இடப்பெயர்வு அல்லது புலப்பெயர்வு என்பது மனித வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தொடர்ச்சியான நிகழ்வாகும். மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை வாழ்வாதாரம், பாதுகாப்பு, வணிகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். தொழில்புரட்சிக்கு முன்பே இந்தியா, சீனா, அரேபியா ஆகிய நாடுகள் அரசியல், பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் முன்னணியில் இருந்தன. இந்தியா வணிகத்துடன் மட்டுமன்றி, நிலப்பரப்புகளைக் கைப்பற்றுதல் மற்றும் மதத்தைப் பரப்புதல் போன்ற செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வணிக நோக்கில் இந்தியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்வதும் அங்கு நிலைகொள்வதும் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, கைத்தொழில் புரட்சியால் நாடுகாண் பயணங்கள் துரிதமாக வளர்ச்சியடைந்தமையால், மக்களிடையே இடப்பெயர்வும் புலப்பெயர்வும் விரைவாக அதிகரித்தன. இதன்பின்னர், ஐரோப்பிய நாடுகள் தமக்குத் தேவையான கனிம வளங்களைப் பெறுவதற்கும், தமது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் உலக நாடுகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைந்தன. இதனால் ஏற்பட்ட போர்கள், நிலப்பரப்புகளைக் கைப்பற்றுதல், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக மக்கள் தொடர்ந்து இடப்பெயர்வுகளைச் சந்தித்து வந்தனர்.

அந்த வகையில், இலங்கையில் பெருந்தோட்டத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்னரே, 14ஆம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவிலிருந்து சாலியர் என்ற சாதியினர் இலங்கையில் குடியேறியுள்ளனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கறுவா மற்றும் காரீயம் வெட்டும் தொழில்களில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ஒல்லாந்தர் காலத்திற்கு முன்னரே தமிழகத்தைச் சேர்ந்த செட்டிமார்கள் வணிக நோக்கில் இலங்கைக்கு வந்து கணிசமான எண்ணிக்கையில் குடியேறியிருந்தனர்.
இலங்கையின் தென்பகுதியில் கரவா சாதியினர் என அழைக்கப்பட்டவர்களும் 13ஆம் நூற்றாண்டளவில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல், பதினெட்டாம் நூற்றாண்டில் மும்பையைச் சேர்ந்த பார்சிகள் கொழும்பில் முக்கியமான வர்த்தகத் துறைகளிலும் கப்பல் போக்குவரத்திலும் உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.
ஆகவே, 14ஆம் நூற்றாண்டிலிருந்தே வணிகம், தொழில் வாய்ப்புகளுக்காகத் தமிழகத்திலிருந்து மக்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதேபோல், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்திய மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் குடியேறியுள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவின் பல்வேறு சமயங்கள், மொழிகள், கலாசாரங்கள், பண்பாட்டு மரபுகள் ஆகியவை இலங்கையில் வேரூன்றியுள்ளன.
மேலும், தென்னிந்தியப் படையெடுப்புகளை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்ட காலங்களிலும் தமிழகத்திலிருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். இதன்பின்னர் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புகளும் நிகழ்ந்தன. கைத்தொழில் புரட்சியுடன் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவாக, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உற்பத்தியில் முனைப்புக் காட்டின. இதனால், கீழைத்தேய நாடுகளின் பாரம்பரியப் போர் ஆயுதங்களைவிடத் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மேலாதிக்கம் பெற்றன. இவற்றின் துணையுடன் ஐரோப்பிய நாடுகள் பிற நாடுகளை அடிமைப்படுத்தின அல்லது தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தன. வணிக நோக்கில் வந்ததாகக் கூறிக்கொண்டே, உள்நாட்டில் ஏற்பட்ட கலகங்கள் மற்றும் ஒரே இனத்தவரிடையே நிகழ்ந்த போர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஐரோப்பியர்கள் அரசியலில் தலையிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதேபோல், இலங்கையையும் முதலில் போர்த்துக்கேயரும் பின்னர் ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் கைப்பற்றினர். இவர்களில் பிரித்தானியர்களே ஏனைய இரு ஐரோப்பிய சக்திகளையும் விடுத்து, முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தினர்.

