ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல
அறிமுகம்
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அரசியல் யாப்புச் சீர்திருத்தம் (Constitutional Reform) மூலம் தீர்வு செய்யும் முயற்சிகள் 1920களில் ஆரம்பித்தன. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு (Power Sharing) எனும் முன்மொழிவு 1926 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. அவ்வாண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ‘அதிகாரப் பகிர்வு’ எனும் விடயப்பொருள் குறித்த ஆவணங்கள் (Documents) எழுத்து வடிவில் அறிக்கைகள், மனுக்கள், அரசியல் யாப்பு வரைவுகள், விசாரணை அறிக்கைகள் எனப் பல வடிவங்களில் வெளிவந்தன. காலனியகாலச் சட்ட சபைகளிலும் சுதந்திரத்திற்குப் பிந்திய காலப் பாராளுமன்றத்திலும் இவ்விடயம் தொடர்பான பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அரசியல் யாப்புச் சட்டங்கள் 1931, 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வாறாக உருவாக்கப்பட்ட பற்பல ஆவணங்கள் ஆவணக் காப்பகங்களிலும், தனியார் சேகரிப்புகளிலும் சிதறிக் கிடக்கின்றன. இவற்றுள் மிக முக்கியமான ஆவணங்களைத் தொகுத்துப் பதிப்பித்து ஒரு தொகுப்பு நூலாக வெளியிடும் பணியினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (கொழும்பு), பெர்கோவ் பவுண்டேஷன் (பெர்லின்) என்பன இணைந்து நிறைவு செய்தன. இத்தொகுப்பு நூல் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இத்தொகுப்பு நூலைப் பதிப்பித்தோரான நான்கு சட்ட அறிஞர்கள் குழு இத்தொகுப்பு நூலுக்கு ஓர் ஆய்வுரையை ‘Introduction’ என்ற தலைப்பில் எழுதி நூலில் சேர்த்துள்ளது. இந்த ஆய்வுரையின் தமிழாக்கமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. அருவமான கோட்பாட்டு விளக்கங்களாக அமைந்துள்ளன மூலக்கட்டுரையினை இயன்றளவு எளிமைப்படுத்திய மொழியில் தமிழ்ப்படுத்தியுள்ளோம். மூலக்கட்டுரையின் கருத்துகள் தொகுத்தும் சுருக்கியும் தரப்பட்டுள்ளன.

அரசுக்கட்டமைப்பை மாற்றுதல்
1926 முதல் 2008 வரை, ஏறக்குறைய 80 ஆண்டுகள் காலத்தில் இலங்கையில் அதிகாரப் பகிர்வு (Power Sharing) என்பது குறித்து வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிக்கருத்தாக (Theme) இலங்கையின் அரசுக் கட்டமைப்பை மாற்றுதல் (Reconstitution of the State) எனும் விடயம் அமைந்திருப்பதைக் காணமுடியும். இலங்கைக்குச் சுயாட்சியை (Self Rule) வழங்குதல் பற்றிய விவாதம் இருபதாம் நூற்றாண்டின் முன் அரைப்பகுதியில் (1926 – 1947) இடம்பெற்ற போது, இலங்கை மக்கள் பல்லினங்களைச் சேர்ந்தவர்களாகவும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. இலங்கையின் இன, மொழி, சமயப் பண்பாட்டு பன்மைத்துவம் (Diversity) முக்கியமானது என்பதும் அவ்விவாதங்களில் எதிரொலித்தது. அரசியல் யாப்புகளை வரைவதிலும், ஆலோசனைகள் வழங்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்கள் எல்லாச் சமூகப் பிரிவினரையும் திருப்திப்படுத்தக் கூடிய சமத்துவமும், நீதியுமுடைய அரசியல் கட்டமைப்பை உருவாக்குதில் கவனம் செலுத்தினர். ஆயினும், இலங்கைக்குச் சுயாட்சி கிடைத்தது. இலங்கையின் பன்மைத்துவம் தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காணப்படவில்லை. அச்சவால்கள் இன்றும் தொடர்கின்றன.
