கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

கந்தரோடை நாகரிகத்தின் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும் – பகுதி 2

May 14, 2026 | Ezhuna

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கான நேரடி எழுத்துப் பதிவுகள் குறைவாக இருந்தாலும், தொல்லியல் அகழாய்வுகள் இதன் பழங்காலக் குடியேற்றங்கள், பண்பாடு, மற்றும் சமூக – பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வெளிக்கொணருகின்றன. அதன் அடிப்படையில் கந்தரோடை, பண்டைய யாழ்ப்பாண நாகரிகத்தின் ஆதிகேந்திரமாக விளங்கிய ஒரு முக்கியப் பகுதி ஆகும். தொல்லியல் ஆய்வுகள், பொ.யு.மு. 500 ஆம் ஆண்டளவில் கந்தரோடை ஒரு நகரமாகி விட்டதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த இடத்தில் அடர்த்தியான மக்கள் குடியேற்றம் அன்றிலிருந்து இன்றுவரை, மத்திய காலத்தில் ஒரு சிறு இடைவெளியைத் தவிர, தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. நாணயவியல், தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் பொ.யு. எட்டாம் நூற்றாண்டுவரை கந்தரோடை பண்டைய யாழ்ப்பாணமான நாகநாட்டின் தலைநகரமாக விளங்கி வந்திருப்பதைக் காட்டி நிற்கின்றன. கந்தரோடையிலும், அதன் பெருங்கற் பண்பாட்டின் தாக்க விளைவுகளுக்கு உட்படுத்தப்பட்ட வடஇலங்கையின் ஆதி இரும்புக்கால மையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகளைக் கொண்டு எழுதப்படும் ‘பண்டைய யாழ்ப்பாணத்தின் கந்தரோடை நாகரிகம்’ என்னும் இக் கட்டுரைத் தொடர் வடஇலங்கையின் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும், வரலாற்று உதய காலங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், ஆளுமை, பண்பாடு, பெருமுயற்சி, துணிவாண்மை என்பனவற்றின் பரந்த காட்சிப்பதிவாக விளங்கும்.

3. வாழ்வாதாரப் பொருளாதார நடவடிக்கைகள்

கந்தரோடையும் அதன் துணைக் குடியேற்றங்களும் பன்முக வாழ்வாதார முறைகளைக் கடைப்பிடித்த தன்னிறைவான அலகுகள் ஆகும். இவை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பரவைக்கடல் மீன்பிடி ஆகியன இணைந்த வாழ்வாதார முறைகள் எனலாம். ஆனால் இந்நாட்டு வர்த்தகர்களின் உதவியோடு முன்னெடுத்த பெருங்கடல் வர்த்தகமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு அளித்த முயற்சி எனலாம்.

உணவுப் பொருட்கள்

உணவு, உடை, உறைவிடம் ஆகியவை நாகரிகமடைந்த சமூகங்களின் அடிப்படைத் தேவைகளாகும். குடிசைகள், வீடு வாசல்கள் என்பவற்றைப் பெருங்கற்கால மக்கள் தமது குடியிருப்புகளில் ஏற்படுத்திக் கொண்டனர். உணவைப் பொறுத்தவரையில் நெல், வரகு (Kodo millet), சாமை (Little millet) ஆகிய தானியங்கள் கந்தரோடை அகழ்வுகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பருத்தி உடை பற்றிக் கிடைத்த ஆதாரங்கள் மிகச் சொற்பமானவை.

பண்டைய நாகநாட்டிலே தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டமைக்கான மறைமுகமான சான்றுகள் கள ஆய்வுகளில் கிடைத்த உருப்படிகள் மூலம் கிடைக்கின்றன. தானியங்களோடு காய்கறி வகைகளும், மச்ச மாமிசங்களும் உணவுப் பொருட்களாகப் பயன்பட்டன. நெல்லரிசி, வரகு என்பவற்றின் சோற்றுடன் கஞ்சி, கூழ் என்பவற்றை உண்பதும் பழங்காலத் தமிழரின் வழமையாகும். நாகநாட்டில் முல்லைப் பாங்கான நிலம் இன்மையால் காட்டு மிருகங்களை வேட்டையாடும் வசதிகள் இருக்கவில்லை. பெருங்கற்கால மக்கள் வளர்ப்பு மிருகங்களின் மாமிசத்தை உண்டமைக்கான சான்றுகள் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கிடைத்துள்ளன. ஆடு, மாடு, பறவைகள் ஆகியவற்றின் எலும்புகள் கந்தரோடை அகழ்வுகளில் கிடைத்துள்ளன. கடலேரியிலும், ஆழ்கடலிலும் கிடைத்த பிராணிகளை உணவுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. சுறா மீன்களின் தண்டுகள், சிப்பி, நத்தை ஓடுகள், ஆமையோடுகள் ஆகியன ஆனைக்கோட்டை அகழ்விலும், மற்றைய சிறுதீவுகளின் தொல்லியல் ஆய்வுகளிலும் கிடைத்துள்ளன (பத்மநாதன், சி. 2024: 75).

கடலாமைகள் அளவிற் பெரியவை. ஆழங்குறைந்த யாழ்ப்பாணக் கடலேரியில் அவை மிகுதியாகக் கிடைத்தன. 1950ஆம் ஆண்டுவரை அவற்றைப் பிடித்துக் கடற்கரையில் கவிழ்த்து வைத்திருப்பதை நாவாந்துறையிலே காண முடிந்தது. பின்னர் ஆமை வேட்டை சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டது. ஏறக்குறைய 75 வருடங்களுக்கு முன்புவரை கடலேரியின் கடலோரப் பகுதிகளில் சிப்பிகள் பெருகியிருந்தன. அவை ஆழங்குறைந்த கரையோரங்களில் விளைந்தமையால் அவற்றைச் சிரமமின்றிப் பொறுக்கிக் கொள்ள முடிந்தது. தொடர்ச்சியாக அவை பெருமளவில் பிடிபட்டதால் இனப்பெருக்கமின்றி அவை அற்றுப்போகும் நிலை ஏற்பட்டது. இரண்டு சிப்பி ஓடுகளின் இடையே மாமிசம் இருக்கும். சிப்பிகளை கலமொன்றிலிட்டு அவித்த பின்னர் ஓடுகள் கழன்று வரும். சிப்பியின் ஊனைச் சமைத்து உண்பார்கள் (பத்மநாதன், சி. 2024: 75).

