காலனித்துவ காலத்தின் கடைசிக்கட்டம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

காலனித்துவ காலத்தின் கடைசிக்கட்டம்

August 3, 2026 | Ezhuna

” ‘வேந்தர் இல்லா வையகம்: இருபதாம் நூற்றாண்டு யாழ்ப்பாணம்‘ எனும் இத்தொடர் ‘ஒருவர் வாழ்க்கை ஊடாகத் தென்படும் காட்சிகள்‘ பற்றியதாகும். இத்தொடர் கட்டுரைகள் என் வாழ்க்கையில் கண்டகேட்ட, கேள்விப்பட்டவாசித்தறிந்த நிகழ்ச்சிகள் ஏற்படுத்திய மனப்பதிவுகள் பற்றியும் அவற்றால் என் மனதில் உருவாகிய கருத்துகள் பற்றியும் கூறுபவை. இவை வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. இவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை; 20 ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டவை. வரலாற்றை எழுதுவோர்க்குச் சான்றுகளைக் கொடுத்துதவும் சுவடிகள் போன்று இத்தகைய நினைவுப் பதிவுகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் இவை எழுதப்படுகின்றன.”

கார்த்திகேசு இந்திரபாலா– 

உலக வரலாற்றில் ஒரு முக்கிய தசாப்தமாக 1940கள் இடம்பெறுவதை மறுக்க முடியாது. இத்தசாப்தம் விடிந்தபோது வரலாறு காணாத மிகப் பெரிய பேரரசாக எழுச்சி பெற்றிருந்த பிரித்தானியப் பேரரசு தன் ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில் நின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஆறாம் ஜோர்ஜ் மன்னன் இந்தியாவின் பேரரசனாக (Emperor of India) முடிசூட்டப்பட்டிருந்தான். பிரித்தானியப் பேரரசின் வலுவுக்குச் சவால் கொடுக்கும் வகையில் 1940இல் ஜெர்மன் தலைவர் அடொல்வ் ஹிட்லர் போர் நடத்திக்கொண்டிருந்தான். இரண்டாவது உலகப் போர் தீவிரமாக மூண்டது.

அந்தத் தசாப்தம் முடிந்தபோது உலகமே மாறிவிட்டது. பிரித்தானியப் பேரரசு மறைய, ஒரு புதிய வல்லரசாக அமெரிக்கா எழுச்சி பெற்றிருந்தது. தென் ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை புதிய சுதந்திர நாடுகளாகத் தோன்றியிருந்தன. ஜெர்மனியும் ஜப்பானும் போரில் படுதோல்வியுற்றுப் புதிய நாடுகளாக மாறத் தொடங்கியிருந்தன. அணு ஆயுதம் வல்லரசுகளின் உறவைப் பாதிக்கும் சக்தியாகக் காணப்பட்டது.

சுதந்திரத்துக்குத் தயாரான இலங்கை

இலங்கைக்குத் தன்னாட்சி (Self-rule) விரைவில் கிடைக்கும் என்ற உணர்வு 1940கள் தொடங்கியபோது அரசியல் தலைவர்களுக்குத் தெளிவாக ஏற்பட்டது என்றே தோன்றுகிறது. இந்த உணர்வு சிறப்பாகக் கொழும்பில் இருந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட மத்திய வகுப்புத் தலைவர்களிடத்தில் காணப்பட்டது எனலாம். யாழ்ப்பாணத் தலைவர்கள் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டதாகக் கூறுவதற்கில்லை. ஆங்கிலேயர் ஆட்சி நீண்ட காலம் நிலைக்கும் என்றே நாட்டில் பொதுவாக நம்பப்பட்டது.