இதன் விளைவாக, ஆங்கிலேயர்கள் தமது நிர்வாகப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, வணிகத்துறை விருத்தி ஆகியவற்றுக்கான தேவைகளை உள்ளூர் மக்களைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்ள முயன்றபோதும், உள்ளூர் மக்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
அதேவேளை, இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து, மக்களைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் அக்காலத்தில் வெற்றியளிக்கவில்லை. குறிப்பாக, தஞ்சாவூர்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தற்சார்பான பொருளாதார வாழ்வியலைக் கொண்டிருந்தமையால், தமது கிராமிய வாழ்விலிருந்து விடுபட்டு வெளியேற விரும்பவில்லை. எனவே, இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டிய தேவை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஏற்பட்டது. இதனால், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் செயற்பாடுகளும் விரிவாக்கமும் தடையற்ற குடிப்பெயர்வுகள் இடம்பெறுவதற்குத் துணைநின்றன. இதற்காகப் பல்வேறு சட்ட ஏற்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. பிரித்தானிய அரசின் செயற்பாடுகளும் இதற்குச் சாதகமாக அமைந்தன.
இதனையடுத்து, இலங்கையின் ஆளுநர் தஞ்சாவூர் ஆட்சியருக்குக் கடிதம் எழுதி, தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார். இக்கடிதங்கள் தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பதிலளித்த தஞ்சாவூர் நிர்வாகம், இலங்கைக்கு மக்களை அனுப்புவதற்கு இலங்கை அரசின் முகவர்கள் வரவேண்டும் என்றும், அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களைத் திரட்டும் பணியைத் தனியார் ஒப்பந்தத் தரகர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்கத் தொடங்கியது.
‘இலங்கை அரசின் துணைத் தலைமை ஆளுநர் 25.03.1818 அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதம், தொழிலாளர்களை அழைத்து வரும் பொறுப்பைத் தனியார் ஒப்பந்த முகவர்களிடம் ஒப்படைக்கும் முறை தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது’ என மு.சி. கந்தையா குறிப்பிட்டுள்ளார் (சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், பக். 34).
இவ்வாறான சூழலில், இலங்கை உள்ளிட்ட பிரித்தானியக் காலனித்துவ நாடுகளுக்குப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் புலம்பெயர்ந்தனர். கிழக்கிந்தியக் கம்பெனி நாடுகளையும் அவற்றின் மக்களையும் முழுமையாகச் சுரண்ட முற்பட்டமை இதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாக அமைந்தது. இவ்வாறு வெளியேறியவர்களில் ஒரு பகுதியினர் ஒப்பந்தக் கூலிகளாகவும், மற்றொரு பகுதியினர் தனியார் முகவர்களின் ஆள்திரட்டல் மூலமாகவும் சென்றனர். இலங்கைக்குச் சென்றவர்களில் பலர் தனியார் தரகர்கள் வழியாக அழைத்துச் செல்லப்பட்டமை, பின்னர் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கான காரணிகளில் ஒன்றாக அமைந்தது. தரகர்களின் ஆசைவார்த்தைகளும் கிராமப்புறங்களில் நிலவிய வறுமை, கடன் சுமை, தீண்டாமை ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பமும் மக்கள் புலம்பெயர்வதற்கான சூழலை உருவாக்கின.
காலனித்துவ நாடுகளுக்கான புலம்பெயர்வு குறித்து டாக்டர் கிங்ஸ்லி டேவிட் பின்வருமாறு கூறுகிறார்:
“குடியேறும் நாடுகளில் கிடைக்கும் பொருளாதார மேம்பாடு மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான ஒரு காரணி; அவர்களை உந்தும் மற்றொரு காரணி, சமூகத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளாகும். சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப்பட்ட நிலமற்ற ஏழை விவசாயிகளே விடிவைத் தேடி அதிகளவில் வெளியேறினர்.”
இக்காலகட்டத்தில், இலங்கையை நோக்கி இடம்பெயர்ந்த மலையக மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்ததற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. அவற்றுள், 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்திய நிலவரிச் சீர்திருத்தங்கள், இந்தியக் கிராமப்புற விவசாயச் சமூகத்தைச் சீர்குலைத்தமை முதன்மையான ஒன்றாகும். இதனால் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பஞ்சங்களும் கொலரா தொற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்தன. இந்நிலையில், நிலவுடைமையாளர்களின் அடக்குமுறை, தீண்டாமை, கடன் சுமை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்கள், தமது வாழ்க்கை நிலையை மாற்றியமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இடைத்தரகர்களின் பொய்ப் பிரசாரங்களை நம்பிப் புலம்பெயரத் தொடங்கினர்.
