மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் சடங்குகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் சடங்குகளும்

July 27, 2026 | Ezhuna

கோப்பி, தேயிலைத் தோட்ட உழைப்பிற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இலங்கை மலையகத் தமிழர்கள், 200 ஆண்டுகள் கழித்தும் தங்கள் வழிபாட்டு மரபுகளையும், சடங்கு முறைகளையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அவர்களின் சமூக வாழ்வியலில் வழிபாடு அல்லது சடங்கு என்பது வெறும் மத நிகழ்வன்று; அது சமூகத்தின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள பண்பாட்டுச் செயல்முறையாகவும் உள்ளது. எனினும், சமகால மாற்றங்களால் இச்சடங்குகள் அருகி வருவதால், அவற்றை ஆவணப்படுத்தும் தேவை உண்டாகின்றது. சடங்குகளை வெறும் வாய்மொழித் தகவல்களாக அல்லாமல், நேரடிச் செயல், இசை, உணர்வியல் ஆகியவற்றின் நிகழ்த்துகை (Performance) வடிவமாகப் புரிந்துகொள்ள, நிகழ்த்துகை ஆய்வு அணுகுமுறை அவசியமாகின்றது. அந்தவகையில் இத்தொடர் ‘நிகழ்த்துகை நோக்கில் மலையகத்தின் வழிபாடுகளும், சடங்குகளும்’ எனும் தலைப்பில் எழுதப்படுகின்றது. இது வாழ்க்கைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், கலைகளோடு இணைந்த சடங்குகள் எனப் பல அடுக்குகளில் ஆராயப்படும். நிகழ்த்துகை முறைமைகளை ஆவணப்படுத்துவதன் மூலம், மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சியாகவும் இது அமையும்.

அறிமுகம்

சக்தி வழிபாடு மனித நாகரிகத்தின் ஆதிகாலம் தொட்டே நிலவி வரும் ஒரு தொன்மையான வழிபாட்டு முறையாகும். பெண்வழிச் சமுதாய அமைப்பின் தொடர்ச்சியாகத் தோன்றிய இத்தாய் தெய்வ வழிபாட்டின் முதன்மையான வடிவமாக மாரியம்மன் வழிபாடு திகழ்கிறது. பிராமணீய சம்பிரதாயங்களோ, வேத மந்திரங்களோ இன்றி எளிய மக்களின் தாயாக, இயற்கையின் பிரதிபிம்பமாக விளங்குவதால் மாரியம்மனை ‘திராவிட தெய்வம்’ என்றும் அழைப்பர். பிரித்தானியப் பேரரசுக் காலத்தில் தமிழக மக்கள் உலகின் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த போது, தங்களின் இதய தெய்வமான மாரியம்மனையும் உடன் அழைத்துச் சென்றனர். அந்த வகையில், இலங்கையின் மத்திய மலைநாட்டிற்குத் தேயிலை, கோப்பித் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழக மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் மாரியம்மன் வழிபாடு இரண்டறக் கலந்துள்ளது.

கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, கொடிய கடல் பிரயாணத்தைக் கடந்து, மன்னார் மற்றும் அரிப்புத் துறைகள் வழியாகப் புகுந்து, அடர்ந்த வனப்பகுதிகளின் வழியே அவர்கள் மலையகத்தை நோக்கி நடந்தனர். இப்பயணத்தின் போது கொடிய காட்டுச்சுரம், வெப்புநோய் மற்றும் அம்மை நோய்களினால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வழியிலேயே மடிந்து போயினர். திக்கற்ற நிலையில் தவித்த அந்த மக்களுக்குத் தெய்வ நம்பிக்கையே பேராதரவாக விளங்கியது. உயிர் பிழைத்துத் தோட்டம் போய்ச் சேர்ந்தால் தங்களின் தெய்வமான அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக நேர்த்திக்கடன் வைத்து வேண்டிக் கொண்டனர். அவ்வாறு தொழிலாளர்கள், தங்களின் லயக் குடியிருப்புகளுக்கு அருகிலும், ஆபத்தான மலைச் சரிவுகளிலும் மாரியம்மனை நிலைநிறுத்தி வழிபடத் தொடங்கினர். மலையகத்தின் தலைவாயிலாகக் கருதப்படும் மாத்தளை மண்ணில் அமைந்துள்ள மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயமே, திக்கற்று வந்த தொழிலாளர்கள் நன்றி கூறி அமைத்த முதல் ஆலயமாகக் கருதப்படுகின்றது.

