இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI), 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 20ஆவது ஆண்டு நிறைவு’ தொடர்பான நிகழ்வில் அளிக்கப்பட்ட உரைகள் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI), 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 20ஆவது ஆண்டு நிறைவு’ தொடர்பான நிகழ்வில் அளிக்கப்பட்ட உரைகள் 

August 21, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

உரை – 1: கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் ஆற்றிய அறிமுக உரை


பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நிகழவிருக்கும் இந்த விவாதத்திற்கு ‘மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்’ (CPA) சார்பாக, உங்களை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ‘மனித உரிமைகள் மேம்பாட்டு மையத்துடன்’ (CHRD) இணைந்து இத்தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் எமது ‘கொள்கை மாற்றங்களுக்கான மையம்’ மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம், CPA என்பது, நல்லாட்சி, முரண்பாடுகளைத் தீர்த்தல் ஆகிய விவகாரங்களில் கவனம் செலுத்தி இயங்கிவருதல் என்ற ஒரு பொதுக் கொள்கை சார்ந்த நிறுவனமாகும். நல்லாட்சி, மனித உரிமைகள், முரண்பாடுகளைத் தீர்த்தல் ஆகியவற்றுக்கு இடையிலான நெருக்கமானதும் பிரிக்க முடியாததுமான தொடர்பின் அவசியத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு சட்டமாக பயங்கரவாதச் சட்டம் இருப்பதால், அதைப் பற்றி விவாதிப்பது மிகவும் பொருத்தமானதே என்று நான் கருதுகிறேன். ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக இயற்றப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தச் சட்டம், காலப்போக்கில் தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பதிலாக, பிரச்சினையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது என்பதை நம்மில் பெரும்பாலோர் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தச் சட்டத்தின் சிறப்பம்சங்களை அடையாளம் கண்டு விவாதிக்க எங்களிடம் பல பேச்சாளர்களும் குழு உறுப்பினர்களும் உள்ளனர்; இந்தச் சட்டத்தின் தன்மையானது, நம் நாட்டின் சட்ட அமைப்பிலும் சரி, அல்லது பரந்த சூழலிலும் சரி, ஓர் அசாதாரணமான சட்டம் என்ற நிலைக்கு அதனை மாற்றியுள்ளது.

நல்லாட்சி, மனித உரிமைகள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் ஆகிய விவகாரங்களை ‘மிகத் தெளிவாக இந்த நிகழ்வு முன்னிலைப்படுத்துகிறது’ என்று எதற்காக நான் கூறுகிறேன் என்றால், அதற்கான காரணங்கள் தெளிவானவை. அதாவது இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கும் விதம், சட்டப் புத்தகங்களில் அது (நடைமுறையில்) இடம்பெற்றுக்கொண்டுள்ள விதம், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அது அங்கு தொடர்ந்து நீடித்திருக்கும் விதம் என்பவைதான் அந்தக் காரணங்கள். நல்லாட்சி குறித்த வாதங்களின் பெரும்பகுதி செயல்முறைகளைச் (Process) சார்ந்ததாகும். அதாவது, இவையெல்லாம் ‘என்ன’, ‘ஏன்’ ‘எப்படி’ போன்ற கேள்விகளைக் கேட்பது தொடர்பானவையாகும்.

இந்தச் சட்டத்தின் மீது கவனம் செலுத்தி இவ்வாறான கேள்விகளை எழுப்பும்போது – அதாவது, இது எவ்வாறு சட்டமாக்கப்பட்டது?, இதிலுள்ள குறிப்பிட்ட சில அம்சங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டன?, மனித உரிமைகள், நல்லாட்சி, முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணல் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையிலான உண்மையான திருத்தங்கள் எதுவும் இதில் ஏன் இதுவரை செய்யப்படவில்லை? என்பது போன்ற கேள்விகளை எழுப்பும்போது – அதற்கான பதில்கள் மிக முக்கியமானவையாக அமைகின்றன. அந்த வகையில், இந்த உலக மனித உரிமைகள் தினத்தில், இந்த விவாதத்தின் மூலம் நாம் இவற்றை முன்வைப்பதோடு, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதையும் நினைவுகூரும் அதேவேளையில், தற்போதைய காலகட்டத்தில் இவை போன்ற சட்டங்கள் அவசியமானவைதானா என்பதையும் நாம் ஆராய வேண்டும் என்று நான் கருதுகிறேன்; அத்துடன் மனித உரிமைகள், நல்லாட்சி, மோதல்களுக்கான தீர்வுகள் ஆகிய மூன்று நோக்கங்களுக்கும் இச்சட்டங்கள் எத்தகைய பங்களிப்பை வழங்குகின்றன என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

