ஆங்கில மூலம்: திரு. என். கந்தசாமி
(ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைகள் பிரிவு, இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்கான இயக்கம் [Movement for Interracial Justice and Equality – MIRJE], இலங்கை)
அறிமுகம்
இலங்கைத் தமிழ்மக்களின் அரசியல் வரலாறு, அந்த நாட்டில் நிலவுகின்ற தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் பின்னணியில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நலம் தொடர்பான நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக இந்தக் கட்டுரை அமைகிறது. அந்த வகையில் இது, அவசரகாலச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான விதிகள் போன்றவை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது எவ்வாறான வகையில் பிரயோகிக்கப்படுகின்றன என்பது தொடர்பாகக் கவனம் செலுத்துகின்ற அதேவேளை, கைதிகளின் (தற்போதைய) நிலை, அவர்களது வெளிப்படையாக அறிவிக்கப்படாத தடுப்பு முகாம்களின் இருப்பு என்பனவற்றை ஆவணப்படுத்துவதாகவும் அமைகிறது.
பின்னணி
இன்றைய நிலையில், தமிழ்க் கைதிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் அனைத்துக்கும் அடிப்படையான வேர்கள், தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கு எதிரான தமிழ்மக்களது எதிர்ப்புப் போராட்ட வரலாற்றிலிருந்தே ஆரம்பமாகின்றன. தற்போதைய நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட அளப்பரிய துயரங்களும், 1948இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையைத் தொடர்ந்து ஆட்சி செய்த அரசாங்கங்களின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் உச்சகட்ட விளைவாகவே அமைந்துள்ளன.
1948இல் மேற்கொள்ளப்பட்ட அரசாங்கத்தின் இத்தகைய முதல் ஒடுக்குமுறை நடவடிக்கை, இலங்கையில் நீண்ட காலமாக வசித்து வந்த தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறித்தது ஆகும். தமிழ் வாக்காளர்களின் பலத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் தமக்கான சம உரிமையைக் கோருவதைத் தடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மறைமுக முயற்சியாக இது அமைந்தது. இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து, தேர்தல் கட்டளைச் சட்டத்தில் (Elections Ordinance) கொண்டுவரப்பட்ட திருத்தம் ஒன்று, இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளைப் பறித்தது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்தில் தோட்டத் துறைக்கான ஏழு பிரதிநிதித்துவ இடங்கள் இழக்கப்பட்டன; இது எதிர்கால அரசியல் சூழலில் பெரும்பான்மை சிங்கள அரசியல் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கியது. சிறுபான்மையினரின் அபிலாசைகளைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இனவாதமும் ஒடுக்குமுறையும் இணைந்த நடவடிக்கைகளை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் மேற்கொள்வதற்கும் செயல்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை வழிவகுத்தது.
இலங்கையின் ஆளும் கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில், அரசு ஆதரவுடன் சிங்களக் குடியேற்றத்தை முன்னெடுத்தன; இது இப்பகுதிகளின் மக்கள் தொகைக் கட்டமைப்பை மாற்றியமைத்தது. இக்குடியேற்றத்தை விரைவுபடுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இப்பகுதிகளின் இன விகிதாசாரத்தைப் பாதித்ததுடன், இனங்களுக்கிடையிலான பதற்றத்திற்கும் வழிவகுத்தன.
1956இல் கொண்டுவரப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ (Sinhala-Only Act) சட்டத்தின் மூலம், சிங்களமே இலங்கையின் அரசகரும மொழியாக இருக்கும் என்று அறிவித்த ‘சிறீலங்கா சுதந்திரக் கட்சி’ அரசாங்கம், ஒரு முக்கிய திருப்புமுனையை (அல்லது பேரழிவிற்கான தொடக்கத்தை) ஏற்படுத்தியது. இதனால், பெருமளவில் படித்த தமிழர்களாக இருந்த அரச ஊழியர்கள், சிங்கள மொழியில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சட்டம் தமிழர்களின் வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய இரண்டிலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், சமூகங்களுக்கிடையிலான மோதல்களுக்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தமிழ் அரசியல் கட்சிகள் நடத்திய அகிம்சை வழிப் போராட்டங்கள் அரச படைகளின் வன்முறைக்கு உள்ளாயின; அதைத் தொடர்ந்து சிறிது காலத்திலேயே தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் முதல் அலை வெடித்தது.
ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் என்பவை மூலம் சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என்பவற்றுக்குள் இருந்த பேரினவாத சக்திகளால் அத்தகைய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. சிங்கள அரசாங்கங்கள் கடைப்பிடித்த மக்களைத் துருவமயப்படுத்தும் கொள்கையானது, 1971இல் கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய தரப்படுத்தல் (Standardization) முறையில் வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நடவடிக்கை தமிழ் இளைஞர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதைத் தடுத்தது; இதன் மூலம் அரசுத் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.
இப்பிரச்சினைகள் குறித்துத் தமிழர்கள் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அக்காலக் கூட்டணி அரசாங்கம் 1972ஆம் ஆண்டிற்கான புதிய குடியரசு அரசியலமைப்பை அமல்படுத்தியது. இந்த ஆவணம், பெரும்பான்மை சமூகத்தின் மதமான பௌத்தத்தை முதன்முறையாக அரச மதமாக அறிவித்தது; இதன் மூலம் நாட்டின் மதச்சார்பற்ற தன்மை நீக்கப்பட்டது. மேலும், சிறுபான்மையினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களை இயற்றுவதைத் தடை செய்திருந்த முந்தைய ‘சோல்பரி அரசியலமைப்பு’ (Soulbury Constitution) வழங்கியிருந்த, சட்டத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் இந்த 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து வந்த, தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்படும் நிலையானது, (நாட்டில்) இன ரீதியான துருவப்படுத்தலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தமிழ்மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெறுவதற்கும் வித்திட்டது.
இந்தத் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சிக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் அரச அதிகாரத்தின் ஆதரவுடனான வன்முறையைக் கையாண்டது; தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களைச் செய்வதற்காக ஆயுதப் படைகளையும் காவல்துறையையும் ஏவிவிட்டது. இணக்கமான அணுகுமுறைகளை நாடாமல், தமிழ் ஆயுதமேந்திய போராளிகளுக்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்டே கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது; அத்துடன், ஆரம்பத்தில் ஓராண்டு காலத்திற்கு மட்டுமே அமல்படுத்தப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்ட ‘பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA)’ போன்ற கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களை அது இயற்றியது.
தற்போதைய அரசியல் சூழல்
தற்போதைய அரசியல் சூழல் பெரும்பாலும் 1983இல் நிகழ்ந்த இனக்கலவரம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பவற்றில் இருந்தே உருவானது. 1983 ஜூலையில் வெடித்த வன்முறை அலை, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த பல தமிழர்களை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியது. நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிராக 1983இல் கட்டவிழ்த்துவிடப்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான வன்முறையை இலங்கை அரசாங்கமே திட்டமிட்டு நடத்தியது; இதில் முக்கிய அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டதுடன், வன்முறையில் பங்கேற்ற சமூக விரோதக் கும்பல்களுக்கும் பெரும்பான்மை சமூகத்தின் சில பிரிவினருக்கும் அவர்களே ஆதரவையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள். இந்த 1983 இன வன்முறையின் உடனடி விளைவாக, (பிற மாகாணங்களிலிருந்த) தமிழர்கள் பெருமளவில் வடக்குக் கிழக்கு மாகாணங்களை நோக்கி இடம்பெயர்ந்தனர்; அத்துடன் தென்னிந்தியாவுக்கும் மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லும் நிலையும் நிகழ்ந்தது. இவை தவிர, இந்த வன்முறையானது, பொதுவாக தமிழர்கள் மத்தியில், ஆயுதமேந்திய ‘தமிழ்ப் போராட்டத்தின்’ மீதான ஆதரவையும், தமிழ்ப் பிரச்சினை குறித்த சர்வதேசங்களது அங்கீகாரத்தையும் பெறும் நிலை உருவாகுவதற்கான காரணியாகவும் அமைந்தது.