இப்பின்புலத்தில் பார்க்கும்போது, யாழ்ப்பாணத்து இளைஞர் காங்கிரஸ் நடத்திய இயக்கம் ஒரு விதிவிலக்காக அமைகின்றது. இவர்கள் 1930களில் கடும் இலட்சியவாதிகளாக இனவாதத்தை முற்றாக எதிர்த்தனர்; நாட்டுக்குச் சுயாட்சி கோரிப் பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிடியில் இருந்து விடுதலை பெற ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முழு ஆதரவைக் கொடுத்தனர்.

இந்த இளைஞர்களுடைய செல்வாக்குப் பரவியிருந்த 1930களில் யாழ்ப்பாணத்தில் இன ஒற்றுமை மற்றும் இலங்கையர் தேசியவாதம் ஆகியவற்றுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகி இருந்ததைக் காணலாம். செல்வாக்குப் பெற்ற செய்தித்தாள்களாகிய இந்து சாதனம், ‘Hindu Organ’ ஆகியவை இனவாதத்தையும் இனவாதிகளையும் தாக்கி ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டன.

இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கோரிநின்ற சில யாழ்ப்பாணத் தலைவர்களை இந்து சாதன ஆசிரியர் ஒரு முறை இவ்வாறு விமர்சித்திருந்தார்: “எவராலும் ஒதுக்கப்பட்டுள்ள வகுப்புவாதப் பிரதிநிதித்துவத்தை ஆக்கி, சிங்களருக்கும் தமிழர்களுக்குமிடையே பெரும் வேற்றுமையை உண்டாக்கி விடுதற்கு இவர்கள் நினைக்கின்றார்கள்.” (இந்து சாதனம் 9/10/1933).

இந்து சாதனத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அரசியல் ஒற்றுமையின் அவசியம் பற்றி இவ்வாறு வற்புறுத்தப்பட்டது: “… எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமை வேண்டும். சிங்களர், தமிழர், முஸ்லீம்கள் என்ற பேதத்தை ஒழித்து எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் அன்னையின் புதல்வர்கள் என்று எண்ணித் தொண்டாற்றுவோமாக. எமக்குள்ளேயுள்ள வேற்றுமைகளை நாம் அறவே களைந்து அகிம்சையைக் கொண்டு ‘லங்காதேவிக்கு ஜே’ என்று வீரமுழக்கம் செய்து சுதந்திரப் போரில் ஈடுபடுவோமாக”. (இந்து சாதனம் 2/10/1933).

பண்டைய யாழ்ப்பாணம் பற்றி ஆய்வு செய்து ஒரு நூல் எழுதியும் தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றிக் கட்டுரைகள் எழுதியும் சிறப்புப் பெற்றிருந்த முதலியார் சி. இராசநாயகம் அரசியலைப் பொறுத்தமட்டில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினருடன் ஒத்துப்போக வேண்டிய தேவையை வற்புறுத்தினார்:

“In the interests of Jaffna and for the maintenance of its good name, I would desire that the minority community should stand by the majority in the decision of all political questions, and display their readiness to unite and co-operate in every situation of emergency. I consider all those who attempt to bring about disunion and disruption as enemies to the national cause.” (Hindu Organ, 28/03/1932).

இப்படியான ஒரு சூழ்நிலை 1930களில் யாழ்ப்பாணத்தில் உருவாகுவதற்கு இளைஞர் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தது என்றே கூறவேண்டும். கல்விகற்ற யாழ்ப்பாணத்தவர் பலர் வெளிப்படுத்திய சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் அவதானிக்கும்போது மிகுந்த கவனத்தை ஈர்ப்பது ஒற்றுமைப்பட்ட இலங்கைக்காக இருந்த ஆதரவும் எழுப்பப்பட்ட குரலும் ஆகும். இன்று நினைத்தும் பார்க்கமுடியாத வகையில் யாழ்ப்பாணத்தவர் பலர் நாட்டின் ஒற்றுமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆணித்தரமாகக் குரல் எழுப்பி மக்களை அழைத்தனர்.