The constitution of the state and constitutional reform has been a matter of public debate and public interest since colonial times in the first half of the last century, one of the main issues was the question of self – rule and self – government for the then crown colony of Ceylon. Yet, no less important were issues pertaining to the nature of the new state that was to be created and how such a new state could accommodate the ethnic and religious diversity that was characteristic of colonial Ceylon. While the self rule has been resolved, the challenges of accommodating diversity remain unresolved. (பக். 16)
இலங்கை சுதந்திரத்தை பெற்ற போது, சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்பது இலங்கையின் அவப்பேறு ஆகும். ஆயினும் அக்காலத்தில் (1926 – 1947 காலத்தில்) நடைபெற்ற விவாதங்கள் வீண் போகவில்லை. அக்காலத்தில் பல்வேறு இனக்குழுமங்களாலும், சமயப் பிரிவினர்களாலும் இலங்கையின் அரசுக் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும், அதிகாரப் பகிர்வு (Power Sharing) எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்துப் பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவை மூலாதாரமான ஆவணங்களாகவும், அக்கால நிகழ்வுகள் – சிந்தனைப் போக்குகள் பற்றிய சான்றாதாரங்களாகவும் விளங்குகின்றன. இந்த ஆவணங்களில் முக்கியமானவற்றைத் தொகுத்து தருவதாக இந்நூல் அமைந்துள்ளது. இம்முயற்சி போற்றிப் பாராட்டப்படத்தக்கது.
நூலின் நோக்கம்
இத்தொகுப்பு நூலைத் தொகுப்பதற்கான தேவையையும் முக்கியத்துவத்தையும் பதிப்பாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு விளக்கிக் கூறியுள்ளனர்.
- இற்றைய நாளிலும் எதிர்காலத்திலும் அதிகாரப் பகிர்வும் அரசியல் யாப்பு திருத்தமும் பற்றிய உரையாடல்களுக்கு ஆதரமாக இத்தொகுப்பில் உள்ள ஆவணங்கள் அமையும்.
- 1920 முதல் அதிகாரப் பகிர்வு தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், மனுக்கள் என்பன பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை ஒரு சேரத் தொகுத்து இந்நூல் வழங்குகிறது.
- அக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை அவற்றின் வரலாற்றுச் சூழமைவில் (Historical Context) வைத்துப் பார்க்க வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் குறித்து முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை அக்கால சமூக – அரசியல் பின்புலத்தில் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய புரிதலை வாசகர்களுக்கு வழங்குவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளது.
- இத்தொகுப்பு நூலைப் படிப்பதன் மூலம் இற்றை நாளில், அரசியல் யாப்புகளை வரைதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடையாளம் காணுதல் முடியும். எதிர்காலத்திலும் எழப்போகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணவும், அவற்றைத் தீர்வு செய்யவும் இந்த ஆவணங்கள் உதவக்கூடியன.
அரசியல் யாப்புக் கோரிக்கைகள் கடந்த 80 ஆண்டுக்காலத்தில் எவ்வாறு காலத்திற்கேற்ப மாற்றமுற்று வந்தன என்பதை இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஆவணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவற்றின் மூலம் இனமுரண்பாடுகளின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
கடந்த காலத்தில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக பலவகை நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைத்தல், சர்வகட்சி மாநாடு நடத்துதல், நிபுணர் குழுக்களை அமைத்தல் போன்ற நடைமுறைகள் சில உதாரணங்களாகும். ஆயினும் இந்த நடைமுறைகள் எவையும் இனக்குழுமங்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதில் வெற்றியடையவில்லை. இரு தடவைகளில் இந்தியாவின் தலையீடு வெளிப்படையான முறையில் இடம்பெற்றது. 1983இல் இணைப்பு ‘C’ (Annexure C), 1987இல் மாகாண சபை முறையை அறிமுகம் செய்தல் என்பன இந்தியாவில் இருந்து எழுந்த வெளித் தலையீடுகள் ஆகும்.
சுதந்திரத்திற்குப் பிந்திய கால விவாதங்கள்
சுதந்திரத்திற்கு முந்திய காலத்தில் அரசியல் யாப்பைத் திருத்துதல் தொடர்பான விவாதம், ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு என்பதாகவே அமைந்தது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிந்திய விவாதங்கள் தன்மையில் வேறுபட்டனவாக இருந்தன. தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, சமஷ்டிக் கோரிக்கை என்பன முக்கியம் பெற்றன.