ஒருபுறம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே விரும்புவதாகவும், அதற்கே முயல்வதாகவும் சர்வதேச சமூகத்தை நம்பவைப்பதற்காகக் கூறிக்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம், மறுபுறத்தில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற சாக்குப்போக்கில் தமிழர்களை ஒடுக்குகின்ற நோக்கத்துடன் தனது ஆயுதப் படைகளையும் பலப்படுத்தி வந்தது. 1983 முதல் 1987 வரையிலான காலகட்டத்தில், நேரடிப் பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டு மத்தியஸ்தம் போன்றவை வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் பரஸ்பர நம்பிக்கையின்மை காரணமாகத் தோல்வியையே தழுவின. இதற்கு முக்கியமாக இலங்கை அரசாங்கமே பெருமளவுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அதேவேளை, பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நிலவிய உள்மோதல்களும் விடுதலைப் போராட்டத்தின் வேகத்தைக் குறைக்கவே செய்தன.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தேக்கநிலை, மக்களின் துயரங்கள், வடக்கு-கிழக்குப் பகுதியில் தீவிரமடைந்த இராணுவ நடவடிக்கைகள், இம்மோதல்களின் புவிசார் அரசியல் தாக்கங்கள் போன்ற காரணிகள் தான், அண்டை நாடான இந்தியா இதில் தலையிடவும், 1987ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அது இலங்கை அரசாங்கத்தின் மீது திணிப்பதற்கும், காரணமான தூண்டிகளாக இருந்தன. இருப்பினும், அந்த ஒப்பந்தம் தோல்வியடைந்தது; 14 மாத காலப் பயனற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 1990இல் ஆயுதமேந்திய குழுக்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தொடங்கியது. இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படாமலே உள்ளன; அத்துடன் வன்முறையும் அரச அடக்குமுறையும் எவ்விதத் தணிவுமின்றித் தொடர்ச்சியாக நிலவி வருகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA)
தீவிரமடைந்து வந்த தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்டச் சூழலில், இலங்கை அரசாங்கம் மிகவும் கடுமையான, அடக்குமுறைத் தன்மை மிக்க சட்டமான ‘1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தை’ (PTA) இயற்றியது. இந்தச் சட்டம், சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு முரணானதும், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் கோட்பாடுகளுக்கு எவ்வகையிலும் ஒவ்வாதவையுமான விதிகளைக் கொண்டிருந்தது. பிற சட்டங்களின் விதிகளிலிருந்து கணிசமாக வேறுபடுகின்ற பின்வரும் அம்சங்களை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது:
- தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் அனுமதிக்கப் பட்டதோடு, அவை நியாயப்படுத்தவும் பட்டன. சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கும் அரச இயந்திரத்திற்கும் வழங்கப்பட்டிருந்த வரம்பற்ற அதிகாரங்கள் எப்படிப்பட்டவை என்றால், அரசினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கைதுகளோ, தடுத்துவைத்தல் நடவடிக்கைகளோ எவையும், அவை நிகழ்ந்த உடனேயே எந்தவொரு நீதித்துறைசார்ந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்க முடியாத ஒரு நிலையைக் கொண்டவையாக இருந்தன என்பதுதான். சாதாரண சட்டத்தின் கீழ் ஒரு நபர் தான் கைது செய்யப்படுவதற்கான காரணங்களை அறிந்துகொள்ள உரிமை உண்டு; ஆனால் இச்சட்டத்தின் கீழ், வெறும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே ஒருவரைக் கைது செய்வது நியாயமானதாகக் கருதப்பட்டது.
