவுகளில் வாழும் மக்கள் இவர்களின் மூதாதையர்கள் அல்லர்; எனினும், இவர்களின் உறவினராவர் (Reich, D. et al. 2009).

ஆரம்ப நாட்களில் தென்னிந்திய மக்களை முதல் இந்தியர்களின் வம்சாவளியினர் என்றும், வடஇந்திய மக்களை மேற்கு யூரேசியர்களின் வம்சாவளியினர் என்றும் கூறிவந்த டேவிட் றீச், பின்னர் தனது நிலையை மாற்றி வடஇந்திய–தென்னிந்திய மூதாதையர் கருத்தியலை முன்வைத்தார். இற்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்த மேற்காசிய விவசாயிகளையும் (மத்திய கிழக்கினர் என்ற போர்வையில்), அக்காலகட்டத்தில் அவர்களோடு எவ்விதமான மரபணுத் தொடர்புகளும் இல்லாமல், பின்னர் இற்றைக்கு 3,800 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த இந்தோ-ஆரியர்களையும் ஒரே குழுவாக ‘வடஇந்திய மூதாதையர்’ என இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுவது, ஏதோ வேறு ஓர் உள்நோக்குடன் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறதா என ஐயுறச் செய்கிறது.

செப்டெம்பர் 2013

‘Genetic Evidence for Recent Population Mixture in India’ (இந்தியாவில் சமீபகாலச் சனக்கலப்பு) என்ற ஆய்வு 2013ஆம் ஆண்டு செப்டெம்பரில் ‘American Journal of Human Genetics’ என்ற மரபணுவியல் சஞ்சிகையில் வெளிவந்தது. இந்த ஆய்வையும் பிரியா மூர்ஜானியோடு டேவிட் றீச், குமாரசாமி தங்கராஜ், நிக் பற்றசன், லால்ஜி சிங் போன்ற அமெரிக்க, இந்திய மரபணுவியல் ஆய்வாளர்கள் இணைந்து முன்வைத்திருந்தார்கள். இந்த ஆய்வின் முக்கிய அம்சங்கள் இவை:

இந்திய மக்களுக்கிடையிலான பெரிய சனக்கலப்பு, இ.மு. 1,900க்கும் இ.மு. 4,200 ஆண்டுகளுக்கும் இடையே, இந்திய உபகண்டத்தில் விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இடம்பெற்றது (‘Our analyses documented major mixture between populations in India that occurred 1,900–4,200 years BP, well after the establishment of agriculture in the subcontinent’) (Moorjani, P. et al. 2013).

“மேலும், நமது மதிப்பிடப்பட்ட சனக்கலப்புக் காலம் நிலவியலுடனும் மக்கள் பேசும் மொழியுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசும் வடஇந்தியர்களின் மதிப்பிடப்பட்ட சனக்கலப்புக் காலம், திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியர்களோடு ஒப்பிடும்போது மிகப் பிற்பட்டதாக அறிய முடிகிறது. இதை நோக்குமிடத்து, இந்திய உபகண்டத்தின் மக்களின் இனக்கலப்பு வரலாற்றிற்கும் அவர்கள் பேசிய மொழிகளின் பரவலுக்கும் ஓர் உறவு இருப்பதுபோலத் தெரிகிறது” (Moorjani, P. et al. 2013).

(“Our estimated dates of mixture correlate to geography and language, with northern groups that speak Indo-European languages having significantly younger admixture dates than southern groups that speak Dravidian languages. This shows that at least some of the history of population mixture in India is related to the spread of languages in India”) (Moorjani, P. et al. 2013).

இந்த ஆய்வறிக்கைகள் இரண்டும் கீழ்க்காணும் விடயத்தை வலியுறுத்தின. வடஇந்திய மூதாதையர், தென்னிந்திய மூதாதையர் என முற்றிலும் வேறுபட்ட இரு புதிய குழுவினரை உருவாக்கி, இன்றைய இந்தியர்கள் அனைவரும் இந்த இரண்டு குழுவினரின் இனக்கலப்பால் உருவானவர்கள் எனக் கூறின. கலப்பு விகிதாசாரத்தில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. இந்த அறிக்கைகள் இன்றைய இந்திய மக்களில் 20 முதல் 80 சதவீதம் வரையிலானவர்களில் ஏதோ ஓர் அளவில் மேற்கு யூரேசிய வம்சாவளியினர் இணைந்திருக்கின்றனர் எனவும் கூறின.

அதுமட்டுமல்லாமல், இவர்கள் கூறிய வடஇந்திய–தென்னிந்திய மூதாதையர்களின் ஆரம்ப காலத்தைக் கவனிக்காது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாசியாவில் குடியேறி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வந்த தென்னிந்திய மூதாதையரைப் போலவே, வடஇந்திய மூதாதையினரும் ஒரே காலத்தைச் சேர்ந்த, மற்றொரு இனத்தைச் சேர்ந்த இந்தியாவின் பண்டைய குழுவினர் என்று இந்திய ஊடகங்கள் தவறாக எடுத்துரைக்க இந்த அறிக்கைகள் வழிவகுத்துவிட்டன.

தென் ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் சனத்தொகையின் உருவாக்கம்

2019ஆம் ஆண்டின் தொல்மரபணுவியல் ஆய்வறிக்கை

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் 6ஆம் திகதியன்று வெளிவந்த ‘Science’ என்ற அறிவியல் சஞ்சிகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘தென் ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் சனத்தொகையின் உருவாக்கம்’ (The Formation of Populations in South and Central Asia) என்ற தொல்மரபணுவியல் ஆய்வறிக்கை வெளியானது. இந்தியத் தொல்வரலாறு குறித்து அதுவரை வெளிவந்த பல்வேறு முரண்பாடான கருத்துகளுக்கெல்லாம் பதிலளிக்கக்கூடிய ஆய்வறிக்கை இது. இதை உலகெங்கிலும் உள்ள 92 பிரபலமான அறிவியல் அறிஞர்கள் இணைந்து வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆய்வு பல்வேறு பகுதிகளையும் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த 612 பண்டைய மனிதர்களின் மரபணுக்களை (DNA) அடிப்படையாகக் கொண்டது. இந்த மரபணுத் தரவுகள் தென் ஆசியாவிலுள்ள 246 இனங்களைச் சேர்ந்த 1789 மரபணுத் தொகுதித் தரவுகளோடு ஒப்பிட்டு ஆராயப்பட்டன. யார், எப்போது, எங்கே இடம்பெயர்ந்தனர்? எவரோடு எவர் இனக்கலப்பில் ஈடுபட்டனர்? ஆகிய கேள்விகளுக்கு இந்த அறிக்கை பதிலளித்திருந்தது (Narasimhan, V.M., Patterson, Nick., Moorjani, Priya., et al. 2019).