நீர்ப்பாசன விவசாயம்

விவசாயத்தின் அறிமுகம் வளமான மண்ணும் நீர் வசதியும் கொண்ட வண்டல் சமவெளிகளுக்கு மக்களின் புதிய குடியேற்றங்களை இடமாற்றம் செய்ய வைத்தது. மழையையும், வெய்யிலையும், காற்றையும், புயலையும் தாங்கக்கூடிய புதிய குடியிருப்பிடங்கள் அமைக்கப்பட்டன. முன்னர் வேட்டையாடிய சமூகங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் மக்களை ஈர்த்த பகுதிகளான மலைகளும், குகைகளும், காடுகளும், வனங்களும் தனிமைப்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட பகுதிகள் ஆயின. விவசாய நடவடிக்கைகள் கிராமங்களையும் நகரங்களையும் உருவாக்கி, அதன் விளைவாக மக்கள் சமூகத்தை தொழிற் குழுக்களாகப் பிரிவுபட வைத்தன. ஒரு குறிப்பிட்ட குழுவினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, விவசாயம் செய்ய வசதியற்றவர்கள் வருவாய்க்காக மற்றைய தொழில்களை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் நெல் வயல்கள் உள்ள இடங்கள். நன்றி: பொ. இரகுபதி.

யாழ்ப்பாணத் தீபகற்பத்திலிருந்த இரு குளங்களில் பெரியது கந்தரோடையில் இயற்கையாக அமைந்த கந்தரோடைக் குளம். நல்ல குடிநீர்க் குளமாக இது இருந்தமையால் அதற்குச் சமீபமாக ஆரம்பகாலக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. இக்குளத்திலிருந்து வெட்டிய வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சி விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாயின. இம்மக்களில் ஒரு குழுவினர் தச்சுவேலை செய்து ஏர்களைத் தயாரித்தார்கள். இன்னொரு குழுவினர் இரும்பு வேலை பார்த்து ஏர்முனைக் கொழுக்களைத் தயாரித்தார்கள். மந்தை வளர்ப்பை மேற்கொண்டோரிடமிருந்து உழவுக்கு வேண்டிய காளை மாடுகளைப் பெற முடிந்தது. நாளடைவில் பெருமளவில் நீர்ப்பாசன நெல் விவசாயமும், வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களின் பயிர்ச்செய்கையும் வளர்ச்சி பெற்று, கணிசமான மக்கள் தொகையினருக்கு கந்தரோடையில் வாழ்வாதாரத்தை வழங்க முடிந்தது.

கந்தரோடைக்கு வெளியே நாட்டில் இயற்கையாக அமைந்த சிறு குளங்கள் இருந்தன. நாளடைவில் மக்கள் பல குளங்களைத் தாங்களே தோண்டினார்கள். யாழ்ப்பாணத்தில் மேலுள்ள மண்ணடுக்கின் கீழ் அமைந்துள்ள சுண்ணாம்புக்கற் தளத்தின் மேற்பரப்பில் தேங்கிய நன்னீர் கிடைக்கும். இரும்பினாலான மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கல்வெட்டும் குண்டுக் கோடரிகளையும் கொண்டு மக்கள் தங்களுக்கு வேண்டிய குடிநீர்க் கிணறுகளைத் தோண்டினார்கள்.

ஆரம்ப இயல்களில் குறிப்பிட்டது போல தீபகற்பத்தில் நெல் வளர்ப்பிற்கு மிக உகந்த இடங்கள், மேற்கே பரவைக் கடலுக்குச் சமீபமாக உள்ள கடற்கரைக் கார நீட்சி (Alkaline stretch along the lagoon coast), மழைவெள்ள வாய்க்கால்களின் வடி நிலங்கள், சிற்றேரிகளையும் குளங்களையும் சுற்றிவர உள்ள காணி நிலங்கள் என்பனவாகும். யாழ்ப்பாணத்தின் ஆதிக் குடியேற்றங்கள் அனைத்தும் தங்களது குடியேற்ற நிலங்களுக்கு அருகிலுள்ள நிலங்களில் ஒரு நெல்வயலைக் கொண்டிருந்தன (Paddy-field Hinterland) என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெல் வயல்களில் வருடத்தில் ஒரு தடவை பருவமழையின் போதுதான் பயிரிட முடியும். அறுவடையின் பின் மேலதிகமான நெல் சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் பாவிக்கப்படும். மாரி முடிந்து தை மாத அறுவடையின் பின்னர் பயறு வகைகள், எள், ராகி, முலாம்பழம், காய்கறிகள் என்பன இந்நிலங்களில் பயிரிடப்படும். இவற்றை ஏப்ரல் மாதப் புத்தாண்டு முதலாக அறுவடை செய்ய முடியும். இந்தப் பாரம்பரியச் சாகுபடி முறை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இன்றுவரை நடைமுறையில் உள்ளது (Ragupathy, P. 1987: 144).

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் கந்தரோடைக் குளத்தைத் தவிர இயற்கையாக அமைந்த நந்தாவில் குளமும் வேறுபல சிறிய குளங்களும், தடாகங்களும், நீர்நிலைகளும் காணப்படுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் குளங்களோடு சம்பந்தமுடைய ‘வில்’ என்னும் விகுதியில் முடியும் இடப்பெயர்கள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகிறது. கோண்டாவில், கொக்குவில், நந்தாவில் ஆகிய பெயர்கள் இவற்றில் சில. இப்பெயர்கள் இவ்வூர்களில் ‘வில்’ போன்ற அமைப்பினாலான சிறிய குளங்கள் காணப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றன. சில இடங்களில் சுண்ணாம்புக் கற்பாறை நிலத்தில் அமிழ்வதால் இத்தகைய குளங்கள் தோன்றியுள்ளன (Inundation of the Limestone Rocks) எனக் கூறப்படுகிறது. இவ்வாறு நீர் தங்கும் இடங்களில் நீரைத் தேக்குவதற்கு அணையை வில் போன்ற வடிவத்தில் அமைத்ததால் இப்பெயர் உருவாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவற்றோடு இக்காலத்தில் ‘துரவுகள்’ எனப்படும் கிணறுகள் மணற் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு நிலத்திற்கடியிலுள்ள நீரும் விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன (சிற்றம்பலம், சி.க. 1993: 447).

இதைத்தவிர மழைக்காலங்களில் பெருகியோடும் வெள்ளத்தை நம்பியும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறுவதற்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெள்ள வாய்க்கால்கள் முக்கிய பங்கை வகித்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய வெள்ள வாய்க்கால்களில் ஒன்றாகிய வழுக்கையாற்றின் அருகில் கந்தரோடை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுவனில் ஆரம்பமாகும் வழுக்கையாறு தெல்லிப்பழை, அளவெட்டி, கந்தரோடை, கட்டுடை, நவாலி ஊடாகக் கல்லுண்டாயை அடைந்து மேற்கே பரவைக் கடலை அடைகிறது. உரும்பிராய் கிராமத்தில் ஆரம்பமாகும் சிப்பித்தரை வாய்க்கால் கோண்டாவில், நந்தாவில், கொக்குவில், வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை வழியாக ஓடி யாழ்ப்பாணப் பரவைக் கடலில் வடிகிறது (Ragupathy, P. 1987: 144). நந்தாவில் என்ற கிராம நிலமும் குளமும் பள்ளத்திலிருந்தது. பல மாதங்களுக்கு வெள்ளநீர் அங்கே தங்கியிருக்கும். “நாடு விளைஞ்சால் நந்தாவில் விளையாது. நாட்டில் பஞ்சம் என்றால், நந்தாவில் செழிக்கும்” என்றொரு பழமொழி உள்ளது.