தென்னிந்திய நாட்டுப்புற ஆன்மிக மரபில், குறிப்பாகத் தமிழ் மண்ணில், மாரியம்மன் வழிபாடு என்பது வெறும் சமயச் சடங்காக மட்டுமன்றி, சமூக – மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பரிணாமத்தின் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது. நிலவியல் சார்ந்த திணைக் கோட்பாடுகளிலிருந்து உருவான பழந்தமிழரின் தாய் தெய்வ வழிபாட்டு மரபு, காலப்போக்கில் பல்வேறு வரலாற்று, இலக்கிய மற்றும் சமூக மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய மாரியம்மன் வழிபாடாக நிலைபெற்றுள்ளது.

பண்டையத் தமிழர்களின் திணைசார் வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே முதன்மை பெற்றுத் திகழ்ந்தது. தொல்காப்பியம் பாலை நிலத்திற்குரிய தெய்வமாகக் கொற்றவையை நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், புறத்திணையில் மறவர்கள் தங்களின் வெற்றிக்குத் துணை நின்ற பெண் தெய்வத்தை வழிபட்ட ‘கொற்றவை நிலை’ குறித்துப் பேசுகிறது.

“மறம் கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையின் அகத்தினைப் புறனே”

இவ்வரி, தொன்மைக்காலம் தொட்டே கொற்றவை போர்த்தெய்வமாக வழிபடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. கொற்றம் (வெற்றி), அவ்வை (தாய் மூத்தவள்) என்ற சொல்லாக்கமே ‘கொற்றவை’ என்றாயிற்று. திருமுருகாற்றுப்படையில் முருகன் ‘வெல்போர்க் கொற்றவை சிறுவ’ எனப்படுகின்றார். சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘கடல்கெழு செல்வி’ மற்றும் ‘கானமர் செல்வி’ போன்ற பெயர்களில் தாய்த் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. தொல்காப்பியம் குறிப்பிடும் ‘கந்தழி’ எனப்படும் மரங்களை வழிபடும் மரபும், ‘நடுகல்’ வழிபாடும் பிற்கால நாட்டார் வழிபாட்டின் கூறுகளாக மாறின.

சிலப்பதிகாரம் தமிழ் நாட்டார் வழிபாட்டு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். கணவன் இழந்த சோகத்தில் மதுரையை எரித்த கண்ணகியின் சீற்றத்தால் பாண்டிய நாடு மழையின்றி வறட்சியும் பஞ்சமும் அடைந்தது. பின்னர் சேர நாட்டில் அவளுக்குக் கோயில் எழுப்பிக் குளிர்விக்கப்பட்டதும், வான்மழை பொழிந்தது. இதனால், வறட்சியைப் போக்கி மாரியை (மழையை) ஈட்டித் தந்த கண்ணகியே பிற்காலத்தில் மாரியம்மனாக வழிபடப்பட்டாள் என்ற வலுவான மானிடவியல் கோட்பாடும் உள்ளது.

சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி பகுதியில் எயினர்கள் கொற்றவையை வழிபடும் முறை மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கொற்றவையின் கோலமாக இளங்கோவடிகள் வர்ணிப்பவை பிற்கால மாரியம்மன் கரக வழிபாட்டுடன் ஒப்பிடத்தக்கவை. மாமல்லபுரத்துக் கொற்றவைக்கு உவமையாக விளங்கும் கண்ணகியை நோக்கி வாயிற்காவலர்கள் காளி, துர்க்கை என வியந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