இந்த அறிக்கையில் காணப்படும் எமக்குத் தொடர்பான தகவல்கள்:

  1. ஸாகுரொஸ் மலைப்பகுதிகளைச் சேர்ந்த ஈரானிய விவசாயிகள் பொ.யு.மு. 5400க்கும் 3700க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் சிந்துவெளி விளிம்புப் பகுதிகளில் வாழ்ந்த ‘தென்னிந்தியப் புராதன மூதாதை இனங்களை’ ஒத்தவர்களுடன் இனங்கலந்து வாழ்ந்தார்கள்.
  2. சிந்துவெளியின் இரு விளிம்பு மையங்களிலிருந்த மக்களின் மரபணுக்களில் 45–82 சதவீதம் ஈரானிய விவசாயிகளினதும், 11–50 சதவீதம் தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதை இனங்களை ஒத்தவர்களினதும் (AASI – Ancestral Ancient South Indians) மரபணுக்கள் காணப்படுகின்றன.
  3. பொ.யு.மு. 5400–3700 ஆண்டுகளுக்குரிய சிந்துவெளி விளிம்பு மையங்கள், முதிர்ந்த சிந்துவெளி நாகரிகம் ஆரம்பிப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகள் முற்பட்டவை (சிந்துவெளி விளிம்புப் பகுதி எனக் கூறப்படுவது, சிந்துநாகரிக வலயத்திற்கு வெளியே மெஹர்காரை உள்ளடக்கிய பலுச்சிஸ்தானின் குடியேற்றப் பகுதிகளாகும்).
  4. பொ.யு.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளிப் பகுதிகளில் ‘ஸ்டெப்பி மூதாதையர்களின்’ (இந்திய-ஆரியர்) மரபணுக்கள் காணப்படவில்லை.
  5. பொ.யு.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளியில் ஈரானிய விவசாயிகளும் தென்னிந்தியப் புராதன மூதாதை இனங்களுமே வாழ்ந்தார்கள் என இந்த ஆதாரங்களைக் கொண்டு கருதுகிறோம்.
  6. மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது, சிந்துவெளியில் வாழ்ந்த மக்களும் சிந்துவெளி விளிம்பு மையங்களில் வாழ்ந்த தென்னிந்தியப் புராதன மூதாதை இனங்களும் சேர்ந்தே திராவிட மொழிகளைப் பரப்பினார்கள்.

இந்த ஆய்வு மேலும் தரும் தகவல்: இந்திய உபகண்டத்தில் வாழ்ந்த புராதன மூதாதை இனத்தினரை நோக்குமிடத்து, சிந்துவெளியில் வாழ்ந்த மூதாதை இனத்தினருக்கு நெருங்கிய உறவினர்கள் தென்னிந்திய மூதாதை இனத்தினரே ஆவர். இன்று சிந்துவெளியில் இந்தோ-ஆரிய மக்களின் வம்சாவளியினரும், பாகிஸ்தானை வந்தடைந்த இஸ்லாமிய மக்களின் வம்சாவளியினருமே வாழ்கிறார்கள். ஆனால், சிந்துவெளி விளிம்பு மையங்களில் வாழும் மக்களின் மரபணுக்களில் தென்னிந்தியப் புராதன மூதாதை இனங்களின் மரபணுக்கள் இன்றும் காணப்படுகின்றன (Narasimhan, V.M., Patterson, Nick., Moorjani, Priya., et al. 2019).

தமிழ் மக்களின் மரபணு வேர்கள் (Genetic Roots of the Tamil People)

இந்திய உபகண்டத்தில் பழங்குடி மக்களுக்கு வெளியே, தமிழ்நாட்டில் வாழும் மக்களிடம்தான் தென்னாசிய மூதாதையர் பரம்பரையின் மிக அதிக விகிதமான மரபணுச் சுவடுகள் காணப்படுகின்றன. இந்த ஆய்வில், தமிழ் மக்களின் வெவ்வேறு சமூகத்தினரிடையே காணப்படும் Y குரோமசோம் தொல்மரபணுக் குறியீடுகள் தென்னாசிய மக்கள்தொகை வரலாற்றின் ஒட்டுமொத்தச் சூழலுடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதைப் பார்க்கலாம்.

சமீபகால மரபணுவியல் ஆய்வுகள் – குறிப்பாக, டேவிட் றீச் ஹாவார்ட் ஆய்வகத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் நரசிம்ஹனும் சகாக்களும் 2019இல் மேற்கொண்ட ஆய்வுகள் – இந்திய சனத்தொகையில் மூன்று முக்கியமான மூதாதையர் கூறுகளை இனங்கண்டிருக்கின்றன. தமிழ் மக்களின் மரபணுவியலை விளக்க இக்கூறுகள் பற்றிய அறிவு அவசியமானது.

1. தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையர் வம்சாவளியினர் (AASI)

தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையர்களின் கூறுகள் தென்னாசியாவின் மிக ஆழமான மனிதக் குடியிருப்புகளைக் குறிப்பிடுகின்றன. இவை 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆபிரிக்காவை விட்டு வெளிவந்த ஆரம்பகால மனித இனக்குழுக்களின் குடியிருப்புகளாகும். இந்த மூதாதை இனங்களுக்கு நெருக்கமானவர்கள் அந்தமான் தீவுகளான ஒங்கே, ஜராவா தீவுவாசிகளாவர். பிராமணர்கள் அல்லாத தமிழ் மக்களும் ஆதிதிராவிடச் சாதியச் சமூகங்களும் 75% முதல் 55% வரையிலான தொல்பழங்காலத் தென்னிந்திய மரபணுக்களைக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுள் C-M130, F-M89, H-M69, L-M20, R2-M124 ஆகிய மரபணுக் குறியீடுகளைக் கொண்ட மக்களை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

2. ஈரானிய வேளாண்மை வம்சாவளியினர்

தமிழ் மக்களின் DNA மரபணுக்களில் காணப்படும் இரண்டாவது முக்கிய கூறு, பொ.யு.மு. 10,000 ஆண்டளவில் ஈரானிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்னாசியாவில் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் பரப்பியவர்களைக் குறிக்கின்றது. தமிழ் மக்களிடத்தில் 20% முதல் 35% வரையிலானவர்களிடம் இக்கூறு காணப்படுகிறது. இந்த ஈரானிய வேளாண்மைக் கூறைக் கொண்டவர்களையும் தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையரின் வம்சாவளியினரையும் இணைத்த மக்கள் தொகையினர் ‘தென்னிந்திய மூதாதையர்’ (Ancestral South Indians – ASI) என அழைக்கப்படுகிறார்கள்.

3. புல்வெளி ஆயர்களின் வம்சாவளியினர்

தமிழ் பேசும் மக்களின் DNA மரபணுக்களில் காணப்படும் மூன்றாவது கூறு, மத்திய ஆசியாவின் புல்வெளிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இந்தோ-ஆரிய மக்களின் வம்சாவளியினரைக் குறிக்கிறது. இவர்கள் வடஇந்தியாவில் அதிக அளவில் காணப்படுகிறார்கள். தமிழர்களிடத்தில் 0% முதல் 10% வரையிலானவர்களிடம் இந்த மரபணுக் குறியீடு காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பிராமணர்களிடையே இந்த வம்சாவளி மரபணுக் குறியீடு 15–25% காணப்படுகிறது.

(மேற்கூறப்பட்ட விகிதங்கள் பிசுரிக்கப்பட்ட சில சனத்தொகை மரபணு ஆய்வுகளிலிருந்து பெற்றுக்கொண்ட தோராயமான வரம்புகள் – துல்லியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது) (Helix Line Report, Jan. 22, 2026).

இலங்கை மக்களின் மரபணுத் தொடர்புகள்

இலங்கைத் தமிழர் மரபணு விவரங்கள்

H-M69: 33%

L-M20: 20%

J2-M172: 12%

R1a-M17: 5%

(Helixline Report, Jan. 22, 2026).