நாகநாட்டின் பெருநிலப்பரப்பில் காணப்படும் பல பெரிய குளங்களின் தோற்றத்தினையும் பெருங்கற் பண்பாட்டுடன் இணைத்துப் பார்க்க முடிகிறது. இப்பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் மாமடுவக் குளம் இக்காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். வன்னிப் பகுதியிலுள்ள பெரிய விவசாயக் குளங்களான மாமடுவக் குளம், இரணைமடுக்க் குளம், கனகராயன் குளம், கட்டுக்கரைக் குளம் ஆகியவை பெருங்கற்காலக் குடியேற்றங்களின் ஆரம்ப காலங்களில் கட்டப்பட்டவை. காலப்போக்கில் இக்குளங்களிலிருந்து திட்டமிடப்பட்ட தொழில்நுட்பப் புத்தாக்கங்களின்படி நீர்ப்பாசன வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன.

பெருங்கற் பண்பாட்டில் விவசாயம் பெற்றிருந்த முக்கியத்துவத்தை குளங்கள், நெல்லின் படிமங்கள் மட்டுமன்றி அக்கால மக்கள் பயன்படுத்திய இரும்பினாலான கருவிகளும் எடுத்துக்காட்டுகின்றன. கோடரிகள், கத்திகள், மண்வெட்டிகள், அரிவாள்கள் போன்ற கருவிகள் மட்டுமன்றி இரும்பினாலான கொழுக்களும் அகழ்வுகளில் கிடைத்திருக்கின்றன (சிற்றம்பலம், சி.க. 1993: 449).

கந்தரோடை தானியப் பயிர்களின் கதிரியக்கக் கரிமத் திகதிக்கணிப்பு – 2018

2018 ஆம் ஆண்டில் பேராசிரியர் பார்பரா ஹெல்விங் தலைமையில் ஜேர்மனிய தொல்லியல் ஆய்வுக்குழு கந்தரோடையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட போது, அக்குழுவில் இருந்த இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (University College London) தொல்தாவரவியல் பேராசிரியர் டொரியன் ஃபுல்லர் அகழ்வுக் குழியில் கண்டெடுத்த நெல்லையும், தினை, சாமை ஆகிய தானியங்களையும் கதிரியக்கக் கரிமத் தேதிக்கணிப்புகளுக்கு அனுப்பிவைத்தார்.

அக்குழியில் கண்டெடுத்த தானியங்களில் நெல் கி.மு. 380 ஆண்டையும், வரகு கி.மு. 350–305 ஆம் ஆண்டுகளையும், சாமை கி.மு. 180–40 ஆம் ஆண்டுக் காலங்களையும் காட்டின. இதனோடு ஒப்பிடுகையில், தென்னிலங்கையில் மகாகமை நாகரிகத்தின் மையமான கிரிந்த என்ற இடத்தில் மேற்கொண்ட அகழ்வுகளில் கண்டெடுத்த நெல் கி.பி. 384 – கி.பி. 895 ஆண்டுகளைக் காட்டியிருக்கிறது.

இக் காலக்கணிப்பு அவர்கள் அகழ்வாய்வுகளை மேற்கொண்ட ஒரு குழியில் கண்ட தானியங்களின் காலக் கணிப்பாகும். அக்குழியில் எந்த மட்டத்திலிருந்து தானியங்களை எடுத்தார்கள் என்பது தெரியாது. ஒரு குழியில் மட்டும் காணப்படும் பொருட்களைக் கொண்டு கணிப்பிடும் காலத்தை ஆரம்பகாலக் குடியேற்றங்களின் விவசாய நடவடிக்கைகளைக் காட்டும் காலம் எனக் கூற இயலாது.

Radiocarbon Dates for Rice and Millets at Kantharodai – 2018

Courtesy: Charlene Murphy/ Dorian Q. Fuller (01.06.2018) UCL

Rice (அரிசி): 380 BCE        

Kodo millet (வரகு): 350 – 305 BCE

Little millet (சாமை): 180 – 40 BCE

பனை மரம் – யாழ்ப்பாணத்தின் பாரம்பரியப் பெருவளம்

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெருமைக்குரிய பனைமரம் (Borassus Flabellifer) ஆரம்ப காலத்திலிருந்தே யாழ்ப்பாண மனிதனின் பாரம்பரியப் பெருவளமாக இருந்தது. இம்மரம் அவனது ஆரம்பகால வாழ்வாதாரத்தில் முக்கியமானதொரு பங்கை ஆற்றியிருக்கிறது. உயிருடன் நூற்றாண்டுக் காலம் வாழ்ந்து, இறந்த பின்னரும் நூற்றாண்டுக் காலம் உதவும் இந்த மரம் நூற்றுக்கணக்கான உதவிகளை மக்களுக்கு வழங்கி வந்திருக்கிறது. பனை மரங்களில் ஆண்மரம், பெண்மரம் என்ற வேறுபாடு உண்டு. பனை தொடர்ந்து அளித்துவரும் பயன்களை முன்னிலைப்படுத்திய மக்கள் பனையைத் தங்கள் தேசிய மரமாகவும், சின்னமாகவும், தேசிய கொடியாகவும் பாவித்துப் பனையின் சிறப்பினை உலகறிய வைத்துள்ளனர். ஆனைக்கோட்டை அகழ்வில் கண்டெடுத்த அரச முத்திரையில் மேல் வரியில் காணப்படும் சின்னம் இரட்டைப் பனைமரம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பனங்காயில் காணப்படும் விதையிலிருந்து வளரும் கன்று நான்கு ஆண்டுகளில் ஆழுயர வடலியாக வளர்கிறது. மேலும் இருபது ஆண்டுகளில் 36 முதல் 44 மீற்றர் உயரமான மரமாக வளர்ந்துவிடுகிறது. இதை வளர வைக்க நீர்விட வேண்டியதில்லை. ஆண்டு தோறும் பெய்யும் மழைநீரைத் தேக்கி வைத்து வளர்ச்சி காணும் வலுவான ‘உடல்வாகு’ இந்த மரத்திற்கு உண்டு. யாழ்ப்பாண உழவனின் வலுவான உடற்கட்டு இந்த மரத்திற்கு ஒப்பிடப்படும்.

ஒவ்வொரு பனைமரமும் ஒவ்வொரு தடவையும் ஆறு முதல் பன்னிரண்டு பழங்களைக் கொண்ட குலைகளாக, ஆண்டிற்கு 300–350 பழங்களைத் தரும். முதிர்ந்த பழங்கள் நீள்வட்ட வடிவான 15×12 செ.மீ. அளவு கொண்டவை. வெளித்தோல் கறுப்பு அல்லது மண்ணிற நிறத்தில் வழுவழுப்பான தோல் போன்று காட்சியளிக்கும். பழங்களின் உள்ளே இனிப்பான சாறு நிறைந்த நீண்ட கடினமான வெள்ளைத் தும்பு நார்களில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் கூழ் படிந்திருக்கும். இப்பழங்களைச் சூடாக்கி, நார்களிலிருந்து கூழைப் பிரித்து வெளியே எடுத்து அதைக் காயவைத்து பனாட்டு, பனம் பணியாரம் என்பவற்றைச் செய்வார்கள்.