- கைது செய்தலை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த பரந்த அதிகாரங்கள், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விடயங்களில் நீதவான் நீதிமன்றங்களுக்கிருக்கும் (Magistrate Courts) ஒன்றில் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தின அல்லது அவற்றை முடக்கின. சாதாரண சூழலில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்; ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தக் கால வரையறை ஆரம்பத்தில் 72 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தரத்திற்குக் குறையாத அதிகாரியொருவரால் பிறப்பிக்கப்படும் உத்தரவின் மூலம், அந்த நபர் மூன்று மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட முடியும் என்று அது மாற்றப்பட்டது. இத்தகைய உத்தரவுகள் பெரும்பாலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, ஒருவரை பதினெட்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கும் நிலை ஏற்பட்டது. சாதாரண சட்ட நடைமுறையிலிருந்து விலகி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகள், கைதிகள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறைவைக்கப்படுகின்ற ஒரு நிலையை உருவாக்கின.
- பிணை வழங்குவதற்கான நீதிபதிக்கிருந்த அதிகாரமும் குறைக்கப்பட்டது.
- கைது செய்யப்படுபவர்களை, காவல் நிலையச் சிறை அறைகள், இராணுவ முகாம்கள் அல்லது சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் என்று, அவர்களைக் கைது செய்யும் அதிகாரிகள் தாம் விரும்பும் எந்த இடத்திலும் தடுத்து வைக்க முடிந்தது. இதனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் உறவினர்களோ அல்லது வழக்கறிஞரோ யாருமே அவர்களைச் சந்திக்க இயலாத நிலை இருந்தது. இக்காலகட்டத்தில் சந்தேக நபரும் அவரது குடும்பத்தினரும் கடுமையான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர்.
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நடைபெறும் வழக்கு விசாரணைகள் ஜூரி (Jury) முறை இன்றி, ஒரு தனி நீதிபதியின் முன்னிலையிலேயே நடத்தப்படுகின்றன. சந்தேக நபர் அளிக்கும் வாக்குமூலத்தை ஏற்பது என்பது சாதாரண சட்ட நடைமுறையிலிருந்து மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். ஒரு காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சந்தேக நபருக்கு எதிரான வழக்கு முன்னெடுக்கப்படுகிறது; இத்தகைய வாக்குமூலங்கள் பெரும்பாலும் கட்டாயத்தின் பேரிலேயே பெறப்படுகின்றன. ஆனால் அத்தகைய கட்டாயப்படுத்தல் நிகழ்ந்ததை நிரூபிக்கும் கடினமான பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பிலேயே (அதாவது தற்காப்புத் தரப்பினிடமே) சுமத்தப்படுகிறது. ஆனால் தண்டனைச் சட்டத்தின் (Penal Code) கீழோ இதற்கு மாறாக, வாக்குமூலங்கள், பிற ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
- குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழர்களாக இருக்கும்போது, நாட்டின் சாதாரண சட்டங்களின் (தண்டனைச் சட்டம்) கீழ் விசாரிக்கப்படக்கூடிய குற்றங்களும் கூடப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழேயே விசாரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தகவலை மறைத்தல் போன்ற மிகச் சாதாரண சிறிய குற்றச் செயலுக்காகக் கூட, சந்தேக நபர் ஒருவர் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படக் கூடிய நிலை ஏற்படுகிறது.
அவசரகால விதிமுறைகள் (Emergency Regulations)
கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆட்சி நடைபெற்று வந்தாலும், இவ்விதிமுறைகளின் ஒட்டுமொத்தத் தாக்கத்தை, (நாட்டின் ஏனைய) பொதுமக்களை விடத் தமிழர்களே அதிகம் உணர்கின்றனர். வடக்கு-கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் தம்மைக் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது போன்ற சில அவசரகால விதிமுறைகள், முக்கியமாகத் தமிழர்களுக்கு எதிராகவே உருவாக்கப்பட்டுள்ளன. தற்போதைய அவசரகாலச் சட்டங்களின் கீழ், சந்தேக நபர் ஒருவரை விசாரணையின்றி மூன்று மாதங்கள் வரை தடுத்து வைக்கும் அதிகாரம் உள்ளதால், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை தன்னிச்சையாகக் கையாளப்படக்கூடிய ஒன்றாகவே உள்ளது. அவசரகால விதிமுறைகளான 17/1, 17/2, 19/1, 23/1 ஆகிய விதிகள் தமிழ்க் கைதிகளைப் பாதிக்கின்ற மிகக் கடுமையானதும், நியாயமற்றதுமான அத்தகைய விதிகளில் சிலவாகும்.