இலங்கை ஒரு தீவாக ஆகுமுன்னர் தென்னிந்திய நிலப்பகுதியின் நீட்சியாக இருந்து வந்த காலத்திலிருந்தே மனித இனங்கள் இங்கே வருகைதந்த வண்ணம் இருந்திருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதற்கு முந்திய காலத்தைய கற்பிதங்கள் இலங்கைக்கு முதலில் வந்தவர்கள் வேடர்கள் என்றும், சிங்கள, தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் என்றும் கருத்துக் கூறியிருந்தன (Ranaweera, L. et al. 2014).

இலங்கை இந்தியாவிலிருந்து தனித்தீவாகப் பிரிந்து, பின்னர் விவசாய நடவடிக்கைகள் ஏற்படுவதற்கு முன்னர், இத்தீவில் வாழ்ந்த அனைத்து மக்களுமே வேட்டையாடி உணவு சேகரித்தோ (Hunter-gatherers) அல்லது மீன்பிடித்து உணவு கொண்ட மக்களாகவோ வாழ்ந்து வந்தார்கள். காடுகளில் வேட்டையாடி வாழ்ந்து வந்த மக்கள் அனைவரையுமே ‘வேடர்’ என்ற சொற்பதத்தில் நாம் உள்ளடக்கி வந்திருக்கிறோம். இவர்களில் இ.மு. 68,000–65,000 ஆண்டுக் காலத்தில் இங்கே வந்தடைந்த ஹோமோ சேப்பியன்ஸான ஆஸ்திரலோயிட் மக்களின் சந்ததியினர் (மரபணுக் குழு C-M130) ஆரம்பகால வேடர்களாவர். இவர்களைத் தொடர்ந்து இ.மு. 45,000 ஆண்டு முதலாக இங்கே வந்தடைந்த F-M89, H-M69, L-M20 ஆகிய மரபணுக் குறியீடுகளைக் கொண்ட மக்களும் காடுகளில் வேட்டையாடி உணவு சேகரித்து ‘வேடர்’களாக வாழ்ந்த மக்களாவர். இவர்கள் இலங்கையை வந்தடைந்த காலப்பகுதியில் இலங்கை தனித்தீவாகப் பிரியவில்லை. இவர்கள் அனைவருமே ‘தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையரின் வம்சாவளியினர்’ (Ancient Ancestral South Indians: AASI) என்ற குழுவிற்குள் அடங்குவர்.

இற்றைக்கு ஏறக்குறைய 3,500–3,200 ஆண்டுகளுக்கு முன்னர் நீர்ப்பாசன விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், காடுகளில் ‘வேடர்களாக’ வாழ்க்கை நடத்திய மக்களில் பெரும்பாலானோர் காடுகளை விட்டு வெளியே வந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தங்களது உணவுத் தேவைகளைத் தாமே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். அக்காலகட்டத்தில் தமிழ், சிங்களம் என்ற மொழிகள் பேச்சில் கிடையாது. பௌத்தம், இந்து என்ற மதங்கள் உருவாகவில்லை.

சமீபகாலங்களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான மரபணு ஆய்வுகள் தாய்வழித் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாகும். கலாநிதி லங்கா ரணவீர மற்றும் சகாக்களின் ஆய்வான ‘இலங்கையின் இன மக்களின் தாய்வழி மைற்ரோகொண்டிரிய டிஎன்ஏ வரலாறு’ (Mitochondrial DNA History of Sri Lankan Ethnic People) என்ற மரபணுவியல் ஆய்வு 2014ஆம் ஆண்டில் ‘மனித மரபியல் ஆய்விதழில்’ வெளிவந்தது (Journal of Human Genetics, Volume 59, pages 28–36). இந்த ஆய்வில் இலங்கையின் பல இனங்களைச் சேர்ந்த 271 மக்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த ஆய்வு முக்கியமான சில கண்டுபிடிப்புகளை முன்வைத்திருந்தது.

மரபணுவியல் ஆய்வில் – பரிணாம மரபுவழி ஆய்விலும் (Phylogenetic), முதன்மைக் கூறுகளிலும் (Principal Coordinate), மூலக்கூறு மாறுபாட்டுப் பகுப்பாய்வு முடிவுகளிலும் (Analysis of Molecular Variance Results) – இலங்கையின் வேடர்கள் மற்றவர்களைவிடத் தனிமையான மரபணு நிலையைக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் வேறுபட்ட மூலத்தைக் காட்டுவதாக இருந்தது. அவர்களது ஒருமைப் பண்பு வகைமையும் (Haplotypes), மூலக்கூறு மாறுபாட்டின் பகுப்பாய்வும், இலங்கை வேடர்களின் தாய்வழி மைற்ரோகொண்டிரிய நிரலொழுங்குகள் (தொடர் வரிசைகள்) சிங்கள மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் கூடுதலான தொடர்புடையனவாகக் காணப்பட்டன.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தாய்வழி மைற்ரோகொண்டிரிய ஆய்வுகளோடு (mt DNA HHS-1 and VHS-2) ஒப்பிடும்போது, இலங்கைத் தமிழர்களும் சிங்கள மக்களும் வேடர்களைக் காட்டிலும் இந்திய மக்களுடன் அதிகத் தொடர்புடையவர்களாகக் காணப்பட்டார்கள் (Ranaweera et al. 2014).

2025ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஊர்பன் ஆரகன் என்பவரும் அவரது இணை ஆய்வாளர்களும் மேற்கொண்ட ‘முழு மரபணுத்தொகை ஆய்வுகள் காட்டும் இலங்கையின் பூர்வீக ஆதிவாசிகளுக்கும் சிங்கள மக்களுக்குமான மக்கள்தொகை வரலாறு’ (Population Histories of the Indigenous Adivasi and Sinhalese from Sri Lanka Using Whole Genomes) என்ற ஆய்வு ‘தற்கால உயிரியல்’ (Current Biology, Volume 35, Issue 11) என்ற ஆய்விதழில் வெளிவந்திருந்தது. இந்த ஆய்வை இலங்கை, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மரபணுவியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தார்கள். 37 சிங்கள மொழி பேசும் மக்களினதும், இரு குழுக்களைச் சேர்ந்த 19 ஆதிவாசிகளினதும் (வேடர்கள்) ‘முழு மரபணுத்தொகையின் வரிசைமுறைப் பரிசோதனை’ (Whole Genome Sequencing) மேற்கொள்ளப்பட்டது. இவர்களோடு, பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட மரபணுத்தொகைத் தரவுகளும் (1000 Genomes Project) ஒப்பீடு செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேற்பட்ட மக்களின் இடப்பெயர்வுகளும் மரபியல் கலப்புகளும் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவு, இலங்கையின் ஆதிவாசிகள் (வேடர்கள்) மற்றும் இலங்கையின் மிகப் பெரிய இனக்குழுவினரான சிங்கள மக்கள் ஆகியோர் ஒருவரோடொருவர் மட்டுமன்றி, தென்னிந்திய திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் குழுக்களுடனும் நெருங்கிய மரபணுத் தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த ஆய்வானது இலங்கையின் வரலாற்றாய்வில் தென்னாசியாவில் மக்கள் எவ்வாறு நகர்ந்தும் கலந்தும் கொண்டார்கள் என்பதை மறுசீரமைப்புச் செய்யவேண்டிய தேவையை வலியுறுத்துகிறது.

(This study has found that today’s Sri Lankan Adivasis, and Sinhalese – the country’s largest ethnic group – share close genetic ties with each other, and with the Dravidian-speaking groups in south India, prompting reconsideration about how people may have moved and mixed in South Asia.)