முதிர்ந்த பனங்காயினுள்ளே மூன்று நீள்வட்ட வடிவான வெண்ணிற ஓட்டு விதைகள் காணப்படும். இவற்றினுள்ளே இனிமையான வெண்ணிற திண்மக்கூழ் (Jelly) காணப்படும். இதை நுங்கு என்பார்கள். 

பனை தரும் பிரபல தயாரிப்பு இனிப்புச் சாறான கள் ஆகும். பனம்பூந்தாளையின் நுனியை வெட்டி, அதன் கீழே ஒரு மண் முட்டியைக் கட்டி கள்ளை வெளியே எடுப்பார்கள். ஒரு பூந்தாளைச் சாறு ஒரு நாளைக்கு 4–5 லீற்றர் அளவு கள்ளை வடியவிடும். இப்படியே ஆண்டுக்கு 200 நாட்களுக்கு இந்தக் கள்ளை எடுக்க முடியும். மரங்களில் பெண்மரம் ஆண் மரங்களைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகமான கள்ளைத் தருகிறது.

கள்ளை ஒரு மட்பாண்டத்தில் சேகரித்து வைத்தால் அது இயற்கையாகவே நொதித்து (Fermentation) சாராயமாக மாறுகிறது. அதை வடிகட்டி எடுத்துக் கொள்வார்கள். கள்ளைச் சேகரிக்கும் மட்பாண்டத்தின் உள்ளே சுண்ணாம்பைப் பூசி அதனுள்ளே கள்ளைச் சேகரித்து வைத்தால் அது நொதிக்காமல் மறுநாள் இனிமையான பதநீராகிறது. பதநீரைக் கொதிக்க வைத்து, செறிவூட்டி, களியாக்கி, கட்டியான கருப்பட்டியாக ஆக்குவார்கள். சீனாவிலிருந்து சீனி பாவனைக்கு வர முன்னர் கருப்பட்டியே நீராகாரங்களை இனிமையாக்கப் பயன்படுத்தப்பட்டது. காய்ச்சல் நேரங்களில் இஞ்சி துண்டுகளை நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டியுடன் கலந்து குடிக்கக் கொடுப்பார்கள். இது இஞ்சிநீர் எனப்படும்.

நிலத்தில் நட்ட பனை விதைகளிலிருந்து வளரும் கொழுத்த வேர்கள் கொதிக்க வைக்கப்பட்டு பனங்கிழங்குகளாக உட்கொள்ளப்படும். அல்லது காயவைத்து உலர்ந்த தின்பண்டங்களான புழுக்கொடியலாக உட்கொள்ளப்படும். அல்லது கொதிக்க வைக்காமல் பச்சையாகக் காய்ந்த ஒடியலாக்கி, அதை இடித்து மாவாக்கி அப்பம், ரொட்டி, பிட்டு என்பன செய்வார்கள்.

பனை ஓலைகள் வீட்டின் கூரை வேய்வதற்கும், வளவு வேலி அடைப்பதற்கும், பாய் பின்னுவதற்கும், பெட்டி, கடகம், கூடைகள், நீர் இறைப்புப் பட்டை, தொப்பி, கை விசிறி போன்ற பலவகையான பாவனைப் பொருட்கள் செய்வதற்கும் உபயோகப்படுத்தப்பட்டன. பனை ஓலைகளைக் கொண்டே எழுத்தாணி கொண்டு எழுதிய ஓலைச் சுவடுகளும், ஏடுகளும் தயாரிக்கப்பட்டன. ஆதிகாலத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்தப் பனையோலை ஏடுகள் மூலமே மக்களுக்கு அறிமுகமாயின.

பனைமரம் இறந்த பின்னரும் பயன் தருவது. மரத்தை மூடியிருக்கும் நார்த்திசுத் தோல் நீண்ட கீற்றுகளாக உரிக்கப்பட்டு பலமிக்க நீண்ட கயிறுகளாகப் பின்னப்படும். நீண்ட முழு மரங்கள் கிணறுகளிலிருந்து நீர் இறைக்கும் துலாக்களாக ஆக்கப்பட்டன. அம்மரங்களின் கடினமான கருநிற மரக்கட்டைகள் கூரை விட்டங்களாகவும், கட்டட இடுகைகளாகவும், மரச்சிலாகைகள் குறுக்குத் தடிகளாகவும் உபயோகப்படுத்தப்பட்டன. பனை மரத்தின் அடிப்பாகம் குடையப்பட்டு நீண்ட சிறு படகுகள் (Canoes) செய்யப்பட்டன.

பனைமரத்தின் பகுதிகள் நீண்டகாலமாக நாட்டு வைத்தியச் சிகிச்சைகளுக்குப் பாவிக்கப்பட்டன. பனங்குருத்தின் மென்மையான தளிர்கள் பித்தம், வயிற்றுப்போக்கு ஆகிய உடல்நலக் குறைவுகளுக்கு உகந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. இளம் வேர்கள் சிறுநீர் இறக்கிகளாக உதவின. பனைமரப் பாளைகளை எரித்த சாம்பல் நெஞ்செரிவிற்கும் வயிற்றின் அமிலத்தன்மைக்கும் அருமருந்தாகியது. மரப்பட்டை அவித்த நீர் உப்புடன் கலந்து வாய் கழுவும் மருந்தானது. எரித்த மரப்பட்டை பற்பொடியாகப் பாவிக்கப்பட்டது.

மிருக உணவுகள்

பெருங்கற் பண்பாட்டைப் பேணிய மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு மிருகங்களைத் தமது விவசாயத் தேவைக்கும், உணவுக்கும் பயன்படுத்தியதை அகழ்வுகளில் கிடைத்த மிருகங்களின் எலும்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றில் பிரதானமானவை எருது, ஆடு போன்ற மிருகங்களாகும். ஆனைக்கோட்டை அகழ்வுகளில் நிவேதனப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட எருதின் எலும்புகளும், கொம்புகளும் கிடைத்துள்ளதை நோக்கும்போது இம்மிருகம் இக்காலத்தில் மக்களால் நன்கு பேணப்பட்டமை தெளிவாகிறது. கந்தரோடை அகழ்வுகளில் கூரிய கருவிகளால் வெட்டப்பட்ட மாட்டெலும்புகள் கிடைத்திருக்கின்றன. இதனால் விவசாயத்துடன் இவை உணவாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது (சிற்றம்பலம், சி.க. 1993: 449).

