கொழும்புத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடிகளான கிளர்ச்சியாளர்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
49 நிமிட வாசிப்பு

கொழும்புத் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடிகளான கிளர்ச்சியாளர்கள்

October 28, 2026 | Ezhuna

‘இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: குமாரி ஜெயவர்த்தன

கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு நகரம்சார் தொழிற்சங்க இயக்கம் (Urban Labour Movement) 1893இல் ஆரம்பித்தது. அவ்வாண்டில் நடைபெற்ற அச்சகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் தொழிளாலர் இயக்கத்தை தொடக்கி வைத்தது எனலாம். 1893 முதலான இந்த முப்பது ஆண்டுகளையும் கொழும்பு நகரில் தொழிற்சங்க இயக்கம் பரந்த அளவில் தோன்றுவதற்கு முற்பட்ட காலம் எனக் கூறலாம். இக்காலத்தில் தொழிலாளர்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் தொடர்ச்சியுடையதாக இருக்கவில்லை; தொழிலாளர்களுக்கான நிரந்தர தலைமைத்துவமும் (Permanent Leadership) இக்காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. இந்த முப்பது ஆண்டுகால தொழிலாளர் இயக்கம் பற்றி குமாரி ஜெயவர்த்தன அவர்கள் ‘Pioneer Rebels among the Colombo Working Class’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கமாக அமையும் இத்தமிழ்க் கட்டுரைக்கு ‘கொழும்புத் தொழிற்சங்கத்தின் முன்னோடிகளான கிளர்ச்சியாளர்கள்’ எனத் தலைப்பிட்டுள்ளோம்.

தொழிலாளர் இயக்கத்தின் முதற்கட்டமான முப்பது ஆண்டுகளின் வரலாற்றுத் தகவல்களை பொலிஸ் உத்தியோகத்தர்களின் கோவைகளில் (Police Files) இருந்தும், நீதிமன்ற விசாரணை பற்றிய (Court Proceedings) பதிவுகள், பத்திரிகைச் செய்தி அறிக்கைகள் என்பனவற்றில் இருந்தும் பெறவேண்டியதாக உள்ளது. இந்தப் பதிவுகளும், அறிக்கைகளும் பக்கச்சார்புடையனவாகக் காணப்படுகின்றன. இப்பதிவுகளும் செய்தி அறிக்கைகளும் தொழிலாளர்களைக் கேலி செய்வனவாக அல்லது அவர்களது கேடு விளைவிக்கும் குணவியல்பை மிகைப்படுத்திக் கூறுவனவாக அமைந்திருந்தன. ஒவ்வொரு முக்கிய வேலை நிறுத்தமும் முடிவடைந்தவுடன் அரசாங்கம் விசாரணைக் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்தியது. அவ்விசாரணைகளின் போது சாட்சியமளித்த தொழிலாளர்கள் சுட்டிக்காட்டிய குறைகள் இந்த விசாரணை அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. ஆயினும் இந்த அறிக்கைகள் பக்கச்சார்புடையனவாகவே உள்ளன.

முப்பதாண்டுக்கால வரலாற்றைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களின் தன்மையைப் பொறுத்து, இக்காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரித்து நோக்குதல் பயனுடையது. முதலாவது கட்டம் 1893 தொடக்கம் 1986 ஆம் ஆண்டு வரையான காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் தொழிலாளர் கிளர்ச்சிகளிலும் வேலை நிறுத்தங்களிலும் பங்கு பற்றிய தொழிலாளர்கள் பற்றிய தெளிவான தகவல்களைப் பெற முடியவில்லை. தொழிலாளர்கள் பற்றிய பத்திரிகைச் செய்திகளிலும், நீதிமன்ற விசாரணையின் போதும் என்னென்ன கூறப்பட்டனவோ அவற்றை மட்டும் வைத்துக் கொண்டே இக்கால நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இம்முதற்கட்டத்தில் பலமுள்ள தொழிலாளர் இயக்கம் தோற்றம் பெற்றிருக்கவில்லை. இக்காரணத்தால் பொலிஸ் திணைக்களத்தில் இக்காலம் குறித்த கோவைகள் எவையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. 1912இன் ரெயில்வே வேலைநிறுத்தம் தொடக்கம் 1915ஆம் ஆண்டின் முஸ்லிம்களுக்கு எதிரான கலகம் வரையான 3–4 ஆண்டுகள் மிகவும் கொந்தளிப்பான காலமாகும். இக்காலத்தில் இங்கிலாந்தில் உள்ள காலனியச் செயலாளர் அலுவலகத்திற்கு (Colonial Secretary’s Office) பல அறிக்கைகள் அனுப்பப்பட்டன. பொலிஸ் திணைக்களமும் ஒவ்வொரு நிகழ்வுகள் பற்றியும் அவற்றில் சம்பந்தப்பட்ட சதியாளர்களான நபர்கள் பற்றியும் தகவல் கோவைகளைப் பேணிவரத் தொடங்கியது. இக்கோவைகள் தனிப்பட்ட தொழிலாளர்களை அடையாளம் காண்பனவாகவும், முக்கிய தலைவர்களை அடையாளம் காண்பனவாகவும் உள்ளன. பொலிஸ் இக்காலத்தில் ஒவ்வொரு சிறு அசைவையும் உன்னிப்பாக அவதானித்து வந்ததைக் காண முடிகிறது. 1912இன் ரெயில்வே வேலைநிறுத்தம் பற்றிய விசாரணை தொடர்பான ஆவணங்களும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன. 1915க்கு பிந்திய மூன்றாவது காலகட்டத்தில் ஏ.ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவரின் தலைமையில் கொழும்புத் தொழிலாளர்களால் தொழிற்சங்க இயக்கம் ஓர் அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டது. இக்கட்டத்தில் பொலிசார் தொடர்ச்சியான கண்காணிப்பு வேலையைச் செய்யத் தொடங்கினர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர் தலைவர்களைப் பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தனர். தொழிலாளர்கள் நடத்தும் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் பொலிசார் சென்று அவதானித்து, குறிப்புகள் எடுத்தனர். இதுபோன்றே ஊர்வலங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றிலும் பொலிசார் மக்களோடு மக்களாக கலந்து நின்று நிகழ்வுகளை அவதானித்து வந்தனர்.

ஆரம்பகால வேலைநிறுத்தங்கள்

1893 தொடக்கம் 1923 வரையான காலத்தின் வேலைநிறுத்தங்களைப் பற்றி ஆராயும் போது, அவ்வேலை நிறுத்தங்களில் தீவிரவாதிகளான (Militant Workers) தொழிலாளர்கள் பலர் பங்குபற்றியிருந்ததைக் காண முடிந்தது. இவர்கள் யாவரும் இரண்டு வகையான தொழில்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும் அவதானிக்க முடிந்தது.

  1. சிறப்புத்திறன் மிக்க இயந்திரவியலாளர்கள் – இவ்வகையினராக அச்சகத்தொழில், ரயில்வே துறை, துறைமுகத் தொழிலாளர் என்போரைக் குறிப்பிடலாம்.
  2. சுதந்திரத் தொழிலாளர்கள் – மாட்டுவண்டிக்காரர்கள், சலவைத் தொழிலாளர்கள் என்போர் சுதந்திரமாக இயங்கிய தொழிலாளர்களுக்கு உதாரணமாகும்.

இவ்விரு வகைத் தொழிலாளர்களிடமிருந்து தீவிர செயற்பாட்டாளர்களான தொழிலாளர்கள் தோன்றினர். இவர்களைப் பத்திரிகைகளும், பொலிஸ் அறிக்கைகளும் குழப்பக்காரத் தலைவர்கள் என அடையாளப்படுத்தின. இவர்கள் இயல்பிலேயே போர்க்குணம் மிக்கவர்களாகவும், பொலிசார், அரச அதிகாரிகள், முதலாளிகள் போன்று அதிகாரத்தினைச் செலுத்துபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்து குழப்பம் விளைவிப்பவர்களாகவும் இருந்தனர். இத்தீவிரவாதிகள் தம்மை வேலையில் இருந்து நீக்கித் தண்டித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல், துணிச்சலான செயல்களில் ஈடுபட்டனர். இக்குழப்பக்காரர்கள் படிப்பறிவு உள்ளவர்களாகவும் அரசியல் நடவடிக்கைகளையும் நாட்டு நடப்புகளையும் புரிந்துகொள்ளக் கூடியவர்களாகவும் இருந்தனர். 19ஆம் நூற்றாண்டின் பௌத்த–இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் தாக்கம் இவர்கள் மீது இருந்தது.

அக்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த தினமின, லக்மின, சரசவிசன்டிறச, கவட்டகத்திகாய, பௌத்தய போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்களாக இக்குழப்பக்காரர்கள் விளங்கினர். இப்பத்திரிகைகளில் ‘கவட்டகத்திகாய’, ‘பௌத்தய’ போன்றன அநகாரிக தர்மபாலவுடன் தொடர்புடையனவாகவும், அதிகார வகுப்பைக் கேலி செய்து எழுதும் பத்திரிகைகளாகவும் இருந்தன. அநகாரிக தர்மபாலவின் ஆதரவாளரான பியதாச சிறிசேன ‘சிங்கள ஜாதிய’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் அப்பத்திரிகையில் காரசாரமான கண்டனங்களை எழுதிவந்தார். தொழிலாளர் வர்க்கத்தினரிடையே பொதுசன அபிப்பிராயத்தை (Public Opinion) உருவாக்கியதில் மேற்குறித்த பத்திரிகைகளுக்குப் பெரும் பங்குண்டு. பிரித்தானிய அதிகாரிகள், கிறிஸ்தவ மிசனரிகளின் பாதிரிகள், அந்நியர்கள் ஆகியோருக்கு எதிரான கண்டனங்களை அநகாரிக தர்மபால எழுதினார். இக்கண்டனங்கள் சக்திமிக்க அரசியல் எழுத்துகளாக விளங்கின. இவற்றைப் படித்த தொழிலாளர்களிடையே பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான உணர்வெழுச்சி ஏற்பட்டது. உலக விவகாரங்கள் பற்றிய செய்திகளையும் இப்பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. 1905ஆம் ஆண்டு ரஷ்யாவை ஜப்பான் போரில் வெற்றி பெற்றது பற்றியும் ரஷ்யா, எகிப்து, அயர்லாந்து, துருக்கி, சீனா போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளையும் கிளர்ச்சிகளையும் பற்றி இப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. பிரித்தானியாவிலும் இந்தியாவிலும் தொழிலாளர் வர்க்கம் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பற்றிய செய்திகளை இப்பத்திரிகைகள் வெளியிட்டுத் தொழிலாளர்களிடையே கிளர்ச்சி உணர்வைத் தூண்டிவிட்டன. மேற்குறிப்பிட்ட நாடுகளில் நிகழும் வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொழிலாளர் கிளர்ச்சிகள் என்பன பற்றி இப்பத்திரிகைகள் தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தன.