சிங்கள மக்களைப் பொறுத்தளவில், தாய்வழி ‘மைற்ரோகொண்டிரிய’ மரபணுப் பெருங்குழுக்களில் பரந்த பன்முகத்தன்மை (Greater Mitochondrial Haplogroup Diversity) காணப்படுகிறது. இதன் பொருள்: சிங்கள மொழி பேசும் பெண்களின் முன்னோர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் இங்கே வந்திருக்கிறார்கள் அல்லது வெவ்வேறு காலகட்டங்களில் தென்னாசியாவை வந்தடைந்து ஓரிடத்தில் வாழ்ந்த பெண்கள் இங்கே ஒரே சமயத்தில் இடம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆய்வு செய்யப்பட்ட இலங்கையின் ஆதிவாசிகளின் (வேடர்கள்) இரு குழுக்களினிடையிலும் தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையினரின் பரம்பரை மரபணுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதன் பிரதிநிதித்துவம் தொலைதூரத்திலுள்ள இன்றைய அந்தமான் தீவுகளின் மக்களிடம் காணப்படுகிறது.

(“Both Adivasi clans model with higher levels of the AASI genetic ancestry, proxied distantly by present-day Andamanese”) (Aragon, J.A.U. et al. 2025).

அதிகமான ஆதிவாசிகளிடம் தாய்வழி மரபணுப் பெருங்குழுவான R30b2a காணப்படுகிறது. இது இற்றைக்கு 20,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதன் முன்னோடியான R30b2 என்ற குழுவிலிருந்து தென்னாசியாவில் பிரிந்திருக்கிறது.

“இலங்கையின் மக்கள்தொகை ஆய்வின் ஒட்டுமொத்த முடிவுகளையும் நோக்குமிடத்து, இலங்கை மக்கள் தங்களுக்கிடையிலும் தென்னிந்தியாவில் வாழும் தென்னிந்தியப் பூர்வகுடி மக்களுடனும் அதிகமான மரபணுத் தொடர்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.”

(“Overall, our results show that the Sri Lankan study populations share more genetic affinity with each other and with populations containing higher ASI-related genetic ancestry, many of whom today live in Southern India”) (Aragon, J.A.U. et al. 2025).

இலங்கையின் காலவரிசை இலக்கியங்களான மகாவம்சம், சூளவம்சம் என்பன சிங்கள மக்களின் முன்னோர்கள் வடஇந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் எனவும், சிங்கள மக்களுக்கும் வடஇந்தியர்களுக்குமிடையே நீண்டகாலத் திருமண உறவுகள் இருந்ததையும் கூறியுள்ளன. “ஆனால், எங்களது ஆய்வு முடிவுகள் இலங்கையின் சிங்கள மக்களுக்கும் இன்றையகால வடஇந்திய மக்களுக்குமிடையே மரபணுத் தொடர்புகளோ, இணை மரபணுப் பகிர்தலோ இருப்பதற்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை.”

(“Our results fail to support the high genetic affinities and allele sharing between the Sinhalese and present-day North Indian populations”.) (Aragon, J.A.U. et al. 2025).

இலங்கை மக்களின் Y குரோமசோம் காட்டும் மரபணுக் கூறுகள்

இலங்கையிலுள்ள சிங்கள மக்கள், தமிழர் மற்றும் ஆதிவாசி வேடர்களின் ஆண்களில் காணப்படும் Y குரோமசோம்களில் உள்ள மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கூறப்பட்ட விகிதங்கள் சனத்தொகை மரபணு ஆய்வுகளிலிருந்து பெற்றுக்கொண்ட தோராயமான விவரங்கள். மிகச் சிறிய அளவிலான மரபணுக் கூறுகள் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழரிடத்தில் ‘தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையரின்’ (AASI) மரபணுக்களான F-M89, H-M69, L-M20 என்பன 60% சதவீதமான ஆண்களிடம் காணப்படுகின்றன. இவற்றோடு இந்தோ-ஆரிய மரபணுவான R1a, ஆண்களில் 5% உள்ளது. இந்த மரபணு வடஇந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பிராமணர் மற்றும் ஆரிய மக்களின் கலப்பினால் ஏற்பட்டது (ஆரிய மக்கள் என்னும்போது இந்தோ-ஆரிய மொழிகளைப் பேசும் மக்களைக் குறிப்பிடுகிறதே ஒழிய, இனரீதியாகக் குறிப்பிடவில்லை). இலங்கைத் தமிழரிடத்தில் ஆதி ஆஸ்திரலோயிட் மரபணுவான C-M130 காணப்படவில்லை.

H-M69: 35%

L-M20: 20%

J2-M172: 12%

F-M89: 5%

R1a-M17: 5%

(Helixline Report, Jan. 22, 2026).

சிங்கள மக்கள்

இலங்கையின் சிங்கள ஆண்களிடமும் தமிழ் மக்களைப் போன்று 60% சதவீதமானவர்களிடம் ‘தொல்பழங்காலத் தென்னிந்திய மூதாதையரின்’ (AASI) மரபணுக்களான F-M89, H-M69, L-M20 என்பன காணப்படுகின்றன. இவர்களிடம் இந்தோ-ஆரிய மரபணுவான R1a-M17, 5 முதல் 9% காணப்படுகிறது. 2025ஆம் ஆண்டின் ஆய்வில் ஆய்வு செய்யப்பட்ட 28 சிங்கள ஆண்களில் ஒவ்வொருவரிடமும் ஆதி ஆஸ்திரலோயிட் மரபணு C-M130, கிழக்கு ஆசிய மரபணு O-O2a1c1a மற்றும் BT-M91 என்பன காணப்பட்டன. சிங்களப் பெண்களில் 65% மரபணுப் பெருங்குழு Mஐச் சேர்ந்தவர்களாவர்.

H-M69: 25–35% (H1a, H1b, H3b)

L-M20: 20%

J2-M172: 12%

R1a-M17: 5–9% (R2a, R2a1)

F-M89: 5%

C-M130: 3.5%

O-O2a1c1a: 3.5%

BT-M91: 3.5%

(Helix Line 2026; Aragon et al. 2025; Kivisild et al. 2003).

இலங்கை வேடர்

இலங்கையின் வேடர்களில் 12% ஆண்களிடத்தில் ஆதி ஆஸ்திரலோயிட் மரபணுவான C-M130 காணப்படுகிறது. இவர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து, அவுஸ்திரேலியா வரை சென்ற மக்களின் சந்ததியினராவர். இவர்களிடம் காணப்படும் F-M89, H-M69, L-M20 ஆகிய மரபணுக்கள் இற்றைக்கு 50,000க்கும் 35,000க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இங்கே வந்தடைந்த ஹோமோ சேப்பியன்ஸின் மரபணுக் குறியீடுகள். இவர்களிடம் இலமைற் (ஈரானிய) மரபணுவான J2-M172 காணப்படவில்லை. இலங்கை வேடர்களுக்கும் தமிழ்நாட்டின் இருளர்களுக்கும் நெருங்கிய மரபணு ஒற்றுமை காணப்படுகிறது.

