சடங்கு என்பது மனித நாகரிகத் தொடக்கத்திலிருந்தே தனிமனிதனையும் சமூகத்தையும் ஒழுங்குபடுத்தவும், இயற்கையின் விபரீதங்களிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஒரு குறியீட்டு நடத்தை அமைப்பாகும். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த ஆதி மனிதன் இடி, மின்னல், பெருமழை, கொடிய நோய்கள், கொடிய விலங்குகள் போன்ற தன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கண்டு அஞ்சிய வேளையில், அவற்றை ஆற்றுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பாவனைகள் (Mimicry), சைகைகள், தாள அசைவுகள் மூலம் மேற்கொண்ட வழிபாட்டு முறைகளே சடங்குகளாக நிலைபெற்றன. இத்தகைய கூட்டுச் சடங்குகளின் உடலசைவுகளும், குரல் எழுப்புதல்களும், வேடமிடுதலுமே பிற்காலத்தில் நிகழ்வுக் கலைகளாகவும் (Performing Arts) நாடக வடிவங்களாகவும் வளர்ச்சி கண்டன.
இலங்கையின் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்கள், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசால் கோப்பி, தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், இராமநாதபுரம் முதலான பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். இம்மக்கள், கடல்கடந்து வந்தபோதும் தங்களின் மரபார்ந்த வழிபாடுகள், சடங்குகள், கலை வடிவங்கள், பேச்சுமொழி வழக்குகளைத் தங்களின் இருத்தலுக்கான பண்பாட்டு அடையாளங்களாகப் பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர்.
இம்மலையக மக்களின் பாரம்பரிய சடங்கியல் ஆற்றுகைகளில் தனித்துவமானதாகத் திகழ்வது ‘மார்கழி மாதத்து இராமர் பஜனை’ ஆகும். இலங்கையின் பிற பகுதிகளில் மார்கழி மாத வழிபாடானது பிரதானமாகச் சைவ மரபிலான ‘திருவெம்பாவை’ சார்ந்ததாக அமைந்திருக்க, மலையகத்தில் மட்டும் வைணவச் சார்புடைய ‘இராமர் பஜனை’ ஒரு கூட்டு ஊர்வலச் சடங்காகவும், அரங்க ஆற்றுகையாகவும் நிலைபெற்றுள்ளமை தனித்துவமான அம்சமாகும்.
இக்கட்டுரையானது, என்னுடைய பங்குகொள் அனுபவத்தினையும் அத்தோடு ஆய்வு நோக்கில் பெறப்பட்ட தரவுகளையும் கொண்டு அமையப்பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டு, சுமார் 22 வருடங்களுக்கு முன், நான் சிறுவனாக இருக்கும்போது இராமர் பஜனையில் இராமன் வேடமேற்கும் வாய்ப்புக் கிடைத்து, கம்பத்தைத் தூக்குகிறேன். அதன் பிறகு நான் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் ஒவ்வொரு வருடமும் பஜனைக் குழுவில் ஒருவராகப் பயணித்திருக்கிறேன். இந்த அனுபவம் இக்கட்டுரையில் பிரதிபலிக்கும். அத்தோடு இக்கட்டுரை இராமர் பஜனையின் தோற்றம், அது தஞ்சை, மராட்டிய மரபிலிருந்து தமிழகத்திற்குப் பரவி நாட்டுப்புற வடிவமாக மாறிய இயக்கவியல், மலையகத்திற்கு இடம்பெயர்ந்து பெருந்தோட்டச் சூழலுக்கேற்பத் தகவமைக்கப்பட்ட முறைமை, தற்கால மலையகத்தில் நிகழ்த்தப்படும் விரிவான சடங்கியல், அரங்கியல் படிநிலைகள் மற்றும் சமஸ்கிருத மேற்தட்டு வர்க்க வழிபாட்டு முறைமை எவ்வாறு விளிம்புநிலை மக்களின் சமூக விடுதலைக்கான கூட்டு வழிபாடாக உருமாற்றம் பெற்றது போன்றவற்றை அதன் ஆற்றுகைப் பண்புகளினூடாக விரிவாக ஆராய்கிறது.
பஜனை என்பது சமஸ்கிருதத்தின் ‘பஜ்’ (வழிபடுதல், பகிர்தல் அல்லது ஈடுபடுதல்) என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இறைவனின் நாமங்களை இசையோடும் தாளத்தோடும் கூட்டுணர்வாகப் பாடிப் பரப்பும் ஒரு பக்தி வடிவமாக இது அமைகின்றது. பக்தி இயக்கம் என்பது வரலாற்றின்படி கி.பி. 7ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் பரவிய ஒன்றாயினும், பிற்காலத்தில் இசை, நடனம், கூட்டு வழிபாட்டு நெறிமுறைகள், ஒழுங்கமைக்கப்பட்ட ‘பஜனை முறைமை’ என்பன மீண்டும் வடஇந்தியாவிலிருந்து மறுவடிவம் பெற்று தென்னகத்திற்குள் மீள்நுழைவு பெற்றன. குறிப்பாகக் கிருஷ்ணர் மற்றும் இராம வழிபாடுகள்.
