ஆய்வின் முக்கியத்துவம்
‘ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்’ என்ற ஆய்வு பல்வேறு அடுக்குகளில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலாவதாக, ஈழத்தமிழர் சமூக வரலாற்றில் போதிய கவனம் பெறாத அல்லது குறைவாகவே ஆராயப்பட்ட ஓர் இயக்கத்தை இது வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது. இரண்டாவது, காந்தீயத்தின் சமூக, பொருளாதாரப் பங்களிப்புகளை அரசியல் போராட்ட வரலாற்றுடன் தெளிவாக இணைக்கிறது. மூன்றாவது, 1977 இனவன்முறையின் பின்னணியில் மலையகத் தமிழர் மறுவாழ்வைப் புதிய பார்வையில் புரிந்துகொள்ள உதவுகிறது. நான்காவது, காந்தீயத்தின் பண்ணைகள், குடியேற்றங்களைச் சமூக அபிவிருத்தி, நிலவியல் அரசியல் என்ற இரு கோணங்களில் ஆய்வு செய்ய வழிவகுக்கிறது. ஐந்தாவது, காந்தீயத்தின் கல்வி, முன்பள்ளி, பெண்கள், இளைஞர் பங்கேற்பு ஆகிய துறைகளை மனித, சமூக மூலதனக் கோட்பாடுகளுடன் இணைக்கிறது. ஆறாவது, போருக்குப் பிந்தைய வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சமூக மறுகட்டமைப்பிற்கான வரலாற்றுப் பாடங்களை அடையாளம் காண உதவுகிறது. காந்தீய இயக்கத்தின் கடந்த அனுபவங்களை முன்னோடிகள், வெளியீடுகள், தொடர்புடைய தகவல்களிலிருந்து தொகுத்து, முழுமையான களஆய்வு ஆவணமாக உருவாக்குவது முக்கியமானதாகும்.
ஆய்வின் மையக் கேள்வி
ஈழத்தின் சமூக, அரசியல், பொருளாதார, இனமோதல் சூழலில், காந்தீய இயக்கம் எவ்வாறு வன்முறையற்ற, மக்கள் பங்கேற்பு அடிப்படையிலான சமூக மறுகட்டமைப்பு மற்றும் சுயசார்பு அபிவிருத்தி இயக்கமாக உருவெடுத்தது? அதன் பண்ணைகள், குடியேற்றங்கள், கல்வி, சமூக நிறுவனங்கள் தமிழர் சமூகத்தின் வாழ்வாதாரம், மனித மூலதனம், சமூக மூலதனம், நிலவியல் இருப்பில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? காந்தீய சிந்தனை ஈழத்தில் எவ்வாறு அறிமுகமாகி, உள்ளூர் சமூக இயக்கமாக மாற்றமடைந்தது? காந்தீய இயக்கம் உருவான சமூக, அரசியல் சூழல் என்ன? 1977 இனவன்முறைக்குப் பிறகு காந்தீயத்தின் மறுவாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், அதன் பங்கு என்ன?
ஈழத்தமிழர் சமூகத்தின் நவீன வரலாறு என்பது சுயநிர்ணயத்துக்கான அரசியல் போராட்டங்கள், போர்கள், போர்களின் அதிர்வுகள், சமூகப் பொருளாதாரச் சிதைவுகள், புலம்பெயர் வாழ்வு மற்றும் அதன் நன்மைகள் மீதான அதிர்வுகள், ஆறாத் துயரமாக இன்றும் தொடரும் ஈழத்து இயக்கங்களின் உள்ளக முரண்பாடுகளின் உட்படுகொலைகள், முஸ்லிம் மக்களின் மீதான இடப்பெயர் அழுத்தங்கள், இடப்பெயர்வுகள், நில இழப்புகள், பொருளாதாரப் பின்தங்கல்கள், இராணுவமயக் குடியேற்றங்கள், திட்டமிட்ட நில அடையாளச் சிதைப்பும் இடப்பெயர் மாற்றமும், இவை எல்லாவற்றையும் எதிர்கொண்ட இயக்கங்கள், மக்கள் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் ஊடாகப் பார்க்கப்பட வேண்டிய சிக்கலான வரலாறாகும்.
பெரும்பாலும், இந்த வரலாறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், ஆயுத இயக்கங்கள், இனமோதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வாசிக்கப்படுகிறது. ஆனால், சமூகப் பொருளாதார மறுகட்டமைப்பை நோக்கமாகக் கொண்டு மக்கள் மத்தியில் நேரடியாகச் செயல்பட்ட மக்கள் அமைப்புகள், மனிதாபிமான உதவி நிறுவனங்களின் பங்களிப்பு பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை. இவ்வாறு மறக்கப்பட்ட அமைப்புகளில் காந்தீயம் முக்கியமானது. காந்தீயம் ஒரு மனிதாபிமான உதவி அமைப்பு மட்டும் அல்ல; இது ஒரு மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் வரலாறு குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்’ என்ற ஆய்வு, இதுவரை முழுமையாக ஆராயப்படாத ஒரு முக்கியமான சமூக வரலாற்றை மீண்டும் வெளிக்கொணரும் முயற்சியாகும்.
காந்தீய இயக்கத்தின் வரலாறு ‘ஈழப்போராட்ட வாழ்வியக்கத்தில் இன்னும் முழுமையாகப் பார்க்கப்படாத ஒரு வரலாறு’ எனலாம். காந்தீய முன்னோடிகள் சமூக, பொருளாதார, மக்கள் சார்ந்த முன்னெடுப்புகள் மூலம் தனித்துவமான போராட்டப் பாதையை உருவாக்க முயன்றனர். பல முன்னோடித் திட்டங்களை நடைமுறையில் உருவாக்கிய முக்கிய பங்களிப்பும் காந்தீய இயக்கத்துக்கே சொந்தமானது.