இலங்கையில் கஜபாகு மன்னன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பத்தினி வழிபாடு (பத்தினி தெய்யோ) பஞ்சம், வறட்சி மற்றும் தொற்றுநோய்களிலிருந்து காக்கும் தெய்வமாக இன்றும் சிங்கள மக்களால் கண்டி ‘எசல பெரஹர’ (ஆடித் திருவிழா) ஊர்வலத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் மாரியம்மனது தோற்றம் குறித்து நாட்டார் வழக்காறுகளில் பல்வேறு கதைகள் நிலவுகின்றன. இவை இத்தெய்வத்தின் தோற்றத்தையும் அதன் உக்கிரத் தன்மையையும் விளக்குகின்றன. அந்த வகையில் ரைவத ராஜனின் மகளான இரேணுகா தேவி, ஜமதக்கினி முனிவரை மணந்து பரசுராமனைப் பெற்றெடுத்தாள். அவளது கற்பின் ஆற்றலால் ‘பத்ம சரஸ்’ என்ற சுனையில், வெறுங்கையால் மணலைக் குடமாகச் செய்து, நீர் சுமந்து வந்தாள். ஒருநாள் நீரில் கந்தர்வனின் நிழலைக் கண்டு அவள் உள்ளம் சலனமுற்றதால் மணல் குடமாக மாறவில்லை. இதனால் சினமுற்ற முனிவர், பரசுராமனை நோக்கித் தாயின் தலையைத் துண்டிக்குமாறு கட்டளையிட்டார். தந்தையின் சொல்லை நிறைவேற்றிய பரசுராமன், பின்னர் அவரிடம் தாயை உயிர்ப்பிக்குமாறு வரம் கேட்டான். ஜமதக்கினி கொடுத்த அற்புதத் தீர்த்தத்தைக் கொண்டு அவசரக் கோலத்தில் உயிர்ப்பிக்கும்போது, தவறுதலாக அங்கிருந்த ஒரு பெண்ணின் உடலோடு இரேணுகா தேவியின் தலை ஒட்டவைக்கப்பட்டு உயிர் பெற்றாள். தலை ‘மாறி’ வந்த அம்மனே மருவி ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டாள். இதன் அடையாளமாகவே ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலின் உட்சந்நிதியில் பரசுராமருக்குத் தனிச்சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

மேலும் வில்லுப்பாட்டு இலக்கியங்களில் மாரியம்மன் பாதாள உலக நாகராசனுக்கும் நாககன்னிக்கும் பிறந்த ஏழு பெண் குழந்தைகளில் மூத்தவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். இவள் ‘மயிடன்’ மகிசாசூரன் என்ற அரக்கனை அழித்து, சிவபெருமானிடம் அம்மை முத்துகளை வரமாகப் பெற்று பூலோகத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவள் தன் கையில் இருந்த முத்துகளைச் சிவன் மீது தூவ, சிவனின் உடலில் அம்மைத் தழும்புகள் உண்டாயின என்ற தொன்மக் கதையும் உண்டு. மேலும் முனிவரின் மனைவியான நாகாவலி சாபத்தால் அழகு சிதைக்கப்பட்டு ஆசிரமத்திலிருந்து துரத்தப்பட்டாள். அவளது அழகு மாறியதால் அவள் மாரியம்மனாக வணங்கப்பட்டாள் என்ற கதையும் உண்டு.

தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில் மாரியம்மன் பல குடும்பங்களின் குலதெய்வமாக ஆராதிக்கப்படுகிறாள். திருமணங்கள் போன்ற சுபகாரியங்களின் போது முதலில் குலதெய்வத்தை வணங்குவது குடும்பத்தின் பூர்வீகத்தையும் தலைமுறைகளையும் கண்டறிய உதவுகிறது. மக்கள் தங்களின் குறைகள் தீர பொங்கலிடுதல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல், மண் உருவம் அல்லது கண்மலர் சாத்துதல், மற்றும் உப்பு, மிளகு இடுதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்துகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘குகட்டுவால்’ (Kukattual) எனப்படும் கொக்கி ஊஞ்சல் (Hook Swinging) சடங்கு போன்ற தீவிரமான வழிபாட்டு முறைகளும் இவ்வழிபாட்டில் ஆதிநாளில் இருந்துள்ளன.

தோட்டப்புறங்களில் வழிபாட்டு முறைகளும் சடங்குகளும்

தோட்டப்புறங்களில் நிலவும் மாரியம்மன் வழிபாடு தூய கிராமிய நெறிமுறைகளையும் ஆழமான நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டது. மாரியம்மன் வழிபாட்டில் ‘அம்மை நோய்’ முக்கிய இடத்தைப் பெறுகிறது. அம்மைக் கொப்புளங்களை மக்கள் ‘முத்துகள்’ என்றே அழைப்பதால் அன்னைக்கு ‘முத்துமாரி’ என்ற திருநாமம் நிலைபெற்றது. அம்மை கண்டவர்களை வேப்பிலைப் படுக்கையில் அமரச் செய்தல், இளநீர் புகட்டுதல், மாவிளக்கு ஏற்றுதல் மற்றும் அன்னை குளிர வேண்டி ‘மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களை’ பாடுதல் போன்ற சடங்குகளை பக்திச் சிரத்தையுடன் மக்கள் மேற்கொள்கின்றனர்.