இம்மக்கள் கடல்படு உணவுகளைப் பயன்படுத்தியதை ஆனைக்கோட்டை, கந்தரோடை, சந்திராந்தை ஆகிய இடங்களில் கிடைத்த மீன், சுறா, நண்டு, சிற்பி, சங்கு போன்ற பலவற்றின் எச்சங்கள் எடுத்துக்காட்டுகின்றன (Ragupathy 1987: 124–132). தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் வாழ்ந்த பரத குலத்தவர் தாம் மேற்கொண்டிருந்த மீன்பிடித் தொழிலில் கிடைத்த சுறாவின் எலும்புகளை வணங்கியதை பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் காணும் குறிப்புகள் எடுத்தியம்புகின்றன. ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சுறாவின் எலும்புகள் இப்பகுதி மக்கள் இவற்றை மாலையாக அணிந்தது பற்றிய தகவலை எடுத்துக்காட்டுகின்றன. அதுமட்டுமன்றி வவுனியா மாவட்டத்தில் கிடைக்கும் பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பரதவரைக் குறிக்கும் ‘பரத’ போன்ற பதங்கள், தமிழகத்தைப் போல ஆனைக்கோட்டையிலும் பரத குலத்தவர் இத்தொழிலில் ஈடுபட்டிருந்ததை உறுதி செய்கின்றன. பெருங்கற் பண்பாட்டில் விவசாயம், மந்தை வளர்ப்பு, மீன்பிடித்தல் ஆகியன முக்கியம் பெற்றிருந்ததோடு வேட்டையாடுதலும் இக்காலத் தொழில்களில் ஒன்றாக விளங்கியதை பல்வேறு பறவைகளின் எலும்புகள் மேலும் எடுத்துக்காட்டுகின்றன (சிற்றம்பலம் 1993: 450).

மந்தை வளர்ப்பு

யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியிருப்புகளில் கால்நடைகளை வீடுகளில் வைத்து வளர்த்து வந்தார்கள் என்பதை மாடுகளின் எலும்புகளும், பற்களும் அகழ்வுகளின் அடுக்கமைவு மட்டங்களில் பெருங்கற் பண்பாட்டு மட்பாண்டங்களுடன் காணப்படுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. இதைத் தவிர ஆடு மற்றும் செம்மறியாட்டு மந்தைகளையும் இவர்கள் வளர்த்து வந்தார்கள். இந்த நடைமுறையின் எச்சமாக இன்றுவரை அனலைதீவிற்கும் எழுவைத்தீவிற்கும் இடையிலுள்ள பருத்தித்தீவில் ஆட்டு மந்தைகளும், செம்மறியாட்டு மந்தைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன (Ragupathy, P. 1987: 144).

நெல் வளர்க்கும் நிலங்கள் போகம் முடிந்து கோடையில் தரிசு நிலங்களாக விடப்பட்ட பொழுதில் கால்நடைகளின் மேய்ப்பு நிலங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. இதைத் தவிர யாழ்ப்பாணத்தின் தரவை நிலங்கள் (மழைக்காலத்தில் நீரில் அமிழ்ந்து கிடந்த சதுப்பு நிலங்கள் கோடையில் நீர் காய்ந்து பசுமையான புற்தரைகளாக உள்ளவை) மந்தை மேய்வதற்கு ஏற்ற நிலங்களாகும்.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் கால்நடைச் செறிவைக் காட்டும் படம் நன்றி: பொ. இரகுபதி.

4. துறைமுகங்களும் படகுத்துறைகளும்

பெருந்துறைகள்: அ. யாழ்ப்பாணக் கோட்டைத்துறை (பண்ணைத்துறை)

கி.பி. 2017–18 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணக் கோட்டையில் உலகப் பிரசித்தி பெற்ற தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் றொபின் கொனிங்ஹாம் மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் பெறுபேறுகளின்படி, யாழ்ப்பாணக் கோட்டை இருக்கிற இடம் கி.மு. 1000ஆம் ஆண்டுக்காலம் முதலாக ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அகழ்வாய்வு அறிக்கையில் அவர் கூறியது: “யாழ்ப்பாணத்திற்குப் போர்த்துக்கேயர் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே யாழ்ப்பாணக் கோட்டை இருக்கிற இடமும், அதைச் சூழவர உள்ள நிலப்பரப்பும் மக்கள் குடியேற்றங்களாகவும், இந்து சமுத்திர வர்த்தக வலைப்பின்னலில் மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியாவுக்கு நடுவே இருந்த கேந்திர வணிக மையமாகவும் விளங்கிவந்திருப்பதை இக்கண்டுபிடிப்புகள் உறுதியாக நிலைநாட்டுகின்றன” (Davis, C. et al. 2017).

கி.மு. 1000ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து காணப்படும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்துண்டுகள், அக்காலத்தில் தமிழகத்தோடு இருந்த கடல்வழித் தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாண அகழ்வுகளில் கண்ட கி.மு. 500ஆம் ஆண்டிற்குரிய வட இந்திய மெருகேற்றப்பட்ட கறுப்பு நிற மட்கலன்களும், கி.மு. 500ஆம் ஆண்டிற்குரிய கிரேக்க மதுச்சாடிகளும், கந்தரோடை அகழ்வுகளில் கண்ட கி.மு. 500ஆம் ஆண்டுக் காலத்திற்குரிய வட இந்திய அச்சுக்குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கி.மு. 500ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் ஒரு பிரபல துறைமுகமாகிவிட்டதற்கான சான்றுகள். அதைத் தொடர்ந்து கி.மு. 300 முதல் கி.பி. 500 வரை நீடித்த எண்ணூறு ஆண்டுக்கால உரோம வர்த்தகமும், தொடர்ந்த பாரசீக, அரேபிய, சீன வர்த்தகங்களும் ஏற்கனவே இங்கு பேசப்பட்டன.

ஆ. யம்புகோளப் பட்டினம் – யம்புகோவளம்

‘யம்புகோள’ என்ற பெயர் வடிவமே யாழ்ப்பாணத்தின் வடபகுதியிலிருந்த துறைமுகத்தைக் குறிப்பிடும் சொல்லாகப் பாளி நூல்களில் இடம்பெற்றுள்ளது. மகாவம்சத்தில் வரும் குறிப்பில் இத்துறைமுகத்தினூடாகவே அசோகச் சக்கரவர்த்திக்குத் தேவநம்பிய தீசன் பரிசுப் பொருட்களுடன் ஒரு தூதுக்குழுவை அனுப்பினான் என்றும், அக்குழுவில் வணிகர்களின் தலைவன் செத்தி (செட்டி) இடம்பெற்றிருந்தான் என்றும் கூறப்படுகிறது (Mahavamsa, Ch. XI, Line 25–26). பொதுவாக வட இந்தியாவோடு கலாசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகமாக இருந்தாலும்கூட, இத்தூதுக்குழுவில் அடங்கியோரில் செட்டி பற்றிய குறிப்புக் காணப்படுவது வாணிப நடவடிக்கைகளிலும் இத்துறைமுகம் முக்கியம் பெற்றிருந்ததை எடுத்துக்காட்டுகிறது (சிற்றம்பலம் 1993: 459–460).