இவ்வகையில் காந்தீயத்தை வெறுமனே மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவத்தின் இலங்கைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது போதுமானதல்ல. ஈழத்தில் அது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில், நெருக்கடியான சமூகத் தேவைகளுக்குப் பதிலளித்த ஒரு சமூகச் செயற்பாடாகப் பார்க்கப்பட வேண்டும். அகிம்சை, சத்தியம், சுயராஜ்யம், சர்வோதயம் போன்ற கருத்துகளுடன் இணைந்திருந்தாலும், ஈழத்தின் இன அரசியல், நிலப்பிரச்சினை, இடப்பெயர்வு, வறுமை, கல்விப் பின்தங்கல், சமூக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தனித்த நடைமுறை வடிவத்தை உருவாக்க காந்தீயம் முனைந்தது. இதை விரிவாக ஆராய்வது காலத்தின் கட்டாயப் பணியாகவும் அமைகின்றது.
காந்தீயம் அமைப்பின் தோற்றமும் சமூகப் பணிகளும் (1976–1983)
காந்தீயம் அமைப்பு 1976ஆம் ஆண்டு வவுனியாவில் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில், அமைப்பின் செயற்பாடுகள் உள்ளூர் நிதி மற்றும் சமூக ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டன. பணிகள் விரிவடைந்தபோது, உள்ளூர் – வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம், நிவாரண உதவிகளைத் தாண்டி கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறுதொழில் வளர்ச்சி, சமூக மறுவாழ்வு உள்ளிட்ட துறைகளில் திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது. இந்தப் பணிகளுக்காக அதிக தன்னார்வத் தொண்டர்கள் தேவைப்பட்டனர். சமூக மாற்றம், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பணிகளில் ஆர்வமுள்ள தமிழ் தேசிய உணர்வுடைய இளைஞர்கள் அமைப்புடன் இணைந்தனர்.
1977ஆம் ஆண்டுகளில் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு, மறுவாழ்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொண்ட வறுமை, இடப்பெயர்வு, கல்வி வாய்ப்பின்மை, சுகாதாரப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அமைப்பின் சேவைகளுக்கான தேவை அதிகரித்தது. அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கியதுடன், அவர்களைச் சுயசார்புடைய சமூகங்களாக உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது.
காந்தீயம் அமைப்பின் செயற்பாடுகள் சமூக நலன், மனிதாபிமான உதவி, கிராமப்புற அபிவிருத்தியை மையமாகக் கொண்டிருந்தன. அமைப்பு பராமரித்த குடியேற்றக் கிராமங்களில் முன்பள்ளிகள் நிறுவப்பட்டு, சிறுவர்களுக்கான ஆரம்பக் கல்வி வழங்கப்பட்டது. குழந்தைகளின் ஊட்டச்சத்துத் தேவைக்காக உணவு வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அடிப்படைச் சுகாதார வசதிகள், நோய்த்தடுப்பு, தடுப்பூசித் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள், அரச சேவைகள் போதிய அளவில் சென்றடையாத தொலைதூரக் கிராமங்களில் வாழும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தன.
பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டன. நிலம், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்தி, குடும்ப வருமானத்தை அதிகரிக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டது. கூடுதலாக, குடிசைக் கைத்தொழில்கள், பிற சிறுதொழில் நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட்டன. இந்த முயற்சிகள், உதவியைச் சார்ந்த நிலையை மாற்றி, உற்பத்தி சார்ந்த பொருளாதாரச் செயற்பாடுகளின் மூலம் குடும்பங்களுக்குத் தன்னிறைவு வாய்ப்புகளை வழங்கின.
1983ஆம் ஆண்டு கிடைத்த தகவலின்படி, காந்தீயம் அமைப்பு அரசால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு, அமைப்பு 42 குடியேற்றங்களில் சுமார் 7,000 குடும்பங்கள், 40,000க்கும் மேற்பட்ட மக்களைப் பராமரித்தது. இந்த எண்ணிக்கைகள் அமைப்பின் செயற்பாட்டு விரிவையும் சமூகத் தேவைகளுக்கான அதன் முக்கியத்துவத்தையும் காட்டுகின்றன. தமிழ் தேசிய உணர்வுள்ள இளைஞர்கள் அதிகமாக இணைந்திருந்த நிலையில், அரசாங்கம் அமைப்பை ஆயுதப் போராட்டத்திற்கு ஆதாரமாகத் தவறாக அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, 1983ஆம் ஆண்டு அமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டது.
காந்தீயம் அமைப்பின் அழிவு ஒரு நிறுவனத்தின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. இது பல்வேறு சமூக சேவைகள், கிராமப்புற அபிவிருத்தி முயற்சிகளின் தொடர்ச்சிக்கும் பெரும் தடையாக இருந்தது. முன்பள்ளிகள், உணவு வழங்கும் நிலையங்கள், சுகாதார சேவைகள், விவசாய முயற்சிகள், சிறுதொழில் ஊக்குவிப்பு ஆகியவற்றின் மூலம், புவியியல் – பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அமைப்பு முயன்றது. எனவே, அதன் வரலாற்றை ஆராய்வது, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, சமூகப் பங்கேற்பு, மாற்று அபிவிருத்தி, மனிதநேய அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் பெறுகிறது.