“ஆரு கடன் நின்றாலும் மாரிகடன் ஆகாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்ட மலையக மக்கள், தங்களின் நேர்த்திக்கடன்களைத் தவறாது நிறைவேற்றுகின்றனர். உடலில் அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல், வேப்பிலைத் தேர் இழுத்தல், பாற்குடம் எடுத்தல் மற்றும் வெந்தணலைப் பூக்குழியாக மாற்றும் ‘தீமிதித்தல்’ போன்ற கடுமையான சடங்குகள் இன்றும் தோட்டப்புறங்களில் பக்திப் பரவசத்துடன் நடத்தப்படுகின்றன. வறட்சி காலங்களில் மழை வேண்டிப் பெண்கள் ஏழு அல்லது ஒன்பது நிறைகுடங்களை ஏந்தி வந்து கோயிலைச் சுற்றி ஊற்றும் ‘பூக்குடம்’ சடங்கும் இங்கு சிறப்பானது.

மலையக மாரியம்மன் திருவிழாக்கள் என்பவை வெறும் சமய வழிபாட்டு நிகழ்வுகள் மட்டுமல்ல, அவை தமிழர்களின் பாரம்பரிய நாட்டார் கலைகளைப் பேணிப் பாதுகாக்கும் கலை அரங்குகளாகவும் திகழ்கின்றன. திருவிழாக் காலங்களில் ஆண்கள் சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பதினாறு வகையான அடிகளைக் கொண்ட கோலாட்டங்களை ஆடி மகிழ்வர். பெண்கள் குரவையிட்டு, கரகப் பாடல்களைப் பாடி வட்டமாகக் கும்மியடிப்பர். அதோடு, அருச்சுனன் தபசு, காமன் கூத்து, பொன்னர் சங்கர் கூத்து போன்ற புராணக் கூத்துகளும், நல்லதங்காள் கதை போன்ற நாடக வழிபாடுகளும் சடங்கு முறைகள் பிசகாமல் விடிய விடிய நடத்தப்பட்டு, உழைக்கும் மக்களின் கலைத் தாகத்தைத் தணிக்கின்றன.

மலையகத்தின் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப, தோட்டப்புறங்களில் மரத்தடிகளிலும் கற்பாறைகளிலும் வழிபடப்பட்ட இடங்கள் படிப்படியாகப் பெரிய ஆலயங்களாகப் பரிணமித்தன. மலையகக் கலாசாரத்தை ‘மாரியம்மன் கலாசாரம்’ என்று கூறும் அளவிற்குத் தோட்டங்கள் தோறும் மாரியம்மன் ஆலயங்களே மிகுந்து காணப்படுகின்றன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சில குறிப்பிட்ட ஆலயங்களின் புள்ளிவிவரப் பட்டியல் பின்வருமாறு:

நுவரெலியா: 300 ஆலயங்களில் 225 அம்மன் ஆலயங்கள்.

பதுளை: 103 ஆலயங்களில் 36 அம்மன் ஆலயங்கள்.

கண்டி: 92 ஆலயங்களில் 57 அம்மன் ஆலயங்கள்.

கொழும்பு: 60 ஆலயங்களில் 41 அம்மன் ஆலயங்கள்.

கேகாலை: 55 ஆலயங்களில் 46 அம்மன் ஆலயங்கள்.

களுத்துறை: 48 ஆலயங்களில் 45 அம்மன் ஆலயங்கள்.

இரத்தினபுரி: 37 ஆலயங்களில் 30 அம்மன் ஆலயங்கள்.

மாத்தளை: 35 ஆலயங்களில் 27 அம்மன் ஆலயங்கள்.

மொனராகலை: 13 ஆலயங்களில் 07 அம்மன் ஆலயங்கள்.

குருநாகல்: 11 ஆலயங்களில் 08 அம்மன் ஆலயங்கள்.