இப்படியானோருள் இளைஞர்களுக்கு ஆதரவு அளித்த இரு தலைவர்கள் முக்கியமானவர்கள். ஒருவர் வைத்திலிங்கம் துரைசுவாமி. மற்றவர் கதிரவேற்பிள்ளை பாலசிங்கம். இவர் பழைய சட்டவாக்க சபையில் உறுப்பினராக இருந்தவர்; நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பல வகையாலும் பங்களித்தவர். யாழ்ப்பாணத்தின் மேம்பாட்டுக்குத் தேவைப்பட்ட நீர்வளத்தைப் பெறுவதற்கு மாவலி ஆற்றை வடக்குக்குத் திசைதிருப்ப வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர். வெளிநாடுகள் சிலவற்றில் இடம்பெற்ற எழுச்சியை அவதானித்து, இளைஞர்களை இவ்வாறு ஊக்குவித்தவர்: “It is in the enthusiasm of the youth that the salvation of the country lies. A band of no more than 30 young men made Japan what it is today. Turkey is what it is owing to the work of the Young Turk Party.” (Hindu Organ, 01/05/1933).

இளைஞர் இயக்கத்தின் வீழ்ச்சி

தேசிய ஒற்றுமைக்கும் நாட்டின் சுதந்திரத்துக்கும் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் ஆர்வமுடன் நடத்திய இயக்கம் 1935இன் பின் வலு இழந்து, 1940களின் தொடக்கத்தில் வீழ்ச்சியுற்றது. யாழ்ப்பாண அரசியலில் ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது ஆதரவாளர்களும் படிப்படியாக மேலோங்கிய செல்வாக்கைப் பெறத் தொடங்கினர்.

முன்னர் கூறியதுபோல், இளைஞர்களுடைய இயக்கத்தின் வரலாறு பற்றிச் சில முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன (சீலன் கதிர்காமர், ஜேன் ரஸெல்). இந்த இயக்கம் இறுதியில் சித்தியடையத் தவறியமைக்கான காரணங்களை ஆராய்வது எனது நோக்கம் அல்ல. எனினும் இது பற்றிய என் கருத்துகள் சிலவற்றைக் கூறுவது எதிர்கால ஆய்வாளர்களுக்கு உதவலாம்.

மெய்நிலை உணர்வும் (Sense of Reality), வரலாற்று உணர்வும் (Sense of History) முன்நின்று வழிநடத்திச் செல்லும் தலைமைத்துவத்துக்கு (Leadership) இருக்கும் முக்கிய பண்புகளுள் இரண்டு என அறிஞர்கள் கூறியுள்ளதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். இவற்றை ‘Henry Kissinger’ தனது ‘Leadership’ என்ற நூலில் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்து இளைஞர் தலைவர்கள் நடத்திய இயக்கத்தில் இப்பண்புகள் தொடர்பாகக் குறைபாடுகள் இருந்தன.

இந்த இயக்கத்தைத் தொடக்கியவர்கள் மாணவர்களாக இருந்த காலத்திலேயே இந்தியத் தேசிய போராட்டத்தின், குறிப்பாக மகாத்மா காந்தியின், செல்வாக்குக்கு ஆளாகி ஆர்வம் மிகுந்த தேசியவாதிகள் ஆனவர்கள். இந்தியாவிற்போல் இலங்கையிலும் பிரித்தானியருக்கு எதிராக இயக்கம் நடத்தித் தன்னாட்சி பெறும் நோக்கைக் கொண்டிருந்தாலும், இவர்கள் இறுகப் பற்றிக்கொண்டது இந்தியத் தேசியவாதத்தையே. இந்தியத் தலைவர்களை வரவழைத்துப் பெருந்திரள் மக்கள் கூட்டங்களை நடத்தினர்; கமலாதேவி சட்டோபாத்யாய அம்மையாரைத் தங்கள் காங்கிரஸின் தலைவராக்கினர்; ஊர்வலங்களில் ‘வந்தே மாதரம்’ பாடினர்; ‘பாரதமாதாவுக்கு ஜே’ என முழக்கம் செய்தனர்; காந்தியின் கதர் இயக்கத்துக்கு நிதி திரட்டினர்; கதர் ஆடையை உடுத்தினர். இவை அனைத்தும் இந்திய மண்ணில் முழுக்க முழுக்கப் பொருத்தமானவை. உண்மையில் இத்தகைய உணர்வுடன் இவர்கள் இந்தியாவைத் தங்கள் ‘தாய்நாடு’ (Mother Country) என அழைத்து, அந்த நாட்டுடன் இலங்கை இணையவேண்டும் (Federation) என்றுகூடக் குரல் எழுப்பினர்.