காந்தீயம்: தத்துவத்திலிருந்து வாழ்வியக்கமாக
‘காந்தியம்’ என்பது மகாத்மா காந்தியின் அரசியல், சமூகத் தத்துவங்களைக் குறிக்கும். அகிம்சை, சத்தியம், சர்வோதயம், சுயராஜ்யம், சுயசார்பு, உழைப்பின் கண்ணியம், கிராமியப் பொருளாதாரம், சமூக சமத்துவம், மனித மரியாதை ஆகியவை அதன் முக்கிய கூறுகள். காந்தியத்தை வெறும் அரசியல் போராட்ட உத்தியாகப் பார்க்க முடியாது; இது தனிநபர் வாழ்க்கை, சமூக அமைப்பு, பொருளாதார உறவுகள், அரசியல் பங்கேற்பு, மனித உறவுகளை மறுசீரமைக்கும் வாழ்வியல் தத்துவமாகும்.
காந்தியம் ஓர் இயக்கம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை நெறி. இது அதன் அடிப்படைக் கொள்கைகளில் அமைந்த வாழ்வியல் தரிசனமாகும்.
இந்தத் தத்துவம் இலங்கையிலும் பல்வேறு வடிவங்களில் தாக்கம் ஏற்படுத்தியது. குறிப்பாக, ஈழத்தமிழர் சமூகத்தில் அரசியல், சமூக மாற்றங்களில் காந்திய சிந்தனை ஓர் உந்துசக்தியாகவும் மாற்று அணுகுமுறையாகவும் இருந்தது. வடக்குக் கிழக்குத் தமிழர் வாழ்விடங்களில் பல காந்திய அமைப்புகள் மக்கள் இணைப்பையும் சமூகச் செயற்பாடுகளையும் உருவாக்க முயன்றுள்ளன.
ஆனால், ‘ஈழக் காந்தீயம்’ இந்தியக் காந்தியத்தின் நேரடிப் பிரதியாக இல்லை. இது ஈழத்தின் தனித்துவமான வரலாற்று அனுபவங்களுடன் இணைந்து, சமூக – பொருளாதார சமத்துவ மாற்றத்திற்கான மக்கள் அமைப்பாக உருவானது. எனவே, காந்தீயத்தை ஆய்வு செய்யும்போது, ‘காந்தியின் கொள்கைகள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டன?’ என்பதற்குப் பதிலாக, ‘அவை உள்ளூர் சமூகத் தேவைகளுக்கேற்ப எவ்வாறு மறுபொருளாக்கப்பட்டன?’ என்பதே முக்கியமான கேள்வியாகிறது.
ஈழத்தின் சமூக–அரசியல் சூழலும் காந்தீயத்தின் தோற்றமும்
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் இன அடையாளம், மொழி, குடியுரிமை, நிலம், கல்வி, அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் தீவிரமடைந்தன. குறிப்பாக, மலையகத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினை, மொழிச் சட்டங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நிலவிய பாகுபாடு, அரசியல் அதிகாரம் ஒருசிலரிடம் மட்டுமே குவிந்தது ஆகிய காரணங்கள் தமிழ்ச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையை மேலும் தீவிரப்படுத்தின.
இந்த வரலாற்றுச் சூழலில் தமிழர் அரசியல் இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாகின. அரசியல் கட்சிகள், சத்தியாக்கிரகங்கள், மாணவர் – இளைஞர் இயக்கங்கள், சமூக அமைப்புகள், ஆயுத இயக்கங்கள் எனப் பல போராட்டப் பாதைகள் தோன்றின. இந்தப் போராட்டப் பாரம்பரியத்தில் ‘காந்தீயம்’ முக்கிய இடத்தைப் பெற்றது. இது மக்களின் தேவைகளைப் புரிந்து, சமூக – பொருளாதார நெருக்கடிகளை மக்கள் பங்களிப்பின் மூலம் தீர்க்கும் நடைமுறையை ஊக்குவித்தது.
காந்தீய இயக்கத்தைக் கட்சி அரசியலின் கருவியாக மட்டும் பார்க்காமல், சமூகத்துடன் இணைந்து புதிய பாதையை உருவாக்கிய இயக்கமாக அதன் வரலாற்றுப் பங்களிப்பை மதிக்க வேண்டும். அதன் முக்கியத் தனித்துவம் சமூகத்தைத் தயார்படுத்துவதில் உள்ளது. மக்களின் விழிப்புணர்வையும் சமூக – பொருளாதார விடுதலையையும் ஒருங்கிணைத்த சமூகத் தயார்படுத்தலே காந்தீயத்தின் முக்கிய பங்களிப்பாகும்.
எனவே, காந்தீயத்தை ஓர் ‘அரசியல் இயக்கம்’ என்ற ஒரே வரையறையில் பார்க்க முடியாது; இது அதன் வரலாற்றுப் பங்களிப்பைக் குறைக்கும். சமூக, அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியதுடன், நிலம், விவசாயம், குடியேற்றம், கல்வி, முன்பள்ளி, சமூக சுகாதாரம், சமூக அமைப்பாக்கம் போன்ற பல துறைகளிலும் காந்தீய இயக்கம் செயல்பட்டது.