வடஇந்தியப் பண்பாட்டு வெளியில் வால்மீகி இராமாயணத்தைத் தொடர்ந்து, 16ஆம் நூற்றாண்டில் துளசிதாசர் இயற்றிய ‘ராமசரிதமானஸ்’ பெருவாரியான பொது மக்களிடையே இராம பக்தியை வேரூன்றச் செய்தது. அங்கு இராமனின் வாழ்வியல் நிகழ்வுகள் ‘ராம்லீலா’ என்ற திறந்தவெளி ஊர்வல நாடகங்களாகவும், பக்திப் பாடல்களாகவும் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பட்டன. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் கி.பி. 13 முதல் 17ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய ‘வர்காரி மரபு’ (Warkari Sampradaya) நாமதேவர், ஞானேஸ்வர், ஏக்நாத், துக்காராம், சமர்த்த ராமதாசர் போன்ற துறவியரின் தலைமையில் நாமசங்கீர்த்தனத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியது. இராமதாசரின் ‘ராமதாசி கீர்த்தனை’ முறையும், விட்டலனைப் போற்றிப் பாடும் அபங்க பஜனைகளும், சாக்கிரி பஜனை (வட்ட நடனம்), சோங்கி பஜனை (வேடமிட்டு ஆடும் பஜனை) போன்ற மக்கள்சார் கலைகளும் அடித்தட்டு மக்கள் மத்தியில் பரவலாயின. இவ்வாறான மரபு எவ்வாறு தமிழகத்திற்கு பரவலடைந்தது என ஆராயும் போது மேலும் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
கி.பி. 1676இல் தஞ்சாவூரில் சத்ரபதி சிவாஜியின் சகோதரரான வெங்கோஜி (ஏகோஜி) தலைமையில் மராட்டியர் ஆட்சி நிறுவப்பட்டது. இந்த அரசியல் மாற்றமானது வடநாட்டுப் பக்தி வடிவங்களும் மராத்தியக் கீர்த்தனை மரபுகளும் தமிழகத்திற்குள் பரவ வழிகோலியது. தஞ்சைக்கு வருகை தந்த சாதுக்களும் கீர்த்தனைப் பாடகர்களும் மராத்திய ‘அபங்கங்களையும்’, நாமசங்கீர்த்தன முறைகளையும் அறிமுகப்படுத்தினர்.
இக்காலகட்டத்தில் வாழ்ந்த பஜனை சம்ப்ரதாய மூவர்களான, போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் (நாம சித்தாந்தத்தை நிறுவியவர்), ஸ்ரீதர வெங்கடேசர், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் ஆகியோர் இணைந்து, மராத்திய பஜனை முறையையும் தென்னாட்டுச் செவ்வியல் கர்நாடக இசையையும் ஒருங்கிணைத்து ‘தட்சிண பாரத பஜனை சம்ப்ரதாயம்’ என்ற முறையான வழிபாட்டு நெறியை உருவாக்கினர். இச்சம்ப்ரதாயத்தில், தஞ்சை திருவையாறில் வாழ்ந்த ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இராமபிரான் மீது தெலுங்கு மற்றும் சமஸ்கிருத மொழிகளில் இயற்றிய பல்லாயிரக்கணக்கான ‘திவ்ய நாமக் கீர்த்தனைகள்’ மற்றும் ‘உற்சவ சம்ப்ரதாயக் கீர்த்தனைகள்’ மையப் புள்ளியாக அமைந்தன.
இவ்வாறு காணப்பட்ட மரபுக்கு மாறாக, இவ்வழிபாடு தமிழக நாட்டார் தளத்தில் நாட்டுப்புறப் பஜனையாக எவ்வாறு உருமாற்றம் பெற்றது என்பது மிக முக்கியமான வினாவாகும். அக்ரஹாரங்களிலும் திருமடங்களிலும் சமஸ்கிருத மற்றும் தெலுங்கு மொழிகளில் செவ்வியல் இராகங்களுடன் பாடப்பட்ட இந்த பஜனை வடிவம், காவிரிக் கரையோரத்துக் கிராமப்புற உழைக்கும் மக்களின் கைகளுக்கு வந்தபோது முற்றிலுமாக மக்கள் மயப்பட்டது. அதில் முக்கியமானது மொழிமாற்றம். பொது மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத வரிகளுக்குப் பதிலாக, சீர்காழி அருணாசலக் கவிராயர் தமிழில் இயற்றிய ‘இராம நாடகக் கீர்த்தனைகள்’ மற்றும் நாட்டார் கதைப்பாடல்கள் பஜனைக்குள் புகுந்தன. அத்தோடு கம்பப் பஜனையின் போது, கிராமத்து மந்தைகளிலோ தெருக்களிலோ மரக்கம்பத்தை நட்டு அல்லது பந்தத்தை ஏற்றி, அதைச் சுற்றி ஆண்கள் வட்டமாக இருந்தும் நின்றும் பாடினர்.
தமிழகக் கிராமங்களில் காடுகளையும் புதர்களையும் திருத்தி உழைத்த மக்களுக்குப் பாம்பு, தேள் முதலான விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல் அன்றாடம் இருந்தது. எனவே, விஷத்தை முறிக்கும் சக்தியாகக் கருதப்பட்ட கருடாழ்வாரைப் போற்றும் ‘கருடப்பத்து’ எனும் பத்துப் பாடல்களைக் கொண்ட நாட்டுப்புறத் துதி, பஜனையோடு இணைக்கப்பட்டது. விஷக்கடியைக் குணப்படுத்தவும் மாந்திரிகப் பயத்தைப் போக்கவும் பாடப்பட்ட கருடப்பத்து, நாளடைவில் அதிவேகத் தாளத்துடன் கூடிய பஜனையாக மாறி, பக்தர்கள் சாமி ஆடும் சடங்காகவே உருவெடுத்தது.