இந்த இளைஞர்களுக்கு ஒரு ‘தர்மசங்கட’ நிலை காணப்பட்டது. ஒருபுறம் இலங்கையைப் பிரித்தானியர் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டும் என்ற அவா, மறுபுறம் தங்கள் பழைய பண்பாட்டை மீட்கவேண்டும் என்ற வேட்கை. ஆனால் இவர்களுடைய பண்பாட்டின் ஊற்றுகள் இந்தியாவில் இருந்தன. இதனால் இவர்கள் இந்தியாவை அன்புடன் தழுவினர்.

இலங்கையின் தென்பாகத்தில் இருந்த நிலை வேறு. அங்கு, முன்னர் கூறியதுபோல், தேசியவாதம் பௌத்தத்தை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்றிருந்தது. முன்பு இருந்த தூய பௌத்த சமூகத்தை மீளமைக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பௌத்த புண்ணியத் தலங்களை இந்துக்களிடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என்றும் அநகாரிக தர்மபால பல செயல்பாடுகளில் ஈடுபட்டுப் பௌத்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருந்தார்.

பின்னர், மதத்துடன் மொழியும் இனமும் சேர்க்கப்பட, பண்டைய தென் இந்தியப் படையெடுப்புகள் நினைவுகூரப்பட்டுத் தமிழருக்கு எதிரான வரலாற்றுணர்வும் வளர்க்கப்பட்டது. இதன் பின், 1930களில் இந்தியத் தோட்டத் தொழிலாளருக்கு எதிரான மனப்பான்மை தோன்றியது. பின்பு, கொழும்பில் இருந்த இந்திய நகரத் தொழிலாளருக்கு எதிராகவும் தீவிரச் செயல்கள் நடைபெற்றன.

இந்த மெய்நிலையை யாழ்ப்பாணத்து இளைஞர்கள் அறிந்திருந்தார்களோ தெரியவில்லை. எப்படியும், இவர்களுடைய இயக்கம் வெற்றிபெறுவதற்குத் தெற்கில் வாழ்ந்த மக்களுடைய ஆதரவு, குறிப்பாக இளைஞர் துணை, தேவைப்பட்டது. இவர்கள் ஒரு சில சிங்களத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தபோதிலும், தெற்கில் தங்கள் இயக்கத்தை நடத்துவதற்கான ஆற்றலோ, அமைப்போ, பணவசதியோ பெற்றிருக்கவில்லை.

ஜப்பான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இளைஞர்கள் சாதித்ததை உதாரணம் காட்டி யாழ்ப்பாண இளைஞர்களுக்கு க. பாலசிங்கம் ஊக்கம் கொடுத்தார். ஜப்பானிலும் துருக்கியிலும் இளைஞர்கள் ஈடுபட்ட செயல்பாடுகளுடன் யாழ்ப்பாண இளைஞர்களுடைய இயக்கத்தை ஒப்பிடுவது பொருத்தமற்றது. மத்தியகாலப் பண்பாட்டில் மூழ்கிக் கிடந்த ஜப்பானியரும் துருக்கியரும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சவாலை எதிர்நோக்கியபோது பழைய பண்பாடு எனும் ஆமை ஓட்டுக்குள் பின்வாங்கி ஆபத்து நீங்கும் வரை தலையைப் பாதுகாக்கச் செயல்படவில்லை.