கொழும்புத் தொழிலாளர் வர்க்கத்தின் முழுநேரத் தலைவர் என்று சொல்லக்கூடியவராக ஏ.ஈ. குணசிங்க விளங்கினார். ஆயினும் தொழிலாளர் இயக்கத்தின் அனுதாபிகளும் ஆதரவாளர்களுமான மத்தியத்தர வர்க்க அறிவாளிகள் சிலரும் இக்காலத்தில் செயற்பட்டனர். ஏ.ஈ. புல்ட்ஜென்ஸ், லிஸ்போவா பின்டோ, அநகாரிக தர்மபால, பொன்னம்பலம் அருணாசலம், ஹெக்டர் வன் குல்ஜன் பேர்க், வண. ஜி.பி. ஏக்கநாயக்க, ஜோன் கொத்தலாவல, மார்ட்டினஸ் பெரேரா, C.H.Z. பெர்ணான்டோ, சி. பத்துவன்துடாவ, ஆர்தர் டயஸ், டி.சி. சேனநாயக்க, சி. டொன்பஸ்ரியன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள். இவர்களில் பலர் அரசியல் தலைவர்களாகவும், சமய சீர்திருத்தவாதிகளாகவும், மதுவிலக்கு இயக்கத்தில் பங்கேற்றவர்களாகவும் இருந்தனர். இத்தலைவர்கள் தொழிலாளர்களுக்காக ஆதரவுக்குரல் கொடுத்ததோடு அவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் விளங்கினர். ஆயினும் தொழிலாளர் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய முழுநேரத் தலைவர் ஒருவரான மத்தியதர வர்க்க அறிவாளி இல்லாதிருந்தமை அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.

அக்காலத்தில் நகரத் தொழிலாளர் வர்க்கத்திற்குப் பல அடிப்படையான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. தொழிலாளர்கள் நாட்டின் அரசியலில் பங்கேற்க முடியாதவர்களாக, வாக்குரிமை அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். சொத்துடையவர்களுக்கும், ஆங்கிலக்கல்வித் தகைமை உடையவர்களுக்குமே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது. சமூக அந்தஸ்து நிலையில் தொழிலாளர்கள், அவர்களின் வேலை கொள்வோரான முதலாளிகளிடமிருந்தும், பிரித்தானியர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டவர்களாக இருந்தனர். வர்க்க இடைவெளி (Wide Class Barriers) இருபகுதியினரையும் வேறாக்கியது. பொருளாதார நிலையிலும் தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் இருந்தனர். தொழிலாளர்களின் நாளாந்தக் கூலி, தோட்டங்களில் 33 சதங்கள் மட்டுமே. நகரத் தொழிலாளர்களின் கூலியும் பிழைப்பு மட்டத்திலேயே (Subsistence Level) இருந்தது. கொழும்பு நகரில் பயிற்றப்பட்ட திறன்மிக்க உழைப்பாளர் (Skilled Labour) ரூ.1 முதல் ரூ.1.50 வரை கூலியாகப் பெற்றனர். தொழிற்சங்கத்தை அமைப்பதற்குச் சட்டரீதியான தடைகள் இருக்கவில்லை. ஆயினும் வேலைநிறுத்தம் செய்தல் 1865ஆம் ஆண்டின் தொழில் கட்டளைச் சட்டத்தின் படி (Labour Ordinance) தண்டனைக்குரிய குற்றமாகும். 1921ஆம் ஆண்டிலேயே வேலைநிறுத்தத்தைத் தண்டனைக்குரிய குற்றமாக விதித்த 1865இன் கட்டளைச் சட்டம் இரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் தொடக்க காலத்தில் வேலைநிறுத்தம் செய்வதற்கு அசாத்தியமான துணிச்சல் தேவைப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளி உடனடியாகவே வேலையில் இருந்து நீக்கப்படும் ஆபத்து இருந்தது. அத்தோடு அவர் மீது வழக்குத் தொடுப்பதுடன் ஒப்பந்தத்தை மீறிய குற்றத்திற்கான தண்டனை வழங்கக்கூடிய ஆபத்தும் இருந்தது. அக்காலத்தில் நிதிப்பலமுடைய தொழிற்சங்கங்கள் இருக்கவில்லை. இதனால், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்க முடியவில்லை. இக்காரணத்தால் தொழிலாளர்கள் தனிப்பட்ட முறையில் பெரும் இன்னல்களைத் தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அச்சகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஆபத்துகளையும், இன்னல்களையும் பொருட்படுத்தாது வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்வந்த ஒருவர் அந்த நாளில் இருந்தாரா என்று கேட்டால், எம்மனதில் வில்லியம் என்ற வீரர் (Hero) தான் ஞாபகத்திற்கு வருவார். வில்லியம் இக்கம்பனியில் ‘Machine Ruler’ என்னும் வேலையைச் செய்பவராக இருந்தார். இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம் 1893இல் கொழும்பு நகரில் H.W. கேவ் அன்ட் கம்பனியில் இடம்பெற்றது. இக்கம்பனி அக்காலத்தின் முன்னணிப் பதிப்பகமாகவும் புத்தக விற்பனையாளராகவும் (Leading Publisher and Book Seller) விளங்கியது. அக்கம்பனியில் வேலைசெய்த அச்சுத் தொழிலாளர்களுக்கும் அக்கம்பனிக்கும் இடையே மாதாந்தக் கூலியை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு பிணக்கு எழுந்தது. வில்லியம் தனது சக தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து முகாமையாளரை நேரில் சந்தித்து முறையிட்டார். அத்தோடு எழுத்துமூலமான வேண்டுகோளையும் அனுப்பிவைத்தார். இதன்பின் இடம்பெற்ற வேலைநிறுத்தத்தின் போது, வில்லியமும் வேறு ஐந்து குழப்பக்காரர்களான தலைவர்களும் (Ring Leaders) வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது 1865ஆம் ஆண்டின் தொழில் கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தோட்டத் தொழிலாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள், பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் ஆகிய வகைத் தொழிலாளர்கள் ஒரு மாத முன் அறிவித்தல் இன்றி அல்லது தகுந்த காரணம் இல்லாது வேலைக்கு வராதவிடத்து குற்றம் ஒன்றை இழைத்ததாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுதல் முடியும். இந்தச் சட்டம் ஒருபோதும் நகரத் தொழிலாளர் விடயத்தில் அதுவரை பிரயோகிக்கப்படவில்லை. வில்லியம் மீது இச்சட்டப்படி வழக்குத் தொடுக்கப்பட்டது. அதனை விசாரணை செய்த நீதிமன்றம் வில்லியம் ‘Journeyman Artificer’ என்ற வரையறைக்கு உட்பட்ட தொழிலாளி எனக் கூறமுடியாது எனவும், 1865 கட்டளைச் சட்டம் பொருந்தாது எனவும் குறிப்பிட்டு வில்லியத்தை விடுதலை செய்தது. அப்போது ‘டைம்ஸ் ஒவ் சிலோன்’ பத்திரிகை இத்தீர்ப்பு அசாதாரணமானது என்று செய்தி வெளியிட்டதோடு, இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தது. உயர் நீதிமன்றத்திற்கு (Supreme Court) மேன்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி லோறி (Justice Lawrie) கீழ் நீதிமன்றின் தீர்ப்பை ரத்துசெய்து வில்லியத்திற்கு 7 நாட்கள் (ஒரு வாரம்) சிறைத்தண்டனையை விதித்தார். அச்சுத் தொழிலாளர்கள் ‘Journeymen Artificers’ (அதாவது பயிற்றப்பட்ட தொழிலாளர்) என்ற வரையறைக்கு உட்படுத்தப்பட்டவர்களே என்பதே உயர்நீதிமன்றத்தின் முடிவாகும்.

சலவைத் தொழிலாளர்கள்

அச்சகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் பின்னர் 1896ஆம் ஆண்டில் கொழும்பு நகரின் சலவைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கொழும்பு நகர சபையின் அனுமதிப்பத்திர நடைமுறையை எதிர்த்து அவர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். சலவைத் தொழிலாளர்கள் துணி துவைக்கும் வேலையைச் செய்யும் இடங்களுக்கு அனுமதிப்பத்திரம் பெறவேண்டும் என்ற நடைமுறையை, நகர சபை நடைமுறைப்படுத்தியது. இதனை எதிர்த்த சலவைத் தொழிலாளர்கள் சலவைத் தொழில் செய்ய மறுத்தனர். தொழிலாளர்களே தமக்கு வேண்டிய நிதியைச் சேகரித்தனர். தொழிலாளர்களை அழைத்துப் பல கூட்டங்களை நடத்தினர். துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். கருங்காலிகளாகச் செயற்பட்டு வேலைநிறுத்தத்தைப் பலமிழக்கச் செய்வோர் இல்லாதவாறு விழிப்புணர்வு ஊட்டினர். இவ்வாறு கொழும்பு நகரின் சலவைத் தொழிலாளர்கள் முழுமையாக ஓரணியில் திரண்டனர். நேரடி நடவடிக்கையில் தாம் இறங்கப் போவதை விளக்கித் தொழிலாளர் தலைவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிய முடிகிறது.