அ. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை
இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்குச் சில ஆண்டுகள் முன்பு சோல்பரி ஆணைக்குழுவிடம் ஜி.ஜி. பொன்னம்பலம் அரசியல் யாப்புத் திருத்தம் பற்றிப் பல சிபார்சுகளை இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் (ACTC) சார்பில் முன்வைத்தார். அப்போது அவர் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை (Right to Self-Determination) உள்ளது என்ற விடயத்தை அழுத்திக் கூறினார். பின்னர் சமஷ்டிக் கட்சி தமிழ் பேசும் மக்கள் (Tamil Speaking People) சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற கருத்தை இன்னும் கூடிய ஆணித்தரமான வடிவில் முன்வைத்தது.
ஆ. சமஷ்டிக் கோரிக்கை நிராகரிக்கப்படுதல்
சமஷ்டிக் கட்சி முன்வைத்த சமஷ்டிக் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் 1972 அரசியல் யாப்பு இலங்கையை ஒற்றையாட்சி அரசாகப் பிரகடனம் செய்தது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தின் அடிப்படையிலான பிரிவினைவாத தனி அரசுக் கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டது.
தமிழர் தரப்பின் மேற்படி கோரிக்கைகளை ஏற்க சிங்களத் தரப்பு மறுத்தது. தமிழர்களுக்கு கொடுக்கும் சலுகைகள் எவையோ அவற்றோடு திருப்திப்பட வேண்டுமே ஒழிய உரிமைகள் என்று எதனையும் கொடுக்க முடியாது என்ற பதில் பெரும்பான்மை இனமான சிங்களத் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
தமிழர்கள் தமக்குச் சுயாட்சி (Autonomy) வேண்டும் என்பதை நியாயப்படுத்தும் வகையில் வாதங்களை முன்வைத்தனர். பெரும்பான்மைவாத அரசு (Majoritarian State) பலவிடயங்களில் பாரபட்சம் காட்டித் தமிழினத்தை ஓரம் காட்டி வருவது எடுத்துக் காட்டப்பட்டது. குறிப்பாக, பொதுத்துறை உத்தியோகங்களிலும் வேலை வாய்ப்பிலும் தமிழர்கள் ஓரம் கட்டப்படுதல், தமிழ் மொழி உரிமைகள் மறுக்கப்படுதல், வளங்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை என்பன எடுத்துக்காட்டப்பட்டன. இவை யாவற்றையும் நிராகரித்த சிங்களவர்களில் பலர் ‘தமிழர்கள் காலனிய ஆட்சியில் சலுகைகள் பெற்ற சிறுபான்மையினர்’ (Privileged Minority) எனக் குறிப்பிட்டதோடு, அரசின் பாரபட்சமான செயற்பாடுகளை நியாயப்படுத்தினர்.
லியானார்ட் வூல்வ், எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க என்னும் இருவரும் இலங்கைக்குச் சமஷ்டி முறையே பொருத்தமானது என்று கூறினர். 1920களில் கண்டிச் சிங்களவர்கள் இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறை தேவை என வாதிட்டனர். ஆனால், அக்காலத்தில் தமிழர்கள் சமஷ்டிக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை. 1950களிலேயே தமிழர்கள் சமஷ்டிக் கோரிக்கை முன்வைத்து, இலங்கையில் சமஷ்டி அரசுமுறையை ஏற்படுத்த வேண்டும் என இயக்கம் நடத்தினர். அவ்வேளை சிங்களவர்கள் தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை எதிர்க்க ஆரம்பித்தனர்.
அதிகாரப் பகிர்வு பற்றிய விவாதங்கள்
காலனிய ஆட்சிக்காலத்தில் சட்டசபைகளில் (Legislative Councils) தமிழ்ப் பிரதிநிதிகள் அதிகாரப் பகிர்வு பற்றிய கோரிக்கையைப் பற்றி எடுத்துக் கூறினர். அவர்கள் சமநிலைப் பிரதிநிதித்துவம் (Balanced Representation) வேண்டும் எனக் கோரினர். 1924 மனிங் அரசியல் யாப்பின் பயனாக சட்டசபையில் 8 சிங்களப் பிரதிநிதிகள் இருந்தனர். அச்சபையில் ஏனைய சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும் இருந்தது. 37 பேர் கொண்ட அச்சட்டசபையில் (Legislature) பெரும்பான்மை இனம் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. 1930களிலும் டொனமூர் கால அரசுச்சபையில் (State Council) இந்த விவாதம் தொடரப்பட்டது.