ஜப்பானிலும் துருக்கியிலும் நடந்தவற்றை முன்னர் கூறியுள்ளேன். இங்கு அதைச் சுருக்கமாகக் கூறினால், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தில் இருந்து வெற்றிபெற அந்த ஐரோப்பியர்களுடைய ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை ஜப்பானியர் உணர்ந்தனர். அகத்தில் பாரம்பரிய பண்பாட்டைப் பேணியபோதிலும் புறத்தில் ஜப்பானை ஓர் ஐரோப்பிய நாடாக மாற்றினர். ஜப்பானியப் பேரரசன் குடும்பம் தொட்டுப் பொதுமக்கள் வரை மேலைத்தேச உடை அன்றாட உடையாகியது. ஜப்பானிய நிறுவனங்கள் மேலைத்தேச நிறுவனங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டன.

இளம் துருக்கியர் (Young Turks), ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சவாலை எதிர்நோக்குவதற்கு, மத்தியகால இஸ்லாமியப் பண்பாட்டில் தோய்ந்திருந்த தங்கள் துருக்கி நாட்டையும் சமூகத்தையும் ஐரோப்பியமயமாக்கினர். ஆண் துருக்கியரின் அடையாளச் சின்னமாக உலகெங்கும் அறியப்பட்ட துருக்கித் தொப்பியை அணிவது சட்டவிரோதமான செயலாகியது. தலையை மூடி நீண்ட உடையணிந்த பெண்கள் ஐரோப்பியர் போல் உடையுடுத்துத் தலையலங்காரம் செய்தனர்.

இலங்கையிலும் இளைஞர்கள் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்குத் துடித்தனர். இளைஞர் குழுக்களை (Youth Leagues) பல இடங்களில் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டும் முகமாக வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி, சிகரெட்டு, துணி ஆகியவற்றை வாங்காது, பனங்கட்டி, சுருட்டு, கைநெசவு செய்யப்பட்ட கதர் ஆகிய பொருட்களைப் பயன்படுத்துமாறு தீவிர பிரசாரத்தை நடத்தினர்.

பனங்கட்டிச் செய்கையிலிருந்து நவீன தொழில்நுட்ப முறைப்படி சீனியைப் பெருமளவில் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவிலேயே அமைக்கப்பட்டிருந்த காலம் அது. தமிழ்நாட்டில் தென் ஆற்காடு மாநிலத்தில் கரும்புச் செய்கையும் நவீன சீனித் தொழிற்சாலைகளும் 1930களில் காணப்பட்டன. இப்பின்புலத்தில், “நம் நாட்டில் கரும்புச் செய்கையைப் பெருக்குவோம், நவீன சீனித் தொழிற்சாலைகளை அமைப்போம்” என்று முழக்கம் செய்வதற்குப் பதிலாக, பின் நோக்கிச் சென்று பனங்கட்டியைப் பயன்படுத்துவோம் எனப் பிரசாரம் செய்தமை நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல வகுத்த சிறந்த பொருளியல் திட்டமாக இருக்கவில்லை. இளைஞர்கள் நடத்திய இந்த இயக்கம் பயனளிக்கவில்லை.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் நடத்திய இயக்கம் சித்தியடையத் தவறினாலும், இதை மிகுந்த ஆர்வத்துடன் வழிநடத்திச் சென்ற இளைஞர்கள் தன்னலமற்ற இலட்சியவாதிகளாய், ஒற்றுமைப்பட்ட இலங்கையில் அசையாத நம்பிக்கையுடையவர்களாய், பிரித்தானியர் ஆட்சியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற திடமான குறிக்கோளை முன்வைத்தவர்களாய்ச் செயல்பட்டனர் என்பதை மறுப்பதற்கில்லை. வேறொரு சூழ்நிலையில் இவர்கள் நாட்டின் பெருந்தலைவர்களாக உயர்வு பெற்றிருப்பர்.