‘நாம் என்ன துன்பம் வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். ஆனால், பதிவு செய்தல் (Registration) என்ற கொடுமையான அடக்குமுறை நடவடிக்கைக்கு நாம் பணிந்துபோகப் போவதில்லை.’

இந்த வேலைநிறுத்தம் மூலம் சலவைத் தொழிலாளர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. ஆயினும் தொழிலாளர்களின் ஒற்றுமையான நேரடி நடவடிக்கை அதிகார வகுப்புக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவதாக அமைந்தது எனலாம்.

‘டைம்ஸ் ஒவ் சிலோன்’ பத்திரிகை இந்த வேலைநிறுத்தம் பிழையான உதாரணம் (Bad Example) என்று கண்டனம் செய்தது. ஏனைய தொழிலாளர்கள் இதனைப் பின்பற்றி ஒன்றுசேர்ந்து வேலைநிறுத்தம் செய்தால் சமூகத்திற்குத் தீங்கு விளையும் என்று வேலைநிறுத்தங்களின் அபாயம் பற்றிக் கருத்துரைத்தது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட மறுத்த சலவைத் தொழிலாளி ஒருவரை அச்சுறுத்தியதாக ஒரு தொழிலாளி மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பொல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த ஹர்மானிஸ் என்ற சலவைத் தொழிலாளியே இவ்வாறு குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர். வேலைநிறுத்தம் செய்ய மறுத்த தொழிலாளி ஒருவரை ஹர்மானிஸ்  தாக்கியதாகவும், அவர் வைத்திருந்த துணிகள் மீது சாயநீரை ஊற்றி நாசப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஹர்மானிஸுக்கு 25 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். தொழிலாளர் சார்பில் ஹெக்டர் வன் குப்லன்பேர்க் நீதிமன்றத்தில் வாதாடினார். அவர் பதிவு நடைமுறையைப் பின்பற்றாத சலவைத் தொழிலாளர்களை அரசாங்கம் அநியாயமாகத் தண்டிக்க முனைகிறது எனத் தமது எதிர்ப்பை நீதிமன்றுக்கு எடுத்துரைத்தார்.

மாட்டு வண்டிக்காரர்

1906க்கும் 1996க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அடிக்கடி பல தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் கொழும்பு நகரில் இடம்பெற்றன. இவை யாவற்றுள்ளும் மிகப்பெரிய வேலைநிறுத்தமாக 1906ஆம் ஆண்டின் மாட்டு வண்டிக்காரர் வேலைநிறுத்தம் அமைந்தது. அந்த வேலைநிறுத்தத்தின் போது 500 மாட்டுவண்டிக்காரர்கள் கொழும்பு நகர சபையின் புதிய சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். மாட்டுவண்டியை ஓட்டிச் செல்லும்போது வண்டியின் நுகத்தடியில் அமர்ந்தவாறு ஓட்டிச் செல்லக்கூடாது; மாட்டுவண்டிக்காரர்கள் நடந்துகொண்டே வண்டியைச் செலுத்த வேண்டும் என்பதே சட்டமாகும். மாட்டுவண்டிக்காரர்கள் வண்டியில் அமர்ந்து ஓட்டும்போது கவனம் இல்லாது வண்டியை ஓட்டுகின்றனர். அவர்கள் வண்டியில் இருந்தவாறு தூங்குகின்றனர் என்பது நகர சபையின் குற்றச்சாட்டாகும். புதிய சட்டம் வண்டிக்காரர்களை நீண்ட தூரம் நடந்து செல்வதை நிர்ப்பந்தித்தது. இது பொலிஸ்காரர்கள் தலையிட்டு அவர்களைத் தொந்தரவு செய்யவும், பணம் கறக்கவும் வழிவகுத்துள்ளது என வண்டிக்காரர்களின் எதிர்வாதம் அமைந்தது. மாட்டு வண்டிக்காரர்களுக்கு ஜோன் கொத்தலாவல என்னும் மத்தியதர வர்க்க வர்த்தகர் ஆதரவு அளித்தார். அவர்கள் சார்பாக வாதாடினார். ஜோன் கொத்தலாவல மாட்டு வண்டிகளைத் தமது ஒப்பந்த வேலைகளுக்காக வாடகைக்குப் பெற்றுக்கொண்ட ஒருவர் ஆதலால் அவர் வண்டிக்காரர்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களுக்கு அனுதாபம் காட்டி ஆதரவு கொடுத்தார். மாட்டுவண்டிக்காரர்களின் தீவிரவாதமும் (Militancy) போர்க்குணமும் பலரதும் கவனத்தை ஈர்த்தது. ஜப்பான் ஐரோப்பிய நாடான ரஷ்யாவைப் போரில் வென்றதன் தாக்கம் மாட்டுவண்டிக்காரர்களில் வெளிப்பட்டது எனவும், இந்தியாவின் தேசியவாத எழுச்சியும், பிரித்தானியாவின் தொழிலாளர் வர்க்கத்தின் தீவிரவாதமும் மாட்டுவண்டிக்காரர்களுக்கு ஆதரவாக அமைந்தது எனவும் பலர் கருத்துரைத்தனர். அக்காலத்தின் பத்திரிகை ஒன்று, இலங்கையிலும் தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்து வருவதை மாட்டுவண்டிக்காரர்களின் வேலை நிறுத்தம் எடுத்துக் காட்டுவதாக உள்ளது என எழுதியது. மாட்டுவண்டிக்காரர்களின் தலைவர்களான குழப்பக்காரர்களைப் பிரித்தானியாவின் தொழிற்சங்க இயக்கத்தின் குழப்பம் விளைவிக்கும் தலைவர்களுடன் இப்பத்திரிகை ஒப்பிட்டு எழுதியது.

மாட்டுவண்டிக்காரர்களுக்கு நகரத் தொழிலாளர் வர்க்கத்தினர் தமது ஆதரவை வழங்கினர். அதிகார வகுப்பைத் துணிச்சலோடு எதிர்த்து நின்ற வண்டிக்காரர்கள், தம் மத்தியில் உள்ள கருங்காலிகள் சிலர் தமது போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து விடாதபடி மிகுந்த அவதானத்துடன் நடந்துகொண்டனர். வேலைநிறுத்தம் வண்டிக்காரர் மனதில் அடக்கிவைத்திருந்த கோபம் வெளிப்படுத்தப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் பொலிஸ்காரர்களின் அடக்குமுறையை வெளிப்படையாக எதிர்த்து, அவர்களைச் சீண்டும் முறையில் நடந்துகொண்டனர். இரண்டு வண்டிக்காரர்கள் மாட்டுவண்டியில் ஏறி அமர்ந்தபடி வண்டியை ஓட்டிக்கொண்டு நகரைச் சுற்றி உலாவந்தனர். அவர்களில் ஒருவர் சுருட்டைப் புகைத்துப் புகையை அலட்சியமாக ஊதியபடி இருந்தார். மற்றவர் ஆபாசமான பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார். கொழும்பு நகர வீதிகளில் பல இடங்களிலும் வேலைநிறுத்தத்தின் போது சனக்கும்பல் நிரம்பி வழிந்தது. குறிப்பாகப் புறக்கோட்டையின் மத்திய பகுதியில் சனக்கும்பல் கூடியது. சனக்கும்பல்கள் நகரவீதிகளில் கூடின, வெட்கக்கேடான, இழிவுசெயல்கள் இடம்பெற்றன என்றும் மஹாமுதலியார் கருத்துரைத்தார்.

ரெயில்வே தொழிலாளர்கள்

1921க்கு முந்திய காலத்து வேலைநிறுத்தங்கள் பற்றியும், அதில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் பற்றியும் தெளிவான தகவல்களைப் பெறமுடியவில்லை. அக்காலத்து வேலைநிறுத்தங்களை நடத்திய தொழிலாளர்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள்; தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றிப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் அவர்கள் போராடினார்கள். வேலையை இழந்தாலும், பணக்கஷ்டம் ஏற்பட்டு துன்பப்பட்டாலும் அந்த இழப்புகளைத் தாங்கிக்கொண்டனர். அதிகாரத்துவத்தை எதிர்த்துச் சிறைக்குக்கூடச் சென்றனர். இவர்கள் தொழில் திறன்வாய்ந்த பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக இருந்தனர். அச்சகத் தொழிலாளர்கள் தொழில்திறன் வாய்ந்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகும். சலவைத் தொழிலாளர்கள், வண்டிக்காரர்கள் ஆகிய இருபிரிவினரும் குறிப்பிட்ட வகைத் தொழில் குழுமத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனால், மக்களிடையே குழுவோடு சேர்ந்து இயங்கும் குழு விசுவாசம் இருந்தது. இப்பண்புகள் காரணமாக 1912க்கு முற்பட்ட காலத்து வேலைநிறுத்தங்களில் பங்குபற்றியோரிடம், ஏனைய ஏழைத் தொழிலாளர்களிடம் காணப்படாத தீவிரம் காணப்பட்டது.