தஞ்சை மெலட்டூர் ‘பாகவத மேளா’ நாடகங்கள் மற்றும் கிராமப்புற ‘பாரிவேட்டை’ சடங்குகளில் மக்கள் இராமன், லட்சுமணன், நரசிம்மன் வேடங்களை அணிந்து ஆடினர். இத்தமிழக நாட்டுப்புறப் பஜனை மரபே, பின்னாளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆன்மிக நாடகப் பண்பாடாக இலங்கைக்குப் பயணித்தது.
மலையகத்தின் கடுமையான குளிர், பனி, அட்டைக்கடி, தேயிலைக் காடுகளுக்குள் பதுங்கியிருந்த கொடிய பாம்புகள் தொழிலாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கின. இத்தகைய கொடிய சூழலில், தங்களை விஷப்பூச்சிகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் காக்கும் வழிபாட்டு அரணாகத் தமிழகத்திலிருந்து கொண்டுவந்த இராமர் பஜனையையும் கருடப்பத்து பாடல்களையும் அம்மக்கள் பற்றிக்கொண்டனர்.
மலையகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இராமர் பஜனை மிக எளிய சடங்காகவே தொடங்கியது. மார்கழி மாதத்தின் அதிகாலை வேளையில், ஊர்ப் பெரியவர்கள் அல்லது முதியவர்கள் ஒருவர் இருவர் எழுந்து, கைகளில் தீப்பந்தம் ஏந்தியும், சங்கு, சேகண்டிகளை ஒலித்துக்கொண்டும் லயன் காம்பிராக்களின் தெருக்களில் இராம நாமத்தை உச்சரித்தபடி வலம் வருவர். லயன் வீதிகளின் முனைகளிலும் கோயில்களிலும் சென்று வணங்கித் திரும்புவதே வழக்கமாக இருந்தது. இதில் இசைக்கருவிகளாகச் சங்கும் சேகண்டியும் மட்டுமே பிரதானமாக விளங்கின. சங்கு மற்றும் சேகண்டியின் உலோக அதிர்வு தீய சக்திகளையும், கொடிய விலங்குகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டது என்பது மக்களின் நம்பிக்கையாக அமைந்தது.
காலப்போக்கில் தலைமுறைகள் மாறும்போது, இந்த எளிய வடிவம் விரிவடைந்து தோட்டப் பொதுக் கோயில்களோடும், இளைஞர் குழுக்களோடும் ஒருங்கிணைக்கப்பட்டது. மலையகத்தில் இராமருக்கு எனத் தனி ஆலயங்கள் மிக அரிது. பெரும்பாலான தோட்டங்களில் உள்ள முத்துமாரியம்மன், காளியம்மன் அல்லது முருகன் ஆலயங்களின் ஒரு பகுதியிலேயே இராமர் கம்பத்திற்கும் படங்களுக்கும் இடமளிக்கப்பட்டது. இதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. மார்கழி மாதக் கடும் குளிரைத் தாங்க முடியாத முதியவர்களுக்குப் பதிலாக, தோட்ட இளைஞர்களும் சிறுவர்களும் பஜனைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். வெறுமனே தீப்பந்தமாக இருந்த கம்பத்தின் வடிவம் மாறி, பித்தளை அல்லது செம்பினால் ஆன சங்கு, சக்கரங்கள், இராம நாமங்கள் பொறிக்கப்பட்ட ‘பஜனைக் கம்பம்’ (விளக்குக் கம்பம்) முதன்மை வழிபாட்டுச் சின்னமாக உருப்பெற்றது.
சமகால மலையக இராமர் பஜனையானது மார்கழி 1ஆம் திகதி தொடங்கி தைப்பொங்கல் (தை 1) மற்றும் அதற்கு அடுத்த நாள் வரை, சுமார் 31 நாட்கள் மிகக் கடுமையான விரத நெறிகளுடனும் பல அரங்கியல் சடங்குகளுடனும் நிகழ்த்தப்படுகின்றது. இதன் நிகழ்த்துகைப் படிநிலைகள் பின்வருமாறு அமைகின்றன:
மார்கழி மாதம் பிறப்பதற்கு 5 அல்லது 10 நாட்களுக்கு முன்பாகவே தோட்டத்து ஊர்ப் பெரியவர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் இளைஞர்கள் கூடி பஜனைக் குழுவை அமைப்பர். சில ஊர்களில் ஒரே குழுவே மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை நிர்வாகத்தை நடத்தும்.