இவர்களுள் சிலரை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் 1947இல் யாழ்ப்பாணக் கல்லூரியில் படிக்கத் தொடங்கியபோது ஹண்டி பேரின்பநாயகம் அங்கு வகித்த ஆசிரியர் பதவியை விட்டுச் சென்றிருந்தார். இதனால் அவரை அறிந்துகொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் அவரைச் சந்திக்க முயலவில்லையே என்பது என்னுடைய கவலைகளுள் ஒன்று. எனினும் அவருடைய மக்கள் மூவருடனும் நன்கு பழகி நட்பு வைத்திருக்க வாய்ப்புக் கிடைத்தது.

மாணவர் காங்கிரஸின் தொடக்ககால உறுப்பினர்களுள் சிலர் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அவர்களுள் இருவரிடம் கல்வி கற்கவும் நெருங்கிப் பழகவும் எனக்கு முடிந்தமை என்னுடைய பெருவாய்ப்பு என்று கருதுகிறேன். ஒருவர், ஆங்கில இலக்கியம் (சிறப்பாக ஷேக்ஸ்பியருடைய நாடகத்தை) கற்பித்த லைமன் எஸ். குலத்துங்கம். மற்றவர் தமிழ் இலக்கணமும் இலக்கியமும் கற்பித்த கே.ஈ. மதியாபரணம்.

இவர்களை விட வேறும் சில மாணவர் தலைவர்களுடன் நட்புறவு கொள்ள எனக்குச் சந்தர்ப்பம் கிட்டியது. அவர்களுள் மூவரை மறக்கமுடியாது. கே. நேசையா அவர்கள் பல்கலைக்கழகக் கல்வித்துறையில் (பேராதனையில்) விரிவுரையாற்றிய காலத்தில் அவரை முதலில் சந்தித்தேன். அவர் ஓய்வுபெற்றபின் யாழ்ப்பாணத்தில் அவருடைய இல்லத்துக்கும் சென்றிருக்கிறேன். தேசிய உடை (கதர் என்று நினைக்கின்றேன்) அணிந்து அடக்கமான பண்புடன் காணப்பட்ட இவர் ஒரு சிறந்த கல்விமானாகவும் சிந்தனையாளராகவும் கருதப்பட்டார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது செனற் சபையில் (மேல் அவையில்) உறுப்பினராகப் பணியாற்றிய எஸ். ஆர். கனகநாயகம் அவர்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்தில் செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்திருந்தேன். பின்னர் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் பலமுறை அவருடன் பழகி அவர் நட்பைப் பெறும் வாய்ப்பும் கிடைத்தது. மிகுந்த நகைச்சுவையுடன் தன் அனுபவங்களைக் கூறி எம்மைச் சிரிப்பில் ஆழ்த்திவிடுவார். இவர் பட்டதாரியாகியபோது பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியர் பதவி ஒன்றுக்கு விண்ணப்பித்துக் கல்லூரிக்கு நேர்முகப் பரீட்சைக்குச் சென்றபோது பொன்னம்பலம் இராமநாதன் தனித்தமிழில் கேட்ட கேள்விகளையும் இவர் அளித்த விடைகளையும் நகைச்சுவை ததும்ப இவர் எடுத்துக்கூறியதை என்னால் மறக்கமுடியாது. பின்னர் அவர் தன் மகளுடன் வாழ்வதற்கு அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தபோதும் எங்கள் நட்புத் தொடர்ந்தது. இறுதியில் அவருடைய மரணத்தின் போது மரியாதை செலுத்தவும் வாய்ப்புக் கிடைத்தது.