1912ஆம் ஆண்டின் வேலைநிறுத்தம் பற்றியும், அதற்குப் பிந்திய வேலைநிறுத்தங்கள் பற்றியும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. ரெயில்வே தொழிலாளர்களுக்குக் குற்றங்களுக்காகத் தண்டப்பணம் (Fines) அறவிடப்படுதல், சம்பளத்தில் கழிவுகள் செய்தல் ஆகிய நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கோபமுற்ற ரெயில்வே தொழிலாளர்கள் 1912இல் வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வேலைநிறுத்தத்தின் பின்னர் ‘Ceylon Workmen Provident Fund Association’ (இலங்கைத் தொழிலாளர் நலநிதிச் சங்கம்) என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கம் தாபிக்கப்பட்டது. இச்சங்கத்தில் ஆர்தர் டயஸ், சாள்ஸ் பத்துவன் துடாவ, D.L. சேனநாயக்க போன்ற மதுவிலக்கு இயக்கப் போராளிகள் உத்தியோகப் பதவிகளை வகித்த உறுப்பினர்களாக இருந்தனர். ரெயில்வே தொழிலாளர்களில் பிரபலமாகவிருந்த செயற்பாட்டாளர்கள் பலர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்தனர். மார்சல் விக்கிரமசிங்க, H. வலன்டைன் பெர்ணாண்டோ, W.H. புளொக், D. ஜோன் பெரேரா ஆகியோர் இயந்திரத் திருத்த வேலைப் பகுதியில் வேலை செய்த தொழிலாளர் ஆவர். பெர்ணான்டோ, P. பெட்ரு பெரேரா, A.L. பெட்ரு அப்பு ஆகியோர் தச்சுவேலை செய்தவர்கள். மார்த்தலிஸ் பெரேரா என்பவர் வேலை மேற்பார்வையாளராக இருந்தார். இத்தொழிலாளர்கள் யாவரும் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

மேலே குறிப்பிட்ட தீவிரவாதிகளான தொழிலாளர் தலைவர்கள் பற்றிய தகவல்கள் போதியளவு பெறக்கூடியதாக உள்ளன. அவர்கள் மேலதிகாரிகளுடன் முரண்பட்டு நின்றதை அறிய முடிகின்றது. 1912 வேலைநிறுத்தத்தின் பின்னர் 1915 முஸ்லிம்–சிங்கள இனக்கலவரத்தின் போது இத்தலைவர்களின் செயற்பாடுகள் பற்றியும் போதிய தகவல்கள் கிடைக்கின்றன. இக்காலப்பகுதியின் வேலைநிறுத்தங்கள் சமயக் காரணத்தால் அல்லாது, பொருளாதார அரசியல் காரணங்களால் தூண்டப்பெற்றவை என்பதை இத்தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. முதலாவது உலக யுத்தம் ஆரம்பமான போது பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்தன. இதனால் தொழிலாளிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இக்காலத்தில் தேசியவாத உணர்ச்சி மேலோங்கியது.

1915இன் கலகம் கிரிமினல் குற்றவாளிகள், நகரத்தின் சண்டியர்கள் போன்றோரால் ஏற்படுத்தப்பட்டது எனக் கூறுவது தவறு. உண்மையில் இக்கலகத்தின் பின்னணியில் கொழும்பு நகரத்தின் பயிற்றப்பட்ட தொழிலாளர்களே முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கினர். குறிப்பாக ரெயில்வே தொழிற்பட்டறையில் வேலை செய்த தீவிரவாதிகள் முக்கிய வகிபாகம் ஏற்றிருந்தனர். இப்போக்குகளை அவதானித்த அரசாங்கம் ரெயில்வே வேலைப் பட்டறையிலும், ரெயில்வே நிலையங்களிலும் பஞ்சாபி இராணுவப் படையணியை நிறுத்தியது. 140 ரெயில்வே தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் 28 பேரைக் கைது செய்து மட்டக்களப்புக்குக் கொண்டுபோய் தனிமைப்படுத்தினர்.

1912இல் ரெயில்வே வேலைநிறுத்தம் நடைபெற்றபோது, ரெயில்வே நிர்வாக அதிகாரிகளும், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும் தீவிரவாதிகளான தொழிலாளர் தலைவர்களை உன்னிப்பாகக் கண்காணித்தனர். 1915இல் கொழும்பு நகரில் பல இடங்களில் கலகம் பரவியபோது, இக்கலகங்களின் சூத்திரதாரிகள் தீவிரவாதிகளான இத்தொழிலாளர்களே என்பதை இந்த அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடையாளம் காட்டினர். 1912இன் வேலைநிறுத்தத்தின் போது முன்னணியில் நின்று செயற்பட்ட தொழிலாளர்களில் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். மட்டக்களப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டவர்களும் இந்தத் தீவிரவாதத் தலைவர்களேயாவர்.

தண்டிக்கப்பட்ட 28 தொழிலாளர்கள்

தூரதேசமான மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டுத் தண்டிக்கப்பட்ட 28 தொழிலாளர்களில் பலர் திறன்மிக்க பயிற்றப்பட்ட தொழிலாளர்களாக இருந்தனர். இயந்திரங்களை இயக்குபவர்கள், திறன்மிகு கைவினைஞர் ஆகிய பதவிகளில் இருந்த இவர்கள் தத்தம் பதவிக்குரிய சம்பளத் திட்டத்தின் உச்சநிலைச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர். இவர்களில் 15 பேர் பொருத்துநர்கள் (Fitters). இரண்டு பேர் மேற்பார்வையாளர்கள். மூன்று பேர் ‘Boiler Makers’ எனும் கொதிகலன் பராமரிப்பாளர் பதவியில் இருந்தனர். இருவர் தலைமைத் தச்சர்கள். வேறு இருவர் சாதாரண தச்சர்கள். ஒருவர் ‘Pattern Makers’ என்ற பதவியில் இருந்தார். இன்னொருவர் இரும்பு வேலை செய்பவர். 28 பேரில் 9 பேர் தொழிலாளர் நலநிதிச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்தனர். ஆறு தொழிலாளர்கள் ரெயில்வேயில் வேலை செய்த இந்தியர்களைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள். பெரும்பான்மையினர் 1912இல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது தீவிரமாகச் செயற்பட்டவர்கள். இவர்களில் ஐந்துபேர் வேலைநிறுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ரெயில்வே ஆணைக்குழு (Railway Commission) விசாரணையின் போது ரெயில்வே தொழிலாளர்களின் குறைகளை எடுத்துக்கூறிச் சாட்சியமளித்தனர். பொலிஸ் அதிபதி நாயகம் (Inspector General of Police) இத்தொழிலாளர்கள் மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டதைச் சரியான தண்டனை எனவும், இவர்களை ரெயில்வேயில் இருக்கவிட்டால் விசுவாசம் மிக்க நல்ல தொழிலாளர்களையும் கெடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார். பிரச்சினையை ஏற்படுத்திய தீயவர்களான இந்த மனிதர்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டியது அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களத்தின் தகவல் கோவைகளிலும், 1913ஆம் ஆண்டின் ரெயில்வே ஆணைக்குழு விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டபோது அதன் முன்னிலையில் தொழிலாளர்கள் அளித்த சாட்சியங்களிலும், தீவிரவாதிகளான தொழிலாளர்களைப் பற்றிய தகவல்களை நிறையப் பெறக்கூடியதாக உள்ளது. தொழிலாளர்களைக் கிளர்ச்சி செய்வதற்குத் தூண்டியவர்களில் முக்கியமானவராக மார்சல் விக்கிரமசிங்க விளங்கினார். இவர் பொருத்துநர் (Fitter) பதவியில் இருந்தார். 1912–1915 காலத்தில் இவர் நாளாந்த சம்பளமாக ரூ.1.37 சதம் பெற்றுவந்தார். அவர் பௌத்த இளைஞர் கழகத்தின் வளவில் தங்கியிருந்தார். பொலிசார் இவரைக் கலகங்களை உருவாக்குபவர் (Creator of Disturbances) என வருணித்திருந்தனர். அவரின் வாழ்க்கைப் பின்னணி பற்றிய விவரங்கள் இல்லை. பொலிஸ் அறிக்கைகளின்படி அக்காலத்தின் முன்னணியில் விளங்கிய தொழிலாளர் வர்க்கக் கிளர்ச்சிக்காரனாக மார்சல் அடையாளப்படுத்தப்பட்டார். 1912இல் ரெயில்வே தொழிலாளர்களின் குறைகள் பற்றிய முறையீடு ஒன்றில் இவர் முதலாவது ஆளாகக் கையொப்பமிட்டிருப்பதைக் காண முடிகிறது. 1912இன் வேலைநிறுத்தத்தைத் தலைமைதாங்கி நடத்தியவரும் இவரே.

தொழிலாளர் நலநிதிச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் பணியாற்றினார். 1915ஆம் ஆண்டில் கலகங்கள் இடம்பெற்றபோது, மார்சல் அப்புஹாமி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். ஆபத்தான கலகக்காரன் என அடையாளமிடப்பட்ட இவரை மட்டக்களப்புக்குக் கொண்டுசென்றனர்.

ஜோன் சொலமன் பெரேரா என்பவர் இன்னொரு தீவிர செயற்பாட்டாளராகக் குறிப்பிடப்படுகிறார். இவர் ஒரு கிறிஸ்தவர். இவரின் வயது 41. இவர் 1896இல் வேலையில் சேர்ந்து 25 ஆண்டுகள் சேவை அனுபவம் பெற்றிருந்தார். இவர் இரும்பு, வெண்கலம் போன்ற உலோகப் பொருள் உற்பத்திக்கான சட்டகங்களை மரப்பலகையினால் செய்து வழங்கும் வேலையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். பெரும்பாலான பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மொரட்டுவயைச் சேர்ந்தவர்கள். ஜோன் சொலமன் பெரேராவின் தந்தையும் பெரேராவின் வேலையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவராகப் புகையிரதப் பகுதியில் முன்பு வேலை செய்தவர். இவரின் பாட்டனாரும் தலைமைத் தச்சு வேலையாளராக இருந்தார். சொலமன் பெரேராவின் தந்தையின் சகோதரனும் தொழில் மேற்பார்வையாளராகப் பட்டறையில் வேலைசெய்தார். ஜோன் சொலமன் பெரேரா நாளாந்தம் மொரட்டுவயில் இருந்து பிரயாணம் செய்து வேலைக்கு வருவார். அவரின் ஒரு நாள் சம்பளம் ரூ.3 ஆக இருந்தது. ஜோன் சொலமன் பெரேரா வேலைத்தலச் சூழல் சரியில்லை என்பதை அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்லிவந்த ஒருவர். அவர் 1912ஆம் ஆண்டு முதற்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