பின்னர் கம்பம் தூக்கும் நபரைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு மிகவும் முக்கியமானது. இராமர் கம்பத்தைச் சுமந்து செல்லும் நபர் மிகத் தூய்மையானவராகவும், உடல் – உள வலிமை மிக்கவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான தெரிவு முறைகள் இரு வழிகளில் நிகழ்கின்றன. ஒன்று, சீட்டுக் குலுக்குதல் முறை. விருப்பமுள்ள திருமணமாகாத இளைஞர்களின் பெயர்களைத் துண்டுச் சீட்டுகளில் எழுதிப்போட்டு, ஆலயத்திற்கு வரும் சிறு குழந்தையைக் கொண்டு ஒரு சீட்டை எடுக்கச் செய்வர். அதில் வரும் நபரே கம்பம் தூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இரண்டாவது, சாமி ஆடுதல் மற்றும் அருள்வாக்கு முறை. ஆற்றங்கரை அல்லது கோயிலில் குழுவினர் திரண்டு பஜனைப் பாடல்களைப் பாடி உருவேற்றுவர். பாடல்களின் அதிர்வில் அருள் வந்து ஆடி, பலிபீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூவை எடுப்பவரே (பெரியவர்கள் ஒரு பொருளை அல்லது பூ வகையைக் குறிப்பாக வைப்பர்; அதனைச் சரியாக எடுக்கும் முறையை குறிப்பெடுத்தல் அல்லது பூவெடுத்தல் என்பார்கள்) கம்பம் தூக்கும் நபராகத் தேர்வு செய்யப்படுவார். இச்செயன்முறை ஊருக்கு ஊர் வேறுபடும். சில ஊர்களில் ஒரு வருடத்தில் தெரிவு செய்யப்பட்ட நபர் ஐந்து வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் கம்பம் தூக்குவார். இச்செயன்முறை, சமவாய்ப்பைத் தருவதாகவும், சாதி அடிப்படையிலோ பணத்தின் அடிப்படையிலோ பாகுபாடுகளைத் தவிர்த்து அனைவரும் சமமானவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையிலும் மலையகத்தில் பேணப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக கம்பம் பாலித்தல் மற்றும் காப்புக்கட்டுதல் சடங்குகள் இடம்பெறும். மார்கழி முதல் நாள் மாலையில் இச்சடங்கு தொடங்கும். கம்பம் சுமக்கத் தேர்வான இளைஞரை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று, ஓடும் குளிர்ந்த நீரில் நீராடச் செய்வர். கம்பத்திற்குப் பால், இளநீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். அதன் உச்சியில் ஒரு மாதமும் எரியக்கூடிய பந்தத் திரியானது எண்ணெயில் ஊறவைத்துக் கட்டப்படும். பெரியவர்கள் அல்லது பூசாரி ‘கருடப்பத்து’ பாடல்களைப் பாட, ஏனையோர் “கோவிந்தா… கோவிந்தா…” முழக்கமிடுவர்.

முதல் வருடம் கம்பம் சுமந்த நபர் மற்றும் வேடமிட்டோருக்குச் சாமி ஏறி அருள் ஆட்டம் வரும் (உருவேறி ஆடுவார்கள்). சில நேரங்களில் உருவேறும் அனைவரும் ஆவேசமாக ஆடுவார்கள். அச்சமயம் முந்தைய வருடம் கம்பம் சுமந்த நபரைத் தவிர மற்றவர்களைப் பூசாரி திருநீறு பூசி சாந்தப்படுத்துவார். முந்தைய வருடம் இராமராக வேடமணிந்த கம்பம் சுமந்தவர், புதிய இளைஞரின் தலையோடு அவரது தலையை மூன்று முறை மோதி, நெற்றியில் திருநீறிட்டு ‘குருவாக்கு’ வழங்கி கம்பப் பொறுப்பை ஒப்படைப்பார். அச்சமயம் புதிய கம்பம் சுமக்கும் இளைஞரின் கையில் காப்புக் கட்டப்படும். கம்பத்தில் முதல் தீபம் ஏற்றப்பட்டு, பஜனைப் பாடல்களுடன் ஊர்வலமாக வந்து கோயிலில் வைக்கப்படும்.
மேலும் கம்பம் தூக்கும் இளைஞர் மற்றும் முக்கிய பஜனை இளைஞர்கள் 30 நாட்களும் தமது இல்லங்களுக்குச் செல்லாது ஆலய வளாகத்திலேயே தங்குவர். காலணிகள் அணிய மாட்டார்கள்; பாடசாலை செல்லும் மாணவராயின் செருப்பின்றியே சென்று வருவர். சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் அதிகாலை 4.00 மணிக்கே துயிலெழுந்து, கம்பத் தீபத்தை ஏற்றி, சங்கு, சேகண்டி, டோலக்கு முழங்க லயன் காம்பிராக்களின் வீதிகளில் பஜனை பாடிச் செல்வர். பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து லயன் முற்றத்தைச் சாணமிட்டு மெழுகி, வண்ணக் கோலங்கள் இட்டு, பூக்களை வைத்து ஆயத்தமாக இருப்பர். கம்பம் வீட்டின் முன் வரும்போது, மஞ்சள் பூ கலந்த நீரால் கம்பத்தின் பாதங்களைக் கழுவி, விளக்குக்கு நல்லெண்ணெய் ஊற்றி, கற்பூர ஆரத்தி எடுப்பர். கால்களிலுள்ள பாவங்கள் நீங்கி, இராமரின் ஒளியால் தங்களின் லயன் இருள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இதில் மற்றுமொரு சிறப்பு அம்சம் என்னவெனில், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தொழிலாளர்கள் வாழும் சில பெருந்தோட்டச் சூழலில், நத்தார் பண்டிகையையொட்டி டிசம்பர் 25, 26, 27 ஆகிய திகதிகளில் அசைவ உணவு சமைக்கப்பட்டு விழாக்கள் கொண்டாடப்படும் என்பதால், அந்த மூன்று நாட்களும் கம்ப ஊர்வலம் இடைநிறுத்தப்படும். இது மலையகத்தின் தனித்துவமான மத நல்லிணக்கப் பண்பாகும். எங்கள் ஊரில் இது வழமையாகப் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று அதிகாலையில் கம்பம் சுமப்பவர் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு விசேட பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை பஜனை இளைஞர்களைக் கொண்டு செய்து முடிப்பார். பின்னர் பஜனைக் குழுத் தலைவர் அல்லது பூசாரி பொங்கல் பொங்குவார். பின்னர் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் கம்பம் ஊர்வலத்தைத் தொடங்கி அன்றைய நாள் மதியவேளையில் கோயிலை வந்தடையும். அச்சமயம் ஊர் மொத்தமும் பஜனையோடும் பக்தியோடும் வந்து வணங்கும். இச்செயல்முறை ஆங்கிலப் புத்தாண்டையும் மலையக மக்கள் கொண்டாடப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி அன்று காலை 7.00 மணிக்கே கம்ப விளக்கேற்றப்பட்டு, பஜனையாளர்கள் நாள் முழுவதும் விரதம் (உபவாசம்) இருப்பர். அன்று முழுவதும் பஜனைப் பாடல்கள் பாடி மகிழ்ந்திருப்பர். அதேவேளை சில இளைஞர்கள் சமையல் வேலைகளிலும் ஈடுபடுவர். மதியம் 2.00 மணியளவில் கருடப்பத்துப் பாடல்களைப் பாடி விரதத்தை நிறைவு செய்து, ஊர் மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவர்.