கலாநிதி ஹேமராம எல்லாவல ‘இலங்கையின் சமூக வரலாறு’ என்ற அவரது நூலில் இதே கருத்தினை வலியுறுத்தியிருந்தமை அவதானிக்கத்தக்கது.

“கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இலங்கை வட இந்தியாவோடு கொண்டிருந்த கலாசார, வாணிபத் தொடர்புகளைப் பொறுத்தமட்டில் எல்லாச் சான்றாதாரங்களும் வேறெந்தத் துறைமுகத்தையும் காட்டிலும் முக்கியம் பெற்றதாக யம்புகோளப் பட்டினம் வளர்ச்சி பெற்றதையே எடுத்துக்காட்டுகின்றன. யம்புகோளப் பட்டினத்திற்கு அருகில் உள்ள பகுதி வாணிப நகராக வளர்ச்சி பெற்றது மட்டுமன்றிப் பெருமளவுக்குப் பௌத்தர்களும் இங்கு வாழ்ந்தனர் எனவும் கருத இடமுண்டு” (Ellawala, H. 1969: 119).

கலாநிதி எல்லாவல குறிப்பிடும் யம்புகோள வாணிப நகரம் அக்காலத்தைய வாணிப மையங்களில் ‘யம்புப்பண்ணை’ என அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த யம்புப்பண்ணை காலப்போக்கில் ‘யாப்பண்ணை’யாகி, அதுவே இந்தத் தீபகற்பத்தின் யாப்பாணம், யாழ்ப்பாணம் என்ற பெயர் ஏற்படக் காரணமானது எனக் கருத இடமிருக்கிறது.

‘யம்புகோள’ என்ற பாளிமொழிப் பெயரில் வரும் ‘கோள’ என்ற பகுதி ‘கோவளம்’ என்ற தமிழ்ப் பதத்தின் பாளிப் பெயர்ப்பாகும். ‘கோவளம் என்றால் கடலுக்குள் துருத்திக்கொண்டிருக்கும் நீண்ட தரைமுனை எனப் பொருள்படும்’ என பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை (1976, ப. 46) அறியத்தருகிறார். இதனால் இப்பகுதி முன்பொரு காலத்தில் கடலை நோக்கி நிலநீட்சியாக நீண்டு காணப்பட்டதனால் இப்பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம். இப்பகுதி கடல்கோள்களினால் அழிந்துவிட்டதனால் இப்பட்டினம் பற்றிய தொல்லியற் சான்றுகள் நமக்குக் கிட்டாமற் போயிருக்கலாம் (சிற்றம்பலம், சி.க. 1993: 460).

இ. காயாத்துறை – காங்கேயன் துறை   

உலகம் முழுவதிலும் புத்த மதத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு வட இந்தியாவிலுள்ள புத்தகாயா (Now called Bodh Gaya) மிகவும் புனிதமானதொரு தலமாகும். பீகாரில் நிரஞ்சனா ஆற்றின் தீரத்தில் உருவெல என்ற கிராமத்தில் சித்தார்த்த கௌதமர் ஆறு ஆண்டுகள் உடலை வருத்தி தன்னொறுப்பு நோன்பு மேற்கொண்டிருந்தார். கி.மு. 250 ஆம் ஆண்டில் அசோகச் சக்கரவர்த்தி அவ்விடத்தில் பிரம்மாண்டமானதொரு கோயில் வளாகத்தைக் கட்டியிருந்தார். அதன் பின்னர் அத்தலம் ‘புத்தகாயா’ என அழைக்கப்பட்டது.

கி.பி. 100க்கும் கி.பி. 500க்கும் இடைப்பட்ட யாழ்ப்பாணப் பௌத்தத்தின் பொற்காலத்தில் இலங்கையின் பௌத்த சமய யாத்திரிகர் அனைவரும் ஏப்ரல் மாதத்தில் வட யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி புத்தகாயாவுக்கான வருடாந்த யாத்திரையை மேற்கொண்டார்கள். அக்காலத்தில் சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடு இருக்கவில்லை. எல்லோரும் சகோதர பாசத்துடன் பழகினார்கள் (கிறிஸ்துவுக்குப் பிந்தைய ஆரம்பகாலத்தில் ‘சிங்கள’ என்ற பெயர் மௌரியர், குப்தர், பாண்டியர், சோழர் எனக் கூறப்பட்டது போல அநுராதபுரத்து அரசர்களை மட்டுமே குறிப்பிட உபயோகிக்கப்பட்டது. கி.பி. 6ஆம்–7ஆம் நூற்றாண்டுகளில் சிங்கள மொழி உருவாக்கப்பட்ட பின்னரே அம்மொழியைப் பேசிய மக்கள் சிங்களவர் என அழைக்கப்பட்டார்கள் என பேராசிரியர் R.A.L.H. குணவர்த்தனா கருதுகிறார்).

அக்காலத்தில் அநுராதபுரத்திலிருந்து யம்புகோளப் பட்டினம் வரை ஒரு நீண்ட நெடுஞ்சாலை இருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இந்த நெடுஞ்சாலை முதலில் மேற்கே மாந்தை வரை சென்று அங்கிருந்து யம்புகோளம் வரை சென்றதாக அறியப்படுகிறது. 1950களில் மாந்தை அகழ்வுகளை மேற்கொண்ட சண்முகநாதன் இந்த வீதியின் ஒரு பகுதியை வெளிக்கொணர்ந்திருந்தார். யாழ்ப்பாணம் வந்த யாத்திரிகர்கள் கடற்பயணத்தை மேற்கொண்ட துறை ‘காயாத்துறை’ எனப் பெயர் பெற்றது (Thiagarajah, S. 2016: 259–260).

இந்தியாவைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் புதையுண்டு கிடந்த புத்தகாயா ஆலய வளாகத்தை சேர் அலெக்ஸாந்தர் கொனிங்ஹாம் அகழ்ந்தெடுத்து அதன் புராதன பெருமைக்குக் கொண்டுவந்தார்.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மாவிட்டபுரம் கந்தன் ஆலயம் கட்டப்பட்ட பொழுதில் சோழ நாட்டிலிருந்து காங்கேயன் (கந்தசுவாமி) விக்கிரகங்கள் காயாத்துறையில் வந்து இறங்கின. அதன் பின்னர் அத்துறைமுகத்தின் பெயர் காங்கேயன்துறை அல்லது காங்கேசன்துறை என்ற பெயர்களால் வழங்கப்படலாயிற்று (Thiagarajah, S. 2016: 260).