காந்தீயமும் சமூக விடுதலையும்
காந்தீயத்தின் முக்கிய பங்களிப்பு, சமூக விடுதலையை அரசியல் விடுதலையுடன் ஒருங்கிணைத்ததாகும். அரசியல் உரிமைகள் இருந்தாலும், நிலம், பொருளாதாரம், கல்வியில் பின்தங்கிய குடும்பங்களுக்கு முழுமையான விடுதலை இல்லை என்ற பார்வை இதில் உள்ளது. இதனால், ‘மக்களைத் தயார்படுத்துதல்’ என்ற கருத்து காந்தீயச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. விழிப்புணர்வு, சமூகப் பங்கேற்பு, உழைப்பு, சுயசார்பு, கூட்டுறவு, கல்வி, சமூக ஒற்றுமை ஆகியவை சமூக விடுதலையின் முக்கிய கூறுகளாக உள்ளன.
காந்தீயம் சமூக, பொருளாதார, கலாசார ரீதியாகப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு, மக்களின் சமூக-பொருளாதார விடுதலையை நோக்கிய சமூகத் தயார்படுத்தலுக்கு முதன்மை அளித்தது. குறிப்பாக, பண்ணைகள் – குடியேற்றங்கள் மூலம் மக்கள் பங்களிப்பும் அவர்களின் தலைமையிலான சமூக நிறுவனங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு நிலம் வழங்குவது பொருளாதார நடவடிக்கையை மட்டும் குறிக்காது; அது சமூகப் பாதுகாப்பு, குடியுரிமை உணர்வு, எதிர்காலத் தலைமுறைக்கான அடித்தளத்தையும் வழங்குகிறது.
இதனால், காந்தீயத்தின் சமூக விடுதலைக் கருத்து விழிப்புணர்வு, பங்கேற்பு, உழைப்பு, உற்பத்தி, தன்னிறைவு, சமூக மரியாதை, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் வலுவாக நிலைத்துள்ளது என்பதை காலப்போக்கில் உணர முடிகிறது.
1977 இனவன்முறையும் காந்தீயத்தின் வரலாற்றுத் திருப்புமுனையும்
காந்தீய வரலாற்றில் 1977 ஒரு முக்கியமான திருப்புமுனை. அந்த ஆண்டு இனவன்முறையால் மலையகத் தமிழர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். வீடு, சொத்து, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு புதிய வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது அவசரமான சமூகத் தேவையாக இருந்தது.
இந்த நிலையில் காந்தீயம் நிவாரணத்தை மட்டும் வழங்கும் அணுகுமுறையைத் தாண்டி, மக்களை நிலத்துடனும் உற்பத்தியுடனும் மீண்டும் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டது.
காந்தீய இயக்கத்தின் ஒருங்கிணைந்த பண்ணைகள், 1977 இனவன்முறையால் தமிழ்ப் பகுதிகளை நோக்கி வந்த மக்களைக் குடியமர்த்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டன.
இங்கு ‘மறுவாழ்வு’ என்ற கருத்து மிகவும் முக்கியமானது. ‘அகதிகளுக்கு’ உணவு, உடை, தற்காலிகத் தங்குமிடம் வழங்குவது நிவாரணம். ஆனால் நிலம், வீடு, விவசாயம், கல்வி, சமூக அமைப்பு, வருமான வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவது மறுவாழ்வு. காந்தீயத்தின் தனித்துவமான பங்களிப்பு இந்த அணுகுமுறையில்தான் அமைந்தது.
இதன் மூலம் காந்தீயம் இடம்பெயர்ந்தவர்களை ‘உதவி பெற வேண்டியவர்கள்’ என்ற அடையாளத்தில் மட்டும் நிறுத்தாமல், உற்பத்தி செய்யும் குடிமக்கள் என்ற நிலைக்கு மாற்ற முயன்றது.
ஒருங்கிணைந்த பண்ணைகள்: காந்தீயத்தின் அடையாளம்
காந்தீயத்தின் வரலாற்றில் ஒருங்கிணைந்த பண்ணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள இவை விவசாய உற்பத்தியை மட்டுமல்லாமல், குடியேற்றம், வாழ்வாதாரம், சமூக அமைப்பு, தன்னிறைவு ஆகியவற்றையும் ஒருங்கிணைக்கின்றன.
TRRO நிதியுடன் கென்ட் பாம், டொலர்பாம் திட்டங்களை காந்தீயம் முன்னிறுத்தியது. இவை குடியேற்றத் திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தன. 1977 இனவன்முறையால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களைக் குடியேற்றுவதற்காக இந்தத் திட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலும், காந்தீயத்தின் ஒருங்கிணைந்த பண்ணைகளில் காந்திய விழுமியங்களை நடைமுறையில் கட்டியெழுப்புவது S.A. டேவிட், Dr. S. ராஜசுந்தரம் ஆகியோரின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்தது.
ஏனெனில் இங்கு நிலம் மட்டும் இல்லை; சமூக உறவுகள், கூட்டுறவு, விவசாய அறிவு, கல்வி, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த பண்ணை மாதிரியின் அடிப்படை ஓட்டம் நிலம், குடியேற்றம், விவசாயம், உணவுப் பாதுகாப்பு, வருமானம், கூட்டுறவு, சமூக நிறுவனங்கள், கல்வி, சமூகத் தன்னிறைவு என்ற சங்கிலி இணைப்பின் வழியாகப் பார்க்கப்பட வேண்டும். காந்தீயத்தின் கட்டமைப்பு மாதிரி ‘Gandhiyam Community Reconstruction Model’ (GCRM) என்ற கருத்தியல் அடித்தளமாகவும் வாசிக்கப்படலாம்.