இதன் அடிப்படையில் தோட்டப்புறங்களைத் தாண்டி, மலையகத்தின் சிறிய நகரங்களிலும், பிரதான நகரங்களிலும் உள்ள மாரியம்மன் ஆலயங்கள் இன்று ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட பெரும் தேவஸ்தானங்களாக உயர்ந்துள்ளன. இவை முழுக்க முழுக்க சமஸ்கிருத வழிபாடுகளையே பின்பற்றுகின்றன. நாவலப்பிட்டி, கம்பளை, கொட்டாஞ்சேனை, டிக்கோயா மற்றும் நீர்கொழும்பு போன்ற இடங்களில் உள்ள ஆலயங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும்.

மலையகத் தோட்டப்புறங்களில் மாரியம்மன் திருவிழாக்கள் நடத்தப்பட்ட முறைமைக்கும், அங்கு நிலவிய சமூக-பொருளாதார அதிகாரக் கட்டமைப்பிற்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. காலனித்துவக் காலத்தில் ஒவ்வொரு தோட்டத்துக் கங்காணிக்கும் (Foreman) ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது ‘பெரட்டுக்களம்’ (அவர்களின் ஆளுமைக்கு உட்பட்ட எல்லை) வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கங்காணிமார்களுக்குத் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பெரட்டில் கோயில்களை அமைத்துக் கொள்ள இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

திருவிழாக் காலங்களில், ஒரு கங்காணியின் பெரட்டியில் உள்ள கோயிலில் திருவிழா முடிந்த பின்னரே அடுத்த கங்காணியின் பெரட்டியில் உள்ள கோயிலில் விழா நடத்தப்படும் வகையில் சடங்கு முறைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இது கங்காணிகளுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையைப் பேணவும், அதேவேளையில் பெரிய கங்காணியின் செல்வாக்கையும் பொருளாதார வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் ஊர்வலங்களை நடத்தவும் பயன்படுத்தப்பட்டது. அனைத்துச் சிறு பெரட்டி விழாக்களும் நிறைவடைந்த பின்னர், ஒட்டுமொத்தத் தோட்ட மக்களும் இணைந்து ‘பெரும் திருவிழாவினை’ எடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தத் திருவிழா முறைமையானது, லயத்து வாழ்க்கையால் பிளவுபட்டுக் கிடந்த தொழிலாளர்களை ஒரு பொதுவான சமூகக் கூட்டுணர்வில் பிணைக்கும் இன்றியமையாத ஊடகமாகச் செயற்பட்டது.

மேலும், அம்மை நோயாளியின் அருகே அமர்ந்து உடல் மற்றும் மனத்தூய்மையுடன் 5, 7 அல்லது 9 நாட்களுக்கு மாரியம்மன் தாலாட்டுப் பாடல்கள் பாடப்படும். நோயாளியின் மனோதிடத்தை அதிகரித்தல் மற்றும் பாடலின் மூலம் அம்மனைச் சாந்தப்படுத்துதல் என்பன இதன் நோக்கமாகும். நோயாளி முற்றிலும் குணமடைந்த பின், ஆலயத்திற்குத் தண்ணீர்க் குடம் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் கழிப்பர். நோயிலிருந்து முழுமையாக விடுபட்டமைக்காக அன்னைக்கு நன்றி செலுத்துதல் இதற்கான காரணமாகும். நகர்ப்புறங்களிலும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலும் கொடியேற்றத்துடன் தொடங்கும் வைதீகப் பூசைகளுக்கு மாறாக, மலையகத் தோட்டப்புறங்களில் மாரியம்மன் திருவிழாவானது குறிபெடுத்தல் மற்றும் கரகம் பாலித்தல் போன்ற நாட்டார் சடங்குகளுடனே தொடங்குகிறது.

உடுக்கை அடித்தல், மண்டு மற்றும் குறி சொல்லுதல் என்பனவும் இவ்வழிபாட்டில் முக்கியம் பெறுகின்றன. திருவிழாக்களில் சாமிக்கு மந்திரம் சொல்வதற்குப் பிராமண அர்ச்சகர்கள் இருப்பதில்லை; மாறாக, தோட்டத் தொழிலாளர்களிலேயே ஒருவர் பூசாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பூசாரி உடுக்கை அடித்து, “உடுக்கடிக்கும் என் கையாலே உன்னை உருகி அழைக்கின்றேன்” என்று உருகிப் பாடி அம்மனைத் தன்வசப்படுத்துவார். பின்னர், ‘மண்டு’ எனப்படும் தற்காலிக வழிபாட்டு மேடை அமைக்கப்பட்டு, பூசாரிக்கு அம்மனின் அருள் வந்து ஆவேசமாக ஆடும் ‘சாமியாட்டம்’ நிகழும். இந்த ஆவேச நிலையில் பூசாரி கூறும் ‘குறி’ (எதிர்காலப் பலன்கள் மற்றும் தீர்வுகள்) மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