ஈ. நாவாந்துறை

பண்டைய நாகநாட்டின் தலைநகரான கந்தரோடைக்குச் சமீபமாக உள்ள துறைமுகம் நாவாந்துறை. யாழ்ப்பாணப் பரவைக் கடலில் கந்தரோடை வழியாக ஓடிவரும் வழுக்கை ஆறு சங்கமிக்கும் இடத்திற்கு அருகாமையில் இத்துறைமுகம் அமைந்திருக்கிறது. வணிகப் பெருங்கப்பல்கள் நெடுங்கடலில் தங்க, அவற்றிலிருந்து பொருட்களை ஏற்றிவரும் சிறிய தோணிகள் நாவாந்துறையில் தரித்துநின்றன. அங்கிருந்து வண்டிகள் மூலம் பொருட்கள் கந்தரோடைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

வழுக்கை ஆறு இக்காலத்தில் ஒரு வெள்ள வாய்க்காலாகச் செயல்படும் போதிலும், மனிதக் கரங்களால் வெட்டப்பட்ட இக் கடற்கால்வாய் வரலாற்றுக் காலத்தில் தோணிகளும், கட்டுமரங்களும், சிறு கலன்களும் சென்று வந்த நீர்வழி என சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் அமைந்த அன்றைய கந்தரோடை நகரத்தின் துறைமுகங்களாக அப்பிரதேசத்தின் வடக்கேயுள்ள யம்புகோவளம் மற்றும் காயாத்துறை, மேற்கேயுள்ள நாவாந்துறை, தெற்கிலிருக்கும் யாழ்ப்பாணக் கோட்டைத்துறை ஆகிய நான்கும் செயல்பட்டன.

கந்தரோடை அகழ்வுகளிலும், யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வுகளிலும் கண்டெடுத்த கி.மு. 500ஆம் ஆண்டுக்காலம் முதலாக ஐரோப்பியர் காலம் வரையான வெளிநாட்டுப் பொருட்கள், வெகுநீண்டகால வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளின் சான்றுகளாக அமைகின்றன.

கந்தரோடையூடாக வெள்ளம் பாயும் வழுக்கை ஆறு.

படகுத்துறைகள்

மேலே கூறப்பட்ட பெருந்துறைகளைத் தவிர யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் நான்கு பக்கங்களிலும் சிறிய தோணித்துறைகள் (Jetty Ports) காணப்படுகின்றன. இத்துறைகள் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகப் பொருட்களை ஏற்றி, இறக்கும் போக்குவரத்து நடுவங்களாகவும், மீன்பிடித்தொழிலின் மையங்களாகவும் செயற்பட்டு வந்திருக்கின்றன. இம்மையங்கள் கீழே காணப்படும் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தின் படகுத் துறைகளும் மீன்பிடி மையங்களும்: 

1. மாவலித்துறை, 2. நயினாதீவுத்துறை, 3. குறிகாட்டுவான், 4. கழுதைப்பிட்டி,

5. அனலைதீவு, 6. எழுவைதீவு, 7. காரைநகர், 8. ஊர்காவற்துறை, 9. வேலணை,

10. அராலி, 11. நாவாந்துறை, 12. பண்ணைத்துறை, 13. குருநகர், 14. கொழும்புத்துறை,

15. மாதகல்துறை, 16. காங்கேசன்துறை, 17. மயிலிட்டி, 18. வல்வெட்டித்துறை, 

19. பருத்தித்துறை, 20. தாளையடி. (நன்றி: பொ. இரகுபதி)

இத்துறைகளிலிருந்து செல்லும் தோணிகளும், சிறு கப்பல்களும் உள்நாட்டிலேயே செய்யப்படுகின்றன. ஆனைக்கோட்டை, வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் பெருங்கடலில் பயணிக்கக்கூடிய பெரிய தோணிகளைச் செய்யக்கூடிய வல்லுநர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். வல்வெட்டித்துறையில் செய்யப்பட்ட பெரிய பாய்க்கப்பல்கள் பண்டைய பெருங்கடல் வணிகக் கப்பல்களாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கட்டுமரங்கள் பெரும்பாலும் எல்லா மீன்பிடி மையங்களிலும் செய்யப்படுகின்றன. துளையிட்டு மர ஆப்புகளால் இணைக்கப்பட்ட மரக்கட்டைகள், மேலும் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டு கரையோரக் கடல்களில் மீன்பிடிக்க உபயோகப்படுத்தப்படுகின்றன. யாழ்ப்பாணக் கரைகள் முழுவதிலும் கோடை காலங்களில் ஆயிரக்கணக்கான கட்டுமரங்களைக் காணலாம். மக்கள் குடியேற்ற ஆரம்ப காலங்களிலிருந்து பாரம்பரியமாக கட்டுமரங்கள் இன்றுவரை உபயோகத்தில் இருந்து வருகின்றன.

ஆனைக்கோட்டையில் இக்காலத் தச்சர்களால் செய்யப்படும் நீண்ட தோணி.

5. தொடர்புப் பாதைகளும் உள்நாட்டு வர்த்தகமும் 

கடற்பாதைகள்

யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் நிலப்பரப்பு வரைபடத்தையும், ஆதியில் மக்களின் குடியிருப்புகள் அமைந்த பகுதிகளையும் கவனித்தீர்களேயானால் உள்நாட்டுத் தொடர்புகளுக்கு கடற்கரையோரமான பயணம் உகந்தது என்பதை உணர்வீர்கள். யாழ்ப்பாணப் பரவைக்கடலின் (கடலேரி) அமைதியான ஆழங்குறைந்த நீர் தீபகற்பத்தின் கரையோரக் கிராமங்களுக்கும் மேற்கேயிருந்த சிறுதீவுகளுக்குமிடையே சுமுகமான குறுக்குவெட்டுப் பாதைகளைக் கொடுத்திருந்தது. ஆரம்பகால பரவைக்கடல் போக்குவரத்துப் பற்றிய ஆய்வுகள் அக்காலத்திலிருந்த கீழ்க்காணும் நிலமைகளைக் காட்டுகின்றன.

  1. யாழ்ப்பாணப் பரவைக்கடல் இரு வடக்குத்திசை நுழைவாயில்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று காரைநகருக்கும் தலைநிலக் கரையிலுள்ள பொன்னாலைக்கும் இடையேயுள்ள கடற்பாதை. மற்றது காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையிலுள்ள கடற்பாதை. முதலில் கூறிய நுழைவாயில் இக்காலத்தில் ஒரு கடற்பாலப் பாதையால் மூடப்பட்டிருக்கிறது. ஆதி நாட்களில் யம்புகோவளத் துறையிலிருந்து கந்தரோடைக்கு வரும் கடல்வழிப்பாதை இந்த வாயில் வழியாகவே வந்திருக்கும்.
  2. காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே உள்ள கடல்வழி சமீபகாலம் வரை பாவனையிலிருந்து வந்தது. இதன் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக இக்காலத்தில் இலங்கை கடற்படை இங்கே நிலைகொண்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள இரண்டு கடல்வாயில்களும் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலிருந்தே பெருங்கற் பண்பாட்டு அம்சங்கள் இங்கே வருவதற்கேற்ற நுழைவாயில்களாக இருந்திருக்கின்றன. காரைநகரில் காணப்பட்ட பெருங்கற் கலாசாரச் சின்னங்கள் கடல்வழியாக இந்த வழியிலேயே வந்தடைந்திருக்கும்.