C-M130: 12%

H-M69: 25% (Aragon et al. 2025) – 30% (Helixline 2026)

F-M89: 20%

L-M20: 10%

கேரள மக்கள்

தென்னிந்தியாவின் கேரள நாட்டிலுள்ள ஆண்களுக்கும் இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் ஆண்களுக்கும் நெருங்கிய மரபணு ஒற்றுமை காணப்படுகிறது. கேரள மக்களிடத்தில் இலமைற் (ஈரானிய) மரபணுவான J2-M172, 15% வரை காணப்படுகிறது. மேலும், இவர்களிடத்தில் இந்தோ-ஆரிய மரபணுவான R1a, சராசரியாக 16–20% வரை காணப்படுகிறது. பிராமணர்களில் ஒரு பகுதியினரான நம்பூதிரி பிராமணர்கள் கேரளத்தில் நீண்டகாலமாக உறைவிடம் கொண்ட ‘உயர்சாதி’ப் பிராமணர்களாவர்.

H-M69: 33%

L-M20: 20%

J2-M172: 15%

R1a-M17: 16–20%

(Helixline Report, Jan. 22, 2026).

நீண்டகாலமாக இலங்கையில் வாழும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும், இந்தத் தீவகத்திற்கு உரிமை கோரிக்கொண்டிருக்கும், ஒருவரோடொருவர் சம்பந்தமில்லாத அந்நியர்கள் எனக் கூறப்பட்டு வந்திருக்கிறது. இக்கருத்தாக்கத்திற்கு ‘மகாவம்சம்’ போன்ற மதவாதம் பேசும் பாளி இலக்கியங்களும், காலனித்துவகால வரலாற்றியல் எழுத்துகளும், இருபதாம் நூற்றாண்டின் இனவாத அரசியலுமே காரணமாகும்.

பிரித்தானிய ஆட்சியாளர்களின் ‘சிங்கள மக்களே இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள்’ என்ற கருத்தாக்கத்திற்கு பாளி இலக்கியங்கள் மட்டும் காரணமல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய இனக் கோட்பாடு (European Racial Theory) மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர், அடிமைகள் எனச் சமூகத்தில் வேறுபடுத்தியது (‘Scientific Racism’ என இதைக் குறிப்பிடுவது தவறான பெயரிடலாகும் – இனம் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பே அன்றி, உயிரியல் உண்மை அல்ல). இந்தப் பின்னணியில், காலனித்துவகால வரலாற்றாசிரியர்களின் மதிப்பீட்டில், சிங்கள மக்கள் வடஇந்தியாவிலிருந்து பெருமளவிலான வாழ்விடப் பெயர்ச்சியில் கிறிஸ்தாப்த காலத்திற்கு முன்னரே இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்த உயர் நாகரிகம் கொண்ட இந்தோ-ஆரியர்கள் எனவும், தமிழர்கள் இந்நாட்டிற்குப் பிற்காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து தமிழக அரசர்களின் படையெடுப்புகளோடு புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள் என்றும் கூறப்பட்டது. இந்த மதிப்பீடு காலப்போக்கில் அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களிலும் பதிவுபெற்றது.

ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டில் வெளிவந்த, கடந்த பத்து ஆண்டுகால மக்கள்தொகை மரபியல் ஆய்வுகளின் இறுதி முடிவான முழு மரபணுத்தொகை ஆய்வு வேறொரு கதையை உரைக்கிறது. சிங்கள மக்கள் வடஇந்தியக் குடிமக்களுடன் எந்தவிதமான மரபியல் உறவையும் காட்டவில்லை. மாறாக, தென்னிந்திய மக்கள்தொகையுடன் மிக நெருக்கமான உறவைக் காட்டுகிறார்கள். இலங்கைத் தமிழ் மக்களும் தென்னிந்திய மக்களுடன் இதே வகையான மரபணு அண்மைத்துவத்தையே காட்டுகிறார்கள். மரபணு உறவைப் பொறுத்தவரையில், இலங்கையின் சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கும் எவ்விதமான வேறுபாடும் கிடையாது. சிங்கள மக்களின் நெருங்கிய மரபணு உறவினர்கள் இலங்கைத் தமிழர்களேயாவர்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே இலங்கையின் சிங்களவர்களும் தமிழர்களும் வெவ்வேறான இனங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் ஆரியர் எனவும் மற்றவர் திராவிடர் எனவும் அரசியல்வாதிகளினதும் மதத் தலைவர்களினதும் வாதங்களை அன்றாடம் கேட்டு வந்த மக்களுக்கு, அறிவியல் காட்டும் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். மத நம்பிக்கைகளில் ஊறிப்போனவர்கள் இக்கருத்தை உடனடியாக நிராகரிக்கவே செய்வர். ஆனால், அறிவியல் காட்டும் இந்த உண்மையை அசைபோட்டு, ஆழ்ந்த சிந்தனையுடன் அலசவேண்டியது அவசியம்.

இலங்கையின் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இத்தகைய நெருக்கமான மரபணு உறவு இருக்குமிடத்து, இந்தோ-ஆரிய மொழிகளான பிராகிருதம், பாளி மொழி ஆகியவையும், அவற்றிலிருந்து தோன்றிய சிங்கள மொழியும் இலங்கையின் முக்கியமான மொழிகளாக எவ்வாறு உருவாகின என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒரு மொழியின் பரவலுக்கு வணிகம், மதச் செல்வாக்கு, அரசியல் ஆதிக்கம் என்பன முக்கிய காரணங்களாகின்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில், இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மக்களுடன் வெளியில் இருந்து வந்த வணிகர்கள் நீண்ட காலம் தொடர்புகொண்டு வணிகம் நடத்தி, இலங்கையில் ஓர் உயர் குழாத்தினராக ஆதிக்கம் பெற்றமை, காலப்போக்கில் அவர்கள் கொண்டுவந்த மொழிகள் இலங்கை மக்களின் தாய்மொழிகளாக இடம்பெற வழிவகுத்தது. இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்தும் கிழக்குப் பகுதியிலிருந்தும் வந்த வணிகர்கள் பிராகிருத மொழிகளை இலங்கைக்குக் கொண்டுவந்தனர். வணிகத் தொடர்பும் வேறு காரணிகளும் (பெருங்கற் பண்பாட்டுப் பரவல்) தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பேசுவோர் வருகைக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக, இலங்கையின் சில பகுதிகளில் தமிழ் மொழியின் மேலாதிக்கமும் வேறு பகுதிகளில் பிராகிருத மொழியின் மேலாதிக்கமும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது (இந்திரபாலா, கா. 2006: 62).

பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை வந்தடைந்த பௌத்த மதத்துடன் பாளி மொழியும் இலங்கையை வந்தடைந்தது. பௌத்த இலக்கியங்கள், அவற்றின் விளக்கங்கள், விமர்சனங்கள் அனைத்தும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டிருந்தன. மக்கள் மத்தியில் பௌத்த மதம் பிரபலமடைந்து பரவியபோது, அதனோடு பாளி மொழியும் பரவியது. பிராகிருதமும், பாளியும், (தமிழ் மொழியும்?) இணைந்து ஹெள மொழி உருவாகி, அதனின்று சிங்கள மொழி பிறந்து பரிணாம வளர்ச்சி பெற்றது.