மேலும் மலையக மக்களின் வாழ்வில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ‘பூக்கட்டிப் போடுதல்’ என்ற சடங்கு பயன்படுத்தப்படுகிறது. தொழில் வளர்ச்சி, குடும்பப் பொருளாதார முன்னேற்றம், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்ற முக்கிய விடயங்களில் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதபோது, அம்மனின் சிலையின் முன்னால் அல்லது ஆலய வளாகத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்களைக் கட்டிப் போட்டு, அதில் குறிப்பிட்ட ஒரு நிறப் பூவை எடுப்பதன் மூலம் அம்மனின் உத்தரவைக் கண்டறியும் வழக்கம் இன்றளவும் வலுவாகக் காணப்படுகிறது. கரகம் பாலித்தலுக்கும், இப்பூக்கட்டி போட்டு கரகம் தூக்கும் மரபு காணப்படுகின்றது.

இச்சடங்கின் முதல் கட்டம், தோட்டப் பகுதியிலுள்ள ஏதேனும் ஒரு புனிதமான நீர்நிலையில் (ஆறு, ஓடை அல்லது கிணறு) தொடங்கும். கரகத்தைச் சுமக்கும் பூசாரி அல்லது பக்தர் பல நாட்கள் கடுமையான விரதமிருந்து, காப்புக்கட்டி இந்நாளில் நீராடுவார். பின்னர், பித்தளை அல்லது செம்புக் குடத்தில் புனித நீர், நவதானியங்கள், நாணயங்கள் மற்றும் மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை இட்டு, அதன் வாய்ப் பகுதியில் மாவிலைகள் மற்றும் தேங்காயை வைப்பர். அம்மன் கரகமாக இருந்தால் வண்ணமயமான பூக்களாலும், காளி கரகமாக இருந்தால் வேப்பிலை மற்றும் எலுமிச்சம்பழங்களாலும் குடம் அழகாக அலங்கரிக்கப்பட்டு, பூசைகள் மூலம் தெய்வத்தின் சக்தி அதில் ஆவாகனம் செய்யப்படும்.

தெய்வ சக்தி நிறைந்த அக்கரகத்தை பூசாரி தனது தலையில் ஏந்தியவுடன் சடங்கின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. பம்பை, உடுக்கை, தம்பட்டம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் அதிர்ந்து முழங்க, கரகத்தைச் சுமப்பவருக்குத் தெய்வீக அருள் வந்து (சாமி ஆடுதல்) ஆக்ரோஷமாகவோ அல்லது அமைதியாகவோ நடனமாடியபடி கோயிலை நோக்கி நடப்பார். அவர் வரும் வழியெங்கும் லயன் குடியிருப்புகளில் வாழும் மலையக மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் நிறைகுடம் வைத்து, தீபாராதனை காட்டி, கரகக்காரரின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி வழிபடுவர். இந்நிகழ்வு ஒட்டுமொத்த தோட்ட மக்களையும் ஆன்மிக உணர்வால் ஒன்றிணைக்கும் முக்கிய பகுதியாக அமைகிறது.

இறுதிக்கட்டமாக, கரகம் வீதி உலாவை நிறைவு செய்து ஆலயத்தின் கருவறையை அல்லது திருவிழா நடக்கும் இடத்தை வந்தடையும். அங்கு கரகத்திற்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பலி கொடுக்கும் சடங்குகளோ அல்லது நேர்த்திக்கடன்களோ நிறைவேற்றப்படும். அதன் பின்னர், அருள் வந்து ஆடிய பூசாரி சாந்தமடைந்து, பக்தர்களுக்குத் திருநீறு மற்றும் மஞ்சள் நீர் வழங்கி அருள்வாக்குக் கூறுவார். திருவிழா முடியும் வரை இக்கரகம் கோயிலில் வழிபாட்டிற்காக வைக்கப்படும். இறுதி நாளில் மீண்டும் முறைப்படி கொண்டு செல்லப்பட்டு நீர்நிலையில் கரைக்கப்படுவதோடு அல்லது பூசை கலைக்கப்படுவதோடு இச்சடங்கு நிறைவு பெறுகிறது.

