இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: திரு. ‘அண்டர்வூட்’ மணிவாசகம் அவர்களின் கடிதம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம்: திரு. ‘அண்டர்வூட்’ மணிவாசகம் அவர்களின் கடிதம்

July 31, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.


(1982இல் காலஞ்சென்ற திரு. அண்டர்வூட் மணிவாசகம் அவர்கள், காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களுக்கு எழுதிய திறந்த மடல் – செப்டம்பர் 01. 1982) 


மாண்புமிகு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள், 

ஜனாதிபதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,

கொழும்பு.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே,  


1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்)

1. இலங்கை தேசிய தமிழர் விவகாரங்களுக்கான நிறுவனம் (Ceylon Institute of National and Tamil Affairs – CINTA) என்ற அமைப்பின் நிர்வாகச் சபை, 1982 ஓகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற தனது கூட்ட அமர்வில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர முடிவு செய்தது: இலங்கையின் வடக்கிலும் பிற பகுதிகளிலும் உள்ள ஒரு சில தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை, (இந்த அமைப்பின்) நிர்வாகச் சபை வன்மையாகக் கண்டிக்கிறது; அதேவேளையில், ஆயுதப் படைகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அமுலாக்கம் ஆகியவற்றின் மூலம் வடக்கு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாத ஆட்சியை (அச்சச் சூழலை) அதே தீவிரத்துடன் கண்டிக்கவும் செய்கிறது. மேலும், அச்சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்யும்படியும், அச்சட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும், நடைமுறைகளையும் இரத்துச் செய்யும்படியும், அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

2. ஜூலை 1977இல் நீங்கள் பிரதமராகப் பதவியேற்றபோது, சில ஆண்டுகளிலேயே உங்களுக்கு இத்தகைய தீர்மானத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நாங்கள் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை. உங்கள் தலைமையின் கீழ் ஜூலை 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பெற்ற அமோக வெற்றியின் மூலம், நாடு விரைவான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்கும் என்றும், அதற்கு இன நல்லிணக்கமும் மக்களின் அனைத்துப் பிரிவினரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியமான காரணிகளாக அமையும் என்றும் நாங்கள் நம்பியிருந்தோம். 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நீங்கள் மிகத் துணிச்சலாகக் குறிப்பிட்டிருந்த ‘தமிழ் பேசும் மக்களுக்கு உரிய முக்கியத்துவம்’ அளிக்கும் அணுகுமுறையானது, உங்கள் தலைமையினதும் அதன் வழிகாட்டுதலின் கீழும் நல்ல பலன்களைத் தர முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்.

3. துரதிர்ஷ்டவசமாக, ஏறக்குறைய முதல் மாதத்திலிருந்தே, கடந்த சில ஆண்டுகளாகத் திரண்டுவந்து கொண்டிருந்த சக்திகளின் செயல்கள், செப்டம்பர் 1977இல் வன்முறை எனும் துயர நிகழ்வாக வெடித்தன. இனங்களுக்கிடையிலான உறவுகள் தொடர்ச்சியாகச் சீர்குலைந்து வந்துள்ளதுடன், அவை இன மோதல்களாகத் தீவிரமடைந்து, அவசரகால நிலையை அறிவிக்கவும், ஊரடங்குச் சட்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், மேன்மைதங்கிய தங்கள் அரசின் நிர்வாகத்தை நிர்பந்திக்கும் நிலையை உருவாக்கிவிட்டுள்ளன.

4. நாட்டின் சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காப்பது எந்தவொரு அரசாங்கத்தினதும் முதன்மைக் கடமை என்பதையும், குறிப்பாகச் சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் மற்றும் அரசின் ஆயுதப் படைகளுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைச் செயல்களின்போது இக்கடமையை நிறைவேற்றுவது அவசியம் என்பதையும், நமது நிர்வாகக் குழு முழுமையாக உணர்ந்திருந்தது. இருப்பினும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான முதன்மை வழியாக வடக்கு மாகாணத்தை ஒடுக்கும் வகையிலான கடுமையான சட்ட நடவடிக்கைகளைத் தங்கள் மேன்மைதங்கிய அரசு மேற்கொண்டிருப்பதையும், இதன் மூலம் அரசியல் ரீதியான தீர்வுக்கான வாய்ப்புகள் அதனால் கைவிடப்பட்டிருப்பதையும் இந்தக் குழு மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றது.