உயர் குழாத்தினரின் ஆதிக்கம் காரணமாக ஓர் இடத்தில் மொழி மாற்றம் ஏற்படுகிறது. ஒரு மொழி பேசப்படும் இடத்தில் இன்னொரு மொழியின் வருகையால் அம்மொழி வழக்கற்றுப்போக, புதிதாக வந்த மொழி அவ்விடத்தில் பேசப்படும் நிலை ஏற்படுவது ‘தாய்மொழி மாற்றம்’ எனப்படுகிறது. இக்கோட்பாட்டின்படி, ஒரு மொழி பேசப்படும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கு ஒழுங்கான முறையில் நன்கு இயங்கக்கூடிய ஒரு சிறு கூட்டத்தினர் வேறொரு மொழி பேசுவோராய் வெளியிலிருந்து வருகின்றனர். அப்பிரதேசத்தில் வாழும் மக்களைக் காட்டிலும் இப்புதிய கூட்டத்தினர் முன்னேற்றமான சமூக அமைப்பும் ஒழுங்குமுறையும் உடையவர்களாய், முன்பிருந்த சுதேச மக்கள் மத்தியில் ஆதிக்கம் பெறுகின்றனர். இந்நிலையில் சுதேசிகளின் மொழியும் புதிதாக வந்தோரின் மொழியும் பக்கம்பக்கமாகப் பேசப்படுகின்றன. சிறிது காலத்தின் பின் அங்கு பலர் இரு மொழிகளையும் பேசுவோராக மாறுகின்றனர். சில சந்தர்ப்பங்களில், புதிதாக வந்தோர் சுதேசிகளுடைய சமூகத்தில் கலந்துவிட்டதும் அவர்களுடைய மொழியும் மறைந்துவிடுகிறது. வேறு சந்தர்ப்பங்களில், புதிதாக வந்தோர் மொழியே மேலோங்குகிறது. சுதேசிகள் பெருந்தொகையினராக இருந்தபோதிலும், அவர்களுடைய மொழி வழக்கற்றுப்போக, புதிய மொழி அவர்களின் தாய்மொழியாகிறது. இதுவே ‘தாய்மொழி மாற்றம்’ (இந்திரபாலா, கா. 2006: 61).

இலங்கையில் வடஇந்திய இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கள மொழி பரவலாகப் பேசப்பட்டு மக்களின் தாய்மொழியாக உருவெடுத்ததற்கு மேற்கூறிய காரணங்களே அடிப்படையாகும். 

குறிப்பு: ‘ஆஸ்திரலோயிட்’ என்ற பதம் முதலில் 1870இல் தோமஸ் ஹக்ஸ்லி என்ற ஆய்வாளரால் தெற்காசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும், அவுஸ்திரேலியா–பசிபிக் தீவுகளிலும் வாழ்ந்த கறுப்பின மக்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட இனவாதப் பதமாகும். ஆனால், காலப்போக்கில் இது கற்கைநெறி சார்ந்த எழுத்துகளிலும் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கும் ‘நீகிரோயிட்’ என்ற பதத்திற்கும் உள்ள வேறுபாடு மானிடவியலாளர்களால் தெளிவாக விளக்கப்படவில்லை. இந்த நூலில், பல மரபணுவியலாளர்கள் ஏற்றுக்கொண்டது போல, ஆபிரிக்காவில் வாழும் (M168, M91 ஆகிய மரபணுக்கூறுகளைக் கொண்ட) மக்களின் வம்சாவளியினர் ‘நீகிரோயிட்’ எனவும், முதலில் ஆபிரிக்காவை விட்டு வெளிவந்து தூரகிழக்கு வரை சென்ற M130 மரபணுக்கூறுகளைக் கொண்டவர்கள் ‘ஆஸ்திரலோயிட்’ எனவும் அழைக்கப்படுகின்றனர்.

உசாத்துணை மூலங்கள் 

ARAGON, JOSE A. URBAN; BANDYOPADHAY, ESHA; FERNANDO, AMALI S.; WELLIKALA, ANJANA H.J.; BIDDANDA, ARJUN et al. (2025): Population histories of the Indigenous Adivasi and Sinhalese from Sri Lanka using whole genomes, Current Biology, Vol. 35, Issue 9. (9 June 2025)

ARMITAGE, S.J.; JASIM, S.A.; MARKS, A.E. et al. (2011): “The southern route ‘Out of Africa’: Evidence for an early expansion of modern humans into Arabia”. Science 331 (6016): 453-456.  

BAMSHAD, M.; KIVISILD, T.; WATKINS, W.S. et al.  (2001): Genetic Evidence on the Origins of Indian Caste Populations, Genome Research, 11 (6): 994-1004.

BAMSHAD, M.; KIVISILD, T., WATKINS, W.S. et al. (2001): Genetic evidence on the Origins of Indian Caste Populations, Virus Research, 75 (2): 95-106.

BASU, A. et al. (2003): Ethnic India: A Genomic View, With Special Reference to Peopling and Structure, Genome Research, 2003, 13 (10). 

BING SU, CHUNJIE XIAO, RANJAN DEKA, CAVALLI SFORZA et al. (2000): Chromosome  Haplotypes reveal Prehistoric Migrations to Himalayas, Human Genetics,  Vol. 107, No.6, December 2000

CANN, R.L. et al. (1987): Mitochondrial DNA and Human Evolution, Nature  325: 31-36.

CAVALLI-SFORZA, L.L. et al. (1988): Reconstruction of Human Evolution: Bringing together Genetic, Archaeological and Linguistic data, PANS 85 (16).

CAVALLI-SFORZA, L.L. et al. (1994): The History and Geography of Human Genes, Princeton University Press, Princeton, NJ. 

CAVALLI-SFORZA, L.L. (2000): Genes, Peoples and Languages, Penguin, London.

CLARKSON, CHRIS; ZENOBIA, JACOBS; MARWICK, BEN et al. (2017): ‘Human Occupation of Northern Australia by 65,000 years ago’. Nature, July 2017: 547 (7663).

COHEN, A.S.; CAMPISANO, C. : ARROWSMITH, R. et al. (2022a): Reconstructing the Environmental Context of Human Origins in Eastern Africa through Scientific Drilling, Ann. Rev. Earth Planet. Sci. 10: 1146.

COHEN, A.S.; DU, A.; ROWAN, J. et al. (2022b): Plio-Pleistocene Climate Variability in Eastern Africa Environmental Variability and Mammalian Evolution, Proc. Natl. Acad. Sci. 119.

CORDAUX, RICHARD; STONEKING, MARK et al. (2004a): Independent Origins of Indian Caste and Tribal Paternal Lineages, Current Biology 14 (3): 231-235.

CORDAUX, R.; DEEPA, E.; VISHWANATHAN, H.; STONEKING, M. (2004b): Genetic Evidence for the Demic diffusion of Agriculture to India, Science 304: 1125.

DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Archaeological Department, Colombo.

DERANIYAGALA, S.U. (2004): Prehistoric basis for the Rise of Civilization in Sri Lanka and South India, Chennai.

ENDICOTT, PHILIP., THOMAS, M., GILBERT, P., CHRIS STRINGER, CARLES LALUEZA-FOX, ANDERS J. HANSEN & ALAN COOPER (2003): The Genetic Origins of Andaman Islanders, American Journal of Human Genetics 72: 178-184.

FIRASAT, SADAF; KHALIQ, SHAGUFTA et al. (2007): Y-Chromosomal Evidence for a limited Greek contribution to the Pathan population of Pakistan, European Journal of Human Genetics 15 (1): 121-6.

GAYDEN, T., CADENAS, A.M., REGUEIRO, M. et al. (2007): The Himalayas as a directional barrier to gene flow, American Journal of Human Genetics, 80 (5): 884-894.

GONZALEZ, A.M., GARZIA, O. (2006): The mitochondrial lineage U8a reveals a Palaeolithic settlement in the Basque country, BMC Genomics, 7: 124.