1940களில் அதிகாரப் பகிர்வு விவாதத்தின் போக்கில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. தமிழ்த் தலைவர்கள் அக்காலத்தில் புவியியல் சார் சுயாட்சி (Geographical Autonomy) என்ற கருத்தை முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில் மத்திய சட்டசபையிலும், நிர்வாக நிறுவனங்களிலும் தமிழர்களின் பங்கேற்பு, உரிமைகள் (Tamil Participation Rights at the Centre) என்பனவற்றுக்கு தமிழ்த்தலைவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1950களிலும் அதற்குப் பின்னரும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியுடைய அரசியல் அலகு (Autonomous Tamil Unit in the North and East) அமைக்கப்பட வேண்டும். அந்த அலகின் ஊடாக அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அரசியல் தலைவர்களால் முன்வைக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் தமிழ்த் தலைவர்களில் ஒரு பகுதியினர் தனி அரசு (Separate State) என்ற கோரிக்கையை வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற வடிவில் முன்வைத்தனர். அண்மைக்காலத்தில் (1990களில்) தமிழ் – முஸ்லிம் உறவுகளில் விரிசல் ஏற்பட்டதையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகச் செறிந்து வாழும் பகுதிகளில் (குறிப்பாக கிழக்கு மாகாணத்தில்) முஸ்லிம் அடையாள வலியுறுத்தல் எழுந்ததையும் கட்டுரையாளர்கள் குறிப்பிட்டு அதிகாரப் பகிர்வு சிக்கலான ஒரு விடயமாகியது எனவும் குறிப்பிடுகின்றனர். இதனிடையே இந்திய வம்சாவளித் தமிழர் (Indian Origin Tamils – IOT) தமது பண்பாட்டு உரிமைகளைக் கருத்தில் கொண்டு நிலப்பரப்புச் சாராத சபை (Non-Territorial Assembly) அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைகளில் சில ‘APRC’ செயல் முறையின் ஊடாக அதன் நிபுணர் குழுவால் (Experts Panel) ஏற்கப்பட்டன எனவும் கட்டுரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர் (பக். 18).
தவறவிடப்பட்ட வாய்ப்புகள்
இலங்கையில் அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் அதிகாரப் பகிர்வை வழங்கித் தமிழர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எத்தனையோ அரிய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவை தவற விடப்பட்டன. அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகளால் படிப்படியாக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த வரலாற்று உண்மையை தெளிவுபடுத்துவனவாய் இத்தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ள ஆவணங்கள் விளங்குகின்றன. இன்றுள்ள அரசியல் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கடந்து போன காலப்பகுதிகளின் அரசியல் தலைவர்கள் எதிர் கொண்ட சவால்களை விடப் பெரியன; சிக்கலானவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் தரப்பினர்களிடையே கடும் போக்காளர்களின் கை ஓங்கியதால் பிரச்சினைகள் இலகுவில் தீர்க்க முடியாதவை ஆயின (பக். 18).
1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி முறை அரசமைப்பு வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தார். அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு அப்போதுதான் இலங்கை திரும்பி வந்திருந்தார். அவருக்குப் பின்னர் டொனமூர் ஆணைக்குழு 1927இல் இலங்கைக்கு வந்து அரசியல் சீர்திருத்தம் பற்றிய விசாரணைகளை நடத்தியது. அப்போது கண்டிச் சிங்களவர் இலங்கை ஐந்து பிராந்தியங்களை (Regions) கொண்ட சமஷ்டி அரசாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வாதிட்டனர். 1930களின் தொடக்க ஆண்டுகள் வரை கண்டியச் சிங்களவர் கோரிக்கை முக்கிய பேசுபொருளாக இருந்தது. பின்னர் 1930களின் பிற்பகுதியில் லியனார்ட் வூல்வ் (Leonard Woolf) சுவிஸ் மாதிரியிலான (Swiss Model) சமஷ்டி முறையினை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படலாம் என முன்மொழிந்தார். அவர் சுவிற்சர்லாந்து நாட்டின் சமூகக் கட்டமைப்புக்கும் இலங்கை சமூகத்தின் கட்டமைப்புக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு சில ஆண்டுகள் முன்பு இலங்கையின் அரசுக் கட்டமைப்பைத் திருத்துதல் தொடர்பாக முக்கியமான சிபார்சுகளை இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது.