5. 1979இல் வடக்கு மாகாணத்தில் ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை அமுல்படுத்தி, பயங்கரவாதத்தை வேரறுக்குமாறு ஆயுதப் படைகளுக்குத் தங்கள் மேன்மைதங்கிய அரசு உத்தரவிட்டபோது, பயங்கரவாதத்தின் வேர்களை அகற்றுவதற்கும் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஏற்ற அரசியல் செயல்முறை ஒன்றையும் அதே நேரத்தில் தொடங்குவீர்கள் என்று வடக்கு மக்கள் பலரும் நம்பினர்.

6. ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்-பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் அந்தப் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசு முயற்சிப்பது மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 1977 முதல் வடக்கு மாகாணத்தில் ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு பயங்கரச் சூழல் நிலவுகிறது. இது, வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, வன்முறைச் சம்பவங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது; ஆயுதப் படை வீரர்களால் கொல்லப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதிலிருந்து இதை அறியலாம். ஆயுதப் படையினரின் இத்தகைய பயங்கரவாதப் போக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பயங்கரவாதத்தை எதிர்-பயங்கரவாதம் அல்லது அரசுப் பயங்கரவாதம் மூலமாக அல்லாமல், அரசியல் தீர்வு மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பது மிகத் தெளிவான முடிவாகும். ஏனெனில், மக்களின் குறைகள் மிகவும் ஆழமானவை; அவற்றை ‘லத்தி’களாலோ அல்லது துப்பாக்கிக் குண்டுகள் மூலமாகவோ அடக்கிவிட முடியாது.

7. இலங்கையில் மிகவும் அமைதியான, கடின உழைப்பாளிகளாகவும், குற்றச் செயல்களில் மிகக் குறைவாக ஈடுபடும் இனக்குழுவாகவும் தமிழர்கள் திகழ்கின்றனர் என்பது ஒரு வரலாற்று ரீதியான உண்மை. ஆனால், குறிப்பாக 1956 முதல் பாகுபாடான சட்டமியற்றும் கொள்கைகள், நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றால் எழுந்த கசப்பான ஒரு சூழல் நிலவிய போதிலும், ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்: பிரதமரைப் படுகொலை செய்வதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற சட்டவிரோத முயற்சிகள் அல்லது வெளிப்படையான கிளர்ச்சி மற்றும் சதிப்புரட்சிகள் (Coups d’état) மூலம் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்ற முயற்சிகளை எதிர்கொண்டபோது, அரசாங்கம் சந்தித்த இக்கட்டான சூழலில், தமிழ் பேசும் மக்கள் அதில் பங்கேற்கவோ அல்லது அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவோ இல்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில், தமிழ் பேசும் மக்கள் சட்டத்தை மதித்து நடப்பவர்களாக இருந்திருக்கின்றனர்; வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பகுதிகள் மிகவும் அமைதியானதும் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத பகுதிகளாகவுமே இருந்திருக்கின்றன.

8. உண்மையில், 1970ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை அப்போது ஏற்றிருந்த ‘தமிழரசுக் கட்சி’ (Federal Party) மிகத் தெளிவாகக் குறிப்பிட்டதாவது:

“நாட்டை எந்த வகையிலும் பிரிப்பது நாட்டிற்கோ அல்லது தமிழ் பேசும் மக்களுக்கோ பயனளிக்காது என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. எனவே, நம் நாட்டை இரண்டாகப் பிரிப்பதை ஆதரிக்கும் எந்தவொரு அரசியல் இயக்கத்திற்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழ் பேசும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

9. ஆயினும், இந்த அறிவிப்பு வெளியான சில ஆண்டுகளிலேயே, புதிதாக உருவாக்கப்பட்ட TULFஇன் ஓர் அங்கமாக மாறியிருந்த தமிழரசுக் கட்சி, சரியாக அதையே செய்தது. இதற்கான காரணங்கள் UNPஇன் 1977ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

10. தாங்கள் இழந்த உரிமைகள், குறைந்து வரும் வாய்ப்புகள் என்பவற்றுக்காகக் கால் நூற்றாண்டு காலம் பொறுமையாகவும் அமைதியாகவும் போராடிய பிறகுதான், தமிழ் மக்கள் தனி அரசியல் இருப்பைத் தேர்ந்தெடுத்தனர்; அதேவேளையில், விரக்தி, அரசின் காவல்துறை, ஆயுதப் படைகள் என்பவற்றின் அவமானகரமான ஒடுக்குமுறை ஆகியவற்றால் அதிக எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் வன்முறையை நோக்கித் தள்ளப்படுகின்ற நிலை ஏற்படுகிறது.

11. ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ அமைப்பையும் அது போன்ற பிற அமைப்புகளையும் தடை செய்யும் ‘1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டத்தை’ இச்சட்டம் இரத்துச் செய்துள்ளதே, இது உண்மையில் யாருக்காக உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் விதிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விவாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பல விதிகள் குறித்துப் பல எதிர்மறையான கருத்துகள் எழுப்பப்பட்டுள்ளன.

12. வடக்குத் தமிழ்ப் பகுதிகளில் அதிகரித்து வந்த அரசியல் வன்முறைக்கு விடையளிக்கும் வகையிலேயே இச்சட்டம் (இது மாற்றீடு செய்த முந்தைய சட்டத்தைப் போலவே) கொண்டுவரப்பட்டிருந்தாலும், இதில் ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) குறித்த ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளுக்கு முரணான, பல கவலைக்குரிய விதிகள் உள்ளன; அத்துடன், இதில் உள்ள கணிசமான விதிகள், ‘குற்றவியல் நடைமுறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் தரநிலைகளுக்கு’க்கூட ஏற்ற வகையில் அமைந்திருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.

13. இந்தச் சட்டம், கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளுக்கும் கூடப் பொருந்தக்கூடிய – அவற்றுக்கான எத்தகைய முன்னேற்பாடுகளும் அற்ற விதத்தில் அமைந்த – தன்மையைக் கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன், இது தான் தடுக்க முற்படும் ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான தெளிவான வரையறை எதையும் கொண்டிருக்கவும் இல்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்தல், வெளி உலகத் தொடர்பின்றி தடுத்து வைத்தல், தடுப்புக் காவல் அதிகாரியால் தீர்மானிக்கப்படும் எந்தவொரு இடத்திலும், 18 மாதங்கள் வரை விசாரணையின்றி தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் தடுத்து வைத்தல் போன்ற ஆட்சேபனைக்குரிய விதிகளையும் இது கொண்டுள்ளது. தடுப்புக் காவலில் இருக்கும்போது சித்திரவதை அல்லது மரணம் நேரிட்டால், அதற்கெதிராக முறையிடவோ அல்லது தீர்வு காணவோ, சந்தேக நபர்களுக்கு இந்த விதிகளில் எந்த வழியும் இல்லை. அத்துடன், தடுப்புக் காவலில் இருக்கும்போது சந்தேக நபர்களிடமிருந்தோ, அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் இருந்தோ கட்டாயப்படுத்திப் பெறப்பட்ட வாக்குமூலங்கள், நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பவை போன்ற சிறப்பு விதிகளையும் இது கொண்டுள்ளது.

14. இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நபர்கள் தொடர்பாக கொண்டுவரப்படுகின்ற ‘ஆட்கொணர்வு மனுக்கள்’ (Habeas Corpus) மீதான விசாரணைகளின்போது, சித்திரவதைகள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நமது நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடைமுறை ஆச்சரியமளிக்கிறது. சர்வதேச சட்ட வல்லுநர்கள் (அல்லது யூரிகள்) கமிஷன் (International Commission of Jurists) கூறியது போன்ற, பின்வரும் சூழல்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் வழிவகுக்கின்றன: அதாவது, “வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, தடுத்து வைக்கப்பட்டவர்களை உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்குவது ஒரு பொதுவான நடைமுறையாக நடந்து வருகிறது; நிர்வாக உத்தரவுகளின் கீழ், அவர்கள் நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்கப்படும்போது, நிலவும் பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன.”

15. பல்கலைக்கழக மாணவர் விமலராஜன் தொடர்பான சமீபத்தில் நடந்த சம்பவங்கள், நடப்பிலுள்ள ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகிறது என்பதையும், தமிழர்களிடையே இச்சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இலங்கையில் உள்ள வேறு எந்த இனக் குழுவினர்களைச் சேர்ந்தவர்களுக்குமே, இது பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. மாணவர் விமலராஜன் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்திற்கும் மேலாக எந்தவித விசாரணையோ அல்லது அவர் மீதான எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இறுதியில், வடக்குப் பிரதேசப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டக் கூட்டங்களை நடத்தும் நடவடிக்கையில் இறங்கினர். இதன் காரணமாக, விமலராஜனையும் அவரைப் போன்று தடுத்து வைக்கப்பட்டிருந்த வேறு பலரையும் அரசாங்கம் விடுதலை செய்தது. இதுமாதிரியான ஒடுக்குமுறைச் சட்டங்களை நாடாமலே, சாதாரண மனித உரிமைகள், அவை தொடர்பான சட்டத்தின் ஆட்சித் தரநிலைகள் என்பவை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், இத்தகைய எதிர்ப்பலைகள் அனைத்தையும், அவற்றால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளையும் தவிர்த்திருக்கக் கூடியதாக இருந்திருக்கும். உண்மையில், பல்கலைக்கழக மாணவர் விமலராஜனின் தொடர்ச்சியான தடுப்புக் காவல் குறித்த போராட்டங்களின் போது பேசியவர்கள், அரசாங்கத்திற்கும் TULFக்கும் இடையே தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நடைபெற்று வரும் ‘பேச்சுவார்த்தை’ அர்த்தமற்றது என்று வெளிப்படையாகவே விமர்சித்தனர்; ஏனென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், அரசினால் தமிழர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாமல் தான் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