இன்னுமொரு குறிப்பிடப்பட வேண்டிய பரிமாணம் ஒன்றும் இருக்கிறது. அது நிலவும் சர்வதேசச் சூழல் தொடர்பானது. மனித உரிமைகள், நல்லாட்சி தொடர்பான விவகாரங்கள் போன்றவை சம்பந்தமாக, பெரும்பாலும் சர்வதேசப் பிரகடனங்கள், உடன்படிக்கைகள் போன்ற ஒப்பந்தங்களில் அரசாங்கங்கள் கையெழுத்திடுகின்றன. இவை மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நெறிமுறைகள், ஒப்பந்தங்கள் என்பவற்றின் ஒரு பகுதியாகத் திகழ வேண்டும் என்பதை அவை எழுத்துவடிவ அளவிலாவது கொண்டிருக்க விரும்புகின்றன; ஆனால், நடைமுறையிலோ உள்நாட்டில் அவற்றை எவ்வாறு பின்பற்றுகின்றன என்பதே எமக்கான உண்மையான ‘சோதனை’யாக அமைகிறது. இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயற்றப்பட்டதற்குப் பின்னான கடந்த இரு தசாப்தங்களில், இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேசக் கடப்பாடுகளுக்கு முரணானதாக அது அமைகிறதா என்பது குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவை போன்ற விவகாரங்களில் நமது செயற்பாடு மிகச் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது; இதனை நியாயப்படுத்தப் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், நாம் பெருமையுடன் ஏற்றுக்கொண்ட அந்தக் கடப்பாடுகளுக்கும், நமது உள்நாட்டு அதிகார வரம்பின்கீழ் அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சட்டங்களிற்கும் இடையே, தெளிவான முரண்பாடான நிலை நிலவுகிறதா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதானமான கேள்வி. இது நல்லாட்சி, மனித உரிமைகள், முரண்பாடுகளைத் தீர்த்தல் ஆகிய நோக்கங்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த விவகாரத்தினதும் ஒரு பகுதியாகும். இந்தச் சர்வதேச ரீதியான கடப்பாடுகள் எல்லாம், வெறுமனே மக்கள் தொடர்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனவா, அல்லது உள்நாட்டின் மனித உரிமைகளுக்கான ஒரு (ஜனநாயகக்) கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

இது ஒரு முக்கியமான ‘கருத்தரங்கும் கலந்துரையாடலும்’ ஆக அமைகின்ற ஒரு நிகழ்வு ஆகும்; ஏனெனில், CPAஇல் உள்ள எங்களுக்கு மிகுந்த ஆர்வமுள்ள மூன்று முக்கிய விவகாரங்களை இது தெளிவாக முன்னிலைப்படுத்துகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் சட்டக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அது இருந்து வருகிறது என்பதையும் நினைவூட்டுவதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகிறது.