1913இல் ரெயில்வே ஆணைக்குழு விசாரணை நடைபெற்றபோது ஜோன் சொலமன் பெரேரா ஆணைக்குழுவில் முன்னிலையாகித் தொழிலாளர்களின் பிரச்சினைகளான போதிய சம்பளம் வழங்கப்படாமை, தண்டப்பணம் விதித்தல், பாதகமான வேலைத்தலச் சூழல், பாரபட்சம் காட்டுதல், இந்தியத் தொழிலாளர்களைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்திச் சுதேசிகளான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தல் போன்ற பலவற்றை ஆதாரங்களுடன் விவரித்தார்; துணிச்சலோடு பேசினார். இப்போது எம்மால் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாது. முந்திய காலத்தைவிட இப்போது வாழ்க்கைச் செலவு பலமடங்கு கூடிவிட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பலமடங்கு உயர்ந்துள்ள போது சில தொழிலாளர்களின் சம்பளம் முன்னரைவிடக் குறைக்கப்பட்டது எனப் பெரேரா குறிப்பிட்டார். தொழிலாளர்களுக்கு, வராத நாட்களுக்கு சம்பளம் வெட்டப்படுவதையும் குறிப்பிட்டார். ‘நான் இன்று வேலைக்கு வரவில்லை என்றால், ரூபா 3 சம்பளக் காசை இழக்க வேண்டும். நான் என்னுடைய பிரச்சினைகளைப் பேசவில்லை; எல்லாத் தொழிலாளர்களைப் பற்றியே பேசுகிறேன்’ எனவும் அவர் கூறினார். ஜோன் சொலமன் பெரேராவை 1912 முதலே குழப்பக்காரன் என நிர்வாகம் அடையாளப்படுத்தி வைத்திருந்தது. 1913 ஆணைக்குழுவின் விசாரணையில் சாட்சியமளித்த L.G. அன்ஸ்வேர்த் என்னும் மேலதிகாரி, சொலமன் பெரேரா என்ற மனிதன்தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம் என ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தபோது கூறினார்.

நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்த இன்னொரு தொழிலாளி K.L. ஜோர்ஜ் என்பவர். இவர் களனியைச் சேர்ந்த பௌத்தர். இவரைப் பொலிசார் மிக மோசமான கலகப் பேர்வழி எனக் குறிப்பிட்டிருந்தனர். 1912இல் இவருக்கு வயது 28. அவர் அப்போது 14 ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்திருந்தார். பொருத்துநர் (Fitter) என்ற பதவியில் இருந்த அவரின் ஒரு நாள் சம்பளம் ரூபா 1.25 ஆக இருந்தது. வேலையில் அசமந்தமாக இருந்தார். இந்தியத் தொழிலாளர்களைத் தாக்கினார் என்ற குற்றங்களுக்காக இவரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டது. தொழிலாளர் சேமநிதிச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரான K.L. ஜோர்ஜ் ரெயில்வே ஆணைக்குழு முன் துணிச்சலோடு சாட்சியமளித்தார். ரெயில்வே வேலைப் பட்டறையின் எல்லாத் தரத் தொழிலாளர்களின் சம்பள விவரங்களையும், வேலைத்தலப் பிரச்சினைகளையும் இவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் என்பதை இவர் அளித்த சாட்சியம் எடுத்துக்காட்டுகிறது. தொழிலாளர்களின் பிரச்சினைகளின் ஒரு பெரிய பட்டியலையே வாசித்துக்காட்டிய ஜோர்ஜ் இவற்றுக்கெல்லாம் காரணம் திருவாளர் அன்ஸ்வேர்த் அவர்களே என்றும் குறிப்பிட்டார். தண்டப்பணம் விதித்தலில் உள்ள முறைகேடுகள் பற்றி அவர் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘சில சந்தர்ப்பங்களில் எவ்வித காரணங்களும் இல்லாமலே எமக்குத் தண்டப்பணம் விதிக்கப்படும். வேலைத்தலத்தில் உள்ள குறிப்பேட்டில் தண்டம் (Fine) என்று எழுதப்பட்டிருக்கும். ஏன் தண்டம் விதித்தீர்கள் என்று கேட்கப் போனால் வெளியே துரத்திவிடுவார்கள். ஏன் தண்டப்பணம் விதித்தீர்கள் என்பதை அலுவலகத்திற்குச் சென்று கேட்டால் அதற்காகவே தண்டப்பணம் விதிப்பதும் உண்டு. உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. எமது சீவியம் கஷ்டமானது. நாம் எமது பெற்றோரை ஆண்டுக்கு ஒரு தடவைகூடப் போய்ப் பார்க்க முடியாது. அதற்கு எம்மிடம் பணம் இல்லை’ என்று ஜோர்ஜ் கூறினார்.

மார்த்தலிஸ் பெரேரா என்ற இன்னொரு தொழிலாளியையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர் ‘ஓவசியர்’ பதவியில் 22 ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அவரின் சம்பளம் ஒரு நாளுக்கு ரூபா 4 ஆக இருந்தது. ஓவசியர் தரத்து உத்தியோகத்தரின் உச்ச சம்பளம் இது. இதற்கு மேல் இனி இவருக்குச் சம்பள உயர்வு இல்லை. மார்த்தலிஸ் பெரேரா தொழிலாளர் சேமநிதிச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். மேற்பார்வை இயந்திரம் பற்றி இவ்வாறு புகழ்ந்துரைத்தார்.

‘எமது வேலையாட்களில் இவர்தான் மிகச்சிறந்த ஒருவர். இவரை நான் ஒரு முன்மாதிரியான தொழிலாளி என்று கூறுகிறேன். சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவார்; வேலைகளையும் ஒழுங்காகச் செய்வார்.’

P. பெட்ரு பெரேரா என்ற தொழிலாளி பற்றிய தகவலும் உள்ளது. இவருக்கு 1912இல் வயது 55 ஆக இருந்தது. ரெயில்வேயில் இவர் 36 ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்திருந்தார். இவரின் பதவி தலைமைத் தச்சர். இவரது ஒரு நாள் சம்பளம் ரூபா 3. விசேடமான வேலைகளை இவரின் திறமைகளைக் கருதி இவரிடம் ஒப்படைப்பார்கள். உதாரணமாக, வேல்ஸ் இளவரசர் இலங்கை வந்தபோது அவர் பயணிப்பதற்கான ரெயில் பெட்டியை பெரேரா வடிவமைத்துக் கொடுத்தார். பெரேரா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். அவர் ரெயில்வே ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார். தான் தனது பதவியின் உச்ச சம்பள உயர்வு இல்லாமல் இருப்பதைப் பற்றிய தனது விரக்தியை வெளிப்படுத்தினார். தனக்குக் கீழ் வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களின் நிலை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

‘நான் ஏனைய தொழிலாளர்களின் நிலை பற்றியும் சொல்ல விரும்புகிறேன். அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவதில்லை. எனக்குக் கீழ் வேலை செய்வோர் அனைவரும் நன்றாக வேலை செய்கின்றனர். அவர்களுக்குச் சரியான, நீதியான சம்பளம் கொடுத்தால் அவர்களைக் கொண்டு விரைவாகவும் இன்னும் திறமையாகவும் வேலைகளைச் செய்விக்க முடியும். அவர்கள் போதிய உணவுப் போசாக்கின்மை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களாய் உள்ளனர்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலே குறிப்பிட்ட சிறப்புத் தேர்ச்சியுடைய தொழிலாளர்கள் போன்றோர் ரெயில்வே ஆணைக்குழுவின் முன் பகிரங்கமாகத் தமது மேலதிகாரிகளை விமர்சித்துப் பேசினார்கள் என்பது அன்றைய சூழ்நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமாக இருந்தது. மர அறுவை இயந்திரப் பகுதியில் வேலை செய்த J.H. பேர்ட் என்ற தொழில் மேற்பார்வையாளரை பெட்ரு பெரேரா என்ற தொழிலாளி பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினார். ‘பேர்ட்டின் கொள்கை தொழிலாளிகளின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும், கூட்டக்கூடாது என்பதே’ எனக் கூறிய பெட்ரு பெரேரா பின்வருமாறு குறிப்பிட்டார்.

‘அவரைத் திருப்திப்படுத்துவது இயலாத காரியம். எனக்கு நோய் காரணமாக வேலைக்குப் போக முடியவில்லை. அவ்வாறு சுகவீனம் காரணமாக வேலைக்கு வராமல் நின்றதற்காக நான் தண்டிக்கப்பட்டேன்.’ 

பேர்ட் இதனை மறுத்துரைத்தார். 

‘இரண்டு மூன்று தடவைகள் நான் பெட்ரு பெரேரா மீது குற்றம் காண வேண்டி ஏற்பட்டது. ஒரு தடவை அவர் நான் இட்ட கட்டளையை மீறி நடந்தார். நான் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என் சொற்களைக் கேளாமல் பழைய முறையில் தான் நினைத்தபடி வேலை செய்தார். இதற்காக அவருக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது’ என்று பேர்ட் கூறினார்.

ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த இன்னொரு கிறிஸ்தவத் தொழிலாளியான யுனைஸ் பெர்ணான்டோவின் வயது (1921இல்) 35 ஆகும். அவர் அப்போது 23 ஆண்டுகள் சேவையைப் பூர்த்தி செய்திருந்தார். அவருக்கு ஆங்கில அறிவு இருந்தது. அவரால் ஆங்கிலத்தில் வாசிக்கவும் எழுதவும் முடியும். தான் ஒரு தலைமைத் தச்சரின் பணிகளைச் செய்து வருவதாகவும், தனக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 3.50 கொடுத்திருக்க வேண்டும் என்றும், தனக்கு நாள் ஒன்றுக்கு சாதாரண தச்சருக்கு வழங்கும் ரூ. 1.87 கூலியே வழங்கப்படுவதாகவும் அவர் முறையிட்டார். ‘ரெயில் பெட்டிகளின் கட்டுமான வேலையில் எனக்கு நல்ல பயிற்சியும் திறமையும் உண்டு. அவ்வேலைகளில் உபயோகிக்கப்படும் கருவிகள், உபகரணங்கள் பற்றி எனக்குச் சிறப்பான அறிவு உள்ளது. பட்டறைக்கு வேண்டிய பொருட்களுக்கான கொள்வனவுக் கட்டளைகளை நான்தான் தயாரித்து வழங்கி வருகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார். மேலே குறிப்பிட்டவர்களான மார்சல் அப்புகாமி, சொலமன் பெரேரா, ஜோர்ஜ் சில்வா, மார்த்தெலிஸ் பெரேரா, பெட்ரு பெரேரா, யுனைஸ் பெர்ணான்டோ ஆகியோரும் வேறு 22 தொழிலாளர்களும் பிடித்துச் செல்லப்பட்டு ஆறு மாதங்கள் மட்டக்களப்பில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் மட்டக்களப்பில் பட்ட துன்பங்களையும் கஷ்டங்களையும் பின்னர் 1921ஆம் ஆண்டில் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஆற்றிய உரையின்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