சாதாரண சட்ட நடைமுறைகளில் உள்ள கால வரம்புகளைத் தவிர்ப்பதற்காக, அவசரகால விதிமுறைகளும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA) பயன்படுத்தப்படுகின்றன. வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே தமிழ்ச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுவது, இந்த அவசரகால விதிமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்க் கைதிகளின் தற்போதைய நிலை
13 செப்டம்பர் 1994 நிலவரப்படி, தடுப்பு முகாம்களிலும் மறுவாழ்வு மையங்களிலும் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை பின்வருமாறு:
| சிறைச் சாலை | கைதிகள் தொகை |
| களுத்துறை | 67 |
| மகசீன் | 245 |
| திருகோணமலை (பாதுகாப்பு ஒருங்கிணைப்புப் பிரிவு) | 240 |
| வெலிக்கடை (பெண்கள்) | 02 |
| மட்டக்களப்பு | 80 |
| மட்டக்களப்பு (பொலிஸ்) | 09 |
| 4ஆவது மாடியும் பிற இடங்களும் | 100 |
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார நிலை
குடும்ப மறுவாழ்வு மையம் (FRC) என்பது கொழும்பில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பாகும். இது இனம், மதம் அல்லது சாதி என்ற பாகுபாடின்றி, சமூக-அரசியல் கொந்தளிப்புகளால் ஏற்படும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து வருகிறது. இவ்வாறான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுள் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், விதவைகள், போர்க் காலக் குழந்தைகள், நலவாழ்வு மையங்களிலும் பிற இடங்களிலும் வசிக்கும் இடம்பெயர்ந்த நபர்கள் ஆகியோர் அடங்குவர். FRC ஓர் அரசியல் சார்பற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் மருத்துவ அதிகாரியுடனான (MO) தனிப்பட்ட உரையாடல்கள், இலங்கையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் சுகாதார நிலை குறித்த பின்வரும் தகவல்களைத் தருகின்றன.
1991 முதல், மருத்துவ அதிகாரி 600க்கும் மேற்பட்ட சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்துள்ளார். அவர்களில் இலங்கையின் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்; இவர்கள் அரசதரப்பாலும் ஆயுதமேந்திய குழுக்களாலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். FRCயில் பரிசோதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அரச ஆயுதப் படைகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆண்களதும் பெண்களதும் ஆரோக்கிய நிலை என்பது பல காரணிகளைச் சார்ந்ததாக உள்ளது: அதாவது, வழங்கப்படும் சித்திரவதைகளின் வகை, வழங்கப்படும் கால அளவு, சித்திரவதைக்கும் மருத்துவப் பரிசோதனைக்கும் இடையிலான கால இடைவெளி, விடுதலைக்குப் பிறகான அவர்களின் உளவியல், சமூக வாய்ப்புகள், அவர்களின் வயது மற்றும் மேலதிகமாக அந்த மக்கட் பிரிவினர்க்கே உரிய (வயது, பால், கல்வி, இடப்பெயர்வு, பிறப்பு – இறப்பு வீதம் போன்ற) வாழ்வியல் நிலமைகள் என்பவைகள் ஆகும்.