16. இலங்கையின் இந்தச் சட்டத்தின் ஆட்சேபனைக்குரிய பல அம்சங்கள், தென்னாபிரிக்காவில் இருந்ததும், பரவலாக விமர்சிக்கப்பட்டதுமான 1967ஆம் ஆண்டின் பயங்கரவாதச் சட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட இனவெறி (Apartheid) முறையைக் கொண்டிருந்த தென்னாபிரிக்கா போன்ற ஓர் இனவெறி அரசுக்கு, இது அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்காது தான்; ஆனால், ‘அனைவருக்கும் வாக்குரிமை’ (Universal Adult Franchise) கிடைத்து 50 ஆண்டுகளைக் கொண்டாடும் ஒரு நாட்டின் மக்களுக்கும், ஜனநாயக, ‘தர்மிஷ்ட’ (அறநெறி சார்ந்த) கொள்கைகளைப் பின்பற்றுவதாகப் பெருமை பேசுகின்ற இந்த அரசாங்கத்தின் கீழ் வாழும் மக்களுக்கும் கூட, இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாக இருக்க முடியாது.

17. ஆனால், இந்தச் சட்டம் ஏற்படுத்தும் உண்மையான பாதிப்பு என்னவென்றால், இதன் செயல்பாடுகள், கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட நபர்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதுதான். இச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதும் செயல்படுவதும் ஒட்டுமொத்தச் சமூகத்தையே – குறிப்பாக வடக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களை – பெரும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இது அவர்களை ஆழ்ந்த அச்சத்திற்கும், பெருகிவரும் பாதுகாப்பற்ற உணர்வுக்கும் உள்ளாக்குகிறது; இந்த உணர்வு சுதந்திரத்திற்குப் பிந்தைய 1958ஆம் ஆண்டுக் கலவரங்களின் போதே தொடங்கி, 1977ஆம் ஆண்டு நிகழ்ந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான இனவெறித் தாக்குதல்களால் மேலும் தீவிரமடைந்துள்ளது.

18. வடக்குப் பகுதியின் ஒட்டுமொத்த ‘சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட சூழலில்’ நிலவும் கவலைக்குரிய ஒரு அம்சம் என்னவென்றால், அங்கு ஆயுதப் படைகள் செயல்படும் விதமாகும். இப்போது (1982ஆம் ஆண்டின் மத்தியில்) ஏறக்குறைய தினமும், வீதிகளில் உள்ள சந்திகள் அல்லது பிற பொது இடங்களில், பொதுமக்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. சோதனையின் போதும், அவை முடிந்த பின்பும் அவர்கள் முரட்டுத்தனமாக நடத்தப்பட்ட பின்னரும் கூட, சோதனைக்குள்ளானவர்களில் சிலர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுகிறார்கள். இத்தகைய அனுபவங்கள், இலங்கையின் ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில்’ தமிழர்களால் ஒருபோதும் பங்களிக்க முடியாது என்ற நிலைமையையே உருவாக்குகின்றன.

19. மேன்மைதங்கிய தங்களது ‘தர்மிஷ்ட அரசாங்கம்’, வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்டதும், எளிதில் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியதும், அதேவேளையில் பாரம்பரியமாக அமைதியை விரும்பும் ஒரு சமூகத்திற்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தக் கூடியதுமான இந்தச் சட்டத்தை நீட்டிக்க விரும்பாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

20. உண்மையில், உண்மைகள் சுட்டிக்காட்டுவது போல, இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம், குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ள ஒரு சட்டமேயாகும். இச்சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டு காலத்துக்குப் பிறகு, ஆனைகோட்டையில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது; இதில் துப்பாக்கிகளுடன் தப்பிச் சென்றபோது இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். 1971இல் நடந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சிக்குப் பிறகு, இலங்கையின் வடக்குப் பகுதியிலோ அல்லது வேறு எங்குமோ இத்தகைய சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.