காந்தீயமும் தமிழர் குடியேற்ற அரசியலும்
காந்தீய இயக்க வரலாற்றில் அதன் குடியேற்றத் திட்டங்கள் சிக்கலானவை, விவாதத்திற்குரியவை. அரச ஆதரவு பெற்ற குடியேற்றங்களுக்கு எதிராக, காந்தீயக் குடியேற்றங்கள் சமூகத் தற்காப்பு அமைப்பாக விளக்கப்படுகின்றன. இந்தக் கூற்றைக் கவனமாக அணுக வேண்டும். காந்தீயத்தின் முக்கிய நோக்கங்கள் அகதிகளுக்கான மறுவாழ்வு, நிலமற்ற குடும்பங்களுக்குக் குடியேற்றம், விவசாய உற்பத்தி, சமூக அபிவிருத்தி என்பன ஆகும். இத்திட்டங்கள் எல்லைப்புற நிலப்பரப்புகளில் செயல்படுத்தப்பட்டதால், அவை நிலவியல், மக்கள் தொகை அரசியலுடன் தொடர்புடையவை. இங்கு இரண்டு நிலைகளைத் தெளிவாக வேறுபடுத்த வேண்டும்: முதலில், சமூக அபிவிருத்தி—இடம்பெயர்ந்த மக்களுக்கு நிலம், வீடு, விவசாயம், வாழ்வாதாரம் வழங்குதல். இரண்டாவது, அரசியல் விளைவு—இந்தக் குடியேற்றங்கள் தமிழர் குடியிருப்பு மற்றும் நிலப் பயன்பாட்டின் தொடர்ச்சியை வலுப்படுத்தும் நிலவியல் அரசியல் விளைவு. இந்த வேறுபாடு கல்விசார் ஆய்விற்கு முக்கியமானது. காந்தீயம் ‘இனக் குடியேற்ற அரசியல் இயக்கம்’ என்று வகைப்படுத்தப்படுவதற்கு முன், அதன் சமூக அபிவிருத்தி நோக்கங்களும் வரலாற்றுச் சூழலும் கவனிக்கப்பட வேண்டும்.
காந்தீயம்: சமூகப் பொருளாதாரமும் தன்னிறைவும்
காந்தீயத்தின் முக்கிய பங்களிப்பு சுயசார்புப் பொருளாதாரக் கருத்தை சமூக மறுவாழ்வுடன் இணைப்பதாகும். ஒரு சமூகத்தின் அரசியல் வலிமை அதன் பொருளாதாரத் தன்னிறைவுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பது இதன் அடிப்படையாகும்.
ஒரு சமூகத்திற்கு நிலம் இருந்தாலும் உற்பத்தி இல்லாவிட்டால் அது நீண்டகாலத்தில் வெளிப்புற உதவியைச் சார்ந்திருக்கும். உற்பத்தி இருந்தாலும் சமூக நிறுவனங்கள் இல்லாவிட்டால் அதன் பயன்கள் நிலைத்திருக்காது. எனவே காந்தீயத்தின் அணுகுமுறை நிலம், உழைப்பு, உற்பத்தி, கூட்டுறவு, சமூக அமைப்பு ஆகியவற்றை இணைத்தது.
இந்தக் கருத்தை ஒருங்கிணைந்த பண்ணைகள் மூலம் விளக்கலாம். குடும்பங்கள் நிலத்துடன் இணைந்தபோது, அவர்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட முடிகிறது. உற்பத்தி குடும்ப உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துகிறது; மீதமான உற்பத்தி வருமானமாக மாறும்; கூட்டுறவு அமைப்புகள் சமூகப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும். இதனால் காந்தீயப் பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றம் தெளிவாகிறது—சார்பு, உற்பத்தி, தன்னிறைவு எனக் குறிப்பிடலாம்.
கல்வி, முன்பள்ளி, மனித மூலதனம்
காந்தீயத்தின் சமூகப் பங்களிப்பு விவசாயம், குடியேற்றம் மட்டுமல்லாமல், கல்வி – முன்பள்ளி இயக்கங்களையும் உள்ளடக்கியது.
ஒரு சமூகத்தை மறுகட்டமைக்கும்போது குழந்தைகள், இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்து காந்தீயத்தின் சமூக அபிவிருத்தி அணுகுமுறையில் முக்கியமானதாக இருந்தது. குடியேற்றப் பகுதிகளில் கல்வி, குழந்தைப் பராமரிப்பு அமைப்புகளை உருவாக்குவது இதன் ஒரு வெளிப்பாடாகும்.
இதனை மனித மூலதன உருவாக்கம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வாசிக்கலாம். நிலம், பொருளாதார வளங்களை உருவாக்குவது உடனடி வாழ்வாதாரத்தை வழங்கலாம்; ஆனால் கல்வி அடுத்த தலைமுறையின் திறனை உருவாக்குகிறது. அதனால், மறுவாழ்வு, குழந்தை பாதுகாப்பு, முன்பள்ளி, கல்வி, மனித மூலதனம், எதிர்கால சமூக அபிவிருத்தி என்ற தொடர்ச்சி உருவாகிறது.
காந்தீயத்தின் சமூக நிறுவனங்களை இந்த நீண்டகால நோக்கில் பார்க்க வேண்டும். இது, இதன் வரலாற்றுப் பங்களிப்பை வெறும் நிவாரணம் வழங்குவது அல்லது குடியேற்றுவது என்ற அளவோடு நிறுத்திவிடாமல், மனித வள மேம்பாடு என்னும் பரந்த நோக்கத்திற்கு உயர்த்திச் செல்கிறது.