- பன்மைத்துவம் (Pluralism)
- தேசிய இனங்களின் இருப்பை அங்கீகரித்தல்
- மொழி, பண்பாட்டு பன்மைத்துவத்தை மதித்தல்.
என்னும் கருத்துகளின் அடிப்படையில் இச்சிபார்சுகள் அமைந்தன.
இவ்வாறு அதிகாரப் பகிர்வும், சமஷ்டி முறையிலான தீர்வும் குறித்து பல யோசனைகள் முன்மொழியப்பட்ட போதும், சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியல் யாப்பு மத்தியமயப்படுத்தப்பட்ட அதிகாரங்களையுடைய ஒற்றையாட்சி மாதிரியில் (Centralised Unitary Model) வடிவமைக்கப்பட்டது. அந்த அரசியல் யாப்பில் (சோல்பரி அரசியல் யாப்பு) புவிப் பிரதேசங்களின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுக்கான (Territorial Power Sharing) எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.
சுதந்திரத்தின் பின்னர் 1950களில் சமஷ்டிக் கட்சி உருவாக்கம் பெற்றது. அக்கட்சியின் தோற்றத்தின் பின்னர் அரசமைப்பை மாற்றியமைத்தல் (State Reform) என்பது பற்றிய பொதுவிவாதத்தின் (Public Debate) தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. சமஷ்டிக் கட்சி இலங்கையின் அரசமைப்பை சமஷ்டி அரசமைப்பாக மீள் கட்டமைத்தல் (Reconstitution of the Sri Lankan State) என்றும் யோசனையை முன்வைத்து வெளிப்படையான பிரசார இயக்கத்தினை மேற்கொண்டது. பின்னர் எல்லாத் தமிழ்க் கட்சிகளும் சமஷ்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை 1948இல் பறிக்கப்பட்டது. 1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1950களில் இனத்துவ வன்முறைகள் (Ethnic Violence) தொடர்ந்து இடம்பெற்றது. இவை போன்ற நிகழ்வுகள் 1950களைக் கொந்தளிப்பு மிக்க காலமாக ஆக்கின. இலங்கை அரசுக்கட்டமைப்பிலும் அரச நிறுவனங்களின் ஒழுங்கமைப்பிலும், அடிப்படையான மாற்றங்கள் தேவை; அரசமைப்புச் சீர்திருத்தம் (Constitutional Reform) தேவை என்பன உணரப்பட்டன. 1950களிலும், 1960களிலும் இலங்கையின் அரசுக்கட்டமைப்பை மாற்றுதல் (Re – Structuring the State) தொடர்பாகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அம்முயற்சிகளுள் பின்வரும் இரு உடன்படிக்கைகள் முக்கியமானவை.
- பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை
- சேனநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை
ஆயினும் இந்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த முயற்சிகள் வீணாயின.
1972இன் அரசியல் யாப்பு ஒரு திருப்புமுனையாகும். தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் யாப்பினை வரையும் செயல்முறையில் பங்குபற்றாது, வெளிநடப்புச் செய்தன. 1972 அரசியல் யாப்பு முந்திய யாப்பில் இருந்ததை விடத் தீவிரமான மத்தியப்படுத்தலையும் ஒற்றையாட்சி இயல்புகளையும் உடைய ஏற்பாடுகளைக் கொண்ட இலகுவில் மாற்றமுடியாத அரசியல் யாப்பாக அமைந்தது. சமஷ்டிக் கட்சி சமர்ப்பித்த சமஷ்டி அரசை நிறுவும் சிபார்சை நிராகரித்த அன்றைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனக்கிருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்து 1972 அரசியல் யாப்பை சட்டமாக நிறைவேற்றியது. இந்த அரசியல் யாப்பு தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத அரசியல் யாப்பு ஆகும் (பக். 18). தமிழ்ப்பகுதியில் தனிநாட்டைக் கோரும் எதிர்ப்பு படிப்படியாக மேற்கிளம்பியது. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டால் தனி அரசை (Separate State) அமைப்பதைப் பிரகடனப்படுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனிநாட்டைக் கோரிய இயக்கங்களின் செயற்பாடுகள் 1970களில் தமிழரிடையே அதிகரித்தன. அரசுக்கட்டமைப்பை மாற்றக்கோரும் இச்செயற்பாடுகளை அன்றைய அரசாங்கமும், அடுத்துவந்த அரசாங்கங்களும் அடக்குவதற்காக வன்முறையை உபயோகித்தன. இதன் விளைவாக நாட்டில் உருவான வன்முறைச் சூழல் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாராளுமன்றத்தில் முன்னரைவிடப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த அரசாங்கம், 1978இன் அரசியல் யாப்பு மூலம் முன்னைய அரசாங்கம் செய்ய முடியாதவற்றைச் செய்து நிறைவேற்றியது. அந்த அரசியல் யாப்பு பக்கச்சார்பு (Partisan) உடையது. நாட்டின் அனைத்து மக்கள் பிரிவினரதும் அங்கீகாரத்தைப் பெற்ற அரசியல் யாப்பாக அது அமையவில்லை. அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான உறுப்புரைகளை அரசியல் யாப்பில் உள்ளடக்கியதோடு, மனித உரிமை மீறல்களுக்கு நிவாரணம் பெறக்கூடிய நீதித்துறைப் பொறிமுறையை ஏற்படுத்தியதும் இந்த அரசியல் யாப்பின் பாராட்டத்தக்க அம்சமாகும். ஆயினும் மறுபுறத்தில் 1978 அரசியல் யாப்பு எல்லாம் வல்ல அதிகாரமுடைய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை (All Mighty Executive Presidency) உருவாக்கியது. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குப் பொறுப்புச் சொல்லும் தேவையற்றவர் (Unaccountable to Parliament) என்ற நிலைக்கு பலம் உள்ளவராக மாற்றப்பட்டார். அவர் பாராளுமன்றத்தின் ஐந்தில் நான்கு (4/5) பெரும்பான்மைப் பலத்தையும் உபயோகித்து அரசியல் யாப்புத் திருத்தங்களைக் கொண்டு வந்தார். அரசியல் யாப்புத் துஸ்பிரயோகம் தொடரலாயிற்று.
1980களில் மாவட்ட அபிவிருத்திச் சபை (District Development Councils) உருவாக்கப்பட்டன. அதிகாரமற்ற இந்தச் சபைகளால் எவ்வித தீர்வையும் வழங்க முடியவில்லை; நாட்டில் வன்முறைகள் அதிகரித்துச் சென்றன. இன்று முற்றிய நிலையில் உள்ள முரண்பாடுகளினதும், நெருக்கடிகளினதும் தொடக்கப்புள்ளியாக 1983இன் இனத்துவக் கலகம் (Ethnic Riots) அமைந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்திய – இலங்கை உடன்படிக்கையும், மாகாணசபை முறை நடைமுறைப்படுத்தப்படுதலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக இடம்பெற்றன. மாகாணசபை முறை இன்றுவரை தொடர்ந்துள்ளது. அதில் பல குறைபாடுகள் இருந்த போதும் இலங்கையின் பன்மைத்துவத்தை கவனத்தில் கொண்டு அதிகாரப் பகிர்வை (Power Sharing) அரசியல் யாப்பின் ஓர் அம்சமாக மாற்றிய பெருமை இந்த அரசியல் யாப்புத் திருத்தத்திற்குரியது. இலங்கை அரசியல் யாப்புச் சீர்திருத்த வரலாற்றில் 1920களுக்குப் பிந்திய காலத்தில் இடம்பெற்ற முதலாவது முக்கிய திருப்பம் இதுவெனலாம். 1987 இற்குப் பின்னர் அரசுக்கட்டமைப்பை மாற்றுவதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன. இச்சிபார்சுகள் யாவற்றிலும் பாராட்டத்தக்க சிறப்பான கருத்துகளையும் கூறுகளையும் கொண்ட இரு சிபார்சுகள் இக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. 1995ஆம் ஆண்டின் அரசியல் யாப்புத் திருத்தச் சிபார்சுகள் (Proposal for Constitutional Reform – 1995) ஒன்று; மற்றது 2000ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு வரைவு (Draft Constitution – 2000) ஆகும்.