21. இலங்கையில் இன மோதல் வன்முறை என்பவை குறித்த 1981ஆம் ஆண்டின் ‘சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு’ (International Commission of Jurists) வெளியிட்ட அறிக்கையில், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் செயற்திறன்’ என்ற தலைப்பின் கீழ், இச்சட்டம் எந்தளவுக்குச் செயலற்றதாக இருந்தது என்ற விடயம் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

“இலங்கை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகள், மனித உரிமைகள் சார்ந்த கண்ணோட்டத்தில் வெறுமனே ஆட்சேபனைக்குரியவை மட்டுமல்லாமல், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இச்சட்டம் பயனுள்ளதாக இருக்குமா என்பதும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. எனவே, பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்கான அவசியமான ஒரு வழியாக, மனித உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகத் தோன்றவில்லை. இச்சட்டம் இயற்றப்பட்ட 1979ஆம் ஆண்டிலிருந்து, வடக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், பயங்கரவாதம் குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளது. மக்கள் மீதான, காவல்துறை, இராணுவம் ஆகியவற்றின் கண்காணிப்பு அதிகரிப்பும் கூட, வன்முறையைக் கட்டுப்படுத்தவில்லை; மாறாக அதை, அவை மேலும் வளர்த்து வருவதாகவே தெரிகிறது. வன்முறைக்கு இட்டுச் செல்லும் அடிப்படைக் காரணங்களைக் கையாள்வதற்குப் பதிலாக, ஆயுத வலிமையைக் கொண்டு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முயன்ற சில நாடுகளின் அனுபவத்தைப் போன்றதே இதுவும் ஆகும்.”

22. 1977இல் ‘குற்றவியல் நீதிக் கமிசன் சட்டம்’ (Criminal Justice Commission Act) இரத்துச் செய்யப்பட்டபோது, அது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதால் மேன்மைதங்கிய தங்களால் அது விமர்சிக்கப்பட்டது. அத்துடன் இத்தகைய ஒரு சூழல் மீண்டும் இந்நாட்டில் ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன் என்றும் அப்போது கூறினீர்கள் (21.10.77 தேதியிட்ட ஹன்சார்ட் அறிக்கை, பத்தி 1866). ஆனால், 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை இன்னமும் மோசமாக மீறுகின்ற ஒன்றாகும்; இது நிச்சயமாக மேன்மைதங்கிய தங்களது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.

23. ‘வரலாறும் தமிழ் ஈழமும்’ என்ற தனது கட்டுரையில் பேராசிரியர் சி.ஆர். டி சில்வா குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையின் வரலாறு முழுவதும் ‘ஒற்றுமை’ எனும் கோட்பாடு வலுவாக இருந்து வந்துள்ளது தான். ஆயினும், “நீதியின் அடிப்படையிலேயே இக்கோட்பாட்டைத் தக்கவைக்க முடியும்” என்பதும், நீதியும் நியாயமான அணுகுமுறையும் உறுதிப்படுத்தப்படாவிட்டால், நடைமுறையில் இந்த ஒற்றுமைக்கான சிந்தனை விரைவில் இல்லாமலே போகக்கூடும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

24. ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ போன்ற வெறும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஒருபோதும் ஒற்றுமையை ‘மேலிருந்து திணிக்கவோ’ அல்லது பிளவுகளைத் தவிர்க்கவோ முடியாது. அத்துடன், இத்தகைய சட்டங்கள் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒருபோதும் உறுதியான அடிப்படையாக அமையவும் முடியாது.

25. மேன்மை தங்கிய தங்களது கவனத்துக்கு நாங்கள் முன்வைக்கின்ற பணிவான வேண்டுகோள் என்னவென்றால்:

26. இச்சட்டத்தை இயன்றவரை விரைவாக இரத்துச் செய்து, கைது, சித்திரவதை, திடீர் மரணம் என்பவை குறித்த எத்தகைய அச்சமுமின்றி, ஜனநாயகமும் ‘தர்மிஷ்ட’ நெறி சார்ந்த ஆட்சியும் நிலவும் ஒரு நாட்டில் தமிழ் மக்கள் வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதுடன்,

27. அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்து, ஒரு தேசமாக வலுவாகக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 வி. மாணிக்கவாசகர்,

தலைவர், CINTA, 

78/1, வார்ட் பிளேஸ், கொழும்பு – 7.

ஜே.கே. ரத்னானந்தன்,

கௌரவ செயலாளர், CINTA,

தெஹிவளை.                                                             

பிரதிகள்:

(1) கௌரவ பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர்.

(2) கௌரவ நீதி அமைச்சர்.

(3) கௌரவ எதிர்க்கட்சித் தலைவர். 



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்