FRCஇல் சித்திரவதையிலிருந்து தப்பியவர்களில் பல்வேறு வயதுடையவர்கள் காணப்பட்டனர்; இவர்களில் மிக இளையவர்கள் 17 வயதுடையவர்களாகவும், மூத்தவர்கள் 62 வயதுடையவர்களாகவும் இருந்தனர்; எனினும், பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவே இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருந்தபோதிலும், சில பெண்களும் காணப்பட்டனர். சித்திரவதைக்குள்ளானவர்களில் 1987 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலும் சிங்களவர்களும், 1990க்குப் பின்னான காலங்களில் பெரும்பாலும் தமிழர்களும் அடங்குவர். இவர்களில் பெரும்பாலானோர் எவ்வித வேலையிலோ அல்லது சுயதொழிலிலோ ஈடுபடாதவர்களாக இருந்தனர். பல்வேறு வகையான வேதனைதரும் உடல் ரீதியான வன்முறை நிறைந்த சித்திரவதைகளுக்கு இவர்கள் உள்ளாக்கப்பட்டார்கள். இவர்களின் கண்கள் கட்டப்பட்டு, கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டன. மேலும், பொல்லுகள் (Batons), துப்பாக்கிகளின் பின்பகுதி, சிமெண்ட் நிரப்பப்பட்ட எஸ்லோன் (S-lon) குழாய்கள் போன்ற மழுங்கிய பொருட்களைக் கொண்டு இவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் பாதங்கள், மூட்டுகள், மார்பு, முதுகு, தலை போன்ற பகுதிகளில் நேரடியாகவோ அல்லது விசையைப் பரவலாகச் செலுத்துவதற்காக ஒரு புத்தகம் அல்லது தலைக்கவசத்தை (Helmet) அதன் மேல் வைத்துக்கொண்டோ அடிக்கும் சித்திரவதை முறை கையாளப்பட்டது.
பலர் தங்கள் கால்களில், கட்டைவிரல்களில் அல்லது கால்களில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு ‘சப்மரினோ’ (Submarino) முறை மூலம் சித்திரவதை செய்யப்பட்டனர். ‘சப்மரினோ’ முறையில் ‘உலர்’ மற்றும் ‘ஈர’ முறைகள் அடங்கும்: உலர் முறையில், கைதியின் தலையில் ஒரு பை (Shopping Bag) மாட்டப்பட்டு கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கட்டப்படும் (சில சமயங்களில் மிளகாய் அல்லது மிளகுத் தூள் கூட உள்ளே செலுத்தப்படும்); ஈர முறையில், கைதியின் தலை (பொதுவாக அசுத்தமான) நீர் நிரம்பிய கலன்களில் அமிழ்த்தப்படும். இச்செயல்முறைகள் மூச்சுத் திணறல் ஏற்படும் வரையிலும், சில சமயங்களில் மூச்சுத் தடைபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் வரையிலும் தொடரப்பட்டன.
‘தர்ம சக்கரம்’ (Dharma Chakra) எனப்படும் சித்திரவதை முறையில், பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் ஒன்றாகக் கட்டப்பட்டு, அந்த உறுப்புகளுக்கும் உடலுக்கும் இடையில் ஒரு கம்பு அல்லது தடி நுழைக்கப்படும். அந்தக் கம்பின் இரு முனைகளும் இரண்டு மேஜைகளின் விளிம்புகளில் வைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் சுழற்றப்பட்டு உடல் முழுவதும் தாக்கப்படுவார்.