இந்நாட்டில் மனித உரிமைகள் கட்டமைப்பு என்று கருதப்படுவதன் ஒரு பகுதியாகவும் இது உள்ளது. அதனால் நாம் இதற்கு மிகவும் பழகிவிட்டோமா என்றும், அதன் விளைவாக மாற்றங்கள் அல்லது திருத்தங்களின் அவசியம் குறித்து உன்னிப்பாகக் கவனிக்கத் தவறிவிட்டோமா அல்லது மறந்துவிட்டோமா என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ளவும் வேண்டும். இவை அனைத்தும் பேச்சாளர்களாலும் குழு உறுப்பினர்களாலும் மேலும் முன்னிலைப்படுத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்படவுள்ள விடயங்களாகும். உங்கள் நேரத்தை நான் அதிகம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை; அனைவரையும் வரவேற்கிறேன். இது ஒரு முக்கியமான தலைப்பு; பயனுள்ள மற்றும் முக்கியமானதொரு கலந்துரையாடலை நாம் மேற்கொள்ளவிருக்கிறோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. உலக மனித உரிமைகள் தினமான இன்று, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக மட்டுமல்லாமல், அதைத் தாண்டிய ஒரு முக்கிய நிகழ்வாகவும் நாம் இதைக் கருத வேண்டும் என்று நான் கருதுகிறேன். மனித உரிமைகள் கட்டமைப்பில் மிகவும் ஆட்சேபனைக்குரியதாக நாம் கருதும் ஓர் அம்சத்தைச் சீர்திருத்துவதற்கோ அல்லது முற்றிலுமாக நீக்குவதற்கோ வழிவகுக்கும் ஒரு செயல்முறையையும், பரந்த அளவிலான விவாதத்தையும் தொடங்குவதற்கு நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நன்றி.

இப்போது திரு. அபயகோன் அவர்களைத் தனது விளக்கவுரையை வழங்குமாறு அழைக்கிறேன்.

உரை – 2: பயங்கரவாதத் தடைச் சட்டமும் மனித உரிமைகளும் – டி.டபிள்யூ. அபயக்கோன்

நான் பேசவிருக்கும் தலைப்பு, ‘1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமும் அதன் 1982ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க திருத்தச் சட்டம், 1988ஆம் ஆண்டின் 22ஆம் இலக்கத் திருத்தச் சட்டம்’ ஆகிய சட்டங்கள் தொடர்பானதாக அமைகிறது. முதலாவதாக, ஆரம்பத்தில் இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டு ‘பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்’ என்றே அழைக்கப்பட்டது என்ற போதும் கடந்த இருபது ஆண்டுகளாகச் சட்டப் புத்தகத்தில் தொடர்ச்சியாக காலவரையறை நீடிக்கப்பட்டுப் (ஒரு நிரந்தரமான சட்டம் போன்று) பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இது பற்றிய நமது பரிசீலனையின் போது நம் முன்னாலுள்ள முதலாவது கேள்வி, இச்சட்டம் என்ன நோக்கத்தைக் கொண்டுள்ளது என்பதுதான். என்னைப் பொறுத்த வரையில், ஒரு தனிநபரினது அல்லது ஓர் அமைப்பினது சட்டவிரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காவென்றே இச்சட்டத்தை முதலில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 1979ஆம் ஆண்டின் சூழலையும், இன்றைய சூழலையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள ‘சட்டவிரோதச் செயல்பாடுகளை’க் கட்டுப்படுத்துவதில் இச்சட்டம் வெற்றி பெற்றுள்ளதா என்பது தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. எனது அவதானத்தில், (இச்சட்டம் அமுலில் இருக்கின்ற) 1979க்குப் பின்னான காலம் முழுவதும் நாட்டில் சட்டவிரோதச் செயல்பாடுகள் கணிசமான அளவுக்கு அதிகரித்தே வந்துள்ளன. ஆகவே, இருபது ஆண்டுகளாக சட்டப் புத்தகத்தில் இருக்கும் இந்தச் சட்டம் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும், உண்மையில் தனது நோக்கத்தில் அது வெற்றிபெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்னமும் சரியாகச் சொல்வதானால், எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டதோ, அந்த நோக்கத்தை அடைவதில் அது படுதோல்வியையே அடைந்துள்ளது.