‘1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையின் காலனிய அரசாங்கம் பயப்பீதியுடன் ‘Martial Law’ எனப்படும் இராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது. அரசாங்கம் தொழிலாளர்களை எவ்விதக் குற்றப்பத்திரமோ அல்லது விசாரணையோ இல்லாமல் கைது செய்து, தூரத்தே ஓர் ஒதுக்குப்புற இடமான கிழக்கு மாகாணத்தில் கொண்டு போய் விட்டது. அவர்கள் அங்கே தமக்குப் பரிச்சயமில்லாத மொழியையும் பண்பாட்டையும் உடைய மட்டக்களப்பு மக்கள் மத்தியில் தனிமைப்படுத்தி விடப்பட்டனர். அவர்களின் மனைவிமாரும் குழந்தைகளும் கொழும்பு நகரில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தனர். அவர்களை இறுதியில் (ஆறு மாதங்கள் கழித்து) கொழும்புக்குக் கொண்டு வந்து விட்டனர். அப்போது அவர்களுக்கு மீண்டும் ரெயில்வேயில் தொழில் வழங்குவது மறுக்கப்பட்டது. அவர்களைப் பொலிஸ் தொடர்ந்து கண்காணிப்புச் செய்தது. 1916 செப்டெம்பர் மாதம் அவர்களுக்கு வேலைநீக்கச் சான்றிதழ் (‘Certificate Of Discharge’) வழங்கப்பட்டது.’

‘அரசாங்கத்தின் ரெயில்வே பிரிவால் வழங்கப்பட்ட இவ்வாறான வேலைநீக்கச் சான்றிதழ் ஒன்று இதோ என் கையில் இருக்கிறது. இப்பத்திரத்தின்படி, ஒரு நபர் ஜூன் 24ஆம் திகதி வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் யார் என்பதைப் பார்க்கும்போது சிறந்த பொருத்துநர் (‘Very Good Fitter’) என்றும், 13 ஆண்டுகள் 3 மாதங்கள் 12 நாட்கள் காலம் அவர் ரெயில்வேயில் இந்த வேலையில் இருந்திருக்கிறார் என்றும் பத்திரம் குறிப்பிடுகிறது (வேறு சிலர் 42 ஆண்டுகள் சேவை செய்தவர்களாயும் இருப்பதை அறிய முடிகிறது). இவருக்கு நாள் சம்பளம் ரூ. 1.75 எனவும், வேலைக்கு ஒழுங்காக வருபவர் (‘Good Attendance’) எனவும், இவரை வேலையிலிருந்து நீக்கம் செய்வதற்கான காரணம் ‘இவரின் சேவை இனிமேல் தேவையில்லை’ (‘Service No Longer Required’) என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இறுதியில், இந்த வேலையாளை இந்தத் திணைக்களத்தின் தலைவரிடம் விசாரிக்காமல் அரசாங்க சேவையில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. இந்த நாட்டில் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களை அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.’ 

மேற்கண்டவாறு பொன். அருணாசலம் தொழிலாளர் தண்டிக்கப்பட்ட விதம் பற்றிக் குறிப்பிட்டார். 

1915ஆம் ஆண்டு கலகம் நடந்து 12 ஆண்டுகள் வரை இந்தத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இலங்கைத் தொழிலாளர் சம்மேளனமும் (Ceylon Workers Federation) இலங்கைத் தொழிலாளர் யூனியனும் (Ceylon Labour Union) தொடர்ந்து அரசாங்கத்திற்கு முறையிட்டு வந்தன. இந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கூடாது என்ற தடையை நீக்கும்படி தொடர்ந்து விண்ணப்பம் செய்து வந்தன. இதன் பயனால் 1925இல் 26 பேர் மீதான தடை நீக்கப்பட்டது. ஆயினும் இரண்டு பேர் மீதான தடை அரசாங்கத்தால் நீக்கப்படவில்லை. தொழிலாளர்களில் பலர் 1925க்கு முன்பே மரணித்துவிட்டனர்.

அக்காலத்தின் சிவில் சேவை உத்தியோகத்தர் ஒருவர் இந்த 28 தொழிலாளர்களையும், கலகத்திற்குக் காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட D.S. சேனநாயக்க, W.A. De. சில்வா ஆகியவர்களுடன் ஒப்பிட்டார். இத்தலைவர்கள் எக்காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்களோ, அக்காரணத்திற்காகவே இத்தொழிலாளர்களும் தண்டிக்கப்பட்டனர் என அச்சிவில் சேவை உத்தியோகத்தர் குறிப்பிட்டார். (1915) கலகம் தொடர்பாக நிவாரணம் காணப்படாதுள்ள ஒரே ஒரு விடயம் இத்தொழிலாளர்கள் பற்றியது மட்டுமே. இதற்கு நிவாரணம் வழங்கப்படாவிடின் கலகம் பற்றிய நினைவுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். D. ஜோன் பெரேரா (யக்க ஜோன்) என்பவர் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என ரெயில்வே பொது முகாமையாளர் (General Managers of the Railways) மறுத்துவிட்டார். D. ஜோன் பெரேரா, ஜோர்ஜ் சில்வா ஆகிய இருவர் மீதான தடை 1927ஆம் ஆண்டிலேயே நீக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டில் ஜோன் பெரேரா இந்தத் தொழிலாளர்களின் ஓய்வூதியம் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஒரு மனுவை அனுப்பினார். ‘தொழிலாளர்கள் ஆறு மாதகாலம் மட்டக்களப்பில் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் 10 ஆண்டுகள் அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. 10 ஆண்டுகளும் ஆறு மாதங்களும் அவர்களின் சேவைக்காலத்துடன் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்’ என்பதே ஜோன் பெரேரா தமது மனுவில் செய்த முறையீடாகும். ஆயினும் அரசாங்கம் இந்த மனுவை நிராகரித்தது.

1920ஆம் ஆண்டின் வேலைநிறுத்தம்

1915 கலகத்தின் பின்னர் ரெயில்வே திணைக்களத்தின் தொழிலாளர்களில் தீவிரவாதிகளாயிருந்த பலருக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதனால், 1915 கலகம் தொழிலாளர் இயக்கத்திற்குத் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் காலம் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் என எதுவும் இடம்பெறவில்லை. கொழும்பு நகரும் அமைதியாகவே இருந்தது.

1920ஆம் ஆண்டில் அக்காலத்தின் அரசியல் சீர்திருத்தவாதத் தலைவர்களான பொ. அருணாசலம், C.H.Z. பெர்ணாண்டோ, மார்ட்டினஸ் பெரேரா ஆகியோர் தொழிலாளர் சம்மேளனம் (Workers Federation) என்னும் அமைப்பை நிறுவினார்கள்.

1920இல் முக்கியமான மாற்றம் ஒன்று ஏற்பட்டது. முதலாவது உலக யுத்தம் முடிவடைந்ததும் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்தன. அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ரெயில்வேயிலும் துறைமுகத்திலும் வேலை செய்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிப் போராட்டம் நடத்தினர். ரெயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் இடைநின்று இணக்கம் செய்ய முன்வந்தது. ஆனால், சம்மேளனம் வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்க முன்வரவில்லை. இக்காரணத்தால் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் 1920 வேலைநிறுத்தத்தில் முக்கிய வகிபாகம் ஏற்றனர்.

1920 வேலைநிறுத்தத்தின் போது மீண்டும் மார்சல் அப்புஹாமி மிக முக்கியமான வகிபாகத்தை எடுத்துக்கொண்டார். அவர் வெளியாள் என்ற முறையில் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார். ரெயில்வே தொழிலாளர்களைக் கொண்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அக்குழுவில் ஹம்பன் வில்லியம் என்ற பெயரால் பிரபலம் பெற்றிருந்த வில்லியம் சிங்கோ ஒரு தச்சுத் தொழிலாளி. இவரைப் பொலிஸ் அறிக்கைகள் கலகக்காரர், ரெயில்வே தொழிலாளர்களின் தலைவன் (Ring Leader of the Railwaymen) எனக் குறிப்பிட்டன. தோமஸ் என்ற இன்னொரு தொழிலாளி (இவர் ‘Boilermaker’ ஆக இருந்தார்) ‘கலகக்காரர்களின் தலைவனும் அவர்களின் பேச்சாளனும்’ என அழைக்கப்பட்டார். சாம் என்ற தொழிலாளியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையையும், விலைவாசி உயர்வால் அவர்கள் மத்தியில் உண்டான பிரச்சினைகள் பற்றியும் பிறருக்கு எடுத்துச் சொல்லும் பேச்சாளராகவும் (Spokesman) குறிப்பிடப்பட்டார். அதிகாரிகளுக்கு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காக ஹம்பன் வில்லியம் இரண்டு சட்டவாளர்களை ஒழுங்கு செய்தார். கிளமன்ட் டி யாங் (Clement De Jong), E.B. வீரக்கோன் என்ற இரு சட்டவாளர்கள் இப்பணியைப் பொறுப்பேற்றனர்.

1920இல் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (CID) ஹம்பன் வில்லியத்தைக் கண்காணித்து வந்தனர். அவர்களின் அறிக்கையில், ‘ஹம்பன் வில்லியம் என்ற மனிதர் பழிதீர்ப்பதற்குச் சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். இவரைப் பற்றி மருதானைப் பொலிசாருக்கு அறிவித்துக் கண்காணிக்கும்படி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டனர். அவர்களது அவதானிப்பு சரியாக இருந்தது எனலாம். ஹம்பன் வில்லியம் 1923இல் ஏ.ஈ. குணசிங்க என்ற தொழிற்சங்கத் தலைவரின் பிரதான ஆதரவாளராக மாறியிருந்தார்.