ஆனைக்கோட்டையில் காணப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்கள் இக் கடல்வழியாக வந்தே நாவாந்துறை வழியாக ஆனைக்கோட்டையை அடைந்திருக்கும்.

  1. நாவாந்துறை என்றால் நாவாய்கள் வந்து நங்கூரமிட்டுத் தங்கும் துறை என்று அர்த்தம். ஆனைக்கோட்டைக்கு அருகாமையிலிருக்கும் இத்துறைமுகம் பெருங்கற்காலத்திலிருந்து இயங்கி வந்து யாழ்ப்பாண அரசர் காலத்தில் அவர்களது முக்கியமானதொரு துறைமுகமாகப் பணியாற்றியிருக்கிறது.
  2. இன்று யாழ்ப்பாணக் கோட்டையிருக்கும் இடம் முற்காலத்தில் பெரியதொரு துறைமுகமாக இருந்திருப்பது அகழ்வாய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இத்துறையே ஆதியில் ‘பண்ணைத்துறை’ என்ற பெயரைக் கொண்டிருக்கலாம். யாழ்ப்பாணத்தைப் போர்த்துக்கேயர் கைப்பற்றி, துறைமுகம் இருந்த இடத்தில் கோட்டையைக் கட்டிய பின்னர் இதற்கு வடக்கேயிருந்த சிறிய துறைமுகத்திற்கு பண்ணைத்துறை என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். இதைத் தவிர கொழும்புத்துறையும் பண்டைய துறைமுகமாகும். பெருங்கடல்வழியாக வரும் கப்பல்கள் யாழ்ப்பாணப் பரவைக்கடல் வழியாக நாவாந்துறை, பண்ணைத்துறை, கொழும்புத்துறை மூன்றுடனும் தொடர்பு கொண்டிருந்தன (Ragupathy 1987: 154).

உள்நாட்டு நிலப்பாதைகள்

ஆதிகால யாழ்ப்பாண மையங்களைத் தொடுக்கும் தொலைத்தொடர்பு வலைப்பின்னல். இவ்வண்டிப் பாதைகள் வழியாகவே மக்களின் பிரயாணமும், உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றன. நன்றி: பொ. இரகுபதி.

இரட்டை எருது பூட்டிய மாட்டு வண்டிகள் மக்கள் பிரயாணம் செய்யவும், பொருட்களை ஏற்றிச் செல்வவும் உபயோகிக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் வறண்ட நிலங்கள் தரவைப் புற்தரைகளாகவே உள்ளன. இவற்றின் மேலாக மாட்டு வண்டிகள் போவதும், பாதசாரிகள் நடந்து செல்வதும் இலகுவாகவே நடைபெற்றன. நாளடைவில் வண்டிப்பாதைகளில் புற்கள் அழிந்து மண்பாதைகளாக மாறின. மழைக்காலங்களில் இப்பாதைகள் சதுப்பு நிலங்களாக மாறியதைக் கண்ட மக்கள், கிணறு வெட்டும் போது அகற்றப்படும் மக்கிக் கற்களை இப்பாதைகளில் போட்டனர். மக்கிக் கற்களும் சுண்ணாம்புக் கற்தூளும் கொண்ட இக்கலவை மண்ணில் இறுகிப் பதிந்து காலப்போக்கில் கற்பாதைகளாக அமைந்தன.

யாழ்ப்பாணத் தீபகற்பம் அருகிலிருக்கும் சிறுதீவுகளைத் தவிர்த்து பாரம்பரியமாக நான்கு நிர்வாக மாவட்டங்களைக் கொண்டது. அவையாவன வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி ஆகும். ஆதியில் இப்பிரிவுகள் இருந்தனவோ தெரியாது; ஆனால் இப்பகுதிகளைத் தொடுக்கும் வண்டிப்பாதைகளின் ஆதிச்சுவடுகள் இன்றுவரை புற்களின்றி இறுகிய மண்பாதைகளாகக் காணப்படுகின்றன.

மத்தியகாலத்திலிருந்த (Medieval Period) மையங்களின் இருப்பிடங்களும், அவற்றினூடே காணப்படும் ஆதிகால வண்டித்தடங்களும் நமக்குச் சில துப்புகளைத் தருகின்றன. நல்லூர், இருபாலை, கோப்பாய், மந்துவில் ஆகிய மையங்களின் இருப்பிடம் அவைகளை இணைத்த ஒரு நெடுஞ்சாலை வலிகாமத்தையும் வடமராட்சியையும் உப்பாற்றுக் கரையிலிருந்த மந்துவில் வழியாக இணைத்ததைக் காட்டுகிறது. இதுபோன்று வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்குச் சென்ற பாதை வரணி, மந்துவில், வேரக்காடு, கச்சாய் வழியாகச் சென்றிருப்பதாகத் தெரிகிறது (Ragupathy, P. 1987: 156). இவ்வண்டிப்பாதைகளின் தடயங்கள் பெருங்கற்காலக் காலத்திலிருந்தே ஒரு தொடர்பு வலைப்பின்னல் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. சமீபகாலம்வரை நெல் மூட்டைகள், விறகுக் கட்டைகள், தென்னோலைகள் ஏற்றிய இரட்டை மாட்டு வண்டிகள் இப்புராதன பாதைகளால் மட்டுமன்றி யாழ்ப்பாண வீதிகளாலும், ஒழுங்கைகளாலும் செல்வதைக் கண்டிருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் இருபதாயிரம் காளை மாடுகள் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

பண்டைய வண்டிப்பாதைகளை தொல்லியல் மேலாய்வுகளில் இனங்காண்பதற்கு இப்பாதையோரங்களில் இடிந்து கிடக்கும் மடங்களும் உதவி செய்கின்றன. இத்தங்குமடங்கள் பாதசாரிகளுக்கும், வணிக வண்டிகளுக்கும் ஓய்விடங்களாக விளங்கின. இந்த வழியோர விடுதிகள் ஐந்து அம்சங்களைக் கொண்டிருந்தன.

  1. பயணிகள் தங்கி ஓய்வெடுக்கும் எளிய கட்டமைப்புகள்.
  2. சுத்தமான குடிநீர் வழங்கும் ஒரு கிணறு.
  3. யாழ்ப்பாண சுண்ணாம்புக்கல்லில் குடைந்த ஒரு நீர்த்தொட்டி — கால்நடைகள் நீரருந்துவதற்காக.
  4. ஆவுரஞ்சிக் கல் — நிலத்தில் நட்ட சிவலிங்கம் போன்ற பெரிய கல் — மாடுகள் தங்கள் உடலைத் தேய்த்துக் கொள்வதற்காக.
  5. சுமைதாங்கிக்கல் — கால்நடைப் பிரயாணிகள் தலையில் சுமந்து வரும் எடையை இறக்கி வைப்பதற்காக (Ragupathy, P. 1987: 156).

தொடரும்.



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்