பெண்களும் சமூகப் பங்கேற்பும்
சமூக மறுகட்டமைப்பு ஆண்கள் மட்டுமே ஈடுபடும் பொருளாதார நடவடிக்கையாக இருக்க முடியாது. பெண்களின் பங்கேற்பு இல்லாமல் குடும்பம் அல்லது சமூகம் நீண்டகால மறுவாழ்வை முழுமையாக அடைய முடியாது.
காந்தியப் பண்ணைகளும் சமூகத் திட்டங்களும் பெண்களின் பங்களிப்போடு இணைக்கப்பட்டன. குறிப்பாக, முன்பள்ளி நிர்வாகம், சமூக சுகாதாரம், வீட்டுத் தோட்டம், உணவுப் பாதுகாப்பு, சமூக அமைப்பாக்கம் போன்ற துறைகளில் அவர்களின் பங்கேற்பு ஊக்குவிக்கப்பட்டது.
பெண்களின் பங்கேற்பு மூன்று முக்கிய விளைவுகளை உருவாக்குகிறது:
- குடும்பத் தன்னிறைவு
- குழந்தைகளின் கல்வி, சுகாதாரம்
- சமூக நிறுவனங்களில் பெண்களின் தலைமைத்துவம்
இதனால் காந்தீயத்தின் சமூக மறுவாழ்வு மாதிரி பாலின சமத்துவம், பெண்களின் சமூக அதிகாரமளித்தலின் கோணத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டியதாகிறது.
காந்தீயமும் சமூக மூலதனமும்
ஒரு இடம்பெயர்ந்த சமூகத்தைப் புதிய இடத்தில் குடியேற்றுவது வீடுகள் அமைப்பதைவிட அதிகமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. புதிய சமூக உறவுகள், நம்பிக்கை, பரஸ்பர உதவி, கூட்டுறவு, தலைமைத்துவம், கூட்டு முடிவெடுப்பு உருவாகும்போது மட்டுமே புதிய சமூக அமைப்பு நிலைத்தன்மை பெறும். இந்தச் சூழலில், சமூக மூலதனம் (Social Capital) முக்கியப் பங்கு வகிக்கிறது.
காந்தீயத்தின் கூட்டுறவு முயற்சிகள், பண்ணை அமைப்புகள், சமூகக் கல்வி, முன்பள்ளிகள், மக்கள் பங்கேற்பு ஆகியவை சமூக வலைப்பின்னல்களை உருவாக்கின. மக்கள் ஒன்றாக உழைக்கும்போது நம்பிக்கை உருவாகிறது; நம்பிக்கை உருவானால் கூட்டுச் செயற்பாடு சாத்தியமாகிறது; கூட்டுச் செயற்பாடு சமூக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
காந்தீயமும் அகிம்சைப் போராட்டத்தின் தனித்துவமும்
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் பல்வேறு போராட்டங்கள் இருந்தாலும், காந்தீயத்தின் தனித்துவம் அதன் வன்முறையற்ற சமூகப் போராட்ட அணுகுமுறையில் உள்ளது. காந்தீயத்தை ஒரு வன்முறையற்ற சமூக, பொருளாதார, அரசியல் அணுகுமுறையாகவும், அதன் கூட்டுப் பங்கேற்பை சமூக, போராட்ட நெறியாகவும் பார்க்க வேண்டும்.
இங்கு அகிம்சை என்பது வெறும் வன்முறையைத் தவிர்ப்பது மட்டுமல்ல. இது சமூக சக்தியை மாற்று வடிவில் கட்டமைப்பதைக் குறிக்கிறது. மக்கள் ஒன்றிணைந்து உழைப்பது, கல்வியை விரிவாக்குவது, நிலமற்றவர்களைக் குடியேற்றுவது, சமூக நிறுவனங்களை உருவாக்குவது ஆகியவை சமூகப் போராட்டத்தின் முக்கிய வடிவங்களாகும்.
எனவே, காந்தீயத்தை ‘போராட்டம் இல்லாத பாதை’ என்று கருதுவது தவறு. மாறாக, இது போராட்டத்தை வேறு தளத்திற்கு மாற்றுகிறது.
காந்தீயத்தின் வீழ்ச்சி: வரலாற்றின் முடிவா அல்லது ஒரு இடைநிறுத்தமா?
காந்தீய இயக்கம் நீண்டகால நிறுவனமாக நிலைநிறுத்தப்படாதது ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இயக்கத்தின் உள்ளக ஒருங்கிணைப்புக் குறைபாடுகள், அரசியல் சூழல், ஆயுதப் போராட்டத்தின் தாக்கம் ஆகியவை அதன் முடக்கத்திற்குக் காரணமாகும். ஆயுத இயக்கங்களின் எழுச்சி, காந்தீய இயக்கத்தின் சமூகச் செயற்பாட்டைப் பாதித்தது. எனினும், ‘வீழ்ச்சி’ என்ற கருத்தை இறுதி முடிவாக மட்டும் பார்க்க முடியாது. ஓர் இயக்கத்தின் நிறுவனம் முடிந்தாலும், அதன் அனுபவங்கள், நினைவுகள், சமூக வலைப்பின்னல்கள், செயற்பாட்டு முறைகள் தொடர்ந்தும் வாழும்.
போருக்குப் பிந்தைய காலமும் காந்தீயத்தின் மறுவாசிப்பும்
2009க்குப் பிறகு, இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் புதிய சமூக, பொருளாதார, அரசியல் சவால்களை எதிர்கொண்டன. போர் முடிந்த பிறகும் இடப்பெயர்வு, காணிப் பிரச்சினைகள், வாழ்வாதாரச் சிக்கல்கள், இளைஞர் வேலைவாய்ப்புக் குறைவு, பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், சமூக நம்பிக்கையின் குறைவு, மனநலப் பிரச்சினைகள் தொடர்ந்தன.