அதனைத் தொடர்ந்து தைப்பொங்கலுக்கு முந்தைய சடங்குகள் (மார்கழி இறுதி நாள்) இடம்பெறும். புதுவருடத்தன்று கம்ப ஊர்வலத்தின் போது பஜனைச் சிறுவர்கள் லயன்களின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஒரு பிடி அரிசியைக் காணிக்கையாகப் பெறுவர். அத்தோடு சிலர் பணமாகவும் வழங்குவர். ஊரின் ஒட்டுமொத்தப் பாவங்களும் பீடைகளும் நீங்கவும், அடுத்த நாள் பொங்கலில் அனைவரும் சமமாகப் பங்கேற்கவும் இந்தப் பிடி அரிசி விரத உணவிற்காகப் பயன்படுத்தப்படும். அன்றைய தினம் தைப்பொங்கல் அன்று வேடமிடத் தேர்வான 3, 5 அல்லது 7 இளைஞர்கள் (இராமன், லட்சுமணன், அனுமன், சீதை, பரதன் வேடங்கள்), தங்களின் கிரீடங்கள், வில் அம்பு, தண்டாயுதம் முதலான வேடப் பொருட்களைப் பூசை அறையில் வைத்து, பொங்கல் சமைத்துப் படைத்து, விடியும் வரை ‘வேசங்கட்டு விரதம்’ மேற்கொள்வர். இவ்வலங்கார வேலைகள் தொடங்கும் முன்னர் கம்பம் திரி ஏற்றப்பட்டு பஜனைப் பாடல்கள் பாடப்படும். வழமையாக கிரீடம் மற்றும் ஏனைய பொருட்களைத் தயாரிக்கும் பெரியவர் தீபம் ஏற்றி மஞ்சள் தடவி இதனை ஆரம்பிப்பார்.
பொதுவாக இந்தப் பொருட்கள் ‘கார்ட்போர்ட்’ மட்டைகள் மற்றும் ‘பிளாஸ்டிக்’ பந்துகளைக் கொண்டும், நேரான தடிகளைக் கொண்டும் செய்யப்படுகின்றன. மரத்தடிகளை மறைப்பதற்காகப் பல்வேறு நிறங்களிலான துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆரம்ப காலத்தில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்டன. உதாரணமாக, மரப்பட்டை மற்றும் இலைகள் போன்றவை. இவற்றை நிரந்தரமாகத் தயாரித்து வைக்கமாட்டார்கள்; காரணம், இறுதி நாள் இவை அனைத்தையும் குடிவிடுதல் மரபு. ஆகவே, நிரந்தரப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றனர்.
இராமர் பஜனையின் தைப்பொங்கல் திருநாளை இச்சடங்கு நிகழ்வின் உச்சக்கட்ட அரங்கியல் ஆற்றுகையாகவும் நோக்கலாம். அதிகாலை 2.00 மணிக்கு வேடதாரிகளுக்கு ஒப்பனைகள் தொடங்கும். சூரிய உதய வேளையில் முற்றத்தில் பொங்கல் பொங்கும்போது, வேடதாரிகள் முகத்தைத் துணியால் மூடி மறைத்துச் செல்வர். தெய்வச் சிலைகள் சப்பரத்தில் ஏற்றப்படும் வரை அவர்களின் முகத்தைப் பெண்களோ பொதுமக்களோ நேரடியாகப் பார்க்கக் கூடாது என்பது தீவிர சடங்கு விதியாகும். வசந்த மண்டபத்தில் உள்ள விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்டுச் சப்பரத்தில் ஏற்றப்படும். சப்பரத்தை இளைஞர்கள் தோள்களில் சுமக்க, அதற்கு முன்னால் கம்பத்தோடு வேடதாரிகள் ஊர்வலமாகச் செல்வர். இராமனாக வேடமிட்டவர் கம்பத்தைக் கையில் தாங்கி, அமைதியாகவும் கம்பீரமாகவும் நடந்து மக்களுக்குத் திருநீறு பூசி ஆசி வழங்குவார். லட்சுமணன், சீதை, பரதன் போன்ற வேடமணிந்தவர் இராமனின் பக்கபலமாகச் செல்வர். அவர்களுக்கு உருவேறும் போது தனித்தனியாக ஆடுவர். ஒவ்வொருவரின் ஆட்டமுறைகளும் வேறுபட்டதாக அமையும். அவை அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் பண்பை வெளிக்கொணர்வதாக அமையும்.