எஸ். துரைராஜசிங்கம் அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரை வதிவிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் லண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மாணவர் இயக்கத்திலும் மகாத்மா காந்தியை யாழ்ப்பாணத்துக்கு வரவழைப்பதற்குமான முயற்சிகளில் இவர் ஈடுபட்டு, மாணவர் காங்கிரஸின் செயலாளராகவும் பணியாற்றியவர். இரண்டாம் உலகப் போரின் பின் இவர் ஆனந்த குமாரசுவாமியின் வாழ்க்கை வரலாற்றிலும் எழுத்துகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு அக்கலை விமர்சகரைப் பற்றி நூல்கள் வெளியிட்டார். இத்துறையில் எனக்கும் இருந்த ஈடுபாட்டினால், நான் இவருடன் தொடர்பு கொண்டு, 1977இல் கோலாலம்பூருக்குச் சென்று அவருடைய இல்லத்தில் அவரைச் சந்திக்கவும் முடிந்தது.

இவர்களைத் தவிர வேறும் சில மாணவர் இயக்கத்தினரை ஒரு முறையாவது சந்திக்க முடிந்தது. அவர்களுள் இருவர் சபாபதி குலேந்திரனும் எஸ்.யு. சோமசேகரமும் ஆவர். குலேந்திரன் பின்னர் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணப் பிரிவுக்கு ஆயராகப் பணிபுரிந்தவர். சோமசேகரம் கல்வித் துறையில் முன்னேறி, யாழ்ப்பாணத்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

இவர்களை நேர்முகமாகக் கண்டு இவர்கள் வாழ்க்கையையும் கருத்துகளையும் பார்த்தபோது, இளைஞர் இயக்கத்தில் இருந்தோர் எவ்வளவு தூரம் இலட்சியவாதிகளாய்த் தன்னலமற்ற சேவையைச் சமூகத்துக்குக் கொடுக்க முன்வந்தனர் என்பதை உணரமுடிந்தது. இலங்கையில் 1930களில் இருந்து தீவிரமாக எழுந்த அரசியல் சூழ்நிலையில் இந்த இலட்சியவாதிகளுக்கு இடமில்லாதுபோனமை ஆச்சரியத்துக்கு உரியதன்று.

இடதுசாரி இளைஞர்கள்

யாழ்ப்பாணத்தவர் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடதுசாரி இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்குகொண்டமையை அவதானிப்பதும் முக்கியமாகும். இலங்கையில் 1920களில் மேலைத்தேசத் தாராண்மைவாதக் கருத்துகளும் தொழிலாளர் உரிமைகளைப் பேணும் தொழிற்சங்கங்கள் தொடர்பான கருத்துகளும் மத்திய வகுப்பு இளைஞரிடையே பரவத் தொடங்கின.

இப்பின்புலத்தில், யாழ்ப்பாணத்தவர் குடும்பங்களைச் சேர்ந்த மத்திய வகுப்பு இளைஞர்கள் கொழும்பில் இடதுசாரிப் பண்புகளைக் கொண்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஜேம்ஸ் தேவதாசன் ரத்னம் (James T. Rutnam, 1905–1988).

மானிப்பாய்க் குடும்பம் ஒன்றில் பிறந்த ஜேம்ஸ் ரத்னம் சிறு வயதிலிருந்து கொழும்பில் வாழ்ந்தவர். இளம் பராயத்தில் ஏ.ஈ. குணஸிங்க, விக்டர் கொறயா போன்றோருடன் கூடி ‘Young Lanka League’ என்ற கழகத்தின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். முதலாம் உலகப் போரில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூர்ந்து, அப்போரில் சண்டையிட்டு வீடு திரும்பிய போராளிகளுக்கு உதவும் வகையில் செயற்கைச் செம்மலர்களை (பொப்பி / Poppy) விற்று நிதி திரட்டப்பட்டது. அந்நாட்களில் இலங்கையில் ‘Poppy Day’ (நவம்பர் 11) நாளில் திரட்டப்பட்ட பணம் இலங்கையில் வாழ்ந்த உலகப் போர் போராளிகளுக்குக் கொடுக்கப்படாது இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றது என எடுத்துக்காட்டி, அதனை எதிர்த்து ஜேம்ஸ் ரத்னம் செய்தித்தாள்களுக்கு எழுதினார். இவர் தொடக்கிவைத்த எதிர்ப்பின் விளைவாக, இலங்கைப் போராளிகளுக்கு உதவ ‘சூரிய மலர்’ (සූරියමල් ව්‍යාපාරය) இயக்கம் உருவாகியது. இந்த இயக்கம் இலங்கையில் இடதுசாரி இயக்கம் தொடங்குவதற்கு வழிவகுத்தது என நம்பப்படுகின்றது.