GRESHAM, D., MORAR, B., UNDERHILL, P.A. et al. (17co-authors) (2001): Origins and Divergence of the Roma people (gypsies), American Journal of Human Genetics, 69: 1314-1331.

HAMMER, M.F., KARAFAT, T.M., PARK, H. et al. (2006): Dual Origins of the Japanese: Common ground for the hunter-gatherer and farmer Y-chromosomes, Journal of Human Genetics 51(1): 47-58.  

HARVATI, K.; RODING, C.; BOSMAN, K.M. et al. (2019): “Apadima Cave fossils prove earliest evidence of Homo sapiens in Eurasia, Nature. 571 (7766): 500-504.

KAMIN, MONICA (2005): Human Mitochondrial DNA haplogroup R in India; Ph.D. Thesis, University of Tartu.

KANTHIMATHI, S.; VIJAYA, M. and RAMESH, A. (2008): Genetic Study of Dravidian Castes of Tamil Nadu, Journal of  Genetics, Vol. 87, No.2: 175-179.   

KIVISILD, T.; METSPALU, M. et al. (2003): The Genetic Heritage of the Earliest Settlers persists both in Indian Tribal and Caste Populations, American Journal of Human Genetics, 72:313-332.  

KIVISILD, T., BAMSHAD, M.J., METSPALU, M. et al. (1999a): Deep Common Ancestry of Indian and western-Eurasian mitochondrial DNA lineages, Current Biology 9: 1331-1334. 

KIVISILD, T., KALDMA, K., METSPALU, M., et al. (1999b): The place of the Indian Mitochondrial DNA variants in the global network of maternal lineages and the peopling of the Old World., in: PAPIHA, S.S., DEKA, R. & CHAKRABORTY, R. (Eds.): Genomic Diversity, Kluwer Academic/Plenum Publishers, pp. 135-152.   

KIVISILD, TOOMAS (2000): The Origins of Southern and Western Eurasian Populations: an mtDNA Study, Tartu University, Estonia.

KIVISILD,T., ROOTSI, S., METSPALU, M. et al. (2003a): The Genetic Heritage of the Earliest Settlers Persists both in Indian Tribal and Caste Populations, American Journal of Human Genetics, 72: 313-332.

KIVISILD, TOOMAS; ROOSTI, SIIRI; MAIT, METSPALU et al. (2003b): The Genetics of Language and Farming Spread in India in BELLWOOD, P; RENFREW, C. (Eds). Examining the Farming/Language Hypothesis, McDonald Institute for Archaeological Research, Cambridge, pp 215-222.

LAHR, M. M. and FOLEY, R. (1998): Towards a Theory of Modern Human Origins, Yearbook of Physical Anthropology 41: 137-176

LUIS, J.; ROWOLD, D.; CAVALLI-SFORZA, L. et al. (2004): Levant versus the Horn of Africa: Evidence for Bidirectional Corridors of Human Migrations, The American Journal of Human Genetics, 74 (3): 532.

MACDOUGALL, DOUG (2004): Frozen Earth: Once and Future Story of the Ice Ages, University of California Press, USA.

McALPIN, DAVID (1981): Proto-Elamo-Dravidian: The Evidence and its Implications, American Philosophical Society, Philadelphia.

Mc BREARY, S., BROOKS, A.S. (2000): The Revolution that was Not: Origin of Modern Human Behaviour, Journal of Human Evolution 39: 453-563.

MELLERS, PAUL (2006): Going East: New Genetic and  Archaeological Perspectives on the Modern Human Colonisation of Eurasia, Science 313: 796-800.

MERRIWETHER, ANDREW D., HODGSON, JASON A., et al. (2005): Ancient Mitochondrial M haplogroups identified in the South Pacific, Proc. National Acad. Sci. USA, 102: 13034-13039.

METSPALU, M., KIVISILD, T., METSPALU, E. et al. (2004): Most of the extant mtDNA boundaries in South and Southwest Asia were likely shaped during the initial settlement of Eurasia by the anatomically modern humans, BMC Genetics, August 2004, 5;26.

METSPALU, M.; KIVISILD, T.; METSPALU, E., et al. (2004): Most of the extant mtDNA boundaries in South and South West Asia were likely shaped during the initial settlement of Eurasia by anatomically modern humans, BMC Genetics 5: 26 ff.

MOORJANI, PRIYA et al. (2012): Reconstructing Roma history from genome-wide data, On Line Link: arXiv.1212.1696. 

MOORJANI, PRIYA; KUMARASAMY, THANGARAJ; PATTERSON, NICK et al. (2013): Genetic Evidence for Recent Population Mixture in India, American Journal of Human Genetics, 93 (3): Pages 422-438.

NARASIMHAN, VAGHEESH M.; PATTERSON, NICK ; MOORJANI, PRIYA et al. (2019): The Formation of Human Populations in South and Central Asia, Science, Sept 6, 2019: 365 (6457).

OPPENHEIMER, STEPHEN (2003): Out of Eden – The Peopling of the World, Constable & Robinson, London.

OPPENHEIMER, STEPHEN (2003): The Real Eve: Modern Man’s Journey Out of Africa, Carrol and Graf Publishers, New York.

PETRAGLIA, M. D.(2003): The Lower Palaeolithic of the Arabian Peninsula: Occupations, Adaptations and Dispersals,  Journal of World Prehistory 17: 141-179.

PETRAGLIA, MICHAEL D. and ALLCHIN, BRIDGET (2007): The Evolution and History of Human populations in South Asia, Springer, The Netherlands.

PRASAD, GANESH; KUMAR, ARUN; et al. (2012): Population Differentiation of Southern Indian Male Lineages Correlates with Agricultural Expansions Predating the Caste System, Genographic Project Study, PLOS ONE 7(11).

MAHAL, DAVID; MATSOUKAS, IANIS G. (2018): “The Geographic Origins of Ethnic Groups in the Indian Subcontinent: Exploring Ancient Footprints with Y-DNA Haplogroups”, Frontiers in Genetics 9 (4).

METSPALU, NAIT et.al. (2004): Most of the extant mtDNA boundaries in South and Southwest Asia were likely shaped during the initial settlement of Eurasia by anatomically modern humans, BMC Genetics, 2004.

MOORJANI, PRIYA; REICH, DAVID (2013): “Genetic Evidence for Recent Population Mixture in India”, American Journal of Human Genetics, 93 (3): 422-438 (Sept. 2013)

MUKHERJEE, NAMITA; NEBEL, ALMUT; OPPENHEIM, ARIELLA et al. (2001): High-resolution analysis of Y-Chromosomal polymorphisms reveals signature of population movements from Central Asia and West Asia into India, Journal of Genetics 80 (3): 125-135. December, 2001.

NARASIMHAN, VAGEESH M.; PATTERSON, NICK; MOORJANI, PRIYA et al. (2019): “The Formation of Human Populations of South and Central Asia, Science 365 (6457) (6 September 2019)

OPPENHEIMER, C. (2002): “Limited global change due to the largest known Quaternary eruption, Toba E74 kyr BP”, Quaternary Science Reviews 21: 1593- 609. 

OPPENHEIMER, STEPHEN (2003): Out of Eden: The Peopling of the World, Constable & Robinson Ltd., London.

OPPENHEIMER, STEPHEN (2004): The Real Eve: Modern Man’s Journey Out of Africa, London.

QUAMAR, RAHEEL et al. (2002): Y-Chromosomal DNA Variation in Pakistan, American Journal of  Human Genetics, Vol. 70(5): 1107-1124.