இச்சடங்கில் ஆட்டமுறை என்று நோக்கும் போது சிறப்பம்சம் வாய்ந்தது அனுமன் ஆட்டமாகும். அனுமன் வேடமிட்டவர் மிகுந்த துள்ளலோடும், சேட்டைகளோடும், ஆவேசத்துடனும் அங்கும் இங்கும் ஓடி ஆடுவார். சில நேரங்களில் லயன் கூரைகள் மீதும், மரக்கிளைகள் மீதும் தாவி ஏறி வித்தைகளைக் காட்டுவார். பக்தர்களின் பூசைத் தட்டில் காணப்படும் தேங்காய் மற்றும் வெற்றிலை, பழங்கள் என்பவற்றையும் எடுத்துக் கடித்து விளையாடி சிறுவர்களுக்கும் வழங்குவார். மக்கள் ஆரவாரத்தோடு இதனை ரசித்து அருள் பெறுவர்.
இறுதியாக மாலையில் ஊர்வலம் முடிந்ததும், மாதம் முழுவதும் பயன்படுத்தப்பட்ட பூமாலைகள், மஞ்சள் துணிகள், கம்பத்தின் திரிகள் அனைத்தும் பைகளில் கட்டப்பட்டு ஆற்றங்கரைக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லாக் காவல் தெய்வங்களுக்கும் நன்றி கூறி, அவை ஆற்று நீரில் விடப்படும். இதனைக் கம்பம் குடிவிடுதல் எனக் குறிப்பிடுவார்கள். இது ஊரின் ஒட்டுமொத்தத் துன்பங்களையும் கரைக்கும் ‘கழிப்புக் கிரியை’ ஆகும். குடிவிடுதல் சடங்கு முடிந்ததும் அனைவரும் குளித்ததும், அதே நனைந்த உடலோடு பெரியவர்கள் அல்லது பூசாரியால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவர். வீட்டின் வாசலில் வேடதாரிகள் அனைவருக்கும் ஆரத்தி மற்றும் கற்பூர ஆராதனைகள் வேடதாரிகளின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அத்தோடு கண்ணேறு கழிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். வேடதாரி வீட்டின் வாசலுக்கு வந்ததும் இவை அனைத்தும் செய்யப்படும். வேடதாரி வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டு, சாமிப்படம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்த்தப்படுவார். அங்கு பூசாரி சத்தமிட்டு, வேடதாரியின் மீது திருநீறு பூசி, அவருள் ஏறியிருக்கும் உருவை முழுமையாக இறங்கச் செய்வார். பின்னர் வேடதாரி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்.
இவ்வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் சடங்கு சில ஊர்களில் பொங்கலுக்கு மறுநாள் இடுமண் பூசையோடு நிகழ்த்தப்படும். பொங்கலுக்கு மறுநாள் காலை, வேடமிட்டவர்களின் முகத்தை மூடி, அவர்களது இல்லங்களுக்கு அழைத்துச் சென்று, குடத்து நீரால் குளிக்கச் செய்து, விளக்கேற்றி, முதியவர்களிடம் ஆசி பெறச் செய்வர். இதன் தொடர்ச்சியாக மாலையில் நிகழும் மிக உன்னதமான சடங்கு ‘இடிமண்’ விருந்தாகும். முப்பது நாட்களாகச் சாதி, குல பேதமின்றி ஒன்றாக விரதமிருந்த பஜனைக் குழுவினர் அனைவரும் ஓர் இல்லத்தில் ஒன்று கூடி, கருவாட்டுக் குழம்பும் சோறும் சமைத்து ஒரே பந்தியில் அமர்ந்து உண்பர். சைவ ஆசாரத்தோடு தொடங்கிய ஒரு வைணவ வழிபாடு, இறுதியாக விளிம்புநிலை உழைக்கும் மக்களின் அடையாள உணவான ‘கருவாட்டுச் சாப்பாட்டுடன்’ கூட்டுச் சமூக விருந்தாக நிறைவுபெறுகின்றது. இது, மேற்தட்டு ஆதிக்கத்தை மக்கள் பண்பாடு எவ்வாறு தன்வயப்படுத்தியது என்பதன் உச்சக்கட்டச் சான்றாகும்.
மலையக இராமர் பஜனையை நிகழ்த்துகை நோக்கில் ஆராயும் போது ஆற்றுகைக் கூறுகள் முக்கியம் பெறுகின்றன. இதனை வெறும் வழிபாட்டுச் சடங்காக மட்டும் குறுக்கிவிட முடியாது; அது நாடகத்தின் ஆதி வடிவங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்ட ஒரு நகரும் அரங்கமாகும் (Processional Mobile Theatre).
நிகழ்ச்சி நடக்கும் களம் நிலையான மேடையாக இல்லாமல், கோவில், லயன் காம்பிராக்கள், தேயிலைத் தோட்ட மலைப் பாதைகள் மற்றும் ஆற்றங்கரை என அனைத்துத் திறந்தவெளிகளுமே நாடக அரங்கமாக மாறுகின்றன. பார்வையாளர் வேறு, நடிகர் வேறு என்ற எல்லை தகர்க்கப்படுகிறது. லயன் வாசலில் கோலமிட்டு நிற்கும் பெண்களும் பஜனை பாடும் இளைஞர்களும் ஆற்றுகையின் நேரடிப் பங்காளர்களாகின்றனர்.