குடிச்சமூகத்தினால் (Civil Society) பல சிபார்சுகள் முன்வைக்கப்பட்டன. அரசியல் யாப்புத் திருத்த இயக்கம் (Movement for Constitution) எனும் அமைப்பு சில சிபார்சுகளை முன்வைத்தது. 1993ஆம் ஆண்டின் மங்கள முனசிங்க பாராளுமன்றத் தெரிவுக்குழு (Mangala Munasinghe Parliamentary Select Committee) அறிக்கையும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
2002 – 2003 காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த அமைதிச் செய்முறை (The Peace Process of 2002 – 2003) ஊடாக புதிய பிரகடனம் (Oslo Communique) வெளியிடப்பட்டது. ‘ISGA’ என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் இடைக்காலச் சுயாட்சி அதிகார அமைப்பு (Interim Self – Governing Authority) என்னும் இடைக்கால ஒழுங்கமைப்புப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட முக்கியமான அனைத்துச் சிபார்சுகளும் இத்தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டு நுண்ணாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அமைதிப் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் கட்சிகளால் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு சிபார்சுகள் இந்நூலில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தொகுப்பு நூலின் இறுதியில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான சிபார்சுகள் என்ற வகையிலான பின்வரும் இரு ஆவணங்கள் சேர்க்கப்பட்டு, அவை பற்றிய பகுப்பாய்வும் தரப்பட்டுள்ளது.
அ. அனைத்து அரசியல் கட்சிகளதும் பிரதிநிதித்துவக் குழு (2006) அறிக்கை (All Party Representative Committee – 2006).
ஆ. 2002 போர்நிறுத்த உடன்படிக்கையின் 5ஆம் ஆண்டு நிறைவின் போது விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை (A Statement of the LTTE in 2007 Marking the Fifth Anniversary of the Ceasefire Agreement).
முக்கியத்துவமுடைய பிரச்சினைகள்
இத்தொகுப்பு நூலில் உள்ளடக்கப்பட்ட அரசியல் யாப்பு ஆவணங்களிலும், அரசியல் ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்ட முக்கியத்துவமுடைய பிரச்சினைகள் (Critical Issues) இத்தொகுப்பு நூல் மூலம் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் நிலைபேறுடைய அமைதியை வேண்டுவோர் இவற்றைப் பற்றி மீளாய்வு செய்வது அவசியமானது.
அ. இலங்கையின் மூன்று அரசியல் யாப்புகள்
1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புகள் இலங்கையின் அனைத்துச் சமூகங்களினதும் ஒப்புதலோடு உருவாக்கப்பட்டவை அல்ல. குறிப்பாக, தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலும், முறைப்படியான சம்மதமின்றியும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
- 1947இல் சோல்பரி அரசியல் யாப்பு தமிழர் மீது திணிக்கப்பட்டது.
- 1972 யாப்பு ஓர் அரசாங்கத்தால் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துத் திணிக்கப்பட்டது.
- 1978 யாப்பு இன்னொரு அரசாங்கத்தால் ஐந்தில் நான்கு (4/5) பெரும்பான்மைப் பலத்தை உபயோகித்துத் திணிக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கட்சிகள் 1972 இலும் 1978 இலும் அரசியல் யாப்புச் செயல்முறையில் இருந்து வெளிநடப்புச் செய்தன (பக். 19). இது பற்றிக் கட்டுரையாளர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.
“Whilst complete consensus is not possible, even sufficient consensus has never been reached in any of the previous constitution making exercises. At the same time, most of the recent attempts at a constitution have been leadership driven, and lacking in inclusivity and public participation.”
ஓர் அரசியல் யாப்பை வரையும்போது முழுமையான சம்மதம் (Complete Consensus) என்பது சாத்தியமில்லை, ஆனால் குறைந்தபட்சம் போதியளவு சம்மதம் (Sufficient Consensus) பெறப்பட வேண்டும். 1947, 1972, 1978 அரசியல் யாப்புகள் இவ்வகையில் குறைபாடுகள் கொண்டவை. அண்மைக்காலத்தில் அரசியல் யாப்பு உருவாக்கம் மக்களை விலக்கிவைத்து, மக்கள் பங்கேற்பை (Public Participation) இல்லாமல் செய்வதாய் அமைந்துள்ளது. தலைவர்களே யாவற்றையும் தீர்மானிப்பவர்களாய் இருக்கும் போக்குக் காணப்படுகின்றது.
ஆ. ஒற்றையாட்சியா? சமஷ்டியா?