இந்தச் சட்டத்தை உற்றுநோக்கும் போது, இதில் பல திருப்தியற்ற அம்சங்கள் இருப்பதைக் காணலாம். சாதாரண சட்டத்தின் கீழ், ஒரு பொலிஸ் அதிகாரியிடம் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமோ அல்லது பொலிஸ் அதிகாரியின் காவலில் இருக்கும் ஒருவரால் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமோ நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) 16ஆவது பிரிவின் கீழ், ஒருவர் பொலிஸ் காவலில் இருக்கும் போதோ, அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியிடமோ அளிக்கும் வாக்குமூலம் ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. விசாரணையின் போதோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழோ கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள் ஒப்புதல் வாக்குமூலங்களாக எடுக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பொலிஸ் அத்தியட்சகர் (Superintendent of Police) போன்ற உயர் அதிகாரிகளிடம், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களால் எந்தவொரு வாக்குமூலமும் அளிக்கப்பட்டிருக்கப்படாத போதிலும் கூட, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்தார்கள் என்று குறிப்பிட்டு, பொலிஸார் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பதை நாம் எங்களிடம் வந்த, குற்றஞ்சாட்டப்பட்ட பலரிடமிருந்தும் அறியக்கூடியதாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களது கூற்றுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தாக்கப்படுதல், கடுமையாக மிரட்டப்படுதல், அல்லது (மிகக் கடுமையான) மூன்றாந்தர சித்திரவதை முறைகளுக்கு (Third-degree Methods) உள்ளாக்கப்படுதல் போன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி விசாரணை செய்யும் ஒரு காவற்துறை அதிகாரியால், கைதிகள் ‘தம்மிடம் ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டு எழுதப்படும் ஏதேதோ விடயங்கள்’ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. ண்மையில், அத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்கள், காவல்துறை அத்தியட்சகர் தர (Superintendent of Police) நிலையிலுள்ள ஓர் அதிகாரியிடமே அளிக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் நடப்பது என்னவென்றால், ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரி, அல்லது உதவி ‘இன்ஸ்பெக்ரர்’ (Sub-Inspector) போன்ற தரத்திலுள்ள அதிகாரிகள், இவ்வாறு (தயாரிக்கப்படும் ஒரு) வாக்குமூலத்தைப் பதிவு செய்து, அதில் காவல் துறை அத்தியட்சகரது கையொப்பத்தைப் பெற்று, அதைக் குற்றம் சாட்டப்பட்டவரால் அளிக்கப்பட்ட ‘ஒப்புதல் வாக்குமூலமாகக்’ குறிப்பிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனர்; பெரும்பாலும் அத்தகைய ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே ஆதாரமாகக் கிடைப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டிக்கப்படுபவர் ஆகிறார் என்றாகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, அவர் தாக்கப்பட்டதாகவும், கடுமையான விசாரணை முறைகள் (Third-degree Methods) பயன்படுத்தப்பட்டு ஒரு காவல்துறை அதிகாரியால் ஏதோ ஒன்று எழுதப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டின் சாதாரண சட்ட நடைமுறைகளையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் உள்ள விதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது எந்தவகையிலும் திருப்தியற்ற ஒரு நடைமுறையே என்பது தெளிவாகிறது. ஏனெனில் இதன் மூலம், ஒருவர் குற்றம் செய்தவராகவோ அல்லது காவல்துறையினரால் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட வேறு யாராவது ஒருவராகவோ இருந்தாலும் கூட, இச்சட்டத்தின் கீழ் ஒருவரைத் தண்டிப்பது என்பது மிக எளிதான ஒன்றாக ஆக்கப்படுகிறது.