இராமன், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கான கிரீடங்கள், வில், அம்பு, வால், முகவர்ணங்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் பாத்திரப் படைப்பிலும் ஒப்பனையிலும் இடம்பெறுகின்றன.

சாந்தமான இராமனின் கம்பீரம், அனுமனின் தாளத்திற்கேற்ப துள்ளிக் குதிக்கும் ஆவேசக் குரங்கு நடனம், மரங்களிலும் கூரைகளிலும் தாவும் இயங்குநிலை ஆகியவை அபிநயத்திலும் உடல்மொழியிலும் (Body Language) வெளிப்படுகின்றன.
அத்தோடு, சங்கு, சேகண்டியின் உலோக அதிரொலி, டோலக்கு, சலங்கை, சில வேளைகளில் தப்பு, உடுக்கு ஆகியவற்றுடன் சினிமா மற்றும் நாட்டுப்புற மெட்டுகளிலான விரைவு தாளக்கதியும் ஒலி மற்றும் இசையமைப்பில் இடம்பெறுகின்றன. பல ஊர்களில் காமன் கூத்து பாடல்களினதும் பொன்னர் சங்கர் பாடல்களினதும் மெட்டுகளும் வரிகளும் மாற்றப்பட்டுப் பாடப்படுகின்றன.
மேலும், தீபக் கம்பம் (ஒளியின் குறியீடு), முக்கோணக் கொடிகள், திருநீறு, மஞ்சள் நீர், பிடி அரிசி ஆகியவை குறியீட்டுப் பொருள்களாக (Props) பயன்படுத்தப்படுகின்றன.
பஜனைப் பாடல்களின் தாளம் உச்சக்கட்டத்தை எட்டும்போது, பாடகர்களும் வேடதாரிகளும் உருவேறி ஆடுதல் (Transcendental Trance) என்பது, பாத்திர நிலையிலிருந்து அதிமானுடத் தன்மையை நோக்கிச் செல்லும் ஒரு முறைமையை உணர்த்துகின்றது.
மேலும், ஒரு மேட்டுக்குடி வர்க்கத்தின் சம்பிரதாய மற்றும் சமஸ்கிருத வழிபாட்டு வடிவம், மலையகத்தின் விளிம்புநிலை உழைக்கும் மக்களின் வழிபாட்டு வடிவமாக எவ்வாறு உருமாறியது என்பதை ஆராய்வது, சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் மிகவும் இன்றியமையாததாகும்.
வரலாற்று ரீதியாகச் சாதியக் கொடுமைகளால் பெருங்கோவில்களுக்குள் நுழையும் உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்குக் குலமோ, தகுதியோ, பணமோ தடையாக இல்லை என்ற தத்துவத்தைத் தங்களின் கருவியாகக் கொண்டனர். ஆகமக் கோயில்களுக்கு வெளியே, தங்களின் லயன் காம்பிராக்களின் முற்றங்களிலேயே கம்பத்தை நட்டு, விளக்கேற்றி, இராமனைத் தங்களின் வீடுகளுக்கு வரவழைத்தனர். கருவறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கடவுளை வீதிக்குக் கொண்டுவந்து மக்களுடன் இணைத்த செயல்முறையாக இது அமைந்தது.
அத்தோடு, மடங்களிலும் சபாக்களிலும் தியான நிலையில் அமைதியாகப் பாடப்பட்ட கீர்த்தனைகள், பகல் முழுவதும் தேயிலைக் காடுகளில் அட்டைக் கடிக்கும் குளிருக்கு நடுவே உடலை வருத்தி உழைத்த மக்களின் கைகளுக்கு வந்தபோது உருமாற்றம் பெற்றன. அவர்களின் தசைநார் வலியையும் மனச்சோர்வையும் போக்கும் வகையில், பஜனையின் தாளக்கதி (Tempo) அதிவேகமாக மாற்றப்பட்டது. எளிய நாட்டார் மெட்டுகளும் சினிமாப் பாடல்களின் சந்தங்களும் உள்வாங்கப்பட்டு, கைதட்டி, கால்களைத் தரையில் உதைத்து ஆடும் கூட்டு ஆசுவாசக் கொண்டாட்டமாக அது மலர்ந்தது. புரிந்துகொள்ள முடியாத சமஸ்கிருத சுலோகங்களுக்குப் பதிலாக, தொழிலாளர்களின் அன்றாடப் பேச்சுவழக்குத் தமிழிலேயே பாடல்கள் இயற்றப்பட்டன.
உதாரணமாக, “ஆண்ட கணபதியே ராமர் தொண்டர்க்கு அருள் புரிவார்… அயோத்தி ஆண்டவரே ராமர், ராவணனை வென்றவரே…”
“பத்தினி கும்பங்கள் கம்பம் வைத்து புகழ் பாடிடுவோம் அருள் தேடிடுவோம்
பாரளந்த அந்த மாயவன் நமத்தை பாடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம்”
“இராமன் துதி பாடவே சேர்ந்து வாருங்கள் இராமர் அவதாரனை மகிழ்ந்து கூறுங்கள்”
“வாசலில் கோலமிட்டு ராமர் வரும் வரை காத்திருப்போம்…”
போன்ற எளிய வரிகள் இராமனை எங்கோ இருக்கும் வேதக் கடவுளாக அன்றி, தங்களின் லயன் வாசலுக்கு வரும் சொந்தக் குடும்பத்துப் பிள்ளையாக மாற்றின.