1923 பொதுவேலைநிறுத்தம்

1922 செப்டம்பரில் ஏ.ஈ. குணசிங்க, விக்டர் கொரயா ஆகிய இருவருடன் இளம் லங்கா கழகம் (Young Lanka League) என்னும் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சிவாத, தேசியவாதிகள் குழுவொன்றும் இணைந்து இலங்கைத் தொழிலாளர் யூனியன் (Ceylon Labour Union) என்ற அமைப்பை நிறுவினர். இலங்கைத் தொழிலாளர் சம்மேளனத்தின் அடிமை மனப்பான்மையைக் கண்டித்த இவர்கள் நகரத் தொழிலாளர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கும் நோக்குடன் இலங்கைத் தொழிலாளர் யூனியனை நிறுவினர். இதை நிறுவுவதற்கு முன்னர் இளம் லங்கா கழகம் தலைவரி எதிர்ப்பு இயக்கம் (Anti-Poll Tax Agitation), வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு ஆகிய கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இவ்வகையில் 1922 செப்டெம்பரில் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரவாதம் மேலோங்கியது. இவ்வாண்டு, மிதவாதத் தொழிற்சங்க இயக்கத்திற்கும் தீவிரவாதத் தொழிற்சங்க இயக்கத்திற்கும் (Militant Trade Unionism) இடையிலான பிரிகோடாக அமைந்தது. இந்த இலங்கைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்தபின், பெப்ரவரி 1923இல் கொழும்பு நகரின் 20,000 தொழிலாளர்கள் ஒன்றிணைந்து முதலாவது பொதுவேலை நிறுத்தத்தை நடத்தினர்.

இவ்வேலைநிறுத்தத்தில் ரெயில்வே, துறைமுகம், அரசாங்கத் தொழிற்சாலை, நகர சபை, பொறியியல் நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகக் கம்பனிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், நெசவு ஆலைகள் ஆகிய பல வேலைத்தலங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். சிங்களவர், தமிழர்கள், மலையாளிகள் எனப் பல்லினத் தொழிலாளர்களும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் இறங்கினர்.

1923 வேலைநிறுத்தம் 1912, 1915, 1920 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற முன்னைய வேலைநிறுத்தங்களைப் போன்றே ரெயில்வேயின் ரெயில் வண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்பட்டறையிலேயே ஆரம்பித்தது. வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கும்படி ஏ.ஈ. குணசிங்க தொழிலாளர்களால் அழைக்கப்பட்டார். அக்காலத்தில் ஏ.ஈ. குணசிங்க ஒருவர்தான் முழுநேரத் தொழிற்சங்கவாதியான மத்தியதர வர்க்கத் தலைவராகவும் (Middle Class Leaders), நகரத் தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் பேசக்கூடிய ஒருவராகவும் பொது அரங்கிற்கு வந்திருந்தார். ஏ.ஈ. குணசிங்க ஒரு தீவிர அரசியல் செயற்பாட்டாளர். துணிச்சல்மிக்கவர். தனது நிலைப்பாட்டை உறுதியுடன் எடுத்துக்கூறும் ஆளுமைமிக்கவராக விளங்கினார். அவர் அரசாங்கத்தையும் தொழில் கொள்வோரான நிர்வாகிகளையும் எதிர்த்துச் சவால் விடுக்கும் வல்லமைமிக்கவராக விளங்கினார். 1923 வேலைநிறுத்தம் அவரை ஒரு வீரர் (Hero) என்ற நிலைக்கு உடனேயே உயர்த்திவிடும் சந்தர்ப்பமாக அமைந்தது. 1923இல் ரெயில்வேத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பித்தபோது ஏ.ஈ. குணசிங்க பின்வருமாறு சபதமிட்டார். ‘நான் சிறைக்குப் போவேனே தவிர, இன்றிருக்கிற மோசமான நிலைமைகளை ஏற்றுத் தொழிலாளர்களைத் திரும்ப வேலைக்கு அழைத்து வரமாட்டேன்.’ இவ்வாறானதொரு தீவிர நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே ரெயில்வே தொழிலாளர்கள் அன்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஏ.ஈ. குணசிங்க நகரத் தொழிலாளி வர்க்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முதன்மையிடம் பெற்ற ஒரே ஒரு தலைவராக மிளிர்ந்தார்.

இலங்கைத் தொழிலாளர் யூனியனிற்கு ஆதரவு வழங்கிய தொழிலாளர்கள்

1923இற்கு முந்திய வேலைநிறுத்தங்களின் போது பழிவாங்கப்பட்டு, நிவாரணம் கிடைக்காமல் வாடிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ஏ.ஈ. குணசிங்கவின் ஆதரவாளர்களாகி அவருக்குப் பின்னால் நின்றார்கள். இவர்களில் முக்கியமான ஒருவராக மார்சல் அப்புகாமி விளங்கினார். இலங்கைத் தொழிலாளர் யூனியனின் முதலாவது செயலாளராக மார்சல் அப்புகாமி செயலாற்றினார். யக்கா ஜோன் என்று அழைக்கப்பட்டு வந்தவரும், 1912 வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவரும், பின்னர் 1915இல் மட்டக்களப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டவருமான D. ஜோன் பெரேராவும் ஏ.ஈ. குணசிங்கவிற்குப் பக்கத்துணையாக நின்று ஆதரவு வழங்கினார். அரசாங்கத் தொழிற்சாலையின் தொழிலாளியான பொடிசிங்கோ, வெள்ளவத்தை நெசவு ஆலையில் வேலைசெய்த கந்தசாமி, குட்டன் ஆகியோரும் ஏ.ஈ. குணசிங்கவிற்கு ஆதரவு வழங்கினர். பொலிஸ் அறிக்கைகள் ஒருவரைக் குறிப்பிட்டன. அவர் வேறு யாருமல்ல, 1920இல் ரெயில்வே வேலைநிறுத்தத்தை வழிநடத்திய ஹம்பன் வில்லியம்தான். பொலிஸ்மா அதிபரால் காலனிகளின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட இரகசிய அறிக்கையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ரெயில்வேயில் இனிமேல் வேலை செய்யத் தேவையற்றவர்கள் எவரெவர் என்ற விவரத்தை அனுப்புவதாக ரெயில்வே அதிகாரிகள் எனக்குக் கூறியுள்ளனர். அவர்களில் ஏ.ஈ. குணசிங்கவின் வலதுகரமாக இயங்கும் ஹம்பன் வில்லியத்தின் பெயரும் இடம்பெறும். இவர் ரெயில்வேயின் வேலைப்பட்டறையில் (Railway Workshop) வேலைசெய்தவர். இவர் பிரச்சினைகளைத் தரக்கூடிய ஆள். நான் அவரைப் பற்றிய அறிக்கையைத் தயாரிக்கும்படி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கூறியுள்ளேன். ஹம்பன் வில்லியம் அரசாங்க சேவையில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என்பதை அந்த அறிக்கை நன்கு வெளிப்படுத்தும். அவர் இரு தடவைகள் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டவர். சூதாட்டம் செய்யும் இடம் ஒன்றையும் நடத்தியதற்காக ஒரு தடவையும், அவருக்கு எதிராக முறைப்பாடு அனுப்பிய ஒருவரின் முதுகில் சுட்டுக் கொலை செய்ததற்காக இன்னொரு தடவையும் அவர் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை பெற்றார். பின்னர் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.’

முரட்டுத்தனம் கொண்ட ஒருவர் எனப் பெயர் பெற்ற ஹம்பன் வில்லியம் 1923 வேலைநிறுத்தத்தின் போது பங்கேற்ற பலமிக்க ஆளுமையாக இருந்தார். அவர் பெரும்பாலான கூட்டங்களில் மேடைகளில் தோன்றி உரையாற்றினார். கொழும்பு நகரில் ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஒழுங்கமைத்தார். வேறு பல தொழில்துறைகளின் தொழிலாளர் குழுக்களையும் வேலைநிறுத்தத்தில் இணைந்துகொள்ள வைப்பதில் தீவிரமாகச் செயற்பட்டார். வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தில் தானும் பிற தொழிலாளர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் கஷ்டங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார். தாம் பசி, பட்டினி போன்ற எத்தகைய துன்பத்தையும் தாங்கத் தயாரென்றும், வேலைநிறுத்தத்தை அதன் இலக்கு அடையப்படும் வரை தொடர்வேன் என்றும் அவர் சூளுரைத்தார். மிகவும் ஏழ்மையில் உள்ள துப்புரவுத் தொழில் செய்யும் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்வார்கள் என்றும், வானில் வட்டமிட்டுப் பறக்கும் பறவைகள்கூட வேலைநிறுத்தம் செய்யும் என்றும் அவர் கூறினார். குணசிங்கவுடன் இணைந்துள்ள தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் இணையாமல் தடுப்பதற்காகத் தமக்குப் பணம் வழங்க முன்வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். தான் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன், தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொள்வேனே அன்றி அடிபணிய மாட்டேன் என்றும் கூறினார். ரெயில்வேப் பகுதி தன்னை வேலைநீக்கம் செய்துவிட்டதாகவும், தாம் இனி ஒருபோதும் வெள்ளையர்களின் கீழ் அடிமை வேலை செய்யப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வேலைநிறுத்தக் காலத்தில் பல தடவைகள் வில்லியம் ஏ.ஈ. குணசிங்கவிற்கு நன்றி தெரிவித்துப் பேசினார். அவர் மீது தமக்குள்ள விசுவாசத்தைத் தெரிவித்தார். அவரின் இலங்கைத் தொழிலாளர் யூனியனில் தொழிலாளர்களைச் சேர்ந்துகொள்ளும்படி வேண்டிக்கொண்டார்.