இவ்வாறு இருக்க, கண்டியைக் கைப்பற்றுவதற்கு முன்னரே ஆளுநர் நோர்த் 1798 முதல் 1803 வரையான காலப்பகுதியில் 30 ஆயிரம் பவுண்டுகளைச் செலவழித்துத் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களை இலங்கைக்குக் கொண்டுவந்ததாகச் சாரல் நாடன் தனது ‘மலையகத் தமிழர் வரலாறு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனை மு.சி. கந்தையாவும் எடுத்துக்காட்டியுள்ளார். இந்நிலையில், தமிழகக் கிராமங்களில் பல்வேறு வகைகளில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமது வாழ்விடங்களைத் துறந்து, எதிர்கால வாழ்க்கை குறித்த கனவுகளைச் சுமந்துகொண்டு, குடும்பத்தினர், பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோரைப் பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்றனர். அங்கு உழைத்துப் பணம் சம்பாதித்துத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் வந்தவர்களின் வாழ்க்கை, எதிர்பார்த்ததற்கு மாறாக, மிகவும் துன்பகரமானதாக மாறியது. இந்த நிலைமையை மலையக வாய்மொழிப் பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
“வாடையடிக்குதடி
வடகாத்து வீசுதடி
சென்னல் மணக்குதடி – நம்ம
சேர்ந்து வந்த கப்பலுல”
“வண்டி வருகுதடி
வடமதுர டேசனிலே
தந்தி வந்து பேசுதடி – நம்ம
தரும தொர வாசலிலே”
இந்தப் பாடல்கள், புலம்பெயர்வின்போது ஏற்படும் மனவேதனையை வெளிப்படுத்துகின்றன. தமது நாட்டைவிட்டு வெளியேறும்போது, அந்நாட்டின் நெல்மணமும் மண்வாசனையும் அவர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தன. அந்த மண்ணைவிட்டுப் பிரிந்து செல்லும் துயரத்தை இப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அதேவேளை, புலம்பெயர்ந்த மலையக மக்கள் அனுபவித்த துன்பங்களும், பயணம் நெடுகிலும் அவர்கள் எதிர்கொண்ட துயரங்களும் அவர்களின் வரலாற்றுப் பயணத்தை பிற புலப்பெயர்வு அனுபவங்களிலிருந்து தனித்துவப்படுத்திக் காட்டுகின்றன. கடற்பயணங்களின் போது உயிரிழந்தவர்களைக் குறித்து பிரித்தானிய அரசு எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான சுமார் 200 மைல் நீளமான காட்டுவழிப் பாதையில் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் சொல்லொணாத் துயரங்களாக அமைந்தன. இத்தகைய துயரங்கள் நிறைந்த வரலாற்றுப் பாதையைக் கடந்து அவர்கள் கண்டியை வந்தடைந்தபோது அங்கு நிலவிய சூழலை இப்பாடல்கள் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றன.
“அடி அளந்து வீடு கட்டும்
ஆண்ட மனைவி அங்கிருக்க
கொஞ்சம் தொலைப்பதற்கு
பாற்கடலை தாண்டி வந்தோம்”
“அட்டக் கடியும்
அருக வழிநடையும்
கட்டை எடருவதும்
காணலாம் கண்டியிலே”
இப்பாடல்கள், தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் காட்டு வழியாக இரவு பகலாக நடந்து சென்றபோது எதிர்கொண்ட துயரங்களை எடுத்துக்காட்டுகின்றன. காட்டு விலங்குகளின் தொல்லையும் அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சிய கொடுமையும் அவர்களைப் பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கின. பலர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள், பின்னால் வந்தவர்களுக்குப் பாதைகாட்டும் அடையாளங்களாக அமைந்தன.
“ஆளு கட்டும் நம்ம சீமை
அரிசி போடும் நம்ம சீமை
சோறு போடும் கண்டி சீமை
சொந்தமுனு சொல்லாதீங்க”
புலம்பெயர்ந்து தமது நாட்டைவிட்டு வந்த மக்களுக்கு கண்டிச் சீமையின் நிலை எவ்வாறு இருந்தது, அவர்கள் இந்த நாட்டின் இனக்குழுக்களால் எவ்வாறு பார்க்கப்பட்டார்கள், அவர்களின் வருகை அக்குழுக்களின் சிந்தனையில் எத்தகைய குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கும் என்பனவற்றை மேலுள்ள பாடல் எடுத்துக்காட்டுகின்றது. சோறு வழங்கும் இந்தக் கண்டிச் சீமையைத் தமது சொந்த நாடாக எண்ணிவிடக் கூடாது என்ற மனநிலையையும் இப்பாடல் வெளிப்படுத்துகின்றது. மேலும், ஆள்திரட்டும் தரகர்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி இங்கு வந்த மக்கள், வீடின்றி வெட்டவெளியில் நீண்டகாலம் தவித்தனர். பனி, குளிர் ஆகியவற்றைத் தாங்கிக்கொண்டு, கங்காணியின் தலைமையில் தங்களைத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லும் துரைமார் வரும்வரை காத்திருந்தனர். பின்னர், பெரும் காட்டின் வழியாக நடந்து, தமது புதிய வாழ்வை நிலைநிறுத்துவதற்கான இடத்தைத் தேடிச் சென்றனர். இதன்பின்னர், இவர்கள் காடுகளை அழித்துக் கோப்பித் தோட்டங்களை உருவாக்கி, கோப்பிக் காலத்திலேயே தற்காலிகக் குடிசைகளில் தமது வாழ்நாளைக் கழித்தமையை அறியமுடிகிறது. இத்தகைய வேதனையையே இப்பாடல் எமக்கு நினைவூட்டுகின்றது.
“ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயை நான் மறந்தேன்”
“பாதையில வீடு இருக்க
பழனி சம்பா சோறு இருக்க
எருமை தயிர் இருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீம”
மக்கள் இங்கு வந்து அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, தாய்நாட்டின் கொடுமையும் வறுமையும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. எனவே, சொந்த ஊரை இழந்து வேறொரு நாட்டிற்குக் குடிபெயர்ந்த வேதனையின் உச்சகட்டப் புலம்பலாகவே இப்பாடல்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.
காலனித்துவ நாடுகளுக்குக் கூலிகளாக விவசாயிகளைத் திரட்டும் பணியில் கங்காணிமார்களும் ஈடுபட்டனர். தொடக்கத்தில் ஆள்திரட்டும் முகவர்களாகச் செயல்பட்ட இவர்கள், பின்னர் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி, வெள்ளையர்களுக்கு விசுவாசமானவர்களாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றினர். இதனால், மலையக மக்களின் வாழ்வியலில் கங்காணிமார்கள் தவிர்க்க முடியாத பாத்திரமாகத் திகழ்ந்தனர். இதனை இப்பாடல் இவ்வாறு பதிவு செய்கிறது.
“கண்டி கண்டி எங்காதீங்க
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதி கெட்ட கண்டியில
சக்கிலியன் கங்காணி”
சாதிய அடக்குமுறைக்குள் தனித்தனித் தீவுகளாக வாழ்ந்த மக்கள், இலங்கைக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அனைத்துச் சாதியினரும் ஒரே வகையான தொழிலையும் வாழ்வியல் முறையையும் பின்பற்றி ஒரே இடத்தில் ஒன்றாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனால், சாதி மேலாதிக்கத்திற்குள் சிக்கித் தவித்தபோதும், வறுமை நிலையில் வாழ்ந்தபோதும் தமது சாதிக் கௌரவத்தை விட்டுக்கொடுக்கத் தயங்காத அந்தச் சமூகம், புலப்பெயர்வின் விளைவாகத் அதனை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுவரை பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியிலும் பேணிப் பாதுகாத்த சாதிய ஒடுக்குமுறை சார்ந்த சமூகக் கட்டமைப்பு, மலையகப் புலப்பெயர்வினால் தகர்த்தெறியப்பட்டமையும் முக்கியமானதாகும். இதனால் மனநிறைவடையாதவர்களின் மன எழுச்சியையும் மேற்குறிப்பிட்ட பாடல் எடுத்துக்காட்டுகிறது.
மேலும், விவசாயத் தொழிலுடன் தொடர்புடைய வாழ்வியலைக் கொண்டிருந்த இம்மக்களின் நிலைமை முற்றாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய தொழிலுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. வாழ்விடம், தொழில், உணவுமுறை என்பன மாற்றப்பட்டு, முழுநேர உடல் உழைப்பாளர்களாக மாறிய இம்மக்களின் நிலைமையை இப்பாடல் இவ்வாறு பதிவு செய்கிறது.
“கூட எடுத்ததில்லை – நாங்க
கொல்லிமலை பார்த்ததில்ல
கூட எடுக்கலாச்சி – நாங்க
கொழுந்து மலை பாக்கலாச்சி”
மலையகத்துக்கு அழைத்துவரப்பட்ட இந்திய விவசாயப் பெருநில மக்கள், உரிமைகள் மறுக்கப்பட்டு, கங்காணிமார்களின் கண்காணிப்பின் கீழ் முழுநேரமும் வாழவேண்டிய புதிய வாழ்வியலில் மனமுடைந்து வாழ்ந்தனர். அதேவேளை, அக்காலத்தில் வசதி படைத்த சிலர் தமது ஊர்களுக்குச் சென்று வந்தனர். இதனால், அவர்கள் தமது உறவினர்களுடனான தொடர்புகளைப் பேணிக்கொள்ள முடிந்தது. அதேவேளை, கடன் சுமை, சிறு விவசாயிகளின் வறுமை மற்றும் தீண்டாமை போன்ற காரணங்களால் வெளியேறியவர்களால், தங்களின் உறவினர்களுடனான தொடர்பைத் தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. இதன் விளைவாக ஏற்பட்ட உள்ளக் குமுறலை இப்பாடல் இவ்வாறு வெளிப்படுத்துகிறது.