பல்வேறு வகையான பாலியல் வன்முறை முறைகளும் கையாளப்பட்டன. இதில் பிறப்புறுப்புகளைத் தாக்குதல் மற்றும் யோனிப் பகுதிக்குள் பாட்டில்கள் அல்லது பிற பொருட்களைச் செருகுதல் ஆகியவை அடங்கும். சிறுவர்கள் மீண்டும் மீண்டும் சுயஇன்பம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். காதுகளில் ஓங்கி அறைதல் (‘டெலிபோன்’ முறை என்று அழைக்கப்பட்டது), எரியும் சிகரெட்டுகளால் சுடுதல் மற்றும் நகங்களில் ஊசியால் குத்துதல் ஆகியவை பிற சித்திரவதை முறைகளில் அடங்கும். சித்திரவதையிலிருந்து தப்பியவர்கள், மற்றக் கைதிகளுக்கு இத்தகைய சித்திரவதை செய்யப்படுவதையும் அவர்கள் கொல்லப்படுவதையும் நேரில் காணுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கைதிகளுக்கு இத்தகைய சித்திரவதைகள் சராசரியாக மூன்று மணிநேர அமர்வுகளாக நடத்தப்பட்டன. FRC என வகைப்படுத்தப்பட்டவர்கள் அனுபவித்த சித்திரவதையின் மொத்தக் கால அளவு சில மணிநேரங்கள் முதல் மூன்று வாரங்கள் வரை இருந்தது; சராசரி கால அளவு ஐந்து நாட்களாகும்.
சித்திரவதைக்குள்ளானவர்கள் சித்திரவதையை அனுபவித்ததற்கும், FRCஇல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கும் இடையில் மூன்று மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடந்துள்ளன. சராசரியாக, சித்திரவதைக்குள்ளானவர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, FRCஇல் பரிசோதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைகளின் போது, அவர்கள் தங்கள் உடல்நலம் தொடர்பான பல்வேறு குறைபாடுகளைத் தெரிவித்திருந்தனர். அவற்றில், நாள்பட்ட தலைவலி, உடல் எடை குறைவு, தூக்கமின்மை, கெட்ட கனவுகள், பசியின்மை, மார்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி மற்றும் நடக்கும்போது பாதத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் வலி, சோர்வுநிலை மற்றும் மனச்சோர்வு, எளிதில் எரிச்சலடைதல், பாலியல் நாட்டமின்மை, பார்வைக் குறைபாடு, சொறி (Scabies) மற்றும் பூஞ்சைத் தொற்று போன்ற தோல் நோய்கள் என்பனவும் அடங்கும்.
உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளானவர்களின் எதிர்கால உளவியல் நிலை குறித்த கலவையான கண்ணோட்டங்கள் உள்ளன. பலர் தங்கள் திருமண வாழ்க்கையில் சிக்கல்களையும், வேலைவாய்ப்பைப் பெறுவதிலும் கல்வியைத் தொடர்வதிலும் சிரமங்களையும் எதிர்கொள்வதாகக் குறிப்பிடுகின்றனர். தாங்கள் முன்பு வசித்த இடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் கைது செய்யப்படலாம், சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது. அவர்களின் எதிர்கால உளவியல் நிலை பெரும்பாலும் சக கிராமத்தினர் அவர்கள் மீது கொண்டுள்ள மனப்பான்மையையே சார்ந்திருக்கிறது; அவர்களுக்குக் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மீண்டு வருவதை எளிதாக்க FRC ஊழியர்கள் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை, உளவியல் ஆலோசனை, உடலியக்கச் சிகிச்சை (Physiotherapy), தளர்வுச் சிகிச்சை (Relaxation Therapy) ஆகியவை இவற்றில் அடங்கும். சமூக-பொருளாதார ரீதியாக மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல், சுயதொழில், சட்டச் சேவைகள் ஆகியவற்றிற்கான பரிந்துரைகளையும், சுயதொழிலுக்கான திறன் பயிற்சியையும் FRC வழங்குகிறது.
இருப்பினும், சித்திரவதை அனுபவத்திலிருந்து மீள்வது மிகவும் மெதுவான-காலமெடுக்கும்- செயல்முறையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தச் சித்திரவதை அனுபவம் என்பது, பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நீண்டகால அடிப்படையில் தன்னம்பிக்கை இழப்பு, சுதந்திரமாகச் செயல்படுவதில் சிரமம் போன்ற சிக்கல்களை உருவாக்குகிறது. இலங்கையின் அரசியல் விவாதங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த துயரங்கள் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும்.