QUINTANA-MURCI, LUIS (1999): The mtDNA evidence for a Coastal Exodus from Africa, Nature Genetics 23: 437-441. 

QUINTANA-MURCI, L., SEMINO, O., BANDELT, H. J. (1999): Genetic Evidence of an early exit of Homo sapiens sapiens from Africa through eastern Africa, Nature Genetics 23: 437-441. 

QUINTANA-MURCI, L. et al. (2001): Y-Chromosome Lineages trace Diffusion of People and Languages in South-western Asia, American Journal of Human  Genetics, Vol. 68(2): 537-542.  

QUINTANA MURCI, L., CHAIX, R., WELLS, R.S. (2004): Where West meets East: The Complex mtDNA Landscape of the Southwest and Central Asian Corridor, American Journal of Human genetics, 74 (5) 827-45.

RAMPINO, MICHAEL, R.; AMBROSE, STANLEY, H. (2000): “Volcanic Winter in the Garden of Eden: The Toba Supereruption and the Late Pleistocene Human Population Crash” in Floyd W. McCoy; Grant Heiken (eds.) Volcanic Hazards and Disasters in Human Antiquity, Geological Society of America.  

RANAWEERA, LANKA; KAEWSUTTHI, SUPPANNEE; WIN TUN, AUNG (2014): Mitochondrial DNA history of Sri Lankan ethnic people: their relations within the island and within the Indian subcontinental populations, Journal of Human Genetics, Vol. 59: pp 28-36).

REGUEIRO, M., CADENAS, A.M., GAYDEN, T. (2006): Iran: Tricontinental Nexus for Y-Chromosome Driven Migration, Human Heredity 61 (3): 132-43.

REICH, DAVID (2018, 2019): Who We Are and How We Got Here, Oxford University Press.

REICH, DAVID; THANGARAJ, KUMARASAMY; PATTERSON, NICK; PRICE, ALKES, L. & SINGH, LALJI (2009): Reconstructing Indian Population History; Nature, 2009 Sept. 24, 461: 489- 494. 

RENFREW, COLIN (1987): Archaeology and Language: The Puzzle of Indo-European Origins, Jonathan Cape, London.

RENFREW, COLIN (1996): Languages, Families and Spread of Farming in HARRIS, D.R.: The Origin and Spread of Agriculture and Pastoralism in Eurasia, Smithsonian Institute Press, Washington DC.

RICHARDS, M., MACAULAY, V., HICKEY E. et al. (2000): Tracing European Founder Lineages in the Near Eastern mtDNA Pool, American Journal of Human Genetics, November 2000, 67 (5) 1251-76.    

ROBERTS, ALICE (2009): The Incredible Human Journey, Bloomsbury, London.

ROBERTS, ALICE (2011): Evolution The Human Story, DK Publishers, London & New York.

ROHLING, E.J. et.al. (1998): “Magnitude of Sea-level low stands of the past 500,000 years”, Nature, 394, pp. 162-165.

ROHLING, E.J. et.al. (2003): “Sea-level Fluctuations during the Last Glacial Cycle, Nature, 423, pp. 853-858.

ROYCHOUDHURY, S., ROY, S., DEY, B. et al. (2000): Fundamental Genomic Unity of Ethnic India revealed by Analysis of Mitochondrial DNA, Current Science 79: 1182-1192.

SAHOO, S.; SINGH, A.; SITALAXMI, T. et al. (2006): A Prehistory of Indian  Chromosomes: Evaluating demic diffusion scenarios, Proceedings of the National Academy of Science, USA 103: 843-848.

SEMONO, O.; PESSARINO, G. et al. (2000): The Genetic Legacy of Palaeolithic Homo sapiens sapiens in Extant Europeans: A Y-Chromosome Perspective, Science 290 (5494): 1155-9. 

SENGUPTA, S.; CAVALLI-SFORZA, LUCA, L. et al. (2006): Polarity and Temporality of High Resolution Y-Chromosome distribution in India identify both Indigenous and Exogenous Expansions and reveal Minor Genetic Influence of Central Asian Pastoralists, American Journal of Human Genetics, 78(2): 202-221.                                                                                                                                                                                                      

SHAH, ANISH M; TAMANG, RAKESH et al. (2011): Indian Siddis: African Descendants with Indian Admixture, The American Journal of Human Genetics, 89: 154. 

SINGH, K.S. (2002): People of India: An Introduction, Oxford University Press.

STRINGER, C. and McKIE, R. (1996): The African Exodus, Jonathan Cape, London.

STRINGER, C. (2000): Coasting out of Africa, Nature 405: 24

STRINGER, CHRIS (2002): ‘Modern Human Origins: Progress and Prospects’, Philosophical Society, London.

THAMSEEM, ISMAIL; THANGARAJ, KUMARASAMY et al. (2006): Genetic Affinities among the Lower Castes and Tribal Groups of India, BMC Genetics, 7: 42.

THANGARAJ, K.; CHAUBEY, G et al. (2006): In situ Origin of Deep rooting lineages of mitochondrial Macrohaplogroup ‘M’ in India, BMC Genomics 2006, 7: 151  

THIAGARAJAH, SIVA (2011): Peoples and Cultures of Early Sri Lanka, Tamil Information Centre, Kingston, UK.

TRIPATHY, VIKAL; NIRMALA, A. and REDDY, MOHAN (2008): Trends in Molecular Anthropological Studies in India.

UNDERHILL, P.A. et al. (2001): The Phylography of Y Chromosome binary Haplotypes and the Origins of Modern Human Populations, Annals of Human Genetics 65: 43-62. 

UNDERHILL, P.A. (2004): Clues from Y-Chromosome Haplotype, Stanford Educational Publications.

VIGILANT, L. et al. (1991): African populations and the evolution of human mitochondrial DNA, Science 253: 1503-7.

WATSON, E. et al. (1997): Mitochondrial Footprints of Human Expansions in Africa, American Journal of Human Genetics 61: 691-704. 

WELIKALA, ANJANA; DESAI, SHAILESH; FERNANDO, AMALI et. al. (2024): The Genetic Identity of the Vedda: A language isolate of South Asia., Mitochondrion 76, (2024) 101884.

WELLS, R.S.; YULDASHEVA, N.; RUZIBAKIEV, R.; UNDERHILL, P.A. et al. (2001): The Eurasian Heartland: A Continental Perspective on Y-Chromosome Diversity, Proceedings of the National Academy of Sciences 98(18): 10244. 

WELLS, SPENCER (2002): The Journey of Man, Princeton University Press, N.J.

WELLS, SPENCER (2003): The Journey of Man, Random House Paperback Ed. New York.

WELLS, SPENCER (2007): Deep Ancestry, National Geographic, Washington DC.

WESTWAY, KIRA E. et al. (2017): ‘An Early Modern Human Presence in Sumatra 73,000 to 63,000 Years Ago’. Nature, August 2017, Vol. 548, Issue 7688.

ZALLOUA, PIERRE A.; XUE, XALI et al. (2008): Y-Chromosome Diversity in Lebanon is Structured by Recent Historical events, The American Journal of Human Genetics, 82 (4).

ZERJAL, TATIANA; PANDYA, ARPITA; THANGARAJ, KUMARASAMY et al. (2006): Y-Chromosomal Insights into the Genetic Impact of the Caste System in India, Human Genetics 121 (1): 137-44. 

இந்திரபாலா, கா. (2006), இலங்கையில் தமிழர்: ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, குமரன் புத்தக இல்லம், சென்னை – கொழும்பு.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்