இது தவிர, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் ‘சுருக்கமற்ற விசாரணை’ (Non-summary Inquiry) முறை இல்லாததால், குற்றம் சாட்டப்பட்டவர் பாதகமான ஒரு நிலையிலேயே இருக்க வைக்கப்படுகிறார். ‘சுருக்கமற்ற விசாரணை முறை’ (அதாவது விரிவான விசாரணை) இருந்தால், தனக்கு எதிராக என்ன வகையான சான்றுகள் முன்வைக்கப்படும் என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தெரியவரும்; அத்துடன், நீதவான் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பின் சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கும். ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இத்தகைய நடைமுறை இல்லை; ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் வரும் வழக்கு விசாரணை ‘ஜூரி’ (Jury) முறை இல்லாமல், உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையிலோ அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு (Trial at Bar) முன்னிலையிலோ தான் நடைபெறுகிறது. அதேபோல, இச்சட்டத்தின் பிரிவு 6இன் படி, பொலிஸ் ‘இன்ஸ்பெக்ரர்’ தர நிலையிலான அதிகாரி அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட உதவி ‘இன்ஸ்பெக்ரர்’ ஆகியோருக்கு, எந்தவொரு இடத்திற்கும் சென்று, அந்த இடத்தைச் சோதனையிட்டு, ஒருவரைக் கைது செய்யவோ அல்லது அங்குள்ள சேகரங்கள் அல்லது பொருட்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ முடியும்; அவ்வாறு பெறப்பட்டவைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்களாகக் கருதப்படும். அத்துடன், கைது செய்யப்பட்ட ஒருவரை எழுபத்தியிரண்டு மணி நேரம் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்கவும் முடியும். இந்த நேரத்துக்குள் பல நிகழ்வுகள் நடக்கக்கூடும்: காவல்துறையினர் மிகக் கடுமையான விசாரணை முறைகளைப் பயன்படுத்திக் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறலாம், அத்துடன், அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்தக் குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்கவும் முடியும்.

72 மணிநேர காலக்கெடு முடிந்ததும், அவருக்கு ஒரு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம்; அல்லது அரச தரப்பு தலைமை வழக்கறிஞர் (Attorney General) பிணை வழங்க ஒப்புதல் அளிக்காவிட்டால், வழக்கு விசாரணை முடியும் வரை கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்படலாம். அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பொறுத்தவரை, ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடுத்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், காவல் நிலையத்திலிருந்து அந்த இடத்திற்கு அவர் மாற்றப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள் பல உள்ளன. கைது செய்யப்பட்ட ஒருவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்து, பின்னர் ‘பூசா’ (Boossa) முகாம் போன்ற வேறொரு இடத்திற்கு அவரை அழைத்துச் செல்லுமாறு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. இறுதியில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போதுதான், காவல் நிலையத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்பது தெரியவருகிறது (தடுப்புக் காவல் உத்தரவில் குறிப்பிடப்பட்ட இடம் தொடர்பான விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், அந்தத் தடுப்புக் காவல் சட்டவிரோதமானது என்றும் உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது).

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக இயற்றப்பட்ட இந்தச் சட்டம், இப்போது இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப் புத்தகங்களில் நீடிக்கின்ற போதும், இச்சட்டம் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தை அடைவதில் தோல்வியையே கண்டுள்ளது. இதன் இன்னொரு ஆபத்தான அம்சம் என்னவென்றால், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபர், நீதவான் (Magistrate) முன்னிலையிலோ அல்லது அடையாள அணிவகுப்பின் (Identification Parade) போதோ அளிக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக, விசாரணையின் போது சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலத்தை, நீதிமன்றத்தில் அவர் மறுத்து வேறொரு விதமாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்படாமலே அதுவும் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, விசாரணையின் போது ஒரு சாட்சி ஒரு குறிப்பிட்ட வாக்குமூலத்தை அளித்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் வேறுவிதமான வாக்குமூலத்தை அளித்தால், அவர் முதலில் அளித்த வாக்குமூலம் உண்மையா இல்லையா என்பது குறித்த உண்மைத்தன்மையை ஆராயாமலே, பொய்யான சாட்சியம் அளித்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படலாம். விசாரணையின் போது நீதவான் முன்னிலையிலோ அல்லது அடையாள அணிவகுப்பின் போதோ அளிக்கப்பட்ட அந்த அசல் வாக்குமூலம் இதற்காகப் பயன்படுத்தப்படலாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவருக்கு, தண்டனை வழங்கப்படுவதை எளிதாக்கும் வகையில், இச்சட்டத்தின் கீழ் மிகவும் திருப்தியற்ற அம்சங்கள் உள்ளன.

உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை; ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படும் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டை அரசுத் தரப்புக்குச் (Prosecution) சார்பாக நிரூபிப்பதற்கு வசதி செய்து தருவதற்காகவே இந்தச் சட்ட விதிகள் அனைத்தும் இயற்றப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு நபர் உண்மையிலேயே அந்தக் குற்றத்தைச் செய்தாரா இல்லையா என்பது இங்கு ஒரு முக்கிய விடயமாக ஆராயப்படுவதில்லை; இதனால், இச்சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் ஒருவருக்கு எதிரான ஒரு வழக்கை நிரூபிப்பது என்பது அரசுத் தரப்புக்கு மிகவும் எளிதான ஒன்றாகிறது. மனித உரிமைகளைப் பொறுத்தவரை இது மிகவும் ஆபத்தான ஒரு சட்டமாகும்.

நமது அரசியலமைப்பின்படி, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் குற்றமற்றவராகவே கருதப்படுகிறார் (அதாவது ஒருவர் குற்றம் இளைத்தவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டுபவருக்கே உரியது). ஆனால் இங்கோ (இந்தச் சட்டத்தின் அடிப்படையில்) தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof), குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்தப்படுகிறது. ஒருவேளை, பாதிக்கப்பட்ட ஒருவர், வெளியிலிருந்து செய்யப்பட்ட தூண்டுதல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ஏதாவது வாக்குறுதிகள் போன்றவற்றின் காரணமாகவே தான் இத்தகைய வாக்குமூலத்தை அளித்ததாகக் குறிப்பிட்டு வாதிட நேர்ந்தால், அந்த வாக்குமூலம் செல்லுபடியாகாததாகக் கருதப்பட வேண்டும்.

இதை அவர் எவ்வாறு நிரூபிப்பார்? வாக்குமூலம் அளிக்கும் நேரத்தில் அவர் காவல் நிலையத்தில் தனியாக இருக்கிறார். அவரைச் சுற்றி காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்; நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பவர்கள் யார்? அந்த வாக்குமூலம் தானாக முன்வந்து அளிக்கப்பட்டது என்று கூறும் அதே இரண்டு அல்லது மூன்று (அல்லது அதற்கும் மேற்பட்ட) காவல்துறை அதிகாரிகள் தான் சாட்சியம் அளிக்கிறார்கள். எனவே, வாக்குமூலம் பெறப்பட்டபோது அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்றாலோ, தூண்டுதல், அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதி காரணமாகவே அந்த வாக்குமூலம் பெறப்பட்டது என்றாலோ அதை அவர் எவ்வாறு நிரூபிப்பார்? அவரிடம் இருப்பது அவரது சாட்சியம் மட்டுமே; அது இறுதியில் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும். அதேவேளையில், பல காவல்துறை அதிகாரிகளால் ஆதரிக்கப்படும் அந்த வாக்குமூலம் அவருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுவார். உண்மையில் குற்றத்தைச் செய்தவரா என்று அறியாமலேயே, இச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் ஒருவருக்குத் தண்டனை பெற்றுத் தருவதை எளிதாக்கும் வகையிலான மிகவும் திருப்தியற்ற அம்சங்கள் இவை.

தூண்டுதல், அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதி மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒரு குற்றமற்ற நபர் கூட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது; ஏனெனில், அந்த வாக்குமூலம் பெறப்பட்ட சூழலைக் கருத்தில் கொண்டு அது செல்லுபடியாகாதது என்பதை நிரூபிப்பது கடினமாக இருக்கும். அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணான ஒரு சட்டமாக இது அமைந்துள்ளது. இது இருபது ஆண்டுகளாகச் சட்டப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள ஒரு சட்டமாகும்; உண்மையில் இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அமுலில் இருக்க வேண்டியதாக இருந்தது. இந்நாட்டுக் குடிமக்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், இச்சட்டத்தை எவ்வாறு சட்டப் புத்தகங்களிலிருந்து நீக்குவது என்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்.

நன்றி.



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்