இந்த நிலையில், காந்தீயத்தின் வரலாற்றை மீண்டும் வாசிப்பது அவசியம். போருக்குப் பிந்தைய காலம் புதிய மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டிய நேரமாகும்; இதில் காந்தீயத்தின் அனுபவம் அடித்தளமாகவும் வழிகாட்டியாகவும் பயன்படலாம்.
இங்கு காந்தீயத்தை அப்படியே மீண்டும் உருவாக்குவது நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. மாறாக, அதன் அனுபவத்திலிருந்து எந்தக் கொள்கைகள் இன்று பொருந்தக்கூடியவை என்பதை ஆராய்வதே முக்கியம்.
மக்கள் பங்கேற்பு, உள்ளூர்த் தலைமைத்துவம், கூட்டுறவு, சுயசார்பு வாழ்வாதாரம், சமூக நிறுவனங்கள், கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூக மூலதனம், அகிம்சை, சமூக நீதி என இவை அனைத்தும் போருக்குப் பிந்தைய சமூக மறுகட்டமைப்பிற்கும் பொருந்தக்கூடிய கருத்துகளாகும்.
காந்தீயத்தின் மீதான மறுவாசிப்பின் அவசியம்
‘கடந்த காலம் முடிந்துவிட்டது’ என்ற பார்வைக்கு மாறாக, காந்தீய வரலாற்றை ஒரு பாடமாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ‘இறந்த காலம் என்பது இல்லை; அது கடந்து வந்த காலம் தான்’ என்ற கருத்து, கடந்த அனுபவங்கள் எதிர்கால சமூகக் கட்டமைப்பில் பயன்படக்கூடியவை என்பதை வலியுறுத்துகிறது. காந்தீயத்தை மகிமைப்படுத்துவது மட்டுமல்ல; அதன் சாதனைகள், தோல்விகள், முரண்பாடுகள், வரம்புகள், வரலாற்று விளைவுகளையும் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்.
பின்வரும் கேள்விகள் முக்கியமானவை:
- காந்தீயம் ஏன் உருவானது?
- அதன் சமூக அடித்தளம் என்ன?
- தலைமைத்துவம் எவ்வாறு செயல்பட்டது?
- பண்ணைகள், குடியேற்றங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?
- அவற்றின் பொருளாதாரப் பயன் என்ன?
- கல்வி, முன்பள்ளி இயக்கத்தின் பங்கு என்ன?
- பெண்கள், இளைஞர்களின் பங்களிப்பு என்ன?
- காந்தீயம் அரசியல், ஆயுத இயக்கங்களுடன் எவ்வாறு தொடர்புபட்டது?
- வீழ்ச்சிக்கான காரணங்கள் எவை?
- அதன் அனுபவங்களில் இருந்து போருக்குப் பிந்தைய சமூகங்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
இத்தகைய கேள்விகள் காந்தீயத்தை ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து ஓர் ஆய்வுக்குரிய சமூக நிறுவனமாக மாற்றுகின்றன.
காந்தீய கருத்தியல் ஆய்வு அடித்தளம்
காந்தீயத்தை ஒரே கோட்பாட்டில் மட்டும் பார்க்காமல், பல்வேறு கருத்தியல் அணுகுமுறைகளின் ஒருங்கிணைப்பில் ஆய்வு செய்ய வேண்டும்.
– மனித மைய அபிவிருத்தி: மக்களை அபிவிருத்தியின் பயனாளிகளாக மட்டுமல்லாமல், அபிவிருத்தியின் மையச் செயற்பாட்டாளர்களாகப் பார்ப்பது.
– பங்கேற்பு அபிவிருத்தி: மக்கள் தங்கள் தேவைகள், வளங்கள், எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் செயல்களில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
– சமூக மூலதனம்: நம்பிக்கை, ஒத்துழைப்பு, சமூக வலைப்பின்னல், கூட்டுச் செயற்பாடுகள் மூலம் சமூகத் திறனை மேம்படுத்த வேண்டும்.
– மாற்று அபிவிருத்தி: சந்தையை மட்டுமே சாராமல், உள்ளூர் வளங்கள், மக்கள் பங்கேற்பை மையமாகக் கொண்டு அபிவிருத்தி செய்ய வேண்டும்.
– சமூக மறுகட்டமைப்பு: மோதல், இடப்பெயர்வுக்குப் பின்னர் சமூக நிறுவனங்கள், வாழ்வாதாரம், சமூக உறவுகளை மீண்டும் உருவாக்குதல்.
– அரசியல் நிலவியல்: நிலம், மக்கள் தொகை, குடியேற்றம், அதிகாரம் ஆகியவற்றின் உறவை ஆய்வு செய்தல்.
இந்த ஆறு அணுகுமுறைகளையும் ஒருங்கிணைத்தால், காந்தீயத்தின் வரலாற்றை வெறும் இயக்க வரலாறாக அல்லாமல், சமூக மறுகட்டமைப்பு, மாற்று அபிவிருத்தி வரலாறாக ஆய்வு செய்ய முடியும்.
‘ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்’ என்ற ஆய்வு, மறைந்த இயக்கத்தின் வரலாற்றை மீட்டெடுப்பதோடு, ஈழத்தமிழர் சமூகத்தின் மாற்று அபிவிருத்தி வரலாற்றையும் மீளமைக்கிறது.