1923 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களில் சிலர் முதலாம் உலகப் போரின்போது இலங்கைக்கு வெளியே சென்று வெளிநாடுகளில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குணசிங்கவின் ஆதரவாளர்களில் ஒருவரான அல்பேர்ட் சில்வா என்பவர் கடற்படையில் கடலோடியாகப் பணியாற்றியவர் என்றும், பிரித்தானியாவில் நடந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர் என்றும் பொலிஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. துறைமுக ஆணைக்குழுவின் (Port Commission) தலைவராக இருந்தவர் 1923 வேலைநிறுத்தம் பற்றி காலனிகளின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

‘துறைமுகத்தில் நடந்த வேலைநிறுத்தத்தின் பின்னால் இருந்து சில தீய மனிதர்கள் செயற்பட்டனர். அவர்களின் தூண்டுதலாலேயே வேலைநிறுத்தம் நடைபெற்றது. இம்மனிதர்களில் சிலர் யுத்த காலத்தில் போர்முனையில் பல இடங்களில் பணிபுரிந்தவர்களாக இருந்ததால், இவர்கள் உலகின் பிற இடங்களில் பரவியுள்ள சில கருத்துகளை உள்வாங்கிக்கொண்டவர்களாக இருந்தனர்.’

பொதுக்கூட்டங்களில் அணிதிரண்ட ஜனத்திரள்

தொழிலாளர் கிளர்ச்சி நடவடிக்கைகளின் தொடக்க காலமான 1893–1923 காலத்தில் கொழும்பு நகரத்தில் ஜனத்திரளான சமூகக் குழுக்களின் செயற்பாடுகளும் அதிகரித்தன. பௌத்த சமய மறுமலர்ச்சி இயக்க காலத்தில் வெகுஜனங்களின் சமய உணர்வுகளின் வெளிப்பாட்டுக்கான வழியாகப் பொதுக்கூட்டங்களில் ஜனத்திரளைக் கூட்டித் தம் கருத்துகளைப் பிரசாரம் செய்வதான உத்தியை பிக்கு குணானந்த, கர்ணல் ஒல்கொட், அநகாரிக தர்மபால ஆகியோர் கையாண்டனர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறான கூட்டங்களில் நகரப்பகுதி மக்களும் கிராமப்பகுதி மக்களும் பங்கேற்றனர். மதுவொழிப்பு இயக்கத்தினால் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களில் பேசப்பட்ட விடயங்கள் தனித்துவமான அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன. ஆயினும், முதலாவது தொழிலாளர் கூட்டம் 1893இன் அச்சகத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போதுதான் ஒழுங்கமைக்கப்பட்ட வடிவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில்தான் அச்சகத் தொழிலாளர் சங்கம் (Printers Union) நிறுவப்பட்டது. அக்கூட்டத்தில் கொழும்பு நகரின் நாலாயிரம் முதல் ஐயாயிரம் தொழிலாளர்கள் கூடியிருந்தனர். அவர்களுள் அச்சகத் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் உள்ளடங்கியிருந்தனர். இப்பெரும் எண்ணிக்கையான ஜனத்திரளின் கூட்டத்தைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் 20 பொலிஸ் கொன்ஸ்டபிள்களும் அவதானித்துக் கொண்டிருந்தனர். டாக்டர் விஸ்போ பின்டோ, A.E. புல்ட்ஜென்ஸ், மார்ட்டினஸ் பெரேரா, H.J.C. பெரைய்ரா ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

இந்த நிகழ்வு புதுமையானது; ஆச்சரியமளிப்பது. சிலர் இந்த நிகழ்வை மிகத் துணிச்சலானது என்று கூறினர். இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாகத் தொழிலாளர்கள் தமது உரிமைக்காக அணிதிரண்டு குரல்கொடுத்த நிகழ்வாக இது அமைந்தது.

சலவைத் தொழிலாளர் வேலைநிறுத்தம், மாட்டுவண்டிக்காரர் வேலைநிறுத்தம், ரெயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் என்பன நடைபெறும்போதும் இதனைப் போன்ற பெரும் கூட்டங்கள் கொழும்பு நகரில் நடைபெற்றன. 1921இல் ரெயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் போது கொழும்பு மத்தியில் தீவிரமும் கிளர்ச்சி உணர்வும் வெளிப்பட்டன. சிங்களப் பாடல் ஒன்றை அவர்கள் கூட்டாகச் சேர்ந்து பாடினர். அவர்களிடையே களியாட்ட உணர்வு காணப்பட்டது. 1912 ரெயில்வே வேலைநிறுத்தத்தின் போது நடைபெற்ற கூட்டங்கள் யாவற்றிலும் மிக முக்கியமான கூட்டம் மாளிகாகந்த வித்தியோதய பிரிவேன வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பலருள் வலிசிங்க ஹரிச்சந்திர, அநகாரிக தர்மபால ஆகியோரும் அடங்குவர். இக்கூட்டத்தில் பங்குபற்றிய தொழிலாளர்களிடையே பேசிய அநகாரிக தர்மபால, இந்த வேலைநிறுத்தம் சிங்களவர்களிடையே தோன்றியிருக்கும் தேசியவாத உணர்வை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டபோது இக்கூட்டம் உற்சாக மிகுதியால் ஆரவாரித்தது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொழும்பு நகரில் மக்கள் திரள் ஒன்றுகூடும் கூட்டங்கள் அவ்வப்போது கூட்டப்பட்டனவேனும், 1923 வேலைநிறுத்தம்தான் முதல் முதலாகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதன் மூலம் மக்கள் திரளைப் பொது அரங்குக்குக் கொண்டுவந்தது. ஏ.ஈ. குணசிங்கவின் இலங்கைத் தொழிலாளர் யூனியன் பெரிய கூட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், மறியல் போராட்டம், வீதியோரங்களிலும் தொழிற்சாலைகள் முன்பாகவும் கூட்டங்களை நடத்துதல் போன்ற உத்திகளை 1923 வேலைநிறுத்தத்தின் போது கையாண்டது.

எமது இந்த ஆய்வு சில முக்கிய விடயங்களை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. முதலாவதாக தொழிலாளர் வர்க்கத்தின் மேற்தட்டில் இருந்தவர்களான கூடிய சம்பளம் பெற்றவர்களும், பயிற்றப்பட்டவர்களும், சிறப்புத் தேர்ச்சியுடையவர்களுமான தொழிலாளர்களே (Better Paid and Skilled Workers) போர்க்குணம் மிக்க தொழிலாளர்களாக தொழிலாளர் இயக்கத்திற்குத் தலைமையை வழங்கினார்கள். ஆனால், பயிற்றப்படாதவர்களும் தொழில் திறனற்றவர்களுமான வறிய தொழிலாளர்கள் தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டவில்லை. இரண்டாவதாக தொடக்க காலத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பிரிவினர் தொழிலாளர் இயக்க நடவடிக்கைகளில் விருப்புடன் கலந்துகொண்டனர். அவ்வாறு விருப்புடன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தலைமைத்துவப் பாத்திரத்தை ஏற்றதோடு, வேலைநிறுத்தங்களின் போது நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தவும் செய்தனர். தொடக்க காலத்தின் வேலைநிறுத்தங்களின் போது தனிநபர்களான சில தொழிலாளர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகத் தமது எதிர்ப்புணர்வைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தினர். இதனால், இவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் குழப்பக்காரத் தலைவர்கள் என அடையாளம் கண்டுகொண்டது. இத்தலைவர்கள் தண்டிக்கப்படுவதும், தனிப்பட்ட முறையில் பல இழப்புகளைத் தாங்க வேண்டியிருந்ததும் அவதானிக்க வேண்டிய மூன்றாவது முக்கிய விடயமாகும்.

தொழில்நுட்ப அறிவில் மேம்பட்டவர்களாக இருந்த தொழிலாளர்களால் தமது வேலை நிலைமைகள் தொடர்பான குறைகளை நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர்களது உணர்வுநிலையில் வர்க்க உணர்வு வெளிப்பட்டது. அவர்களால் தொழிலாளர்களின் குறைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடிந்தது. இத்தொழிலாளர் பிரிவினரின் வெளிப்பட்ட தீவிரவாதம் பிற தொழிலாளர்களுக்குத் துணிவையும், பயத்தையும் வழங்கியது. பொலிசையும், அரசாங்கத்தையும் முதலாளிகளையும் தொடக்க காலத்தில் தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டு சவால் விடுவதற்கு இவர்களின் தலைமைத்துவம் பலத்தை வழங்கியது. இக்காலத்தில் நகரத் தொழிலாளர் வர்க்கம் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கான உள்ளாற்றலை (Radical Potential) கொண்டிருந்தது. அந்த உள்ளாற்றலைப் பயன்படுத்தி அதிகார வகுப்புக்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழுநேரத் தொழிற்சங்கவாதிகளான மத்தியதர வர்க்கத் தொழிலாளர் தலைவர்கள் (Full-Time Middle Class Trade Union Leaders) உதவினர்.

‘கேவ்ஸ்’ அச்சக நிறுவனத்தின் வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைத்த வில்லியம், ஹர்மானிஸ் என்ற சலவைத் தொழிலாளி, ரெயில்வே தொழிலாளர்களான மார்சல் அப்புகாமி, ஹம்பன் வில்லியம், வெள்ளவத்தை நெசவாலையின் கந்தசுவாமி, குட்டன் ஆகியோர் ஆரம்பகாலத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தலைமையேற்ற முன்னோடிகளாவர். இம்முன்னோடிகள் இலங்கையின் சமூக, அரசியல் வரலாற்றிலும், தொழிற்சங்க இயக்க வரலாற்றிலும் முக்கிய வகிபாகத்தைப் பெறும் தொழிலாளர்களாவர்.

இக்கட்டுரைக்கான தகவல்கள் ரெயில்வே ஆணைக்குழு அறிக்கை, ஆவணக்காப்பகத்திலுள்ள பொலிஸ் அறிக்கைகள், சேர் பொன். அருணாசலம் அவர்களின் உரைகளும் எழுத்துகளும் நூல் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.

குறிப்பு – Pioneer Rebels Among the Colombo Working Class என்ற தலைப்பில் குமாரி ஜயவர்த்தன எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது. Young Socialist சஞ்சிகையில் IV இதழ் நவம்பர் 1968இல் இக்கட்டுரை வெளியிடப்பட்டது.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்