“கப்பல் கடந்து
கடல் தாண்டி இங்க வந்தோம்
காலம் செழிச்சி நம்ம
காணிபோய் சேரலயே”
தமது தாய்நாட்டுக்கு ஏதோ ஒரு வகையிலாவது சென்று வரப் பலமுறை முயற்சித்தும், இறுதிவரை அங்கு செல்ல முடியாத மனநிலையை இப்பாடல் பதிவுசெய்கிறது.
இம் மண்ணை வளப்படுத்தி பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த இம்மக்கள், பேரினவாதம் தொடர்ந்து கொடுத்த நெருக்கடிகளைச் சந்திப்பதற்கான மனவலிமையை அடக்குமுறைகளை எதிர்கொள்வதன் வழியாகவே பெற்றுக் கொண்டனர். இத்தகைய பின்னணியில், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நாட்டிலேயே நிரந்தரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் உருவானது. கோ. நடேச ஐயரின் வருகையும், அவர் இம்மக்களுடன் கொண்ட உறவும், அவர்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும், இலங்கை அரசியலில் பிரித்தானியர் மேற்கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்களும், மலையக மக்களை இந்நாட்டு மக்களின் ஒரு பிரிவினராகப் படிப்படியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கின.
1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குரிமை, இந்த மக்களின் இருப்புக்கு அடித்தளமிட்டது. ஆனால், பேரினவாத சிங்கள அரசு அந்த வாக்குரிமையைப் பறித்து, அவர்களை நாடற்றவர்களாக்கியது. பேரினவாத அரசின் செயற்பாடுகள் இந்த மக்களிடையே மேலும் வைராக்கியத்தை ஏற்படுத்தின. தாங்கள் உழைத்து உருவாக்கிய இந்த மண்ணைவிட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாத நிலையில், தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸின் தோற்றம், தொழிற்சங்கங்களின் வருகை, இடதுசாரிகளின் எழுச்சி போன்றன இந்த மக்களுக்கான உரிமைக் குரல்களாக ஒலிக்கத் தொடங்கின. இதனைப் பொறுத்துக்கொள்ளாத பேரினவாத அரசு, சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி மக்களைப் பிரித்து, அவர்களை இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் பங்கிட்டுக்கொள்ளும் முயற்சியில் வெற்றிபெற்றது. எனினும், அதன் பின்னர் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஓர் இனப்பிரிவாக மலையக மக்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் வெற்றிபெற்றனர்.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு, இங்கு தங்கியிருந்த மலையக மக்களுக்கான பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தியது. இலங்கை–இந்திய ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை, மாகாண சபைச் சட்டங்கள் ஆகியனவும் இந்த உரிமைப் போராட்டங்களின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றன. இத்தகைய போராட்டங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே, மலையக மக்கள் பல்வேறு காணி உரிமை மற்றும் நில உரிமைப் போராட்டங்களில் தமது உயிர்களைத் தியாகம் செய்து, இந்த மண் தங்களுடையது என்பதில் உறுதியாக நின்றனர். இதன் விளைவாகவே, இன்று இலங்கை மண்ணில் மலையக மக்கள் என்ற தனித்துவமான சமூகத்தின் இருப்பு நிலைபெறுவதற்கான வழி உருவானது.
உசாத்துணை நூல்கள்
- வேலுப்பிள்ளை, சி.வி. மலைநாட்டு மக்கள் பாடல்கள். மகாவலி பிரசுரம், கொழும்பு.
- சிவலிங்கம், மு. (2007). மலையகத் தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள். ரெக்னோ பிரிண்டர்ஸ்.
- சாரல் நாடன் (1993). மலையக வாய்மொழி இலக்கியம். சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
- கந்தையா, மு.சி. (2002). சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள். பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர்.
- காதர், பி.ஏ. இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். சமூக இயல் பதிப்பகம், லண்டன்.
- சிவலிங்கராசா, எஸ். (2023). யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள். குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
- லூர்து, தே. (2011). நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்