காந்தீயம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான இயக்கமாக மட்டுமல்ல; சமூகத்தைத் தயார்படுத்துதல், மக்களை ஒருங்கிணைத்தல், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், நிலத்தை உற்பத்தி வளமாக மாற்றுதல், கல்வியை விரிவாக்குதல், பெண்கள் மற்றும் இளைஞர்களைச் சமூகச் செயற்பாட்டில் இணைத்தல், சமூகத் தன்னிறைவை உருவாக்குதல் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகித்தது.
1977க்குப் பிறகு, காந்தீயத்தின் முக்கியத்துவம் மேலும் தெளிவாகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் கடந்தும், அவர்களை நிலம், உழைப்பு மற்றும் உற்பத்தியுடன் இணைத்தல், ஒருங்கிணைந்த பண்ணைகளை உருவாக்குதல், குடியேற்றங்களை அமைத்தல், சமூக நிறுவனங்களை வளர்த்தல் ஆகியவை அதன் முக்கிய பங்களிப்புகளாகும்.
அதே நேரத்தில், காந்தீயத்தின் குடியேற்ற முயற்சிகள் நிலவியல் அரசியலுடன் தொடர்புடையதால் அரசியல் விளைவுகள் ஏற்பட்டன. வரலாற்று ஆய்வில், சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் நிலவியல் அரசியல் விளைவுகளைத் தனித்தனியாக ஆராய்வது அவசியம்.
இறுதியாக, காந்தீயத்தின் வரலாறு முடிவடைந்துவிடவில்லை. அது மறுவாசிப்புக்குரியது. போருக்குப் பிந்தைய சமூகத்தில், காந்தீய அனுபவங்கள் புதிய மக்கள் இயக்கங்களுக்கு அடித்தளமாகவும் வழிகாட்டியாகவும் பயன்படலாம்.
அரசியல் விடுதலை நிலையானதாக அமைய, அது சமூக விடுதலை, பொருளாதாரத் தன்னிறைவு, மனித மூலதன வளர்ச்சி, சமூக நிறுவனங்களின் வலிமையோடு இணைந்திருக்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் வரலாற்று முன்னோடிகளில் ஒன்றாக ஈழத்துக் காந்தீயத்தை மறுவாசிக்கலாம். இதுவே ‘ஈழத்தில் காந்தீய இயக்கம்: வகிபாகமும் மீள்வாசிப்பும்’ என்ற ஆய்வின் அறிவியல், வரலாற்று முக்கியத்துவத்திற்கான அடித்தளமாக அமைகிறது.
உசாத்துணை மூலங்கள்
- David, S. A. (1982). Gandhiyam – An Appeal for Support. President, Gandhiyam Society. Tamil Times, November 1982.
- Gandhiyam Society. Gandhiyam Society Reports, 1980–1983. Jaffna: Gandhiyam Society.
- Gandhiyam. Gandhiyam: Vavuniya–Sri Lanka. காந்தீய இயக்கத்தின் குறிக்கோள்கள், செயற்திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகள்.
- Tamil Times. (1977–1985). காந்தீயம், மறுவாழ்வு, இனமோதல் மற்றும் வடக்கு–கிழக்கு அரசியல் தொடர்பான பல்வேறு இதழ்கள்.
- Tamil Times. (1983). “Gandhiyam Vilified.”
- Tamil Times. (1983). “Against Gandhiyam Repression: Inhuman, Cruel Acts Condemned.”
- Tamil Times. (1983). “Gandhiyam Leaders Stripped and Tortured.”
- Tamil Times. (1983). “A Military Mind Cannot Understand Gandhiyam.”
- Rajasundaram, S. சேகரிக்கப்பட்ட உரைகள், எழுத்துக்கள் மற்றும் காந்தீய இயக்கம் தொடர்பான ஆவணங்கள்.
இரண்டாம் நிலை/ கோட்பாட்டு ஆதாரங்கள்
- Chambers, R. பங்கேற்பு அபிவிருத்தி மற்றும் மக்கள் மைய அபிவிருத்தி தொடர்பான நூல்கள்.
- Freire, P. மக்கள் விழிப்புணர்வு, சமூக அதிகாரமளித்தல் மற்றும் பங்கேற்பு தொடர்பான கோட்பாடுகள்.
- Putnam, R.D. சமூக மூலதனம், நம்பிக்கை, சமூக வலைப்பின்னல் மற்றும் கூட்டுச் செயற்பாடு தொடர்பான நூல்கள்.
- Wilson, A. J. (1988). The Break-up of Sri Lanka. London: C. Hurst.
- Tambiah, S. J. (1986). Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy. Chicago: University of Chicago Press.
- University Teachers for Human Rights (Jaffna). வடக்கு–கிழக்கு இலங்கையின் மோதல், இடப்பெயர்வு, மனித உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான அறிக்கைகள்.
- TRRO. மறுவாழ்வு மற்றும் குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான பதிவுகள்.
- Redd Barna. வடக்கு–கிழக்கில் குழந்தைகள், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பான திட்ட ஆவணங்கள்.
- Parliamentary Debates, Sri Lanka (1977–1985). நிலம், குடியேற்றம், மறுவாழ்வு மற்றும் அரசியல் சூழல் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்கள்.
- Mahaweli Development Programme Records. மணலாறு/ வெலிஓயா பகுதியின் பின்னைய நிர்வாக மற்றும் குடியேற்ற மாற்றங்கள் தொடர்பான பதிவுகள்.