S.W.R.D. பண்டாரநாயக்க இங்கிலாந்தில் தன் படிப்பை 1924இல் முடித்து இலங்கைக்குத் திரும்பியபோது அரசியல் மாற்றங்களை நாட்டில் உண்டுபண்ண ஆவலுடையவராய் தீவிர எண்ணங்களுடன் (Radical) காணப்பட்டார். இதனால், அதே எண்ணங்களைக் கொண்டிருந்த ஜேம்ஸ் ரத்னம் அவருடன் இணைந்து செயல்பட முன்வந்தார். பண்டாரநாயக்கவின் முதலாவது பொதுக்கூட்டப் பேச்சு கொழும்பில் நிகழ்ந்தபோது, ஜேம்ஸ் ரத்னம் நன்றியுரையை வழங்கி, பண்டாரநாயக்க ‘இளைஞர் லங்கா’வுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுப்பவராக வந்திருக்கிறார் (Hope of Young Lanka) என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இதன் பின், பண்டாரநாயக்க இலங்கைத் தேசிய காங்கிரஸின் போக்கை விரும்பாதவராய் ‘Progressive Nationalist Party’ என்ற ஒரு கட்சியைத் தொடங்கியபோது ஜேம்ஸ் ரத்னம் அவருடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் இந்த உறவு நீண்ட காலம் நிலைக்கவில்லை. இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி சமஷ்டி முறை என பண்டாரநாயக்க வாதிட்டபோது அதனை ஜேம்ஸ் ரத்னம் எதிர்த்தார். இதன் பின் பண்டாரநாயக்கவுடன் இணைவதைக் கைவிட்டு, ஜேம்ஸ் ரத்னம் தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கினார்.

ஜேம்ஸ் ரத்னத்தைப் போன்று கொழும்பு இடதுசாரி ஆர்வலர்களுடன் இணைந்து செயலாற்றிய இன்னொரு யாழ்ப்பாணத்து இளைஞர் சி. பொன்னம்பலம் என்பவர் ஆவார். இவர் யாழ்ப்பாணத்து இளைஞர் காங்கிரஸில் உறுப்பினராக இருந்தவர் என அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணத்தின் முதலாவது பெண் வைத்தியராக (மேலைத்தேச மருத்துவம்) தகைமை பெற்றவர் எனக் கருதப்படும் நல்லம்மா (முருகேசு) சத்தியவாகீஸ்வரர் 1928இல் ஏ.ஈ. குணஸிங்க ‘Ceylon Labour Party’ என்ற தொழிலாளர் கட்சியை நிறுவியபோது அதில் ஓர் அங்கத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கணவர் சத்தியவாகீஸ்வர ஐயர் (நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி அதிபர்) இக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக நியமனம் பெற்றிருந்தார்.

இவர்களுக்குப் பின் மார்க்சீயச் சிந்தனைகளால் (Marxism) கவரப்பட்ட இளைஞர் சிலர் தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினர். இதனைப் பின்னர் பார்க்கலாம்.



About the Author

கார்த்திகேசு இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் கல்வெட்டியலாளர், வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியவரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்