சமஸ்கிருத வழிபாட்டு முறைகளில் ஆசாரமும், ‘தீட்டுப் புனிதம்’ சார்ந்த கடுமையான விதிகளும் முதன்மைப்படுத்தப்படும். ஆனால், மலையகப் பஜனைப் பாடல்களில் இத்தகைய ஆசாரங்கள் பகடி செய்யப்பட்டுத் தகர்க்கப்படுகின்றன:
உதாரணமாக,
“எச்சில் கலந்தாலும் இங்கே இறக்கப் பாயுமே மனம்
இயற்கையாகத் தீட்டுப் பட்டால் எட்டப் போகுமே மனம்…”
என்பதன் மூலம், மனித உழைப்பும் அன்பும்தான் முதன்மையானதே தவிர, செயற்கையான தீட்டுக் கோட்பாடுகள் இறைவழிபாட்டிற்குத் தடையல்ல என்ற விளிம்புநிலை மக்களின் குரல் பதிவு செய்யப்படுகிறது. மேலும், சடங்கின் இறுதியில் நடைபெறும் ‘கருவாட்டுச் சோறு’ உண்ணும் ‘இடிமண் விருந்து’, பிராமணியச் சைவ உணவுக் கோட்பாட்டைத் தகர்த்து, உழைக்கும் மக்களின் பண்பாட்டை வழிபாட்டின் உச்சக்கட்ட அங்கமாக நிறுவுகிறது.
அத்தோடு, மலையகத் தோட்டங்களில் சாதிக் கட்டமைப்புகளின் எச்சங்கள் இருந்தபோதிலும், இராமர் பஜனை நிகழும் ஒரு மாத காலத்தில் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைகின்றனர். ஒரே பஜனைக் குழுவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்து, விரதமிருந்து கம்பத்தைச் சுமக்கின்றனர். அத்தோடு, ‘பிடி அரிசி’ சேகரிப்பதன் மூலம் ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்தத் தோட்டச் சமூகமும் ஒரு பொதுத் தளத்தில் சங்கமிக்கின்றது.

தொகுத்து நோக்கும்போது, இலங்கையின் மலையகத்தில் நிகழ்த்தப்படும் இராமர் பஜனை என்பது வெறும் பக்தி மார்க்கம் சார்ந்த மதச் சடங்கு மட்டுமல்ல; அது இருநூறு ஆண்டுகால வரலாற்றுத் துயரங்களைச் சுமந்த ஒரு புலம்பெயர் சமூகத்தின் பண்பாட்டுத் தற்காப்பு அரணாகும். வடஇந்தியாவிலும் தஞ்சாவூர் திருமடங்களிலும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குரியதாகவும், சமஸ்கிருத செவ்வியல் வடிவமாகவும் விளங்கிய இராமர் வழிபாடு, மலையக உழைக்கும் மக்களின் கைகளில் தவழ்ந்தபோது, அதன் மேட்டிமைத் தடைகளை உடைத்துக்கொண்டு நாட்டார் கலை வடிவமாகப் புத்துயிர் பெற்றது. கொடும் குளிரையும் லயன் வாழ்வின் இருளையும் விரட்டும் கம்பத்தின் சுடரொளியாகவும், விஷப்பூச்சிகளிடமிருந்தும் பீடைகளிலிருந்தும் காக்கும் கருடப்பத்து மந்திரமாகவும், தங்களின் அடிமை வாழ்வின் வலிகளை மறக்கடிக்கும் அனுமரின் ஆவேசக் கூத்தாகவும், சாதிய ஆதிக்கங்களைத் தகர்த்து ஒன்றுபடுத்தும் இடிமண் கூட்டு விருந்தாகவும் இராமர் பஜனை மலையகத்தில் தன்னைத் தகவமைத்துக்கொண்டுள்ளது. சடங்கையும் நாடகத்தையும் தங்களின் கூட்டு வாழ்வியலோடு பிணைத்து, மரபைப் பாதுகாக்கும் அதேவேளையில் தற்கால மாற்றங்களையும் உள்வாங்கி வாழும் மலையகத் தமிழர்களின் இந்த இராமர் பஜனை ஆற்றுகை, உலக நாட்டார் வழக்காற்றியல் மற்றும் அரங்கியல் வரலாற்றில் தனித்துவமானதொரு மக்கள் பண்பாடாகத் திகழ்கின்றது.
உசாத்துணை நூல்கள்
இன்பமோகன், வ., 2012. கிழக்கிலங்கைச் சடங்குகள். குமரன் புத்தக இல்லம், சென்னை–கொழும்பு.
சாம்பமூர்த்தி, பி., 1982. பஜனை சம்பிரதாயம் மற்றும் தென்னிந்திய பக்தி இசை. தி இந்தியன் மியூசிக் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை.
சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம்.
சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.
சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.
தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.
பக்தவத்சல பாரதி, 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.
மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.
வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.
வேங்கடராமன், சீ., 1999. தமிழ் இசை மரபில் பஜனை சம்பிரதாயம். தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
லிப்கோ ஆசிரியர் குழு, 2010. பஜன ரத்னாகரம் (திவ்யநாம, உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகள்). தி லிட்டில் பிளவர் கம்பெனி, சென்னை.
சஞ்சிகைகள்
குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை–செப்டம்பர் 1993, பக். 19–20.
குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி–மார்ச் 1994, பக். 19–20.
நட்புறவு பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16.
நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27.
பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56.