ஒற்றையாட்சி என்ற கருத்தை முதன் முதலாக அரசியல் யாப்பில், 1972 குடியரசு அரசியல் யாப்பு புகுத்தியது. 1947 அரசியல் யாப்பும் அடிப்படையில் ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகவே இருந்தது எனினும் அந்த அரசியல் யாப்பு ‘Unitary’ என்ற சொல்லை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி இயல்பு சமகால அரசியலில் இனங்களுக்கிடையே ஆழமான பிளவுகளை உண்டாக்கி உள்ளது. பிராந்தியங்களுக்கு (Regions) அதிகாரப் பகிர்வைச் செய்ய வேண்டுமென்றாலும் ஒற்றையாட்சி இயல்பை (Unitary Character of the Constitution) மாற்றவே கூடாது என்ற பிரசாரத்தை ஒரு பிரிவினர் முடுக்கிவிட்டனர். இதற்கு மாறாக இன்னொரு தரப்பு எல்லா மக்கள் சமூகங்களுக்கும் ஏற்புடைய அரசியல் யாப்புத் தீர்வு காணப்பட வேண்டுமானால் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி இயல்பு அடியோடு மாற்றப்பட வேண்டும் என்று வாதிட்டது. 13ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் மாகாணசபை முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அத்திருத்தம் 1978 அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி இயல்பை மாற்றவில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
13ஆவது அரசியல் யாப்புத் திருத்தம், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையீடு செய்வதற்கு வழிவகுத்தது. அதாவது, ஒருகையால் கொடுத்ததை மற்றக் கையால் பறித்தெடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. நாட்டின் புவிப்பிரதேச ஒருமைப்பாட்டிற்கு (Territorial Integrity of the Country) ஆபத்து ஏற்பட்டால் மத்திய அரசாங்கம் தனது அதிகாரங்களை உபயோகித்து மாகாணசபையில் தலையீடு செய்யலாம். இதுவோர் சிக்கலான பிரச்சினையாகும். சிங்கள மக்கள், சமஷ்டிமுறையிலான அதிகாரப் பகிர்வை ஒற்றையாட்சி முறைக்குள் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் அறிமுகம் செய்தாலும் அது தனிநாடாகப் பிரிந்து போவதற்கு வழிவகுக்கும் என்ற பயம் உடையவர்களாக இருக்கிறார்கள். சமஷ்டி (Federalism) என்ற சொல் சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. அண்மைக்காலத்தில் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கும், அதிகாரப் பகிர்வுக்கும் பெரும் தடையாக இந்த உணர்வுநிலை அமைந்துள்ளது.
இ. அதிகாரப் பகிர்வுக்கான அலகு
அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக அண்மைக்காலத்தில் எழுந்த மிகச் சிக்கலான பிரச்சினை அதிகாரப் பகிர்வுக்கான அலகு (The Unit of Devolution) ஆகும். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் பெரியதொரு தமிழ்ப் பிராந்தியமாகவும், வரலாற்று ரீதியாகத் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் மரபுத் தாயகமாகவும் (Homeland) இருந்து வந்துள்ளது. இரு மாகாணங்களையும் ஒன்றாக இணைத்து ஓர் அலகாகக் கொள்ளுதல் வேண்டும் என்பது பெரும்பான்மையான தமிழ்க் கட்சிகளின் பொதுக் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆயினும் தாயகம் என்னும் இக்கோரிக்கையை சிங்களச் சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஏற்கத் தயாராக இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஈ. இடைக்கால ஏற்பாடுகள்
புதிய அரசியல் யாப்பு ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இடைக்கால ஏற்பாடுகள் (Interim Arrangements) ஒன்றை ஏற்படுத்துதல் முரண்பாடு கொண்டுள்ள தரப்பினர்களிடையே சம்மதத்தை (Consensus) வளர்ப்பதற்குரிய வாய்ப்பை உருவாக்க உதவலாம். இடைக்கால ஏற்பாடுகள் பல்வேறு அரசியல் குழுக்களினைச் சேர்ந்தவர்களையும் அரசியல் அதிகாரத்திலும் முடிவுகளை எடுப்பதிலும் பங்குபெற வைப்பதற்கு உதவும். குறிப்பாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களுக்கு இடைக்கால ஏற்பாடுகள் ஊடாகப் பங்கேற்பதற்கு இடமளிக்க முடியும். இத்தகைய ஒரு பொறிமுறை புதிய அரசியல் யாப்புக் குறித்த ஒருமித்த கருத்தையும் சம்மதத்தையும் கட்டி வளர்க்க உதவும்.
2002 – 2003 காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால ஏற்பாடுகள் (Interim Arrangements) தொடர்பாக ஒற்றுமையைக் காண்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது.
தொடரும்.