மாரியம்மன் வழிபாட்டோடு தொடர்புடைய ‘கரகம் பாலித்தல்’ என்னும் சடங்கானது, வறண்ட பகுதிகளிலிருந்து நீர் சுமந்து வந்ததன் குறியீடாகவும், உடலை வருத்திச் செய்யும் நேர்த்திக்கடன்கள் மற்றும் சடங்கு விளையாட்டுகளின் வடிவமாகவும் விளங்குகிறது. மக்கள் தங்களின் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், மழையின்மையைத் தீர்க்கவும் கரகம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் தீமிதித்தல் போன்ற சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மஞ்சள் பூசப்பட்ட ‘பாலமரக்’ கம்பத்தை நட்டு அதன் கிளைகளில் தீச்சட்டி ஏந்தும் ‘கம்பம் நடும் விழா’ நடைபெறும். பக்தர்கள் தங்களின் கால்களில் ‘சலங்கை’ கட்டிக்கொண்டு, ‘மண் மேளம்’ மற்றும் ‘கொம்பு’ போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் முழக்கத்திற்கு ஏற்பக் கம்பத்தைச் சுற்றி ஆவேசமாக நடனமாடுவர். விழா நாட்களில் ‘மாவிளக்கு’ ஊர்வலமும், ஒன்பது தானியங்களை முளைக்க வைத்து எடுத்து வரும் ‘முளைப்பாரி’ சடங்கும் பெண்களால் பக்திப் பரவசத்துடன் நிகழ்த்தப்படுகின்றன.

உசாத்துணை நூல்கள்

இன்பமோகன், வ., 2012. கிழக்கிலங்கைச் சடங்குகள். குமரன் புத்தக இல்லம், சென்னை–கொழும்பு.

சிவத்தம்பி, க., 1993. இலங்கை மலையகத் தமிழர் பண்பாடும் கருத்து நிலையும். உதயம் நிறுவனம்.

சிவரத்தினம், சு., 2008. சடங்குகளினூடாக மட்டக்களப்பு. விபுலம் பதிப்பகம்.

சோமசுந்தரம், அ., (ஆண்டு குறிப்பிடப்படவில்லை). இந்து வாழ்வியல் சடங்குகள்.

தருமராஜன், டி., 2006. சனங்களின் சாமிகள். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தமிழ்நாடு, இந்தியா.

பக்தவத்சல பாரதி, 2012. மானிடவியல் கோட்பாடுகள். அடையாளம் வெளியீடு, சென்னை.

மௌனகுரு, சி., 1988. சடங்கிலிருந்து நாடகம் வரை. நாகலிங்கம் நூலாலயம்.

வேல்முருகு, ந., 1993. மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும். வாசகர் பதிப்பகம்.

சஞ்சிகைகள்

குன்றின் குரல், ஆண்டு 12, இதழ் 03, ஜூலை–செப்டம்பர் 1993, பக். 19–20.

குன்றின் குரல், ஆண்டு 13, இதழ் 01, ஜனவரி–மார்ச் 1994, பக். 19–20.

நட்புறவு பாலம், இதழ் 12, செப்டம்பர் 1987, பக். 14–16.

நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர், ஆகஸ்ட் 1993, பக். 25–27.

பண்பாடு, இதழ் 02, செப்டம்பர் 1992, பக். 30–56.



About the Author

மெய்யநாதன் கேதீஸ்வரன்

மெய்யநாதன் கேதீஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறை விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் துறையில் இளங்கலைமாணிப் பட்டமும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அரங்கக் கலைகள் துறையில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றுள்ளதோடு, தனது கலாநிதிப்பட்ட ஆய்வை ‘பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில்’ மேற்கொண்டுவருகிறார். நாடக எழுத்தாக்கம், நடிப்பு, நெறியாள்கை என்ற அடிப்படையில் நாடகச் செயற்பாட்டாளராக பல்வேறு அரச விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் நவீன நாடகம், கூத்து மற்றும் தமிழ் பண்பாட்டு மரபுகள் குறிப்பாக மலையக பாரம்பரிய வாழ்வியல், கலை மற்றும் பண்பாடுகள் பற்றி பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைத்துள்ளார். சகதிப்புழுக்கள் இவரது நாடகப்பனுவல்களின் தொகுப்பு ஆகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்